ஒலேஸ்யா-அலெக்ஸாண்டர் குப்ரின்

(1)

என்னுடைய வேலைக்காரனும், சமையற்காரனும், வேட்டைத்தோழனுமான விறகுவெட்டி யர்மோலா முதுகில் விறகுக்கட்டைச் சுமந்தபடி அறைக்குள் நுழைந்தான். விறகுக்கட்டைக் கீழே எறிந்துவிட்டு குளிரில் விறைத்துப்போன தன் கைகளை வாயால் ஊதிச் சூடேற்றினான்.   

“வெளியில் நல்ல காற்று, மாஸ்டர்” கணப்படுப்பின்முன் குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு சொன்னான். 

“அடுப்பை நன்றாக எரியவிட வேண்டும். உங்களுடைய லைட்டரை நான் பயன்படுத்திக் கொள்ளவா?”

“அப்படியென்றால் நாளை நம்மால் முயல் வேட்டைக்குப் போகமுடியாது. இல்லையா? நீ என்ன நினைக்கிறாய், யர்மோலா?”

“வாய்ப்பே இல்லை. வெளியில் சத்தம் கேட்கிறதா? முயல்கள் எல்லாம் பதுங்கிவிட்டன. ஒரு தடயத்தைக் கூட உங்களால் நாளை பார்க்கமுடியாது.”

பொலிசியாவின் வோல்ஹினிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள, கடவுளால் கைவிடப்பட்ட பெரப்ராட் என்னும் குக்கிராமத்தில் பணி நிமித்தம் நெடிய ஆறு மாதங்களைக் கழிக்க எனக்கு விதிக்கப்பட்டிருந்தது. மிருகங்களை வேட்டையாடுவது மட்டுமே இங்கு என்னுடைய ஒரே பொழுதுபோக்கு. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், கிராமப்பகுதிக்குச் செல்லவேண்டிய வாய்ப்பு கிடைத்தபோது அது இவ்வளவு சலிப்பு தட்டக்கூடியதாக இருக்கும் என்று நான் கற்பனை கூடச் செய்யவில்லை. மாறாக, இங்கு வருவதை எண்ணி மிகுந்த ஆவலாக இருந்தேன். 

‘பொலிசியா – நகரச் சந்தடியிலிருந்து விலகி வெகுதொலைவு –இயற்கையழகின் உச்சம் – எளிய வாழ்க்கைமுறைகள் – பழமையான மனிதர்கள்’ என என்னென்னவோ கற்பனையில் மூழ்கியிருந்தேன். ‘விசித்திரமான பழக்க வழக்கங்களும் வித்தியாசமான பேச்சுவழக்கும் கொண்ட முற்றிலும் அந்நியமான மனிதர்கள் இருப்பார்கள். மேலும் செழுமையான புனைவுப் பாக்களும், பாரம்பரியங்களும் பாடல்களும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.’ ரயிலில் வரும்போது அப்படித்தான் நினைத்தேன்.

அதிகப் பிரபலமில்லாத ஒரு பத்திரிகையில், இரண்டு கொலைகள் மற்றும் ஒரு தற்கொலையை மையமாகக் கொண்ட என்னுடைய சிறுகதை ஒன்று அந்தச் சமயத்தில்தான் வெளியாகியிருந்தது. எனவே ஓர் எழுத்தாளனாக, பிற சமூகங்களின் பழக்க வழக்கங்களை அவதானிப்பது அவசியம் என்பதைக் கோட்பாட்டளவிலேனும் அறிந்து வைத்திருந்தேன்.

பெரப்ராடின் விவசாயிகள் இறுக்கமும் கூச்சச் சுபாவமும் கொண்டிருந்தமையா அல்லது அவர்களோடு பழகும் முறையை நான் அறிந்திராமையா என்ன காரணம் என்று தெரியவில்லை, எனக்கும் அவர்களுக்குமான உறவு என்பது, என்னைத் தொலைவில் பார்த்தவுடனேயே, தங்கள் தொப்பியை நீக்குவதும், அருகில் வந்ததும் ‘கடவுள் ஆசீர்வதிப்பாராக’ என்னும் பழங்கால வாழ்த்தினை மென்று முழுங்கி ‘கசாமுசா’ என்று மெதுவாக வாய்க்குள் முணுமுணுத்துச் செல்வதையும் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களோடு நானாக ஏதாவது பேச முயற்சி செய்தால், ஆச்சர்யத்தோடு என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள். என்னுடைய சாதாரணக் கேள்விகளைக் கூட எளிதில் புரிந்துகொள்ள மறுத்து, மீண்டும் மீண்டும் என் கைகளைப் பற்றி முத்தமிடுவதிலேயே குறியாக இருப்பார்கள். போலந்தின் பண்ணையடிமை முறை காலத்திலிருந்து தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்த கண்மூடிப் பழக்கம் அது. 

கையோடு கொண்டுவந்திருந்த ஒருசில புத்தகங்களை ஏற்கனவே வாசித்து முடித்துவிட்டேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டதால், அவ்வளவாக விருப்பம் இல்லாதபோதும், பேச்சுத்துணையின் பொருட்டு, பத்து மைல் தொலைவில் வசித்த போலந்தியப் பாதிரியார், அவருக்காக நியமிக்கப்பட்ட ஆர்கன் இசைக்கலைஞர், ஊர்க்காவல் அதிகாரி, பக்கத்து எஸ்டேட்டில் எழுத்தராக இருந்த, ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என உள்ளூரைச் சேர்ந்த படித்தவர்கள் சிலரோடு சிநேகம் ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டேன். அதனால் எந்தப் பயனும் உண்டாகவில்லை.

பிறகு, பெரப்ராடின் மக்களுக்கு வைத்தியச் சிகிச்சை அளிக்கும் முயற்சியில் இறங்கினேன். விளக்கெண்ணெய், கார்போலிக் அமிலம், போரிக் அமிலம் மற்றும் அயோடின் போன்றவை கைவசம் இருந்தன. ஆனால் வைத்தியம் சார்ந்த என் சிற்றறிவைக் கொண்டு, அவர்களுடைய நோய்மைக்கான காரணத்தை என்னால் கண்டறிய இயலவில்லை. அவர்கள் அனைவருமே சொல்லிவைத்தது போல ஒரே மாதிரியான பிரச்சனையோடு வந்தார்கள். ‘உள்ளுக்குள் வலிக்கிறது, எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை’.

உதாரணத்துக்கு, ஒரு மூதாட்டி வருவார். வலக்கையின் ஆட்காட்டி விரலால் மூக்கை நோண்டிவிட்டு, சங்கோஜத்துடன், மேலாடைக்குள்ளிருந்து இரண்டு முட்டைகளை எடுத்து மேஜைமீது வைப்பார். நான் அவருடைய பழுப்பு நிற உடலை ஒரு கணம் பார்க்க நேரும். அவர் என்னுடைய கைகளைப் பிடித்து முத்தமிட முயல்வார். நான் வெடுக்கென்று பின்னால் இழுத்துக்கொண்டு, சற்றே கடுமையாகச் சொல்வேன், “நிறுத்துங்கள் பாட்டிம்மா! இதையெல்லாம் செய்ய நான் ஒன்றும் பாதிரியார் கிடையாது. சரி, உங்கள் பிரச்சனை என்ன?” 

“உள்ளுக்குள் வலிக்கிறது, மாஸ்டர். சரியாக இதோ, இங்கேதான்! என்னால் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை.”

“எப்போதிலிருந்து இந்தப் பிரச்சனை இருக்கிறது?”

“எனக்கு எப்படித் தெரியும்?” அவர் என்னையே திருப்பிக் கேட்பார். “உள்ளே எரிச்சலான எரிச்சல்! என்னால் சாப்பிடவோ குடிக்கவோ முடியவில்லை” 

நான் எவ்வளவு தீவிரமாக முயற்சி செய்தாலும் அவரிடமிருந்து அவருடைய நோய்க்கூறுகளைப் பற்றிய மேலதிகத் தகவல்களைப் பெறுவதில் தோல்வியே மிஞ்சும். 

ஒருநாள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்! அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்வார்கள், நாய்களைப் போல. உங்களுக்குத் தெரியுமா? நான் எப்போதும் பயன்படுத்துவது ஒரே மருந்துதான் – நவச்சாரம்! ஒரு குடியானவன் வருவான். ‘என்ன செய்கிறது?’ என்று கேட்பேன். ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்பான். நான் நவச்சாரப் போத்தலைத் திறந்து அவன் மூக்கருகே காட்டி, ‘இதை முகர்ந்துபார்’ என்பேன். அவனும் முகர்வான். நெடி ஏறும். ‘இன்னும் கொஞ்சம் நன்றாக இழு’ என்பேன். அவன் இன்னும் ஆழமாக நெடியை உள்ளிழுப்பான். ‘இப்போது பரவாயில்லையா?’ என்று கேட்பேன். ‘முன்பு இருந்ததற்கு இப்போது பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன்’ என்பான். ‘சரி, குணமாகிவிட்டதல்லவா? நிம்மதியாய் வீட்டுக்குப் போ’ என்று அனுப்பிவிடுவேன்.” என்றார். 

எல்லாவற்றுக்கும் மேல், அந்தப் புறங்கை முத்தம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. என்னுடைய நோயாளிகளில் இன்னும் சிலர் என் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என் பூட்ஸைக் கூட முத்தமிட முயன்றனர். அவர்களை அவ்வாறு செய்ய உந்தியது, நன்றிப்பெருக்கு அன்று, பன்னூற்றாண்டு காலமாகத் தங்கள் மீது செலுத்தப்பட்ட அடக்குமுறை மற்றும் அடிமைத்தளை காரணமாக அவர்களுக்குள் புகுத்தப்பட்டிருந்த துதிப் பழக்கம். கிஞ்சித்தும் உறுத்தலற்ற இறுக்கபாவத்தோடு தங்களுடைய பெரிய சிவந்த பாதங்களைக் கிராமத்து மக்களின் உதடுகளில் திணிக்கும் அந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியையும் உள்ளூர் காவல் அதிகாரியையும் நான் திகைப்புடன் பார்த்தேன். 

அதன்பிறகு என் பொழுதுபோக்கிற்குத் துப்பாக்கி வேட்டையைத் தவிர வேறு எந்த வழியும் இல்லாமல் போனது. ஆனால் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் பருவநிலை மோசமாக மாறியபோது வேட்டையும் சாத்தியமற்றுப் போனது. தினமும் பயங்கரமாகக் குளிர்காற்று வீசியது. வெண்பனிப் பொழிவின் மீது இரவுதோறும் பனி உறைந்து கண்ணாடி போன்று கடினமான ஏடு உருவானது. முயல்கள் எந்தத் தடயமும் இல்லாமல் அவற்றின் மீது ஓடித் திரிந்தன. காற்று ஊளையிடும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அறைக்குள்ளேயே முடங்கிக்கிடப்பது எனக்குத் தாளவியலாத சலிப்பை உண்டாக்கியது. எனவேதான் யர்மோலாவுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுப்பதன் மூலம் பொழுதைக் கழிப்பதில் ஆர்வமானேன். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்றுதான் அது தொடங்கியது. 

ஒருநாள் நான் கடிதம் எழுதிக் கொண்டிருந்தபோது பின்னால் நிழலாடுவது போலத் தோன்றியது. திரும்பிப் பார்த்தேன். ஓலையால் பின்னப்பட்ட பாதணியால் சத்தமெழுப்பாமல் நடக்கும் யர்மோலா இப்போதும் அது போலவே சத்தமில்லாமல் நடந்துவந்து என் பின்னால் நின்றிருந்தான். 

“என்ன வேண்டும், யர்மோலா?” என்று கேட்டேன்.

“ஒன்றுமில்லை. சும்மா பார்த்தேன். எனக்கும் உங்களை மாதிரி எழுதத் தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இல்லை, இல்லை, உங்களை மாதிரி என்று சொல்லவில்லை” நான் புன்னகைப்பதைப் பார்த்துவிட்டு கூச்சத்துடன் அவசரமாக விளக்க முற்பட்டான், “என் பெயரை மட்டும்தான் குறிப்பிடுகிறேன்” 

“எதற்காக?” நான் ஆச்சர்யத்தோடு கேட்டேன். இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த பெரப்ராடிலும் மிகுந்த ஏழையும் சோம்பேறியுமான விவசாயியாகக் கருதப்படுபவன் யர்மோலா. விறகு வெட்டுவதால் கிடைக்கும் கூலியையும் அவனுடைய வயலிலிருந்து கிடைக்கும் கொஞ்சநஞ்ச வருமானத்தையும் அவன் குடித்தே அழித்தான். அந்தச் சுற்றுவட்டாரத்திலேயே நோஞ்சான் காளைகள் என்றால் அவை அவனுடைய காளைகள்தாம். அப்படி இருக்கும்போது அவனுக்குப் படிப்பறிவின் தேவை என்னவென்று எனக்குப் புரியவில்லை. சந்தேகத்தோடு நான் அவனைக் கேட்டேன், “உன் பெயரை எழுதத் தெரிந்து என்ன செய்யப்போகிறாய்?”

அவன் சுரத்தில்லாத குரலில் சொன்னான், “இந்தக் கிராமத்தில் யாருக்குமே எழுதப் படிக்கத் தெரியாது, மாஸ்டர். எந்தத் தாளிலாவது கையெழுத்து போடவேண்டும் என்றாலோ அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் வேலைநிமித்தம் பேசுவதற்கோ இங்கு யாரும் கிடையாது. ஊர்ப் பெரியவர் கைநாட்டு வைப்பார். ஆனால் அந்தத் தாளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரியாது. யாராவது ஒருவருக்காவது கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் அது எல்லாருக்கும் நன்மை தரக்கூடியதாக இருக்குமே.”

நியாயத் தர்மங்களுக்கு அடங்காத மூர்க்கமான வேட்டைக்காரனும் உல்லாசமான ஊர்சுற்றியுமான யர்மோலாவின் கருத்து அவனுடைய கிராமவாசிகளால் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இருப்பினும் அவன் தன்னுடைய கிராமத்தின் பொது நன்மைக்காகக் காட்டிய அக்கறை என்னை நெகிழச் செய்தது. நான் அவனுக்குப் படிப்பு சொல்லித்தரச் சம்மதித்தேன். ஆனால் பிறகுதான் தெரிந்தது, அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக்க முயல்வது எவ்வளவு கடினமான விஷயம் என்பது! 

அவன் தன் காட்டின் எல்லாப் பாதைகளையும் அறிவான். காட்டின் ஒவ்வொரு மரத்தையும் அறிவான். இரவானாலும் பகலானாலும் வழிதவற மாட்டான். தடயங்களைக் கொண்டே அந்தச் சுற்றுவட்டாரத்தில் ஓநாய், முயல், நரி ஆகியவற்றின் இருப்பைக் கண்டறியக் கூடியவன். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு சொல்லைக்கூட அவனால் கற்றுக்கொள்ள இயலவில்லை. உதாரணத்துக்கு ‘மா’ என்ற வார்த்தையைச் சொல்லச் சொன்னால், பெரும் மன அழுத்தத்தோடு ஒரு பிரச்சனையை எதிர்கொள்வது போன்று, உட்குழிந்த கருவிழிகளிலும் பெரிய மீசைக்கும் திருத்தப்படாத கருந்தாடிக்கும் பின்னால் திணறிக்கொண்டிருக்கும் மெலிந்த கரிய முகத்திலும் வலியும் வாதையும் தோன்ற, பத்து நிமிடங்களுக்கும் மேலாக, யோசனையில் ஆழ்ந்திருந்தான். 

“சொல்லு யர்மோலா – ‘மா’ சொல்லு ‘மா’.”  நான் அவனைத் தூண்டினேன், “காகிதத்தையே பார்த்துக்கொண்டு இருக்காதே. என்னைப் பார். இப்போது சொல்லு. ‘மா’”

யர்மோலா பெருமூச்சு விட்டான். பேனாவை மேஜை மீது வைத்துவிட்டு, வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான், “இல்லை, என்னால் முடியாது”

“ஏன் முடியாது? இது மிகவும் சுலபம். நான் சொல்வது போலவே நீயும் சொல்லு. ‘மா’ அவ்வளவுதான்” 

“இல்லை, மாஸ்டர், என்னால் முடியாது. எனக்கு மறந்துபோகிறது”

அவனுடைய மகா மோசமான மந்தபுத்திக்கு முன்பு என்னுடைய அனைத்து கற்பிக்கும் உத்திகளும் முயற்சிகளும் தோற்றுப்போயின. ஆனால் ஞானோதயம் அடைவதற்கான வேட்கை மட்டும் அவனிடம் துளியும் குறைந்தபாடில்லை. 

“நான் என் பெயரை மட்டும் கையெழுத்து போடக் கற்றுக்கொண்டுவிட்டால் எப்படியிருக்கும்!” அவன் மறுபடியும் எனக்கு ஆசை காட்டினான். “நான் வேறு எதையும் கேட்க மாட்டேன். என் பெயர் மட்டும் போதும் – யர்மோலா பாப்ரஸுக் – அவ்வளவுதான். வேறு எதுவும் வேண்டாம்.”

கடைசியில், அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்து அறிவுஜீவியாக்கும் என்னுடைய எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, இயந்திரத்தனமாக அவனுடைய பெயரை மட்டும் எழுதக் கற்பிக்கத் தொடங்கினேன். இந்தப் புதிய கற்பித்தல் முறை அவனுக்கு எளிதாக இருந்ததோடு, இரண்டாவது மாதத்தின் இறுதியில் பல்வேறு தடைகளைக் கடந்து தன்னுடைய குடும்பப் பெயரை எழுதுவதில் ஓரளவு தேறியிருந்தான். முதல் பெயரைப் பொறுத்தவரை, அவனுடைய சிரமத்தைக் குறைக்கும் வகையில் முழுவதுமாக விட்டுவிடுவது என்று முடிவுக்கு வந்தோம். 

மாலைநேரங்களில் அடுப்பு வேலைகளை முடித்துவிட்டு, என்னுடைய அழைப்புக்காக நிலைகொள்ளாமல் தவித்தபடி காத்திருப்பான் யர்மோலா.

“யர்மோலா, வா, படிக்கலாம்” என்று நான் சொன்னதும், மேஜையில் அமர்ந்து, அதில் முழங்கைகளை ஊன்றியபடி, தன்னுடைய கரிய, குச்சி போல் விறைத்து நிற்கும் விரல்களுக்கிடையில் பேனாவைப் பிடித்துக்கொண்டு புருவங்களை உயர்த்தி, “நான் எழுத ஆரம்பிக்கவா?” என்பான். 

“ம். எழுது”

முதல் எழுத்தான ‘P’-ஐ – நாங்கள் அதை ‘வளையத்துடன் கூடிய குச்சி’ என்றழைத்தோம் – சந்தேகத்துடனேயே எழுதுவான். பிறகு எதுவும் எழுதாமல் கேள்விக்குறியோடு என்னை நிமிர்ந்து பார்ப்பான்.

“ஏன் நிறுத்திவிட்டாய்? மறந்துவிட்டதா?”

“ஆமாம்” அவன் விரக்தியோடு தலையாட்டுவான்.

“என்ன ஒரு விநோதப் பிறவி நீ! சரி, பரவாயில்லை, அடுத்து ஒரு சக்கரத்தைப் போடு”

“அட, ஆமாம், ஒரு சக்கரம். இப்போது எனக்குத் தெரியும்” அவன் முகமலர்ச்சியோடு மிகுந்த கவனமாக ஒரு சக்கரத்தை வரைவான். அதுவோ எந்தவிதத்திலும் வட்டமாக இல்லாமல் கேப்சியன் கடலையொத்த வடிவில் கோணல்மாணலாக இருக்கும். பிறகு கண்களைச் சுருக்கி, இடமும் வலமுமாகத் தலையைச் சாய்த்துப் பார்த்து, தன்னுடைய எழுத்தைத் தானே ரசித்துக்கொண்டு சற்று நேரத்துக்கு அமைதியாக அமர்ந்திருப்பான். 

“என்னாச்சு? அடுத்ததை எழுது”

“கொஞ்சம் பொறுங்கள் மாஸ்டர். கொஞ்சம் பொறுங்கள்”

இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆழ்ந்த யோசனையில் இருந்துவிட்டுக் கேட்பான், “இதுவும் முதல் எழுத்து போலவேதான் இருக்கிறது. இல்லையா மாஸ்டர்?”

“ஆமாம், நீ அடுத்ததை எழுது”

கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் கடைசி எழுத்தான ‘K’ -வுக்கு முன்னேறினோம். அதை நாங்கள் ‘வாலோடு கூடிய கவைக்குச்சி’ என்று வர்ணித்தோம். 

சில வேளைகளில் தான் எழுதியவற்றைப் பார்த்து, கண்களில் பெருமிதம் மின்ன, என்னைக் கேட்பான்,  “இப்படியே படித்தால், இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் நான் சரளமாக எழுத ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மாஸ்டர்?” 

(2)

யர்மோலா அடுப்புக்கு முன்னால் அமர்ந்து கரித்துண்டுகளைக் கிளறிக் கொண்டிருந்தான். நான் என்னுடைய அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தேன். ஒரு பெரிய நிலக்கிழாருக்குச் சொந்தமான மாளிகையொன்றில் இருந்த பன்னிரண்டு அறைகளுள் முன்னம் ‘வரவேற்பறையாக’ இருந்த அறையில்தான் நான் தற்போது தங்கியிருந்தேன். மற்ற அறைகள் எல்லாம் பூட்டப்பட்டிருந்தன. அவற்றுள் பட்டுத்துணி போர்த்தப்பட்ட பழங்கால அறைகலன்களும், விசித்திரமான வெண்கலக் கலைப்பொருட்களும், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த உருவச்சித்திரங்களும் பூஞ்சை படிந்து கிடந்தன.  

மாளிகைக்கு வெளியே புயற்காற்று, நடுக்கமுற்ற கிழட்டுப் பிசாசு போலச் சீறிக்கொண்டிருந்தது. அதன் உறுமலுக்கிடையே ஊளை, அலறல், திகிலூட்டும் சிரிப்பு என விதவிதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. இரவு நெருங்க நெருங்க பனிப்புயல் இன்னும் தீவிரமானது. யாரோ வீட்டுக்கு வெளியில் நின்றுகொண்டு நுண்ணிய உலர் பனித்துகளை கை நிறைய உருட்டி உருட்டி ஜன்னல்களின் மீது விசிறியடிப்பது போன்று இருந்தது. அருகில் இருந்த காடு மறைமுகமான அச்சுறுத்தலோடு இடைவிடாமல் அனத்திக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தது. 

காலியான அறைகளுக்குள் நுழையும் காற்று புகைபோக்கிகளில் சீற்றத்தோடு இரைவதையும் உடனே அந்தப் பழைய, பாழடைந்த வீடு நடுங்கிக் கிடுகிடுத்து, விநோதமான சத்தங்களோடு சட்டென்று உயிர் பெறுவதையும் என்னை மீறிய எச்சரிக்கை உணர்வோடு கவனிப்பேன். வெள்ளைநிறக் கூடத்தில் ஒரு பெருமூச்சு எழும். ஆழமான, மனம் வெதும்பிய, துயரமிகுந்த பெருமூச்சு! அதைத் தொடர்ந்து, ஈரலித்துப்போன பலகைத்தரையின் மீது யாரோ அழுத்தமாகக் கால் பதித்து நடப்பதுபோன்று பலகைகள் விரிசலுற்றுக் கிறீச்சிடும். 

அடுத்த கணம் என்னுடைய அறையை ஒட்டிய இடைகழியில் யாரோ நின்றுகொண்டு கதவின் கைப்பிடியை எச்சரிக்கையாகவும் அதேசமயம் விடாப்பிடியாகவும் தள்ளித் திறக்க முயல்வது போலவும் பிறகு திடீரென்று வெறி கொண்டு வீடு முழுக்க ஓடி ஓடி ஆத்திரத்தோடு கதவுகளையும் ஜன்னல்களையும் அதிரச்செய்வது போலவோ அல்லது புகைபோக்கிக்குள் ஊர்ந்து சென்று, சுவாரசியமற்ற, ஒருபோதும் தீர்க்கப்பட முடியாத முறையீட்டுடன் அழுது புலம்புவது போலவோ தோன்றும். சிலசமயம் அது பரிதாபகரமான அலறலில் தொடங்கி மிருகத்தின் உறுமலில் முடியும்.  சில வேளைகளில் அந்தப் பயங்கரமான ஆள், எங்கிருந்தோ திடீரென்று என் அறைக்குள் தோன்றி, அவனுடைய குளிர்ந்த மூச்சுக்காற்றால் என் முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்து, புகைபடிந்த பச்சை நிறக் காகித மறைப்புக்குள் மங்கலாய் ஒளிர்ந்துகொண்டிருக்கும் விளக்கின் சுடரை நடுநடுங்க வைப்பான்.

விசித்திரமான, இன்னதென்று புரியாத பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. ‘புயல் வீசும் குளிர்கால இரவொன்றின் இருளில், நகர வாழ்க்கை, சமூகம், பெண்களின் சிரிப்பு, மனிதர்களின் உரையாடல்கள் யாவற்றிலிருந்தும் விலகி, நூற்றுக்கணக்கான மைல் தொலைவில், பனிப்பொழிவுக்கும் காடுகளுக்கும் மத்தியில் தொலைந்துபோன ஒரு குக்கிராமத்தில், ஒரு பாழடைந்த வீட்டில், இதோ.. இப்படி நான் உட்கார்ந்திருக்கிறேன்.’

இந்தப் புயலிரவு பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாகத் தொடர்ந்து என் மரணம் வரை நீடிக்கும் என்றும் அதுவரை இதே போன்று வெளியில் காற்று பலத்த சீற்றத்தோடு வீசிக்கொண்டிருக்கும் என்றும் நைந்துபோன பச்சைக் காகித மறைப்புக்குள் இந்த விளக்கும் இதே போன்று மங்கலாக எரிந்துகொண்டிருக்கும் என்றும் எனக்குத் தோன்றியது. 

நான் அசௌகரியத்தோடு அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடைபோட, யர்மோலாவோ முன் போலவே அமைதியாக கணப்படுப்புக்கு முன்பாக குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தான். அவன் குடும்பத்துக்கு உண்ண எதுவும் இருக்காது என்ற உண்மை, வெளியே வீசியடிக்கும் புயல்காற்று, என்னுடைய இன்னதெனத் தெரியாத, மனத்தை அரிக்கும் பெருங்கவலை என இந்தப் பூமியின் யதார்த்தங்களை அலட்சியப்படுத்தி அமர்ந்திருக்கும் யர்மோலாவைப் பார்த்தபோது எனக்கு அவன் ஒரு விநோதமான வேற்றுக்கிரகவாசி போலத் தெரிந்தான்.

அங்கு நிலவிய கனத்த அமைதியை ஏதேனும் பேசி, குலைக்க விரும்பினேன். எனவே யர்மோலாவைப் பார்த்து, “இவ்வளவு பயங்கரமான காற்று எங்கிருந்து வருகிறது என்று நினைக்கிறாய் யர்மோலா?” என்று கேட்டேன்.

“இந்தக் காற்றா?” சோம்பலோடு என்னை நிமிர்ந்து பார்த்தான். “ஏன், உங்களுக்குத் தெரியாதா, மாஸ்டர்?”

“தெரியாதே. எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?”

“உங்களுக்குத் தெரியாதா? உண்மையாகவா?” அவன் திடுக்கென்று விழித்துக்கொண்டான். “நான் சொல்கிறேன்” மர்மமான தொனியில் சொன்னான், “எங்காவது ஒரு சூனியக்காரி பிறந்திருக்கலாம் அல்லது ஒரு மந்திரவாதி மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கலாம்”

அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு ஆர்வம் பிறந்தது. ‘யார் அறிவார்? ஒருவேளை, இவன் வாயை மேலும் கிண்டினால் மாய மந்திரம், புதையல், ஓநாய்மனிதன் இப்படி ஏதேனும் சுவாரசியமான கதை கிடைக்கலாம்.’ என்று நினைத்தேன்.

“பொலிசியாவில் யாராவது சூனியக்காரிகள் இருக்கிறார்களா?” என்று கேட்டேன்.

“எனக்குத் தெரியாது. இருந்திருக்கலாம். ஒருகாலத்தில் அவர்கள் இங்கு இருந்ததாகப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒருவேளை அது உண்மையாக இல்லாமலும் இருக்கலாம்” அவன் முன்போலவே அலட்சியக் குரலில் சொல்லிவிட்டு மீண்டும் கணப்படுப்பின் முன்பு குறுகி அமர்ந்துகொண்டான். 

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. யர்மோலா உரையாடலில் எந்த அளவுக்கு இறுக்கமானவன் என்பது எனக்குத் தெரியும். எனவே அந்தச் சுவாரசியமான விஷயத்தில் மேலதிகமாக எதையும் அவனிடமிருந்து பெறமுடியுமென்ற நம்பிக்கையை இழந்தேன். ஆனால் என்னை ஆச்சர்யப்படுத்தும் விதமாக, அவனே திடீரென்று பேசத் தொடங்கினான். என்னிடம் பேசுவது போல் அல்லாமல் எதிரில் எரிந்துகொண்டிருக்கும் அடுப்பிடம் பேசுவதுபோல் சோம்பலும் அலட்சியமுமான குரலில் சொன்னான், “சில வருடங்களுக்கு முன்பு இங்கே ஒரு சூனியக்காரி இருந்தாள். ஆனால் பையன்கள் அவளைத் துரத்தியடித்துவிட்டனர்”

“எங்கே?”

“காட்டுக்குத்தான். வேறெங்கே? அவர்கள் அவளுடைய வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டார்கள். சபிக்கப்பட்ட அந்த வீட்டில் ஒரு துரும்பு கூட எஞ்சவில்லை. அவளை செர்ரிப்பழத் தோட்டத்துக்கு அப்பால் துரத்தியடித்துவிட்டார்கள்.”

“ஆனால் ஏன் அவர்கள் அவளை அப்படிச் செய்தார்கள்?”

“அவள் நிறையக் கெடுதல்கள் செய்தாள். எல்லோருடனும் சண்டை போட்டாள், வீடுகள் மீது துஷ்ட மந்திரங்களை ஏவிவிட்டாள், கதிர்களின் தண்டுகளில் பின்னல் இட்டாள். ஒரு தடவை ஓர் இளம் தாயிடம் போய் ஒரு ஸ்லோட்டி கேட்டாள். அந்தப் பெண், ‘என்னிடம் ஒன்று கூட இல்லை, போய்விடு’ என்று சொன்னாள். ‘சரி, ஆனால் எனக்கு ஒரு ஸ்லோட்டியைத் தர மறுத்ததற்காக ஒரு நாள் வருத்தப்படுவாய்’ என்று சொல்லிவிட்டு சூனியக்காரி போய்விட்டாள். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள் மாஸ்டர்? அந்தப் பெண்ணின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்த அந்தக் குழந்தை கடைசியில் இறந்தே போய்விட்டது. அப்போதுதான் பையன்கள் எல்லாம் சேர்ந்து அந்தச் சூனியக்காரியை அடித்து உதைத்து ஊரை விட்டுத் துரத்தினார்கள். ஒழிந்துபோகட்டும்!”

“இப்போது அந்தச் சூனியக்காரி எங்கிருக்கிறாள்?” நான் கேட்டேன்.

“சூனியக்காரியா?” அவன் சொல்லக்கூடாததைச் சொல்வது போல் மெதுவாகக் கேட்டான். “எனக்கு எப்படித் தெரியும்?” 

“அவளுக்குச் சொந்த பந்தம் என்று யாரும் இல்லையா?”

“இல்லை. அவளுக்கு யாரும் கிடையாது. அவள் ஊருக்குப் புதியவள், ரஷ்யாக்காரி அல்லது ஒரு நாடோடியாக இருக்கவேண்டும். அவள் இந்த ஊருக்கு வரும்போது நான் சின்னப்பையன். அவளோடு மகளோ, பேத்தியோ தெரியவில்லை, ஒரு சிறுமியும் இருந்தாள். பையன்கள் அவர்கள் இருவரையும்தான் துரத்தியடித்தார்கள்.”

“அதற்குப் பிறகு யாரும் அவளைத் தேடிப் போகவில்லையா? எதிர்காலத்தைக் கணிக்கவோ அல்லது ஏதேனும் வசிய மருந்து வாங்கவோ?” 

“பெண்கள் போவார்கள்” அவன் இகழ்ச்சியுடன் இழுவையாகச் சொன்னான். 

“ஓ.. அப்படியென்றால் அவள் எங்கே இருக்கிறாள் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.”

“எனக்குத் தெரியாது. அவள் டெவில்ஸ் நூக் பக்கத்தில்தான் எங்கோ வசிப்பதாகச் சொல்கிறார்கள். இரினோவா சாலைக்கு அந்தப் பக்கம் சதுப்புநிலம் இருக்குமே, தெரியுமா? அங்கேதான் அந்த சபிக்கப்பட்ட அந்தச் சூனியக்காரக் கிழவி இருக்கிறாள்.”

சில மைல்கள் தூரத்திலேயே ஒரு சூனியக்காரி – உண்மையானதொரு பொலிசிய சூனியக்காரி – வசிக்கிறாள் என்ற தகவலைக் கேட்டு எனக்குச் சிலிர்ப்பும் குறுகுறுப்பும் உண்டானது. 

“யர்மோலா, நான் எப்படி அவளைச் சந்திப்பது? அதுதான்… அந்த சூனியக்காரியை?” நான் கேட்டேன்.

“த்தூ” அவன் ஆத்திரத்தோடு துப்பினான். “நல்ல பரிச்சயம் கிடைக்கும் உங்களுக்கு”

“நல்லதோ கெட்டதோ, நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன். கொஞ்சம் வெயில் வந்ததும் நான் அவளுடைய இடத்திற்குப் போகத்தான் போகிறேன். நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும். காட்ட மாட்டாயா, என்ன?”

என்னுடைய கடைசி வரியைக் கேட்டதும் திடுக்கிட்ட யர்மோலா துள்ளிக் குதித்தான். 

“நானா?” அவன் ஆத்திரத்தோடு கத்தினான். “எவ்வளவு தங்கத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் நான் மாட்டேன். என்ன ஆனாலும் நான் அங்கு போக மாட்டேன்” என்றான். 

“அர்த்தமில்லாத பேச்சு! நீதான் செய்யப்போகிறாய்”

“இல்லை, மாஸ்டர், என்னால் முடியாது. இந்த உலகத்தையே கொடுத்தாலும் மாட்டேன். நானாவது போவதாவது?” அவன் மறுபடியும் ஆத்திரம் மேலிடக் கத்தினான். “நான்… ஒரு சூனியக்காரியின் வீட்டுக்குப் போவதா? அது நடக்காதிருக்கட்டும் கடவுளே! நான் உங்களையும் அங்கே போகவேண்டாம் என்றுதான் சொல்வேன் மாஸ்டர்.”

“உனக்கு விருப்பம் இல்லையென்றால் விடு. ஆனால் நான் முன்பே சொன்னபடி போகத்தான் போகிறேன். நான் அவளைப் பார்க்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறேன்.”

“ஆர்வம் தரும் அளவுக்கு அங்கே எதுவும் கிடையாது” யர்மோலா கோப முணுமுணுப்புடன் அடுப்பின் கதவைப் பட்டாரென்று மூடினான். 

ஒரு மணி நேரம் கழித்து, யர்மோலா தன் வீட்டுக்குப் புறப்படும் நேரம், இருட்டிய இடைகழியில் நின்று தேநீர் அருந்திக்கொண்டிருந்தான். 

“அந்தச் சூனியக்காரியின் பெயர் என்ன?” நான் அவனிடம் கேட்டேன்.

“மனுய்லிக்கா” அவன் அடித்தொண்டையால் சொன்னான்.

அவன் வெளிப்படையாய்க் காட்டிக்கொள்ளாதபோதும், அவன் என்னிடத்தில் பெரும் ஒட்டுதலோடு இருப்பதை நான் அறிவேன். வேட்டையாடுவதில் எங்களிடையே இருந்த ஒருமித்த ஆர்வம், அவனிடம் நான் எளிமையாகப் பழகும் விதம், எப்போதும் பசியோடும் வறுமையோடும் போராடும் அவனுடைய குடும்பத்துக்கு அவ்வப்போது செய்யும் உதவி, எல்லாவற்றுக்கும் மேலாக, அவனுடைய மொடாக்குடியைக் குறித்துக் கண்டனக்குரல் (அவனுக்குப் பிடிக்காத விஷயம்) எழுப்பாத ஒரே ஆளாக நான் இருப்பது என அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. எனவேதான் சூனியக்காரியைச் சந்திக்கும் என் தீர்மானம் அவனை ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டுசென்றுவிட்டது என்பதை வேகமாகச் செருமியும், வீட்டை விட்டு வெளியேறும்போது அங்கிருந்த அவனுடைய நாய் ரியாப்சீக்கை அதன் விலாவிலேயே கடுமையாக எட்டி உதைத்தும் வெளிக்காட்டினான். ரியாப்சீக் மிக மோசமாக அலறிக்கொண்டு ஒரு பக்கமாகப் போய் விழுந்தது. ஆனால் உடனேயே எழுந்து முனகலோடு யர்மோலாவைப் பின்தொடர்ந்து ஓடியது.

(3)

கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு மெதுவாக வெயில் தலைகாட்டத் தொடங்கியது. ஒரு நாள் காலையில் யர்மோலா வெகு சீக்கிரமாகவே என் அறைக்கு வந்துவிட்டான். “துப்பாக்கிகளைச் சுத்தம் செய்து வைப்பது நல்லது, மாஸ்டர்” இயல்பாகச் சொன்னான்.

“ஏன்? என்னாச்சு?” போர்வைக்குள் சோம்பல் முறித்தபடி கேட்டேன்.

“நேற்றிரவு முயல்கள் வெளியே வந்திருக்கின்றன. நிறையக் காலடித் தடங்கள் தென்படுகின்றன. நாம் அவற்றைத் தேடிப் போகலாமா?”

யர்மோலா காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லப் பெருத்த ஆர்வத்துடன் இருப்பது நன்றாகவே தெரிந்தபோதும், அது வெளியில் தெரியாமல் இருக்க, அலட்சியமாய் இருப்பதுபோல் காண்பிக்க முயன்றான். ஏற்கனவே அவனுடைய மரைகுழல் துப்பாக்கி தயாராகக் கூடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஒரு தடவை கூட இலக்கைத் தவறவிடாத அந்தத் துப்பாக்கி, துருவும் வெடிமருந்தும் அரித்துத் தின்றதால்  ஆங்காங்கே ஈயப்பற்றுகளோடு அலங்காரமாகக் காட்சியளித்தது. 

காட்டுக்குள் நுழைந்த சற்று நேரத்திலேயே முயல்களின் கால்தடங்களைப் பார்த்தோம். ஒரு ஜோடி காலடித் தடங்கள் பக்கம் பக்கமாகவும் மற்ற ஒரு ஜோடி தடங்கள் அவற்றின் பின்னாலும் பின்தொடர்ந்து சென்றிருந்தன. முயல் சாலையிலிருந்து வெளிப்பட்டு, சில நூறு கஜங்கள் அதை ஒட்டியே ஓடி, பிறகு அங்கிருந்த இளம் பைன்மரப் புதருக்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்திருந்தது. 

“நாம் அதை நெருங்கிவிட்டோம்” யர்மோலா சொன்னான், “இப்போது அது பதுங்கியிருக்கும். மாஸ்டர் நீங்கள்…” தடயங்களைக் கொண்டு திசைகளைத் தீர்மானிக்க அவனால் மட்டுமே இயலும் என்பதால் என்னை எந்தப் பக்கம் அனுப்புவது என்ற யோசித்துவிட்டுச் சொன்னான், “பழைய சாராயக்கடைப் பக்கம் செல்லுங்கள். நான் ஜாம்லின் பக்கத்திலிருந்து வருகிறேன். நாய் முயலைத் துரத்தத் தொடங்கியதும் நான் உங்களுக்குக் குரல் கொடுக்கிறேன்.” என்றான்.

அடுத்த நொடியே அவன் அடர்ந்த புதர்களுக்குள் ஊடுருவி மறைந்துபோனான். நான் காதுகளைக் கூர்மையாக்கிக் கவனித்தேன். ஆயினும் வேட்டைக்காரனின் இருப்பைக் காட்டும் எந்த அரவமும் கேட்கவில்லை, அவனுடைய காலடியில் ஒரு சுள்ளி உடையும் சத்தம் கூட கேட்கவில்லை. 

