*(விமர்சனக் கோட்பாட்டு வரலாறு)
மொழியென்னும் பெரும் பிரவாகத்துக்குள் அதன் உள்விழிப்பாக ஆழ்தளப் பிரக்ஞையாக கலை இலக்கியங்கள் செயல்டும்போதே அதனை வேவு பார்க்கவும், உளவறியுமான ஒரு இணைகோடான எதிர்ப் பிரக்ஞையாக விமர்சன மனம் செயல்படத்தொடங்கி விடுகிறது. தமிழின் நெடிய மரபில் செய்யுளியல் இலக்கணங்களிலும், உரை மரபுகளிலும் இலக்கியத்தைப் புறவயமாக அளந்து பார்க்கவும், அதன் ரகசியங்களுக்குள் வேட்கையுடன் ஊடுருவிக் காணவுமான எத்தனங்கள் உண்டு. அவற்றின் பின்னே இலக்கிய அறிதலுக்கு அப்பாற்பட்டதான சமய/அரச/சித்தாந்த நாடுதல்களின் அழுத்தங்களும் உண்டு. ஆனால் சமூகத்தின் ஒவ்வொரு அலகிலும் உருமாற்றங்களை தீவிரப்படுத்திய காலனியப் பரவல், நவீனமயமாதல், மறுமலர்ச்சி, பொதுக்கல்வி ஆகியவற்றின் பிரம்மாண்டமான அசைவியக்கத்தில் ’விமர்சனம்’ என்ற அதன் நவீன சாரத்திலான ஒரு புதிய அறிமுறையின் திறப்பும், அதன் இயக்கமும் என்ன?
கடந்த ஒரு நூற்றாண்டு விமர்சனப் பரப்புக்குள் இணை கோடாகவும், எதிர்த்தும், மறுத்தும் வெட்டிச் செல்லும் பன்முகமான ஓட்டங்கள் உண்டு. அவை சமூகம், தனது கனவுகள் நோக்கித் தீவிரமாக உடைந்து உருவாகி புத்துருவாகிக் கொண்டிருந்த ஒரு பருவத்தின் உள்விழைவுகளிலிருந்து வெடித்த உரையாடல்கள்.
இலக்கியம் தன்னளவிலேயே ஒரு சுயமான அறிதல்முறை என்னும் விழிப்பை முன்னிறுத்தி சமூகத்தில் அதன் அந்தரங்கமான இயக்கத்தையும், தனித்த கனவையும் சுமந்த படைப்பாளிகளே ஒரு உடனிகழ்வாக விமர்சனத்திற்கான பாதையையும் திறந்து பார்த்தது ஒரு தரப்பு. இதில் வ.வே.சு ஐயர் தொடங்கி புதுமைப்பித்தன், கு.பா.ரா வழி, பின்னாளில் க.நா.சு., சி.சு.செல்லப்பா போன்றோரால் ஒரு உறுதியான மரபு முன்னெடுக்கப்படுகிறது.
குருதியும், தசையுமாக சமூக இயங்கு விதிகளினின்றும் பிரித்தெடுக்க முடியாத அதன் உடன் பிரதியாக இலக்கியத்தைக் கண்டு, அதன் நாடியோட்டங்களுக்குள் தம் சித்தாந்த இலட்சியத் துடிப்புகளைப் பிடித்தறியக் கிளம்பிய மார்க்சிய விமர்சகர்கள் மற்றொரு பெரும்தரப்பு. இலக்கியத்தை சமூகவியல், வரலாற்றியல், அரசியல் ஆய்வு மேசையில் கிடத்தி அதற்குள்ளான அதிகார இயங்கியலை, மானுட மோதல்களை, வரலாற்று அலகுகளை ஊடுருவிக் காட்டும் சோதனைத் தீவிரம் அதில் இருந்தது. தொ.மு.சி. ரகுநாதன், வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி, கோ.கேசவன் என அது ஒரு பெரும் அலை. அதன் போதாமைகள், இடைவெளிகளின் விமர்சனங்களினூடாக அப்பெரும் அலையின் ஒரு நீட்சியில் இருந்து பின் மார்க்சியம், அமைப்பியல், பின நவீனத்துவம் போன்ற அணுகுமுறைகளும் வந்தன. தலித்தியமும், பெண்ணியமும் தத்தம் தனித்த விழிப்பையும், வரலாற்றையும் சுயமான பாதைகளையும் கண்டடைந்தன.
சென்ற நூற்றாண்டு முற்பகுதியில் மரபிலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டோர் பெரும்பாலும் கல்வியாளர்களாக இருந்துள்ளனர். கல்விப்புல தேவைகளை நிறைவுசெய்தல், காலனிய மற்றும் இந்திய தேசிய சூழலில் இனம், மொழி சார்ந்த மரபு விழிப்பு, திராவிட இயக்க உந்துதல்கள், புலமைசார் ஆய்வுகள் என கல்வியாளர் விமர்சனத்தின் ஊன்றுகளங்கள் பல. கல்விப்புல விமர்சனப் பயில்வின் முன்னோடியாக செல்வக் கேசவராய முதலியாரை அறியலாம். (அவரது கம்பர் நூல் அத்தகு எத்தனிப்புகள் கொண்டவை) மரபிலக்கியத்தின் நுட்பமான மொழிதல்கள், அதன் கலைத்துவம் என்பதைக் காட்டிலும் அவை முன்னிறுத்தும் இலட்சியங்கள், மதிப்பீடுகள் மரபிலக்கிய ஆய்வுகளின் முன்னின்றது.
தமிழில் ஒரு தனிப் பயில்வாக இலக்கிய விமர்சனத்துக்கான ஒரு புறநிலையான முறையியலைப் பழக முயன்ற முன்னோடிகளில் ஒருவர் வ.வே.சு. ஐயர். அவரது கம்பராமாயணம் குறித்த கட்டுரைகள் முறையியலில் ஐரோப்பிய தன்மையும், கோட்பாட்டு நிலையில் இந்தியமய வைதீக நோக்கும், வடமொழி தழுவிய ரசனைவாதப் பார்வையும் கொண்டவை.
