ஒரு ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம்


சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கன்மா ஆளுகைக்கு உட்பட்ட வெந்நீரூற்று நகரத்தின் சிறிய ஜப்பானிய பாணி விடுதி ஒன்றில் முதிய குரங்கு ஒன்றைச் சந்தித்தேன். அதுவொரு பொலிவிழந்த, இன்னும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட பாழடைந்த விடுதி. அங்கே நான் ஓர் இரவு தங்கவேண்டியதாகி விட்டது.

நான் மனம் போன போக்கில் செய்த பயணத்தில், ரயிலை விட்டு இறங்கி வெந்நீரூற்று நகரத்தை அடையும்போது, இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அது இலையுதிர் குளிர்காலம் முடியும் பருவமாதலால், சூரியன் வெகு நேரத்திற்கு முன்பே அஸ்தமனமாகி இருந்தது. மலைகள் சூழ்ந்த அப்பகுதி முழுவதும் அடர்நீலக் கருமை வண்ணத்தால் போர்த்தப்பட்டிருந்தது. உடலைத் துளைக்கும் குளிர்காற்று முகடுகளிலிருந்து வீசிக் கொண்டிருந்தது. வீதியெங்கும் இரைந்து கிடந்த பெரிய பெரிய இலைகள் காற்றில் சரசரத்தபடி இருந்தன.

நான் தங்குவதற்கு ஓர் இடம் தேடி, நகரின் மையப்பகுதி முழுவதும் அலைந்தேன். இரவுணவு நேரம் கடந்துவிட்டதால், நல்ல நிலையிலிருந்த எந்த விடுதியும் புதிய விருந்தினர்களை அனுமதிக்கவில்லை. நான் ஐந்து அல்லது ஆறு இடங்களில் தேடிப் பார்த்தும், எதுவும் வேலைக்காகவில்லை. இறுதியில், நகரத்துக்கு வெளியே, தனித்துவிடப்பட்ட இடத்திலிருந்த ஒரு விடுதியில் என்னை அனுமதிக்கச் சம்மதித்தனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழத் தயாராக இருந்த பாழடைந்த, மட்டமான இடமாக அந்த விடுதி தோன்றியது. அது கட்டப்பட்டு பல ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் பழமையைப் பறைசாற்றக் கூடிய எந்தவொரு பொருளும் அங்கு இல்லை. ஆங்காங்கே ஒட்டுப் போட்டது போன்று குத்துச்சாந்தினால் சுவரின் சில இடங்களில் அரைகுறை மராமத்துப் பணியும், கோணல்மாணலான இணைப்புச் சட்டகங்களும் தென்பட்டன. அந்தக் கட்டிடம் அடுத்த நிலநடுக்கம் வரும் வரைகூட தாங்குமா என்று சந்தேகமாக இருந்தது. என்னால் முடிந்தது, நான் அங்கிருக்கும்போது எந்த நிலநடுக்கமும் வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்வது மட்டும்தான்.

அந்த விடுதியில் இரவுணவு பரிமாறப்படுவதில்லை, ஆனால் காலை உணவு உண்டு. ஓர் இரவு தங்குவதற்கான தொகையும் சொற்பமானதாகவே இருந்தது. நுழைவாயிலை அடுத்திருந்த, வரவேற்பு மேஜை காலியாக இருந்தது. அதன் பின், தலை முழுவதும் வழுக்கையான முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது புருவத்து முடிகள்கூட முழுவதும் கொட்டிப் போயிருந்தன. நான் ஓர் இரவு தங்குவதற்கான தொகையை அவர் முன்பணமாகப் பெற்றுக்கொண்டார். புருவங்கள் இல்லாமல் அவரது பெரிய கண்கள் விநோதமாகப் பிரகாசிப்பது போலத் தோன்றியது. அவருக்கு அருகே தரையில் கிடந்த மெத்தையின் மேல், அவரைப் போன்றே முதிய, பழுப்பு நிறப் பூனை ஒன்று தூங்கியபடி இருந்தது. அதன் மூக்கில் ஏதேனும் கோளாறு இருந்திருக்க வேண்டும், அது மிகவும் சத்தமாகக் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தது. எந்தவொரு பூனையும் அப்படி குறட்டைவிட்டு நான் அதுவரைக் கேட்டதில்லை. அவ்வப்போது, அதன் குறட்டை ஒலி தாளத்திலிருந்து விலகி ஒலிப்பது போலவும் தோன்றியது. அந்த விடுதியிலிருந்த ஒவ்வொரு பொருளும் பழையதாகவும், உடைந்து விழப்போவதைப் போலவுமே இருந்தன.

எனக்கு ஒதுக்கப்பட்ட அறை அடைசல் நிறைந்ததாக, ஒட்டுத் தையல் மெத்தை போடப்பட்ட வைப்பறை போல இருந்தது. சுவர் விளக்கு மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் நைந்த விரிப்புக்குக் கீழே தரை கிறீச்சிடும் சத்தம் அச்சமூட்டுவதாக இருந்தது. ஆனால் இரவு வெகு நேரமாகிவிட்டிருந்தது. அந்த நேரத்தில் தலைக்கு மேல் ஒரு கூரையும், படுத்துக்கொள்வதற்கு ஒரு மெத்தையும் கிடைத்ததே பெரிய விஷயம் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

நான் என் பயண மூட்டையான பெரிய தோள் பையைத் தரையில் வைத்துவிட்டு, மீண்டும் நகரத்திற்குச் சென்றேன். (இப்படிப்பட்ட அறையில் தங்குவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை).  நான் அருகிலிருந்த கோதுமைக் கூலவகை நூடுல்ஸ் கடைக்குச் சென்று, இரவுணவை எளிமையாக முடித்துக் கொண்டேன். வேறு எந்த உணவகமும் திறந்திருக்கவில்லை. ஆதலால் எனக்கு வேறு வழியும் இல்லை. நான் பீரும், சிறிதளவு நொறுக்குத் தீனிகளும், சூடான கோதுமை நூடுல்ஸும் உண்டேன். நூடுல்ஸ் சுமாராகவும், சூப் சூடு குறைவாகவும் இருந்து. ஆனால் அது குறைசொல்லக்கூடிய சூழ்நிலையில்லை. வெறும் வயிற்றுடன் படுப்பதற்கு அது எவ்வளவோ பரவாயில்லை. நூடுல்ஸ் கடையை விட்டு வெளியே வந்ததும், கொஞ்சம் நொறுக்குத் தீனியும், சிறிய விஸ்கி போத்தலும் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குரிய கடைகள் எதுவும் தென்படவில்லை. எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது, இத்தகைய நகரங்களில் இந்நேரத்திற்கு இரவு நேர கண்காட்சி விளையாட்டு அரங்கங்கள் மட்டுமே திறந்திருக்கும். எனவே நான் சென்ற வழியே விடுதிக்குத் திரும்பி, யுகாடோ பாணி தளராடைக்கு மாறி, ஒரு குளியலைப் போடலாம் என்று கீழ்த்தளத்திற்குச் சென்றேன்.

அலங்கோலமான கட்டிடத்தையும், அதிலிருந்த வசதிக் குறைவையும் ஒப்பிடுகையில், விடுதியிலிருந்த வெந்நீரூற்றுக் குளியலகம் வியக்கத்தக்க வகையில் அற்புதமாகவே இருந்தது. நீராவியுடனான நீர், அடர் பச்சை வண்ணத்தில் செறிவு குறையாமல், அதிக நெடியடிக்கும் கந்தக மணத்துடன் இருந்தது. நான் அதுவரை அப்படி ஒரு குளியலை அனுபவித்ததே இல்லை. எலும்புவரை வெதுவெதுப்பு ஊடுறுவுமாறு, என்னை நானே அதில் அமிழ்த்திக் கிடந்தேன். குளியலகத்தில் வேறு ஒருவரும் இல்லை. (அந்த விடுதியில் வேறு விருந்தினர்கள் எவரும் இருந்தார்களா என்றுகூடத் தெரியவில்லை). நான் நிதானமாக, நீண்ட குளியலை அனுபவிக்கத் துவங்கினேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, என் தலைபாரம் எல்லாம் குறைந்தது. பிறகு வெளியே வந்து சிறிது நேரம் அமர்ந்த பின், மீண்டும் குளியல் தொட்டிக்குள் இறங்கினேன். சிதைந்ததைப்போலத் தோற்றம் கொண்ட இந்த விடுதியைத் தேர்ந்தெடுத்தது கூட நல்ல விஷயம் தான் என்று நினைத்துக் கொண்டேன். வேறு பெரிய விடுதியில், கூட்டமான சுற்றுலாப் பயணிகளோடு கூச்சல் சத்தத்தோடு குளிப்பதை விட, இங்கே தனிமையில் அமைதியாகக் குளிப்பது நன்றாக இருந்தது.

