கஸல்


                     ஈர விறகிலிருந்து எழும் புகைபோல

                     உன் நினைவுகள் வருகின்றன……..

த்தனை ஆண்டுகள் கேட்கத் துணியாத கஸல் பாடல்களைக் கேட்டதும் நினைவுகள் விழித்தெழுகின்றன நீலவேணிக்குள்.  இன்னும் ஈரம் காயாத நினைவுகள். காலம் சேர்க்கப்பட்டதால் நிகழ்ந்த  வேதி மாற்றத்தில் வலி, இனிமையாக மாறியிருந்தது; விரலில் குத்தும் ரோஜா முள்ளைப்போல.

இரவானது மின்னொளியைக் கடன் வாங்கி அந்தப் பெருந்திடல் முழுவதும் ஹோலி கொண்டாடிக் கொண்டிருந்தது.  டிசம்பர்களில் ஹைதராபாத்தில் நிகழும் பிரம்மாண்டமான பொருட்காட்சிதான் அது.

இளம் நீலவேணிக்குக் கணினியில் பயிற்சி கொடுக்கும் அலுவலக நண்பன் யூசுஃப், ஒரு மாறுதலுக்காக அவளை  இங்கு அழைத்து வந்தான்.  கடைகளைச் சுற்றிவிட்டுத் திரும்பும் வாயிலருகே இருந்த மண்டபத்திலிருந்து கஸலின் இனிமை நெஞ்சை வருட,  இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

மண்டபம் வட்ட வடிவிலிருந்தது.அதன் டோம்- பிஸ்தா பச்சை நிறத்தில். மண்டபத்தின் முன்னால் அரைவட்டப் படிகள். மேலேறிச் சென்றதும் தூண்களில், விதானத்தில் மிளிர்ந்த தங்கப்பூச்சு, ஒரு சுல்தானின் தர்பாரை நினைவுபடுத்தியது.  உயர்ந்த விதானத்திலிருந்து தொங்கும் நீண்ட சரவிளக்கு சோபையாக ஜொலித்தது.விளக்கின் கீழே, ஸாட்டின் திண்டுகளிட்ட  தாழ்வான மேடை.நடுநாயகமாக கஸல் வித்வான். ஒருபுறம் ஹார்மோனியம். மறுபுறம் தபலா. மேடைக்கு எதிராக வழி. இரண்டு பக்கமும் வெள்ளை மல்மல் போர்த்திய தட்டையான  மெத்தைகள். அவற்றின்மேல் இடப்பக்கம் பெண்களும் வலப்பக்கம் ஆண்களுமாகப் பிரிந்து அமர்ந்திருந்தனர். பின்னால் நெகிழி நாற்காலிகளில் பெரிசுகள்.

புரிந்தும் புரியாத உருது, நீலவேணிக்குள் கஸலின் வலியை மெல்ல இறக்கியது. தபலா வாசித்தவன் மட்டும் இளைஞன்; மேடையிலிருந்த ஏனையோரைப் போலன்றி, பளபளப்பில்லாத சாதாரண சர்ட்டும் பேண்ட்டும் அணிந்திருந்தான். பாடலில் லயித்திருந்த அவனது வட்ட  முகத்தில் அவ்வப்போது மென்னகை இழையோடியது. விரல்கள் அனாயாசமாகத் தபலாவைத் தட்டியும் வருடியும் கொண்டிருந்தன.

யூசுஃப், வாட்சை உயர்த்திக்  காண்பித்துக் கிளம்புமாறு கோமாளி சைகை செய்தான். மொபைல் எல்லோரிடமும் புழங்காத காலமது. வேணி அரைமனதாக எழுந்து போனாள். அவனுடைய பீவி அவனுக்காகக் காத்திருப்பாள்.

