என்‌‌ ‌‌ஊதா‌‌ ‌‌நிற‌,‌ ‌‌வாசனை‌‌ ‌‌திரவியம்‌‌ ‌‌தோய்ந்த‌‌ ‌‌புதினம்‌ ‌


 ங்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்த என் நண்பன் நாவலாசிரியர் ஜோசிலின் டர்பேட்டை தெரிந்திருக்கும், அவனது ஞாபகங்கள் சிதைந்து வருவதை என்னால் உணர முடிகிறது. அவனைப் பற்றிய உங்கள் எண்ண அலைகள், பாதி மறைந்த, தெளிவற்ற சிந்தனைகளாக; சில சர்ச்சைகளைப் பற்றியும், அதனால் வந்த இழிவைப் பற்றியும் இருக்கக்கூடும். உங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என் பெயர் பார்க்கர் இஸ்பாரோ, நான் பெரிதாக பேசப்படாத ஒரு நாவலாசிரியராக இருந்தேன், அவன் பெயருடன் என் பெயர் இணைந்து பத்திரிகைகளில் வரும்வரை. எங்களைப் பற்றி தெரிந்த சிலருக்கு, எங்கள் பெயர் எப்பொழுதும் இணைத்தே இருக்கும், சீசாவின் இருமுனைகளைப் போல. அவனது உயர்வுகள், என் தாழ்வுகளை உண்டாக்கவில்லை என்றாலும் ஒத்துப்போனது. பிறகு அவனது இறக்கம், என் உலகளாவிய சாதனைகளுடன் சேர்ந்தே பயணித்தது. நான் தவறுகள் எதுவுமில்லை என்று நிராகரிக்கவில்லை. நான் ஒரு வாழ்க்கையைத் திருடினேன், அதைத் திருப்பிக்கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த சில பக்கங்களை, நீங்கள் என்  ஒப்புதல்களாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வாக்குமூலம் முழுமையடைய, நான் நாற்பது வருடம் பின்னோக்கி, எங்கள் இருவரது வாழ்க்கை சந்தோஷமாக, ஒன்றுடன் ஒன்றிணைந்து, சேர்ந்தே பயணிக்க தயாராக இருந்த அந்தக் காலத்திற்கு செல்லவேண்டும். நாங்கள் இருவரும், ஒரே பல்கலைக்கழகத்தில், ஒரே பாடத்தை படித்தோம் – ஆங்கில இலக்கியம் – ஒன்றிணைந்தே எங்கள் முதற்சிறுகதைகளை மாணவர்களுக்கான பத்திரிகைகளில்  வெளியீடு செய்தோம், ‘கண்களில் கத்தி’ போன்ற பெயர்களுடன்.  (விசித்திரமான பெயர்கள் அவை). நாங்கள் பேரவாவுடன் இருந்தோம். எழுத்தாளர்களாக ஆசைப்பட்டோம், பெரும் எழுத்தாளர்களாக, சிறந்த எழுத்தாளர்களாக  கூட. சேர்ந்தே விடுப்பு எடுத்தோம், இருவரின் எழுத்துகளையும் மாறி, மாறி படித்தோம். தாராளமாக, உண்மையான கருத்துக்களை பரிமாற்றம் செய்துகொண்டோம், காதலிகளை பகிர்ந்துகொண்டோம். சில சமயங்களில், எங்கள் இருவரிடையிலேயே உடலுறவு வைத்துக்கொண்டோம். நான் இப்பொழுது குண்டாகவும், வழுக்கையுடனும் உள்ளேன். ஆனால் அந்தக் காலங்களில், தலை நிறைய சுருட்டைமுடியுடனும், ஒல்லியாகவும் இருந்தேன். நான் ஷெல்லி போல காட்சியளித்தேன் என்று எனக்கொரு அபிப்பிராயம் உண்டு. ஜோசிலின் உயரமாக, பொன்னிற கேசத்துடன், கட்டுடலுடன், இறுக்கமான மோவாய்ப்பகுதி கொண்டு, ஒரு சிறந்த நாசி (Nazi) ஆண் மகன்போல் தோற்றமளித்தான். ஆனால் அவனுக்கு அரசியல் மீது சிறிதளவும் ஈடுபாடில்லை. எங்கள் மத்தியில் இருந்த உடலுறவு, வெறும் பொஹீமியன் போல் காட்சியளிக்கவேண்டி, இருந்தது. அது எங்களைப் பற்றிய கவர்ச்சிகரமான அபிப்ராயத்தை கொடுக்கும் என எண்ணினோம். உண்மை என்னவென்றால்  எங்கள் இருவருக்குமே, மற்றவரின் ஆண்குறியின் தோற்றம் அருவருப்பை அளித்தது. நாங்கள் இருவரும், எங்களுக்குள்ளும், எங்களியிடையிலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, ஆனால் மற்றவர்கள் எங்கள் உறவைப் பற்றி பெரிதாக எண்ணியது  மகிழ்ச்சியளித்தது.

இவற்றில் எதுவுமே எங்கள் மத்தியில் இருந்த இலக்கிய நட்பிற்கு நடுவில் வரவில்லை. நாங்கள் இருவரும் அப்பொழுது பெரிய போட்டிமனப்பான்மையோடில்லை. இப்பொழுது அதைப்பற்றி நினைக்கையில், ஆரம்பகாலகட்டத்தில் நான் அவனைக் காட்டிலும் முன்னால் இருந்தேன். நான் தான் முதன்முதலில் உண்மையான, தரமான பத்திரிக்கையில் பிரசுரம் செய்யப்பட்டேன் – தி நார்த் லண்டன் ரெவியூ. எங்கள் பல்கலைக்கழக இறுதியில் நான் முதல், ஜோசிலின் இரண்டாம் வகுப்பெடுத்தோம். இவையனைத்தும் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாதென முடிவெடுத்தோம், அப்படியே ஆனது. நாங்கள் இருவரும், லண்டனுக்கு குடிபெயர்ந்து, பிரிக்ஸ்டன் என்ற பகுதியில்,  அறைகளை  வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். எங்கள் இருவரின் குடியிருப்புகளுக்கிடையே சில தெருக்களே இருந்தன. நான் எனது இரண்டாவது சிறுகதையையும் வெளியீடு செய்தேன், அதனால் அவன் முதற்கதை பிரசுரம் செய்யப்பட்டபோது எனக்கு பெருநிம்மதி கிடைத்தது. நாங்கள் சந்திப்பதையும், மது அருந்தி மகிழ்வதையும், எங்களின் எழுத்துக்களை வாசிப்பதையும் தொடர்ந்தோம். நாங்கள் நலிவடைந்து கொண்டிருக்கும் இலக்கிய சந்திப்புகளுக்கு சேர்ந்தே சென்றோம், அதே நேரத்தில் தேர்ந்த தேசிய பதிப்பகங்களில் மற்ற வாசிப்புகளுக்கு விமர்சனம் எழுதவும் ஆரம்பித்தோம்.

பல்கலைக்கழகப் படிப்பு முடித்து வந்த அந்த இரு ஆண்டுகள், எங்கள் வாழ்க்கையின் வாலிப சகோதரத்துவத்தின் உச்சம். நாங்கள் வேகமாக வளர்ந்து கொண்டு இருந்தோம். நாங்கள் இருவரும் எங்கள் முதல் புதினத்தை எழுதிக்கொண்டிருந்த நேரம் அது, அவற்றுக்குள் பொதுவாக பல விஷயங்கள் இருந்தன – செக்ஸ், குழப்பங்கள், சிறிது உலக அழிவைப் பற்றி, கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் விரக்தியைப் பற்றி, மற்றும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே தவறாக செல்லக் கூடிய அனைத்து நிகழ்வுகளைப் பற்றியும் சிறந்த கேலிகள். நாங்கள் இருவரும் மகிழ்வுடன் இருந்தோம். எங்கள் வெற்றிக்கு இடையே எதுவுமே இல்லை.

