மலையேற்றம்: வன்மத்தின் பதுங்குக்குழி

ரண்டாயிரத்திற்குப் பிறகு எழுதவந்த பெண் எழுத்தாளர்களில் சந்திரா தங்கராஜ் நவீன இலக்கியத்திற்கு மிக முக்கியமான பங்களிப்புகளை அளித்திருக்கிறார். கவிதை, சிறுகதை என எழுதிக்கொண்டிருந்தவர் தற்போது ஒரே நேரத்தில் ‘மலையேற்றம்’, ‘கனவிலிருந்து புறப்பட்ட மஞ்சள்நிற முகங்கள்’ என இரண்டு நாவல்களை அடுத்தடுத்து வெளியிட்டிருக்கிறார். சந்திரா, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர்; திரைத்துறையில் பணியாற்றுபவர். இந்த இரண்டு புறக்காரணிகளும் இவரது எழுத்தில் மறைமுகமாகப் பங்காற்றுகின்றன. சந்திரா மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவை மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. பின்னர் அவை தொகுக்கப்பட்டு, ‘சோளம்’ (2022) என்ற பெருந்தொகுப்பாகப் பிரசுரமாகியிருக்கிறது. தவிர, நான்கு கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். சிறுகதைதான் அவரது தொடக்கக்காலப் புனைவு வடிவமாக இருந்திருக்கிறது. அடுத்த இடத்தை அவர் கவிதைக்கு அளித்திருக்கிறார். இவர், கடந்த அரை நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். பெண்கள் தொடர்ந்து எழுத்தில் இயங்குவதே பெரும் சவாலாக இருக்கிறது. அவ்வகையில் இவரது தொடர் இயக்கம் வரவேற்கத்தக்க ஒன்று. சந்திரா, தம் படைப்புகளுக்காகப் புதுமைப்பித்தன் நினைவு விருது முதல் கலைஞர் பொற்கிழி விருதுவரை பெற்றிருக்கிறார். அதனால் தமிழ்ச்சூழலில் இவர் ஓர் அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர் என்றே கருதலாம்.

‘மலையேற்றம்’ நாவலின் கதைக்களம் தேனி மாவட்டம். இந்த மண்ணின் வட்டாரமொழி புனைவுக்குள் சிறப்பாகத் தொழிற்பட்டிருக்கிறது. தேனி மாவட்டம் மேகமலை, சுருளி மலை, குரங்கணி மலை என மலைகள் சூழ்ந்த மாவட்டம். தேனி மாவட்டத்தின் மேற்கு மற்றும் தெற்கு எல்லைகள் முழுவதையும் மேற்குத் தொடர்ச்சி மலைதான் அரணாகக் காத்து நிற்கிறது. மலை நாவலில் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருப்பது மதுரை. மதுரையின் துண்டு நிலம்தான் தேனி. வெக்கையான மண்ணும் சாதியப் பெருமிதம் நிரம்பிய மனிதர்களும் இந்நிலத்தின் அடையாளங்களாகத் தமிழ்த் திரையுலகம் ஏற்கெனவே கட்டமைத்து வைத்திருக்கிறது. இந்நிலத்து ஆண்களின் இடுப்பில் எப்போதும் அரிவாள் தொங்கிக்கொண்டிருக்கும். இம்மக்கள் உறவுக்காக உயிரையே கொடுப்பார்கள் என்ற படிமமும் தன்மானத்திற்காக அரிவாளை எடுக்கக் கொஞ்சமும் தயங்கமாட்டார்கள் என்ற படிமமும் திரைமொழியில் திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன. இன்றும் தேனியைப் பின்புலமாகக்கொண்டு எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்கள் அப்படித்தான் இருக்கின்றன. திரையின் வழியாக எனக்கு அறிமுகமான தேனி இப்படித்தான் இருந்தது.