நான் மூன்றாம் முறை குளியல் தொட்டியில் மூழ்கி இருக்கும்போது ஒரு குரங்கு ஒலியெழுப்பிய படி, கதவைத் தள்ளித் திறந்தது. அது மெதுவான குரலில், “உள்ளே வரலாமா!” என்று அனுமதி கேட்டபடி வந்தது. அது குரங்குதான் என்று உணர்ந்து கொள்வதற்கே எனக்குச் சிறிது நேரம் பிடித்தது. அவ்வளவு நேரம் அடர்ந்த வெந்நீரில் இருந்ததில், கண்கள் கலங்கி இருந்தன. அதுவும் போக, ஒரு குரங்கு பேசும் என்று நான் எதிர்பார்க்கவுமில்லை. எனவே, நான் கண்ட காட்சியையும், அது ஒரு குரங்குதான் என்பதையும் உடனடியாகத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்தக் குரங்கு தனக்குப் பின்னால் இருந்த கதவைச் சாத்திவிட்டு, கீழே கவிழ்ந்து கிடந்த சிறிய வாளிகளை எடுத்து நேராக வைத்துவிட்டு, ஒரு வெப்பமானியைக் கொண்டு குளியல் நீரின் தட்பவெப்பத்தைச் சோதித்தது. அது கண்களைச் சுருக்கி வெப்பமானியின் அளவை உற்று நோக்கியது, ஒரு புதிய நோய்த் தொற்றுக் கிருமியைத் தனிமைப்படுத்தும் நுண்ணுயிரியல் வல்லுநரைப் போலத் தோன்றியது.

“குளியல் எவ்வாறு இருக்கிறது?” குரங்கு என்னிடம் கேட்டது.

”மிக நன்றாக இருக்கிறது. நன்றி” என்றேன். நீராவியில் எனது குரல் அடர்வாகவும், மெதுவாகவும் எதிரொலித்தது. அது என் குரல் போலில்லாமால், ஏதோ மாயத்தன்மையோடு, அடர்ந்த காட்டிற்குள்ளிருந்து மீள் ஒலிப்பது போலத் தோன்றியது. அந்த எதிரொலி… ஒரு நொடி இருங்கள். ஒரு குரங்கு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறது? அது என்னுடைய மொழியை ஏன் பேசுகிறது?

”நான் உங்களுக்கு முதுகு தேய்த்துவிடலாமா?” குரங்கு இன்னும் மென்மையான குரலில் கேட்டது. அதன் குரல் டூ-வொப் இசைக்குழுவிலுள்ள கனத்த ஆண் குரலைப் போலத் தெளிவாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்தது. நீங்கள் எதிர்பார்ப்பது போல் எதுவுமில்லை. அதன் குரலில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கண்களை மூடிக் கொண்டு கேட்டால், ஒரு சாதாரண மனிதன் பேசுகிறான் என்றுதான் நினைப்பீர்கள்.

“சரி, நன்றி,” என்று பதிலளித்தேன். அதற்கு, யாராவது வந்து எனக்கு முதுகு தேய்த்துவிடுவார்கள் என்று நான் அங்கே காத்துக்கொண்டிருந்தேன் என்று அர்த்தமில்லை. நான் வேண்டாம் என்று கூறினால், ஒரு குரங்கு வந்து உதவி செய்வதை எதிர்க்கிறேன் என்று அது நினைத்துவிடுமோ என்று அச்சம் கொண்டேன். அது அக்குரங்கு எனக்கு அளிக்க விரும்பிய கனிந்த சேவை, உண்மையில் அதன் உணர்வுகளை நான் காயப்படுத்த விரும்பவில்லை. எனவே நான் குளியல் தொட்டியில் இருந்து மெதுவாக எழுந்து, குரங்கிற்கு என் முதுகினைக் காட்டியபடி அருகிலிருந்த சிறிய மரப்பலகை மேடை மீது அமர்ந்தேன்.

குரங்கின் உடம்பில் துணிகள் எதுவுமில்லை. ஒரு குரங்கு அப்படித் தானே இருக்கும், அதனால் அது ஒரு பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. அது சற்று வயதானதாகத் தோன்றியது. அதன் முடியில் நிறைய நரை இருந்தது. அது சிறிய துவாலையை எடுத்து வந்து, அதில் சோப்பைத் தேய்த்து, தன் கையினால் என் முதுகை நன்றாகத் தேய்த்துவிட்டது. அது நன்கு பயிற்சியெடுத்த செயல் போலத் தோன்றியது.

”இந்நாட்கள் மிகவும் குளிர்கின்றன, இல்லையா?” குரங்கு கேட்டது.

”ஆம், சரிதான்.”

”வெகு நாட்களுக்கு முன்பு, இந்த இடம் முழுவதும் பனி போர்த்தப்பட்டு இருந்தது. கூரையில் இருக்கும் பனியை எல்லாம் வாரியெடுக்க வேண்டும். உண்மையில் அது எளிய வேலையல்ல”

பிறகு சிறிது நேரம் மௌனம். அடுத்து நான் கேட்டேன். “நீ மனித மொழியைப் பேசுகிறாயே?”

”ஆம், நான் பேசுவேன்” குரங்கு உற்சாகமாகப் பதிலளித்தது. அது நிறைய முறை அக்கேள்வியை எதிர்கொண்டிருக்க வேண்டும். “நான் எனது சிறு வயதிலிருந்தே, மனிதர்களால் வளர்க்கப்பட்டேன். என்னால் பேச முடிகிறது என்று உணர்வதற்கு முன்பாகவே நான் பேசத் துவங்கியிருந்தேன். நான் என் வாழ்வின் பெரும் நாட்களை டோக்கியோ, ஷினகாவாவில் வசித்துவந்தேன்.

“ஷினகாவாவில் எந்தப் பகுதி?”

”கோடென்யாமாவிற்கு அருகில்.”

”அது அருமையான பகுதி.”

”ஆம் நீங்கள் கூறியது போல, அது வாழ்வதற்கு மிக ரம்மியமான இடம். அருகிலேயே கோடென்யாமா பூங்கா, அங்கிருக்கும் இயற்கைக் காட்சிகளை நான் மிகவும் ரசித்திருந்தேன்.”

இந்த இடத்தில் எங்கள் உரையாடல் இடைநின்றது. குரங்கு அழுத்தமாக என் முதுகைத் தேய்த்துவிட்டபடியே இருந்தது (அது எனக்கு இதமாகவும் இருந்தது). நான் இந்த இடைவெளியில் அந்த குரங்கின் வளர்ப்பு குறித்துப் பகுத்தறிய முற்பட்டேன். ஷினவாகாவில் வளர்க்கப்பட்ட ஒரு குரங்கு? கோடென்யாமா பூங்கா? அதுவும் இவ்வளவு சரளமாகப் பேசும் திறனுடன்? இது எவ்வாறு சாத்தியம்? உண்மையில் இது ஒரு குரங்கு தானா! குரங்கு தான் வேறென்ன!

”நான் மினாடோ-குவில் வசிக்கிறேன்” என்றேன். உண்மையில் அந்தச் சூழ்நிலையில் அது ஓர் அர்த்தமற்ற தகவல்.

“அப்படியானால், நாம் கிட்டத்தட்ட அண்டை வீட்டினர்” குரங்கு நட்பான தொனியில் கூறியது.

“ஷினகாவாவில் உன்னை யார் வளர்த்தார்கள்?” என்று வினவினேன்.

”என் ஆசான் ஒரு கல்லூரி பேராசிரியர். அவர் இயற்பியல் துறை வல்லுநர், டோக்கியோ காகுகேய் பல்கலைக்கழகத்தில் அங்கம் வகித்துவந்தார்.”

”உண்மையில் பெரிய அறிஞர் தான்”

“ஆம், நிச்சயமாக. அவருக்கு இசை என்றால் உயிர். அதுவும் குறிப்பாக ப்ரூக்நெர் மற்றும் ரிச்சர்டு ஸ்ட்ராஸ். அவரால்தான், எனக்கும் இசை மீது ஆர்வம் உண்டானது. எப்போதும் நான் இசையைக் கேட்டு ரசித்தபடியே இருந்தேன். அது என்னவென்று தெரியாமலே இசை ஞானம் கிடைக்கப்பெற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.”

“நீ ப்ரூக்நெர் இசையை ரசிப்பாயா?”

”ஆம், அவரது ஏழாவது சிம்பொனி. அதுவும் அந்த மூன்றாவது அசைவு பிரமாதமாக இருக்கும்.”

”நான் அவ்வப்போது அவரது ஒன்பதாவது சிம்பொனியைக் கேட்பேன்,” என்றபடி சிரித்தேன். மற்றுமொரு அர்த்தமற்ற தகவல்.

“ஆம், உண்மையில் மிக இனிமையான இசை” என்றது குரங்கு.

“உனக்குப் பேராசிரியர்தான் மொழியைக் கற்றுக்கொடுத்தாரா?”

”ஆம், அவருக்குக் குழந்தைகள் இல்லை. சொல்லப்போனால், அதை ஈடுசெய்வதற்காக, அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கண்டிப்புடன்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். அவர் மிகவும் பொறுமைசாலி. ஒழுங்கினை எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக மதித்தவர். அவர் கருத்தார்ந்த மனிதர். துல்லியமான செய்கைகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்துவதே ஞானத்திற்கான உண்மையான பாதை என்பது அவரது விருப்பமான கூற்று. அவரது மனைவி, அமைதியான இனிய பெண்மணி. என் மீது எப்போதும் பரிவு கொண்டவர். அவர்கள் அன்னியோன்னியமான தம்பதியினர். ஒரு வெளியாளிடம் இதைச் சொல்வதற்குத் தயக்கமாகத் தான் இருக்கிறது, இருந்தாலும் சொல்கிறேன், அவர்களது இரவுநேரச் செயல்பாடுகள் மிகத் தீவிரமானதாக இருக்கும்.”

“அப்படியா!” என்றேன்.

