வெள்ளை விழிகள்

1

மியான்மார் எல்லையில் அமைந்துள்ள தாய்லாந்தின் மேற்கு மாநிலமான தக் பிரதேசத்தின் மைலாவை நான் சென்றடைந்தபோது இருள் முழுவதுமாக கவிழ்ந்திருந்தது. வளைந்து நுழைந்து மேடுகளின் வழியாக நீண்டு கிடக்கும் சரிவுப்பாதையில் ஓடிவந்த சிவப்பு நிற முச்சக்கர வாகனம் தனது வேகத்தை குறைத்துக்கொண்டு புக் புக் என்ற சத்தத்துடன் இருமியபடி அமைதியானது. வாகனத்திலிருந்து தோள்பையோடு இறங்கியபோது கால்கள் இரண்டும் துருப்பிடித்த வளைந்த கம்பியை மீண்டும் நீட்டியெடுப்பதுபோலிருந்தது.

இறக்கிவிட்ட இடத்துக்கு இடப்பக்கமாக உயரத்தில் வீடுகளை அடையாளங்காட்டும் மின்விளக்குகள் குறைந்த ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. தோள்பையை கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு கைகளை மேலே உயர்த்தி சோம்பல் முறித்துக் கொண்டேன்.

எனக்கு அருகிலிருந்து வந்த ஏஜென்ஸிக்காரன் வாகனத்திலிருந்து இறங்கி என்னிடம் வந்தான். மலைச்சரிவுபோன்ற உயரமான இடத்தில் அமைந்திருந்த வெளிச்சம் தெரிந்த தனியான மாடிவீடொன்றை காண்பித்து அங்கு விடியும் வரைக்கும் தங்குமாறு கூறி இரண்டு தண்ணீர் போத்தல்களை கையில் தந்தான். தான் டவ்னாவரை சென்று வருவதாக சொல்லி விடைபெற்று சென்றான். டவ்னா எங்குள்ளது என்று எனக்கு தெரியும் என்று அவன் எந்த நம்பிக்கையில் சொல்லிவிட்டுப் போகிறான் என்று நானும் கேட்கவில்லை. அவனுக்கும் அது பற்றி கரிசனையிருப்பதாக தெரியவில்லை.

போவதற்கு முதல், அந்த மாடி வீட்டின் தெற்குப் புறமாக இறங்கிச் செல்லும் சிறிய ஒழுங்கை வழியாக நடந்து போனால் ஆற்றங்கரை பக்கமாக நீளத்துக்கு பல சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றன என்று காண்பித்தான். அந்த இருட்டுக்குள் தூரத்தில் சிறிய உயரமான குடிசை போன்ற இடங்களுக்குள் பல அடுப்புக்கள் எரிந்துகொண்டிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. அவற்றைச் சுற்றி கறுப்பு உருவங்கள் கைகளில் எதையோ வைத்து சாப்பிட்ட வண்ணமிருந்ததும் மங்கலாக தெரிந்தது.

இருளையும் அமைதியையும் தொந்தரவு செய்தவாறு ஒற்றை வெளிச்சத்தில் அந்த முச்சக்கர வாகனம் மீண்டும் வந்த வழியால் தள்ளாடிக்கொண்டே ஓடிப்போனது.

தோள்பையை தூக்கிக்கொண்டு புறபடிகளினால் மேலே நடந்தேன். மாடிவீட்டின் கதவு திறந்தே கிடந்தது. வீட்டின் மத்தியில் தொங்கிக்கொண்டிருந்த மின்குமிழ் வீட்டை அழகாக அடையாளம் காட்டுவதற்காக முழு முயற்சியுடன் எரிந்துக் கொண்டிருந்தது. கால் நீட்டி சாயக்கூடிய நீளமான இருக்கையில் பையை எறிந்து விட்டு அங்கேயே சரிந்தேன். வாகனச் சத்தம் இன்னமும் காதுக்குள் கேட்டபடியிருந்தது.

வரும்போது வாகனத்தில் ஏஜென்ஸிக்காரன் சொல்லிக் கொண்டு வந்த தகவல்கள் அனைத்தையும் கோர்த்து நான் இருந்து கொண்டிருக்கும் இந்த வீட்டின் சூழல் எப்படியிருக்கும் என்று மனத்துக்குள் அடுக்கிப் பார்த்துக் கொண்டேன்.

இது முப்பது வருடங்களாக பர்மா அகதிகள் வந்து வாழுகின்ற இடம். இங்குள்ள அழகான ஆற்றங்கரையை கண்டு களிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது வந்து போவர். எல்லா விதமான மக்களும் புழங்கும் அமைதியான பிரதேசம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தின் மன்னர் குடும்பத்துக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதற்காக இங்கு வந்த பிரித்தானிய பெண்ணொருவர் வாழ்ந்த இடமென்றொரு வரலாறு இந்த இடத்துக்கு இருப்பதால் இங்கு பிரித்தானிய சுற்றுலா பயணிகள்தான் அதிகம் வந்து போவது வழக்கம்.

கண்கள் இரண்டும் களைத்து கவிழ்ந்துகொண்டது.

சிறிது நேரத்தில் விடிந்துவிட்டதை அறிவிக்கும் சத்தங்கள் வெளியில் கேட்க ஆரம்பித்திருந்தன. புரியாத மொழியில் தூரத்தில் பேச்சொலிகள் கேட்டன. எழுந்து சென்று வாடிவீட்டின் தெற்குப்புறமாக இருந்த ஜன்னல் மறைப்பை விலக்கி விட்டுப்பார்த்தேன். பகல் பொழுதில் அந்த இடம் இன்னும் பிரம்மாதமாக தெரிந்தது. சரிவில் அமைந்துள்ள ஏராளமான வீடுகளிலிருந்தும் எல்லா திசைகளினாலும் பாதைகள் வழிந்து வழிந்து கீழே விழுந்து கொண்டிருந்தன. அந்த பாதைகளின் வழியாக சிறிய வாகனங்கள் பயணம் செய்துக் கொண்டிருந்தது மலையிலிருந்து கீழே அருவியென்று கிளைகளாக பிரிந்து ஓடுவதைப் போலிருந்தது.

ஏஜென்ஸிக்காரன் வந்து எப்போது என்னை ஏற்றிக்கொண்டு போவான் என்ற எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை. திரும்பவும் விமான நிலையத்துக்கு கூட்டிப்போவதா அல்லது வேறு ஒழுங்குகள் இருக்கிறதா என்பதையும் அவன் தெளிவாக கூறவில்லை.

ஆக, இப்போதைக்கு எங்காவது சென்று புலியை தொட்டவாறு ஒரு புகைப்படம் எடுத்துவிடவேண்டும். இந்த நாட்டுக்கு வந்திறங்கியதன் மிகப்பெரிய சாதனையாக அதனை நான் ஆயுள் முழுவதும் என்னுடன் வைத்திருக்கவேண்டும்.


2

எனக்கு பல் முளைக்கவேண்டும் என்று தலையில் கொழுக்கட்டை கொட்டிய நாளன்று தாத்தா எனது கழுத்தில் தடிப்பமானதொரு சங்கிலியை அணிவித்து அள்ளி முத்தமிட்டுக் கொண்டிருக்கும் படமொன்றை பின்னொரு நாளில் அம்மா எனக்கு காண்பித்திருந்தார். அந்த சங்கிலியை பற்றி கேட்டபோது அதிலிருக்கும் பல்லுத்தான் மிகவும் முக்கியம் என்று சொன்ன அம்மா அப்போதுதான் புலி என்றொரு மிருகத்தை முதன்முதலாக கூறியிருந்தார்.

