மீண்டும் நீளும் தேவதையின் கைகள்

 


        ண் விழித்தேன். இனிய புன்னகையோடு முன்னே தேவதை நின்றாள். கைகளை நீட்டினாள், அப்போது நான் நிலத்தில் கிடந்தேன்.  பெரும் காற்று சுழன்று அனைத்தையும் தன்னுள் அடக்கி உயர்ந்தது. தேவதையின் புன்னகை குறையவில்லை. முன்னொருநாள் என்முன்னே தோன்றிய, நான் தேவதையென்று நம்பியவளுக்கு முகமில்லை, சிறகுகளில்லை, நான் ஆதரவுக் கரம் நீட்டிய போது என்னை நிலத்திலேயே விட்டு விட்டு சென்றுவிட்டாள்.
இப்போது நம்பிக்கையோடு கரங்களை நீட்டினேன், சுழலும் காற்று என்னை இழுத்துக் கொண்டது. நான் சிறு சிறகாகி, சுழன்று மேலெழுந்து சிதைந்து அதிர்ந்து, பின் விடுபட்டு மௌனமாய் உயர எழுந்து எங்கோ தொலைவில் மறைந்து போனேன்.

கீழே கைகள் விரித்து, கண்கள் தெறித்திட, கண்டிய உடல் காணுவாரற்றுக் காத்துக் கிடந்தது. என் வாழ்வின் முடிவை என்னால் மாற்றமுடியாது, ஆனால் அது எப்படி நடந்தது என்று அறிந்து கொள்ள நானே எனது வாழ்வை ஒரு முறை ரி வைண்ட் பண்ணிப் பார்த்துக் கொள்ளலாமல்லவா?

மூன்று அறைகளைக் கொண்ட ஒரேமாதிரியான  பழைய சிறிய வீடுகளை அடுக்கி வைத்தது போலான அல்பேர்ட் தெருவில்தான் எமது வீடு இருந்தது. எமது என்றால், நானும், எனது ரவியும் மட்டும் வாழும் சிறு வீடு. வீட்டின் முன்னும், பின்னும் சிறிய தோட்டம். வீட்டின் முன் ரோட்டோரத்தில் ஒரு மரம். அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்றான் ரவி. அரசாங்கம் என்ற போது இங்கும் இனத்துவேசம் இருக்குமோ என்ற எண்ணம்தான் முதலில் வந்தது.


          மிழர் அதிகம் வாழும் ஸ்காபுரோ நகரத்தில்தான் நாம் வாழ்ந்தோம். தமிழர் என்ற பெயர்தான் ஆனால் என்னைக் கடந்து செல்லும் ஒரு தமிழர் கூட என் முகம் பார்த்துப் புன்னகைத்ததில்லை. கனடா என்றால் வெள்ளையர்களின் நாடு என்று நம்பியிருந்த எனக்கு ஒரு வெள்ளையர்கள் கூட எனது வீட்டிற்கு அருகிலில்லாது அதிசயமாகயிருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமைகளில் ரவி வேலை முடித்து ஜேசீ பாருக்குப் போய்விட்டுத்தான் வருவான். பார் வீட்டிலிருந்து பதினைந்து நிமிட காரோட்டத் தொலைவிலிருந்தது. நானும் மூன்று முப்பதிரெண்டு பஸ் பிடித்து,  ஐந்து பத்துக்கு வீட்டிற்கு வந்துவிடுவேன். பஸ் தரிப்பிலிருந்து வீட்டிற்கு இருபது நிமிட நடை. தொடர்ந்து நிற்கும் வேலை, பின்னர் நடை,  கால்கள் செத்துவிடும். அன்று வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த  போது எலி செத்தது போன்ற  மணம் குப்பென்று முகத்திலறைந்தது. செவ்வாய்க்கிழமை கழிவுகளை வெளியில் வைக்கும் நாள். அதன் பிறகு சேர்ந்த கழிவுகள் குசினிக்குள் தேங்கி மணத்தைக் கிளப்பியது.

குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் போட்டு இறுக்கிக் கட்டி கராஜினுள் போட்டேன்.  இனி அடுத்த செவ்வாய்வரை அது அங்கு கிடந்து புழுக்கும்.

என்ன நாடு இது புழுப்பிடித்த நரகம்.

குளித்து, தேனீர் போட்டுக் குடித்துவிட்டு சமைக்கத் தொடங்கினேன்.  நான் அரிசியைக் களையும் போது பக்கத்து வீட்டுச் சைனீஸ் குடும்பத்தின் குசினி லைட் எரிந்தது. உள்ளே விலையுயர்ந்த தளபாடங்கள் தெரிந்தன. இறால் அவியும் மணம் மூக்கை நிறைத்தது. அரிசி களையும் நேரத்தில்தான் நான் பக்கத்து வீட்டை நோட்டமிட்டேன். அதற்கென்று பிரத்தியேகமாக ஒரு நிமிடத்தைக் கூட நான் எடுக்கவில்லை. இது வழமையாக செய்வதுதான். இன்று குப்பையைக் கட்டி வைக்க சில நிமிடங்கள் கூடுதலாக எடுத்திருக்கலாம்.

நான் ஏன் நேரத்தைக் கூட்டிக் கழித்துப் பார்க்க வேண்டும். என்னில் தவறில்லையென்று மனம் உறுதியாக நம்பியது. எதுக்காக ரவி இப்பிடி நடந்து கொண்டான். ஏனிந்தக் கோவம். மனம் பிறழ்ந்தது. சமையல் நேரம் பிந்தவில்லை, அவன் வெள்ளணை வீட்டிற்கு வந்துவிட்டான்.

எல்லாவற்றையும் துாக்கியெறிந்துவிட்டு வெளியேற வேண்டும். என்னால் முடியும். ஆனால் இப்போதில்லை. தொப்பியற்ற தலையோடு தை மாதத்தில் கனடா வீதியில் நடப்பதுபோல் தலை விறைத்தது. உச்சக் கோவம் பெண்களுக்கு வராதா? ஆனால் எங்கோ, ஏனோ அடங்கிப் போகிறோம்.

கூட்டித் துடைத்த நிலம். ரவி துாக்கியெறிந்த கத்தரிக்காய் கறியால் சிதைந்து கிடந்தது.

யார் இனி இதைக் அள்ளுவது. யார் கூட்டித் துடைப்பது. இங்கு என்னையும் ரவியையும் தவிர வேறு யாரிருக்கின்றார்கள். மனதில் எழும் கோவம், சோகம், கையறு நிலைக்கு என்னை இழுத்துச் சென்றது. சோகத்தை ஆழப்பதிய விட்டால் மனஉளைச்சல் ஏற்படும். பயத்தில் உச்சக் குரலெத்து “தேன் மல்லிப் பூவே.” என்று இழுத்துப் பாடியபடி கறியை அள்ளிக் கொட்டப் போன போது சட்டென்று ஒரு எண்ணம். எப்படியும் திரும்ப ஒரு மரக்கறி சமைத்தே ஆகவேண்டும், பேசாமல் இந்தக் கறியை மேலால் அள்ளிப் புதுசாச் சமைத்தது மாதிரி வைத்தாலென்ன. குரூரமாக எதையாவது செய்யவேண்டும் போலிருந்தது, அடக்கிக்கொண்டேன்.

குருவிக்குஞ்சின் கால்களில் கல்லைக் கட்டிவிட்டது போல் கால்கள் கனத்து விண், விண்ணென்று வலித்தன. இன்று வாடிக்கையாளர்கள் அதிகம். ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்க முடியவில்லை. ஒற்றைக் காலைத் துாக்கி குசினி மேசைமேல் வைத்து அழுத்திப் பிடித்து இறுகிய தசைகளை நீவி விட்டுக் கொண்டேன். பின்னர் பயிற்றங்காயை எடுத்து வெட்டத் தொடங்கினேன்.