அடுத்த நாள்  பயிற்சி முடித்து  தன்னறைக்கு  வந்தாள் வேணி. கீழ்வானத்திலிருந்து   ஒவ்வொரு நிறமாக இரவு அழிக்க அழிக்க, அவள்  மனதை ஏதோ கவ்வியிழுத்தது  கண்காட்சித்திடல், புகைவண்டி நிலையத்தையடுத்தே இருந்தது. தவிர, அலுவலக விடுதியிலிருந்து ஒரே நெடிய வழிதான். எனவே ஆட்டோவில் போவதில் சிரமமேதுமில்லை. வேணி, ஆட்டோவைப் பின்வாயிலுக்குப் போகச்சொல்லி நேராக மண்டபத்தையடைந்தாள்.

ஒன்பது மணிக்குத்தான் கஸல் ஆரம்பமாம். எட்டுதான் ஆனது.அந்தப் பெருந்திரளில் திருவிழாவில் தொலைந்த பிள்ளையாகத் தன்னை  உணர்ந்தாள். பயிற்சிக்கு வந்த வேறு யாரையாவது கூட அழைத்து வந்திருக்கலாந்தான்.அவர்கள்  யூசுஃபைப் போல உடனே  கிளம்பக்கூடும். கஸல் ரசிகையான வேணிக்கு அதில் உவப்பில்லை.நேரத்தைக் கடத்தவேண்டி அருகிலிருந்த காஷ்மீரிக் கடைகளில் தோண்டித் துருவி கையால் செய்த ஓர் அற்புதமான ஆக்ஸிடைஸ்ட் கழுத்தணியைக் கண்டுபிடித்து வாங்கினாள்.

ஒன்பதிற்கு மண்டபத்தையடைந்த வேணி, சாய்ந்துகொள்ள வாகாகத் தூணை அண்டி அமர்ந்தாள். நிகழ்ச்சி துவங்குவதற்கான சுவடில்லை. அந்தத் திடலானது பழைய நகரத்திற்கு அருகிலிருந்தது. காலத்தைப் பொருட்படுத்தாத மக்கள்,  உண்டு களித்து சாவகாசமாக வந்தார்கள். அவர்கள் தன்னை வித்தியாசமாகப் பார்த்தபோதுதான், தான் அணிந்திருந்த  ஜீன்ஸ், ஷர்ட் அவளுக்கு உறுத்தியது. ‘சக பயிற்சியாளர்களைப் போல அறையில் தூங்கி ஓய்வெடுக்காமல் தன்னந்தனியாக வந்து-இப்படி எதிலும் ஒட்டாது ஏன் காத்திருக்கிறேன்? ‘

தன் ஆயாசத்தை மாற்றவேண்டி கைப்பையிலிருந்த ஆபரணத்தை வெளியிலெடுத்தாள் வேணி . பெருக்கெடுத்திருந்த மஞ்சள் ஒளியில் நகை, புராதனமாகத் தெரிந்தது. இப்படியும் அப்படியுமாகத் திருப்பி அதன் அழகில்  லயித்திருக்கையில் ,’திடும்,திடும்’ சப்தம் கேட்டுத் தூக்கிவாரி நிமிர்ந்தாள். மேடையில் நேற்றிருந்த தபலா குண்டன் அவளைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். அதில் ஒரு வசீகரம் தெரிந்தது. நீலவேணி வெட்கித் தூணின் பின் நகர்ந்தாள்.

இன்று பாடகரும் ஆர்மோனியக்காரரும் வேறு ஆட்கள். சுருதி சேர்க்கச் சேர்க்க மக்கள் சிறு சிறு குழுக்களாக வந்து குழுமினார்கள். அவன் சிலரை நோக்கி சலாம் செய்தான். இதே இடத்தைச் சேர்ந்தவன் போல.