நான் ஏற்கெனவே அறிந்திருந்த தேனி நிலப்பகுதியை இந்நாவல் மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறது. சாதியப் பெருமிதங்கள் மட்டும் புனைவில் இல்லை; ஆனால் சாதி இருக்கிறது. சந்திரா திரைமொழியை நன்கு அறிந்தவர். திரைத்துறை சார்ந்த சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். ‘கள்ளன்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். குற்றங்களை விவரிப்பதைவிட, குற்றம் நிகழும் சூழலை ‘கள்ளன்’ திரைப்படம் அழுத்தமாகப் பேசியது. ஏறக்குறைய ‘மலையேற்றம்’ நாவலும் இந்தப் புள்ளியைத்தான் தொட்டிருக்கிறது. அப்பா, மகன் இருவருக்கும் இடையில் இரண்டுவிதமான வன்மங்கள் மனம் முழுக்க நிறைந்திருக்கின்றன. அப்பாவின் வன்மத்திற்குக் காரணம், பங்காளிகளுக்கிடையில் நடைபெற்ற சொத்துப் பிரச்சினை. இந்த வன்மத்தைத் தன் மனைவியைத் துன்புறுத்துவதின் மூலமாகத் தீர்த்துக்கொள்ள நினைக்கிறார். ஏனெனில், மனைவி எதிர்த்தரப்பைச் சார்ந்தவள். அம்மாவின்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் மகன், தன்னுடைய எதிரியாகத் தந்தையை உருவாக்கிக்கொள்கிறான். இந்த இருவகையான மோதல்தான் நாவல் முழுக்க ராசபாண்டி என்ற கதாபாத்திரத்தின் நினைவுகளின் வழியாகச் சொல்லப்படுகிறது. நாவல் அளவில் சிறியதாக இருந்தாலும் அது உரையாட எடுத்துக்கொண்ட களம் கனமானது.

முத்துக்கலுவன், இந்நாவலின் முக்கிய கதாபாத்திரம். இவன் மனைவி அமராவதி. இவர்களின் மகன்தான் ராசபாண்டி. இவர்கள் மூவரைச் சுற்றித்தான் கதை நிகழ்கிறது. முத்துக்கலுவனின் மூர்க்க குணத்தினால் அமராவதியும் ராசபாண்டியும் அவனைப் பிரிந்து அமராவதியின் சொந்த ஊரான ஓடப்பட்டிக்கு வருகிறார்கள். இவர்களைத் திரும்ப அழைத்துச்செல்ல முத்துக்கலுவன் எடுத்த முயற்சி தோல்வியில் முடிகிறது. அவன் வேறொரு திருமணம் செய்துகொள்கிறான். முத்துக்கலுவனுக்கு அமராவதியின்மீது இருந்தது, கடந்தகால வன்மம். அந்த வன்மத்தைக் கிடைக்கும் தருணங்களில் எல்லாம் அமராவதிமீது இறக்குகிறான். இந்த வன்மம்தான் இவர்களைப் பிரிக்கிறது. கடைசிவரை சேரவிடாமலும் பார்த்துக் கொள்கிறது. அம்மாவை இரத்தம் சொட்டச் சொட்ட அடித்த தந்தையைத் தன் முதல் எதிரியாகக் கட்டமைத்துக் கொள்கிறான் ராசபாண்டி. தந்தையைக் கொல்லச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறான். பகை அடுத்த தலைமுறைக்குப் பரவுகிறது. மனித மனங்களில் பதுங்கியிருக்கும் வன்மம், காலம் கடந்தும் மனித உறவுகளின்மீது விரிசலை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. ஒருவரும் மன்னிக்கத் தயாராக இல்லை. மன்னிப்பு என்பது ஒரு தரிசனம். அந்தத் தரிசனம் ராசபாண்டிக்கு ஒரு சிறுத்தையின் மூலமாகக் கிடைக்கிறது. இது இந்நாவல் பற்றிய ஒரு சித்திரம்.

