நவோமி க்ளெய்ன்: நமது பொருளாதார அமைப்பே புவி வெப்பமாதலுக்குக் காரணம்!

ப்போதுகூட புவிவெப்பமாதலை நிறுத்த முடியுமா? நமது முதலாளித்துவ அமைப்பைத் தீவிரமாக மாற்றத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்தான் என்கிறார் நவாமி க்ளெய்ன் (Naomi Klein). இவர் This Changes Everything: Capitalism vs. the Climate என்ற காலநிலை மாற்றம் குறித்த நூலின் ஆசிரியர். ஏற்கெனவே இருக்கும் பயனற்ற சிறுசிறு முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியதொரு தீவிர அணுகுமுறையினால் புவிவெப்பமாதலை நிறுத்துவதற்கான நேரம் இது என்பது குறித்து அவர் Der Spiegel’க்கு அளித்த நேர்காணல்.

க்ளெய்ன், புவி வெப்பமாதலை ஏன் நம்மால் தடுக்கவே முடியவில்லை?

துரதிர்ஷ்டம், தவறான நேரம், இவற்றுடன் பல தற்செயல் நிகழ்வுகள்.

மிகத்தவறான நேரத்தில் நிகழ்ந்த பேராபத்தாகிவிட்டிருக்கிறது இல்லையா?

மிக மோசமான ஒரு தருணமும்கூட. பசுங்குடில் வாயுக்களுக்கும் புவிவெப்பமாதலுக்குமான தொடர்புதான் மனிதகுலத்தின் மிகமுக்கிய அரசியல் பிரச்சினையாக 1988லிருந்து இருந்து வருகின்றது. துல்லியமாகச் சொல்வதென்றால் பெர்லின் சுவர் இடிப்பின்போது ஃப்ரான்சிஸ் ஃபுக்குயாமா அறிவித்ததுபோல ‘வரலாற்றின் முடிவு’தான் மேற்கத்திய முதலாளித்துவத்தின் வெற்றி. கனடாவும் அமெரிக்காவும் அப்போதுதான் கட்டற்ற வணிகத்தின் (free-trade) முதல் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டன, அதுதான் பிற உலக நாடுகளுக்கும் மூல வகைமாதிரியாக (prototype) இருந்தது

அதாவது வளங்குன்றா வளர்ச்சிமுறையும் கட்டுப்பாடுகளும் தேவைப்பட்ட ஒரு கட்டத்தில் தான் துல்லியமாக நுகர்வோருக்கான புதிய சகாப்தமும், எரிசக்தியின் அதீத உபயோகமும் துவங்கியது என்கிறீர்கள் இல்லையா?

நிச்சயமாக, அதுமட்டுமல்லாது மிகச்சரியாக அதே சமயத்தில்தான் இனி சமூகப் பொறுப்புணர்ச்சியோ ஒட்டுமொத்த செயல்பாடோ தேவையில்லை, எல்லாவற்றையும் வர்த்தகத்துக்கே விட்டுவிடலாம் என்றும் நமக்குச் சொல்லப்பட்டது. ரயில்வே துறையையும், மின்தொகுப்பையும் தனியார்மயமாக்கினோம் உலக வர்த்தக மையமும் சர்வதேச நாணய நிதியமும் ஒழுங்குமுறையற்ற முதலாளித்துவத்தில் மாட்டிக்கொண்டன. துரதிர்ஷ்டவசமாக இதுவே மிகபெரிய அளவிலான உமிழ்வுகளுக்கும் வழிவகுத்துவிட்டது.

ஒரு செயல்பாட்டாளராக இத்தனை ஆண்டுகளாக பலவற்றுக்கும் முதலாளித்துவமே காரணமென்று சொல்லிவந்த நீங்கள், இப்போது காலநிலை மாற்றத்துக்கும் அதையே குற்றம் சாட்டுகிறீர்கள்?

இதில் முரண்பட ஏதுமில்லை, புள்ளிவிவரங்களைக் கவனித்தால் உங்களுக்கே தெளிவாகப் புரியும். 1990களில் உமிழ்வுகள் ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்ந்தது; 2000த்தின் துவக்கத்தில் அது சராசரியாக 3.4 சதவீதம் மேலும் உயர்ந்தது. அமெரிக்கக் கனவு உலகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதது என்று நினைத்த நுகர்வோர் பொருட்களின் பட்டியலும் விரைவாக விரிவடைந்தது. ஷாப்பிங் செய்து பொருட்களை வாங்கிக் குவிப்பதுதான் வாழ்க்கைமுறை என்றெண்ணும் வெறும் நுகர்வோராகவே நம்மை எண்ணிக்கொள்ளத் துவங்கினோம். ஏராளமாக ஷாப்பிங் செய்யும் விருப்பம் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் ஏற்றுமதி செய்யப்படும்போது, அதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. ஏராளமான ஆற்றல்.

