கேப்ரியேலா மிஸ்ட்ரல் கவிதைகள்


“மரணம், என் கனவில் என்னைப் பழுக்க வைக்கும்…”

 The Latin American Boom என்னும் லத்தின் அமெரிக்க நாடுகளில் தோன்றிய மாந்திரீக யதார்த்தம் மற்றும் புத்தம் புதிய கதை சொல்லல் உத்திகள் சார்ந்த எழுத்து முறை உலகம் முழுக்க பெரும் வெடிப்பாக வெடித்துப் பரவியது. இது 1960 களில் தோன்றி சர்வதேச மொழிகளின் இலக்கிய படைப்புகளுக்குள் ஊடுருவியது. அந்தக்காலகட்டத்தில் ல்த்தீன் அமெரிக்காவின் உருவாகியிருந்த அரசியல் சூழ்நிலைகளின் பின்புலமே இதற்கு ஆதாரமாக அமைந்ததுஅர்ஜென்டினாவின் ஜூலியோ கோர்த்தஸார், மெக்ஸிகோவின் கார்லோஸ் ஃபியூண்டஸ், பெருவின் மரியோ வர்காஸ் லோசா மற்றும் கொலம்பியாவின் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது இந்த இலக்கிய வகைமை.

லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர்கள் தங்கள் தொன்மையான கலாச்சாரம் மற்றும் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் உலகப் புகழ் பெற்றனர். மற்றும் அவ்வப்போது ஒருசில படைப்பாளிகளை  நாடுகடத்தப்படுவதன் மூலம் அந்த எழுத்தின் தீவிரத் தன்மை சர்வதேச கவனம் பெறலாயிற்று.

1980கள் வாக்கில் தமிழுக்கு அறிமுகமாகிய இந்த வகைமை, பெரும் பரபரப்புடன் 20-30 வருடங்கள், ஏன் இன்றளவிலும் கூட தமிழின் நவீன இலக்கியச் சூழலை ஆட்டிப்படைக்கிறதுஅந்தக்காலகட்டத்தில் மிகவும் ஆர்வமாக, ஆரோக்கியமாகதனித் தன்மையடைன் இயங்கிய தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் லத்தின் அமெரிக்க இலக்கியம் என்பது  இன்றியமையாத அம்சமாக இருந்தது

லத்தின் அமெரிக்க நாடுகளின் பெரும்பான்மையான படைப்பாளர்கள் தமிழில் சர்வசாதாரணமாக மொழிபெயர்ப்பாகி அறிமுகமானார்கள்.இவர்களின் நூல்களும் பெருமளவில் வந்தன. அந்தக் கட்டத்தில்  ஒரு தீவிரமான இலக்கிய தன்மையுடன் இயங்கியது சூழல். நவீன தமிழின் மனோநிலைக்குள்  ஒரு Literary Mood சுழன்று கொண்டே இருந்தது.

அறிமுகமான லத்தின் அமெரிக்க படைப்பாளிகளில் பெரும்பாலானவர்களை  தமிழின் நவீன இலக்கியச் சூழல் அறிமுகப்படுத்தி வைத்தது. இதில் ஒரு சில விடுபடல்களும் உண்டு. முக்கியமாக இரு பெரும் விடுபடல்கள்  :  மேஜிக்கல் ரியலிசத்தின் தந்தை என்று கருதப்படும் அலெஜோ கார்பெண்டியர் மற்றும்காதல், மரணம் மற்றும் தாய்மை போன்ற படிமங்களை முற்றிலும் அற்புதமான புதிய பார்வையுடன் கையாளும் கேப்ரியேலா மிஸ்ட்ரல்!   

கரீபியன் சமூகங்களின் ஆப்பிரிக்க பாரம்பரியத்தை மேஜிக்கலாகப்  பிரதிபலிக்கும் கார்பெண்டியரின் படைப்புகள் வெறும் மேஜிக்கல் புனைகதை நூல்கள் மட்டுமல்ல, முக்கியமான வரலாற்று ஆதாரங்களும் ஆகும். இவரைப்பற்றி தமிழில் ஆங்காங்கு பெயர் உதிர்ப்புகள் மட்டுமே வெளிவந்துள்ளன. மிஸ்ட்ரல்  பற்றி அதுவும் இல்லை.

இது எல்லாம் கனவு மற்றும் மயக்கம் என்றால்

மரணம், என் கனவில் என்னை பழுக்க வைக்கும். ”  

என்று  எழுதும் அவரின் பல படைப்புகள், எதிர்வரும் காலங்களில் தமிழில் வெளிவரவேண்டும் என்பது என் அவா.