எனது கழுத்தில் தவழ்ந்துக் கொண்டிருக்கும் பல்லுக்கு சொந்தமான மிருகம் புலி என்று அம்மா சொன்னபோது எனக்கு புலியையும் தாத்தாவையும் மிகவும் பிடித்துப் போயிருந்தது. ஆனால், புலியை கொஞ்சம் அதிகமாகவே பிடித்திருந்தது. வரிவரியாக சிலிர்த்தபடி நிற்கும் புலி எனக்கு சிங்கத்தை விடவும் அதிகம் விருப்பமாக இருந்தது.

யாழ்பாணத்தில் எங்கு புலி பார்க்கலாம் என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது அம்மா முதலில் முறைத்தார். பிறகு சிரித்தார். அன்றிரவு அப்பாவிடம் நான் கேட்டதை சொன்னார். அப்பா என்னை அழைத்து – யானை மிகவும் பலம் வாய்ந்த மிருகம் என்று வியந்து சொல்லி கதையை மாற்றினார். எனக்கு ஏன் என்று புரியவில்லை. அன்றிரவு முழுவதும் முற்றத்து மாமரத்துக்கு கீழ் நிலவொளியில் வைத்து யானையின் பெருமைகளை சொல்லித்தந்தார். அதற்கு அடுத்த சனியன்று நல்லூர் வீரகாமாளி அம்மன் கோவிலில் உள்ள யானையை கூட்டிச்சென்று காண்பித்தார்.

நான் யானையை பார்த்தது அதுதான் முதல்தடவை. முதல் பார்வையிலேயே வெறுத்துப் போய்விட்டது. அதுவொரு நோஞ்சான் குட்டி யானை. உடம்பெல்லாம் உரோமத்துடன் தான் பெய்த மூத்திரத்துக்குள் புரண்டபடி கிடந்தது. பக்கத்தில் அதன் லத்தி பெரும் கும்பலாக கிடந்தது. மணம் தாங்கமுடியவில்லை.

அப்பாவிடம் நான் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு புலியை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளே ஊறியபடியே இருந்தது.

ஒரு நாள் பாடசாலை நூலகத்தில் புலியின் படம் போட்ட பெரியதொரு புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த போது விசாகன் வந்து தோளில் தட்டி வெளியில் வருமாறு அழைத்தான்.

“இடைவேளை நேரம்தானே மைதானம்வரை போய்வருவோம். வா” – என்றான்.

இரண்டு பேரும் ஜம்பு மரத்தின் தடிகளால் தரையைக்கீறிக்கொண்டு நடந்து கொண்டிருந்தோம்.

“போன கிழமை அண்ணா விடுமுறையில் வீட்டுக்கு வந்துபோயிருந்தான். தெரியுமா” – என்றான்.

“ஓ…” – ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“மணலாறு காட்டுக்குள் தாங்கள் பயிற்சி எடுக்கும்போது அங்கு ஏராளம் சிறுத்தைகளை கண்டிருக்கிறார்களாம்”

எனக்கு கண்கள் வளையம் வளையமாக விரிந்தன.

“தலைவர் கொழுத்த சிறுத்தைக்குட்டியொன்றை வீட்டிலேயே வளர்க்கிறாராம்”

எனக்கு இன்னமும் பெருமையாக இருந்தது. என்னிடம் பல் இருக்கிறது. தலைவரிடம் சிறுத்தை இருக்கிறது. இதைவிட என்ன சந்தோஷம் வேணும். கிட்டத்தட்ட நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போன்றதொரு உணர்வு பொங்கி சரிந்தது. அதற்குப்பிறகு அவன் சொல்லிக்கொண்டு வந்த எதுவுமே எனக்கு கேட்கவில்லை.

பிறகொருநாள் –

“மாத்தையாவின் பேஸிலும் ஒரு சிறுத்தை இருந்ததாமடா, அவரை பிடிச்சதோட அதைக் கொண்டு போய் காட்டில விட்டாச்சாம்” – என்று விசாகன் இரகசியமாக ஒரு தகவல் சொன்னான். அப்போது நெஞ்சிலிருந்த சங்கிலியை தடவிப்பார்த்து கொஞ்சம் பயந்துபோனேன்.

இருந்தாலும் தாத்தா அணிவத்துவிட்டுப்போன அந்த புலிப்பல் நெஞ்சுக்கு அருகிலேயே எப்போதும் இருந்ததால் என் நினைவுகளில் தவறாமல் அது கர்ஜித்துக் கொண்டிருந்தது. என்னை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுகின்ற சக்தி போல அது என்னோடிருப்பதுபோலவும் உணர்ந்துகொண்டேன்.

கொழும்புக்கு வந்தபின்னர் ஒருநாள் பொலீஸ்காரன் ஒருவன் என்னை மறித்து வைத்து அடையாள அட்டையை சோதனை செய்தபோதுதான் சொன்னான், புலிகளில் உள்ள வரி ஒவ்வொன்றுக்கும் தனியானதாம். உலகிலேயே ஒரு புலிக்கு உள்ள மாதிரி வரி இன்னொரு புலிக்கு இருக்காதாம். சொல்லிவிட்டு கனநேரமாக எனது அடையாள அட்டையை பார்த்துக் கொண்டேயிருந்தான். பிறகு திரும்ப தந்தான்.


3

வெளிநாடு போவதற்கு ஏஜென்ஸிக்காரனிடம் எங்களிடம் விதியை ஒப்படைத்துவிட்டு எதிர்பார்த்திருப்பதென்பது எமது ஆன்மாவை அடகு வைப்பது போன்றது. அவனிடம் எங்களை கையளித்த பிறகு அவனே நினைத்தால்கூட சிலவேளைகளில் எங்களை எங்களிடம் திருப்பித்தரமுடியாது.

அம்புலன்ஸ் சாரதிபோல எப்போதும் அழைத்தவுடன் அவனோடு எழுந்து ஓடுவதற்கும் அவன் காட்டிய திசைகளில் பறப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். அவன் கட்டளையிடுகின்ற போது நாங்களே இறக்கைகளை வெட்டிக்கொண்டு கீழே விழவேண்டும்.

“புதிய நாடொன்றுக்கு போவதென்றால் சுலபமான காரியமில்லை. தெரியும்தானே”

அவன் அடிக்கடி சொல்வான்.

“நாங்கள் என்ன படையெடுத்துப்போய் ஆஸ்திரேலியாவை கைப்பற்றவா போறோம். போவது அகதியாய். இதிலொன்ன கெத்து”

அவன் வெறித்துப்பார்த்தான்.

கொண்டுவந்த பொதியிலிருந்த உடுப்புக்களை எடுத்து எத்தனை தடவை பயன்படுத்தினாலும் ஒவ்வொரு தடவையும் அவற்றை மடித்து திருப்பி உள்ளே வைத்துவிட்டு ஏஜென்ஸிக்காரனின் அழைப்புக்கு காத்திருக்க வேண்டும். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவனது தொலைபேசி வந்தால்கூட பாய்ந்து சென்று

“அண்ணா, சொல்லுங்கோ” – என்று சொல்லவேண்டும்.

