இராவணத் தீவு – பயணத் தொடர் 5


சீகிரியா – சிங்கத்தின் நுழைவாயில்.

லைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகின்றேன். மலைகளைக் கடக்கின்ற சுவை பிடிபட வேண்டும். அது இந்த வாழ்க்கைக்கு புதிய புதிய நம்பிக்கைகளையும் , கனவுகளையும் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். புதிய புதிய வானங்களையும் , வானவில்களையும் காட்டக்கூடும், கூடடைகின்ற பறவைகளையும் , தூரதேசம் நோக்கிப் பறக்கின்ற பறவைகளையும் வழியில் நீங்கள் சந்திக்கக் கூடும். மலைகளையும் , நதிகளையும், கடல்களையும், நம்பலாம். அவை ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. அமெரிக்க எழுத்தாளர் ஜான் முயிர் இப்படிச்சொல்வார்,

[ads-quote-center cite=”]

மலைகளில் ஏறிப்பார் அவை

உனக்குக் கதைகள் சொல்லும்

மரக்கிளைகள் வழியே

கதிரவனின் கதிர்கள்

பாய்கையில் இயற்கையின்

அமைதி உன் உள்ளத்தை

ஊடுருவிச் செல்லும். தென்றல் உன்னைத் தாலாட்டும்

பெருங்காற்று தன் சக்தியைக்காட்டும்

இலையுதிர்காலத்தில் உதிரும் சருகுகளைப்போல்

உன் கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்….

[/ads-quote-center]

 

இந்த வரிகள் எந்தளவு உண்மையென்பதை சீகிரியாக் குன்றை ஏறிக்கடக்கின்ற போது உணரமுடிகிறது. இன்றிலிருந்து ஏழு வருடங்களுக்கு முன் நான் அந்த குன்றைப் பார்ப்பதற்குப் போயிருந்தேன். அது காசியப்பன் என்கின்ற மன்னனின் கோட்டையென்பதைத் தாண்டி அன்று எனக்கு வேறு எதுவும் பெரிதாகத் தோன்றவில்லை. மற்றபடி சுற்றியுள்ள அந்த இயற்கையை மனமுவந்து இரசித்தேன்.

2017-2020 வரையான இந்தியப் பயணங்களில் சில சுவாரஸ்யமான ஆதாரங்கள் எனக்குக் கிடைத்திருந்தன.   அஜந்தா பயணம் குறித்தும் அவற்றின் கலையம்சம் குறித்தும் எனது இரண்டாவது இந்தியப் பயணப் புத்தகத்தில் விரிவாக எழுதுவேன் அதற்காக மட்டுமே 2020 இல் ஜனவரி மாதம் 20 வது திகதியன்று மீண்டும் சீகிரியா குன்றை நோக்கிச் சென்றிருந்தேன்.

சீகிரியா குன்று தொடர்பில் எழுதுவதற்கு முன்னர் கல்கியின் எழுத்துக்களின் மூலமாக சில இரகசியங்களை உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று நினைக்கின்றேன். சிவகாமி சபதம் என்ற நூலில் வருகிற இந்த வரிகளைக் கவனியுங்கள்,

” வடக்கே வெகுதூரத்தில் கோதாவரி நதிக்கும் அப்பால் அஜந்தா என்ற மலை இருக்கிறது. வெகு காலத்துக்கு முன்னால் அந்த மலையை குடைந்து புத்த சைத்தியங்களை அமைத்திருக்கிறார்கள். அந்த சைத்தியங்களில் புத்த பகவானுடைய வாழ்க்கையையும் ,அவருடைய பூர்வ அவதாரங்களின் மகிமையையும் விளக்கும் அற்புதமான சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஐநூறு வருடத்திற்கு முன்னால் வரைந்த அந்த ஓவியங்கள் இன்றைக்கும் வர்ணம் அழியாமல் புதிதாக எழுதியதைப்போலவே இருக்கின்றன. அந்த அற்புதச் சித்திரங்களை எழுதிய சித்திரக்கலை மேதாவிகளின் சந்ததிகள் இன்னமும் அங்கே இருக்கிறார்கள்.