வேணி, மெதுவாகத் தூண் மறைவிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவனது கீரிக்கண்கள், நீலவேணியின் பெரிய கண்களோடு நேரடியாக மோதின. நிலைகுலைந்த அவள் மீண்டும் தூணின் பின். சென்ட்களின் கலவை மணம், விரவியிருந்த குளிரில் ரம்மியத்தைத்  தோய்த்திருந்தது. பத்து மணிக்குப்பிறகு இசை சூடுபிடிக்க ஆரம்பித்தது .

அவன் அண்ணாந்து அரைக்கண் செருகிய நிலையில் தபலா மீது அனாயாசமாக விளையாடிக் கொண்டிருந்தான். சற்றே பூசலான உடல். மீசையில்லை. கொழுகொழு கன்னங்கள் இறுக்கமாகப் பளபளத்தன. அவன் தலையாட்டுகையில், நெற்றியில் கோரை மயிர்க்கீற்று விழுந்து புரண்டது. கூரான நாசி. மெல்லிய நீண்ட ரோஸ் உதடுகள். கண்ணைக் கூசாத பழுப்பு வெள்ளை உடல்.

              ‘சர்பத் என்று நினைத்து உன் கண்விஷத்தை அருந்தினேன்.

               வாழ்க்கை இன்னும் போதையாயிற்று ‘

அவன் விழிகள் முழுதாய்த் திறக்க, நீலவேணி தலையைத் தூணின் பின் இழுத்துக்கொண்டாள்.  இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில் மணி பதினொன்று ஆகிவிட்டது. புது இடத்தில் தனியாகப் போகவேண்டுமே. ஆட்டோ கிடைக்குமோ என்னவோ? எனவே ஒரு இடைவெளியில் வேணி, தன்னைப் பெயர்த்து எழுந்துபோனாள். விடுதிக் கட்டிலில் நீச்சலடித்து நீச்சலடித்து, இரவு விடைபெற்றபோதே அவள் கண்ணயர்ந்தாள்.

மறுநாள் யூசுஃபிடம் உபரியாக இருந்த கினெடிக் ஹோண்டா ஸ்கூட்டரை,  வேணி எடுத்து வந்திருந்தாள். மாலை எரிந்தணைந்து, இருள் புகைய ஆரம்பித்துவிட்டது. கூட்டத்தில் நேற்றுபோலத் தனியாகத் தெரிய வேண்டாமென்று சுடிதார் அணிந்து, பொட்டு வைக்காமல் மிதமாக அலங்கரித்துக்கொண்டாள். கேஷுவல். இரவு ஒன்பது மணிக்குப் பிறகே கிளம்பிப் போனாள். சாவதானம். விளக்குகளணிந்த நகரம் டோம்களோடு மொகலாயப் பேரரசாகத் தெரிந்தது. ஸ்கூட்டரிலிருந்து இறங்கி மண்டபத்தை நோக்கித் தாவும் பாதங்களை அழுத்தி நடப்பதற்குள்…..பெரும்பாடு!

தாமதமாகி விட்டதால்  இன்று தூணோரம் கிடைக்கவில்லை. நீலவேணி கால்கள் பின்ன நடந்து, கிடைத்த இடத்தில் உடலைக்குறுக்கி உட்கார்ந்தாள். அங்கும் இங்கும் -பின் சுற்றிவரப் பார்வையை ஓடவிட்டுக் கடைசியாக மேடையைப் பார்த்தாள். யதேச்சை.

பாவீ…..அவளைப்பார்த்துக் கண்களை விரியத் திறந்துசிமிட்டினான் . நீலவேணியின் முதுகுத்தண்டு சில்லிட்டது. விரிந்த புன்னகையை மறைக்கவேண்டிக் கழுத்தை ஒடித்து வெளியே வான் பார்த்தாள். இந்த நட்சத்திரங்களுமல்லவா அவனோடு சேர்ந்து கண்ணடிக்கின்றன.