பிறகு இரு நிகழ்வுகள் நடந்தேறின. ஜோசிலின் என்னிடம் சொல்லாமல், தொலைக்காட்சிக்காக ஒரு நாடகம் எழுதினான். அப்பொழுது நான் அதுபோன்ற செயல்கள் எங்களைத் தாண்டியிருந்தவை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் இலக்கியக்கோவிலை வழிபட்டுக் கொண்டிருந்தோம். தொலைக்காட்சியோ வெறும் பொழுதுபோக்கு, மக்களுக்கான ஒரு கசடு. அந்த திரைக்கதை உடனடியாக படமாக்கப்பட்டது, இரு பெரும் நடிகர்கள் அதில் நடித்தனர், அந்த கதை வீடற்றவர்களைப் பற்றியும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றியுமாக இருந்தது. இவை அனைத்தையும் பற்றி ஜோசிலின் பேசி நான் எப்பொழுதும் கேட்டதில்லை. அது வெற்றி பெற்றது, அவனைப் பற்றிப் பேசினார்கள், கவனித்தார்கள். அவனின் முதல் புதினத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. இதெல்லாம் பெரிதாக இருந்திருக்காது அந்நேரத்தில் நான் அரபெல்லாவை சந்திக்காது இருந்தால். அவள் ஒரு இங்கிலாந்து நாட்டு ரோஜா, முழுமையான, தாராளமான, அமைதியான, வேடிக்கையானப் பெண், இன்றுவரை என் மனைவியாக இருக்கிறாள். எனக்கு ஒரு டஜன் காதலர்கள் இருந்தனர், ஆனால் அரபெல்லாவைத் தாண்டி செல்ல இயலவில்லை. எனக்கு வேண்டிய அனைத்தும் அவளிடம் இருந்தன, காமம், நட்பு, துணிச்சல், புதுமை. அந்த ஈர்ப்பு எனக்கும், ஜோசிலினிற்கும் இடையேவோ, எனக்கும், என் கனவுகளுக்கும் இடையேவோ நிற்குமளவு இல்லை. அதைத் தாண்டியிருந்தது. அரபெல்லாவின் குணம் அளவுகளற்றது, பொறாமைகளற்றது, அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளும் குணம். அவளுக்கு  ஜோசெல்லினை முதற்சந்திப்பில் இருந்தே பிடித்திருந்தது.

எது மாற்றத்தை உருவாக்கியது என்றால், எனக்கும், அரபெல்லுக்கும், மெட் என்றொரு மகன் பிறந்தான், அவனுடைய முதல் பிறந்தநாளில் நாங்கள் இருவரும் மணந்துக்கொண்டோம். எங்களுடைய பிரிக்ஸ்டன் அறை, எங்களுக்குப் போதுமானதாக  இல்லை. நாங்கள் தெற்கு நோக்கி தூரம் சென்றோம். உள்நோக்கி குறுமாவட்டங்களுக்கு, முதலில் SW 12, பின்பு SW 17. அங்கிருந்து ஒருவர் சேர்ரிங் கிராஸ் அடைய இருபது நிமிடம், ரயிலில் பயணிக்க வேண்டும், ஆனால் ரயில்நிலையம் செல்லவே புறநகர்ப் பகுதிகளிலிருந்து இருபத்தி ஐந்து நிமிடம் நடக்கவேண்டும். என்னுடைய தன்னிச்சை எழுத்தால் வரும் வருமானம் எங்களுக்குப் போதுமானதாக இல்லை. எனக்கு  பகுதி நேர வேலை ஒரு உள்ளூர்க் கல்லூரியில் கிடைத்தது. அரபெல்லா மறுபடியும் கருவுற்றாள் – அவளுக்குப் பேறுகாலம் பிடித்திருந்தது. என் கல்லூரி வேலை முழுநேரமாக மாறியது, என் முதல் புத்தகமும் வெளிவந்தது. சில பாராட்டுகள், மற்றும் சில விமர்சனங்கள் எழுந்தன. ஆறு வாரம் கழித்து, ஜோசிலினின் முதற்புத்தகம் வெளியானது – ஒரு உடனடி அதிர்வை ஏற்படுத்தியது. அந்தப் புத்தகம் என்னுடைய நூலை விட அதிகமாக விற்றுவிடவில்லை, (அந்தக் காலங்களில் விற்பனை எதையும் தீர்மானிக்கவில்லை) ஆனால் அவன் பெயருக்கு முன்னறிமுகம் இருந்தது. ஒரு புதுக்குரலுக்கான தேடல் இருந்தது, அதை என்னைக் காட்டிலும் நன்றாக பூர்த்திசெய்ய ஜோசிலினால் முடிந்தது.

அவனுடைய தோற்றமும், உயரமும் (நாசி என்று சொல்வது சரியல்ல, அதனால் ப்ருஸ் சாட்வின் மற்றும் மிக் ஜாக்கரின் பார்வை), அதிக அளவில் குமிந்த அவனது சுவாரஸ்யமான பெண் தோழிகள், அவன் ஒட்டிய பழைய M.G.A. ஸ்போர்ட்ஸ் கார், அவன் மதிப்பை உயர்த்தின. எனக்கு வயிற்றெரிச்சலா? இல்லையென நினைக்கிறேன். எனக்கு மூவர் மீது காதல் இருந்தது – என் பிள்ளைகள் கடவுளின் அவதாரமாக தெரிந்தார்கள். அவர்கள் மழலை மொழியும், செய்கைகளும், என்னை ஆச்சர்யப்படுத்தின. ஆரபெல்லாவின் மேலான ஈர்ப்பும் குறையவில்லை. அவள் மறுபடியும் தாய்மை அடைந்தாள், நாங்கள் மேற்குத்திசை நோக்கி, நாட்டிங்காமிற்கு புலம் பெயர்ந்தோம். கற்பித்தல், மற்றும் குடும்பப் பொறுப்புகளில், என் இரண்டாம் புதினம் எழுதுவதற்குள் ஐந்து வருடங்கள் ஆயின. புகழ்ச்சி இருந்ததது – போனதடவையை விட அதிகமாக, எதிர்ப்புகள் போனதடவையை விட குறைவாக. ஆனால் என்னைத் தவிர வேறுயாருக்கும் போன முறை நினைவிலில்லை.

அந்த நேரத்தில் ஜோசிலின் தன் மூன்றாவது புத்தகத்தை வெளியிட தயார் செய்துகொண்டிருந்தான். முதல் புத்தகம், ஜூலி கிறிஸ்டியின் நடிப்பில் திரைப்படமாக்கப்பட்டிருந்தது. அவனுக்கு விவாகரத்தாயிருந்தது, குதிரைலாயத்துடன் கூடிய ஒரு வீடு நாட்டிங்காமில் இருந்தது, தொலைக்காட்சியில் நிறைய நேர்காணல்கள், அவனது புகைப்படங்கள் லைப் ஸ்டைல் இதழ்களில் என இருந்தது. அவன் பிரதமரைப் பற்றிய களிப்படையக் கூடிய, அதே சமயம் கடினமான சொற்களைக் கூறினான். அவன் எங்கள் தலைமுறையின் பிரதிநிதியாக மாறிக்கொண்டிருந்தான். ஆனால் ஆச்சரியமான உண்மையென்னவென்றால், எங்கள் ஸ்நேகிதத்தில் சிறிதளவுகூட மாறுபாடில்லை. இடைவெளிகள் நிச்சயமாக இருந்தன. நாங்கள் எங்கள் தனித்தனி உலகங்களில் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தோம். எங்கள் டைரிகளில் அவகாசம் இருக்கிறதா என்பதைப் பார்த்தே நாங்கள் சந்தித்தோம். அவ்வப்பொழுது அவன் என்னையும், என் குடும்பத்தையும் காண மேற்குத்திசையில் பயணம் செய்தான். (அந்த நேரத்தில் எங்களுக்கு நான்காவது குழந்தை பிறந்ததால், நாங்கள் இன்னும் மேற்கே துர்ஹாம் சென்றுவிட்டோம். பெரும்பாலான சமயங்களில் நானே தெற்குநோக்கி கீழிறங்கி அவனையும், அவன் துணைவி ஜோலிட்யும் சென்று பார்த்தேன். அவர்கள் அப்பொழுது ஒரு பெரிய விக்டோரிய முறையில் கட்டப்பட்ட வீட்டில், ஹாம்ப்ஸ்டெட்டில், தரிசு நிலத்தின் அருகில் வசித்துவந்தனர்.