சரி மீண்டும் முதல் கேள்விக்கே செல்வோம்: மக்களால் ஏன் இந்த வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை?

நாம் மிக முறையாக நம்மிடமிருந்த எல்லா வழிகளையுமே தொலைத்தோம். ஒழுங்குமுறைகள் எல்லாமே இப்போது சீர்கெட்டுவிட்டன. எந்த அரசும் எண்ணெய் நிறுவனங்களுக்கும், பிற நிறுவனங்களுக்கும் கடுமையான விதிகளைப் பிறப்பிப்பதில்லை. எனவே இந்தச் சிக்கல் மிகச்சரியாக மிக மோசமான ஒரு கட்டத்தில் நம் மடியில் வந்து விழுந்திருக்கிறது. இப்போது நமக்கு அதிக நேரமில்லை. செய் அல்லது செத்து மடி என்னும் தருணத்தில் இருக்கிறோம். இப்போதும் நாம் ஒரு இனமாக செயல்படவில்லையெனில், நமது எதிர்காலம் ஆபத்தில்தான் இருக்கும். நாம் உமிழ்வைத் தீவிரமாகக் குறைத்தாக வேண்டும்

Image result for This Changes Everything: Capitalism vs. the Climate

முதலாளித்துவத்தின் மீதான உங்கள் விமர்சனத்தில் காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினையைப் பயன்படுத்துவது பொருத்தமற்றதாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

இல்லை. நாம் உருவாக்கி வைத்திருக்கும் பொருளாதார அமைப்பென்பதும் புவி வெப்பமாதலுக்கு ஒரு முக்கிய காரணமாகிவிட்டிருக்கிறது. நானாக உருவாக்கி இதைச் சொல்லவில்லை. நம் ஒட்டுமொத்த அமைப்பே சீர்கெட்டிருக்கிறது, மிகஅதிகமாக இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வும், எரிசக்தி நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற தன்மையும் பேரழிவைத்தான் தரும்.

உங்கள் மகன் தோமாவிற்கு இரண்டரை வயதாகிறது. அவன் வளர்ந்து உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறும் 2030-இல் அவன் வாழவிருக்கும் உலகம் எப்படிப் பட்டதாயிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

அதுதான் இப்போது முடிவாகிக் கொண்டிருக்கிறது. இப்போது நாமிருக்கும் இந்த உலகிலிருந்து அவ்வுலகு நிச்சயம் வேறுபட்டதாயிருக்கும் என்பதற்கான அறிகுறிகளை இப்போதே நான் காண்கிறேன். அந்த மாற்றம் சாதகமாகவோ அல்லது மிக மிகப் பாதகமானதாகவோ இருக்கலாம், எப்படியாயினும் ஒருசிலவற்றிலாவது உலகம் மிக மோசமானதாகவே இருக்கும் என்பது உறுதி. புவி வெப்பமாதலையும் அதன் விளைவாக இயற்கைப் பேரழிவுகளையும் அனுபவிக்கத்தான் போகிறோம், ஆனால் பேரழிவைத்தரும் வெப்பமாதலைத் தடுக்க இன்னும் நமக்கு அவகாசம் இருக்கிறது. காலநிலை மாற்றத்தைக் கையாளுகையில் நமது பொருளாதார அமைப்பு மிக கருணையற்றதாகவும், கொடூரமாகவும் மாறிவிடாமலிருக்கும் வகையில் மாற்றிக்கொள்ளவும்கூட நமக்கு இன்னும் நேரமிருக்கிறது

நிலைமையை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?

நமக்கு முக்கியமான விழுமியங்கள் எவை, உண்மையிலேயே நாம் எப்படி வாழ விரும்புகிறோம் என்பதையெல்லாம் முடிவுசெய்தாக வேண்டும். அந்த முடிவுதான் புவியின் வெப்பம் இன்னும் 2 டிகிரி உயருமா அல்லது 4 அல்லது 5 டிகிரியா, அதற்கும் மேலா என்னும் வித்தியாசத்தை உருவாக்கும். மனிதர்களாகிய நமக்குச் சரியான முடிவெடுப்பது இன்னும் சாத்தியம்தான்.

1988-இல் காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசு குழு (IPCC) நிறுவப்பட்டு இருபத்தி ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் உண்டாகும் கரியமில வாயுவின் (CO2) உமிழ்வுதான் காலநிலை மாற்றத்திற்கு காரணம் என நாம் அறிந்திருக்கிறோம். இருந்தும் இந்தப் பிரச்சினைக்கு இன்றுவரை மிககுறைவான கவனமே அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இந்த விஷயத்தில் நாம் ஏற்கனெவே தோல்வியடையவில்லையா?