‘கன்னக் கதுப்புகளால் குழந்தைபோலத் தெரிந்தாலும் ஒன்றும் தெரியாதவனல்ல இவன். கன்னத்தைக் கடித்து வைக்கவேண்டும். இதென்ன அத்துமீறி? மனதிற்கேது அத்தும் ஆதியும். ‘நீலவேணியின் கற்பனை, ஆர்மோனியத்தின் சுருதியோடு இழைந்து அந்த வெளியெங்கும் உலவியது. அவன் காதோரம்…. நெஞ்சுக்குழி….மெத்து மெத்தென சுத்தமாகத்  தெரியும் பாதம் …..என எங்கும் …..

இன்று பாடகர் மட்டும் வேறு. வேணியை அடுத்து அமர்ந்திருந்தவள் புன்னகைத்தாள். இதமான நட்பின் புன்னகைதான். ஆனால் தனக்கும் அவனுக்குமிடையே மூன்றாம் மனிதர் நுழைவதில் வேணிக்குச் சம்மதமில்லை. எனவே, ஒரு வெறுஞ்சிரிப்பை மட்டும் பதிலாக்கினாள்.

இப்போது இவன் தபலாவோடு ஐக்கியமாகிவிட்டான். வெளியே எழும்பும் பவுர்ணமி நிலவுபோல அவனுடைய முகத்தில் தேஜஸ் கூடியது. இவன் பிறப்பெடுத்ததே தபலா வாசிக்கத்தான் என்று பட்டது. வேணி கண்ணெடுக்காமல் அவனை அருந்திக் கொண்டிருந்தாள்.

 நெடியதாக இருந்தது இவ்வாழ்க்கை;

             நீ வழித்துணையாக வந்தாய்,

             இப்போது பயணம் குறுகியதாக இருக்கிறது .

ஒரு காதலி ரகசியம் பேசுவதுபோலத் தபலா, பாடும் குரலை அமுக்காமல் குமுக்கியது. கடைசியில் விளாசித் தள்ளினான். அணிந்திருந்த வெளிர்நீல சட்டை, அவனது தோளசைவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடியது. கூட்டத்தில் ஷாபாஷ்களும் வாஹ், வாஹ்க்களும். அவற்றைத் தலையசைத்து அங்கீகரித்தவனின் பெருமிதம், நீலவேணியையும் தழுவியது.

பெண்கள் தங்களின் விருப்பப் பாடல்களைத் துண்டுச் சீட்டுக்களில் எழுதித்தர, பிள்ளைகள் அவற்றை எடுத்துக்கொண்டு மேடைக்கு ஓடுவதும், சிரிப்பும் கும்மாளமுமாக – ஒரு குடும்பவிழா போல அந்தச்சபை களைகட்டியது.

வாசிப்பை முடித்து அவன் எழுந்ததும் ஆறடி உயரமும் இளந்தொந்தியும் புலப்பட்டன. இரண்டு பிள்ளைகள் ஓடிவந்து, மேடையை விட்டு இறங்கியவனின் கைகளோடு பிணைந்துகொண்டன. பின்னால் நடந்துவந்த அவர்களது தாயின் பால்வண்ண முகம் பக்கவாட்டில்  பளிச்சிட்டது. ஒரு வாலு, செருகியிருந்த இவன் சட்டையைப் பிடித்து உருவியது. எதையும் கண்டுகொள்ளாத இவன், பிள்ளைகளின் தாயிடம் பல்லைக்காட்டிப் பேசினான். ‘பால்யகால சகி ?’

‘யாராக இருந்தால் எனக்கென்ன?’  வாகனங்கள் நிறுத்துமிடத்தை நோக்கி விரைந்த வேணியைத் தொடரும் அழுக்கு படிந்த பார்வைகள்……’ சே! அவனுடைய பார்வை மட்டுமே தூய்மையானது- இப்போது திறந்த பூப்போல’

இன்று வேணி நுழையும்போதே இருக்க இடமில்லாதபடி நல்ல கூட்டம். மேடையில் பங்கஜ் உதாஸ் தன்னுடைய வாத்தியக்குழுவோடு பாடிக்கொண்டிருந்தார். கூட்டத்தில்  அவனைத் தேடியலைந்த நீலவேணியின்  விழிகள் ஏமாந்தன. பங்கஜ் உதாசின் குரலுக்கு ரசிகைதான்  வேணி. இப்போது ஏனோ, மனது லயிக்கவில்லை. அவளுக்குள் பொங்கிப்பொங்கி வந்தது.

