Saturday, May 28, 2022
Homeபடைப்புகள்குறுங்கதைகள்சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்


மயக்கம் தந்த பெண்

ன் மேலதிகாரியாக ராமன் நாயர் இருந்தார். கடுமையான ஆள். ஒரு தடுப்புக்குப் பின்னால் அவருடைய உதவியாளனான நானும், தட்டச்சரும் அமர்ந்திருப்போம். இந்தக் கண்ணாடி அறைக்குள் வருவதற்கே கீழே உள்ளவர்கள் பயப்படுவார்கள். நாயருக்குக் கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம். ஏதோ ராகத்தை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். கண்ணாடி அறைக்கு வெளியே ஒரு வயதான முதியவரும், ஒரு பெண்ணும் இவரைப் பார்க்க வருவதற்கு தடுமாறிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. அவர்கள் இருவரும் கண்ணாடிக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்துவிட்டார்கள். நாயர் நிமிர்ந்து பார்த்தார். அடுத்தகணம் எழுந்து நின்றார். ஆசிர்வாதம் பண்ணச் சொல்லி, அந்த முதியவர் காலில் விழுந்தார். எங்களையும் அழைத்துக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சொன்னார். நாங்களும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினோம். அந்த முதியவர், நாயரை அப்போதுதான் அறிமுகம் ஆனவர் போல் பார்த்தார். அவர்களை உட்காரச் சொல்லி, அவர்கள் உட்கார்ந்த பிறகு நாயர் உட்கார்ந்தார்.

‘நான் உங்க ரசிகன். ரங்கபுர விஹாரா பாட்டை எத்தனையோ முறை கேட்டிருப்பேன். அந்தப் பாட்டைப் பாடினவங்க முன்னாடி உட்கார்ந்திருக்கிறதை நினைச்சா எனக்கு உடம்பு புல்லரிக்குது.’ என்றார். அதிகாரி தன் ரசிகராக அமைந்தது அவருக்கு நிம்மதியைத் தந்திருக்க வேண்டும். அந்த முதியவரிடம் இப்போது கம்பீரம் தோன்றியது. அவருக்கு எங்கள் துறையில் ஆகவேண்டிய வேலையைப் பற்றிக் கூறி சில ஆவணங்களைக் கொடுத்தார்.

இவ்வளவு நடந்ததையும் அந்தப்பெண் கூச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் பயந்திருப்பது போல் தெரிந்தது.

‘ரெண்டு நாள்லே ஆர்டர் ரெடியாயிரும். நீங்க வர வேண்டியதில்லை. நான் வீட்டுக்குக் கொடுத்து விடறேன்.’ என்றார் நாயர்.

அந்த முதியவர், ‘இப்ப இவ கூடத்தான் இருக்கேன்.’ என்றார்.

அந்தப் பெண் நாயரைப் பார்த்து, ‘நமஸ்காரம்’ என்று சொல்லி வணங்கினாள்.

அப்போதுதான் நாயர் அவளை நன்றாகப் பார்த்தார். அந்தப்பெண்ணின் புருவம் திருத்தப்பட்டிருப்பதும், லிப்ஸ்டிக் போட்டிருப்பதும் அவளின் அழகைக் கூட்டியிருந்தது. முகத்தைச் சுருக்கி எதையோ நினைவு படுத்தினார். அவர் முகத்தில் கலவரம் படர்ந்தது. முதியவரும் பெண்ணும் விடைபெற்றுக் கொண்டார்கள். அவர்கள் சென்றதும் நாயர் மயக்கம் வருவது போலிருக்கிறது என்றார். நாங்கள் அவரை ஓய்வறைக்கு அழைத்துச் சென்றோம்.

இரண்டு நாட்கள் கழித்து, நான்தான் அவர்கள் இருப்பிடம் சென்று ஆர்டரை அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வந்தேன். நாயருக்கு எதனால் மயக்கம் வந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை.


பிளாட்பாரத்தில் படுத்திருந்தவன்

நான் பம்பாய் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார பெஞ்சில் படுத்திருந்தேன். பிளாட்பாரத்திலேயே சற்று தள்ளி கற்களை வைத்துத் தீமூட்டி அம்மா சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தாள். வெயில் இன்னும் சற்று ஏறினால் பெஞ்சைத் தொட்டுவிடும்.

