கரும்பூனையும் வெறிநாய்களும்


மார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து பூமியெங்கும் பனியாய் படர்ந்துக்கொண்டிருந்தது. எங்கும் எதிலும் இருட்டு, கருமை. பூச்சிகளின் ரீங்காரம், தவளைகளின் காமஒலி, அருகில் இருக்கும் குளத்தின் மறுகாலில் வழியும் தண்ணீரின் சத்தம், அதில் குதித்தோடும் அயிரை மீன் எழுப்புமொலி என அனைத்தையும் ஒன்றாக ஒலி கலவை செய்து கொண்டிருந்தது காற்று. குளத்தின் காவலனாகக் கரையில் நிமிர்ந்து நிற்கும் பனைமரங்கள் மீதுரசும் பனிக்காற்று, மெல்லிய குரலில் சோகமான ராகம் ஒன்றை ரீங்காரம் செய்து, இசைக்கோர்வைக்கு முழு வடிவம் கொடுத்தது.

ஆ..! அன்றிரவு அங்கே இந்த சூழல் இருந்தது உண்மைதான், ஆனால் இந்தக் கதைக்கு இப்படியான ஒரு தொடக்கம் சற்று பொருத்தமற்றதே! வேறுமாதிரிப் போகலாம்.

மார்கழியின் நடுவே, ஒரு நள்ளிரவில், நிலவு கரைந்து அந்த  உடங்காடெங்கும் பனியாய் படர்ந்துக்கொண்டிருந்தது. எங்கும் எதிலும் கருமையைப் பூசியிருந்தது வானம். அக்காட்டின் நடுவே பிய்ந்துபோன தூரிகையால் அடர்கருப்பு வண்ணக் கோடு போட்டதுபோல் காட்சியளிக்கும் அந்த பாழடைந்த தார் சாலை, இரவில் தன்மேல் பயணம் செய்வோரின் அட்ரினலின் சுரப்பை அதிகப்படுத்தி கிளுகிளுப்படைந்து கொள்ளும். திருடன், கொலைகாரன், காமக்கோட்டி எனப் பெயர் வாங்கிய அச்சாலை நான்கு கிலோ மீட்டருக்கு எந்த வளைவும் இல்லாமல் நேராகச் செல்லும், முடிவில் ஒரு குளம், அதன்பின் குடியிருப்புகள். சாலையின் இரு பக்கமும் ஆங்காங்கே இருந்த பனை மரங்களின் மேற்பார்வையில் ஏராளமான உடைமரங்கள் மட்டும் காற்றைக் குடித்து வாழ்ந்து கொண்டிருந்தன. சாலையை ஒட்டியிருக்கும் ஒவ்வொரு பனை மரமும் தனக்குப் பின்னால் யாரையோ ஒளித்து வைத்திருப்பது போன்ற பிரமையை வண்டியோட்டிகளுக்குத் தரும். அதிலும் நடுப்பகுதியில், மேடு ஏறி இறங்கும் ஓரிடத்தின் இடப்புறம் பத்தடிதூரத்தில் இருக்கும் மூத்த பனை மரம், அதனடியில் குவிந்திருக்கும் ஊமத்தை புதர், அவ்விடத்தை நெருங்கும் எவரின் கவனத்தையும் கேட்டு மிரட்டும்.

அப்பனை மரத்தின் பின்னால், புதருக்கடியில் ஆறுமுகம் ஓணான் போல தலையை மட்டும் உயர்த்தியபடி படுத்திருந்தான். இடது கையில் வெட்டரிவாளும், வலது கையில் கவைக்கோலும் வைத்திருந்தவன் மிகுந்தப் படபடப்புடன் நிதானமின்றி இருந்தான். சாரத்தைக் கீழே விரித்து அதன் மேல் படுத்து, பயத்தைப் போர்வையாய் தலை வரைப் போர்த்தியிருந்தான்.

சாலையில் தூரத்தில் ஒர் ஒளிப்புள்ளி முளைத்ததை தலையைத் தூக்கி, கண்களை விரித்து பார்த்தான். அதன்பின் அதன் ஒலி முளைத்து அவன் காதில் விழுந்தது. ஒரு TVS50 இல் இருவர் சத்தமாக பேசியபடி வந்துகொண்டிருந்தனர். ஆறுமுகம் தன்னை தயார் படுத்திக் கொண்டான். வெளிச்சம் நெருங்க நெருங்க அவர்களின் சத்தமும், ஆறுமுகத்தின் பதட்டமும் ஒரே வீச்சில் அதிகரித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்தபடியே இருந்தான். வியர்த்திருந்த கையை மண்ணில் தடவி, பின் அருவாளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். “முதலில் கையில் இருந்த கவைக்கோலை வண்டியின் சக்கரத்தினுள் விட்டு அதை நிலைகுலைத்து கீழே விழச் செய்ய வேண்டும். பின் அவர்களின் கழுத்தை அறுத்து அவர்களை பலியிட வேண்டும். இது என்னுள் திமிரும் மிருகத்தின் ஆற்றலை குறைப்பதற்கான சடங்கு. அதேவேளையில் அவர்கள் உடனே சாகக் கூடாது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடூரமாய் அவர்களைக் கொல்ல வேண்டும். பலியிடுவதற்கு முன் அவர்கள் முகத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும், காரி உமிழ வேண்டும். அத்தனை சிறுமையில்தான் அவர்கள் சாக வேண்டும். ஏனென்றால் இது வெறும் சடங்கு மட்டுமல்ல ‘ஒரு செய்தியும் கூட! இதன் கொடூரத்தின் அளவே இச்செய்தி கால ஓட்டத்தில் எவ்வளவு அழுத்தமாக பதியப்படும் என்பதை தீர்மானிக்கும். எனவே இதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது” என்று தன் மனதில் எண்ணியபடியே உதட்டைக் கடித்துக் கொண்டிருந்தான். “கொடூரமாகக் கொல்லணும்!” என்பதை மந்திரம் போல் முணு முணுத்தபடியே இருந்தான். அவர்கள் இவனை நெருங்குகையில், கடைசியாக ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்த்தான். பெருமூச்சி விட்டான், அது பந்தயத்தை துவக்கும் விசில் சத்தம்போல் கேட்டது. நடுக்கத்துடன் காலை மடக்கி, கையை ஊன்றி எழும்பத் தயாரான போது ஏதோ ஒன்று அவன் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் விழுந்து அழுத்தி அவனை எழவிடாமல் செய்தது. ஆறுமுகம் கோபத்தில் திரும்பிப் பார்தான், ஒரு கரும்பூனை. கருமையின் உச்சம், இரண்டடி உயரம் இருந்த அந்தக் கிழட்டுப் பூனையின் கண்கள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது. ஆறுமுகம் இதனை ஏற்கனவே எதிர்பார்த்தே இருந்தான் போல.