நான் மெதுவாக நடந்துசென்று அவன் குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். காட்டின் விளிம்புப் பகுதியில் நெடுநெடுவென வளர்ந்து நின்ற ஒரு மரத்தின் கீழ் ‘பழைய சாராயக்கடை’ என்று சொல்லப்பட்ட ஆளரவமற்ற, இற்றுப்போன அந்தக் குடிசையைக் கண்டேன். காற்று வீசாத குளிர்நாளில் மட்டுமே சாத்தியப்படும் அமைதியோடு ஆடாமல் அசையாமல் அது நின்றிருந்தது. பனிப்பொழிவினால் தாழ்மரக்கிளைகளில் சேகரமாகியிருந்த கனத்தப் பனிக்கட்டிகள் அம்மரங்களுக்கு அழகிய விழாக்காலத் தோற்றத்தைத் தந்திருந்தன. மரத்தின் உச்சியில் முறியும் சிறு கொம்பு மரக்கிளைகளை உரசிக்கொண்டு கீழே விழும் சத்தம் எனக்குத் தெளிவாகக் கேட்டது. பனி, கதிரொளியில் இளஞ்சிவப்பு நிறத்திலும், நிழலில் நீலநிறத்திலும் காட்சியளித்தது. மாயாஜாலம் போன்ற அந்த ஆளரவமற்றச் சூழலும், குளிரமைதியும் என்னை ஆட்கொள்ள, சத்தமின்றி நேரம் கடந்துகொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.  

திடீரென்று காட்டுக்குள்ளிருந்து எங்கோ வெகுதொலைவில் ரியாப்ச்சிக்கின் குரைப்பொலி கேட்டது. வேட்டை விலங்கைத் துரத்திக்கொண்டு ஓடும் நாயின் தனித்துவமான குரைப்பொலி, கிட்டத்தட்ட ஊளை போன்று பதற்றத்துடன் கூடிய உச்சஸ்தாயியிலான கீச்சொலி அது. கூடவே யர்மோலா நாயிடம் ‘ஓ-பீ! ஓ-பீ!’ என்று கடுமையாகக் கத்துவதும் கேட்டது. முதல் எழுத்தின் உச்சரிப்பு கூர்மையாகவும், சற்றே இழுவையாகவும் இரண்டாவதன் உச்சரிப்பு அதிர்வும் சிறு நடுக்கமுமாகவும் இருந்தது. யர்மோலாவின் அச்சொல் பொலிசிய மொழியின் ‘ஓபீவட்’ (‘கொல்’ என்று பொருள்) என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது என்பது பின்னாளில்தான் எனக்குத் தெரியவந்தது. 

குரைப்பொலி வந்த திசையை வைத்துப் பார்த்தபோது, நாய் முயலை என்னுடைய இடப்பக்கமாகத் துரத்தி வருகிறதென நினைத்தேன். எனவே நான் அதைக் குறுக்கிட்டுப் பிடிக்கும் எண்ணத்துடன் பொட்டல் வெளியைக் கடந்து ஓடினேன். இருபது கெஜ தூரம் கூட ஓடியிருக்க மாட்டேன், விழுந்துகிடந்த ஒரு மரக்கட்டைக்குப் பின்னாலிருந்து ஒரு பெரிய சாம்பல் நிறப் பெருமுயல் திடீரென்று வெளிப்பட்டது. தப்பிக்கும் அவசரம் ஏதுமில்லாததுபோல், தலையை ஒட்டித் தொங்கும் காதுகளோடு, இரண்டொரு நெடிய தாவல்களில் சாலையைக் கடந்து புதருக்குள் மறைந்துபோனது. முயலைத் துரத்திக்கொண்டு அதன் பின்னாலேயே ஓடிவந்த ரியாப்ச்சிக் என்னைப் பார்த்தவுடன் லேசாக வாலை ஆட்டி,  கொஞ்சம் பனியைக் கவ்வி விளையாடிவிட்டு மறுபடியும் முயலைத் துரத்துவதைத் தொடர்ந்தது. திடீரென்று யர்மோலா காட்டுப்பகுதியிலிருந்து வெளிப்பட்டான். “நீங்கள் ஏன் அதை மறிக்கவில்லை, மாஸ்டர்?” அவன் கத்திவிட்டு உச்சுக் கொட்டினான். 

“ஆனால் நான் ரொம்ப தூரத்தில் இருந்தேனே, இருநூறு அடி அல்லது அதற்கும் மேல் இருக்கும்” என்றேன். அதைத் தவறவிட்டதால் வெளிப்படையாக என் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவனைச்  சற்று இளக்கியது. “சரி, பரவாயில்லை. அது எங்கேயும் போய்விடாது. உடனே இரினோவா சாலைக்குச் செல்லுங்கள். அது இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்தப் பக்கம் வந்துவிடும்.” 

நான் சாலையை நோக்கி ஓடினேன். இரண்டு நிமிடங்களில் மறுபடியும் நான் இருந்த இடத்துக்கு அருகில் நாய் முயலைத் துரத்திக்கொண்டு ஓடும் சத்தத்தைக் கேட்டேன். விளையாட்டு வீரனின் உற்சாகத்தோடும் உத்வேகத்தோடும் என்னுடைய துப்பாக்கியைத் தயார் நிலையில் பிடித்தபடி, மரக்கிளைகளுக்கு நடுவில் கீறல்களைப் பொருட்படுத்தாமல்  அடர்ந்த புதர்களை ஊடுருவி ஓடினேன். சிறிதுநேரம் அப்படியே ஓடிக்கொண்டிருந்தேன். நாயின் குரைப்பொலி நின்றபோது நான் கிட்டத்தட்ட களைத்துப்போயிருந்தேன். மூச்சுத் திணறியது. என்னுடைய வேகத்தைக் குறைத்துக்கொண்டேன். இப்படியே நேராகப் போனால் இரினோவா சாலை வந்துவிடும், அங்கே யர்மோலாவைப் பார்ப்பது உறுதி என்று நினைத்தேன். 

திக்கைப் பற்றிக் கவலைப்படாமல் புதர்களையும் மரங்களையும் கடந்து கண்மண் தெரியாமல் ஓடியதில் வேறெங்கோ வழிதவறி வந்திருப்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. நான் யர்மோலாவைக் கூவி அழைத்தேன். ஆனால் அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 

கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் அடர்த்தி குறைந்துகொண்டே வந்து சொதசொதவென்ற சதுப்பு நிலம் ஆரம்பித்தது. பனியில் நான் கால் பதித்த இடமெல்லாம் கருப்பு நிறமாகி, அவற்றில் நீர் நிரம்பியது. பல முறை முழங்கால் அளவு சேற்றில் புதைந்து மீண்டேன். மேடு மேடாகத் தாவி நடக்கவேண்டியிருந்தது. மென்கம்பளத்தில் புதைவது போல் புழுப்புநிறப் பாசி படர்ந்த நிலத்தில் என் பாதங்கள் புதைந்தன. கொஞ்ச நேரத்திலேயே புதர்வெளியை விட்டு வெளியே வந்துவிட்டேன். எதிரில் பனி மூடிய ஒரு பெரிய சதுப்புக் குட்டை தென்பட்டது. அதில் ஆங்காங்கே டஸ்ஸாக் புற்கள் வளர்ந்திருந்தன. சதுப்புக் குட்டையின் மறுபக்கத்தில் மரங்களுக்கு நடுவில் ஒரு குடிசையின் வெண்ணிறச் சுவர்கள் தெரிந்தன. ‘அது இரினோவோ மரவெட்டியின் வீடாகத்தான் இருக்கவேண்டும். அங்கே போய் வழி கேட்பதே நல்லது.’ என்று நினைத்தேன். 

ஆனால் அந்தக் குடிசையைச் சென்றடைவது அவ்வளவு எளிதாக இல்லை. ஒவ்வொரு கணமும் சகதிக்குள் சிக்குவதும் மீள்வதுமாக இருந்தேன். என்னுடைய முழங்கால் உயர பூட்ஸ்களுக்குள் சேறும் தண்ணீரும்  புகுந்ததால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ‘பச்சக்’ ‘பச்சக்’ என்று பெருத்த சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. அவற்றை இழுத்துக்கொண்டு நடப்பதே பெரும்பாடாக இருந்தது. 

ஒருவழியாகக் குட்டையைக் கடந்து ஒரு சிறிய மேடான பகுதியில் ஏறி நின்று பார்த்தேன். அங்கிருந்து குடிசையை நன்றாகப் பார்க்க முடிந்தது. தேவதைக் கதைகளில் வரும் சூனியக்காரியின் வீட்டைப் போல அது காட்சியளித்தது. அது தரையில் இல்லாமல் சற்று உயரமாக மரத் தூண்களால் தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. இரினோவோ காட்டுப்பகுதி வசந்தகாலத்தில் எப்போதும் வெள்ளக்காடாக இருக்கும் என்பதால் வீட்டை உயர்த்திக் கட்டியிருக்கக்கூடும் என்று தோன்றியது. ஆனால் மிகவும் பழைமையான அந்த வீடு சிதிலமடைந்து அவல நிலையில் காட்சியளித்தது. சில ஜன்னல்களில் கதவுகளைக் காணவில்லை. அவற்றுக்குப் பதிலாக அழுக்குத் துணிகள் வெளிப்புறமாக உப்பித் தொங்கிக்கொண்டிருந்தன. 

நான் கதவின் கைப்பிடியைத் தள்ளி கதவைத் திறந்தேன். உள்ளே ஒரே இருட்டு. கண்களுக்கு முன் கருநீல வளையங்கள் வட்டமிட்டன. வெகுநேரமாக பனியையே பார்த்துக்கொண்டிருந்ததால் சட்டென்று பார்வைக்கு எதுவும் புலனாகவில்லை. மெதுவாக இருட்டுக்குப் பழகி,  யாராவது உள்ளே இருக்கிறார்களா என்று தேடினேன். 

“யாராவது இங்கே இருக்கிறீர்களா, நல்ல மனிதர்களே?” உரக்கக் குரல் எழுப்பினேன். 

அடுப்புக்குப் பக்கத்தில் சலனம் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு முதியவள் தரையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்னால் ஒரு பெரிய கோழியிறகுக் குவியல் இருந்தது. அவள் ஒவ்வொரு இறகாக எடுத்து நடுவிலிருக்கும் ஈரிலிருந்து தூவிகளை உருவிக் கூடையில் போட்டு, ஈர்களைத் தரையில் வீசிக்கொண்டிருந்தாள். 

‘ஓஹோ…இவள்தான் இரினோவோவின் சூனியக்காரி மனுய்லிக்காவாக இருக்கவேண்டும்.’

இந்த எண்ணம் உதித்ததுமே நான் அந்த முதியவளைக் கூர்ந்து நோக்கினேன். ஒடுங்கிப்போன கன்னங்கள், வெளிப்புறமாய் நீண்ட, கூர்மையான தாடை, ஏறக்குறைய அத்தாடையைத் தொடுவது போல் நீண்டு வளைந்த கோணல் மூக்கு என அவள் கிட்டத்தட்ட நாடோடிக்கதைகளில் வரும் ‘பாபா-யாகா’வைப் போலவே இருந்தாள். அவளுடைய பொக்கைவாய் எதையோ மெல்வது போல ஓயாமல் அசைந்துகொண்டே இருந்தது. ஒரு காலத்தில் நீல நிறத்தில் இருந்த கண்கள் இப்போது துருத்திக்கொண்டு மங்கியும் குளிர்ந்தும் காணப்பட்டன. சிறிய செந்நிற இமைகளோ பார்ப்பதற்கு விசித்திரமான துர்ச்சகுனம் காட்டும் பறவையின் கண்களைப் போன்று இருந்தன. 

“வணக்கம், பாட்டி” எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிநேகபாவத்துடன் சொன்னேன். “நீங்கள்தான் மனுய்லிக்காவா?” 

முதியவளின் மார்புக்கூட்டிலிருந்து படபடப்பும் இரைப்புச் சத்தமும் கேட்டன. அவளுடைய பொக்கைவாயிலிருந்து வெளிப்பட்ட விநோதமான ஒலிகள் ஒரு சமயம், மூச்சுவிடத் திணறும் வயதான காக்கையின் கரகரப்பான கரையும் ஒலி போலவும், மறு சமயம் உடைந்து, கிசுகிசுப்பான கீச்சொலி போலவும் கேட்டன.    

“ஒரு காலத்தில் சில நல்ல மனிதர்கள் என்னை ‘மனுய்லிக்கா’ என்று அழைத்தார்கள். ஆனால் இப்போது எனக்குப் பேரும் இல்லை, புகழும் இல்லை. சரி, உனக்கு என்ன வேண்டும்?” அவளுடைய பேச்சில் சிநேகபாவம் துளியும் இல்லை, தான் செய்துகொண்டிருந்த ஒரே மாதிரியான, சலிப்பு தரும் வேலையை அவள் நிறுத்தவும் இல்லை.

“நான் வழியைத் தவறவிட்டுவிட்டேன் பாட்டி, எனக்குக் கொஞ்சம் பால் கிடைக்குமா?”

“இங்கே பால் எதுவும் கிடையாது” அவள் எரிந்துவிழுந்தாள். “உன்னைப் போல ஏகப்பட்ட பேர் இந்தப் பக்கமாகப் போய்வந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லாருக்கும் என்னால் உணவளித்துக்கொண்டிருக்க முடியாது.”

“உங்களுக்குக் கொஞ்சம் கூட விருந்தோம்பும் பண்பே இல்லை, பாட்டி”

“உண்மைதான் ஐயா, எனக்கு இல்லை. இங்கே சாப்பாடு எதுவும் கிடையாது. களைப்பாக இருந்தால் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் செல்லுங்கள். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஒரு பழமொழி சொல்வார்களே, “எங்கள் வீட்டுக்கு வாருங்கள், எங்கள் தேவாலயங்களின் மணியோசையைக் கேளுங்கள், சாப்பாட்டுக்கு நாங்கள் உங்கள் வீட்டுக்கு வருகிறோம்” என்று. அப்படிதான் இதுவும்”

அவளுடைய பேச்சு, அவள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவள் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. அந்தப் பகுதியைச் சேர்ந்த எவரும் இப்படி முகத்திலடித்தாற்போல் பேசுவதையோ, அரிதான வார்த்தைகளால் அலங்காரமாகப் பேசுவதையோ விரும்பாதவர்கள். நாவன்மை மிக்க வடக்கத்தவர்தான் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அந்த முதிய பெண்மணியோ தான் செய்யும் வேலையை இயந்திரத்தனமாகத் தொடர்ந்துகொண்டிருந்தாள். இப்போதும் அவள் வாய்க்குள் மெதுவாக மிக மெதுவாக எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவள் பேசுவதில் எனக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் விட்டுவிட்டுக் கேட்டன. “உனக்கு மனுய்லிக்கா பாட்டி – ஆனால் அவள் யாரென்று யாருக்கும் தெரியாது – எனக்கு வயதாகிவிட்டது – நடுக்கத்துடனும் இரைப்புடனும் ஒரு சாதாரண மேக்பை குருவி போல அரற்றிக் கொண்டிருக்கிறேன்.”

அவள் சொல்வதைக் கொஞ்சநேரம் காதுகொடுத்துக் கேட்டேன். எனக்கு முன்னால் அமர்ந்திருப்பது ஒரு பைத்தியக்காரப் பெண்மணி என்ற எண்ணம் திடுக்கென்று தோன்றவே, அச்சமும் அருவருப்பும் உண்டானது. இருந்தபோதும் நான் அந்த இடத்தை மீண்டும் பார்வையிட்டேன். பெரும்பான்மையான இடத்தை விரிசலுற்ற அடுப்பு அடைத்துக் கொண்டிருந்தது. முன்பக்க மூலையில் குறிப்பிடத்தக்க எந்தப் பொருளும் இல்லை. வீடுகளில் பொதுவாகக் காணப்படும் நீல நாயுடன் நிற்கும் பச்சை மீசை வைத்த வேட்டைக்காரர்களின் படங்களோ அல்லது யாரென்று யாருக்குமே தெரியாத ஏதாவதொரு ராணுவ அதிகாரியின் உருவப்படங்களோ சுவர்களில் காணப்படவில்லை. அவற்றுக்குப் பதிலாக கொத்துக்கொத்தாய் உலர்ந்த மூலிகைகளும், கட்டுக்கட்டாய் காய்ந்து சுருங்கிய வேர்களும் சில சமையல் பாத்திரங்களும் மட்டுமே காணப்பட்டன. ஆந்தை, கருப்புப்பூனை போன்ற எதுவும் என் கண்களுக்குப் புலப்படவில்லை. ஆனால் அடுப்பின் மீது அமர்ந்திருந்த இரண்டு ஸ்டார்லிங் பறவைகள் மட்டும் அதிர்ச்சியோடும் சந்தேகத்தோடும் என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.   

“எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீராவது கிடைக்குமா, பாட்டி?” சற்று சத்தமாகக் கேட்டேன்.

“அங்கே வாளியில் இருக்கிறது” என்றாள்.

தண்ணீர் சேற்று வாடையோடு இருந்தது. நான் அந்த முதியவளுக்கு நன்றி கூறினேன். அவள் அதைக் கவனித்ததாகக்கூடத் தெரியவில்லை. நான் சாலைக்குச் செல்லும் வழியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அவளிடம் கேட்டேன். 

அவள் தலையை நிமிர்த்தி, குளிர்ந்திருந்த பறவைக்கண்களால் என்னை உற்றுப் பார்த்தாள். “போய்விடு, உன் வழியில் போய்விடு, இளைஞனே! உனக்கு இங்கு எந்த வேலையும் இல்லை. விடைபெறுகையில்தான் விருந்தினர்கள் மதிக்கப்படுகிறார்கள். போ, ஐயா” 

எனக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும் கடைசி முயற்சியாக அந்த முதியவளின் இறுக்கத்தைப் போக்கி கொஞ்சமாவது இலகுவாக்கவேண்டும் என்று தோன்றியது. நான் என்னுடைய சட்டைப்பையிலிருந்து புத்தம்புதிய வெள்ளி நாணயத்தை எடுத்து அவளிடம் நீட்டினேன். என்னுடைய கணிப்பு சரியாகவே இருந்தது. காசைப் பார்த்ததுமே அவளுடைய கண்கள் விரிந்தன, அவளுடைய முடிச்சு விழுந்த கோணல்மாணலான நடுங்கும் விரல்களை நீட்டி அதை வாங்க முற்பட்டாள்.  

“இல்லை, இல்லை, மனுய்லிக்கா பாட்டி, இதை நீங்கள் சும்மா வாங்கிக்கொள்ள முடியாது” நாணயத்தை கைப்பிடிக்குள் மறைத்துக்கொண்டு அவளைச் சீண்டினேன், “முதலில் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றேன்.

சூனியக்காரியின் பழுப்புநிற, சுருக்கம் விழுந்த முகம் ஆத்திரத்தால் மேலும் சுருங்கியது. இறுக்கமான என் பிடிக்குள் இருந்த நாணயத்தைச் சந்தேகமாய்ப் பார்த்தபடி அவள் நடுக்கத்தோடு ஆடிக்கொண்டிருந்தாள். இறுதியில் பேராசை வென்றது. 

“சரி, வா” அவள் முணுமுணுத்தபடி பெரும் பிரயாசையோடு தரையிலிருந்து எழுந்தாள். “இப்போதெல்லாம் நான் யாருக்கும் எதிர்காலத்தைக் கணிப்பதில்லை மகனே, எப்படி என்பது கூட எனக்கு மறந்துபோய்விட்டது. எனக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. என்னால் எதையும் பார்க்கமுடியவில்லை. உன்னை மகிழ்விப்பதற்காக மட்டுமே இப்போது இதைச் செய்கிறேன்.”

சுவரைப் பிடித்துக்கொண்டு அவள் மேஜையை நோக்கி நடந்தாள். ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் கூன் விழுந்த அவள் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. மேஜைப்பக்கம் சென்றதும் உள்ளே இருந்து பழுப்பு நிறத்தில் இருந்த, நெடுநாள் உபயோகத்தால் பிசுபிசுத்துப்போயிருந்த சீட்டுக்கட்டை எடுத்துக் கலைத்து மீண்டும் அடுக்கினாள். “உன்னுடைய இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும் இடக்கையால் கட்டை உடை.” என்று சொல்லி சீட்டுக்கட்டை என் முன் நீட்டினாள். 

விரல்களில் எச்சிலைத் தொட்டுக்கொண்டு சீட்டுகளை மேஜை மீது பரப்பத் தொடங்கினாள். மாவால் பிசைந்த அட்டைகள் போல் ‘தட் தட்’ என்னும் சத்தத்தோடு அவை மேஜை மீது விழுந்து ஓர் எண்கோண நட்சத்திர வடிவத்தை உருவாக்கின. கடைசி அட்டை ராஜாவின் மீது விழுந்தபோது, அவள் உள்ளங்கையை நீட்டினாள். “வெள்ளிக்காசை வை ஐயா, நீ சந்தோஷமாக இருக்கப் போகிறாய். பணக்காரனாகப் போகிறாய்” யாசகம் கேட்கும் ஜிப்சியைப் போலத் தாஜா பண்ணும் குரலில் கெஞ்சினாள். 

நான் அவள் கையில் நாணயத்தை வைத்தேன். அவள் படக்கென்று எடுத்து வாய்க்குள் இட்டு குரங்குகளைப் போலக் கன்னத்தில் அதக்கிக்கொண்டாள். “ஒரு நீண்ட பயணத்தினால் உனக்குப் பெரும் நன்மை கிடைக்கப்போகிறது” அவள் கிடுகிடுவென்று சொல்லத் தொடங்கினாள். “நீ டயமண்ட் ராணியைச் சந்திப்பாய். ஒரு முக்கியமான வீட்டில் அவளோடு இனிமையான உரையாடல் நடக்கும். விரைவிலேயே க்ளப்களின் அரசனிடமிருந்து நீ எதிர்பார்க்காத செய்தி வரும். உனக்குத் சில பிரச்சனைகளும் கூடவே கொஞ்சம் பணமும் வரும் என்று தெரிகிறது. நீ ஒரு பெரிய கூட்டத்தோடு இருப்பாய். நீ மதுபோதையில் இருப்பாய். போதை மட்டுமல்ல, இன்னும்கூட கொண்டாட்டம் உனக்கு மிச்சம் இருக்கும். உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது. நீ மட்டும் உன்னுடைய அறுபத்தேழாவது வயதில் மாண்டுபோகாமல் இருந்தால்…”

அவள் சொல்வதை நிறுத்திவிட்டு எதையோ செவிமடுப்பது போல் தலையை உயர்த்தினாள். நானும் என் காதுகளைத் தீட்டிக் கேட்டேன். குடிசைக்கு வெகு அருகில் ஒரு பெண்ணின் உற்சாகமும் துடிப்பும் திடமும் நிரம்பிய பாடலொன்று கேட்டது. இனிமை நிறைந்த அந்தப் பாடல் ஓர் உக்ரேனியப் பாடல் என்பதை நான் கண்டுகொண்டேன். 

பூத்துக்குலுங்கும் கிளைதான் அந்தச்

சிவப்பு ரோஜாவை வளைக்கிறதோ?

தூக்கக் கலக்க நிலைதான் எந்தன்

தலையைக் கனக்கச் செய்கிறதோ?

“தயவுசெய்து இப்போது புறப்படு, மகனே!” மனுய்லிக்கா நடுக்கமும் பதற்றமுமாக என்னை மேஜையை விட்டுத் தள்ளினாள். “அந்நிய மனிதர்களின் வீடுகளில் உனக்கு எந்த வேலையும் கிடையாது. நீ எங்கே போக வேண்டுமோ அங்கே போ!” 

அவள் என் சட்டைக் கையைப் பிடித்து இழுத்து கதவின் பக்கம் தள்ளவும் செய்தாள். அவள் முகத்தில் பெரும் பயமும் கலவரமும் குடிகொண்டிருந்தது. 

அந்தப் பாடல் குடிசையின் அருகில் வந்ததும் சட்டென்று நின்றுபோனது. கதவின் இரும்புக் கைப்பிடி திருகப்பட்டு கதவு திறந்தது. வாசலில் உயரமான ஒரு பெண், சிரிப்புடன் தோன்றினாள். கோடு போட்ட ஏப்ரானை இரு கைகளாலும் கவனமாக ஏந்திப் பிடித்திருந்தாள். சிவப்புக் கழுத்தும் கருகமணி போன்ற கண்களும் கொண்ட மூன்று சின்னஞ்சிறு பறவைகள் அதற்குள்ளிருந்து எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன.  

“இந்தக் குருவிகளைப் பாருங்கள் பாட்டி, மறுபடியும் என்னிடம் வந்துவிட்டன.” அவள் மகிழ்ச்சியோடு உரக்கச் சிரித்தாள். “எவ்வளவு குறும்பு பாருங்கள். இவை பசியோடு இருக்கின்றன. என்னிடம் ரொட்டி கூட இல்லை.”

அப்போதுதான் அவள் என்னைப் பார்த்தாள். பார்த்தவுடன் பேச்சு நின்றுபோய் கூச்சத்தால் முகம் சிவந்துபோனாள். அவளுடைய கருப்புநிறப் புருவங்களைக் கோபத்துடன் நெரித்து, மனுய்லிக்காவைக் கேள்விக்குறியோடு பார்த்தாள். 

“இந்தக் கனவான் வழி கேட்டு வந்திருக்கிறார்” முதியவள் விவரித்தாள். பிறகு என் பக்கம் திரும்பி திடமான குரலில், “சரிங்க ஐயா, நீங்கள் அதிக நேரத்தை வீணடித்துவிட்டீர்கள். தண்ணீர் குடித்தாயிற்று. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தாயிற்று. இனிமேலும் இங்கே இருப்பது சரியல்ல. நாங்கள் உங்களுக்குப் பேச்சுத்துணை கிடையாது.”   

நான் அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னேன், “இங்கே பாரம்மா, அழகுப் பெண்ணே! இரினோவோ சாலைக்குப் போகும் வழியை நீ எனக்குக் காட்டுவாயா? நானாக வழிகண்டுபிடித்துப் போவதென்றால் உங்கள் சதுப்புநிலத்தை விட்டு ஒரு காலத்திலும் வெளியே போக முடியாது என்று நினைக்கிறேன்.”  

என் மென்மையான இறைஞ்சல் தொனி அவளை ஈர்த்துவிட்டது. ஸ்டார்லிங் பறவைகளுக்குப் பக்கத்தில் அவள் கொண்டுவந்த குருவிகளை மிகக் கவனமாக வைத்துவிட்டு, தான் அணிந்திருந்த மேல் கோட்டைக் கழற்றி மேஜை மீது வீசிவிட்டு அமைதியாக வெளியே வந்தாள். நான் அவளைப் பின்தொடர்ந்தேன். 

“உன் பறவைகள் சொல்பேச்சு கேட்குமா?” நான் அவளை முந்தி நடை போட்டபடி கேட்டேன். 

“ஆமாம்” என்னைப் பார்க்காமல் வெடுக்கென்று பதிலளித்தாள். வாட்டில் மர வேலியோரம் நின்றபடி “அங்கே பாருங்கள், பைன் மரங்களுக்கு நடுவில் ஒரு பாதை போகிறது அல்லவா?” என்று கேட்டாள்.

“ஆமாம்”

“அதில் நேராகச் செல்லுங்கள். ஒக் மரக்கட்டை கிடக்கும் இடத்துக்கு வரும்போது இடப்பக்கம் திரும்புங்கள். காட்டின் ஊடாக வலப்புறமாகவே போங்கள். அந்தப் பாதை இரினோவோ சாலைக்கு உங்களைக் கொண்டுபோய் விட்டுவிடும்.”

அவள் தன்னுடைய வலக்கையை நீட்டி வழிசொல்லும்போது என்னால் அவளுடைய அழகை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. மேலிருந்து நெற்றிவரையும், கீழிருந்து தாடை மற்றும் வாய் வரையும் கைக்குட்டைகளைக் கொண்டு அசிங்கமான முறையில் இழுத்து மூடி, பார்ப்பதற்கு ஒன்று போலவே தோன்றி மிரளவைக்கும் உள்ளூர்ப் பெண்களைப் போன்று அவள் இல்லை. என் அருகில் இருந்த அப்பெண், உயரமாகவும், கருமையான கேசத்துடனும் இருபது முதல் இருபத்தைந்து வயதுக்கு உட்பட்டவளாய், எளிமையாகவும் வசீகரமான தோற்றத்துடனும் காணப்பட்டாள். அவளுடைய வடிவான இளமார்பகங்களை தொளதொளப்பான வெள்ளை ரவிக்கை மறைத்திருந்தது. அவளுடைய அசாதாரணமான அழகை யாரும் ஒருமுறை பார்த்தால் போதும், ஒருநாளும் மறக்கவே மாட்டார்கள். ஆனால் அவளைப் பார்த்துப் பழகிய பிறகும் அவளுடைய அழகை வர்ணிப்பது அவ்வளவு கடினமானதாக இருக்கும். அந்த வசீகரமானது, ஆணவமும், அப்பாவித்தனமும் துடுக்குத்தனமும் வெளிப்படுத்தும், திருத்தமான புருவங்களோடு கூடிய பெரிய பிரகாசமான கருவிழிகளிலும், மாநிற முகம் கொண்ட இளஞ்சிவப்பிலும், அழகிய வளைந்த அதரங்களிலும் வெளிப்பட்டது.   

“இந்தக் காட்டுப்பகுதியில் தனியாக வசிப்பதற்கு உங்களுக்குப் பயமாக இல்லையா?” வேலியோரம் நின்றபடி நான் கேட்டேன்.

அவள் அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினாள். “எதற்காக நாங்கள் பயப்பட வேண்டும்? ஓநாய்கள் ஒருபோதும் இந்தப் பக்கம் வருவதில்லை”

“நான் ஓநாய்களை மட்டும் குறிப்பிடவில்லை. கடும்பனிப்பொழிவு உண்டாகலாம், காட்டுத்தீ உருவாகலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நீங்கள் இருவரும் மட்டும் தனித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு உதவி செய்யவும் இங்கு யாரும் இல்லை.”

“அதுதான் நல்லது” அவள் வெறுப்புடன் முகத்தைச் சுழித்தாள். “அவர்கள் என்னையும் என் பாட்டியையும் தனியாக விட்டாலே போதும். ஆனால்…”

“ஆனால் என்ன?”

“அளவுக்கு மீறி அறிந்துகொண்டால் தலையில் வழுக்கை விழுந்துவிடுமாம், உங்களுக்குத் தெரியுமா?” அவள் பேச்சை இடைவெட்டினாள். பிறகு, “ஆமாம், நீங்கள் யார்?” எனச் சங்கடத்துடன் கேட்டாள். 

அந்த முதியவளும் இந்த இளம்பெண்ணும் அரசு அதிகாரிகளால் ஏதேனும் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று உணர்ந்தவுடன் அவளது அச்சத்தைப் போக்க அவசரமாகச் சொன்னேன், “கவலைப்படாதே. நான் காவல் அதிகாரியோ, எழுத்தரோ, வரி வசூலிப்பவரோ கிடையாது. சொல்லப்போனால் அரசு அதிகாரிகளோடு எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.” 

“உண்மையாகவே கிடையாதா?”

“சத்தியமாகச் சொல்கிறேன். என்னை நம்பு. நான் இந்தப் பகுதிக்கு முற்றிலும் புதியவன். சில மாதங்கள் மட்டும் இங்குத் தங்க வந்திருக்கிறேன். பிறகு திரும்பிச் சென்றுவிடுவேன். உனக்கு விருப்பமில்லை என்றால் நான் இங்கு வந்ததையோ, உங்களைப் பார்த்ததையோ யாரிடமும் சொல்லமாட்டேன். என்னை நம்புகிறாயா?”

அவளுடைய முகம் சற்றே மலர்ந்தது.

“சரி, நீங்கள் உண்மையைத்தான் சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இதற்குப் பதில் சொல்லுங்கள், இங்கு வருவதற்கு முன்பு எங்களைப் பற்றி ஏதாவது கேள்விப்பட்டு வந்தீர்களா? அல்லது தற்செயலாக வந்தீர்களா?”

“நான் இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருநாள் உங்கள் இடத்துக்கு வந்து உங்களைச் சந்திக்கவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். ஆனால் இன்று… வழி தவறித் தொலைந்துபோய்… தற்செயலாகத்தான் இந்த இடத்துக்கு வர நேர்ந்தது. எனக்கு ஒன்று தெரியவேண்டும். நீங்கள் ஏன் மனிதர்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்? அவர்கள் உங்களுக்கு என்ன கெடுதல் செய்கிறார்கள்?”

அவள் சந்தேகத்தோடு என்னைக் கூர்ந்து நோக்கினாள். நான் தெளிவாக இருந்ததால், அவளுடைய அந்தப் பார்வை என்னுள் எந்தச் சலனத்தையும் உண்டாக்கவில்லை. பிறகு அவள் உணர்வுப்பெருக்குடன் பேசத் தொடங்கினாள்.

“அவர்களால் நாங்கள் நிறையத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சாதாரண மக்களால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிகாரிகள் – ஊர்க்காவல் அதிகாரி, மாவட்டக் காவல் அதிகாரி போன்ற சிலர் – அவர்களுக்கு எப்போதும் எதையாவது நாங்கள் பரிசாகத் தந்துகொண்டே இருக்கவேண்டும். அது மட்டுமல்ல, அவர்கள் எங்கள் பாட்டியை ‘சூனியக்காரி’ ‘பிசாசு’ ‘சிறைப்பறவை’ என்றெல்லாம் அழைக்கிறார்கள். ம்.. அதையெல்லாம் பேசி என்ன ஆகப்போகிறது?”

“அவர்கள் உன்னை ஏதேனும் துன்புறுத்துகிறார்களா?” நான் சுதாரிக்கும் முன்பே இந்த அபத்தமான கேள்வி என் வாயிலிருந்து புறப்பட்டுவிட்டது. 

அவள் கர்வத்தோடு தலையை உயர்த்திப் பார்த்தாள். அவளுடைய சிறிய கண்களில் வஞ்சகத்தின் வெற்றி மின்னி மறைந்தது.

“இல்லை, ஒரு முறை நிலம் அளக்க வந்த ஒருவன் முயற்சி செய்தான். என்னோடு சரசமாட விரும்பினான். எப்பேர்ப்பட்ட சரசத்தை அனுபவித்தான் என்பது இன்னமும் அவனுக்கு நினைவிருக்கும்.”

நக்கலோடு கூடிய, எந்தவிதக் கட்டுப்பாடும் அற்ற, வெளிப்படையான அவள் பெருமிதப் பேச்சைக் கேட்டபோது, “ஆமாம், இவள் பொலிசியாவின் கானகத்தில் வளர்ந்த பெண், இவளிடம் வாலாட்டுவது நிச்சயமாக நல்லது கிடையாது” என்று தோன்றியது. 

“நாங்கள் யாரையும் துன்புறுத்துவதில்லை, துன்புறுத்துகிறோமா என்ன?” என் மீதான நம்பிக்கை கூடியதால் அவள் தொடர்ந்து பேசினாள்.

“அவ்வளவு ஏன், நாங்கள் யாரிடமும் உதவி கூட கேட்பதில்லை. நான் வருடத்துக்கு ஒரு தடவை நகரத்துக்குப் போய் எங்களுக்கு வேண்டிய சோப்பும் உப்பும் வாங்கிவருவேன். பாட்டிக்குக் கொஞ்சம் தேயிலை – அவருக்கு மிகவும் பிடிக்கும் – அந்தச் சமயத்தைத் தவிர நான் எப்போதும் யாரையும் பார்ப்பதே இல்லை.”

“நீயும் உன் பாட்டியும் விருந்தினர்களை வரவேற்பதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் என்றைக்காவது இந்தப் பக்கம் வந்தால் உங்கள் வீட்டுக்கு வந்து ஓர் எட்டு பார்த்துவிட்டுப் போகலாமா?”

அவள் சிரித்தாள். என்ன விநோதம்! என்ன ஆச்சர்யம்! அவளுடைய அழகிய முகம் சட்டென்று ஒரு குழந்தையின் முகத்தைப் போல மலர்ச்சியும் நாணமும் கொண்டது. அதுவரையிலும் இருந்த கடுமை எங்கே போனதென்றே தெரியவில்லை.

“ஆனால்… நீங்கள் ஏன் வர நினைக்கிறீர்கள்? பாட்டியும் நானும் உங்களுக்கு அவ்வளவு சுவாரசியமான கூட்டாளிகளாக இருக்கமாட்டோம். உண்மையிலேயே நீங்கள் நல்ல மனிதர் எனில் வந்துவிட்டுப் போங்கள். ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் எங்களைப் பார்க்க வருவதாக இருந்தால், உங்கள் துப்பாக்கியை விட்டுவிட்டு வருவதுதான் நல்லது.”

“ஏன் உனக்குப் பயமாக இருக்கிறதா?”

“பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? எனக்கு எதைக் கண்டும் பயமில்லை” தன் துணிவின் மீதான நம்பிக்கையோடு மீண்டும் அவளுடைய குரல் பெருமிதமாய் ஒலித்தது. “எனக்கு இந்த விஷயம் எதுவுமே பிடிப்பதில்லை. எதற்காகப் பறவைகளையும் முயல்களையும் கொல்ல வேண்டும்? அவை யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. உங்களைப் போலவேதான் அவையும் வாழ விரும்பும். மேலும் எனக்கு அவற்றையெல்லாம் மிகவும் பிடிக்கும். சின்னஞ்சிறிய உயிர்கள்! சரி, இப்போது நான் போகவேண்டும். இல்லையென்றால் பாட்டி திட்டுவார்.” அவள் அவசரமாகச் சொன்னாள், “போய்வருகிறேன் – மன்னிக்கவும், உங்கள் பெயர் என்னவென்று தெரியவில்லை.” 

காற்றில் அலைந்த கேசத்தைக் கையால் பிடித்துக்கொண்டு தலையைக் கவிழ்த்த நிலையில் விருட்டென்று குடிசையை நோக்கி ஓடினாள்.

“ஒரு நிமிஷம்!” நான் கத்தினேன், “உன் பெயர் என்ன? நாம் முறையாக ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்வோம்.”

ஒரு நொடி நின்று திரும்பினாள். “என் பெயர் அல்யோனா, இங்கே இருப்பவர்கள் என்னை ‘ஒலேஸ்யா’ என்று அழைப்பார்கள்”

நான் துப்பாக்கியைத் தோளில் மாட்டிக்கொண்டு அவள் காட்டிய பாதையில் நடக்கத் தொடங்கினேன். குறுகலான, சட்டென்று பார்வைக்குப் புலப்படாத அந்தக் காட்டுப்பாதை தொடங்கும் சிறு குன்றின் மீது ஏறி நின்று பின்னால் பார்த்தேன். வெண்பனிப் பின்னணியில் பளீரென்ற சிவப்புநிறப் பாவாடை மெலிதாய்க் காற்றிலாட, ஒலேஸ்யா ஓடிக்கொண்டிருப்பதை இப்போதும் பார்க்க முடிந்தது. 

நான் வீட்டுக்குப் போய் ஒரு மணி நேரம் கழித்து யர்மோலா வந்தான். வீண்பேச்சில் துளியும் விருப்பமில்லாத அவன், நான் எங்கே தொலைந்துபோனேன், எப்படி மீண்டு வந்தேன் என்று எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. எதுவுமே நடக்காதது போல் இயல்பாக என்னிடம் இதை மட்டும்தான் கேட்டான், “அந்த முயலை நான் பிடித்துவிட்டேன். சமையலறையில் வைத்திருக்கிறேன். வறுத்துவிடவா அல்லது வேறு யாருக்கும் கொடுத்தனுப்பப் போகிறீர்களா?” 

“இன்று நான் எங்கே போயிருந்தேன் என்று உனக்குத் தெரிய வாய்ப்பே இல்லை, யர்மோலா” அவன் ஆச்சர்யப்படுவான் என்று நினைத்தேன்.

“எனக்கா தெரியாது?” அவன் உறுமினான். “வேறெங்கே? அந்தச் சூனியக்காரிகளைப் பார்க்கத்தான்.” 

“உனக்கெப்படித் தெரியும்?”

“அது சுலபம். என் குரலுக்கு உங்களிடமிருந்து பதில்குரல் வரவில்லை. அதனால் நான் நீங்கள் போன பாதையில் நான் வந்தேன். நீங்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது, மாஸ்டர்.” அவன் குற்றம் சுமத்துவதுபோல் ஆத்திரத்தோடு சொன்னான், “அது ஒரு பாவச்செயல்!”

(4)

வழக்கம்போலவே அந்த வருடமும் பொலிசியாவில் வசந்தகாலம் முன்கூட்டியே எதிர்பாராத வேளையில் திடுதிப்பென்று வந்துவிட்டது. 