பெரும்பாலான சமயங்களில், நாங்கள் குடித்தோம், பேசினோம், புல்வெளிகளில் நடத்தோம். நீங்கள் நாங்கள் பேசியவைகளைக் கவனித்திருந்தால் , எங்கள் மத்தியில் அவன் ஒரு பிரபலமான நட்சத்திரம் என்பதற்கோ, என் இலக்கிய வாழ்க்கை நசிந்து கொண்டிருக்கிறது என்பதற்கோ, எந்த ஒரு அறிகுறியும் இருந்திருக்காது. என் கருத்துகளுக்கும் அவனது கருத்தளவு, அவன் முக்கியத்துவம் தந்தான், ஒருநாளும் அவன் என்னை துச்சமாகப் பார்த்ததில்லை. அவன் என் குழந்தைகளின் பிறந்தநாட்களைக் கூட நினைவில் வைத்திருந்தான். என்னை எப்பொழுதுமே சிறந்த விருந்தினர் அறைகளில் தங்கவைத்தான். ஜோலியட்டிடமும் விருந்தோம்பல் குறைவில்லை. ஜோசிலின் தன் பிற நண்பர்களை வரவேற்றான், அவர்கள் கலகலப்பாகவும், இனிமையாகவும் நடந்துகொண்டனர். அவன் பெரிய விருந்துகள் சமைத்தான். அவனும், நானும், அடிக்கடி சொல்வதுபோல் நாங்கள் “ஒரே குடும்பம்”.

எங்கள் மத்தியில் நிச்சயமாக இருவராலும் புறக்கணிக்கமுடியாத அளவுக்கு வேறுபாடுகள் இருந்தன. என் துர்ஹாம் வசிப்பிடத்தில் தோழமை குறைவில்லை, ஆனால் குழந்தைகளின் நெரிசல், கூட்டம், குளிர் பனிக்காலங்களில் பொறுக்கமுடியாதளவு இருந்தது. எங்கள் நாற்காலிகளும், கம்பளங்களும் ஒரு நாய் மற்றும் இரு பூனைகளால் சிதைந்திருந்தன. சமையலறையில் எப்பொழுதுமே அழுக்குத் துணிகள் குவிந்திருந்தன, ஏனென்றால் அங்கே தான் வாஷிங் மெஷின் வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் பல இடங்களில் இஞ்சி நிற தேவதாரு பொருத்திகள்    பாதிப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தன, வண்ணம் பூசவோ, மாற்றவோ நேரமின்மையால். ஒரு குப்பிக்குமேல் திராட்சைப் பழரசம், எங்கள் வீட்டில் இருந்ததே கிடையாது. குழந்தைகள் சுட்டித்தனத்துடன் இருந்தார்கள், ஆனால் குழப்பத்திற்கும், சத்தத்திற்கும் குறைவில்லை. என்னுடைய குறைந்த வருமானத்திலும், அரபெல்லாவின் அரைநாள் நர்சிங்கிலும் வாழ்ந்துவந்தோம். எங்களிடம் சேமிப்பே இல்லை, மிக சிறிய அளவே ஆடம்பரம் இருந்தது. என் வீட்டில் ஒரு புத்தகத்தை படிப்பது இயலாத காரியமாக இருந்தது. புத்தகத்தை கண்டுபிடிப்பதே!

நான் ஜோசிலின் மற்றும் ஜோலியட்டின் வீட்டிற்குச் சென்ற நாட்களை ஒரு விடுமுறை நாள் போலுணர்ந்தேன். அந்த விசாலமான நூலகம், மாதாந்திரப் புத்தகங்களைத் தாங்கி நிற்கும் காபி மேஜைகள், பரந்து விரிந்த அடர் நிறம் கொண்ட ஓக் மரத்தால் ஆனா தரைகள், சுவரோவியங்கள், கம்பளவிரிப்புகள், ஆடம்பரமான பியானோ, வயலின் கருவி அதன் ஸ்டாண்டுடன், என் பள்ளியறையில் அடிக்கிவைக்கப்பட்டிருக்கும் துண்டுகள், அற்புதமான குளியலறை. ஒரு முதிர்ந்த அமைதி வீடெங்கும் பரவியிருந்தது, பொருட்கள் இடையில் இருக்கும் ஒரு வரிசையும், பளபளப்பும், அனைத்து நாட்களும் வந்து வேலைசெய்யும் பெண்ணால் மட்டுமே தரக்கூடியது. அங்கு ஒரு தோட்டம் முதிர்ந்த வில்லோ மரத்துடன் இருந்தது. பாசிகள் படிந்து யோர்க்ஸ்டோனால் செய்யப்பட்ட மாடி. பரந்துகிடந்த புல்தரை, மற்றும் உயரமான மதில் சுவர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த இருப்பிடமெங்கும் பரந்த மனப்பான்மை, ஆர்வம், சகிப்புத்தன்மை, மற்றும் நகைச்சுவை எண்ணம் மேலோங்கியிருந்தன. நான் இவை அனைத்திலிருந்தும் எப்படி விலகியிருப்பது?

நான் ஒரு இருண்ட ஒற்றைக் கருத்தை இங்கே பதிவிட விரும்புகிறேன், என் மனதில் தோன்றிய அந்த தெளிவற்ற சிந்தனைக்கு நான் இன்னும் உருவம் கொடுக்கவில்லை. நிஜம்   என்னவென்றால், அந்த நிகழ்வு என்னை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. நான் பதினைந்து வருடங்களில் நான்கு புத்தகம் எழுதியுள்ளேன் – ஒரு வீர சாகசம், கற்பித்தல் பளுவையும், தந்தைக்கான பொறுப்பையும்,  இடமின்மையும் கருத்தில் கொள்கையில். என் நான்கு புத்தகங்களும், இப்பொழுது அச்சில் இல்லை. என்னிடம் எந்த பதிப்பகத்தாருமில்லை. நான் எப்பொழுதும், என் நண்பனிடம் என் இறுதி வரைவை, ஒரு இதமான அர்ப்பணிப்புடன் அனுப்பிக்கொண்டிருந்தேன். அவன் அதற்காக நன்றிகள் தெரிவித்தாலும், ஒரு முறை கூட என் புத்தகத்தைகப் பற்றித் தன் அபிப்பிராயங்களை தெரிவிக்கவில்லை. நான் அறிந்தவரையில் எங்கள் பிரிக்ஸ்டன் நாட்களுக்கு பிறகு அவன் ஒருபொழுதும் நான் இயற்றிய ஒற்றைச் சொல்லைக் கூட படிக்கவில்லை. அவன் தன் புதினங்கள் முதல்சில பிரதிகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டான் – ஒன்பது என் நான்கிற்கு. அவனின் முதல் இரண்டு மூன்று புத்தகங்களுக்கு, பெரிய கடிதங்களில், அவன் எழுத்துக்களைப் புகழ்ந்து எழுதியிருந்தேன், பிறகு எங்கள் நட்பின் சமன்பாட்டை எண்ணி நானும் நிறுத்திக்கொண்டேன். நாங்கள் இருவரும் எங்கள் இருவரின் புத்தகங்களைப் பற்றிப் பேசுவதை  அல்லது எழுதுவதையே  நிறுத்திவிட்டோம் – அது சரியாகத் தோன்றியது.

அதனால் இப்பொழுது நீங்கள், எங்களை நடுத்தர வயதைத் தாண்டி கண்டுகொள்வீர்கள், எங்களுக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும். ஜோசிலினை  நாட்டின் பொக்கிஷம் போல் கருதினர். என் அனைத்துக் குழந்தைகளும், பல்கலைக்கழகத்திலோ அல்லது படித்துமுடித்தோ இருந்தனர், நான் இப்பொழுதும் நன்றாக டென்னிஸ் விளையாடினேன், என் திருமண வாழ்க்கை சில விரிசல்கள், முனகல்கள் மற்றும் இரு பெரும் கருத்துவேறுபாடுகளை சந்தித்தப் பிறகும் ஒட்டிக்கொண்டிருந்தது, இந்த வருடம் நான் முழு விரிவுரையாளர் ஆகிவிடுவேன் என்ற வதந்திகள் வந்தவண்ணம் இருந்தன. நானும் என் ஐந்தாவது புத்தகத்தை இயற்றிக்கொண்டிருந்தேன் – ஆனால் அது மோசமாக உருவாகிக்கொண்டிருந்தது.