“ஏய் கெலட்டுத் தூம, கீல யறங்கு” என்று ரகசியமாய் கத்தினான். அது தன் முகத்தை அவன் முகத்தருகே கொண்டுபோய் கோபத்தில் கர்ஜித்தது, ஆம்! அந்த கரும்பூனை கர்ஜித்தது.

ஆறுமுகம் திரும்பி சாலையைப் பார்த்தான், அந்த ஒளியும், ஒலியும் அவனைத்தாண்டி இருளிள் புதைய ஆரம்பித்துக் கொண்டிருந்தன. மீண்டும் எழும்ப முயற்சி செய்தான். ஆனால் பூனை இம்முறை கழுத்தைக் கடித்து தரையோடு அழுத்தியது. கையை தரையில் தட்டினான், கத்தினான். முகம் மண்ணில் பதிந்தபடியே அழ ஆரம்பித்தான். அதன்பின், சற்று நேரத்தில் அந்த பூனை அவன் மேலிருந்து இறங்கி, எதுவுமறியாதது போல் அவனருகே அமர்ந்து அதன் முன்னங்கால் ஒன்றை தூக்கி நக்கிக் கொண்டிருந்தது. அழுது கொண்டிருந்த ஆறுமுகம் கண்களைத் திறந்து பூனையைப் பார்த்தான். வெறிகொண்டெழுந்து அதன் மீது பாய்ந்து, கையில் இருந்த அருவாளை கொண்டு அதை சரமாரியாக வெட்டினான்.

“என்ன மயித்துக்கு என் பின்னாடி வாரே… ஒன்னால ஒரு சோலியும் வெளங்கள…  பொளைக்கவும் வுடமாட்டக்க, சாவவும் வுடமாட்டக்க. கெலட்டுத் தூம, செத்து தொல” என்று கத்தியபடி வெட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அந்த கிழட்டு கரும் பூனை அதை பொருட்படுத்தவே இல்லை. அடுத்த காலை தூக்கி நக்க ஆரம்பித்தது.

ஆறுமுகத்திற்கு கை வலிக்க ஆரம்பித்ததும், அங்கேயே சிறிது நேரம் படுத்தான். பின் வேக வேகமாக சாரத்தை கட்டிக் கொண்டு, வெட்டருவாளை இடுப்பில் சொருகி, கவைக்கோலை தோளில் வைத்து கோபத்தில் முனகியபடி நடந்தான். அந்த பூனையும் அவன் பின்னாலே கால்களை உரசியபடி சென்று கொண்டிருந்தது. அதனால் அவனால் வேகமாக நடக்க முடியவில்லை. அவ்வப்போது நின்று அதை மிதிப்பான் ஆனால் அவன் கால்கள் அதன் மீதுப் படாது, ஊடுறுவிச் செல்லும். தன்னால் அதைத் தொட முடியவில்லை ஆனால் அது தன்னை அடிக்கிறது கடிக்கிறது… அது எப்படி என்ற குழப்பம் கோபமாக மாறி வெகு நாட்கள் ஆகியிருந்தது. எத்தனை வார்த்தைகள், வாக்கியங்களில் அவன் அப்பூனையை வசைபாடினாலும் அதன் அத்தனைக்கும் பொருள் “நீ என் வாழ்வின் சாபம், உன்னை தொலைப்பதே எனது விடுதலை”.

திடீரென அவன் கரண்டைக் காலை விளையாட்டாக அழுத்திக் கடித்தது. வலி தலைக்கேறி ‘விண்’ என்றபோது கவைக்கோலை கீழே போட்டு, குனிந்துக் காலை தடவினான். அதற்குள் பூனை வேகமாக ஓடி குளத்தங்கரை அருகே ஒரு பனைமரத்தில் சாய்த்து வைத்திருந்த ஆறுமுகத்தின் சைக்கில் கேரியரில் ஏறி அமர்ந்தது. ஆறுமுகம் அதனை முறைத்துப் பார்த்தபடியே வந்து சைக்கிளை எடுத்தான். அது கொட்டாவியிட்டு, பின் முன்னங்கால்களை முன்னால் நீட்டி அதில் தலை வைத்தபடி அமர்ந்திருந்தது. அப்பூனையை வெறுப்புடன் பார்த்தபடியே சைக்கிளை நகர்த்தினான்.

ஆறுமுகம் சைக்கிளை மிதித்துக் கொண்டிருக்கும் போதும் அப்பூனை அமைதியாக இருக்கவில்லை. பெடலில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த அவனின் கால்களை அவ்வப்போது கடித்தது. இடுப்பில் தலையை வைத்து முட்டியது. திடீரென எழும்பி முன்னங்காலை அவன் தோளில் தூக்கி வைத்து அழுத்தியது. பூனை விளையாட்டாகச் செய்தாலும், இச்செயல்கள் ஆறுமுகத்தை எரிச்சலடையச் செய்தன. அவ்வப்போது சைக்கிளில் இருந்து இறங்கி “இந்தா, இந்த வெளாட்டு புண்டெல்லாம் எண்ட வச்சிகிடாத” என்று கடிந்துக் கொண்டபடியே, மெதுவாக ஊர்ந்து, காலை 4.30 மணியளவில் சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோவிலை வந்தடைந்தான். கோவில் வளாகத்தில் இருந்த ஒத்தபனையருகே இருந்த திண்டில் மெதுவாக அமர்ந்தான். பூனை அங்கிருந்த தெருநாய்களை பார்த்து கலக்கத்தில் இருந்தது. ஆறுமுகம், கோவில் சன்னதியிலிருந்த மாடனின் சிலையை கூர்ந்து பார்த்தபடி இருந்தான். கன்னத்தில் வழிந்த இரு துளி கண்ணீரைத் துடைத்தபோது அவ்வழியே வந்த பூசாரி அணைந்த பெருமாள்,

“வாடே ஆற்மொவம்… இந்த பனியில யாம்டே இப்டி அலையுத?” என்றார்.

“இன்னைக்கி சந்தல்லா… குரு அண்ணாச்சிதான் வர சொன்னாவ” என்றான் ஆறுமுகம்.