குரங்கு என் முதுகினைத் தேய்த்து முடித்துவிட்டது. ”உங்கள் பொறுமைக்கு நன்றி,” என்று கூறித் தலை வணங்கியது.

“நன்றி, உண்மையில் மிக நன்றாக இருந்தது. நீ இந்த விடுதியில் வேலை பார்க்கிறாயா?” என்றேன்.

“ஆம். நான் இங்கே வேலை பார்க்கப் பரிவுடன் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். நிறைய மேல்தட்டு விடுதிகள் ஒரு குரங்கினை எப்போதும் பணியமர்த்த மாட்டார்கள். ஆனால் இங்கே எப்போதும் பணியாட்கள் பற்றாக்குறை உண்டு. நீங்கள் உங்களைப் பயனுள்ளவனாக ஆக்கிக் கொண்டால், நீங்கள் குரங்கு என்றோ வேறு எதுவோ என்றோ யாரும் கவலைப்படப்போவதில்லை. ஒரு குரங்குக்குக் கொடுக்கப்படும் ஊதியமும் குறைவுதான். இங்கே எனக்குப் பெரும்பாலும் வெளியாட்கள் கண்படாத வேலையைத் தருகிறார்கள். குளியல் பகுதியை சீராக்குவது, துடைப்பது இது மாதிரி. பெரும்பான்மையான விருந்தினர்கள், ஒரு குரங்கு வந்து தேநீர் பரிமாறினால் அதிர்ச்சியாகத் தானே செய்வார்கள். சமையலறையிலும் வேலை செய்ய முடியாது ஏனெனில் அது உணவு சுகாதார சட்டத்தின்படி பிரச்சனையாகிவிடும்.

”நீ இங்கே நீண்ட நாட்களாக வேலை செய்கிறாயா?” என்று கேட்டேன்.

“சுமார் மூன்று வருடங்கள் இருக்கும்.”

”ஆனால், இங்கே பணி உறுதியாவதற்குள் பலவிதமான பிரச்சனைகள் எதிர்கொண்டிருப்பாய் இல்லையா?”

குரங்கு வேகமாகத் தலையாட்டியது, “உண்மைதான்.”

நான் தயக்கத்தோடு அடுத்த கேள்வியைக் கேட்டேன், “நீ தவறாக நினைக்கவில்லையென்றால், உன்னுடைய பின்புலம் பற்றி இன்னும் சொல்கிறாயா?”

குரங்கு சற்று சிந்தித்துவிட்டுக் கூறியது, “சரி, சொல்கிறேன். ஆனால் அது நீங்கள் எதிர்பார்ப்பது போல் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம். எனக்குப் பத்து மணிக்கு வேலை முடியும். அதற்குப் பின் உங்கள் அறைக்கு வருகிறேன். அப்போது பேசலாம். உங்களுக்கு அதில் சிரமம் ஏதுமில்லையே?”

“நிச்சயமாக இல்லை,” என்று பதிலளித்தேன். “வரும்போது, கொஞ்சம் பீர் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்”

“புரிந்தது. குளிர்ந்த பீர்… சப்போரோ பீர் கொண்டுவரலாம் தானே.”

“ஆம், கொண்டு வரலாம். நீ பீர் அருந்துவாயா?”

“ம்ம், கொஞ்சம் அருந்துவேன்.”

“அப்படியானால், இரண்டு பெரிய போத்தல்கள் கொண்டு வா.”

”நிச்சயமாக. நான் புரிந்துகொண்டது சரியென்றால், நீங்கள் இரண்டாவது தளத்தில், அரைஸோ அறையில் தங்கியிருக்கிறீர்கள், சரியா?”

“ஆம், சரிதான்” என்றேன்.

“இது விநோதமாக இருக்கிறது, இல்லையா?” குரங்கு சொன்னது,”மலைகளில் இருக்கும் விடுதியின் அறையின் பெயர் ’அரைஸோ’ – அதாவது கரடுமுரடான கடற்கரை.” சொல்லிவிட்டு குரங்கு வாயை மூடிக்கொண்டு சிரித்தது. என் வாழ்வில் ஒரு குரங்கு சிரித்ததை அதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் குரங்குகள் சிரிக்கும் என்றுதான் நினைக்கிறேன், சில சமயங்களில் அவை அழவும் செய்யலாம். அது பேசுவதையே கேட்டுக்கொண்டிருக்கும் போது, சிரிப்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கக் கூடாதுதான்.

“அது சரி, உனக்குப் பெயர் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

”இல்லை, பெயர் என்று எதுவுமில்லை. ஆனால் அனைவரும் என்னை ஷினகாவா குரங்கு என்று அழைப்பார்கள்.”

குரங்கு கண்ணாடிக் கதவை இழுத்துத் திறந்து, திரும்பி மரியாதையாகத் தலை குனிந்து வணக்கம் தெரிவித்துவிட்டு, மெதுவாகக் கதவை சாத்திவிட்டுச் சென்றது.

குரங்கு, ஒரு தட்டில், இரண்டு பெரிய பீர் போத்தல்களை எடுத்துக் கொண்டு, அரைஸோ அறைக்கு வரும் போது, இரவு பத்து மணிக்கு மேல் ஆகியிருந்தது. பீரைத் தவிர, தட்டில் ஒரு திறப்பான், இரண்டு கண்ணாடி குவளைகள், கொஞ்சம் நொறுக்குத் தீனிகள்: காயவைத்து, பதப்படுத்தப்பட்ட கணவாய் மீன், அரிசி பொரியும் கடலையும் கலந்த ’ககிபி’ அடங்கிய பை ஆகியவையும் இருந்தன. மது அருந்துவதற்குத் தோதான நொறுக்குத் தீனிகள். இது மிகவும் விழிப்புடைய குரங்குதான்.

சாம்பல் நிற இறுக்கமான காற்சட்டை, ”ஐ லவ் என்.ஒய்” அச்சுப் பதித்த கனத்த, முழுக்கைச் சட்டை என குரங்கு இப்போது ஆடை அணிந்திருந்தது. அநேகமாக யாரேனும் குழந்தைகள் உபயோகித்துவிட்டுக் கொடுத்த துணிகளாக இருக்கும் அவை.

அறையில் மேஜைகள் ஏதுமில்லை, எனவே மெல்லிய அமரும் மெத்தை போல் இருந்தவற்றில் நாங்கள் அடுத்தடுத்து அமர்ந்து, சுவரில் சாய்ந்துகொண்டோம். குரங்கு திறப்பானைப் பயன்படுத்தி, ஒரு பீர் போத்தலின் மூடியைத் திறந்து, இரண்டு குவளைகளில் ஊற்றியது. மெதுவாக நாங்கள் ஒன்றாகக் குவளைகளைத் தட்டிக் கொண்டு நலம் பாராட்டினோம்.

”மதுவிற்கு நன்றி” என்று கூறியபடி, குரங்கு மகிழ்வாகக் குளிர்ந்த பீரை ஒரு மிடறு விழுங்கியது. நானும் கொஞ்சம் அருந்தினேன். உண்மையில், ஒரு குரங்குடன் அமர்ந்து மதுவருந்துவது கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தோன்றியது. ஆனால் இம்மாதிரி சூழ்நிலையில் அது பழகிவிடும் என்றுதான் தோன்றியது.

”வேலை நேரத்திற்குப் பிறகான பீரை அடித்துக்கொள்ள முடியாது,” முடியடர்ந்த புறங்கையினால் அதன் வாயைத் துடைத்தபடி குரங்கு கூறியது.”ஆனால், ஒரு குரங்குக்கு இப்படி பீர் அருந்தக் கூடிய சந்தர்ப்பம் எப்போதாவது அரிதாகத்தான் அமையும்.”

“நீ இங்கே விடுதியில்தான் வசிக்கிறாயா?”

“ஆம், இங்கே பரண் போன்று ஒரு அறை இருக்கிறது. அங்கே என்னைத் தூங்க அனுமதிக்கிறார்கள். அங்கே அவ்வப்போது எலித் தொல்லை இருக்கும், நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாது. அது ஒன்றும் சொர்க்கம் கிடையாது. ஆனால் நான் ஒரு குரங்கு. எனக்கென்று தூங்குவதற்கு ஒரு படுக்கையும், மூன்று வேளை உணவும் கொடுப்பதற்கு நான் நன்றி சொல்லத் தான் வேண்டும்.”

குரங்கு முதல் குவளை பீரைக் குடித்து முடித்திருந்தது. நான் அதற்கு இன்னொரு குவளை  ஊற்றினேன்.

“உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன்,” அது பணிவாகக் கூறியது.

”நீ மனிதர்களோடு இல்லாமல், உன் இனத்தோடு வாழ்ந்திருக்கிறாயா? அதாவது மற்ற குரங்குகளோடு?” என்று வினவினேன். நான் அதனிடம் நிறைய விஷயங்கள் கேட்க விரும்பினேன்.

