அலருக்கு அஞ்சி


1.

ணேசமூர்த்திக்கு என்னானது என்று தெரியவில்லை. அவனைப் பார்த்து இருபது நாட்களுக்கும் மேலாகிவிட்டது. நாட்பட்ட குளிருக்கு ஆளான நிராதரவான மனிதனைப்போல் அவன் ஆகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தும் அதைப்பற்றி ஒன்றும் அவனிடம் கேட்காமல் விட்டது பெரிய தவறோ என்று தோன்றியது. தன்னுடைய இயலாமைகளை நினைத்து சோர்வடைந்து கொண்டிருக்கும் மனிதனை தனிமையில் விடுவதைப்போல் கொடுமையான ஒன்று இருக்க முடியாது.

அவனுடைய சொந்த விசயத்தில் தலையிட வேண்டாமே என்று நான் அமைதியாக இருந்துவிட்டேன். யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பாரத்தை இறக்கி வைக்க வழியின்றி அவன் தடுமாறிக்கொண்டிருந்ததைப் பார்த்தும் நாம் கருணையின்றி இருந்துவிட்டோமே என்று எனக்கு குற்றவுணர்வு ஏற்படத் தொடங்கிவிட்டது.

‘உனக்கு என்னாயிற்று? நான் உனக்கு எந்த வகையிலாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன்! என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பதை மறைக்காமல் சொல். இல்லை… எனக்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறாயா? அதையாவது சொல்!’ இப்படி ஏதாவது நானே அவனிடம் பேசியிருக்க வேண்டும். சும்மா இல்லை, ஐம்பது வருஷத்துக்கு மேலான நட்பு. மனசு விட்டு ஆயிரம் விசயங்களைப் பேசிய பழக்கம்.

எத்தனையோ விசயங்களை வெகுளித்தனமாக கொட்டி இறைப்பதைப்போல் பேசுபவன் எதையோ ஒன்றை நம்மிடம் கூட சொல்லமுடியாமல் வைத்துக்கொண்டு தடுமாறுகிறான். அப்படி ஒன்று எல்லா மனுசன் கிட்டேயும் இருக்கும்தானே. நான் ஏன் அதை உணரவில்லை. ஐம்பது வயதுக்கு மேல் ஆகிப்போன ஒரு சாதாரண குடும்பஸ்தன். ரெண்டு பிள்ளைகளைப் பெற்று, வளர்த்தெடுத்து, அதற்கு ஒரு நல்லது நடக்க வேண்டும்னு ஆசைப்படுகிற சாதாரண ஆசைகளோடு நடமாடும் ஒருவன் எப்படியிருப்பான்? இப்படித்தான் இருப்பான். எனக்கு ஏன் அது உரைக்கவில்லை.

என்ன பெரிய சுண்டக்கா சொந்த விசயம். நட்புக்குள்ள அப்படியென்ன வேண்டிக்கிடக்கு. அதெல்லாம் எல்லாத்தையும் பகிர்ந்துக்கலாம். அதுல எதுவும் குறைந்து போய்விட மாட்டோம். அவனுக்கு அது பெரிய விசயமா பட்டிருக்கு. அது அவனோட சுபாவம். நாம் அதைப் புரிந்துகொண்டிருக்கணும். அப்படி இப்படி பேச்சுக் கொடுத்து விசயத்தை தெரிஞ்சுகிட்டு அதை சுமுகமாக்கி விட்டிருக்கணும்.

நமக்கு அந்த நிலையென்றால் அவன் அதைச் செய்திருப்பான். நிச்சயம் செய்திருப்பான். அவன் தன் விசயங்களைத்தான் தனக்குள் போட்டு புழுங்கிக் கொள்வானே தவிர, தனக்கு வேண்டியவர்களுக்கு ஒன்று என்றால் அதை தலையில் ஏற்றிக்கொண்டு அதை எப்படி சரி செய்வது என்றே சதா யோசித்து, அதைச் சரிசெய்து முடித்துவிட்டுத்தான் தூங்கவோ சாப்பிடவோ போவான்.  ஆனால், நான்… இது அவனுடைய சொந்த விசயம் என்று நினைத்துக்கொண்டு அவனை அப்படியே விட்டுவிட்டேன்.

நான் அவனிடம் பேசிப் பார்த்திருக்க வேண்டும். நீ என்னிடம் மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று பிடிவாதமாக பேசியிருக்க வேண்டும். நான் ஏன் அப்படி செய்யவில்லை? இன்னொருவனின் சொந்த விசயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்கிற பாழாய்ப்போன நாகரிகம். என்ன பெரிய இந்த நாகரிகம்! நான் நாகரிகமானவனாக எனக்குத் தோன்றவில்லை. அதுவொரு மொண்ணையான காரணம்.

கடைசியாக நான் அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது கசங்கிய ஒரு பாலித்தின் பையை ஒரு கர்சீப்பைப்போல் மடித்து கையில் வைத்திருந்தான். அது மஞ்சள் நிறத்தில் இருந்தது. அந்த நகரின் பிரதானமான துணிக்கடையின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. பையில் ஒன்றுமே இல்லை. அவன் எதையோ வாங்குவதற்காக கடைத்தெருவிற்கு வந்தபோது நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.

அவன் பொருள் வாங்கும் வரை காத்திருந்து, ஸ்கூட்டரில் உட்காரச் சொல்லி என் பட்டறைக்கு அழைத்துச் சென்றேன். பட்டறையில் யாரும் இல்லை. வேலுமணி ஏதோ வேலையாக ஊருக்குப் போய்விட்டான். மற்ற இருவரும் உள்ளூர் ஆட்கள் என்பதால் அவரவர் வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்கு போய்விட்டார்கள்.

எப்போதும் ஒரு கெத்தாக உட்காரக் கூடியவன், அப்போது உட்கார கூசுபவன்போல் உட்கார்ந்தான். பேசும்போதே கவனித்தேன். அவனிடம் அந்த பழைய இயல்பு இல்லை. எனக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, எதையோ மறைத்து வைத்திருப்பவன் போலவே பேசினான். அது என்னவாக இருக்கும்? நான் கேட்டுக்கொள்ளவில்லை. அவனாக சொல்லாமல் அதைத் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று நான் அமைதியாக இருந்தேன். அன்று அவன் அவமானத்தின் உச்சத்தில் இருந்தான் போலிருக்கிறது. அடிக்கடி கண்கள் கலங்குவதை என்னிடமிருந்து மறைத்தான்.