“எந்த நேரமும் தயாராக இருக்கவேணும் என்ன” – என்று எச்சரித்துவிட்டு வைப்பான்.

நித்திரையிலும் திடீரென்று எழுந்து ஏதாவது அழைப்பை தவறு விட்டுவிட்டேனா என்று தொலைபேசியை தடவிப் பார்க்கவேண்டும்.

இது எவ்வளவு நாட்களுக்கென்று தெரியவில்லை. ஆக, அதற்கிடையில் எப்படியாவது புலியோடு ஒரு படமெடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வம் மாத்திரம் மேலிட்டவாறிருந்தது.

தங்கியிருந்த மாடிவீட்டுக்கு அருகில் முதல்நாள் சாப்பாடு வாங்குவதற்காக போனபோது பழம் போல அவித்த சோறும் கோழிக்கறியும் விற்கும் தாய்லாந்து பெண்ணொருத்தி சிவப்பு பூச்சுக்குள் ஒளித்து வைத்திருந்த தனது உதடுகளை விரித்து சிரித்தாள். இந்தப் பகுதியில் யாரையும் நம்பி கதைக்கப்படாது என்று ஏஜென்ஸிக்காரன் சொல்லியிருந்த எச்சரிக்கையையும் மீறி –

“ஹலோ” – சொன்னேன்.

அதற்கு அவள் “30 பாத்” – என்றாள்.

சிரித்ததற்குத்தான் கேட்கிறாளோ என்று நெற்றியை சுருக்கி அவளை உற்றுப்பார்த்தேன். தந்த சாப்பாட்டுப் பார்சலை கைகளால் காண்பித்துவிட்டு மீண்டும் சிரித்தாள். குறுணிக்கண்கள், குள்ள உருவம். நீண்ட விரல்கள். அவற்றைவிட நீளமான நகங்கள். ஒவ்வொரு நகத்துக்கும் வெவ்வேறான வண்ணம் பூசியிருந்தாள். நன்றாக எண்ணை வைத்து வழித்து இழுத்திருந்த செறிவான தலைமுடி அவளது நிறத்தை இன்னும் அதிகமாக காண்பித்தது. அந்த கோழிக்கறியை சமைப்பதிலும்விட தனது புருவத்தை சரிசெய்வதற்கு அவள் அதிக நேரம் எடுத்திருப்பாள் என்று நினைக்கிறேன். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. கையில் கிடந்த பணத்தை கொடுத்த போது, அதற்கான மீதியை தருவதற்காக மேசைக்கு அடியில் குனிந்தாள். இறுக்கமாக அணிந்திருந்த அவளது ஆழமான அரைவட்ட ஜக்கட்டின் உள்ளடக்கம் தாய்லாந்தின் செழுமையை பறைசாற்றும் தந்தங்கள் போலிருந்தன. எனது கண்களும் அவளோடு சேர்ந்து குனிந்தன.

அந்தநேரம் பார்த்து, மேசைக்கு அடியிலிருந்து அவளது முகத்தைப் போன்ற இன்னொரு முகம்கொண்ட பெண் எழுந்தாள். அவளது சகோதரியாகவோ தாயாகக்கூட இருக்கலாம். மகளாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று மனம் பிரார்த்தனை செய்துகொண்டது. அவளுக்கும் அதே கண்கள். நிறைந்த முடி. ஆனால், அவள் சுவையாக ஆங்கிலத்தில் பேசினாள். அது எனக்கு புரியக் கூடியதாக இருந்தது. எனக்கு புரிந்தது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

புலிகளை பற்றி விசாரித்தேன். அங்கு போய் இறங்கும் வரைக்கும் தாய்லாந்திலேயே பெரிய புலி கே.பி. மாத்திரம்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவள் சொன்ன தகவல்கள் ஆச்சரிய மூட்டுபவையாக இருந்தன.

“தாய்லாந்தில் புலிகளை பார்ப்பதும் அவற்றுடன் படமெடுப்பதும் சுற்றுலா கலைஞர்களுக்கு பிரபலமானதொரு பொழுதுபோக்கு தெரியுமா” – என்று சொல்லிவிட்டு எனது பதிலை எதிர்பார்த்தாள்.

நான் “ஆமாம்” – என்றேன்.

“நான் லியோமினா” – என்றுவிட்டு முதல் கேள்வியைப்போலவே பதிலுக்கு எதிர்பார்த்து மறுபடியும் எனது முகத்தை பார்த்தபடி நின்றாள்.

அவள் எனது பெயரைத்தான் எதிர்பார்க்கிறாள் என்பதை சுதாரித்துக்கொண்டு –

“அபூர்வம்” – என்றேன்.

“பூ……”

பதறிப்போய் –

“இல்லை…இல்லை….அ…..பூ……ர்வம்” – எழுத்துக்கூட்டி சொன்னேன்.

“ஓ….சரி.சரி. இங்கே புலிக்கோயில் என்று ஒரு இடமுள்ளது. அதற்கு நீ பாங்கொக் போகவேண்டும். போனாலும் அது கொஞ்சம் பயங்கரமான இடம். அதிலும்பார்க்க, பக்கத்திலுள்ள புலிக்கோட்டைக்கு போ. அது வசதி” – என்றாள்.

எனக்கா, புலிக்கா என்று அவள் சொல்லவில்லை. இருந்தாலும் எனக்குள் அந்தப்பெயர் ஆழமாக இறங்கிக்கொண்டது. புலியின் கண்ணை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் மனதில் ஆர்ப்பரித்தது. அது தாத்தாவின் கண்களைப்போல கூர்மையானதா என்று உற்றுப் பார்க்க வேண்டும் என்று எண்ணியவாறு நெஞ்சிலுள்ள பல்லை வருடிப் பார்த்துக் கொண்டேன்.

அன்று பகல் கோழிக்கறியோடு சோறு சாப்பிட்ட பின்னர் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட அரை கிலோமீற்றர் நடந்தபிறகு ஒரு இடத்தில் வரிசையாக முச்சக்கர வாகனங்கள் பல வண்ணங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டேன். அவற்றின் ஒட்டுனர்களாகத்தானிருக்க வேண்டும், அருகிலிருந்த சடைத்த கொஸ்பியா மர நிழல் ஒன்றின் கீழிருந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் தங்களின் வாகனங்களைப் போல பல வண்ணங்களில் கைலி அணிந்திருந்தார்கள். சாப்பாட்டுக் கடைக்காரி போல அவர்களும்கூட அழகான முகவெட்டு உடையவர்களாக காணப்பட்டார்கள். என்னைக் கண்டவுன் சீட்டாட்டதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் ஓடிவந்து, நான் வாகனமொன்றை எதிர்பார்த்து வந்து கொண்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டது போலவும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தே தீருவேன் என்பதுபோலவும் அடம்பிடித்தான்.

நான் எனது லட்சியப்பயணம் குறித்த தகவலை அவனிடம் கூறினேன். புலியைவிட வேகமாக பாய்ந்துசென்று வாகனத்துக்குள் ஏறியிருந்துகொண்டு காலடியில் வந்து நின்றான்.

