சுருக்குக்கம்பி


டித்துக் கட்டிய அழுக்கு வேட்டியுடன் கொளுத்தும் வெயிலில் சோர்ந்து நடந்தான் சுடலை. தோளில் ஒரு சிவப்புத்துண்டு. கையில் ஒரு நீண்ட கம்பு. அதன் முனையில் ஒரு சுருக்குக்கம்பி. பத்தடி தூரத்தில் வியர்வை வடிய எந்த நொடியிலும் மயங்கி விழும் நிலையில் சுற்றிலும் பார்த்துக்கொண்டு நடந்தாள் பொன்னம்மா. அடிக்கடி மார்பதிர இருமினாள். அவள் கை சுண்டு விரலைப் பிடித்துச் சிணுங்கிக் கொண்டே வந்தான் சங்கிலி. இரண்டு நாட்களாக சாப்பிட்டிருக்காத வயிறு ஒட்டிக் கிடந்தது. ஊரை விட்டுக் கிளம்பி ஐந்து நாட்கள் இருக்கும். அங்கே என்ன நிலவரமோ தெரியாது. நின்று திரும்பிப் பார்க்கவோ, நடந்ததை மீட்டெடுக்கவோ இப்போது முடியாது. கடந்த ஒவ்வொரு இரவையும் உயிர் பயத்தோடும், பசியோடும் ஒரு வழியாகக் கழித்து விட்டிருந்தாலும், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற பதற்றத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.

திடீரென்று, “எங்கம்மோ!” என்று கத்தினாள் பொன்னம்மா. நீளமான சாரைப்பாம்பொன்று அவள் காலடியில் ஊர்ந்து செல்ல துள்ளிக் குதித்தாள். சுடலை ஓடிப் போய் அந்தப் பாம்பின் தலையை மிதித்துத் தரையோடு தேய்த்தான். பாம்பு நெளிந்து சுற்ற, வாலைப் பிடித்து அதை எடுத்துச் சுழற்றித் தரையில் அடித்தான். பாம்பு சக்கையாகத் தொங்க, “செறுக்கிவுள்ள” என்றவாறு அதைத் தூக்கி எறிந்தான்.

சுற்றிலும் ஒடை மரங்களும் பனை மரங்களும் நிறைந்த காடு. சில பெண்கள் ஒடை மரத்தில் விறகு வெட்டியும், ஆடுகளுக்கு உணவாகப் போட ஒடங்காய்களைப் பறித்தும் நின்றனர். கண்ணி வைத்து ஓந்தான் பிடித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் இவர்களைக் கண்டும் காணாமல் வேட்டையில் குறியாக இருந்தனர்.

சிறிது தூரத்தில் குளத்து மடைக்குள் சிலர் ஆடுபுலியாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். சுடலை பொன்னம்மாவை ஒரு ஒடை மர நிழலில் உட்காரச் சொல்லி விட்டுத் தயக்கத்தோடு அந்த மடையை நோக்கிச் சென்றான்.

சங்கிலி ஒரு ஒடங்காயை எடுத்து அதன் தோலைக் காம்பிலிருந்து கீழாக நகத்தால் கீறிக் கிழித்து கொட்டைகளை வாயில் போட்டுச் சுவைத்தான். பக்கத்துப் பனை மரத்தடியில் வந்து உட்கார்ந்த சிறுவர்களில் ஒருவன் இன்னொருவனை ஏதோ சீண்ட, அவன் “சென்னி பேந்து போவும் தாயளி” என்று முறைத்தான்.

“போல போல, நீ பெரிய மத்தவன்லா….சங்க நெரிச்சிருவேன் ஓடிரு..” என்று சீறினான் முதலாமவன்.

“விடுங்க டே, பசிக்குவு..மொதல்ல திம்போம்..” என்றான் இன்னொருத்தன்.

ஐந்தாறு ஓந்தான்கள் சிக்கியிருந்தன. அவற்றை ஒடை மர முள்ளாலேயே குத்திக் கிழித்தார்கள். குடலை உருவி  எறிந்துவிட்டு, தலைகளைத் திருகினர். ஒவ்வொரு தலையையும் ஓர் ஒடை முள்ளில் குத்தி அதை இன்னொரு நீண்ட குச்சியில் சொருகி மண்ணில் ஒரு நினைவுச் சின்னம் போல நட்டு வைத்தான் ஒருவன். மற்றொருவன்  சென்று அதன் மேல் ஒன்றுக்கடித்தான். “ஓந்தாஞ் சாமி.. நா ஒன்னயக் கொல்லல.. நான் ஒன்னயக் கொல்லல” என்று கத்தினான். இதைப் பார்த்த சங்கிலி சிரித்துக்கொண்டே அம்மாவிடம் அதைச் சுட்டிக் காட்டினான்.

ஒருவன் ஒரு பனையோலையை எடுத்து வந்து, அதிலிருந்து ஈர்க்குச்சிகளை எடுத்துவிட்டு மிச்சமிருந்த ஓலைகளைக் குவித்து சுற்றிலும் கருங்கற்களை அடைத்து வைத்தான். மற்றொருவன் தோலுரித்து துண்டுதுண்டாகக் கிழிக்கப்பட்ட ஓந்தான் இறைச்சியை அந்த ஈர்க்குச்சிகளில் குத்திச் சொருகினான். ஒரு காகிதப் பொட்டலத்தில் இருந்த உப்பை இறைச்சியின் மீது தடவினான். ரெண்டு புளியங்காய்களையும் சில காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு கல்லின் மீது வைத்து இன்னொரு கல்லால் தட்டிச் சேர்த்தான். அதை வழித்தெடுத்து இறைச்சியின் மீது தடவினான். ஓலைக் குவியலில் தீயைப் பற்ற வைத்து, கற்களின் மேல் அந்த ஈர்க்குச்சிகளை வைத்து இறைச்சியைத் தீயில் சுட்டான். இன்னொருவன் ஒரு பனங்காயைக் கொண்டுவந்து அந்தக் கருங்கற்களின் அருகே வைத்துச் சுட்டான். சங்கிலி முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினான். பொன்னம்மா இருமலை அடக்க முடியாமல் மூச்சுமுட்ட காறித் துப்பிக்கொண்டிருந்தாள்.