“இன்னைக்கி யென்னடே சந்த? இன்னைக்கு பொதன் கெலம டேய். போதங்கெட்டுபோய் அலையாம வீட்டுல போயி படு மக்கா” என்று சொல்லி பூசாரி சன்னதி நோக்கிச் சென்றார். ஆறுமுகம் திரு திருவென முழித்தபடி பலிபீடத்தை நோக்கி நடந்தான்.

ஆறுமுகத்தை இக்கிழட்டுப் பூனை உடலுழைப்பு ஏதும் செய்யவிடுவதில்லை. சிறுமளஞ்சியில் வாரம் இருநாள் (திங்கள், வியாழன் கிழமைகளில்) நடைபெரும் வாழைக்காய் சந்தையில் சில எடுபிடி வேலைகள் செய்தால் ஐம்பது நூறு தேறும். அதுதான் அவனின் சம்பாத்தியம். ஆனால் பகலை வெறுக்கும் ஆறுமுகத்திற்கு அப்பணம் தேவைக்கு அதிகமானதே. சூரியனையும், உலகின் மீது பட்டு எதிரொளிக்கும் அதன் ஒளிக்கதிரையும் கடுமையாக வெறுத்தான். பகல் முழுக்க அறையிலேயே அடைபட்டுக்கிடப்பான். இரவு வேட்டைக்கு செல்வதைப் பற்றியும், அப்போது பிடிக்கும் மிருகத்தை பலியிடுவதைப் பற்றியும் மட்டுமே பகல் முழுதும் நினைத்திருப்பான். ஆனால் இதுவரை எந்த மிருகத்தையும் இப்பூனை பிடிக்கவிட்டதில்லை என்பதை எண்ணிக் குமைவான். விட்டத்தை பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருப்பவனின் கண்கள் பணிந்து மூடும் தருவாயில் பூனை இவன் மேல் சாடி கண்விழிக்கச் செய்யும். சுந்தரி, ஆறுமுகத்தின் தம்பி மனைவி திட்டி திட்டி ஊற்றும் கஞ்சியை அவன் தொடுவதே இல்லை. பூனைதான் அதனை ஆவலாய் உண்கிறது. “இந்த சில்லாட்ட ஊத்துற கஞ்ச குடிச்சி வாலுறதுக்கு நீ செத்து போயிறலாம் மூதி” என்று ஆறுமுகம் அதை திட்டுவதை எப்போதும் போல அப்பூனை மதிக்காது.

கிழக்கு சிவப்பதற்குள் கிளம்பினால்தான் சூரியனைப் பார்க்காமல் வீடடையமுடியும் என்றெண்ணி பலிபீடத்தில் இருந்து எழுந்து சைக்கிளை நோக்கி நடந்தான். சூரியனைப் பார்க்காத எல்லா நாட்களும் நல்ல நாட்களே அவனுக்கு. பூனை எப்போதும் போல் அவனுக்கு முன் சைக்கிளில் அமர்ந்தது. அப்போது பால்கார கணேசன் எதிரில் சைக்கிளில் வந்தான்.

“ஆற்மோண்ணே, நீரு இங்கயா இருக்கியரு? உங்க தம்பி உங்கள வயக்காடெல்லாம் தேடிட்டிருக்கான்.” என்றவனிடம் ஆறுமுகம் “எதுக்கு?” எனக் கேட்டான்.

“எனக்கு என்னவே தெரியும். சீக்கிரமாட்டு போரும்” என்று சொல்லி பால்காரன் கிளம்பியதும் ஆறுமுகமும் பூனையும் குழப்பத்துடன் வீட்டை நோக்கிச் சென்றனர்.

ஆறுமுகத்தின் தம்பி செல்வன் வீட்டுத் திண்ணையில் இவனுக்காகவே காத்திருந்தான். ஆறுமுகம் வந்ததும் எழும்பி அவன் முகத்தைப் பார்க்காமல் பக்கவாட்டில் பார்த்தபடி “அன்னைக்கு டேசனுள்ள ஒரு பையன் உங்கூட இருந்தாம்லா?”. இதைக் கேட்டதுமே ஆறுமுகத்தின் மனதில் ஏற்பட்ட அதிர்வு, கண்களில் பிரதிபலித்தது. செல்வம் தொடர்ந்தான் “அந்த சின்னப் பய… அவன் நேத்து ராத்திரி ஐகுரோண்டு ஆஸ்பத்திரில செத்து பொய்ட்டான் போல”. ஆறுமுகத்தின் தலையில் பேரதிர்ச்சி வெடித்தது, ஆனால் முகத்தில் எந்த பிரக்ஞையும் இல்லாமல் திண்ணையில் அமர்ந்தான். அவனைவிட நான்கு மடங்கு அதிகமாக அதிர்ந்தது அப்பூனை. செல்வன் மீண்டும் “நம்ம பிரசிடண்டு கலைட்டர் கிட்ட இதபத்தி பேசலாம், ஒரு கம்லைண்டு கொடுக்கலாம்’-னாரு”. ஆறுமுகம் தலையை தூக்கிப் பார்த்தான். செல்வம் சற்று தயங்கியபடி “அவனுவள இப்போ ஒன்னுஞ்செய்ய முடியாது. ஆனா உனக்கு எதும் கவுர்மண்ட் பைசா கெடைக்க வழி பண்ணலாம்னாரு, அதான். இன்ன சாங்காலம் அந்த பயலோட அம்மயும் வருது, நாமலும் போவும். நீ வேறெங்கயும் கெலப்பிகிட்டு பொய்றாத கேட்டியா?” என்று சொல்லி வீட்டினுள் செல்கையில்,. ஆறுமுகம் “ஆம்” என்றவாரு தலையசைத்தவாரு பூனையை பார்த்தான். லேசாக சிரித்தபடி தன் விரலை அதன் வாயருகே கொண்டு சென்றான். அது வெடுக்கென்று கடிக்கவந்தபோது லாவகமாக விரலை உருவிக் கொண்டான்.

