விநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!


ங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து ஒரு வருட காலம் கடந்திருந்த நிலையில்தான் யசுகோவை நான் பிரசவித்தேன். ஒருவேளை அது சொந்த நாட்டை பிரிந்திருப்பதான துயரமாகவும் இருக்கலாம். என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்த பிரசவம் அதிக சிக்கலான ஒன்றாகத்தான் இருந்தது. அதன்பிறகு எனது உடல் ரொம்பவும் நலிவுற்றபடியே இருந்தது. யசுகோ பிறந்து ஒரு சில மாதங்களே கடந்திருந்த நிலையில் என்னை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். மகளிடமிருந்து வெகு தொலைவில், ஒரு விநோதமான படுக்கையில் வலி பிய்த்து எடுக்க, கிடத்தப்பட்டிருந்த நான் துவக்க சில தினங்களில் சொற்ப நேரங்களில்தான் தூங்கினேன். அவர்கள் எனக்குப் போதை மருந்து கொடுத்திருந்தார்கள். அதனால், தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில் அலைக்கழிக்கப்பட்டபடியே இருந்தேன். அதோடு இரவு வேளைகளில், என்னால் எனது மகள் கட்டிலில் கை கால்களை அசைத்துக்கொண்டு படுத்திருப்பதை ஜன்னல்களின் ஊடாக எனக்கெதிரில் தெளிவுற பார்க்க முடிந்தது. நான் அவளை நெருங்கிச் செல்ல முயற்சிப்பேன். என்னால் அவளை நெருங்கவே முடியவில்லை. தொலைவு பெருகியபடியே இருந்தது, அவளது அழுகையும் நொடிதோறும் அதிகரித்தபடியே இருந்தது. இதனால், அவளும் நோய்வாய்ப்பட வாய்ப்பிருக்கிறதோ என நான் அஞ்சுவேன். காலையில் எனது கணவர் எனது படுக்கையின் அருகில் நின்றிருப்பார். அவரிடத்தில் யசுகோவைப் பற்றி விசாரிப்பேன். இரவு முழுவதும் அவள் அழுதுகொண்டே இருந்ததாக கணவர் தெரிவிப்பார்.

ஆனால், அதற்குப்பிறகு ஒரு தினத்தில் எனது வலி என்னிலிருந்து முழுவதுமாக மறைந்து போய்விட்டது. பல மணிநேரங்கள் பகலும் இரவும் புரள்வது தெரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பேன். அப்போது ஒருமுறை எனது பிரியத்துக்குரிய மகள் யசுகோ சப்தமெழுப்பாமல் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவளுடைய வாய் சிறியளவில் திறந்திருக்கிறது. அவளது கை விரல்கள் தனது சிறிய காதினை அழுத்தித் தொட்டுக் கொண்டிருந்தது. அடுத்தநாள் காலையில் என் கணவர் எனக்கெதிரில் தோன்றி, நேற்றிரவுதான் முதல் முறையாக யசுகோ அமைதியாக உறங்கினாள் என்று தெரிவித்தார். இயற்கையாக முன் அனுமானிக்கின்ற திறன் பெற்றவள் நான் அல்ல என்றாலும், நானும் எனது மகள் யசுகோவும் அப்போது இணைக்கப்பட்டிருப்பதாகவே கருதினேன். விஞ்ஞானிகளால் கூடப் புரிந்துகொள்ள முடியாத ஒரு பந்தத்தினால் நாங்கள் பிணைக்கப்பட்டிருந்தோம். எல்லாவற்றையும் விட, இதில் அதிசயிக்கத்தக்க விஷயம் என்று என்னவிருக்கிறது? கிட்டத்தட்ட ஒன்பது மாத காலங்களில் நானும் அவளும் ஒற்றை இருப்பாகவும், ஒரே மனித உடலாகவும்தானே இருந்தோம்.

கோடைக் காலத்தின் துவக்க தினங்களில் என்னைப் பார்க்க வந்த யசுகோவிடம் இதனை நான் தெரிவித்தேன். அவளுக்கு அதில் ஆர்வம் இல்லாததைப்போலத் தோன்றியது. இன்னும் சொல்வதென்றால், நான் தெரிவித்த விஷயம் அவளை சிறியளவில் சங்கடத்திலும் ஆழ்த்தவே செய்துவிட்டது. யசுகோ இப்போது திருமணத்திற்குத் தயாராகிவிட்டிருந்தாள். அவள் இரண்டு வருடங்களாகத் தனது ஆண் தோழனோடுதான் வாழ்ந்து வருகிறாள். இக்காலத்தில் இவை எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான் என்றாலும், இறுதியில் அவளுக்குத் திருமணம் நிகழப்போகிறது என்பதில் அதிகப்படியான மன நிறைவு உண்டாகியிருந்தது. அவள் என்னுடன் மூன்று தினங்கள் தங்கியிருந்தாள். எவ்வளவு நிதானமாக அவள் என்னுடன் இருக்கிறாள் என்பதைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் பிறந்ததற்குப் பிறகான தினங்களையும், என்னையும் அவளையும் இணைத்திருந்த புதிர் மிகுந்த மாய ஆற்றல்களையும் அவளிடம் விவரித்துக்கொண்டிருந்தபோது, எனக்கு வேறொரு தருணமும், இதேபோல என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட முற்றிலும் விநோதமான கிட்டத்தட்ட இயற்கை ஆற்றலை மீறிய ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. அது பல வருடங்களுக்கு முன்னால் நாகசாகியில் நிகழ்ந்தது. அதோடு, அந்த சம்பவத்தோடு மற்றொரு யசுகோ சிறியளவிலேயே தொடர்புகொண்டிருந்தாள். அந்த முதலாவது யசுகோவைப் பற்றி என் மகளிடம் நான் சொல்லத் துவங்கிய சிறிது நேரத்திலேயே, எனது மகள் இடைமறித்து குறுக்கீடு செய்தாள்.

”என்னிடம் இதனை முன்பே சொல்லியிருக்கிறீர்கள்” அவள் பொறுமையிழந்து காணப்பட்டாள், “அவளது நினைவாகத்தான் அவளது பெயரை எனக்கும் சூட்டியிருக்கிறீர்கள். அவள் ஒரு வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டவள்”.

“அது உண்மைதான்” என்று பதிலுரைத்தேன். ”பிறப்பதற்கு முன்னால் நீ எனக்கு ஏகப்பட்ட தொல்லைகளைக் கொடுத்தாய். அதனால் அந்த பெயரை உனக்குச் சூட்டுவதன் மூலமாக, என்னிடம் நட்புடன் அமைதியாக நீ பழக ஆரம்பிப்பாய் எனும் நம்பிக்கையில் அப்பெயரைச் சூட்டினேன். ஆனால், விஷயங்கள் அரிதாகவே நமது திட்டத்தின்படி செல்கின்றன”.

யசுகோ புன்னகைத்தாள். ஆனால், நான் தெளிவாகவே பேசியிருந்தேன். முதலாவது யசுகோ நான் அறிந்ததிலேயே அமைதியான, மிருதுவான மனம் கொண்ட பெண்ணாக இருந்தாள். அப்போது நானும் அவளும் மிகச் சிறிய வயதுடையவர்களாக இருந்தோம். பல தருணங்களில் அவளைக் கோபமடையச் செய்ய பலவிதமாக எரிச்சலடையச் செய்யும் போக்குகளை நான் மேற்கொள்வேன். ஆனால், ஒருபோதும் எனக்கு அதில் வெற்றி கிட்டியதில்லை. எனது தீங்கிழைக்கும் நடவடிக்கைகள் பெருகி அதிகரிக்கும்போதும், அவள் வெறுமனே தனக்குள்ளாக அழுதபடியே அங்கிருந்து நகர்ந்து சென்றுவிடுவாள். இருப்பினும் எனது மகள், தனது முன்காலத்தியவளான அவளுடன் சில ஒப்புமைகளைக் கொண்டிருக்கவே செய்தாள். அவள் தனது தாய்க்கு எதிராக நின்றாள் – அதீத கோபத்துடனும், உறுதியாக மறுக்கும்படியான தலை அசைவுடனும். அவளுக்கு முதலாவது யசுகோவைப் பற்றி அறிந்துகொள்வதில் பெரியளவில் ஆர்வமில்லை என்பதை என்னால் பார்க்க முடிந்தது. அதனால், விவரித்துக்கொண்டிருந்த அவ்விஷயத்தை அப்படியே நிறுத்திவிட்டேன்.

நாங்கள் சிறிய சிறிய விஷயங்களைப் பற்றித்தான் உரையாடினோம். அதற்குள்ளாக அந்த மூன்று தினங்களும் கடந்திருந்தது. சில தருணங்களில், நான் அவளுக்கு சோர்வூட்டுகிறேன் என்று அவள் கருதுகிறாள் என்பதும், எனக்கு சிறியளவிலேயே செய்வதற்கு வேலைகள் இருக்கிறது என்ற அவளது கருத்தாலும், நான் தொந்திரவுக்கு உள்ளாகவே செய்தேன். அவள் என்னை மாலைவேளையில் ஒரு ஓவியப்பயிற்சி வகுப்பில் இணைந்து ஓவியம் வரையும்படி திரும்பத் திரும்ப அறிவுறுத்தியபடியே இருந்தாள். அவளது அந்த ஆலோசனைக்கு நன்றி தெரிவித்து, அதைப் பற்றி சிந்திக்கிறேன் என்றும் கூறினேன். நாங்கள் இருவரும் நல்லவிதமான மனப்பதிவுகளோடே விடைபெற்றோம். அவளது வருங்கால கணவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதிலும் எனக்குப் பெருமிதமாக இருந்தது.