சந்திரா ஒரு பெண் எழுத்தாளர். அதற்கான தடங்கள் ஏதும் புனைவில் வலிமையாகத் தென்படவில்லை. பெண் எழுத்தில் படைப்பாளரை மீறி ஒரு சார்புத்தன்மை உருவாகி இருக்கும். அது இந்நாவலில் இல்லை. குடும்பத்தைச் சிதைப்பதில் பெண்களே முன்னணியில் இருக்கிறார்கள். ஒற்றுமையாக இருந்த இரு சகோதரர்களைப் பிரித்ததில் அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த பெண்களே காரணமாக இருக்கிறார்கள். இங்கிருந்துதான் பகை உருவாகிறது. “அதுவரைக்கும் ஒத்துமையா இருந்த குடும்பத்துல பொம்பளைக நொழஞ்சு எடக்கு பண்ண ஆரம்பிச்சிருக்காகே” என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். முத்துக்கலுவனின் தாத்தா சருகவெள்ளை; அமராவதியின் தாத்தா பெரியகருப்பன். இதில் பெரியகருப்பன் மூத்தவர். இவர்களது குடும்பம்தான் சொத்துப் பிரச்சினையில் சிதைந்துபோகிறது. இதற்கு இவர்களுடைய மனைவியரே காரணமாக இருக்கின்றனர். இந்தப் பகை நான்கு தலைமுறைகள்வரை நீள்கிறது. “போர், கலவரம் என்று வந்துவிட்டால் நியாயம் தர்மத்துக்கு இடம் ஏது? இரக்கம் ஏது? என்னதான் பெரிய அன்பிருந்தாலும் மனுசங்க மனதில் ஒரு சின்ன ஆங்காரமும் வெறுப்பும் வந்திட்டா அது பெரிய பகையாகி மனுசங்களை வெறிபிடித்து ஆடவைத்துவிடுகிறது” என்று முத்துக்கலுவன் கூறுகிறான். நாவல் இந்தப் புள்ளியையே தன் மையமாகக் கொள்கிறது. முத்துக்கலுவன் கலவரத்தில் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. அவன் தாத்தாவும் அப்பாவும்தான் பாதிக்கப்படுகிறார்கள். தாத்தா சிறைக்குச் செல்கிறார். சிறையிலேயே அநாதையாக இறந்துபோகிறார். அப்பா யாருமற்ற தனியனாக்கப்படுகிறார். எல்லாச் சொத்தும் கைவிட்டுப் போகிறது. இந்த வன்மத்தைத்தான் முத்துக்கலுவன் சுமந்துகொண்டு திரிகிறான். ஒரு புலிக்குரிய வன்மத்தை அவன் கண்களில் தேக்கிவைக்கிறான்.

வட தமிழகத்தைவிடத் தென் தமிழகத்தில் இன்றும் திருவிழாக்கள் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாவிற்குப் பின்பும் ஒரு சடங்கு காரணமாக இருக்கிறது. மனிதர்கள்மீது கடுங்கோபத்திலுள்ள தெய்வத்தைச் சாந்தப்படுத்தவும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. முன்னோர்களின் சாபத்தைத் தணிக்கவும் சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்தப் பிரதியும் ‘சாபம்’ என்ற கருத்தாக்கத்தைக் கையில் எடுத்திருக்கிறது. பாட்டன்களுக்கிடையில் நடைபெற்ற கலவரத்தில், தன் கைக்குழந்தையையும் கணவனையும் பறிகொடுத்த செவனம்மா கொடுத்த சாபம்தான் தன் குடும்பச் சிதைவுக்குக் காரணம் என்கிறான் முத்துக்கலுவன். தென் தமிழகத்தில் ‘சாபம்’ குறித்த நம்பிக்கை ஆழமாக வேரூன்றியிருப்பதை நாட்டார் கதைகளினூடாகப் பார்க்க முடிகிறது. ‘படைப்பாளர்கள் மகாபாரதக் கதையைத்தான் வெவ்வேறு வடிவங்களில் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறார்கள்’ என்பார் எஸ்.ராமகிருஷ்ணன். ‘மலையேற்றம்’ நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நாவல், மகாபாரதப் பிரதியைப் பல இடங்களில் நினைவூட்டுகிறது. “எல்லாத்துக்கும் காரணம் எங்கப்பத்தாதான்னு பலியச் சொல்லி அவளக் கொல்லாம நான் ஒறங்கமாட்டேன்னு பெரியகருப்பன் பொண்டாட்டி பாஞ்சாலி கணக்கா சபதம் எடுத்திருக்கா” என்று நாவலில் ஓரிடத்தில் வருகிறது. ஏறக்குறைய இந்நாவலும் மகாபாரதத்தைப் போல மண்ணுக்கான சண்டைதான். அகங்காரம், மண்ணாசை, வன்மம், சாபம் எனப் பல உட்கூறுகளின்மேல் இப்புனைவு கட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தன்மைகள் மனித மனங்களுக்குள் படியும்போது அவை உடனிருப்பவர்களை என்னவெல்லாம் செய்யும் என்ற கோணத்திலும் இந்த நாவலை வாசித்துப் பார்க்கலாம்.