என் வெள்ளைத் தோல், கரு,கருவென்றிருக்கும் தலைமயிர், அகன்ற கண்கள் இவையெல்லாம்தான்  ரவிக்குப் பிடித்து, விரும்பிக் கேட்டுத் திருமணம் செய்துகொண்டான். எனக்கும் அவனைப் பிடித்திருந்தது. உருவில் உருவான உறவு எம்முடையது.

கனடாவில் உறவுகளற்ற என் குடும்பத்திற்கு என் திருமணம் அதிஸ்டமென்று நம்பினேன். பின்னர் எவ்வளவு கோழை நானென்றும் வருந்தினேன். திருமணம் முடிந்து மூன்று கிழமை ஊரில் என்னைத் தாங்கிப் பிடித்துக் காதலித்தவன்தான் ரவி. கனடா திரும்பி என்னைக் கனடாவிற்கு அழைத்துக் கொள்ளும் வரை, அவன் அன்பும், காதலும் மாறவேயில்லை. எப்போது, எதற்காக மாறினானென்று யோசித்துப் பார்த்ததில் தெளிவுமில்லை. காரணமில்லாமல் ஒருவரால் ஒருவரை வெறுக்க முடியுமா, ஆறு மாதங்களுக்கு முன்னர் நான் கண்ட, காதலித்த ரவியில்லை இவன்.

டெலிபோன் அடித்தது. ரவியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு ஓடிச்சென்று போனை எடுத்தேன். ரதி, ரவியின் அக்கா. ஹலோ சொல்லவே தயக்கமாகவிருந்தது.

“என்ன நடக்குது” ரதி கேட்டார். ரவி ஏதாவது சொல்லியிருப்பானோ? என்ன சொல்லியிருப்பான். நான் இப்போது என்ன சொல்வது. தெரியாமல் தடுமாறி,

“சமைக்கிறன்” என்றேன்.

“அப்ப சரி, நான் சும்மா எடுத்தனான், பிறகு கதைக்கிறன்” என்றாள்.

உண்மையிலேயே ரதி சும்மாதான் எடுத்திருக்கின்றாள் என்று தெரிந்த போது நிம்மதியாயிருந்தது. ரதி தன்மையானவள், பொறுமையானவள், ரவியைப் பற்றி இவளிடம் கதைக்கலாமா ஒரு நிமிடம் மனம் தடுமாறியது. இருந்தும், ரதி, ரவியின் அக்கா. என் சிந்தனை சுற்றிவரும்போதே ரதி போனை வைத்துவிட்டாள்.

கதவு திறக்கின்ற சத்தம் கேட்டது. ரவிதான், “சாப்பாட்டைப் போடு சரியாப் பசிக்குது”  என்றான் ஒன்றும் நடக்காதது போல். சாராய மணம் குப்பென்றடித்தது. குசினி நிலம் இன்னும் வழுக்கியது. அவசரமாக சாப்பாட்டை எடுத்து  மேசை மேல் வைத்துவிட்டு, குசினி நிலத்தைத் திரும்பவும் ஒருமுறை துடைத்துவிட்டேன். சாப்பிட்டு முடிய பீங்கானை கழுவி வைத்த ரவி, எனது கையைப் பிடித்திழுத்துத் தன் அருகில் கொண்டு வந்து எனது முகத்தைத் துாக்கி கண்களைப் பார்த்து “ஸொரி” என்றான். நான் பேசாமல் நின்றேன். அவன் முகத்தில் உண்மை தெரிகின்றதாவென்று என் மனம் ஆராயத் தொடங்கியது.

வழமைபோல அன்றிரவும் ரவி என்னை இழுத்துக் கட்டிலில் போட்டு, உடல் முழுவதும் முத்தமிட்டான். முன்பெல்லாம் வெட்கத்தோடு சிணுங்கி, அவன் என் மேற்கொண்ட அபரிமிதமான காதலில் கண்டுண்டு, திளைத்திருக்கும் எனக்கு, அன்று நிலத்தில் சிதறிய கத்தரிக்காய் கறி மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தது.

அடுத்தநாள் காலை ஓம்லெட் போட்டு பாணுடன் சாப்பிடக் குடுத்த போது  “ரவி நேற்று நீங்கள் ஏர்ளியா வந்திட்டு, சமையல் லேட் எண்டு ஏனிந்த கோவம்” குரலைத் தன்மையாக வைத்துக் கொண்டு கேட்டேன்.

“அதை விடு  அதையேன் இப்ப கதைச்சுக் கொண்டு” என்று செல்போனைத் துலாவிய படியே சாப்பிட்டான்.

“இல்லை ரவி, எனக்கு எவ்வளவு கேர்ட் பண்ணீச்செண்டு உங்களுக்குத் தெரியுமா” என்றேன்.

“இப்ப ஏன் அலம்பிறாய், அதுதானே ஸொரி சொல்லீட்டனே” என்று விட்டு “சரி வாறன்” என்று கதையைத் தவிர்த்து வேலைக்குப் போய்விட்டான்.

ரதியின் மகள் ஆஷாவின் பாடசாலை ஆண்டு விழா.  எம்மையும் அழைத்திருந்தார்கள். ரவிக்கு வேலையிருப்பதால் என்னைப் போய்விட்டு வரும்படி சொன்னான், சொல்லும் போதே பத்து மணிக்கு வீட்டுக்கு வந்திடு என்று இணைத்தான். ரதி வீட்டிற்கு வந்து என்னை அழைத்துக் கொண்டு போனாள். ஆடல், பாடல், நகைச்சுவை நாடகம் என்று வாய்விட்டுச் சிரித்து மனதை இலேசாக்கும் நிகழ்வுகள். நிகழ்வு நிறைவுற பதினொரு மணியானது. அதன் பின்னர் ரதி தனது நண்பிகளுடன் அளவளாவி, வீடு வந்து சேர்ந்த போது பன்னிரண்டு மணியாகிவிட்டது. ரவி பத்துமணிக்கு வந்து விடு என்று சொன்னது எனது நினைவிலில்லை.

வீடு வந்து சேர்ந்த போது ரவி ரீவி பார்த்துக் கொண்டிருந்தான். நான் உள்ளே நுழைந்ததைக் கவனிக்காதது போல் ரீவியில் ஆழ்ந்திருந்தான். சாப்பாட்டு மேசையில் அவன் சாப்பிட்ட பீங்கான், சப்பித் துப்பிய எலும்புகள் சகிதம் காய்ந்து கிடந்தது. ஏதோ சரியில்லையென்று மனம் சொன்னது. நிலமையைச் சுமூகமாக்க முயன்ற நான், “ஆஷா நல்லா டான்ஸ் ஆடினாள் ரவி” என்றேன்.

“எத்தின மணி” என்றான்.

“ஆ”

“எத்தின மணியெண்டு கேட்டனான்” என்றான் மீண்டும்.

நான் மௌனமாக நின்றேன், பின்னர்

“சீலையை மாத்திப் போட்டு வாறன்” திரும்பினேன். எனது சீலை எதிலோ சிக்கியது போல் நான் இழுக்கப்பட திரும்பினேன் முகத்தில் ஒரு மின்னல். என்ன நடந்தது என்று விளங்கிக்கொள்ளு முன்னர் நிலத்தில் கிடந்தேன். சீலை கிர்ர்ர் என்ற சத்தத்துடன் கிழிந்தது. எழும்ப முயல முகத்தில் காலால் உதைந்தான். நான் சுருண்டேன். அவன் என்னைக் கடந்து போனான்.