இந்த மரபு பின்னாளில் க. நா.சு., செல்லப்பா, வெங்கட்சாமிநாதன் வழி சிறுபத்திரிக்கை மரபின் ’நவீன எழுத்து’ என்னும் உணர்திறனோடு உடனிகழக்கூடிய விமர்சன இயக்கமாக நீண்டு வருவதை காணலாம். இவர்கள் வளமான ஆங்கிலக் கல்விப் பின்னணியும், சமூக மேலடுக்கின் உடலாகவும் பிரசன்னமாவது இங்கொரு இடைத் தகவலாக கடந்து செல்கிறோம். விமர்சனத்தின் இடத்தில் தனது வாசிப்பின் ஆகிருதியை நிரப்பியவர் க.நா.சு. அவரது விமர்சனம் வாசிப்பனுபவ பகிர்தல்கள், அபிப்ராய உதிர்ப்புகள், பரிந்துரைப் பட்டியல்கள் என்ற வரம்பில் நின்றன. விமர்சன ஒழுங்கின் ’முறையியல்’, ‘கோட்பாடு’ இவ்விரண்டும் அதில் வெற்றிடமாக விடப்பட்டன. சிறுபத்திரிக்கை மரபுக்குள் உருவாகத் தொடங்கியிருந்த வாசக தளத்தை தீவிரப்படுத்தல் என்பதற்கு மேலாக அதற்கு விமர்சன லட்சியங்கள் இல்லை. ’முறையியலை’ பிரதானமாக பேசிய சி.சு.செல்லப்பாவின் ’அலசல் முறையை’ மறுத்த க.நா.சு, ’அலசல் முறை’ இலக்கிய அறிதலுக்கு நேரெதிரானது என்றார். ’மனப்பதிவு’, ’வாசிப்பு சூழலை’ உருவாக்குதல் என்பதே அவரது நோக்கங்கள்.
தமிழில் ‘நவீன விமர்சனம்’ என்ற ஒன்று தோன்ற வேண்டும் என தனிக்கவனம் செலுத்தியவர் சி.சு. செல்லப்பா. அமெரிக்க ’புது விமர்சனம்’ அவரது முன்மாதிரி. ‘அலசல் முறை’ அவரது விமர்சனக் கருவி. ஒரு படைப்பை அது இலக்கியமாக உருக்கொண்டிருப்பதன் ரகசியங்களை உட்புகுந்து அலசுவதும் தீர்மானகரமான தர்க்கங்களும் அவரது ஆய்வுமுறை. ரசனைவாதம், உருவவாதம், ருசி அதன் அடித்தளங்கள். தனது விமர்சனத்தில் கோட்பாட்டின் இடத்தை மறுதலித்த தூய நிலையிலான அலசல்/பகுமுறை என்பது அவரது பிராந்தியம்.
இதன் அடுத்தொரு நீட்சியாக சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’-ன் வழியே வருகிறார் வெங்கட்சாமிநாதன். புறநிலையான கருவிகளின் குறுக்குவெட்டுகளுக்கு சிக்காத ஓர் அகமொழிவெளியாக இலக்கியத்தை முன்வைத்து அந்தரங்கமான வாசிப்பையும் ரசனைவாதத்தின் இன்னும் மேம்பட்ட வடிவையும் வைக்கிறார். தூயகலை வாதத்தின் முனைப்பு மிக்க குரல். ‘சூழல்’, ’உள்வட்டம் – வெளிவட்டம், ‘படைப்பு – படைப்பாளி உறவு’ முதலியவை அவரது விமர்சன உருவகங்கள். வெங்கட்சாமிநாதனின் விமர்சனப் பிரக்ஞை என்பது வெறுப்பும், சகிப்பின்மையும், கடுமையான குற்றச்சாடல்களும் கொந்தளிப்பவை. ’அன்றைய முயற்சியிலிருந்து இன்றைய வறட்சி வரை’, ’பாலையும் வாழையும்’ போன்ற உதாரணங்கள் இங்கு எடுத்து வைக்கத்தக்கன. அமைப்பியல் அறிமுகமாகி படைப்புக்கும் படைப்பாளிக்குமான உறவின் துண்டறுப்பு, ஆசிரியனின் மரணம், படைப்புக்குள் பொறியமைக்கப்படும் பலவிதமான திரளான சமூக/மொழி அலகுகள் என எல்லாம் பேசப்பட்ட சூழலில் ‘படைப்பு-படைப்பாளி’ உறவை மூர்க்கத்துடன் பிடித்தார் வெங்கட்சாமிநாதன்.
தமிழில் உருவாகி வந்த இந்த ’நவீன’ விமர்சனத்தின் உள்ளார்ந்த ஒரு சாதியத் தன்னிலையை, மார்க்சிய விமர்சனத்திற்கு அப்பாலான வேறொரு பிராந்தியத்திலிருந்து குறிவைத்துக் காட்டினார் பிரமிள். தமிழ் விமர்சனவியலை (குறிப்பாக வெங்கட்சாமி நாதனைக் குறிவைத்து) வர்ணாஸ்ரமத்தோடு ஒத்திசைவான ’விமர்சனாஸ்ரமம்’ ஆக அவர் வாசித்துக் காட்டியது அன்றொரு ஆவேசம். இலக்கியத்தின் சுயாதிக்கம், எழுத்தை படைப்பாளியின் உள்ளொளியாகக் காணுதல், மெய்ம்மை அறிதலில் எழுத்தின் வெளிச்சம் போன்ற அவரது கருதுகோள்கள் விமர்சன தன்னிலையை ஒரு படைப்புத் தன்னிலை முறியடித்துச் செல்லும் எத்தனிப்புகள். சிறுபத்திரிகைச் சூழலின் சாதியக் குழுவாத அரசியல் மறைவிடங்களை அவர் ஆவேசமாக ஊடுருவிக் காட்டிய வினையாற்றல்களே அவரது விமர்சனம்.
எழுத்தின் அகப் பிரக்ஞையை, சுயமான பெறுமதிகளை, தனித்த அறிமுறைகளை முன்வைத்து படைப்பு சார்ந்த விமர்சனத்தை, விழிப்பை சிற்றிதழ் மரபுக்குள் தீவிரப்படுத்தியதில் சுந்தரராமசாமி, சி.மோகன் இருவருமே வெவ்வேறு நிலைகளில் பங்களித்திருக்கிறார்க்ள். சுந்தரராமசாமி பொதுவெளி நோக்கி விடாது நிகழ்த்திக் கொண்டிருந்த உரையாடல்கள், இன்று சிறுபத்திரிக்கை மரபு வெகுசன கேளிக்கைகளுக்குள் உள்வாங்கப்பட்டதற்கு ஏதோ ஒரு மறைவான பாதையை திறந்துவிட்டதையும் மறுப்பதற்கில்லை. இதற்கு மற்றொரு புள்ளியில் வைத்து வாசிக்கும் சாத்தியங்கள் கொண்ட சி.மோகன் கட்டுரைகளில் இந்த சீரழிவின் முன்னுணர்தல்கள் குறிப்புணர்த்தப்பட்டுள்ளன. இன்று பெருந்தொகுப்புகளாக வெளி வந்திருக்கும் இருவரது கட்டுரைத் திரள்களுமே ஒரு காலகட்டத்தின் பெரும் உரையாடலின் வெப்பத்தையும் ஆக்கத்தையும் தாங்கியுள்ளதை மறுக்க முடியாது.