மலைச்சரிவுப்பாதையின் வழியாக வாகனம் கீழ் நோக்கி ஓடியது.

தெரியாத மொழியில் புரியாத ராகத்தில் அறியாத உணர்வொன்றை தனது குரலில் இசைத்துக்கொண்டிருந்த பாடகியின் இசைத்தட்டு அந்த வாகனத்துக்குள் ஒலிக்கத்தொடங்கியது. வீதியில் இருபக்கங்களையும் ஒரு உல்லாசிக்குரிய வேடிக்கை கண்களால் பார்த்துக் கொண்டே பயணித்துக் கொண்டேன். எங்கு பார்த்தாலும் வாழைப் பழங்கள்தான் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. அதற்குப் பின்னால் ஒவ்வொரு கடையும் பல வண்ணங்களில் அலங்காரங்களுடன் காணப்பட்டன.

முப்பது முப்பந்தைந்து நிமிடங்களில் பெருவீதியில் பயணம் செய்த வாகனம் வேகத்தை குறைத்துக்கொண்டு உள்வீதியொன்றுக்குள் இறங்கியது. அந்த சிறு வீதியின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கல்வேலிகளில் கம்பீரமான புலிச்சிலைகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றுக்கு தீட்டப்பட்டிருந்த மஞ்சளும் கறுப்பும் வரி வரி வண்ணம் நேர்த்தியாக இருந்தது. உயிரூட்டப்பட்டது போலிருந்த அந்தப்புலிகள் பயமூட்டின.

புலிக்காட்சிச்சாலையின் வாசலில் வாகனத்தை கொண்டுபோய் நிறுத்திய ஓட்டுனன் இறங்கி நின்று தனது கைலியை உதறிவிட்டு மீண்டும் இறுக்கமாக இடுப்பில் செருகிக் கொண்டு என்னைப் பார்த்து சிரித்தான். அவனது கைகளில் தாய்லாந்து தாள்கள் சிலவற்றை கொடுக்க அவன் அவற்றை கண்களில் ஒற்றிக்கொண்டான். அவன் எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிகம் கொடுத்திருக்கிறேன் என்று புரிந்தது.

காட்சிச் சாலைக்குள் போவதற்கான டிக்கெட் கவுண்டரில் போய் நின்றபோது அதுவரைக்கும் பொங்கிக்கொண்டிருந்த ஆர்வம் – வீரம் எல்லாம் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை உணர்ந்தேன். கால்கள் தனித்தனியாக குலுங்கத் தொடங்கி விட்டதைப் போன்ற உணர்வும் தொற்றிக்கொண்டது. பாதங்கள் ஒவ்வொரு தடவை தரையில் வைக்கும்போதும் குளிர் ஏறியது.

வாசலில் நின்ற காவலர்கள் டிக்கெட்டை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே அனுப்பினார்கள்.

முதன்முதலாக புலிகளை கண்டேன்.

நான்கைந்து கூடுகளில் ஒவ்வொன்றிலும் மூன்று நான்கு புலிகள் நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்தன. தாங்கள் எல்லோரையும் பார்த்து களைத்துவிட்டதுபோலவும் என்னைத்தான் பல மணிநேரமாக எதிர்பார்த்துக்கொண்டிருப்பது போலவும் நான் பார்த்த எல்லா புலிகளின் கண்களிலும் ஒரு ஆர்வம் தெரிந்தது.

குண்டுக் கத்தரிக்காய் போல கருமையான கண்கள், அடிக்கடி திறந்துமூடுகின்ற பசிவடியும் வாய், அதிலிருந்து காரணமின்றி வெளியில் வந்து துலாவிவிட்டு உள்நுழையும் ராட்சச நாக்கு, அசாதரண வடிவங்களில் கூராகவும் சீராகவும் தெரிந்த பயமுறுத்தும் பற்கள் என்று புலிகளின் மொத்த முகமும் மிரட்டிக் கொண்டேயிருந்தது.

கமராவினால் ஒளிபாய்ச்சி படமெடுக்கவேண்டாம் என்று உள்ளே வரும்முன்னர் அறிவுறுத்தியும்கூட எனக்கு முன்னால் நான்காவதாக நின்று கொண்டிருந்த ஒருவன் தனது போன் கமராவை தூக்கி புலியை படமெடுத்திருக்கிறான். அவ்வளவுதான், இரண்டாவது கூட்டிலிருந்த பென்னாம்பெரிய புலி ஒன்றின் தவம் கலைந்துவிட்டது. எழுந்து நின்று கன்னா பின்னா என்று கர்ஜித்தது. கோபத்தின் உச்சத்தில் கம்பிவேலிக்கரையோரமாக உறுமியபடி அங்கும் இங்கும் அலைந்தது. அதன் கோபத்துக்கும் எங்கள் உயிரின் மீதான உத்தரவாதத்தக்குமான இடைவெளி அந்தக் கம்பிவேலி மட்டுமாகவே இருந்தது. அந்த வேலியை மாத்திரம் அது கிளித்துக் கொண்டு வெளியே வந்தால் திருப்தியாக நான்கைந்து பேரையாவது உரித்து முழுங்கிவிட்டு உள்ளே போய் அது மற்றப் புலிகளுக்கு “சியர்ஸ்” சொல்லக்கூடும். அவ்வளவு கடுப்பு அதன் கண்களில் தெரிந்தது. சிறிது நேரம் கர்ஜித்துவிட்டு கூட்டின் மூலையில் போய் படுத்துவிட்டது.

புலி மீதான எனது பிரியம் எனக்குள் உதிரத்தொடங்கிவிடும்போலிருந்தது.

இப்போது, கூட்டிற்கு உள்ளே போய் அதனை வருடிக்கொண்டு படமெடுக்கும் எனது வாழ்நாள் லட்சியத்துக்கான தருணம் கைகூடியது. உள்ளே நின்றுகொண்டிருந்த பத்து பதினைந்து பேரையும் ஐந்தைந்து பேராக ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் புலிப்பழக்குனர்கள் அழைத்துப் போவார்கள் என்று சொல்லப்பட்டது. தொகுதி தொகுதியாக பிரித்தார்கள்.

நான் எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்தது. என்னை அந்த இரண்டாவது புலிக்கூட்டுக்குள் இன்னும் நால்வரோடு அழைத்துப்போவதற்கு அந்த புலிப்பயிற்றுனர் அழைத்தார். மின்சாரத்தில் இயங்குவது போன்றதொரு பயமும் விறைப்பும் எனது எல்லா உறுப்புக்களின் வழியாகவும் பரவியோடிக் கொண்டிருந்தது. எனது ஆஸ்திரேலிய பயணம் இந்தப் புலிக் கூட்டுக்குள்ளேயே அடக்கமாகப் போவதைப் போலிருந்தது. பயத்தை விரட்டுவதற்கு இயன்றளவு முயற்சி செய்த போதும், அந்தப்பயம் நியாயமானதுதானே என்று மறுபுறத்தில் மனம் சொல்லியபடி துடித்தது. ஏதாவது ஒரு கிழட்டுப்புலி அல்லது செத்த புலியென்றாலும் பரவாயில்லை, அவற்றுடன் போயிருந்து படமெடுக்கக்கூடாதா என்று மனம் மாற்று யோசனைகளை உள்ளுக்குள் தூவியது. எல்லோரும் போகும் கூண்டுக்குள் என்னை மாத்திரம் புலி என்ன செய்து விடப்போகிறது போன்ற பதில் கேள்விகள் இயன்றளவு மனதை மசாஜ் செய்து கொண்டிருந்தன. அது வேளை, இந்தப் பயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாதே என்று வெட்கப்பட்டேன். வலுக்கட்டாயமாக பழக்குனரை பார்த்து சிரித்தேன். படமெடுத்து புலியை கடுப்பேற்றிய அந்த புண்ணியவான் எங்கே என்று எட்டிப்பார்த்தேன், அவன் சாவகாசமாக இன்னொரு கூட்டுக்குள் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தான்.

