சுகுண லய மாதுர்யம்!

நான் விதுஷி சுகுணா புருஷோத்தமனைப் பற்றி 2007-ல்தான் தெரிந்து கொண்டேன்.

அந்த வருட டிசம்பர் இசை விழாவில் அகாடமியில் அவர் சிம்மனந்தன தாளத்தில் அமைந்த பல்லவியைப் பற்றி பேசவும் பாடவும் செய்கிறார் என்ற செய்தியில்தான் நான் அவரைப் பற்றி முதன் முதலில் தெரிந்து கொண்டேன். நான் லக்ஷுமீஸம், சிம்மனந்தனம் போன்ற தாளங்களின் பெயரைக் கேள்விப்பட்டிருந்தேனேயன்றி அவற்றை யாரும் பாடிக் கேட்டிருக்கவில்லை. அதனால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல ஆவல் எழுந்தது.

பல்லவியை விதுஷி சுகுணா பாடுவதற்கு முன் சிறியதாக தோடி ராகத்தில் ஆலாபனையும், தானமும் பாடினார். பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே அவற்றைப் பாடியிருப்பார். ஆனால் அவற்றில் சொட்டிய தோடி ராகம் அன்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது பல்லவிக்காகத்தான் என்கிற எண்ணத்தை மறக்கடிக்கச் செய்தது.

தாளங்களில் அதிக அளவு அட்சரங்கள் கொண்ட தாளம் சிம்மனந்தனம் (128 அட்சரங்கள்). அதிகம் காணக் கிடைக்காத குரு, புளுதம், காகபாதம் போன்ற அங்கங்களைக் கொண்ட தாளத்தை அன்று அவர் பிரமிக்கத்தக்க வகையில் கையாண்டார். திரிகாலம், திஸ்ரம் போன்ற பல சாகஸங்களை அனாயாசமாகச் செய்தார். அவற்றைக் காணத்தான் நான் அங்கு சென்றிருந்தேன் என்றாலும் என் மனம் அவர் பாடிய தோடியிலேயே சொக்கிக் கிடந்தது. வெறும் சதுஸ்ர நடையை மனத்தில் ஓட்டியபடி அவர் பாடிய தோடியின் சௌந்தரியத்தில் மட்டும் திளைக்கவே மனம் விரும்பியது.

அன்று தொடங்கி எனக்கு வாய்ப்பு அமைந்த போதெல்லாம் அவருடைய கச்சேரிகளையும், பதிவுகளையும் கேட்டு வந்தேன். அவருடைய சங்கீதத்துக்கு இணையாக அவருடைய மேடை ஆகர்ஷணமும் (stage presence) அவர் பேசிய போதெல்லாம் பளீரிட்ட நகைச்சுவையுணர்வும் என்னை அவர் நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் நாட வைத்தன.

அடுத்த 5/6 வருடங்களில் கிட்டத்தட்ட பத்து கச்சேரிகளை நேரில் கேட்டிருப்பேன்.

2010-வாக்கில் இசைக் கலைஞர்களைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த காலத்தில் விதுஷி சுகுணாவையும் ஒரு நாள் சந்திக்க வேண்டுமென்ற நினைத்திருந்தேனே தவிர அதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

2013-ல் பரிவாதினி தொடங்கிய போது, அதில் நிறைய நேர்காணல்கள் செய்ய வேண்டுமென்றும் திட்டமிருந்தது. அப்போதுதான் விதுஷி சுகுணாவை எனக்குத் தெரிந்தவர் மூலமாக தொடர்பு கொள்ள முயன்றேன். அப்போது அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தார்.

சில வாரங்களுக்கு ஒருமுறை விசாரித்து வந்தேன். நிலைமையில் முன்னேற்றமில்லை என்ற செய்திதான் வந்துகொண்டிருந்தது.

ஒருநாள், “ராம்! அந்த நேர்காணல் நடக்காதுனு நினைக்கறேன்”, என்று என் நண்பர் சொல்லவும் நான் வேறு வேலைகளைப் பார்க்கச் சென்றுவிட்டேன்.

பல மாதங்கள் கழித்து 2014 செப்டம்பரில் ஒருநாள் அதே நண்பர் அழைத்தார். “நீ அதிர்ஷ்டசாலி! சுகுணா மாமி நன்றாகத் தேறி வந்துவிட்டார். நீ அவர்களைச் சந்திக்கலாம்”, என்றார். நேர்காணலுக்கு அனுமதி வாங்கித் தருவதாகவும் சொன்னார்.

சொன்னவரை அடுத்த பல நாட்களுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியில் ‘நாத இன்பம்’ சபையை நடத்தும் திருமதி.ஜெயலட்சுமியின் முயற்சியில் நேர்காணலுக்கான வாய்ப்பு கிடைத்தது.

2014-ல் செப்டம்பர் மாதக் கடைசியில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். நான் முன்பு பார்த்திருந்ததற்குப் பாதியாய் இளைத்திருந்தார். முகத்தில் இருந்த பிரகாசமும், அவ்வப்போது பளீரிடும் குறும்பு கலந்த புன்னகையும் வழக்கம் போல இருந்தன.

சந்தோஷமாகப் பேசவும், பாடவும் செய்தார் என்றாலும் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இளைப்பாற வேண்டியிருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு அவரைப் பதிவு செய்த பின்னும் கூட எனக்குக் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் அவரை அதற்கு மேல் துன்பப்படுத்தலாகாது என்று சம்பிரதாயமாய் கேட்கும் கடைசி கேள்விக்குள் தாவினேன். உள்ளுக்குள் இன்னொரு முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன்.

துரதிர்ஷ்டவசமாக அந்த இன்னொரு சந்திப்புக்கான வாய்ப்பே அமையவில்லை. சில மாதங்களுக்குள் அவர் உடல்நிலை மீண்டும் மோசமாகி 2015-ன் தொடக்கத்தில் அவர் மறைந்தும் போனார்.

அவரை இன்னொருமுறை சந்திக்கலாம் என்று எழுதாமல் வைத்திருந்த நேர்காணலை அவர் மறைவுக்குப் பின் எழுதக் கைவரவேயில்லை. சில நாட்களுக்கு முன்னால் அவருடைய 80-வது பிறந்த நாள் ஏப்ரல் 4-ம் தேதி வருகிறது என்று ஒரு பதிவைப் பார்த்தேன். அந்தப் பதிவு என்னை மீண்டும் அந்த நேர்காணலை நோக்கிச் செலுத்தியது. மீண்டும் ஒருமுறை கேட்டுப் பார்த்த போது நான் பதிவு செய்து வைத்திருந்தது முழுமையான பார்வையைக் கொடுக்காது என்றாலும், இருக்கும் வரையிலும் கூட அது ஒரு பொக்கிஷம் என்றுபட்டது. பிறந்த நாளுக்குள் எழுதிவிட வேண்டும் என்று கையோடு எழுதி முடித்துவிட்டேன்.

அவர் என்னிடம் சொன்னதை ஒன்று விடாமல் இங்கு கொடுத்துள்ளேன். சொல்லாமல் போனதை நினைத்துக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் அவையும் காற்றுமண்டலத்தில் எங்கோ மிதந்து கொண்டுதான் இருக்குமென்று தோன்றுகிறது.

ஏனெனில் உன்னதக் கலைஞர்கள் சாஸ்வதர்கள். அவர்கள் எழுப்பிய கலையலைகள் காலச்சுழலில் சில காலம் வெளியில் தெரியாமல் இருக்கலாம். கீழ் செல்லும் அலை ஒருநாள் மேல் வந்துதானே ஆக வேண்டும்?

ஆர்ப்பரிக்காத ஆனால் அழுத்தமான இந்த இசையலையின் சிறு ஸ்பரிசத்தை அவரது எண்பதாவது பிறந்த நாளில் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று சொல்வதைவிட ஆசுவாசமாய் இருக்கிறது.

வணக்கம். உங்கள் இளமைக்காலத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.

எங்கள் குடும்பத்தில் சங்கீதக் கலைஞர் என்று எனக்குமுன் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. என் தாத்தா திருவள்ளூரில் வழக்கறிஞராக இருந்தார். அவருக்கு சங்கீதத்தில் ஈடுபாடு இருந்தது. எனக்கு அவரைப் பார்க்கும் பாக்கியமில்லை. அவர் நன்றாகப் பாடுவார் என்றும் சொல்லிக் கேள்வி. தனம்மாளின் வெள்ளிக்கிழமைக் கச்சேரிகள் கேட்பதற்காக திருவள்ளூரிலிருந்து வருவாராம். பிற்காலத்தில், “உங்க தாத்தா காலேஜுக்கு மட்டம்போடுவிட்டு கச்சேரிக்கு போய்விடுவார்”, என்று உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்பாவை ‘பாத்ரூம் சிங்கர்’ என்று வேண்டுமானால் சொல்லலாம். அம்மாவுக்குக் கொஞ்சம் வயலின் தேர்ச்சி இருந்தது. சந்தானமய்யா என்று ராஜமாணிக்கம் பிள்ளையின் சீடரிடம் அம்மா கற்றுக்கொண்டார். பக்கத்தில் நடக்கும் தியாகராஜ உத்சவம் போன்ற சிறுசிறு விழாக்களில் வாசித்தும் உள்ளார். அதற்கு மேல் ஈடுபட அந்நாளைய சூழல் அனுமதிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

பிறந்து வளர்ந்தது எல்லாம்?

சென்னையில்தான். முதலில் ராயபுரத்தில் இருந்தோம். அப்பாவுக்கு ’இஞ்சினியரிங் சர்வீஸில்’ நிறைய இடங்களுக்கு மாற்றலாகும்படியான உத்தியோகம் என்பதால் கோடம்பாக்கத்துக்கு மாறினோம். அங்கு என் அம்மாவின் குடும்பத்தினர் இருந்ததால் அங்கிருப்பது வசதி என்றெண்ணி மாறியிருக்கக்கூடும். நான் சிறு வயதிலிருந்தே பாடிக்கொண்டிருப்பேன். ஆரம்பப் பாடங்களை எல்லாம் அம்மாவிடமும் பாட்டியிடமும் கற்றேன். கீதங்கள் எல்லாம் அப்போது அதிகம் கற்ற ஞாபகமில்லை. பின்னாளில் சொல்லித்தர தேவையாய் இருக்கிறதே என்றுதான் கற்றுக் கொண்டேன். ஸ்லேட்டில் எழுதி வர்ணங்கள் பாடம் பண்ணியது நினைவில் இருக்கிறது.

சிறு வயதில் நான் எப்போதும் பாடிக் கொண்டிருப்பேன். ‘இவளுக்கு சங்கீதம் வருகிறது. முறையாக சொல்லிக் கொடுக்க வேண்டும்’, என்று பாட்டியும் அம்மாவும் முனைப்பாக இருந்தார்கள். ஏழெட்டு வயதாகும் போது சாவித்திரி என்று ஒரு பாட்டு டீச்சர் வீட்டுக்கே வந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். முதல் பாடலாக ‘கஞ்சதளாயதாக்ஷி’ சொல்லிக் கொடுத்தார்.