ஜெயமோகனின் ’நாவல்’, நவீன தமிழிலக்கிய அறிமுகம், நவீனத்துவ முன்னோடிகள் நூல் வரிசையும் கூட ‘எழுத்தின் அந்தரங்க வெளிச்சத்தை’ முன்வைத்து இயங்கிய ரசனைவாத, கலைமுதல் விமர்சன மரபின் தொடர்ச்சியில் வைத்து காணத்தக்கவை.
சிறுபத்திரிக்கை நவீனத்துவத்திற்கு நேரெதிரான புள்ளியில் கடும் விசாரணையுடன் தன்னை முன்னிறுத்திய மார்க்சிய விமர்சனம் இலக்கியத்தை தூலமான நிலையில் பிடித்துவிடும் விழைவும் அதன் சமூக அரசியல் பெறுமானங்களை அளந்துபார்த்துவிடும் தீவிரமும் கொண்டிருந்தது. மார்க்சியம் அளிக்கும் சமூக விஞ்ஞானம் வழியான அறிதல்கள் அதன் விமர்சன அலகுகள் ஆகின. இலக்கியத்தை ஒரு மேற்கட்டுமான கூறாக அணுகுதல், வரலாற்று பொருள்முதல்வாதம் , பிரதிபலிப்புக் கோட்பாடு, படைப்புக்குள் வர்க்க இயங்கியலை விசாரித்தல், சோஷலிச யதார்த்தவாதம் என்னும் இலட்சியப் புனைவுமுறை என சித்தாந்த அலகுகள் சார்ந்ததாக அதன் விமர்சனமுறை இருந்தது. மார்க்சிய விமர்சன செயல்பாடுகளை கட்சி/நிறுவனம்/சித்தாந்த வரம்புகளில் இயங்கியவை என்றும் நிறுவன/சித்தாந்த கட்டமைப்பு வரம்புகளைக் கடந்த, குறிப்பாக சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னான மார்க்சியத்தின் புதிய விரிவுகளையும் தழுவிய அணுமுறைகளும் என ஒரு பெரும் பரப்பில் இருபருவங்களாக அறியத்தக்கவை.
தொ.மு.சி.ரகுநாதன் தொடங்கி நா.வானமாமலை, தி.க.சிவசங்கரன், க.கைலாசபதி, கோ.கேசவன் வரை அந்த முதல் பருவத்தின் ஒரு பெரும் சுழற்சியைக் காணலாம்.
தொ.மு.சி., கைலாசபதி, வானமாமலை மூவரும் ”முற்போக்கு இலக்கியம்” என்ற புதிய அலையின் சித்தாந்த தளங்களை வலுப்படுத்தியவர்கள். இலக்கிய விமர்சனத்திற்கென ஒரு தனி நூலை முதலில் எழுதி வெளியிட்ட ரகுநாதன், பாரதி – புதுமைப்பித்தன் என்னும் சமத்காரமான இணைப்பின் வழி முற்போக்கு இலக்கிய அலையின் வலுவான மரபைக் கண்டளித்தார். தமிழில் சோசலிச எதார்த்தவாதம் என்னும் புனைவு வடிவம் குறித்த விவாத வியாக்கியானங்களில் முக்கிய முன்னெடுப்புகளை வைத்தவர். இறுக்கமான வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வுமுறையின் விளக்கமாக அவரது சிலப்பதிகார விமர்சனம் உள்ளது. சிறுபத்திரிக்கை படைப்பாளிகளால் நவீனத்துவ இலக்கியம் வைக்கப்பட்ட இடத்தில் மார்க்சிய விமர்சகர்கள் முற்போக்கு இலக்கியத்தை முன்னிறுத்தினர். நவீன இலக்கிய உணர்திறன்களை அவர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தனர். க.நா.சு-வுக்கான பதிலுரைப்பாக கைலாசபதி எழுதிய ’திறனாய்வுப் பிரச்சனைகள்’ இவ்விரு தரப்புக்குமான தீவிர முரணின் ஒரு புள்ளி. பாரதி வழி ஒரு முற்போக்கு மரபைத் தொட்டுக் காட்டியதிலும் ஒப்பியல், வரலாறு, மரபிலக்கியம் எனப் பலதளங்களில் மார்க்சிய அறிவைச் செலுத்தியதிலும் கைலாசபதி ஒரு முன்னோடி. முதலாளிய சமூக உருமாற்றங்கள், மத்தியதர வர்க்க உருவாக்கம் ஆகியவற்றின் உடனிகழ்வாக நாவல் இலக்கியத்தின் மதிப்பை அவர் கண்டறிந்து சொன்னார்.
’பிரதிபலிப்புக்’ கொள்கையை முன்வைத்து தமிழில் முதன்முதலில் ’மார்க்சிய அழகியல்’ என்ற ஒரு இலட்சிய உருவகத்தை உரையாடிப் பார்த்தவர் வானமாமலை. புதுக்கவிதைகளின் நவீனத்துவ அம்சங்களைச் சந்தேகித்த அவர் பிற்போக்குவாதம், தனிநபர் வாதம், நம்பிக்கை வறட்சி என்னும் மதிப்பீடுகளால் கடந்து சென்றார். தமிழியல் ஆய்வுகளில் மார்க்சியப் பிரக்ஞையை தீவிரப்படுத்தியதில் அவரது இடம் கணம் மிக்கது. க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களின் விமர்சனம் சமகால இலக்கியத்தோடு நிற்க மார்க்சிய விமர்சனம் மரபிலக்கியங்களையும் உட்படுத்தி சங்கம் தொடங்கி சமகாலம் வரை ஒட்டுமொத்த வரலாற்றுப் பரப்புக்குள் ஊடுருவிச் சென்றது.
தி.க.சி.யின் இலக்கிய அணுகுமுறைகள், கட்சி நிறுவனம் சார்ந்த பார்வையாக, அதன் பிரதிநிதித்துவமாக இருந்தது. முற்போக்குவாதம் என்ற வரம்பில் நின்ற அவர் சிறுபத்திரிகை வட்டம் சார்ந்த நவீனத்துவப் பரிசோதனைகளை தனிநபர்வாதம் என்ற எல்லைக்கு அப்பால் சென்று எதிர்கொள்ள முடியவில்லை. அவரது செயல்பாடு என்பது விமர்சன ஊக்குவிப்புகள், பாராட்டு குறிப்புகள் என்ற அளவிலான ஒரு மதிப்பைப் பெற்றன.