ஒடங்காடுகளில் ஓந்தான் வடை மிகவும் பிரபலம். ஓந்தான் இறைச்சியை உரலில் போட்டு இடித்து மசாலா சேர்த்துத் தட்டையாக்கி தீயில் சுட்டு எடுப்பார்கள். முதுகு வலிக்கு அது நல்லவொரு மருந்து என்கிற நம்பிக்கையும் உண்டு.

மடையின் அருகே வந்த சுடலை, “ஐயா.. ஐயா…” என்று கூப்பிட்டான்.

புலிகளுக்கும் ஆடுகளுக்கும் இடையிலான வேட்டை மும்முரத்தில் யாரும் அவனைக் கவனிக்கவில்லை.

“அண்ணாச்சி…”

தலைப்பாகை கட்டிய ஒரு பெரியவர் தலையைத் தூக்கிப் பார்த்து, “யாரு வே, அது? இங்க வாரும்..” என்றார்.

சுடலை தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தவாறே அவர் அருகில் சென்றான்.

“யாரு வே நீரு? எந்தூரு வே?” பெரியவர் குரலை உயர்த்தி தோரணையாகக் கேட்டார்.

“அண்ணாச்சி..வடக்க…”

“வடக்கன்னு சொன்னா? எந்தூரு வே? சுருக்குக் கம்பில்லாம் வச்சிருக்கீரு?”

“அண்ணாச்சி, அது வேட்டக்கிக் கொண்டு போறது, பாத்துக்கங்க…”என்றான்.

“என்ன வே புடிப்பேரு? மத்த எறச்சி கெடச்சுமா வோய்?”

“செலப்பம் சிக்கும் அண்ணாச்சி.. அதிர்ஷ்டம்போல…”

“அது செரி… இங்க என்னத்தப் புடிக்க வந்தேரு?”

சுடலை திரும்பி பொன்னம்மாவைப் பார்க்க, சங்கிலி பொன்னம்மாவின் சேலை நுனியைக் கடித்துக் கொண்டிருந்தான்.

“அண்ணாச்சி, பய ஒண்ணும் திங்காமக் கெடக்கான்.” என்று சொல்லி அவர் முகத்தைப் பார்த்தான். ஊரிலிருந்து அவசர அவசரமாகக் கிளம்பி வந்த காட்சிகள் நினைவில் வர, வேட்டி மடிப்பை ஒரு கணம் தொட்டுப் பார்த்தான்.

“வேய், பனங்காட்டுக்குள்ள திங்க என்ன வே கெடச்சும்…ஊருக்குள்ள போவும்..கொஞ்சத் தொலவு தான் வே..” என்று சொன்னவர் பக்கத்தில் ஒரு வேட்டியில் பரப்பி வைக்கப்பட்டிருந்த பனங்கிழங்குகளில் இரண்டை எடுத்து அவனிடம் நீட்டினார்.

சுடலை அதை வாங்கிக்கொண்டு தலையைச் சொறிந்தவாறே, “அண்ணாச்சி, சொத்தோல போயிலத் தாரும்…நாக்கு மரத்துப் போச்சி.. பாத்துக்கங்க..” என்று கேட்டான்.

பெரியவர் ஒரு நொடி அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு தனது புகையிலைத் தடையைத் திறந்து சுண்டு விரலளவு சுருட்டிக் குடுத்தார். பணிந்து அதை வாங்கிய சுடலை, “வாறேன் அண்ணாச்சி..” என்று திரும்பினான்.

பனங்கிழங்குகளைத் தின்றுவிட்டு அம்மாவின் மடியில் தலையைச் சாய்த்தான் சங்கிலி. ஒடை மரத்தில் சாய்ந்து உட்கார்ந்த சுடலை சிறிது புகையிலையை வாயில் போட்டுக்கொண்டு மீதமிருந்ததை பொன்னம்மாவிடம் நீட்டினான். அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க, அதையும் தன் வாயில் போட்டவன் அவளது முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் மெல்லச் சிணுங்கினாள்.


ந்தச் சுருக்குக்கம்பியில்தான் அவர்களது வயிற்றுப்பாடு ஓடியது. அது ஒரு பொறி. சமயங்களில் ஓர் ஆயுதம் கூட. வடக்குதிசை மலையடிவார ஒடங்காட்டில், கருக்கல் நேரத்தில் தொடங்கும் அவர்களது வேட்டை. சுடலை கை காட்டும் வரை சத்தமின்றி ஒளிந்திருப்பான் திரவியம், பொன்னம்மாவின் தம்பி. தூரத்தில் வரும் இரைக்காகக் காத்திருக்கும் ஒரு கொடிய விலங்கு போலப் பதுங்கி இருப்பான் சுடலை. ஒரு சிறு அசைவைக் காட்டினால் கூட அடுத்த பத்து நாட்களுக்குப் பட்டினிதான்.

திடீர் சலசலப்பு, ஊன் வாடை, உறுமிக் கொண்டே வரும் பன்றிக்கூட்டம்.  மூன்று அல்லது நான்கு பெரிய பன்றிகளும் பத்திலிருந்து பதினைந்து குட்டிகளும் இருக்கும். பெரிய பன்றி என்றால் நீங்கள் நினைப்பது மாதிரி அல்ல. ஒரு காட்டெருமை மாதிரி இருக்கும். ஓர் இடி இடித்தால் மாவுக்கட்டுப் போட வேண்டியதுதான்.