இப்பொழுது நான் இந்தக் கதையின் மையப்புள்ளியை அடைகிறேன், அந்த சீசாவின் முக்கியமானத் திருப்பம். அது ஜூலை மாத ஆரம்பம், நான் துர்ஹாமிலிருந்து ஹாம்ப்ஸ்டெட் கிளம்பினேன், இது நான் அடிக்கடி செய்வதே, என் இறுதித் தேர்வு பேப்பர்களைத் திருத்தியவுடன். எப்பொழுதும் போல் நான் மிதமான  சோர்வுநிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த முறை எப்பொழுதும் போலான வருகையாக அமையவில்லை. நாளை ஜோசிலினும் ஜோலியட்டும் ஒரு வாரம் ஓர்விஎட்டோ செல்வதாக இருந்தனர் நான் அவர்கள் வீட்டில் தனியாக தங்கி – பூனைக்கு உணவிடவும், செடிகளுக்கு நீர்ப்பாய்ச்சவும் மற்றும் அந்த சந்தர்ப்பத்தையும், அமைதியையும் பயன்படுத்தி என் புதினத்தின் ஐம்பத்தி எட்டு பக்கங்களை மெருகூட்டவும்  முடிவெடுத்திருந்தேன்.

நான் அங்கு சென்றடைந்த பொழுது, ஜோசிலின் ஏதோ வேலையாக வெளியில் சென்றிருந்தான், ஜோலியட் என்னை வரவேற்றாள். அவள் இம்பீரியல் காலேஜில் எக்ஸ்ரே படிக்கவியலின் நிபுணராக இருந்தாள், அவள் அழகான, நேர்த்தியானத் தோற்றமுடையவள், அவள் பேச்சு மென்மையாகவும், சாந்தமாகவும், நெருக்கமான தொனியிலும் இருந்தது. நாங்கள் தோட்டத்தில் உட்கார்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தோம், செய்திகளைப் பரிமாறிக்கொண்டபடி. பிறகு ஒரு சின்ன இடைவெளியுடன், அந்த நிமிடங்களுக்காகக் காத்திருந்தவள் போல், அவள் ஜோசிலினைப் பற்றி பேச ஆரம்பித்தாள், அவன் புத்தகத்தின் வேலை எப்படி நன்றாக நகரவில்லை என்று. அவன் தனது இறுதி வரைவை  முடித்து, சோகத்தில் ஆழ்ந்ததை. அவன் பேராவலுக்கு நிகராக அது இல்லை என்றும், இது மிக முக்கியமான புத்தகம் என்றும். அவன் துயரமிகுந்து இருந்தான். அவனால் அந்தப் புத்தகத்தை சரிசெய்யவும் இயலவில்லை, அழிக்கவும் மனதில்லை. இவளே ஒரு சிறிய விடுமுறையும், ஓர்விஎட்டோவின் பழமையான வெள்ளைத் தடங்களில் நடப்பதும் உற்சாகமூட்டும் என்று பரித்துரைத்துள்ளாள். அவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது, விலகல் தேவைப்பட்டது, அவன் பக்கங்களில் இருந்து.  நாங்கள் அந்த பெரிய வில்லோ மரநிழலில் அமர்த்திருந்த பொழுது, அவள் ஜோசிலின் எப்படி இடுக்கண் அடைந்திருக்கிறான் என்று கூறினாள். அவள் அந்த புதினத்தைப் படிப்பதற்கு ஆவல் தெரிவித்ததாகவும், ஆனால் அவன் ஏற்க மறுத்தான் – நியாயமான ஒன்றுதான், அவள் ஒன்றும் இலக்கிய ஆர்வம் கொண்டவளில்லை  என்றும் கூறினாள்.

அவள் பேசிமுடித்த பொழுது, நான் சற்றும் சந்தேகமில்லாமல், “அவன் கொஞ்சநேரம் அதை விட்டு விலகிச்சென்றால் நிச்சயம், அவனால் அதை பதப்படுத்தமுடியும்” என்றேன்.

அவர்கள் அடுத்த நாள் காலை புறப்பட்டனர். நான் பூனைக்கு உணவளித்தேன், எனக்காக இரண்டாவது காபி போட்டுக்கொண்டேன், என் பக்கங்களை, விருந்தினர் அறையின் மேஜைமேல் பரப்பினேன். அந்த விசாலமான, தூசிகளில்லா வீடு அமைதியாக இருந்தது. ஆனால் என் சிந்தனைகளோ ஜோலியட்டின் கதையை நோக்கி அலைபாய்ந்துகொண்டிருந்தது. எப்பொழுதுமே வெற்றியை மட்டும் பக்கபலமாக கொண்ட என் தோழனுக்கும் நம்பிக்கையின்மை வரும் என்பது புதுமையாகத் தோன்றியது. இந்த உண்மை எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது, கொஞ்சம் உற்சாகம் கூட ஊட்டியது. ஒரு மணிநேரம் கழித்து, எந்த ஒரு எண்ணமுமின்றி, நான் ஜோசிலினின் படிப்பறையை நோக்கி நகர்த்தேன். அதே திறந்த மனத்துடன் நான் அவர்களின் பள்ளியறைக்குள் திரிந்தேன். எங்கள் பிரிக்ஸ்டன் நாட்களில் இருந்தே அவன் கஞ்சாவை எங்கே வைப்பான் என்று தெரியும். எனக்கு அவனது சாக்ஸ் அலமாரியின் பின்னால் பதுக்கிவைத்திருந்த சாவிக்கொத்தை எடுக்க பெரிதாக நேரம் ஆகவில்லை.

நீங்கள் இதை நம்பமாட்டீர்கள் என்று எனக்கு தெரியும் ஆனால் என் திட்டம் அதுவல்ல. நான் சும்மா பார்க்கவேண்டும் என்று மட்டுமே நினைத்தேன்.

அவனது மேஜையில் ஒரு பெரிய பழைய தட்டச்சு இயந்திரம் முணுமுணுத்தது – அவன் அதை அணைக்க மறந்திருந்தான். இலக்கண உலகில் சொல் செயலாக்கம்  பயன்படுத்தும் பலரில் அவனும் ஒருவன். அங்கேதான் இருந்தது அவனது தட்டச்சு செய்யப்பட்ட பிரதி, அழகாக அடுக்கிவைக்கப்பட்ட சதுரக் குவியல், அறுநூறு பக்கங்கள் இருக்கும், பெரியது ஆனால் பிரமாண்டமானது கிடையாது. தலைப்பு “ட்யூமில்ட்” என்றிருந்தது. ஐந்தாம் வரவு என்று பென்சிலால் அடியில் எழுதப்பட்டிருந்தது, அதனைத் தொடர்ந்து போன வாரத்திற்கான தேதியுடன்.

என் நண்பனின் படிக்கும் நாற்காலி மீதமர்ந்து நான் படிக்கத் தொடங்கினேன். இரண்டு மணிநேரங்களுக்கு பிறகு, ஒரு கனவு போல் தோன்ற, ஒரு சிறு இடைவேளை எடுத்துக்கொண்டேன், பத்துநிமிடங்களுக்கு தோட்டத்திற்கு சென்று, பிறகு என் சொற்ப எழுத்தை தொடரவேண்டும் என்று முடிவுசெய்தேன். ஆனால் என்னையே அறியாமல் நான் ஜோசிலினின் மேசைக்கு இழுக்கப்பட்டேன். கொஞ்சம் தயங்கினேன், பின் அமர்ந்தேன், அந்த நாள் முழுவதும் படித்தேன், இரவுநேர உணவிற்காக கொஞ்சம் நிறுத்தினேன், நள்ளிரவு வரை படித்தேன், அதிகாலை எழுந்து படிக்கத்தொடங்கினேன், மத்திய உணவு நேரத்தில் படித்து முடித்தேன்.