எண்பதுகள் இறுதியிலும் தொண்ணூறுகளிலும் மார்க்சிய விமர்சனம் கட்சி- நிறுவனம் சார்ந்த எல்லைகளை மீறி புதிய அறிவுப் பிராந்தியங்களில் தகவமைந்திருந்தது. 60-கள் 70-களில் ’சுதந்திர இந்தியா’ என்ற கட்டமைப்புக்குளான ஏமாற்றங்கள், கனவு கலைதலில் இருந்து பீறிட்ட எதிர்ப்புகளின் களங்களில் இருந்து தீவிரம் கொண்ட முற்போக்குப் பேரலையும் அதன் விமர்சன முன்னெடுப்புகளும் 90 களில் முதலாளியத்தின் தகவமைப்புகளும் உலகமயமாதலின் முன்னோட்டங்களும் தொடங்கிவிட்டதன் புதிய சூழலின் தோற்றுவாயில் வந்து நின்றது. பொது உடமை அரசுகளின் நெருக்கடிகள், பெண்ணியம், தலித்தியம், சூழலியல், சிறுபான்மையினர் உரிமை என விடுதலை அரசியல்கள் பன்முகத்தன்மையும் களத்தன்மையும் கொண்டமை என புதிய நிலவரங்களில் மார்க்சிய விமர்சனம் ரஷயாவின் சார்புகளைத் தாண்டி உலகளாவிய மார்க்சிய அறிவுப் பிராந்தியங்களுடன் தகவமையத் தொடங்கியது. மானுடவியல், மொழியியல், அமைப்பியல் முதலிய சகல அறிவுக்களங்களோடும் அதன் உரையாடல் என்பது தவிர்க்க முடியாததாயிற்று. சிறுபத்திரிக்கை நவீனத்துவத்துக்குள் தம் வரலாற்று மூலங்கள் துண்டிக்கப்பட்டு, இலக்கிய பிரதியியல் உளக்கூறாக மட்டும் வைக்கப்பட்ட இருத்தலியல், அந்நியமாதல் போன்ற நுட்பமான கருத்துருக்கள் முதன்முறையாக அதன் ஒட்டுமொத்த வரலாற்றுப் பொருண்மையோடு மார்க்சிய வெளிச்சத்தில் விளக்கப்பட்டது. எண்பதுகள் உருவாக்கியிருந்த இந்திய சூழலின் பௌதீகாமான சமூக பொருளியல் நெருக்கடிகளின் அந்நியமாதல், இருத்தலியல் அழுத்தங்கள், கவிதைகள், புனைவுகளிலும் புதிய மொழிப் பிராந்தியங்களை வரைந்திருந்தது. எஸ்.வி.ராஜதுரை, ஞானி, எஸ்.என்.நாகராசன் போன்றவர்களது மொழி, அரசியல் எழுத்தும், இலக்கிய எழுத்தும் ஊடிழைவாக பின்னிய புதிய உணர்க்கூறு கொண்டிருந்தது.
தத்தமக்குள் வேறுபட்ட இடைவெளிகளும் முரண்களும் கொண்ட க.சிவத்தம்பி, ஞானி, எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.ஆர், தமிழவன், அ,மார்க்ஸ் என ஒரு போக்கை நிறுவனம்சாரா மார்க்சிய விமர்சனத்தின் ஒரு பாதையாகக் குறிப்பிடலாம்.
சமூக நீதி சார்ந்த அரசியல்/பொருளாதார கலைத்துப் போடல்களின் வழி கல்வியும், அதிகாரமும் பெற்ற பிற்பட்ட சமூக இருப்புகளின் பல்வேறு குரல்கள் எழுத்துக்குள் பிரவேசமானதன் ஒரு தொடர்பிலேயே படைப்பு மற்றும் விமர்சன வெளியில் எண்பதுகள் தொண்ணூறுகளின் உருமாற்றங்கள் வருகின்றன. நவீன எழுத்து மனம்-வீடு–அலுவலகம்- என்னும் பரப்பிலிருந்து உடல், வரலாறு, மொழி, என்னும் பெருங்களங்களுக்கு திறந்து கொள்கிறது. மார்க்சிய விமர்சனமும் வர்க்க முரன் என்னும் ஒற்றைப்படையான தன்மையிலிருந்து சாதி, பாலினம், மொழி, மதம் என பலவிதமான அடையாள ஒடுக்குமுறை அலகுகளுக்கு முகம்கொடுக்கத் தொடங்குகிறது.
க.சிவத்தம்பி, அ.மார்கஸ், தமிழவன், ஞானி. எஸ்.வி.ஆர் எனப் பலரது வேறுபட்ட தொடுகைகளால் நெய்யப்பட்ட இந்தப் புதிய காலத்தில் கிராம்சி, அல்தூசர் போன்றவர்கள் வழியாக ஐரோப்பிய மார்க்சிய சிந்தனைகளும் தருவிக்கப்பட்டு நவீன சமூகத்துக்குள் இயங்கும் கருத்தியல் பதனிடல்களும் பண்பாட்டு மேலாண்மையின் அதிகாரக் கூறுகளும், நுண் அரசியல் புலங்களும் விவாதிக்கப்பட்டன. இலத்தின்-அமெரிக்கப் புனைவுகள் உள்ளிட்ட உலக இலக்கியத் திறப்பின் வழியும், கலைவுற்ற சமூக அடுக்குகளின் வேறுபட்ட வரலாறுகளும் , நிலங்களும் ஞாபகங்களும் படைப்புத்தளத்தின் அகச்சூழலில் ஒரு புதிய மொழியலையை உருவாக்கியபடியிருக்க, 90-களின் பாபர் மசூதி இடிப்பு, மதவாத அரசியல், குடிமை ஒடுக்குதல்களின் எதிர்த்துடிப்புகளாக அம்பேத்கரியம், பெரியாரியம் போன்றவற்றின் மீளெழுச்சிகளின் வழியில் புறச்சூழலில் விமர்சன மொழியும் தன்னை உருமாற்றியது. அமைப்பியல், பின் நவீனத்துவம் எல்லாம் அறிமுகமாகி ஒட்டுமொத்த படைப்பு-விமர்சன மொழிபரப்பும் தீவிரமாக கலைத்தடுக்கப்படுகிறது. மன ஓசை, நிகழ், பரிமாணம். படிகள், நிறப்பிரிகை போன்ற சிற்றிதழ்கள் வழி ஒரு விமர்சன வீச்சும் வித்தியாசம், மீட்சி, கல்குதிரை என இன்னொரு வகையான படைப்பு சார்ந்த ஒரு பரிசோதனைத் தீவிரமும் அக்காலகட்டதை ஒரு கொந்தளிப்பில் வைத்தன.