என்ன நினைப்பது. என்ன செய்வது. வீட்டை விட்டு ஓடிப்போகலாம். யாரிடம் போவது. ரவியின் குடும்பம், ரவியால் எனக்கு அறிமுகமான நண்பர்கள், என் வேலைத்தளத்தில் சில நண்பர்கள். இவர்களில் யார் என்னைத் தன்னோடு வைத்துக் கொள்வார்கள். என் எதிர்காலம் என்னாவது. ஒன்றும் விளங்கவில்லை. அம்மாவின் நினைவு வந்தது. என்னை கனடா அனுப்பும் போது அப்பாவின் முகத்தில் எழுந்த ஏக்கம், அனைத்தும் கண்கள் முன் தோன்றித் திடுக்கிட வைத்தன. திருமணம், குடும்ப வாழ்க்கையென்றால் சந்தோஷம் மட்டும் நிறைந்தது என்ற எனது  முட்டாள் தனமான நம்பிக்கை அறுந்து விழுந்தது. அழுகை வரவில்லை. கன்னத்தில் எதுவோ ஊரத் துடைத்தேன். கை சிவப்பானது. கலியாணமாகி ஆறுமாதம் கூட ஆகவில்லை. சிரிப்பு வந்தது. அடக்க முடியாத சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரிக்கப் பயந்து வாயைப் பொத்திக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். புது நாடு, புது மொழி, இப்போதுதான் தட்டுத் தடுமாறி வேலைத்தளத்தில் வெட்கத்தைவிட்டு ஆங்கிலத்தில் கதைக்கத் தொடங்கியுள்ளேன். வீட்டிலிருந்து இடப்பக்கம் திரும்பி இருபது நிமிடங்கள் நடந்து கென்னடி ஸ்ரேசன் போகும் 131 ஈ பஸ்ஸெடுத்து எட்டாவது சந்தியில் இறங்கி, வீதியைக் கடந்து இடப்பக்கம் செல்லும் 116 எஸ் பஸ்ஸெடுத்து சரியாக பதினொருராவது தரிப்பிலிறங்கி கோப்பிக் கடையைக் கடந்தால் நான் வேலைசெய்யுமிடம். மட்டை கட்டிவிட்ட ஆடு போல் வேலைக்குப் போய்வரப் பழகியிருந்தேன். மற்றப்படி ரவியோடு காரில் போய் வரும் போது திசை, பாதை எதையும் நான் கவனிப்பவளல்ல. இதுதான் என்னுலகம். தனியாக வங்கிக் கணக்குக் கூட என்னிடமில்லை.

கனவுக்குள் புகுந்து என் கற்பனைக்குள் அடங்கிய, படங்களிலும், வரைபடங்களிலும் பார்த்து வியந்த கண்ணாடி வீடுகளும், கார்களும், நீர்வீழ்ச்சியுமாய் என்னை பிரமிப்பில் ஆழ்த்திய கனேடிய மண்ணிலெழுந்த கட்டிடத்தின் நிலத்தில் நிராதரவாய், ஏனென்று கேட்க நாதியற்ற சதைப் பிண்டமாய், கிழிந்த சீலைக்குள் சுருண்ட நான். என் கோலம். கனடா, ஓ கனடா!

அடுத்தது என்ன, அடுத்தது என்ன. சுழன்றது மனம். இந்நிமிடம் மனம் தளர்ந்தால் நான் பாதாளத்துக்குள் சரிந்து விடுவேன். என் முகத்தை நானே இரு கைகளாலும் தடவிக் கொடுத்து, ஓகே, ஓகே.. என்று என்னை நானே தட்டிக் கொடுத்துக் கொண்டேன். நான் வாழ வேண்டும், அதுவும் சந்தோஷமாக என்ற வீம்பு எனக்குள் சுழன்று, சுழன்று மந்திரம் போலலைந்தது. எழுந்து சென்று கண்ணாடியில் எனது முகத்தைப் பார்த்தேன். வலதுபக்க இமைக்கு மேல் சிறிய வெடிப்பு. மேல்ச் சொண்டு வீங்கித் தடித்திருந்தது. ஐஸ் பெட்டியிலிருந்து ஐஸ்ஸை எடுத்து வீக்கத்திற்கு ஒத்தடம் கொடுத்தேன். நோவுக்கான குளிசையொன்றைப் போட்டுப் பின்னர் சோபாவில் படுத்து நித்திரையாகிப் போனேன்.

டெலிபோன் மணி அதிர கண்களைத் திறந்தேன். விடிந்திருந்தது.  எழுந்திருக்க முயல தலை கனத்தது. கண்ணாடியில் என் முகம் எதுவோபோலிருந்தது. மீண்டும் போன் அலறியது. வேலைத் தளத்திலிருந்து எடுத்தார்கள். உடல்நலம் சரியில்லையென்று லீவு சொல்லிவிட்டு போனை துண்டித்தேன்.

சுடு தண்ணீரில் குளிக்க உடலின் கனம் குறைந்தது. வீக்கத்திற்கு மீண்டும் ஐஸ் ஒத்தடம் கொடுத்தேன். பசித்தது, ஆனால் சாப்பிடப் பிடிக்கவில்லை. கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுப் பயந்து வாசலைப் பார்த்தேன். நெஞ்சுக்குள் அமிலம் சுரந்தது. ரவிதான். கையில் ஒரு பார்சலுடன் வந்தான். பார்சலை சாப்பாட்டு மேசைமேல் வைத்துவிட்டு என் அருகில் வந்து என் கைகளைப் பிடித்து விக்கி, விக்கி அழுதான். பின்னர் தன் ஒற்றைக் கையால் தன் முகத்தில் மாறி மாறிக் குத்தினான். என் கையிலிருந்த ஐஸ்ஸை வாங்கி என் காயத்தில் ஒத்தி எடுத்தான். பின்னர் காயத்தில் முத்தமிட்டான். என்னை அணைத்து அழைத்து வந்து சாப்பாட்டு அறையின் கதிரையில் இருத்தி தான் வாங்கி வந்த காலை உணவுப் பார்சலைப் பிரித்து இரண்டு பீங்கான்களில் வைத்து, எனக்கு அருகிலிருந்து என்னைச் சாப்பிட வைத்துத் தானும் சாப்பிட்டான். நான் கரைந்தேன். சுற்றுச் சூழலில் ஏற்படும் தாக்கம் அறியாது, தூவும் உப்பால் கரையும் பனிக்கட்டி போல் நானும் கரைந்து போனேன். எப்போது எப்படிப் போனோம் என்று தெரியவில்லை, நான் கண் விழித்த போது நிர்வாணமாகக் கட்டிலில் கிடந்தேன். ரவி வேலைக்குப் போயிருந்தான். கட்டிலின் அருகில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவோடு “ஐ லவ் யூ” கார்ட் ஒன்றும் கிடந்தது. நான் ரோஜாவை எடுத்து மணந்து பார்த்தேன். ரோஜா என்றுமில்லாதது போல் மூக்கை சுளிக்க வைத்தது.

மூன்று நாட்களாகிவிட்டது.  நாளைக்கு வேலைக்கு போயே ஆக வேண்டும். தலை விண்ணென்று கொதித்தது. காயம் சிதல் பிடித்து விட்டதோவென்று சந்தேகமாகவிருந்தது. ரவி காயத்தை மெல்லத் தொட்டுப் பார்த்தான், என் முகச்சுளிப்பில் நோவின் கடுமை அவனுக்கும் புரிந்திருக்கும்.  “டொக்டரிட்ட போவமா” என்றான். பின்னர் தானாகவே “அந்த மனுசி தேவையில்லாத கேள்வியெல்லாம் துருவித், துருவிக் கேக்கும்.  சந்தேகம் வந்தால் பொலீசுக்கும் அறிவிக்கும், தமிழ் எண்டு  பேர்தான் ஆனா குடும்பத்தை பிரிக்க முன்னுக்கு நிக்கும்” என்றான். அவன் முகம் குரூரமாக மாறியிருந்தது. என் மௌனம் நான் டொக்டரிடம் போக விரும்புவதை அவனுக்கு உணர்த்தியிருக்க வேண்டும், “போலீஸ் அளவுக்கு போனால் பிறகு என்னை நீ பாக்கேலாது, என்னை உள்ளுக்க தூக்கிப் போட்டிடுவாங்கள்” என்றான். தவளை தன் வாயால் கெட்டுக் கொண்டிருந்தது. அப்போது அது எனக்கும் புரியவில்லை “என்ன நாடு இது, கோவத்தில ஏதோ பிழை விட்டிட்டன், என்ன சொன்னாலும் எடுபடாது. நீ இந்த மருந்தைப் போடு நல்ல ரெஸ்ட் எடு. காய்ச்சல் எண்டாத்தான் பயப்படோனும், அது மாறீடும்”  என்று வைத்தியம் பார்த்துவிட்டு முகத்தைத் தடவி விட்டான். பின்னர் நிதானமாக, மிக நிதானமாக “நாளைக்கு வேலைக்குப் போகாட்டி வேலை போயிடும். நோ குறைஞ்சால் பரவாயில்லை, நோவோட வேலை செய்யிறது கஸ்டம் நீ பேசாமல் வேலைய விட்டிடு பிறகு பாப்பம்” என்றான். வெளி உலகத்துடனான எனது உறவு துண்டிக்கப்பட்டது. அப்பா எனது பதினெட்டாவது வயதில் எனக்குப் பரிசளித்த “பெண் ஏன் அடிமையானாள்” பெரியாரின் புத்தகம் என் கண் முன்னே நிழலாடியது. நான் மௌனமாகச் சம்மதித்தேன்.