எனக்கு யசுகோவை விட வயதில் மூத்த மற்றுமொரு மகளும் இருக்கிறாள். அவளுக்கு, எனது கணவர் இறந்து வெகு காலத்திற்கு முன்பு அல்லாமல், நான்கு வருடங்களுக்கு முன்பாகத்தான் திருமணம் நடைபெற்றது. விரைவிலேயே பாட்டியாவதற்கான நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எனது இரண்டு மகள்களுக்குமே ஜப்பானைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. ஜப்பானிய வார்த்தைகளில் கூட ஒன்றிரண்டைத்தான் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் நாகசாகி என்பது உலக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு இடம், தங்களது தாய் பிறந்த நிலம், ஒரு சமயத்தில் வெடிகுண்டு வீசயெறிப்பட்ட சிறிய வெளி. அதைத்தாண்டி அவர்கள் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? இங்கிலாந்துதான் இப்போது அவர்களது தாய்நிலமாயிற்றே. எனது வயதை அவர்கள் அடையும்போது, பக்கத்து வீட்டில் வசிக்கின்ற சாம்பல் நிறமேறிய தலைகேசத்தையுடைய பெண்ணுடன் நான் அவ்வப்போது தோட்டப்பகுதியில் புதர்களுக்கிடையில் நின்று பேசுவதைப்போல, அவர்கள் இருவரும் சந்தித்து உரையாடுவார்கள். அவர்கள் இருவருமே அவ்வப்போது வருவதும், என்னை சந்தித்துச் செல்வதுமாக இருக்கிறார்கள்.

யசுகோ என்னைச் சந்தித்துவிட்டுச் சென்ற நாளிலிருந்து மூன்று மாதங்கள் கடந்திருக்கிறது. எனினும், அவளிடத்தில் ’முதலாவது யசுகோ’வைப் பற்றி உரையாடுவதிலிருந்தே அவ்வப்போது பல நினைவுகள் என்னுள் எழுந்தபடியே இருக்கின்றன. தொடர்ச்சியாக எனது கடந்தகால சிந்தனைகள் மனதில் திரள்கின்றன. குறிப்பாகக் கடந்த சில வாரங்களில் இவ்வெண்ணம் அதிகரித்தபடியே இருக்கிறது. எனது நினைவுகளை மீண்டும் மீண்டும் புரட்டியபடியே இருக்கிறேன்.

நாகசாகியில் அமைந்திருந்த நாககாவா (Nakagawa) மாவட்டத்தில், நானும் யசுகோவும் ஒன்றாகவே வளர்ந்து வந்தோம். முன்பே குறிப்பிட்டபடி அவள் மிகவும் அமைதியானவள். பெரும்பாலும் வீட்டின் உள்ளேயே இருக்க விரும்பும் குணமுடையவள். தவிர்க்கவே இயலாமல், அன்றைய போர் சூழல் அவளுக்கு ஏற்றுக்கொள்வதற்கு மிகமிகக் கடினமானதாக இருந்தது. அவளால் தொழிற்கூட வாழ்க்கையோடு பொருந்திப்போகவும் முடியாது. ஏனெனில், அங்கிருக்கும் வலிமையான பெண்கள் அவளைக் கிண்டல் செய்வார்கள். அதோடு, அவள் தனது சகோதரனையும் போரின் துவக்க தினங்களில் பறிகொடுத்திருந்தாள். இது எல்லாவற்றையும்விட துன்பகரமாக அமைந்துவிட்டது. அவளுடைய தாயும் மூன்று வருடங்களுக்கு முன்பாகத்தான் கான்சர் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாள். அவளது துயர விதி மேலும் மேலும் தொடர்ந்தபடியே இருந்தது. போர் சூழலால், அவளது வருங்கால கணவனும் பசிபிக் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தான். அதனால், அப்பகுதியிலிருந்து வரவே வராத கடிதங்களுக்காக அவள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போர்க்காலத்தில், எனது வீட்டின் அருகிலிருந்த தனது தந்தையின் வீட்டில் வசித்திருந்தாள். அவ்வீட்டின் அருகாமையிலேயே ஒரு முறுக்கிய மலைப்பாதை நகரத்தின் திசையிலிருந்த செயலற்ற எரிமலைகளை நோக்கி ஊர்ந்து செல்லும். வாரக்கணக்கில் தனக்கான செய்திகள் எதுவும் வராதிருந்த நிலையில், மிகவும் சோர்வுற்றவளாக மனதளவில் தளர்ந்து போயிருந்த அவளை என் நினைவில் மீட்டெடுத்துப் பார்க்கிறேன். அவள் கடிதங்கள் வராமலிருப்பதன் காரணமாக, அவைகள் ஒருவேளை தொலைந்துபோயிருக்கலாம் என்றும், தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் என்னிடத்தில் புகாருரைத்துக் கொண்டிருப்பாள். வேறு வகையிலான சாத்தியங்களை ஆராய்ந்து பார்ப்பதில் இருந்து அவள் மீது எனக்கு எழுந்திருந்த பரிதாப உணர்ச்சியால் தடுத்துக்கொண்டிருந்தேன்.

அவளுடைய தந்தையை நான் சிறுவயதிலிருந்தே மிகவும் விருப்பத்துடன் நேசித்துவந்தேன். மகளைப்போலவே, அவரிடத்திலும் மிருதுவான சாந்த உணர்வு குடிகொண்டிருந்தது. அவரது கண்களைச் சுற்றி கனிவு படிந்திருக்கும். குறிப்பிடத்தகுந்த வகையில், கினோஷிட்டா-சானிடம் எதுவோ ஒன்று பேரமைதியுடனும், தனது இருப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் பண்பும் அவரிடத்தில் இருந்தது. அதோடு, அவருடன் இருக்கும் தருணங்களை எப்போதும் நான் விரும்பவே செய்தேன்.

ஆமாம். இந்த நினைவுகள் எல்லாம் காலத்தில் முன்னெப்போதோ நிகழ்ந்தவைதான். அவைகளில் பலவற்றையும் நான் மறந்திருக்கலாம். எனினும், சொல்லத்தக்க வகையில் தெளிவுற சில சம்பவங்கள் என் ஞாபகங்களில் இருந்து பிதுங்கி எழவே செய்கின்றன. காலத்தில் அவையெல்லாம் எப்போது நிகழ்ந்தன எனத் தேதிவாரியாக என்னால் நினைக்க முடியவில்லை என்றாலும், போர் நடந்த கடைசி வருடத்தில் அந்த கரடுமுரடான வறண்ட கோடைக்காலத்தில்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. யசுகோவின் தந்தையுடன் எனக்கு ஒருநாளில் உண்டான உரையாடலைக், கிட்டத்தட்ட மிகத் துலக்கமாக என்னால் உணர முடிகிறது. நான் வேலைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த தருணத்தில்தான் அந்த உரையாடல் நடந்தது. நாககாவாவுக்கு வெளியில் இருக்கும் ஒரு பாலத்தில்தான், நானும், அவரும், வேறு சிலரும் நகரத்துக்கு எங்களை அழைத்துச் செல்லக்கூடிய ட்ராம் வண்டிகளை எதிர்பார்த்துக் காத்திருப்போம். போருக்கு முந்தைய காலத்தில், கினோஷிட்டா சான் பொதுப் பணியாளராக வேலை செய்துகொண்டிருந்தார் என்றாலும், இப்போது நான் வேலை செய்யும் பணியிடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு தொழிற்கூடத்திலேயே அவரும் வேலையில் இருக்கிறார். ஒவ்வொரு நாள் காலையிலும் எனக்கு முன்னதாக, அந்த பாலத்துக்கு வந்துவிடும் அவரது கைகளில், தனது அலுவலக தினத்திற்குரிய சிறிய பிரீஃப்கேஸை இறுக்கமாகப் பிடித்திருப்பார். மிகவும் மெலிந்துகொண்டிருந்த அவர், அதன்பிறகான காலங்களில் கூடுதலாகக் குனிந்து வணங்கவும் வேண்டியிருந்தது. அந்த குறிப்பிட்ட காலையில், தனது வழக்கமான புன்னகையுடனும், தலைவணங்கி என்னை வரவேற்றார். பிறகு யசுகோவுக்கு இறுதியாக ஒரு கடிதம் நகமுரா-சானிடமிருந்து வந்துவிட்டது என்றார்.

“அவன் தெரிவித்திருக்கிறான். நலமாக இருக்கிறானாம். எனினும், அந்தப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கிறதாம். அவன் உடல் முழுக்க பூச்சியினங்கள் கடித்துக் காயப்படுத்தியிருக்கிறதாம். அதோடு, போரில் நாம் தோற்றுவிட்டோமாம்”.

“அப்படியா! அப்புறம் என்ன சொன்னீர்கள் கினோஷிட்டா-சான்? நாம் போரில் தோற்றுவிட்டோமா?”.

அவர் தனது தலையை லேசாக அசைத்தார். “நம்மால் இப்போது எதிர்பார்க்கக்கூடியதெல்லாம், அவன் பத்திரமாக வீட்டை அடைந்துவிட வேண்டும் என்பதைத்தான். அதோடு, இழப்பதற்கு இனி எதுவும் இல்லாத நிலையில், சண்டைகளும் தொடர்ந்தபடியே இருக்கக்கூடாது”.

”கடிதம் ஒருவழியாக வந்துவிட்டதால் யசுகோ-சானுக்கு கொஞ்சம் மன அமைதி ஏற்பட்டிருக்கும்”.