புகழ் பெற்ற சிலி நாட்டுக் கவிஞரான கேப்ரியேலா மிஸ்ட்ரல் (Gabriela Mistral : 1889 – 1957) ,  1945 ஆம் ஆண்டில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றவர்

இவர் சிறந்த கல்வியாளரும் கூட. குழந்தைகள், மற்றும் சிறந்த கல்விக்கான செயல்பாடுகளில் அவர் சொல்வது முக்கியமானது. : “நாங்கள் பல பிழைகள் மற்றும் பல தவறுகளுக்கு குற்றவாளிகள், ஆனால் எங்கள் மோசமான குற்றம் குழந்தைகளைக் கைவிடுவது, வாழ்க்கையின் நீரூற்றைப் புறக்கணிப்பது. நமக்குத் தேவையான பல விஷயங்கள் காத்திருக்க முடியும். குழந்தைகளால் முடியாது. இப்போது அவர்கள் ரத்தமும் சதையுமாக, அவர்களது புலன்கள் உருவாகி வருகின்றன. அவர்களுக்கு ‘நாளைஎன்று பதிலளிக்க முடியாது, அவர்களுடைய பெயர் இன்று. ” என்று முழக்கமிடுகிறார்.

அவரது கவிதைகள், சக்திவாய்ந்த உணர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரை முழு லத்தீன் அமெரிக்க உலகின் கருத்தியல் பார்வைகளின் அடையாளமாக ஆக்கியுள்ளது. அவரது கவிதைகள், லத்தின் அமெரிக்க நிலத்திலிருந்து பீறிட்டெழும்பும் ஒரு நீரூற்று. அவரது கவிதைகளில் இயங்கும் மைய கருப்பொருள்கள் இயற்கை, துரோகம், காதல், ஒரு தாயின் அன்பு, துக்கம் மற்றும் மீட்பு, பயணம் மற்றும் லத்தீன் அமெரிக்க அடையாளம் ஆகியவை என்று குறிப்பிடலாம்பூர்வீக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தாக்கங்களின் கலவையிலிருந்து உருவாகின்றன அவை.

நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பராமரிப்பதற்காக மிஸ்ட்ரல் தனது பதினைந்து வயதில் முறைப்படி பள்ளியில் சேருவதை நிறுத்தினார், ஆனால் தொடர்ந்து கவிதை எழுதினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது காதலரான ரோமியோ யுரேட்டா மற்றும் நெருங்கிய மருமகனின் சோகமான மரணங்களுக்குப் பிறகு இதயம் முற்றிலுமாக உடைந்ததுஅவருடைய பிற்கால கவிதைகளில் பெரும்பாலானவை மரணத்தின் கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தன.

ஒரு  இடைவெட்டுநான் தனியாக இல்லை (I Am Not Alone) என்னும் இவரது கவிதை பெரும் புகழ் பெற்றது. உலகின் பல விமர்சகர்களும் அந்தக் கவிதை குறித்து வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்தினர். அந்தக்கவிதையின் தலைப்பை வெட்டியும் ஒட்டியும் அந்தக்கட்டத்தில் பலகவிஞர்கள் கவிதைகள் எழுதினார். அதில் முக்கியமான கவிதை, உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் நாட்டுக் கவிஞரான ரெய்னர் மரியா ரில்கே (Rainer Maria Rilke) எழுதியஇந்த உலகில் தனியாக இருக்கிறேன், ஆனாலும் தனியாக இல்லை” (I Am Too Alone In The World, And Not Alone Enough) என்னும் கவிதை. தீவிர இலக்கிய ரசனையும் தேடல் மனோபாவமும் கொண்ட நவீன தமிழ் வாசகனின் வாசிப்புக்கு இது ஒரு இலக்கிய ரசனையின் தொடர்ச்சியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு அந்தக் கவிதையையும் பின் இணைப்பாக மொழியாக்கம் செய்து தந்திருக்கிறேன்.   
 

உங்கள் கரத்தை எனக்குத் தாருங்கள் 

அன்பு கெழுமிய உங்கள் கரத்தை எனக்குத் தாருங்கள்

நீட்டிய கரங்களை என்னுடன் பிணைந்து  நடனமாடுங்கள்.
உங்கள் ஆதுரத்தை தோளில் அணைத்து என்னுடன் நடனமாடுங்கள்.
ஒரே ஒரு மலர், அதற்கு மேல் எதுவும் இல்லை,
ஒற்றை மலர் என்பது நாம் தான்.