நான் நிதானமாகச் செயல்பட வேண்டிய நேரமிது என்பது புரிந்தது. இது எனது வாழ்க்கை, அதனை இலேசில் விட்டுக் கொடுக்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. அதே நேரம் எனது சுயமரியாதையையும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.

மன்ஜீத் தொலைபேசியில் அழைத்தாள். வேலைத்தளத்தில் ஓரளவுக்கு நெருக்கமான சீக்கியப் பெண் அவள். நான் கற்பமாக இருப்பதால் ஏற்படும் தொல்லைகளால் வேலையை விட்டுவிட்டேன் என்று வேலைத்தளத்தில் தாமாகவே ஒரு முடிவிற்கு வந்திருந்தார்கள். மன்ஜீத் என்னை சந்திக்க விரும்பினாள். முதல் முறையாக ரவிக்கு சொல்லாமல் என் விருப்பத்திற்கு வீட்டை விட்டு வெளியேறிய நாள் அது. அதுவே எனது வாழ்வின் பல மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கும் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்திருந்தால் அன்று மன்ஜீத்தை சந்திக்கச் சென்றதை தவிர்த்திருப்பேனோ தெரியவில்லை.

என் வீட்டிலிருந்து நடை தூரத்திலிருக்கும் கோப்பிக் கடையில் இருவரும் சந்தித்துக் கொண்டோம். என் முகத்தின் காயத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனாள் மன்ஜீத் நான் படியில் விழுந்து விட்டதாய் சொன்னேன். அவள் தலையை ஆட்டினாள். நம்பிவிட்டாள் என்று நான் நம்பினேன். ஒரு மணிநேர உரையாலின் பின்னர் மன்ஜீத் என் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள், “உன் காயம் நீ விழுந்ததால் வரவில்லையென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்ல விரும்பினால் சொல்லு” என்றாள். நான் மௌனமாகக் குனிந்து கொண்டேன். எங்கிருந்து அப்படிக் கண்ணீர் வந்ததோ தெரியவில்லை. அவள் என் கையைப் பற்றி வெளியில் சிறிது நேரம் நடப்போம் என்று அழைத்துப் போனாள். செரியாத பழைய உணவு வயிற்றுக்குள் அடைந்து கிடந்து, திடீரென வாந்தியாகக் கக்கி விடுவது போல் அனைத்தையும் மன்ஜீத் இடம் கக்கி விட்டேன். நிம்மதியாக இருந்தது. அவள் என்னை அணைத்துக் கொண்டாள். பின்னர் நீ வீட்டிற்குப் போ. கவனம் என்றாள். ஆறுதலாகக் கதைப்பாள், உதவி தேவையென்றால் என்னை அழை என்று சொல்லுவாள் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமாகவிருந்தது. ஏன் வீண் பிரச்சனையென்று அவள் மெல்ல விலகிவிட்டாளென்றுபட்டது. ஏமாற்றத்தோடு வீடு வந்து சேர்ந்தேன்.

காமத்தோடு கலந்த காதலின் தகிப்பு அடங்கிச் சாம்பலாகிப் போயிருந்தது. என் நிலை தெரிந்தால் தூக்கியெறிந்து விட்டுப் போ, இல்லாவிட்டால் எங்களிடம் வந்துவிடு என்பார்கள் அப்பாவும், அம்மாவும். எனது மனம் சுழலத் தொடங்கியது. யோசனைப் பூதம் என்னை விழுங்கியது.

நான் ரவிக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். இது எனது இயலாமையால் எடுக்கப்பட்ட முடிவென்பது எனக்குப் புரிந்தாலும், இப்போது நானிருக்கும் நிலையில், இந்தக் குளிர் நாட்டில் எனக்கு இந்த முடிவைத் தவிர வேறொரு முடிவையும் எடுக்கத் தெரியவில்லை.

ரவி வேலையால் வருவதற்கு முன்பு சமைத்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு சமையலைத் தொடங்கினேன். வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும். சேர்ச்சிலிருந்து “உலகம் அழியப் போகின்றது, ஆண்டவர் வருகின்றார்” இப்படி யாராவது இருக்கும். தமிழ் ரேடியோவின் ஒலியைக் குறைத்துவிட்டு, வீட்டில் ஒருவரும் இல்லையென்று வந்தவரை நம்பவைக்க முயன்றேன். ஆனால் அவர்கள் நம்பவில்லை. மீண்டும் அழைப்புமணி ஒலித்தது.  வாசலுக்கு வந்து என்னை மறைத்துக் கொண்டு கண்ணாடிக்குள்ளால் வெளியில் பார்த்தேன். பொலீஸ்காரொன்று வீட்டின் முன் நின்றது. இரண்டு பெண் பொலீஸ் அதிகாரிகள் கதவினடியில் நின்றார்கள். ஒருத்தி கட்டையாக சைனீஸ் பெண்போல் தெரிந்தாள். அடுத்தவள் உறுதியான திடமான தோற்றத்துடான ஆபிரிக்கக் கனேடியப் பெண். ஐயோ என்று மனம் பதறியது. ரவிக்குத் தான் ஏதோ நடந்துவிட்டது என்ற பதட்டத்துடன் கதவைத்  திறந்தேன்.

தமது புகைப்படத்துடனான  அட்டையை எனக்கு காட்டித் தமது பெயர்களையும், தமது வேலைப்பிரிவின் எண்களையும் எனக்குக் கூறிவிட்டு, என் பெயரைச் சொல்லி உறுதிப்படுத்தியவுடன் உள்ளே நுழைந்தார்கள். நான் விலகிக் கொண்டேன். வீட்டில் யார், யார் இருக்கின்றார்கள் என்று சைனீஸ் அதிகாரி கேட்டாள். நான் சொன்னேன். ரவி தற்போது எங்கே என்றாள், நான் வேலைக்குப் போயிருக்கிறான் என்றேன்.. ஆபிரிக்கக் கனேடியப் பெண் அதிகாரி வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். பின் கதவைத் திறந்து வெளியில் போய்விட்டு வந்தாள். சைனீஸ் அதிகாரி  கால்களை அகட்டி என் முன்னே நிமிர்ந்து நின்றாள். இப்போது அவள் மிகக் கம்பீரமாகத் தோன்றமளித்தாள். ரவிக்கு முன்னால் கால்களை அகட்டி,கைகளைப் பின்னால் கட்டிகொண்டு இவள் போல் நெஞ்சை நிமிர்த்தி நான் நிற்பது போல் கற்பனை செய்து பார்த்தேன்.