”ஆமாம். எனினும், அந்த கடிதம் ஏழு வாரங்கள் பழமையானது. அதனால் அவள் தொடர்ந்து கவலையில்தான் ஆழ்ந்திருக்கிறாள். அத்தகைய கவலை உங்களுக்கும் இருப்பதுபோல தெரிகிறதே மிச்சிக்கோ-சான். அல்லது நீங்களும் ரகசியமாக யாருக்காவது காத்திருக்கிறீர்களா?”

“இல்லை” நான் சிரித்தேன். “அப்படி யாரும் எனக்கு இல்லை. ஆனால், யசுகோ-சான் குறித்துத்தான் கவலையில் இருக்கிறேன்”.

”ஆமாம். நிச்சயமாக. நீ எப்போதுமே நகமுரா-சானின் மீது பெரும் அக்கறையோடுதான் இருக்கிறாய்”.

“உறுதியாகவே நான் நகமுரா-சானின் மீது அக்கறையுடையவளாகவே இருக்கிறேன் என்றாலும், அது குறிப்பாக யசுகோ-சானின் நிமித்தத்தில்தான்”.

அவர் லேசாகக் குனிந்து, “அவளின் பொருட்டு நீ கவலையில் ஆழ்ந்திருப்பது, உனக்கு நன்மையானதுதான்” என்றார்.

காலைக் காற்றை நன்கு ஆழமாக உள்ளுக்கு இழுத்துக்கொண்டார். வானம் இத்தகைய கோடைக்கால காலைப்பொழுதுகளில் வெளிர் நீல நிறத்தில்தான் காட்சியளிக்கிறது. எனினும் முழு நாளும் அப்படி நீடித்திருப்பதில்லை. அதோடு, அந்த ட்ராம் லைன் முழுக்கவும் காகங்கள் வரிசையாக அமர்ந்திருந்தன. தொலைவில் பார்வைக்குப் புலனாகும் ட்ராமில் இருந்து ஒலிக்கும் முதல் நடுக்கமுறச் செய்யும் ஓசையின்போதே, இவை எல்லாமும் பறந்து காணாமலாகிவிடும்.

“நானும் யசுகோவுக்காக கவலையில் இருக்கிறேன்” அவர் தொடர்ந்தபடியே இருந்தார். பிறகு அவர் எனது பக்கமாகத் திரும்பி ஒரு ஆர்வத்தில் இருக்கும் பார்வையுடன், “நாம் இருவருமே தன்னலமின்றி கவலையில் ஆழ்ந்திருக்க வேண்டும். அப்படித்தானே? மிச்சிக்கோ-சான்” என்றார்.

ஒருவேளை அவரது கண்களுக்கு நான் போலியாக இருப்பதுபோல தோன்றியிருக்கலாம். “நீங்கள் என்ன உணர்த்த விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு உறுதியில்லை, கினோஷிட்டா-சான்”.

அவர் தொடர்ந்து அதே ஆர்வத்திலிருக்கும் பார்வையுடன் என்னைக் கவனித்துவிட்டு, தலையை மேலுயர்த்தி, தனது கைகளை முன்னால் நீட்டி, “ஆஹ். அதோ நமது ட்ராம் வருகிறது” என்றார்.

ட்ராம் எங்கள் பாலத்தை நெருங்கி வரும் சமயத்தில் எப்போதுமே ஜனத்திரளால் நிரம்பியிருக்கும். அதனால், வேறுவழியே இல்லாமல் நாங்கள் நின்ற நிலையிலேயேதான் பயணிக்க வேண்டியிருக்கும்.

“கினோஷிட்டா-சான்” ட்ராம் மீண்டும் நகரத் துவங்கியிருந்த சமயத்தில் அவரை அழைத்தேன். ”அவர்கள் இருவரது இணையால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன். அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க, நீங்கள் அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டியிருந்தது”.

“அது உண்மைதான்” அவர் சிரித்தார். ”நகமுராவின் குடும்பத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது சற்றே சிரமமாகத்தான் இருந்தது. ஆனால், மிச்சிகோ-சான் என்னுடைய அந்த கடுமையான போராட்டத்தால் உனக்கு மகிழ்ச்சி உண்டாகியிருக்காது என்றே நினைக்கிறேன்”

“அடக் கடவுளே. நீங்கள் என்னதான் சொல்ல முயற்சிக்கிறீர்கள், கினோஷிட்டா-சான்?”

அவர் மறுபடியும் சிரித்தார். “ஒருவேளை நாம் மூடி மறைத்துக்கொண்டிருக்கும் ரகசியங்களை அவிழ்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். ஆமாம். உண்மையாகவே நகமுரா, யசுகோவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீ விரும்பினாய். ஆனால், உன்னில் ஒரு பகுதி அவர்கள் இருவரும் சேர்ந்துவிடக்கூடாது என்றும் நினைத்தது. உண்மைதானே?”

அவருக்கு மறுப்பு கூறும்படியான வார்த்தைகளை அப்போது தேடினேனா என்று என்னால் நினைவுகூர முடியவில்லை. அப்படி இருக்கவில்லை என்றே கருதுகிறேன். ட்ராமுக்கு வெளியில் பின்னகர்ந்து செல்லும் கட்டிடங்களில் எனது பார்வையை அத்தகைய சில விகாரமான தருணங்களுக்கு செலுத்தியிருந்தேன் என்பது மட்டும் என் ஞாபகத்தில் திரள்கிறது. ஆனால், அதன்பிறகும் அவரது குரல் எனது காதில் விழுந்தது, “அதோடு, எனக்கும் அவ்வகையில்தான் இருந்தது”. எனது விரிந்த பார்வையில் உண்டான ஆச்சர்யத்தைக் கண்டு, அவர் சிரித்தார்.

“ஓஹ். என்னை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். எனக்கு நகமுராவையும் ரொம்பவே பிடிக்கும்”. அவர் மறுபடியும் சிரித்தார். ஆனால், இந்தமுறை அவரது சிரிப்பு ரொம்பவும் அவலட்சணமாகத் தோற்றமளித்தது.

“ஆனால், அவர் உங்களைத் தனிமையில் ஆழ்த்திவிடுவார்” மெதுவாக அவரிடம் சொன்னேன்.

திரும்பவும் சிரித்த அவர், சற்றே முன்னால் குனிந்து, “வயதான ஆண்கள் சுயநலமிக்கவர்களாக இருக்கக்கூடாது. அவர் திரும்பிப் பாதுகாப்புடன் வர வேண்டும் என்று எனது இதயப்பூர்வமாக பிரார்த்திக்கின்றேன்”.

“நானும்தான்”

”நீயொரு நல்ல பெண் மிச்சிக்கோ-சான். உனது குணத்திற்கு மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமைய வேண்டும். உண்மையிலேயே, நீ ரகசியமாக யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லையா?”

இந்தமுறை என்னால் மறுப்புகூற முடிந்தது. விரைவிலேயே அவர் இறங்க வேண்டிய நிலையம் வந்துவிட்டது. தாழ்மையாகக் குனிந்து என்னிடம் விடைபெற்ற அவர், தனது பிரீஃப்கேஸை மேலும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டார். அந்த கோடையின் மற்றைய அனைத்து காலைவேளைகளையும் போலவே, அன்றைக்கும் அந்தச் சிறிய வளைந்த உருவம் என் கண்ணிலிருந்து விலகி பெருந்திரளாக நகர்ந்துகொண்டிருந்த மக்கள்கூட்டத்திற்குள் புகுந்து காணாமலானது.

அந்த நாட்களில் ஒரு மாலையில் – ஒருவேளை அது அன்றைய அதே மாலையாகவும் இருக்கலாம் – பொருட்களை அடுக்கி வைப்பதற்காக நான் தொழிற்கூடத்திலேயே சிறிது நேரம் தங்கிவிட்டேன். கீழ்தளத்தில் நான் வேலையில் ஆழ்ந்திருந்தபோது, கூரையின் மீது ஆலங்கட்டி மழை கொட்டுவதைப்போல, பெரியளவில் சலசலப்பு என் காதில் விழுந்தது. அது எனக்கு விநோதமாகப்பட்டது என்றாலும், எனது வேலையைத் தொடர்ந்தபடியே இருந்தேன். எனினும், மேல்தளத்திற்கு வந்தபோது, எனது குழப்பங்கள் மேலும் அதிகரிக்கவே செய்தன. அந்த அறையின் தொலைவில் இருந்த ஒருமுனையில் சுவரில் இருந்த ஜன்னலின் வழியே சூரிய அஸ்தமன ஒளி ஊடுருவி உள் நுழைந்தது கொண்டிருந்தது. ஆக, அது நிச்சயமாக ஆலங்கட்டி மழையாக இருந்திருக்க முடியாது.