ஒரு திரைக்கதைக்கு எழுதப்பட்ட பிரதியைப் போன்று ராசபாண்டியின் நினைவுகளினூடாக நாவல் முன்னும் பின்னுமாக நகர்ந்துசெல்கிறது. ராசபாண்டி தந்தையுடன் மங்களதேவி மலையின்மீது ஏறுவதில் நாவல் தொடங்குகிறது. ஏறும்போது அவனிடமிருந்த தந்தையின்மீதான வன்மம், இறங்கும்போது தீர்ந்து விடுகிறது. நாவலின் இடைப்பட்ட பகுதிகளெல்லாம் பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டிருக்கின்றன. பாண்டிய மன்னனின் அரசவையில் அவன் தவறை உணர்த்திய கண்ணகி, மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி பதினான்கு நாட்கள் நடந்து மங்களதேவி மலைக்குச் சென்றதாகத் தொன்மக்கதை கூறுகிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது தன் தந்தையைக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ராசபாண்டி மலைமீது ஏறுகிறான். அவனது கோபத்தை மலை தணித்துவிடுகிறது. இது ஒரு குறியீடு. நாவல், மலையின் சிறப்பையும் அங்கு வாழும் உயிரினங்களையும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறது. அந்த முயற்சி கைகூடியதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சிறுகதைகளை எழுதிப் பழக்கப்பட்ட சந்திராவிற்கு, நிலக்காட்சியின் நுட்பங்களை விவரிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. புனைவை வாசிக்கும்போது அவர் விவரிக்கும் இடங்களோ உயிரினங்களோ காட்சியாக மனதில் பதியவில்லை. வெறும் விவரணைகளாக மட்டுமே நின்று விடுகின்றன.

ராசபாண்டி, தாத்தாவின் விருப்பத்தின் பேரில் இளம் வயதிலேயே மாட்டுத் தரகு தொழிலுக்குச் செல்கிறான். அவனுடைய தாத்தா, இரண்டு தாய்மாமன்கள் என அந்தக் குடும்பத்து ஆண்களின் தொழிலாக மாட்டுத் தரகு இருக்கிறது. அப்பா, தங்களுக்குப் போட்டியாகப் பேரனை இறக்குவதாக மகன்கள் அவரிடம் சண்டைக்குச் செல்கிறார்கள். ராசபாண்டி, மாமன்களிடம் எப்போதும் அவர்களுக்குப் பிடித்தமாதிரி நடந்துகொள்ள முயல்கிறான். அம்மாவின் விருப்பமும் அதுதான். ஆனால் மாமன்கள் தங்களது தொழிலுக்கும் சொத்துக்கும் போட்டியாக ராசபாண்டி வந்துவிட்டதாகக் கருதுகிறார்கள். ‘தாய்மாமன்’ உறவும் இங்குக் கேள்விக்குள்ளாகிறது. மூத்த மாமன் மகள் மீனாட்சிதான் இவனுக்குக் கடைசிவரை துணையாக இருக்கிறாள். இவ்விருவருக்கும் இடையில் ஒரு காதல் முகிழ்க்கிறது. ஏற்கெனவே இருக்கும் குடும்பப் பகையைக் காரணம் காட்டி, மீனாட்சியை ராசபாண்டிக்குத் திருமணம் முடிக்க மாமன்கள் மறுக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் ராசபாண்டி மாட்டுச் சந்தைக்குச் செல்கிறான். மாட்டின் தன்மைகளை அறிந்து, வியாபாரத்தில் முன்னேறுகிறான். அதனையும் மாமன்கள் சதிசெய்து கெடுத்துவிடுகிறார்கள். இந்தப்பகுதி ஒரு திரைப்படத்திற்குரிய தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.