சில நாட்களாக அவனுடைய சொந்த வாழ்க்கையில் சில ஏமாற்றங்களும், பரிதாபகரமான நிகழ்வுகளும் நடந்துகொண்டிருப்பது எனக்குத் தெரியும். அவனுடைய மனதை நான் படிப்பதற்கு வசதியாக அவன் திறந்தே வைத்திருந்தான் என்பது அவனுக்குத் தெரியாது. என்னிடம் பேசும்போதெல்லாம் முதல் வேலையாக தன் வீட்டைப் பூட்டிவிட்டு பூட்டை இழுத்து பார்ப்பவனைப்போல், மனதை பூட்டிவிட்டு நெஞ்சைத் தடவி கொள்வான். நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. வருத்தப்பட்டுக் கொண்டதும் இல்லை.

இங்கு எல்லோருமே ஏதோவொரு வகையில் தன் இயலாமைகளை யாருக்கும் தெரியாமல் மறைப்பதற்காக நிறைய பிரயத்தனப் பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சிலரால் அதை முழுமையாய் மறைக்கத் தெரியாது. தான் மறைத்துக்கொண்டு விட்டோம் என்று பாதுகாப்பாக உணர்வார்கள். ஆனால், அது மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்பதை அறியும்போது அவமானத்தின் கையில் சிக்கிக்கொள்வார்கள். அவன் அப்படியாகப் பட்டவன். தன்னுடைய இயலாமைகள் எனக்குத் தெரியும் என்பதே கூட அவனுடைய உளப் பிரச்சினையாக மாறுகிறது என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

திருமண வயது கடந்து கொண்டேயிருக்கும் தன் ஒரே மகளுக்கு அவனால் நல்ல வரன் பார்க்க முடியவில்லை என்பதும், பெண் பிள்ளையை வீட்டுக்குள் வைத்துக்கொண்டு மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதும் அவனை ரொம்பவும் பாதித்துக் கொண்டிருந்தது. அது குறித்து என்னிடம் மேலோட்டமாக சொன்னான். பதிலுக்கு நான்,

‘‘பாப்பாவ கட்டிக் கொடுத்திட்டு, பையனுக்கு கல்யாணம் செஞ்சிருந்தா நல்லாருந்திருக்கும்” என்றேன்.

‘‘ஆமாம்… அப்படித்தான் செஞ்சிருக்கணும். நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்” என்றான்.

‘‘இதுல தப்பு என்ன இருக்கு. ஏதோவொரு சூழ்நிலை… அப்படி ஆகிப்போச்சி… நீதான் என்ன பண்ணுவ…” என்றேன்.

‘‘இல்ல… நாந்தான் எல்லாத்தையும் சரியா பண்ணிருக்கணும். என்னோட இயலாமையால சில விசயங்கள் தப்பா போயிடுச்சி… நான் மொதல்ல பாப்பாவத்தான் கட்டிக் கொடுத்திருக்கணும். இருபத்தி ஏழு வயசாகிப்போச்சி. துணி மாத்திக்க கூட தனியா ரூம் இல்லாத வாடகை வீட்டுக்குள்ள… அந்த நாலு செவுத்துக்குள்ள அந்தப் புள்ள படுற அவஸ்த ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான்.

‘‘ஏன்… வீட்ல தனி ரூம் இல்லையா?” என்றேன்.

‘‘ஒரு ஹால், ஒரு பெட்ரூம் மட்டும்தான். ரூம்ல பையன் அவன் பொண்டாட்டியோட இருக்கான். நான், என் மனைவி, எம்பொண்ணு நாங்க மூணு பேரும் ஹால்ல இருக்கோம். ஆரம்பத்துல நல்லாத்தான் போய்கிட்டுருந்துச்சி…இப்பத்தான் எதுவும் சரியில்லை” என்றான்.

இப்போது எதுவும் சரியாக இல்லை என்று அவன் சொன்னபோது என்னைப் பார்க்காமல் வேறெங்கோ பார்ப்பதுபோல் முகத்தை திருப்பிக் கொண்டான். அவனுக்கு தொண்டை உடைந்து அழுகை வந்துகொண்டிருந்தது. அதை நான் பார்த்துவிடக்கூடாது என்று விரும்புவான் என்று எனக்குத் தெரியும். எதையும் நான் பார்க்கவில்லை என்பதுபோல் எழுந்து ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டு பட்டறைக்கு சற்று தள்ளியிருந்த புளியமரத்தடியில் போய் நின்றுகொண்டேன். எனக்கு முன்னால் புகை மிதந்து வானோக்கி ஏறிக்கொண்டிருந்தது.

முழுமையாக சிகரெட்டை உறிஞ்சி ஊதிமுடித்த பிறகு அவனைப் பார்த்தேன். கொஞ்ச தூரத்தில், சாலையின் ஓரத்தில், எப்போதோ விபத்துக்குள்ளாகி, துருப்பிடித்து, தனியாக நின்றிருந்த, பழுதடைந்த ஒரு டிப்பர் லாரியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்த டிப்பர் லாரி எவ்வளவு சுமைகளை ஏற்றிக்கொண்டு எங்கெல்லாம் பயணித்திருக்கும்! ஒரு விபத்து, ஒரேயொரு விபத்து அதை எப்படி ஆக்கிவிட்டது! அதிலிருந்த பயனுடைய பாகங்கள் எல்லாம் எடுத்துக்கொள்ளப்பட்டு பயனில்லாதவை என்று நினைத்த பாகங்களோடு அது தனியாக விடப்பட்ட பிறகு அதுவொரு பரிதாபகரமான குப்பை. அதற்கொரு மதிப்பில்லை, அதுவொரு இடைஞ்சல்.

அவன் தன்னைப்பற்றி கூட அப்படித்தான் நினைத்துக்கொள்ள தொடங்கிவிட்டான் என்று தோன்றியது.

2.