அலுவலக வேலையை முடித்துவிட்டு, ட்ராமில் நான் மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதுதான், இரண்டு ஆண்கள் இவ்விஷயமாகப் பேசிக் கொண்டிருந்ததை என்னால் கேட்க முடிந்தது. ஒரு தனித்த விமானம் வானில் தென்பட்டதாம். காற்றைக் கிழித்துக்கொண்டு வானில் அலைந்தாடிய அந்த விமானம் நகரத்தின் கிழக்குப் பகுதியில் ஏதோவொரு இடத்தில் ஒற்றை வெடிகுண்டு ஒன்றை வீசியதாம். அதிர்ஷ்டவசமாக, ஒருவரும் அதனால் காயமடையவில்லையாம். புரிந்துகொள்ள முடியாத ஒரு செயல்திட்டம் என்று எனக்கு அருகில் நின்றிருந்த மற்றொரு மனிதன் தெரிவித்தான். அமெரிக்கர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? ஒற்றை விமானத்தை அனுப்பி ஒரேயொரு வெடிகுண்டை வீசச் செய்வது? எல்லாவற்றையும் விட இன்னமும் போரில் தோல்வி அடைந்திருக்கவில்லையே என்றார். அந்த மனிதர் ட்ராமில் இருந்து இறங்கியபோது, அவரது சட்டையின் கைப்பகுதியில் இருந்த துணி காலியாகவும், மடங்கியும் இருந்தது. அதாவது அவருக்கு கை இருக்கவில்லை. எனது உடல் அதிர்ந்தது. ட்ராமில் காலியாக இருந்த ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்துகொண்டு, வெளியில் வெளிச்சமிட்டுக்கொண்டிருந்த விளக்குகளைப் பார்க்கையிலும், எனதுடலில் உண்டாகிய சில்லிட்ட உணர்வு தொடர்ச்சியாக எழுந்தடங்கியபடியே இருந்தது.

நானும் யசுகோவும் அதுபற்றி உரையாடினோம். நான் ஆலங்கட்டி மழையென்று தப்பர்த்தம் செய்துகொண்ட, காற்றில் அலைந்தாடிய அந்த விமானங்களைப் பற்றி. ஷிங்காங்கோவில் இருக்கும் தோட்டமொன்றில் நாங்கள் உலவிக்கொண்டிருந்த சமயத்தில் எங்களுக்கிடையில் இது சம்பந்தமான உரையாடல் நடந்தது. வெடிகுண்டு வீசியெறியப்பட்ட இடத்துக்கு மிக அண்மையில் யசுகோ இருந்திருக்கிறாள். எனினும், அவளால் ஆலங்கட்டி மழையின் ஓசையைக் கேட்க முடியாதிருந்திருக்கிறது.

“யாருக்கும் காயமேற்படவில்லை போலத் தெரிகிறது” என்றே அவளிடம்.

”நான் வேறுவிதமான கேள்வியுற்றேன் மிச்சிக்கோ-சான். ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். நான்கு வயதே நிரம்பிய சிறுவன்”.

“ஒரு வெடிகுண்டும், ஒரு சிறுவனும் போய்விட்டார்கள்” என்றேன் தகவல் அடுக்கும் விதமாக.

”யாருக்கும் எதுவும் ஆகவில்லை” அவள் தொடர்ந்தாள். “பெரியளவில் சேதாரங்கள் கூட இல்லை. ஆனால், அந்த நான்கு வயது சிறுவனின் தலை தனியே தகர்ந்து பறந்திருக்கிறது. அவனது தாய், தலையற்ற அந்த சிறுவனின் உடலைச் சுமந்துகொண்டு, மருத்துவரைத் தேடித் தெருவில் அலைந்ததாகப் பேசிக்கொள்கிறார்கள்”.

நான் லேசாகச் சிரித்தேன். “என்னால் அதனைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. ஓடுவதும், மருத்துவருக்காக உரக்கக் குரலெழுப்பிக் கத்துவதும்”.

யசுகோவும் சிரித்தாள் என்றாலும், அவளது கண்களில் துயரமும் வெறுமையுணர்ச்சியும் படர்ந்திருந்தது. ”ஆமாம். அவள் விரைவிலேயே ஒரு மருத்துவரை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என்று நினைத்திருப்பாள். அல்லது அவளது நான்கு வயது மகன் இறந்துவிடலாம்”.

தோட்டங்கள் மாலைவேளையில் தமது மிகச் சிறந்த தோற்றப் பொலிவுடன் காட்சிக்குப் புலனாகின்றன. அப்போது விஷயங்கள் அனைத்தும் மிகவும் தன்மையாக இருந்தது. மேற்குப்புறத்தில் வானம் சிவப்பு நிறத்தில் தகித்துக்கொண்டிருந்தது. கோடைக்காலத்துப் பூச்சிகள் அந்த இருள் வெளியில் அங்குமிங்கும் பறந்தலைகின்றன.

”உனக்குத் தெரியுமா?” யசுகோ கேட்டாள். “எனது வாழ்க்கையில் நான் மொத்தமாகவே இரண்டே இரண்டு முறைதான் நாகசாகிக்கு வெளியில் சென்றிருக்கிறேன். அதுவும் ஃபுகுவோக்காவில் இருக்கும் எனது அத்தையின் வீட்டிற்கு. அதனை நினைத்துப் பார். உலகம் முழுக்க போர் நடந்துகொண்டிருக்க, நானோ இரண்டே இரண்டு முறை மட்டுமே நாகசாகியை விட்டு வெளியேறி இருக்கிறேன்”

“நீயொரு போர் வீரராக ஆகியிருக்க வேண்டும் என விரும்புகிறாயா? யசுகோ-சான்”.

அவள் சிரித்தாள். அவளது சிரிப்பு எப்போதுமே குழைவாகவும், மன்னிப்பு கோரும் விதமாகவுமே இருக்கும். ”எனக்குத் தெரியும் அது எனக்குப் பொருந்தாது என்று. முடியும் என்று என்னால் பாசாங்கு செய்ய முடியாது. தொழிற்சாலையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு எப்போதுமே தான் ஒரு ஆணாகப் பிறந்திருக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கிறது. அதன் மூலமாக, அவள் வெளியில் சென்று சண்டைகளில் பங்கெடுத்துக்கொள்ள முடியும் என்று சொல்கிறாள். ஆனால், என்னால் இந்த சண்டை போர் போன்ற விஷயங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அவை எங்கோ வெகு தொலைவில் வேறொரு உலகத்தில் நடக்கின்றன. சமயங்களில் நாகுமுரா எங்கு சென்றிருக்கிறான் என்பதையே நான் மறந்துவிடுகிறேன். வெளியில் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், அதனை விரைந்து முடித்துவிட்டு மீண்டும் என்னிடம் திரும்பி வந்துவிட வேண்டும் என்று நான் நினைக்கத் துவங்கிவிடுகிறேன். அது தவறுதான் என்பது தெரியும், என்றாலும், வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போரை பல சமயங்களில் நான் சுலபமாகவே மறந்துவிடுகிறேன்”.

“குண்டுகள் விழுவதும், உணவுத் தட்டுப்பாடு நிலவும் தருணங்களையும் தவிர”

“சமயத்தில் நான் வெடிகுண்டுகள் குறித்தும் ஆச்சரியப்படுகிறேன். அவை விநோதமான ஓரிடத்திலிருந்து, போர் நடந்துகொண்டிருக்கும் வெளியிலிருந்து கீழே விழுந்துகொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கின்றன. ஆனால் நீ சொல்வது சரிதான். வெடிகுண்டு தொடர்ச்சியாகக் கீழே விழுந்தபடியே இருக்கிறது. நமது சிறிய உயிர்களைப் பறித்துக்கொண்டுவிடுகிறது. அதனால், போர் நடக்கிறது என்றுதான் அர்த்தம்”.

அந்த மாலை நடையை நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம்.  தொழிற்கூடத்தில் அன்றைய நெடிய பொழுதைக் கடத்திவிட்டு, மாலையில் இதம்தரும் தோட்டங்களில் ஒருவருக்குத் துணையாக மற்றவர் சிறியளவில் அளாவலாவது எங்கள் இருவருக்குமே ஆசுவாசம் அளிப்பதாக இருந்தது. சில நாட்களில், அன்றைய தினப்பொழுது என்னை முழுமையாக வறண்டு போகச் செய்யாதிருக்குமானால், யசுகோவின் வீட்டிற்கு நான் செல்வேன். அப்படிப்பட்ட ஒரு நாளில், திட்டமிட்டிருந்ததை விடவும், மிக நெடிய நேரம் நாங்கள் தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தோம். அவளுடைய வீட்டை நாங்கள் அடையும்போது, இருள் தீவிரகதியில் அடர்த்தியாகியிருந்தது.

வாசலில் நின்று, எனது ஷூவை கழற்றிக்கொண்டிருக்கும் தருணத்தில் வீட்டின் உள்ளிருந்து யசுகோவின் குரல் கேள்வியெழுப்பும் விதமாக உயர்ந்திருந்தது என்னால் துலக்கமாக நினைக்க முடிகிறது. ”ஏன் அப்பா, நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?”. நான் உள்ளே நுழைந்தபோது மேஜை வெளியில் இழுக்கப்பட்டிருப்பதையும், அதோடு குஷன்கள் பொருத்தமான இடங்களில் இருந்ததையும் என்னால் பார்க்க முடிந்தது. அங்கு கினோஷிட்டா-சான் தளர்ச்சியான ஆடைகளை உடுத்திக்கொண்டு தேனீர் குடுவையுடன் பரபரப்பாகக்  காட்சியளித்தார்.

“ஓஹ். அப்பா, நீங்கள் எங்களுக்காக சமைத்துக்கொண்டிருக்கிறீர்கள்” யசுகோ சொன்னாள்.

”திரும்பி வரும்போது நீங்கள் இருவரும் ரொம்பவும் சோர்வாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். உள்ளே வந்து உட்கார் மிச்சிக்கோ-சான். வெளியில் என்னவொரு வெப்ப சலனம் மிகுந்த தினமாக இருந்தது”.

நான் குனிந்து வணங்கிவிட்டு, அவர் சமைத்து வைத்திருக்கும் அரிசியின் அளவைப் பார்த்துச் சிரித்தபடியே கீழே அமர்ந்தேன். அவர் சமைத்திருக்கும் உணவை ஆறு நபர்கள் சாப்பிடலாம்.