இம்மாற்றங்களுக்கு நாமளிக்கவிருக்கும் மிகப்பெரிய விலையைக் கருத்தில்கொண்டு நான் இதைச் சற்று வேறுபட்டுப் பார்க்கிறேன். வெற்றியடையவும், சேதத்தைக் குறைக்கவும் சிறிதளவு சாத்தியமிருப்பினும் நாம் தொடர்ந்து போராட வேண்டும்

பல ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேசச் சமூகம் புவி வெப்பமாதலை 2 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தும் வரம்பை நிர்ணயித்தது. அது இனிமேலும் சாத்தியம்தான் என் கருதுகிறீர்களா?

ஆம். சாத்தியங்கள் உள்ளதென்றே கொள்ளலாம். உடனடியாக நாம் உலகளாவிய உமிழ்தல்களை 6 சதவீதத்துக்கு குறைக்கவேண்டியிருக்கிறது.

நம்மைக்காட்டிலும், வளர்ந்த செல்வந்த நாடுகளான அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் ஆண்டுக்கு 8லிருந்து 10 சதவீதம் வரை உமிழ்வைக் குறைக்கும் கூடுதல் சுமையும் இருக்கிறது, இது உடனடியாகச் சாத்தியமில்லை.

மேலும் இது நமது தற்போதைய சமூக அமைப்பிலும், அரசியல்ரீதியாகவும் எதார்த்தமில்லாததும்கூட.

அதாவது நம் சமூகம் இவற்றையெல்லாம் செயலாக்கும் திறனற்றது என்கிறீர்களா?

ஆம். கொள்கைகளிலும் சித்தாந்தங்களிலும் நமக்கு அதிரடியான மாற்றங்கள் தேவை, ஏனென்றால் நாம் என்ன செய்ய வேண்டுமென்று அறிவியலாளர்கள் சொல்வதற்கும் நமது தற்போதைய அரசியல் எதார்த்தத்திற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது, எனவே அரசியல் எதார்த்தத்தை அவசியம் மாற்ற வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு சமூகம் காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாக எதிர்த்துப் போராட முடியுமா?

இல்லை. கண்மூடித்தனமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதார மாதிரி அதீத நுகர்வு மற்றும் அதிக கரியமில வாயு (CO2) உமிழ்வுகளுக்குத்தான் வழிவகுக்கும்.

எதிர்காலத்தில் பசுமைத் தொழில்நுட்பங்கள், பொதுப் போக்குவரத்து, சேவை நிறுவனங்கள் தொடர்பான தொழில்கள், கலை, கல்வி போன்ற குறைந்த கரிம உமிழ்வுகளைக் கொண்ட பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி இருக்க முடியும், இருக்க வேண்டும். இப்போது, நம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அடிப்படை வெறும் நுகர்வு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை உள்ளடக்கியது. அங்கு எதையும் குறைக்காமல் வேறு எதைச் செய்தாலும் அது சுய ஏமாற்றமாகவே இருக்கும்

சர்வதேச நாணய நிதியம் இதற்கு நேர்மாறான ஒன்றைக் கோருகிறது. பொருளாதார வளர்ச்சியும் காலநிலைப் பாதுகாப்பும் பரஸ்பரம் தொடர்புடையது அல்ல என்று அது கூறுகிறது.

நான் கவனிக்கும் அதே விஷயங்களை அவர்கள் பார்க்கவில்லை. முதல் சிக்கல், எல்லா காலநிலை மாநாடுகளிலும், அனைவரும் சுய உறுதிப்பாடு மற்றும் தன்னார்வ கடமைகள் மூலம் இலக்கை அடைந்துவிட முடியுமென்பது போல் செயல்படுகிறார்கள். எண்ணெய் நிறுவனங்களுக்கு யாரும் “’நீங்கள் எல்லாவற்றையும் இறுதியில் கைவிடத்தான் வேண்டியிருக்கும்’’ என்று சொல்வதில்லை, இரண்டாவது சிக்கல், இந்த எண்ணெய் நிறுவனங்கள் தாங்கள் இழக்க விரும்பாதவற்றைப் பாதுகாக்க மிகக்கடுமையாக போராடப் போகின்றன.

காலநிலைப் பாதுகாப்பிற்காகத் தடையற்ற சந்தையை அகற்ற வேண்டுமென்கிறீர்களா?