ருநாளைக்கு எப்படியும் மூன்று தடவையாவது என் மரப்பட்டறைக்கு வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவன், சுத்தமாக வருவதையே நிறுத்திவிட்டான். அந்த வழியாகத்தான் கடைத்தெருவிற்குப் போகவேண்டும். ஆனால், என் கண்ணில் சில நாட்களாய் படாதது ஆச்சரியமாக இருந்தது. பட்டறையில் வேலை செய்யும் வேலுமணியிடம் கூட கேட்டுப் பார்த்தேன்.

‘‘கணேசமூர்த்தி இந்த பக்கமா போக வர இருக்கானா? என் கண்ணுலியே படறது இல்லையே…”

எங்களுக்குள் நல்ல அன்னியோன்யம் இருக்கிறது என்பதால் என் பட்டறையில் வேலை செய்பவர்களுக்கும் நல்ல பழக்கமாகியிருந்தான் கணேசமூர்த்தி.

‘‘பார்த்து ரொம்ப நாளாச்சு முதலாளி. நாங்கூட ஒங்கள கேக்கணும்னு நெனச்சேன். என்னாச்சு ஆளையே காணும்?” என்றான் வேலுமணி.

பட்டறையில் மர அறுப்பு இருக்கும்போதெல்லாம் வந்து உட்கார்ந்துகொண்டு அறுபடும் மரத்தின் துகள்களைப் பார்த்தபடியே, நேரம்போவது பற்றி கவலையில்லாமல் பேசிக்கொண்டிருப்பான்.

கணேசமூர்த்தி சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவன். சமூகத்தில் எங்கே, என்ன நடக்கிறதென்று எப்போதும் காதைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பதுதான் அவனுடைய வேலையோ என்று நினைக்கும்படி, இந்த ஊரில் என்னென்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்ததைப்போல் விவரிப்பான். கேட்கக்கூடிய நாமும் அதை நேரில் பார்த்துபோல் உணர்வுகொள்ள வைக்கும் பேச்சு. அதுவொரு சினிமா மாதிரி காட்சிகளாக விரியும். என் வேலையாட்கள் சிலநேரம் மர அறுப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவன் வாயையே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

‘‘எலே…இங்க என்னத்த சினிமாவா காட்டுறம். வேலையப் பாருங்கடா” என்று நான் அதட்டி வேலை வாங்கும்போது அவன் தன் முகவாயைத் தடவிக்கொண்டு,

‘‘சரி வேணு… ஒன் தொழில் கெடுது… அப்புறம் பாப்போம். நான் வரேன்”, என்று எழுந்து கொள்வான்.

‘‘ஏய்…பரவாயில்லப்பா… நீ ஒக்காரு… அதெல்லாம் ஒன்னுமில்ல” என்பேன்.

ஒருமுறை தடைப்பட்ட பிறகு தொடர்ந்து அதே சுவாரஸ்யத்தோடு பேச தனக்கு வராது என்பதில் கணேசமூர்த்திக்கு ஒரு நம்பிக்கை இருப்பதை அறிந்து வைத்திருப்பதால் அவன் அங்கிருந்து புறப்படுவதை நான் பெரிதாக தடுக்க விரும்ப மாட்டேன்.

அறுபட்ட மரங்களின் துகள்களை ஒரு சிமெண்ட் சாக்கில் அள்ளி மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு அடுப்பெரிக்க எடுத்துப்போவான்.

அவன் சென்ற பிறகு பட்டறையில் ஒழுங்காக வேலை நடக்கும். இயந்திர கதியில் அறுவை எந்திரத்தைப்போல் நாங்கள் இயங்கிக் கொண்டிருப்போம். அறுத்து கூறுபோடப்பட்ட மரங்கள் எங்களைச் சுற்றி பிரேதங்களைப்போல் கிடப்பதாகத் தோன்றும்.

இப்போது சில நாட்களாய் அந்த வெறுமை என் பட்டறையில் சூழ்ந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. கணேசமூர்த்திக்கு அப்படி என்னதான் ஆகிவிட்டது? ஏன் வருவதில்லை? எதிர்கொள்ள முடியாத பிரச்சினைக்குள் பலமாக சிக்கிக் கொண்டுவிட்டானா? மகளுக்கு திருமணம் செய்துவைக்க முடியாத இயலாமை மரத்தை அறுத்துப் போடுவதைப்போல் அவனை அறுத்துப் போட்டுவிட்டதா?

எனக்கு ஆயிரம் கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகள் மண்டையை உடைத்துப்போட்டு விடும்போல் இருந்தது. என்னால் எதன் பொருட்டும் ஆறுதல் அடையமுடியவில்லை. அவனைப் பற்றிய விசாரம், அன்ன விசாரம்போல் என்னை ஆட்கொண்டுவிட்டது.

கணேசமூர்த்தியின் வீட்டுக்குப்போய் விசாரித்து வரச்சொல்லி வேலுமணியை அனுப்பிவைத்தேன். வீட்டிலிருந்தால், நான் அழைத்துவரச் சொன்னதாக கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிடு என்று சொல்லி அனுப்பினேன். வேலுமணி என்னை ஆச்சரியமாகப் பார்த்தான்.

3.

வேலுமணி சொன்ன விசயங்கள் நான் அறியாதவையாக இருந்தன. கணேசமூர்த்தி வீட்டை காலி செய்துவிட்டு வேறு ஏதோவொரு ஊருக்குப் போய்விட்டான். அவன் குடியிருந்த பகுதியில் அவனுடைய குடும்பத்தைப் பற்றி பலவிதமாக பேசிக்கொள்கிறார்கள். அசிங்கம், அவமானம், கஷ்டம் எல்லாம் ஒரே நேரத்தில் ஒரு வீட்டை சூழ்ந்து கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள். பாவம் அந்த மனுசன் என்றார்கள்.

கணேசமூர்த்தி தனக்கென்று ஒரு நிரந்தர வருவாய் உள்ள வேலை எதுவும் பார்க்காததுதான் இத்தனை சிரமத்திற்கும் அவமானத்திற்கும் அசிங்கத்திற்கும் ஒரே காரணம் என்கிறார்கள். மகனும் மருமகளும் திடீரென அவர்களை விட்டு பிரிந்து செல்ல முடிவெடுத்த நாளில்தான் வீட்டின் நெடுந்துயரம் தொடங்கியிருக்கிறது.