நான் என்னமோ சிறு வயதிலேயே இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்றெல்லாம் சொல்வேன் என்று நினைத்து வந்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். நான் பிராடிஜி எல்லாம் கிடையாது.  (கண்கள் ஜொலிக்கச் சிரிக்கிறார்). முறையாகப் பல ஆண்டுகள் கற்று, ஒழுங்காகச் சாதகம் செய்து, ஓரளவு கற்றிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பன்னிரெண்டு வயதான போது மன்னார்குடி ராமமூர்த்தி ஐயர் என்று மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சீடரிடம் சிட்சை தொடங்கியது. அரசு இசைப்பள்ளி நடத்தும் கீழ்நிலை (லோயர்), மேல்நிலை (ஹையர்) பட்டயங்களுக்கான பரிட்சைகளிலும் தேறினேன். அதற்காக பாடங்களை (தியரி) லலிதா என்றொருவரிடம் சென்று கற்றேன். அந்தப் பரிட்சைக்கான புத்தகங்களைப் பார்த்ததிலிருந்து, ‘இதையெல்லாம் தொகுத்து ஒருவர் எழுதியிருக்கிறாரே’ என்று புரொபசர் சாம்பமூர்த்தியின் மேல் எனக்குப் பெரிய ஹீரோ வொர்ஷிப்.

வாய்ப்பாட்டு தவிர, லலிதாபாய் ஷியாமண்ணா என்பவரிடம் வீணையும் கற்றுக் கொண்டேன். மைசூர் வாக்கேயகாரர்கள் பாட்டுகள் எல்லாம் அவர் நிறைய சொல்லித் தருவார்.

காலையில் எழுந்தவுடன் வீணை வகுப்புக்கு எங்கள் வீட்டிலிருந்து வலது பக்கம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். பாடம் முடித்து வீட்டுக்கு வந்ததும், பள்ளிக்குத் தயாராகி இடது பக்கம் சாரதா வித்யாலயாவுக்கு (தி.நகர்) அரை மணி நேரம் நடக்க வேண்டும். அந்த நடையாலோ என்னமோ மெலிந்து ஆரோக்கியமாக இருந்தேன் போலும். பின்னாளில்தான் கொஞ்சம் எடைகூடிவிட்டது. இப்போது எழுபது வயதுக்கு மேல் பழைய மாதிரி ஆகிக்கொண்டு வருகிறேன். (கான்சரில் மெலிந்த உடலைப் பரிகசித்துச் சிரிக்கிறார்).

ராமமூர்த்தி ஐயரிடம் படிக்கும் போது ஹையர் கிரேட் பரிட்சைக்காக ராகம் பாட, ஸ்வரம் பாட எல்லாம் கொஞ்சம் வழிகாட்டினார். முதலில் பிள்ளையார் பாட்டாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ தெரியவில்லை, கௌளையில் ‘ஸ்ரீமஹாகணபதி’-யின் ஸ்வரம் பாடச் சொன்னார். அந்த நாளில் எல்லாம் மனோதர்ம விஷயங்களை எல்லாம் கோடிதான் காட்டுவார்கள். இன்று நம் மாணவர் போட்டியில் கலந்து கொள்கிறார் என்றால் நாம் எப்படியெல்லாம் உட்கார்ந்து நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்துத் தயார்ப்படுத்துகிறோம். அந்த நாளில் அப்படியெல்லாம் நமக்கு யாரும் சொல்லும் சூழலில்லையே என்றுகூட நினைப்பதுண்டு.

அந்த நாளில் புதிய பாடல்களைப் பாடம் செய்வது கடினமாயிருந்திருக்குமில்லையா?

ஆமாம்! புரந்தரதாசர் கிருதிகளுக்கான போட்டிக்குத் தயார் செய்தது நினைவுக்கு வருகிறது. எம்.எல்.வி-யின் தாயார் லலிதாங்கி போட்ட ஒரே புத்தகம்தான் புரந்தரதாசர் கிருதிகள் கற்க ஒரே வழி.  அதுவும் அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடாது. சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் ஒரு பிரதியை புரொபசர் சாம்பமூர்த்தி வாங்கி வைத்திருந்தார். அதிலிருந்து எழுதிக்கொண்டு பாடம் செய்தேன். உச்சரிப்பில் பல சந்தேகங்கள். முன்பின் தெரியாத கருகமணி அணிந்திருந்த பெண்மணி ஒருவரை வழிமறித்து கன்னட உச்சரிப்புகளை சரி செய்துகொண்டேன். (சிரிக்கிறார்).

இப்போது நிறைய வசதிகள் இருந்தாலும் நிறைய கவனச்சிதறல்களுக்கான (distraction) வாய்ப்புகளும் கூடியுள்ளன. அப்போது இருந்த சூழலில் சங்கீத சம்பந்தமாகத் தேடுவதற்கும், கற்றுக்கொண்டதை நன்றாக வரும்வரை சாதகம் செய்வதற்குமான சூழல் இன்றைவிட சிறப்பாக அமைந்ததென்றே தோன்றுகிறது.

மொபைல், இணையம், தொலைகாட்சி போன்ற சமாசாரங்கள் எல்லாம் இல்லாதததால் நேரத்துக்குத் தூங்கிவிடுவோம். காலையில் 4 மணிக்கு எழுந்து சாதகம் செய்வேன். வரிசைகளைப் பாடுவது, அகார சாதகம் செய்வது, வர்ணங்களை மூன்று காலங்களில்  பாடுவது, திஸ்ரம் செய்து பாடுவது என்று தினமும் சாதகம் செய்வேன். என் சித்தி, “சுகுணா! பாடல்களாய்ப் பாடினால் கேட்டுக் கொண்டே நன்றாகத் தூங்கலாம். இப்படி அகாரமாய் மேல் ஸ்தாயியில் பாடினால் எப்படித் தூங்குவது?”, என்று சொல்லுவார். எனக்கு நிறைய சாதகம் செய்து சாதிக்க வேண்டும் என்று இயற்கையிலேயே ஆவல் இருந்தது.

இளமையிலேயே இசைக் கலைஞர்தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டீர்களா?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இன்று ஐஐடி-க்குப் பிள்ளைகள் ஆறாங்கிளாசிலிருந்து தயார் செய்வது போல சங்கீத வித்வானாக திட்டம்போட்டு எல்லாம் ஆகவில்லை. எனக்குச் சங்கீதம் ரொம்பப் பிடிக்கும். வீட்டிலும், எனக்கு சங்கீதம் வருகிறது என்று ஊக்குவித்தார்கள். பிடித்திருந்ததால் அதில் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல். அதனால் அதன்பின் சென்றேன். கச்சேரி செய்வேன் என்றெல்லாம் அப்போது நினைக்கவில்லை.

சிறு வயதில் கச்சேரிகள் கேட்பதற்கான வாய்ப்புகள் அமைந்தனவா?

ஓரளவு வாய்ப்புகள் இருந்தன. இன்றிருப்பது போல அவ்வளவு சபாகள் அன்றில்லை. கிருஷ்ண கான சபை கூட பிறகுதான் வந்தது. ஜகன்னாத பக்த சபை எக்மோரில் பல இடங்களில் கச்சேரிகள் வைப்பார்கள். அங்கு சென்று நிறைய கேட்டிருக்கிறேன். அரியக்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஆலத்தூர் போன்ற பெரிய பாட்டுகளை எல்லாம் அங்கு கேட்டிருக்கிறேன். பத்து பன்னிரெண்டு வயதில் நுணுக்கங்கள் எல்லாம் தெளிவாகப் புரியாவிட்டாலும் ஒன்றுக்கொன்று வேறான வழிமுறைகள் இவை என்று வெவ்வேறு பாணி கலைஞர்கள் பாடும்போது புரிந்தது.

உங்கள் மனத்துக்கு நெருக்கமான பாட்டு என்று யாருடைய பாட்டையாவது நினைத்ததுண்டா?

அப்படி ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எனக்கு எல்லாமே பிடித்திருந்தது. அந்த வயதில் எல்லாமே புதியதாக எனக்குப்பட்டது. உதாரணமாக ஆலத்தூர் பாடியதைக் கேட்டுத்தான் சுத்தசீமந்தினி என்றொரு ராகம் இருக்கிறது என்றே தெரிய வந்தது. புதிய கீர்த்தனைகள், நான் கேள்விப்பட்டிராத வாக்கேயக்காரர்கள் என்று ஒரு மாணவியாய்ப் பல விஷயங்களை இந்தக் கச்சேரிகள் மூலம் கற்க முடிந்தது. என் கவனம் கச்சேரிகளின் மூலம் நான் என்ன கற்கலாம் என்பதில்தான் இருந்ததென்பதால் எல்லார் பாட்டும் பிடித்துதான் இருந்தது.

சங்கீதத்தில் தீவிரமாய் ஈடுபடும் எண்ணம் எப்போது வந்தது?

எஸ்.எஸ்.எல்.சி முடித்தவுடன் என்று சொல்லலாம். அப்போதே இசைக் கல்லூரியில் சேர வேண்டும் என்று நினைத்தேன். என் அப்பாஅதற்கு ஒப்பவில்லை. கணிதம் எடுத்துப் படிக்கச் சொன்னார். சங்கீதத்தை கல்லூரிக்கு வெளியிலும் படிக்கலாம் என்று அவர் சொன்னது நியாயமாகப்பட்டது. இப்போது அப்படிச் செய்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது.

பியூசி-க்குப் பின் சென்னப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தீர்களா?

ஆமாம். புரொபசர் சாம்பமூர்த்தி அங்கு இருந்தார் என்பதற்காகவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் டிப்ளமாவில் சேர்ந்தேன். 1957-ல் தொடங்கி 1959-வரை அந்தப் பட்டயப்படிப்பை முடித்து கூட ஒரு வருடம் அங்கேயே வீணைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். அங்கு படிக்கும் போதுதான் முதன் முதலில் திருவையாற்றுக்குச் சென்றேன். புரொபசர் சாம்பமூர்த்தி மாணவர்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். நான் தஞ்சாவூர் பக்கமெல்லாம் அதுவரை சென்றதில்லை. அந்தக் காட்சிகள் ஒரு பக்கம், சங்கீதம் ஒரு பக்கம், புரொபசர் சொன்ன கதைகள் ஒருபக்கம் என்று பரவசமாய் அமைந்த பயணம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. அப்போது நான் ஒரு பாடல் புனைந்தேன்.

அப்போதே பாடல்கள் புனைய ஆரம்பித்துவிட்டீர்களா?