சோர்ந்து திரும்பும்போது கொல்லென்ற நகைப்பு கேட்டுத் திரும்பினால் – ஒரு ரௌடிக்கும்பல்-வேணியைச் சுட்டியபடி. அதன் ஓரத்தில் இவன்! இமைப் பர்தாவை மீண்டும் உயர்த்திப் பார்த்தால்-அவனேதான்! நீயுமா?! தன்மேல்  தீக்கங்கு வீசப்பட்டதைப்போல நிலைகுலைந்தவள், ஓட்டமும் நடையுமாக அகன்றாள். அந்தக்கணமே தான் மாயமாகிவிட விழைந்தாள்.

அவனா இப்படி? அவ்வளவுதானா அவன்! அப்படியென்றால் எதற்குமே பொருளோ, மதிப்போ இல்லையா? வேணிக்குள் ஆதங்கம் அடங்கவில்லை. இரவின் பிரேதத்தின்கீழ் அந்தநாள் நசுங்கியது.

வெய்யில்  உரைக்க எழுந்த வேணிக்கு  அனத்தியது. டிசம்பர் நள்ளிரவுகளில் பனியில் அலைந்ததால் வந்த வினை. இந்த நகரத்தின் குளிர், வெக்கை-என எல்லாமுமே எல்லையைத் தொடுமாம். மனிதர்களும் அப்படித்தான் என்று அவளுக்குத் தோன்றியது.

எப்படியோ பயிற்சியை ஒப்பேற்றி அறைக்கு வந்து மெத்தையில் வீழ்ந்ததுதான் தெரியும். நிலவு பழுத்துக் கீழ்வானில் தொங்க ஆரம்பித்தபோதே கண்விழித்தாள். இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். ‘பட்ட அவமானம் போதாதா?’ பொட்டலமாகப் போர்வைக்குள் கிடந்தவள், மீண்டும் கண்களை வலிய மூடினாள்.

மலைப்பாம்பாக உருண்டு திரண்ட கைகள் அவளைப் பின்னாலிருந்து வளைக்கின்றன. துப்பாக்கி போன்ற விரல்கள் இடையில்  தாளம் போட… தாதிகிட… கிட…கிட. திடுக்கிட்டு விழித்த அவளுடல் குளிரில் நடுங்கியது. தன் ஆழ்மனதிலும் அவன் உடல்தானே…. அதுதான் இயற்கையோ….உடல்தானே  கனவு, நினைவு, ஆசை, மோகம் –எல்லாவற்றையும் கொள்ளும் கலமாக…..

நீலவேணியின் மனத்திரையில் அவன் முகம் அண்மைக்காட்சியில் தெரிந்தது. நாம் பொதுவெளியில் பார்க்கும்  சராசரி  முகந்தான் அவனது. ஆனால் அரிதான  ஏதோவொன்று  புலன்களுக்குப் புலப்படாமல் அதிலிருந்தது. கனவில் மிதக்கும் அந்தக் கண்களா? அதெல்லாம் கிடக்கட்டும். இப்போது – இந்தக்கணம் அவன் தன்னைத் தேடிக்கொண்டிருப்பானா அல்லது பால்யகால சகீ ……  எப்படியும் இருக்கட்டும். அன்று அவனுடைய வீணாய்போன கூட்டாளிகள், வேணியைப் பார்த்துக் கேலி பேசியிருக்கக்கூடும். அதை அவன் ஏன் தடுத்திருக்கக் கூடாது? அவன் முகத்திலும் எக்காளம் இருந்ததோ…..