இருந்தாலும் நான் இங்கு வருவதற்கு முன்னர் மனதிலிருந்த துணிச்சலையும் ஆர்வத்தையும் மீண்டும் நெஞ்சுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற உறுதியுடன் தெளிவாக – ஆறுதலாக – மூச்சை உள்ளே இழுந்து வெளியே விட்டேன். நெஞ்சில் தொங்கிக் கொண்டிருந்த புலிப்பல்லின் வாசத்தினால்கூட புலி என்னிடம் அளவளாவ வந்து விடக்கூடாது என்ற கவனத்துடன் டீசர்ட்டின் மேல் பட்டன் வரைக்கும் இறுக்கமாக பூட்டிக் கொண்டேன். பயத்தில் வெளியாகிக் கொண்டிருந்த சூடான காற்று தற்போது இறுக்கமாக பூட்டப்பட்ட பட்டன்களினால் டீ-சர்ட்டின் உள்ளேயே சுழன்றடித்த படியிருந்தது.

“சரி சரி, எனக்கு பின்னால எல்லோரும் வாங்கோ” – என்று கூறியபடி புலிப் பயிற்றுவிப்பாளர் முன்னே நடந்தார்.

வாசலில் போய்நின்று எல்லோரையும் திரும்பி பார்த்தார். வரிசையில் விறைப்பாக நின்றுகொண்டிருந்த நான் எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

“உள்ளே திடுதிடுப்பென்று சடுதியாக எந்த அசைவையும் காண்பிக்கக்கூடாது. நடப்பது – குனிவது – திரும்புவது எல்லாமே மிகச் சாதாரணமானதாக இருக்கவேண்டும்” – என்று கூறி அவர் மெதுவாக நடந்துவேறு காண்பித்தார். எனக்கு கடவுள் நம்பிக்கையே வந்துவிடும்போலிருந்தது.

கூட்டுக்குள் வலது காலை எடுத்து வைத்து எல்லோரும் வரிசையாக நுழைந்தோம். படமெடுத்த காரணத்துக்காக சற்றுமுன்னர் சன்னதமாடிய புலிகளில் பெரியவர் கூண்டின் மூலையில் தியானத்திலிருந்தார். கண்கள் மூடியிருந்தது. அவரது தோழர்கள் மூவர் மேசையொன்றின் மீதும் அதன் அடியிலும் படுத்திருந்தார்கள். அங்குள்ள புலிகளுக்கு நானோ எனக்கு அவர்களோ புலிப்பல்லை காண்பித்துவிடக்கூடாது என்று உச்ச ஒழுக்கத்துடன் பரஸ்பரம் நடந்துகொண்டோம்.

நான் உள்ளே போன மாத்திரத்திலேயே கூண்டின் நடுவில் நின்ற இரண்டொரு மரங்களை முப்பது பாகையில் தலையை உயர்த்தி பார்த்துக்கொண்டேன். தற்செயலாக ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் எவ்வளவு வேகமாக அந்த மரங்களில் ஏறலாம் என்று அதன் உயரம் – அகலம் போன்றவற்றை கண்களால் அளந்தபடி நின்று கொண்டிருந்தேன். பிறகு, கீழே தலையை குனிந்தபோது, மூலையில் தியானத்திலிருந்த புலி தூங்கிவழிந்துகொண்டு என்னையே அரைக்கண்களால் பார்த்துக் கொண்டிருந்தது. அதன் கடைக்கண்களால் வெள்ளைத் திரவமொன்று வழிந்தபடியிருந்தது.

அங்குள்ள புலிகள் அனைத்தும் போதை மருந்து ஏற்றப்பட்டிருப்பதால் ஒன்றும் செய்துவிடாது என்று புலிப்பயிற்றுனர் உள்ளே நின்றுகொண்டும் அடிக்கடி எங்களுக்கு நம்பிக்கை தந்தபடியிருந்தார். அங்கு அந்த நான்கு புலிகளும் எங்களை ஒன்றுமே செய்யத்தேவையில்லை. சாதுவாக உறுமினாலோ அல்லது எழுந்து நடந்துகொண்டாலே கூடப்போதும், அந்த இடத்திலேயே எங்கள் ஐவருக்கும் சீவன் போய்விடும் போலிருந்தது. உள்ளே அச்சமும் வெளியே மிச்சமுமாக நின்றுகொண்டிருந்தோம்.

வந்த வேலையை முடித்துக்கொண்டு உடனே வெளியேறுவோம் என்று மேசைக்கு அருகில் கிடந்த புலிகளிலேயே மிகவும் சோம்பலான ஒரு புலிக்கு அருகில் போய் நின்றுகொள்ள, பயிற்றுனர் தான் கொண்டு வந்த கேமராவினால் படத்தை கிளிக்கினார். “சூப்பர்” என்று கையை காண்பித்தார். அது புலிக்கு காண்பித்ததுபோலத்தான் எனக்கு பட்டது. பின்னர், பயிற்றுனர் காட்டித் தந்தது போல, மிக மெதுவாக நடந்துவந்து கூண்டின் படல்க்கைபிடியை நடுங்கிய கையால் பிடித்து திறந்து கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.

திரும்பிப்பார்த்தபோது மூலையிலிருந்த அந்தப்புலியின் கண்களில் அந்த வெள்ளைத்திரவம் தொடர்ந்து வழிந்தபடியே இருந்தது.


4

கறுப்பு வெள்ளை சிறகுகளுடன் குறுணி கண்கள் கொண்ட அந்த ஒஸ்ரேலிய மக் – பை குருவி மர இருக்கையின் நுனியிலிருந்தவாறு என்னை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.

அது எனக்கு எரிச்சிலை ஊட்டியது.

“ஸ்ஸ்க்…..” – என்று சத்தமிட்டுப் பார்த்தேன். அது தனது பின்புறத்தை மெல்ல அசைத்துக் கொண்டு கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தது. எனக்கு அது மேலும் எரிச்சிலை தந்தது.

அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து – “சூய்…..” – என்றேன்.

இருநூறு வருடங்களாக தலைமுறை தலைமுறையாக இந்த நாட்டில் வாழ்ந்துவருகிற தன்னை, மூன்று மாதங்களுக்கு முன்னர் விமானநிலையத்தில் சட்ட விரோதமாக வந்திறங்கியதற்காக பிடிபட்டிருக்கும் நான் துரத்துவதை அது ஏளனமாக பார்த்தது. அது எனக்கு எரிச்சலைத் தந்தது. அகதிகள் முகாமில் யாரும் யார் முகத்தையும் இரண்டு மூன்று செக்கன்களுக்கு மேல் கூர்ந்து பார்த்தால் எரிச்சல் வருவது சகஜம்தான். அது பார்ப்பவர்களின் பிழை இல்லை. அவரவர் மனநிலை சார்ந்தது. அந்த முகாம் சூழல் அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கின்ற விரக்தி நிலை சார்ந்தது. இவையெல்லாம் வெளியிலிருந்து பறந்து வந்துள்ள பறவைக்குப்புரியுமா?