ஒரு மரண செய்தி அதிர்ச்சியடைய செய்யும், துக்கத்தை ஏற்படுத்தும், இழப்பை உண்டுபண்ணும். சில சமயம், எதிரிகளின் மரணங்கள் மகிழ்ச்சியை கூட அளிக்கலாம். ஆனால் ஒரு மரண செய்தி ஒருவனுக்கு பொறாமையை ஏற்படுத்தினால்? ஆறுமுகம் இம்மரணச் செய்தியால் பொறாமையில் வெம்மி திண்ணையில் அமர்ந்தபடி எதிரில் பாழடைந்து கிடக்கும் ஒரு கான்க்ரீட் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

[ads_hr hr_style=”hr-zigzag”]

சில வருடங்களுக்கு முன்…

ராணி வேக வேகமாக எங்கிருந்தோ வந்து தன் வீட்டை அடைந்து, கேட்டை திறக்கும்போது எதிர் வீட்டுத் திண்ணையில் முறைத்தபடி அமர்ந்திருந்த ஆறுமுகத்தைப் பார்த்தும் பார்க்காதவளாய் முகத்தை திருப்பி உள்ளே சென்றாள். ஆறுமுகம் எழுந்து குறுக்கு நெடுக்காக அலைந்தபடி இருந்தான். உடல் முழுவதும் கோபத்தீ பரவியிருந்தது. மீசையை அடிக்கடி தேய்த்துக் கொண்டான். தலைமுடியை விரல்களால் கோதியபடியிருந்தவனிடம் அக்கரும்பூனை அப்போது இருந்ததில்லை. நல்ல உயரம், விரிந்த மார்பு கொண்ட வாட்டசாட்டமான ஆளாக இருந்தான். அவன் மீசையும் தலைமுடியும் தளபதி – ரஜினியை ஞாபகப்படுத்தும். “புருசன வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு ஊர் மேயுற வேசைக்கு பவுச பாரு” என்று பல்லைக் கடித்தபடி எதிர்வீட்டைப் பார்த்து முனங்கினான்.

ராணியின் கணவன் வெளிநாட்டில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு வகையில் அவன் ஆறுமுகத்திற்கு சொந்தக்காரன் முறைதான் வரும். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஊர் வருபவன். ராணி அழகான வாயாடி. செல்வத்தையும் ராணியையும் சேர்த்து அரசல்புரசலாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது ஆறுமுகத்தின் காதுகளுக்கும் வந்தது. ஆனால் செல்வத்தின் வயதை எண்ணி, அப்பேச்சுகளை தீவிரமாக ஆறுமுகம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் செல்வன் ராணி வீட்டு சுவர் ஏறி விழுந்ததை கண்ணால் பார்த்து மிகுந்த கோபம் கொண்டான். அன்றிரவே செல்வத்தை அறைந்து, கடுமையாக எச்சரித்தான். மறுநாள் காலை ராணி வீட்டிற்கு சென்று அவளிடம் சண்டைக்கு போனான். அப்போது ராணியின் அம்மா அங்கில்லை.

“உன் தம்பி சொவரேறி குதிச்சான்னா நீ அவண்ட போய் பேசு. வீணா எண்ட வந்து வாப்பரப்பு கேக்காத” என்று கத்தியவளிடம் ஆறுமுகம் மெதுவாக “நீ கூபுடாமலா அவன் வந்தான்” என்று சொல்லி அவன் வாயை மூடுமுன் அவள் பொறிய ஆரபித்தாள். இதற்குமேல் வாய் கொடுத்தால் பிரச்சனை ஊர் முழுவது நாறி விடும் என்று ஆறுமுகம் நினைத்து பேச்சை நிறுத்திக்கொண்டான்.

ஆனால் சில நாட்களுக்கு பின், நேற்று, ஆறுமுகம் வீட்டில் இல்லாத சமயத்தில் செல்வத்திற்கும் ராணிக்கும் சண்டை பெரிதாக மூண்டது. அந்தரங்கமாக ஆரம்பித்த வாய் தகராறு தெரு வரைக்கும் வந்தது. சரியாக காது கேட்காத செல்வத்தின் அம்மாவும் சண்டையில் குதிக்க, சண்டையின் சத்தம் உயர்ந்து ஊர் கூடியது. ஒரு கட்டத்தில் செல்வம்  ராணியை அடிக்க கையை ஓங்க, ஊராரின் கோபத்திற்குள்ளானான். அனைவரின் தலையீட்டால் பிரச்சனை அமுக்கிவைக்கப்பட்டது. ஆனாலும் ஊரார் மத்தியில் செல்வம் தன்னை அடிக்க கை ஓங்கியது ராணியின் தூக்கத்தை குடித்தது. செல்வம் இரவே கோபத்தில் வீட்டில் ஏதும் சொல்லாமல் வெளியே கிளம்பிச் சென்றான். முயல் வேட்டை முடிந்து இன்று காலை வீடு வந்த ஆறுமுகத்திடம் அவன் தாய் இரவில் நடந்ததை ஒப்புவித்தாள். கோபத்தில் ராணியின் வீட்டைத் தட்டினான், வீட்டில் அவள் இல்லையென்பதை அறிந்து அவளுக்காக தன் வீட்டுத் திண்ணையில் காத்திருந்தான். அவளோ செல்வத்தின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வந்திருந்தாள்.

ஆறுமுகம் அவளை திட்டியபடி முணு முணுத்து அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்த போது ஒரு இளவயதுடைய போலிஸ் கான்ஸ்டபிள் TVS50 – இல் அங்கு வந்தார். ஆறுமுகத்திற்கு லேசாக பிடிப்பட்டது. தயங்கியபடி திண்ணையில் அமர்ந்தான். வண்டியிலிருந்து இறங்கிய அந்த காவலர் ராணியின் வீட்டைப் பார்த்தார். பின், அப்படியே எதிரே திரும்பி ஆறுமுகத்தின் வீட்டைப் பார்த்து, அதை நோக்கி நடந்தார். வாசலருகே நின்று திண்ணையிலிருந்த ஆறுமுகத்திடம், “செல்வம் வீடு இதுதானே, வீட்டுல இருக்கானா?” என்று மீசையை முறுக்கியபடி கேட்டார். ஆறுமுகம் அமர்ந்தபடியே “அவன் இல்ல சார்… ராத்திரி போனவன் இன்னும் வரல” என்ற அவனின் வார்த்தை பணிவாக இருத்தாலும் முகம் விறைப்பாக இருந்தது. அது ராணியின் மீதிருந்த வெறுப்பு. கான்ஸ்டபில் அவனைப் பார்த்தபடியே சற்று யோசித்தார், பின் தன் வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியை திருப்பியவர்

“நீ அவனுக்கு யாரு?” என்றான்.

“அண்ணன்” என்று சொல்லி தலையை பக்கவாட்டில் திருப்பிக் கொண்டான். கான்ஸ்டபிள் சட்டென்று கோபம் கொண்டு

“புண்டாளுத… சாருன்னு சொல்ல மாட்டியோ? அவ்லோ பெரிய மையிரா நீ” என்று அவர் சட்டென்று குரல் மாற்றி சொன்னதைக் கேட்டது திகைத்தான்.