சுடலை கை காட்டும் போது பொறுக்கி வைத்திருந்த கருங்கற்களை குட்டிப்பன்றிகளை நோக்கி வேகமாக எறிவான் திரவியம். ஒரு குட்டியையாவது விழச் செய்யாவிட்டால் தோலை உரித்து விடுவான் சுடலை. குட்டிப்பன்றிகள் கலைந்து ஓட அவற்றின் தந்தையும் தாய்மாமனும் மூர்க்கமாகச் சீறி நிற்பார்கள். உறுமும் சிவந்த கண்களில் குட்டிகளைக் காப்பாற்ற எண்ணும் பரிதவிப்போடு நிற்கும் தாய்ப்பன்றி. மரபோ, குல அறமோ, பொதுவாக தாய்ப்பன்றிகளை அவர்கள் வேட்டையாடுவதில்லை. அவற்றைக் கல்லெறிந்து விரட்டி மற்ற ஆண் பன்றிகளைத் தனிமைப்படுத்திப் பிடிப்பார்கள்.

முடிந்த வரை அந்தப் பன்றிகள் திசை மாற்றி ஓடித் தப்பிக்கப் பார்க்கும். விடாமல் விரட்டி, அவற்றில் ஒன்றைத் தனிமைப் படுத்துவான் சுடலை. அவனுக்கு இணையாகவே மூச்சிரைக்க ஓடுவான் திரவியம். ஒரு கணப்பொழுதில் பன்றியும் சுடலையும் நேருக்கு நேர் விறைத்து நிற்பார்கள்.  அடுத்த சில நொடிகளுக்குள் அந்தச் சுருக்குக்கம்பி இறுக, பன்றி வெட்டி வெட்டி இழுக்கும்.

சுடலை அந்த மாதிரி சமயத்தில் சன்னதம் வந்த மாடன் போல உறுமுவான். திரவியம் பாய்ந்து சென்று முரண்டுபிடித்துத் திமிறும் பன்றியின் முகத்தில் தன் இடுப்பில் சுற்றியிருக்கும் சாக்கைப் போட, சுடலையின் பிடி இன்னும் இறுகும். பன்றியின் உறுமல் காட்டையே உலுக்க, ஒடை மரத்தடியால் ஓங்கி ஒரு போடு போடுவான் திரவியம். அவ்வளவு தான். பத்து நாளைய பசிக்குத் தீர்வைக் கொடுத்து அடங்கும் அந்தப் பன்றி.

பன்றி வேட்டையைத் தவிர அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கிருந்த பொதுவான வேலை வாய்ப்புகள் மிகச் சில. கழிப்பறைக் கழிவுகளை அகற்றுதல், திருமணம் முதல் இறப்பு வரையிலான நிகழ்வுகளில் செண்டை மேளம் அடித்தல், சாப்பாட்டுப் பந்திகளில் எச்சில் இலைகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்துதல். சிலர் மருத்துவமனைகளில் காயமடைந்து வருபவர்களின் புண்களைக் கழுவி சுத்தப்படுத்தும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இவை எல்லாவற்றையும் விடத் தனித்துவமான ஒரு வேலை அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பிணவறைகளில் பிரேதப் பரிசோதனைகளில் உதவி செய்வது, குறிப்பாக மண்டை ஓட்டை உடைக்கும் வேலை. இவற்றில் எந்த வேலைக்கும் வாய்ப்பில்லாத சிலர் வீடு வீடாகச் சென்று பழைய சோறு, குழம்பு போன்றவற்றை சேகரித்து வந்து உண்டு வாழ்ந்தனர்.

சுடலை இவற்றில் எந்த வேலைக்குச் செல்வதிலும் பொன்னம்மாவிற்கு விருப்பமில்லை. பன்றி இறைச்சிக்கு அப்போது ஒரு விதமான மறைமுக வரவேற்பு இருந்தது. பல சமூகத்தினர் அதைச் சாப்பிடுவதை ஒரு கீழ்த்தரமான விசயமாகக் காட்டிக்கொண்டாலும், மூலமுளைப் பிரச்சினைக்கு நல்ல ஒரு மருந்தாக உட்கொள்ளப்பட்டதால், மறைமுகமாகப் பலரும் அதை வாங்கி உண்டனர். எனவே, திருமணமான புதிதில் மனைவியின் ஆசைப்படி சுடலை பன்றி வேட்டைத் தொழிலில் இறங்கினான்.


வெயில் சாய்ந்ததும் மூவரும் நடக்கத் தொடங்கினார்கள். மலைக்காற்று லேசாக வீசியது. கிழக்கே, தூரத்தில் தெரிந்த காற்றாடி மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில், சோர்ந்து போன உடலுக்கும் மனதுக்கும் சிறு துளி ஆறுதலாகக் கண்ணில் பட்டது ஓர் ஓலைக் குடிசை. அது அந்த ஊரின் முதல் வீடாகவோ, கடைசி வீடாகவோ, இல்லை அவர்களதைப் போல ஊருக்குப் புறமாக ஒதுக்கி வைக்கைப்பட்ட வீடாகவோ இருக்கலாம். அந்த வீட்டை நெருங்கிய சுடலை அடி வயிற்றிலிருந்து குரல் கொடுத்தான்.

“ஐயா! ஐயா!”

மீண்டும் மீண்டும் அழைத்தும் எந்த பதிலும் இல்லை. பொன்னம்மாவும் சங்கிலியும் அங்கேயே உட்கார்ந்தனர். அம்மா மடியில் சுருண்டு புதைந்துகொண்டான் சங்கிலி. பொன்னம்மா வேகவேகமாக விரல் நகங்களைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். மாதா கோவில் திருவிழாவில் செண்டை அடிக்க வந்த சுடலையை முதல் முதலாகச் சந்தித்த நாள், உடல் முழுதும் வியர்வையில் குளித்திருக்க மூர்க்கமாக செண்டை அடித்துக் கொண்டிருந்த அவன், ஒரு நொடியில் ஓரமாக நின்றிருந்த பொன்னம்மாவைப் பார்த்தான். பிறகு திருவிழா முடியும் வரை விடாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு நடந்ததெல்லாம் ஒரு சாகசக் காதல் கதை.