அவர்கள் அஜந்தா குகையில் பழைய சித்திரங்களுக்குப் பக்கத்தில் புதிய சித்திரங்களை வரைந்து வருகிறார்கள். ஆயிரம் வருடம் ஆனாலும் அழியாமல் இருக்கக்கூடிய வர்ணச் சேர்க்கையின் இரகசியம் அவர்களுக்குத் தெரியும்..”

என்று அஜந்தா வர்ண சேர்க்கையின் இரகசியம் குறித்த ஒரு உரையாடல் ஆயனர் சிற்பிக்கும் , நாகநந்தி அடிக்கும் , பரஞ்சோதிக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கும். அஜந்தா ஓவியங்களின் வர்ணச்சேர்க்கையும் நுணுக்கமும், நேர்த்தியும் அத்தகையவை. ஆயிரம் இரகசியங்கள், ஆச்சரியங்கள், குழப்பங்கள் நிறைந்தவை.

இந்தியாவின் Archaeological survey  இன் Director General , R.C.Misra சொல்வதன்படி அஜந்தா குகையானது கி.மு. 2 மற்றும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டினையும் சேர்ந்தவை. இந்த காலங்களில் வரையப்பட்ட அஜந்தாவின் ஓவியங்கள் போல அச்சு அசல் அதே சாயலில் எப்படி இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரத்திற்கு அண்மையில் 1144 அடி உயரமான மர்மமான ஒரு தனித்த குன்றின் மீது கி.பி. 6 ம் நூற்றாண்டில் வரையப்பட்டது? அப்படியென்றால் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் அஜந்தா குகைகளிலிருந்து பௌத்த துறவிகள் சீகிரியாவிற்கு வந்திருக்கிறார்கள். நெடுங்காலமாக வசித்திருக்கின்றார்கள். இந்த குன்று தொடர்பாகப் பல மர்மமான கதைகள் உண்டு. பச்சை பசேல் என்று  மலைகள் நிரம்பிய மலைநாட்டில் மலைகள் தொடர்ச்சியாக இருக்கும். ஆனால் இந்த சீகிரியா  குன்று மலைநாட்டின் ஏனைய மலைகளுடன் எந்தவிதத்திலும் தொடர்பற்று தனித்து நிற்கிறது. சில புவியியல் ஆய்வாளர்களின் கருத்தின்படி சீகிரியா   குன்றானது இரண்டு மில்லியன் காலத்துக்கு முன்னர் எரிமலை ஒன்று வெடித்திருந்ததாகவும் அந்த எரிமலை குழம்பே காலப்போக்கில் உறைந்து சீகிரியா   குன்று உருவானது என்கின்றார்கள். சீகிரியா   குன்றுடன் சேர்த்து இங்கு இருக்கை குகை,  நாகபடக்குகை, சித்திரகூடக்குகை என்று முக்கியமான மூன்று குகைகள் காணப்படுகிறது. ஆனால் இவை கி.பி. 1ம் நூற்றாண்டுக்கு உரியவை. இதைச்சுற்றி காணப்படுகின்ற பூங்கா, அரசமாளிகை, கால்வாய்கள், அகழிகள் போன்றவற்றின் இடிபாடுகள் அங்கு அழகும், பாதுகாப்பும் நிறைந்த இராச்சியம் இருந்ததைக்காட்டுகிறது. காசியப்ப   மன்னனின் வாழ்வும், அவனது ஓவியங்களும் அஜந்தா, சித்தன்னவாசல் ஓவியங்களில் இருக்கிற மர்மமான கலையுணர்ச்சி பற்றிப் பேசுவதற்கு முன்னர் இந்த சீகிரியாகுன்று காசியப்ப   மன்னனுக்கு முன்னரே அது ஒரு பெரும் சாம்ராச்சியத்தின் மாநகராக இருந்திருக்கிறது. இன்று சீகிரியாகுன்று என்று அழைக்கப்படுகிற இந்தக் குன்று சிவகிரி என்று அழைக்கப்பட்டிருக்கின்றது. இராமாயணக் காலத்தில் இந்தக் குன்று இராவணனின் உபநகராக இருந்திருக்கின்றது. ஆய்வுகளின்படி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நீர்த்தோட்டத்தின் கீழ் இராவணனின் புராதன நகரத்தின் இடிபாடுகள் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