“இல்ல சார், அப்படில்லாம் ஒன்னுமில்ல” என்று பணிந்த குரலில் சொல்லி இழுத்தான். காவலர் வண்டியை நிறுத்தி ஆறுமுகத்தை நோக்கி வந்தார்.

“மொதல்ல எந்தில… கலைட்டர் மாதி பவுசு வெளங்குத” என்று பல்லை கடித்து அதட்டியபடி “சாரத்த கீல எறக்குல” என்றதும் ஆறுமுகம் திண்ணையிலிருந்து எழுந்தபடி மடித்து கட்டியிருந்த சாரத்தை அவழ்த்துவிட்டு கையை பின்னால் கட்டினான். அந்த காவலருக்கு ஆறுமுகத்தின் வயது அல்லது அவனைவிட இளைய வயதேயிருக்கும். உருவத்திலும் அவனை விடச் சிறியவன். ஆறுமுகம் பதட்டப் பட ஆரம்பித்தான்.

“நீ வா ஸ்டேசனுக்கு. உன் தம்பி வரவரைக்கும் நீ உள்ள இரு” என்று சொல்லி அவன் கையை பிடித்து இழுத்தபோது ஆறுமுகம் நிதானமாக

“சார் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, என் தம்பி வந்தொடனே நானே போல்டேசனுக்கு கூப்டுவாரேன்” என்று சொல்லி அவன் கையை எடுத்துவிட்டான். அடுத்த கணமே

“செரிக்கியுள்ளயலா, தனியா இருக்க, பொட்டச்சிட்ட வம்பிளுத்திட்டு யோக்கியப்புண்ட மாரி பேசிட்டிருக்கே. செவிடு பிஞ்சிடும்” என்று சொல்லி அவன் சட்டையை பிடித்து இழுத்தார்.

“சார், சத்யமா எனக்கு இதுல சம்பந்தம் இல்ல… ஒரு பத்து நிம்சம் பொறுங்க நான் மாடசாமியண்ணன கூப்டுவாறேன்” என்று சொல்லி மீண்டும் ஆறுமுகம் கையை தட்டிவிட கான்ஸ்டபிளுக்கு கோபம் தலைகேறியது. சுற்றிப் பார்த்தார், தெருவில் யாருமில்லை. கிராமங்களில் திருடன், கொலைக்காரனை விட போலிஸை பார்த்தே மக்கள் அதிகம் பயப்படுவார்கள். வீடுகளின் சன்னல்களுக்குப் பின்னால் ஒளிந்து அத்தனைக் கண்களும் இதனைப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த கான்ஸ்டபிள் அதன்பின் ஏதும் பேசவில்லை.  கோபத்தில் வண்டியை எடுத்து வேகமாக சென்றார்.

ஆறுமுகம் குழப்பமும், பதற்றமும் நிறைந்து எழும்ப முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் அவன் நண்பன் அண்டி ஓடி வந்து பதட்டத்துடன்

“ஆற்மொவம், ஒரு வேனு புல்லா போலிஸ் வாரானுவ, எதும் பிரச்சன ஆயிர கூடாது. நீ பொய் ஒளிஞ்சிக்க. பின்னாடி பாலையாண்ணே கரிமூட்டம் போட்டுருக்காவல்லா, அங்கபோ…” ஆறுமுகம் ஏதும் புரியாமல் நின்றான்.

“போல போல… நிக்கதுக்கு நேரமில்ல” என்று சொல்லி அண்டி ஆறுமுகத்தின் தோளை பிடித்து தள்ளினான். ஆறுமுகம் தயக்கத்தோடு சாரத்தைக் கட்டி ஓட ஆரம்பித்தான். உடை மரங்களுக்கிடையே ஓடியபோது முட்கள் உடலெங்கும் சிவப்பு கோடுகள் கீய்த்தன. அக்கோடுகளில் வியர்வை துளி பட்டு எரிந்தது அவன் மூளைக்கு எட்டவில்லை. மூளை ராணி மீதும், செல்வத்தின் மீதும் எரிச்சல் கொண்டு எரிந்துக்கொண்டிருந்தது.

புகைந்துக் கொண்டிருந்த கரிமூட்டங்களுக்குப் பின்னால் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கரி மூட்டைகளுக்கிடையில் தன்னை மறைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் போலிஸ் சுற்றி வளைத்தது. ஆறுமுகம் தப்பிக்க நினைத்து ஓட, சிறிய துரத்தலுக்குப் பின் அவனை மடக்கிப் பிடித்தனர். கரி மணலில் சிறு புழுவைப் போல பூட்ஸ் கால்களுக்கு கீழே துடித்துக் கொண்டிருந்தான். சாரத்தை கிழித்தெறிந்து, சட்டையால் அவன் கையை பின்னால் கட்டி, உள்ளாடையோடு ஊர் முழுக்க நடக்கவைத்து, ஊர் எல்லையில் வைத்து வேனில் ஏற்றினர். அத்தனை பெரிய உருவம் கொண்ட, அழகான ஆறுமுகம் அவர்களிடம் கெஞ்சி விசும்பிய போது அவனின் பொதடியில் விழுந்த அடிகளைப் பார்த்த எந்த சன்னலின் கண்களும் கலங்காமல் இருந்திருக்காது.

செல்வம் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அண்டியும் மாடசாமி அண்ணாச்சியும் சற்று நேரத்தில் காவல் நிலையம் போனார்கள். ஆறுமுகத்தின் தாய் கடந்த எழுபது வருடத்தில் என்றும் இப்படி அடித்து அழுதுகொண்டது கிடையாது. சம்பவம் நடந்த மூன்று மாதத்திலே உயிரையும் நீத்தாள். அண்டியையும் மாடசாமியையும் காவல் நிலையத்தின் உள்ளேயே விடவில்லை.

“அண்ணாச்சி, அவன் போலிசயே அடிச்சிருக்கான்” என்று காவல் நிலையத்தில் உள்ள ரைட்டர் ஒருவர் மாடசாமியிடம் சொன்னபோது அண்டி இடைமறித்து

“சார், அடிக்கலாம் இல்ல சார். நல்ல பையன் சார் அவன்” என்றான்.