அதற்குப் பல வருடங்கள் முன்பாகவே சிறு சிறு பாடல்கள் செய்திருக்கிறேன். சின்ன வயதில் நானும் என் தோழியும் ஏகாம்ரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அங்கு வாசலில் இருந்த பிள்ளையாரின் பெயரில் ஒரு பாடல் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. பாடலை ஒரு பேப்பரில் எழுதி அதை பிள்ளையாரின் பக்கத்தில் வைத்துவிட்டு, யாராவது பிடித்துக் கொண்டுவிடப்போகிறார்களே என்று ஓட்டமாய் அங்கிருந்து ஓடி வந்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடல் என்னவென்று இப்போது நினைவில் இல்லை.

திருவையாற்றில் புனைந்த பாடல் ஞாபகமிருக்கிறதா?

நன்றாக ஞாபகமிருக்கிறதே.

(கண்டேன் கண்டேன் கண்டேன் – திருவையாற்றினைக்
கண்டேன் கண்டேன் கண்டேன்

என்று சவுக்க காலமும் மத்தியம காலமும் கலந்து வரும்படியான அடாணா ராகப் பாடலைப் பாடிக் காட்டுகிறார்)

 

இதைச் செய்தது எந்த வருடத்தில்?

1958-ல். சந்தேகமின்றிச் சொல்லலாம்.

விவரமறிந்த பின் நீங்கள் செய்த முதல் கிருதி இது என்று சொல்லலாமா?

இதற்கு முன்பே சில கிருதிகள் செய்ததுண்டு. பல்கலைக்கழகத்தில் மாதாந்திரக் கச்சேரிகள் நடக்கும். மாணவர்கள் பாட வேண்டும். கச்சேரிக்கு அடுத்த நாள் பாடியதைப் பற்றி புரொபசர் விரிவாகப் பேசுவார். அந்தக் கச்சேரிகளில் வாய்ப்பாட்டு, வீணை, கோட்டுவாத்யக் கச்சேரிகள் கூடச் செய்திருக்கிறேன்.

கோட்டு வாத்யம் கற்றீர்களா?

இல்லை. அங்கு வாய்ப்பாட்டுக்கும் வீணைக்கும்தான் வகுப்புகள். ஆனால் பல்கலைக்கழகத்தில் ஒரு வாத்யம் இருந்தது. அதனால் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சென்று கோட்டுவாத்யத்தை வாசித்து நானே பழகிக்கொண்டேன்.

அந்தக் கச்சேரிகளுக்காகப் பாடல்கள் புனைந்தீர்களா?

அதைத்தான் சொல்ல வந்தேன். ஒருமுறை ஆபோகி ராகத்தில் ஒரு கீர்த்தனை அமைத்துப் பாடினேன். அடுத்த நாள் புரொபசர் என்ன சொல்வாரோ என்று திகிலாக இருந்தது. அப்போது நான் தெரிந்துகொள்ள நிறைய இருந்தது என்பது வாஸ்தவம்தாம். அந்த நிலையில் இந்த முயற்சிகளெல்லாம் தேவையாவென்று புரொபசர் கேட்டிருந்தால் நிறுத்தியிருப்பேன். ஆனால், அவர் மிகவும் உற்சாகப்படுத்திப் பேசினார், “Suguna sang a piece in Abhogi. Critically looking – it is a good piece” என்று அவர் சொன்னது எனக்குப் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.

உங்களை புரொபசர் சாம்பமூர்த்தியின் ஆராய்ச்சிகள் ஆகர்ஷித்திருந்தன என்று முன்பே சொன்னீர்கள். அவரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்? அவரைப் பற்றியும், அவருடன் பழகிய தருணங்களைப் பற்றியும் சொல்லுங்களேன்.

லோயர்/ஹையர் பரிட்சைகளில் மேற்பார்வையாளராக வந்திருக்கிறார். அவர் பாடச் சொன்னதைப் பாடியதைக் கேட்டுப் பாராட்டியிருக்கிறார். எனக்கு அப்போதிலிருந்து அவரைத் தெரியும். அவருக்கு என்னை அப்போதிலிருந்து தெரியும் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. (சிரிக்கிறார்). பல்கலைக்கழகப் பட்டயப் படிப்பில் சேர்ந்த போது அங்கு அவர் இசைத் துறையின் தலைவராக இருந்தார். எனக்கு இயற்கையிலேயே இசைக் கோட்பாடுகளிலும் (theoretical aspects) ஆர்வம் இருந்ததனால் அவர் ஆளுமையின் மேல் பிரமை இருந்தது என்று நினைக்கிறேன்.

அவர் உண்மையான தியாகராஜ பக்தர். சொல்லும்போது கூட தியாகராஜர் என்று சொல்லக் கூடாது தியாகராஜஸ்வாமி என்றுதான் சொல்லவேண்டும் என்று வலியுறுத்துவார். பேனாவைச் சோதிக்க எழுதிப் பார்த்தால்கூட ‘தியாகராஜஸ்வாமி சகாயம்’ என்றுதான் எழுதிப் பார்ப்பார். வரட்டுக் கோட்பாடுகளாய், படித்தால் அலுப்புத்தட்டக்கூடிய பாடங்களைக்கூட சுவாரஸ்யமாய், எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக நடத்துவார்.

பழைய சம்பிரதாயங்களில் அவருக்கு நிறைய நம்பிக்கையுண்டு. வராளி மாதிரி ராகங்கள் சொல்லிக் கொடுக்கும்போது முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு சொல்லிக்கொடுப்பார். இடையில் ஏதும் சந்தேகம் வந்தாலும் கேட்கவேண்டாம் என்று சொல்லிவிடுவார்.

ராக லட்சணங்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பாரா? அவர் பாட்டு எப்படியிருக்கும்?

அவர் கச்சேரி பாடகர்கள் போலப் பாடினார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் பாடுவதை வைத்துப் புரிந்துகொள்ள முடியும். மரியாதகாதுரா (சங்கராபரணம்) போன்ற கீர்த்தனைகளை அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். Bamboo violin என்று ஒருவகை வயலின் வைத்திருப்பார். அதிலும் வாசித்துக் காண்பிப்பார்.

வேடிக்கையாகவும் பேசுவார். சினிமாவில் சாவித்ரி புகழுடன் இருந்த காலமது. அப்போது சாவித்ரி ராகத்தைப் பற்றிச் சொல்லி, “இதில் பாடல் புனைந்தால் சீக்கிரம் புகழடையும்” என்று அவர் விளையாட்டாய்ச் சொன்னதை வைத்து நான் நிஜமாகவே ஒரு பாடல் புனைந்தேன். (சிரிக்கிறார்).

சந்தேகங்களெல்லாம் கேட்டுத் தெளிய அனுமதிப்பாரா?

நான் நிறையச் சந்தேகங்கள் கேட்பேன். அவர் நடத்தும்போது கேட்டால் அவருடைய போக்குக்குத் தடையாக இருக்குமென்று, ‘வகுப்புக்கு வெளியில் சந்தேகங்களைக் கேட்கலாமே’ என்பார். அவருடைய இளையவர்களாக இருந்தாலும் ரொம்ப மரியாதையாகப் பேசுவார். ஒருமையில் அழைக்கவேமாட்டார். மறந்துவிடப் போகிறதே என்று கையில் சந்தேகங்களை எழுதி வைத்துக் கொண்டு அவரிடம் சென்று கேட்பேன்.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய ஜன்னலுக்கு வெளியில் காகங்கள் பெரிய கூட்டமாய் இருக்கும். அந்தச் சமயத்தில் போகமாட்டேன். இசையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற என் ஆசியை தெரிவித்த போது, ’முனைவர் பட்டமெல்லாம் செய்ய முதுகலை பட்டமெல்லாம் தேவைப்படும். நீ சொந்தமாகவே செய்யலாமே’, என்று உற்சாகப்படுத்தியிருக்கிறார். அவருடைய நூலக டிக்கட்டுகளை எனக்கு அளித்திருக்கிறார்.

கல்லூரி நாட்களிலேயே தாள சம்பந்தமான விஷயங்களில் ஈடுபாடு வந்துவிட்டதா?

கல்லூரியில் காளிதாஸ் நீலகண்ட ஐயர் எங்களுக்குப் பாட்டு (practical) சொல்லிக் கொடுத்தார். அப்போது பல இடங்களில் போட்டிகள் நடக்கும். அவற்றில் நான் கலந்து கொள்ளலாமா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு, “இப்போதெல்லாம் போட்டிகளில் நடை பல்லவிகள் எல்லாம் பாடுகிறார்களம்மா,” என்று அவர் சொன்னதும் எனக்கு முகம் வாடிவிட்டது. அதையுணர்ந்து, “நீ வேண்டுமானால் பார். இன்னும் இரண்டு வருடங்களில் நீ எப்படிப் பாடப்போகிறாயென்று!” என்று சமாதானப்படுத்தினார். அப்போதுதான் திண்ணியம் வெங்கடராம ஐயரைப் பற்றிச் சொன்னார். அவர் இரண்டு கைகளில் வெவ்வேறு தாளங்களைப் போட்டுக் கொண்டு பாடுவதில் வல்லவர் என்று சொன்னார்.  அத்ற்கேற்றார்போல் நான் வெங்கடராம ஐயரைச் சந்திக்கும் வாய்ப்பும் உடனே அமைந்தது.

என்னுடைய அக்கா திருவல்லிக்கேணியில் இருந்து வந்தார். விடுமுறை நாட்களில் பார்த்தசாரதி கோயில், கடற்கரை என்று சுற்றிவிட்டு அக்கா வீட்டுக்கும் வருவோம். அப்படியொருமுறை வந்திருந்த போது அவர்கள் குடும்ப நண்பர் என்கிற முறையில் திண்ணியம் வெங்கடராம ஐயரும் அங்கு வந்திருந்தார். என்னைப் பாடச் சொல்லிக் கேட்கவேண்டுமென்று என் குடும்பத்தினர் கேட்டதற்கு, முதலில் “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. நான் கிளம்புகிறேன்,” என்றார். வேண்டிக் கேட்டதும் கேட்க சம்மதித்தார். ஷண்முகப்ரியாவில் ஒரு பாட்டு பாடி கொஞ்சம் ஸ்வரம்கூடப் பாடினேன்.

“இது உருட்டாணி மாணிக்கம். கொஞ்சம் பட்டை தீட்டினால் போதும். நாளைக்கு என் வீட்டுக்கு வா,” என்று அவர் சொல்லுவார் என்று நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அடுத்த நாளே அவர் வீட்டுக்குச் சென்றேன். சின்னச் சின்னப் பாடல்களாய் சொல்லிக் கொடுத்தாரே தவிர சிக்கலான லய சமாசாரங்களுக்குள் எல்லாம் அவர் அதிகம் முதலில் செல்லவில்லை.