”ஆம், பல முறை,” பதிலளிக்கையில் அதன் முகம் லேசாகக் கவிழ்ந்தது போலத் தோன்றியது. அதன் கண்ணோரத்தின் சுருக்கங்களில் மடிப்பு தெரிந்தது. ”பல்வேறு காரணங்களுக்காக, நான் ஷினகாவாவில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டு, தெற்குப் பகுதியில் குரங்குப் பூங்காவிற்காகப் பிரசித்தி பெற்ற தகசாகியாமாவில் விடுவிக்கப்பட்டேன். அங்கே அமைதியாக வாழலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. என்னைத் தவறாக நினைக்காதீர்கள், மற்ற குரங்குகளும் என் உற்ற தோழர்கள் தாம், ஆனால் பேராசிரியர், அவர் மனைவி என்று மனித சுற்றத்தோடே வளர்க்கப்பட்ட என்னால், மற்ற குரங்குகளிடம் என் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்த முடியவில்லை. எங்களுக்குள் மிகச் சில ஒற்றுமைகளே இருந்தன. தொடர்புகொள்வதும் அவ்வளவு சுலபமாக இல்லை. ”நீ மிக வேடிக்கையாகப் பேசுகிறாய்” என்று அவர்கள் என்னை ஏளனம் செய்து கேலி பேசினர். பெண் குரங்குகள் என்னைப் பார்க்கும்போது அவமதிக்கும் தொனியில் இளித்தனர். குரங்குகள் மிக நுட்பமான வேறுபாட்டைக் கூட அறியக் கூடிய கூர் உணர்வாளர்கள். நான் நடந்துகொண்ட விதம் அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது. அது அவர்களுக்கு கோபமூட்டியது, சில நேரங்களில் எரிச்சலையும் உண்டாக்கியது. அங்கிருந்தது எனக்குச் சிரமமாகப் பட்டது. எனவே நான் என் வழியில் செல்லத் துவங்கினேன். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நான் போக்கிரி குரங்கு ஆகிவிட்டேன்.

”நீ மிகவும் தனிமையாக உணர்ந்திருப்பாய் அல்லவா.”

“ஆம், உண்மைதான். என்னைப் பாதுகாக்க ஒருவருமில்லை. உணவுக்காக அலைந்து திரிய வேண்டியிருந்தது. எப்படியோ பிழைத்துக் கிடந்தேன். ஆனால் இது எல்லாவற்றையும் விடக் கொடிய விஷயம், பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் இருந்ததுதான். நான் குரங்குகளுடனும் பேச முடியவில்லை, மனிதர்களுடனும் பேச முடியவில்லை. அத்தகைய ஒதுக்க நிலை, நெஞ்சைப் பிளக்கக்கூடியது. தகசாகியாமா, முழுக்க மனிதப் பார்வையாளர்கள் நிறைந்த இடம், ஆனால் அங்கே வருகின்ற யாருடனும் என்னால் ஒரு சாதாரண உரையாடலைக்கூடத் தொடரமுடியவில்லை. அப்படிச் செய்வது மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாக இருந்தது. விளைவு, மனித சமூகத்தோடும் இல்லாமல், குரங்குகள் உலகிலும் இல்லாமல் நான் அந்தரத்தில் தொங்குபவனைப் போல ஆனேன். அது மிகப்பெரிய மனவேதனை தருகின்ற அனுபவம்.”

”உன்னால் ப்ரூக்நெர் இசையையும் கேட்க முடியவில்லை, சரியா!”

“ஆம். அது இப்போது என் வாழ்க்கையின் அங்கமல்ல,” ஷினகாவா குரங்கு பேசிக்கொண்டே இன்னும் கொஞ்சம் பீர் அருந்தியது. நான் அதன் முகத்தை ஆராய்ந்தேன். ஏற்கனவே அதன் முகம் சிவப்பாக இருந்தபடியால், அது இன்னும் சிவப்பாக மாறியதை என்னால் கவனிக்க முடியவில்லை. இந்தக் குரங்கு எவ்வளவு மது அருந்தினாலும் நிதானமாகத்தான் இருக்குமென்று தோன்றியது. அல்லது குரங்குகள் மதுவருந்தியிருக்கும் போது, அவற்றின் முகத்தைப் பார்த்துக் கணிக்க முடியாதோ என்னவோ.

”என்னை மிக வேதனைக்குள்ளாக்கிய இன்னொரு விஷயம், பெண்களுடனான உறவு.”

“ஓ, ‘உறவு’ என்று நீ எதைக் குறிப்பிடுகிறாய்…?”

“சுருக்கமாகச் சொல்வதானால், எனக்குப் பெண் குரங்குகளிடம் துளியளவு கூட காம இச்சை எழவில்லை. அவர்களோடு இருக்க பல சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால் எனக்கு அப்படியொரு எண்ணம் எழவே இல்லை.”

“நீ ஒரு குரங்காக இருந்தும்கூட, பெண் குரங்குகள் உன் இச்சையைத் தூண்டவில்லை என்கிறாயா?”

“ஆம், அதே தான். இது கொஞ்சம் சங்கடமான விஷயம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், மனிதப் பெண்களைத்தான் என்னால் காதலிக்க முடிந்தது.”

நான் அமைதியாக இருந்தேன். என் குவளையில் பீர் காலியாகி இருந்தது. நான் நொறுக்குத்தீனிப் பையைத் திறந்து, கை நிறைய அள்ளிக்கொண்டேன். “அது கொஞ்சம் தீவிரமான பிரச்சனைகளை உண்டாக்கி இருக்குமென்று நினைக்கிறேன்” என்றேன்.

”ஆம், தீவிரமான பிரச்சனைகள் தாம். நான் ஒரு குரங்காக இருக்கின்றபடியால், என் விருப்பங்களுக்குச் செவி சாய்க்க எந்த மனிதப் பெண்ணும் தயாராக இருப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. அதோடு, அது மரபியலுக்கு எதிரான ஒன்றல்லவா.”

நான் அது தொடர்ந்து பேசுவதற்காகக் காத்திருந்தேன். அது தன் காதுக்குப் பின் பலமாகத் தேய்த்துக் கொண்டது. பிறகு மீண்டும் தொடர்ந்தது.

“எனவே எனது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேறு வழியைத் தேட வேண்டியதாகியது.”

“’வேறு வழி’ என்று எதனைக் குறிப்பிடுகிறாய்?”

குரங்கு ஆழமாக முகத்தைச் சுளித்தது. அதன் சிவந்த முகம், லேசாகக் கருத்தது.

“சொன்னால் நம்ப மாட்டீர்கள், உண்மையில் என்னை நீங்கள் நம்ப மாட்டீர்கள், இருந்தாலும் சொல்கிறேன். ஒரு கட்டத்தில், நான் விரும்பும் பெண்களின் பெயர்களை நான் திருடத் துவங்கிவிட்டேன்.”

“பெயர்களைத் திருடுவதா?”

“ஆம், சரிதான். எப்படியென்று தெரியவில்லை, ஆனால், அப்படியொரு சிறப்புத் திறனுடன் நான் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் விரும்பினால், ஒருவருடைய பெயரைத் திருடி அதை எனதாக்கிக்கொள்ள முடியும்.”

குழப்பத்தின் அலை என்னைத் தாக்கியது.

“சத்தியமாகப் புரியவில்லை” என்றேன். “ஒருவரின் பெயரை நீ திருடுகிறாய் என்றால், அவர் தன்னுடைய பெயரை இழந்துவிடுவாரா?”

”இல்லை, அவர் முழுமையாக இழக்க மாட்டார். நான் பெயரின் பகுதியை, அதாவது சிறு துண்டினைத் திருடிக் கொள்வேன், நான் சிறு பகுதியை எடுத்துக்கொண்ட பின், அவர்களின் பெயர் செறிவு குறைவானதாக, முன்னைவிட லேசானதாக மாறிவிடும். சூரியனை மேகங்கள் மூடும்போது, தரையிலிருக்கும் உங்கள் நிழல் வெளிறிப்போய் இருக்குமே அது மாதிரி. இது ஆளுக்குள் ஆள் மாறுபடவும் செய்யும். சிலர் தங்கள் பெயரின் பகுதியை இழந்ததை அறியாமல் இருக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது. ஏதோவொன்று குறைகின்றது என்ற உணர்வு மட்டுமே அவர்களுக்கு இருக்கும்.”

“ஆனால், வேறு சிலர் தங்களின் பெயரின் பகுதி திருடப்பட்டிருக்கிறது என்று  தெளிவாக உணர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறது இல்லையா?”

”ஆம், உண்மைதான். சில நேரங்களில், தங்கள் பெயரை நினைவில் கொண்டுவர முடியவில்லை என்று உணர்வர். அசௌகரியமான விஷயம்தான். தங்கள் பெயரை அடையாளம் காணக்கூட முடியாமல் போகலாம். சில சமயங்கள், அது அடையாளச் சிக்கலைக்கூட ஏற்படுத்தலாம். எல்லாம் எனது தவறுதான், நான் தானே அவர்கள் பெயரைத் திருடினேன். அதற்காக நான் வருந்தவே செய்கிறேன். அந்தக் குற்றவுணர்வின் கணம் என்னை அழுத்துவதை நான் அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன். அது தவறு என்று எனக்குத் தெரிகிறது, இருந்தும் என்னால் அதை நிறுத்தமுடியவில்லை. நான் எனது செயல்களுக்கு வெற்றுச் சமாதானம் சொல்ல முயற்சிக்கவில்லை, எனது உணர்வு நாளச் சுரப்பிகள் என்னையும் மீறி அதனைச் செய்யத் தூண்டுகின்றன. உள்ளிருந்து ஒரு குரல், “போ, போய் அந்தப் பெயரைத் திருடு. இதில் தவறொன்றுமில்லை.” என்று என்னை நிர்பந்திக்கிறது.