என்னையும், ரவியையும் பற்றிய முழுத் தகவல்களையும் கேட்டு ஒரு சிறிய கொப்பியில் வேகமாக எழுதினாள் சைனீஸ் அதிகாரி. அழகான தொப்பி அணிந்திருந்தாள். இடுப்பில் பெரிய கறுப்பு பெல், அதில் துப்பாக்கியும், கறுப்பு உருளைத் தடியும் செருகியிருந்தன, நெஞ்சுப் பொக்கேட்டில் வோக்கி ரோக்கி தொங்கியது. அவளது வோக்கி ரோக்கி விடாமல் எதையோ கதைத்தபடியிருந்தது. அதை அவள் கண்டுகொள்ளவில்லை. எனது முகக் காயத்தைப் பார்த்து இது எப்படி வந்தது என்று கேட்டாள் ஆபிரிக்கக் கனேடியப் பெண் பொலீஸ் அதிகாரி .நான் மௌனமாக நின்றேன். சைனீஸ் அதிகாரி என் அருகில் வந்து, ரவி உன்னைக் காயப்படுத்தியதாக எமக்குத் தகவல் வந்துள்ளது, அதை உறுதிப்படுத்த வந்துள்ளோம் என்றாள். ஓ மன்ஜீத் என்ன செய்துவிட்டாய். என் கைகள் படபடத்தன. என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டின் முன்னால் பொலீஸ்கார் நிற்பதே எனக்கு அவமானமாகவிருந்தது. ரவி உன்னை அடித்தானா என்று கேட்டாள்.  பொலீஸிற்குப் பொய் சொல்ல பயமாகவிருந்தது. உண்மையை ஒத்துக் கொண்டால் ரவியை ஜெயிலுக்குள் போட்டுவிடுவார்கள். அதன் பின்னர் நான் என்ன செய்வது. வீட்டு வாடகை, சாப்பிடக் காசு. நான் யாரிடம் கை நீட்டுவது. ரவியை ஜெயிலுக்குள் போட்டுவிட்டு, ரவியின் அக்காவிடமா  தஞ்சம் புகுந்து கொள்வது?  மன்ஜீத் இது பற்றிச் சிறிதேனும் சிந்தித்தாளா? இப்போது நான் என் செய்வது. முதலில் ரவி வீட்டிற்கு வருமுன்னர் இவர்களை எப்படியாவது இங்கிருந்து அனுப்பிவிட வேண்டும். நான் மௌனமாகத் தலையைக் கவிழ்ந்து கொண்டு நின்றேன். அவள் மீண்டும் சிறுதுக் குரலை உயர்த்தி ரவி உன்னைக் காயப்படுத்தினானா? என்று கேட்டாள். நான் தலையை நிமிர்த்தாமல் இல்லையென்று தலையாட்டினேன்.

“மாம், நான் திரும்பவும் கேட்கின்றேன், என்னைப் பார்த்துப் பதில் சொல்லு, ரவி உன்னைக் காயப்படுத்தினானா?” என்றாள். நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். இப்போது பயம் நீங்கியிருந்தது. இவள் யார் என் வாழ்க்கையில் தலையிட என்ற கோவமும் எழுந்தது. நான் ஒத்துக் கொண்டால், ரவிக்கு ஆயுள் தண்டனையைக் கொடுத்து விடுவார்களா என்ன. என் வாழ்க்கைச் செலவை இந்தச் சைனீஸ் அதிகாரியா ஏற்றுக்கொள்ளப் போகின்றாள். இயலாமை, கோவம், அவமானம் எல்லாம் சேர்ந்து என்னை நடுங்க வைத்தன. ரவி உள்ளே போய்விட்டு வெளியில் வந்தால், அதன் பின்னர் என்ன நடக்கும். நினைக்கும் போதே நெஞ்சு நடுங்கியது. நான் நிமிர்ந்து அவள் முகம் பார்த்து “இல்லை” இது நான் விழுந்ததால் ஏற்பட்ட காயம் என்றேன். இரு அதிகாரிகளும் மௌனமாக நின்றார்கள். சைனீஸ் அதிகாரி தனது கொப்பியில் எதுவோ அவசரமாகக் கிறுக்கிவிட்டு அதனை மூடிக்கொண்டாள். பின்னர் என் கண்களை நிதானமாகப் பார்த்து, “ரவி உனது கணவன், நீ அவனைக் காதலிக்கின்றாய், அவனை உன்னால் விட்டுக்கொடுக்க முடியாது, ஆனால் கனடாவில் குடும்பவன்முறையால் தமது துணையால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அவர்கள் முன்வந்து உண்மையைக் கூற வேண்டும்” என்றாள். பின்னர் தனது விடிட்ங் கார்ட்டை எடுத்து என்னிடம் தந்து, எப்போது உதவி தேவையென்னாலும் என்னோடு நீ தொடர்பு கொள்ளலாம். எமது உதவி உனக்கு எப்போதுமுண்டு என்றாள். நான் கார்ட்டை வாங்கி விட்டுத் தயக்கத்துடன் தலையை அசைத்தேன். அவர்கள் வெளியேறுமுன்னர், என் கண்களை ஒருமுறை ஆழமாகப் பார்த்து சைனீஸ் அதிகாரி சொன்னாள், “ரொறொன்டோவில் உங்கள் நாட்டுப் பெண்கள்தான் அதிகம் கணவரால் தாக்கப்படுகின்றார்கள் என்று பதிவாகியுள்ளது” என்றாள்.  அவர்கள் வெளியேறியவுடன் நான் வெளியில் வந்து பொலீஸ் வந்துவிட்டுப் போனதை யாராவது கவனித்தார்களா என்று பார்த்தேன். வீதி அமைதியாகத் தானும் தன்பாடுமாக மௌனமாகக் கிடந்தது. சைனீஸ் அதிகாரி தந்த கார்ட்டை நான் பத்திரமாக ரவியின் கண்ணில் படாத இடமாகப் பாதுகாத்து வைத்தேன். திரும்பத் திரும்ப கடைசியாக அந்தச் சைனீஸ் அதிகாரி கூறிய வார்த்தைகள் ரீங்காரமாக எனது காதுக்குள் ஒலித்தபடியிருந்தது.

அவர்கள் போனவுடன் நான் அவசரமாகச் சமையலை முடித்தேன். உடலும், மனமும் பதறுவதைக் கட்டுப் படுத்த முடியவில்லை. நான் மன்ஜீத்தைச் சந்தித்தது, பொலீஸ் வீட்டிற்கு வந்து போனது, எல்லாமே ஒரு கனவு போல் என்னை தளர வைத்துக் கொண்டிருந்தன. பதட்டமில்லாமல் எப்படி ரவியை எதிர்கொள்ளப் போகின்றேன் என்ற பதட்டம் நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கத் தொடங்கியது.  மேல் அறைக்குள் சென்று யன்னலூடாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். முன் மரத்தில் இரு கரு அணில்கள் திசைமாறிப் பாய்ந்து  காணாமல் போயின.

ரவியின் கார் சந்தியில் திரும்புவது தெரிந்தது. அவன் காரை பார்க் பண்ணிவிட்டு இறங்கி வரும் போது, கோவமாக இருக்கின்றானா என்று யன்னலால் பார்த்தேன். தெளிவாகத் தெரியவில்லை. உடனே நான் துவைத்த  உடைகளை எடுத்து அயர்ண் பண்ணிய படியே “சின்னத் தாயவள் தந்த ராசாவே” என்று என்னை இயல்பாக்கிப் பாடிக்கொண்டிருந்தேன். ரவி அறைக்குள் வந்து, என்னைப் பார்த்துவிட்டு உடையை மாற்றிக் கொண்டே, “பேய் பசி பசிக்குது சாப்பாட்டைப் போடு, நான் சாப்பிட்டிட்டுப் படுக்கப் போறன்” என்றான். நிம்மதியாக அங்கிருந்து சென்றேன்.

உடல் வலிமையொன்றினால் மட்டும் ரவி என்னை வென்றுகொண்டிருந்தான். மிகவும் அவதானமாக எனது உடல் தாக்கத்திற்குள்ளாவதைத் தவிர்க்கும் வகையில் என்னால் வாழ்வை நகர்த்த முடியும். என் அனைத்து சுயமரியாதையையும் இழந்து இப்படியே என்னால் வாழ்வை முழுவதுமாக நகர்த்திவிடவும் முடியும். ஆனால் இதுவா வாழ்க்கை. என் பெற்றோர் இதையா எனக்குக் கற்றுத்தந்தார்கள்.