ரு முறை பன்றி வேட்டைக்குப் பொன்னம்மாவும் சென்றிருந்தாள். கடைசியாகப் பன்றி கிடைத்து ஒரு மாதம் இருக்கும்.  நீண்ட நேரம் அலைந்தும் எதுவும் கண்ணில்படவில்லை. நேரம் செல்லச் செல்ல சுடலையின் முகம் இருண்டு போக ஆரம்பித்தது. மீண்டும் மீண்டும் புகையிலையைப் போட்டுக் காறித் துப்பிக்கொண்டிருந்தான். சம்பாதிக்க முடியாதபோது ஆணின் மனதிற்குள் உண்டாகும் தன்னிகழ்ச்சி, அவமானம், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சார்ந்த பயம் இவையெல்லாம் ஓர் அளவு வரைதான் கட்டுக்குள் இருக்கும். அந்தக் கோட்டை முறையாகத் தாண்டி விடுபவர்கள் பாக்கியவான்கள். இல்லையென்றால் என்ன செய்யவும் தயார் என ஒரு நிலைக்கு வந்து நிற்பான். அதுவும் கட்டியவளின் முன்னால் தன் புருஷ லட்சணத்தைக் காட்ட முடியாமல் நிற்க நேர்ந்தால் உள்ளுக்குள்ளிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டுத் தீரும்.

நீண்ட அலைச்சலை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரு மரத்தடியில் ஒரு பெரிய பன்றி தன் குட்டிகளுக்குப் பால் குடுத்தவாறு படுத்திருந்தது. ஒரு நிமிடம் அசையாது நின்ற சுடலையின் முகத்தைப் பார்த்துப் பொன்னம்மா படபடத்து அவன் கையைப் பிடித்தாள். அவளது கையை உதறிவிட்டுப் பல்லைக் கடித்தவாறு அந்தப் பன்றியை வெறித்து நின்றான் சுடலை.

சத்தமில்லாமல் காலடிகளை எடுத்து வைத்து பன்றியின் பின்புறமாகச் சென்றான். பொன்னம்மா ஒருநொடி கண்களை மூடி ஏதோ வேண்டுவது போல இருந்தது. இன்னும் சிறிது நெருங்கிச் சென்றபோது வாசமறிந்த பன்றி சட்டென எழுந்து நின்றது. பதினைந்து குட்டிகளும் ஆபத்தை உணராமல் பால் குடிக்கத் தாயின் மடியை முட்டிக் கொண்டிருந்தன. சட்டென சுருக்குக்கம்பியைப் போட்டு பன்றியின் கழுத்தை இறுக்கினான் சுடலை. பொன்னம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய, மூர்க்கம் கொண்ட பன்றி கம்பியிலிருந்து விடுபட இழுத்துத் திமிறியது. குட்டிகள் ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து புரண்டன. தாய் காலிலேயே மிதிபட்டன. தாய்ப்பன்றி மேலும் மூர்க்கமாக நின்ற இடத்திலேயே சுற்ற ஆரம்பித்தது. ஒரு குட்டி மட்டும் தாயின் முலைக்காம்பைக் கவ்விப் பிடித்துக்கொண்டு தாயின் உடலோடு ஒட்டிச் சேர்ந்து சுற்றியது.

பொன்னம்மா கத்தினாள், “வோய், விட்டுரும் வோய்…விட்டுரும்…”

சுடலை வெறிகொண்டு கத்திக்கொண்டே கம்பியை மேலும் இறுக்க, தளர்ந்து விழுந்தது தாய்ப்பன்றி. அந்த ஒற்றைக் குட்டி இன்னும் தாயின் முலையைக் கடித்துக்கொண்டிருந்தது.

அதன் பிறகான நாட்களில் தூக்கத்தில் அடிக்கடிப் புலம்ப ஆரம்பித்தாள் பொன்னம்மா.

“சுருக்கு…சுருக்கு…கம்பி…குட்டி…குட்டி..” பகலிலும் தனிமையில் பேசினாள்.

ஒருநாள் இரவு இரும ஆரம்பித்தவள் நிறுத்தவேயில்லை, மூச்சு விடுவதற்குச் சிரமப்பட்டுத் திணறினாள். சுடலை ஏதேதோ செய்து பார்த்தான். அவளுக்கு அவன் பேசுவது கூட கேட்ட மாதிரித் தெரியவில்லை. இடையிடையே வீறிட்டு அழுது புலம்பினாள். “சுருக்கு…கம்பீ…குட்டீ…”

அடுத்த நாள், அவளை ஆலமரத்து இசக்கியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றான். பூசாரி அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து, வேப்பிலை அடித்து விபூதி பூசி அனுப்பினார்.


லமுறை அழைத்தும் குடிசையிலிருந்து எந்த பதிலும் இல்லை. ஒரு பிரதான குடிசை, அதன் அருகே கூரை வேயப்பட்ட பந்தல். பந்தலின் மூன்று புறங்களில் மூன்றடி அளவிற்கு ஓலைச் சுவர்கள். ஆங்காங்கே பழைய இரும்புச் சாமான்கள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் பழைய சைக்கிள் பாகங்கள்.

திறந்து கிடந்த குடிசைக்குள் எட்டிப்பார்க்க மனமின்றி வெகு நேரம் நின்றிருந்தான் சுடலை.