நான் என் கைகளைக் கட்டியபடி, அந்தக் குரங்கை ஆராய்ந்தேன். உணர்வு நாளச் சுரப்பியா? இறுதியாக நான் பேசத் துவங்கினேன். “நீ திருடக்கூடிய பெயர்கள் நீ காதலிக்கும் அல்லது காம இச்சை கொள்ளும் பெண்களுடையவை, சரியா?”

“ஆம், நான் போகிற, வருகிறவர்களிடமெல்லாம் பெயர்களைத் திருடுவதில்லை.”

“இதுவரை நீ எவ்வளவு பெயர்களைத் திருடி இருக்கிறாய்?”

தீவிரமான முக பாவனையுடன், குரங்கு விரல்களில் கணக்குப் போட்டது. எண்ணிக்கொண்டிருக்கும் போதே, அது வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தது. நிமிர்ந்து பார்த்தது. ”மொத்தம் ஏழு. நான் ஏழு பெண்களின் பெயர்களைத் திருடியிருக்கிறேன்.”

அது அதிகமா, இல்லை அபரிமிதமான எண்ணிக்கையா? யாரால் சொல்ல முடியும்?

”உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நீ எப்படி பெயர்களைத் திருடுவாய் எனக் கூற முடியுமா?” என்றேன்.

“பெரும்பாலும் மனவலிமையினால் தான். ஒருமுகச் சிந்தனை மற்றும் உள சக்தியின் பலம். ஆனால் அது மட்டும் போதாது. பெயர் திருடப்படும் பெண்ணின் பெயர் எழுதப்பட்டிருக்கும் ஒரு பொருளும் வேண்டும், ஓட்டுநர் உரிமம், மாணவர் அடையாள அட்டை, காப்பீடு அட்டை அல்லது கடவுச்சீட்டு இப்படி ஏதாவது ஓர் அடையாள அட்டை இருந்தால் மிகக் கச்சிதமாகச் செய்ய முடியும். பெயர் அட்டை கூட போதுமானது. இவற்றில் ஏதாவது ஒரு பொருள் இருந்தால் போதும். அதற்குத் திருடுவதுதான் ஒரே வழி. மனிதர்கள் வெளியே சென்றிருக்கும்போது, அவர்கள் அறைக்குள் பதுங்கிச் சென்று துழாவுவதில் நான் கைதேர்ந்தவன். அவர்கள் பெயருள்ள ஏதாவது பொருளைத் தேடி எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன்.”

”உனக்கு விருப்பமான பெண்ணின் பெயர் கொண்ட ஒரு பொருளை எடுத்துக்கொண்டு வந்து, அதோடு உன் மனவலிமையினால் அவளின் பெயரைத் திருடிக் கொள்வாய், அப்படியா?”

”துல்லியமாக, அதே தான். என் உணர்வுகளை ஒருமுகப்படுத்தி, நான் விரும்பும் பெண்ணின் பெயரை உட்கிரகித்துக் கொண்டபடி, எழுதப்பட்ட பெயரை வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அதற்கு மிக அதிக நேரமெடுத்துக் கொள்ளும். உடலாலும், மனதாலும் களைப்புறச் செய்யும் நிலை அது. அதில் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன். எப்படியோ அந்தப்பெண்ணின் ஒரு பகுதி, என்னுள் பதிந்துவிடும். அத்தோடு அதுவரை வேறு வடிகால்கள் எதுவுமில்லாமல் இருந்த எனது உள்ளன்பும், வேட்கையும் பாதுகாப்பாக நிறைவேறிவிடும்.

”உடல் ரீதியாக எந்தத் தொடர்பும் ஏற்படுவதில்லையா?”

குரங்கு தீர்க்கமாக மறுத்தது. “நான் ஒரு கீழ்மையான குரங்குதான். ஆனால் பண்பற்ற எந்தவொரு செயலையும் செய்யமாட்டேன். நான் விரும்பும் பெண்ணின் பெயரை என்னுள் ஒரு பகுதியாக்கிக் கொள்வேன். அதுவே எனக்கு நிறைவைத் தரக்கூடியது. இது ஒரு மாதிரி பிறழ்மனத் தன்மையுடையது. ஆனால் அதே நேரம் இதுவொரு புணர்ச்சியில்லா தூய செயல். என்னுள் பொதிந்திருக்கும் அந்தப் பெயரிடம் நான் ஒப்பற்ற காதலை, ரகசியமாய்  சொந்தமாக்கிக் கொள்கிறேன், புல்வெளியை வருடிச் செல்லும் இளந்தென்றலைப் போல.”

“ம்ம்ம்,” குரங்கின் பதிலில் நான் ஈர்க்கப்பட்டேன். ”இதனை உணர்வுக் காதலின் உட்சபட்ச நிலை என்று கூடச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.”

“ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது தனிமையின் உட்சபட்ச நிலையும் தான். ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல, எப்போதும் சேர்ந்தே இருக்கும், ஒருபொழுதும் பிரிக்க முடியாத இரு துருவமுனைகள்.”

எங்கள் உரையாடல் இத்தோடு நிறைவுக்கு வந்தது. குரங்கும் நானும் அமைதியாகப் பீரைக் குடித்துவிட்டு, ’ககிபி’ மற்றும் காய்ந்த கணவாய் மீன் நொறுக்குத் தீனியை எடுத்துக்கொண்டோம்.

”நீ சமீபத்தில் யாருடைய பெயரையாவது திருடினாயா?” என்று கேட்டேன்.

குரங்கு மறுப்பாகத் தலையாட்டியது. தான் ஒரு குரங்கு என்பதை உறுதிப்படுத்துவதைப் போல, அது தன் கையில் விறைப்பாய் இருந்த முடியைப் பிடித்து இழுத்தது. ”இல்லை, சமீபத்தில் யாருடைய பெயரையும் திருடவில்லை. நான் இந்த நகரத்திற்கு வந்த பிறகு, அம்மாதிரியான கூடா ஒழுக்கத்தைத் தொடரக் கூடாது என்று மனதளவில் முடிவு செய்துகொண்டேன். அதனால், இந்த சிறிய குரங்கின் ஆன்மா சற்று மன அமைதியடைந்திருக்கிறது. நான் எனது இதயத்தில் ஏழு பெண்களின் பெயர்களைப் பாதுகாத்தபடி, அமைதியான களங்கமற்ற வாழ்வை வாழ்ந்து வருகிறேன்.

”இதனைக் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி” என்றேன்.

”இது எனக்குப் பெரிய விஷயம். காதல் குறித்த எனது எண்ணத்தை தெரியப்படுத்தவும், அதைக் காது கொடுத்துக் கேட்கவும் நீங்கள் தயாராக இருந்தது குறித்து எனக்கு மிக வியப்பாக இருந்தது”

“நிச்சயமாக” என்றேன்.

குரங்கு பலமுறை அகலமாகக் கண்களைச் சிமிட்டியது. அதன் அடர்த்தியான புருவங்கள் மேலும் கீழும் அசைவது காற்றில் பனையோலை அசைவது போலத் தோன்றின. உயரம் தாண்டும் போட்டியாளர், ஓடத் துவங்கும் முன் மூச்சை இழுத்துவிடுவது போல, குரங்கு ஆழமாகவும் மெதுவாகவும் மூச்சுவிட்டது.

”நாம் வாழ்வதற்குக் காதல் இன்றியமையாத எரிபொருள். ஒருநாள் அந்தக் காதல் முடிவுறலாம் அல்லது ஒன்றுக்கும் நிறையானதாக இல்லாமல் ஆகலாம். ஆனால் காதல் மறைந்துவிட்டாலும், தக்க கைமாறு செய்யப்படாமல் போய்விட்டாலும், ஒருவரைக் காதலித்த அல்லது ஒருவரின் காதலில் திளைத்திருந்த நினைவை என்றென்றைக்கும் ஏந்தி இருக்கலாம். அது ஒரு மதிப்புமிக்க கதகதப்பின் ஊற்று. அந்த வெப்பத்தின் தோற்றுவாய் இல்லாமல் ஒரு மனிதனின் இதயம் – ஏன் ஒரு குரங்கின் இதயம்கூட, சில்லிட்டு, பயனற்ற தரிசு நிலமாகிவிடும். அந்நிலத்தில், சூரியனின் கதிர்கள் விழுவதில்லை, அமைதியின் காட்டுப்பூக்கள் பூப்பதில்லை, நம்பிக்கையின் விருட்சங்கள் வளர்வதில்லை. இங்கே என் இதயத்தில், நான் நேசித்த ஏழு பெண்களின் பெயர்களைப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.” குரங்கு தன் முடியடர்ந்த மார்பில் உள்ளங்கையை வைத்தது. ”எனது குளிர்ந்த இரவுகளில் என்னைக் கதகதப்பாக வைத்துக்கொண்டு, எஞ்சிய எனது அந்தரங்க வாழ்வை வாழ, இந்நினைவுகளையே சிறிய எரிசக்தியாக வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன்.”

குரங்கு மீண்டும் சிரித்தபடி, சிலமுறை லேசாகத் தலையை ஆட்டிக்கொண்டது.

”இது விநோதமான சொல்லாடல் தான் இல்லையா? ’அந்தரங்க’ வாழ்வு என்கிறேன். மனிதனாய் இல்லாத ஒரு குரங்கின் ‘அந்தரங்க’ வாழ்வு. ஹா ஹா ஹா!”

 

நாங்கள் இரண்டு பெரிய பீர் போத்தல்களைக் குடித்து முடிக்கும்போது, இரவு பதினொன்றரை மணி ஆகியிருந்தது.”நான் கிளம்புகிறேன். இவ்வளவு நேரம் என் வாயில் வந்ததை எல்லாம் பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்க வேண்டும்.”

