‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை’ என்ற நாவலை எழுதிய பஞ்சாபி எழுத்தாளர் அமிருதா பிரீதம், தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா (1919) என்ற நகரத்தில் பிறந்தவர். இவர், தனது பதினாறு வயதிலேயே கவிதைகள் எழுதி வெளியிட்டவர். 1935ஆம் ஆண்டு பிரீதம் சிங் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1960ஆம் ஆண்டு இவர் மணவிலக்குப் பெற்றார். 1947இல் நிகழ்ந்த இந்தியப் பிரிவினையின் காரணமாகப் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு வந்தார். தன் வாழ்நாளின் இறுதிவரை (2005) டெல்லியிலேயே வசித்தார். இரண்டு நாடுகளும் போற்றும் எழுத்தாளராக அமிருதா பிரீதம் இருக்கிறார். பஞ்சாப் மொழிக்கு இவர் மூலமாகவே முதல் ஞானபீட விருது (1981) கிடைத்திருக்கிறது. தமிழைப்போலவே பஞ்சாப் மொழியும் இரண்டு ஞானபீட விருதுகளை மட்டுமே இதுவரை பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தவிர, அமிருதா பிரீதம் தம் எழுத்துப் பணிகளுக்காக பஞ்சாப் ரத்தன் விருது, சாகித்திய அகாதெமி விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷண் விருது, மதிப்புறு முனைவர் பட்டங்கள் எனப் பல உயரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். மாநிலங்களவை (1986-1992) உறுப்பினராக இருந்திருக்கிறார். பாகிஸ்தான் அரசும் இவருக்கு விருதளித்துப் பாராட்டியிருக்கிறது.
அமிருதா பிரீதம் பத்து வயதுக்குள்ளாகவே தன் தாயை இழந்தவர். அந்தத் துயரம்தான் இவரை எழுதத் தூண்டியிருக்கிறது. தொடக்கத்தில் காதல் கவிதைகளையே அதிகம் எழுதியிருக்கிறார். இந்தியப் பிரிவினையின் கொடுந்துயரங்கள் இவரைப் பெரிய அளவில் பாதித்திருக்கிறது. அதன் பிறகு தன்னுடைய எழுத்துப் பாதையையே இவர் மாற்றியிருக்கிறார். இந்தியப் பிரிவினை ஏற்படுத்திய ஆறாத துயரங்களைக் கவிதைகளாகவும் புனைவுகளாகவும் எழுதினார். இவரது பெரும்பாலான படைப்புகளில் இந்தப் பிரிவினை உண்டாக்கிய தழும்புகள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. அமிருதா பிரீதம் மூன்று தன்வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். அதில் ‘Rasidi Ticket’ என்ற நூல் மிக முக்கியமான நூலாகப் பார்க்கப்படுகிறது. ‘நாகமணி’ என்றொரு இலக்கிய இதழை நடத்தினார். டெல்லியில் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். அமிருதா பிரீதம் கவிதைகளுக்காகவே பெரிதும் அங்கீகரிக்கப்பட்டார். சாகித்திய அகாதெமி விருதும் ஞானபீட விருதும் இவரது கவிதைப் பங்களிப்புகளுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
அமிருதா பிரீதம் கவிதைக்கு அடுத்துக் குறிப்பிடத்தக்க நாவல்களையும் எழுதியிருக்கிறார். இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்கள் பற்றிய இவரது நாவலான ‘பிஞ்சர்’, இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இவர் பஞ்சாபியில் எழுதிய ‘நா ராதா நா ருக்மிணி’ (1983) என்ற நாவலை இந்தி வழியாகத் தமிழில் மொழிபெயர்த்தவர் சரஸ்வதி ராம்நாத். இவர், தற்போதைய திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரத்தில் 1925, செப்டம்பர் 7ஆம் தேதி பிறந்தவர். இந்தியில் வித்வான் பட்டம் பெற்றவர். இவர் வழியாக அசாமி, பஞ்சாபி, குஜராத்தி, வங்காளம், ராஜஸ்தானி, மணிப்பூரி, ஒரியமொழி படைப்புகள் தமிழுக்கு மொழிபெயர்ப்பாகி வந்தன. அவர் இந்திமொழி வழியாகவே இதனைச் சாத்தியப்படுத்தினார். தற்போது உலக மற்றும் பிராந்திய மொழிகளின் படைப்புகள் அந்தந்த மொழிகளில் இருந்தே நேரடியாக மொழிபெயர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. அப்படியொரு நிலை இல்லாத காலகட்டத்தில் சரஸ்வதி ராம்நாத் போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்த பணி மகத்தானது. இந்திய இலக்கியங்களை இணைக்கும் கண்ணியாக இவர் இருந்திருக்கிறார். சரஸ்வதி ராம்நாத் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில் அவர் செய்த மொழிபெயர்ப்புப் பணிகளை மதிப்பிட்டுப் பார்ப்பது அவருக்குச் செய்யும் மரியாதையாகும். சரஸ்வதி ராம்நாத் இயல்பில் ஒரு படைப்பாளர். ஆனால் இவர் செய்த ஆகச்சிறந்த மொழிபெயர்ப்புகள் இவரை மொழிபெயர்ப்பாளராகவே நிலைநிறுத்தி விட்டன. மொழிபெயர்ப்புக்காகத்தான் இவருக்குச் சாகித்திய அகாதெமி விருது (1993) வழங்கப்பட்டது.