அப்போது சைரன் சத்தம் மிக அண்மையாக கேட்டது. முகாம் காவலர்கள் ஓடிச்சென்று இரண்டு பெரிய இரும்பு படலைகளையும் அகலத் திறந்து விட்டார்கள். சிவப்பு – நீல விளக்குகளை சுழற்றி சுழற்றி எரியவிட்டபடி அம்புலன்ஸ் வண்டி முகாம் வளாகத்துக்குள் நுழைந்தது. முகாமின் நடுவில் அமைந்திருந்த விசாலமான மைதானத்தின் தெற்குப்புற வேலிக்கு அருகாமையில் அம்புலன்ஸை நிறுத்துமாறு காவலர்கள் இருவர் ஓடி ஓடி வழிகாட்டினார்கள்.

அதிலிருந்து இறங்கிய சீருடை தரித்த ஆண் தாதியர்கள் இருவரும் தங்களது மருத்துவப்பைகளை தூக்கிக்கொண்டு மைதானத்தை நோக்கி நடந்தார்கள்.

ஓங்கி உயர்ந்த மரங்கள் நுனியில் சடைத்துப்போய் அந்த முகாமை சூழ்ந்து வளர்ந்திருந்தன. முகாமைச்சுற்றிவர இருபது அடி உயரத்துக்கு இறுக்கமான கம்பி வேலிகள். யாரும் எளிதில் ஏறித் தப்பிவிட  முடியாதபடி வேலிகளின் உச்சிகள் உள்நோக்கி வளைக்கப்பட்டு அவற்றின் முனைகள் கைகளால் பிடித்து விடமுடியாதபடி மிகவும் கூர்மையாக காணப்பட்டன.

“குட் மோர்னிங்”

“குட் மோர்னிங்”

“நான் முகாம் பொறுப்பதிகாரி ஸ்கொட்”

“அம்புலன்ஸ் தாதி அன்ட்ரூ”

“ஆறு வருடங்களாக தடுப்பிலுள்ள அகதி. இலங்கையில் ஆயுதக்குழு உறுப்பினராக இருந்தவர். நீண்ட கால விரக்தி. சில மாதங்களாகவே மனைவி – குழந்தைகள் பற்றி அதிகம் யோசித்துக் கொண்டிருந்தார் என்று முகாம் உளநல அதிகாரிகள் கூறியிருந்தார்கள். கவனமாகத்தான் அவதானித்துக் கொண்டிருந்தோம். ஆனால், நேற்றிரவு உதடுகள் இரண்டையும் சேர்த்து தையல் ஊசியால் தைத்துவிட்டு, இங்கு வந்து உட்கார்ந்துவிட்டான். தனது விடுதலை தொடர்பாக இமிகிரேஷன் அதிகாரிகள் சரியான பதில் தரவேண்டும் என்பது கோரிக்கை”

“ஓ….”

“அருகில் யாரும் போவது கடினமாக உள்ளது. யாரும் வரக்கூடாது என்று கடிதம் ஒன்றை எழுதி காவலர்களிடம் கொடுத்திருக்கிறான்”

“முகாம் மருத்துவ அதிகாரிகள் யாராவது…….”

“இல்லை, இதுவரை அருகில் போவதற்கு அனுமதிக்கவில்லை. குடிவரவு அதிகாரிகள்தான் அம்புலன்ஸிற்கு அழைக்கக் கூறியிருந்தார்கள்”

மைதானத்தின் நடுவில் மெத்தை ஒன்றை போட்டு, வெள்ளை நிறப் போர்வைக்குள் வரதன்; படுத்திருந்தான். தலை மாத்திரம் வெளியில் தெரிகிறது. எந்த அசைவும் தென்படவில்லை.

மெல்பேர்ன் வானம் மதிய நேர வெயிலின் வெப்ப நிலையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. முகாமைச் சூழ்ந்திருந்த மரங்களின் அசைவினால் சின்னதாக ஒரு குளிர்காற்று கம்பி வேலிகளின் வழியாக உள்நுழைந்து அலைந்தபடியிருந்தது.

அம்புலன்ஸ் தாதியுடன் முகாம் அதிகாரி ஸ்கொட் பேசிக்கொண்டிருந்தபோது, முகாம் அலுவலகத்துக்கு பொறுப்பான குடிவரவு அதிகாரி ஷரன் அங்கு வந்தாள்.

“இவர் ஷரன், குடிவரவு அதிகாரி”

“ஹாய் ஷரன், நான் அன்ட்ரூ”

“ஹாய், மொழிபெயர்ப்பாளரை அழைத்திருக்கிறோம். அவர் வந்தவுடன் வரதனுக்கு அருகில் சென்று பேசப்போகிறோம். முகாம் மருத்துவர்கள் ஏற்கனவே அருகில் போவதற்கு முயற்சித்திருந்தார்கள். ஆனால், வரதனுக்கு முகாம் மருத்துவர்கள் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆகவேதான், அம்புலன்ஸை அழைத்திருந்தோம்”

“ஓ அப்படியா”

“ஆம், அவன் சில தினங்களுக்கு முன்னர் விரக்தியில் பிளேட் கொண்டு தனது கைகளை கீறியிருந்தான். அப்போது உடனடியாக வந்து தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று முகாம் மருத்துவர்களுடன் கோபமடைந்திருந்தான். அப்போதும் அம்புலன்ஸை அழைக்கவேண்டியிருந்தது”

அம்புலன்ஸ் தாதி அன்ட்ரூ தனது குறிப்பேட்டில் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தான்.

மைதானத்தோடு அமைந்திருந்த ஆண்களுக்கான முகாமிலிருந்த ஜன்னல்களின் வழியாக பல கண்கள் மைதானத்தில் நடைபெறுகின்றவற்றை பார்த்துக்கொண்டிருந்தன.

எனக்கு அங்கு நடைபெறுவது முகாமுக்கு வந்த மூன்று மாத காலத்தில் நான்காவதோ ஐந்தாவது சம்பவம். இருந்தபோதிலும் இப்போதும்கூட புதிராகவே இருந்தது.

தாய்லாந்திலிருந்து விமான நிலையத்தில் வந்திறங்கியவுடனேயே குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட என்னை இந்த முகாமுக்கு கொண்டுவந்தவுடன் வந்து சந்தித்த எனது சட்டத்தரணி முதலாவது சந்திப்பிலேயே கூறியிருந்தார்.

“இந்த முகாமின் ஆண்கள் குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் கடந்த ஐந்தாறு வருடங்களாக இங்கிருப்பவர்கள். முக்கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் இளைஞர்கள்தான். அதற்காக அவர்களிடம் ஈ… என்று இழித்துக்கொண்டு போய் நிற்கவேண்டாம்.