”இல்லை, இது சுவாரஸ்யமாகத் தான் இருந்தது.” என்றேன். ‘சுவாரஸ்யமான’ என்பது சரியான வார்த்தை இல்லையெனினும். அதாவது, ஒரு குரங்கோடு பீரைப் பகிர்ந்துகொண்டு, அரட்டையடிப்பது உண்மையில் ஓர் அசாதாரணமான நிகழ்வு. அதுவுமில்லாமல், ப்ரூக்நெர் இசையை விரும்பும், தனது காம இச்சைக்காக (இல்லை, காதல் என்று சொல்ல வேண்டும்) பெண்களின் பெயர்களைத் திருடும் இந்த குறிப்பிட்ட குரங்கின் கதையைப் பற்றிச் சொல்வதற்கு ’சுவாரஸ்யமான’ என்ற வார்த்தை பொருத்தமாக இருக்காது. இதுவரையான எனது வாழ்வில் நான் கேட்ட மிக வியக்கத்தக்க விஷயம் இது. ஆனால், நான் அந்தக் குரங்கின் உணர்வுகளைத் தேவைக்கு அதிகமாய் கிளர்த்தெழச் செய்ய விரும்பவில்லை. எனவே பொதுவான, பட்டும் படாத வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

நாங்கள் விடைபெற்றுக்கொள்ளும்போது, அந்தக் குரங்கிற்கு ஆயிரம் யென் சன்மானமாக வழங்கினேன். “இது மிகப்பெரிய தொகை இல்லை. இருந்தாலும் நல்லதாக வாங்கி உண்பதற்கு வைத்துக்கொள்”என்றேன்.

முதலில் அது மறுத்தது. பின் நான் வலியுறுத்தவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதனைப் பத்திரமாகத் தனது கால்சட்டைப் பையில் வைத்தது.

”உங்களுக்கு மிகப் பெரிய மனது. நீங்கள் என்னையும் மதித்து உடன் மதுவருந்தினீர்கள், எனது அபத்தமான வாழ்க்கைக் கதையைக் காது கொடுத்துக் கேட்டீர்கள், இப்போது பெருந்தன்மையாக இவ்வளவு சன்மானம் அளிக்கிறீர்கள். உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.”

குரங்கு, காலி பீர் போத்தல்களையும், குவளைகளையும் தட்டி எடுத்து வைத்துக் கொண்டு அறையிலிருந்து கிளம்பிச் சென்றது.

மறுநாள் காலை, நான் விடுதியைக் காலி செய்துவிட்டு, டோக்கியோவிற்குத் திரும்பினேன். வரவேற்பறை மேஜையில், தலைமுடியும், புருவங்களும் கொட்டிப் போன முதியவரோ, அல்லது சுவாசப் பிரச்சனையுள்ள முதிய பூனையோ யாரையும் காணவில்லை. பதிலாக, சிடுசிடுப்புடன் ஒரு பருத்த பெண்மணி இருந்தார். அவரிடம், முந்தைய இரவு அருந்திய பீர் போத்தல்களுக்கான கூடுதல் தொகையைச் செலுத்த விரும்புவதகாக நான் கூறியதும், எனது கணக்கில் இதர செலவுகள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார். “இங்கே தானியங்கி இயந்திரம் மூலம் கிடைக்கும் குவளை பீர்கள் மட்டுமே உள்ளன. எங்களிடம் போத்தல் பீர் விற்பனையே இல்லை” என்று உறுதியாகக் கூறினார்.

எனக்கு மீண்டும் குழப்பமாகியது. உண்மையும் கற்பனையும் மாறி மாறி கண்ணாமூச்சி ஆடுவதாகத் தோன்றியது. ஆனால் இரண்டு பெரிய  போத்தல் சப்போரோ பீரை, ஒரு குரங்கின் வாழ்க்கைக் கதையைக் கேட்டபடி பகிர்ந்து அருந்தியது நிச்சயமாக நினைவில் இருந்தது.

நான் ஒரு நிமிடம், குரங்கை அந்த நடுத்தர வயதுப் பெண்மணியின் முன் கொண்டு வந்து நிறுத்தலாம் என்று நினைத்தேன். பிறகு வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஒரு வேளை, அப்படி ஒரு குரங்கு உண்மையில் இல்லவே இல்லையோ. வெந்நீர் ஊற்றில் அதிக நேரம் குளித்ததில் என் மூளை குழப்பமாகி, ஏதோ மாயக்காட்சிகள் உருவாகிவிட்டதோ! அல்லது நான் கண்டது உண்மை போலத் தோற்றம்கொண்ட விநோதமான கனவோ! நான், “உங்களிடம் பேசத் தெரிந்த ஒரு முதிய குரங்கு பணியாளராக இருக்கிறது அல்லவா?” என்று அந்தப் பெண்மணியிடம் கூறினால், அவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? ஒரு வேளை அவர் என்னைப் பைத்தியக்காரன் என்றுகூட நினைக்கலாம். அல்லது, ஒரு குரங்கைப் பணியாளராக பொதுவில் அங்கீகரிப்பதில் உள்ள பிரச்சனை மற்றும் வரி அலுவலகம், சுகாதாரத்துறை குறித்த பயம் காரணமாக அவர்கள் அந்தக் குரங்கைக் கணக்கில் வராத ஊழியராக வைத்திருக்கலாம்.

ரயிலில் வீடு திரும்பும்போது, அந்தக்குரங்கு என்னிடம் கூறியது அனைத்தையும் மறுபடியும் மனதிற்குள் நினைத்துப் பார்த்தேன். டோக்கியோ திரும்பிய பின்பு, துவக்கத்தில் இருந்து முடிவுவரை நிகழ்ந்த அனைத்தையும் கதையாக எழுத வேண்டும் என்று நினைத்தபடி, நான் பணியின் பொருட்டு வைத்திருக்கும் குறிப்பேட்டில், நினைவில் கொண்டு வர முடிந்தது அனைத்தையும் குறிப்புகளாக எழுதிக் கொண்டேன்.

ஒரு வேளை அப்படியொரு குரங்கு உண்மையில் இருக்கிறதென்றால் – என்னால் அப்படித்தான் நினைக்க முடிகிறது – அப்படியே இருந்தாலும், மதுவருந்திய பின் அது கூறிய விஷயங்களை எவ்வளவு தூரம் நான் நம்ப வேண்டும் என்று தெளிவாகத் தெரியவில்லை. உண்மையில், அதன் கதையை மதிப்பிடுவது கடினமாக இருந்தது. பெண்களின் பெயர்களைத் திருடி, அதைத் தன்னுடையதாக வைத்துக் கொள்வது சாத்தியம் தானா? அது அந்த ஷினகாவா குரங்குக்கு மட்டுமே இருக்கும் அதிசயத் திறமையா? அல்லது அந்தக் குரங்கு முழுக்க பொய் கூறும் குணமுடையதா? யாரால் சொல்ல முடியும்? கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும் குரங்கு என்று இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், ஒரு குரங்கால் மனித மொழியில் அவ்வளவு தூரம் தேர்ச்சியடைய முடியுமென்றால், அது தேர்ந்த பொய் சொல்லியாகவும் இருக்க சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.

என் பணியின் பொருட்டு, நான் ஏகப்பட்ட மனிதர்களை நேர்காணல் செய்திருக்கிறேன். அந்த அனுபவத்தின் மூலம் யார் சொல்வதை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று அறிந்துகொள்ளும் ஆற்றல் எனக்குண்டு. ஒருவர் சிறிது நேரம் பேசுவதை வைத்தே, அதிலுள்ள நுட்பமான குறிப்புகள் மற்றும் சமிக்ஞைகள் உணர்த்தும் உள்ளுணர்வின் மூலம் அவர் நம்பத் தகுந்தவரா என்று என்னால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது, அந்த ஷினகாவா குரங்கு என்னிடம் கூறியது இட்டுக்கட்டிய கதை என்று உணர முடியவில்லை. அதன் பார்வை, முகபாவனை, நிகழ்வுகளை அவ்வப்போது நினைவுபடுத்தி அது சொன்ன விதம், இடைநிறுத்தங்கள், சைகைகள், சில நேரங்களில் வார்த்தைகளுக்காக அது தடுமாறியது – இவை எதுவுமே செயற்கையாகவோ, வலிந்து திணித்ததாகவோ இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் ஒப்புதல் வாக்குமூலம் முழுவதிலும் ஒரு வலிமிகுந்த நேர்மை இருந்தது.

எனது தனித்த ஓய்வுப் பயணம் முடிந்தது. நான் வழமையான நகரத்துப் பரபரப்பிற்குத் திரும்பினேன். மிக முக்கியமான பணி சார்ந்த உறுத்தல்கள் இல்லையென்றாலும், நாட்கள் செல்லச் செல்ல என் வேலைப்பளு கூடியபடியேதான் இருந்தது. நேரமும் பறந்தபடியே இருந்தது. இறுதியில், நான் அந்த ஷினகாவா குரங்கைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லவில்லை, அது பற்றி எதுவும் எழுதவுமில்லை. யாருமே நம்பமாட்டார்கள் எனும் போது ஏன் முயற்சிக்க வேண்டும்? அப்படி ஒரு குரங்கு உண்மையில் இருக்கிறது என்று நான் நிரூபிக்காவிட்டால், ‘நான் ஏதோ கதைவிடுகிறேன்’ என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். அந்தக் குரங்கைச் சந்தித்ததை ஒரு புனைவாக எழுதலாம் என்றால், அக்கதையில் ஒரு தெளிவான கருவோ, குவியமோ இல்லை. எனது பதிப்பாளர் குழப்பத்தோடு, “ஒரு எழுத்தாளரிடம் இப்படிக் கேட்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள், இப்புனைவில் கரு என்ற ஒன்று எங்கே இருக்கிறது?” என்று கேட்பதை இப்போதே என்னால் யூகிக்க முடிகிறது.