ஒருநாள் பேச்சுவாக்கில், “திருவையாறு சுப்ரமண்ய ஐயர் என்று ஒருவர் இருந்தார். விரிபோணி வர்ணத்தை இரண்டு கைகளில் இரண்டு தாளங்கள் போட்டுப் பாடுகிறார்களோ அவர்களுக்கு நூறு ரூபாய் தருகிறேன் என்றார். நாங்கள் எல்லாம் ஆத்தங்கரைக்குச் சென்று சாதகம் செய்து அவரிடம் பாடிக் காண்பித்தோம்,” என்று சொல்லும்போதே நான் லேசாக வர்ணத்தை முனகியபடி இரண்டு கைகளிலும் தாளம் போட முயன்றேன்.

அதைப் பார்த்துவிட்டு, “அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லையம்மா. நீ சிரமப்படாதே!” என்று என்னைத் தடுத்தார். எனக்குப் பொதுவிலேயே இப்படி யாராவது சிரமம் என்று ஒன்றைச் சொன்னால் அதைச் செய்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம். அவர் சுலபமில்லை என்று சொன்னதும் எனக்கு இந்த விஷயத்தைச் செய்தே ஆக வெண்டுமென்று தோன்றியது. தொடர்ந்து சாதகம் செய்தேன். ஒருநாள் கைகூடிவிட்டது.

வெங்கடராம ஐயரிடம் சென்று சொன்ன போது முதலில் அவர் நம்பவில்லை. ‘பாடிக் காட்டு பார்ப்போம்,’ என்று சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார். பாடிக் காண்பித்தவுடன் பெரிதும் மகிழ்ந்தார்.  அட தாளத்தை வழக்கம் போல மோதிர விரல் எடுப்பாகவும், ஆதி தாளத்தை சமத்திலும் அமைத்துப் பாடினேன். அதை மட்டும் மாற்றி இரண்டுமே மோதிர விரல் எடுப்பாக வைத்துக்கொள்ளச் சொன்னார். தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் (இப்போது இயல் இசை நாடக மன்றம்) தலைவராக ஈ.கிருஷ்ணைய்யர் இருந்தார். அவரிடம் அழைத்துச் சென்று பாடச் சொன்னார். அவர் நான் பாடியதைக் கேட்டு, இது போல அவதானமாக வைத்துக் கொண்டு முழுக் கச்சேரி செய்யச் சொன்னார். சாஸ்திரி ஹாலில் 1961-ல் அந்த நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பாலசந்தர் போன்ற பெரிய கலைஞர்கள் எல்லாம் வந்திருந்தார்கள்.

வர்ணம் மட்டும் அவதானமாகப் பாடுவது ஒரு வகையில் சுலபம்தான். ஒரு கச்சேரியே செய்ய வேண்டும் என்பது நிறையச் சிந்தனையையும் உழைப்பையும் கோரும் விஷயம். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு தாளத்தில் இருக்கும். அந்தத் தாளத்துக்கு ஈடாக அதே எண்ணிக்கையில் இன்னொரு தாளத்தில் இருக்க வேண்டும். உதாரணமாக சதுஸ்ர மட்யம், மிஸ்ர ஜம்பை – இரண்டிற்குமான அளவு பத்து அட்சரங்கள்தான் என்றாலும் ஒன்றில் தட்டும் போது இன்னொறில் கையைத் திருப்ப நேரிடும். பார்த்துக் கவனமாகப் போடாவிட்டால் இடரிவிட்டுவிடும். தாள வித்தியாசங்கள் மட்டுமின்றி, இரண்டு கைகளில் வெவ்வேறு கதிகளில் தாளம் போட்டும் சில உருப்படிகள் தயார் செய்தேன். ஸ்வரம் பாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு கையில் ரூபக தாளமும் இன்னொரு கையில் ஆதி தாளத்தில் திஸ்ர நடையும் போட்டுக் கொண்டு பாடும் போது — நான்கு  முறை ரூபக தாளம் போட்டால்தான் ஒருமுறை ஆதி தாளம் நிறைவு பெரும். அதை கவனிக்காமல் மூன்று ஆவர்த்தமோ ஐந்து ஆவர்த்தமோ ரூபக தாளத்தில் பாடி எடுப்பை எடுத்துவிட்டால் இன்னொரு கையில் இடம் தவறிவிடும். இது போன்ற வின்யாசங்களை சந்த தாளங்களில் அமைந்திருக்கும் திருப்புகழில் செய்ய நிறைய இடமிருக்கிறது. இந்த உருப்படிகள் தவிர ஒரு பல்லவியும் பாடினேன். ஓரளவுக்கு நன்றாகத்தான் பாடினேன் என்று நினைக்கிறேன். டிப்ளமா எல்லாம் முடித்திருந்தேனே! (சிரிக்கிறார்).

இப்படி அவதானமாய் பாடுவதற்கு ஏதேனும் பிரத்யேகமான பயிற்சிகள் செய்ய வேண்டுமா?

நிச்சயம் செய்ய வேண்டும். சங்கீதத்தில் எந்த விஷயம் உழைப்பில்லாமல் கைகூடும்? ராகம் பாடவோ, நிரவல் பாடவோ எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது? அதைப் போலத்தான் இதுவும்.

இருந்தாலும் இரண்டு கைகளில் இரண்டு தாளங்கள் என்னும் போது கவனம் சிதறாதா?

கவனம் சிதறாத அளவுக்கு உள்வாங்கியிருந்தால் சிதறாது. (சிரிக்கிறார்). வீட்டில் சமைக்கும் போது குழந்தை வந்து கூப்பிடுகிறது என்பதற்காக உப்பை அதிகமாகப் போட்டுவிடுகிறோமா? முதலில்தான் இரண்டு கைகளிலும் வேறு வேறு என்று தோன்றும். பாடப்பாட இந்தக் கை ஒன்றை செய்யும் போது அந்தக் கை எதைச் செய்ய வேண்டும் என்கிற ஒருங்கிணைப்பு வந்துவிடும். உதாரணமாக முன்னால் சொன்ன ரூபக தாள உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். இன்னொரு கையில் ஆதி தாள திஸ்ர நடையாகப் போடும் போது, ரூபக தாளத்துக்கு இடையில் ஒரு தட்டு இன்னொரு கையில் வருகிறது என்பது புரிந்தபின் அதுவும் மொத்த அவதானத்தின் அங்கமாகிவிடும். இரண்டு வெவ்வேறு செயல்கள் என்றில்லாமல் ஒரே ஒருங்கிணைந்த செயலாகிவிடும். கொஞ்சம் பெரிய தாளங்களை எடுத்துக் கொண்டால் அதற்கான உழைப்பை அது நிச்சயம் கோரத்தான் செய்யும்.

முயற்சி செய்தால் யார் வேண்டுமானாலும் இரண்டு கைகளில் இரண்டு தாளங்களைப் போட்டுவிட முடியும் கூடவே நன்றாகப் பாட வேண்டுமிலையா? அதுதான் கஷ்டம். (சிரிக்கிறார்).

சாதாரண கச்சேரியைக் கேட்பவர்களுக்கு இது போன்ற அவதான கச்சேரியைக் கேட்கும் போது ஏதேனும் இடைஞ்சலாக இருக்குமென்று நினைக்கிறீர்களா?

இரண்டு கச்சேரிகளையும் அதே காதுகள்தானே கேட்கின்றன? (சிரிக்கிறார்). ஒருமுறை நான் பாடிய வீடியோவைப் பார்த்தேன். பார்ப்பதற்கு வேடிக்கையாகத்தான் இருந்தது. இப்படிச் செய்யும்போது கேட்பதைவிட பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் போலும் என்று நினைத்துக் கொண்டேன். வெங்கடராம ஐயர் சொன்னதற்காக செய்தேனே தவிர இதனால் பெரிய பலனிருக்கும் என்றெல்லாம் அப்போது நினைக்கவில்லை. ஆனால் இந்த அப்யாசத்தினால் நல்ல லய நிர்ணயம் உருவாகும் என்பதைப் பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

நல்ல பக்கவாத்தியங்கள் நெருடலாக தனி ஆவர்த்தனம் வாசிக்கும்போது தாளம் போடுவதேகூட அவ்வளவு சுலபமான காரியமல்ல. இந்த மாதிரி அப்யாசங்கள் அத்தகு தருணங்களை சுலபமாக்கும் என்று உணர்கிறேன். வாஸ்தவத்தில் எனக்கு தாளத்தை வெளிப்படையாகப் போட்டுத்தான் பாட வேண்டுமென்ற அவசியமே கிடையாது. தாளம் என்ன கைகளிலா இருக்கிறது? மனத்திலல்லவா இருக்க வேண்டும்? ஒரு கல்யாணி பாடும் போது எந்த நிஷாதம் என்று யோசித்தா பாடுகிறோம்? அதே அளவுக்கு லயமும் மனத்தில் ஊறியிருக்க வேண்டும். அதற்கு இது போன்ற பயிற்சிகள் எல்லாம் உதவும் என்று நினைக்கிறேன். இப்படி எல்லோரும் அவதானம் பாட உழைத்துத்தான் ஆக வேண்டுமா என்று கேட்டால், அப்படி அவசியமில்லை என்றுதான் சொல்லுவேன். எனக்கு என்னமோ செய்ய வேண்டும் என்று தோன்றியது. அப்படிச் செய்தது வீணாகவில்லை. உதவியாகத்தான் இருந்தது என்பதற்காகச் சொல்கிறேன்.

இதற்குப் பிறகுதான் முசிறி சுப்ரமண்ய ஐயரிடம் சென்றீர்கள் அல்லவா?

ஆமாம். என் சொந்த ஆர்வத்தில் அவரிடம் சென்றேன். கொஞ்ச நாளிலேயே மத்திய சர்க்காரின் உதவித்தொகையும் அவரிடம் கற்கக் கிடைத்தது. தொடர்ந்து சென்று வந்தேன்.

அவருக்கு இந்த லய நுணுக்கங்களில் எல்லாம் ஈடுபாடு இருந்ததா?

அவர் பாணிக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. என்னை மாணவியாக எடுத்துக் கொள்வதற்கு முன்னால் “ஏதோ ரெண்டு கையில எல்லாம் தாளம் போட்டுண்டு பாடுவியாமே — ஏதாவது பாடேன்’, என்றார். நான் ஒரு திருப்புகழைப் பாடினேன். ‘ஹும்’ என்றதோடு சரி. அதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை.