எஸ்.வி.ராஜதுரையின் அந்நியமாதல், எக்ஸிஸ்டென்ஷ்யலிசம் குறித்த நூல்கள், தமிழவனின் ஸ்ட்ரக்சுரலிசம் நூல் எல்லாம் மார்க்சிய விமர்சனத்துக்குள் புதிய பிரக்ஞையை சுடரேற்றியது. எஸ்.வி.ராஜதுரை, புரட்சிக்குப் பிந்தைய சமூகங்களின் கலை இலக்கிய போக்குகளைத் தொட்டறிவதன் வழியாக சோஷலிச அரசுகளின் அரசியல் மனச்சான்று, ஜனநாயக அறங்களின் உள்முகங்களை பகிரங்கம் செய்தார். ’ரஷ்யப் புரட்சி ஒர் இலக்கிய சாட்சியம்’ போன்ற நூல்கள் இங்கு சுட்டத்தக்கது. பெரியாரியத்தைத் தமிழ்ச்சூழலின் சமதர்மமாக, வாசிக்கும் வாய்ப்புகள் நோக்கி எஸ்.வி.ஆர் இன் ஆய்வுகள் அமைந்தன.
மரபான மார்க்சிய விமர்சனத்திற்குள்ளிருந்து புதிய காலத்தின் உருமாற்றங்களுடனான ஊடாட்டங்களில் க.சிவத்தம்பி ஒரு பெரும் ஆகிருதி. மார்க்சியத்தை வெறும் பொருளாதாரவாதமாக குறுக்குவதை மறுதுத்ரைத்து அதன் மையத்தில் மானுட முழுமை நோக்கிய மெய்ம்மைக்கூறு உண்டு என்றார். இலக்கியத்தில் அரசியலோடு கலைப் பிரக்ஞைக்கும் மார்க்சிய விமர்சனம் முகங்கொடுக்கப் பேசினார். ’இலக்கணமும் சமூக உறவுகளும்’, ’தமிழில் இலக்கிய வரலாறு’, ’இலக்கியமும் கருத்து நிலையும்’ போன்றவை அவரை ஒரு விமர்சனப் புலமையாளராக நிறுத்துகின்றன. புலமைத்துவத்தின் ஓங்கிய ஆகிருதியாக இருந்து ’திறனாய்வியலின்’ புலமை நெறிகள் குறித்து நுணுகிப் பேசியுள்ளார். ஆனால் தொண்ணூறுகளின் படைப்புமொழிக்குள் கனன்று எரியத் தொடங்கிய புதிய வேட்கைகள், அதன் சிறு வெளிகள், கனவுகளைத் தொட்டுத் திறக்க அதில் அவகாசமிருக்கவில்லை. ஆனால் கலை இலக்கியப் பார்வையில் மரபு மார்க்சியரின் ’ஸ்தானோவிய’ வாதங்களை விமர்சித்து நெகிழ்வான அணுகுமுறைக்கான தேவையை அக்கறையுடன் பேசியுள்ளார். அமைப்பியல், பின் நவீனத்துவம் முதலிய புதிய சிந்தனைகளுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் மார்க்சிய விமர்சனத்தைக் கூர்மைபடுத்தும் வேட்கை அவரிடம் இருந்தது.
புதிய காலத்தின் உருமாற்றங்களோடு தீவிரமாக போரிடத் துணிந்த மார்க்சிய விமர்சனத்தின் முனைப்புமிகு குரலாக கோ.கேசவனின் ஆளுமை ஓங்கி நிற்கிறது. மார்க்சியத்திற்குள்ளும் மார்க்சியத்தைத் தாண்டியும் அறிமுகமான புதிய மேலைச் சிந்தனைப் போக்குகளுடனான எதிர்வினையாற்றல்கள் மூலம் தனது மரபுவழிப்பட்ட மார்க்சியக் கலை இலக்கியக் கொள்கையை மேலும் கூர்மைப்படுத்தி அதன் ஆற்றல்மிக்க பரிமாணத்தை முன்வைக்க எத்தனித்தார். கண்டிப்பான வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையைக் கையாண்டார். சங்க கால வாழ்வியல், சோழர் காலம், பள்ளு இலக்கியம் குறித்த அவரது ஆய்வுகள் இத்தொடர்பிலான உதாரணங்கள். வர்க்கப் பார்வை, வரலாற்றுப் பொருள்முதல் நோக்கு, பிரதிபலிப்புக் கொள்கை, மேற்கட்டுமான கீழ்க்கட்டுமான உறவு என்ற வழமையான மார்க்சிய சட்டகத்தின் இறுக்கமான பிடிமானத்திலேயே அவரது விமர்சனங்கள் அமைந்தன. வணிகமய பிற்போக்குக் கலைகள் – வணிகமய எதிர்ப்பு தனிநபர்வாத கலைகள் – மக்கள் கலைகள் என்ற முக்கோண வகுத்தலினூடாகவே அவரது விமர்சனத் தட்டுகள் அசைந்தன.