மாத்திரையை விழுங்கியபின் போர்த்தியபடி பால்கனியில் வந்து நிலா பார்த்தாள். முழுதானாலும் பிறையானாலும் -எந்த நிலையிலும் சந்திரனை அவள் நேசித்தாள்; நேசிக்கிறாள்; நேசிப்பாள்.

‘இன்று தனிமை ஒரு பழைய நண்பனைப்போல வந்திருக்கிறது.’ எப்போதோ தான்  படித்த ஃபைஸின் கஸல் வரிகள் வேணிக்குள் நீர்வளையங்களாக மீண்டும் மீண்டும்…… . இரவின் கல்நெஞ்சம் முழுதும் முட்கள். வேணிக்கு உடம்பு வலித்தது.

விடியுமுன்பே பள்ளிவாசலிலிருந்து உயிரைச் சுண்டி எழுப்பியது ஆழமான தொழுகைக் குரல். அவனைப் பார்த்து எத்தனையோ நாட்களாகிவிட்டதாக நீலவேணிக்குத் தோன்றியது. காய்ச்சல் வடிந்துவிட்டது. ஜன்னலில் ஜோடிப்புறாக்கள் குளிரில் ஒன்றின் மேலொன்றாக ஒட்டியிருந்தது கண்ணாடிக் கதவு ஊடாகத் தெளிவற்று தெரிந்தது.

ஒருவழியாக மாலை வந்தேவிட்டது. இதற்காகவே வாங்கிய கறுப்பு ஸல்வார் கமீஸும் தொங்கட்டானும் அணிந்து கண்ணாடிமுன் நின்ற வேணி, பளபளக்கும் துப்பட்டாவால் பின்னந்தலையை மூடிக்கொண்டாள். ‘முதலில் உங்களில் ஒருத்தியாக. பிறகு உன்னில் ஒரு நீரோட்டமாக ….. ‘இன்று வேணி, பார்த்துப் பார்த்து ஒப்பனை செய்துகொண்டாள். இப்போதெல்லாம் சபையில் அவள் தன்னைத் தனியளாக உணர்வதில்லை. இன்று அவன் வாசிப்பானா என்று அவளுக்குள் பதைப்பு.

தனியே மேடையை நோக்கி வந்த அவனுடைய கண்களும் சிவந்து சோர்ந்து – உள்வாங்கி. ‘குடித்திருப்பானோ?’ கசங்கி சற்று  அழுக்காக இருந்த சட்டையும் மழிக்காத பச்சை பாவிய முகமும் பீடா மெல்லும் சிவந்த வாயும் அவனை செக்ஸியாகக் காண்பித்தன. இரவானது மந்தகாசமாக ஒழுகியது.

நீலவேணியைக் கண்டதும் அவன் கண்களில் மின்னல் வெட்டியது. அது கொடுத்த துணிச்சலில் வேணி, அவனுக்கு நேரெதிராக இரண்டாவது வரிசையில் அமர்ந்து அவனது கண்களில் வீழ்ந்து தத்தளித்தாள். இதற்குள் அறிவிப்பு முடிந்துவிட்டது. ‘அவனது பெயரைக் கேட்காமல் விட்டுவிட்டோமே ….’ பெயரென்பது ஒரு குறியீடு மட்டுமே.அவன் குறியீடுகளையும் எல்லைகளையும் கடந்தவன்.

இதோ, கஸல் துவங்கிவிட்டது. அவனையே கவனித்துக்கொண்டிருந்த வேணிக்குத் தபலா அவனுடைய ஒரு அங்கமாகவே தோன்றியது.

சாளரங்களுக்குத் தெரியும் 

           யாருக்காகக் காத்திருப்பென்று.