இதெல்லாம் அநாவசியம் என்பதுதான் அவரெண்ணம். ஒருவகையில் நான் அதை ஒப்புக் கொள்கிறேன். நல்ல சங்கராபரணம் பாட இந்த அவதானம் எல்லாம் தேவையில்லைதானே. வெறும் சர்வலகுவாகப் பாடியே மனத்தைத் தொட்ட எவ்வளவோ பேர் இருந்திருக்கிறார்கள்தானே. அவருடைய சங்கீதம் பாவ (bhava) சங்கீதம். என்னைக் கேட்டால் அவர் கச்சேரியில் பாடியதையோ, ஒலிப்பதிவுகளுக்காகப் பாடியதையோ அவர் சங்கீதத்தின் சரியான மாதிரிகளாகச் சொல்லமாட்டேன். அவர் வீட்டில் அமர்ந்து பாடுவதைக் கேட்க வேண்டும். ’ஸ்ரீ வேணுகோபால’ குறிஞ்சியின் சரணத்தில் ‘கோகுலாபம்புதி சோமா’ என்று நிஷாதத்தில் நின்று கார்வைக் கொடுப்பதைக் கேட்டால் மெய்சிலிர்க்கும்.

என்னுடைய ஆர்வத்தினால், அதுவும் ஒருவர் செய்யமுடியாது என்பதை செய்து காட்டவேண்டும் என்கிற என் இயற்கை குணத்தினால் நான் இந்த தாள விஷயங்களில் ஈடுபட்டேனே தவிர என்னுடைய உண்மையான அதிர்ஷ்டம் நான் முசிறி ஐயர்வாளிடம் கற்றுக் கொண்டதுதான். அவர் பாடும் போது இந்தக் கோர்வை சமாசாரம் எல்லாம் மருந்துக்குக் கூட இருக்காது. தன்னையறியாமல் மூன்று நான்கு திஸ்ரங்கள் வந்து விழுந்தால் உண்டு.  அவரிடம் ‘ஓ ஜகதம்பா’, ’ஓ ரங்கசாயி’, ‘மீனாக்ஷி மேமுதம்’ போன்ற பாடல்களைக் கற்றுக் கொள்ள முடிந்ததுதான் என் பேறு.

அவர் நுணுக்கி நுணுக்கிச் சொல்லிக் கொடுத்தார் என்பதைவிட, அவர் பாடுவதைக் கேட்டதிலிருந்து கற்றுக் கொண்டது அதிகம். ராகத்தின் பாவபூர்வமான விஷயங்களை எல்லாம் விளக்கிச் சொல்லவும் முடியாது. அவர் பாடுவதிலிருந்து கேட்டுத்தான் தெரிந்து கொள்ளமுடியும். நேரே சென்று கற்றுக் கொள்வதில் உள்ள பெரிய சாதகமான அம்சமும் அதுதானில்லையா?

அவர் வகுப்புகள் எப்படி இருக்கும்? ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்குவாரா?

 வகுப்பு எல்லோருடனும் சேர்ந்துதான் இருக்கும். என்னுடன் சேர்ந்து மணி கிருஷ்ணசாமி, பத்மா நாரயணசாமி , ருக்மிணி ரமணி போன்று பலர் கற்றுக் கொண்டனர். நான் சேர்ந்த சில வருடங்களில் சுகுணா வரதாச்சாரியும் எங்களுடன் இணைந்துகொண்டார். சந்தேகமெல்லாம் இருந்தால்கூட அதிகம் வாய்விட்டுக் கேட்கமாட்டோம். அத்தியயனம் மாதிரி அவர் பாடுவதைக் கேட்டுப் பாடுவோம். எழுதி கூட வைத்துக் கொள்ளமாட்டோம். காலப்போக்கில் பாடப் பாட தெளிவுகிடைத்துவிடும். எல்லோருக்குமான வகுப்பு என்றாலும் கூட ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பாடிக் காண்பித்துப் புரிய வைப்பது போலத்தான் அமைந்தது. அவர் ஒருமுறை நிரவலோ ஸ்வரமோ பாடிவிட்டு நாங்கள் எல்லோரும் பாடும் வரை காத்துக் கொண்டிருக்கமாட்டார். ஒவ்வொருவர் பாடுவதற்கு முன்னாலும் அவர் பாடிக் காண்பிப்பார். வயதான பின்னும் கூட மிகவும் சிரமப்பட்டுச் சொல்லிகொடுத்தார்.

முசிறி சுப்ரமண்ய ஐயரிடம் சென்று கற்பதென்பது எப்படி நேர்ந்தது?

திண்ணியம் வெங்கடராம ஐயர்தான் சொன்னார். இன்னும் விருத்தி செய்து கொள்ள முசிறியிடமோ, பட்டம்மாளிடமோ சென்று கற்றுக் கொள் என்றார். என் அதிர்ஷ்டம் முசிறி ஐயர்வாளிடம் கற்றுக் கொள்ளும் சூழல் நேர்ந்தது.

எத்தனை ஆண்டுகள் அவரிடம் கற்றுக்கொண்டீர்கள்?

ஏழெட்டு வருடங்கள் இருக்கும். 1970-ல் எனக்குத் திருமணம் நடக்கும் வரையில் தினமும் சென்று வந்தேன். முடியாமல் இருந்த போது கூட படுத்தபடியே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவர் சின்னச் சின்னதாய்தான் ஸ்வரம்பாடுவார். ஆனால் என்னை நீளமாக, நெருடலாகப் பாடச் சொல்லிக் கேட்டு ரசிப்பார். கோகிலவராளி, குந்தலவராளி போன்ற வக்ர ராகங்களில் ஸ்வரம் பாடுவதில் எனக்கு விருப்பமதிகம். அவற்றைக் கேட்டுப் பாராட்டி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

சங்கீத உலகில் நிரவல் என்பது முசிறி பாணியின் சொத்து என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

முசிறி ஐயர்வாளிடம் போவதற்கு முன்னாலேயே சின்னச் சின்னக் கச்சேரிகள் எல்லாம் பாடிக் கொண்டுதான் இருந்தேன். அதில் நிரவல் என்று எனக்குத் தோன்றியதைப் பாடுவேன். அவரிடம் சென்றதும்தான் நிரவலின் விசேஷத்தைத் தெரிந்துகொண்டேன்.

நிரவல் செய்வதற்கு முதலில் பாடுகின்ற பாடலின் அர்த்தத்தை முழுமையாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்லுவார். ஒரு கீர்த்தனையில் பல இடங்களை எடுத்துக் கொண்டு நிரவல் செய்ய முடியும். இருந்தாலும் அந்தப் பாடலின் கரு (nucleas) எந்த வரியில் துல்லியமாக வெளிப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டு அந்த வரியில் பாட வேண்டும்.

உதாரணமாக ‘எந்த நின்னே’ பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். மேலோட்டமாக அது சபரியைப் பற்றிய பாடல் என்று சொல்லலாம். அல்லது துல்லியமாகச் சொன்னால் சபரியின் பாக்யத்தைப் பற்றிய பாடல் என்றும் சொல்லலாம்.

எது சபரியின் பாக்யம்? ராமனைக் கண்ணாரக் கண்டதும், அவனுக்கு பழங்களைக் கொடுத்ததும்தானே அவளுடைய பாக்யம்? அந்த வரிகள்தான் அந்தப்பாடலின் உயிர்நாடி. அதிலும் ‘கம்மனி’ என்று பழங்களைச் சொல்லும் வார்த்தை ரொம்ப விசேஷம் என்று சிலாகிப்பார். எத்தனையோ நாளாகியும் ராமன் வந்துவிடுவான் என்கிற சபரியின் நம்பிக்கை, அவள் எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை சிந்திக்கும் போது அந்த பாவத்தை நிரவலிலும் கொண்டு வர முடியும். அப்படிக் கொண்டு வருவதற்கு ஏற்றார்போல சங்கதிகளில் தேர்வும் இருக்க வேண்டும். மலை உச்சி என்று குறிக்கும் இடத்தை கீழ் ஸ்தாயியில் நிரவினால் பொருத்தமாக இருக்காது. நாம் பேசும் போது, ‘நன்றாக இருக்கிறீர்களா’ என்று கேட்கும்போது குரலில் ஒரு குழைவு வருகிறதில்லையா? அதட்டலான குரலில் ‘நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்பதில்லையே. அதே மாதிரிதான் பாட்டிலும். நிரவலை வெறும் ராகம், ஸ்வரம், பிருகா, சங்கதி என்று நுட்பங்களின்  (technique) கலவையாகப்  பார்க்காமல் இயற்கையான போக்கில் தன்னிச்சையாய் வெளிப்படுத்தவேண்டும். சாஹித்யத்தின் அர்த்தம் போலவே ராகத்திலும் நல்ல அனுபவம் வேண்டும். நிறையப் பாடம் பண்ணி இருந்தால்தான் ராகத்தில் உள்ள பரிமாணங்கள் தெரிய வரும். பல்வேறு பரிமாணங்கள் தெரிந்தால்தான் எது பொருத்தம், எது பொருத்தமில்லை என்று தெரிய வரும்.

நிரவலை நிர்வாகம் செய்வது என்று சொல்லுவோம். மேற்சொன்ன விஷயங்களோடு சாஹித்யம் தாளத்தின் அதனிடத்திலிருந்து மாறாமல் முடிந்தவரைப் பாட வேண்டும். அப்படி மாறாமலே வெவ்வேறு காலப்ரமாணங்களை (சவுக்க, மத்யம, துரித) கலப்பில்லாமல் காட்ட வேண்டும். சொல்லும் போது புரியுமா தெரியவில்லை. பாடிப்பார்த்தால்தான் இதிலுள்ள கஷ்டம் தெரியும். பாடத் தெரிந்ததைப் போலவே, பாடும் போது மாட்டிக் கொண்டுவிட்டால் எப்படித் தப்பித்து வெளியில் வரவேண்டும் என்றும் தெரிந்திருக்க வேண்டும். (சிரிக்கிறார்)

எங்க சார் ‘எந்து தாகினாடோ’ கீர்த்தனையில் அற்புதமாய் நிரவல் பாடுவார். தியாகராஜஸ்வாமி வருத்தப்பட்டு ராமனைப் பார்த்து ‘நீ எங்கே போய்விட்டாயோ’ என்று கேட்கும் பாடல். அதில் ஒரு சரணத்தில் நரஸிம்ம அவதாரத்தைப் பற்றி வரும். ’அலநாடு கனக கசிபு’ என்ற இடத்தில் மிகவும் அழகாகப் பாடுவார். (மூன்று காலங்களிலும் பாடிக் காட்டுகிறார். மத்யம கால நிரவல் பாடிவிட்டு ‘கேட்க சுலபமான ஒன்றாகத் தோன்றும். பாடிப் பார்த்தால் இன்னும் நிறைய சாதகம் செய்ய வேண்டும் என்று தோன்றும்’, என்கிறார்).  ’கம்பமு லோபலனுண்டக லேதா’ என்கிற வரியிலும் பாடுவதுண்டு. அர்த்தம் தெரிந்தால்தான் வரிகளின் பாவத்துக்கு ஏற்றார்போல பாட முடியும்.