மினுமினுக்கும் செம்பழுப்பு வண்ண ஓடைகள் தாங்கள் செல்லும் பாதையில் இருந்த கற்களைச் சுற்றி ஆக்ரோஷமாய் நுரையோடு சுழித்துக்கொண்டும் மரச்செதில்களையும் வாத்துகளின் மென்தூவிகளையும் திரட்டிக்கொண்டும் கிராமத்துத் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடின. ஆங்காங்கே தேங்கி நிற்கும் எண்ணற்ற குட்டைகளில் பிரதிபலித்த வட்ட வட்ட வெண்மேகங்கள் அவற்றைக் கடக்கும்போது சுழன்று சுழன்று செல்வதைப் போல் தோன்றின. இளகிய பனியின் நீர்த்தாரைகள் மேற்கூரைகளிலிருந்து சடசடவென ஒழுகின. தெருவோர வில்லோ மரங்களில் குழுமியிருந்த குருவிகளின் உற்சாகக் கீச்சொலி மற்ற எல்லாச் சத்தத்தையும் விஞ்சி ஒலித்தது. காணும் இடமெல்லாம் புத்துயிர்ப்பின் அவசரமும் ஆனந்தமும் மிக்க ஆரவாரத்தை உணரமுடிந்தது. 

பள்ளங்களிலும் அடர்ந்த குறுமரங்களின் அடியிலும் தவிர மற்றெல்லா இடத்திலும் இருந்த உறைபனி உருகி, ஆங்காங்கே திட்டு திட்டாய் அழுக்கடைந்த நுரைப்பஞ்சு போல் காணப்பட்டது. குளிர்காலத்தை நலமாய்க் கழித்த பூமி, தாய்மைக்கான புதிய ஏக்கத்தவிப்புடன் புத்திளம் துளிர்களோடு கதகதப்பாகவும் ஈரப்பதத்துடனும் காட்சியளித்தது. உறைபனி உருகிய நிலத்தினின்று எழுந்த, நகரத்தின் நூற்றுக்கணக்கான நறுமணங்களிலிருந்தும் பிரித்து உணரக் கூடிய, வசந்தகாலத்தின் நுண்ணிய கிறங்கடிக்கும் நறுமணம் காற்றோடு கலந்து, கரிய நிலப்பரப்புக்கு மேலே மெல்லிய நீராவிப்படலமாய் படர்ந்திருந்தது.

ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்புகளும், நிச்சயமற்ற நம்பிக்கைகளும் கொண்ட இனிமையான, மென்மையான வசந்தகால வேதனை, அந்த நறுமணத்தோடே என் ஆன்மாவை நிறைத்தது. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அழகியென எண்ணத் தோன்றும் கவித்துவமான அத்துயரம் கடந்துபோன வசந்த காலங்களில் இன்னதெனப் புரியாத, இழந்துவிட்ட தருணங்களை நினைவில் எப்போதும் மீட்டிச் செல்லக்கூடியது. இரவுகள் இதமாக மாறத் தொடங்கின. இயற்கையின் கண்ணுக்குப் புலப்படாத படைப்பாக்கத் தொழில் அந்த ஆழ்ந்த, ஈரப்பதமிக்க இருண்மைக்குள் அவசர அவசரமாக நடைபெற்றுக்கொண்டிருந்ததை உணரமுடிந்தது.  

அந்த வசந்தகால நாட்களில் என் மனம் முழுவதும் ஒலேஸ்யாவே நிறைந்திருந்தாள். நான் தனித்திருக்கும் தருணங்களில் படுத்துக்கொண்டு, கவனம் சிதறாமல் இருக்கக் கண்களை மூடி, ஒலேஸ்யாவின் உருவத்தை என் மனக்கண்ணில் கொண்டுவந்து லயித்திருப்பேன். கடுமையான அல்லது குறும்பான, பிறகு மெலிதான புன்முறுவல் தவழும் அவளுடைய முகம், பழமைவாய்ந்த கானகத்தில் சுதந்திரமாய் வளர்ந்த, ஃபிர் மரக்கன்றினைப் போன்று மென்மையும் வலிமையும் கொண்ட அவளது இளந்தேகம், மிகவும் தாழ்குரலில், அழகிய ஏற்ற இறக்கங்களுடன் பேசும் அவளது இனிமையான பேச்சு என ஓயாமல் அவளையே நினைத்திருந்தேன்.  

“அவளிடம் ஏதோவொரு உயர்குடிப்பண்பு இருக்கிறது. அவளுடைய ஒவ்வொரு அசைவிலும், அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவிதமான நேர்த்தியும், நிதானமும் பிறவிக்குணம் போல் வெளிப்படுகிறது.” என்று எனக்குத் தோன்றியது. ஒலேஸ்யாவை சூழ்ந்திருந்த மர்ம வட்டம், அடர்ந்த காட்டுக்குள், சதுப்புநிலத்தின் மத்தியில் வசிக்கும் ஒரு சூனியக்காரியின் மாயமந்திரப் பெருமை, முக்கியமாக ஒலேஸ்யா என்னிடம் பேசிய ஒரு சில வரிகளிலேயே புலப்பட்ட அவளுடைய பலத்தின் மீதான கம்பீரச் செருக்கு என யாவும் என்னை அவள்பால் ஈர்த்திருந்தன. 

காட்டுப்பாதைகளில் ஈரம் கொஞ்சம் உலர்ந்த உடனேயே நான் சூனியக்காரியின் குடிசைக்குப் புறப்பட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நான் அந்தச் சிடுமூஞ்சிக் கிழவியைச் சமாளிக்க வேண்டி, அரை பவுண்டு தேயிலையும் கொஞ்சம் சர்க்கரைக் கட்டிகளும் எடுத்துச் சென்றேன். 

நான் போன போது இரு பெண்களுமே வீட்டில் இருந்தார்கள். மனுய்லிக்கா அடுப்புத் தீயோடு போராடிக்கொண்டிருந்தாள். ஒலேஸ்யா மிக உயரமான பலகையொன்றில் அமர்ந்து சணல் நூற்றுக் கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழைந்த சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். அவள் கையிலிருந்த சணல் அறுந்து தக்ளி தரையில் உருண்டோடியது. எரியும் தீச்சுவாலையின் அனலைத் தடுப்பதற்காக, சுருக்கம் விழுந்த முகத்துக்கு முன்னால் கையை வைத்து மறைத்திருந்த முதியவள், ஆத்திரத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தாள். 

“வணக்கம் பாட்டி” உரத்த குரலில் உற்சாகமாகச் சொன்னேன். “உங்களுக்கு என்னை ஞாபகமில்லை என்று நினைக்கிறேன். போன மாதம் வழிதவறி இங்கு வந்திருந்தேனே. நீங்கள் கூட என்னுடைய எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னீர்களே, நினைவிருக்கிறதா?”

“எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஐயா” மறுப்பாய்த் தலையசைத்துவிட்டு எரிச்சலோடு முணுமுணுத்தாள், “உண்மையாகவே எனக்கு எதுவும் ஞாபகமில்லை. உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று எனக்குப் புரியவில்லை. நாங்கள் உங்களுக்குப் பேச்சுத்துணையாக முடியாது. நாங்களோ சாதாரணமான, படிப்பறிவில்லாத மக்கள். உங்களுக்கு எங்களால் ஆகப்போவது எதுவுமில்லை. இந்தக் காடு மிகப் பெரியது. நீங்கள் வேறு எங்காவது போகலாம். அவ்வளவுதான்.”

முகத்திலடித்தாற்போன்ற அவளது பேச்சைக் கேட்டுத் துணுக்குற்ற நான், அவளது பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொள்வதா, கோபப்படுவதா அல்லது ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்றுவிடுவதா என்று புரியாமல் குழம்பி கையறுநிலையில் ஒலேஸ்யாவைப் பார்த்தேன். அவள் நல்லதொரு நகைச்சுவையை ரசித்ததுபோல் மெதுவாகப் புன்னகைத்தபடி, தன்னுடைய ராட்டையிலிருந்து எழுந்து முதியவளை நோக்கிச் சென்றாள். 

“பயப்படவேண்டாம் பாட்டி” ஆற்றுப்படுத்தும் தொனியில் சொன்னாள். “அவர் நல்லவர்தான். நமக்கு எந்தத் தொந்தரவும் தரமாட்டார்.” என்று சொல்லிவிட்டு, கிழவியின் முணுமுணுப்பைப் பொருட்படுத்தாமல், என்னிடம் மூலையில் இருந்த பலகையைக் காட்டி, “நீங்கள் உட்காருங்கள்” என்றாள். 

ஒலேஸ்யாவின் கரிசனத்தைப் பெற்றுவிட்ட உற்சாகத்தால் உந்தப்பட்டு, மனுய்லிக்காவை மிக மோசமாக நோகடிக்க எண்ணினேன். “பாட்டி, நீங்கள் எவ்வளவு நயமற்றவர்! உங்களைப் பார்க்க ஒரு விருந்தினர் உங்கள் வீட்டுக்கு வந்தால், உள்ளே காலடி எடுத்துவைக்கும்போதே கண்டபடி திட்டுகிறீர்கள். ஆனால் பாருங்கள், நான் உங்களுக்கு அன்பளிப்பாகச் சிலவற்றைக் கொண்டுவந்திருக்கிறேன்.”

நான் பையிலிருந்த பொட்டலங்களை எடுத்து வெளியில் வைத்தேன். மனுய்லிக்கா பொட்டலங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் அடுப்பின் பக்கம் திரும்பிக்கொண்டாள். 

“எனக்கு உங்கள் அன்பளிப்பு எதுவும் வேண்டாம்” அவள் கோபத்தோடு கரிக்குறடால் அடுப்பு நெருப்பைத் தள்ளிவிட்டுக்கொண்டே கடுகடுத்தாள். “உங்களைப் போன்றவர்களைப் பற்றி நான் நன்கறிவேன். முதலில் இப்படிதான் நயவஞ்சகமாகப் புகழ்ந்து பேசி எங்களுடைய அன்பைப் பெறுவீர்கள். அதன் பிறகு… சரி, அந்தப் பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” சட்டென்று என் பக்கம் திரும்பிக் கேட்டாள்.

நான் தேயிலையையும் சர்க்கரையையும் அவளிடம் கொடுத்தேன். அவற்றைப் பெற்றதும் அவளிடம் சிறு கனிவு உண்டானது என்றாலும் குரல் என்னவோ எந்தச் சமரசமும் அற்று முன் போலவே கடுகடு என்று இருந்தது. ஒலேஸ்யா மறுபடியும் நூல் நூற்கப் போய்விட்டாள். நான் அவளுக்குப் பக்கத்தில் இருந்த தாழ்வான, குறுகிய, நொடித்துக் கொண்டிருந்த பலகையில் அமர்ந்தேன். வெண்ணிறப் பட்டுப் போன்ற சணல் நாரை இடக்கையால் வேகமாக முறுக்கிக்கொண்டும், வலக்கையால் தக்ளியை மெதுவாகச் சுழற்றிக்கொண்டும் இருந்தாள். அது கிட்டத்தட்ட தரையைத் தொடப்போகும்போது லாவகமாக எடுத்து, விரல்களைத் துரிதகதியில் இயக்கி மறுபடியும் திரித்து எடுத்து வைத்தாள். 

முதல் பார்வைக்கு வெகு சுலபமாகத் தோன்றினாலும், உண்மையில் நீண்டகாலப் பயிற்சியின் மூலம் பெற்ற அபரிமிதமான திறமையும் சாமர்த்தியமும் தேவைப்படும் அச்செயலை அவள் மிக எளிதாகச் செய்தாள். அவளுடைய அந்தக் கைகளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. வேலை செய்வதால் அவளுடைய கைகள் அழுக்காகவும் காய்ப்புக் காய்த்துப்போயும் இருந்தன. ஆயினும் நவநாகரிக நங்கையரும் பார்த்துப் பொறாமைப்படும் வண்ணம் சிறியதாகவும் அழகாகவும் இருந்தன. 

“பாட்டி உங்களுக்கு ஆருடம் சொன்னார்கள் என்று போன முறை நீங்கள் சொல்லவே இல்லையே” ஒலேஸ்யா கேட்டாள். நான் கலவரத்துடன் திரும்பிப் பார்த்ததைப் பார்த்துவிட்டு, “அவரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அவருக்குக் கொஞ்சம் காது கேட்காது. நாம் பேசுவது எதுவும் காதில் விழாது. நான் உரக்கப் பேசினால் மட்டும்தான் அவருக்கு நன்றாகக் கேட்கும்.”

“ஆமாம், ஆருடம் சொன்னார். ஏன்?”

“ஓ.. எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. உங்களுக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதா?” அவள் விருட்டென்று ஒரு விஷமப்பார்வை பார்த்தாள்.

“எதில் நம்பிக்கை இருக்கிறதா என்கிறாய்? உன்னுடைய பாட்டி சொன்னதிலா அல்லது பொதுவாகவே ஆருடத்திலா?”

“நான் பொதுவாகத்தான் கேட்கிறேன்.”

“இதற்குப் பதில் சொல்வது கடினம். நம்பக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் இன்னமும் நம்புகிறேன். யாருக்குத் தெரியும்? சில வேளைகளில் அவர்கள் சொல்வது உண்மையாகவும் நடக்கக்கூடும். படித்தவர்கள் கூட புத்தகங்களை வைத்துக்கொண்டு ஆருடம் பார்க்கிறார்கள். ஆனால் உன் பாட்டி சொன்ன எல்லாவற்றையும் நான் நம்பமாட்டேன். எந்த கிராமத்துக் கிழவியும் அது போன்று எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடும்.”

ஒலேஸ்யா புன்னகைத்தாள். “உண்மைதான். பாட்டியால் முன்போல் சரியாகச் சொல்ல முடியவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது. மேலும் அவர் மிகவும் பயந்துபோயிருக்கிறார். சரி, உங்களுக்கு வந்த சீட்டுகள் என்ன காட்டின? அதைச் சொல்லுங்கள்”

“ஒன்றும் சுவாரசியமாக இல்லை. இப்போது எனக்கு ஞாபகம் கூட இல்லை. பொதுவாகச் சொல்வதுதான் – நீண்ட பயணம், க்ளப்களினால் வரக்கூடிய நன்மை – மற்றவற்றை மறந்துவிட்டேன். உண்மையாக!”

“ஆமாம், பாட்டியால் இப்போது சரிவர ஆருடம் சொல்ல இயல்வதில்லை. வயதாகிவிட்டதால் நிறைய வார்த்தைகளை மறந்துவிட்டார். அவரால் எப்படித் துல்லியமாக ஆருடம் சொல்ல முடியும்? மேலும் அவர் பயப்படுகிறார். அவருக்கு யாராவது பணம் கொடுத்தால் மட்டும் எப்போதாவது பார்ப்பார்.”

“ஆனால் அவர் எதற்காகப் பயப்படுகிறார்?”

“அதிகாரிகளைக் கண்டுதான்! வேறு எதற்கு? ஊர்க்காவல் அதிகாரி இங்கு வரும்போதெல்லாம் பாட்டிக்குப் பலவிதமாகத் தொல்லை தருவார். “என்றைக்கு வேண்டுமானாலும் உன்னை ஒன்றுமில்லாமல் செய்ய என்னால் முடியும்” என்பார். “உன்னைப் போல மாயமந்திர வேலைகள் பார்க்கும் சூனியக்காரிகளுக்கு என்ன கிடைக்கும் தெரியுமா? ஷகாலின் தீவில் கடின உழைப்போடு கூடிய ஆயுள் தண்டனை” என்பார். அது உண்மையா?”

“அவர் சொன்னதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அந்த மாதிரியான செயல்கள் தண்டனைக்குரியவைதாம். ஆனால் இது ஒன்றும் அவ்வளவு மோசம் கிடையாது. ஒலேஸ்யா, நீயும் ஆருடம் சொல்வாயா?”

அவள் ஒரு நொடி தடுமாறுவது போல் தெரிந்தது. பிறகு சொன்னாள், “ஆம், சொல்வேன். ஆனால் பணத்துக்காக அல்ல.” அவசரமாய் அதையும் சேர்த்துச் சொன்னாள்.

“எனக்காகச் சீட்டுகளைப் பார்த்துச் சொல்வதில் உனக்கு ஏதேனும் ஆட்சேபணை இருக்கிறதா?”

“ஆமாம், இருக்கிறது” அவள் தண்மையாகவும் அதே நேரம் உறுதியாகவும் சொன்னாள்.  

“ஆனால் ஏன்? இப்போது பார்ப்பதுதான் பிரச்சனை என்றால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம். எப்படியோ, என்னிடம் நீ உண்மையைச் சொல்வாய் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“இல்லை, நான் செய்ய மாட்டேன். இந்த உலகத்தையே ஈடாகக் கொடுத்தாலும் செய்ய மாட்டேன்.”

“இது நியாயமே இல்லை, ஒலேஸ்யா. நம்முடைய பழக்கம் நிமித்தமாகவாவது நீ மறுப்புத் தெரிவிக்கக்கூடாது. ஏன் செய்ய மாட்டேன் என்கிறாய்?”

“ஏனெனில் நான் ஏற்கனவே உங்களுக்காக ஒரு முறை சீட்டுகளைப் போட்டுப் பார்த்துவிட்டேன். மறுபடியும் நான் அதைச் செய்யக்கூடாது.”

“செய்யக்கூடாதா? ஏன் கூடாது? எனக்குப் புரியவில்லை.”

“இல்லை, இல்லை, நான் செய்யவே கூடாது” அவள் தீவினை குறித்த அச்சத்துடன் கிசுகிசுப்பாகச் சொன்னாள். “நீங்கள் உங்கள் எதிர்காலத்தை இரண்டு முறை தேடக்கூடாது. அது நடக்காது. அது கண்டுபிடித்துவிடும். அது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருக்கும். எதிர்காலம் தான் சந்தேகிக்கப்படுவதை விரும்புவதில்லை. அதனால்தான் எதிர்காலத்தைக் கணிப்பவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியற்றுக் காணப்படுகிறார்கள்.”

நான் ஒலேஸ்யாவுக்கு விளையாட்டுத்தனமாக ஏதேனும் பதில்தர விரும்பினேன். ஆனால் முடியவில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு அவளுடைய பேச்சில் தீவிரமும் குற்றமிழைத்த உணர்வும் வெளிப்பட்டது. அவள் எதிர்காலத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, விசித்திரமான கலவரத்துடன் வாசல் கதவைத் திரும்பிப் பார்த்தபோது, என்னை அறியாமல் நானும் திரும்பிப் பார்த்தேன். 

“சரி, நீ மறுபடியும் சீட்டுகளைப் போட்டுப் பார்க்க முடியாது என்றால் ஏற்கனவே பார்த்தபோது என்ன கண்டுபிடித்தாய் என்று அதையாவது சொல்” நான் மன்றாடினேன். 

அவள் சட்டென்று தக்ளியை கீழே போட்டுவிட்டு என் கைகளைப் பிடித்தாள். 

“இல்லை, நான் சொல்லமாட்டேன்.” அவளுடைய கண்களில் குழந்தைத்தனமான கெஞ்சல் வெளிப்பட்டது. “தயவுசெய்து கேட்காதீர்கள். அது உங்களுக்குக் கஷ்டமானதாக இருக்கும். நீங்கள் அதைக் கேட்காமல் இருப்பதுதான் நல்லது.”

ஆனால் நான் வற்புறுத்தினேன். அவளது மறுப்பும், விதியைக் குறித்த மறைமுகக் குறிப்புகளும் ஓர் ஆருடக்காரரின் பசப்பு வார்த்தைகளா அல்லது உண்மையிலேயே அவள் பார்த்ததை அவளே நம்புகிறாளா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்குள் பயமும் பதற்றமும் பரவத் தொடங்கியதை உணர்ந்தேன். 

“சரி, நான் சொல்கிறேன்” ஒரு வழியாக, ஒலேஸ்யா ஒத்துக்கொண்டாள். “ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நிபந்தனை என்றால் நிபந்தனைதான். உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை நான் சொல்ல நேர்ந்தால் நீங்கள் குறுக்கிடக் கூடாது. உங்களுக்கு வந்தது இதுதான்: நீங்கள் அன்பான மனிதர். ஆனால் மிகவும் பலவீனமானவர். உங்கள் அன்பில் நேர்மை இல்லை. அது உங்கள் உள்ளத்திலிருந்து வரவில்லை. நீங்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டீர்கள். நீங்கள் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புவீர்கள். ஆனால் அவர்களுக்கு அடிபணிந்து போவீர்கள், நீங்கள் அதை விரும்பாவிட்டாலும் கூட. உங்களுக்கு வைன் பிடிக்கும். மேலும்… ஓ, சொல்வதென்று ஆனபின் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன். பெண்களாகிய எங்களை உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஏராளமான பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வீர்கள். உங்களுக்குப் பணத்தின் அருமை தெரியாது. மேலும் பணத்தை எப்படிச்
சேமிப்பது என்றும் தெரியாது. நீங்கள் ஒரு காலத்திலும் செல்வந்தராக முடியாது. இன்னும் சொல்லவா?”  

“ஆமாம். உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்”

“சீட்டுகள் விழுந்ததன் அடிப்படையில் சொல்கிறேன், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்காது என்று தெரிகிறது. உங்களால் ஒருவரையும் இதயப்பூர்வமாக நேசிக்க இயலாது. ஏனெனில் உங்கள் இதயம் குளிர்மையும் செயலற்ற தன்மையும் கொண்டது. மேலும் உங்களை நேசிப்பவர்களின் துயரத்துக்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள். உங்களுக்கு இறுதிவரை திருமணமே ஆகாது. ஒண்டிக்கட்டையாகவே இறப்பீர்கள். உங்கள் வாழ்வில் எந்தவிதமான சந்தோஷங்களும் இருக்காது, மாறாக நிறையக் கவலைகளும் கஷ்டங்களும்தான் இருக்கும். தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நீங்கள் எண்ணும் நாள் கூட வரும். ஏதோவொரு நிகழ்வு உங்களை அவ்வாறு எண்ணத் தூண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் துணிவு இல்லாமல், அவற்றைச் சகித்து ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், உங்களுக்குப் பிரியமானவரின் அகால மரணத்தின் வழி உங்கள் அதிர்ஷ்டம் மாறும். இவையெல்லாம் நடக்க அதிக வருடங்கள் ஆகாது. இந்த வருடமே – எப்போது என்று எனக்குத் தெரியாது, ஆனால் சீக்கிரமே நடக்கும் என்று சீட்டுகள் சொல்கின்றன. ஒருவேளை இந்த மாதமே கூட -”

அவள் சற்று நிறுத்தி இடைவெளி விட்டபோது நான் கேட்டேன். “இந்த வருடம் என்ன நடக்கும்?”  

“உண்மையில், தொடர்ந்து சொல்ல எனக்கு அச்சமாக இருக்கிறது. க்ளப்களின் ராணி உங்கள்மீது பெரும் காதல் கொள்வாள். அவள் திருமணமானவளா இல்லையா என்று என்னால் கணிக்க முடியவில்லை, ஆனால் கருங்கூந்தல் கொண்டவள் என்று மட்டும் தெரிகிறது.”

நான் ஒலேஸ்யாவின் தலையைப் பார்த்தேன்.

“என்னை ஏன் பார்க்கிறீர்கள்?” பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் உள்ளுணர்வின் காரணமாக என்னுடைய பார்வையின் பொருளைப் புரிந்துகொண்ட அவள் சட்டென்று நாணிச் சிவந்தாள். “ஆமாம், என்னுடையதைப் போலத்தான் இருக்கும்” அனிச்சையாகத் தன் தலைமுடியைத் தடவியபடி மேலும் சிவந்துபோனாள். 

“க்ளப்களின் ராணியிடமிருந்து பெரும் காதல்! ம்?” கிண்டலாகக் கேட்டேன். 

“சிரிக்காதீர்கள், நீங்கள் சிரிக்கக்கூடாது. நான் உங்களுக்கு உண்மையைத்தான் சொல்கிறேன்.” அவள் தீவிரமாகவும் கிட்டத்தட்ட கடுமையாகவும் என்னை எச்சரித்தாள்.

“நல்லது. நான் சிரிக்க மாட்டேன். இன்னும் வேறென்ன இருக்கிறது?”

“வேறென்ன? மரணத்தை விடவும் கொடுமையான ஒன்று அந்த க்ளப்களின் ராணிக்குக் கிடைக்கப் போகிறது. உங்களால் அவள் ஒரு பெருத்த அவமானத்தைச் சந்திப்பாள். அவளுடைய வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத, மாபெரும் துயரம் அது. ஆனால் அவளால் உங்களுக்கு எந்தக் கெடுதலும் நேராது.”

“இங்கே பார், ஒலேஸ்யா, சீட்டுகள் உன்னைத் தவறாக வழிநடத்தியிருக்கலாம், இல்லையா? நான் ஏன் க்ளப்களின் ராணியிடம் மோசமாக நடந்துகொள்ளவேண்டும்? நான் அமைதியும் பணிவும் கொண்டவன். நீயோ என்னைப் பற்றி மிக மோசமான விஷயங்களைச் சொல்கிறாய்” 

“அதுதான் ஏன் என்று எனக்கும் தெரியவில்லை. மேலும் இவற்றையெல்லாம் செய்யப்போவது நீங்கள் கிடையாது. எல்லாத் துரதிர்ஷ்டமும் உங்கள் மூலமாக நடக்கப் போகிறது. யாவும் உண்மையாக நடக்கும்போது நான் சொன்னவற்றை நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள்”

“இவை எல்லாமே சீட்டுகள் சொன்னவைதானா, ஒலேஸ்யா?”

அவள் உடனே பதில் அளிக்கவில்லை.

“சீட்டுகளும்தான்” அவள் தயக்கமும் மழுப்பலுமாய் சொன்னாள். “ஆனால் சீட்டுகள் இல்லாமலேயே என்னால் ஒருவரைப் பற்றி ஏராளமாகச் சொல்ல முடியும். உதாரணத்துக்கு, ஒருவரது முகத்தைக் கொண்டே அவரது எதிர்காலத்தைக் கணிக்க என்னால் முடியும். ஒருவனுக்குக் கூடிய விரைவில் கொடூர மரணம் சம்பவிக்கப் போகிறது என்றால் அவனுடைய முகத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு அது தெரிந்துவிடும். அவனோடு பேசவேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.”

“ஆனால் அவனுடைய முகத்தில் நீ என்ன காண்பாய்?”

“அது எனக்கே தெரியாது. எதிரில் பிணமாக அவன் நிற்பது போல் திடீரென்று எனக்குள் ஒருவிதமான பய உணர்வு உருவாகும். பாட்டியைக் கேட்டுப் பாருங்கள் – நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்று சொல்வார். போன வருடம் அரவை நிலையம் வைத்திருந்த ட்ரோஃபிம் அவருடைய அரவை நிலையத்திலேயே தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோனார். அவர் இறந்துபோவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் அவரைப் பார்த்தேன். நேராகப் பாட்டியிடம் சென்று, ‘குறித்துவைத்துக் கொள்ளுங்கள் பாட்டி, இன்னும் சில நாட்களில் ட்ரோஃபிம் கொடூரமாகச் சாகப் போகிறார்’ என்றேன். அதுபோலவே அவர் இறந்துபோனார். போன கிறிஸ்மஸ் சமயத்தின்போது யாஷ்கா – அவன் ஒரு குதிரைத் திருடன் – இங்கே வந்து பாட்டியிடம் தன்னுடைய எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லுமாறு கேட்டான். பாட்டி சீட்டுகளைப் பரப்பிவைத்துவிட்டுச் சொல்ல ஆரம்பித்தார். அவன் விளையாட்டாய், ‘எனக்கு எந்த மாதிரி சாவு வரும் என்று சொல் பாட்டி’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தான். நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். அப்படியே உறைந்துபோனேன். அவன் அங்கே அமர்ந்திருந்தான். ஆனால் அவனுடைய முகம் உயிரற்று பசிய நிறத்தில் இருந்தது. அவனுடைய கண்கள் மூடியிருந்தன. உதடுகள் கருப்பாக இருந்தன. ஒரு வாரம் கழித்து, யஷ்கா, குதிரைகளைத் திருட முயன்றபோது ஊர்மக்களிடம் பிடிபட்டுவிட்டான் என்ற செய்தி வந்தது. விடிய விடிய அவர்கள் அவனை நையப் புடைத்தனர். இங்கிருக்கும் மக்கள் கொஞ்சமும் கருணையற்ற, குரூர மனம் படைத்தவர்கள். அவர்கள் அவனுடைய பாதங்களில் ஆணிகளை அறைந்தார்கள். கட்டைகளால் அடித்து அவனுடைய விலா எலும்புகளை முறித்தார்கள். காலையில் அவன் உயிர் போய்விட்டது.”

“ஆனால் அவனுக்கு பிரச்சனை வரும் என்பதை நீ ஏன் அவனுக்கு முன்கூட்டியே சொல்லவில்லை?”

“நான் ஏன் சொல்லவேண்டும்? நீங்கள் எப்படி உங்கள் விதியிலிருந்து தப்ப முடியும்? முன்கூட்டியே சொல்லியிருந்தால், அவன் தன்னுடைய இறுதிநாட்களைத் தேவையில்லாமல் கவலைப்பட்டுக் கழித்திருப்பான். இந்த மாதிரியான காட்சிகள் எனக்குத் தோன்றுவதை எண்ணி எனக்கு அருவருப்பாக இருக்கிறது. அதற்காக என்னையே நான் வெறுக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும்? அது என்னுடைய விதி. என் பாட்டி இளம் வயதில் இருக்கும்போது மரணங்களை முன்கூட்டியே அறியக்கூடியவராய் இருந்தார். என் அம்மாவும் அப்படிதான். என்னுடைய பாட்டியின் அம்மாவும் – அது எங்களுடைய தவறு இல்லை. அது எங்கள் இரத்தத்திலேயே இருக்கிறது.”  

அவள் நூற்பதை நிறுத்திவிட்டு, கைகளை மடிமீது வைத்துக்கொண்டு தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தாள். விரிந்த கண்மணிகளோடு நிலைகுத்தியிருந்த அவளுடைய கண்கள், அவளுடைய ஆன்மாவுக்குள் ஊடுருவியிருக்கும் அமானுஷ்ய அறிவுக்கும் மர்ம சக்திகளுக்கும் அவளை அறியாமலேயே அவள் அடிபணியும் அபாயத்தைப் பிரதிபலித்தன.

(5)

அப்போது மனுய்லிக்கா எம்பிராய்டரி செய்யப்பட்ட சுத்தமான துணியை மேஜை மீது விரித்து அதன் மேல் ஆவி பறக்கும் பாத்திரத்தை வைத்துவிட்டு பேத்தியை அழைத்தாள். “சாப்பாடு தயாராக உள்ளது, ஒலேஸ்யா” 

சிறு தயக்கத்துக்குப் பிறகு என்னிடம் கேட்டாள், “நீங்களும் எங்களோடு சேர்ந்து உணவருந்த வருகிறீர்களா, ஐயா? நீங்கள் தாராளமாக வரலாம். ஆனால் எங்களுடையது மிக எளிய உணவு. வெறும் சூப் மட்டும்தான்.” 

அவள் ஒப்புக்கு அழைத்துவிட்டு மேற்கொண்டு வற்புறுத்தாததால், நான் மறுக்கத் தலைப்பட்டேன். ஆனால் வசீகரப் பாங்கோடும் நட்பார்ந்த புன்னகையோடும் ஒலேஸ்யா அவள் பங்குக்கு என்னை அழைத்தபோது என்னால் மறுக்க முடியவில்லை. பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, வெங்காயம் போட்ட, சுவையும் சத்தும் மிக்க நெளிகோதுமை சூப்பை அவளே எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி எனக்குப் பரிமாறினாள். 

சாப்பிட அமர்ந்த பிறகு பாட்டியோ, பேத்தியோ, தம் மீது சிலுவைக்குறி இட்டுக்கொள்ளவில்லை. சாப்பிடும்போது நான் இரு பெண்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் ஒருவரது குணநலன்கள் மற்ற சமயத்தை விடவும் உணவு உண்ணும்போதுதான் மிகத் துல்லியமாக வெளிப்படும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. மனுய்லிக்கா சூப்பை அவசர அவசரமாக விழுங்குவதும், அவளுடைய ஒட்டிப்போன கன்னங்கள் உப்பித்தெரியும் வண்ணம் பெரிய பெரிய துண்டுகளாக ரொட்டியை வாய்க்குள் தள்ளுவதும், ‘ச்சவுக் ச்சவுக்’ என்ற சத்தத்தோடு மெல்லுவதுமாக இருந்தாள். ஒலேஸ்யாவோ சாப்பிடுவதில் கூட ஒழுங்கையும் பிறவி நேர்த்தியையும் வெளிப்படுத்தினாள். 

உணவிற்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து நான் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.  

“நான் உங்களோடு கொஞ்ச தூரம் வரவா?” ஒலேஸ்யா கேட்டாள். 

“அவரோடு போவதற்கு என்ன இருக்கிறது? உன்னால் ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாதா?” மனூலிக்கா கோபத்தோடு முணுமுணுத்தாள். 

ஆனால் ஒலேஸ்யா ஏற்கனவே தன்னுடைய சிவப்புவண்ண காஷ்மீர் சால்வையை அணிந்துவிட்டிருந்தாள். சட்டென்று பாட்டியிடம் ஓடி, அவளைக் கட்டிப்பிடித்து ஒரு முத்தம் கொடுத்தாள்.

“பாட்டி, என் செல்லப் பாட்டி, ஒரே ஒரு நிமிஷம்தான் ஆகும். உடனேயே திரும்பிவிடுவேன்.” 

“சரி, சரி” முதியவள் பலவீனமாகக் கண்டனத்தைத் தெரிவித்தாள். என்னிடம், “தயவுசெய்து அவளை மன்னியுங்கள் ஐயா, அவள் கிறுக்குத்தனமானவள்” என்றாள். 

குறுகிய பாதையைக் கடந்து, குதிரைகளின் குளம்படிகளாலும், வண்டிச்சக்கரங்களின் தடங்களாலும் கருப்புநிறத்தில் சேறும் சகதியுமாய் இருந்த காட்டுப்பாதைக்கு வந்தோம். சாலையிலிருந்த பள்ளங்கள் நீரால் நிறைந்து மாலைக் கதிரொளியைப் பிரதிபலித்துக்கொண்டிருந்தன. பனிபெய்ததால் ஈரமாக இருந்த, சென்ற வருடத்தின் பழுப்பிலைகளால் மூடியிருந்த சாலையோரம் நாங்கள் நடந்துசென்றோம். அங்கும் இங்குமாக பெரிய கேம்பனுலா பூக்கள் – பொலிசியாவின் முதல் வசந்தகாலப் பூக்கள் – பழுத்த மஞ்சள் இலைகளுக்கு மத்தியில் தங்கள் வெளிர் கத்தரிப்பூ நிறத் தலைகளை உயர்த்தி நின்றுகொண்டிருந்தன.  

“ஒலேஸ்யா, நான் உன்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் நீ கோபப்படுவாயோ என்று பயமாக இருக்கிறது. இருந்தாலும் கேட்கிறேன். உன்னுடைய பாட்டி, உண்மையிலேயே ஒரு… ஒரு… எப்படி அதைச் சொல்வது…”

“ஒரு சூனியக்காரியா என்றா?” ஒலேஸ்யா அமைதியாகக் கேட்டாள்.  

“இல்லை, இல்லை, சூனியக்காரி என்று இல்லை” நான் தடுமாறினேன். “ஆமாம், சூனியக்காரியா என்றுதான். ஊர் மக்கள் அறிவுகெட்டத்தனமாக என்னென்னவோ சொல்கிறார்கள். ஒருவேளை உன் பாட்டி மூலிகைகளைப் பற்றியும் சில வைத்திய முறைகளைப் பற்றியும் வசிய மருந்துகளைப் பற்றியும் மட்டும் தெரிந்து வைத்திருக்கலாம். உனக்கு விருப்பமில்லை என்றால் நீ சொல்ல வேண்டாம்.” 

“ஏன் சொல்ல வேண்டாம்? எனக்கொன்றும் பிரச்சனை இல்லை.” அவள் இயல்பாகப் பதிலிறுத்தாள். “ஆமாம், அவள் ஒரு சூனியக்காரிதான். ஆனால் இப்போது வயதாகிவிட்டதால் முன்பு செய்த மாதிரி இப்போது அவளால் செய்ய முடிவதில்லை.”

“அவளால் என்னென்ன செய்ய முடியும்?” நான் ஆர்வத்தோடு கேட்டேன். 

“எல்லாமே செய்ய முடியும். அவளால் வியாதிகளைக் குணப்படுத்த முடியும். பல்வலியைப் போக்க முடியும், குருதி கொட்டுவதை நிறுத்த முடியும், வெறிநாயோ, பாம்போ கடித்தால் மந்திரம் செய்து விஷத்தை முறிக்க முடியும், புதையல்களைக் கண்டறிய முடியும். அவளால் முடியாதது என்று எதுவுமே இருந்ததில்லை.”

“என்னை மன்னிக்கவேண்டும், ஒலேஸ்யா, எனக்கு இந்த மாதிரியான விஷயங்களில் நம்பிக்கை கிடையாது. வெளிப்படையாகச் சொல் – நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் – இவை எல்லாமே மக்களை ஏமாற்றுவதற்கான மோசடி வேலைகள்தானே?”

அவள் தோள்களைக் குலுக்கினாள்.

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். கிராமத்துப் பெண்களை ஏமாற்றுவது எளிது. உண்மைதான். ஆனால் நான் உங்களைக் கனவிலும் ஏமாற்ற மாட்டேன்.”

“அப்படியென்றால் நீ மாந்திரீகத்தை உறுதியாக நம்புகிறாயா?”

“நிச்சயமாக நம்புகிறேன். வழிவழியாக எங்கள் குடும்பங்கள் அவற்றைச் செய்துவருகின்றன. நானே கூட நிறையச் செய்வேன்.”

“ஒலேஸ்யா, என் அன்பே, எனக்கு அதில் எவ்வளவு ஆர்வம் உண்டு என்று உனக்குத் தெரியாது. எனக்கு ஏதாவது செய்துகாட்ட மாட்டாயா?” 

“ஏன் மாட்டேன்?” உடனே பதில் வந்தது. “இப்போதே வேண்டுமா?”

“ஆமாம், இயன்றால்.”

“பயப்பட மாட்டீர்கள் அல்லவா?”

“அர்த்தமற்ற கேள்வி! இருட்டாக இருந்தால் கூட பயப்படுவேன் என்று சொல்லலாம். இப்போதுதான் நல்ல வெளிச்சமாக இருக்கிறதே.”

“சரி, உங்கள் கையை நீட்டுங்கள்”

நான் அவள் சொன்னபடி செய்தேன். என்னுடைய மேல் கோட்டின் கையைச் சுருட்டிவிட்டு, சட்டைக்கையின் பொத்தான்களைக் கழற்றினாள். பிறகு தன்னுடைய பாக்கெட்டிலிருந்து எடுத்த ஐந்தங்குல நீளமுள்ள சிறிய கத்தியை அதன் தோலுறையிலிருந்து வெளியே எடுத்தாள்.

“என்ன செய்யப் போகிறாய்?” நான் கேட்டேன். சொல்லொணா பயம் என் அடிவயிற்றைக் கலக்கியது. 

“ஒரே நொடிதான். பயப்படமாட்டேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்!”

சட்டென்று அவளது கரம் பார்வைக்குப் புலப்படா வேகத்தில் அசைந்தது. என்னுடைய மணிக்கட்டில் நாடி பார்க்கும் இடத்துக்குச் சற்று மேலே கூர்கத்தியின் எரிச்சலான கீறலை உணர்ந்தேன். வெட்டுக்காயத்தின் வழியே இரத்தம் கொப்பளித்துக்கொண்டு வெளியேறியது. என் மணிக்கட்டு வழி ஒழுகி, தரையில் வேகமாகச் சொட்டியது. நான் என்னுடைய கதறலைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக்கொண்டேன். என் முகம் வெளிறிப்போனது.

“பயப்படாதீர்கள், நீங்கள் சாகமாட்டீர்கள்” ஒலேஸ்யா சிரித்தாள்.

காயத்திற்கு மேலாக என் கையை இறுக்கமாகப் பிடித்தாள். குனிந்து முகத்தை அதன் அருகில் வைத்து வேக வேகமாக ஏதோ கிசுகிசுத்தாள். அவளுடைய சூடான, சீரற்ற மூச்சுக்காற்று என் தோலைச் சிவக்கச் செய்தது. கையை விட்டுவிட்டு அவள் நிமிர்ந்தபோது, காயம் பட்ட இடத்தில் சிவப்பு நிறத்தில் சிறியதொரு கீறலைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. 