அப்பா சகலவிதமான தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்துவிட்டார். அவர் உயிர்வாழ்வது எனக்காகவும், அம்மாவுக்காகவும் தான் என்று எனக்குத் தோன்றியது. ஊரில் கடன்தொல்லை. சமாளிக்க முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் இருந்த கொஞ்ச சாமான்களை எடுத்துக்கொண்டு, எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று பம்பாய் வந்தாயிற்று. அப்பா வீடும், வேலையும் தேடி காலையில் போனவர், எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை. நான் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். இரக்கமற்றவனாக இருந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அப்பா இரவில் வந்தார். தாராவியில் வீடு பார்த்திருப்பதாகவும், காலையில் செல்லலாம் என்றும் கூறினார். அன்று இரவு பல கெடுபிடிகளுக்கு இடையே நாங்கள் ரயில்வே பிளாட்பாரத்தில் தங்கினோம். அடுத்தநாள் காலை வீட்டிற்குச் சென்றோம். முன்புறம் கிச்சன் உள்ள சிறு அறைதான் வீடு. சுற்றி ஆயிரக்கணக்கான வீடுகள். ஏராளமான தமிழர்கள் வசிக்கும் இடம். அப்பாவிற்கு ஒரு சின்ன நிறுவனத்தில் கணக்கு எழுதும் வேலை கிடைத்தது. நான் வேலை தேடிக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் நாசரைச் சந்தித்தேன். அவனுடன் சேர்ந்து கடத்தல் தொழில் வேலை பார்த்தேன். கடத்தல் என்றால், ஒரு பொருளை குறிப்பிட்ட நேரத்தில் ஒருவரிடமிருந்து பெற்று இன்னொருவரிடம் குறிப்பிட்ட நேரத்தில் கொடுப்பது. கஸ்டம்ஸிலோ போலீசிலோ மாட்டிக்கொள்ளக் கூடாது. அவர்களுக்கு மாமூல் கொடுத்துவிடுவார்கள் என்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் சில சில்லுண்டி வழிப்பறி கோஷ்டிகளிடம் பொருளைப் பறிகொடுத்து விடக்கூடாது. பெரிய கோஷ்டிகளிடையே பரஸ்பர புரிதல் இருக்கும். யாரென்று சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத சில்லுண்டி கோஷ்டிதான் பிரச்சினை என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒருநாள், அப்படி ஒரு சில்லுண்டி கோஷ்டிக்கும் எங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. நான் பொருளைக் காப்பாற்றிவிட்டேன். தகராறில், நாசருக்கு மண்டை உடைந்துவிட்டது. மருத்துவமனையில் சேர்த்துவிட்டோம். என்னை முதலாளி பார்க்க விரும்புவதாக அழைத்துச் சென்றார்கள். பங்களாவில் நிறைய ஆட்கள் புழக்கம் இருந்தது. முதலாளி வரும்போது அவரைச் சுற்றி நான்கைந்து பேர்கள் கூட வந்தார்கள். நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்திருந்தார். பட்டு வேஷ்டி, பட்டு முழுக்கைச் சட்டை அணிந்திருந்தார்.

‘தமிழ் பையனா?’, என்று தமிழில் கேட்டார்.

நான் ‘ஆமாம்! மதுரையிலிருந்து இங்கே வந்திருக்கோம்’, என்றேன்.

‘எல்லோரும் இப்படி வந்தவர்கள்தான். உதிரித் தொழிலாளிகள். இவர்களுக்குப் பிரச்சினை என்றால் போய் நிற்க, ஆதரவு கேட்க ஒருஇடமில்லை. இப்படித்தான் நான் உருவானேன்.’ என்றார்.

கண்ஜாடை காட்டினார். அருகில் நின்று கொண்டிருந்தவன் ஒரு தோல்பையை என்னிடம் கொடுத்தான். என்னை வாங்கிக் கொள்ளச் சொன்னார். முதலாளி சென்றுவிட்டார். நான் வெளியே வந்து தோல்பையைத் திறந்து பார்த்தேன். பணம் இருந்தது. நான் கொஞ்சதூரம் சென்றிருப்பேன். யாரோ பின்தொடர்வதாக உணர்ந்தேன். நான் சுதாரிப்பதற்குள் என் வலது தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. தோல்பை நழுவிக் கீழே விழுந்தது.

பையை எடுத்துக்கொண்டு வந்தவர்கள் சென்று விட்டார்கள். என்னைக் கொல்ல முயற்சி செய்யவில்லை. முதலில் சில்லுண்டி கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதில் ஒருவன் முதலாளியின் பின்னால் நின்று கொண்டிருந்தவன் என்பது என் நினைவுக்கு வந்தது. இன்றுவரை, இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. நானும் அப்பா மாதிரி, ஒரு கடையில் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். முன்னேறுவதற்கான வழி இல்லை!


  • சுரேஷ்குமார இந்திரஜித்
பகிர்:
Latest comments

leave a comment

error: Content is protected !!