மாட்டுச்சந்தை குறித்தும் அங்கு நடைபெறும் வணிகம் குறித்தும் இலக்கியத்தில் பெரிய அளவில் எழுதப்படவில்லை. இந்தப் பகுதியைச் சந்திரா மேலோட்டமாகவே எழுதியிருக்கிறார். தாத்தாவின் நண்பர் மயில்வாகனம்தான் ராசபாண்டியைச் சந்தைக்கு அழைத்துச் செல்கிறார். தொழில் நுணுக்கங்கள் குறித்துச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் என்ன சொல்லிக்கொடுத்தார் என்ற விவரங்கள் பிரதியில் இல்லை. “சரியாக ஊரைத் தாண்டி அல்லிகுளம் வந்ததும் ஏவார நுணுக்கங்களைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்” என்று எழுதியிருக்கிறார். மயில்வாகனம் என்ன பேசினார் என்பதைப் புனைவு வாசகனுக்குச் சொல்லவே இல்லை. பிரதியாசிரியரே அந்த நுணுக்கங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் அந்த இடத்தை அப்படியே கடந்துவிட்டார். நாவல் என்பது பெருங்களம். படைப்பாளர் விரிவாக எழுதுவதற்கு வாய்ப்புள்ள பல இடங்கள் இந்நாவலில் தவற விடப்பட்டுள்ளன. “அந்தச் சுத்து வட்டத்தில் இருக்கும் மாடுகளின் ரகங்களை ஒன்றுவிடாமல் எனக்கு அடையாளம் காட்டி ஒவ்வொன்றின் தன்மையையும் எனக்கு விளக்கினார்” என்று ராசபாண்டி கூறுகிறான். ஆனால் அந்த ரகங்கள் என்னென்ன? அந்த நுணுக்கங்கள் என்னென்ன என்பது புனைவை வாசிப்பவனுக்கும் விளக்கியிருக்க வேண்டும். அதனைப் புனைவாசிரியர் செய்யவில்லை. அதேபோல நாவலின் இறுதிப் பகுதியும் விவரித்து எழுதுவதற்கு வாய்ப்புள்ள பகுதி. சிறுத்தைக்கும் ராசபாண்டிக்குமான சண்டையும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. சிறுத்தை அவன் தந்தையின் மூர்க்கத்திற்கான குறியீடு. அந்த மூர்க்க குணத்துடன்தான் ராசபாண்டி சண்டை போடுகிறான். இந்தப் பகுதி வாசிப்பில் வெறும் சம்பவமாகவே நின்றுவிடுகிறது.

சந்திரா, நாட்டார் தொன்மங்களைப் புனைவுகளில் இணைத்து சிறுகதைகள் எழுதுவதில் தேர்ந்தவர். இந்த நாவலும் அப்படியொரு முயற்சிதான். தேனி மண்ணிற்கே உரிய சில பொதுக்குணங்களை எடுத்துக்கொண்டு நாவலாக எழுத முயற்சி செய்திருக்கிறார். நாவல் மலை, மாட்டுச் சந்தை என்று பயணித்தாலும் மனித மனம் வன்மத்தின் பதுங்குக்குழி என்ற மையத்தில் வந்து நிற்கிறது. வன்மம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறது. ‘தான்’ என்கிற அகங்காரம் துருத்திக்கொண்டு முன்னே வந்துநிற்கும் மனிதர்களின் முன், மனித உறவுகள் குறித்த உன்னதங்கள் மதிப்பிழந்து போகின்றன. இதனை இந்நாவலின் கதாபாத்திரங்கள் வழியாகக் கடத்த முயன்றிருக்கிறார். கதை நிகழும் இடங்களைவிடக் கதாபாத்திரங்களுக்குப் புனைவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் நாவலில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன.

Previous articleகலியுக கிருஷ்ணனின் காதலிகள்
சுப்பிரமணி இரமேஷ்
நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதுகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள், தொடக்க காலத் தமிழ் நாவல்கள், தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும், படைப்பிலக்கியம் ஆகிய கட்டுரை நூல்களும் ஆண் காக்கை என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. காலவெளிக் கதைஞர்கள், தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும், பெருமாள்முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகைநூல்களும் இவரது பங்களிப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here