பகல் நித்திரை, தொலைக்காட்சியென்று நான் நோவில்லாமல் வாழ்கின்றேனோ என்ற சந்தேகம் ரவிக்கு, மீண்டும் என்னை வேலைக்குப் போகச் சொன்னான். கிளிக்கு சிறகுகளை வெட்டிப் பறக்கவிட்டான். தான் என்மேல் பிரயோகித்த வன்முறையால் நான் மிகவும் பயந்து போயுள்ளதாக நம்பினான். நான் அவனை நம்ப வைத்தேன். கிளிக்கு சிறகுகள் வளர்வதைக் கவனிக்காது வழமை போல் வேலைக்குச் செல்வது, பாரிற்குச் செல்வது, உண்பது, உடலுறவு கொள்வது என்று மிகவும் மனத் திருப்தியோடு வாழ்ந்து கொண்டிருந்தான் ரவி.

இம்முறை மிகவும் நிதானமாக நான் வேலைத் தளத்தில் பல நண்பர்களை உருவாக்கிக் கொண்டேன். எனது வேலை நேரத்தை விரும்பிக் கேட்டுக் குறைத்துக் கொண்டேன். ரவிக்கு அவர்கள் குறைத்ததாகப் பொய் சொன்னேன். ரவியின் நேர வழக்கத்தை மிக அவதானமாகக் கணித்து, அவனுக்குத் தெரியாமல் பகுதி நேரம் பாடசாலைக்குச் செல்லத் தொடங்கினேன். சமூகநல உதவி அலுவலகம், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உதவி செய்யும் அமைப்புக்கள் போன்றவற்றின் தகவல்களைத் திரட்டிக் கொண்டேன். ரவிக்குத் தெரியாமல் நான் செய்வது எதுவும் எனக்கு குற்ற உணர்வைத் தரவில்லை. ஆனால் எதையும் நான் ரவிக்குத் தெரியாமல் செய்வதாக மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டேன். சம்பவங்கள் ஒரு மனுஷியை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்று நானே எனது நடவடிக்கைகளால் திகைத்ததுண்டு. அதையும் நான் புன்னகையோடு கடக்கப் பழகிக் கொண்டேன்.

ஒருநாள் ரவிக்கு நான் பாடசாலை செல்வது தெரியவரும். அப்போது மீண்டும் நான் தாக்குதலுக்கு உள்ளாவேன். வேலையில் நிறுத்தப்படுவேன் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. அந்த நாளை எதிர்பார்த்தபடியே, எனது கவனத்தை முழுதாக எனது கல்வியில் செலுத்திக்கொண்டிருந்தேன். நான் எதிர்பாராதபடி கணக்கியலின் அறிமுக ஆரம்பப் பகுதியை எந்தவித தடையுமின்றி என்னால் படித்து முடிக்க முடிந்தது.

அவன் என்மேல் இயங்கிக் கொண்டிருந்த ஒரு பொழுதில், வேலையில் ஆட்குறைப்பு நடக்கின்றது, கெதியில் எனக்கு வேலை போகக் கூடும், வேறு வேலை தேடப் போகின்றேன் என்றேன். அவன் மயக்கத்தில் சம்மதித்தான். வாழ்க்கையின் அடுத்த படிக்கு செல்வதற்கு, நான் எனது கால்களை தாராளமாக அகட்டி அவனுக்கு வழிவிட்டேன். என் கல்விற்கேற்ப வேலையையும் தேடிக் கொண்டேன்.  தற்போது இரண்டு கிரெடிட் கார்ட்களுக்கும், ஒரு வங்கிக் கணக்கிற்கும் சொந்தக்காரி நான். இனி பறப்பதுதான் மிச்சம்.

வாழ்வின் இயங்குவிசை எந்த மறுப்புமின்றி உந்தியதின் பாதிப்பு என் வாழ்வை அசைக்கும் அடுத்த நிகழ்வு நடந்தது.  ரவி தன் நண்பனின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றான். என் அறிவிற்கு எட்டியவரை, நான் ரவியின் விருப்பத்திற்கேற்ப அந்தக் கொண்டாட்டத்தில் பங்கு பற்றியதாக அவன் நம்பிக்கொண்டிருந்தான்.  ரவி குடித்திருந்தான். நண்பர்கள் அவனை கார் ஓட்ட வேண்டம் என்று தடுத்தார்கள். நானும் ரவி கார் ஓட்டுவதை விரும்பவில்லை. ரவியின் குடிக்காத நண்பன் ஒருவன் எங்களை வற்புறுத்தித் தனது காரில் கொண்டு வந்து வீட்டில் விட்டுச் சென்றான். ரவி அதிகம் குடித்திருந்ததால் வீடு வந்தவுடன் நித்திரைக்குச் சென்று விட்டான். நானும் நிம்மதியாக நித்திரைக்குச் சென்றேன், அந்த நிம்மதிதான் எனது கடைசி நிம்மதி என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அடுத்த நாட் காலை ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள். மிகவும் தாமதித்து ரவி நித்திரையால் எழும்பினான். நான் காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். ரவிக்கு இரவு நடந்தது ஒன்றும் நினைவிலிருக்கவில்லை. இல்லாவிட்டால் நினைவில்லைப் போல் நடித்தான். வெளியில் எட்டிப் பார்த்து விட்டு “கார் எங்கேஎங்க?” என்ற போதே குரலில் அடுத்த சண்டைக்கான தொனி தெரிந்தது.

“இல்லை உங்களை காரோட்ட வேண்டாமெண்டிட்டு சிவாதான் கொண்டுவந்து விட்டிட்டுப் போனவர்” என்ற எனது பதில் வாயிலிருந்து வரும் போதே, எனது கால்கள் தாமாகவே இரண்டு அடி பின்னகர்ந்தன. அவன் தாக்கினால் நான் என்ன செய்ய வேண்டுமென்பது எனது மூளைக்குள் ஓடத் தொடங்கியது.

“உடன நீ ஓமெண்டிட்டாயாக்கும், எனக்கு எவ்வளவு வேலையிருக்கு இப்ப நான் காருக்கு என்ன செய்யிறது” என்றான் கோவத்தோடு. நான் பேசாமல் நின்றேன்.

“கொண்டந்து விட்டிடுப் போனவனோ, இல்லாட்டி உன்னோட படுத்திட்டுப் போனவனோ?” என்றான். வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது தெரிந்தது. நான் மௌனமாக நின்றேன்.

“நீ என்னெண்டு கதைப்பாய், வேசை” என்ற படியே அறைக்குப் போகப் படிக்கட்டில் ஏறினான். நான் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன். அவன் காரை எடுத்துக் கொண்டுவரப் போகிறான். சில மணித்தியாலங்களாவது நான் நிம்மதியாக இருக்கலாம் என்று மனதில் துளிர்த்த நிம்மதி எதிர்பாராத விதமாக முதுகில் கிடைத்த உதையால் விழுந்து உடைந்தது. என்னால் என் முகத்தை மட்டுமே பாதுகாக்க முடிந்தது.

ரவிக்கு என் மேல் அவ்வளவு நம்பிக்கையிருந்தது. தான் என்னைத் தாக்கிவிட்டு நண்பன் வீட்டிற்குச் சென்று காரை எடுத்து வரும் போது, நான் பயத்தில் சமைத்து முடித்து விட்டு, மற்ற வீட்டு வேலைகளையும் நோகும் உடலோடு செய்து முடித்திருப்பேன், தான் வந்து வயிறாரச் சாப்பிட்டு விட்டு, உடலுறவும் கொள்ளலாமென்று.ரவி வீட்டிற்கு வரவில்லை. எனது புகாரின் பேரில் காவல்துறை அவனை கைது செய்திருந்தது.