கத்தியை உறைக்குள் இட்டுக்கொண்டே, கள்ளச்சிரிப்புடன் என்னிடம் கேட்டாள். “என்ன, இது போதுமா? அல்லது இன்னும் கொஞ்சம் வேண்டுமா?”

“நிச்சயமாக, இன்னும் வேண்டும். ஆனால் தயவுசெய்து இவ்வளவு அதிபயங்கரமாக வேண்டாம். மேலும் இரத்தம் சிந்தாத வகையில், தயவுசெய்து.” 

“அப்படியென்றால் நான் என்ன செய்து காட்டுவது?” அவள் யோசித்தாள். “சரி, இந்தச் சாலையில் எனக்கு முன்னால் நடந்துசெல்லுங்கள். ஒரே நிபந்தனை, நீங்கள் திரும்பிப் பார்க்கக்கூடாது.”

“பயங்கரமானதாக இருக்காது இல்லையா?” என்று கேட்டேன். விரும்பத்தகாத திடுக்கிடல் ஒன்றின் திகில் நிறைந்த எதிர்பார்ப்பைச் சிரிப்பால் மறைக்க முயன்றேன்.

“இல்லை, கொஞ்சம் கூட கிடையாது. போங்கள்” 

சோதனையில் கொண்ட பேரார்வத்துடனும், பின்னால் ஒலேஸ்யாவின் இறுக்கமான பார்வை என்னைத் தொடரும் உணர்வுடனும் நான் நடக்கத் தொடங்கினேன். ஆனால் இருபதடி தூரத்திலேயே, முற்றிலும் சமதளமான தரையொன்றில் திடீரென்று கால் இடறித் தலைகுப்புற விழுந்தேன்.

“எழுந்து போங்கள், எழுந்து போங்கள்” ஒலேஸ்யா கத்தினாள். “திரும்பிப் பார்க்காதீர்கள். ஒன்றும் ஆகவில்லை. நீங்கள் எப்போதும் போலத்தான் இருக்கிறீர்கள். கீழே விழும்போது தரையில் கையை ஊன்றிக் கொள்ளுங்கள்.”  

நான் தொடர்ந்து நடந்தேன். அடுத்த பத்தாவது அடியில் மீண்டும் ஒருமுறை ‘பப்பரப்பா’ என்று கையையும் காலையும் விரித்த நிலையில் தரையில் விழுந்து கிடந்தேன். ஒலேஸ்யா சிரிப்பை அடக்கமுடியாமல் கைகொட்டி சத்தமாய்ச் சிரித்தாள். 

“என்ன, போதுமான அளவு கிடைத்துவிட்டதா?” அவள் கத்தும்போது வெண்ணிறப் பற்கள் மின்னின. “இப்போது நம்புகிறீர்களா? கவலைப்படாதீர்கள் – நீங்கள் கீழேதான் விழுந்தீர்கள், மேலே போகவில்லை.” 

“நீ எப்படி அப்படிச் செய்தாய்? இதில் ஒன்றும் ரகசியம் இல்லை என நினைக்கிறேன்” என் ஆடையில் ஒட்டியிருந்த தூசுகளையும் உலர் புற்களையும் தட்டிவிட்டுக்கொண்டே, ஆச்சர்யம் மேலிட அவளைக் கேட்டேன். 

“ரகசியம் எதுவும் இல்லை. உங்களிடம் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அது உங்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. அதைச் சரியான முறையில் விளக்கிச் சொல்ல என்னால் இயலாமலும் போகலாம்.” 

அவள் சொன்னது சரிதான். என்னால் அவள் சொன்னதை முழுவதுமாக விளங்கிக்கொள்ள இயலவில்லை. ஓரளவு நான் புரிந்துகொண்ட வரையில், அந்தத் தந்திரம் இதுதான். அவள் முன்னால் போகும் ஆளையே உற்றுப் பார்த்துக்கொண்டு அவனது சின்னச் சின்ன அசைவுகளைக் கூட நகலெடுத்தாற் போல் அப்படியே பின்பற்றி அவனுக்குப் பின்னால் அவனைப் போலவே அடி மேல் அடி எடுத்து நடந்து வருவாள். இருவருடைய உடல் இயக்கங்களும் ஒத்திசைந்த தருணத்தில், முன்னால் செல்பவனுக்குச் சற்று தூரத்தில் தரையிலிருந்து பத்து அங்குல உயரத்தில் ஒரு கயிறு குறுக்காகக் கட்டியிருப்பதைப் போன்று கற்பனை செய்வாள். அந்தக் கற்பனைக் கயிற்றை அந்த ஆள் தொட்டதும் அவள் திடுக்கென்று கீழே விழுவது போல் செய்வாள். எவ்வளவு திடமான ஆளாக இருந்தாலும் அந்தச் சமயம் அவனும் கீழே விழுந்துவிடுவான். 

இந்த நிகழ்வுக்குப் பிறகு வெகு காலம் கழித்து நான் டாக்டர் சார்காட்டின் பரிசோதனைகளைப் பற்றிய புத்தகத்தைப் படித்தேன். அதில் ஹிஸ்டீரியாவால் பாதிக்கப்பட்டு சால்பிட்ரியா நலவாழ்வு மையத்தில்  நோயாளிகளாக இருந்த இரண்டு தொழில்முறை சூனியக்காரப் பெண்களை வைத்து அவர் மேற்கொண்ட பரிசோதனைகளைப் பற்றிய விளக்கத்தை வாசித்தபோது, ஒலேஸ்யாவின் குழப்பமான விளக்கம் நினைவுக்கு வந்துபோனது. பொலிசியாவின் அழகிய சூனியக்காரி செய்துகாட்டிய அதே வித்தையைத்தான் பிரெஞ்சு சூனியக்காரிகளும் பயமுறுத்துதற்காக மேற்கொண்டார்கள் என்பதை அறிந்தபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. 

“என்னால் இன்னும் கூட செய்துகாட்ட முடியும்.” ஒலேஸ்யா உறுதிப்படச் சொன்னாள், “உதாரணத்துக்கு, உங்களுக்குப் பயம் காட்ட முடியும்.”

“என்ன சொல்கிறாய்?”

“உங்களைப் பயப்பட வைக்க என்னால் முடியும். ஒரு மாலை வேளையில் உங்களுடைய அறையில் நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது திடீரென்று மிக மோசமாகப் பயந்து நடுங்க ஆரம்பித்துவிடுவீர்கள். திரும்பிப் பார்க்கக்கூட தைரியம் இருக்காது. அதற்கு முதலில் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவேண்டும். பிறகு உங்கள் அறையை நான் பார்க்கவேண்டும்.”

“ஓ… இது மிகவும் சாதாரணமானதுதான். நீ என்னுடைய அறையின் ஜன்னல் பக்கம் வந்துநின்று தட்டுவாய் அல்லது விநோதமாக ஏதேனும் ஒலியெழுப்புவாய்” நான் அவளைக் கேலி செய்தேன்.

“இல்லை, இல்லை. நான் இங்கேயே காட்டுக்குள் என்னுடைய வீட்டில்தான் இருப்பேன். இங்கேயே உட்கார்ந்துகொண்டு, தெருவில் இறங்கி நடப்பதாக, உங்கள் வீட்டுக்கு வருவதாக, கதவைத் திறப்பதாக, உங்களுடைய அறைக்குள் நுழைவதாக அனைத்தையும் கற்பனை செய்வேன். நீங்கள் அங்கேதான் எங்காவது அமர்ந்திருப்பீர்கள். மேஜையருகில் என்று வைத்துக்கொள்வோம். நான் திருட்டுத்தனமாக உங்கள் பின்னால் வந்து நிற்பேன். உங்களுக்கு எந்தச் சத்தமும் கேட்காது. நான் என் கைகளால் உங்கள் தோள்களைப் பிடித்து அழுத்துவேன். பலமாக, பலமாக, இன்னும் பலமாக, உங்கள் மீது வைத்த பார்வையை விலக்காமல், இப்படிதான்… பாருங்கள்”

திடீரென்று அவளுடைய அழகிய புருவங்கள் சுருங்கின. கண்கள் என்மீது நிலைகுத்தி நின்றன. அவை அச்சுறுத்தும் விதமாகவும் கவர்ந்திழுக்கும் விதமாகவும் இருந்தன. கண்மணிகள் விரிந்து அடர்நீலமாய்க் காட்சியளித்தன. எனக்குச் சட்டென்று மெடூசாவின் தலை என்ற ஓவியம் ஞாபகத்துக்கு வந்தது. மாஸ்கோவிலுள்ள ட்ரெட்யாகோவ் கலைக்கூடத்தில் அதை நான் பார்த்திருக்கிறேன். அந்த ஓவியரின் பெயர் மறந்துவிட்டது. நிலைகுத்திய, விசித்திரமான அந்தப் பார்வையைக் கண்டு அமானுஷ்யமான, உறையவைக்கும் திகில் என்னைப் பற்றிக்கொண்டது.  

“தயவுசெய்து நிறுத்து, ஒலேஸ்யா” வலிய வரவழைத்துக்கொண்ட சிரிப்புடன் சொன்னேன், “நீ சிரிக்கும்போதுதான் எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கிறது. உன்னுடைய முகம் அழகான, குழந்தைத்தனமான முகம்!” 

நாங்கள் தொடர்ந்து நடந்தோம். ஒலேஸ்யா பேசும் விதம் பற்றி யோசித்தேன். எண்ணங்களை மிக அழகாக வெளிப்படுத்துகிறாள். படிப்பறிவில்லாத ஒரு பெண் எவ்வளவு திருத்தமாகப் பேசுகிறாள். நான் அவளிடம் சொன்னேன், “உன்னைப் பற்றி நான் ஆச்சர்யப்படும் விஷயம் என்ன தெரியுமா, ஒலேஸ்யா? காட்டில் தனியாக, மனிதர்களையே பார்க்காமல் வளர்ந்தவள், நீ அதிகமாகப் படித்திருக்க மாட்டாய் என நினைக்கிறேன்.”

“எனக்குப் படிக்கவே தெரியாது.” 

“அப்படிச் சொல். ஆனாலும் நீ பேசுவதைப் பார்த்தால் உண்மையான உயர்குடி சீமாட்டி பேசுவதைப் போலவே உள்ளது. ஏன் அப்படி? நான் என்ன கேட்கிறேன் என்று உனக்குப் புரிகிறதா?”

“எனக்குப் புரிகிறது. எல்லாம் என் பாட்டியிடமிருந்து வந்தது. அவருடைய தோற்றத்தை வைத்து அவரை எடைபோடாதீர்கள். அவர் மிகவும் புத்திசாலி. அவருக்கு எல்லாமே தெரியும். நீங்கள் அவரிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம். இப்போதுதான் அவருக்கு வயதாகிவிட்டது.”

“அப்படியென்றால் அவருடைய வாழ்க்கையில் அவர் நிறையப் பார்த்திருக்க வேண்டும். அவர் எங்கேயிருந்து வந்தார்? இங்கே வருவதற்கு முன்பு எங்கே வசித்தார்?”

என்னுடைய இந்தக் கேள்விகள் ஒலேஸ்யாவுக்கு உவப்பானவையாக இல்லை எனத் தெரிந்தது. அவள் உடனே எந்தப் பதிலும் சொல்லவில்லை. 

“எனக்குத் தெரியாது” அவள் மழுப்பலாகவும் அதே சமயம் உறுதியாகவும் சொன்னாள். “பாட்டிக்கு அதைப் பற்றியெல்லாம் பேசப் பிடிக்காது. அப்படியே தவறுதலாக எதையாவது சொன்னாலும் உடனே அதை என் நினைவிலிருந்து அழிக்கச் சொல்லிவிடுவார். மறுபடியும் அதைப் பற்றிப் பேசவே மாட்டார். சரி, எனக்குத் திரும்பிப் போக நேரமாகிவிட்டது.” அவள் அவசரமாகச் சொன்னாள், “இல்லையென்றால் பாட்டி என்னைக் குறுக்குக் கேள்விகளால் துளைத்தெடுத்துவிடுவார். விடைபெறுகிறேன். மன்னிக்கவும், உங்கள் பெயர் எனக்குத் தெரியவில்லை.”

நான் அவளிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

“இவான் டிமாஃபேயேவிச்? நல்லது. சரி, போய்வருகிறேன். இவான் டிமாஃபேயேவிச்! எங்கள் வீட்டுக்கு வராமல் இருந்துவிடாதீர்கள். அவ்வப்போது வந்து செல்லுங்கள்”

நான் கையை நீட்டினேன். அவளுடைய சிறிய, வலிமையான கரங்கள் இறுக்கமாகவும் இணக்கமாகவும் பற்றின.

(6)

அன்றிலிருந்து நான் சூனியக்காரியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவரத் தொடங்கினேன். நான் போகும் ஒவ்வொரு முறையும் ஒலேஸ்யா அவளுக்கே உரிய இறுக்கமான சுபாவத்துடன் என்னை வரவேற்றாள். ஆனால் என்னைப் பார்த்தவுடன் அவளிடம் ஏற்படும் உடனடி மாற்றத்தை வைத்து, என்னுடைய வருகை அவளுக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதைக் கண்டுகொண்டேன். மனுய்லிக்கா வழக்கம் போலவே தனக்குத்தானே எதையாவது முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். ஆனால் என்னிடம் வேற்றுமுகம் காட்டவில்லை. பேத்தியின் கண்மறைவான வேண்டுதல் காரணமாக இருக்கலாம். தவிர, நான் அவ்வப்போது எடுத்துச் செல்லும் கதகப்பான சால்வை, ஜாம், செர்ரிப்பழ மதுபானம் போன்றவையும் அவள் என்னைக் கண்டுகொள்ளாதிருக்கச் செய்தன. 

நான் அங்கிருந்து புறப்படும்போதெல்லாம் என்னை வழியனுப்பும் பொருட்டு இரினோவோ சாலை வரை ஒலேஸ்யாவும் என்னுடன் நடந்துவருவது எங்களுக்குள் ஒரு மௌன உடன்படிக்கை போல் வழக்கமான ஒன்றாயிற்று. எங்களுக்குள் நிகழும் உரையாடல் கலகலப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் எங்களை அறியாமலேயே நடைவேகத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்து சந்தடியற்ற காட்டுப்பாதையில் நடந்து நேரத்தை நீட்டித்தோம். சாலையை அடைந்த பிறகும் அரை மைல் தூரத்துக்கு நான் அவளோடு நடப்பேன். பிரியும் இடத்துக்கு வந்த பிறகும் மணம் பரப்பி நிற்கும் பைன்மரக் கிளைகளுக்குக் கீழே நின்று நெடுநேரம் பேசிக் கொண்டிருப்போம். 

ஒலேஸ்யாவின் அழகு மட்டுமே என்னை ஈர்க்கவில்லை. அவளுடைய நேர்மை, தனித்துவமான, சுதந்திரமான இயல்பு, தெளிவான அதே சமயம்,  அசைக்கமுடியாத, பரம்பரையாய்த் தொடரும் மாயமந்திர நம்பிக்கைகளால் கட்டுண்டு கிடக்கும் அவளுடைய எண்ணங்கள், குழந்தை போன்ற கள்ளங்கபடமற்ற உள்ளம், அழகிய பெண்களுக்கே உரிய சீண்டலும் அலட்டலும் எனப் பலவற்றாலும் வசீகரிக்கப்பட்டேன். அவளுடைய நாகரீக முதிர்ச்சியற்ற, மாறுபட்ட சிந்தனைகளில் தோன்றும் எல்லாக் கேள்விகளையும் விலாவாரியாக என்னிடம் கேட்பதில் அவளுக்குச் சோர்வு ஏற்பட்டதே இல்லை. மனிதர்கள், நாடுகள், இயற்கை அம்சங்கள், பூமி மற்றும் பிரபஞ்சத்தின் அமைப்பு, அறிஞர்கள், பெரு நகரங்கள் என எதையும் விட்டதில்லை. பல விஷயங்கள் அவளுக்கு அற்புதமாய், அபாரமாய், அசாத்தியமாய்த் தோன்றின. நான் எப்போதும் அவளுடனான உரையாடல்களில் ஆர்வமாகவும், இயல்பாகவும், உண்மையாகவும் இருந்த காரணத்தால், நான் என்ன சொன்னாலும் சந்தேகப்படாமல் அதை அப்படியே நம்பினாள். சில சமயம் ஓரளவே விஷயஞானம் உள்ள அவளுடைய சிற்றறிவுக்கு எட்டும் வகையில் எளிமையாக விளக்கிச் சொல்ல இயலாதபோது அல்லது எனக்கே அது விளங்காத விஷயமாக இருக்கும்போது நான் அவளிடம் இப்படிச் சொல்வேன், “அது உனக்குப் புரியுமா என்று தெரியவில்லை. அதைச் சரியான முறையில் விளக்கிச் சொல்ல என்னால் இயலாமலும் போகலாம்.”

அவள் உடனே, “தயவுசெய்து சொல்லுங்கள். நான் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். எனக்குப் புரிவது கஷ்டம் என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை, எப்படி என்று சொல்லுங்களேன்” என்று மன்றாடுவாள்.

மிக மோசமான ஒப்பீடுகளைச் சொல்லவோ, துணிகரமான பல உதாரணங்களைக் காட்டவோ என்னைத் தூண்டினாள். சில வார்த்தைகளில் தடுமாறிப் பேசமுடியாமல் திக்கும் திக்குவாய்க்காரனிடம் பொறுமையற்று கேள்வி மேல் கேள்வி கேட்பது போல், அவளுக்குப் புரியும்படி சொல்லப் பொருத்தமான உவமையோ உதாரணமோ கிடைக்காமல் நான் தவிக்கும்போதெல்லாம் என்னைக் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தாள். 

கடைசியில், அவளுடைய கூர்மையும் பரந்துபட்ட அறிவுத்திறனும், புத்தம்புதிய கற்பனாசக்தியும் ஓர் ஆசானாய் நான் கொண்டிருந்த கற்பிக்கும் திறமைக்குறைவை வென்றுவிட்டன. மாறுபட்ட சூழலும், படிப்பறிவும் கொண்ட, சரியாகச் சொல்லவேண்டும் என்றால் படிப்பறிவே இல்லாத ஒருத்தி, அவ்வளவு அசாதாரணத் திறமைகளுடன் இருந்தாள் என்பதை நான் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.  

ஒருமுறை பேச்சுவாக்கில் நான் பீட்டர்ஸ்பர்க் பற்றிக் குறிப்பிட்டேன். உடனே அவள், “பீட்டர்ஸ்பர்க் என்றால் என்ன? சிறிய நகரமா?” என்று கேட்டாள்.

“இல்லை, அது சிறிய நகரம் கிடையாது. ரஷ்யாவிலேயே மிகப்பெரிய நகரம்” என்றேன்.

“மிகப்பெரியது என்றால்? எவ்வளவு பெரியது? அதை விடப் பெரியதே இருக்கமுடியாதா?” அவள் அப்பாவித்தனமாகக் கேட்டாள்.

“இல்லை, எல்லா முக்கியப் பிரமுகர்களும் அங்கேதான் வசிக்கிறார்கள். அங்கே இருக்கும் வீடுகள் யாவும் கருங்கல்லால் கட்டப்பட்டவை. மரவீடுகளே கிடையாது.”

“அப்படியென்றால் அது ஸ்டீபானை விடவும் பெரிதாகத்தான் இருக்கவேண்டும், சரியா?” அவள் நம்பிக்கையோடு கேட்டாள். 

“ஆ.. ஆமாம், கொஞ்சம் பெரியது. சுமார் ஐநூறு மடங்கு பெரியதாக இருக்கலாம். சில வீடுகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, ஸ்டீபானில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு இருக்கும்.” 

“அடக்கடவுளே! அப்படியென்றால் அந்த வீடுகள் எப்படி இருக்கும்?” மிரட்சியோடு அவள் கேட்டாள். வழக்கம்போல அவளுக்குப் புரியும்படியான ஒப்பீட்டை நான் தேட வேண்டியிருந்தது. 

“பயங்கரப் பெரிதாக இருக்கும். ஐந்து, ஆறு அல்லது ஏழு மாடிகள். அந்த பைன் மரத்தைப் பார்த்தாயா?”

“அந்த உயரமான பைன் மரத்தைத்தானே சொல்கிறீர்கள்?”

“ஆமாம். அந்த வீடுகளும் அவ்வளவு உயரம் இருக்கும். மேல்தளத்திலிருந்து கீழ்தளம் வரைக்கும் மக்கள் நெருக்கியடித்து வசிப்பார்கள். கூண்டில் அடைபட்ட பறவைகளைப் போல ஓர் அறைக்குள் பத்துப் பன்னிரண்டு பேர் வசிப்பார்கள். அவர்களுக்கு மூச்சுவிட போதுமான காற்றுவசதி கூட இருக்காது. இன்னும் சிலர் தரைக்குக் கீழே இருட்டும் ஈரலிப்புமாக உள்ள நிலவறைகளில் வசிப்பார்கள். ஆண்டு முழுவதும் கூட சிலரது அறைகளில் சூரிய வெளிச்சத்தையே பார்க்கமுடியாது.”

“நான் ஒரு காலத்திலும் என்னுடைய காட்டை விட்டு உங்கள் நகரத்துக்கு இடம்பெயரவே மாட்டேன்.” தலையை அசைத்தபடி சொன்னாள்.

“நான் கடைத்தெருவுக்குப் போகும்போது, ஸ்டீபானே எனக்கு அவ்வளவு மோசமானதாகத் தோன்றும். எங்கே பார்த்தாலும் கூச்சலும் சண்டை சச்சரவும் தள்ளுமுள்ளுமாக இருக்கும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு காட்டுக்கு ஓடிவிட மாட்டோமா என்று இருக்கும். எந்தக் காலத்திலும் நகரத்தில் வாழ நான் சம்மதிக்க மாட்டேன்.”

“ஆனால், உன்னுடைய கணவன் நகரவாசியாக இருந்தால்?” சின்னச் சிரிப்போடு கேட்டேன்.

அவள் முகம் இறுகியது. நாசி புடைத்தது. “ச்சே!” அவள் வெறுப்புடன் சொன்னாள், “எனக்கு எந்தக் கணவனும் தேவையில்லை.”

“ஒலேஸ்யா, நீ இப்போது இப்படிப் பேசுகிறாய். கிட்டத்தட்ட எல்லாப் பெண்களும் இதையேதான் சொல்வார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்வார்கள். நீயும் யாராவது ஒருவனைக் காதலிக்கும் வரை காத்திரு. பிறகு அவனோடு நகரத்துக்கு மட்டுமல்ல, உலகின் எல்லைக்கே போகத் தயாராக இருப்பாய்”

“கிடையவே கிடையாது. தயவுசெய்து இந்தப் பேச்சை நாம் இத்துடன் நிறுத்திக்கொள்வோம். இதைப் பற்றிப் பேசி என்ன ஆகப் போகிறது. தயவுசெய்து வேண்டாமே.” அவள் எரிச்சலோடு சொன்னாள்.

“நீ எவ்வளவு விசித்திரமானவள் ஒலேஸ்யா! நீ யாரையுமே காதலிக்க மாட்டாய் என்று உண்மையிலேயே நீ நினைக்கிறாயா? நீ அழகானவள், இளமையும் வலிமையும் நிறைந்தவள். உனக்குள் காதல் உருவானபின், நீ செய்துகொடுத்த சத்தியத்தையெல்லாம் மறந்துவிடுவாய்.”

“ஒருவேளை நான் காதலில் விழுந்தாலும், யாருடைய அனுமதியையும் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன்.” கண்கள் மின்ன ஆணித்தரமாகப் பதில் சொன்னாள். 

“அப்படியென்றால் நீ திருமணமும் செய்துகொள்வாய்” நான் அவளைக் கேலி செய்தேன்.

“தேவாலயத்தில் என்றா சொல்கிறீர்கள்?”

“நிச்சயமாக. தலைமைக்குரு தேவாலயத்தின் மேஜையைச் சுற்றி அழைத்துச் செல்வார். உதவிக்குரு தேவனைப் போற்றி உற்சாகமாய்ப் பாடுவார். பிறகு அவர்கள் உனக்குக் கிரீடம் அணிவிப்பார்கள்.”

அவள் கண்களைத் தாழ்த்தி, விரக்திப் புன்னகையோடு தலையை ஆட்டினாள்.

“இல்லை, நண்பரே. நான் சொல்லப்போவது உங்களுக்கு உவப்பானதாக இருக்காது. இருந்தாலும் சொல்கிறேன், எங்கள் குடும்பத்தில் யாருமே தேவாலயத்தில் திருமணம் செய்துகொள்ளவில்லை. என் பாட்டி, என் அம்மா எல்லாருமே அது இல்லாமல் எப்படியோ கடந்துவந்துவிட்டார்கள். எங்களால் தேவாலயத்துக்குள் நுழையக்கூட முடியாது.”

“எல்லாம் உங்களுடைய மாந்திரீகத்தன்மையாலா?”

“ஆமாம். எங்களுடைய மாந்திரீகத்தன்மையால்தான்” அவள் அமைதியாகச் சொன்னாள். “நான் பிறந்ததிலிருந்தே என்னுடைய ஆன்மாவை அவனுக்கு ஒப்புக்கொடுத்த பிறகு எப்படி நான் தேவாலயத்துக்குள் வரத் துணிவேன்?”

“நீ உன்னையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய், அன்பே, ஒலேஸ்யா. என்னை நம்பு, நீ சொல்வது முற்றிலும் அர்த்தமற்றது. நகைப்புக்குரியது.”

மர்மம் சூழ்ந்த அவளது விதியை விருப்பமில்லாவிடினும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயத்தின் விநோத வெளிப்பாடு அவள் முகத்தில் தெரிந்தது. முன்பும் அதை நான் கவனித்திருக்கிறேன்.

“இல்லை, இல்லை, உங்களால் புரிந்துகொள்ள இயலாது. ஆனால் என்னால் உணர முடிகிறது. நான் இங்கே அதை உணர்கிறேன்.” அவள் கையால் தன் மார்பை அழுத்திச் சொன்னாள். “இதயத்துள். விமோச்சனமே இல்லாத சாபத்தால் எங்கள் குடும்பங்கள் பீடிக்கப்பட்டிருக்கின்றன. நீங்களே சொல்லுங்கள், அவன் அல்லாமல் வேறு யார் எங்களுக்கு உதவி செய்கிறார்கள்? நான் செய்வதை ஒரு சாதாரண மனிதனால் எப்படிச் செய்ய முடியும்? எங்களுடைய ஆற்றல் அனைத்தும் அவனிடமிருந்தே பெறப்படுகின்றன.”

எங்களுடைய உரையாடலின்போது இடம்பெறும் இந்த அசாதாரணமான விஷயம் எப்போதும் இப்படிதான் முடிவுக்கு வரும். ஹிப்னாடிசம், தொடர் திணிப்புகள், மனநல மருத்துவர்கள், இந்தியச் சந்நியாசிகள் என அவளுக்குப் புரியும் வகையில் எளிய விளக்கங்களை முன்வைத்து நான் செய்த விவாதங்கள் யாவும் வீணாய்ப் போயின. அவள் செய்த மாயமந்திரச் சக்திகள் யாவற்றுக்கும், உதாரணமாக என்னுடைய காயத்திலிருந்து இரத்தம் கொட்டுவதை மந்திரம் ஓதி நிறுத்திக்காட்டிய அவளது செயலை, எளிதாக, குறிப்பிட்ட நரம்பை அழுத்திப் பிடிப்பதன் மூலம் நிறுத்தமுடியும் என்பது போன்ற அறிவியல்பூர்வமான விளக்கங்களைக் கொடுக்க முயன்றதும் வீணாய்ப் போனது. மற்ற எல்லா விஷயங்களிலும் நான் சொல்வதை அப்படியே நம்புபவள், இந்த விஷயத்தில் மட்டும் எனது விளக்கங்களைப் பிடிவாதமாக நிராகரித்தாள். 

“சரி, இரத்தத்தை நான் மந்திரத்தால் நிறுத்திய செயலை, நீங்கள் சொல்வது போலத்தான் என ஏற்றுக்கொள்கிறேன். மற்ற விஷயங்கள் எங்கே இருந்து வந்தன?” அவள் குரலை உயர்த்தி வாதிட்டாள்.

“இரத்தத்தை மந்திரத்தால் நிறுத்தியது மட்டும்தான் என்னால் செய்ய முடியுமா? உங்கள் வீட்டில் இருக்கும் எலிகளையும் கரப்பான் பூச்சிகளையும் ஒரே நாளில் ஒழித்துக் காட்டவா? உங்கள் மருத்துவர்களே கைவிட்ட கடுமையான காய்ச்சல் கண்ட நோயாளியை வெறும் தண்ணீரைக் கொண்டு இரண்டே நாளில் குணப்படுத்திக் காட்டவா? சில வார்த்தைகளை உங்கள் நினைவிலிருந்து முற்றிலும் அழித்துக் காட்டவா? ஏன் என்னால் கனவுகளுக்கு விளக்கம் அளிக்க முடிகிறது? ஏன் என்னால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடிகிறது?”

இருவருமே ஒருவர் மீது ஒருவர் கொண்ட மனக்கசப்பை மறைத்துக்கொண்டு, பேச்சைத் திசை திருப்புவதன் மூலம்தான் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருவோம். என் சிற்றறிவால் விளக்கம் கொடுக்கவியலாத வகையில் பில்லி சூனியம் ஏவல் குறித்த அவளுடைய மாந்திரீக நம்பிக்கையில் நிறைய விஷயங்கள் இருந்தன. மாறாத உறுதியோடு அவள் சொன்ன பல ரகசியங்களில் பாதியாவது அவள் அறிந்திருப்பாளா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் அடிக்கடி நான் பார்த்ததிலிருந்து ஒரு விஷயம் பிடிபட்டது. அவளுடைய உள்ளுணர்வு சார்ந்த, தெளிவற்ற மற்றும் விசித்திரமான அறிவானது, அறிவியல் விளக்கங்கள் உருவாவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்பே தோன்றி, இப்போதும் படிப்பறிவற்ற பாமர மக்களிடம் தொடரும் தற்செயல் அனுபவங்களின் மூலம் பெறப்பட்டது என்பதையும் கேலிக்குரிய மற்றும் மிகப் பயங்கரமான மூடநம்பிக்கைகளோடு பின்னப்பட்ட அந்த அறிவு தலைமுறை தலைமுறையாக மாபெரும் ரகசியத்தைப் போலக் கையளிக்கப்பட்டு வருகிறது என்பதையும் உறுதிப்பட உணர்த்தியது.

இந்த ஒரு விஷயத்தில் எங்களிடையே நிலவிய கடுமையான கருத்து வேறுபாட்டைத் தவிர மற்ற விஷயங்களில் நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகிக் கொண்டே போனோம். இதுவரை நாங்கள் வார்த்தைகளால் எங்கள் காதலை வெளிப்படுத்தவில்லை. எனினும் இருவரும் ஒன்றாக இருப்பது எங்கள் இருவருக்குமே அத்தியாவசியமாகிப்போனது. எங்கள் கண்கள் சந்திக்கும் மௌனமான தருணங்களில், ஒலேஸ்யாவின் கண்கள் கலங்குவதையும், அவளது நெற்றிப்பொட்டின் மெல்லிய நீல நரம்புகள் வேகமாகத் துடிப்பதையும் அடிக்கடி பார்த்தேன். 

அதே நேரத்தில், யர்மோலாவுக்கும் எனக்குமான உறவு சீர்கெட்டுவிட்டது. சூனியக்காரியின் குடிசைக்கு நான் அடிக்கடி போவதும், ஒலேஸ்யாவுடனான என் மாலைநேர நடைப்பயணங்களும் அவனுக்குத் தெரிந்த இரகசியமாகவே இருந்தன. அவனுடைய காட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆச்சர்யத்தக்கத் துல்லியத்தோடு அவன் எப்போதும் அறிந்திருந்தான். அவன் என்னைத் தவிர்க்கத் தொடங்கினான். நான் காட்டுக்குப் போகத் தயாரானதுமே, அவனுடைய கருவிழிகள், ஆத்திரமும் வெறுப்புமாய், தொலைவிலிருந்து என்னைக் கவனித்துக்கொண்டே இருக்கும். ஆனாலும் அவன் ஒரு வார்த்தைகூட மறுப்புத் தெரிவித்ததில்லை. நகைப்புக்குரிய எங்கள் தீவிரப் பாடவேளைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. 

எப்போதாவது மாலை வேளையில் நான் அவனுக்குப் படிப்பு சொல்லித்தர முன்வந்தால், அவன் அலட்சியப் போக்குடன் அதை நிராகரித்தான். “அதனால் என்ன பயன்? நேர விரயம்தான், மாஸ்டர்” சோம்பலோடு சொல்வான். 

இப்போதெல்லாம் நாங்கள் வேட்டைக்குப் போவதும் இல்லை. வேட்டைக்குப் போவது பற்றி நான் பேசும்போதெல்லாம், யர்மோலா, ‘துப்பாக்கி பழுதாக உள்ளது, நாய்க்கு உடல்நிலை சரியில்லை, எனக்கு நேரமில்லை’ என ஏதேதோ சாக்குப்போக்கு சொல்லி மறுப்பான்.

“எனக்கு நேரமே இல்லை, மாஸ்டர், நிலத்தை உழ வேண்டியிருக்கிறது” நான் அழைப்பு விடுக்கும்போதெல்லாம் அடிக்கடி இதையே பதிலாகச் சொல்வான். ஆனால் எனக்குத் தெரியும், அவனுக்கு உழவு செய்யும் எண்ணமெல்லாம் கிடையாது. நாள் முழுவதும் சாராயக்கடை வாசலில் நின்றுகொண்டு யாராவது இலவசமாகச் சாராயம் வாங்கித் தர மாட்டார்களா என்று பார்த்துக்கொண்டு இருப்பான். மறைமுகமாக அவன் வெளிப்படுத்தும் விரோத மனப்பான்மை எனக்கு எரிச்சலூட்டத் தொடங்கியது. அவனை வேலையை விட்டுத் தூக்க, சந்தர்ப்பம் கிடைத்தால் அதைத் தவறவிடக்கூடாது என்று நினைத்தேன். வறுமையில் உழலும் அவனுடைய பெரிய குடும்பத்துக்குப் பட்டினிச்சாவு வாராமல் காப்பாற்றுவது அவனுடைய நான்கு ரூபிள் சம்பளம்தானே என்ற இரக்க உணர்வு என்னைத் தடுத்தது. 

(7)

ஒரு நாள் வழக்கம்போல் பொழுது சாய்வதற்கு முன்பாகச் சூனியக்காரியின் குடிசைக்குப் போனபோது பெண்கள் இருவரும் மிகுந்த வாட்டத்துடன் காணப்பட்டனர். மனுய்லிக்கா படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள். அவளுடைய உடல் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்தது. தலையைக் கைகளால் தாங்கிப் பிடித்திருந்தாள். தனக்குத்தானே என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். நான் வணக்கம் சொன்னதைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை. ஒலேஸ்யா எப்போதும் போலச் சிநேகபாவத்துடன் என்னை வரவேற்றாள் எனினும் எங்கள் உரையாடல் சுரத்தின்றி இருந்தது. அவள் கவனம் வேறெங்கோ இருந்தது. நான் கேட்ட கேள்விகளுக்குத் தொடர்பில்லாமல் ஏதேதோ பதில் சொன்னாள். அவளுடைய அழகிய முகம் கலவரத்தால் பீடிக்கப்பட்டது போல் இருண்டு கிடந்தது.  

“ஏதோ பிரச்சனை என்று தெரிகிறது. என்ன, ஒலேஸ்யா?” பலகை மீதிருந்த அவள் கையை மெதுவாகத் தொட்டுக் கேட்டேன்.  

அவள் சட்டென்று முகத்தைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே வெறித்தாள். அவள் அமைதியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள நினைத்தாள். ஆனால் முடிச்சு விழுந்த புருவங்கள் துடித்தன. பற்களால் உதடுகளை அழுந்தக் கடித்தாள். 

“ஒன்றும் இல்லையே, எங்களுக்கு என்ன பிரச்சனை? எப்போதும் போலத்தான் இருக்கிறோம்.” சுரத்தில்லாமல் சொன்னாள்.

“ஒலேஸ்யா, ஏன் என்னிடம் உண்மையைச் சொல்ல மறுக்கிறாய்? இது சரி கிடையாது. நாம் நல்ல நண்பர்கள் என்று நினைத்தேன்.”

“தவறாக எதுவும் நடக்கவில்லை. நான் உறுதியாகச் சொல்கிறேன். எங்களுக்கு வரக்கூடிய சின்னச் சின்ன பிரச்சனைகள்தான். அற்ப விஷயங்கள்தான் எல்லாமே”

“இல்லை, ஒலேஸ்யா, அற்ப விஷயங்களுக்காக நீ இப்படி இருக்க மாட்டாய்.”

“எல்லாம் உங்கள் கற்பனை”

“தயவுசெய்து உண்மையைச் சொல், ஒலேஸ்யா. என்னால் உனக்கு உதவி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது யோசனை சொல்ல முடியும். மேலும், நீ என்னிடம் உன்னுடைய கவலையைப் பகிர்ந்துகொண்டால் உனக்கும் மன பாரம் குறைந்து சற்று ஆறுதலாக இருக்கும்.”

“அட, அதைப் பற்றிப் பேசி ஆகப்போவது எதுவுமில்லை. இந்த விஷயத்தில் நீங்கள் எங்களுக்கு உதவ எதுவும் கிடையாது.” 

முதியவள் திடீரென்று பெரும் ஆத்திரத்தோடு எங்கள் உரையாடலைக் குறுக்கிட்டு ஒலேஸ்யாவைப் பார்த்துக் கத்தினாள்.

“முட்டாள் மாதிரி நடந்துகொள்வதை முதலில் நிறுத்து. திமிர்த்தனமாய்ப் பேசாமல் அவர் சொல்லும் யோசனையைக் கொஞ்சமாவது காது கொடுத்துக் கேள். இந்த உலகத்திலேயே உன்னை விடவும் புத்திசாலி யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?” 

பிறகு, என் பக்கம் திரும்பி, “ஐயா, முழு விவரத்தையும் நான் உங்களிடம் சொல்கிறேன்” என்றாள்.

முன்பு ஒலேஸ்யா என்னிடம் பெருமையோடு குறிப்பிட்டிருந்த விவரங்களை வைத்து நான் நினைத்திருந்ததை விடவும் மிக மோசமான சம்பவம் அது. நேற்று முன்னிரவில், சூனியக்காரியின் வீட்டுக்கு ஊர்க்காவல் அதிகாரி வந்திருக்கிறார்.

மனுய்லிக்கா சொல்லத் தொடங்கினாள், “முதலில் அவன் நல்ல விதமாகத்தான் நடந்துகொண்டான். இருக்கையில் உட்கார்ந்தான். கொஞ்சம் வோட்கா கேட்டான். பிறகுதான் அவன் வேலையை ஆரம்பித்தான். ‘உங்கள் பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு இன்னும் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இந்த வீட்டைக் காலி செய்யுங்கள்’ என்றான். ‘அடுத்த தடவை நான் இங்கு வரும்போது நீங்கள் இருந்தால், இரண்டு சிப்பாய்களைக் கொண்டு உங்களை இங்கிருந்து உங்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பேன், நிச்சயம் செய்வேன், ஜாக்கிரதை!’ என்றான். என்னுடைய வீடு ஆம்சென்ஸ்க் நகரத்தில் இருக்கிறது. அது இங்கிருந்து வெகு தொலைவு. இப்போது அங்கு வசிக்கும் யாரையுமே எனக்குத் தெரியாது. மேலும் எங்களுடைய கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிட்டன. ஆரம்பத்திலிருந்தே அவை சரியான முறையிலும் இல்லை. ஐயோ என் கண்ணே!”

“இவ்வளவு காலமாக நீங்கள் இங்கு வசிப்பதை அவர் கண்டுகொள்ளாமல்தானே இருந்தார்? பிறகு எதற்காக இப்போது மட்டும் தொல்லை தருகிறார்?”

“எனக்கும் அதுதான் தெரியவேண்டும். அவன் ஏதேதோ உளறினான். எனக்கு எதுவுமே புரியவில்லை. நாங்கள் இப்போது குடியிருக்கும் இந்தக் குடிசை எங்களுக்குச் சொந்தமானது கிடையாது. இந்த இடத்தின் உரிமையாளருடையது. நாங்கள் முதலில் ஊருக்குள்தான் குடியிருந்தோம். பிறகுதான்…”

“எனக்குத் தெரியும் பாட்டி. நான் எல்லாவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன். குடியானவர்களுக்கு உங்கள் மீது கோபம்.”