’அந்நியமாதலை’ முன்வைத்து மார்க்சியத்தின் தத்துவப் பரிமாணத்தை வலியுறுத்தல், அதனை ஒரு மெய்யியலாக முன்வைத்தல், அதில் ஐரோப்பிய மைய யாந்திரீகக் கூறுகளையும், உற்பத்தி வேட்கையையும் மறுத்து அறம், ஆன்மீகம், பொருளியலான புற வேட்கைகளின் இடத்தில் மெய்யியலான ஒரு அகநிறைவு, சூழலியல், இயற்கையுடன் இயைந்த விழிப்பு என ’கீழை மார்க்சியம்’ என்பதான ஒரு பாதையை எஸ்.என்.நாகராஜனும், கோவை ஞானியும் முன்வைத்தனர். இதற்கு மாவோவின் வகைமாதிரியின் வழி புதிய விளக்கங்களைப் பரிசோதித்தனர். ஆனால் இந்த புள்ளியில் தொடங்கிய எஸ்.என்.நாகராஜன் அதை விரைவிலேயே வைதீக மூலங்களில் கொண்டு சேர்த்தார். மார்க்சியமும் வைதீக மத ஞானங்களும் அவருக்கு ஒன்றாயின. அந்நியமாதலை மையாமாக்கி மெய்ஞ்ஞானம் பேசிய இடத்தில் அதன் அரசியல் பரிமாணம் ஊனமடைந்தது. வைதீகத்தின் சாதிய உள்ளமைப்பும் நிகழ் யதார்த்தங்களும் அதில் இடைவெளிகளாக விடப்பட்டன. ஞானி தமிழ்தேசியம், தமிழிய மெய்ம்மை என்ற இன்னொரு முனைக்குச் சென்றார். தமிழிலக்கிய சாரத்தின் வழி பரந்த மானுட நோக்கு, தமிழ் மெய்யியல் என அவரது கண்டுபிடிப்பு முனைவுகள்/திசைகள் அமைந்தன. சங்க இலக்கியம் தொடங்கி மரபிலக்கியத்தின் ஒட்டுமொத்த பரப்பிலிருந்தும் ’சமதர்மக்’ கூறுகளையும் ஆதிப்பொதுமைச் சமூக அறங்களின் உள்ளோட்டங்களையும் எடுத்துக்காட்டுவதாக ஞானியின் விமர்சனம் அமைந்தது. தமிழ் மரபுக்குள்ளிருந்தே மார்க்சியத்திற்கு நெருக்கமானதொரு மெய்யியலைப் படைக்க ஞானியின் விமர்சனம் விருப்பம் கொண்டது. குறிப்பாக நவீன இலக்கியம் மீது மார்க்சிய தரப்பிலிருந்து ஒரு அணுக்கமான வாசிப்புக்கும் அணுகுமுறைக்கும் அவர் காலடி வைத்தார். வர்க்க சமூகத்தில் கலைகளும் வர்க்கத் தன்மையினதாக இருக்க அவசியமில்லை, கலைகளின் அகவிழிப்பு வேறொரு உள் மரபு கோண்டது, அதில் கனவுநிலைப்பட்ட ஒரு படைப்பு மொழிக்குள் வர்க்கம் கடந்த மானுட அறங்களின் உணர்வெழுச்சிகளின் ஊற்றுகளை அவர் தொட்டுக் காட்டினார்.
இந்த சூழல்களினூடாகதான் அமைப்பியல்வாத விமர்சன முறையும் தமிழுக்குள் இறங்கியது. மொழி, பண்பாடு, வழக்காறுகள் போன்ற அருவமான புழக்கங்களின் அடித்தளங்களில் காணப்பெறும் உள்ஒழுங்கை, ஆழ்தளங்களில் இயங்கும் பொதுச் சட்டகங்களைக் கண்டறிந்த அமைப்பியல் ஒரு இலக்கிய விமர்சன முறையாகவும் நீட்சி பெற்றது. எழுத்து என்பது எழுதுபவனின் உள்ளொள்ளியாகவும் அகத்தரிசனமாகவும் முன்வைக்கப்பட்ட இடத்தில் அமைப்பியல், எழுத்து என்பதை ஒரு உற்பத்தியாக, தொழில் நுட்ப பொறியாக்கமாக, மொழிக்குறிகளின் பின்னலான பிரவாகமாக, சமூக திரள் ஞாபகங்கள் , மொழி மரபுகளின் ஒரு திறவு களமாக முன்வைத்தது. படைப்பாளியை ஒரு பொறியாளனாகவும் வெறும் ஊடகமாகவும் அமைப்பியல் விமர்சனம் கூறியது. ’படைப்பு’ என்பது வெறும் ’பிரதி’ யாக முன்வைக்கப்பட்டது. பிரதிக்குள் ஆசிரியனின் அதிகாரத்தை நீக்கம் செய்து வாசிப்பின் பன்முகமான அர்த்த சாத்தியங்களை முன்வைத்து ”ஆசிரியனின் மரணம்” எனும் கருத்துருவை மொழிந்தது. மனித பிரக்ஞை என்பது ஒரு மொழிப் பிரக்ஞைதான். யதார்த்தம் என்பது தூலமான புனலறி அறுதி மெய்ம்மை அல்ல, அது ஒரு மொழிபுனை யதார்த்தமே போன்ற விவாதங்கள் நடந்துகொண்டிருந்தபோது… படைப்புத் தளத்தில் ஐரோப்பிய நவீனத்துவம் கையளித்த யதார்த்தவாத மொழியைக் கடந்துவிட்ட புனைவம்சமும், வழக்காறுகளும் , தொன்மங்களுமாய் ஒட்டுமொத்த மொழி நினைவுக்குள்ளும் சுதந்திரமாக திறந்து கொள்வதற்கான உருமாற்றங்களும் நிகழத் தொடங்கியிருந்தன.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் எல்லாம் அமைப்பியலின் ஆய்வு மேசையில் எடுத்து போடப்பட்டன. பிரதியில் அர்த்தங்களின் உற்பத்தியும், அர்த்தங்களின் இயங்குமுறையும் விளக்கப்பட்ட சமன்பாடுகள், குறியீடுகள், பெருக்கல் குறிகள், ஃப்ளோ சார்ட் போன்ற விளக்கப் படங்கள் சிதறிக் கிடக்கும் அமைப்பியல் கட்டுரைகள் அறிவியல்கட்டுரைகளின் மிரட்சியான மொழியில் இருந்தன. தமிழவன், நாகார்ஜூனன், எம்,டி.முத்துக்குமாரசாமி, எஸ்.சண்முகம் எனப் பலரும் அமைப்பியல் விமர்சனத்திற்குள் இருந்துள்ளனர். அமைப்பியலாய்வுக்குள் கல்விப்புலம் சார்ந்த ஆசிரியர்களும் புலமைப் போட்டிகளோடு புகுந்தனர்.
வெங்கட்சாமிநாதன் படைப்பு – படைப்பாளி உறவைப் பேசிக்கொண்டிருந்த போதுதான் படைப்பாளியின் ‘உள்ளொளி’ அதிகாரத்தை குறிவைத்து தமிழவனின் ’படைப்பும் படைப்பாளியும்’ புத்தகம் வந்தது. மார்க்சிய விமர்சனமும், கலைமுதல்வாத விமர்சனமும் பகைத் துருவங்களில் இருந்தபோது இரண்டுக்கும் இடைநின்ற ஒரு புள்ளியில் அக்கட்டுரைகளின் தொனிகள் இருந்தன. மார்க்சிய விமர்சனத்தின் ஒரு நீட்சிக்குள் இருந்துதான் அமைப்பியல்வாத விமர்சன முறையும் வந்தது. ஆனால் அதன் அரசியல்சார்ந்த தீவிரமும் உட்பிடிப்பும் ஒரு கேள்வியாகவே எஞ்சியது. எழுத்தில் படைப்பாளியின் அதிகாரத்தை உடைத்தது என்பதற்கு அப்பால் அரசியல் உள்ளடக்கமற்ற ஒரு அந்தரவெளியிலான புலமைத்துவ ஆய்வுமுறையாகவே அது இருந்தது. மறுபக்கம் படைப்பை வெறும் உற்பத்தியாகவும் தொழிநுட்ப உருவாக்கமாகவும் அணுகியதில், இலக்கியத்தின் நுட்பமான அறிமுறைகள், கண்டுபிடிப்புகள் குறித்தும் அது கொடுத்த வெளிச்சம் மிகச் சிறிதே. ஒருவித புலமைத்துவ முனைப்பே அதில் ஓங்கி நின்றது. அமைப்பியல் விமர்சனத்தை விடவும் மரபார்ந்த மார்க்சிய விமர்சகர்களும் ரசனைவாதம் பேசியவர்களும் இலக்கியம் குறித்து இன்னும் ஆழமான அறிதல்களை நிகழ்த்தியிருந்தார்கள்.