நான் எனது இருப்பை நிலக்கீழ் குடியிருப்பு ஒன்றிற்கு மாற்றிக்கொண்டேன். ஒற்றைக்கட்டில், கால் முறிந்த கதிரையொன்று, துணியாலான அலுமாரி, இரண்டு சமையல் பாத்திரம். ஒரு கத்தி, இரண்டு கரண்டிகள், தேனீருக்கு ஒரு குவளை, சாப்பிட ஒரு பீங்கான். இவைகளுக்குச் சொந்தமான மகாராணி நான். இவற்றோடு புதிய தொலைபேசி எண், புதிய வங்கிக்கணக்கு,

ரவி என்னைத் தாக்கியதும், எனது காயங்களும் தற்போது ரொறொன்டோ பொலீஸில் பதிவாகியிருந்தன. ரவி மூன்று நாட்கள் பொலீஸ் காவலிலிருந்து விட்டு, தற்போது பெயிலில் வெளியே வந்திருக்கிறான், அவன் என்னைச் சந்திக்கவோ, தொலைபேசியிலோ உரையாடவோ. இல்லாவிட்டால் இன்னொருவர் மூலம் எனக்குத் தகவல் அனுப்பவோ முயன்றால் அவனது  பெயில் நிராகரிக்கப்படும். அவன் என்னிலிருந்து ஐநுாறு மீட்டர்கள் துாரத்திலும், எனது வேலைத்தளத்திலிருந்து எழுநுாற்றியம்பது மீட்டர் துாரத்திலுமிருக்க வேண்டும். இதில் ஏதாவதொன்றிலிருந்து அவன் மீறினால் உடனடியாகத் தமக்குத் தெரியப்படுத்தும் படி காவல் அதிகாரி எனக்கு அறிவுறுத்தியிருந்தார். அத்தோடு என்னை விரும்பினால்  பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆலோசனை பட்டறைக்குச் செல்லும் படியும் கூறினார். பட்டறைக்குச் சென்று நான் காதலித்த, எனது வாழ்வு இவனோடுதான் என்று நம்பியிருந்தவனே என்னைத் தாக்கினான் என்று வெளியில் கூறவேண்டும் என்பது எனக்கு அவமானமாகவிருந்தது, ஆனால் எனக்காக, எனது பாதுகாப்பிற்காக இந்த நாடு வழங்கியிருக்கும் அத்தனை சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடிவெடுத்தேன். அங்கு கற்றுக் கொண்டதின் படி நான் வெளியில்  சென்று வரும் போதெல்லாம் யாராவது என்னைத் தொடர்கின்றார்களா என்று கவனிக்கத் தொடங்கினேன். எனது கை பையினுள் “பெப்பர் ஸ்ப்ரே” ஒன்றை எப்போதும் வைத்திருந்தேன். நான் அளவுக்கு அதிகமாகப் பயப்படுகின்றேனோ என்ற சந்தோகம் எனது அடிமனதிலில் எழாமலில்லை. ரவியின் குணம் பற்றி எந்த தெளிவும் அப்போது என்னிடமில்லை. எதை பற்றியும் அதிகம் யோசிக்காமல் அந்த நாட்களில் நான் இயங்கிக்கொண்டிருந்தேன்.

ரவியின் மேல் நான் கொடுத்திருந்த புகார், நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கனேடிய நீதிமற்றத்தில் நான் காலடியெடுத்து வைக்க வேண்டி வந்துவிட்டதேயென்று உள்ளுக்குள்ளே மிகவும் சுருங்கிப் போயிருந்தேன். ரவிக்கு என்ன தண்டனை கிடைக்கும். அவன் எதிர்காலம் என்னாவது, அவன் வேலையை இழந்திருப்பானா, வீட்டுக் கடன், கார் கடன் இவற்றிற்கெல்லாம் என்ன நடக்கப் போகின்றது. ரதியக்கா, அவர்கள் குடும்பம் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். நான்  ஏன் முதலில்  அவர்களிடம் உதவியை நாடவில்லை. நான் அவசரப்பட்டு விட்டேனா. எனக்குத் தலை சுற்றியது. குற்ற உணர்வு எனக்கு மனஉளைச்சலைத் தரத் தொடங்கியது. என் பெற்றோருடன் உரையாடுவது ஒன்று மட்டுமே அப்போது எனக்கிருந்த நிம்மதி. என்னைத் தளரவிடாமல் அப்பா ஊக்கப்படுத்திக்கொண்டேயிருந்தார்.

விசாரணக்கு இரண்டு நாட்களேயிருந்தன, அன்று நான் வேலை முடிந்து மிகுந்த களைப்போடு பஸ்சை விட்டிறங்கி  வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த போது, திடீரென்று ரவி என் முன் தோன்றினான். அவன் மிகவும் மெலிந்திருந்தான். முகத்தில் தாடி வளர்ந்திருந்தது. கண்கள் உள்ளே தள்ளியிருந்தது. ஒன்றுமே சொல்லாமல் என் கால்களில் விழுந்தான். தயவுசெய்து என்னைக் காப்பாற்று, நான் தெரியாமல் பிழைவிட்டிட்டன் என்று கதறியழுதான். துக்கம் என் தொண்டையை அடைத்தது. நானும் விக்கி, விக்கி அழத்தொடங்கினேன். அவன் என் கைகளைப் பற்றினான். “ப்ளீஸ், ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு நான் இனிமேல் உன்னை அடிக்கமாட்டன், என்னைக் காப்பாற்று” என்றான். “ரவி ப்ளீஸ் இஞ்சையிருந்து போங்கோ, யாராவது கண்டால் பெரிய பிரச்சையாயிடும்” என்று நான் அங்கிருந்து போக முயன்ற  போது, ரவி எனது கையை இறுகப் பற்றினான். அப்போது  எனது வீதியில் வசிக்கும் வெள்ளையினப் பெண்ணொருத்தி எம்மருகில் வந்து ஏதாவது பிரச்சனையா என்று என்னிடம் கேட்டார். ரவி அவரைப் பார்த்துக் கோவமாக “நீ உன்ர வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்று கத்தினான். நான் எனது கையை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடி வீட்டிற்குச் சென்றேன். நீதிமன்றத்திற்குச் செல்ல இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கின்றது, அதற்குள் என்ன இது புதுப்பிரச்சனை. ரவிக்கு என் இருப்பிடம் எப்படித் தெரிந்தது. இப்போது நான் என்ன செய்வது. நான் மிக,மிகக் குழம்பியும், தளர்ந்தும் போயிருந்தேன். காவல் நிலையத்திற்குத் தெரியப்படுத்தினால், அவனை உடனேயே கைது செய்வார்கள். ரவி எனது கால்களில் விழுந்தது. எனது கையைப் பற்றிக் கதறியது எல்லாம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவனை மன்னிக்கலாம், ஆனால் அவனோடு என்னால் இனி ஒருபோதும் வாழ முடியாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருந்தேன். அவனைச் சிறைக்குள் தள்ளி அவனைப் பழிவாங்குவது என் நோக்கமல்ல.  நீதிமன்றத்தில் ரவி என்னைத் தாக்கவில்லையென்று  கூறிவிட்டு, அவனிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையை நான் தொடரலாம், இல்லாவிட்டால் எல்லா உண்மையையும் கூறி ரவிக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை எதிர்கொள்ளல் வேண்டும். இதில் நான் எந்த முடிவை எடுப்பது.

இந்த நிலக்கீழ்க் குடியிருப்பு அப்படியே என்னை முழுங்கிவிடாதா என்று கருதிய இரவு அது. தெளிவற்ற ஒரு நிழலாய் நான் அசைந்துகொண்டிருந்தேன். சிந்தனைகள் தொடர் சுருளாயெழுந்து, இடையில் அறுந்து தொங்கியது. அருகில் யாருமற்ற என்னிருப்பு என்மேல் எனக்கே பச்சாதாபத்தை ஏற்படுத்தியது, யாரோடாவது மனம்விட்டுக் கதைக்கவேண்டும், மன்ஜீத் நினைவிற்கு வந்தாள். அழைத்தேன். நாளை வேலை முடிந்து சந்திப்பதாகக் கூறினாள்.  மனம் கொஞ்சம் இலேசானது.