“இந்த மீனை இன்று மாலையில் ஒஷிமாவிடமிருந்து, அவனது கடையை கடந்து சென்ற தருணத்தில் வாங்கினேன். அவன் சூரிய வெப்பத்தை தனது உடலில் வாங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் சிறிது நேரம் உரையாடினோம்”.

“அப்படியா அப்பா, உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்றாள் யசுமோ தனது கைகளால் வாயை மூடியபடியே.

நாங்கள் எங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, கினோஷிட்டா-சான் எங்களுக்காகத் தயாரித்து வைத்திருக்கின்ற உணவை சாப்பிடுவதற்காக அமர்ந்தோம். இரண்டு மூன்று வாய் சோற்று கவளத்தை விழுங்கியிருந்த தருணத்தில்தான், யசுமோ என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர முடிந்தது. அதன்பிறகு, அவளது தந்தையும் சந்தேகத்திற்குரிய பார்வையுடன் ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்ததை நான் கவனித்தேன். யசுகோ மீண்டும் தனது கையால் வாயை மூடியபடியே வெடித்துச் சிரித்தாள். அந்த மீன் சாப்பிடுவதற்கு உகந்ததாக இல்லாமல், அதிகளவில் உப்பேறிப் போயிருந்தது. ஆயினும் நான் அவரை அவமானப்படுத்த நினைக்கவில்லை. எனினும் எனக்கும் சிரிப்பு அரும்பியது. எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த கினோஷிட்டா-சான் தன் கையில் வைத்திருந்த சாப் ஸ்டிக்கை (சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குச்சி) கீழே வைத்துவிட்டார்.

“நான் மீன் உணவு தயாரித்து நீண்ட நாட்கள் ஆகிறது” என்றார் அவர்.

இப்போது எந்தவிதமான சஞ்சலமோ, கட்டுப்பாடுகளோ இல்லாமல் எங்களால் இயல்பாகச் சிரிக்க முடிந்தது. தனது இருக்கையிலிருந்து எழுந்த யசுகோ, எங்களால் சில நிமிடங்கள் காத்திருக்க முடியுமென்றால், தானே விரைவில் சமைத்துக்கொண்டு வருவதாகச் சொன்னாள். சிரித்தபடியே அவ்வறையில் இருந்து சமையலறை நோக்கி நடந்து சென்றாள்.

“எங்களைப் பற்றிய கனிவான நினைவு உங்களுக்கு இருந்தது குறித்து, மகிழ்ச்சி, கினோஷிட்டா-சான்”, சிரித்தபடியே அவரைப் பார்த்து சொன்னேன். அவர் குனிந்து எனக்கு மேலும் கொஞ்சம் தேநீரை ஊற்றினார்.

“ஒன்றிரண்டு வாய் தேநீர்கூட தாகத்தைப் போக்குவதில் பெரும் பயன் செய்துவிடும்” என்று குறிப்பிட்டார். “நான் மீன் உணவு சமைத்து நீண்ட நாட்கள் ஆகிறது”.

அந்த இரவு அதிக வெப்பமேற்படுத்துவதாக இருந்ததால், அவர் எழுந்து கண்களுக்கு தோட்டம் தெரியும்படியாக சறுக்கு ஜன்னலை இழுத்துத் திறந்துவிட்டார். அவர் அங்கேயே சில நிமிடங்களுக்கு, எனக்கு முதுகு காட்டியபடி, தனது தளர்வான பேண்ட்டில் கைகளை நுழைந்த நிலையில் நின்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக, நானும் அவருக்கருகில் சென்றேன். ஆழ்ந்த சிந்தனையில், வெளியில் வியாபித்திருக்கும் முழு இருளின் மீது அவரது பார்வை நிலைக்கொத்தி இருந்தது. பூச்சிகள் தங்களது இரவு நேர ரீங்காரங்களைத் தோட்டத்தின் மறுகோடியில் இருந்த மரங்களினூடாக கசியவிட்டுக் கொண்டிருந்தன.

“நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள், கினோஷிட்டோ-சான்?”

“பெண்களான உங்களால் அவமானப்படுத்தப்படும் சூழல் எத்தகையது என்பதை நினைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்களை பாழ்படுத்திவிட்டு, சுயமாக எங்களைப் பசியாற்றிக்கொள்ளும்படியாக தனியே விட்டுவிடுகிறீர்கள். யசுகோவுக்குத் திருமணம் ஆகிவிட்டால், யனாகி சமைத்துக்கொடுக்கும் உணவைத்தான் நான் சாப்பிட வேண்டியிருக்கும். அதோடு, அவனது உணவு மிக மிகக் கொடுமையானதாக இருக்கும்”

“ஓஹ். கினோஷிட்டா-சான். நீங்கள் எனக்கு ஏமாற்றமளிக்கிறீர்கள். நீங்கள் எங்களைப் பற்றி நினைக்கவே இல்லை. சுயமாக உணவு சமைக்க பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தீர்கள்”

அவர் எனது திசையில் திரும்பிப் பணிவாகக் குனிந்தார். அவரது கண்கள் சிரிப்பில் சுருங்கியிருந்தது.

“ஏனைய உலகத்தைப் போலவே, நானும் போர் முடிவடையும் சூழலுக்காக என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்”

நான் சிரித்தேன். அதோடு, அவரது கண்களின் சிரிப்பும் மேலும் ஆழமடைந்திருந்தது.

“நீங்கள் போரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களா கினோஷிட்டா-சான்?”

“செய்வதற்கு வேறு என்ன வேலை இருக்கிறது?”

“ஆனால், அது உங்களுக்குத் தனிமையைத்தான் அளிக்கப் போகிறது”

“மகிழ்ச்சியையும் கூட”

”தனிமையையும், மகிழ்ச்சியையும்” நான் சலித்துக்கொண்டேன். ”மீன் சமைக்கும்போது குறைவாக உப்பு போட வேண்டும் என்பதை நீங்கள் மறவாமல் இருக்க வேண்டும்”.

”நன்றி. மிச்சிக்கோ-சான். நீ அடிக்கடி இங்கு வந்து எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். யசுமோ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்”.

மிகச் சரியாக அந்த தருணத்தில் அறைக்குள் நுழைந்த யசுமோ, நாங்கள் அவளைப் பற்றி என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்று வினவினாள்.

“நீ எப்படி என்னிடம் மோசமாக நடந்துகொள்கிறாய் என்று மிச்சிக்கோ-சானிடம் சொல்லிக்கொண்டு இருந்தேன்” அவளது தந்தை அவளிடத்தில் தெரிவித்தார். மீண்டும் நாங்கள் சுற்றி அமர்ந்து பேசத் துவங்கிவிட்டோம்.

அந்த கோடைக்காலம் முழுவதிலும் அவர்களது வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துகொண்டிருந்தேன். அங்கு நிகழ்ந்த எங்களது அனைத்து உரையாடலையும் என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும், அந்த வீட்டில் எனக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்ததையும், அங்கு சௌகரியமாக என்னால் இருக்க முடிந்ததையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். ஆனால், இதே நாட்கள்தான் கிட்டத்தட்ட அவளுடன் வாய்த்தகராறுகளில் ஈடுபடவும் நான் தயாராகிக் கொண்டிருந்த நேரமாக இருந்தது. அது வெளிப்படையான வாய்த்தகராறாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்றாலும், எங்களுக்குள்ளாக அமுங்கிக் கிடந்தபடியே, எல்லாவற்றின் அடியிலும், நாங்கள் பேசுகின்ற அனைத்து விஷயங்களின் மீதும் அசௌகர்யமான விதத்தில் சாயத்தைப் பூசியபடியே இருக்கத்தான் செய்தது. இவ்விஷயத்தில் அதிக ஆர்வத்தில் அப்போது இருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் முரணாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும்விட, அதில் எனது தவறு சிறிய அளவிலேயே இருந்தது. அது ஒரு இரவில் நானும் யசுமோவும் ஒன்றாக ஒரு ட்ராமில் இருந்து இறங்கியபோது தொடங்கியது. நாங்கள் எங்கே இருந்தோம் என்று நான் நினைவுகூரவில்லை. அது ரொம்பவும் தாமதமான வேளையாக இருக்க வேண்டும். மலைப்பாதையிலிருந்து இருவரும் இறங்கிக்கொண்டிருக்க, தொலைவில் வீற்றிருக்கும் நகரத்தின் ஒளி எங்களுக்குக் கீழாக விழுந்துகொண்டிருந்தது. யதார்த்தமாக நாங்கள் இருவரும் போர் பற்றியும் நாகமுரா-சான் பற்றியும் பேசியபடி இருந்தோம். அப்போது திடீரென யாசுகோ சொன்னாள்:

“சமயங்களில் மிச்சிக்கோ, எதை வேண்டுவது என்று எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் அவர் திரும்பி வரவேண்டாம் என்றுகூட நான் விரும்புகிறேன்

எனக்கு அவளது வார்த்தைகள் அதிர்ச்சியாக இருந்தது. என்றாலும் நான் எதுவும் பேசவில்லை. யசுகோ தனது பார்வையை நிலத்தின் மீது அந்த நடையின்போது பதித்திருந்தாள். அவளாகவே மீண்டும் தொடர்ந்தாள்: “நான் முடிவு செய்துவிட்டேன். நானும் நாகமுரா-சானும் தந்தை உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் திருமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன்”.

“ஏன்? ஆனால் ஏன்?”

“எங்களுடன் சேர்ந்து வாழ்வது பற்றிய பேச்சிற்கு அவர் செவி சாய்ப்பதில்லை. எங்களுக்கு சுமையாக இருப்பது அவரது தன்மானத்தை பாதித்துவிடும் என்று அவர் தெரிவிக்கிறார்”.