அதே லயத்தில் இணையும் நடனத்தில்

நீங்கள் என்னுடன் பாடலைப் பாடுவீர்கள்.
காற்றில் அசைகிறது புல், அதற்கு மேல் எதுவும் இல்லை,
காற்றில் அசைபடும் புல் என்பது நாம் தான்.

 

நான் *ஹோப் என்று அழைக்கப்படுகிறேன், நீங்கள் *ரோஸ் என்று அழைக்கப்படுகிறீர்கள்:
ஆனால் நாம் பெயர்களை மறந்து  ஆடுகிறோம் 
மலைகளில் ஒரு நடனம், அதற்கு மேல் எதுவும் இல்லை,
மலை நடனம் என்பது நாம் தான்.

 

குறிப்புகள் :

நடனமாடும் இருவரின் பெயர்களையும்ஆணின் பெயரை Hope (நம்பிக்கைஎன்றும், பெண்ணின் பெயரை Rose (ரோஜாமலர் ) என்றும்,  இரு பொருள்படும் அர்த்தத்தில் சொற்களை  உருவாக்கி கவிதையின் இன்னொரு பரிமாணத்தை ஏற்படுத்துகிறார் கவிஞர்.

புகழ் பெற்ற இந்தக் கவிதையை பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். புகழ்பெற்ற விஞ்ஞான புனைவு எழுத்தாளரான உர்ஸுலா கே. லாகுன்,  மொழிபெயர்ப்பு வழியாக தமிழில் நான் செய்தேன். நன்றி  “கேப்ரியல் மிஸ்ட்ரலின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

 


நீல நடனம்



கால்களிழந்த ஒரு  குழந்தை கேட்டது :
நான் எப்படி நடனமாடுவேன்?’
நாங்கள் சொன்னோம்,
உங்கள் இதயம் ஆடட்டும்

சோகையான ஒரு குழந்தை கேட்டது :
நான் எப்படி பாடுவேன்?’
நாங்கள் சொன்னோம்,
உங்கள் இதயம் பாடட்டும்

பின்னர் நொய்ந்த மலர் ஒன்று கேட்டது :
ஆனால், நான் எப்படி நடனமாடுவேன்? ’
நாங்கள் சொன்னோம்,
உன் இதயம் காற்றில் நடனமாடட்டும்

பின்னர் கடவுள் மேலே இருந்து பேசினார்
நான் எப்படி *நீலத்திலிருந்து இறங்குவேன்?’
நாங்கள் சொன்னோம்,
இந்த ஒளியைப் போல நடனமாட வாருங்கள்

அதனுடன் இணையாதவரின் இதயம்
தும்பு தூசிகளாய்ச் சுழல,
சூரியனுக்குக் கீழே
பள்ளத்தாக்கு முழுவதும் நடனமாடுகிறது.

குறிப்புகள் :

*நீலம் என்பது வானதைக் குறிக்கும் ஒரு சொல். அதேசமயத்தில் பண்டைய எகிப்து கடவுள்களின் நிறம் நீலமாக இருந்தது. இந்தியக் கடவுளான சிவன் மற்றும் கிருஷ்ணன் போன்ற பெருங்கடவுள்கள் நீல நிறம் கொண்டவர்கள்.  நீலம் வானத்தையும் நீரையும் குறிக்கும். ஒரு அண்ட அர்த்தத்தில், இது அதன் அடையாளத்தை வானத்திற்கும், ஆரம்பகால வெள்ளத்திற்கும் நீட்டித்தது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும், நீலம் என்பது வாழ்க்கை மற்றும் மறு பிறப்புக்கான ஒரு பொருளைப் பெற்றது.  நீலம் இயற்கையாகவே நைல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பயிர்கள், பிரசாதம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் அடையாளமாகவும் இருந்தது.

Those Who Do Not Dance என்னும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் கவிதையின் தலைப்பை நான் மாற்றியுள்ளேன்.

 

நான் தனியாக இல்லை


வெறிச்சோடியிருந்தது இரவு,
மலைகளிலிருந்து கடல் வரை.
ஆனால் உன்னை உலுக்கியவன் நான்
நான் தனியாக இல்லை!

வெறிச்சோடியிருந்தது வானம்,
நிலவு வீழ்கிறது கடலில்
ஆனால், உன்னைத் தாங்கியவன் நான்,
நான் தனியாக இல்லை !

வெறிச்சோடியிருந்தது  உலகம்,
எல்லா தசைகளும் துயருறுகின்றன.
ஆனால், உன்னைத் தழுவியவன் நான்
நான் தனியாக இல்லை!