“இவர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவில் வெவ்வேறு படகுகளில் கரையொதுங்கி அரசியல் தஞ்சம் கோரியவர்கள். இவர்களை அகதிகள் என்று அங்கீகரித்துக்கொண்ட ஆஸ்திரேலிய அரசாங்கம், நாட்டுக்குள் அனுமதிப்பதில் கொடூரமுடிவொன்றை எடுத்தது. அதாவது, இவர்களின் பின்னணியை வைத்துப் பார்க்கும் போது இவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள், தங்கள் நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவிட்டு இங்கு அகதிகளாக வந்திருப்பவர்கள், இவர்களை நாட்டுக்குள் அனுமதித்தால் தங்களுக்கு சிக்கல் என்று ஆஸ்திரேலிய மக்களை பயமுறுத்தும் ஒரு முடிவை அறிவித்துவிட்டு கிட்டத்தட்ட அறுபதுபேர் வரையானோரை காலவரையறையற்ற தடுப்புக் காவலில் போட்டது.

“உண்மையில் அந்தக் காலப்பகுதியில் பெருந்தொகையாக – தொடர்ச்சியாக – ஆஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்த அகதிப்படகுகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் இப்படியொரு படுபாதகமான முடிவை எடுத்தது என்பது அரசாங்கத்துக்கு இந்த அப்பாவிகளுக்கும் மட்டும்தான் தெரியும். அதில் பலிக்கடாவானவர்கள்தான் இவர்கள்.

“இவர்களை ஏதோ பூதங்கள்போல முத்திரை குத்திவைத்திருக்கும் அரசாங்கம், ஆஸ்திரேலியா முழுவதுமுள்ள அகதிகள் தடுப்பு முகாம்களுக்கு மாறி மாறி தாவித் திரிகிறதே தவிர, விடுதலை தொடர்பாக எந்த கரிசனையும் கொள்ளவில்லை. இவர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பிச்சென்றால் உயிராபத்து என்று கூறியபடியால், திருப்பி அனுப்பவும் போவதில்லை என்றும் சொல்லி விட்டது. ஆக, ஆஸ்திரேலியாவுக்கு வர முயற்சிப்பவர்களுக்கு இவர்களை காண்பித்து, “வந்தால் உங்களுக்கும் இதுதான் நடக்கும்” – என்று மிரட்டுவதற்கு இந்த அறுபதுபேரும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

“இவர்களோடு அதிகம் உன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதே., பிறகு உனது விஸாவுக்கும் பிரச்சினைகள் வரலாம். உன்னையும் அவர்களோடு சேர்த்துவைத்து கணக்குப்போட்டுவிடுவார்கள்” – என்று மூச்சுவிடாமல் கூறிவிட்டுப்போயிருந்தார் எனது சட்டத்தரணி சச்சி.

அவரது ஆலோசனையை மனதில் வைத்திருந்த போதும்கூட, இங்கு இந்த இளைஞர்களுடன் பழகியபோது இவர்களது வாழ்வை அவ்வளவு எளிதாக என்னால் ஓதுக்கிவிடமுடியில்லை. நீண்ட தடுப்புக்காவலும் நிம்மதியற்ற வாழ்வும் நிரந்தரமான பிரிவும் அவர்களை மனதளவில் உத்தரித்துக் கொண்டிருந்தது. இவர்களுடன் பழகிய சில நாட்களிலேயே இறுக்கமான பிணைப்பை உணரத்தொடங்கினேன். நீண்ட காலம் எதிர்பார்த்த உறவு கிடைத்ததைப்போன்ற சிலிர்ப்பு மனதில் பரவத்தொடங்கியிருந்தது. அதனை உள்ளே உணர்ந்தாலும் சட்டத்தரணியின் சொற்படி இயன்றளவு வெளியில் தவிர்த்துக்கொண்டேன்.

அப்போதுதான் சிறி நித்திரையால் எழுந்து வந்தான். என்னைப் பார்த்து மெல்லிதாக சிரித்துக் கொண்டு முகாமின் சமையலறைப் பக்கம் போனான். அங்கு தேனீர் போட்டுக் கொண்டிருந்த விமலன் –

“குட் மோர்னிங் சிறி அண்ணே” – என்றான்.

“என்ன நடக்குது வெளியில”

“வரதன் வாய தச்சுப்போட்டு நேத்து ராத்திரியில இருந்து க்றவுண்டுக்கு நடுவில போய் இருக்கிறானாம்”

கண்ணாடி வழியாக வெளியே பார்த்தான் சிறி.

ஏற்கனவே போட்டுக் கொண்டிருந்த தேனீரில் இன்னொன்றையும் சேர்த்து தயாரித்த விமலன் அதை சிறியின் கையில் கொண்டுபோய் கொடுத்தான். ஆவி பறந்தது.

“அண்ணை, நீங்கள் ஒருக்கா போய் கதையுங்கோவன், தனியக்கிடக்கிறான்”

சிறியிடம் விமலன் மெதுவாகச்சொன்னான்.

ஆண்கள் முகாமிலுள்ளவர்களில் கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்தவன் சிறி. முகாமில் என்ன பிரச்சினை என்றாலும் சிறி ஊடாக பேசுவது முகாம் அதிகாரிகளுக்கும் இலவாக இருந்தது. முகாமிலுள்ளவர்களுக்கும் சிறியில் ஒரு மதிப்பிருந்தது. அந்தளவுக்கு சிறி ஆளுமை மிக்கவனாகவுமிருந்தான். தங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் பேசக்கூடியவன் என்று முகாமிலிருந்தவர்கள் எல்லோருக்கும் சிறியிடத்தில் நம்பிக்கையுமிருந்தது.

“நேற்று ராத்திரி, ஈரான்காரனிட்டத்தான் ஊசி வாங்கினவனாம்” – என்றான் மீண்டும் விமலன்.

நிமலன் தந்த தேனீரை ஒருமுறை உறிஞ்சிவிட்டு, மேசையில் வைத்த சிறி, சாரத்தை ஒரு முறை உதறிக்கட்டிக்கொண்டு வெளியில் போனான்.

மைதானத்தைச்சுற்றி நின்றுகொண்டிருந்த காவலர்களில் ஒருவர் ஓடிவந்து –

“சிறி வெளியில் வரவேண்டாம், அவசரகாலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அம்புலன்ஸ் வந்திருக்கிறது. ஒருவரும் வெளியே வரக்கூடாது”

காவலரை முறைத்துப்பார்த்த சிறி, பதில் எதுவும் பேசாமல் தொடர்ந்து மைதானத்தை நோக்கி நடந்தான்.

இப்போது மேலும் இரண்டு காவலர்கள் ஓடிவந்து சிறியை மேற்கொண்டு நடக்கவிடாமல் மறித்து –

“சிறி, தயவு செய்து சொன்னால் கேளு, தற்போது முகாமில் முக்கிய பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது. அவசரகாலம் அறிவிக்கபட்டிருக்கிறது. உங்கள் இடங்களிலிருந்து யாரும் வெளியே வரக்கூடாது. உனக்கு இது தெரியாதா? நீயே இப்படி நடந்தால், நாங்கள் மற்றவர்களை எப்படி கட்டுப்படுத்துவது. ப்ளீஸ் சிறி……” – கெஞ்சினார்கள்.