“அதனால் அவர்கள் அப்படி நடந்துகொண்டார்கள். பிறகு நான் முதிய நிலக்கிழார் திருவாளர் அப்ரோசிமோவிடம் போய் அழுதேன். அவர் இந்த இடத்தை எனக்குக் கொடுத்தார். ஆனால் இப்போது இந்தக் காட்டை வேறொருவர் விலைக்கு வாங்கியிருப்பதோடு, இந்த சதுப்பு நிலத்தை வடிய வைக்கவோ அல்லது வேறென்னவோ செய்ய விரும்புகிறாராம். நான் இங்கு இருக்க முடியாதென்பது மட்டும் ஏன்?”

“ஒருவேளை எல்லாமே கட்டுக்கதையாக இருக்குமோ, பாட்டி? ஊர்க்காவல் அதிகாரியின் கை அரிப்புக்கு உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறாரோ?”  நான் கேட்டேன்.

“அதையும் முயற்சி செய்தேன், நண்பரே, நான் செய்தேன். அவன் வாங்கிக் கொள்ளவில்லை. நீங்கள் நம்புவீர்களா? நான் அவனுக்கு இருபத்தைந்து ரூபிள்கள் கொடுத்தேன். அவன் ஏற்கவில்லை. ஐயோ.. அவன் அவ்வளவு ஆத்திரப்பட்டான். நான் மிகவும் பயந்துவிட்டேன். ‘இங்கிருந்து வெளியேறுங்கள்’ என்று ஆவேசமாகக் கத்தினான். ஆதரவற்ற அநாதைகளான நாங்கள் இனி என்ன செய்யப்போகிறோம்? நீங்கள் எங்களுக்கு உதவ முடிந்தால், அந்தப் பேராசை பிடித்த நாயோடு பேசி இந்த முடிவை மாற்றச் செய்யுங்கள். காலமெல்லாம் உங்களுக்கு நன்றியோடு இருப்போம்.”

“பாட்டி” ஒலேஸ்யா கடுமையாய்க் கத்தினாள்.

மனுய்லிக்கா பதிலுக்குக் கத்தினாள். “என்ன, பாட்டி? இருபத்து நான்கு வருடங்களாக நான் உனக்குப் பாட்டியாக இருக்கிறேன். நாம் இருவரும் பிச்சை எடுக்கப் போகலாம் என்று நினைக்கிறாயா? அவள் சொல்வதை எல்லாம் பொருட்படுத்தாதீர்கள் ஐயா, உங்களால் முடிந்தால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.”

நான் அவர்களுக்காக அவரிடம் கெஞ்சிக் கேட்பதாக மேலோட்டமாக வாக்குக் கொடுத்தேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எனக்குப் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. ஊர்க்காவல் அதிகாரி இலஞ்சத்தை மறுக்கிறார் என்றால் நிச்சயமாக விஷயம் தீவிரமானதாக இருக்கவேண்டும். 

அன்று மாலை ஒலேஸ்யா எனக்கு வேண்டாவெறுப்பாய் விடைகொடுத்தாள். வழக்கமாய் என்னோடு வருவது போல் அன்று வழியனுப்பவும் வரவில்லை. தன்மானம் மிக்க அவள், அவர்கள் விஷயத்தில் என்னுடைய தலையீட்டை விரும்பவில்லை என்பதையும் அவளுடைய பாட்டி கண்ணீர் மல்க என்னிடம் கெஞ்சியதைப் பார்த்து அவள் அவமானத்தால் கூசிக் குறுகிப் போனதையும் நான் கவனித்தேன்.

(8) 

அது ஒரு இதமான காலைப்பொழுது. அடிக்கடி பெய்த பெருமழையால் பார்த்துக்கொண்டிருக்கும்போதே புற்கள் வளரத் தொடங்கியிருந்தன. புத்திளம் தளிர்கள் துளிர்த்திருந்தன. ஒவ்வொரு மழைக்குப் பிறகும் சூரியன் சற்று நேரம் தலைகாட்டி, மழை கழுவிவிட்டதால் முன்னிலும் அழகுப் பச்சையாய்த் தோற்றமளித்த, என் வீட்டின் முன் முற்றத்து லிலாக் இலைகளின் மீது மகிழ்வோடு பிரகாசித்தது. அலசலாக இருந்த காய்கறித் தோட்டத்தில் உற்சாகமான குருவிக்கூட்டம் சத்தமாய்க் கீச்சிட்டுக் கொண்டிருந்தன. போப்ளார் மரங்களின் பிசுபிசுப்பான பழுப்புநிற மொட்டுகள் கடுமையான மணம் பரப்பிக்கொண்டிருந்தன. 

நான் ஒரு காட்டுக் குடிசையை வரைந்துகொண்டிருந்தபோது யர்மோலா உள்ளே வந்தான். 

“ஊர்க்காவல் அதிகாரி வருகிறார்” முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு சொன்னான்.

‘ஊர்க்காவல் அதிகாரி வந்தால் என்னிடம் சொல்’ என்று இரண்டு நாட்களுக்கு முன்பு அவனிடம் சொல்லிவைத்திருந்தது எனக்கு முற்றிலும் மறந்தே போய்விட்டது. அதனால் அவரிடம் எனக்கென்ன வேலை ஆகவேண்டும் என்று புரியாமல் குழப்பத்துடன் “என்னது?” என்றேன். 

“ஊர்க்காவல் அதிகாரி வருகிறார் என்று சொல்கிறேன்.” யர்மோலா கடுப்பாகச் சொன்னான். கொஞ்ச நாளாகவே அவன் என்னோடு பேசும் தொனி இப்படிதான் இருக்கிறது.

“கொஞ்ச நேரம் முன்புதான் அவரை அணைக்கட்டுப் பக்கம் பார்த்தேன். அவர் இந்த வழியாகத்தான் வந்துகொண்டிருக்கிறார்” 

வாசலில் சக்கரங்களின் சத்தம் கேட்டது. நான் ஓடிப்போய் ஜன்னலைத் திறந்தேன். தொங்கிய உதடுகளும் வலி தோய்ந்த முகமுமாக சாக்லேட் நிறத்தில் இருந்த, மெலிந்த, காயடிக்கப்பட்டக் குதிரை பூட்டப்பட்ட உயரமான, கடகடக்கும் வண்டி நின்றிருந்தது. குதிரையானது, வண்டியின் ஒரு பக்கம் இரும்புச் சட்டத்தாலும் மற்றொரு பக்கம் உடைந்துபோன இரும்புச்சட்டத்துக்கு மாற்றாகத்
தடிமனான கயிற்றாலும் பூட்டப்பட்டிருந்தது. விரும்பத்தகாத கையூட்டு வதந்திகளைத் தவிர்க்க வேண்டி, ஊர்க்காவல் அதிகாரி வேண்டுமென்றே வண்டியை அப்படியொரு பரிதாப நிலையில் வைத்திருப்பதாக உள்ளூர்க்காரர்கள் பகடி செய்தார்கள். 

விலையுயர்ந்த சாம்பல் நிற மேல் கோட்டு அணிந்து, ஆஜானுபாகுவாக இருந்த ஊர்க்காவல் அதிகாரி, வண்டியின் இரண்டு இருக்கைகளையும் ஆக்கிரமித்தபடி அமர்ந்து, வண்டியைத் தானே ஓட்டிவந்தார்.

“வணக்கம் யெப்சிகி அஃப்ரிகனோவிச்!” ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்துக் கத்தினேன். 

குதிரையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டு, மெதுவாக முன்னோக்கிக் குனிந்து “வணக்கம். எப்படியிருக்கிறீர்கள்?” என்று சிநேகபாவத்துடனும் உயரதிகாரிக்கே உரிய கம்பீரத்தொனியிலும் பதிலளித்தார். 

“ஒரு நிமிடம் உள்ளே வருகிறீர்களா? உங்களோடு கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.”

அவர் மறுப்பாய் தலையசைத்தார். “என்னால் முடியாது. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. தண்ணீரில் மூழ்கி இறந்துபோன ஒருவனது உடலை ஆய்வு செய்ய வோலோஷா வரை போக வேண்டும்.”

அவருடைய பலவீனங்கள் என்னென்ன என்று ஏற்கனவே தெரிந்துவைத்திருந்தேன். அதனால் அலட்சியமாகச் சொல்வது போல, “அடடா! வோட்ஸெல் பிரபுவின் எஸ்டேட்டிலிருந்து இரண்டு அருமையான மதுப்புட்டிகள் கிடைத்தனவே. நான் நினைத்தேன் நாம்…”

“என்னால் முடியாது. வேலை இருக்கிறதே.”

“எனக்குத் தெரிந்த ஒருவர்தான் இவற்றை என்னிடம் விற்றார். அவர் அவற்றைப் பரம்பரைப் பொக்கிஷம் போல அவருடைய நிலவறையில் பதுக்கிப் பாதுகாத்து வைத்திருந்தார். ஒருவேளை, நீங்கள் வருவீர்களோ என்று நினைத்தேன். உங்கள் குதிரைக்குக் கொடுக்க என்னிடம் கொஞ்சம் ஓட்ஸ் கூட இருக்கிறது.”

“நீங்கள் இப்படி என்னைக் கட்டாயப்படுத்தக் கூடாது. கடமைதான் முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? சரி, அந்தப் புட்டிகளில் என்ன இருக்கிறது? ப்ளம் பிராந்தியா?”

“என்னது? ப்ளம் பிராந்தியா? பழைய வோட்கா, ஐயா, பழைய வோட்கா!”

“உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நான் ஏற்கனவே அதைக் குடித்துப் பார்த்திருக்கிறேன்.” அவர் கன்னத்தைத் தடவியபடி, அதிருப்தியுடன் முகத்தைச் சுழித்தார். 

நான் முன் போலவே எந்தப் பதற்றமும் இன்றி அமைதியாகச் சொன்னேன். “நிச்சயமாக, அது அசலாக இருந்திருக்காது. இது இருநூறு வருடப் பழைமையானது என்று அந்த மனிதர் சத்தியம் செய்து சொன்னார். இது உண்மையான கோன்யாக் போலவே மணம் வீசுகிறது. அம்பரைப் போலவே அழகிய மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.”

“எனக்காக என்னவெல்லாம் செய்கிறீர்கள், பாருங்கள்!” அவர் விளையாட்டாய் அலுத்துக்கொண்டார். “இப்போது என் குதிரையை யார் பார்த்துக் கொள்வது?”

என்னிடம் ஏராளமான பழைய வோட்கா புட்டிகள் இருந்தன என்றாலும் நான் பெருமையடித்தது போல அவ்வளவு பழைமையானது எதுவும் கிடையாது. ஆனால் என் பரிந்துரையைத் தீவிரப்படுத்தச் சில வருடங்களைக் கூடுதலாகச் சொல்லவேண்டியிருந்தது. எது எப்படியிருந்தாலும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட, உண்மையான, அற்புதத் திடம் கொண்ட, நசிந்துபோன வியாபாரியின் நிலவறைப் பெருமையைப் பறைசாற்றும் அருமையான பழைய வோட்காதான் அது. 

ஒரு மதகுருவின் குடும்பத்தின் வழிவந்த ஊர்க்காவல் அதிகாரி, வந்தவுடனேயே, ‘சளியினால் ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு நல்ல மருந்து’ என்று சொல்லி, என்னிடமிருந்து ஒரு மதுப்புட்டியைப் பெற்றுக்கொண்டார். நான் அவருக்கு ருசிகரமான பக்க உணவாக, இளம் முள்ளங்கியும் புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணெய்யும் கொடுத்தேன். 

ஐந்தாவது சுற்று முடிந்த பிறகு “உங்களுக்கு என்ன வேலை ஆகவேண்டும்?” என்று கேட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் பின்னால் சாய்ந்து அமர்ந்தார். அந்தப் பழைய சாய்வு நாற்காலி, அவருடைய எடையைத் தாங்கமுடியாமல் முனகியது. 

நான் அந்த ஏழைக்கிழவியின் சார்பில் அவளுடைய அவலச் சூழலையும்  கையறு நிலையையும் விரிவாக விளக்கி, தேவையற்ற, கடுமையான நடைமுறைகளைத் தவிர்க்குமாறு கேட்டேன். அவர் குனிந்த தலையோடு,  சிவப்பு முள்ளங்கியின் வேர்ப்பகுதியைச்
சரியாக நறுக்கிவிட்டு, முள்ளங்கியை வாயிலிட்டு ரசித்து ருசித்து மென்றபடி, நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவ்வப்போது நிமிர்ந்து உணர்ச்சியற்ற, மங்கலான, சின்னஞ்சிறிய, நீலநிறக் கண்களால் என்னைப் பார்ப்பார். ஆனால் அவருடைய பெரிய சிவந்த முகத்தில் காணப்படுவது இரக்கமா, கண்டனமா என என்னால் கண்டறிய முடியவில்லை.   

ஒருவாறாக எல்லாவற்றையும் நான் சொல்லிமுடித்ததும், அவர் கேட்டார், “எனவே நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?”

“என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் என்ன அர்த்தம்?” நான் உணர்ச்சிவசப்பட்டவனாகக் கேட்டேன், “அவர்கள் இருக்கும் மோசமான சூழலை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்தானே? அநாதரவான இரண்டு ஏழைப் பெண்கள்…”

“அவர்களுள் ஒருத்தி ரோஜாமொட்டு போல அழகானவள்!” அவர் நக்கலாகச் சொன்னார்.

“இருக்கலாம். ஆனால் அது விஷயமல்ல. எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம், நீங்கள் ஏன் அவர்கள் மீது கருணை காட்ட மறுக்கிறீர்கள்? அவர்களுடைய குடிசையை உடனடியாகக் காலி செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்வதை நான் நம்புவேன் என்று நினைக்காதீர்கள். குறைந்தபட்சம், அவர்களுடைய இடத்தின் உரிமையாளரிடம் அவர்களுக்காக நான் பேசுவதற்கான கால அவகாசமாவது நீங்கள் தந்தாக வேண்டும். ஒரு மாத காலமோ அல்லது அதற்கு மேலும் சில மாதங்களோ காத்திருப்பதில் என்ன பிரச்சனை வந்துவிடும்?”  

“என்ன பிரச்சனையா?” அவர் சாய்வு நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தார். “அதனால் எனக்குப் பேரிழப்பு ஏற்படும். முக்கியமாக என் வேலை போய்விடும். அந்த இடத்தின் புதிய உரிமையாளர் திருவாளர் இலியாஷெவிச் எப்படிப்பட்டவரோ? கடவுளுக்குத்தான் தெரியும். சின்ன விஷயம் என்றாலும் உடனேயே பீட்டர்ஸ்பர்க்குக்கு கடிதம் எழுதக்கூடிய, பிரச்சனைக்குரிய ஆளாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இங்கே நிறையப் பேர் இருக்கிறார்கள்.”

எரிச்சலுற்ற ஊர்க்காவல் அதிகாரியைச் சமாதானப்படுத்த முயன்றேன்.

“இங்கே பாருங்கள், யெப்சிகி அஃப்ரிகனோவிச், நீங்கள் அளவுக்கு அதிகமாக யோசிக்கிறீர்கள். மேலும், ஆபத்து என்று இருந்தால், நன்றியுணர்வும் கூடவே இருக்கும்.”

“ப்பா!” தன்னுடைய அகன்ற காற்சட்டையின் பைகளுக்குள் கைகளை நுழைத்தவாறு எரிச்சலோடு சொன்னார். “நன்றியுணர்வைப் பற்றிப் பேசுகிறீர்கள்! அற்பம் இருபத்தைந்து ரூபிளுக்காக, என் வேலையைப் பணயம் வைப்பேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஐயா, அப்படி நீங்கள் என்னைப் பற்றி நினைத்தீர்கள் என்றால் இன்னும் நீங்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.”

“அதை விடுங்கள் யெப்சிகி அஃப்ரிகனோவிச். கேள்வி இங்குப் பணத்தைப் பற்றியது அல்ல, மனிதாபிமான அடிப்படையிலான செயல் குறித்தது.”

“மனி-தாபி-மானம்?” அவர் நக்கலாக ஒவ்வொரு எழுத்தாக இழுத்து உச்சரித்தார். “மனிதாபிமானம் இங்கேதான் என்னைப் பிடித்து அழுத்துகிறது.” கழுத்துப்பட்டிக்கு மேலாகத் தொங்கிப்போய்க் காட்சியளித்த, செம்பழுப்பு நிறப் புறங்கழுத்துச் சதையைப் பட்டாரென்று
அடித்துக் காட்டினார். 

“நீங்கள் மிகைப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன், யெப்சிகி அஃப்ரிகனோவிச்!” 

“துளியும் இல்லை, ஐயா. ‘இது இந்தப் பகுதியின் சாபக்கேடு’ என்றொரு வாசகத்தை, பிரபலக் கதைசொல்லியான திருவாளர் க்ரிலோவ் பயன்படுத்தியிருப்பார். அந்த இரண்டு பெண்களும் அப்படியானவர்கள்தான். மாட்சிமை தாங்கிய இளவரசர் உருசோவ் எழுதிய அற்புதமான புத்தகம் ‘காவல் அதிகாரி’ வாசித்திருக்கிறீர்களா?”

“இல்லை, நான் வாசித்ததில்லை.”

“நிறையத் தவறவிட்டு விட்டீர்கள் ஐயா. அது ஒரு பிரமாதமான, உயர்போதனைகள் அடங்கிய புத்தகம். நீங்கள் ஓய்வாக இருக்கும்போது அதை வாசிக்கும்படி உங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்.”

“மிகவும் நல்லது. நான் உவப்போடு வாசிப்பேன். ஆனால் அந்தப் புத்தகத்துக்கும் அந்த இரண்டு ஏழைப் பெண்களுக்கும் என்ன தொடர்பு என்று எனக்கு இன்னமும் புரியவில்லை”

“என்ன தொடர்பா? நிறைய இருக்கிறது. முதலாவது”

அவர் தனது தடிமனான, ரோமங்கள் நிறைந்த இடது ஆள்காட்டி விரலை மடக்கினார், “ஒரு காவல் அதிகாரியானவர், குடிமக்கள் ஒவ்வொருவரும் சிரத்தையோடு தேவாலயத்துக்கு வருகை தருகிறார்களா என்பதை, சலிப்பில்லாமல் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். அந்தக் கடமையை ஒரு சுமையாக அவர் கருதக்கூடாது.’ நான் உங்களைக் கேட்கிறேன், அந்தப் பெண்மணி, அவளை என்னவென்று அழைக்கிறீர்கள்? – மனுய்லிக்கா, சரிதானே? – அவள் என்றைக்காவது தேவாலயத்துக்குப் போயிருக்கிறாளா?”

நான் பதில் பேசவில்லை. எங்களுடைய உரையாடலில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம் என்னை வாயடைக்கச் செய்தது. அவர் வெற்றிப் பெருமிதத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு இரண்டாவது விரலை மடக்கினார்.   

“இரண்டாவது: ‘போலியான தீர்க்கதரிசனங்களையும் பொய்யான சகுனச் சாத்திரங்களையும் எந்த இடத்திலும் ஊக்குவிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டது.’ இப்போது புரிகிறதா, ஐயா? இப்போது மூன்றாவது விஷயத்துக்கு வருகிறேன். ‘ஒருவர் தன்னை மந்திரவாதி அல்லது மாயவித்தைக்காரர் என்பதோ, அதைப் போன்ற மோசடித்தனங்களில் ஈடுபடுவதோ தடைசெய்யப்பட்டது.’ இதற்கு என்ன சொல்கிறீர்கள்? எப்படியோ இந்த விஷயமெல்லாம் திடீரென்று ஒரு நாள் உயர் அதிகாரியைச் சென்று சேர்ந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம், யாரைக் கேள்வி கேட்பார்கள்? என்னைத்தானே! யாரை வீட்டுக்கு அனுப்புவார்கள்? அதுவும் என்னைத்தான்! இப்போது புரிந்திருக்குமே!”

அவர் மறுபடி அமர்ந்துகொண்டார். அவருடைய கண்கள் இலக்கில்லாமல் சுவரில் அலைந்துகொண்டிருந்தன. கைவிரல்கள் மேஜை மீது சத்தமாகத் தாளம் போட்டுக்கொண்டு இருந்தன. 

“ஆனால்… யெப்சிகி அஃப்ரிகனோவிச், தங்களிடம் நான் ஒரு பிரத்தியேக வேண்டுகோளை முன்வைத்தால்?” நான் மீண்டும் ஆரம்பித்தேன், சற்றே கெஞ்சும் தொனியில். “சிக்கலும் பிரச்சனைகளும் மிகுந்த பணிச்சுமை உங்களை அழுத்துகிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அளவிலாத கருணையுள்ளம் உமது என்பதை நான் அறிவேன். அந்தப் பெண்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று எனக்கு வாக்குக் கொடுக்க உங்களால் எளிதில் இயலும்.”

ஊர்க்காவல் அதிகாரியின் கண்கள் என் தலைக்கு மேலே எங்கேயோ நோட்டம் விட்டுக்கொண்டிருந்தன.

“உங்களிடம் அருமையான துப்பாக்கி இருக்கிறது.” கை தொடர்ந்து தாளம் போட்டுக்கொண்டிருக்க, இயல்பாகச் சொன்னார். “மிகப் பிரமாதமான துப்பாக்கி. போன தடவை நான் இங்கு வந்திருந்தபோது நீங்கள் இங்கே இல்லை. நான் இதைப் பெரிதும் ரசித்தேன். அற்புதமான துப்பாக்கி!”

நான் தலையைத் திருப்பி துப்பாக்கியைப் பார்த்தேன்.

“ஆமாம். அற்புதமானதுதான்” நான் பெருமையாகச் சொன்னேன். “இது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட, மிகப் பழைமையான துப்பாக்கி. சென்ற வருடம் இதை நடுவடி துப்பாக்கியாக மீளுருவாக்கம் செய்தேன். இதன் குழல்களைப் பாருங்களேன்.”

“நிச்சயமாக. இந்தக் குழல்களைத்தான் நான் அதிகம் வியந்து ரசிக்கிறேன். அபாரமான விஷயம். இதை ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்வேன்.”

எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டபோது, அவருடைய கடைவாயோரம் லேசான, ஆனால் அர்த்தமுள்ள புன்னகை எழுவதைப் பார்த்தேன். நான் எழுந்தேன். துப்பாக்கியைச் சுவரிலிருந்து எடுத்தேன். அவரிடம் சென்றேன்.

“விருந்தினர் எதை ரசித்து வியந்தாலும் அதை அவருக்கே அன்பளிப்பாகத் தருவது சிர்கேசியரியன் இனிய வழக்கம். நீங்களோ நானோ சிர்கேசியர் கிடையாது, எனினும் நான் தருவதை ஞாபகார்த்தமாக தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கெஞ்சிக் கேட்கிறேன்.” நான் இன்முகத்தோடு சொன்னேன்,

அவர் சங்கோஜப்படுவது போல் பாசாங்கு செய்தார். “அட, நீங்கள் இவ்வளவு அழகிய பொருளை இப்படித் தூக்கித் தரக்கூடாது. உண்மையாகவே, இவ்வளவு உதார குணமுள்ள வழக்கம் வேண்டாம்.”

நான் அதிகம் அவரை வற்புறுத்தவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் அந்தத் துப்பாக்கியை வாங்கி, முழங்கால்களுக்கு இடையில் மெதுவாக நிறுத்தி, சுத்தமான கைக்குட்டையைக் கொண்டு வெகு கவனமாக அதில் படிந்திருந்த தூசைத் துடைத்தார். என்னுடைய துப்பாக்கி ஒரு கைதேர்ந்த நிபுணருக்கு உடைமையானதை எண்ணி ஓரளவு நிம்மதி அடைந்தேன். துப்பாக்கி கைக்கு வந்ததுமே, ஊர்க்காவல் அதிகாரி எழுந்துகொண்டு, அவசரமாக வெளியேறத் தலைப்பட்டார். 

“எனக்கு அவசர வேலை இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு நேரம் உங்களோடு அரட்டை அடித்துக்கொண்டு இருந்திருக்கிறேன்.” தன்னுடைய ரப்பர் பூட்ஸ்களை அணிந்துகொள்வதற்காக, கால்களை வேகமாகத் தரையில் தட்டிவிட்டுச் சொன்னார், “எங்கள் பக்கம் வந்தீர்கள் என்றால் அவசியம் என்னுடைய வீட்டுக்கும் வரவேண்டும்.”

“மனுய்லிக்கா விஷயம் என்னாச்சு, ஐயா?” நான் சாதுர்யமாக அவருக்கு நினைவூட்டினேன்.

“பார்க்கலாம்” மழுப்பலாக முனகினார். “நான் உங்களிடம் இன்னொன்றும் சொல்ல நினைத்தேன், உங்கள் வசம் அருமையான முள்ளங்கி வைத்திருக்கிறீர்கள்!”

“நானே அவற்றை விளைவித்தேன்.”

“அற்புதமான ருசி! உங்களுக்குத் தெரியுமா, என்னுடைய மனைவிக்குக் காய்கறிகள் என்றால் கொள்ளைப் பிரியம். உங்களிடம் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை, இருந்தால் ஒரு கொத்து மட்டும்.”

“உங்களுக்குத் தருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, யெப்சிகி அஃப்ரிகனோவிச்! இதை என்னுடைய கௌரவமாக நினைக்கிறேன். இன்றே யார் மூலமாவது ஒரு கூடை நிறையக் கொடுத்தனுப்புகிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் கூடவே கொஞ்சம் வெண்ணெயும் தருகிறேன். என்னிடம் கிடைத்தற்கரிய, தரமான வெண்ணெய் இருக்கிறது.” 

“அப்படியா? நல்லது. எனில் கொஞ்சம் வெண்ணெயும்” அவர் சற்றே இறங்கிவந்தார். “அந்தப் பெண்களிடம், இப்போதைக்கு என்னால் எந்தத் தொந்தரவும் இருக்காது என்று நீங்கள் அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” சட்டென்று அவரது குரல் உயர்ந்தது, “ஒரு நன்றியோடு அவர்கள் தப்பித்துவிட முடியாது. சரி, போய்வருகிறேன். அன்பளிப்புக்கும் உபசாரத்துக்கும் மீண்டும் நன்றி.” 

இராணுவ மிடுக்கோடு குதிகால்களைத் தட்டிவிட்டு, கனத்த சரீரத்தைத் தாங்கி செருக்கோடு குதிரைவண்டியை நோக்கி நடந்தார். வண்டியின் அருகில் மூத்த கிராமக் காவலரும், யர்மோலாவும் மரியாதை நிமித்தம் தங்கள் தொப்பிகளைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தனர்.

(9)

ஊர்க்காவல் அதிகாரி தான் கொடுத்த வாக்கின்படி, காட்டுக் குடிசையில் வசித்த பெண்களைக் கொஞ்சக் காலம் விட்டு வைத்தார். ஆனால் எனக்கும் ஒலேஸ்யாவுக்கும் இடையிலிருந்த உறவில் சட்டென்று திடுக்கிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அவள் என்னிடம் நடந்துகொண்ட விதத்தில், முன்பு இருந்தது போன்று நம்பிக்கையான, கள்ளங்கபடமில்லாத நட்பின் சுவடு தென்படவில்லை. குறும்புக்காரச் சிறுவனின் துறுதுறுப்போடு கூடிய அழகிய இளம்பெண்ணின் துள்ளலும் துடிப்பும் இல்லை. எங்கள் உரையாடலில் தாளமுடியாத தர்மசங்கடம் வந்து புகுந்துகொண்டது. எங்களுடைய பரந்த ஆர்வத்துக்குத் தீனி போடும் அனைத்து விஷயங்களையும் ஒலேஸ்யா சங்கோஜத்தோடு அவசரமாகத் தவிர்த்தாள். 

என் முன்னிலையில் தன்னுடைய வேலையில் தீவிரமான கவனக் குவிப்புடன் இருப்பது போல் காணப்படுவாள். ஆனால் அவளுடைய கண்கள் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், கைகள் பொத்தென்று அவளுடைய மடியில் விழுவதை நான் அடிக்கடி பார்த்தேன். அந்தச் சமயத்தில் நான் அவளைப் பெயர் சொல்லி அழைத்தாலோ அல்லது ஏதேனும் கேள்வி கேட்டாலோ, சுதாரிக்க முயன்று, மிரட்சியோடு மெதுவாகத் திரும்பி என்னைப் பார்ப்பாள். சில வேளைகளில் நான் அங்கு இருப்பது அவளுக்குத் தொந்தரவாகவோ, சுமையாகவோ இருக்கிறதோ என்று கூட எண்ணத்தோன்றும். ஆனால் சில தினங்களுக்கு முன்புவரை, நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும், நான் முன்வைத்த ஒவ்வொரு கருத்துக்கும் அவள் வெளிப்படுத்திய பேரார்வத்துக்குப் பிறகு அவள் இப்படி நடந்துகொள்வது எனக்கு விநோதமாகப் பட்டது. 

ஊர்க்காவல் அதிகாரியிடம் அவர்களுக்காக நான் மன்றாடியதை அவளால் மன்னிக்க முடியவில்லை என்று எனக்குத் தோன்றியது. என்னுடைய அந்த ஆதரவு கோரிக்கை, அவளது சுதந்திர உணர்வைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த யூகமும் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஏனெனில் காட்டுக்குள் வளர்ந்த ஒரு சாதாரணப் பெண்ணுக்கு இவ்வளவு வீம்பும் வைராக்கியமும் இருக்கக்கூடுமா?

நிச்சயமாக எனக்கு விளக்கம் தேவைப்பட்டது. ஆனால் ஒலேஸ்யா மனந்திறந்து பேசக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் பிடிவாதமாகத் தவிர்த்துவந்தாள். 

எங்களுடைய மாலைநேர நடைப்பயணங்கள் நின்றுபோயின. ஒவ்வொரு நாளும் அவள் வீட்டிலிருந்து புறப்படும்போது அவளை ஆசையாகவும் கெஞ்சலாகவும் பார்த்த பார்வைகளுக்கு பலனேதும் கிடைக்கவில்லை. அவளுக்கு எதுவுமே புரியாதது போல் என்னை நம்பவைக்க முயன்றாள். இன்னொரு பக்கம், முதியவளின் இருப்பு. அவளுக்குக் காது கேட்காது என்றாலும் கூட, அது எனக்கு இடையூறாக இருந்தது.

சில சமயம், ஒலேஸ்யாவை தினமும் பார்க்கப்போகும் பழக்கத்தை மாற்றமுடியாத என்னுடைய இயலாமை குறித்து என் மீதே ஆத்திரம் வந்தது. வசீகரமும் விநோதமுமான அப்பெண்ணையும் என் இதயத்தையும் பிணைத்திருந்த கண்ணுக்குத் தெரியாத வலிமையான இழைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. காதலைப் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை. ஆனால் காதலுக்கு முந்தைய அமைதியற்ற தருணங்களை, தெளிவில்லாத, துயரம் ததும்பும், சோகமயமான உணர்வுகளால் நிரம்பிய காலகட்டத்தை ஏற்கனவே அடைந்திருந்தேன். நான் எங்கே இருந்தாலும், எந்தச் செயலில் என் கவனத்தைத் திசைதிருப்ப முயன்றாலும், என் சிந்தனை முழுவதையும் ஒலேஸ்யாவே ஆக்கிரமித்திருந்தாள். என் உடல் பொருள் ஆவி அனைத்தும் அவளை நினைத்து ஏங்கின. அவளுடைய உருவம், அவள் சொன்ன வார்த்தைகள் (மொக்கையாக இருந்தாலும்), அவளுடைய உடல்மொழி, அவளுடைய சிரிப்பு யாவும் என்னிதயத்தில் இதமான, இனிமையான வேதனையை உண்டாக்கின. அந்தி சாயும்போது, ஆட்டம்கண்ட பலகையில் அவளுக்குப் பக்கத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருக்கும்போது, விரக்தியுற்று முன்னிலும் அவமானமாகவும் தர்மசங்கடமாகவும் அசமந்தமாகவும் உணர்வேன்.   

ஒரு முறை ஒரு நாள் முழுவதும் இதுபோல் ஒலேஸ்யாவின் அருகில் அமர்ந்திருந்தேன். அன்றைய தினம் காலையிலிருந்தே எனக்கு உடல்நிலை சரியாக இல்லை. என்ன காரணம் என்றும் எனக்குத் தெரியவில்லை. மாலையில் நிலைமை மிகவும் மோசமாகிப் போனது. என்னுடைய தலைக் கனத்தது, காதுக்குள் ரீங்காரம் கேட்டது. யாரோ மென்மையான ஆனால் உறுதியான கரங்களால் அழுத்துவது போல் பின்னந்தலையில் லேசான, வலி விடாமல் இருந்துகொண்டே இருந்தது. என்னுடைய வாய் உலர்ந்து போனது. சோர்வும் களைப்பும் பலவீனமும் என் உடல் முழுவதும் பரவி, எல்லா நேரமும் கொட்டாவி விட்டுக் கொண்டும் உடம்பை முறுக்கிக்கொண்டும் இருந்தேன். பிரகாசமான ஒளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது போல் என் கண்கள் பயங்கரமாகக் கூசின. 

அன்று மாலை நான் தாமதமாக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். திடீரென்று என் உடல் கடுமையாக நடுங்கத் தொடங்கியது. குடிகாரனைப் போல நான் தள்ளாடினேன். எங்கே போகிறேன் என்று கூட தெரியவில்லை. என்னுடைய பற்கள் சத்தமாய்க் கிடுகிடுத்தன. 

என்னை வீட்டுக்கு அழைத்துவந்தவர் யார் என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை. முழுமையாக ஆறு நாட்கள், மோசமான, கடுமையான பொலிசியக் காய்ச்சலால் நடுங்கிக்கொண்டே இருந்தேன். பகல் பொழுதுகளில் காய்ச்சல் கொஞ்சம் குறைவது போலத் தோன்றும். கொஞ்சம் நினைவு திரும்பும். 

காய்ச்சலின் வேகத்தால் பாதிக்கப்பட்டு, எழுந்து நடக்கவும் இயலாமல் அறைக்குள் தவழ்ந்து சென்றேன். வெலவெலத்துப் போயிருந்த என்னுடைய முழங்கால் மூட்டுகள் பயங்கரமாய் வலித்தன. கொஞ்சம் வேகமாக அசைந்தாலே இரத்தம் குபுக்கென தலைக்கேறி, பார்வையை மறைத்தது.

முன்னிரவுப் பொழுதுகளில், சரியாக ஏழு மணி வாக்கில் காய்ச்சல் மறுபடியும் உக்கிரம் அடையும். . அந்தக்கொடுமையான இரவுகளில் குளிரும் வெப்பமும் என்னை மாற்றி மாற்றி வதைக்கும். போர்வைகளுக்குள் குளிரில் நடுங்குவதும், பிறகு தாளமுடியாத வெப்பத்தால் உடல் எரிச்சலோடு அவதிப்படுவதுமாக ஓர் இரவைக் கழிப்பது ஒரு யுகத்தைக் கழிப்பது போல் இருக்கும். கொஞ்சம் கண்ணயர்ந்தாலும் போதும், மோசமான, விசித்திரமான, வேதனையான துர்க்கனாக்கள் வந்து, ஏற்கனவே சூடாகிக் கிடக்கும் மூளையை மேலும் சித்திரவதை செய்தன. 

நான் காணும் காட்சிகள் யாவும் நுட்பமும் நுண்மையும் மிக்க விவரக் குவியலாகவும், கன்னாபின்னாவென்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பது போலவும் தோன்றின. ஒழுங்கமைவற்ற, வண்ணப் பெட்டிகள் சிலவற்றை நான் பிரித்தடுக்குவது போல விநோதமான கற்பனை தோன்றும். பெரிய பெட்டிக்குள்ளிருந்து சிறிய பெட்டியை, சிறிய பெட்டிக்குள்ளிருந்து இன்னும் சிறிய பெட்டியை, அதற்குள்ளிருந்து இன்னும் சிறிய பெட்டியை, இப்படிப் பெட்டிகளுக்குள்ளிருந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டே இருந்தேன். என்னால் நிறுத்த முடியாத, முடிவே இல்லாத அந்த வேலை எனக்குப் பெரும் அயர்ச்சியூட்டியது. 

பிறகு வண்ண மயமான சுவரலங்காரத் தாள்களின் நீளத் துண்டுகள் என் கண்முன்னால் தலைச்சுற்றவைக்கும் வேகத்தில் வந்து வந்து போகும். ஆனால் அவற்றை என்னால் வெகு துல்லியமாய்ப் பார்க்க முடியும். வடிவங்களுக்குப் பதிலாக அவற்றின் மனிதத்தலைகள் மாலையாய்க் காட்சியளிக்கும். சில அழகாகவும் கனிவான புன்னகையுடனும் காட்சியளிக்கும். மற்ற யாவும் பயங்கரமாய்ப் பழிப்பு காட்டிக்கொண்டும் நாக்கைத் துருத்திக்கொண்டும், பல்லைக் காட்டிக் கொண்டும், பெரிய கருவிழிகளை உருட்டிக்கொண்டும் இருக்கும். 

பிறகு நானும் யர்மோலாவும் மிகவும் சிக்கலான, பலத்த, அரூபமான சர்ச்சையில் ஈடுபடுவோம். நாங்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாமே மேன்மேலும் சாமர்த்தியமாகவும் கூர்மையாகவும் மாறிக்கொண்டே போகும். சில வார்த்தைகள் அல்லது எழுத்துகளே கூட சட்டென்று புதிரான, புரிந்துகொள்ள முடியாத அர்த்தம் கொண்டவையாக மாறிவிடும். அருவருப்பான கயமைவாதங்களை ஒன்றன் பின் ஒன்றாக என் மண்டைக்குள் தோற்றுவிக்கும், நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று, வெறுக்கத்தக்கதாக மாறிவிட்ட ஒரு விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரமுடியாமல் என்னைத் தடுக்கும், இன்னதெனத் தெரியாத, விசித்திரமான சக்தியைப் பற்றிய நுண்ணிய அச்சுறுத்தலால் நான் மேலும் மேலும் பீடிக்கப்படுவேன். மனிதர்கள், விலங்கு, பறவை முதலான உயிரினங்கள், நிலப்பரப்புகள், விநோதமான வடிவங்களிலும் வண்ணங்களிலுமான பொருட்கள், என்னுடைய எல்லாப் புலன்களாலும் அர்த்தம் உணரப்பட்ட வார்த்தைகள், வாக்கியங்கள் ஆகியவற்றால் சுழற்றியடிக்கும் சூறாவளியாய் அது இருந்தது. இவ்வளவுக்கு மத்தியிலும், கரும்புகை படிந்த விளக்கு மறைப்பினால் மேற்கூரையில் காட்சியளித்த நேர்த்தியான ஒளிவட்டத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தேன் என்பது விசித்திரம்தான்.

மங்கலான சுற்றுவிளிம்பினைக் கொண்ட சாத்வீகமான அந்த ஒளிவளையத்துக்குள், வெறித்தனமான, முன்னுக்குப் பின் முரணான என்னுடைய கனவுகளை விடவும் அதிக ஆபத்தும் குரூரமும் மர்மமும் நிறைந்ததொரு வாழ்க்கை சத்தமில்லாமல் பதுங்கியிருக்கிறது என்பதை எப்படியோ நான் அறிந்திருந்தேன்.  

பிறகு நான் விழித்துக்கொள்வேன் அல்லது ஏற்கனவே விழிப்புநிலையில் இருப்பேன். ஒருவாறாகச் சுயநினைவுக்கு வரும்போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதும் அதனால் படுக்கையில் இருக்கிறேன் என்பதும் இதுவரை கண்டவை யாவும் மனப்பிரமை என்பதும் புரியும். ஆயினும் இருண்ட மேற்கூரையில் தெரிந்த பிரகாசமான ஒளிவட்டத்தினுள் மறைந்திருக்கும் துர்க்குறி அபாயம் தொடர்ந்து என்னை அச்சுறுத்தியவாறே இருக்கும். மிகுந்த பிரயாசையோடு என்னுடைய கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்ப்பேன். முடிவில்லாத என்னுடைய அதிபயங்கரக் கனவுகளின் நீட்சி வெறும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டுமே என்பதை உணர்ந்து குழப்பமும் வேதனையும் அடைவேன். 