அமிருதா பிரீதம் எழுதி, சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்த ‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை’ ஒரு தன்வரலாற்று நாவலாகும். இவர் நடத்தும் ‘நாகமணி’ இதழுக்குப் படைப்பாளர்களிடமிருந்து ஏழு கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான விரிவான பதிலை வெளியிட்டு வந்தார். லூதியானாவைச் சார்ந்த ஓவியர் ஹரிகிருஷ்ண லால் என்பவர் ‘நாகமணி’ இதழுக்கு அளித்த பதிலால் கவரப்பட்ட அமிருதா பிரீதம், இவருடைய வாழ்க்கைக் கதையைப் புனைவாக எழுத முடிவுசெய்தார். அப்படி உருவான நாவல்தான் ‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை.’ கிருஷ்ணர் என்ற அவதார புருஷரின் யதார்த்த வடிவம்தான் ஹரிகிருஷ்ணன். தொன்ம கிருஷ்ணரின் வாழ்க்கை புனைவுத்தன்மை கொண்டது. நம்ப முடியாத திருப்பங்களையுடைய மீமெய்யியல் கதாபாத்திரம் கிருஷ்ணன். அதே பெயரைக்கொண்ட ஓவியர் ஹரிகிருஷ்ணனும் தன் தூரிகையால் புதிய உலகத்தைப் படைக்கக்கூடியவர். இம்ப்ரஷனிச ஓவியத் திறனால் உலகத்தின் காட்சிகளைத் திரைச்சீலைகளில் பிடித்துவைக்கும் ஆற்றலுடையவர். ஆனால் இவரது வாழ்க்கை தொன்மக் கிருஷ்ணனின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தப் புனைவைப் புரிந்துகொள்ளக் கிருஷ்ணனின் வாழ்க்கையும் கொஞ்சமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
ருக்மிணி, மித்திரவிந்தை, சத்தியை, ஜாம்பவதி, ரோகிணி, சுசீலா, சத்தியபாமா, லக்ஷ்மனை என கிருஷ்ணருக்கு எட்டு மனைவியர் இருந்ததாக வியாச பாரதம் கூறுகிறது. தவிர, ராதையும் கிருஷ்ணருக்குக் காதலியாகவும் மனைவியாகவும் இருந்ததாக ஜெயதேவர் எழுதிய ‘கீத கோவிந்தம்’ குறிப்பிடுகிறது. ராதையைப் பற்றி வெவ்வேறு வடிவங்களில் கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் யதார்த்த வாழ்க்கையில் இந்நாவலின் கதை நாயகனாக ஹரிகிருஷ்ணனுக்கு இறுதிவரை திருமணமே நடைபெறவில்லை; அவன் வாழ்க்கையில் பல பெண்கள் குறுக்கிடுகிறார்கள். ஆனால் ஒருவரும் அவனைத் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. ஹரிகிருஷ்ணனின் நிஜ வாழ்க்கையே அப்படித்தான் இருந்திருக்கிறது. ஹரிகிருஷ்ணன், சாஹிர், ஜெயதேவ் ஆகிய மூவரும் லூதியானாவில் பிறந்து, ஒன்றாகவே வளர்ந்த நண்பர்கள். மூவருமே கலைஞர்கள். ஹரிகிருஷ்ணன் புகழ்பெற்ற ஓவியர்; சாஹிர் புகழ்பெற்ற கவிஞர்; ஜெயதேவ் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர். இவர்கள் மூவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த மூவரில் சாஹிர்தான் அமிருதா பிரீதம் திருமணத்திற்குப் பிறகு உருகி உருகிக் காதலித்த