அது பிரமாண்டமாக இருந்தது. இதுவரை அவன் இயற்றியதிலேயே மிகச்சிறந்தது. நான் வாசித்த சமீபகால புதினங்களிலேயே சிறந்தது. சொல்லப்போனால் டால்ஸ்டாய்  போன்ற லட்சியமதில் தெரிந்தது, நவீனகரமான சிந்தனைகளையும் சுமந்துகொண்டிருந்தது, ப்ரௌஸ்ட், ஜாய்ஸ் அவர்களின் சாயல் தெரிந்தது. அதில் சந்தோஷ நொடிகளும், ஆழ்ந்த சோகமும் கலந்திருந்தன. அவனது நடை எப்பொழுதைக் காட்டிலும் மிக இனிமையாகப் பாடியது. உலகப்பொது சிந்தனை அதில் தெரிந்தது, அதில் லண்டன் இருந்தது, இருபதாம் நூற்றாண்டும் இருந்தது. அவன் செதுக்கியிருந்த ஐந்து மையக் கதாபாத்திரங்களும் என்னை மதிமயக்க செய்தன. முடிவு – சுமார் ஒரு ஐம்பது பக்கங்களைக் கொண்ட அது ஆரோகணம் போல் மெதுவாக, தன் கம்பீரியத்தை கட்டவிழ்த்தது, துக்கம் ததும்ப, மென்மையாக, மிக நேர்மையாக முடிய நான் கண்ணீரில் கரைந்தேன். கதாநாயகர்களின் நிலைமை மட்டும் என்னை சோகத்தில் ஆழ்த்தவில்லை, கதையின் கரு, காதலைப் பற்றிய புரிதல் மற்றும் இழப்பு, விதி, அது மட்டுமில்லாது அதனின் கதகதப்பான புரிதல் மனிதகுலத்தின் பலவீனத்தைப் பற்றி.

நான் மேசையிலிருந்து எழுந்து. பெரிய கவனமெதுவும் செலுத்தாமல் புழுவைத் தேடி முன்னுக்கும், பின்னுக்கும் குதித்து கொண்டிருக்கும் ஒரு வலுவிழந்த பூங்குருவியைக் கண்டேன். மறுபடியும் என்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சொல்லவில்லை, ஆனால் என்னிடம் பெரிதாக எந்தத் திட்டமுமில்லை. நான்  உணர்ந்தது வெறும் ஒரு அசாதாரணமான வாசிப்பு, ஒரு விதமான ஆழமான நன்றிகள், இது இலக்கியத்தை ரசிக்கும் அனைவரும் சந்தித்த ஒன்றே.

என்னிடம் பெரிதான திட்டமெதுவும் இல்லையென்றாலும். அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதை நன்றாக அறிந்திருந்தேன். நான் மற்றவர்கள் நினைப்பில் இருந்ததை செயல்படுத்தமட்டுமே செய்தேன். நான் ஒரு மிருதனைப் போல நகர்த்தேன், என்னை என் செய்கையிலிருந்து தனித்துக்கொண்டேன். இந்த உருவாக்கம் ஒரு தற்காப்பு மட்டுமே, ஒரு பாதுகாப்பு வெளி. இப்பொழுது சிந்திக்கையில் லீ இஸ்ரேலின் மோசடி வதந்திகள் அல்லது போர்ஹெஸின் ‘பியெர்ரே மினார்ட்’ அல்லது கால்வினோவின் ‘இப் ஒன எ வின்டெர்ஸ் நைட் எ ட்ராவெளேர்.’ இல்லையென்றால் ஒரு வருடத்திற்கு முன்பு, ‘தி இன்போர்மேஷன்’ என்ற மார்ட்டின் ஏமிஸின் புத்தகத்தில் இருந்து ஒரு சிறு பகுதி. எனக்கு நன்குதெரிந்த ஒருவர் மூலம் தெரிந்துக்கொண்டேன், ஏமிஸ் அந்த பகுதியை ஒரு மாலைநேரம் மற்றொரு நாவலாசிரியருடன் (யாரென்று சரியாக ஞாபகம் இல்லை) ஆனால் ஒரு ஸ்காட்டிஷ் பெயர் கொண்ட, ஆங்கிலத் தோரணையுடையவர், இணைந்து குடித்துக் கொண்டிருக்கும் போது  பெற்றார். நான் கேள்விப்பட்டது என்னவென்றால் அந்த இரு நண்பர்களும், வேடிக்கையாக பல விதங்களில் எப்படி ஒரு எழுத்தாளர், மற்றொரு எழுத்தாளரின் வாழ்க்கையைக் கெடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இது வேறு. எவ்வளவு நம்பிக்கையற்றதாக இருந்தாலும், நடந்தவைகளை நினைத்துப்பார்க்கையில், அந்த காலைவேளையில் ஜோசிலினை காயப்படுத்தும் எண்ணம் இம்மியளவும் எனக்கில்லை. நான் அன்று என்னைப்பற்றி மட்டுமே சிந்தித்தேன். எனக்கும் கனவுகள் இருந்தன.

நான் சமையலறைக்கு அந்தப் பக்கங்களை எடுத்து சென்று, அவற்றை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்தேன். ஒரு வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு லண்டனில் பெரிதாக எவருக்கும் தெரியாத ஒரு தெருவை அடைத்தேன், அங்கே நகல் மையமிருப்பதை நான் அறிவேன். நான் வீடு திரும்பி, அசலை ஜோசிலினின் மேசைக்குள் வைத்து, அவ்வறையைத் தாழிட்டேன், என் கைரேகைகளை சாவிக்கொத்திலிருந்து துடைத்துவிட்டு, அதை சாக்ஸ் அலமாரியில் எடுத்தவண்ணமே வைத்தேன்.

வரவேற்பறை வந்தடைந்து, என் பெட்டியிலிருந்து ஒரு காலி நோட்டை எடுத்து – கிறிஸ்துமஸிற்கு எனக்கு அது எப்பொழுதுமே அளிக்கப்பட்டது – வேலையில் இறங்கினேன், தீவிரமாக. நான் சற்றுமுன்பு  படித்த புதினத்திற்கு நான் குறிப்புக்கள் எடுக்க ஆரம்பித்தேன். முதல் குறிப்புக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புள்ள நாளின் தேதியிட்டேன். நான் வேண்டுமென்றே பல முறை கதையிலிருந்து விலகினேன், பல தேவையற்ற சிந்தனைகளை அதில் கோர்த்தேன், ஆனால் கதையின் மையத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தேன். பெரும் வேகமாக மூன்று நாட்கள் இவ்வாறே எழுதிக்கொண்டிருந்தேன், இரண்டு நோட்டுப்புத்தகத்தை நிரப்பினேன், பல காட்சிகளை வரைந்தேன். புதுப் பெயர்கள் சூட்டினேன் அந்தக் கதாபாத்திரங்களுக்கு, அவர்களின் கடந்தகாலத்தை, சூழ்நிலையை, முகத்தின் பரிணாமங்களை மாற்றினேன். என் பழையப் புதினங்களில் இருந்து சின்னச் சின்ன கருக்களை இதனுடன் இணைத்தேன். என் எழுத்துகளை நானே மேற்கோள்காட்டிக் கொண்டேன். நியூயார்க் லண்டனுக்கு பதிலாக இருக்கலாம் என்று நினைத்தேன். பிறகு புரிந்தது ஜோசிலினைப் போல் என்னால் எந்த ஒரு நகரத்திற்கும் உயிர் கொடுக்க முடியாதென்பது, அதனால் மறுபடியும் லண்டனாகவே மாற்றியமைத்தேன். நான் கடினமாக உழைத்தேன், நான் எவ்வளவு சிறந்த படைப்பாளன் என்பதை உணர ஆரம்பித்தேன். இது எந்தளவுக்கு அவனுடையதோ அந்தளவுக்கு என் புதினமாகவும் இருக்கப் போகிறது.

நான் அங்கு மீதியிருந்த நாட்களில், முதல் மூன்று அத்தியாயங்களைத் தட்டச்சு செய்தேன். அவர்கள் திரும்பும் சில மணிநேரங்கள் முன், ஜோசிலினுக்கும், ஜோலியட்டுக்கும் ஒரு குறிப்பை எழுதினேன், நான் தேர்வாளர் கூட்டமைப்புக்கு செல்லவேண்டும் என்று. நீங்கள் என்னைக் கோழையென நினைக்கலாம், அவனிடம் இருந்து திருடுவதால் அவன் முகத்தில் முழிக்க மனமின்றி இருப்பதை நினைத்து. ஆனால் அது அப்படி இல்லை. நான் அங்கிருந்து விலகி, வேலை செய்யவேண்டும் என்று நினைத்தேன். என்னிடம்  ஏற்கனவே இருபதாயிரம் வார்த்தைகள் இருந்தன, அதனால் அதை முடிக்கவேண்டும் என்ற வெறியிருந்தது.