“கடவுளே! எப்போதுதான் விடியும்?” விரக்தியோடு சூடான தலையணையில் தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பி, புரண்டுகொண்டே இருப்பேன். இரைப்போடு கூடிய என்னுடைய மூச்சுக்காற்றே என் உதடுகளைச் சுடும். மீண்டும் லேசான தூக்கம் என்னை அறியாமல் வரும். உடனே என்னுடைய மூளை துர்க்கனாக்களின் விளையாட்டுப் பொருளாக மாறிவிடும். இரண்டே நிமிடத்தில் மரணவேதனைக்கு இலக்காகி மறுபடியும் விழிப்பு தட்டிவிடும். 

ஆறு நாட்களுக்குப் பிறகு, கொய்னா மருந்து மற்றும் மூலிகைச்சாற்றின் உதவியால் என்னுடைய உடல்நிலை சற்றுத் தேறியது. படுக்கையை விட்டு எழமுடிந்தது என்றாலும் முற்றிலும் தளர்ந்து வெலவெலத்துப் போயிருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகக் குணம் தெரிந்தது. ஆறு நாள் காய்ச்சலின் தீவிரத்தால் களைத்துப்போயிருந்த என் மூளை எந்தச் சிந்தனைகளுமற்று நிச்சலனமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. பசி முன்னிலும் இருமடங்காகத் திரும்பியது. ஆரோக்கியத்தையும் உயிர்வாழ்தலின் மகிழ்ச்சியையும் ஒவ்வொரு அணுவும் உள்வாங்குவது போல் ஒவ்வொரு மணி நேரமும் உடலின் வலு கூடிக்கொண்டே போனது. 

காட்டில் தனித்திருக்கும் அந்தப் பழைய தளர்ந்துபோன குடிசைக்குப் போகவேண்டும் என்ற திடீர் ஆவல் என்னை உந்தித் தள்ளியது. நோய்மையிலிருந்து என்னுடைய உடல் இன்னும் முற்றிலுமாக மீளவில்லை. ஆயினும் எப்போதெல்லாம் ஒலேஸ்யாவையும் அவளுடைய குரலையும் நினைக்கிறேனோ அப்போதெல்லாம் என்னை மீறி அழுகை வரும் அளவுக்கு மிகவும் நெகிழ்ந்திருந்தேன்.

(10)

மேலும் ஐந்து நாட்கள் கடந்ததும் நான் புறப்பட்டேன். . களைப்பின்றிச் சூனியக்காரியின் குடிசை வரை நடந்துபோகும் அளவுக்கு நல்ல திடமாக இருந்தேன். குடிசையின் வாசலை நெருங்கும் தறுவாயில் என் இதயம் பயத்தால் துடித்தது. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக நான் ஒலேஸ்யாவைப் பார்க்கவில்லை. அவள் எனக்கு எந்த அளவுக்குப் பிரியமானவள் என்பதை இப்போது மிகத் தெளிவாக உணர்ந்திருந்தேன். கதவின் கைப்பிடியில் கை வைத்ததும், மூச்சைப் பிடித்துக்கொண்டு சில நொடிகள் தயங்கி நின்றேன். கதவைத் தள்ளித் திறக்கும்முன், தயக்கத்தால் கொஞ்ச நேரம் கண்ணைக்கூட மூடிக்கொண்டேன். 

நான் உள்ளே நுழைந்ததும் உண்டான உணர்வுகளை விளக்குவது மிகவும் கடினம். நெடுநாள் பிரிவிற்குப் பிறகு சந்திக்கும் ஒரு தாயும் மகனும் அல்லது ஒரு கணவனும் மனைவியும் அல்லது இரு காதலர்கள் பேசும் பேச்சுக்களை நினைவில் நிறுத்த இயலுமா? அவை கேட்பதற்கு மிகச் சாதாரணமாக இருக்கும். பதிவு செய்து பிறகு கேட்டுப் பார்த்தால் பிதற்றலாகக் கூட இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே நமக்கு மிகவும் பிரியமான ஒருவரின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் மிகப் பொருத்தமானதாகவும் விலைமதிப்பற்றதாகவும் இருக்கும் அல்லவா?    

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, மிகத் துல்லியமாகக் கூட. என்னைப் பார்த்தவுடன் ஒலேஸ்யாவின் அழகிய முகம் வெளிறிப் போனது. இதுவரை நான் பார்த்திராத அந்த முகம் கலவரம், பயம், அன்பின் இளக்கம் எனப் பலவித உணர்வுகளை அடுத்தடுத்துப் பிரதிபலித்தது. முதியவள் என்னைப் பார்த்து என்னவோ முணுமுணுத்துச் சொன்னாள். ஆனால் என்னை வரவேற்றதுபோல் தெரியவில்லை.  

“உங்களுக்கு என்ன ஆயிற்று? நலமில்லாமல் இருந்தீர்களா? எப்படி இளைத்துவிட்டீர்கள்! அடப்பாவமே!” ஒலேஸ்யாவின் குரல் இன்னிசை போன்று என் காதில் ஒலித்தது. 

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. நேருக்கு நேராய் நின்று கைகளைக் கோத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துக்கொண்டே வெகுநேரம் அமைதியாக நின்றுகொண்டிருந்தோம். அந்த சில மௌன நொடிகளை என் வாழ்க்கையின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணமாக நினைக்கிறேன். அதற்கு முன்பும் சரி, அதற்குப் பின்பும் சரி, அது போன்றதொரு மிகத் தூய்மையான, மிக முழுமையான, யாவற்றையும் உள்வாங்கும் பரவச உணர்வை நான் அனுபவித்ததே இல்லை. என்னைச் சந்தித்ததால் ஏற்பட்ட உணர்வுப் பெருக்கு, நெடுநாள் நான் வாராமைக்கான கண்டனம், உளப்பூர்வமான காதலின் வெளிப்பாடு என அனைத்தையும் ஒலேஸ்யாவின் பெரிய கருவிழிகளில் நான் படித்தேன். அந்தப் பார்வையினூடாக, எந்த நிபந்தனைகளுமின்றி, எந்தத் தயக்கமுமின்றி அவள் மிக மகிழ்வோடு என்னிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன். 

மனுய்லிக்கா அங்கிருப்பதை ஓரக்கண்ணால் சுட்டி, அந்தப் பரவச நிலையை முதலில் உடைத்தவள் ஒலேஸ்யாதான். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்தோம். என்னுடைய நோய்மை, நான் உட்கொண்ட மருந்துகள், மருத்துவர் பரிந்துரைத்தவை (நான் நோயுற்றிருந்தபோது நகரத்திலிருந்து இரண்டு முறை மருத்துவர் வந்து சென்றார்) எனப் பலவற்றைப் பற்றியும் அக்கறையோடு கேள்வி கேட்கத் தொடங்கினாள். மருத்துவர் வந்த கதையைப் பலமுறை சொல்லச் சொல்லிக் கேட்டாள். அவ்வப்போது அவளுடைய உதட்டோரம் எழுந்த கேலிப் புன்னகையை நான் கவனித்தேன்.

“உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால், ஒரே நாளில் உங்களைக் குணப்படுத்தி எழுந்து நடக்க வைத்திருப்பேன். எதுவுமே தெரியாத, கொஞ்சம் கூட எதுவுமே தெரியாத ஆட்களையெல்லாம் எப்படி நம்புகிறீர்கள்? நீங்கள் ஏன் என்னை அழைத்துவரச் சொல்லவில்லை?” அவள் தாளமுடியாத வருத்தத்தோடு கேட்டாள். 

நான் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினேன். “இங்கே பார், ஒலேஸ்யா, அது திடீரென்று எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. மேலும் உனக்குத் தொந்தரவு தரவும் நான் விரும்பவில்லை. என்மீது உனக்கு என்ன கோபமோ, வருத்தமோ தெரியவில்லை, கடந்த சில நாட்களாகவே என்னிடம் வித்தியாசமாக நடந்துகொண்டிருந்தாய்.” நான் குரலைத் தழைத்துக்கொண்டு சொன்னேன், “ஒலேஸ்யா, ஒரு விஷயம்! நாம் இருவரும் நிறைய நிறைய விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். நாம் இருவர் மட்டும். நான் சொல்வது புரிகிறதா?” 

அவள் இமைகளைத் தாழ்த்தி சம்மதம் தெரிவித்தாள். பிறகு தயக்கத்துடன் தன் பாட்டியைப் பார்த்துவிட்டு, மெதுவாக என்னிடம் கிசுகிசுத்தாள், “ஆமாம், நானும் கூட அதை நினைத்தேன். ஆனால் இப்போது வேண்டாம். பிறகு.” 

சூரியன் மறையத் தொடங்கும் முன்பே அவள் என்னைப் புறப்படச் சொல்லி அவசரப்படுத்தினாள்.

“கிளம்புங்கள், சீக்கிரம்!” சொல்லிக்கொண்டே என் கையைப் பிடித்திழுத்து பலகையிலிருந்து எழுப்பினாள். “வாடைக்காற்று பட்டால் மறுபடியும் உங்களுக்குச் சுகமில்லாமல் போய்விடும்.”

அவள் தன்னுடைய சாம்பல் நிறக் கம்பளி சால்வையை எடுத்துப் போர்த்துவதைப் பார்த்த மனுய்லிக்கா கேட்டாள். “எங்கே போகிறாய், ஒலேஸ்யா?”

“இவரோடு கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வருகிறேன்” 

மனுய்லிக்காவைப் பார்க்காமல் ஜன்னலைப் பார்த்தபடி அலட்சியமாகச் சொன்னாள். அவளது குரலில் மெல்லிய எரிச்சலும் சலிப்பும் வெளிப்பட்டன.

“அப்படியென்றால் நீ போகத்தான் போகிறாயா?” முதியவள் அழுத்திக் கேட்டாள்.

ஒலேஸ்யா கண்கள் மின்ன, “ஆமாம், போகத்தான் போகிறேன். நாம் இதைப் பற்றி நிறையவே பேசிவிட்டோம். இது என்னுடைய தனிப்பட்ட விஷயம். இதன் விளைவுகளை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று சற்றே திமிராக பதிலிறுத்தாள். 

“ஓஹோ!” கடுப்பான மனுய்லிக்கா கத்தினாள். 

தற்போதைய அவர்களது குறுகிய, கசப்பான உரையாடலானது, ஏற்கனவே அவர்களுக்கிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொடர் சர்ச்சைகளின் நீட்சியே என்பது எனக்குப் புரிந்தது. 

“நீ என்னோடு வெளியில் வருவதை உன் பாட்டி விரும்பவில்லை. அப்படித்தானே?” நாங்கள் காட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது நான் ஒலேஸ்யாவிடம் கேட்டேன். அவள் எரிச்சலோடு தோள்களைக் குலுக்கினாள்.

“அவர் சொல்வதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆமாம், அவருக்கு விருப்பமில்லைதான். அதனால் என்ன? நிச்சயமாக, எனக்குப் பிடித்ததைச் செய்ய எனக்கு முழுச் சுதந்திரம் உள்ளது.”

திடீரென்று எனக்குள் ஒரு உந்துதல். முந்தைய அவளது கடுமைக்காக, இப்போது அவளைக் கடிந்துகொள்ளத் தோன்றியது. 

“எனக்கு நோய் வருவதற்கு முன்பே நீ என்னோடு வெளியில் வந்திருக்கலாம், ஆனால் நீ அதைச் செய்யவில்லை. நீ வராததால் நான் எவ்வளவு வேதனையுற்றேன் என்று உனக்குத் தெரியுமா, ஒலேஸ்யா? ஒவ்வொரு நாள் மாலையும் நீ என்னுடன் வருவாய் என்று நம்பினேன். ஆனால் நீயோ பாராமுகம் காட்டினாய், இறுக்கமாகவும் கோபமாகவும் இருந்தாய். ஐயோ, நீ எப்படியெல்லாம் என்னை வாட்டி வதைத்தாய் தெரியுமா, ஒலேஸ்யா?”

“தயவுசெய்து நிறுத்துங்கள். என் அன்பே, அதையெல்லாம் மறந்துவிடுங்களேன்” மன்னிப்பு கேட்கும் தொனியில் கெஞ்சினாள். 

“இல்லை, நான் உன்னைக் குற்றம் சொல்லவில்லை. ஏதோ சொல்லத் தோன்றியது. இப்போது எனக்குக் காரணம் புரிந்துவிட்டது. ஆரம்பத்தில் நான் என்ன நினைத்தேன் தெரியுமா? இப்போது அதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அந்த ஊர்க்காவல் அதிகாரியால்தான் நீ என்னிடம் கோபமாக இருக்கிறாய் என்றுதான் நினைத்தேன். அதுதான் என்னை அதிகமாகக் காயப்படுத்தியது. நீ என்னை ஓர் அந்நியன் போல் நினைத்துத்தான் நான் நட்புணர்வோடு செய்த அந்த சிறு உதவியை ஏற்பதை அவமானமாக நினைக்கிறாய் போலும் என்று நினைத்தேன். அதுவே என்னை மிகவும் வருத்தியது. எனக்கு வேறெதுவும் தோன்றவில்லை. ஆனால் பார், எல்லாவற்றுக்கும் பாட்டிதான் காரணம்!”

ஒலேஸ்யா சட்டென்று முகம் சிவந்துபோனாள்.

“இல்லை, அது காரணம் இல்லை. எனக்கே அது பிடிக்கவில்லை.” அவள் காட்டமாய் மறுத்தாள்.

நான் அவளைப் பக்கவாட்டிலிருந்து பார்த்தபோது, சற்றே குனிந்த தலையோடு கூடிய அவளுடைய திருத்தமான, மெல்லிய உருவத்தைக் காணக்கூடியதாய் இருந்தது. அவளும் மெலிந்துபோய், கண்களுக்குக் கீழே கருவளையங்களோடு இருப்பதை அப்போதுதான் நான் கவனித்தேன். நான் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்த அவள், நிமிர்ந்து என்னைப் பார்த்தாள், ஆனால் உடனேயே கண்களைத் தழைத்து, நாணப் புன்னகையோடு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.  

“ஏன் உனக்குப் பிடிக்கவில்லை, ஒலேஸ்யா? ஏன்?” உடைந்த குரலில் நான் கேட்டபடி, அவளது கையைப் பிடித்திழுத்து நிறுத்தினேன்.

நேர்க்கோடு போலிருந்த நீண்ட குறுகலான பாதையின் நடுவில் நாங்கள் நின்றிருந்தோம். இருபுறமும் நெடுக வளர்ந்திருந்த, உயர்ந்தோங்கிய ஒடிசலான பைன் மரங்கள் சீரான பாதையையும், நறுமணம் கொண்ட அவற்றின் கிளைகள் பின்னிப் பிணைந்து விதானத்தையும் உருவாக்கியிருந்தன. பட்டைகளற்ற மரத்தண்டுகள் அந்திச் சூரியனின் செவ்வண்ணத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

“ஏன், ஒலேஸ்யா? ஏன்?” அவள் கரத்தைப் பற்றிய என் பிடியை மேலும் மேலும் இறுக்கிக்கொண்டே, மென்குரலில் மீண்டும் மீண்டும் கேட்டேன். 

“என்னால் முடியவில்லை. எனக்குப் பயமாக இருந்தது.” மிகவும் தணிந்த குரலில் சொன்னாள், “விதியிடமிருந்து தப்பிவிட முடியும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது…”

அவள் மூச்சுவிடத் திணறினாள். சட்டென்று தன் கரங்களால் என் கழுத்தைச் சுற்றி வளைத்து இறுக்கினாள். நடுக்கமுற்ற அவளுடைய கிசுகிசுப்பின் தகிக்கும் இனிமையை என் அதரங்களில் உணர்ந்தேன். “இப்போது எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. இல்லவே இல்லை. ஏனென்றால் நான் உங்களைக் காதலிக்கிறேன், நீங்கள் என் அன்புக்குரியவர், என் மகிழ்வுக்குரியவர், எனக்கு உரியவர்!”

அவள் இன்னும் நெருக்கமாக என்னைப் பற்றிக்கொண்டாள். அவளுடைய வாளிப்பான, கதகதப்பான தேகம் என் கைகளில் நடுங்கிக்கொண்டிருப்பதையும் அவளுடைய இதயம் என் மார்பில் துடித்துக்கொண்டிருப்பதையும் என்னால் உணரமுடிந்தது. 

“ஒலேஸ்யா, தயவு செய்து வேண்டாம். என்னைப் போகவிடு” நான் அவளுடைய கைகளை விலக்க முயன்றேன். “இப்போது எனக்குப் பயமாக இருக்கிறது. என்னை நினைத்தே எனக்குப் பயமாக இருக்கிறது. என்னைப் போகவிடு, ஒலேஸ்யா”

மந்தகாசப் புன்னகை தவழும் முகத்தோடு அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். “பயப்படாதீர்கள், அன்பே” இதமான வருடலும் நெகிழவைக்கும் நெஞ்சுறுதியுமாய் இன்னதென்று வர்ணிக்கவியலாத பார்வையால் என்னைப் பார்த்தாள். “உங்களைக் கடிந்துகொள்ளவோ, உங்கள் மீது கோபப்படவோ மாட்டேன். நீங்களும் என்னைக் காதலிக்கிறீர்களா என்பதை மட்டும் எனக்குச் சொல்லுங்கள்”

“ஆமாம், ஒலேஸ்யா, வெகுகாலமாகவே நான் உன்னை என் இதயபூர்வமாகக் காதலித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால்… இதற்கு மேலும் என்னை முத்தமிடாதே. எனக்கு சோர்வாகவும் தலைசுற்றுவது போலவும் இருக்கிறது. எனக்கு என்ன செய்கிறதென்று எனக்கே தெரியவில்லை.”

மறுபடியும் அவளுடைய இதழ்கள் என்னிதழ்களைப் பற்றி நீண்ட, கிறங்கடிக்கும் இனிய முத்தத்தை நல்கின. “அப்படியென்றால் பயப்படாதீர்கள், இனிமேல் எந்தக் கவலையும் வேண்டாம். இது நம்முடைய நாள். இதை நம்மிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது.” அவள் சொன்னதைக் கேட்டேனா, யூகித்தேனா தெரியவில்லை.  

அவ்விரவு மெல்ல மெல்ல வசீகரமான ஒரு மாயாலோகமாக உருமாறியது. நிலவு எழுந்து, காடு முழுவதும் மர்மமான, விசித்திரமான வண்ணங்களை நிறைத்து, அடிமரத்தண்டுகளின் முடிச்சுகளிலும் கோணல்மாணலான கிளைகளிலும், மென்பஞ்சுக் கம்பளம் போன்ற பாசிப்பரப்பிலும் வெளிர்நீல ஒளித்திட்டுகளை வாரியிறைத்தது. மெலிந்த வெண்ணிற பிர்ச் மரங்கள் துல்லியமான கோட்டோவியங்களைப் போன்று நின்றுகொண்டிருக்க, அடர்த்தியற்ற இலைகளோ வெள்ளி வண்ண சல்லாத்துணியால் போர்த்தப்பட்டிருப்பதைப் போன்று தோற்றம் காட்டின. விதானமெனக் கவிந்த பைன் மரக் கிளைகளைத் துளைத்துக்கொண்டு நிலவொளியால் ஊடுருவவியலாத காரணத்தால் பூரண இருளாக இருந்தது. எப்படியோ மர வரிசைக்கு நடுவில் கிடைத்த இடைவெளி வாயிலாக உள்ளே நுழைந்த நிலவொளியின் சிறு கீற்று, மரங்களுக்கு இணையாக ஒரு குறுகிய பாதையை, தேவதைக் கதையொன்றில் காடாளும் ஓபரானும் அவனுடைய மனைவி டைட்டானியாவும் காட்டுக்குள் கம்பீரமாய் அணிவகுத்து வருவதற்கேற்ப தேவதைகள் செதுக்கி அமைத்த பாதை போன்றதொரு அழகிய பிரகாசமான பாதையை உருவாக்கியிருந்தது. உயிர்ப்பும் உற்சாகமும் நிறைந்த அந்த தேவதைக்கதையில் நாங்கள் கையோடு கை சேர்த்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் நடந்தோம். காட்டின் பேரமைதியும் எங்களுக்குள் பொங்கிவழியும் பேரன்பும் எங்களைப் பெரிதும் நெகிழ்த்தியிருந்தன. 

“அன்பே, நீங்கள் சீக்கிரமாக வீடு திரும்பவேண்டும் என்பதை மறந்தே போய்விட்டேன், பாருங்கள்” சட்டென்று ஒலேஸ்யா சொன்னாள்.

“நான் எவ்வளவு சுயநலக்காரி! நீங்களே இப்போதுதான் குணமாகி மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்களை இவ்வளவு நேரம் காட்டில் இருக்கும்படி செய்திருக்கிறேன்”

நான் அவளைக் கட்டியணைத்தேன். அவளுடைய அடர்ந்த கருங்கூந்தலைச் சுற்றியிருந்த துப்பட்டியை விலக்கினேன். 

“தவறென்று நினைக்கிறாயா, ஒலேஸ்யா?” நான் அவள் காதருகில் குனிந்து மெல்ல கிசுகிசுத்தேன். “இதற்காக, பின்னால் வருத்தப்படமாட்டாய் அல்லவா?”

அவள் மெதுவாகத் தலையை அசைத்தாள். “இல்லை, இதற்குப் பிறகு எது வந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”

“ஏதேனும் வரக்கூடுமா?”

அவளுடைய கண்களில் வழக்கம்போல் இனம்புரியாத பீதி தோன்றி மறைந்தது, 

“ஆமாம், வரக்கூடும். க்ளப்களின் ராணி பற்றி உங்களிடம் நான் சொன்னது நினைவிருக்கிறதா? நான்தான் அந்த ராணி. அந்த சீட்டுகள் கணித்த தீக்குறி எனக்குதான். எங்கள் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொள்ளுமாறு உங்களிடம் சொல்லலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக உங்களைப் பார்க்காமல் தனிமையும் துயரமும் என்னை வாட்டின. இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் கொடுத்து, உங்களோடு கொஞ்சமே கொஞ்ச நேரம் இருந்தால் போதும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன். என் மனம் மாறியதும் அப்போதுதான். என்ன வேண்டுமானாலும் வரட்டும், என்னுடைய சந்தோஷத்தை எதற்காகவும் விட்டுத்தரக்கூடாது என்று முடிவு செய்தேன்.”

“நீ சொல்வது சரிதான், ஒலேஸ்யா, எனக்கும் அப்படிதான் தோன்றியது.” அவள் நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னேன். “நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பது உன்னைப் பிரியும் வரை எனக்குத் தெரியவில்லை. யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை, ‘காற்று நெருப்பை என்ன செய்யுமோ, அதே வேலையைத்தான் பிரிவுத்துயரும் காதலைச் செய்கிறது’ என்று. அது உண்மைதான். சிறிதளவு காதலையும் பிரிவுத்துயர் ஊதி ஊதிப் பெருங்காதலாக்கிவிடுகிறது.”

“என்ன அது? மறுபடியும் சொல்லுங்களேன்” ஒலேஸ்யா ஆர்வத்துடன் கேட்டாள்.

நான் அந்தப் பொன்மொழியை மறுபடியும் சொன்னேன். ஒலேஸ்யா சிந்தனையில் ஆழ்ந்தாள். அந்த வார்த்தைகளை வாய்க்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பது அவளது உதட்டசைவில் தெரிந்தது.

எனக்கு மிக அருகில் அண்ணாந்திருந்த அவளுடைய வெளிறிய முகத்தில், நிலவொளி பிரகாசிக்கும் அவளது பெரிய கருவிழிகளுக்குள் கூர்ந்து நோக்கினேன். வரவிருக்கும் தீக்குறி பற்றிய இனம்புரியாத பீதி சட்டென்று என் நெஞ்சைக் கவ்வி உறையச் செய்தது.  

(11)

அப்பழுக்கற்ற, அற்புதம் நிறைந்த எங்கள் காதல் கதை கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நீடித்தது. பொன்னந்தி மாலைப் பொழுதுகளும், பனி படர்ந்த காலைப் பொழுதுகளும், மணி லில்லி மலர்களின் பூந்தாதும் நறுமணமும், புத்துணர்ச்சியும், பல்வேறு பறவைகளின் பெருத்த ஆரவாரச் சத்தமும் என இதமும் சுகமும் கூடிய மந்தமான அந்த ஜூன் மாத நாட்களின் நினைவுகள் யாவும் ஒலேஸ்யாவின் அழகிய உருவத்தோடு கூடி என் உள்ளத்தில் இப்போதும் மங்காது, அழியாது வாழ்ந்துகொண்டிருக்கின்றன. 

அந்நாட்களில் எனக்கு அலுப்போ, சலிப்போ, ஊர் சுற்றித் திரியும் அவாவோ ஒருபோதும் உண்டாகவே இல்லை. இயற்கையே தெய்வமென வழிபடும் பாகன் மதத்தின் கடவுளைப் போன்று, வலிமையானதொரு இளம் விலங்கினைப் போன்று நான் இயற்கையின் ஒளியையும், வெப்பத்தையும், வாழ்க்கையின் உணர்வுபூர்வமான மகிழ்ச்சியையும், என்னுடைய அமைதியான பூரணத்துவப் புலனின்பக் காதலையும் கொண்டாடி அதில் திளைத்திருந்தேன்.  

நான் நோய்மையிலிருந்து மீண்டுவந்தது முதல் மனுய்லிக்கா என்னிடம் வேற்றுமுகம் காட்டத் தொடங்கினாள். நான் குடிசைக்குள் இருக்கும்போது, பாத்திரங்களை பெருத்த சத்தத்தோடு அடுப்புமேடையில் வைப்பதும் எடுப்பதுமாக வெளிப்படையாகவே என்மீது வெறுப்பைக் காண்பித்தாள். எனவே நானும் ஒலேஸ்யாவும் காட்டில் சந்திப்பதையே விரும்பினோம். காட்டின் பசிய பைன் மரங்களின் கம்பீர அழகு, எங்களது அமைதியான காதலுக்கு அற்புதப் பின்னணி போல மேலும் அழகு சேர்த்தது. காட்டில் வளர்ந்த, கிஞ்சித்தும் படிப்பறிவு அற்ற ஒலேஸ்யா, பல தருணங்களில் மிகவும் நுட்பமான நேர்த்தியுடனும், தனித்துவமிக்க, இயல்பான சாதுர்யத்துடனும் இருப்பதைப் பார்த்து ஒவ்வொரு நாளும் என் வியப்பு கூடிக்கொண்டே போனது. 

நேரிடையான, எந்தவிதப் பூசிமொழுகலும் அற்ற காமம் சார்ந்த காதலில், எளிதில் உணர்ச்சிவசப்படும் கற்பனாவாதிகளுக்கு வேதனையும் சங்கடமும் தரக்கூடிய விரும்பத்தகாத சில அம்சங்கள் எப்போதும் இடம்பெறுவதுண்டு. ஆனால் அவற்றையெல்லாம் எப்படித் தவிர்ப்பது என்று ஒலேஸ்யாவுக்குத் தெரிந்திருந்தது. அவள் வெள்ளந்தியான தூய மனத்துடன் அதைச் செய்தாள். அதனால் எங்கள் உறவை அவமதிக்கும் வகையில் மோசமான ஒப்பீடோ, எள்ளல் தருணமோ ஒருமுறை கூட நிகழவில்லை. 

இதற்கிடையில் நான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நாளும் நெருங்கியது. சொல்லப்போனால், பெரப்ராடில் என்னுடைய அதிகாரபூர்வப் பணிகள் யாவும் முற்றிலும் முடிவடைந்திருந்த நிலையில், நான் வேண்டுமென்றே நகரத்துக்குத் திரும்பும் நாளைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். 

ஒலேஸ்யாவிடம் அதைப் பற்றி இன்னும் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் ஊருக்குப் போகவிருப்பதைப் பற்றிச் சொன்னால் அவளுடைய எதிர்வினை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே எனக்குப் பயமாக இருந்தது. நான் ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன். அன்றாட நடைமுறைப் பழக்கம் என்னை விடாப்பிடியாய்ப் பற்றிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒலேஸ்யாவை சந்திப்பதும், அவளுடைய இனிய குரலையும் மணியோசைச் சிரிப்பையும் கேட்பதும், அவளுடைய அணைப்பின் இதமான மென்மையை அனுபவிப்பதும் என் தேவைக்கு மேலான ஒன்றாக இருந்தது. அரிதாக என்றாவது மழை வந்து எங்கள் சந்திப்புக்கு இடையூறு ஏற்படும் நாட்களில், என் வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒன்றை யாரோ கொள்ளையடித்துக்கொண்டு போனதைப் போன்று, பெருத்த சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். எந்த வேலையும் மந்தமாகவும் பயனற்றதாகவும் தோன்றியது. என்னுடைய நெஞ்சமெல்லாம் காட்டுக்காகவும், இதந்தரும் ஒளி மற்றும் கதகதப்புக்காகவும், ஒலேஸ்யாவின் இன்முகத்துக்காகவும் ஏங்கியது. 

ஒலேஸ்யாவைத் திருமணம் செய்துகொள்வது குறித்து அடிக்கடி யோசித்தேன். எங்கள் உறவிற்கு சாத்தியமான, இறுதியான, நேர்மையான தீர்வாக அது இருக்கும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் எனக்கு எப்போதாவதுதான் தோன்றிக்கொண்டிருந்தது. ஒரே ஒரு விஷயம்தான் என்னைத் தடுத்தது. பாரம்பரியக் கதைகளும் மர்மங்களும் நிறைந்திருக்கும் பழமையான காட்டின் மதிமயக்கும் சூழலிலிருந்து திடுக்கெனப் பறித்துக்கொண்டுவரப்பட்ட ஒருத்தி, நவநாகரிக உடையணிந்து, என்னுடைய அலுவலக சகாக்களின் மனைவியரோடு என்னுடைய வரவேற்பறையில் பேசிக்கொண்டிருக்கும் காட்சியைக் கற்பனை செய்துபார்க்கக்கூட எனக்குத் துணிவில்லை.  

நான் புறப்படும் நாள் நெருங்க நெருங்க, நான் பெரும் சோகத்தாலும் பிரிவு குறித்த பீதியாலும் பீடிக்கப்பட்டிருந்தேன். ஒலேஸ்யாவைத் திருமணம் செய்துகொள்வது என்ற என் முடிவு நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே போனது. அதற்கு மேலும் இந்த சமுதாயத்துக்கு எதிரான துணிகரமான சவாலாக நான் அதைக் கருதவில்லை. “படிப்பும் பண்பும் கொண்ட ஆண்கள் சிலர் தையல் வேலை செய்யும் பெண்களையும் வீட்டுவேலை செய்யும் பெண்களையும் திருமணம் செய்துகொள்வதே இல்லையா? அப்படியொரு முடிவை எடுக்க வைத்த விதியை வாழ்த்தி தங்களுடைய இறுதிக்காலம் வரை ஒன்றாகவும் நன்றாகவும் வாழ்கிறார்களே. என்னுடைய அதிர்ஷ்டம் அதை விட மோசமாக இருக்காது என்றே நம்புகிறேன்.” என் முடிவில் உறுதியாக இருந்தேன்.

ஜூன் மாதத்தின் நடுவில் ஒரு நாள், பூத்துக் குலுங்கும் ஹாத்தோன் புதர்களுக்கு நடுவில் வளைந்து செல்லும் குறுகலான காட்டுப்பாதையில் ஒலேஸ்யாவுக்காக வழக்கம் போல் நான் காத்திருந்தேன். தொலைவில் மெதுவாகவும் பரபரப்பாகவும் கேட்ட காலடிச்சத்தத்தைக் கொண்டே அவள் வருகிறாள் என்று தெரிந்துகொண்டேன்.   

“மாலை வணக்கம், அன்பே!” என் கழுத்தைத் தன் கரங்களால் வளைத்தபடியே மூச்சிறைக்கச் சொன்னாள். “உங்களை அதிகநேரம் காக்க வைத்துவிட்டேன், இல்லையா? என்னால் வெளியில் வரவே முடியவில்லை. பாட்டியோடு சின்னச் சண்டை” என்றாள். 

“அவர் இன்னுமா அதை விடவில்லை?” 

“ஆமாம், ‘உனக்கு அவனால்தான் அழிவு! அவன் உன்னோடு சந்தோஷமாக இருக்கும்வரை இருந்துவிட்டு பிறகு உன்னைத் தூக்கியெறிந்து விடுவான். உன்னை அவன் கொஞ்சம் கூட காதலிக்கவில்லை’ என்றெல்லாம் சொல்கிறார்” 

“என்னையா சொல்கிறார்?”

“ஆமாம், அன்பே. ஆனால் நான் அவர் சொன்னதில் ஒன்றைக்கூட நம்பவில்லை.”

“அவருக்கு எல்லாமே தெரியுமா?”

“என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவருக்குத் தெரியும் என்றுதான் நினைக்கிறேன். நானாக இதைப் பற்றி அவரிடம் எதுவும் பேசுவதில்லை. அவராகவே யூகித்துக் கொள்கிறார். அட, கவலைப்பட ஒன்றுமில்லை. வாருங்கள், போகலாம்” 

வெண்ணிறப் பூக்கள் பூத்துக் குலுங்கிய ஹாத்தோன் பூங்கொத்து ஒன்றைக் காம்போடு ஒடித்து தன் கூந்தலில் சொருகிக் கொண்டாள். பிற்பகல் சூரியனால் இளஞ்சிவப்பாகக் காட்சியளித்த அந்த காட்டுப் பாதையில் நாங்கள் மெதுவாக நடக்கத் தொடங்கினோம். 

எது எப்படி இருந்தாலும் ஒலேஸ்யாவிடம் சொல்லிவிடுவது என்று முந்தைய இரவு முடிவெடுத்திருந்தேன். ஆனால் ஏதோவொரு தயக்கம் என் நாவைக் கட்டிப்போட்டது. நான் ஊருக்குப் புறப்படுவதைப் பற்றியும், அவளைத் திருமணம் செய்யும் என் முடிவைப் பற்றியும் சொன்னால், ஒலேஸ்யா நம்புவாளா என்று தெரியவில்லை. நான் அவளுக்குத் தரும் பிரிவென்னும் காயத்தின் பெருவலியை ஆற்றும் சிறு முயற்சியாக என்னுடைய திருமண முன்னெடுப்பைப் புரிந்துகொள்ள மாட்டாளா?

‘பட்டை உரிந்த மேப்பிள் மரத்தை அடைந்தபிறகு அவளிடம் சொல்லத் தொடங்குவேன்’ எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். பதற்றத்தால் முகம் வெளிறிப்போன நான் ஆழமாய் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு, பேசுவதற்குத் தயாரானேன். ஆனால் என் தைரியமெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. வலி கொண்ட இதயம் படபடத்தது. நாக்கு மரத்துப்போனது. 

“இருபத்தேழுதான் என்னுடைய அதிர்ஷ்ட எண். எனவே இருபத்தேழு வரை எண்ணிவிட்டு பிறகு சொல்வேன்.” சில நிமிடங்கள் கழித்து எண்ண ஆரம்பித்தேன். மனதுக்குள்ளேயே எண்ணினேன். இருபத்தேழு வந்தவுடன் இன்னும் நான் சொல்லத் தயாராக இல்லை என்பதை உணர்ந்தேன். “இல்லை. அறுபது வரை எண்ணலாம். அது சரியாக ஒரு நிமிட கால அவகாசம். நிச்சயமாக, அதற்குப் பிறகு சொல்லிவிடுவேன்.”

திடீரென்று ஒலேஸ்யா கேட்டாள், “ஏதாவது பிரச்சனையா, அன்பே? விருப்பமில்லாத எதைப் பற்றியோ யோசிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்ன அது?”

அதைத் தொடர்ந்து நான் பேசினேன். ஆனால் என் பதிலானது, அற்பத்தனமான கேள்வியொன்றுக்குப் பதிலளிப்பது போன்று, பாசாங்குடனும் இயல்புக்கு மாறான அலட்சியத்துடனும், என்னை நானே வெறுக்கும் தொனியில் இருந்தது.  

“ஆமாம், கொஞ்சம் விருப்பமில்லாத ஒன்றுதான். நீ சரியாகத்தான் யூகித்திருக்கிறாய் ஒலேஸ்யா. என்னுடைய பணிகள் இங்கே நிறைவடைந்துவிட்டன. என்னுடைய மேலதிகாரிகள் என்னை நகரத்துக்குத் திரும்ப அழைக்கிறார்கள்.”

சொல்லிவிட்டு ஒலேஸ்யாவை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவள் முகம் வெளிறிப் போயிருந்தாள். அவளுடைய உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. ஆனால் பதில் எதுவும் பேசவில்லை. நான் அவளுக்குப் பக்கத்திலேயே சில நிமிடங்கள் நடந்துகொண்டிருந்தேன். வெட்டுக்கிளிகள் உச்சஸ்தாயியில் கிறீச்சிட்டுக்கொண்டிருந்தன. தொலைவில் எங்கோ கானாங்கோழியின் சீரான கேவல் சத்தம் கேட்டது. 

“நிச்சயமாக உனக்குப் புரியும், ஒலேஸ்யா!” நான் புதிதாய்த் தொடங்கினேன், “என்னால் இங்கேயே தங்கிவிட முடியாது. இங்கே தங்குவதற்கு எனக்கு இடமும் இல்லை. மேலும் நான் என்னுடைய கடமைகளைச் செய்யாமல் தவிர்க்க முடியாது.”

“இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. எல்லாம் தெளிவாகப் புரிகிறது. அது உங்களுடைய கடமை என்றால் நீங்கள் போய்த்தானே ஆகவேண்டும்.” அவள் அமைதியாக இருப்பதுபோல் தோன்றினாலும் அவளது குரலில் எந்த உணர்ச்சியுமில்லை. அதுவே என்னை அச்சுறுத்தியது. 

வழியிலிருந்த ஒரு மரத்தில் சாய்ந்து நின்றாள். வெளிறிய உருவத்தோடு, கைகள் பக்கவாட்டில் தொய்ந்திருக்க, அவளுடைய உதடுகளில் பரிதாபமான, வலிமிகுந்த புன்னகை அரும்பியது. அவளுடைய அந்த வெளிறிய தோற்றத்தைப் பார்க்க எனக்குப் பயமாக இருந்தது. நான் வேகமாக அவளை நெருங்கி அவளுடைய கைகளைப் பற்றினேன். 

“ஒலேஸ்யா! என்ன இது?”

“ஒன்றுமில்லை, மன்னித்துக்கொள்ளுங்கள், நான் சரியாகிவிடுவேன். லேசாக தலைசுற்றியது. அவ்வளவுதான்.”

தன் கைகளை விலக்கிக்கொள்ளாமலேயே சற்று பிரயத்தனத்தோடு அடியெடுத்துவைத்தாள். 

“இப்போது நீ என்னைப் பற்றி மிகவும் மோசமாக நினைத்திருப்பாய் ஒலேஸ்யா” நான் கடுமையாகச் சொன்னேன்.

“வெட்கக்கேடு! நான் உன்னை விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று நீயும் உன் பாட்டியைப் போலவே நினைக்கிறாயா? இல்லை, என் கண்ணே! உண்மை என்னவெனில் நான் இந்தப் பேச்சைத் தொடங்கியதற்குக் காரணமே, இன்றிரவு உன் பாட்டியிடம் வந்து, நீ என் மனைவியாகப் போகிறாய் என்று சொல்வதற்காகத்தான்.”

நான் சொன்னதைக் கேட்டு அவள் ஆச்சர்யப்படவில்லை என்பது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

“உங்கள் மனைவியா?” அவள் மெதுவாகவும் வருத்தத்துடனும் தலையை மறுப்பாக அசைத்தாள். “இல்லை, அன்பே! அது சாத்தியமில்லை.”

“ஏன், ஒலேஸ்யா? ஏன்?”

“இல்லை, இல்லை. இதைப் பற்றி நினைப்பதே கேலிக்குரியது என்பது உங்களுக்கே தெரியும். உங்களுக்கு நான் எந்த மாதிரியான மனைவியாக இருப்பேன்? நீங்கள் ஒரு பண்பாளர், படித்தவர், அறிவார்ந்தவர். ஆனால் நான்? எனக்கு எழுதப் படிக்கக்கூடத் தெரியாது. எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றும் தெரியாது. என்னால் உங்களுக்கு அவமானம்தான் ஏற்படும்.”

“என்ன முட்டாள்தனமான பேச்சு, ஒலேஸ்யா!” நான் கோபமாய்க் கடிந்துகொண்டேன். “இன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் உனக்கே உன்னை அடையாளம் தெரியாது. நீ எவ்வளவு அறிவாளி, எவ்வளவு சாமர்த்தியசாலி என்று உனக்கே தெரியவில்லை. நாம் இருவருமே சேர்ந்திருந்து எண்ணற்ற நல்ல புத்தகங்களை வாசிப்போம், அன்பும் அறிவும் மிக்க மனிதர்களை சந்திப்போம், இந்த மொத்த உலகத்தையும் வலம் வருவோம், ஒலேஸ்யா, நாம் இருவரும் இப்போது இருப்பது போலவே, நம்முடைய இறுதிக்காலம் வரை சேர்ந்தே இருப்போம். உன்னால் நான் அவமானமல்ல, பெருமைதான் அடைவேன்! அதற்காக உனக்கு நன்றியோடு இருப்பேன்.”