கவிஞர் சாஹிர் லூதியானவி. சாஹிருக்கு எழுதிய கடித வடிவிலான காதல் கவிதைகள் தொகுப்புக்குத்தான் (சுனேஹடே) அமிருதாவுக்குச் சாகித்திய அகாதெமி விருது (1956) கிடைத்தது. இவர்களது காதல் கதையை அமிருதா தம் சுயசரிதையில் விரிவாக எழுதியிருக்கிறார். எனவே, ‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை’ அமிருதாவின் சுயசரிதை நாவலும்கூட. அமிருதாவின் கவிதைகளுக்குப் பிற்காலத்தில் ஜெயதேவ் இசையமைத்துள்ளார். ஹரிகிருஷ்ணன் அமிருதாவிற்கு இரண்டு வருடங்கள் பின்னால் பிறந்தவர். அமிருதா பிரிட்டிஷ் இந்தியாவில் சில காலம் லாகூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி இருக்கிறார். ஹரிகிருஷ்ணன் தன் அன்றாடத் தேவைகளுக்காக லாகூர் வானொலி நிலையத்தில் புல்லாங்குழல் இசைத்திருக்கிறார்.
ஹரிகிருஷ்ணன், சாஹிர், ஜெயதேவ், அமிருதா ஆகிய நால்வரும் இந்நாவலில் இடம்பெற்றிருக்கிறார்கள். எனவே இந்த நால்வரின் வாழ்க்கையும் ஒரே இழையில் வெவ்வேறு நிறங்களில் இப்பிரதியில் வெளிப்பட்டுள்ளன. ஹரிகிருஷ்ணன், சாஹிர், ஜெயதேவ் ஆகிய மூவருமே இளம் வயதில் காதலித்திருக்கிறார்கள். ஹரிகிருஷ்ணன் காதலுக்குப் பொருளாதாரம் தடையாக இருந்திருக்கிறது. இவன் காதலித்த பெண்ணின் தந்தை ஓவியர் என்பதை வண்ணம் பூசுபவராகக் கற்பிதம் செய்துகொண்டிருக்கிறார். அது கலையாகவே இருந்தாலும் அந்தக் கலை தன் பெண்ணுக்குச் சரியாகச் சாப்பாடு போடாது என்பது அவரது கணிப்பு. சாஹிர் இளம் வயதில் ஒரு சீக்கியப் பெண்ணை விரும்பியிருக்கிறார். இங்கே மதம் குறுக்கிட்டிருக்கிறது. இஸ்லாமும் சீக்கியமும் சேராது என்ற யதார்த்தத்தை உணர்ந்தபோது அந்தக் காதலும் திருமணத்தை நோக்கி நகரவில்லை. ஜெயதேவ் காதலும் பொருளாதாரப் பிரச்சினையால் கைக்கூடாமல் போயிருக்கிறது. ஹரிகிருஷ்ணன் ‘நாகமணி’ இதழுக்கு அளித்த பதிலில், ‘ஒரு கலைஞன் தன் மனைவிக்கு வயிறார சாப்பாடு போடுவான் என்ற நம்பிக்கை பெண்ணைப் பெற்ற எந்தத் தாய் தந்தையருக்கும் உண்டாகவில்லை. ஏன்? கலைஞனுக்கே தனக்கு இரண்டுவேளை சாப்பாடு கிடைக்குமா என்ற நம்பிக்கை. பிறகென்ன?’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐம்பதாண்டுகளைக் கடந்தும் இந்தப் பிரச்சினை இன்றும் இருக்கத்தானே செய்கிறது. பிற்காலத்தில் இவர்கள் மூவரும் பொருளாதார பலத்தை அடைந்தபோதும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்போதும் அந்தப் பொருளாதார வளர்ச்சியே அதற்குத் தடையாக இருந்திருக்கிறது. துவாபரயுக கிருஷ்ணரைப்போல இப்போது விதவிதமான பெண்கள் கலியுக ஹரிகிருஷ்ணனின் வாழ்க்கைக்குள்ளும் வருகிறார்கள். ஆனால் உண்மையான அன்பைத்தான் இவனால் அவர்களிடம் காணமுடியவில்லை.