“நல்லவன்னா என்ன மயித்துக்குல போலிச கண்டதும் ஓடி ஒளியனும்?” என்று அண்டியிடம் சொல்லி பின் மாடசாமியிடம் “அண்ணாச்சி, அவன் போலிஸ்ட சண்டித்தனம் பண்ணிருக்கான். சும்மா விட்டா, ஊருல டிபார்ட்மெண்டுக்கு என்ன மரியாத சொல்லுங்க… இதுல நீங்க தலையிடாம இருக்குறது நல்லது” என்று சொல்லிச் சென்றார்.

ஆறுமுகத்தை காவல் நிலையத்தில் இரண்டாம் தளத்தில் ஓரமாக இருந்த ஒரு அறையில் தள்ளி பூட்டினர். கண்ணிமைக்கும் பொழுதில் ஒரு மாபெரும் தவறு நடந்துவிட்டதாக அவன் உணர்ந்தான். நடந்ததை மட்டுமே எண்ணி வேதனையின் உச்சத்தில் இருந்தவன் நடக்கப்போவதை துளியும் அனுமானித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த இளம் கான்ஸ்டபிள் வேகமாக உள்ளே வந்து ஆறுமுகத்தின் கையை கட்டியிருந்த சட்டையை கழட்டி, விலங்கு மாட்டினார். ஆறுமுகம் சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் அவன் முதுகில் எட்டி மிதித்தார். கீழே விழுந்தவனை பூட்ஸ் காலால் முகத்தில் வெறி கொண்டு பல முறை மிதித்தார். அதன்பின் அவன் மார்பில் அதே வேகத்தில் மிதிக்க ஆரம்பித்தார். “நெஞ்சி விரிஞ்சா, பெரிய சண்டியனால நீ?” என்று சொல்லி சொல்லி மிதிக்கையில் ஆறுமுகம் மூச்சுவிட சிரமப்பட்டான், கத்தினான். ஒரு கட்டதில் பொறுக்க முடியாமல், வாயில் இருந்த இரத்தத்தை கீழே துப்பிவிட்டு “ஆம்பளையா இருந்தா வெளங்க கலட்டிட்டு அடில பாப்போம்” என்றபோது என்ன ஆகியிருக்கும் என்று உங்களால் கணிக்க முடிகிறதா? ஒரு குறுநில மன்னனிடம் ஒரு அடிமை எதிர்த்துப் பேசினால் அவன் என்ன செய்வானோ அதைதான் இப்போது இவர்கள் செய்யப் போகிறார்கள்.

“ஸ்டேசனுக்கு வந்தும் உன் திமிறு கொறையல பாத்தியா…” என்று சொல்லி அடுத்து ஆறுமுகத்தின் ஆண்குறியை மிதிக்க ஆரம்பித்தார். பின் சிதைந்துக் கிடந்த அவன் முகத்தில் காரி துப்பிவிட்டு வெளியே சென்றார் அந்த மன்னர் மன்னன். ஆ.. மன்னிக்கவும் அந்த காவலர்.

பின் சில மணி நேரங்கள் கழித்து, ஆறுமுகத்தின் எண்ணப்படி சில யுகங்கள் கழித்து, கையில் லத்திகளுடன் ஐந்து பேர் சாதாரணமாக சிரித்துப் பேசிக்கொண்டு, ஒருவரையொருவன் கிண்டலடித்தபடி வந்தனர். சிதைந்து கிடந்த ஆறுமுகத்தை தூக்கி அங்கிருந்த மேசையில் கமந்து படுக்க வைத்து, உள்ளாடையைக் கலட்டி, கைகளை விரித்தபடியும், கால்களை சேர்த்தபடியும் கட்டினர். வாயினுள் ஒர் அழுக்குத் துணியை திணித்தனர். குதிகாலில் முதல் அடி விழுந்ததும், மூளையில் இரத்தகுழாய்கள் வெடித்துச் சிதறுவது போல் உணர்ந்து கத்தினான். உடல் விறைத்தது, நரம்பு புடைத்தது. அடுத்து புட்டம், இடுப்பு, கணுக்கால், முதுகு, கழுத்து சில அடிகள் தலையில் என அத்தனை அடிமழை என்றே சொல்லலாம். ஆறுமுகத்திற்கு முதல் 20 அடிகள் மட்டுமே வலியை ஏற்படுத்தியது. அதன் பின் வலி தன்னுடனே இருக்கும் ஒரு இயல்பான உணர்வு போல் ஆனது. ஆழ்மனதில் பதிந்த சில நினைவுகள் கண்களுக்கு முன் முழுமையடையாமல் தோன்றி மறைந்தன.

சிலமணி நேரங்களுக்குப் பின் அங்கிருந்து அவனை தூக்கி, சுவரருகே நிற்க வைத்து, விலங்கின் ஒரு முனையை அவன் வலது கையிலும் மற்றதை அருகில் இருந்த சன்னல் கம்பியிலும் மாட்டி, பின் சன்னல் கதவை வைத்து அடித்து கையை உடைத்தனர். அப்போது தவறுதலாக அவனின் வலது கையின் பெருவிரலும் உடைந்தது. அதற்காக “அய்யய்யோ” என்று பதறிய காவலரின் உயரிய மனப்பான்மையை வலியால் துடித்துக்கொண்டிருந்த ஆறுமுகம் கவனிக்கவில்லை என்பது முறையே வருத்ததிற்குரியதுதான். அவர்கள் போகும்போது மீண்டும் அதே மேசையில் அதேமாதிரி கட்டிவைத்துச் சென்றனர். இல்லை, இம்முறை கால்களை விரித்து, தனி தனியாக கட்டினர். ஆறுமுகத்தின் உயிர், உடலின் அனைத்து துவாரங்களிலிருந்தும் கசிய துவங்கியது.