சந்தைகளை அகற்றுவது பற்றி நான் பேசவில்லை, ஆனால் நமக்கு இன்னும் நிறைய திசைமாற்றுதல்கள், திட்டமிடல்கள் மற்றும் மிகவும் மாறுபட்ட சமநிலையும் தேவையாயிருக்கிறது. நாம் வாழும் இந்த அமைப்பு வளர்ச்சியை மட்டுமே அதிகமாகப் பற்றிக்கொண்டுள்ளது – மேலும் எல்லா வளர்ச்சியையும் நல்லதாகவே கருதுகிறது. ஆனால் நல்லதல்லாத பல வகையான வளர்ச்சிகள் உள்ளன.

எனது நிலைப்பாடு புதிய தாராளமயத்துடன் நேரடியாக முரண்படுகிறது என்பது எனக்கே தெளிவாகத் தெரிகிறது. ஜெர்மனியில், புதுப்பிக்கத்தக்க மாற்றத்தை விரைவுபடுத்தியிருந்தும், நிலக்கரி நுகர்வு உண்மையில் அதிகரித்துக் கொண்டேதானே வருகிறது?

உண்மை. 2009லிருந்து 2013 வரையிலுமே அப்படித்தான்.

நான் இதை அவசியமானதைத் தீர்மானிப்பதில் இருக்கும் தயக்கத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன். ஜெர்மனியும் அதன் உமிழ்வு இலக்குகளை வரும் ஆண்டுகளில் நிச்சயம் பூர்த்திசெய்யப் போவதில்லை.

ஒபாமாவின் ஆட்சி காலநிலைக்கு ஏற்பட்ட மோசமான ஒன்றா?

ஒரு விதத்தில் அப்படித்தான். ஒபாமா குடியரசுக் கட்சியைவிட மோசமானவர் என்பதால் அல்ல. அவர் அப்படியில்லை. ஆனால் இந்த எட்டு ஆண்டுகள் நம் வாழ்வில் மிகவும் வீணடிக்கப்பட்டுவிட்டன. விழிப்புணர்வு, அவசரம், சரியான மனநிலை, அவரது அரசியல் பெரும்பான்மை, அமெரிக்காவின் மூன்று பெரிய வாகன உற்பத்தியாளர்களின் தோல்வி மற்றும் தோல்வியுற்ற கட்டுப்பாடற்ற நிதி உலகம் போன்ற காலநிலை மாற்றத்தை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள்கூட சரியான வரலாற்று ஒருங்கிணைப்பில் சரியான காரணிகளுடன் ஒன்றிணைந்தன. ஆனால் அவர் அலுவலகத்திற்கு வந்தபோது, அவற்றைச் செய்ய அவருக்கு துணிவில்லை.

வங்கிகள் மற்றும் வாகன நிறுவனங்கள் மீதான தனது ஆதிக்கத்தை ஒபாமா ஏன் ஒரு நல்வாய்ப்பாகக் கருதாமல் சுமையாகக் கருதினார் என்பதைப் பற்றிப் பேசத் தயாராக இல்லாவிட்டால் நாம் இந்தப் போரில் வெற்றி பெறவே மாட்டோம். அவர் சூழ்நிலைக் கைதியாக இருந்தார். அவர் அதை மாற்றவும் விரும்பவில்லை.

அமெரிக்காவும் சீனாவும் இறுதியாக 2014-இல் ஒரு தொடக்க காலநிலை ஒப்பந்தத்தில் உடன்பட்டன.

அது நிச்சயமாக ஒரு நல்ல விஷயம். ஆனால் ஒபாமா பதவியில் இருந்து வெளியேறும்வரை வலிமிகுந்ததாக இருக்கும் எதுவும் செயல்பாட்டுக்கு வராது. இப்போது என்ன மாறிவிட்டதென்றால், “எங்கள் மக்கள் அணிவகுத்து வருகிறார்கள், அதை நாங்கள் புறக்கணிக்க முடியாது” என்று ஒபாமா கூறுவதுதான். வெகுஜன இயக்கங்கள் முக்கியம்தான், அவை நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் நம் தலைவர்களை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தள்ள, அந்த இயக்கங்கள் இன்னும் வலிமையுள்ளதாக மாற வேண்டும்

அவர்களின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும்?

கடந்த 20 ஆண்டுகளாகத் தீவிர வலதுசாரி தரப்பு, பெட்ரோலிய நிறுவனங்களின் மீதான முழுக் கட்டுப்பாடின்மை மற்றும் சமூகத்தின் பெரும்பணக்காரர்களின் முழுச்சுதந்திரம் என்கின்ற இந்த மூன்று மட்டுமே அமெரிக்க அரசியலின் மையக்கொள்கைகளாகி விட்டன.

அமெரிக்க அரசியல் மையத்தை இந்தத் தீவிர வலதுசாரித்தனத்திலிருந்து விடுவித்து மீண்டும் ஒரு உண்மையான மையத்தை நோக்கிக் கொண்டுவர வேண்டியுள்ளது.