ஆர்வப்பெருக்கோடு நான் பேசிய பேச்சைக் கேட்டு அவள் உணர்ச்சிவசப்பட்டு என் கைகளை இறுக்கிப் பிடித்தாள். ஆயினும் தன் கருத்தில் உறுதியாக நின்றாள்.

“ஆனால் அது மட்டுமல்ல, ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், நானும் உங்களிடம் ஒருபோதும் சொல்லவில்லை. எனக்கு அப்பா கிடையாது. நான் முறைதவறிப் பிறந்தவள்!” 

“நிறுத்து, ஒலேஸ்யா! அதெல்லாம் எனக்குப் பொருட்டே இல்லை. என்னுடைய உறவுகளான என் அப்பா, அம்மாவை விடவும், இந்த ஒட்டுமொத்த உலகத்தை விடவும் நீயே எனக்குப் பிரியமானவள் என்றான பின் உன்னுடைய உறவுகளைப் பற்றி எனக்கென்ன கவலை? இதெல்லாம் அற்பத்தனமான, முட்டாள்தனமான காரணங்கள்!”

அவள் என் தோளோடு தன் தோளைச் சேர்த்து இதமாக அழுத்தினாள்.

“என் அன்பே! நீங்கள் இந்தப் பேச்சை எடுக்காமலேயே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நீங்கள் இளமையாகவும் எந்தக் கட்டுப்பாடுகளுமற்று சுதந்திரமாகவும் இருக்கிறீர்கள். காலமெல்லாம் என்னால் உங்களைக் கட்டிப்போட்டு வைக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா? அதற்குப் பிறகு வேறொரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்? அப்போது என்னை வெறுப்பீர்கள். நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தத் தருணத்தை சபிப்பீர்கள். கோபப்படாதீர்கள், அன்பே!” அவளுடைய அந்தப் பேச்சு எனக்குள் உண்டாக்கிய வலியை என் முகத்தினூடே அறிந்துகொண்ட அவள் கெஞ்சலோடு அழத்தொடங்கினாள், “நான் உங்களைக் காயப்படுத்த விரும்பவில்லை. நான் உங்களுடைய மகிழ்ச்சியைப் பற்றி மட்டுமே யோசிக்கிறேன். மேலும் நீங்கள் என் பாட்டியை மறந்துவிட்டீர்கள். நீங்களே சொல்லுங்கள், அவரை அப்படியே நிர்க்கதியாக விட்டுவிட்டு நான் மட்டும் உங்களோடு வருவது நியாயமாக இருக்குமா?”

“சரி, அவருக்கும் ஓர் அறையை ஏற்பாடு செய்வோம்” உண்மையில் இந்த யோசனை எனக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. “ஒருவேளை அவருக்கு நம்மோடு தங்குவதில் விருப்பமில்லை என்றால் நகரத்தில் நிறைய இல்லங்கள் இருக்கின்றன. அவற்றை ‘தொண்டு இல்லங்கள்’ என்பார்கள். அங்கே உன் பாட்டியைப் போன்ற முதியவர்களுக்குத் தேவையான ஓய்வும், பராமரிப்பும் கிடைக்கும்.”

“ஐயோ, வேண்டாம், அதெல்லாம் சாத்தியமில்லை. அவர் காட்டை விட்டு எங்கேயும் வெளியில் வரமாட்டார். அவருக்கு மனிதர்கள் என்றாலே பயம்.”

“அப்படியென்றால் இதற்கு வேறு என்ன நல்ல தீர்வு என்று யோசி, ஒலேஸ்யா! உன் பாட்டியா, நானா என்பதை நீ தீர்மானித்தே ஆகவேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள், நீ இல்லை என்றால் என்னுடைய வாழ்க்கை எனக்கு நரகவேதனையாக இருக்கும்.”

“அன்பே!” மிகவும் கனிந்த குரலில் அவள் தழுதழுத்தாள், “நீங்கள் அதைச் சொன்னதற்கு மிக்க நன்றி. என் நெஞ்சம் நிறைந்துவிட்டது. ஆனாலும் சொல்கிறேன், என்னால் உங்களைத் திருமணம் செய்துகொள்ள முடியாது. நான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே வருகிறேன். ஆனால் கொஞ்சம் பொறுங்கள், அவசரப்படாதீர்கள். நான் யோசிக்க வேண்டும். இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள். பாட்டியிடமும் இதைப் பற்றிப் பேசுகிறேன்.”

சட்டென்று ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. “இங்கே பார் ஒலேஸ்யா, மறுபடியும் நீ தேவாலயத்தை எண்ணி பயப்படவில்லைதானே?”  

நான் விஷயத்தை அந்தப் பக்கத்திலிருந்து ஆரம்பித்திருக்கவேண்டும். மாந்திரீக சக்தி உடையவர்கள் என்பதால் அவர்களுடைய குடும்பத்துக்கு விடப்பட்டதான சாபம் குறித்த அவளுடைய பயத்தைப் போக்குவதற்காக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவளோடு விவாதம் புரிந்தேன். 

ஏறத்தாழ, கற்றறிந்த ஒவ்வொரு ரஷ்யனுமே ஓரளவு அடுத்தவர்க்கு நல்லறிவு புகட்டுபவன்தான். அது எங்கள் இரத்தத்திலேயே ஊறியிருந்தது. கடந்த சில தசாப்தங்களைச் சேர்ந்த ரஷ்ய இலக்கியங்களின் மூலம் அது கற்பிக்கப்பட்டிருந்தது. 

ஒருவேளை ஒலேஸ்யா தீவிரமான மதப்பற்றோடு இருந்திருந்தாலோ அல்லது தபசு கால நோன்புகளைக் கடுமையாகக் கடைப்பிடிப்பவளாகவும் தேவாலயத்தின் ஒரு பூசையைக்கூட தவறவிடாதவளாகவும் இருந்திருந்தாலோ, அவளுடைய பக்தியை நான் கேலி செய்திருப்பேன். (அதுவும் கொஞ்சமாகத்தான், ஏனெனில் நானே மதத்தின்பால் பெரும் பற்றுடையவன்.) மேலும் அவளுடைய மனதில் இருக்கும் சங்கடமான குழப்பங்களைத் தீர்க்க முயன்றிருப்பேன். ஆனால் இங்கு உண்மை என்னவெனில், தீயசக்திகளோடு அவளுக்கு இருக்கும் பிணைப்பையும், பெயரைச் சொல்லக்கூட பயப்படும் அளவுக்குக் கடவுளுடனான விலக்கத்தையும் உறுதியான மற்றும் அப்பாவித்தனமான குற்ற உணர்ச்சியோடு அவளே ஒப்புக்கொள்வதுதான். 

அவளுடைய மூடநம்பிக்கையை விரட்ட நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணாகப் போயின. என்னுடைய தர்க்கங்களும், சில வேளைகளில் கடுமையாகவும் குரூரமாகவும் நான் முன்வைத்த பரிகாசப் பேச்சுகளும் அவளுடைய மர்மமான, மாற்றமுடியாத விதி குறித்த அமைதியான, அழுத்தமான நம்பிக்கைக்கு முன்னால் நொறுங்கிப் போயின.

“தேவாலயத்தைக் குறித்து பயப்படுகிறாயா, ஒலேஸ்யா?” நான் மீண்டும் கேட்டேன்.

அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்தாள். 

“கடவுள் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று நினைக்கிறாயா?” உணர்வுப்பெருக்கோடு கேட்டேன், “உன்மீது அவர் கருணை காட்ட மாட்டார் என்று நினைக்கிறாயா? விண்ணுலகில் சேவகம் செய்ய கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருக்கும்போது, மண்ணுலகில் பிறந்து மானுட குலத்தை இரட்சிக்க, தன்னையே அர்ப்பணித்து கொடூரமாய் வாதையை அனுபவித்து மரித்துப்போனாரே, அவரா? மனந்திருந்திய பாவியான பெண்ணை இகழாமல் மன்னித்து அருளினாரே அவரா? திருடனும் கொலைகாரனுமான ஒருவனோடு அன்றே சொர்க்கத்தில் சேர்வதாக வாக்களித்தாரே, அவரா?”

இவை எதுவுமே ஒலேஸ்யாவுக்குப் புதிதில்லை. ஏற்கனவே நாங்கள் பலமுறை இவற்றைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். ஆனால் இந்தமுறை அவள் நான் பேசிய எதையும் காதுகொடுத்துக்கூட கேட்கவில்லை. விருட்டென்று தன்னுடைய சால்வையை எடுத்து, அதைச் சுருட்டி என் முகத்தில் வீசினாள். விளையாட்டுச் சண்டை தொடங்கியது. நான் அவள் சூடியிருந்த பூவைப் பறிக்க முயன்றேன். என்னைத் தடுக்க முயன்றவள் கீழே விழுந்ததோடு என்னையும் சேர்த்து விழவைத்தாள். மகிழ்ச்சி பொங்க சிரித்துக்கொண்டே, வேகமாய் மூச்சுவாங்கிக் கொண்டிருந்த தன்னுடைய இனிய ஈரமான இதழ்களால் என்னை ஒத்தினாள். அன்று பின்னிரவு நாங்கள் இருவரும் விடைபெற்று சற்று தூரம் சென்ற நிலையில், ஒலேஸ்யா என்னை அழைத்தாள், “வான்யா, ஒரு நிமிடம் நில்லுங்கள், நான் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்.”

நான் திரும்பி அவளை நோக்கி நடந்தேன். அவள் என்னிடம் ஓடிவந்தாள். வானில் மங்கலாய்ப் பிரகாசித்துக்கொண்டிருந்த அமாவாசைக்குப் பிறகான பிறைநிலவின் வெள்ளிக் கீற்றொளியில் ஒலேஸ்யாவின் கண்களில் வழிந்த கண்ணீரை என்னால் பார்க்கமுடிந்தது.

“என்ன ஆயிற்று, ஒலேஸ்யா?” நான் பதற்றத்தோடு கேட்டேன். அவள் என் கைகளைப் பற்றி முத்தமிடத் தொடங்கினாள். “அன்பே! நீங்கள் எவ்வளவு நல்லவர்! எவ்வளவு அன்பானவர்!” நடுங்கும் குரலில் சொன்னாள், “நீங்கள் என்னை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்று இப்போதுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் உங்களுக்காக, மிக மிக நல்ல காரியம் எதையாவது செய்ய ஆசைப்படுகிறேன்.” 

“ஒலேஸ்யா, என் அழகுப் பெண்ணே! பதற்றப்படாதே. அமைதியாக இரு”

“சொல்லுங்கள், ஒரு நாள் நான் தேவாலயத்திற்குள் சென்றால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களா? உண்மையைச் சொல்லுங்கள். உண்மையை மட்டும்.”

நான் யோசித்துப் பார்த்தேன். மூடநம்பிக்கை சார்ந்து ஒரு எண்ணம் தோன்றியது. ‘அதனால் ஏதேனும் கெடுதல் நேர்ந்துவிடுமோ?’

“ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள்? சீக்கிரம் சொல்லுங்கள், உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமா? இருக்காதா?”

“அதை எப்படிச் சொல்வது, ஒலேஸ்யா?” நான் தடுமாறினேன். “சரி, சொல்கிறேன். எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். நான்தான் ஏற்கனவே உன்னிடம் பல முறை சொல்லியிருக்கிறேனே, ஒரு ஆண் கடவுளை நம்பாமல் இருக்கலாம், சந்தேகப்படலாம், ஏன் நிந்திக்கவும் செய்யலாம். ஆனால் பெண்? பெண் எப்போதும் கேள்விக்கு இடமில்லாமல் பக்தியோடு இருக்கவேண்டும். ஒரு பெண் தன்னைக் கடவுளின் பாதுகாப்பில் ஒப்படைக்கும் எளிமையிலும் இனிதான நம்பிக்கையிலும்தான் உணர்வுமயமான பெண்மையும் அழகும் இருப்பதாக நான் நினைக்கிறேன்.”

ஒலேஸ்யா பதில் எதுவும் சொல்லாமல், என் மார்பில் தலைசாய்த்துக்கொண்டாள். “ஆனால் நீ ஏன் அதைப்பற்றிக் கேட்கிறாய்?” என்றேன் நான்.

“அதுவா? சும்மா தெரிந்துகொள்ளத்தான். விட்டுத்தள்ளுங்கள். நான் போய்வருகிறேன். நாளை கட்டாயம் சந்திப்போம்.”

அவள் போய்விட்டாள். அவளுடைய காலடிச்சத்தம் தேய்வதை நெடுநேரமாக இருளில் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். பயங்கரமான விபரீதம் நடக்க இருப்பதுபோல் சட்டென்று ஏதோ முன்னுணர்வு தோன்றியது. ஒலேஸ்யாவைப் பின்தொடர்ந்து ஓடிப் பிடித்து, அவளிடம் தேவாலயத்துக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சவும், தேவைப்பட்டால் கட்டளை இடவும் உள்ளுக்குள் தவிர்க்கமுடியாத ஒரு உந்துதல் உண்டானது. 

உந்துதலைக் கட்டுப்படுத்திக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியபோது, “நீயும் மூடநம்பிக்கைகளின் பால் ஈர்க்கப்பட்டுவிட்டாய் போலிருக்கிறதே, வான்யா” என்று எனக்கு நானே சத்தமாய்ச் சொல்லிக்கொண்டேன்.

கடவுளே! துரிதமான, மர்மமான உள்ளுணர்வுகளில் ஒருபோதும் தவறு செய்யாது என்று இப்போது நான் முழுமையாய் நம்புகிற என் இதயம், அன்றைய தினம் தந்த மறைமுகமான எச்சரிக்கையை நான் ஏன் கவனத்தில் கொள்ளாமல் போனேன்? 

(12)

நாங்கள் சந்தித்த தினத்துக்கு மறுநாள் திரித்துவ ஞாயிறு. அந்த வருடம் திரித்துவ ஞாயிறும் புனித திமொத்தேயு நாளும் ஒன்றாக வந்தது. பாரம்பரிய நம்பிக்கைகளின்படி பயிர்ச்சேதம் விளைவதற்கான அறிகுறி அது. 

பெரெப்ராடில் ஒரு தேவாலயம் இருந்தது. ஆனால் அதற்கென்று பாதிரியார் யாரும் கிடையாது. தபசுக்காலத்திலும் முக்கியமான திருவிழாக் காலத்திலும் அபூர்வமாய் நடைபெறும் சில திருப்பலி பூசைகளை, வோல்சியே கிராமத்திலிருந்து வரும் பாதிரியார் நடத்திவைப்பார். அன்றைய தினம் எனக்கு பக்கத்து ஊரில் ஒரு அலுவல் இருந்தது. குளிர் இன்னும் விலகாத நிலையில் காலை எட்டு மணி அளவில் குதிரையில் புறப்பட்டேன். நான் போய்வர வசதியாக இருக்குமென்று ஆறு அல்லது ஏழு வயதுடைய விடலைக்குதிரை ஒன்றை வெகுகாலத்துக்கு முன்பே வாங்கியிருந்தேன். உள்ளூர் ரகக் குதிரைதான் என்றபோதும் நில அளவையாளரான அதன் உரிமையாளரால் நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. அதன் பெயர் டாரன்சிக். அதனுடைய வலிமையான அழகான கால்கள், ஆத்திரமும் அவநம்பிக்கையும் நிறைந்த அதன் கண்களை மறைத்திருந்த முன்னெற்றி மயிர்க்கற்றை, இறுக்கமாக மூடிய வாய் என அற்புதமான அவ்விலங்கின் அம்சங்கள் யாவும் என்னைக் கவர்ந்திருந்தன. வித்தியாசமான சாம்பல் நிறத்துடனும் புட்டப்பகுதியில் மட்டும் கருப்பு வெள்ளைப் புள்ளிகளுடனும் காணப்பட்ட அதன் நிறம் அபூர்வமானது மட்டுமல்ல, ஆச்சர்யப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. 

அன்றைய தினம் நான் ஊரின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை ஊரைக் குறுக்காகக் கடந்துதான் பக்கத்து ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. தேவாலயத்துக்கும் சாராயக்கடைக்கும் மத்தியில் இருந்த பெரிய பசிய சதுக்கம் முழுவதும், திருவிழாவுக்கென வோலோஷா, ஜூல்னியா, பெச்சலோவ்கா போன்ற அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்து வண்டிகட்டிக் கொண்டு குடும்பம் குடும்பமாக வந்திருந்த விவசாயிகளின் வண்டிகள், நெடுக நிறுத்தப்பட்டிருந்தன. வண்டிகளுக்கு இடையில் மக்கள் பரபரப்பாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். மதுவருந்தக்கூடாது என்ற கடுமையான விதி இருந்தபோதிலும், அந்தக் காலை நேரத்திலும் அவர்களுள் பலர் ஏற்கனவே குடிபோதையில் இருந்தார்கள். விடுமுறை நாட்களிலும் இரவு வேளைகளிலும் முன்னாள் சாராய வியாபாரியான ஸ்ருலிடம் இருந்து திருட்டுத்தனமாக வோட்காவைப் பெறமுடியும்.

அன்று காலை ஒரே புழுக்கமாக இருந்தது. காற்றில் ஈரப்பதம் மிகுந்து, அன்றைய தினம் கடுமையான வெக்கையுடன் இருக்கும் என்று கட்டியம் கூறியது. வானம் மேகங்களற்று வறண்டும் மங்கியும் காட்சி தந்தது. பக்கத்து ஊரில் அலுவலை முடித்துக்கொண்டு, ஒரு உணவு விடுதிக்குச் சென்று யூத பாணியில் தயாரிக்கப்பட்ட பைக் என்னும் மீன் உணவை அவசரமாக விழுங்கிவிட்டு, ஒரு மோசமான கலங்கலான பியரையும் குடித்துவிட்டு வீடு திரும்பலானேன். ஆனால் வழியில் கொல்லர் பட்டறையைப் பார்த்தவுடன், டரன்சிக்கின் இடது முன்னங்கால் லாடம் அவ்வப்போது தளர்வது நினைவுக்கு வரவும், அதை சரிசெய்ய குதிரையை நிறுத்தினேன். வேலை முடிய ஒன்றரை மணிநேரம் எடுத்தது. நான் பெரப்ராடை நெருங்கும்போது மாலை நான்கிலிருந்து ஐந்துக்குள் இருக்கும். 

சதுக்கம் முழுவதும் குடிபோதையால் கூச்சலிடும் ஆட்களால் நிரம்பி வழிந்தது. சாராயக்கடையின் முகப்பிலும் முன்முற்றத்திலும் வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்துக்கொண்டும் முட்டிமோதிக்கொண்டும் இருந்தனர். உள்ளூர் விவசாயிகள், அக்கம்பக்க ஊர்களிலிருந்து வந்திருந்தவர்களோடு கலந்து புல்வெளியில் வண்டிகளின் நிழல்களில் அமர்ந்திருந்தார்கள். எங்கு பார்த்தாலும் அண்ணாந்த தலைகளும் வாய்க்குள் கவிழ்த்த சாராயப்புட்டிகளுமாகக் காட்சியளித்தன. ஒருவர் கூட நிதானத்தில் இல்லை. ஒருவன் தன்னுடைய மிதமிஞ்சிய போதையை மூர்க்கத்துடனும் தற்செருக்குடனும் சிலாகிக்கத் தொடங்கும் அளவுக்கு, பெரும் தள்ளாட்டத்துடன் நடக்கத் தொடங்கும் அளவுக்கு, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், தலையசைக்க வேண்டிய இடத்தில், தொடை துவள, முழங்கால் வளைய, சமநிலை தவறி, பின்புறம் சரிந்து விழும் அளவுக்கு அங்கு சராசரியாக போதை உச்ச நிலையை எட்டியிருந்தது. அமைதியாகப் புற்களை மென்றுகொண்டிருந்த குதிரைகளைச் சுற்றி குழந்தைகள் கத்திக் கூப்பாடு போட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள், தாங்களே எழுந்து நிற்க இயலாத நிலையில், கன்னாபின்னாவென்று குடித்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர மறுக்கும் தங்கள் கணவர்களை  வசைபாடிக் கொண்டும் புலம்பிக்கொண்டும், அவர்களது சட்டையைப் பிடித்து இழுத்து வீட்டுக்கு அழைத்துச்செல்ல முயன்றுகொண்டிருந்தனர். ஒரு வேலி நிழலில் குடியானவர்கள் ஆண்களும் பெண்களுமாய் சுமார் இருபது பேர் ஹர்டி-கர்டி வாசித்துக் கொண்டிருந்த பார்வையற்ற இசைக்கலைஞரைச் சுற்றி வட்டமாய் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சீரான ரீங்கரிப்புடன் கூடிய நடுங்கும் குரலில் அவர் பாடிய நாட்டுப்புறப் பாடல் அங்கிருந்த கூச்சலையும் தாண்டி துல்லியமாய்க் கேட்டது.   

ஓ, மாலைக்கதிர் மறைந்துவிட்டது

காரிருள் வந்து கவிந்தது விரைவாக!

ஓ, துருக்கியர் படை பாய்ந்துவந்தது

நரகத்தின்று புறப்பட்ட கரும்புகை போல!

துருக்கியர்கள் போச்சாயிவின் தேவாலய மடத்தைத் தாக்கிக் கைப்பற்ற முயன்று முடியாமல் போக, அடுத்ததாக அவர்கள் மேற்கொண்ட சூழ்ச்சியைப் பற்றி அப்பாடல் நீண்டது. அவர்கள் ஒரு பெரிய மெழுகுவர்த்தியை உருவாக்கி அதற்குள் வெடிமருந்தினை நிரப்பி, அதை போச்சாயிவின் தேவாலய மடத்துக்குப் பரிசாக அனுப்பிவைத்தார்கள். பன்னிரண்டு ஜோடி எருதுகள் பூட்டப்பட்ட வண்டியில் அந்த மெழுகுவர்த்தி அனுப்பப்பட்டது. பெரும் மகிழ்ச்சி அடைந்த பாதிரியார்கள் போச்சாயிவ் தேவாலயத்தின் கன்னி மரியாள் சொரூபம் முன்பாக அதை ஏற்றிவைக்க விரும்பினர். ஆனால் அந்தக் கொடூரமான பாவச்செயலை கடவுள் அனுமதிக்கவில்லை. 

போதகர் ஒருவர்க்கு தரிசனமாய்

ஆண்டவர் தந்த எச்சரிக்கையாம்

மெழுகுதிரியை வயல்வெளி கொண்டுசென்று

உன் வாளால் அதை வெட்டி வீழ்த்து என்று!

துறவிகளும் அவ்வாறே செய்தனர்.

வயல்வெளிக்குக் கொண்டுசென்று

வாளால் வெட்டினர் மெழுகுவர்த்தியை

வெடிகுண்டுகளும் தோட்டாக்களும்

சிதறி விழுந்தன தரையெங்கும்!

பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நான் அங்கிருந்து நகர்ந்தேன். வோட்கா, வெங்காயம் மற்றும் ஆட்டுத்தோல் அங்கிகளின் வீச்சம், வீட்டுப் புகையிலையின் கார நெடி, அழுக்கும் வியர்வையும் கலந்த மனித உடல்களின் நாற்றம் என கலவையான வாடை அந்த வெப்பக்காற்று முழுவதும் கலந்து குமட்டியது. 

பதற்றத்துடன் இருந்த டாரன்சிக்கை கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்துக்கொண்டு, கூட்டத்தின் நடுவில் மிகவும் கவனமாக வழி உண்டாக்கிக்கொண்டு நான் சென்றபோது, வழக்கத்துக்கு மாறாக, அலட்சியமும், வெறுப்பும், குறுகுறுப்பும் கூடிய பார்வைகளைச் சந்தித்தேன். இம்முறை மரியாதை நிமித்தம் எவருமே தொப்பியை அகற்றவில்லை. ஆனால் என்னைப் பார்த்ததும் சத்தம் சற்றுக் குறைந்தாற்போலத் தோன்றியது. திடீரென்று கூட்டத்தின் மத்தியில் எங்கிருந்தோ ஒரு குடிகாரனின் தடித்தக் குரல் கேட்டது. அவன் என்ன சொன்னான் என்று எனக்குத் தெளிவாகக் கேட்கவில்லை, ஆனால் அவன் சொன்னது மெல்லிய சிரிப்புடன் கூட்டத்தால் வரவேற்கப்பட்டது. 

பயந்துபோன ஒரு பெண்ணின் குரல் கத்தியவனை அடக்க முற்பட்டது. “வாயை மூடு, முட்டாள்! ஏன் இப்படிக் கத்துகிறாய்? அவருக்குக் கேட்கப் போகிறது” 

“கேட்டால் என்ன செய்வாராம்?” அவன் திமிராகச் சொன்னான், “அவர் என்ன என் முதலாளியா? அதெல்லாம் காட்டுக்குள், அவருடைய அந்த…”

நெடிய, அருவருப்பான, மிக மோசமான அந்த வாக்கியம், அதைத் தொடர்ந்த பெரும் வெடிச்சிரிப்புடன் காற்றில் கலந்தது. நான் வெடுக்கென்று குதிரையைத் திருப்பினேன். யார் என்ன ஏது என்று பார்க்காத, எதற்கும் பயப்படாத, கண்மண் தெரியாத ஆத்திரத்தோடு சாட்டையை கையில் இறுகப் பற்றினேன். சட்டென்று ஒரு விநோதமான வலிமிகுந்த எண்ணம் தோன்றியது. “இவை எல்லாமே எனக்கு முன்பே ஒருமுறை நிகழ்ந்திருக்கின்றன – பல பல வருடங்களுக்கு முன்பு. அப்போதும் இப்போது இருப்பதைப் போலத்தான் வெய்யில் கடுமையாக இருந்தது. அந்தப் பெரிய சதுக்கமும் இப்போது இருப்பதைப் போலவே அப்போதும் கூச்சலும் கும்மாளமுமாக பெருங்கூட்டத்தால் நிறைந்திருந்தது. அப்போதும் இதைப் போலவேதான் நான் கட்டுக்கடங்காத ஆத்திரத்தோடு திரும்பினேன். ஆனால் அது எப்போது? எங்கே?” 

நான் சாட்டையைத் தளர்த்திவிட்டு வீட்டை நோக்கி விரைந்தேன். யர்மோலா மெதுவாக சமையலறையை விட்டு வெளியில் வந்தான். “மரினோவ்கா எஸ்டேட்டின் காரியதரிசி உங்களுக்காக உங்கள் அறையில் காத்திருக்கிறார், மாஸ்டர்” குதிரையைப் பிடித்தபடி, கடுகடுவெனச் சொன்னான்.

அந்தச் செய்தியோடு வேறு ஏதோ ஒரு முக்கியமான அல்லது என் மனதுக்கு இசையாத செய்தி ஒன்றையும் சேர்த்துச் சொல்லப்போகிறான் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவன் முகத்தில் விஷமம் தோய்ந்த சிரிப்பு தோன்றி மறைந்ததுபோல் எனக்குத் தோன்றியது. எதிர்ப்பு தெரிவிப்பது போல் வேண்டுமென்றே வாசலில் சற்று நேரம் நின்று அவனை முறைத்துப் பார்த்தேன். அவனோ குதிரையின் கடிவாளத்தை இழுத்துக்கொண்டு முகத்தைத் திருப்பாமல் முன்னால் போய்க்கொண்டிருந்தான். நீட்டிய கழுத்தோடு குதிரை கவனமாக அவனைத் தொடர்ந்து போனது. 

என்னுடைய அறையில் பக்கத்து எஸ்டேட்டைச் சேர்ந்த நிகிதா மிஷென்கோ இருந்தார். செம்பழுப்பு வண்ணத்தில் பெரிய கட்டங்கள் போட்ட குட்டையான சாம்பல் நிற மேல் கோட்டும் நீலப்பூ நிறத்தில் குறுகலான கால்சட்டையும் செக்கச்சிவந்த கழுத்துப்பட்டியும் அணிந்திருந்தார். எண்ணெய் தடவிய தலைமயிர் நடுவகிடு எடுக்கப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவரிடமிருந்து பாரசீக லிலாக் பூவின் நறுமணம் வீசியது. என்னைப் பார்த்தவுடன் இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தவர், குனிவதற்கு பதிலாக உடலை இரண்டாக மடித்து வணங்கி, ஈறு தெரியுமளவுக்கு பற்களைக் காட்டி இளித்தார்.  

“வணக்கம்! உங்களைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. திருப்பலி பூசை முடிந்ததிலிருந்தே உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களைப் பார்த்து வெகு நாளாகிவிட்டது என்பதால் போகும் வழியில் அப்படியே உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நீங்கள் ஏன் எங்களைப் பார்க்க வருவதே இல்லை? இளம்பெண்கள் உங்களைப் பற்றி கேலி பேசுகிறார்கள்.”

திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவர் போல நிறுத்தமுடியாமல் பகபகவென்று சிரித்தார். 

“இன்று ஒரு வேடிக்கை நடந்தது. ஹா…ஹா… சிரித்து சிரித்து எனக்கு வயிறு வலியே வந்துவிட்டது.” அவர் பெருங்குரலெடுத்துச் சிரித்தார்.  

“என்ன சொல்கிறீர்கள்? என்ன வேடிக்கை?” என்னுடைய எரிச்சலை மறைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் நேரடியாகவே கடுமையாகக் கேட்டேன்.

“இன்று தேவாலயத்தில் பூசை முடிந்தபிறகு ஒரு கைகலப்பு ஏற்பட்டது.” அவர் பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் சிரித்தார். “பெரப்ராடின் இளம்பெண்கள் சிலர், ஐயோ, கடவுளே.. என்னால் முடியவில்லை! அவர்கள் சதுக்கத்தில் ஒரு சூனியக்காரியைப் பிடித்துவிட்டார்கள். அதாவது, அவளொரு சூனியக்காரி என்றுதான் அவர்கள், அந்த அறிவில்லாத ஊர்மக்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அவளை உண்டு இல்லை என்று செய்துவிட்டார்கள். அவள் மீது தார் பூசப் போனார்கள். ஆனால் எப்படியோ அவள் தப்பிவிட்டாள்.”

மிகப் பயங்கரமானதொரு உள்ளுணர்வு என்னைத் தாக்கியது. நான் அந்த காரியதரிசியின் அருகில் விரைந்து அவருடைய இரு தோள்களையும் இறுகப்பற்றி பதற்றத்தோடு கேட்டேன், “என்ன சொல்கிறீர்கள்? அடச்சே! சிரிப்பதை நிறுத்துங்கள்! எந்த சூனியக்காரியைச் சொல்கிறீர்கள்?”

நான் ஆத்திரத்தோடு உறுமினேன். அவர் சிரிப்பதை சட்டென்று நிறுத்திவிட்டு பயத்தால் விரிந்த கண்களால் என்னை உற்று நோக்கினார். 

“எ.. எனக்கு.. உண்மையிலேயே தெரியாது சார்,” அவர் குழப்பத்தோடு உளறினார். “அவள் பெயர் சமூய்லிக்காவோ, மனுய்லிக்காவோ – ஒரு நிமிடம்! அவள் மனுய்லிக்காவின் மகள் என்று நினைக்கிறேன். அந்தக் கிராமவாசிகள் பேசிக்கொண்டிருந்தார்கள், ஆனால் என்ன சொன்னார்கள் என்று உண்மையிலேயே எனக்கு மறந்துபோய்விட்டது.”

அவர் அங்கே பார்த்தது, கேட்டது எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து ஒன்றுவிடாமல் சொல்லும்படி கேட்டேன். அவரோ முட்டாள்தனமாகவும், விவரங்களைக் கலந்துகட்டி, முன்னுக்குப்பின் முரணாகவும் என்னென்னவோ உளறினார். பொறுமையற்று நான் கேட்டக் குறுக்குக் கேள்விகளும் உணர்வின் வெளிப்பாடுகளும் அவர் மீதான சாடல்களாகவே முடிந்தன. அவர் சொன்ன கதையிலிருந்து ஓரளவுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான், நேரில் பார்த்த சாட்சியான வன அதிகாரியின் மனைவி வாயிலாக, திருவிழாவின்போது நடைபெற்ற சாபக்கேடான அந்நிகழ்வு பற்றிய முழு விவரமும் எனக்குத் தெரியவந்தது. 

என்னுடைய உள்ளுணர்வு என்னை ஏமாற்றவில்லை. ஒலேஸ்யா ஒருவழியாக தன் பயத்தை வென்று அன்றைய தினம் தேவாலயத்துக்குச் சென்றிருக்கிறாள். அப்போது திருப்பலி பூசை கிட்டத்தட்ட பாதி முடிந்த நிலையில் இருந்திருக்கிறது. அவள் வழிபாட்டுக்கூடத்தின் கடைசியில் சென்று அமர்ந்திருக்கிறாள். ஆனால் அவள் உள்ளே நுழைந்ததுமே அங்கிருந்த கிராமவாசிகள் அனைவரும் அவளைப் பார்த்துவிட்டனர். பூசை முடியும் வரை பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தபடி அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவண்ணம் இருந்திருக்கின்றனர். 

இருந்தபோதும், ஒலேஸ்யா பெரும் துணிவை வரவழைத்துக் கொண்டவளாக பூசையின் இறுதிவரை அங்கேயே இருந்திருக்கிறாள். அவர்களுடைய வன்மம் நிறைந்த பார்வையின் பொருளை அவள் தவறாகப் புரிந்துகொண்டிருக்க வேண்டும் அல்லது உள்ளார்ந்த செருக்கோடு அவற்றை அவள் அலட்சியம் செய்திருக்கவேண்டும். ஆனால் அவள் தேவாலயத்தை விட்டு வெளியில் வந்ததுமே வேலிக்கு அருகில் சில பெண்கள் அவளைச் சூழ்ந்து கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் அதிகரித்து அவளை நெருக்கியது. 

முதலில் அவர்கள், திகில் நிறைந்த பார்வையோடு நின்றிருந்த அந்த ஆதரவற்றப் பெண்ணை ஆத்திரத்தோடு முறைத்துப் பார்த்தனர். அதன் பிறகு இழிவான சொற்களாலும், தகாத வார்த்தைகளாலும், ஏளனச் சிரிப்போடு கூடிய அவதூறுகளாலும் வசைமாரி பொழிந்தனர். அதைத் தொடர்ந்து கூட்டத்திலிருந்து புறப்பட்ட பல்வேறு கூக்குரல்களும் ஒன்று கலந்து செவிப்பறையைக் கிழிக்கும் பெரும் இரைச்சலாக மாறி, அங்கிருந்த பெண்களின் ஆத்திரத்தை மேலும் உசுப்பேற்றியது. 

கொடூரமான அந்த உயிர்வளையத்திலிருந்து விடுபட்டு வெளியேற ஒலேஸ்யா பலமுறை முயன்ற போதும், மீண்டும் மீண்டும் அதன் மையத்தை நோக்கியே நெட்டித் தள்ளப்பட்டாள். திடீரென்று ஒரு கிழவி கூட்டத்தின் பின்னாலிருந்து கத்தினாள், ‘அந்தச் சிறுக்கி மீது தார் பூசுங்க”  

உடனடியாக ஒரு தார் வாளியும் புருசும் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு,  வெறிபிடித்த பெண்களின் தலைக்கு மேலே ஒருவரிடமிருந்து மற்றவருக்குக் கைமாறிக்கொண்டே போனது. ஆத்திரம், பயம் மற்றும் இயலாமையால் பீடிக்கப்பட்டிருந்த ஒலேஸ்யா, தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்த பெண்களுள் ஒருத்தியின் மீது வெகு மூர்க்கமாகப் பாய்ந்து அவளைக் கீழே தள்ளினாள். சிறு கலவரம் உண்டாகி, பத்துப் பன்னிரண்டு பெண்கள் கும்பலாகக் கீழே விழுந்து புரண்டு எழப் போராடிக் கொண்டிருக்கையில் அதிர்ஷ்டவசமாக, ஒலேஸ்யா அந்தக் கும்பலிலிருந்து நழுவி வெளியேறி, சாலையை நோக்கி அலங்கோலமாக ஓடினாள். அவளுடைய தலைமயிரை மறைத்துக் கட்டியிருந்த தலைக்குட்டையைக் காணவில்லை, ஆடை கிழிந்து நார்நாராய்த் தொங்கி, பல இடங்களில் அவளுடைய வெற்றுடலைக் காட்டியது. 

கூட்டம் அவளைப் பார்த்துச் சிரித்தது, கடுமையாக வசைபாடியது. பெரும் கூச்சலிட்டபடி அவள் மீது கற்களை வீசி எறிந்தது. ஒரு சிலர் மட்டுமே அவளைத் துரத்திச் சென்றனர். அவர்களும் விரைவிலேயே பின்தங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ஐம்பதடி தூரம் ஓடிய பிறகு, ஒலேஸ்யா நின்றாள். அந்தக் கொடூரக் கும்பலால் காயப்பட்டு, இரத்தம் வடியும் தன் வெளிறிய முகத்தைத் திருப்பி, சதுக்கம் முழுமையும் ஒவ்வொரு வார்த்தையும் தெள்ளந்தெளிவாய்க் கேட்கும்படி உரத்தக் குரலில் கத்தினாள், “இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விரைவிலேயே நீங்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் நாள் வரும்!” 

அந்த மிரட்டலானது, அவ்வளவு தீவிரமான வெறுப்புடனும், நடக்கப்போவது குறித்த மிக உறுதியான எச்சரிக்கைத் தொனியிலும் இருந்ததாகவும், ஒரு கணம் ஒட்டுமொத்தக் கூட்டமும் பயத்தால் உறைந்துபோய் நின்றதாகவும் நேரில் பார்த்த சாட்சியான வன அதிகாரியின் மனைவி என்னிடம் தெரிவித்தார். ஆனால் எல்லாம் ஒரு கணம்தான். அதன் பிறகு மறுபடியும் வசவுகள் தெறிக்கத் தொடங்கிவிட்டனவாம். 

நான் மறுபடியும் குறிப்பிடுகிறேன், அன்று என்ன நடந்தது என்ற இந்த முழு விவரமும் பின்னாளில்தான் எனக்குத் தெரியவந்தது. 

தற்சமயம், மிஷென்கோ என்னிடம் பிதற்றலாய் சொல்லிக்கொண்டிருக்கும் கதையைக் கடைசி வரை கேட்கும் பொறுமையோ மனத்திடமோ எனக்கு இருக்கவில்லை. யர்மோலா குதிரையின் சேணத்தை அதற்குள் அகற்றியிருக்க மாட்டான் என்று தோன்றியது. திகைப்போடு நின்றிருந்த எழுத்தரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லிக்கொள்ளாமல் முற்றத்தை நோக்கி விரைந்தேன். நான் நினைத்தது போலவே யர்மோலா டாரன்சிக்கை வேலியை ஒட்டி முன்னும் பின்னுமாக நடத்திக் கொண்டிருந்தான். மடமடவென்று குதிரைக்கு கடிவாளத்தைப் பூட்டி, சேணத்தின் கயிற்றை இறுக்கிக்கட்டினேன். மீண்டும் அந்தக் குடிகாரக் கும்பலிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, இந்த முறை ஊரைச் சுற்றிக்கொண்டு காட்டை நோக்கி விரைந்தேன்.  

(13)

கட்டுக்கடங்காத வேகத்தில் குதிரையை விரட்டிக்கொண்டிருந்தபோது என் மனநிலை என்னவாக இருந்தது என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. சில சமயம், நான் எங்கே போகிறேன், எதற்காகப் போகிறேன் என்பது கூட முற்றிலும் மறந்துபோனது. நடக்கக்கூடாத ஏதோவொன்று, மகா மோசமான, மிகப் பயங்கரமான ஒன்று நடந்திருக்கிறது என்பதை மட்டும் மேலோட்டமாக உணரமுடிந்தது. அந்த உணர்வானது, நோய்மையின் வாதைமிகு துர்க்கனாவின்போது பீடிக்கும் ஆழமான, ஆதாரமற்றப் பதற்றத்தைப் போன்றது. 

மேலும் விசித்திரமாக, குதிரையின் குளம்படிச் சத்தத்துக்கு ஒத்திசைப்பதுபோல், பார்வையிழந்த ஹர்டி-கர்டி இசைக்கலைஞரின் மென்மையான உடைந்த குரல் பாடும் பாடல் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.  