இந்நாவல் முழுக்க முழுக்க நனவோடை உத்தியில் எழுதப்பட்டிருக்கிறது. ஹரிகிருஷ்ணன் தன் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து மதிப்பிடுகிறான். தன் வாழ்க்கையில் வந்த நண்பர்களையும் காதலிகளையும் எண்ணிப் பார்க்கிறான். பள்ளிப் பருவத்தில் மகீந்தர் கௌர் என்ற சீக்கியப் பெண்ணைக் காதலிக்கிறான். அவளின் தந்தை காவல்துறை அதிகாரி. அந்தக் காதல் ஹரிகிருஷ்ணனின் கோழைத்தனத்தால் பாதியில் முடிந்துபோகிறது. ஹரிகிருஷ்ணன் என்ற பெயர் வைத்துவிட்டதாலேயே கிருஷ்ணரின் சாகசங்களையெல்லாம் யதார்த்தத்தில் நிகழ்த்திவிட முடியாது என்பதை ஹரிகிருஷ்ணன் புரிந்துவைத்திருக்கிறான். ஏனெனில் இவனிடம் சுதர்சன சக்கரம் இல்லை; தூரிகை மட்டுமே இருக்கிறது. மகீந்தர் கௌர் திருமணத்திற்குச் சென்றவன் ‘உன்னை ஒருநாள் ஓவியமாக வரைந்து தருவேன்’ என்ற வாக்குறுதியை மட்டும் கொடுத்துவிட்டுச் சோர்வுடன் திரும்பி வருகிறான். அடுத்து, தன் அண்ணியின் தங்கை பிம்போ என்பவளைக் காதலிக்கிறான். மகீந்தர் கௌரை ஹரிகிருஷ்ணனின் ராதையாக அவனுடைய நண்பர்கள் கற்பிதம் செய்து வைத்திருந்தனர். இப்போது பிம்போவை ஹரிகிருஷ்ணனின் ருக்மிணியாக அதே நண்பர்கள் உருவகம் செய்கின்றனர். பெண்ணின் தந்தைக்கு ஹரிகிருஷ்ணனின் கலைப்பணிமீது சந்தேகம் வருகிறது. ‘வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் கடைகளுக்குப் பெயர்ப் பலகை தீட்டிக் கொண்டிருப்பான். சாயமடித்துக் கொண்டிருப்பான்’ என்று ஓவியத்தை அவர் புரிந்துகொண்ட மொழியில் விளக்குகிறார். பிம்போ புராணகால ருக்மிணியாகத் தன்னுடன் வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் அவளைத் தேடிச் செல்கிறான் ஹரிகிருஷ்ணன். இது துவாபரயுகம் இல்லை; கலியுகம் என்பதை பிம்போ புரிந்து வைத்திருக்கிறாள். ‘அம்மா எங்கே சொல்லுகிறாளோ, அங்கேதான் நான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று அம்மாவின் பெயரால் கலியுக ருக்மிணி கிருஷ்ணனை நிராகரித்து விடுகிறாள்.