‘இப்படியொரு முடிவெடுக்க இங்கு என்ன நடந்துவிட்டது’ என்று கணேசமூர்த்தி கேட்டபோது, பொறுப்பில்லாமலும், தான் சொன்ன வார்த்தையின் வலிமை தெரியாமலும் கணேசமூர்த்தியின் மகன் அசோக் சொன்னதுதான் இன்னும் உச்சம்,

‘‘இங்கியே ஒங்ககூட கெடந்து கடன்காரனா ஆவ சொல்றியா? நீயும் வேலைக்கு போகமாட்ட… ஒம் பொண்ணையும் வேலைக்கு அனுப்ப மாட்ட… நான் மட்டும் ஒழைச்சிக் கொட்டணுமா? என்னை என்ன இளிச்சவாயக் …தின்னு நெனைச்சிக்கிட்டியா? நான் தனியாப் போய்க்கிறேன். நீ ஒன் சோலியப் பாரு…”

அசோக் இப்படி திடீரென பேசுவான் என எதிர்பார்க்காத கணேசமூர்த்தியின் மனைவி லட்சுமி தன் மருமகளின் முகத்தைப் பார்க்க, அந்தப் பெண் எதுவும் தெரியாதவள்போல் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு நடப்பதை உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் ஒரு குரூரச் சிரிப்பு பதுங்கி இருக்கிறது. தப்பிக்க முடியாமல் சோர்ந்து துவண்டு விழும் மான்களை விரட்டி வந்த ஓநாய் பார்க்குமே அந்த மாதிரியான ஒரு பார்வை. அதனைக் கண்டுகொண்ட லட்சுமி சட்டென அவளைப் பார்த்து கேட்ட வார்த்தை சூழலை மேலும் கெடுத்துவிட்டது.

‘‘எம்புள்ளைய இப்படி எங்களுக்கு எதிரா திருப்பி வுட்டுட்டீயடி… நீ நல்லாருப்பியா…”

எப்படா தன் பக்கம் ஆயுதம் திரும்பும், அதை வைத்து நரபலி கொடுக்கலாம் என்று காத்திருந்தவள்போல், அழுதுகொண்டு தன் பிறந்த வீட்டுக்கு கிளம்பினாள் அந்தப் பெண். அசோக் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டான். ஆத்திரத்தில் பற்களை நறநறவென்று கடித்தவன்,

‘‘இப்ப எதுக்கு அவளை வம்புக்கு இழுக்குற. அவ ஒண்ணும் சும்மா ஒக்காந்துகிட்டு சோறு திங்கல. அவளப் பேசுற வேலை வச்சிக்கக் கூடாது. எதுவா இருந்தாலும் எங்கிட்டத்தான் பேசணும்” என்றான்.

ஒரு ஓரமாய் நின்றுகொண்டு எதுவும் பேசாமல் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கணேசமூர்த்தியின் மகள் சுகுணா அவமானத்திலும் அசிங்கத்திலும் துடித்துப்போய் கேட்டது கணேசமூர்த்திக்கு குற்றவுணர்வையும், அசோக்குக்கு வெறுப்பையும் உண்டாக்கிவிட்டது.

‘‘நான் ஒக்காந்துகிட்டு சாப்பிடறத சொல்லிக் காட்டுறல்ல… நீ கூடப் பொறந்த அண்ணந்தானே… எனக்கு எத்தனை வயசாகிப்போச்சின்னு தெரியுமா? ஒரு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு தோணுதா? என்னை ஊட்ல வச்சிக்கிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நீ கல்யாணம் செஞ்சிகிட்டு வந்தியே… ஒங்கிட்டு பேசி என்னாவப் போவுது.  நான் இப்படியே கெடந்து ஒங்களுக்கு ஆக்கிப் போட்டுகிட்டு கெழட்டு முண்டையாகி செத்துப்போவணுமா?”

சுகுணா அப்படி கேட்டதும், கணேசமூர்த்தியும் லட்சுமியும் மகளை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள். கணேசமூர்த்தியின் இயலாமை, இந்த உலகின் மிக மோசமான இழிபிறவி நான்தான் என்று அவனை எண்ண வைத்துவிட்டது. அவன் தன் மகனை கையெடுத்து கும்பிட்டான்.

‘‘டேய்… ஒனக்கு புண்ணியமா போவும்டா சாமி. என் பொட்டப்புள்ளைய ஒண்ணும் சொல்லாத. அது இன்னொருத்தன் ஊட்டுக்கு போற வரைக்குமாவது கஷ்டப்பட வேணாமேன்னு நாந்தான் வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னேன். அது சொல்லல. அது மனச கஷ்டப்படுத்தாதடா…”

‘‘நான் ஒண்ணும் அந்த புள்ளைய கஷ்டப்படுத்தலியே… என்னை கஷ்டப்படுத்தாதிங்கன்னுதான் சொல்றேன்”

‘‘ஒன்ன என்னப்பா கஷ்டப்படுத்தினோம்?”

‘‘என்ன… கஷ்டப்படுத்தினிங்களா? மாசமானா வீட்டு வாடகை, மளிகை சாமான், வாட்டர் கேனு, ஆஸ்பத்திரி செலவு, லொட்டு லொசுக்கு… எல்லாமே நாந்தானே பாக்குறேன். நான் மட்டும் என்ன கவர்மெண்ட்டு வேலையா பாக்குறேன். காலைல எட்டு மணிக்கு போனா நைட்டு எட்டு மணி வரைக்கும் நான் படுற கஷ்டம் என்னான்னு தெரியுமா? நானெல்லாம் ஒடம்பு முடிலேன்னு படுத்தேன்னா எழுந்திருக்கவே மாட்டேன். அப்படி முதுகெலும்பு வலிக்குது”

‘‘எப்பா… ஒங்கஷ்டம் எங்களுக்கு தெரியும்டா சாமி. நீயும் இல்லன்னா எங்க பொழப்பு நாறும்னு தெரியும்”

‘‘அப்படி ஒன்னும் தெரிஞ்ச மாதிரி இல்லியே… இப்பவும் என்னத்தானே பலி கொடுக்கப் பாக்குறீங்க”

அசோக் எதை மனதில் வைத்துக்கொண்டு, அந்த வார்த்தையைப் பிரயோகிக்கிறான் என்று கணேசமூர்த்திக்கு தெரியும்.