மன்ஜித்தை பின்மதியம் ஒரு கோப்பிக்கடையில் சந்தித்தேன். என்னைக் கதைக்கவிட்டு அவள் மௌனமாகவிருந்தாள். “ரவி இப்பிடி என்ர காலில விழுவாரெண்டு நான் எதிர்பார்க்கேலை” என்றேன். என் குரல் நடுங்கி அழுதேன். நடுங்கும் எனது கைகளை அவளது ஒற்றைக் கை பற்றியிருந்தது. “முறைப்படி பார்த்தா  அவன் உன்னைச் சந்திக்க வந்ததே குற்றம், நீ பொலீசுக்கு அறிவிச்சிருக்க வேணும், தயவு செய்து அவனில இரக்கம் பாக்காதே” என்றாள் என் கையை இறுக அழுத்தி. ரவியின் கால்கள் தரையில் கிடந்த என் மேல் எழுந்து, எழுந்து விழுந்தது நினைவிற்கு வந்தது. “நிச்சயமாக இல்லை” என்றேன். முன்பிருந்ததைவிட நான் மிகவும் தைரியமாக இருப்பதாக என்னை வாழ்த்தினாள். நான் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.. அவளுடனான ஒரு மணித்தியால  உரையாடலின் பின்னர் விடைபெற்ற போது, அடுத்த நாள் எனக்குத் துணையாகத் தானும் நீதிமன்றம் வருவதாக் கூறினாள். நான் அவளை அணைத்துக் கொண்டேன். “எல்லாம் வெல்லலாம்” என்று என் கையைப் பிடித்து அழுத்திக் குலுக்கி கூறிவிட்டுச் சென்றாள். மன்ஜீத்திடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். இரவு அப்பா, அம்மாவுக்கு போன் பண்ணிக் கதைக்கவேண்டும். ரவியைப் பிரிந்து வந்த நாளிலிருந்து ஒவ்வொருநாளும் அவர்களுடன் கதைத்துக் கொண்டுதானிருக்கின்றேன். அப்பாவிடமிருந்து தெளிவான ஒரு   அறிவுரை கிடைக்கும்.

சூரியன் தனது கடைசிக்கதிரை மறைக்கத்தொடங்க வீதியோரத் தெருவிளக்குகள் பிரகாசமாக பாதைக்கு வெளிச்சமூட்டின. பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடக்கும் போது, நேற்றுத் திடீரென்று ரவி என் முன்தோன்றியது நினைவிற்கு வர, பாதையை மாற்றிக் கொண்டேன். மரக்கிளைகளின் சிறு அசைவு, நடைபாதையின் காலடிஓசைகள் பதட்டத்தைத் தந்தன. பார்வையைச் சுழல விட்டபடி வேகமாக நடந்தேன். எதிர்திசையிலிருந்து எனது அயல்வீட்டுப் பெண் நாயுடன் நடந்து வந்தாள், புன்னகைத்த அவளுடன் சிறிது நேரம் உரையாடி, நாயையும் தடவிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வீட்டை நோக்கி மீண்டும் நடந்தேன். மனம் நாளையை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. நீதிமன்றத்தில் என்ன நடக்கப் போகின்றது, மொழிபெயர்ப்பாளர் வேண்டுமா என்று கேட்டபோது ஏதோ ஒரு நம்பிக்கையில் வேண்டாமென்று சொல்லிவிட்டேன், ஆனால் இப்போது என்னால் ஆங்கிலத்தில் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியுமா என்று தடுமாற்றமாகவிருந்தது. நெஞ்சு பிசைந்து, பிசைந்து பதட்டம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்ட நிலையில், நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்திருந்தேன். இந்தக் குளிர் நாட்டில் ஒருவரும் இல்லாது தனித்து என்னால் வாழ முடியுமா? எனக்கு என்ன நடக்கப் போகின்றது, பேசாமல் நாளை நீதிமன்றத்தில் என்னை என் நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று கேட்போமா. மனஉளைச்சல் என் கால்களைத் தளரச் செய்தன.

வீட்டு வாசலையடைந்த போது நிம்மதியானேன். சுடுதண்ணீரில் ஒரு முழுக்கும், சுடச் சுட ஒரு கோப்பியும், நிம்மதியான நித்திரையுமே எனக்கு இப்போது வேண்டியிருந்தது. முன்கதவைத் திறந்து கொண்டு வீட்டின் உரிமையாளர் வெளியே வந்தார், என்னைக் கண்டதும் சினேகமான புன்முறுவலுடன் சுகம் விசாரித்தார். வானிலையறிக்கையில் நாளை பெரும் மழை பெய்ய உள்ளதால் மறக்காமல் குடையை எடுத்துக் கொள் என்று அறிவுரை கூறினார். நான் அவருக்கு நன்றி சொன்னேன். அவர் இரவு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். உள்ளிருந்து தொலைக்காட்சியின் பலத்த ஒலி வெளியிலும் பரவியது.

வீட்டின் பக்கவாட்டிலிருக்கும் எனது குடியிருப்புக் கதவுக்குச் சென்று, கதவைத் திறப்பதற்கு எனது கைப்பையினும் ஒன்றைக் கையைவிட்டு, வீட்டுத் திறப்பைத் தேடினேன், என் பின்னால் நிழல் அசைய, திடுக்கிட்டுத் திரும்பினேன். யார், எவரென்று அடையாளம் கண்டு, என்னை நான் சுதாகரித்துக் கொள்ளுமுன்பே என் மார்பில் எதுவோ கூராக ஏறியது. கைப்பை கை நழுவ, நான் தடுமாறி நிலத்தில் விழுந்தேன், எனது முகம், மார்பு, கழுத்து என்று தொடர்ந்து கூராக எதுவோ பாய்ந்தது. என் முகத்துக்கு நேராக ரவியின் குரூரக் கண்கள் கோரமாகச் சிரித்தது. இறுதியாக ஒருமுறை தனது காலால் எனது உடலை உதைந்துவிட்டுத் திருப்தியோடு ரவி அங்கிருந்து செல்வது நிழலாக என் கண்களிலிருந்து மறைந்தது.

கண் விழித்தேன். இனிய புன்னகையோடு என் முன்னே தேவதை நின்றாள். கைகளை நீட்டினாள், அப்போது நான் நிலத்தில் கிடந்தேன்.  பெரும் காற்று சுழன்று அனைத்தையும் தன்னுள் அடக்கி உயர்ந்தது. தேவதையின் புன்னகை குறையவில்லை.
நம்பிக்கையோடு கரங்களை நீட்டினேன், சுழரும் காற்று என்னை இழுத்துக் கொண்டது. நான் சிறு சிறகாகி, சுழன்று மேலெழுந்து சிதைந்து அதிர்ந்து, பின் விடுபட்டு மௌனமாய் உயர எழுந்து எங்கோ தொலைவில் மறைந்து போனேன்.


போர்தின்ற நாட்டிலிருந்து, எதிர்காலத் துளிர்ப்பின் சிறு நம்பிக்கையோடு பனி படரும் நாட்டில் காலடியெடுத்து வைத்து, தமது கணவரால் கொல்லப்பட்ட எனது சகோதரிகளுக்கு இச்சிறுகதை சமர்ப்பணம்.

என் சகோதரிகளில் சிலர்:

தர்சிகா ஜெகநாதன்வயது – 27- மரணம் செப்டெம்பர் 2019

தயாளினி சுகிர்தன்ராஜ்வயது 31- மரணம் நொவெம்பர் – 2006

மாலினி தயாகுமார்வயது 36, நிருஜா மகள்வயது 14 மரணம்  நொவெம்பர் -2006

அனுஜா பாஸ்கரன்வயது – 21 மரணம் ஓகஸ்ட் 2012


கறுப்பி சுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.