க்ளெய்ன், இது முட்டாள்தனம், ஏனென்றால் இது மாயை. நீங்கள் இதை மிகப் பரந்த அளவில் சிந்திக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. காலநிலையைப் பாதுகாப்பதற்கான திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னரே முதலாளித்துவத்தை முதலில் அகற்ற விரும்புவது நடக்காதென்பதை நீங்களே அறிவீர்கள்.

இதோ பாருங்கள், நீங்கள் மனச்சோர்வடைய விரும்பினால், அதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் இன்னும் தவறாகவே இருக்கிறீர்கள், உண்மை என்னவென்றால், இப்போது சாத்தியமென்று நினைக்கப்பட்ட மாற்றங்களில் கவனம் செலுத்துவது, கரிம வர்த்தகம் மற்றும் ஒளிவிளக்குகளை மாற்றுவது எல்லாம் மோசமாகத் தோல்வியடைந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில், சுற்றுச்சூழல் இயக்கமென்பது, மேட்டுக்குடிகளில் மட்டும் செயல்படும், தொழில்நுட்பரீதியான, அரசியல் நடுநிலை கொண்டதாகவே இரண்டரை தசாப்தங்களாக இருப்பதும் இத்தோல்வியின் ஒரு பகுதிதான். இதன் விளைவைத்தான் நாம் இன்று காண்கிறோம். அவையெல்லாம் தான் நம்மை திசை திருப்பி விட்டிருக்கின்றன.

உமிழ்வு அதிகரித்து வருகிறது மற்றும் காலநிலை மாற்றமடைந்துள்ளது. அடுத்ததாக, அமெரிக்காவில், பெண்களின் உரிமைகளானாலும் சரி, அடிமைத்தனத்திற்கு எதிரான அல்லது மனித உரிமைகளுக்கானதென்றாலும் சரி கடந்த 150 ஆண்டுகளில் ஏற்பட்ட அனைத்து முக்கியமான சட்ட மற்றும் சமூக மாற்றங்களும் வெகுஜன சமூக இயக்கங்களின் விளைவினால்தான் நடந்தன. இதே வலிமை நமக்கு மீண்டும் இப்போது விரைவாகத் தேவைப்படுகிறது, ஏனென்றால் காலநிலை மாற்றத்திற்கான காரணமே நமது அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புதான். இப்போதுள்ள அணுகுமுறை மிகவும் தொழில்நுட்பரீதியிலானது மற்றும் சிறியது.

முழு சமூக ஒழுங்கையும் தலைகீழாக்கி ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க முயற்சித்தால், உங்களால் அது முடியாது. அது ஒரு உடோபியன் மாயவாதம்.

பிரச்சினையின் வேரே சமூக ஒழுங்குதான் என்னும்போது அது கற்பனாவாதமல்ல. மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, நாம் நிறைய சிறிய தீர்வுகளின் எடுத்துக்காட்டுகளில் நீந்திக்கொண்டிருக்கிறோம்: பசுமைத் தொழில்நுட்பங்கள், உள்ளூர்ச் சட்டங்கள், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் கரிம வரிவிதிப்பு ஆகியவையெல்லாம் ஏன் உலக அளவில் நம்மிடம் இல்லை?

பசுமைத் தொழில்நுட்பங்கள், கரியமில வாயு (CO2) வரிவிதிப்பு மற்றும் தனிநபர்களின் சூழல்சார்ந்த நடத்தை போன்ற அனைத்து சிறிய அடிகளும் பொருளற்றவை என்கிறீர்களா?

அப்படியில்லை. நாம் அனைவரும் நம்மால் முடிந்ததை நிச்சயமாகச் செய்யவேண்டும். ஆனால் அதுவே போதும் என்று நம்மை ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. நான் சொல்லவருவது, வெகுஜன இயக்கமாக மாறாவிட்டால் சிறிய படிகள் மிகச் சிறியதாகவே இருந்துவிடுமென்பதையே. வலுவான சமூகங்கள், நிலையான வேலைகள், அதிக ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சியின் மீதான இந்தக் கூடுதல் ஆர்வத்திலிருந்து விலகுதல் போன்ற அடிப்படைகளைக் கொண்டிருக்கும், பொருளாதார மற்றும் அரசியல் மாற்றம் நமக்குத் தேவை. அதுதான் ஒரே சமயத்தில் பல சிக்கல்களைத் தீர்க்கும் உண்மையான வாய்ப்பாக இருக்கும்.

அரசியல்வாதிகள், தொழில்முனைவோரின் ஒட்டுமொத்த காரணத்தை நீங்கள் எண்ணுவதாகத் தெரியவில்லையே.