அதற்கு மேல் அவனிடம் பேச மனம் ஒப்பவில்லை. அந்த வார்த்தையின் பொருளை மெல்ல விளங்கிக்கொண்ட லட்சுமி தன் மகளின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்துவிட்டு அசோக்கிடம் கேட்கிறாள்,

‘‘ஒடம்பொறந்தவளுக்கு செய்யறதுல இவ்வளவு கணக்கு பாக்குறியேடா… காலா காலத்துல அந்தப் புள்ளைக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டு ஒனக்கு கல்யாணம் பண்ணிருக்கணும். எங்க புத்திய பீ திங்க உட்டுட்டோம். இப்ப… ஒன் சோலி முடிஞ்சு போச்சின்னவுடனே ஒனக்கு அவ பாரமா, தலைவலியா, சொமையா தெரியுறா…”

அந்த வார்த்தைகளை எதிர்கொள்ள முடியாமல் அசோக் சிறிது நேரம் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். சுகுணாவின் உள்ளக்கேவல் அவள் நெஞ்சுக்கூட்டை தாண்டி வெளியே கசிந்துகொண்டிருந்தது. கணேசமூர்த்தி அங்கிருந்த நான்கு பேரின் முகங்களையும் மாறி மாறிப் பார்த்தான். திறந்திருந்த கதவு வழியே அவர்களின் குடும்பக்கதை தெருவில் இறங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற நினைவு வரவே, சென்று கதவை அறைந்து சாத்தினாள் லட்சுமி. வீட்டில் இருள் சூழ்ந்து கொண்டது. யாரும் யாரிடமும் எதுவும் பேசவில்லை.

லட்சுமிதான் மீண்டும் தொடர்ந்தாள். அதுவொரு தாக்குதல். அந்தத் தாக்குதல் நேரடியாக கணேசமூர்த்தியின் மீது தொடுக்கப்பட்டது. அப்படியொரு தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் தன் மீது தொடுக்கப்படும் என்பது அவனுக்குத் தெரியும். அதை எதிர்கொள்வதுதான் எப்படியென்று தெரியவில்லை.

‘‘இத்தனை வருசமா, நாங்கூட ஒன்னிய வாத்தியார்னுதான் நெனைச்சிக்கிட்டிருந்தேன். கடேசில… நீயொரு வேலைவெட்டி இல்லாத வெறும்பய மாதிரிதான் இருந்திருக்க. நீ எங்க போற, என்ன பண்ற, என்ன சம்பாரிக்கிறன்னு நான் கேட்டிருக்கணும். நானும் ஒன் பேச்ச நம்பி கூறுகெட்ட சிறுக்கியா இருந்திருக்கேன். இப்ப… பெத்த புள்ளைகிட்ட கூட வயித்துப்பாட்டுக்கு பிச்சை எடுக்க வேண்டியதா இருக்கு. எல்லாம் ஒன்னாலதான். பேண்டு சட்ட போட்டுக்கிட்டு மினுக்கிகிட்டு போறல்ல? நாலு காசு சம்பாதிக்க வக்கிருக்கா? பேரு மட்டும் வாத்தியாரு. பெரிய்ய இந்த வாத்தியாரு. வாத்தியாருங்குற பேரு சோறு போடுமா? இல்ல ஒம் பொம்பள புள்ளைய கட்டிக் கொடுத்திடுமா? இத்தனை வருசமா என்னத்ததான் இந்த ஊருல பொரட்டினியோ… நான் ஒண்ணத்தையும் காணலடா சாமி. ஒன்ன நம்பி இந்த புள்ளைய பெத்து போட்டேன் பாரு. நாந்தான் நாண்டுகிட்டு சாவணும்…”

லட்சுமியின் ஒவ்வொரு சொல்லும் முள்ளாய் இறங்கியது. அவ்வளவு லேசில் பிடுங்கி போட்டுவிட முடியாதபடி ஆழ தைத்தது. கணேசமூர்த்தி குனிந்த தலையை நிமிர்த்தி யாரையும் பார்க்கவில்லை. லேசாய் அழுகை வருவதுபோல் இருந்தது. ஆனால், ஒரு சொட்டு கண்ணீரும் வெளியே சிந்தவில்லை. கண்ணீரென்ற ஒன்று தனக்குள் உண்டா என்று கணேசமூர்த்தி நினைத்தான். காய்ந்த ஒரு மரத்தில் ஒரு குருவி வந்து உட்கார்ந்து கொத்துவதுபோல் ஒரு சத்தம் மட்டும் இதயப் பகுதியிலிருந்து கேட்டபடியிருந்தது.

முப்பது வருசத்துக்கு முந்தி கணேசமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்தபோது அவன் வெறும் ஒரு டிகிரி கோல்டர். ஒரேயொரு பி.எஸ்ஸி பட்டம் மட்டுமே தகுதி. அன்றைக்கு இப்போதை விட வேலையில்லா கொடுமை அதிகம். அப்போதும் காசு வைத்திருந்தவன் ஏதாவது ஒரு வேலையில் தொற்றிக்கொண்டான். ஆனால், கணேசமூர்த்திக்கு ஒவ்வொரு நாள் சாப்பாடும்கூட ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. மூன்றுவேளை சாப்பாட்டுக்காக மட்டுமே அவன் கல்லூரி விடுதியில் தங்கி படித்ததாக கூறுவான். மதிய சாப்பாடு என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இந்த டிகிரியைக் கூட நான் வாங்கியிருக்க மாட்டேன் என்பான்.

கரும்பு வெட்ட போவான், மரம் வெட்ட போவான். மூட்டைத்தூக்க போவான். கிடைக்கிற எந்த வேலையையும் செய்வான். ‘டிகிரி வரைக்கும் படிச்சிருக்கே… நீயெல்லாம் கவர்மெண்டு உத்தியோகத்துக்கு போவாம… எங்க கூட வந்து இப்படி லோல் படுறியே…’ என்று யாராவது எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

அப்படியான வார்த்தைகளுக்கு பலியாகித்தான் ஒரு டியூசன் சென்டர் ஆரம்பித்தான். அந்த ஊரில் அதுதான் முதல் டியூசன் செண்டர். பள்ளிக்கூட ஆசிரியர்களை விட அதிக மதிப்பும் மரியாதையும் கணேசமூர்த்திக்கு ஏற்பட்டது. சார் சார் என்று அழைத்தபடி எப்போதும் அவனைச் சுற்றி மாணவர்கள் இருந்துகொண்டேயிருப்பார்கள்.