என் வீட்டில், அரபெல்லாவிடம், உண்மையாக, என் வாரம் வெற்றிகரமாக கழிந்தது என்று கூறினேன். நான் மிக முக்கியமானப் பணியிலிருந்தேன். எனக்கு முழுமையாக கோடை விடுமுறை தேவைப்பட்டது. ஜூலை மாதம் முழுவதும் உழைத்தேன். ஆகஸ்ட் மாத மத்தியில், என் முதல் வரைவை அச்சிட்டேன், முதல் நகலை அன்று எரித்தேன். பக்கங்களில் பல இடங்களில் திருத்தங்கள் செய்தேன், என் திருத்தங்களையும் தட்டச்சு செய்தேன், செப்டம்பர் மாதத் துவக்கத்தில், என் புது வரைவு தயாராக இருந்தது. நாம் உண்மையை எதிர்கொள்வோம், அந்தப் புதினம் இப்பொழுதும் ஜோசிலினுடையதே. அவனுடைய அற்புதமான வரிகள் பலவற்றை நான் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என் எழுத்துக்கள் போதுமான அளவு அது என்னுடைய உடைமை என்ற உணர்வை அளித்தன. நான் அந்தப் பக்கங்களில் என் அடையாளங்களைத் தூவியிருந்தேன். நான் என் முதல் புதினத்தைக் கூடக் குறிப்பிட்டுளேன், ஒரு கதாபாத்திரம் அதைப் படிப்பது போல – ஒரு கடற்கரையில்.

என் பதிப்பகத்தார், “மத்திய ஸ்தல” எழுத்தாளர்களைக் கொடூரமாக நீக்கும் எண்ணம் கொண்டு – என்னையும் “ஆழமான அனுதாபங்களுடன்” அனுப்பி வைத்தனர். நான் ஒப்பந்த அடிப்படையில் கைகள் பூட்டப்படாதிருந்தேன். இணையத்தளத்தில் சுய பதிப்பு செய்யாமல், பழமைவாதியைப் போல், கோர்ஜியெஸ் புக்ஸ் என்னும் சுய நிதி பதிப்பகம்  சென்றேன். அது திகைப்பூட்டும் வகையில் வேகமாக செயல்பட்டது. ஒரே வாரத்தில், என் கைகளில் ‘தி டான்ஸ் ஷி ரெஃப்யூஸ்ட்’ இன்  முதற்கட்ட நகல்கள் இருந்தன. அதன் மேலுடுப்பு ஊதா கலரில், தாமிரத்தில், தங்கம் பொறிக்கப்பட்ட எழுத்துகளைக் கொண்டு, பக்கங்கள் வாசனைத் திரவிய மணத்துடன் இருந்தது. நான் ஒன்றில் கையொப்பமிட்டு, பதிவஞ்சல் மூலம் என் நண்பனுக்கு அனுப்பினேன். அவன் எப்பொழுதும் அதை படிக்க மாட்டான் என்பதை நானறிவேன்.

இவை அனைத்தும் நான் செப்டம்பரில் கற்பிக்க மீண்டும் தொடங்கும் முன் நடந்தது. என் மிச்சநேரத்தில், இலையுதிர் காலத்தில், நான் புத்தகத்தை என் நண்பர்களுக்கும், புத்தகக்கடைகளுக்கும், செய்தித்தாள்களுக்கும், ஒரு நல்ல குறிப்புடன் இணைத்து அனுப்பினேன். நான் தொண்டு செய்யும் கடைகளுக்கு பிரதிகளை, அச்சு சுழற்சி அதிகரிக்க அளித்தேன். யாரும் அறியாவண்ணம் பழைய புத்தகக் கடைகளின் அலமாரிகளில் என் புத்தகங்களை வைத்தேன். மின்னஞ்சல் மூலம் ஜோசிலின் தன் புத்தகம் ‘தி டுமுள்ட்’ ஐ தள்ளிவைத்துவிட்டு, வேறொரு புதுப் புத்தக வேலையை செய்துகொண்டிருக்கிறான் என அறிந்தேன். எனக்கு அப்பொழுது புரிந்தது நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை காத்திருப்பதையும், நம்புவதையும் தவிர்த்து.

இரண்டு வருடங்கள் கடந்தன. நான் ஹாம்ப்ஸ்டெட்க்கு பல முறை சென்று வந்தேன். நாங்கள் எப்பொழுதும் போல, எங்கள் புத்தகங்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தோம். அந்தக் காலத்தில், ஒரு மனிதரிடமிருந்து கூட, என் மனைவியைத் தவிர்த்து, ‘தி டான்ஸ் ஷி ரெஃப்யூஸ்ட்’ குறித்த பேச்சே எழவில்லை. அரபெல்லாவை அந்த புத்தகம் மயக்கியது, பின்பு யாரும் அதை பொருட்படுத்தாதது கோவப்படுத்தியது. அவள் என் புகழ்வாய்ந்த நண்பன் இதைப்பற்றி எதாவது செய்யவேண்டும் என்று கூறினாள். நான் பொறுமையாக, அவனிடம் உதவி நாடாதது என் இறுமாப்பு என்று அவளை உணரச்செய்தேன். நான் லண்டன் சென்றபோதெல்லாம், இன்னும் பல ‘ தி டான்ஸ்’ பிரதிகளை பழைய புத்தகக்கடையில் விநியோகம் செய்தேன். கிறிஸ்துமஸ் நேரத்திற்குள், நானூறு புத்தகங்கள் உலகத்தில் இருந்தன.

‘தி டான்ஸ் ஷி ரெஃப்யூஸ்ட்’கும், ‘தி டுமுள்ட்’கும் நடுவே மூன்று வருடங்கள் உருண்டோடின. நான் எதிர்பார்த்தது போன்றே, நண்பர்கள் ஜோசிலினிடம் அவன் பிரமாதமாக எழுதியிருப்பதாகவும், அவன் புத்தகம் வெளிவரவேண்டும் என்றும் கூறினர். அவன் வெளிவரச் செய்த பொழுது, நான் நினைத்தவாறு செய்தியாளர்களும், பரவசநிலையில் பறவைகளைப் போன்று ஆனந்தகீதம் பாடினர். நான் பொறுமையாகக் காத்திருந்தேன், ஒரு வேளை, நான் யூகித்துவைத்திருந்த எண்ணங்கள் தன் போக்கிலேயே நடக்குமென்று. ஆனால் என் திரவியம் பூசப்பட்ட  புத்தகத்தை எவரும் படிக்காததால், எதுவும் நடக்கவில்லை. நானே தூண்டுதல் அளிக்கும்வண்ணம் தள்ளப்பட்டேன். நான் என் படைப்பை, ஒரு வேற்று உறையில், ஒரு அதிகமாக வம்புப்பேசும் லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட் விமர்சகருக்கு  அனுப்பினேன். என் கையொப்பமிடா குறிப்பு, சிக்ஸ்ட்டின் பாயிண்ட் கொரியரில், “இந்தப் புத்தகம் தங்களுக்கு போன மாதம் வெளி வந்த பிரபலமான புதினத்தை நினைவூட்டுகிறதா?” என்று.