எனக்குத் தெரிந்த ஆசிரியை சொன்னது நினைவுக்கு வருகிறது. (மாருபல்க பாடலில்) ‘Silly’ ‘naughty’ என்றெல்லாம் வருகிறதே என்று ’ஸந்தஸில்லினட்டி’ என்ற இடத்தை அவளுடைய மாணவி குறிப்பிட்டுக் கேட்டாளாம். (சிரிக்கிறார்). நான் தெலுங்கு முறையாக கற்கவில்லை. எழுதப்படிக்க தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தாலும், அதற்கு பெரியதாய் வணங்கவில்லை.  இருந்தாலும், தியாகராஜர் கீர்த்தனைகளை கற்கும் போது வார்த்தைக்கு வார்த்தை எழுதி அர்த்தம் தெரிந்து கொண்டதால் பாடும்போது பொருளுணர்ந்து பாட முடிந்தது.

பொதுவாக கணக்குவழக்குகளில் ஈடுபட்டு லய விவகாரங்களுடன் பாடுபவர்களை லட்சண வித்வானென்றும், ராக பாவம் ததும்பப் பாடுபவரை லட்சிய வித்வானென்றும் குறிப்பிடுவது வழக்கம்…

(சொல்வதை இடைமறித்து) பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பவர்களைக் கூட லட்சண வித்வானென்று சொல்லலாமே! (சிரிக்கிறார்)

லட்சண வித்வான்களாக அறியப் படுபவர்களால் லட்சியமாகப் பாட முடியாது என்று ஒரு எண்ணமிருக்கிறதே.

அப்படி ஒன்றில் ஈடுபட்டால் இன்னொன்று வராது என்று அவசியமில்லை. ஒருவேளை குரல் கைகொடுக்காத வித்வான்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக நிறைய லட்சணமாகப் பாடியதால் இப்படி ஒரு தோற்றம் மக்கள் மனத்தில் எழுந்திருக்கலாமோ என்னமோ.

உங்கள் பாட்டை எடுத்துக் கொள்வோம், ஒருபக்கம் திண்ணியம் வெங்கடராம ஐயரிடம் சென்று பயின்று லட்சண வழியிலும் தேர்ச்சியையைக் காட்டும் போதும் இன்னொரு பக்கம் முசிறி பாணியில் பாவபூர்வமாகவும் பாடுகிறீர்கள். நான் நேரிலும் உங்களைக் கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு லய ஞானம் சுத்தமாக இல்லாவிடினும்கூட உங்கள் தோடியையும், சங்கராபரணத்தையும் மட்டும் ரசித்தபடி உங்கள் கச்சேரியைக் கேட்கமுடியும் என்று தோன்றியதுண்டு.

அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எவ்வளவு நுட்பமான கணக்குகளை வைத்துப்பாடினாலும் அழகுணர்ச்சி (niceties and aesthetics) கெடாமல் பாட வேண்டும். பாடலின் அர்த்தபாவத்தையும், காதுக்கு இனிமையாய் இருப்பதையும் தியாகம் செய்துவிட்டுத்தான் ஒரு கடினமான (லய) விஷயத்தைச் செய்ய முடியுமென்றால் அதைச் செய்யாமலே இருக்கலாம்.

இதைத்தான் நான் முசிறி ஐயர்வாளிடம் சென்றதை என் அதிர்ஷ்டம் என்று முன்னரே சொன்னேன். நான் முதலிலேயே இந்த லய சாதகமெல்லாம் செய்துவிட்டேன். அதை வெளியில் எடுத்துப் போட முடியாதே (சிரிக்கிறார்). ஆனால் அந்தப் பயிற்சி அழகுணர்ச்சியைக் கெடுக்காமல் இருக்குமாறு பாடுவதைத்தான் முசிறி அவர்களிடம் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். பின்னாளில் செம்மங்குடி மாமாவிடமும் நான்கு ஆண்டுகள் கற்றுக் கொண்டேன். அவருடைய பாணியும் சர்வலகுவாய் பாடுவதுதான். இதனால் சௌலப்யமான சங்கீதம் எனக்குப் பரிச்சயமானது. இவர்களுடைய தாக்கம் என்னை ஒன்றுக்காக இன்னொன்றைத் தியாகம் செய்யாமல் இருக்க வைத்தது என்று நினைக்கிறேன்.

நம்முடைய சங்கீதத்தில் ராகம் தானம் பல்லவி என்று வரும்போது, நீங்கள் சொன்ன அத்தனைக்கும் அதில் இடமிருக்கிறது அல்லவா?

மனோதர்ம சங்கீதத்தின் அத்தனை பரிமாணங்களுக்கும் அதில் இடமிருக்கிறது. சங்கீதத்தின் அத்தனை அம்சங்களையும் கைவரப் பெற்றால்தான் பல்லவியைத் தொட முடியும்.

அங்கு பல்லவி என்று வரும்போது லய நுணுக்கங்களுக்குள் போகாமல் பாடும் வித்வான்களும் இருக்கிறார்கள். நுட்பமான பல்லவிகளைப் பாடுபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அழகழகாய்ப் பாட எவ்வளவோ வாய்ப்புகள் கச்சேரிகளில் இருக்கிறதே! உத்சவ சம்பிரதாயக் கீர்த்தனையைப் பாடும் போது அதில் திஸ்ரமும் கண்டமும் காட்டிப் பாடப் போவதில்லையே. ஒரு ஸ்லோகமோ விருத்தமோ பாடும் போது ராக பாவத்தை மையமாக வைத்துதான் பாடப் போகிறோம். பல்லவியை ‘பதம் லயம் வின்யாசம்’ என்று பிரித்துப் பொருள் சொல்லுவார்கள். அதை எல்லோரும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்கூட, இந்த லய வேலைப்பாடுகளுக்கு வாய்ப்பிருக்கும்போது அதைச் செய்தால்தான் எனக்குத் திருப்தி. கீர்த்தனை நிரவலைச் சொல்லும் போதே அதிலுள்ள கட்டுப்பாடுகளைச் சொன்னேன். அதைவிட இன்னும் கட்டுப்பாடும் நிர்ணயமும் பல்லவிக்கு வேண்டும். கொஞ்சம் இடரினாலும் மொத்தமும் உதிர்ந்துவிடும்.

நுணுக்கமாய் பல்லவி பாடுபவர்களை எடுத்துக் கொண்டால் கூட, பெரும்பாலும் சூலாதிசப்த தாளங்கள் என்று குறிக்கப்படும் 35 தாளங்களுக்குள் பாடுபவர்கள்தான் அதிகம். இந்த முப்பத்தைந்தில் அடங்காததை அபூர்வமாகத்தான் கையாளுகிறார்கள். அதையொட்டியே இன்னொரு கேள்வியும் வருகிறது. இந்த முப்பத்தைந்தில் அடங்காத தாளங்களின் இடமென்ன? உதாரணமாக சிம்மனந்தன தாளத்தில் நீங்கள் பாடியிருக்கிறீர்கள். அதில் 128 அட்சரங்கள் இருக்கின்றன. ஆதி தாளத்துக்கு 8 அட்சரங்கள் இருக்கின்றன. 16 முறை ஆதி தாளம் போட்டாலும் 128 அட்சரங்கள்தான். அதனால் சிம்மனந்தனத்தை ஆதி தாளத்தின் நீட்சியாகப் (extension) பார்க்கலாமா?

அப்படிப் பார்க்க முடியாது. தாளம் என்பது எண்ணிக்கை மட்டுமில்லையே முன்னரே சொன்னது போல ஆதி தாளமும் திஸ்ர மட்ய தாளமும் எட்டு அட்சரங்கள் கொண்ட தாளங்கள்தான். ஆனால் அங்கங்களில் வேறுபடுகின்றன அல்லவா? ஒரே எண்ணிக்கைத் தாளங்களையே ஒன்றாகக் கருத முடியாத போது, குரு, புளுதம், காகபாதம் போன்ற அங்கங்கள் எல்லாம் கொண்ட தாளத்தை எப்படி ஆதி தாளத்தின் நீட்சியாகப் பார்க்க முடியும்?  அவை வெறும் நீட்சி என்றால் பெரியவர்கள் தனியாக வைத்திருக்கமாட்டார்கள் இல்லையா?

பழைய வரலாறைப் பார்க்கும் போது இந்த 108 தாளங்களில் பல்லவி என்பதெல்லாம் சபைகளில் வித்துவான்கள் ஒருவரை ஒருவர் போட்டியில் ஜெயிக்கப் உபயோகித்ததாகத்  தெரிகிறது. இந்தப் போட்டிக்காக மட்டும் உருவானவை இவை என்று நினைக்கிறீர்களா?

அந்தக் காலத்தில் போட்டியெல்லாம் வெளிப்படையாக செய்தார்கள். இப்போது நாசூக்காகிவிட்டோம். நேரிடையாகக் காட்டிக் கொள்வதில்லை. (சிரிக்கிறார்)

சியாமா சாஸ்திரி கூட பொப்பிலி கேசவைய்யாவுக்கு எதிராகப் பல்லவி பாடி போட்டியில் வென்றார். கேசவய்யா பாடிய சிம்மனந்தன பல்லவியைப் பாடிவிட்டு, சியாமா சாஸ்திரி ‘சரப நந்தனம்’ என்கிற 79 அட்சர தாளத்தில் பல்லவி பாடி போட்டியில் ஜெயித்தார் என்று படித்திருக்கிறோம். அவர் எப்படி 79 அட்சரத்தில் பாடினார் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அது எனக்கு ஒரு உந்துதலாக இருந்திருக்கிறது. அந்தத் தூண்டுதலில் நானும் சரப நந்தனத்தில் பல்லவி செய்துள்ளேன்.

சூலாதிசப்த தாளங்களில் பெரும்பாலும் லகு முடியுமிடத்தில் பூர்வாங்கம் (முன்பகுதி) முடிந்து அங்கு அருதிக் கார்வை வருகிறது. அதனைத் தொடர்ந்து உத்ராங்கம் (பின் பகுதி) வருகிறது. இந்த 108 தாளங்களில் எந்த அங்கத்தில் பூர்வாங்கம் முடிந்து அருதிக் கார்வை தொடங்குவது என்பதற்கு ஏதேனும் வரைமுறை இருக்கிறதா?

சூலாதி சப்த தாளங்களிலேயே நீங்கள் சொல்வது திரிபுடை, ஜம்பை போன்ற தாளங்களுக்குப் பொருந்தினாலும் அட தாளம், துருவ தாளம் போன்றவற்றில் இந்தச் சிக்கல் உண்டு. நானே சிம்மேந்திர மத்யமத்தில் கண்ட அட தாளத்தில் இரண்டு அருதி வரும்படியாய் பல்லவி பாடியிருக்கிறேன். இந்த 108 தாளங்களில் எனக்கு முன்னால் பாடியவர்களைக் கேட்டுக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. பெரும்பாலும் பூர்வாங்கமும் உத்தராங்கமும் கிட்டத்தட்ட ஒரே அளவு வரும்படியாய் அருதியை அமைத்துக் கொள்வேன். முன் சொன்ன சரப நந்தனத்திலேயே அருதிக் கார்வையை ஏழு என்று வைத்துக் கொண்டால் பூர்வாங்கமும் உத்ராங்கமும் 36 அட்சரங்கள் வீதமாய் சமமாய்ப் பிரித்துக் கொள்ளலாம்.