ஐரோப்பிய மறுமலர்ச்சி மற்றும் நவீனத்துவ யுகத்தின் அறிவுமைய வாதம், மனிதமைய வாதம், முற்றுண்மைவாதம், சாராம்சவாதம், பெருங்கதையாடல் உருவாக்கம், ஒற்றைத் தன்மை, இருமை அணுகுமுறைகள், மையப்படுத்தப்பட்ட எடுத்துரைப்புகள், நவீன குடிமை ஒழுங்குகளின் நுண்தள வன்முறைகள் முதலியவற்றை விமர்சித்து அறிவை சார்புநிலைக்குட்பட்ட சமூக பண்பாட்டு உற்பத்தியாக முன்வைத்து, சிறு மரபுகள், குறுங்கதையாடல்கள், பன்முக அடையாளங்கள், விளையாட்டு, கொண்டாட்ட இயல்புகள், பலவித வழக்காற்று நெகிழ்வுகள் என பின் நவீனத்துவம் உலகமய திறப்புகளின் ஒரு பண்பாட்டு நிலவரமாக, நவீனத்துவம் அளித்த வாக்குறுதிகள் மீதான நம்பிக்கைத் தகர்வாகவும் முன்வைக்கப்பட்டது.
எதார்த்தத் தளத்தை மீறிய மிகு புனைவுகள், வடிவ ஒழுங்குகளைக் கலைத்தல், மையமற்றத் தன்மை, காலவெளி கலைத்துப்போடல்கள், பன்முகத்தன்மை , வடிவங்களுக்கிடையிலான நெகிழ்வு, தற்சுட்டு பிரதி (self referential), பிரதியிடை உறவு (intertextual) முதலிய வடிவக் கூறுகளோடும், அதிகாரப்படுத்தப்பட்ட கருத்துக் கேந்திரங்களை கட்டவிழ்த்தல், விளிம்புநிலை இருப்புகளைப் பேசுதல், உடலின் வரலாறு, பாலியலின் – அழகியல், அரசியல், பல்குரல்தன்மை போன்ற உள்ளடக்க இயல்புகளோடும் அ-நேர்கோட்டு (நேர் குலைந்த –non linear writing) எழுத்துமுறை என்பதாக படைப்பு விமர்சன தளத்தில் பின் நவீனத்துவம் முன்வைக்கப்பட்டது. இச்சூழலில் ஒரு தொடர்பிலும், இலத்தீன் – அமெரிக்க இலக்கிய ஊக்கங்களோடும் யதார்த்தவாதம் மீறிய ஒரு எழுத்துமுறை, மிகு புனைவு, வழக்காற்று தன்மை, தொன்ம படிம புனைவறி கூறுகள், மாய யதார்த்தம், கதை என்னும் இடத்தில் புனைவு, சொல்கதையின் இடத்தில் மொழி கதை என ஒரு புதிய புனைவுமொழியும் அதையொட்டிய இலக்கிய விமர்சனமும் உருப்பெற்றது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சி, கிழக்கு ஐரொப்பாவில் கம்யூனிசப் பின்னடைவுகள், இந்தியாவில் உலகமயத்தின் வருகை, மதவாத அரசியலின் ஒடுக்குமுறைக் களங்கள் தீவிரப்பட்டமை, அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டிய சாதியம் குறித்த புதிய விழிப்பு, பெண்ணிய உரையாடல்கள், சிறுபான்மைக் குரல்கள் என ஒரு ஒட்டுமொத்த பரப்புக்குள் ஒரு பெரும் பருவமாற்றாத்தின் புள்ளியில், கடந்து வந்த வரலாற்றை மறுவாசிப்பும் பரிசீலனையும் செய்து பார்ப்பதற்கான ஒரு தீவிரம் தமிழ்ச்சூழலின் மார்க்சிய விமர்சன தளத்திற்குள் சூழ்ந்திருந்தது.
இதனொரு நீட்சியில் அரசியல் சார்ந்த விமர்சனத் தளத்தில் பின் நவீனத்துவ உரையாடல்களை முன்வைத்து ’நிறப்பிரிகை’ இதழ் 1990களில் இயங்கியது. ரசிய சோசலிசக் கட்டுமானம் மீதான விமர்சனங்கள், கட்சி சார் அணுகுமுறைகள் குறித்த விமர்சனம், ஐரோப்பிய, பின் மார்க்சிய கருத்துநிலைகள், தலித்தியம், பெண்ணியம், கறுப்பின இலக்கியம், பண்பாட்டு தளத்தில் மாற்றுகளுக்கான, மாற்று அழகியலுக்கான தேடல்கள் என நிறப்பிரிகைக்குள் பலவிதமான விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன. அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ. வேல்சாமி, ராஜன்குறை, வளர்மதி, சாருநிவேதிதா, பிரேம் ரமேஷ் எனப் பலரும் நிறப்பிரிகையின் பின் நவீனத்துவ விமர்சன களங்களில் தொட்டுநின்று வெவ்வேறு திசைகளில் செயல்பட்டுள்ளனர். சிறுபத்திரிக்கை மரபு வழியான நவீனத்துவத்தின் சாதிய அடித்தளங்கள், அதன் திராவிட இயக்க ஒவ்வாமை வழியான அந்நியமாதல் மன நிலைகள் முதலியவற்றை அவர்கள் கடுமையான விமர்சனத்திற்குட்படுத்தினர். இப்போக்கில் புதுமைப் பித்தன், மௌனி தொடங்கி சுந்தரராமசாமி வரை அவர்கள் மறுவாசிப்பு செய்தனர். மணிக்கொடியிலும் எழுத்திலும் உருவாகி வந்த ஒரு நவீன மொழிக்குள் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் என ஓரப்படுத்தப்பட்ட இருப்புகளின் கோணத்திலான ஆதிக்கத் தளங்களும் மௌனங்களும் நோக்கி நிறப்பிரிகைச் சூழலின் விமர்சன செயல்பாடுகள் இருந்தன. அ.மார்க்சின் உடைபடும் புனிதங்கள், உடைபடும் மௌனங்கள், ரவிக்குமாரின் கண்காணிப்பின் அரசியல் போன்ற புத்தகங்கள் அன்றைய நிறப்பிரிகைச் சூழலின் அதிர்விலிருந்து வந்தவை.