அன்று நள்ளிரவு, அங்குள்ள தலைமை காவலர்களில் ஒருவர், ஐம்பதிலிருந்து அறுபது வயது மதிக்கதக்கவர் கையில் எண்ணையை தடவிய இரண்டு அடி உயரமுள்ள லத்தியுடன் உள்ளே வந்தார். முகத்தின் உணர்ச்சி நரம்புகள் ஏதும் வேலைசெய்யவில்லை. ஆறுமுகத்தின் முதுகில் இருந்த தழும்பை தொட்டு தடவினார், பின் விரல் நகங்களை வைத்து முதுகில் பிராண்டினார். அவன் உடலை சிலிர்த்தான். பின் எண்ணை தடவிய அந்த லத்தியை அவன் ஆசனவாயிலினுள் மெதுவாக உள்ளே இறக்கினார். பல்லை கடித்தபடி, புணர்ச்சிலியில் ஈடுபடுபவர் போல முகத்தை வைத்திருந்தார். ஆறுமுகத்தின் ஆண்மையான குரல் தொண்டையிலிருந்து பிளறிய போது அவரின் உணர்வு நரம்பு வேலை செய்ய ஆரம்பித்து லேசாக சிரித்தார். “இவர்கள் பதவியின் துணைகொண்டு, சட்டத்தின் பின் ஒளிந்து நடத்தும் இந்த வன்முறைகளுடன் ஒப்பிடுகையில், சட்டத்திற்க்கு பயந்து அல்லது எதிர்த்து நடக்கும் வன்முறைகள் புனிதமானவைகளே” என்ற எண்ணம் ஆறுமுகத்திற்கு வந்திருக்கலாம். இல்லை… அவன் மூளையின் எலக்ட்ரான்கள் அனைத்தும், கலைத்துவிடப்பட்ட தேனீக்கள் போல உடலெங்கும் பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தன. வேறு சிந்தனைகளுக்கு நேரமில்லை.

அப்போது 17-18 வயதிருக்கும் இளைஞன் ஒருவனையும் அந்த அறையில் விட்டு பூட்டினர். “சார் நான் திருடல சார்… மொதலாளி வேனும்னே மாட்டிவிட்டுட்டாரு” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான். அவனால் ஆறுமுகத்தை அந்த மேசையிலிருந்து இறக்கி, ஒரு மூலையில் உட்காரவைத்தனர். அவன் அப்படியே சரிந்து விழுந்தான். “தண்ணீ… தண்ணீ” என்று முனகல், அச்சிறுவனை அடிப்பதில் பரபரப்பாய் இருந்த காவலர்களுக்கு கேட்கவில்லை. கண்களை திறந்து அந்த பலிபீடத்தை, அந்த மேசையைப் பார்த்தான். அது, தனக்கு நடந்தவைகளையே கண்முன் காட்சியாய் காட்டியது. அச்சிறுவனின் கதறல் சத்தம் சரியாக கேட்கவில்லை ஆனால் ஐவர் சுற்றி நின்று அவனை அடிப்பது மங்கலாகத் தெரிந்தது. அக்காட்சி ஆறுமுகத்திற்கு சிறுவயதில், தான் வளர்த்த ஒரு கருப்பு பூனைக்குட்டியை நான்கு வெறி நாய்கள் கடித்து குதறிய நிகழ்வை ஞாபகப்படுத்தியது. பூனை உயிர் போகும் தருவாயில் அம்மா நாய்கள் மேல் கல்லெரிந்து துரத்தினாள். ஆறுமுகம் சிதைந்த நிலையில் இருந்த அந்தப் பூனையைத் தூக்கினான். உயிர் இருந்தது, உயிர் மட்டும்தான் இருந்தது. சில நாட்களுக்குப் பின் உண்ணவும், உறங்கவும் முடியாமல் செத்துப் போனது.

“தண்ணீ… தண்ணீ” என மீண்டும் புலம்ப ஆரம்பித்தான் ஆறுமுகம். அச்சிறுவனை கட்டவிழ்த்துவிட்டு, ஒரு மூலையில் அமரவைத்து வெளியே சென்றனர். அச்சிறுவன் ஊர்ந்தபடியே ஆறுமுகத்திடம் வந்தான். அவன் காலைப் பிடித்து

“அண்ணே என்ன காப்பாதுண்ணே… பொய் கேஸ் போட்டானுங்கண்ணே. நான் எந்த தப்பும் பண்ணலனே” என்று கதறினான். ஆறுமுகத்தால் ஏதும் சொல்ல முடியவில்லை. மீண்டும் அழுதபடியே ஆரம்பித்தான் “பயமா இருக்குண்ணே காப்பாத்துண்ணே” என்று அவன் காலைப் பிடித்து ஆடியது ஆறுமுகத்திற்கு வித்தியாசமான வலியொன்று தலைக்கேறி அச்சிறுவனை மிதித்து தள்ளினான். சற்று நேரம் படுத்து அழுதவன் திடீரென வேகவேகமாக அந்த மேசையின் மீதேறி, மேலே தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பை கலட்டி உடைத்து அழுதபடியே சில துண்டுகளை விழுங்கினான். தொண்டையை பிடித்தபடி இரத்தம் வழிய வழிய கத்தினான்.

விஷயம் அறிந்த போலிசார் பதறி அவனை மருத்துவ மனையில் சேர்த்தனர். அன்று அதிகாலை அவனால் ஆறுமுகம் உயிருடன் வெளியே வந்தான். “அவன் தம்பி மேல இன்னும் கம்ப்லைண்ட் அப்படியேதான் இருக்கு… பாத்து நடந்துக்க சொல்லு” என்று மிகக் கனிவாக அண்டியிடம் அந்த ரைட்டர் மிரட்டினார். சிதறிக் கிடந்த ஆறுமுகத்தை அள்ளி அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தான். அன்றிரவு அவன் படுக்கை அருகே அமர்ந்து அண்டியும் மாடசாமியும் பேசிக்கொண்டிருந்தனர்.

“அப்படி என்ன பண்ணிட்டான்னு ஒரு கொலகாரன கூட்டிட்டு போற மாதிரி ஜட்டியோட தெருல இழுத்துட்டுப் போறானுங்க?” என்றான் அண்டி. மாடசாமி உடனே “ஏது, கொலகாரன என்னைக்கு போலிஸ் இப்படி ஜட்டியோட இழுத்துட்டு போயிருக்கு? அடிச்சா திருப்பி அடிக்காதவன பாத்துதான் போலிஸ் வீரத்த காட்டும்.” என்றார். அண்டி யோசித்தபடி மேலே பார்த்து “இந்த மாதிரி பண்ணூறவனுங்க நாளு பேர புடிச்சி பலி கொடுக்கனும். சும்மா விடக்கூடாது அண்ணாச்சி” என்றான்.

“பத்தியகாரன் மாதி பேசாத, நடக்குறத பேசுடே” என்று மாடசாமி தட்டிக் கழித்தார். மயக்க நிலையில் இருந்த ஆறுமுகத்திற்கு இது கேட்டிருக்க வாய்புள்ளது என்பது, பின்நாட்களில், இரவுகளில் உடங்காட்டு ரோட்டில் பலிகொடுக்க திட்டம் தீட்டி அலைந்து திரிந்ததை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.