கலைக்குக் கலியுகத்தில் எந்த மரியாதையுமில்லை. கலைஞனான ஹரிகிருஷ்ணனால் எந்த மாயத்தையும் தன் வாழ்க்கையில் நிகழ்த்திட முடியவில்லை. வாழ்க்கை அதன் போக்கில் இவனை இழுத்துக்கொண்டு செல்கிறது. ஹரிகிருஷ்ணனுக்கு நன்றாகப் புல்லாங்குழல் வாசிக்கத் தெரிகிறது. ஆனால், அந்தக் குழல் இசைக்கு மயங்கும் ராதையும் ருக்மிணியும் கடைசிவரை அவனுக்குத் தெரியவே இல்லை. ஆனாலும் அவனது வாழ்க்கை பெண்களால் நிரம்பியதாகவே இருந்திருக்கிறது. இவன் கலைஞனாக இருப்பதால் நிகழ்கால யதார்த்தத்தைப் புரிந்துகொள்கிறான். இவனுடைய நண்பனான சாஹிர் இரண்டாவதாகக் காதலித்த பெண்ணின் பெயர் அமிருதா. அமிருதா பிரீதம் தன்னுடைய காதலனான உருதுக் கவிஞன் சாஹீரையும் ஒரு கதாபாத்திரமாக இந்நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். அமிருதா சாஹீரைத் தீவிரமாகக் காதலித்திருக்கிறார். சாஹீர்தான் தன் இயலாமையினால் அமிருதாவின் காதலை நிராகரித்திருக்கிறார். தன் மதம், குடும்பப் பின்னணி குறித்துச் சாஹீருக்கு இருந்த பலவீனமான எண்ணங்களே அமிருதாவின் காதலை ஏற்க தடையாக இருந்திருக்கிறது. இந்தப் புனைவிலும் இதனை அமிருதா எழுதியிருக்கிறார். படைப்பாளர்களுக்குக் காதல் விவகாரங்களில் துணிந்து முடிவெடுப்பதில் ஒருவித அச்ச உணர்வு எப்போதும் இருந்திருக்கிறது. தன்னைச் சமூகப் பொறுப்புள்ளவனாகக் கட்டமைத்துக்கொண்ட படிமம் இதுபோன்ற சூழல்களில் குறுக்கே வந்து நிற்கும். இதுதான் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட அவனுடைய நண்பர்களின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
ஹரிகிருஷ்ணன் இலா என்ற குஜராத்திப் பெண்ணைக் காதலிக்கிறான். ‘நாமிருவரும் சேர்ந்து குடும்பம் அமைத்தால், வீட்டுச் செலவை எப்படி நடத்துவது’ என்று கேட்கிறாள் இலா. ஹரிகிருஷ்ணன் ஒரு வேலைக்குச் செல்கிறான். வேலை அவனது கலைப்பணியைப் பாதிக்கிறது. ஹரிகிருஷ்ணன் கலைதான் என் வாழ்வின் ராதையும் ருக்மிணியும் என்பதைப் புரிந்துகொள்கிறான். அந்தக் காதலும் அறுந்து விழுகிறது. இலாவை மறக்க ஓவியங்களில் கவனம் செலுத்துகிறான். மின்னி என்ற பெண்ணும் ஹரிகிருஷ்ணன் வாழ்க்கையில் குறுக்கீடு செய்கிறாள். தொன்மக் காலத்தில் கிருஷ்ணனின் லீலைக்குப் பல பெண்கள் மயங்கிக் கிடந்தனர். ஆனால் இந்நவீனக் காலத்தில் கிருஷ்ணனைப் பல பெண்கள் ஏமாற்றுகின்றனர். அன்றாடத் தேவைகளுக்கு சிறிய ஹரிகிருஷ்ணனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். லௌகீக வாழ்க்கையை இவள் சுயபோதத்துடன் அணுகுகிறாள். இப்புனைவு முழுக்க கற்பனையும் யதார்த்தமும் ஒன்றையொன்று வெட்டிக்கொண்டே செல்கின்றன. கிருஷ்ணன் என்ற தொன்மக் கதாபாத்திரம் யதார்த்த வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறானது. யதார்த்தத்தில் கிருஷ்ணன் என்ற பெயரே சுமையாகிவிடுகிறது. இந்த உண்மை இந்நாவலில் மிகச் சிறப்பாகத் தொழிற்பட்டிருக்கிறது.