நீலவேணிக்குள் உருகிக் கரைகட்டியது கண் ஓரம்  கசிய, துப்பட்டாவில் துடைத்துக்கொண்டாள். இதற்குத்தானா, இதற்குத்தானா – இத்தனைகாலம் காத்திருந்தாள் ? மேல்கை தூக்கி அவனும் கண்ணைத் தீற்றிக் கொள்கிறானே ….. இதைத்தானா, இதைத்தானா எங்கெங்கோ தேடினாள் ?

நாற்காலியிலிருந்த வி.ஐ.பி. ஒருவர், உன்மத்தம் பிடித்ததுபோல் எழுந்துவந்து ஐந்நூறு ரூபாய் நோட்டுக்களை அள்ளி மேடையில் வீசினார். மூவரும் ஸலாம் செய்து கைக்கெட்டியதை எடுத்துக் கொண்டனர். நீலவேணியின் கண்கள் அவன்மீதும், அவன் கண்கள் அவள் மீதுமாக இடம் பெயர்ந்திருந்தன.

முடிவற்ற பாடல் இதற்குள் முடிந்துவிட்டது. எல்லோரும் எழ, இளகியிருந்த  வேணியும் தன்னைச் சேகரித்து எழுந்தாள். அவர்களுக்கிடையே சேர்ந்திருந்த சுருதியை யார் யாரோ ஊடே புகுந்து கலைத்தார்கள். அவன் தபலாக்களை அப்படியே போட்டுவிட்டு இறங்கி நீலவேணியை நோக்கி வந்தான். இப்போது அவளது இதயம் தபலா வாசித்தது.

பணத்தை வாரியிறைத்த பெரிய மனிதர், அவனை இழுத்துத் தன் பருத்த தேகத்தில் புதையக் கட்டிக்கொண்டார். நீலவேணியை நோக்கிய அவன் பார்வையில் ஏக்கம். பெரியவர், கொடுத்த காசுக்கு அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஏதேதோ பேச, இவனது வெளிறிய முகம் அங்கீகரித்தது.

கூட்டம் வெலவெலக்கவே, உதிரிப்பட்ட வேணி, வெளிப்புறத் தூணில் ஒதுங்கினாள். வாடை ஊசிகளாகக் குத்த, அவள் அணுக்களில் துடிப்பு. தனியாக நிற்குமவள் மேல் கடந்து போவோரின் பார்வைகள் தேள் கொடுக்காகக் கொட்ட, நீலவேணி வானை வெறித்தாள். யாவற்றையும் அவள் பொறுப்பாள் – அவனுக்காக. அவன் குரல் எப்படியிருக்கும்?’ ஒரு விண்மீன், எந்த நிமிடமும் விழுந்து விடுவேனென சிமிட்டிக் கொண்டிருந்தது.

பெரிய மனிதரிடமிருந்து விடுபட்டு வந்தவனை நண்பர்களும் தெரிந்தவர்களும் சுற்றிவளைத்தனர். அவன் பரந்த முகத்தில் தயக்கம். ‘ சருகாய் உலர்ந்திருக்கிறேனடா – உன் ஒரு மூச்சில் எரிய. எப்படிப் புரியவைப்பேன்?’ நீலவேணியின் நிமிடங்கள் ‘ஆலங்கட்டிகளாக வீழ்ந்து கரைந்தன. ‘அவன் வந்து பேசுவானென்று என்ன நிச்சயம்?’ இடித்தது  பிரக்கினை. ஆனால் அவன் கண்களில் தனக்கான இறைஞ்சுதல் அப்பிக்கிடந்ததை நீலவேணி  அப்பட்டமாகக் கண்ணுற்றாள். முந்தாநாள் இரவு தன் கினெடிக் ஹோண்டாவைப்  பின்தொடர்ந்த முரட்டு பைக்கின் நினைவு இப்போது வந்து அவளை அச்சுறுத்தியது. தபலா வித்வான் தன்கூடத் துணைக்கு வரவா போகிறான் ?  வேணி, திரும்பிப்பாராது விரைந்தாள்.