தொலைவில் கேட்ட சைக்கிள் மணியின் சத்தம் கேட்டுக் கண் கூர்ந்து பார்த்தான். மங்கிய ஓர் உருவமாக வந்து கொண்டிருப்பவர் தான் இந்த வீட்டுக்காரரோ, தன் மகனுக்கு ஒரு வேளை கஞ்சி குடுப்பாரா அந்தப் புண்ணியவான், என்ன செய்து தன் பொண்டாட்டி பிள்ளையைக் காப்பாற்றுவது என்று அவன் மனது துடித்துக் கொண்டிருந்தது. உருவம் அருகடைந்து குரல் எழுப்பியது, “யாரு வே அது? வெளங்கலயே?”

கைகள் இயல்பாகவே கூப்ப, “அண்ணாச்சி! எனக்கப் பேரு சொடல பாத்துக்கங்க. வடக்கருந்து வாறேன்.. வாழ வழியில்ல அண்ணாச்சி, எம் பொஞ்சாதி புள்ள சோறு தின்னு ரெண்டு நாளாவு!” சொல்லி முடிக்க முடியாமல் தழுதழுத்தான். அடுத்துப் பேச விடாமல் அவன் தோளில் அரவணைப்பாய் விழுந்தன முருகானந்தம் என்கிற அந்தப் பெருமனக்காரரின் கைகள்.

முருகானந்தம் அவரது சைக்கிள் கடையில் அவர்களைப் படுக்க வைத்தார். தனக்கிருந்த இன்னொரு இடத்தில் அவர்கள் குடிசை போட்டுப் பிழைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கை கொடுத்தார். பொன்னம்மாவின் முகம் அப்போதும் இருண்டுபோய்தான் இருந்தது. இரவில் தூக்கத்தில் “குட்டி.. குட்டி.. சுருக்கு…” என்றாள்.


ங்கிலி கைக்குழந்தையாய் இருந்த சமயம். சுடலை வழக்கத்தை விட அதிகமாக சம்பாதித்து வந்தான். பொன்னம்மாவிற்கு தொடக்கத்தில் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், ஒருநாள் அவன் ஒரு தங்கச்சங்கிலியைக் கொண்டு வந்து பொன்னம்மாவிடம் நீட்டினான். அவளுக்குக் குழப்பமாக இருந்தது.

“வோய்? என்ன வோய்? எங்கருந்து வோய் வந்து இது?”

“ஆங், அது ஒனக்க அப்பனுக்க மொதலுல கொள்ளயடிச்சது…போயி பொட்டிக்குள்ள வய்யிட்டி..அவளுக்கக் கேள்வி மயிரு..”

பொன்னம்மாவின் மனதிற்குள் ஒரு பயம் வந்து தொற்றிக் கொண்டது. சுவரில் சாய்ந்து நின்ற சுருக்குக்கம்பியைப் பார்த்து வெறித்தாள். அந்தக் கம்பி அவளது கழுத்திற்கு எந்த கணத்திலும் வந்துவிட முடியும். சுருக்குவது சுடலையா? இல்லை யாரென்றே தெரியாத எவனோ ஒருவனா? இல்லை ஏதோ ஒன்றா?

சுடலை வெளியே சென்ற நேரத்தில் திரவியத்திடம் கேட்டாள், “தம்பி, லேய், எனக்கத் தலையில மண்ணள்ளிப் போட்டுறாத மக்களே…என்ன நடக்குவுன்னு சொல்லு புள்ளோ…”

முதலில் ஏதோ சொல்லிச் சமாளித்த திரவியம் அக்கா கதறி அழுவதைப் பார்த்ததும் உண்மையைச் சொல்ல ஆரம்பித்தான்.

ஒரு நாள் வேட்டைக்குப் போனபோது வெகுநேரமாக எதுவும் சிக்கவில்லை. அப்படியே நடந்து நடந்து இருவரும் சில கிராமங்களைக் கடந்து வந்துவிட்டனர்.  டவுனுக்குப் போகும் நெடுஞ்சாலையின் அருகே இருந்த குளத்தங்கரைப் பக்கம் ஒதுங்கினார்கள். நன்றாக இருட்டி விட்டிருந்தது. ஆளுக்கொரு பீடியைப் பற்ற வைத்து பேசிக்கொண்டிருந்த போது தூரத்தில் ஒரு டார்ச் லைட் வெளிச்சம். கூர்ந்து பார்த்த சுடலை திரவியத்தைப் பீடியை அணைக்கச் சொன்னான். தன்னுடையை பீடியையும் காலடியில் போட்டுத் தேய்த்துவிட்டு திரவியத்திடம், “லேய், சத்தங்காட்டாம வா..” என்றான்.

திரவியம் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க, சுருக்குக்கம்பியை எடுத்துக் கொண்டு அந்தக் குளத்தங்கரைப் பாதையை நோக்கிச் சென்றான். திரவியம் மெதுவாகப் பின் தொடர்ந்து சென்றான். பாதையின் அருகே நின்ற பனை மரத்தின் கீழ் குத்தவைத்த சுடலை திரவியத்தை கீழே உட்காருமாறு சைகை செய்தான். சரசரவென ஏதோ ஊர்ந்து சென்றது.

சுருக்குக் கம்பியைப் பாதையின் குறுக்காக நீட்டித் தரையோடு தரையாக வைத்தான் சுடலை. டார்ச் லைட் வெளிச்சம் அருகில் வந்தது.  சட்டென கம்பைப் பிடித்து இழுத்து சுருக்குக்கம்பியைச் சுருக்கினான்.

“எங்கம்மோ… லேய்..லேய்.. எவம்ல அது? விடுல.. லேய்.. தொட்டித் தாயளி.. விடுல..விடுல..” என்று வலியில் அலறினான் அந்த மனிதன். நிற்க முடியாமல் தள்ளாடி விழுந்தான். காலிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது.