கரு? அப்படி எதுவும் இருப்பதாக எனக்குமே தோன்றவில்லை. அது மனித மொழி பேசும், கன்மா ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சிறுநகரத்தின் வெந்நீரூற்று குளியலகத்தில் விருந்தினர்களின் முதுகைத் தேய்த்துவிடும், குளிர்ந்த பீரை ரசித்துப் பருகும், மனிதப் பெண்களை விரும்பி அவர்களின் பெயர்களைத் திருடும் ஒரு முதிய குரங்கைப் பற்றியது என்று மட்டும்தான் சொல்ல முடியும்? இதில் கருவோ, நீதியோ எங்கே இருக்கிறது?

நாட்கள் செல்லச் செல்ல, அந்த வெந்நீரூற்று நகரம் பற்றிய நினைவுகள் மங்கத் துவங்கின. எவ்வளவு உயிர்ப்புள்ள நினைவுகளாக இருந்தாலும், காலத்தைக் கடந்து அவை நீடிக்க முடியாது.

இப்போது, ஐந்து வருடங்களுக்குப் பிறகு, நான் கிறுக்கி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு இப்போது அக்குரங்கினைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். காரணம், சமீபத்தில் அதை நினைவுபடுத்துவது போல ஒரு நிகழ்வு நடந்தது. அந்நிகழ்வு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், நான் இதைப் பற்றி எழுதியிருக்கவே மாட்டேன்.

அகாசாகாவிலிருந்த ஒரு உணவகத்தின் காபி அருந்தும் ஓய்விடத்தில் என் பணி சார்ந்த சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. அங்கே பயணம் தொடர்பான பருவ இதழ் ஒன்றின் பதிப்பாளரைச் சந்தித்தேன். சுமார் முப்பது வயதிலிருக்கும், நீண்ட தலைமுடியும், அழகான உடல் கட்டமைப்பும், பெரிய ஈர்க்கும் கண்களும் கொண்ட கவர்ச்சிகரமான சிறிய பெண். திறமையான பதிப்பாளர், இன்னும் மணமாகாதவர். நாங்கள் சில சமயங்கள் இணைந்து பணிபுரிந்திருக்கிறோம், பரஸ்பரம் அறிமுகமானவர்கள். வேலை முடிந்தபிறகு, சிறிது நேரம் ஒன்றாகக் காபி அருந்தியபடி அளவளாவிக் கொண்டிருந்தோம்.

அப்போது அவரது அலைபேசி ஒலித்தது. மன்னிப்புக் கோரும் பாவனையில் என்னைப் பார்த்தார். நான் அழைப்பை ஏற்றுப் பேசுமாறு சைகை செய்தேன். அழைப்பு வந்த எண்ணைப் பார்த்துவிட்டு அவர் அழைப்பை ஏற்றுப் பேசினார். அது உணவகம், அல்லது தங்கும் விடுதி அல்லது விமானப் போக்குவரத்து எதற்கோ அவர் முன்பதிவு செய்திருந்தது தொடர்பான அழைப்பு போலத் தோன்றியது. அவர் சிறிது நேரம் பேசிவிட்டு, அவரது குறிப்புப் புத்தகத்தைச் சோதித்தபடி, சிறு குழப்பத்துடன் என்னைப் பார்த்தார்.

“மன்னியுங்கள்”, அவர் அலைபேசியைத் தன் கையால் மறைத்தபடி மெல்லிய குரலில் என்னிடம் கேட்டார். “இது விநோதமான கேள்வி என்று அறிவேன். என் பெயர் என்ன என்று சொல்லமுடியுமா?”

நான் மலைப்புற்றேன், இருந்தாலும் சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டு, அவரது முழுப் பெயரைக் கூறினேன். அவர் தலையாட்டியபடி, அலைபேசியின் மறுமுனையில் இருந்தவரிடம் அதனைக் கூறினார். பேசி முடித்ததும், அவர் மீண்டும் என்னிடம் மன்னிப்பு கோரினார்.

“தயவுசெய்து மன்னியுங்கள். திடீரென்று எனக்கு என் பெயர் மறந்துவிட்டது. மிகவும் சங்கடமாகிவிட்டது”

“இப்படி அவ்வப்போது நடக்கிறதா?” என்று வினவினேன்.

அவர் சிறிது தயங்கி, பின்பு தலையாட்டினார். “ஆம், இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது. என்னால் என் பெயரை நினைவுபடுத்த முடிவதே இல்லை. எதையோ மறந்துவிட்டது போன்ற உணர்வே தோன்றுகிறது.”

“நீங்கள் மற்ற விஷயங்களை மறக்கிறீர்களா? அதாவது உங்கள் பிறந்தநாள், தொலைப்பேசி எண் அல்லது வங்கியட்டை எண், இப்படி ஏதாவது?”

அவர் உறுதியாக மறுத்துத் தலையசைத்தார். “இல்லை, எனக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு. எனது நண்பர்களின் பிறந்தநாட்களைக் கூட மனப்பாடமாகச் சொல்வேன். யாருடைய பெயரையும் நான் ஒரு தடவைகூட மறந்ததில்லை. ஆனால் என் பெயரை மட்டுமே அடிக்கடி மறக்கிறேன். என்ன காரணமென்றே புரியவில்லை. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு நினைவுக்கு வந்துவிடுகிறது. ஆனால் அந்த இடைவெளியில் மிகவும் சங்கடமாகிவிடுகிறது. நான் பதற்றமாகிவிடுகிறேன். அப்போது எனது இருப்பே இல்லை என்பது போல ஆகிவிடுகிறது. இது நினைவிழப்பு நோயின் ஆரம்ப அறிகுறி என்று நினைக்கிறீர்களா?”

நான் லேசாகப் பெருமூச்சு விட்டபடி, “மருத்துவரீதியாக எனக்குத் தெரியவில்லை. இப்படி திடீரென்று பெயரை மறப்பது எப்போதிலிருந்து துவங்கியது?”

அவர் தயக்கத்துடன் என்னைப் பார்த்தபடி, அது குறித்து யோசிக்கத் துவங்கினார். “ஆறு மாதங்களுக்கு முன் என்று நினைக்கிறேன். செர்ரி மலர்வதைப் பார்த்து ரசிக்கப் போயிருந்தபோதுதான், முதன்முறையாக நடந்தது.”

“இது தொடர்பில்லாத கேள்வியாகத் தோன்றலாம். இருந்தாலும், சொல்லுங்கள், நீங்கள் அப்போது உங்கள் ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, காப்பீடு அட்டை இப்படி ஏதாவது அடையாள அட்டையைத் தொலைத்தீர்களா?”

அவர் தனது உதடுகளைக் குவித்தபடி, ஏதோ நினைவில் மூழ்கியவரைப் போலச் சிறிது நேரம் யோசித்தார். “நீங்கள் இப்போது கேட்கும்போது, நினைவுக்கு வருகிறது. அந்த சமயத்தில் நான் எனது ஓட்டுநர் உரிமத்தைத் தொலைத்தேன். அது மதிய உணவு நேரம், நான் எனது கைப்பையை எனது அருகே பூங்கா இருக்கையில் வைத்துவிட்டு அமர்ந்திருந்தேன். எனது உதட்டுச் சாயத்தை ஒழுங்குபடுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தால், எனது கைப்பை காணாமல் போயிருந்தது. எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு நொடி சுற்றுமுற்றும் பார்த்தேன். அருகில் ஒருவரும் தென்படவில்லை. சிறு காலடிச்சத்தம்கூட கேட்கவில்லை. சுற்றிப் பார்த்தால், நான் மட்டுமே நின்றுகொண்டிருந்தேன். அது அமைதியான பூங்கா, யாரேனும் என் பையைத் திருட வந்திருந்தால், நிச்சயம் என்னால் கவனித்திருக்க முடியும்.”

நான் அவர் தொடர்ந்து பேசுவதற்காகக் காத்திருந்தேன்.

“ஆனால், அதில் அதிசயம் ஒன்றுமில்லை. அன்று மதியமே என் கைப்பை கீழே கிடந்ததாக காவல்துறையினரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்தப் பூங்காவிற்கு அருகிலிருந்த சிறிய காவல் நிலையத்தின் முன் அது கிடந்திருக்கிறது. அதிலிருந்த பணம், கடனட்டைகள், வங்கிப் பண அட்டைகள், என் அலைபேசி எல்லாம் அப்படியே இருந்தன. எனது ஓட்டுநர் உரிமத்தை மட்டும் காணவில்லை. பணத்தைக்கூட எடுக்காமல், வெறும் ஓட்டுநர் உரிமத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, பையை சரியாகக் காவல் நிலையத்திற்கு வெளியே யார் போட்டுவிட்டுப் போயிருப்பார்கள் என்று காவல்துறையினரே ஆச்சரியப்பட்டனர்.