அதைத்தாண்டி விண்வெளி மனிதர்களுடன் தொடர்புபடுத்திய பல கதைகள்கூட சீகிரியா குன்று தொடர்பில் உள்ளூர் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இது தொடர்பான ஆய்வுக்கென்றே சில வெளிநாட்டவர்கள் இங்கே வருகிறார்கள். இப்படிப்பட்ட அமானுஷ்யக் கதைகள் நிறைந்த குன்றைத்தான் கி.பி. 5ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சிம்மவர்மனின் தங்கையின் மகனான காசியப்பன் தனது கோட்டையாகத் தெரிவு செய்திருந்தான்.

இலங்கையின் மத்திய மலைநாடு என்பது மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யம். மலைநாடு முழுவதும் இயற்கை பாதுகாப்புடன் அழகுடன் கூடிய பல இடங்கள் இருக்க, குறிப்பிட்ட சீகிரியா  குன்றினை அவன் ஏன் தெரிவு செய்தான். அச்சு அசல் அஜந்தா குகையோவியங்களின் சாயலில் அவனால் எப்படி சீகிரியா குன்றில் ஓவியங்களை வரைய முடிந்தது? இதன் பின்னணியில் உள்ள உளவியல் என்ன, எனப் பல கேள்விகளைக் கொண்டதுதான் இந்தப்பயணம். 1ம் காசியப்பன் இலங்கை மௌரிய மன்னர்களின் வம்சத்தில் பிறந்தவன். காசியப்பனின் தந்தை தாதுசேனனுக்கு இருமகன்கள். 1ம் காசியப்பன் மூத்தவன், 1ம் மொகாலயன் இரண்டாவது மகன். இதில் நியாயப்படி ஆட்சியதிகாரம் தந்தைக்குப் பின் 1ம் காசியப்பனுக்கே வந்திருக்கவேண்டும். ஆனால் பட்டத்து இராணியின் மகன் 1ம் மொகாலயனுக்கு  ஆட்சியதிகாரத்தை தாதுசேனன் கொடுத்துவிடுகிறான். நியாயமாகத் தனக்கு கிடைக்கவேண்டிய அதிகாரம் கிடைக்காத வெறுப்பிலும் , விரக்தியிலும் அவன் தனது தந்தை தாதுசேனனை மிகக்கொடூரமாகக் கொலை செய்து சிறைச்சாலை சுவருடன் புதைத்து பூசிமெழுகியிருக்கிறான். சில வரலாற்று ஆய்வாளர்கள் இப்படிச் சொல்லியிருக்கின்றார்கள், மன்னனான காசியப்பனை கொலைகாரனாகக் காட்டவிரும்பாத அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் 1ம் காசியப்பனின் மாமா மிகாரா தாதுசேனனை கலாவெல குளத்தில் வைத்துக் கொலைசெய்து அந்த அணைக்கட்டிலேயே புதைத்தான் என்று சொல்பவர்களும் உண்டு. இப்படி கொலையும் சூழ்ச்சியும் நிறைந்த காசியப்பன் தனது சகோதரனால் எப்போதும் கொல்லப்படுவான் என்ற அச்சம் இருந்தபோதே,   யாராலும் அப்படி எளிதில் ஆக்கிரமிக்க முடியாத சிம்மகிரி குன்றை அடைந்து அதில் அவனது சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்தான். இவ்வளவு கொடூரமான மனநிலையுடன் சித்தரிக்கப்பட்ட 1ம் காசியப்பன் ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபிக்கும் வகையில் இருப்பதே சீகிரியாவின் ஓவியங்கள்.