சட்டெனப் பாய்ந்த சுடலை அவனது சட்டைப்பையைக் கிழித்துக் கிடைத்ததை அள்ளினான். இடுப்பு வேட்டியை உருவி கீழே விழுந்த காகிதப் பொட்டலத்தை எடுத்தான். அந்த ஆள் வலியில் கதறிக்கொண்டிருக்க சுருக்குக்கம்பியை விடுவித்து எடுத்துகொண்டு ஓடினான். திரவியம் உடல் நடுங்க, என்ன செய்யவென்று தெரியாமல் சுடலையின் பின்னால் ஓடினான். அதன் பிறகு அதைப் போலவே பலமுறை திருடியதாகவும், அந்தச் சங்கிலியை ஒரு ஆசாரியிடம் திருடியதாகவும் சொன்னான்.

சுடலை திரும்பி வந்ததும் பொன்னம்மா அழுது புரண்டு காலில் விழுந்து கதறினாள். “வோய், இந்தப் பாவம் நமக்கு வேண்டாம் வோய், சொன்னாக் கேளும்…முத்தாரம்மா கொடுக்கது போதும் வோய்…நா எதாஞ் செஞ்சி சம்பாதிக்கேன்.. நீரு இப்பிடிச் செய்யாதீரும் வோய்…”

சுடலை அமைதியாக இருந்தான். பொன்னம்மா அவன் குடுத்த  தங்கச்சங்கிலியை எடுத்து வந்து அவன் காலடியில் தூக்கி எறிந்தாள்.

“எவளுக்க தாலியறுத்த தங்கமோ, எனக்கு வேண்டாம்…நீரு ஒழச்சி ஒரு வெள்ளி வாங்கித்தாரும் போதும்.” என்று சொல்லி அழுதாள்.

அடுத்த நாள் வேட்டையில் பன்றி இடித்தெறிந்ததில் திரவியம் பனம்பாயில் சுருட்டப்பட்டு வர, பொன்னம்மா போதமின்றி கீழே விழுந்தாள். தனக்குத்தானே புலம்பிக்கொண்டே இருந்தாள், “நா சொன்னேன்லா, நா சொன்னேன்லா… குட்டி… சுருக்கு.. குட்டி…”


டுத்த நாள் அதிகாலை, முருகானந்தத்தின் குடிசையின் முன் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது.

“முருகானந்தம், ஓய், வெளிய வாரும் ஓய்..” என்று கத்தினார் ஏட்டு.

மேல்துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டே வெளியே வந்த முருகானந்தம், அதிர்ச்சியாகி போலீஸ் ஜீப்பின் அருகே சென்றார். அவரிடம் போலீஸ் ஏதோ கேட்க அவர் சைக்கிள் கடைப் பக்கம் ஓரக்கண்ணால் பார்த்தார். குடிசையின் பின்புறம் யாரோ ஓடும் சத்தம் கேட்க, போலீஸ்காரர்கள் விரட்டி ஓடினர். சத்தம் கேட்டு எழுந்த பொன்னம்மா தலையிலும் மார்பிலுமாக அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். சைக்கிள் கடையின் ஓரத்தில் சுருக்குக்கம்பி சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. கீழே ஒரு காகிதப் பொட்டலம் கிடந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். சிவலிங்கம் பதித்த தங்கக்தாலி..அதைக் கண்ணில் தொட்டுக் கதறி அழுதாள் பொன்னம்மா.


ரிலிருந்து கிளம்பிய அன்று…வீட்டின் பின்புறமாக வந்து, “ஏட்டி பொன்னம்மா, லேட்டி..எந்திரிட்டி…” என்று பதற்றமாகக் கத்தினான் சுடலை.

பதறி எழுந்து பொன்னம்மா பார்க்க, உடலெங்கும் இரத்தக் கறையோடு நின்றான் சுடலை.

“முத்தாரம்மோ….” என்றவள்  இரு கைகளாலும் தன் மார்பில் பலமாக அடித்துக்கொண்டே  “என்ன வோய் செஞ்சீரு? எங்கொலத்த முடிச்சிப் போட்டீரே ஓய்..கருவறுத்தப் பாவி..சண்டாளா…” என்று அழுதாள்.

“ஏட்டி, நீ ஒப்பாரி வைக்காத..செனங் கெளம்பு…நா ஒண்ணும் நெனச்சிச் செய்யலட்டி….நம்ம போயிருவம்..வா..” என்று பதறினான்.

பொன்னம்மா மகனைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினாள். தாய்ப்பன்றியின் முலையைக் கடித்துச் சுற்றிய குட்டிப் பன்றி அவள் கண்முன் வந்து வந்து போனது.


பொன்னம்மா கட்டிட வேலைக்குக் கையாளாகப் போக ஆரம்பித்தாள். அவளுக்கிருந்த இருமலுக்கு அந்த வேலை ஒத்து வரவில்லையென்றாலும் வயிற்றுப்பாட்டுக்கு அதைச் செய்துதான் ஆக வேண்டும் என்கிற நிலை. அந்த ஊரில் இருந்த அரசுப் பள்ளியில் சங்கிலியைச் சேர்த்துவிட்டார் முருகானந்தம். பள்ளி முடிந்து வந்ததும் முருகானந்தத்தின் சைக்கிள் கடையில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து உதவினான் சங்கிலி. முதல் சில நாட்கள் அவர்  செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். போகப்போக, பஞ்சர் போடவும், சிறு சிறு பழுதுகளைச் சரி செய்யவும் கற்றுக் கொண்டான். உடல் வலிக்க, களைத்துப் போன அம்மாவும் பையனும் குடிசை முற்றத்தில் உட்கார்ந்து ஒருவர் மாற்றி ஒருவர் காயத்திருமேனி எண்ணெய் போட்டுக் கொள்வார்கள். பொன்னம்மாவின் இருமல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. உள்ளூர் வைத்தியரிடம் மருந்து வாங்கிக் குடித்தும் பெரிதாகப் பலனில்லை.