“அப்படியானால், நீங்கள் பல வருடங்களுக்குக் காத்திருக்க வேண்டியிருக்கும். தோராயமாக இருபது வருடங்களாவது ஆகும்”

”அப்பா ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார். கடவுளுக்கு நன்றி. ஆனால், நாகமுரா-சான் காத்திருக்க வேண்டியிருக்கும்”

”அவன் அப்படிக் காத்திருப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்னவாகும்?”

“அப்படியெனில், இருவரும் பிரிந்துவிட வேண்டியதுதான். என்னால் தந்தையை தனியே விட முடியாது”. அவள் விகாரமாக இருமினாள். “அவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டியதுதான்”.

“ஆனால், எப்படி இவ்வளவு முட்டாள்தனமாக உன்னையே நீ தியாகம் செய்யத் துணிந்திருக்கிறாய்? அப்பா தன்வழியே தன்னை பார்த்துக்கொள்வார்”.

”உனக்கு அது புரியவில்லையா? நான் அவரை விட்டுச் சென்றுவிட்டால், அவரது வாழ்க்கையில் வேறெதுவுமே எஞ்சியிருக்காது. அம்மாவும் இறந்துவிட்டாள், அண்ணன் ஜிரோவும் இறந்துவிட்டான். நான் ஒருத்திதான் இப்போது அவருக்கு இருக்கிறேன்”

“ஆனால், யசுகோ அது அவருடைய பிரச்சனை. உன்னுடையதல்ல. தனது இருப்பிற்கான முழுமையான அர்த்தமாக உன்னை மட்டுமே கருதுவதற்கு அவருக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. தனது வாழ்க்கையில் அவர் வேறெதையும் தேடிக்கொண்டிருக்கவில்லை என்றால், அதற்காக அவரைதான் நாம் குற்றம் சுமத்த வேண்டும்”

“ஒஹ். ஆனால், அவர் ஏராளமானவற்றை இழந்துவிட்டார். அவரது நண்பர்கள், குடும்பம், தொழில் வாழ்க்கை..”

“அதற்கப்பாலும், அவர் வேறொன்றைத் தேடிக் கண்டடைய வேண்டும். உன்னையே சார்ந்து இருப்பதன் மூலமாக, உனது வாழ்க்கையை பலியாக்கிவிடக்கூடாது”.

ஒருவேளை எனது குரலில் கடுமை ஏறியிருக்கலாம். யசுகோ அப்போது பேச்சற்று ஊமையாகிவிட்டாள். மலையின் அடிவாரம் வரையிலும் எதுவும் பேசாமல் அமைதியாகவே நடந்துகொண்டிருந்தோம். ஒருமுறை அவளிடம், “என்னை நினைக்கிறாய்?” என்று கேட்டேன். அவள் அமைதியாக, “என்னால் எனது தந்தையை விட முடியாது, மிச்சிக்கோ-சான்” என்றாள்.

அத்தகைய குரூர உரையாடல்களினூடாக இவ்விரவு நாங்கள் பிரிந்து சென்றிருக்க வேண்டும். அவளுடனான அடுத்த சில சந்திப்புகளில் கிட்டத்தட்ட முன்பின் பரீட்சயமில்லாத அன்னியர்கள் போல எங்களுக்கிடையிலான உரையாடல்கள் சுரத்தில்லாமல் நிகழ்ந்தன. அவளது திருமணம் பற்றிய பேச்சை அதிலிருந்து மிக நீண்ட காலத்திற்கு நாங்கள் வெளிப்படையாக விவாதிக்கவே இல்லை.

ஒரு காலையில், வழக்கம்போல பாலத்தின் அருகே கினோஷிட்டா-சானுடன் ட்ராமுக்காக காத்திருந்தபோது, அவரது வலது கையில் தடிமனான மாவுக்கட்டு போடப்பட்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவரிடம் அவர் என்ன செய்ததால், அப்படிப்பட்ட காயம் அவரது கையில் ஏற்பட்டது என்று கேட்டேன். அதற்கு அவர் அடைந்த தயக்கத்தைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. லேசாக இளித்த அவர், சிறிய விபத்து ஒன்றினால் அது ஏற்பட்டுவிட்டது என்றார். அவரது பதில் என்னைக் குழப்பமடையச் செய்தது. அதோடு, ட்ராமில் நாங்கள் ஏறியதும் எனது பார்வையிலிருந்து தனது கையை மறைக்க அவர் செய்துகொண்டிருந்த எத்தனங்களைப் பார்த்தபோது எனது குழப்பம் மேலும் அதிகரித்தது. அதனால், தொடர்ந்து கேள்வி கேட்கும் எனது ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

எனினும், மறுமுறை யசுகோவை நான் சந்தித்தபோது, அவளது தந்தையின் கையிலிருந்த மாவுக்கட்டு எனக்கு நினைவு வந்தது. ஷிங்கோகோ தோட்டத்திற்கு நாங்கள் மறுபடியும் சென்றிருந்தோம். அங்கு நாங்கள் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காக ஒரு சிறிய மர மேஜையில் அமர்ந்தோம். அவளுடைய தந்தையைப்போலவே, அந்த மாவுக்கட்டை குறித்து நான் எழுப்பிய கேள்வி அவளை சங்கடத்தில் ஆழ்த்தியதை என்னால் உணர முடிந்தது. இந்தமுறை, எதுவானாலும், இந்த விவகாரத்தை அப்படி அனாயாசமாக விட்டுவிடுவதில்லை என்பதில் உறுதியுடன் இருந்தேன். அதனைத் தொடர்ந்து யசுகோ சொன்னாள்:

”அது என்னுடைய தவறுதான். சிதறிக்கிடந்த கண்ணாடிக் குவளையின் பாகங்களைக் கையில் எடுக்க முயன்றபோது, அவர் தனது கையை வெட்டிக்கொண்டார். பார், நான்தான் அந்த கண்ணாடி குவளையை ஸ்டவ்வின் மீது வீசி எறிந்தேன்”.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போது என்ன சொன்னேன் என்பதை இப்போது நினைக்க முடியவில்லை.

“அப்பா அங்கு கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார்” அவர் தொடர்ந்தாள். “நான் உணவு தயார் செய்து வைத்திருந்தேன். எனினும், அவர் தனக்குப் பசி எடுக்கவில்லை என்றும், உறங்கச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்” யசுகோ தளர்வாக சிரித்தாள்.

“அதனால் நீ அவர் மீது கோபமடைந்து, கண்ணாடிக் குவளையை உடைத்துவிட்டாயா?” என்னால் இன்னமும் இதனை நம்ப முடியவில்லை.

“எனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், அதனை வீசி எறிந்துவிட்டேன். எனது செய்கை கேலிக்குரியதாக இருக்கிறதா?” யாரோ அவளைக் கோபத்துடன் திட்டுவதைப்போல, அவள் தனது இறுக மூடிய கைகளின் மீது பார்வையை பதித்தாள். ”அது ரொம்பவும் பழைய கண்ணாடி குடுவையும்கூட. அம்மா அதனை உபயோகப்படுத்தினாள்”.

மேலும் கலவரமடைந்த குரலில் எதையோ நான் செய்திருக்கவேண்டும். யசுகோ அதன்பிறகு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். இனியும் அந்த சம்பவம் தொடர்பாக அவள் எதுவும் பேசமாட்டாள் என்று நான் நினைத்தேன். எனினும், அவள் தொடர்ந்து, “மற்றொரு இரவில் என்னிடம் நீ தெரிவித்திருந்த விஷயங்களை அப்போது அசைபோட்டுப் பார்த்தேன். நீ தெரிவித்திருந்த அனைத்தும் சரிதான் என்பதுபோலவும், அதனால் அவர் மீது நான் ஆத்திரத்தில் இருந்தேன் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. நான் கோபத்தில் இருந்தேன், ஏனெனில் அவர் என்னை இத்தகையதொரு நெருக்கடியான சூழலில் வைத்திருக்கிறார், ஏனெனில் அவருக்கு என்னைத் தவிர வேறேதும் இல்லாததால் அதோடு, அனைத்தும் அவருடைய பிழையாக இருப்பதால், அதோடு அவர் பயனற்றவராகவும், பிரயோஜனமற்றவராகத் தோன்றியதால் அவர் மீது ஆத்திரமடைந்து கண்ணாடிக் குவளையைத் தூக்கி வீசினேன்”. அவள் மீண்டும் சிரித்தாள்.

அவளுக்கு நான் பதில் சொல்லவில்லை. அப்போது பொருத்தமான பதிலைத் தேடிக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அதோடு, அப்போதுதான் அது நிகழ்ந்தது, அந்த விநோதமான விஷயம், அவளை நான் ஏறெடுத்துப் பார்த்த அந்த தருணத்தில்தான் அது நிகழ்ந்தது. சூரியன் வானலையின் பின்னால் மறைந்துவிட்டது, அதன்பிறகு, நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில், மங்கி மறைந்துகொண்டிருக்கும் அந்த சூரிய வெளிச்சத்தில் இனி எதையும் செய்ய முடியாது என்பதை உறுதியாக உணர்ந்தேன். யசுகோ, தனது முழுவதும் சிதைந்துபோயிருந்த விகாரமான வெளிப்பாட்டைப் பிரதிபலிக்கும் முகத்துடன் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவளது கண்கள் பதற்றத்தில் ஆழ்ந்திருப்பதைப்போல உக்கிரமாக என்னை நோக்கியது. அவளது தாடை நடு நடுங்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த அவளது பற்கள் மூட முடியாமல் திணறின. அலாரத்தின் ஓரழுகை அந்த நொடியில் என்னைத் தூண்டிவிட்டது. உடனடியாக அவளது தோள்களைப் பற்றிக்கொண்டேன். தீவிரமாக அவளை உலுக்கி எடுத்தேன்.