நான் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தேன், எதுவும் பேசவில்லை.’

“அது மார்ச் மாத இறுதி. நான் சமெசூவில் இருந்த மோட்டார் வாகன அலுவலகத்திற்குச் சென்று புதிய உரிமம் பெற்றுக்கொண்டேன். அந்த மொத்த நிகழ்வுமே சற்று விநோதமாகவே இருந்தது. ஆனால் அதனால் பாதிப்பு எதுவுமில்லை.

“சமெசூ ஷினகாவாவில்தானே இருக்கிறது?”

“ஆம், ஹிகஷியோயில். எனது அலுவலகம் தகநாவாவில் இருக்கிறது. அங்கிருந்து வாடகைச் சீருந்தில் செல்லக்கூடிய சிறுதூரம் தான்.” என்றுகூறிவிட்டு என்னைச் சந்தேகமாகப் பார்த்தார். “நான் என் பெயரை மறப்பதற்கும் எனது ஓட்டுநர் உரிமம் தொலைந்ததற்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று நினைக்கிறீர்களா?

நான் இல்லையென்பது போல் வேகமாகத் தலையாட்டினேன். ஷினகாவா குரங்கின் கதையை அவரிடம் எப்படிக் கூறுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை.

“இல்லை, தொடர்பேதும் இருக்காதென்றே நினைக்கிறேன். உங்கள் பெயர் ஈடுபட்டிருந்தது என்பதால் திடீரென என் மனதில் தோன்றியது.” என்றேன்.

அவர் சமாதானம் ஆனது போல் தெரியவில்லை. கொஞ்சம் சங்கடமான விஷயம்தான் என்றாலும் முக்கியமான இன்னொரு கேள்வியைக் கேட்க வேண்டியிருந்தது.

“சமீபத்தில் ஏதேனும் குரங்குகளைப் பார்த்தீர்களா?”

“குரங்குகளா? அவர் கேட்டார். “அதாவது விலங்குகளைச் சொல்கிறீர்களா?”

”ஆம், உயிருள்ள நிஜமான குரங்குகள்”.

அவர் மறுப்பாகத் தலையசைத்தார். “மிருகக்காட்சிசாலையோ, வேறு எங்குமோ, பல வருடங்களாகக் குரங்குகளைப் பார்த்த நினைவே இல்லை.”

ஒருவேளை அந்த ஷினகாவா குரங்கு, பெயர்களைத் திருடும் தனது பழைய வித்தையை மீண்டும் துவங்கியிருக்குமோ? அல்லது வேறு ஏதேனும் குரங்கு ஷினகாவா குரங்கின் செயல்முறையைப் பயன்படுத்தி அதே குற்றத்தைப் புரிந்திருக்குமோ (நகலெடுக்கும் குரங்கு?) அல்லது இது குரங்கில்லாமல் வேறு யாரோ செய்யும் வேலையா?

ஷினகாவா குரங்கு மீண்டும் பெயர்களைத் திருடத் துவங்கியிருக்கும் என்று உண்மையில் நான் நினைக்க விரும்பவில்லை. ஏழு பெண்களின் பெயர்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பதே தனக்கு நிறைவளிப்பதாகவும், அந்த வெந்நீரூற்று சிறுநகரில் தன் எஞ்சிய காலத்தை அந்த நினைவுகளைக் கொண்டே நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் அந்தக் குரங்கு அவ்வளவு உளப்பூர்வமாக என்னிடம் கூறியிருந்தது. அது சொன்ன வார்த்தைகளில் உண்மையிருந்தது. ஒரு வேளை அந்தக் குரங்குக்குத் தீவிர மனநிலைச் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அந்த ஒரு காரணம் மட்டும் தான் அதனை மீண்டும் பெயர்களைத் திருடத் தூண்டியிருக்கலாம் என்று நம்புவதற்கு இடம் தருகிறது. அதன் நோய்மை, அதன் உணர்வு நாளச் சுரப்பி ஆகியவை அதனை மீண்டும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கலாம். ஒரு வேளை, இவை எல்லாம் சேர்ந்து, அதனைத் தனது பழைய வாழிடமான ஷினகாவாவிற்கு இழுத்துவந்து, அதன் முந்தைய பொல்லாத பழக்கத்தைத் தொடரச் செய்திருக்கலாம்.

நானே ஒருவேளை அதனை முயன்று பார்ப்பேனா? தூக்கம் வராத இரவுகளில் ஏதேதோ விசித்திரமான கற்பனைகள் தோன்றும்போது, நான் விரும்பும் பெண்ணின் அடையாள அட்டையையோ, பெயர் அட்டையையோ திருடிக்கொண்டு வந்து, அதன் மீது ஊடொளி போல என் கவனத்தைக் குவித்து, அவளது பெயரை எனக்குள் இழுத்து, அவளின் ஒரு பகுதியை எனக்குள்ளாக, எனக்கு மட்டுமேயாக பொதிந்துகொண்டால் என்னவாகும்? அந்த உணர்வு எப்படி இருக்கும்?

இல்லை, அப்படி ஒருபோதும் நிகழாது. மற்றவருக்குச் சொந்தமான ஒரு பொருளை லாவகமாகத் திருடிக் கொண்டு வரும் திறன் எனக்கு ஒருபோதும் வாய்த்ததில்லை, இனியும் அது கைகூடும் என்று தோன்றவில்லை. ‘அந்த ஒரு பொருளுக்கு’ உருவம் எதுவும் இல்லையென்றாலும், திருடுவது என்பது சட்டப்படி ஒரு குற்றச்செயல்.

அந்தக் குரங்கைச் சந்தித்த பிறகு, எப்போதெல்லாம் நான் ப்ரூக்நெரின் இசையைக் கேட்கிறேனோ அப்போதெல்லாம் அதீத காதல், அதீத தனிமை என்று அந்த ஷினகாவா குரங்கின் ‘அந்தரங்க வாழ்வை’ எண்ணிக்கொள்கிறேன். வெந்நீரூற்று சிறுநகரின் பழைய விடுதி ஒன்றின் சிறிய பரண் அறையில், கிழிந்த மெல்லிய மெத்தையில் உறங்கும் அந்த முதிய குரங்கு என் கண்முன் நிழலாடுகிறது. அதோடு, நாங்கள் ஒன்றாக பீர் அருந்தும்போது கொறித்த ‘ககிபி’யும், காய்ந்த கணவாய் மீன் நொறுக்குத் தீனியும் சுவரில் தொங்கியபடி இருக்கிறது.

அந்த அழகிய பெண் பதிப்பாளரை அதன் பின் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை. அதனால் விதி அவர் பெயரை அதன்பிறகு என்னவாக்கியது என்று தெரியவில்லை. அது அவருக்கு எந்தவிதமான துன்பத்தையும் தந்திருக்காது என்று நம்புகிறேன். அவர் ஒரு தீங்கும் அறியாதவர் இல்லையா. அவரது குற்றம் என்று எதுவுமில்லை. எனக்கும் சங்கடமாகத்தான் இருந்தது ஆனால் அவரிடம் அந்த ஷினகாவா குரங்கைப் பற்றிக் கூற இன்னும் தைரியம் வரவில்லை.


  • ஹருகி முரகாமி

ஆங்கிலம்: பிலிப் கேப்ரியல்

தமிழில்: பாலகுமார் விஜயராமன்

(நியூயார்கர்ஜூன் 8 & 15 2020 இதழில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் சிறுகதை)


ஆசிரியர் குறிப்பு:

ஹருகி முரகாமி ஜப்பானிய எழுத்தாளர். சிறுவயதிலேயே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டார். நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முகத் திறனுடையவர். இவரது புத்தகங்கள் ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் விற்பனையில் சிறந்து விளங்குகின்றன. மேலும், இவரது சிறந்த படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு மில்லியன் கணக்கில் விற்பனையாகின்றன. ஜப்பான் மட்டுமின்றி உலகளவில் புகழ்பெற்ற பல விருதுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் பிற்கால நவீன இலக்கியத்தில் முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.

பாலகுமார் விஜயராமன்  எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர். சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்து வருகிறார்.  மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது எட்டு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. விலங்குகள், பறவைகள், சூழலியல் சார்ந்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பான “கடவுளின் பறவைகள்” பரவலான கவனிப்பைப் பெற்றது.

Previous articleஅடையாளம்
Next articleஸ்ரீவள்ளி கவிதைகள்
Avatar
பாலகுமார் விஜயராமன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர். சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்து வருகிறார். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொலைத்தொடர்பு பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு சார்ந்து இவரது எட்டு தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. விலங்குகள், பறவைகள், சூழலியல் சார்ந்த உலகச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பான “கடவுளின் பறவைகள்” பரவலான கவனிப்பைப் பெற்றது.

5 COMMENTS

  1. ஷினகாவா குரங்கின் ஒப்புதல் வாக்குமூலம் நல்ல மொழிபெயர்ப்பு.. வாழ்த்துக்கள்… கதை ஒரு கனவுலகத்திற்கு அழைத்துச்செல்கிறது… மனம் ஒரு பேரனுபவத்தை அடைந்தது.. மிக்க மகிழ்ச்சி

  2. there is a small murakami interview regarding this short story in newyorker , having translated that also would be better .

  3. முரகாமியின் அருமையான கதை. பாலாவின் மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு மற்றும் சுவாரசியமான எழுத்து நடை. நல்லதொரு வாசிப்பனுபவம். நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.