அப்போதுதான் அவனுக்கு அசோக் பிறந்திருந்தான். நல்ல வருவாய் கிடைத்துக்கொண்டு இருந்தது. மகன் பிறந்த சந்தோசத்தில் மனைவிக்கு அவன் எடுத்துக்கொடுத்த முதல் சேலை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தது. டியூசன் சென்டர் நன்றாகப் போய்க்கொண்டிருந்ததும், முதல் குழந்தை ஆணாகப் பிறந்ததும் அவன் மீது பரவலான பார்வையைக் கொடுத்தது. பள்ளிக்கூட வாத்தியார்கள் கூட அவனிடம் பகுதி நேரமாக வகுப்பெடுக்க வந்தார்கள்.

அவன் அந்த நகரின் பிரசித்த பெற்ற வாத்தியாராக மாறிக்கொண்டிருந்தான். கவர்மெண்ட் வேலை கிடைத்திருந்தால் கூட இந்த தன்னிறைவு கிடைத்திருக்காது என்று சொன்னான். நல்ல புகழ், நல்ல பணம், நல்ல மரியாதை. வாத்தியாரென்றால் அது கணேசமூர்த்திதான் என்றாகிவிட்டது. இரண்டு வருடங்கள் ஜோராக முடிந்திருந்திருந்தன. அப்போது சுகுனா பிறந்து தவழ்ந்துகொண்டிருந்தாள். மகள் பிறந்த நேரமும் நன்றாகத்தான் இருந்தது.

தினமும் மனைவிக்கு மல்லிப்பூ வாங்கிச் சென்று குஷிப்படுத்திக் கொண்டிருந்தான். அடுத்த குழந்தைக்கான ஒத்திகையை வாத்தியார் சிறப்பாக செய்வதாக முறைக்காரர்கள் கேலி பேசி சிரித்தார்கள்.

ஐந்தாறு வருடம் ஓடியிருக்கும். அந்த ஊரில் அடுத்தடுத்து மூன்று டியூசன் செண்டர்கள் முளைத்தன. ஆரம்பித்தவர்கள் அத்தனைப் பேரும் அரசு பள்ளிக்கூடத்தில் நிரந்தர ஆசிரியப் பணியில் இருப்பவர்கள். அவர்களுக்கு டியூஷன் மோகம் எடுத்துக் கொண்டது. அவர்கள் சென்டர் ஆரம்பித்ததற்கு பின்னால் நிறைய கதைகள் இருந்தன. அந்தக் கதைகளில் சிக்கி உதைப்பட்ட வாத்தியார்கள் மாற்றலாகி வேறூருக்கு ஓடிப்போனார்கள். அந்த மாதிரியான கதைகளில் எல்லாம் ஒருபோதும் கணேசமூர்த்தி மாட்டிக்கொண்டதே இல்லை. அந்த விசயத்தில் அவன் ஒரு ஜெனூன் பெர்சன் என்று பேசிக்கொண்டார்கள்.

அடுத்த ஓரிரு வருடங்களில் வேறு சில செண்டர்கள் தோன்றின. வேலை கிடைக்காதவர்கள் பலரும் ஒரு குழுவாக இணைந்து டியூஷன் சென்டர் ஆரம்பிப்பது என்கிற வழக்கம் அப்போதிலிருந்துதான் தொடங்கியது. மாணவர்கள் கொஞ்சம் குறைந்து போனாலும், வாத்தியார் என்கிற அந்த மரியாதை கணேசமூர்த்திக்கு குறையவில்லை.

அடுத்த சில வருடங்களில் ஊரின் அத்தனைத் தெருக்களிலும் டியூசன் செண்டர்கள் முளைத்தபோதுதான் கணேசமூர்த்தி லேசாய் ஆட்டம் கண்டான். அதுவும் பொருளாதார ஆட்டம் மட்டும்தான். வாத்தியார் அந்தஸ்துக்கு ஒரு குறைச்சலும் வரவில்லை.

பிள்ளைகள் இரண்டும் படித்து முடிக்கும் வரை கைக்கொடுத்த டியூஷன் செண்டர், காட்டுப் பாதையில் திடீரென பஞ்சரான லாரியைப்போல் ஒருநாள் வெடித்து நின்றுவிட்டது. அப்போது அசோக்கும் சுகுணாவும் ஆளுக்கொரு டிகிரியை கையில் வைத்திருந்தார்கள்.

டியூஷன் செண்டரை மட்டுமே நம்பி முப்பது வருடம் ஓடிவிட்டது. சென்டர் தொடங்கிய பிறகு வேறு எந்த வேலைக்கும் போனதில்லை. எப்போதும் நீட்டாக இருந்து பழகிவிட்டது. யாரிடமும் கஷ்டமென்று போய் நின்றது இல்லை.

மற்றவர்களைக் காட்டிலும் நாம் ஒழுங்காகத்தான் குடும்பம் நடத்தியிருக்கிறோம், பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறோம் என்று இதுநாள் வரை அடைந்திருந்த தன்னிறைவு வெறும் கானலா? அதுவொரு பொய்யான எண்ணமா? ஒரு நடிப்பா? இப்படியெல்லாம் கணேசமூர்த்தியின் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

அவமானம் ஒரு கிருமியைப்போல் மனதை அரிக்கத் தொடங்கியது. வெளி உலகம் கொடுக்கும் அவமானங்களை காலால் எத்திவிட்டு நடக்க முடிகிற மனிதனால் தன் சொந்த வீட்டில் அடையும் அவமானத்தை எதிர்கொள்ள முடிவதில்லை. அதுவொரு நெஞ்சுச்சளியைப்போல் பிடித்துக்கொண்டு மூச்சுவிட முடியாதபடி செய்துவிடுகிறது. தொண்டைக்குள் கோழை கட்டிக்கொண்டு காறிக்காறி துப்பிக்கொண்டிருப்பவனைப்போல் சதா அந்த அவமானத்தையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டியவனாகி விடுகிறான் மனிதன். கணேசமூர்த்திக்கு தொண்டை கட்டிக்கொண்டதுபோல் இருந்தது.