உலகிலேயே அஜந்தா குகையோவியங்கள் அதன் வர்ண இரகசியங்கள் அங்கு வாழ்ந்த பிக்குகளுக்கு மட்டுமே தெரிந்திருந்தது என நினைக்கின்றபோது அதே சாயல் ஓவியங்கள் அஜந்தாவைத்தாண்டி இரண்டு இடங்களில் வரையப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று சித்தன்னவாசல், இரண்டாவது சீகிரியா குன்றோவியங்கள். அதில் சித்தன்னவாசல் ஓவியங்கள் கி.பி. 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அஜந்தா , சித்தன்னவாசல், சீகிரியா  இந்த மூன்று குகைகளுக்கும் மீண்டும் மீண்டும் பயணம் செய்த பின்னரே நான் இதை ஊர்ஜிதமாக சொல்கிறேன். அச்சு அசல் அதே சாயல் ஓவியங்கள் தமிழ்நாட்டில் சித்தன்னவாசலிற்கு எப்படி வந்தது எனப்பார்க்கின்றபோது , அஜந்தா குகையில் வாழ்ந்த பௌத்த துறவிகளுக்கு உதவிகள் செய்துவந்த மன்னனின் சாம்ராஜ்யம் சரிந்தபோது அஜந்தா குகைகளில் வாழ்ந்த துறவிகளுக்கான நன்கொடை தடைபட்டது. அப்போது அந்த குகைகளில் வாழ்ந்து ஓவியங்களையும்,சிற்பங்களையும் படைத்துக்கொண்டும், புதிய குகைகளை உருவாக்கிக்கொண்டும், பௌத்தமத போதனை சாதனைகளை நிகழ்த்திவந்த துறவிகள் ஆதரிக்க யாருமற்ற நிலையில் தமது ஓவியப்பணிகளை, குகைகளை புதிதாக அமைப்பதை நிறுத்திவிட்டு , அங்கிருந்து புறப்படவேண்டியதாயிற்று. அந்தநேரத்தில் நாடோடியாக அலைந்த அவர்கள் தமிழகத்தில் சித்தன்னவாசலை அடைந்திருக்கலாம். ஆனால் சித்தன்னவாசலின் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனினால் வரையப்பட்டது எனச் சொல்பவர்களும் உண்டு. ஆனால் கி.பி. 6 ம் நூற்றாண்டில் அது காசியப்பனின் சீகிரியா   குன்றிற்கு எப்படி வந்தது எனும் போதுதான் சில சுவாரஸ்யமான ஊகங்கள் பற்றிக்கொள்கின்றன.