“என்ன ஆயிற்று?” அவள் கேட்டாள். ”மிச்சிக்கோ, என்ன பிரச்சனை?”

அதன்பிறகு அவளை மீண்டும் பார்த்தேன். அந்த குழப்பமுற்றிருந்த அகோர உருவம் கலைந்து, இப்போது சாத்வீகமும் பேரமைதியும் குடியேறியிருக்கும் யசுகோவின் முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. யசுகோவின் முகம் மீண்டும் பழையபடியே திரும்பிவிட்டது.

“மிச்சிக்கோ, ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்?”

“ஆனால், சில நொடிகளுக்கு முன்னால்தான் உனது தோற்றம்…. ரொம்பவும் துயருற்றிருந்தது” நான் சிரித்தேன். எனது குழம்பிய மனநிலையின் பிரதிபலிப்பாக அப்போது சிரித்தேன் என்று நினைக்கிறேன். ”நான் நினைத்தேன், உனக்கு ஏதோ ஒரு வகையிலான வலிப்பு நோய் ஏற்பட்டிருக்கிறது என்று”

“மிச்சிக்கோ இரக்கமற்றவளாக நடந்துகொள்ளாதே. நான் அழகானவள் அல்ல என்பது எனக்குத் தெரியும்”

அந்த உரையாடலை அப்படியே நிறுத்திவிடுவது நல்லது என்று தோன்றியதால், மேற்கொண்டு எதுவும் பேசாமல் சிரித்தேன். ஆனால், அந்த அனுபவம் என்னை வெலவெலத்துப்போகச் செய்துவிட்டது. யசுகோ தனது தொழிற்கூடத்தைப் பற்றி பேசத் துவங்கியிருந்தாள். என்னால் சரிவர முழுமையான பிரக்ஞையோடு அதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. பிறகு, அவள் இதனைத் தெரிவித்தது என் காதில் விழுந்தது:

“போர் முடிவடைந்ததற்குப் பிறகு, நாள் முழுவதும் தொழிற்கூடத்தில் வேலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு இருக்காது. அந்த நாளை நான் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அப்போது நீ என்ன செய்வாய் மிச்சிக்கோ? மீண்டும் பாடம் நடத்தத் துவங்கிவிடுவாயா?”

“அப்படித்தான் நினைக்கிறேன்”

“அதோடு ஓவியமும் வரைவாயா? இன்னமும் அந்த திறனை நீ கைவிட்டிருக்க மாட்டாய் என்று கருதுகிறேன்”

“ஆமாம்” சிரித்தபடியே நான் சொன்னேன். ”மீண்டும் ஓவியம் வரையும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன். உன்னைப் பற்றி என்ன யசுமோ? நீ என்ன செய்வாய்?”

“ஒரு குடும்பத்தை உருவாக்கவே ஆசைப்படுகிறேன். எனக்குக் குழந்தைகளை நிரம்பவும் பிடிக்கும்”

”அவ்வளவுதானா?”

“அது அதிகம், மிச்சிக்கோ. அது மட்டும்தான் எனக்கு வேண்டும். குழந்தைகள் வைத்துக்கொள்வதும், வெடிகுண்டுகளால் தூக்கிச் செல்ல முடியாதபடி அவர்களை அரவணைத்துப் பாதுகாப்பதும்”

மாலை உலர்ந்து இருள் முழு ஊரின் மீதும் வியாபித்திருந்த அந்த தருணத்தில் நாங்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். ”அப்படியானால், திருமணம் செய்துகொள்ள வேண்டாம் எனும் உனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டிருக்கிறாய்?” நான் கேட்டேன்.

“எனக்குத் தெரியவில்லை. ஓஹ். எனக்குத் தெரியவில்லை”. சோர்வுடன் புன்னகைத்தாள். அதன்பிறகு மீண்டும் தனது கைகளைப் பார்த்தபடியே, வலிந்து வெளிக்கொணரப்பட்ட குரலில் பேசினாள்: “எனக்குத் தெரியும், நீயும் நாகமுரா-சானும் நெருக்கமாகப் பழகியவர்கள் என்று. நீ பொறாமைப்படாமல் இருக்கிறாய் என்பது உனது நற்பண்பையே காண்பிக்கிறது”.

நாங்கள் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். இறுதியில் மெளனத்தைக் கலைத்து நான் சொன்னேன்: ”உனக்கு எனது வாழ்த்துக்கள், யசுகோ. ஆனால், நான் உன்னைப் பார்த்து பொறாமைப்படவில்லை. அதற்குள்ளாகத் திருமணம் செய்துகொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. மறுபடியும் ஓவியம் வரைவதற்கான பலத்தைப் பெற்றிருப்பதும், பாடம் நடத்துவதற்கான சக்தியைப் பெற்றிருப்பதும் இவையெல்லாம்தான் எனக்கு இப்போது ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்தவை”.

“அப்படியானால் எப்போதும் நீ ஒரு குடும்பத்தில் ஐக்கியமாக மாட்டாயா?”

“ஒருவேளை, ஒருநாள் அப்படியும் நடக்கலாம். ஆனால், எனக்கு வேறு சில விஷயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தெரிகின்றன”.

“போர் சீக்கிரத்தில் முடிய வேண்டும் என்று விரும்புகிறேன்” யசுகோ தெரிவித்தாள்.

நாங்கள் மேலும் சில நிமிடங்களுக்கு உரையாடினோம் என்று நினைக்கிறேன். ஒருவேளை நாங்கள் சில முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து பேசியிருக்கலாம். ஆனாலும், எனக்கு நினைவில்லை. அமர்ந்த நிலையிலிருந்து எழுந்து, இருவரும் வீடு திரும்ப ஆயத்தமானோம். சில நிமிடங்களுக்கு முன்னால், அவளது முகத்தில் நான் கண்ட பிரேதத்தன்மையை நினைத்துப் பார்த்தேன். எனதுடலில் மீண்டும் அதிர்வுகள் உண்டாகத் துவங்கின. எனினும், அவளது முகத்தில் முன்பு நான் பார்த்த விகாரத்தன்மையின் சுவடுகள் எதுவும் இப்போது இல்லை.

“என்ன குழப்பம் மிச்சிக்கோ?” அவளுடைய முகத்தை ஊன்றி துழாவிய எனது பார்வையை உணர்ந்து கேட்டாள். ” உடல் நிலை சரியில்லாதவளைப்போலத் தெரிகிறாயே?”

“சோர்வாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்”, நான் சொன்னேன். “கடந்த சில தினங்களாகவே மிக அரிதாகவே நான் தூங்கினேன்”.

எனது உடல்நிலை குறித்து ஆறுதல் அளிக்கும் விதமாகப் பேசினாள். எனினும், முரண்பாடாக எனக்கு சிரிப்புதான் வந்தது. அன்றைய மாலையில், அவளுடைய வீட்டிற்கு நான் செல்லவில்லை. அங்கேயே, அந்த தோட்டத்திலேயே இருவருமாகப் பிரிந்து அவரவர் வழியில் சென்றுவிட்டோம்.

அதன்பிறகு யசுகோவை நான் பார்க்கவேயில்லை. அடுத்த நாளில்தான் வெடிகுண்டு விழுந்தது. வானம் விநோத கோலம் பூண்டிருந்தது. மேகங்கள் விசாலமாக இருந்தன. அதோடு, எங்கும் நெருப்பு புகைந்துகொண்டிருந்தது. யசுகோ இறந்துவிட்டாள். அவளுடைய தந்தையும் கூடத்தான். வேறு பலரும் இறந்தார்கள். தெருவோரத்தில் மீன்களை விற்பவன், எனது கூந்தலை வெட்டிவிடும் பெண், செய்தித்தாள்களைக் காலையில் வீசியெறியும் சிறுவன். மேலும் பலரும் இறந்துவிட்டார்கள். முந்தைய இரவில் ஷிங்கோக்கோ தோட்டத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எவரிடத்திலும் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. அதிலிருந்து ஏழு மாதங்கள் கடந்திருந்த நிலையில்தான் நாகமுரா-சான் சண்டையில் கொல்லப்பட்டான் என்பதை தெரிந்துகொண்டேன். நாகசாகியில் வெடிகுண்டு விழுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக அவனது மரணம் நேர்ந்திருக்கிறது.

அந்த வெடிகுண்டால் எனக்கு பெரியளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்றளவும் சுமந்து வைத்திருக்கும் அளவுக்குத் தழும்புகளும் இல்லை. எனது குழந்தைகள் ஊனமுற்றவர்களாக அல்லாமல், நல்ல ஆரோக்கியத்துடனேயே பிறந்தார்கள். அந்த வெடிகுண்டை வீசியவர்கள் மீதுகூட எனக்கு எவ்விதமான கசப்புணர்ச்சியும் இல்லை. ஏனெனில், அது போரின் பகுதியாக நிகழ்ந்தது. போர் எப்போதுமே விசித்திரமான ஒரு விவகாரம்தான். பலவும் புரிந்துகொள்ளக்கூடிய சாத்தியங்கள் இல்லாதவைகள்தான்.