4.

வன் உடம்பு வளையாதவன் இல்லை. ஒதவாக்கரை என்ற பெயருக்கும் அவனுக்கும் முடிச்சிப் போடுவது பொருத்தமற்றது. அவன் எப்படி உழைப்பான் என்று எனக்குத் தெரியும். இதே பட்டறையை அவனால் எடுத்து நடத்த முடியும். உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா? அவனுக்கு ஆசாரி வேலை அனைத்தும் அத்துப்படி. அவனுடைய அப்பா இந்த ஊரின் பேர் போன ஆசாரி. அவரிடம்தான் எங்க அப்பா வேலை கற்றுக்கொண்டார். படிக்கும் காலத்தில் அவனும் நானும் பட்டறையில்தான் கிடப்போம்.

மர வேலைப்பாடுகளில் அவனை அடித்துக்கொள்ள முடியாது. அவனுக்கு கற்பனா சக்தி அதிகம். விதவிதமாக, புதிது புதிதாக சித்திர வேலைப்பாடுகள் செய்து கொடுப்பான். மரத்தை அறுத்து இழைத்து என்னெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் அத்துப்படி.

என்ன செய்ய? தேவையற்ற பழக்கங்களால்- அவனுடைய அப்பாவுக்கு சில பெண்களின் தொடர்பும் குடிப்பழக்கமும் உண்டு- உண்டான கடன் சுமையால் பட்டறையை அவனுடைய அப்பா விற்றுவிட்டதும், அதன் காரணமாகவே படுக்கையில் விழுந்தவர் அகாலத்தில் இறந்து போனதும் அவன் குடும்பச் சூழலை தலைகீழாக மாற்றிப்போட்டு விட்டது.

கணிசமான விலை கொடுத்து நாங்கள்தான் பட்டறையை வாங்கினோம். அப்பாவும் நானும் அவனை பட்டறையிலேயே வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டோம். அவனுக்கு அதில் மனம் ஒப்பவில்லை. நான் தொடர்ந்து படிக்கப் போகிறேன் என்று கல்லூரிக்கு சென்றான். அவனுக்கு தன்மானம் தடுக்கிறதென்று எனக்குத் தெரியும். அவனை நான் கட்டாயப்படுத்தவில்லை.

கல்லூரி படிப்பிற்கு பின் தனக்கொரு நல்ல வேலை கிடைக்கும் என்ற அவனது நம்பிக்கை பொய்த்துப் போனபோது நான்தான் டியூஷன் சென்டர் வைப்பது பற்றி ஆலோசனை கொடுத்தேன். நல்ல நிலைமைக்கு வந்தான். பேரும் புகழும் கிடைத்தது.

காலம் யாரைத்தான் விட்டு வைக்கிறது. ஒருவன் கண்ணுக்கு நிறைவாய் வாழ்ந்துவிட்டால் இந்த காலத்திற்கு பிடிக்காது போலிருக்கிறது. பின்மண்டையில் அடித்து தரையில் தள்ளிவிட்டு அவன் முகத்தில் கரைபடிந்து நிற்பதைப் பார்க்க காலத்தின் கண்களில் குரூரம் முளைக்கத் தொடங்கிவிடும்.

அவனைப் பார்க்கும்போதெல்லாம் இந்த காலத்தின் கரங்களில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்றே எனக்கு அச்சமாக இருக்கும். ஆனால், காலம் கைதேர்ந்த தச்சன் அல்லவா! மனிதனை ஒரு பலமிழந்த, உடைந்த மரமாக எண்ணி அறுத்து கூளமாக்கி விடுகிறது. சிலருக்குத்தான் உபயோகமான பொருட்களாகும் வாய்ப்பு, பலரும் கூளமாகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம்.

வேலுமணி கேட்டான்:

‘‘ஆசாரி வேலை நல்லா தெரியும்போது அவரு ஒரு பட்டறை வச்சிருக்கலாம்ல, மொதலாளி. பொழைக்கத் தெரியலங்கிற பட்டத்தோட ஏன் இப்படி கஷ்டப்படணும்?”

‘‘அப்படி இல்லடா மணி. இத்தனை வருசமா வாத்தியாருங்குற கெத்தோட வாழ்ந்திட்டான். இப்ப திடீர்னு கத்தியப் புடி, சுத்தியல புடின்னா மனசு ஒறுக்காது. நானா இருந்தாக்கூட அவனப் போலத்தான் இருப்பேன். அதுவொரு ஸ்டேடஸ்டா. ஜோரா அதுல இருந்துட்டு டக்குன்னு இறங்கி வந்துட முடியாது. இப்ப என்னையவே வச்சிக்க… முப்பது வருசமா ஒரு பட்டறை நடத்திக்கிட்டு இருக்கேன். எத்தனை ஏத்தம் எறக்கம் இருக்கு… ஆனா திருப்தியா ஓடுது. திடீர்னு என்னை அனுப்பி ‘போடா… போய் ஒரு தள்ளுவண்டிக்கடை போட்டு பொழைச்சிக்க’ன்னு சொன்னா… முடிமா, முடியாது. தொழில் கேவலம் இல்ல… ஆனா, மனம் அப்படி ஒண்ணுல போயி ஒட்டாது. அவன் பிரச்சினையும் அதான்”

‘‘இப்படியே இருந்தா பிரச்சினைத் தீராதே”

‘‘தீராதுதான்”

‘‘அப்புறம்… ஏதாவது செஞ்சித்தான ஆவணும்”

‘‘அவன் செஞ்சி வச்சிருக்கிறதா நினைக்கிறான்”

‘‘செஞ்சிருக்காரா? என்னத்த?”

‘‘மகன படிக்க வச்சி ஒரு தொழில ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருக்கான். அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிருக்கான்”

‘‘அது எப்படி கணக்குல சேரும். அது அவரோட கடமைல்ல?”