அறிவு சொல்வதை மனம் கேட்பதில்லை. தூங்கப் பணித்தால் அவனுடைய நினைவுகளுக்கு விழிகளைக் காவல் வைத்தது. இன்றும் சிவராத்திரிதான்.

நிறமும் மணமும் நிறைந்ததொரு ரோஜாவைப்போலப் பொழுது புலர்ந்தது. காலைப் பனியினூடே யாரையோ பின்னிருத்தி ஸ்கூட்டரில் வருவது …. . ‘அவனெப்படி இங்கே?!’ பால்கனியில் டீயை உறிஞ்சிக்கொண்டிருந்த வேணி, நொடியில் சிலிர்த்தாள். வேறு யாரோ அண்மையாக வந்து கடந்துபோனார்கள். இதென்ன மயக்கம் ? நிஜமெது, நிழலெது? உறக்கமெது, விழிப்பெது? குழம்பிய குட்டையாக நீலவேணி.

வேணி, தன்  நேற்றைய அவசரத்தைக் கடிந்துகொண்டாள். ‘நேற்றிரவு அவன் என்ன சொல்ல வந்திருப்பான்?’, இந்தக் கேள்வி நீலவேணியின்  இதயத்தைப் பிறாண்டிப் பிறாண்டி ரணப்படுத்தியது.  அவனது சொற்களால் மருந்திட்டால் மட்டுமே அது ஆறும்.

இன்றிரவு, அவனை சந்திக்காமல் அவள் வரப்போவதில்லை. பொழுதே விடிந்தாலும் சரி. அவள் அவனுக்காகக் காத்திருப்பாள். கொட்டும் பனியில் நிலவோடு, விண்மீன்களோடு யுக யுகமாகக் காத்திருப்பாள். இந்தப் பகல் ஏன் இப்படி ஊர்கிறது? இரவு இளமையாக இருந்தது. வேணி  , புடவையைச் சுற்றிக்கொண்டு கண்ணாடி முன் வந்தாள். கண்ணாடியில் அவன் முகம் தெரிய, அவளுக்குள் முடிச்சுக்கள் அவிழ்ந்தன. அவன் தன்னைப் புடவையில் அடையாளம் காண்பானா? அகத்தையே கண்டுபிடித்தவனுக்குப் புறமா தெரியாது?

வேணி பறக்கும் உணர்வில் சாலைகளைக் கடந்து வளாகத்தையடைந்தாள். அங்கு கடைகளில்லை. மூங்கில்களும் தட்டிகளும் அறுந்த கயிறுகளும் அரையிருளில் சிதறிக் கிடந்தன. கால்கள் மண்டபத்திற்கு ஓடின. அங்கே மேடையைக் காணோம்; மெத்தைகளைக் காணோம்; மனிதர்களையே காணோம். நிலவிய நிசப்தம் காதையடைத்தது. இசைத்துக்கொண்டிருந்த அவளது தந்தி அறுந்து தெறித்தது.

‘நேற்று கடைசி தினமென்றுதான் அந்தத் தவி தவித்தானோ?’ வெற்றுத் திடலிலிருந்து வீசிய காற்று,  சமைந்த நீலவேணியின் சேலைத் தலைப்பைச்‌ சரித்து, கூந்தலைக் கலைத்து அலங்கோலம் செய்தது. இரவின் ரத்தம், அதன் நாளங்கள் வெடிக்குமளவிற்குப் பெருக்கெடுத்து ஓடியது. அந்த  இருள் பருத்துக்கொண்டே வந்தது.

எங்கிருந்தோ கஸல் கேட்டது;

இத்தனை பெரிய நகரம்-ஆனால்

என்னவர் யாருமே இல்லை……..


  • பா.கண்மணி.

2 COMMENTS

  1. அருமை 💘 இதை போன்ற கதைகள் பகிருங்கள் நண்பர்களே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.