பின் இணைப்பு :

இந்த உலகில் தனியாக இருக்கிறேன், ஆனாலும் தனியாக இல்லை

– ரெய்னர் மரியா ரில்கே

நான் இந்த உலகில் தனியாக இருக்கிறேன், ஆனாலும் தனியாக இல்லை
ஒவ்வொரு மணி நேரத்தையும் புனிதமாக்க.
நான் இந்த உலகில் மிகவும் சிறியவன், போதுமான அளவு சிறியவன் அல்ல
ஒரு விஷயத்தை புத்திசாலித்தனமாக, ரகசியமாக,
நீங்கள் விரும்பும் வகையில் பொய் சொல்ல.

நான் என் விருப்பத்தை விரும்புகிறேன், என் விருப்பத்துடன் இருக்க விரும்புகிறேன்
அது செயலை நோக்கி நகரும்போது;
அமைதியாக, சில நேரங்களில் நகரும் காலம், அருகில் வரும்போது,
ஞானிகளுடன் நான் இருக்க விரும்புகிறேன்,
அல்லது தனியாக.

உங்கள் முழு இருப்பையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக
எப்போதும் இருக்க விரும்புகிறேன்,
ஒருபோதும் பார்வையற்றவராகவோ அல்லது வயதானவராககவோ இருக்க விருப்பமில்லை,
உங்கள் வலிமையான அதிகாரத்துவமான உருவத்தையும் வைத்திருக்க.

நான் திறந்த நிலையை விரும்புகிறேன்.
நான் எங்கும் மறைந்திருக்க விரும்பவில்லை,
ஏனென்றால், நான் மூடி, மறைந்த இடத்தில், நான் பொய் சொல்கிறேன்.
என் அர்த்தத்தை நான் விரும்புகிறேன்.

உங்களுக்கு முன் ஒரு உண்மை : நான் என்னை தரிசிக்க விரும்புகிறேன்
நான் பார்த்த ஒரு ஓவியம் போல
நெருக்கமாக, நீண்ட நேரம்,
நான் இறுதியாக புரிந்து கொண்ட ஒரு வார்த்தையைப் போல,
நான் தினமும் பயன்படுத்தும் குவளை போல,
என் அம்மாவின் முகம் போல,
ஒரு கப்பல் போல
அது என்னைச் சுமந்தது.
சுழன்றடிக்கும் கொடிய புயலினூடே.


மொழியாக்கம்  : கௌதம சித்தார்த்தன் 

 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

கௌதம சித்தார்த்தன். தமிழின் நவீன இலக்கியத்தில் புகழ்பெற்ற நவீன சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் மற்றும் இலக்கிய விமர்சகர் ஆவார்.

நவீன தமிழிலக்கிய தளத்தில் குறிப்பிடத்தக்க இலக்கிய ஆளுமையாக கவனம் பெற்றிருக்கும்  இவரது படைப்புகள் இதுவரை தமிழில் 15 நூல்களாக வெளிவந்துள்ளன.
மேலும், உலகின் பிரதான 9 மொழிகளில் 10 நூல்களாக மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. ( ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, சைனீஸ், ரோமானியன், பல்கேரியன், போர்த்துகீஸ்..)

கடந்த 30 வருடங்களாக தமிழில் எழுதிக்கொண்டிருந்த இவர் தற்போது சர்வதேச மொழிகளில் எழுத ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் சர்வதேச மொழிகளில் இவரது படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, சைனீஸ், ரோமானியன், பல்கேரியன், போர்த்துகீஸ், அரபி, கிரீக், ஹீப்ரு, சிங்களம், ஷோனா போன்ற உலக மொழிகளில் வெளிவந்துள்ளன.


உன்னதம் என்கிறபெயரில் நவீன இலக்கிய இதழ் ஒன்றை ஆசிரியப் பொறுப்பில் இருந்து நடத்துகிறார். இதுவரை 40 இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த இதழ் உலக இலக்கியபோக்குகளில் கவனம் செலுத்துகிறது.

தற்போது, உலக இலக்கிய போக்குகளில் கவனம் செலுத்தி, சர்வதேச பத்திரிகைகளான Truth out,  California Quarterly,  Global research, Global Tamil News and pravda (Russia) போன்ற பல சர்வதேச பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.

தற்போது, ரஷ்யன்,  பிரெஞ்சு, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய பத்திரிகைகளில் Column எழுதிக் கொண்டிருக்கிறார்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.