மேற்படி நடந்தவை தாங்கள் அறிந்ததே. அது ஒரு பூரணமான கதை. ஒரு சூறாவளி  என் வீட்டின் வழியே, ஜோசெலினின் வீட்டை நோக்கி கிளம்பியது. அனைத்தும் சிறந்த உட்பொருள்கள். ஒரு மோசமான வில்லன், அமைதியான கதாநாயகன். ஒரு நாட்டின் பொக்கிஷம் வானிலிருந்து, கீழ்நோக்கி பறந்து விழுந்தது. அழுக்குப் படிந்த கரங்கள் கல்லாவில் மாட்டிக்கொண்டது போல் ஒருவன் அகப்பட்டான், ஒரு அதிர்ஷடமற்ற நண்பன் வஞ்சிக்கப்பட்டு, அவன் முழு பத்திகள் எடுக்கப்பட்டு, முழு கரு திருடப்பட்டு, கதாபாத்திரங்கள் உட்பட எந்த நம்பத்தகுந்த விளக்கமும் குற்றம் சுமத்தப்பட்டவனிடமின்றி. அவனுடைய நண்பர்கள் இப்பொழுது அறிந்தனர், அவன் இத்தனை நாட்கள் வெளியீடு செய்யாது தள்ளிப்போட்டதன் காரணத்தை. ஆயிரக்கணக்கான ‘தி டுமுள்ட்’ புத்தகம் கடைகளிலிருந்து நீக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டது. மற்றும் அந்த பழைய நண்பன்? உன்னதமாக எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்காமல், விமர்சனங்கள் செய்யமாட்டேன் என்று விலகியிருந்தான் – ஆனால் நிச்சயமாக ஒரு மேதாவி வெளிக்கொண்டுவரப்பட்டான். சிறந்த புத்தகம் பல ஆண்டுகளில், நவீனகாலங்களின் தரமான படைப்பு. படைத்தவனோ, மிருதுவானவன், தன் மாணவர்களாலும், சக ஊழியர்களாலும் விரும்பப்பட்டவன், அச்சிட்டார்களால் ஒதுக்கப்பட்டவன், அவனது புத்தகங்கள் விற்பனைக்கின்றி. பின்பொரு பதட்டம் உரிமைகளின் கொள்முதலுக்காக. அனைத்து உரிமைகளுக்கும் பின் பட்டியலில் இடப்பட்ட புத்தகங்கள், ‘தி டான்ஸ்’ உட்பட. முகவர்களும், ஏலங்களும் ஈடுபடுத்தப்பட, திரைப்பட உரிமையும், திரைத்துறையினரின் ஈடுபாடும். பிறகு விருதுகள் – புக்கர், விட்பிரட், மெடிசி, கிரிட்டிக்ஸ் சர்க்கிள் ஒரு பெரிய, இரைச்சலான விருந்தில். கோர்ஜியெஸ்சின் பிரதிகள் ஐந்தாயிரம் பௌண்டுகளுக்கு ஏப் புக்ஸில் விற்பனையானது. இந்த பரபரப்பு ஆசுவாசம் அடைந்த நேரம், என் புத்தகத்தின் விற்பனை கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் பொழுது, சிந்திக்கத் தூண்டும் கட்டுரைகள், இலக்கிய திருட்டின் இயல்பைப் பற்றி வந்தது, மாட்டிக்கொள்ள வேண்டுமென்ற விசித்திரமான தூண்டுதல், நடுத்தர வயதுகளில் வரும் கலைச்சுவைக்காக தன்னைத் தானே அழித்து கொள்ள வேண்டிய எண்ணம் குறித்து.

ஜோசிலின்னுடனான மின்னஞ்சல்களிலும் தொலைபேசி அழைப்புகளிலும் நான் சாந்தமாக இருந்தேன். புண்படுத்தப்பட்டது போல் சொல்லாமல் உணரவைத்தேன் எங்கள் உறவுகளை முறித்துக்கொள்ளும் எண்ணம் மேலோங்கி இருந்தது, இப்பொழுதைக்காவது. அவன் தன் குழப்பத்தைத் தெரிவித்தபொழுது, நான் என் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, கொஞ்சம் நிறுத்திவிட்டு, அவனிடம் நான் அனுப்பிய என் புத்தகத்தைப் பற்றி நினைவூட்டினேன். வேறெப்படி இது நடந்திருக்கும்? இறுதியாக ஒரு நேர்காணலளித்தேன், காலிஃபோர்னியாவை சார்ந்த ஒரு பத்திரிகைக்கு. அது என் அதிகாரபூர்வமான நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டது, மற்றப் பத்திரிகைகள் அதை எடுத்துகொண்டன. பத்திரிகையாளரை என் நோட்டுகளை ஆராய அனுமதியளித்தேன், நிராகரிப்பு சீட்டுகள் மற்றும் கடிதங்களையும், நான் என் ஊதா நிற புதினத்துடன் எழுதிய ஊக்குவிப்புக் கடிதங்களையும் காட்டினேன். அவர் என் பக்கம் குவிந்திருக்கும் நியாயங்களைக் கண்டார், அவர் என் உற்சாகம் நிறைந்த, வசீகரிக்க கூடிய மனைவியையும், என் குழந்தைகளின் தோழமையையும் கண்டார். கலைக்கான என் முழுமையான அர்ப்பணிப்பையும்,  என் பழைய நண்பனின் செய்கையை நான் விமர்சனம் செய்யத் தயங்குவதையும், நான் சுய-நிதி பதிப்பகத்தினால் சந்தித்த அவமானங்களை சத்தமில்லால் சகித்துக்கொண்டதைப் பற்றியும் எழுதினார், என் அருமையான பழைய புதினங்களும் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு ஜான் வில்லியம்ஸின் நிகழ்வு அளவிற்கு பாராட்டப்பட்டது. அந்த அமெரிக்கன் வாரந்திரத்தால் நான் ஒரு தியாக செம்மலானேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கை, யூகிக்கக்கூடியதாகவே அமைந்தது. இறுதியில் நாங்கள் ஒரு பெரிய வீட்டை, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் துர்ஹாமிலிருந்து மூணு மைல் தூரத்தில் வாங்கினோம். ஒரு கம்பீரமான நதி எங்கள் நிலத்தருகே ஓடுகிறது. என் அறுபதாம் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு என் இரு பேரப்பிள்ளைகளும் வந்திருந்தனர். ஒரு வருடத்திற்கு முன் எனக்கு வீரத்திருந்தகை பட்டம் வழங்கப்பெற்றது. நான் ஒரு துறவி போல் வாழ்கின்றேன், மிகுந்த செல்வம் கொண்ட துறவியாக. நான் தேசத்தின் பொக்கிஷமாகக் கருதப்படும் நிலையை அடைந்துகொண்டுள்ளேன். என்னுடைய ஆறாவது புதினதிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கவில்லை, ஆனால் விற்பனையோ வானைமுட்டியது. நான் எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாம் என எண்ணத் தொடங்கியுள்ளேன், யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை என நினைக்கிறேன்.

ஜோசிலினின் கதியும் அனுமானிக்கக் கூடியதே. வெளியீட்டாளர்கள் எவருமே அவனைத் தீண்டவில்லை, வாசகர்களும். அவன் தன் வீட்டை விற்றுவிட்டு பிரிக்ஸ்டன்னுக்கு புலம்பெயர்த்தான், எங்களது பழையக் கோட்டைக்கு,  அங்குமட்டுமே அவன் நிம்மதியாக இருப்பதாக சொல்கிறான். அவன் படைப்பின் பல்வேறு கோணங்கள் பற்றி இரவுவகுப்பு லேவிஷமில் எடுக்கின்றான். எனக்கு ஜோலியட் அவனுடன் தங்கியது நிறைவைத் தருகிறது. எங்கள் மத்தியில் எந்த ஒரு கருத்துவேறுபாடுமில்லை. நாங்கள் இப்பொழுதும் நெருக்கமாகவே இருக்கிறோம். நான் அவனை மன்னித்துவிட்டேன். அவன் என்னுடன் தங்க அடிக்கடி வருவான், அவனுக்காக நதி நோக்கிய சிறந்த அறைகள் ஒதுக்கப்படும். அவனுக்கு அங்கு நன்னீர் மீன்பிடிக்கவும், துடுப்புப் படகு விடவும் பிடிக்கும். சிலநேரங்களில் ஜோலியெட்டும் அவனுடன் வருவாள். அவர்களுக்கு எங்களுடைய பழைய பல்கலைக்கழக நண்பர்களின் கனிவும், பொறுமையும் பிடிக்கும். எங்களுக்காக பல நேரங்களில் அவன் உணவு சமைப்பான். நான் அவன் மேல் என் ஊதா நிற, வாசனைத் திரவியம் தோய்ந்த புதினத்தைப் பார்த்தான் என்ற  குற்றச்சாட்டைப் பதிவிடாததால் அவன் என்னிடம் நன்றிக்கடன் பட்டவனாக  நடந்துகொள்கிறான்.

சிலசமயங்களில், நள்ளிரவுகளில், அவனும் நானும் நெருப்பின் கதகதப்பில் அமர்ந்திருக்கும் பொழுது (அது ஒரு பெரிய கணப்படுப்பு), குடித்துக்கொண்டும், இந்த பேரிடரான சம்பவத்தை பற்றி ஆராய்ந்து கொண்டும் இருக்கும்போது, அவன் தனது அனுமானத்தைக் கூறுவான், இதை அவன் பல வருடங்களாக சிந்தித்து சமன் செய்துள்ளான்.  “நம் வாழ்க்கை எப்பொழுதுமே பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.