ஏனெனில் நம் சமூகம் அவ்வாறு சிந்திப்பதில்லை, அது குறுகிய கால ஆதாயத்திற்கே வெகுமதி அளிக்கிறது. அதாவது விரைவான லாபம். உதாரணமாக மைக்கேல் ப்ளூம்பெர்க்-ஐ எடுத்துக் கொள்ளுங்களேன்.

தொழிலதிபரும் நியூ யார்க் நகர முன்னாள் மேயருமானவரும்தானே!

ஒரு அரசியல்வாதியாகக் காலநிலை நெருக்கடியின் ஆழத்தைப் புரிந்துகொண்டவர். எனினும், ஒரு தொழிலதிபராக, எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான நிதியில் முதலீடு செய்வதைத்தான் அவரும் தெரிவுசெய்கிறார். ப்ளூம்பெர்க் போன்ற ஒருவராலேயே இந்தத் தூண்டுதலை எதிர்க்க முடியாதபோது நம் சமூகத்தின் சுய பாதுகாப்பு திறன் அவ்வளவு பெரியதல்ல என்று நீங்கள் ஊகித்துக்கொள்ளலாம்.

உங்கள் புத்தகத்தில் தீர்க்கப்படாத அத்தியாயமாக இருப்பது Virgin குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் பிரான்சன் பற்றியது.

ஆம், எழுதுகையில் நான் அதை எதிர்பார்த்திருக்கவில்லை.

காலநிலையைக் காப்பாற்ற விரும்பும் ஒரு மனிதராகவே பிரான்சன் தன்னைச் சித்தரிக்க முயன்றார். அல் கோருடனான ஒரு சந்திப்புக்குப் பிறகே அனைத்தும் தொடங்கியது.

பிறகு 2006-ஆம் ஆண்டில், கிளின்டன் குளோபல் முன்னெடுப்பு (Clinton Global Initiative) நடத்திய ஒரு நிகழ்வில் அவர் பசுமைத் தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சியில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக வாக்களித்தார். அந்த நேரத்தில், இது உண்மையிலேயே ஒரு பரபரப்பான பங்களிப்பென்றே நானும் நினைத்தேன். நான் நினைக்கவில்லை, ஓ, நீங்கள் இழிந்த மோசடியாளர்.

ஆனால் பிரான்சன் உண்மையில் அதை அரங்கேற்றிக் கொண்டிருந்தார், அந்த பணத்தின் மிகச்சிறு பகுதியே செலவிடப்பட்டது

அவர் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்திருக்கலாம், ஆனால் ஆம், ஒருசிறு பகுதியே செலவிடப்பட்டது.

2006-ஆம் ஆண்டு முதல், பிரான்சன் தனது ஏராளமான விமான நிறுவனக்களில் 160 புதிய விமானங்களைச் சேர்த்துள்ளார், உமிழ்வையும் 40 சதவீதம் அதிகரித்துள்ளார்.

ஆம்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது என்ன?

ஹாலிவுட் நட்சத்திரங்கள், பெரும் செல்வந்தர்களின் செயல்களை, அறிவிப்புக்களை எல்லாம் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். உமிழ்வைக் குறைப்பதற்கான அறிவியல்பூர்வமான சிறந்த திட்டங்களுடன் அவற்றை நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் முயற்சிகளுக்கு ஏராளமான பணம் செலவிடப்படுகிறது. ஏன்?

இது ஐரோப்பாவிலிருந்து வேறுபட்டது. கருக்கலைப்பு மற்றும் துப்பாக்கிகளுக்கான கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்களின் கோபத்தைப் போன்ற ஒன்றுதான் இது.

அவர்கள் மாற்ற விரும்பாத வாழ்க்கைமுறையை அவர்கள் பாதுகாக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. காலநிலை மாற்றமென்பது அவர்களின் முக்கிய அரசாங்க எதிர்ப்பு, தடையற்ற சந்தை நம்பிக்கைமுறைக்குச் சவால் விடுக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவே அவர்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க அதை மறுத்தாக வேண்டும்.

அதனால்தான் இந்த இடைவெளி இருக்கிறது. தாராளவாதிகள் காலநிலைப் பாதுகாப்பு குறித்துச் சிறிது நடவடிக்கை எடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், தங்கள் நிகழ்ச்சி நிரலில் பெரிய சிக்கல்களையும் கொண்டுள்ளனர். ஆனால் இந்த தீவிர பழமைவாத காலநிலை மாற்ற மறுப்பாளர்கள் இந்த நடவடிக்கைகளைத் தடுக்க தங்கள் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்வார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போலி அறிவியல் ஆய்வுகள் மற்றும் பிழையான தகவல்களுடன்?

ஆம், எல்லாவற்றையும்.தான்.