ஒரு வருடத்திற்கு முன்பு, யசுகோ – அதாவது எனது மகள் – என்னைச் சந்திக்க வந்தபோது, அணு ஆயுதங்களுக்கு எதிரான விண்ணப்பம் ஒன்றில் எனது கையொப்பம் வாங்குவதற்காக எடுத்துவந்தாள். அவள் ஏராளமான தரவுகளையும், கணக்குவழக்குகளையும் குறிப்பிட்டபடியே இருந்தாள். ஆனால் நாகசாகி அவளது விவரணையில் இடம்பெறவில்லை. நான் நாகசாகியில் இருந்தேன் என்பதையே அவள் மறந்திருக்கக்கூடும் என்று கணித்தேன். எனது கையொப்பத்தை அளித்ததும், அதனைப் பெற்றுக்கொண்டு அவள் எங்கோ சென்றாள். விண்ணப்பம் என்ன விளைவை ஏற்பட்டது என்பதை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருவேளை, அது உலகத்தாரிடம் சேர்க்கப்பட்டு, அதுபற்றிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகத்துக்குள் நுழைந்திருக்கலாம். ஒருவேளை அது சில மாற்றங்களைக் கூட நிகழ்த்தியிருக்கலாம். யாருக்குத் தெரியும்? அதுபோன்ற விவகாரங்களில் எனக்கு செய்வதற்கு சொற்பமானவையே எஞ்சியிருக்கின்றன.

இந்த ஆங்கிலேய வீட்டில் தனியே வாழ்ந்து வருவதுதான் எனக்கு பொருந்துவதாக இருக்கிறது. இது மிகவும் அமைதியான ஒரு குடியிருப்புப் பகுதி. அதோடு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் மென்மையாக நடந்துகொள்கிறவர்களாக இருக்கிறார்கள். ஒரு நெடிய சாம்பல் நிற தலைகேசமுடைய பெண்ணொருத்தி பக்கத்தில் வீட்டில் வசிக்கிறாள். அவளது கணவர் வங்கியில் வேலை செய்வதாக அவள் தெரிவித்தாள். தனது தோட்டத்தில் அவள் சுற்றி வருவதை, எனது வீட்டின் ஜன்னல் வழியாக அவ்வப்போது என்னால் பார்க்க முடிகிறது. சமீபத்தில்தான் மரங்களிலிருந்து ஆப்பிள்கள் கீழே தொடர்ச்சியாக விழுந்துகொண்டிருக்கின்றன. அவள் கீழே விழுகின்ற ஆப்பிள்களை பரிசோதித்துவிட்டு, தனது கூடையில் கொண்டுபோய் போடுவாள். ஒருமுறை புதர்களுக்கிடையில் நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, அவசர அவசரமாக தன் வீட்டினுள் ஓடியவள் கையில் ஒரு பெரிய சைனீஸ் குவளையுடன் திரும்பி வந்தாள். அதில் எழுதப்பட்டிருந்த சில வரிகளை நான் வாசிக்க வேண்டும் என்று விரும்பினாள். பலமுறை அவளிடம் என்னால் சைனீஸ் மொழியை வாசிக்க முடியாது என்று தெரிவித்திருந்தபோதும், அவள் அதனைப் புரிந்துகொள்கிறவளாக இல்லை. தொடர்ச்சியாக, அந்த குவளையின் மீது தழும்புகளைப்போல எழுதப்பட்டிருக்கும் வரிகளை என்னிடம் சுட்டிக்காட்டியபடியே இருப்பாள்.

கோடைக்காலத்தின் துவக்கத்தில், நிகழ்ந்த எனது மகளின் வருகைக்கு முன்பாக, நான் யசுகோவைப் – முதலாவது யசுகோ – பற்றிப் பல வருடங்களாக நினைத்திருக்கவில்லை. ஆனால், அதன்பிறகு அவ்வப்போது எனது மனதில் அவள் குறித்த ஞாபகங்கள் குறுக்கிட்டபடியே இருக்கின்றன. அவள் குறித்த எனது ஞாபகங்கள் வலி தருவதாகவோ, பழைய நினைவுகளைக் கிளர்த்தி பரவசமூட்டுவதாகவோ இருக்கவில்லை. மாறாக, அவள் குறித்த நினைவு புரிந்துகொள்ளவியலாத வகையில் தொந்திரவூட்டக்கூடிய துயரத்தையும், விநோதமான, அதே சமயத்தில் என்னால் இன்னது என சரியாக விளக்க முடியாத வகையில் பெரும் சோகவுணர்ச்சியையும் எனக்குக் கொடுக்கிறது. பலமுறை ஞாபகத்தில் பளிச்சிடுகின்ற அவளது முகத்தைப் பார்க்கிறேன். அன்றைய இரவில் நான் பார்த்த அதே பிரேத உருவில் அது துலங்குகிறது. ஆனால், அணுகுண்டு குறித்தான ஒரு முன்னறிவிப்பாக மட்டுமல்லாமல், யசுகோவும் அந்த தருணத்தில் ஏதோவொன்றை பார்த்திருக்கிறாள் என்றே நினைக்கிறேன் – அவளுடைய முகத்திலேயே அது பிரதிபலித்தது. பல சமயங்களில் இப்போதும் அவள் வாழ்ந்துகொண்டிருந்தால் என்ன செய்வாள் என்று யோசிப்பதுண்டு.

அவளுடைய தந்தை குறித்தும் நான் யோசிக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன். அப்போது அவரைப் பற்றி எதிர்மறையான ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியதற்காக வெட்கப்படுகிறேன். அவரை சூழ்ந்திருந்த நிலைகளுக்கு, அவரையே பொறுப்பாளியாக்கி, எப்படி நாம் குற்றம்சாட்ட முடியும்? அத்தகைய விஷயங்கள் எல்லாம் நமது கட்டுப்பாடுகளுக்குள் அடங்காதது. அதோடு அப்படி குற்றம் சுமத்துவதில் ஒரு பயனும் இல்லை.

இப்போதெல்லாம், பலமணி நேரங்களை எனது மேசையில் அமர்ந்தபடியே வாசிப்பிற்காக நான் உட்படுத்தி வருகிறேன். அது எனது ஆங்கில அறிவுக்கு நல்லது என்பதோடு, என்றாவது ஒருநாள் நான் ஜப்பான் திரும்பினால், ஒருவேளை அங்கு நான் ஆங்கில பாடம் நடத்துவதற்கு உபயோகப்படக்கூடும். எனினும், உடனடியாக அங்கு செல்வதற்கான எந்தவொரு திட்டமும் என்னிடத்தில் இல்லை. இங்கு நிலவும் பனிப்பொழிவையும், குளிரையும் கடந்தும், இந்த நாட்டின் மீதான எனது நேசம் வளர்ந்திருக்கிறது. அதோடு, எனது மகள்களும் இந்த நாட்டில்தான் வசிக்கிறார்கள். மீண்டும் ஓவியம் வரைவதற்கான முயற்சிகளில் இறங்கலாம் என்றும் சில நேரங்களில் நினைத்திருக்கிறேன். அதற்காக உண்மையாகவே தூரிகைகளையும், வண்ணங்களையும் வாங்குவதற்கு நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்தேன். இப்படி படம் வரைய வேண்டும் என்கிற பரபரப்பும் அவசரமும் என்னை உந்தி முன்செலுத்திப் பல வருடங்கள் ஆகிறது. ஆனாலும், அது என்னிடம் திரும்பி வந்துவிடும் என்பதில் அதிகப்படியான உறுதி என்னிடம் இருக்கிறது.


காசுவோ இஷிகுரோ

தமிழில்: ராம் முரளி

 

[tds_info]

ஆசிரியர் குறிப்பு:

காசுவோ இஷிகுரோ 1954ம் வருடத்தில் நாகசாகியில் பிறந்தார் என்றாலும், தனது ஐந்தாவது வயதிலேயே இங்கிலாந்துக்குத் தனது பெற்றோருடன் குடிபெயர்ந்து வந்துவிட்டார். அவரது படைப்புகளில் ஜப்பானிய பார்வையிலான ஆங்கிலேயே சமுதாயமும், அந்நிய நிலவெளியில் தங்களது அடையாளங்களை இழந்து தவிக்கும் அவர்களது அகரீதியிலான போராட்டங்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன. அதுபோலவே, இரண்டாம் உலகப்போரின்போது அணுகுண்டு வீசி தகர்க்கப்பட்ட தனது தாய் நிலத்தின் துயரம் மிகுந்த ஞாபகங்களும் படர்ந்திருக்கின்றன. The Remains of the day எனும் நாவலுக்காக 1989ம் வருடத்தின் புக்கர் பரிசு இஷிகுரோவுக்கு அளிக்கப்பட்டது. அந்த நாவல் அந்தோனி ஹாப்கின்ஸின் நடிப்பில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.  அதேபோல, 2005ம் வருடத்தில் வெளியான இவரது Never let me go எனும் நாவலை, அவ்வருடத்தின் தலை சிறந்த நாவலாக டைம் பத்திரிகை தேர்வு செய்திருந்தது. ஸ்வீடிஷ் அகாதெமியால் ”உணர்ச்சி பிரவாகமெடுக்கும் தனது நாவல்களின் மூலமாக, உலகைப் பிணைத்திருக்கும் மாயக் கயிற்றினடியில் ஓலமிட்டுக்கொண்டிருக்கும் இருட்டுலகத்தை வெளிக்கொணர்ந்தவர்” என மதிப்பிடப்பட்டு, இவருக்கு 2017ம் வருடத்தில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. காசுவோ இஷிகுரோவின் A Strange and Sometimes sadness சிறுகதையின் மொழியாக்கமே இது.

மொழிபெயர்ப்பு : ராம் முரளி – தீவிர இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர்.

[/tds_info]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.