‘‘ஏன்பா, கணக்குல சேராது. அதுவும் சரியான கணக்குதான். கடமைங்கிறது பெத்தவங்களுக்கு மட்டும் இருக்கிறதுல்ல. புள்ளைங்களுக்கும் இருக்க வேண்டியது. அதைத்தான் அவன் கேட்கிறான். என்னால முடிஞ்சப்ப ஒன்ன படிக்க வச்சி பொழைக்க ஒரு வழி தேடிக் கொடுத்தேன்ல. என் கடமையை செஞ்சேன்ல. இப்ப நீ ஒன் கடமையைச் செய்யுங்குறான். அதுல என்ன தப்பு.”

‘‘அந்தப் பையந்தான் ஒதுங்கப் பாக்குறானே”

‘‘அதான் பிரச்சினை! தாய் தகப்பன பாக்குறதும், தங்கச்சிய கட்டிக்கொடுக்க உதவ வேண்டியதும் நம்மோட கடமைங்கிறத அவன் தூக்கிப்போடுறான். மகன் இருக்கானே, பாத்துப்பான்னு தைரியமா இருந்தான், பாரு, அதான் கணேசமூர்த்தியின் பலகீனம். இப்ப, பையன் கை விரிச்சிட்டதும் அவனால சூழ்நிலைய சமன்படுத்த முடியல. தடுமாறுறான்”

‘‘அதனாலத்தான் ஊரவிட்டு போயிட்டாரா?”

‘‘அதனாலத்தான்னு என்னால சொல்ல முடியல. அதெல்லாம் பெரிய மனப்புழுக்கத்த கொடுக்கும்தான். கடைக்கு வர்றத நிறுத்திட்டாலும் அங்க இங்க பாத்துப்போம். நாலு வார்த்தை பேசிக்குவோம். ஆனா, என் மொகத்துல கூட படாம ஊரைவிட்டு போயிருக்கான்னா… வேற ஏதோ நடந்திருக்கு”

‘‘நானும் அதான் யோசிக்கிறேன் மொதலாளி” என்று இழுத்த வேலுமணி, தன்னுடைய நண்பன் ஒருவன் மூலமாய் ஒரு விசயம் கேள்விப்பட்டதாய் சொன்னான். அது என்ன என்று நான் ஆவலாதி அடைந்ததை கவனித்தவன்,

‘‘அவரு பொண்ணால ஒரு பிரச்சினை ஆகிருக்கு மொதலாளி. பக்கத்து வீட்டுப் பையன் போல. கொஞ்ச நாளாய் ரெண்டு பேருக்கும் பழக்கம் இருந்திருக்கு. அந்தத் தெருவுல இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. ஆனா, இவரு வீட்ல மட்டும் யாருக்கும் தெரில. விசயம் முத்தி அந்தப் பையன் அந்தப் புள்ளைய கூட்டிக்கினு ஓடிப்போக பாத்துருக்கான். எப்படியோ விசயம் லீக்காகி, கணேசமூர்த்தி சார் அந்தப் பையனை அடிக்கப் போக, அது ரெண்டு வீட்டுக்கான பிரச்சினையா மாறி, தெருவே வேடிக்கை பாக்குற மாதிரி நடந்திருக்கு. ரொம்ப டீசண்டா அந்த ஏரியாவுல இருந்துட்டு திடீர்னு அசிங்கமாச்சின்ன ஒடனே, அன்னைக்கு நைட்டே குடும்பத்தோட கூட்டிக்கினு அவரு எங்கியோ போய்ட்டாராம்”

நான் காரணத்தை தெரிந்து கொண்டேன். என்னிடம் கூட முகம் கொடுக்க முடியாமல் அவன் ஏன் ஊரைவிட்டுச் சென்றான் என்று எனக்கு புரிந்தது. பெண் சம்பந்தப்பட்ட விசயம். தன் வீட்டுப் பெண்கள் ஊரின் பேசுபொருளாகி அதன்மூலம் அவமானம் நேரும்போது, எல்லா ஆண்களும் இப்படித்தான் கூனிக்குறுகி நடுங்குவார்கள், மறைந்து நடப்பார்கள், தொலைந்து கிடப்பார்கள்.

ஊரில் நடக்கும் இந்த மாதிரி விசயங்களுக்கு கணேசமூர்த்தி சங்கப்பாடல் ஒன்றிலிருந்து உதாரணம் கொடுப்பான். அந்தப் பாடல் வேட்டைக்குப் புறப்படும் ஒரு வீட்டின் ஆண்கள் காட்டில் ஒரு சிறு குருவியைக்கூட வீழ்த்தமுடியாமல் வீடு திரும்புவதைப் பற்றியது. ஒருவன் தகப்பன், ஒருவன் சகோதரன். காரணம்… அந்த வீட்டுப் பெண் ஒரு ஆடவனிடம் தவறாகப் பழகுவதாக ஊர் தூற்றும் அலர். ஊரின் அந்த அலர் ஏற்படுத்தும் நடுக்கம், அவர்களின் மனதில் ஊடுருவி கை, கால், நாடி நரம்பு எல்லாவற்றிலும் பரவி அவர்களை பலவீனமாக்கிவிடும். அந்தப் பலவீனம் அனைத்திலும் வெளிப்படும், நடையில், உடையில், பேச்சில், கருத்தில் இப்படி அனைத்திலும்… அந்த இரண்டு ஆண்களும் இரைக்கு குறி வைக்கும்போது அம்புகள் தவறிப்போய் வேறெங்கோ சென்று குத்தும். இயல்பில் அவர்கள் தேர்ந்த வேட்டைக்காரர்கள். ஆனால், அவர்களால் ஒன்றையும் சரியாக குறி பார்த்து வீழ்த்த முடியவில்லை. கவண் கூட பலனளிக்காது. அதுவும் குறி தவறும். அப்போது அந்த ஆண்கள் வெடி வைத்த பாறையைப்போல் உடைந்து நொறுங்கினார்கள் என்பதாக பாடல் முடியும்.

கணேசமூர்த்திக்கும் கூட இந்தப் பாடல் பொருத்தமாக அமையும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

அப்போதும், இப்போதும், எப்போதும் அலர் தூற்றுவதற்கென்றே இருக்கிறது ஊர்.


  • மௌனன் யாத்ரிகா

2 COMMENTS

  1. வயது முதிர்ந்த மனிதரின் உணர்வலைகளை கடத்தியது. அருமையான கதை.

  2. நல்ல கதை… நாமெல்லோரும் ஊருக்குத்தானே அஞ்சுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.