, துருக்கியர் படை பாய்ந்துவந்தது

நரகத்தின்று புறப்பட்ட கரும்புகை போல!

மனுய்லிக்காவின் குடிசையை நோக்கிச் செல்லும் குறுகிய பாதையை அடைந்ததும், நான் டாரன்சிக்கை விட்டுக் கீழிறங்கி, கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தேன். சேணத்துணியின் ஓரங்களும் கழுத்துப்பட்டையால் மூடப்பட்டிருந்த அதன் தோல் பகுதிகளும் வியர்வையால் அடர்த்தியாக நுரைத்திருந்தன. அன்றைய தினத்தின் கடுமையான வெப்பத்தினாலும், காற்றுவேகப் பயணத்தினாலும் பம்ப் வைத்துப் பாய்ச்சுவது போன்று என் மண்டைக்குள் இரத்தம் வெகுவேகமாகப் பாய்ந்துகொண்டிருந்தது. 

குதிரையை வேலியில் கட்டிவிட்டு குடிசையை நோக்கி நடந்தேன். முதலில் ஒலேஸ்யா அங்கு இல்லையோ என்று நினைத்து, பயத்தால் ஒரு கணம் உள்ளுக்குள் உறைந்துபோனேன். பிறகுதான் அவள் அங்கிருப்பதைப் பார்த்தேன். தலையணையில் தலைவைத்து சுவரைப் பார்த்தபடி படுக்கையில் படுத்திருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டும் தலையைத் திருப்பவில்லை. படுக்கையின் பக்கத்தில் தரையில் அமர்ந்திருந்த மனுய்லிக்கா, தடுமாறி எழுந்து, என்னைப் பார்த்து கையால் சைகை செய்தாள். 

“சத்தம் போடாதே! மெதுவாக வா! நாசமாய்ப் போக!”   

மிரட்டும் தொனியில் கிசுகிசுத்தவள், என்னை நோக்கி நெருங்கி வந்தாள். மங்கிய விழிகளால் என்னை நேருக்கு நேர் பார்த்தவள், ஆத்திரத்தோடு சீறினாள், “பார்த்தாயா? எங்களை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாய் என்று பார்த்தாயா, நண்பனே?”

நான் உறுதியாய்ச் சொன்னேன், “இங்கே பாருங்கள், பாட்டி, சரி, தவறுகளைப் பற்றிப் பேசவோ, குறை கண்டுபிடிக்கவோ இது நேரமில்லை, ஒலேஸ்யா எப்படியிருக்கிறாள்?” 

“உஷ்! மெதுவாகப் பேசு! அவள் மயக்கமாக இருக்கிறாள். அதுதான் அவளது இப்போதைய நிலை. உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் நீ மூக்கை நுழைக்காதிருந்தால், முட்டாள்தனமான விஷயங்களை இந்தப் பெண்ணிடம் சொல்லாமல் இருந்திருந்தால், இது எதுவுமே நடந்திருக்காது. நான், ஒரு கிழட்டு முட்டாளாய் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்துவிட்டேன். பிரச்சனை வரப்போகிறது என்பது எனக்குத் தெரியும். நீ இந்தக் குடிசைக்குள் என்றைக்கு நுழைந்தாயோ, அன்றே அது எனக்குத் தெரிந்துவிட்டது. சரி, சொல், தேவாலயத்துக்குப் போவது குறித்து அவளிடம் நீ பேசவில்லை என்று என்னிடம் சொல்லப்போகிறாயா?”

வெறுப்பின் உச்சத்தில் முகம் அஷ்டகோணலாக, சட்டென்று அவள் வெடித்தாள், “நீதானே அது? சனியன் பிடித்த முட்டாளே! இப்போது என்னிடம் பொய் சொல்லாதே, நரித்தனம் பண்ணாதே, வெட்கங்கெட்ட நாயே! எதற்காக அவளைத் தேவாலயத்துக்கு வரச்செய்தாய்?”

“நான் சொல்லவில்லை, பாட்டி, சத்தியமாக நான் சொல்லவில்லை. அவளேதான் வர விரும்பினாள்.”

“ஐயோ, கடவுளே, அவள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அவளுடைய அவளுடைய முகம் அவ்வளவு கோரமாக இருந்தது. அவளுடைய சட்டை கிழிந்து தொங்கியது. அவளுடைய தலைக்குட்டையைக் காணவில்லை. அங்கே நடந்தவற்றைப் பற்றி என்னிடம் சொல்லும்போது பைத்தியக்காரி போலச் சிரித்தாள், அழுதாள். படுக்கையில் படுத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தாள். அழுது அழுது ஒருவழியாகத் தூங்கிவிட்டாள். நானொரு கிழட்டு முட்டாள், அவள் தூங்குகிறாளே என்று சந்தோஷப்பட்டேன். தூங்கி எழுந்த பிறகு அதிலிருந்து மீண்டு விடுவாள் என்று நினைத்தேன். அவளுடைய கை படுக்கையை விட்டு வெளியில் தொங்கிக் கொண்டிருந்தது. கையை சரியாக வைப்போம், இல்லையென்றால் மரத்துப்போய்விடுமே என்று நினைத்து அவள் கையைத் தொட்டால் அது நெருப்பாய்க் கொதித்தது. என் செல்லத்துக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. மூச்சுவிடாமல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவள் புலம்பிக்கொண்டே இருந்தாள். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ஓய்ந்தாள். நீ என்ன செய்துவைத்திருக்கிறாய் என்று பார். அவளை எந்த நிலைமையில் வைத்திருக்கிறாய் என்று பார்.” அவள் கையை முறுக்கிக்கொண்டு ஆற்றாமையோடு கத்தினாள்.  

திடீரென்று அவளுடைய பழுப்புநிற முகம் பூதாகரமான, அதிபயங்கரமான அழுகைக்குத் தயாராவதைப் போலக்கோணியது. விரிந்து நீண்ட உதட்டின் விளிம்புகள் கீழ்நோக்கித் தொங்கின. அவளுடைய முகத்தசைகள் இறுகி நடுங்கின. புருவங்கள் மேலுயர்ந்து முன்னெற்றியில் அதீதச்சுருக்கங்களை உருவாக்கின. கண்களிலிருந்து பட்டாணி அளவிலான கண்ணீர்த்துளிகள் அதிவேகமாய் வழிந்தோடின. முழங்கைகளை மேஜை மீது ஊன்றி இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி முன்னும் பின்னுமாக ஆடத் தொடங்கினாள். 

“என் செல்லமே!” அவள் ஓலமிட்டாள், “என் தங்கமே! ஐயோ, எவ்வளவு அபாக்கியசாலி நான்!”

“உங்கள் புலம்பலை நிறுத்துங்கள் பாட்டி. நீங்களே அவளை எழுப்பிவிட்டுவிடுவீர்கள்” நான் கடுமையாய்க் குறுக்கிட்டேன்.

அவள் அமைதியானாள். ஆயினும் முன்பிருந்த அதே பயங்கரமான முகச்சுளிப்புடன் தொடர்ச்சியாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் மேஜை மீது சொட்டிக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட அப்படியே பத்து நிமிடம் போனது. 

கண்ணாடி ஜன்னலை முட்டிக்கொண்டிருந்த ஈயின் சீரான மற்றும் ஏற்ற இறக்கமான ரீங்காரத்தைக் கேட்டபடி மனுய்லிக்காவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். 

“பாட்டி” சட்டென்று ஒலேஸ்யாவின் மிகச் சன்னமான அழைப்பொலி கேட்டது. “பாட்டி, யார் வந்திருக்கிறார்கள்?” ஈனசுரத்தில் முனகினாள்.

மனுய்லிக்கா தடுமாறிக்கொண்டே அவசரமாக படுக்கைக்கு அருகில் சென்றாள். அங்கு சென்றதுமே மீண்டும் தன் புலம்பலைத் தொடங்கிவிட்டாள்.

“ஐயோ… என் செல்லப் பெண்ணே… என் கண்ணே! ஐயோ… எவ்வளவு அபாக்கியசாலி நான்.. எவ்வளவு சபிக்கப்பட்டவள்!”

“தயவுசெய்து நிறுத்துங்கள், பாட்டி” ஒலேஸ்யா வேதனைமிக்கக் குரலில் பரிதாபமாய் இறைஞ்சினாள். “நம் வீட்டுக்கு யார் வந்திருக்கிறார்கள்?”

பொதுவாக உடல் நலமில்லாதவர்களோடு இருக்க நேர்கையில் நம்முடைய உடல் ஆரோக்கியம் குறித்து உண்டாகும் குற்ற உணர்ச்சியோடும் தர்மசங்கடத்தோடும் நான் சத்தமில்லாமல் அவளுடைய படுக்கையை நோக்கிச் சென்றேன். 

“நான்தான், ஒலேஸ்யா” மிக மெதுவாகச் சொன்னேன், “இப்போதுதான் கிராமத்திலிருந்து வருகிறேன். இன்று காலை முழுவதும் நகரத்தில் இருந்தேன். உன் உடல்நிலை எப்படியிருக்கிறது, ஒலேஸ்யா? மிக மோசமாக இருக்கிறதா?”

தலையணையிலிருந்து தலையைத் தூக்காமலேயே தன்னுடைய சட்டை மறைக்காத கையை காற்றில் அலைவது போல பின்னோக்கி நீட்டினாள். நான் புரிந்துகொண்டு, அவளுடைய கதகதப்பான கையை எடுத்து என்னிரு கைகளுக்குள்ளும் பொத்திக்கொண்டேன். மணிக்கட்டுக்கு மேலும், முழங்கையிலும் என இரண்டு இடங்களில் இரத்தம் கட்டிப் போயிருப்பது அவளுடைய மென்மையான வெண்ணிறக் கைகளில் துல்லியமாய்த் தெரிந்தது.

“அன்பே” ஒலேஸ்யா பேச முடியாமல் கஷ்டப்பட்டு நிறுத்தி நிறுத்திப் பேசினாள், “நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன் – ஆனால் முடியவில்லை. அவர்கள் என்னுடைய முகத்தை சிதைத்துவிட்டார்கள். உங்களுக்கு என்னுடைய முகம் மிகவும் பிடிக்கும் என்பீர்கள், நினைவிருக்கிறதா? உங்களுக்குப் பிடிக்கும்தானே அன்பே, அதனால் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போது நீங்கள் என்னைப் பார்த்தால் அருவருப்பு அடைவீர்கள் – அதனால்தான் நான் உங்களிடம் என் முகத்தைக் காட்ட விரும்பவில்லை.” 

“என்னை மன்னித்துவிடு, ஒலேஸ்யா” நான் குனிந்து அவளுடைய காதில் கிசுகிசுத்தேன். காய்ச்சலால் தகிக்கும் அவளுடைய கை, என்னுடைய கையை வெகுநேரம் இறுகப் பற்றியிருந்தது. 

“நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம்? எப்படிச் சொல்லலாம், அன்பே? உங்களுக்கு அப்படி நினைக்கவே கூசவில்லையா? அது உங்கள் தவறா? நானொரு முட்டாள், நானேதான் எனக்கு இந்த நிலையைத் தேடிக்கொண்டேன். நான் ஏன்தான் அதைச் செய்தேனோ? வேண்டாம், அன்பே, நீங்கள் உங்கள் மீது பழி போட்டுக்கொள்ளாதீர்கள்.”

“எனக்கு ஒரு விஷயத்துக்கு அனுமதி கொடு ஒலேஸ்யா – அதற்கு முன் நான் கேட்பதைச் செய்வதாக எனக்கு வாக்களி.”

“நீங்கள் விரும்புவது எதுவென்றாலும் சத்தியமாக அதைச் செய்வேன்!”

“மருத்துவரை அழைக்க எனக்கு தயவுசெய்து அனுமதி கொடு. உன்னை மன்றாடிக் கேட்கிறேன். உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர் என்ன சொன்னாலும் அதை நீ பொருட்படுத்தத் தேவையில்லை. ஆனால், ஒலேஸ்யா, எனக்காகவாவது அவர் வந்து பார்க்க சம்மதம் தெரிவி”

“ஐயோ.. அன்பே, எப்படி என்னை மடக்கிவிட்டீர்கள்! முடியாது. என்னுடைய சத்தியத்தை என்னால் காப்பாற்ற முடியாது. ஒரு மருத்துவரை என்னருகில் எந்தக் காலத்திலும் வரவிட மாட்டேன், அது உண்மையிலேயே நான் நோய்வாய்ப்பட்டிருந்து சாகும் நிலையில் இருந்தாலும் கூட. இப்போதோ எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் கொஞ்சம் பயந்துபோயிருக்கிறேன், அவ்வளவுதான். இன்றிரவு தூங்கி எழுந்தால் எல்லாம் சரியாகிவிடும். அப்படி சரியாகவில்லை என்றால் பாட்டி எனக்கு காட்டு லில்லிப் பூக்களின் கசாயமோ, ராஸ்பெரி வடிநீரோ கொடுத்து சரி செய்துவிடுவார். எதற்காக மருத்துவரைக் கூப்பிட வேண்டும்? நீங்கள்தான் எனக்கான ஆகச்சிறந்த மருத்துவர். நீங்கள் இப்போது இங்கே இருப்பதால் முன்பிருந்ததை விடவும் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஒரே ஒரு விஷயம்தான் என்னை மிகவும் வருத்துகிறது. நான் உங்களைப் பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை. ஆனால் எனக்குப் பயமாக இருக்கிறது.”

நான் மிக மென்மையாக அவளுடைய தலையை தலையணையிலிருந்து கைத்தாங்கலாகத் தூக்கினேன். அவளுடைய முகம் காய்ச்சலால் சிவந்திருந்தது. கருவிழிகள் இயற்கைக்கு மாறான பிரகாசத்துடன் ஒளிர்ந்தன, உலர்ந்துபோன உதடுகள் துடித்தன. அவளுடைய முகத்திலும் கழுத்திலும் வரிவரியாக சிவப்புநிறத்தில் அச்சுகள் பதிந்துபோயிருந்தன. முன்னெற்றியிலும் கண்களுக்குக் கீழும் அடிபட்டுக் கன்றிப்போயிருந்தன. 

“தயவுசெய்து என்னைப் பார்க்காதீர்கள். நான் இப்போது அவலட்சணமாக இருக்கிறேன்.” அவள் தன் கைகளால் என் கண்களை மூட முயன்றவளாய், கெஞ்சலோடு கிசுகிசுத்தாள். 

என் இதயம் பரிவிரக்கத்தால் நிரம்பித் ததும்பியது. போர்வையின் மீது அசைவற்றுக் கிடந்த அவள் கையின் மீது என் உதடுகளைப் பதித்து நீண்ட மெல்லிய முத்தங்களால் நிறைத்தேன். இதற்கு முன்பும் அவளுடைய கைகளில் முத்தமிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவள் வெட்கத்தால் கைகளை வெடுக்கென்று பின்னிழுத்துக் கொள்வாள். ஆனால் இப்போதோ, அவள் எவ்வித எதிர்ப்பும் காட்டவில்லை, மாறாக, மற்றொரு கையால் என் தலைமயிரைக் கோதிக்கொண்டிருந்தாள். 

“நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?” அவள் கிசுகிசுப்பாய்க் கேட்டாள். 

நான் தலையசைத்தேன். மிஷென்கோ சொன்னதைக் கொண்டு என்னால் என்ன நடந்தது என்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அன்றைய காலை நிகழ்வை மறுபடியும் ஒலேஸ்யா நினைவுக்குக் கொண்டுவந்து துயருறுவதை நான் விரும்பவில்லை. இருப்பினும் அவளுக்கு நேர்ந்த அநியாயத்தை நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஆத்திரமும் வெறியும் உண்டானது. 

“ஐயோ, அந்த சமயத்தில் நான் அங்கே இல்லாமல் போய்விட்டேனே!” விறைத்த உடலோடு கைகளை முறுக்கிக்கொண்டு கத்தினேன். “நான் மட்டும்… நான் மட்டும்…”

“தயவுசெய்து விட்டுவிடுங்கள். உண்மையிலேயே இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. கோபப்படாதீர்கள், அன்பே!” ஒலேஸ்யா பணிவன்போடு என்னைத் தடுத்தாள். 

முட்டிக்கொண்டிருந்த அழுகையை அதற்கு மேலும் என்னால் அடக்கிவைக்க முடியவில்லை. ஒலேஸ்யாவின் தோளில் தலையைச் சாய்த்து சத்தமின்றித் தேம்பி அழலானேன். 

“அழுகிறீர்களா, என்ன?” ஆச்சர்யமும், கனிவும் கருணையுமாய் அவள் குரல் ஒலித்தது. “என் அன்பே! தயவுசெய்து நிறுத்துங்கள். உங்களையே நீங்கள் வருத்திக் கொள்ளாதீர்கள். நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் இருவரும் ஒன்றாக இருக்கும்போது அழவேண்டாமே. இந்த இறுதி நாட்களில் நாம் மகிழ்ச்சியாக இருப்போம், அப்போதுதான் பிரியும்போது நமக்குக் கஷ்டமாக இருக்காது.”

நான் வியப்போடு தலையை உயர்த்தினேன். இன்னதெனத் தெரியாத ஏதோவொரு முன்னெச்சரிக்கை உணர்வு மெதுவாக என் இதயத்தைக் கவ்வியது. 

“இறுதி நாட்களா? ஒலேஸ்யா என்ன சொல்கிறாய்? ஏன் இறுதி என்கிறாய்? ஏன் நாம் பிரியப்போகிறோம்?”

அவள் கண்களை மூடி சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“நாம் பிரியத்தான் வேண்டும், வான்யா” அவள் உறுதியான குரலில் சொன்னாள், “எனக்குக் கொஞ்சம் குணமானவுடன் நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுவிடுவோம், இதற்கு மேலும் எங்களால் இங்கே இருக்க முடியாது.” 

“ஏதாவது நடந்துவிடும் என்று பயப்படுகிறாயா?”

“இல்லை, அன்பே! எதற்காகவும் நான் பயப்படவில்லை, அப்படி ஏதேனும் நடந்தாலும் கூட. ஆனால் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு மக்களை நாம் ஏன் தூண்டவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று தெரியவில்லை, நான் பெரப்ராடில் எல்லோரையும் மிரட்டிவிட்டு வந்தேன். நான் அவ்வளவு ஆத்திரமும் அவமானமும் அடைந்திருந்தேன். இனிமேல் பாருங்கள், ஊரில் எது நடந்தாலும் எங்கள் மீதுதான் அவர்கள் பழி சுமத்துவார்கள். கன்றுக்குட்டி செத்தாலும் சரி, வீடு தீப்பிடித்து எரிந்தாலும் சரி, எங்களைத்தான் குற்றவாளி ஆக்குவார்கள். நான் சொல்வது சரிதானே, பாட்டீ?” அவள் குரலை சற்று உயர்த்திக் கேட்டாள்.

“என்ன சொன்னாய் என் செல்லமே? எனக்குக் கேட்கவில்லையே” முணுமுணுப்பாய்ச் சொன்ன மனுய்லிக்கா, காதுக்குப் பின்னால் கையைக் குவித்தபடி ஒலேஸ்யாவின் அருகில் வந்தாள்.

“பெரப்ராடில் நடக்கப்போகும் எந்தவொரு துரதிஷ்ட நிகழ்வுக்கும் இனி நம் மீதே பழி சுமத்துவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.”  

“ஆமாம், ஒலேஸ்யா, அவர்கள் அப்படிதான் செய்வார்கள். பாவப்பட்ட நம்மைத்தான் எல்லாவற்றுக்கும் பழி சொல்வார்கள். நம்மை அவர்கள் நிம்மதியாக வாழவிடவே மாட்டார்கள். நம்மை அழித்துவிடுவார்கள். அந்த அறிவுகெட்ட முட்டாள்கள் செய்வார்கள். என்னை அவர்கள் ஊரை விட்டு விரட்டி அடித்ததும் இதே காரணத்தால்தானே? கோபத்தில் ஒரு பெண்ணை மிரட்டினேன். அதன் பிறகு அவளுடைய குழந்தை இறந்துவிட்டது. நான் எதுவுமே செய்யவில்லை என்பது கடவுளுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் என்னைக் கொல்ல வந்துவிட்டார்கள். நாசமாய்ப் போக! அவர்கள் என்மீது கற்களை எறிந்தார்கள். நான் உன்னைப் பொத்திப் பாதுகாத்தபடி ஓடினேன், நீ அப்போது குழந்தை. ‘அவர்கள் என்னை அடித்தால் பரவாயில்லை, ஆனால் ஏன் ஒன்றுமறியாத அப்பாவிக் குழந்தைக்கு ஆபத்து உண்டாக்க வேண்டும்’ என்று நினைத்தேன். அவர்கள் காட்டுமிராண்டிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கட்டாயம் தூக்கில் தொங்கவிடப்பட வேண்டியவர்கள். அவர்கள் அப்படிப்பட்டவர்கள்தான்!”

“ஆனால் நீங்கள் எங்கே போவீர்கள்? உங்களுக்கு சொந்த பந்தம் என்று எங்கேயும் எவரும் கிடையாது. அதுமட்டுமில்லாமல், ஒரு புதிய இடத்தில் வாழ்க்கையைத் தொடங்குவது என்றால் அதற்கு நிறைய செலவாகும்.”

“நாங்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வோம்.” ஒலேஸ்யா அலட்சியமாகச் சொன்னாள், “பாட்டி பணத்துக்கு ஏற்பாடு செய்வார். அவர் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறார்.”  

“அதெல்லாம் ஒரு தொகை என்று சொல்கிறாயா?” மனுய்லிக்கா எரிச்சலோடு கேட்டுவிட்டு முணுமுணுத்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள். “என் கண்ணீரில் நனைந்த சில கோபெக்குகள்தான் இருக்கும்.” 

“நான் என்னாவேன், ஒலேஸ்யா? நீ என்னைப் பற்றிக் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லையா?” ஆத்திரமும் அதிருப்தியுமாய்க் கேட்டேன்.

அவள் எழுந்தமர்ந்தாள். மனுய்லிக்காவின் இருப்பு குறித்து எந்தக் கூச்சமும் இல்லாமல் என் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி நெற்றியிலும் கன்னங்களிலும் பலமுறை முத்தமிட்டாள். “மற்ற யாரைக் காட்டிலும் உங்களைத்தான் நான் அதிகமாக நினைக்கிறேன், அன்பே! ஆனால், பாருங்கள், நாம் ஒன்றாக வாழ்வதற்கான விதி விதிக்கப்படவில்லை. உங்களுக்கு ஆருடம் பார்த்தபோது எந்தெந்த சீட்டுக்கள் விழுந்தன என்று நினைவிருக்கிறதா? அப்போது அவை என்னிடம் சொன்னது போலவேதான் இப்போது எல்லாமே நடந்துகொண்டிருக்கின்றன. அப்படியென்றால், நீங்களும் நானும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதை விதி விரும்பவில்லை என்றுதான் அர்த்தம். அது மட்டும் அப்படி இல்லாமல் இருந்திருந்தால் வேறு எதற்காவது நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

“மறுபடியும் விதியைப் பற்றிப் பேசுகிறாய்! நான் அதை நம்ப விரும்பவில்லை. நம்பப் போவதும் இல்லை” நான் பொறுமையற்றுக் கத்தினேன். 

“ஐயோ.. இல்லை… இல்லை! அப்படிச் சொல்லாதீர்கள்!” அவள் பயத்துடன் முணுமுணுத்தாள். “நான் பயப்படுவது என்னை நினைத்து அல்ல, உங்களை நினைத்துத்தான். நீங்கள் அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் நல்லது.” 

விதியாலோ அல்லது முரட்டுத்தனமான கொடூர மாந்தராலோ கிஞ்சித்தும் பாதிப்பு நேரவியலாத அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததொரு அழகிய வாழ்வைச் சித்தரித்து, அவளைத் திசைதிருப்ப நான் எடுத்த முயற்சிகள் வீணாயின. வெறுமனே என் கைகளில் முத்தமிட்டுக்கொண்டு இருந்த ஒலேஸ்யா தலையசைத்துச் சொன்னாள், “இல்லை, இல்லை! எனக்குத் தெரியும். என்னால் அதைப் பார்க்க முடிகிறது. வரப்போவது துயரத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது.” அவள் உறுதியாய்ச் சொன்னாள்.  

அவளுடைய விடாப்பிடியான மூடநம்பிக்கையினால் கலக்கமும் குழப்பமும் அடைந்த நான், இறுதியாக அவளைக் கேட்டேன், “சரி, நீங்கள் எப்போது புறப்படப் போகிறீர்கள் என்பதையாவது என்னிடம் தெரிவிப்பாயா?”

அவள் உற்சாகமானாள். மங்கிய புன்னகை அவள் உதட்டில் வந்தமர்ந்தது. “நான் உங்களுக்கு ஒரு குட்டிக்கதை சொல்லவா? ஒரு ஓநாய் காட்டுக்குள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு முயலைப் பார்த்தது. ‘நான் உன்னைத் தின்னப் போகிறேன், முயலே’ என்று சொன்னது. உடனே அந்த முயல், ‘தயவுசெய்து என்மீது கருணை காட்டு. நான் உயிர்வாழ விரும்புகிறேன். என்னுடைய குட்டிகள் என் வருகைக்காக வீட்டில் காத்துக்கொண்டிருக்கும்’ என்றது. ஓநாய் அதற்கு செவிசாய்க்கவில்லை. முயல் மறுபடியும் கெஞ்சியது. ‘சரி, எப்படியும் நீ என்னைத் தின்னப் போகிறாய். அதற்கு முன்பு எனக்கு மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடு. அதற்குப் பிறகு நீ என்னைத் தின்றுவிடு. என் மரணத்தை ஏற்பது அப்போது எனக்கு சற்று எளிதாக இருக்கும்’ என்றது. ஓநாய் சரியென்று சம்மதித்து முயலைத் தின்னாமல் விட்டது. ஆனால் அது எங்கும் தப்பிவிடாமல் கண்காணித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளாகக் கழிந்து மூன்றாவது நாளும் வந்தது. ‘இப்போது தயாராக இரு. நான் உன்னைத் தின்னப் போகிறேன்’ என்றது ஓநாய். முயல் ஆற்றாமையும் அழுகையுமாய்க் கேட்டது, “நீ ஏன் எனக்கு மூன்று நாட்கள் அவகாசம் கொடுத்தாய்? நீ என்னைப் பார்த்த உடனேயே தின்றிருக்க வேண்டும். மரணத்தை விடவும் மரண பயம் கொடியது. இந்த மூன்று நாட்களும் எனக்கு மிக மோசமாக நாட்களாக இருந்தன.’ என்றது. அந்த முயல் உண்மையைத்தான் சொன்னது. இல்லையா அன்பே?”

வரப்போகும் பிரிவுத்துயர் குறித்த தெளிவற்ற பயமும் கலக்கமும் பீடிக்க, நான் எதுவும் பேசவில்லை. சட்டென்று ஒலேஸ்யா படுக்கையில் எழுந்து அமர்ந்தாள். மிகுந்த உற்சாகத்தோடு பேசத் தொடங்கினாள்.

“வான்யா, நீங்களும் நானும் ஒன்றாக இருந்த வேளைகளில் நீங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருந்தீர்கள்?” 

“ஒலேஸ்யா! எப்படி இப்படியெல்லாம் உன்னால் கேட்க முடிகிறது?”

“பொறுங்கள்! என்னைச் சந்தித்ததற்காக என்றாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா? என்னோடு இருந்தபோது வேறு எந்தப் பெண்ணையாவது மனதில் நினைத்திருக்கிறீர்களா?”

“ஒரு கணமும் கிடையாது. உன்னோடு இருக்கும்போது மட்டுமல்ல, நான் தனியாக இருக்கும்போது கூட உன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் மனத்தாலும் நினைத்தது கிடையாது.”

“என் மீது கோபப்பட்டிருக்கிறீர்களா? எப்போதாவது என்னால் அதிருப்தி அடைந்திருக்கிறீர்களா? என் சகவாசம் உங்களுக்குச் சலிப்பு உண்டாக்கியிருக்கிறதா?”

“ஒரு போதும் இல்லை, ஒலேஸ்யா, ஒரு போதும் இல்லை!”

அவள் கைகளை என் தோள்களில் ஊன்றி அளப்பரிய காதலோடு என் கண்களை உற்றுநோக்கியபடி சொன்னாள்.

“அப்படியென்றால், அன்பே, இனியும் நீங்கள் என்னை வெறுப்புடனோ கோபத்துடனோ ஒருபோதும் நினைக்கமாட்டீர்கள்” என் கண்களின் வழி என் எதிர்காலத்தைக் கணிப்பது போல் உறுதிப்படக் கூறினாள். “நாம் பிரிந்த பின் ஆரம்பத்தில் உங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும், ஆமாம், மிக மிக வருத்தமாக இருக்கும். நீங்கள் அழுவீர்கள், நிம்மதியற்றுத் தவிப்பீர்கள். நாளடைவில் எல்லாம் கடந்துபோய்விடும். அதன் பிறகு 

எந்தவித வருத்தமும் இல்லாமல் மகிழ்ச்சியான இதயத்தோடுதான் என்னை நினைப்பீர்கள்.”

அவள் தலையை மீண்டும் தலையணையில் சாய்த்தாள்.

“இப்போது நீங்கள் வீட்டுக்குப் புறப்படுங்கள், அன்பே! நான் கொஞ்சம் களைப்பாக இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், எனக்கொரு முத்தம் தந்துவிட்டுச் செல்லுங்கள். பாட்டி இருக்கிறாரே என்று பயப்படாதீர்கள். அவர் கண்டுகொள்ள மாட்டார். பாட்டி… உனக்கொன்றும் பிரச்சனை இல்லைதானே?” அவள் பாட்டியைப் பார்த்துக் கேட்டாள்.

“சரி, சரி, முறையாக விடைபெற்றுக்கொள்ளுங்கள். என்னிடம் இனி மறைத்து என்ன பயன்? வெகு நாட்களுக்கு முன்பிருந்தே எனக்கு இது தெரியும்” மனுய்லிக்கா சலிப்போடு சொன்னாள். 

“இங்கே முத்தமிடுங்கள், இங்கே, இங்கே, இங்கே…” ஒலேஸ்யா கண்கள், கன்னங்கள், உதடுகள் என ஒவ்வொன்றாக விரலால் சுட்டிக் கொண்டிருந்தாள். 

“ஒலேஸ்யா, என்னவோ இதுதான் நம்முடைய கடைசி சந்திப்பு என்பது போலவும் இனிமேல் நாம் சந்திக்கப்போவதே இல்லை என்பது போலவும் எனக்கு விடைகொடுக்கிறாய்” நான் பயத்துடன் சொன்னேன்.  

“தெரியவில்லை, அன்பே. எனக்கு எதுவுமே தெரியவில்லை. நல்லது, இப்போது நீங்கள் அமைதியாகப் புறப்படுங்கள். இல்லை, இன்னும் ஒன்று இருக்கிறது. உங்கள் காதுகளை என்னருகில் கொண்டுவாருங்கள், என்னை மிகவும் வருத்தும் ஒரு விஷயம் என்னவென்று தெரியுமா?” அவள் உதடுகள் என் கன்னங்களை உரச, என் காதில் அவள் கிசுகிசுத்தாள், “உங்கள் குழந்தையைச் சுமக்கும் பேறு எனக்குக் கிடைக்கவில்லை. ஐயோ, அதுமட்டும் கிட்டியிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன்.”

நான் வெளியில் வந்தேன். மனுய்லிக்காவும் உடன் வந்தாள். துல்லிய விளிம்போடு கூடிய கருமேகக்கூட்டம் வானத்தில் பாதியை மறைத்திருந்தது. மேற்கே அஸ்தமித்துக் கொண்டிருந்த சூரியன் இன்னும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மாலைக்கதிரொளியும் கவியத் தொடங்கும் இருளும் கலந்த கலவையில் ஏதோவொரு தீக்குறி புலப்பட்டது. நெற்றிக்கு மேல் கைவைத்து கண்களுக்குக் குடைபிடித்தபடி அண்ணாந்து பார்த்த கிழவியும் எதையோ புரிந்துகொண்டதுபோல் தலையை அசைத்தாள். 

“பெரப்ராடில் இன்று மழையும் புயலும் வரப்போகிறது” அவள் உறுதியாகச் சொன்னாள், “ஆலங்கட்டி மழை கூட வரக்கூடும். கடவுளே, அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது.”

(14)

நான் கிட்டத்தட்ட பெரப்ராடை நெருங்கிய போது சடாரென்று ஒரு பெரும் சுழற்காற்று வீசி புழுதியைக் கிளப்பி சாலை நெடுக சுழற்றியடித்தது. மழையின் முதல் துளிகள் கொஞ்சமாகவும் கனமாகவும் விழத் தொடங்கின.   

மனுய்லிக்கா சொன்னது சரிதான். வெப்பமும் வெக்கையுமான அன்றைய நாள் முழுக்கத் திரண்டிருந்த மழைமேகம் அசாதாரண வேகத்தோடு பெருமழையாக பெரப்ராடின் மீது பொத்துக்கொண்டு ஊற்றியது. இடைவிடாமல் மின்னல் வெட்டியது. இடிச்சத்தத்தால் கண்ணாடி ஜன்னல்கள் கலகலவென அதிர்ந்து எதிரொலித்தன. இரவு எட்டு மணிவாக்கில் புயல் கொஞ்ச நேரம் ஓய்ந்தது போல் இருந்தது. ஆனால் புதிய விசையோடு மறுபடியும் தன் ஆட்டத்தைத் தொடங்கிவிட்டது. நான் ஜன்னலை நோக்கி விரைந்தேன். வால்நட் அளவிலான பெரும் ஆலங்கட்டிகள் சடசடவெனத் தரையில் விழுந்து தெறித்தோடின. வீட்டருகில் இருந்த மல்பெரி மரத்தைப் பார்த்தேன். அடித்து வீசிய ஆலங்கட்டி மழையால் அத்தனை இலைகளையும் இழந்து மொட்டையாக நின்றுகொண்டிருந்தது. ஜன்னலுக்குக் கீழே இருந்த மங்கிய இருளில் யர்மோலாவின் கரிய உருவத்தைப் பார்த்தேன். தலையையும் தோள்களையும் மேல்கோட்டால் மூடியபடி ஜன்னல் கதவுகளைச் சாத்துவதற்காகச் சமையலறையிலிருந்து வெளியில் ஓடிப் போனான். ஆனால் அதற்குள் ஒரு பிரம்மாண்டமான பனிக்கட்டி ஜன்னல் கண்ணாடியில் வேகமாக மோதியதில் கண்ணாடி நொறுங்கி சில்லுசில்லாய்ச் சிதறியது. கண்ணாடிச்சில்லுகள் சில என் அறையிலும் வந்து விழுந்தன.   

சோர்ந்துபோய் உடுப்பைக் களையாமல் அப்படியே படுக்கையில் கிடந்தேன். அன்றிரவு என்னால் உறங்க முடியாது என்றும் இயலாமையின் வேதனையோடுதான் அவ்விரவைக் கழிக்கவிருக்கிறேன் என்றும் புரிந்தது. எனவே அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து நடந்து என்னை நானே ஒருவழியாகக் களைப்படையச் செய்து பிறகு உறங்கிவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால் மிக விசித்திரமான ஒரு விஷயம் நடந்தது. 

ஒரு கணம் மட்டுமே கண்ணை மூடியது போல் இருந்தது. ஆனால் கண்விழித்தபோது ஜன்னலின் அடைப்புச்சட்டங்கள் வாயிலாக சரிவாய் ஊடுருவி இருந்த பிரகாசமான காலைக் கதிரொளியில் பொன்னிறத் தூசுகள் சுழன்றுகொண்டிருந்தன. பொறுமையற்றத் தவிப்பும் பெரும் பதற்றமுமாக யர்மோலா என் படுக்கைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான். நான் எழுவதற்காக அவன் வெகுநேரமாகக்காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. 

“மாஸ்டர்!” அவன் எச்சரிக்கும் தொனியில் சொன்னான், “மாஸ்டர், நீங்கள் உடனே இங்கிருந்து போய்விடவேண்டும்”

நான் அவனை வியப்புடன் நோக்கினேன். “போகவேண்டுமா? எங்கே போகவேண்டும்? ஏன் போகவேண்டும்? உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?” 

“நான் பைத்தியம் கிடையாது.” அவன் உறுமினான், “நேற்றிரவு பெய்த ஆலங்கட்டி மழையால் என்ன நடந்தது தெரியுமா? பாதிப் பயிர்கள் சாய்ந்து நாசமாகிவிட்டன. ஒற்றைக்கண் மக்ஸிம், கோஸ்யால், முட், ப்ரோகோப்ச்சக், கார்டி ஓலஃபிர் எல்லாருடையதும் – சபிக்கப்பட்ட அந்த சூனியக்காரி சொன்னது போலவே பிரச்சனையை உண்டாக்கிவிட்டாள். அவள் நாசமாய்ப் போக!”

முந்தைய தினம் தேவாலயத்துக்கு அருகில் நடந்த நிகழ்வும், ஒலேஸ்யா அவர்களை மிரட்டியதும், பிறகு அதற்காக அவள் பயந்ததும் என எல்லாமே சட்டென்று நினைவில் மின்னி மறைந்தன. 

யர்மோலா தொடர்ந்து சொன்னான், “இப்போது ஒட்டுமொத்தக் கிராமமும் கோபமாக இருக்கிறது. அவர்கள் காலையிலிருந்தே சாராயம் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஆத்திரத்தோடு கத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பற்றியும் கூட அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்கிறார்கள், மாஸ்டர். எங்கள் மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அந்தச் சூனியக்காரிகளை என்ன செய்தாலும் அது அவர்களுக்கான சரியான தண்டனையாக இருக்கும். அதுவே நியாயமானதாகவும் இருக்கும். ஆனால் உங்களை ஏதாவது செய்துவிட்டால்? உங்களிடம் நான் சொல்லக்கூடியது இது ஒன்றுதான்: எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த இடத்தை விட்டுப் போய்விடுங்கள்.” 

அப்படியென்றால், ஒலேஸ்யாவின் பயம் உண்மையாகிவிட்டது. வரவிருக்கும் அபாயத்தைப் பற்றிச் சொல்லி ஒலேஸ்யாவையும் மனுய்லிக்காவையும் உடனடியாக எச்சரிக்க வேண்டும் என்று தோன்றியது. அவசர அவசரமாக உடை உடுத்திக்கொண்டு, முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்துவிட்டுப் புறப்பட்டேன். அரைமணி நேரத்தில் டெவில்ஸ் நூக்கை நோக்கி துரிதகதியில் நடைபோட்டுக் கொண்டிருந்தேன். சூனியக்காரியின் குடிசையை நெருங்க நெருங்க, இனம்புரியாத, வேதனையும் பதற்றமும் அதிகமாகிக் கொண்டே போனது. முற்றிலும் புதிய, துளியும் நான் எதிர்பாராத ஏதோவொரு துயரம் என்னைப் பீடிக்கவிருப்பதாக எனக்குத் தோன்றியது. மணற்சரிவைச் சுற்றிச் செல்லும் பாதையில் நான் கிட்டத்தட்ட ஓடினேன். குடிசையின் ஜன்னல்கள் திறந்திருந்தன. கதவு ஒருக்களித்த நிலையில் இருந்தது. 

“ஐயோ, கடவுளே! இங்கே என்ன நடந்தது?” நான் உள்ளே நுழைந்தபோது என் இதயம் படபடத்தது. 

குடிசை காலியாக இருந்தது. அவசரப் புறப்பாட்டை உணர்த்தும் வகையில் பொருட்கள் கண்டபடி இறைந்து கிடந்தன. குப்பைகளும் கந்தல்துணிகளும் தரையில் குவியலாகக் கிடந்தன. கட்டிலின் மரச்சட்டம் அதன் மூலையில் வெறுமையாகக் காணப்பட்டது. என் இதயம் கனத்துப்போனது. கண்ணீர் பெருகியது. நான் வெளியேற முனைகையில் ஜன்னல் சட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்த பளீரென்ற பொருள் என் கவனத்தைக் கவர்ந்தது. யாரோ வேண்டுமென்றே அங்கே அதைத் தொங்கவிட்டது போல் இருந்தது. பொலிசியாவில் ‘பவள மணிகள்’ என்று சொல்லப்படும் மலிவான சிவப்பு மணிகளால் ஆன மாலை அது. ஒலேஸ்யா மற்றும் அவளுடைய மென்மையான, அபரிமிதமான காதலின் நினைவுப்பரிசாக எனக்கு எஞ்சியது அந்த மணிமாலை மட்டும்தான்.  

(1898) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here