நாவல், இந்தியப் பிரிவினையின்போது நடந்த துயரங்களையும் மிகத் தீவிரத் தொனியுடன் பதிவு செய்துள்ளது. ஹரிகிருஷ்ணன் பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவன். 1947இல் நடந்த எல்லை பிரிவினையின்போது, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு பஞ்சாப் பகுதிகள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டன. இந்துக்களும் சீக்கியர்களும் அதிகமாக இருந்த கிழக்கு பஞ்சாப் பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. ஓவியர் ஹரிகிருஷ்ணன் பிறந்தது கிழக்கு பஞ்சாப். அமிருதா பிரீதம் பிறந்தது மேற்கு பஞ்சாப். அமிருதா பிரிவினையின் காரணமாக லாகூரிலிருந்து டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். பிரிவினையின் துயரங்களை நேரில் கண்டார். இதனைக் கவிதைகளாகவும் புனைவுகளாகவும் எழுதினார். இந்தப் புள்ளிதான் அமிருதாவைக் காத்திரமான எழுத்தாளராக மாற்றியது என விமர்சகர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த நாவலிலும் அது பிரதிபலித்துள்ளது. இந்நாவல் உண்மை கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட படைப்பு. இதனை ஹரிகிருஷ்ணன் ‘நாகமணி’ இதழின் கேள்வி பதில் பகுதியிலும் உறுதிப்படுத்துகிறார். ஹரிகிருஷ்ணனின் எதிர்வீட்டில் வசித்தவர் குலாம் மகமுது. ஹரிகிருஷ்ணன் இவரை குல்லு சித்தப்பா என்றே அழைப்பான். இந்துக்களும் இஸ்லாமியர்களும் அவ்வளவு நெருக்கமான அன்புடன் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு இந்நாவலின் குல்லு சித்தப்பாவும் அவருடைய மனைவி சைனி சித்தியுமே சிறந்த உதாரணங்கள். குழந்தை இல்லாத அந்தத் தம்பதிக்கு ஹரிகிருஷ்ணனே குழந்தையாக இருந்திருக்கிறான். ‘இவன் என்னுடைய மயிலாக்கும். என்னுடைய முற்றத்தில்தான் இவன் ஆடித் திரிவான்’ என்று ஹரி கிருஷ்ணனை உரிமையோடு அரவணைத்துக் கொண்டிருக்கிறார் சைனி சித்தி. பிரிவினையின்போது இந்தக் குடும்பம் நிலம் பெயர்ந்து பாகிஸ்தான் சென்றுவிட்டது. சொந்த ஊரில் ஒரு ராஜாவைப்போல வாழ்ந்தவரை இந்தியப் பிரிவினை ஓர் அகதியைப் போல விரட்டியிருக்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் சூரியன் உதிக்கவே இல்லை. ‘எனது சொர்க்கமும் நாசமாகிப் போய்விட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன். இது ஒரு குடும்பத்தின் கதை மட்டுமே. எவ்விதப் பிரச்சாரத் தன்மையும் இல்லாமல் இக்கதை எழுதப்பட்டுள்ளது. குல்லு சித்தப்பாவும் சைனி சித்தியும் மறக்க முடியாத கதாபாத்திரங்களாக இந்நாவலில் இடம்பெற்றுள்ளனர்.
‘ராதையுமில்லை ருக்மிணியுமில்லை’ என்ற நாவல் கலியுக கிருஷ்ணனின் கதை. பல பெண்களுடன் உறவுகொண்டாலும் இறுதியில் கலையே என்னுடைய ராதையும் ருக்மிணியும் என்பதைக் கிருஷ்ணன் உணர்ந்துகொள்வதுதான் இந்நாவலின் மையம். கலை எல்லாவற்றையும்விட உயர்ந்தது. ஹரிகிருஷ்ணன், சாஹிர், ஜெயதேவ் ஆகிய மூவரும் தங்களது கலைக்காக இல்லற வாழ்க்கையைத் தவறவிட்டவர்கள். அமிருதா பிரீதம் இவர்களோடு இணைந்துகொள்கிறார். கலையினூடாகத் தன் சுதந்திரத்தை உருவாக்கிக் கொண்டவர். இந்நாவலின் நான்காவது கதாபாத்திரம் இவர்தான். அமிருதா தன்னை உள்ளடக்கியே இந்தப் புனைவை எழுதியிருக்கிறார். பால்யகால நண்பரும் ஓவியருமான ஹரிகிருஷ்ணனின் வாழ்க்கையைத்தான் அமிருதா எழுத நினைத்தார். ஒரு கலைஞனின் இருப்பு இந்தச் சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்ற கேள்வியினூடாக இந்நாவல் தொடங்குகிறது. இடையில் ஹரிகிருஷ்ணனுடன் இந்தியப் பிரிவினையும் இணைந்துகொண்டு பிரதிக்கும் வேறொரு முகத்தைக் கொடுக்கிறது. ஓவியனின் இருத்தலுடன் அவன் வாழும் சமூகம் மதத்தின் காரணமாக எவ்வாறு துண்டாடப்பட்டது என்பதையும் இந்நாவல் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறது. இப்படியொரு நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்த சரஸ்வதி ராம்நாத் எப்போதும் பாராட்டுக்குரியவர்.