நாம் இருவரும் பல விஷயங்களை, ஆயிரக்கணக்கான முறை பேசியுள்ளோம், ஒரே மாதிரியான புத்தகங்களைப் படித்துள்ளோம், சேர்ந்தே வாழ்ந்துள்ளோம், பலவற்றைப் பகிர்ந்துள்ளோம், விசித்திரமான வகையில் நம் எண்ண அலைகளும், நம் கற்பனைகளும் ஒன்றிணைந்து விட்டதால், நாம் இருவரும் ஒரே மாதிரியான புதினத்தை இயற்றியுள்ளோம். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான.”

நான் ஒரு ஏற்புடைய போமேரால் கோப்பையை கையில் ஏந்திக்கொண்டு அந்த அறையின் மறுமுனையை அடைந்தேன், அவனது குடுவையை மறுமுறை நிரப்ப. அது வெறும் கோட்பாடு மட்டுமே, உன் நல்ல மனதினால் வரையறுக்கப்பட்ட கோட்பாடு, நம் இருவரின் ஆழமான, பிரிக்கமுடியாத நட்பின் சாராம்சம் இந்த சிந்தனை. நாம் ஒரு குடும்பம்.

நாங்கள் இருவரும் எங்கள் குடுவையை உயர்த்தினோம்.

சியர்ஸ்!


இயன் மெக்கீவின்

தமிழில் : லஷ்மி பிரியா

[ads_hr hr_style=”hr-fade”]

ஆசிரியர்கள் குறிப்பு:

[tds_note]

மூலக்கதை ஆசிரியர்: 

இயன் மெக்கீவின் பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த எழுத்தாளர். பதினைந்து புதினங்களையும், பல சிறு கதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். அவரது ‘ஆம்ஸ்டர்டம்’ என்ற புதினம், இலக்கியத்தில் மிக  மதிப்புடையதாக கருதப்படுகிற ‘மேன் புக்கர்’ பரிசை பெற்றுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்:

லஷ்மி பிரியா புத்தகங்கள் மீது பேர் ஆவல் கொண்ட ஒரு எழுத்தாளர்.  போஸ்டமார்னிசம் மற்றும் மினிமலிச சிந்திப்புகள் அவருக்கு  பிரியப்பட்டவை.

[/tds_note]

36 COMMENTS

    • நேர்த்தி மிகு நடை….

      உயிர்ப்புடன் மிளிரும் தமிழாக்கம்…..!

      தொடரட்டும் …..சிறப்பு மிகு மொழி பெயர்ப்பு…….!

        • Excellent Translation priya, கதையின் பரிமாணம் சிறிதும் சிதையாமல் தமிழைக் கையாண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

  1. Really great work, Priya Ma’am… She is the person who transfers literary energy tremendously to the society , especially in Tamil. By the way, she is the one who awakens and appreciates my Tamil literary writings. Before meeting Priya ma’am, I was traveling on a lonely literary road. My Road has taken forward by Priya ma’am… I am looking forward to work with Priya ma’am . By the way, you can also be a part of her literary journey by participating in her literary events (as I have been doing for awhile) … Connect with Tamil literature and Priya ma’am @ https://www.pachydermtales.com/

    By the way, I am also A published creative writer in Tamil and English…
    Connect with me by visiting my website regularly @ https://www.santoshachiever.com/

  2. I can understand how great it is when u say it’s one of your dream.I know the power of your privileged words Ms.Lakshmi priya mam.you have always been an astonishing guide and I feel it as a pride to read your words. Keep capturing this universe with your works. We shall be the humble followers of your harmony writing

  3. வாழ்த்துக்கள் லஷ்மி ப்ரியா.உன் மொழிபெயர்ப்பு மழைச்சாரல் போல இதமாக. இருந்தது.

  4. “முதலில் பார்க்கர் இஸ்பாரோவின் பிரசங்கத்தைத் தாளமுடியாமல் மூன்று மைல் ஓடியே துர்ஹாமுக்கு திரும்பிவிட முடிவெடுத்தேன்.. ஆனால் உடலுறவு என்ற வார்த்தை என்னை பார்க்கர் இஸ்பாரோவுடன் இருத்தி வைத்து விட்டது.
    கதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்கையில் என்னுடைய தமிழ்ச் சூழலெல்லாம் கழன்று, என்னையும் ஒரு இயல்பான லண்டன் வாசியாகவே ஆக்கிவிட்டது..
    ஹாம்ப்ஸ் டெட்டில், ஜோசிலின் டர்பேட்டின் மொத்த அறிவும் களவாடப்படும்போது, கையறு நிலையில் அந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்ததை நினைத்தால் எனக்குப் பெருத்த அவமானமாக இருக்கிறது.. பார்க்கர் இஸ்பாரோ, ஜோசிலின் டர்பேட்டுக்கு மட்டும் துரோகமிழைக்கவில்லை.. ஜோசிலின் மனைவி ஜோலியட், ஜோசிலின் மொத்த வாசகர்கள்,
    தன் வாசகர்கள், தன் மனைவி அரபெல்லா, தன் குழந்தைகள்…
    இவ்வளவு ஏன், தனக்குமே கூட துரோகமிழைத்துக் கொண்டு விட்டார்.! உலகெங்கிலும் உள்ள
    பார்க்கர் இஸ்பாரோ போன்ற அறிவுலகத் திருடர்களுக்கு துணை போவதற்க்காகவென்றே,
    “லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட்”
    போன்ற வம்புப் பத்திரிக்கைகளும் ஆங்காங்கு இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன..
    ஜோசிலின் டர்பேட்டுடைய உழைப்பான “ட்யூமில்ட்” நாவல்,
    பார்க்கர் இஸ்பாரோவால்
    “தி டான்ஸ் ஷி ரெஃப்யூஸ்ட்”ஆக வேடமிடப்பட்டிருந்தாலும், அது இலக்கிய உலகில் அடைந்த வெற்றி எனக்கு நிறைவையே அளித்தது..
    அந்நாவலின் வர்த்தகரீதியான பலன்களையெல்லாம் இப்படியொரு திருட்டு செய்த பார்க்கர் இஸ்பாரோ அடைந்திருந்தாலும், “தார்மீகரீதியான வெற்றி”யாக உண்மையில் கொள்ளப்பட வேண்டியது எதுவோ அது, ஜோசிலின் டர்பேட்டுக்குத்தான்..!!
    எனினும் இச்சிறந்த புனைவைப் படிக்க நேரும் எழுத்தாளர்களெல்லாம், தத்தமது “எழுத்தாள நண்பர்”(?!)களிடத்து இனி, விழிப்புடன் கூடிய தோழமையைத் தொடர்வார்கள் என நம்புகிறேன்..
    உலகத்தரம் வாய்ந்த இந்த மிகச்சிறந்த புனைவை அளித்த நூலாசிரியர் “இயன் மெக்கீவின்”
    அவர்களுக்கும்,
    ஆங்கில மூலத்தின் மொழிபெயர்ப்பு
    என்று சொல்லிவிட முடியாதபடி
    அப்படியொரு மாயத் தமிழில் இப் புனைவை நமக்கு சிரத்தையுடன் செய்து கொடுத்த”லக்ஷ்மி ப்ரியா” அவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளையும்,வாழ்த்துக்களையும்
    தெரிவித்துக்கொள்வதோடு,
    திரு.இயன் மெக்கீவின் அவர்களின்
    கற்பனைப் பாத்திரப்படைப்பான
    பெரும் இலக்கிய ஆளுமை-
    “ஜோசிலின் டர்பேட்” மட்டும் இப்போது உண்மையாகவே இருப்பவராயிருந்தால், ஜோலியட் மாத்திரமில்லை.. இனி நானும் கூட பிரிக்ஸ்டனில் ஜோசிலின் டர்பேட் உடன்தான் என் வாழ்நாளைக் கழிப்பேன்..
    மிகுந்த நன்றிகளுடன்..
    J.பாலாஜி.

  5. அருமையான மொழி பெயர்ப்பு எல்லாக்கதைகளும் அற்புதமான நிகழ்வை பிரதிபலிக்கின்றன

  6. I had to wait till my exams get over to actually read and enjoy this because I know Priya ma’am will have a huge surprise for the readers. And this work is truly intriguing and I enjoyed reading it. Priya ma’am keep inspiring us as always

  7. மீள்வாசனை இக்கதைக்குள் இனம்புரியாத ஓர் ஈர்ப்பு தொடர்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.