சுற்றுச்சூழல், சமநீதி, பொது சுகாதாரம், தொழிலாளர் பிரச்சினைகள் என இடதுசாரி சிந்தனைமுறையில் பிரபலமான இருக்கும் அனைத்தையும் நீங்கள் ஏன் இணைக்கிறீர்கள் என்று அது விளக்குகிறதா? இவற்றை வெறும் பரிசீலனைகளில் இருந்தா செய்கிறீர்கள்?

இந்தச் சிக்கல்கள் இணைக்கப்பட்டுதான் இருக்கின்றன, மேலும் அவற்றை நாம் விவாதிக்கையில் இணைக்கவும் வேண்டும். ஏராளமாக இழக்கவிற்கும் ஒரு சிறிய குழுவினருக்கு எதிரான போரில் நீங்கள் வெல்ல ஒரே ஒரு வழிதான் உள்ளது: நிறைய பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்திலிருக்கும் மக்களை உள்ளடக்கிய ஒரு வெகுஜன இயக்கத்தை நீங்கள் தொடங்க வேண்டும்

மறுப்பவர்களை நீங்கள் அவர்களைப் போலவே உணர்வுவயமானவர்களாக இருந்து, அதிக எண்ணிக்கையிலும் இருந்தால் மட்டுமே தோற்கடிக்க முடியும், ஏனெனில் உண்மையில் அவர்கள் மிகக் குறைவானவர்கள்தான்.

தொழில்நுட்பம் நம்மைக் காப்பாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஏன் நீங்கள் நம்பக்கூடாது?

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைச் சேமிப்பதிலும் சூரிய ஒளியின் பயன்பாட்டிலும் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் காலநிலை மாற்றம்? எந்தவொரு சூழலிலும், “எப்போதாவது நாங்கள் சில கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவோம், எனவே மற்ற எல்லா முயற்சிகளையும் கைவிடுவோம்” என்று சொல்வதற்கு எனக்கு போதுமான நம்பிக்கை இல்லை. அது பைத்தியக்காரத்தனமானது

பில் கேட்ஸ் போன்றவர்கள் இதை வேறு விதமாகப் பார்க்கிறார்களே.

தொழில்நுட்பத்தை நோக்கிய அவர்களின் கிளர்ச்சியைச் சிறுபிள்ளைத்தனமாக நான் பார்க்கிறேன். நிதி நெருக்கடியைத் தூண்டிய வழிமுறைகளாகட்டும் அல்லது நியூ ஆர்லியன்ஸின் கடற்கரையின் எண்ணெய்ப் பேரழிவாகட்டும் சமீபகாலங்களில் அதிபுத்திசாலித்தனமான நபர்களின் பெரிய தோல்விகளையும் நாம் கண்டிருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில், விஷயங்களைக் கெடுத்துவிடுகிறோம், பின்னர் எப்படி அவற்றைச் சரிசெய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். இப்போது, நாம் நம் புவியைக் கெடுத்துவருகிறோம்.

நீங்கள் சொல்வதைக் கேட்டால், காலநிலை நெருக்கடி ஒரு பாலின பிரச்சினை என்ற எண்ணத்தை ஒருவர் பெறக்கூடும்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

நாம் தொடர்ந்து முன்னேறி, இந்தச் சிக்கலுக்கான புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுவர வேண்டும், இறுதியில் சிக்கலான இந்த பூமி நமது கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும் என்று பில் கேட்ஸ் கூறுகிறார். மற்றொருபுறம் நீங்கள் இதை நிறுத்தச் சொல்கிறீர்கள், இந்தப் புவிக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு நான் நம்மை மென்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஆண்களால் நடத்தப்படுகின்றன. ஆனால், விமர்சன அணுகுமுறை கொண்ட ஒரு பெண்ணான நீங்கள், மிகையுணர்ச்சியாளராக அடையாளப்படுத்தப்படுகிறீர்கள். இது ஒரு அபத்தமான சிந்தனை அல்லவா?

இல்லை. முழு தொழில்மயமாக்கலுமே புவியில் ஆதிக்கம் செலுத்துவது மனிதனா அல்லது இயற்கையா என்பது பற்றியது. எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக்கொள்வது சில ஆண்களுக்கு கடினம்தான். பல நூற்றாண்டுகளாக இந்த கரியமில வாயுவை (CO2) நாம் பூமியில் குவித்துள்ளோம், புவி இப்போது நம்மிடம் சொல்கிறது: “சரி, நீங்கள் என் வீட்டில் ஒரு விருந்தினர் மட்டுமே.”

புவி அன்னையின் விருந்தினரா?