அப்படி ஒரு நாள் இரவு, முற்றத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் பொன்னம்மா. குடிசையின் கூரையில் சொருகி வைத்திருந்த சுடலையின் சுருக்குக் கம்பியை தற்செயலாக வெளியே எடுத்து வந்த சங்கிலியைப் பார்த்து, “லேய் தேவ்டியா மவன..கீழப் போடுல அத…அதத் தொட்டன்னா கொன்னுப் போடுவம் பாத்துக்க.” என்று வீறிட்டாள் பொன்னம்மா.

சங்கிலி பயந்துபோய் அதைக் கீழே போட்டான்..பொன்னம்மா அவனை அதுவரை அப்படித் திட்டியதேயில்லை. மெதுவாக அவளருகே போய் உட்கார்ந்தான். சற்று நேரம் மூர்க்கமாக மூச்செறிந்துகொண்டிருந்த அவள் பின் அவனைத் தன் மடியோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.

அதன் பிறகு ஒவ்வொரு முறை வீட்டினுள் நுழையும்போதும் வெளியே போகும்போதும் அவனையறியாமலேயே அவனது பார்வை அந்த சுருக்குக்கம்பியின் மீது விழுந்தது. அம்மா இல்லாத நேரங்களில் அதை எடுத்து பன்றி வேட்டைக்குப் போவது போல விளையாட்டாகச் சுற்றி வந்தான். செடிகளில் அந்தச் சுருக்குக்கம்பியைப் போட்டு இலைகளையும் பூக்களையும் வெட்டி எறிந்தான். ஒருமுறை ஒரு நல்லபாம்பை சுருக்குப் போட்டு கொன்று புதைத்தான்.


ரு நாள், நண்பர்களுடன் திருடன் போலீஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது சங்கிலிக்கு போலீஸ் பாத்திரம் கிடைத்தது. அவனும் மிக மகிழ்ச்சியாக ஒரு முரட்டு போலீஸ் போல நடந்து மற்றவர்களை விரட்டினான். மறைந்திருந்த ஒருவன் அவனைப் பார்த்து, “எலேய் பன்னிப்பயல..போலீசுப் பன்னி…லேய்…இந்தா வா..வா..இங்க பீ கெடக்கு ல, வால லேய்….வா..” என்றான்.

இதைப் பார்த்த மற்ற நண்பர்களும் சேர்ந்துகொண்டு, “பன்னிப்பயல லேய்..லேய்..போலீசுப் பன்னி…..பீப்பயல லே..” என்று அவனைக் கூப்பிட்டனர். பின்னாலிருந்து கல்லெடுத்து எறிந்தான் ஒருவன்.

சங்கிலிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.. ஓடிச் சென்று வீட்டில் சொருகியிருந்த சுருக்குக்கம்பியைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான்.

“வாங்கல தாயளி மவங்களா..எங்கல ஒளிஞ்சிய?”


ரவு அம்மா மடியில் படுத்துக் கிடந்து, “ஏட்டி, பன்னி எறச்சி தின்னா தப்பாட்டி?” என்று கேட்டான்.

பொன்னம்மா, “இல்ல மக்களே..பன்னி பீயத் திங்குவுல்லா..அதான் மக்களே கொற.. போட்டு..விடுய்யா..”

“அப்ப, கொளத்தாங்கர பன்னிமாடஞ் சாமிய மட்டும் கும்புடுகானுவ?”

பொன்னம்மா எதுவும் சொல்லாமல் அவன் தலையைத் தடவிக் குடுத்தாள். அவனுக்குக் கோவம் அடங்கவில்லை. சட்டென அப்பாவின் நினைவு வந்தவன், “எம்மா, அப்பா எப்பட்டி வருவாரு? அவரு எவளயோ கொன்னுப் போட்டாருன்னு சொல்லுகானுவ?”

“தெரியல மவனே.. நமக்கத் தலைல எழுத்து அப்பிடி..”


சில வருடங்கள் கடந்தன.

சங்கிலி ஒன்பதாவது வகுப்பு படித்த சமயம். தினசரி மருந்தில்லாமல் உறங்க முடியாத நிலையில் மெலிந்து போய் இருந்தாள் பொன்னம்மா. காசநோயை வைத்துக் கொண்டு தொடர்ந்து வேலைக்குச் செல்வதும் சிரமமாக இருந்தது.

பொன்னம்மா கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்க, “முருகானந்தம் மாமா மட்டும் இல்லன்னா இந்த ஊர்க் காரனுவ நம்மள அடிச்சி வெரட்டிருப்பானுவ..பலசாதிக் குடியிருப்பெல்லாம் பவுசு மயித்துக்குத்தான்..நம்ம வந்த நெலமக்கி எவன் எடங்கொடுப்பான்..பெரிய மனசுல்லாட்டி…” என்றான் சங்கிலி.

“ஆமாய்யா…சாமில்லா அவரு…ஒனக்க அப்பன் போனதுக்கப் பொறவு செத்துப்போவம்னு தா நெனச்சேன், அந்தச் சாமிதா நல்ல புத்தி சொல்லி வுட்டாரு பாத்துக்க…”

“ம்ம்ம்ம்…அவரு பாதிதாம்மா திம்பாரு.. சோத்த அள்ளி எனக்கத் தட்டத்துல போட்டுருவாரு.. அள்ளித் தின்னுள பன்னிப்பயவுள்ளன்னு வெத்தல போடப் போயிருவாரு…”

“எத்தன நாளக்கி மக்களே அந்த மனுசனும் பாப்பாரு? அவருக்க பொஞ்சாதி புள்ளயல பாக்காண்டாமா? நீ நல்லா படி மக்களே… நல்லா நிமுரணும் பாத்துக்க…”

“கூட படிக்கவனுவ ஒண்ணுக்கும் கூடசேக்க மாட்டுக்கானுவம்மா.. ஒரு மாதியா ஒதுக்குகானுவ… தள்ளிப் போல.. தள்ளிப் போலங்கானுவ… எனக்கக்கிட்ட வாட அடிக்குவாட்டி?”