ஆனால் தொண்ணூறுகளின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற கோட்பாடு ரீதியான விமர்சனப் பிரக்ஞை என்பது 90-களின் படைப்புவெளியில் மொழிக்குள் மிக உள்முகமாக நிகழ்ந்து கொண்டிருந்த நுட்பமான மாறுதல்கள், அதன் சிறு துடிப்புகளுக்குள் புகுந்து பார்ப்பதற்கான கூருணர்வைக் கொண்டிருக்கவில்லை. அரசியலாக இவ்வணுகுமுறைகள் முக்கியமான ஆய்வுகளைச் செய்திருந்தாலும் ஒரு மொழிக்குள் படைப்பெழுத்து எப்படி இயங்குகிறது என்றும் அதன் தனித்த உள்மரபும் அக இயக்கமும் குறித்தும் ஊடுருவி பார்க்கும் மெனக்கெடல்களை அது செய்யவில்லை. இந்த காலப் பகுதியில்தான் தமிழ்க் கவிதை மொழி ஒரு உலகளாவிய உணர்திறனில் தன்னைப் புதிப்பித்தது. வரலாறு, அறிவியல், தத்துவம் என சகல அறிதல்களினூடாகவும் புத்திபூர்வமாகவும் நவீன எழுத்து தன்னை உருமாற்றியது.
அம்பேத்கர் நூற்றாண்டையொட்டிய உத்வேகங்களுடன் தீவிரம் பெற்ற தலித்திய விமர்சனம் என்பது 1990-களில் ஒரு பரிமாணமும் 1990-களுக்குப்பிறகு வேறோரு பரிமாணமும் கொண்டுள்ளது. பெரியாரியத் தொடர்போடும் பிள் நவீனத்துவ ஊக்கங்களோடும் 90 களில் நிறப்பிரிகை பேசிய தலித்தியம் பின்னர் கடும் விமர்சனத்துக்குள்ளனது. அம்பேத்காரியத்தையும் பௌத்த நெறியையும் முன்வைத்து தனது சுயமான தலைமைத்துவம், தமக்கான தனித்த வரலாறு, அறிவுஜீவித மரபு போன்ற கண்டுபிடிப்புகளை தலித்திய விமர்சனம் முன்வைக்க தலைப்பட்டுள்ளது. ராஜ்கௌதமன் தொடங்கி தற்போது ஸ்டாலின் ராஜாங்கம் வரை தலித்திய விமர்சன முறையின் ஒரு பாதையை அவதானிக்கலாம். தலித் அழகியல், அதன் வரலாறு, அதன் தனித்த மொழி எனப் பலவாறான தேடல்களுடன் வரலாற்றுக்குள் அந்த விழிப்பின் அறிவார்த்த மரபை நிரல்படத் தொகுக்கும் தனி வரலாறு நோக்கி தலித்திய விமர்சன ஆய்வுகள் முடுக்கம்பெற்றுள்ளன.
பெண்ணிய விமர்சனம் 90-களில் சிமோன் தி புவார், ஹெலென் சிக்சு என ஐரோப்பிய பெண்ணிய கோட்பாடுகள் சார்ந்த பார்வையோடும் பெரியார், தலித்தியம் முதலிய அரசியல் துணைக் கூறுகளோடும் பின்னர், 2000-த்திற்குப் பிறகு பெண் மொழி, உடலரசியல் முதலியவற்றை முன்வைத்த பெண் கவிதை இயக்கத்தின் வீச்சிலும் உருக்கொண்டது. அ.மங்கை, வ,கீதா, அரங்க மல்லிகா, ஆனந்தி இவர்களை சித்தாந்த ரீதியான பெண்ணிய விமர்சன இயல்பிலும், குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, சல்மா முதலியோரது கவிதையும், விமர்சன கருத்தாக்கங்களும், பிந்தைய மரபின் இயல்பிலும் வைத்து அணுகத்தக்கது. பெண் மொழி, வரலாற்றை மறுஆக்கம் செய்தல், சமூகப் பண்பாட்டு கட்டமைப்பின் தொகுதியாகியுள்ள உடலை விடுவித்து அதன் ஆதிமைக்குத் திருப்புதல், அதன் பாலிமை ஆற்றலை, விடுதலையை பேசுதல் என அவர்களது விமர்சன அலகுகள் உள்ளன. லதா ராமகிருஷ்ணன், பெருந்தேவி முதலியோர் சிறுபத்திரிக்கை நவீனத்துவ மரபின் தொடர்ச்சிக்குள் தத்தம் மொழியை வைத்துள்ளனர்.
2000-த்திற்குப் பிறகு உலகமயத்தின் பொருளியல் பண்பாட்டு தாக்கத்திற்குப் பிறகு, சிற்றிதழ் மரபின் தேக்கம், இடைநிலை இதழ் பெருக்கம், சிற்றிதழ் மரபின் பொதுவெளி நோக்கிய வெளிச்சம், முரண்பாடுகள் மௌனிக்கப்பட்ட சமரசங்கள், இணையம் போன்ற பரவலான எழுதுவெளிகள், கலைவெளி, நுகர்வுப் புலமாகியுள்ளமை , தீவிரமான விமர்சன, கோட்பாட்டு விவாதங்கள் அவற்றின் வரலாற்று உள்ளீடுகள் காலி செய்யப்பட்டு ஒரு பொது கேளிக்கையின் அடையாளங்களாகியுள்ளமை எனப் பலவித மாற்றங்களின் பின்புலத்தில் விமர்சனப் பிரக்ஞை என்பது மரணித்துவிட்ட ஒரு சவச்சூழலே பார்க்கிறோம். படைப்பு உற்பத்தி முன்னெப்போதையும் விட பெரும் வீச்சில் உள்ளபோதும், இன்று குறிப்பிடத்தக்க புதிய தலைமுறை விமர்சன இயக்கமோ, ஆளுமையோ, விமர்சன மதிப்பீடுகளோ அற்ற வெற்றிடச்சூழல் மிக ஆழமான பரிசீலனைகளுக்கும் ஆய்வுக்கும் உரியது.
- பிரவீண் பஃறுளி