அது மிகவும் வழமையானது. ஆனால் நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கிறது. உச்ச நிதித்துறைப் போல், எண்ணெய்த் தொழிலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் உலகம்தான்; இது மிகவும் ஆண்தன்மையானதும்கூட. முடிவில்லாத நாட்டைக் “கண்டுபிடிப்பது” மற்றும் முடிவில்லாத வளங்களைப் பிரித்தெடுக்க முடியும் என்ற அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் கருத்தாக்கமும் ஆதிக்கச் சொல்லாடல் தான். இது இயற்கையை ஒரு பலவீனமான பெண்ணாகக் காட்டுகிறது. இயற்கையின் பிற அங்கங்களுடன் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பது பலவீனமாகவே காணப்பட்டது. அதனால்தான் ஆல்பா ஆண்களுக்குத் தாங்கள் தவறுசெய்ததாக ஒப்புக்கொள்வது இரட்டிப்பு கஷ்டமாக இருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் நீங்கள் மிகத் தெளிவாக இருக்கிறீர்கள். நிறுவனங்களை அவதூறு செய்தாலும், இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களான உங்கள் வாசகர்களும் குற்றவாளிகள் என்று நீங்கள் ஒருபோதும் கூறவில்லை. காலநிலைப் பாதுகாப்புக்காக தனிப்பட்ட வாசகர்கள் செலுத்த வேண்டிய விலை குறித்தும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

ஓ, பெரும்பாலான மக்கள் அதை மகிழ்ச்சியாகவே செலுத்துவார்கள் என்று நான் நினைக்கிறேன். காலநிலைப் பாதுகாப்புக்கு வாகனம் ஓட்டுதலைக் குறைப்பது, குறைந்த வான்வழிப் பயணங்கள் மற்றும் குறைவான நுகர்வு போன்ற நியாயமான நடத்தைகள் தேவை என்பதை அவர்கள் அறிவார்கள்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களை வழங்கினால் அவர்கள் மகிழ்ச்சியாக அவற்றை உபயோகிப்பார்கள்.

ஆனால் இந்த யோசனை அத்தனைப் போதுமானதாக இல்லை, இல்லையா?

(சிரிப்பு) சரிதான். பசுமை இயக்கம் பல தசாப்தங்களாக குப்பைகளை உரமாக்க வேண்டும், மறுசுழற்சி செய்ய வேண்டும், சைக்கிள்களில் பயணிக்க வேண்டும் என்று மக்களுக்குக் கற்பித்தது. ஆனாலும் காலநிலைக்கு இத்தனை ஆண்டுகளில் என்ன நேர்ந்திருக்கிறதென்று பாருங்கள்.

உங்கள் வாழ்க்கைமுறை காலநிலைக்கு உகந்ததுதானா?

போதாது. நான் சைக்கிளில் செல்கிறேன், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறேன், ஸ்கைப் மூலம் உரைகளை வழங்க முயற்சிக்கிறேன், கார் பயணங்களையும் பகிர்ந்துகொள்கிறேன். நான் இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு இருந்ததைவிட பத்தில் ஒரு பங்காக என் விமானப் பயணங்களைக் குறைத்திருக்கிறேன். எனினும், டாக்சிகளை அதிகம் உபயோகிக்கும் பிழையையும் செய்துகொண்டிருக்கிறேன்.

புத்தகம் வெளிவந்ததிலிருந்து, நான் அதிகமாக விமானங்களில் பறந்து கொண்டிருக்கிறேன். ஆனால், பசுமையான வாழ்விலிருப்பவர்களும் கரியமில வாயு உமிழ்வு (CO2) இல்லாத இடங்களில் வாழ்பவர்களும் மட்டுமே இந்தச் சிக்கலைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அப்படியானால், யாருமே இதைக்குறித்து எதுவும் சொல்ல முடியாது.


22-05-2015 அன்று ஜெர்மனியின் முன்னணி இதழான Der Spiegel-இல், ‘The Economic System We Have Created Global Warming’ என்ற தலைப்பில் வெளியான நேர்காணல்; நேர்கண்டவர் க்ளாஸ் ப்ரின்க்பாவ்மெர்.

தமிழில் லோகமாதேவி – தாவரவியல் பேராசிரியை, கட்டுரையாளர்; தினமலர் பட்டம் இதழிலும் சொல்வனம், ஆனந்தசந்திரிகை, நீர்மை உள்ளிட்ட இணைய இதழ்களில் எழுதிவருகிறார். Arizona பல்கலைக்கழகத்தின் அறிவியல் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

1 COMMENT

  1. முதலாளித்துவத்துக்கு எதிரான க்ளெய்ன் தரப்பு வாதங்கள் சிந்திக்க வைக்கின்றன. அதே சமயம் எதிர்கால உலகம் குறித்த அவரது நம்பிக்கை நமக்கும் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. மொழியாக்கம் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.