அந்தக் காலத்தில் மனோதர்ம விஷயங்களில் பெண்கள் அதிகம் ஈடுபடுவது அவ்வளவு உசிதமல்ல என்று கருதியிருப்பதாகத் தெரிகிறது. நீங்கள் இது போன்ற பல்லவிகள் பாடிய போது ஏதேனும் விமர்சனம் எழுந்ததா?

எனக்கு முன்னாலேயே பட்டம்மாள் போன்ற கலைஞர்கள் நெருடலான பல்லவிகள் பாடியிருக்கிறார்கள். ’எதற்கு இப்படியெல்லாம் புரியாத தாளங்களில் பாட வேண்டும்’ என்று சிலர் சொன்னதுண்டு. அது நான் பெண் என்பதற்காக சொன்னதாகத் தெரியவில்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும் அதைப் பொருட்படுத்துவது என் சுபாவமில்லை. எனக்கு விண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி ஒன்றும் தெரியாது. “எதற்காக இப்படி நேரத்தையும் பணத்தையும் செலவழித்து சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பவேண்டும்?”, என்று நான் சொன்னால் அதை விஞ்ஞானிகள் பொருட்படுத்துவார்களா? அது மாதிரிதான் நான் இத்தகு விமர்சனங்களை எதிர்கொள்கிறேன்.

ஆனால் ஒரு விஷயம் என்னிடம் கற்பவர்களிடம் நான் சொல்வதுண்டு. பட்டிதொட்டியிலெல்லாம் பேர் வாங்கி கச்சேரி செய்ய வேண்டுமென்றால் இது போன்ற பல்லவிகளில் எல்லாம் அதிகம் பாடாதீர்கள் என்பேன். சாதாரண ஜனங்கள் பார்த்துவிட்டு இதெல்லாம் நமக்குப் புரியாது என்று ஒதுக்கிவிடவும் வாய்ப்புகள் இருக்கிறதே. (சிரிக்கிறார்).

எஸ்.வி.கிருஷ்ணன் என்று ஒரு நல்ல சபா நடத்துனர் இருந்தார். அவர் சபாவில் கச்சேரிகள் கொடுத்தால், ‘இங்கு பல்லவியெல்லாம் பாட வேண்டாம்’ என்று முன்கூட்டியே சொல்லிவிடுவார். ஒருமுறை சம்பிரதாயாவுக்காக காம்போதியில் ஆதி தாளமும் அட தாளமும் வருமாறு ஒரு பல்லவி பாடினேன். அதற்கு அவர் வந்திருந்தார். கேட்டுவிட்டு, “எல்லோரும் நீங்கள் செய்தது பெரிய காரியம் என்றெல்லாம் சொன்னார்கள். எனக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை காம்போதி இருந்தது. அதை நான் ரசித்தேன்”, என்றார். “இதுதான் எனக்குக் கிடைத்த சிறந்த பாராட்டு”, என்று அவரிடம் சொன்னேன். இப்படி எடுத்துக் கொண்டால் பரவாயில்லை. புரியவில்லை என்று மொத்தமாக ஒதுக்கிவிட்டால் என்ன செய்ய?

இன்னொரு வகையில் எனக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதில் கொஞ்சம் தயக்கம் கூட உண்டு. கோர்வைகள் கணக்கு என்று அதற்குள்ளேயே சென்று இசையின் மற்ற அம்சங்களை விட்டுவிடக் கூடாதே என்ற கவலையும் உண்டு. இரண்டையும் விடாமல் உழைப்பவர்களுக்கு தாராளமாகச் சொல்லிக் கொடுக்கலாம்.  என் மாணவி கே.காயத்ரி அவதானம் போன்ற விஷயங்களில் ஈடுபாட்டுடன் உழைக்கிறாள். ”பார்த்துக் கொள் அம்மா. பெயரைக் கெடுத்துக் கொண்டுவிடாதே”, என்று விளையாட்டாகச் சொல்லுவதுண்டு.

இந்த நேர்காணல் வரிசைக் கிரமமாகச் செல்லாமல் எங்கெங்கோ அலைபாய்ந்துவிட்டது. மீண்டும் உங்கள் இளமைப் பருவத்துக்கு வருவோம். உங்கள் முதல் கச்சேரி நினைவிருக்கிறதா?

சின்ன வயதில் எல்லா இடங்களுக்கும் என்னை என் பாட்டிதான் அழைத்துக் கொண்டு செல்வார்கள். ஏதோ ஒரு சபாவில் (பெயர் நினைவிலில்லை) சைதாப்பேட்டையில் ஒரு போட்டி வைத்திருந்தார்கள். அதில் எனக்குப் பரிசு கிடைத்தது. வீட்டுக்குப் போய்விட்டு சாயங்காலம் பரிசு வாங்குவதற்காக திரும்பி வரவேண்டாம் என்று நாங்கள் அங்கேயே இருந்தோம். அப்போது ஒரு சபா நிர்வாகி, ‘உனக்கு ராகமெல்லாம் பாட வருமா?’, என்று கேட்டார். ‘ஓரளவு பாடுவேன்’, என்றதும் என்னை கச்சேரி செய்யச் சோன்னார். அன்று ஜூனியர் கச்சேரிக்கு வர வேண்டிய பாடகரால் வரமுடியவில்லை என்றதால் என்னைப் பாடச் சொன்னார்கள். கல்யாணி ராகம் பாடியது நினைவில் உள்ளது. எப்படி இருந்திருக்குமென்று தெரியவில்லை. ஆனால் தெரிந்ததை வஞ்சனை இல்லாமல் பாடினேன். அரங்கேற்றம் என்று பத்திரிகை அச்சிட்டு, பெரியவர்களை அழைத்துப் பேசச் சொல்லி எல்லாம் என் முதல் கச்சேரி நடக்கவில்லை. (சிரிக்கிறார்).

அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததா?

ஓரளவு இருந்தது. சின்னச் சின்ன சபாகளில், கோயில் கச்சேரிகளில் என்று பாடி வந்தேன். திருவள்ளூர் எங்கள் தாத்தா ஊரென்பதால் அங்கு சென்றும் பாடியிருக்கிறேன். டில்லியில் மத்திய அரசு உதவித்தொகை வாங்கப் போனபோது கச்சேரி செய்யும் வாய்ப்பு அமைந்தது. சென்னைக்கு வெளியில் விஜயவாடா போன்ற ஊர்களில் இருந்தும் சில வாய்ப்புகள் வந்தன. முசிறி ஐயர்வாள் சொல்லியும் சில கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. லால்குடி போன்ற வித்வான்களும் உற்சாகப்படுத்தி சில கச்சேரிகளுக்குச் சிபாரிசு செய்தனர்.

மியூசிக் அகாடமி போன்ற சபாகளில் எப்போது வாய்ப்பு அமைந்தது?

1960-களிலிருந்து பாடுகிறேன். எம்.எஸ் அம்மா தலைமை வகித்த வருடம் என் கச்சேரியைக் கேட்டுவிட்டு, ‘போகீந்திர சாயினம் அவ்வளவு வேகமாகப் பாடியிருக்க வேண்டாம்’, என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. நிறையக் கூட்டம் வரும். அந்த ரசிகர்கள் முன்னால் பாடுவதற்கு உற்சாகமாக இருக்கும். கச்சேரிகள் மட்டுமல்ல, அப்போதெல்லாம் அகாடமியில் காலை வேளைகளில் போட்டிகள் நடக்கும். அவற்றையும் பொதுமக்கள் வந்து பார்க்கலாம்.  சுவாரஸ்யமான அனுபவங்கள் அவை. அகாடமி, தமிழிசைச் சங்கம், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற சில சபைகளில்தான் ஜூனியர் கச்சேரிகள் இருக்கும். அங்கெல்லாம் வாய்ப்புகள் வந்தது. இப்போது போல அந்த நாளில் இள வயதிலேயே சீனியர் கச்சேரி கொடுக்கும் சூழல் இல்லை. (சிரிக்கிறார்).

வாஸ்தவத்தில் அது ஒரு நல்ல மாற்றம்தான். அதைப் பாராட்டத்தான் வேண்டும். எதற்கு சொல்கிறேனென்றால் எங்கள் காலத்தில் அவ்வளவு சீக்கிரமாக ஏணியில் ஏறிவிட முடியாது. வாத்தியார்களும் ‘நன்றாய் பாடுவாள்’ என்று சொல்வார்களே தவிர, இவளைப் போட்டுதான் ஆகவேண்டும் என்று நிர்பந்தமெல்லாம் செய்ய மாட்டார்கள். அகாடமி செகரட்டரியிடம் ஒருமுறை முசிறி ஐயர்வாள், “இவள் பரவாயில்லை. ஓரளவு பாடுவாள். வாய்ப்பிருந்தால் போடுங்கள்,” என்றார். “உங்கள் வாயால் இப்படிச் சொல்லிக் கேட்க இந்தப் பெண் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால் கச்சேரி என்றீர்களே — அது நடக்குமா என்று இவள் ஜாதகத்தைப் பார்த்துதான் சொல்ல முடியும்”, என்று சொன்னார். (சிரிக்கிறார்).

பட்டித்தொட்டியெல்லாம் சென்று கச்சேரி செய்தேன் என்று சொல்வதற்கில்லை. ரொம்ப மோசமுமில்லை. ஓரளவு கச்சேரிகள் நடந்தன.

நீங்கள் வளர்ந்து வரும் காலத்தில் வானொலியில் பாடியதும் உங்கள் கச்சேரி வாழ்க்கைக்கு உதவியிருக்குமல்லவா?

நிச்சயமாக! இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காண்டிராக்ட் வந்துவிடுமே. அதனால் பிழைத்த எவ்வளவோ வித்வான்கள் உண்டு. நான் முசிறி ஐயர்வாளிடம் சென்ற காலத்திலிருந்து வானொலியில் பாடி வருகிறேன். என் முதல் வானொலி கச்சேரிக்கு ராமநாதபுரம் சந்தசாமிப் பிள்ளை வாசித்தார். “தங்கச்சி! விளக்கப்போட்டதும் சில பேர் உளறிடுவாங்க. நீங்க நல்லாப் பாடிட்டீங்க”, என்று உற்சாகப்படுத்தினார். .