தனக்கு மிக அருகாமையில் வந்து நின்று கெஞ்சிக்கொண்டிருந்த காவலர் ஒருவனின் நெஞ்சில் பிடித்து ஒரே தள்ளாக தள்ளி, அவனை கீழே வீழ்த்திய சிறி –

“தள்ளிப்போங்கடா புண்டையாண்டியள்,….அவன் எங்களோட வந்தவன், வாயை தச்சுப்போட்டு நேற்று இராத்திரியில இருந்து நடு க்ரௌண்டுக்க கிடக்கிறான். உங்கள் ஒருத்தருக்கும் அவனுக்கொரு பதில் குடுக்கிறதுக்கு வக்கில்லை. அவனோட கதைக்கப்போற என்னை வந்து மறிக்கிறியளோ….”

பெருங்குரலெடுத்து பிளிறிய யானைபோல கத்தினான். அந்த மைதானம் அதிர்ந்தது. முழுப்பலத்தையும் கொண்டு அவனால் தள்ளி விழுத்தப்பட்ட காவலர் பின்பக்கமாக போய் விழ, அவனுடன் அருகில் நின்றுகொண்டிருந்த மற்றக்காவலரும் இடறிக்கீழே விழுந்தான்.

மைதானத்தின் தெற்கு மூலையில் அம்புலன்ஸ் தாதிகளுடன் பேசிக்கொண்டிருந்த முகாம் பொறுப்பதிகாரி ஸ்கொட் அங்கு இடம்பெற்ற சம்பவத்தை கண்டவுடன் இடுப்பிலிருந்து தனது ரேடியோவை விறுக்கென்று எடுத்து –

“ரெஸ்போன்ஸ் ரெஸ்போன்ஸ், கோட் ப்ளக்” – என்று அறிவித்தான்.

அந்த காவலர் வானொலி மொழியை கேள்விப்பட்டவுடன் மைதானத்தின் நடுவில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஐந்தாறு காவலர்களுடன் இன்னும் பத்து பதினைந்து காவலர்கள் வெவ்வேறு திசைகளிலிருந்தும் அணையுடைத்துவிட்ட தண்ணீர்போல ஓடிவந்தார்கள்.

சிறியின் மீது பாய்ந்து இரண்டு கைகளையும் பின்னே மடக்கி தரையில் குப்புறப்போட்டார்கள். ஒவ்வொருவரும் பெரும் மாமிச மலைகள்போல கொழுத்திருந்த காவலர்களின் பிடியில் சிறி தரையில் விழுந்து நசிந்தான். முகத்தை தரையோடு சேர்த்து ஒருவன் அழுத்திப்பிடிக்க, ஏனையவர்கள் அவன் மீது ஏறி இருந்துகொண்டு அவனை மேலும் அசையாமல் அமர்த்திப்பிடித்தார்கள்.

கீழே விழுந்த காவலர்கள் கைத்தாங்கலாக மற்றவர்களின் உதவியுடன் எழுந்துகொள்ள, சிறியை ஏனைய காவலர்கள் தரதரவென்று முகாமின் வெளிப்பக்கமாக அமைந்திருந்த விசேட பாதுகாப்பு அறைக்கு இழுத்துப்போனார்கள்.

“கில் மீ…கில் மீ…மதர் பக்கர்ஸ். கில் மீ. ஓஸ்ரேலியன் இமிக்கிரேஷன் டோக்ஸ், கில் மீ….” – சிறி பிசிறடித்த பெருங்குரலால் ஆக்ரோஷமாக குழறினான். அவனது முகம் முழுவதும் மண் ஒட்டியிருந்தது. சாரம் அவிழ்ந்து அரைவாசி கீழே விழ, காவலர் ஒருவன் அதை இழுத்து மேலே கட்டிவிட்டான்.

சிறி இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்து முகாமிலிருந்தவர்கள் வெளியில் ஓடி வந்தார்கள். அவர்களை உள்ளே தள்ளி இரும்பு கதவை இழுத்துமூடிய காவலர்கள், வாசலிலேயே பாதுகாப்புக்கு நின்றுகொண்டார்கள். முகாமின் ஏனைய பகுதிலிருந்தும் மேலதிக காவலர்கள் அந்த இடத்துக்கு ஓடிவந்தார்கள். சிறியை விடுவிக்குமாறு உள்ளே நின்றுகொண்டு இளைஞர்கள் கத்தினார்கள். கதவின் உட்பகுதியில் கால்களால் உதைந்தார்கள்.

திடீரென்று அந்த இடம் பெருங்களேபரமானது.

எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனம் பதகளித்தது. அவர்களுடன் நானும் எழுந்து நின்றுகொண்டான்.

சிறியை ஒருபக்கமாக இழுத்துக் கொண்டு போகும் அதேநேரம், முகாம் அதிகாரி ஸ்கொட் நான்கு காவலர்களை அழைத்து ஏதோ அவசரமாக பேசினான். அவன் பேசிமுடித்த நொடிப்பொழுதில் எதிர்பாராத கணமொன்றில் வரதனுக்கு பின்புறமாக நின்றுகொண்டிருந்த காவலர்கள் நால்வர் வரதனுக்கு தெரியாமல் ஓடிச்சென்று அவனை மடக்கிப் பிடித்து தரையோடு அழுத்தினார்கள். வரதனால் அசையமுடியவில்லை.

அந்தநேரம் அம்புலன்ஸ் தாதியினரை அழைத்துக்கொண்டு மைதானத்தின் மையத்துக்கு வேகமாக ஓடி வந்தான் ஸ்கொட். காவலர்கள் வரதனின் தலையை தரையோடு அழுத்தி தாடையை அசையாமல் பிடிக்க, தாதியர்கள் உதடுகளை தைந்திருந்த நூலை ஒவ்வொன்றாக நிதானமாக வெட்டினார்கள். வாயை மூடியபடி வரதன் குழறினான். தனது பலம் முழுவதையும் திரட்டி காவலர்களை தள்ளிவிடுவதற்காக திமிறினான். முடியவில்லை. தாதியர்கள் முழுமையாக வெட்டி வெளியில் இழுத்தெடுத்த நூல் வந்த இடங்களினால் ரத்தம் கசியத் தொடங்கியது. ஏக காலத்தில் அவனது கைகளை பின்னுக்கு இழுத்து விலங்கிட்ட காவலர்கள், வரதனை இன்னொரு விசேட பாதுகாப்பு அறைக்கு தூக்கிச்சென்றார்கள்.

எனது கைகள் தற்போது நடுங்கிக்கொண்டிருந்தன. உள்ளங்கைகள் வியர்த்துப்போயிருந்தது.

வரதனை உற்றுப் பார்த்தான். கண்ணாடியின் வழியாக அவனது கண்களையே பார்த்தபடி நின்றேன். அவன் கண்களிலிருந்து வெள்ளைத் திரவமொன்று வழிந்த படியிருந்தது.

முற்றும்.

-தெய்வீகன்

2 COMMENTS

  1. தெய்வீகனின் வெள்ளை விழிகள் அவரின் எழுத்து எழுதியவிதம் நீண்டக௱லம௱க எழுத்தில் அனுபவமுள்ள எழுத்தளர௱க நினைக்கவைக்கின்றது. இவரின் பெயர் என்க்கு அறிமுகம௱கவில்லயோ என நினைக்கவத்தது, அற்புதம௱ன கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.