மருத்துவமனையில் ஒரு நாள் இரவு ஆறுமுகம் தூங்கிக் கொண்டிருந்த போது யாரோ முதுகில் ஏறி குதிப்பது போன்ற உணர்வு தோன்றியது. வலி உயிரைத் தொட்டு வந்த போது எழுந்து பார்த்தான் அது அந்த கிழட்டு கரும்பூனை. பார்த்து பயந்து நடுங்கினான். இப்போது பிரச்சனை என்னவென்றால், அவனால் அதை தள்ளிவிட முடியவில்லை. கத்தி கூப்பாடு போட்டு அனைவரையும் அழைத்தான் ஆனால் அது வேறு யார் கண்ணுக்கும் தெரியவில்லை. ஆறுமுகத்தால் மட்டுமே பார்க்க முடிந்த அந்த பூனை அதன்பின் எப்போதும் அவன் கால்களுக்கிடையில் உரசியபடி அவனோடே இருந்தது, உயிர் போல.

ஆறுமுகத்தை போலிஸ் இழுத்துச் சென்ற அன்றிரவே ராணி ஊரை காலி செய்து, தன் தாயாரின் வீட்டிற்குச் சென்றாள். குற்றவுணர்ச்சியில் குமைந்துக் கிடந்த செல்வம், சில வருடங்களில் தன் தாய்மாமன் மகள் சுந்தரியை திருமணம் செய்து கொண்டான். மாடசாமி பிரசிடண்ட் ஆனார். அண்டி மும்பை சென்றான் என அனைத்தும் மாறிக்கொண்டே இருந்தது ஆறுமுகத்தைத் தவிர.

ஆறுமுகத்தால் முன்பு சீமை உடையை வெட்டி கரி மூட்டம் செய்து, கரி துண்டுகளை விற்று நடத்திவந்த பிழைப்பில் மண்விழுந்தது. அப்பூனையின் தொல்லையால் அவனால் எந்த வேலையும் செய்யமுடியாது. வெளியே ஒவ்வொரு மனிதரைப் பார்க்கையிலும் பழைய நினைவுகள் கிளரப்பட்டு மனம் தீரா வேதனைக்குள்ளாவதால் இரவுகளில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்தான். சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோவிலுக்கு தினமும் இரவு சென்றுவிடுவது வழக்கம். மாடனிடம் எப்போதுமே ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்து மன்றாடினான். அங்கு நடக்கும் வாழை சந்தையில் அப்படிதான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

[ads_hr hr_style=”hr-zigzag”]

ப்போது செல்வம் “அந்தப் பையன் இறந்து விட்டான்” என்று சொன்னது ஆறுமுகத்துடன் ஸ்டேசனில் இருந்த அச்சிறுவன் தான். இத்தனை வருடங்களுக்குப் பின் விடுதலையடைந்தான்.

ஆறுமுகம் மாலையில் பிரசிடண்டைப் பார்க்க செல்லவில்லை மாறாக சுடலை மாடனின் சன்னிதிக்கு சென்றான். கோவிலில், ஒத்தபனையருகே ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் இம்முறை பலிபீடத்தின் அருகே அமர்ந்தான். அருகில் பூனையும் சோகத்தில் இருந்தது. ஆறுமுகம் முதல்முறை சத்தமாக கதறி அழுதான். பூனை பதறி அவனை சமாதனப்படுத்த முயன்றது. “ஒரு பலி தன்னை சுதந்திரமாக்கும், அதை தன்னால் செய்யமுடியவில்லை. எனக்காக அதை செய்தருள் என் அப்பனே, சொடல மாடா” என்று தன் மனதினுள் நினைத்துக் கதறினான். அப்போது சன்னிதியிலிருந்து சுடலை மாடன் பெரிய மீசையை முறுக்கியபடி, வலது கையிருந்த அருவாளை தோளில் சாய்த்து, உறுமி தொண்டையை சரி செய்து கொண்டே ஆறுமுகத்திடம் வந்தது.

“என்னல மக்கா, என்ன பிரச்சன உனக்கு” என்று மாடன் கேட்டது ஆறுமுகத்தின் காதில் விழுந்து நிமிர்ந்துப் பார்த்தான். கூடவே பனங்கள்ளின் வாசமும் கடுமையாக வீசியது. ஆறுமுகம் மாடனின் காலில் விழுந்து கதறினான்.

“எல எந்தி எந்தி… என்னடே மக்கா சின்னப் புள்ள மாதி அளுதுட்டு கெடக்க?” என்று சொல்லி சற்று யோசித்தது, பின்

“எலேய் சரி… ஒன்னு பண்ணு, நீ சைக்கில எடுத்துட்டு கெலம்பு, மிச்சத்த நான் பாத்துகிடுதேன்.” என்றதும் ஆறுமுகம் யோசித்துக்கொண்டிருந்தான்.

“ஏய் போடே” என்று சற்று மிரட்டும் தொனியில் மீசையை முறுக்கியபடி மாடன் சொன்னதும் ஆறுமுகம் தயங்கியபடி சைக்கிளை நோக்கி நடந்தான். அந்த கிழட்டு கரும் பூனையும் அவன் பின்னால் சென்றது. ஆனால் மாடன் அப்பூனையின் கழுத்தைப் பிடித்து தூக்கியது. கத்தி ஆர்பாட்டம் போட்ட அப்பூனையை பலிபீடத்தில் ஒரு ஓரத்தில் மாடன் கட்டி வைத்தது. பின் ஒரு புளித்த ஏப்பம் விட்டு, தொண்டையை சரி செய்தபடி சன்னதிக்குள் சென்றது.

ஆறுமுகம் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தான், சிரித்தான். மகிழ்ச்சியில் சைக்கிளில் இருகைகளையும் விரித்தபடி வானத்தைப் பார்த்துக் கத்தினான். பின் சைக்கிளை தள்ளிப் போட்டு வேகமாக ஓடினான். காற்றில் கைகளை விரித்து பறக்கவும் செய்தான்.


 – விஜய் வேல்துரை

4 COMMENTS

  1. நேர்த்தியான உவமையுடன், அதிகார அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சாமானியன் கடந்து சென்றாக வேண்டிய போராட்டங்களை உணர்ச்சி வலியுடன் கண் எதிர் காட்டுகிறது இக்கதை !

  2. ‘கரும்பூனையும் வெறிநாய்களும்’ விஜய் வேல் துரையின் சிறுகதை அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை யதார்த்தமான வாழ்வியலை தோலுரித்து குறிப்பாக தவறான முறையில் சட்டத்தை பிரயோகிக்கும் காவல் துறை.அருமையான கதை.
    –தஞ்சிகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.