ரேடியோவில் ’ஓ ரங்கசாயி’ பாடியதைக் கேட்டு தெனாலியில் இருந்து சுப்பா ராவ் என்பவர் நுணுக்கி நுணுக்கி போஸ்ட்கார்டில் கடிதம் எழுதியிருந்தார். ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்னைத் தவறாமல் தெனாலிக்கோ, குண்டூருக்கோ கச்சேரிக்கு அழைத்துவிடுவார். கைக்குழந்தை இருந்தபோது, ‘இந்தமுறை விட்டுவிடுங்கள்’ என்று சொல்லியிருந்தும் அவர் ஏற்கவில்லை. ‘நீ ஒரு மணி நேரம் பாடிக் கச்சேரியை முடித்தால் கூடப் போதும். குழந்தையைப் பார்த்துக் கொள்ள நான் ஏற்பாடு செய்கிறேன்’, என்று வற்புறுத்தி என்னைப் பாட வைத்தார்.

முதலில் B-High கிரேட் கொடுத்தார்கள். இப்போது ஓரளவு நல்ல கிரேட்தான்.

சிறு வயதிலிருந்தே  பாடல்கள் புனைவதாகச் சொன்னீர்கள். எனில் இதுவரை எவ்வளவு பாடல்கள் செய்திருப்பீர்கள்? மியூசிக் அகாடமி கூட உங்களுக்கு வாக்கேயகாரர் விருது வழங்கி கௌரவித்தது நினைவுக்கு வருகிறது. பாடல் புனைவதற்கு என்று பிரத்யேக முறை ஏதேனும் கடைப்பிடிக்கிறீர்களா? அல்லது ஏதேனும் குறிப்பிட்ட சூழலில்தான் பாடல்கள் பிறக்கின்றனவா?

நிறைய என்றால் ஆயிரக் கணக்கில் செய்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. பாடல்கள் வருவதற்கு சூழல் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நடு ராத்திரியில் தூக்கம் வராத சமயங்களில்கூட பாடல்கள் வருவதுண்டு. நிறைய விளையாட்டாகச் செய்ததுதான். அவற்றில் பல மறந்துகூடப் போய்விட்டன. ஓரளவுக்குத் தேறியதை எழுதி வைத்திருக்கிறேன். யாரோ ஒருவர் தூண்டிவிடுவதாலோ, அல்லது ஒரு கருப்பொருளில் கச்சேரி செய்ய வேண்டுமென்றாலோ அதையொட்டி பாடல்கள் புனைவதுண்டு. உதாரணமாக ‘பஞ்ச கல்யாணி’ என்று ஐந்து கல்யாணிகள் வைத்து ஒருபாடல் செய்யேன் என்று திண்ணியம் வெங்கடராம ஐயரின் மனைவி சொன்னார். அப்படியொரு ராகமாலிகை செய்தேன். வருடா வருடம் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் ஏதேனும் ராகத்தைப் பற்றி பேசச் சொல்வார்கள். அதில் என் பாடலும் இருக்க வேண்டும் என்று சபா நிர்வாகி கேட்டுக் கொள்வார். அதற்காகச் சில பாடல்கள் செய்ததுண்டு.  சில பாடல்களை இப்போது பார்த்தால் இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது. (சிரிக்கிறார்).

நீங்கள் ராக சுதா அரங்கில் ஒரு கச்சேரியில் கஜல் அமைப்பில் ஒரு பாடல் பாடியது எனக்கு நினைவில் இருக்கிறது.

ஆமாம். ‘அந்த நாள் நினைவு வந்ததே’ என்று ஒரு பாடல் கஜல் அமைப்பில் செய்தேன். என்னுடைய விமர்சகர்கள் எல்லாம் வெளியிலில்லை – வீட்டுக்குள்ளேயேதான். (சிரிக்கிறார்). என் பெண் ஒருமுறை, “ஏன் உன் பாட்டில் எல்லாம் ஒரே மாதிரி கடவுளைப் பார்த்து காப்பாத்து காப்பாத்து என்று சொல்வது போலேயே இருக்கிறது? கஜலில் எல்லாம் எவ்வளவு விதவிதமான விஷயங்களைப் பற்றிப் பாடுகிறார்கள்”, என்று சொன்னாள். அவள் சொன்னதற்காக இதைச் செய்தேன். அப்போது காலிஃபோர்னியாவில் சும்மாயிருந்த சமயத்தில் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தபோது, இதை வைத்தே ஏன் செய்யக்கூடாது என்று தோன்றியது.

கர்நாடக சங்கீதம் என்றால் முழுக்க முழுக்க பக்தி பாடல்கள் என்று இல்லாமல் இந்த மாதிரியும் பாடல்கள் இருக்கலாம் என்பதற்கு ஓர் உதாரணம் உங்கள் பாடல்.

அப்படிப் பார்த்தால் ஜாவளிகள் இருக்கின்றனவே. ஒருசில ஜாவளிகளைக் கூட தமிழில் செய்திருக்கிறேன்.

புதியதாக ஜாவளிகள் செய்திருக்கிறீர்களா?

இல்லையில்லை. பிரபலமான ஜாவளிகளுக்கு தமிழ் வரிகள் போட்டிருக்கிறேன். செம்மங்குடி சீனிவாஸ ஐயர் , “நன்றாக இருக்கிறதே என்று ஜாவளிகளை எல்லாம் தெலுங்கு தேசத்தில் பாடிவிடாதீர்கள்,” என்று சொல்லுவார். சில ஜாவளிகளில் வார்த்தைப் பிரயோகங்கள் சற்று ஆட்சேபிக்கும்படியாகவே இருக்கும். ’மருபாரி தாளலேனுரா’ ஜாவளியை ‘மனமோகன கண்ணா நீ வா’ என்று பக்தி ரசம் வரும்படியாக மாற்றியிருக்கிறேன். சில ஜாவளிகளை சிருங்கார ரசத்தில் அர்த்தம் மாறாமல் மொழிபெயர்ப்பாகவும் செய்திருக்கிறேன்

(’பருலன மாட்ட நம்மவொத்து பிராணநாயகா’ ஜாவளியை ‘வெறும் வம்பு வார்த்தை நம்பலாமோ – பிராணநாயகா’ என்று தமிழ்ப்படுத்தியிருப்பதைப் பாடிக் காண்பிக்கிறார்).

நேர்காணல் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்கு நிறைய பேசவும் பாடவும் செய்ததில் உடல் தளர்ந்திருப்பது நன்றாகத் தெரிகிறது. இன்னும் கேட்க நிறைய கேள்விகள் இருந்தாலும் சூழலை எண்ணி கடைசி சில கேள்விகளுக்குச் சென்றுவிட்டேன்.

உங்களுடைய இசைப் பயணத்தைத் திரட்டித் திருப்பிப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

உண்மையில் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. நான் வளர்ந்த சூழலில் எல்லோருக்கும் ஓரளவு பாட்டு பிடிக்குமென்பதால் ‘ஏன் பாடுகிறாய்’ என்று கேட்கவில்லை என்றாலும் பெரிய அளவில் என்னைப் பாடகியாய் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் யாருக்கிமில்லை.  எனக்கேகூட இந்தத் தொழிலுக்கு வேண்டிய சாமர்த்தியமெல்லாம் சுத்தமாக இல்லை. என் கணவர் ஓரளவுக்கு உதவியாய் இருந்தார் என்றாலும் அவருடைய சிவில் இஞ்சினியர் வேலைக்கு மிஞ்சிதானே உதவ முடியும். என் அம்மா அதிக நாட்கள் இருக்கவில்லை. அதனால் குழந்தைகளைப் பார்க்கவோ வீட்டு நிர்வாகத்தைப் பார்க்கவோ அதிகத் துணை இருந்தது என்று சொல்வதற்கில்லை. இதையெல்லாம் மீறியும் சங்கீதத்தைத் தொழிலாக வைத்துக் கொண்டு இத்தனை வருடங்கள் இருக்க முடிந்திருக்கிறது ஆச்சரியம்தான் என்பதற்காகச் சொல்கிறேன். பெரிய கூட்டம், நிறைய பணம் என்றெல்லாம் சம்பாதிக்கவில்லையென்றாலும் என் பாட்டைக் கேட்டவர்கள் மோசமென்று சொல்லாத வகையில்தான் பாடி வருகிறேன் என்று நினைக்கிறேன். (சிரிக்கிறார்). முக்கியமாய் நிறைய வித்வான்களும் விஷயம் தெரிந்தவர்களும் என் சங்கீதத்தை ஒப்புக் கொண்டிருப்பதை நினைத்து எனக்கு திருப்தியாகத்தான் இருக்கிறது.

இவை எல்லாம் சாத்தியமானது என் மாணவர்களால்தான். எனக்கு பாடுவது எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்குச் சொல்லிக் கொடுக்கவும் பிடிக்கும். என்னுடைய பதினைந்தாவது வயதிலிருந்து சொல்லிக் கொடுத்து வருகிறேன். ஒரு கட்டத்தில் என் குழந்தைகள் வேறு சிஷ்யர்கள் வேறு என்கிற வேறுபாடே இல்லாமல் போய்விட்டது. என் பெண் அமெரிக்காவில் இருந்த போது, “நான் இல்லாதது உனக்கு ஒரு பொருட்டாகவே இருக்காதே. நீ எல்லோருடனும் சந்தோஷமாக இருப்பாயே”, என்று கிண்டல் செய்வாள். அது ஒருவகையில் உண்மையும் கூட. இல்லாவிடில் வாழ்க்கை வெறிச்சிட்டிருக்கும்.

நீங்கள் கேட்பதற்கு முன்னர் நானே சொல்லிவிடுகிறேன். பட்டங்கள், விருதுகள் எல்லாம் கொடுத்தால் சந்தோஷமாகத்தான் இருக்கிறதென்பதை மறுக்கவில்லை. அதற்காக அந்தப் பட்டங்கள் கிடைக்காது போனால் நிச்சயம் வருத்தமுமில்லை.

என் வாழ்க்கையின் பொற்காலம் என்று நான் கருதுவது திண்ணியம் வெங்கடராம ஐயர், முசிறி ஐயர்வாள், செம்மங்குடி சீனிவாஸ ஐயர் போன்றவர்களிடம் கற்ற காலத்தைத்தான். அவர்களும் வள்ளல்களாக வாரி வாரி வழங்கினார்கள். ஒரு மாணவியாக என் நேரத்தை வீணாக்கவில்லை என்பதையும் நான் பெரியவர்களிடம் கற்றதை வீணாக்கவில்லை என்பதையும் நினைக்கும்போது என் வாழ்க்கை எனக்கு நிறைவாகத்தான் தெரிகிறது.

மிக அழகாகச் சொன்னீர்கள். இவ்வளவு நேரம் என்னுடன் பேசியதற்கு மிக்க நன்றி.

நன்றி.


புகைப்படங்களுக்கு உதவியவர்கள்.

என்.ராமநாதன் ஐயர்.
குமுதா (விதுஷி சுகுணாவின் மகள்)
கே.காயத்ரி( விதுஷி சுகுணாவின் மாணவி)

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.