“சின்னப் பயக்களுக்க மனசுக்குள்ள வெசத்த அள்ளி வுட்டுட்டாவ மவன.. நீ எவங்கிட்டயும் ஒடக்காத மக்களே..நல்லா படி..எல்லாரும் வருவாவ…”

முருகானந்தமும் அவனைச் சைக்கிள் கடைக்கு வராமல் படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறினார். “மருமவன, அதாம் பாத்துக்க ஒனக்க மொதலு…வுட்டுராத” என்றார்.


ருநாள், உறக்கத்தில் உடல் அனலாய் கொதிக்க, “குட்டி.. சுருக்கு.. கம்பி..” எனப் புலம்பினாள் பொன்னம்மா. உடல் தூக்கித் தூக்கிப் போட்டது, வலிப்பு வந்தது போல இழுத்தது. இருமி மூச்சுவிடத் திணறினாள். சங்கிலி முருகானந்தம் வீட்டிற்கு ஓடினான். அவர் வந்து வண்டிகட்டி டவுன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றார்.

“ஏட்டி.. எம்மோ.. அழாதட்டி.. எங்கம்மய காப்பாத்து முத்தாரம்மா…”

“குட்டி.. சுருக்கு… மக்களே.. கம்பி மக்களே…”

“ஏட்டி ஒண்ணு ஆவாதுட்டி… செனம் போயிருவம்ட்டி”

“அதத் தொடாதல.. எந்தங்கமவம்லா… தொட்டுராத புள்ளோ…” பொன்னம்மா சுயநினைவின்றிப் புலம்பிக்கொண்டே வந்தாள். “மொல…குட்டி…மொல..தாலி….மொல…”


சில நாட்களில் பொன்னம்மா படுத்த படுக்கையாகி விட்டாள். முருகானந்தம் செய்த சிறு சிறு பண உதவிகளில் சங்கிலியால் பொன்னம்மாவிற்கு கஞ்சி வைத்துக் கொடுக்க மட்டுமே முடிந்தது. வேறு வழியில்லாமல் சில பெரிய மனிதர்களிடம் உதவி கேட்கச் சென்றான் சங்கிலி. எல்லா இடங்களிலும் எதிர்பார்த்த ஏமாற்றமே கிடைத்தது.


ரு நாள் மாலை. திடீரென பலமாக இரும ஆரம்பித்தாள் பொன்னம்மா. சளியோடு இரத்தம் கலந்து வந்தது. மூச்சுவிட முடியாமல் கையைக் காலைப் போட்டு அடித்தாள். கையில் பணம் எதுவும் இல்லாததால் முருகானந்தம் வீட்டிற்கு ஓடினான் சங்கிலி. அவரது வீடு பூட்டிக்கிடந்தது. வேறு யாரிடம் கேட்பது? ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்றவர்கள் அவனைப் பார்த்து, “பன்னிப்பயல, ஓடுல பன்னிப்பயல” என்று சொல்வது போலத் தோன்றியது. முருகானந்தம் எத்தனை நாளைக்குத்தான் உதவ முடியும்?

சட்டென வீட்டிற்குத் திரும்பி நடந்தான் சங்கிலி. தனக்குத்தானே புலம்பிக்கொண்டே குடிசையில் நுழைந்ததும் சுருக்குக்கம்பியைப் பார்த்தான். அதற்கும் அவனுக்கும் இடையில் தன்னிகழ்ச்சி, அவமானம், கோவம், வெறுப்பு, வெறி…அம்மா இன்னும் துடித்துக் கொண்டிருந்தாள்.

“மக்களே… சுருக்கு.. குட்டி.. .தொடாத புள்ளோ….. குட்டி… மொல..”

பொன்னம்மாவின் அருகே சென்று அவள் கையைப் பிடித்தான். கை வெட்டி இழுப்பது நிற்கவில்லை.

எழுந்து கூரையில் சொருகியிருந்த சுருக்குக்கம்பியை உருவினான் சங்கிலி. விறுவிறுவென குடிசையை விட்டு வெளியேறும்போது பொன்னம்மா பலமாகக் கத்தினாள்.

“ஏலேய் சங்கிலி… குட்டீ..” என்றவள் தொப்பென தரையில் விழுந்து அசைவற்றுக் கிடந்தாள். அவளது கண்கள் நிலைகுத்திக் கூரையை வெறித்துக் கொண்டிருந்தன.


ம்மாவின் சிதைக்குக் கொள்ளி வைத்தவன் திடீரென்று எங்கோ ஓட ஆரம்பித்தான். முருகானந்தம் கலங்கிப்போய் அவனையே பார்த்து நின்றார். போனவன் அழுதுகொண்டே திரும்பி வந்தான். கையில் அவனது அப்பாவின் சுருக்குக்கம்பி. அதை இறுக்கமாகப் பிடித்து அம்மாவின் உயிர்நெருப்பை ஒரு கணம் பார்த்து நின்றான். தீர்க்கமாய் அந்தச் சுருக்குக் கம்பியை கொள்ளியில் வீசி எறிந்தான்.


  • சுஷில் குமார்     

 

Previous articleஅழைப்பு மணி
Next articleஅலருக்கு அஞ்சி
Avatar
நாகர்கோவிலைச் சார்ந்தவர். கிராமப்புற மாணவர்களின் கல்விப் பணியில் இருக்கிறார். இவரது சிறுகதைகள் கனலி, யாவரும், பதாகை, சொல்வனம் இதழ்களில் வெளிவந்துள்ளன. ' தெருக்களே பள்ளிக்கூடம் ' எனும் மொழி பெயர்ப்பு நூலும் வெளி வந்துள்ளது. தற்போது கோவையில் வசிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.