சீகிரியாவின்  ஓவியங்களை 1ம் காசியப்பன் வரைந்தான் என்கின்றார்கள். அரசியல் அச்சுறுத்தலும் , உயிராபத்தும் வரும் என்று சீகிரிய குன்றில் அடைந்துகொண்ட காசியப்பன் நிச்சயமாக மத்தியப் பிரதேசம் சென்று அஜந்தா குகையோவியங்களை , வர்ண பாரம்பரியங்களை கற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே அங்கிருந்து கி.பி. 6 ம் நூற்றாண்டில் புத்தபிக்கு ஒருவரோ , அல்லது பிக்குகள் குழுவாகவோ வந்திருக்கவேண்டும். இங்கு மொத்தமாக 500  ஓவியங்கள் வரை இருந்திருக்கிறது. அவை தனியே பெண்களின் ஓவியங்கள் மட்டுமே . அஜந்தா குகையோவியங்களும் ,சித்தன்னவாசல் ஓவியங்களும் , கௌதம புத்தரின் ஜாதகக் கதைகள், இயற்கைக் காட்சிகள், பறவைகள்,மலர்கள், புத்தரின் ஓவியங்கள் என வரையப்பட்டிருக்க, சீகிரியா  குன்றின் ஓவியங்கள் தனியாக 500 பெண்களின் ஓவியங்கள்  மட்டும் அரைநிர்வாணமாக வரையப்பட்டிருக்கின்றன. சில கதைகளின் படி பௌத்த மக்கள் காசியப்பன் மீது வெறுப்பு கொண்டிருந்தனர், காசியப்பனும் வெறுத்திருந்தான் எனவேதான் பழிவாங்கும் முகமாக அவன் இப்படி நிர்வாணமாகப் பெண்களை வரைந்தான் என்கின்றார்கள். அதையெல்லாம் தாண்டி காசியப்பனிடம் கலையைக் கொண்டாடுகிற மனது இருந்தது என்பதுதான் உண்மையென நினைக்கின்றேன். அத்தோடு அவனுக்கு ஒரு கனவு இருந்திருக்கிறது.மனநிம்மதியைத் தருகிற ஒரு  சாம்ராஜ்யத்தை கலைப்பூர்வமாக இந்த குன்றில் உருவாக்க நினைத்திருக்கிறான். இந்த அழகிய குன்றின் மேல் குபேரனின் அழகாபுரி நகர் போல ஒன்றை உருவாக்க நினைத்திருக்கின்றான். இந்த 500 பெண்களின் ஓவியங்களை அவன் அரைநிர்வாணமாக வரைந்திருக்கிறான். ஆனால் அவர்கள் வானத்திலிருந்து தோன்றுகிற தேவதைகளாகவும், தாரா என்கின்ற பெண் தெய்வம் போலவுமே இருக்கின்றார்கள். காமத்தை வெளிப்படுத்த மன்னனுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. அவன் காமத்தை வெளிப்படுத்த பகிரங்கமாகக் காமசாஸ்த்திர ஓவியங்களை வரைந்திருக்கலாம். அஜந்தாவில்கூட அவ்வாறான சிற்பங்கள் உண்டு. ஆனால் இந்த பெண்களை அவன் அப்படி வரையவில்லை. இந்த பெண்கள் எல்லாம் காசியப்பனின் மனைவி என்று சொல்பவரும் உண்டு. அப்படி அவர்கள் எல்லாம் மனைவிகள் என்றால் அப்படி ஒரு இடத்தில்கூடவா மன்னனின் ஓவியம் வரையாது விட்டிருப்பான். அடுத்தது ஒரு முக்கியமான குறிப்பு இங்கு சீகிரியா  குன்றின் மீது உள்ள ஓவியங்களும் சரி , அஜந்தா, சித்தன்னவாசல் ஓவியங்களும் சரி  அதில் உள்ள பெண்களைப்போன்ற பெண்கள் அந்த நிலத்திற்கு உரியவர்கள் இல்லை. ஒரு மராத்தியப் பெண்ணின், தமிழ்ப் பெண்ணின், இலங்கைப்பெண்ணின் ஆடையாபரணம், உடல்வாகு போல இல்லை அந்த ஓவியங்களில் உள்ள பெண்களின் உருவம். அந்த நிலத்திற்குரிய பெண்கள் இல்லை அதுவென்றால் இப்படி அழியாத வர்ணங்களில் ஆயிரக்கணக்கில் வரையப்பட்ட இந்த பெண்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. காசியப்பன் அரண்மனையில் எப்படி இவர்கள் இடம்பிடித்தார்கள் என்று தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் அப்பால் புவியியல் ரீதியாக முற்றிலும் வேறுபட்ட இலங்கையின் சீகிரியா குன்றிற்கு எப்படி ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாத அஜந்தா ஓவியங்களின் வர்ணசேர்க்கை எப்படி வந்தது? இப்படி நிறைய சர்ச்சைகள், அதிசயம் நிறைந்த குன்று இது.

1ம் காசியப்பன் இயற்கைக்கு அருகில் தனது அழுத்தங்களை எல்லாம் விட்டுவிட்டு விண்ணுலக இராச்சியம் போல ஒன்றை இந்த சீகிரியா குன்றில் அமைத்து வாழ நினைத்தான். அதன் வெளிப்பாடுதான் முகிழ்கள் மேகங்களுடன் கூடிய இந்தப் பெண்தேவதைகளின் ஓவியங்கள். ஆனால் முடிவில் அவன் மனதினுள் எது செய்தாலும் மாறாமல் இருந்த அச்சமே அவனைக் கொன்றுவிடுகிறது.

கி.பி. 495 இல் 1ம் காசியப்பனின்  சகோதரன் மொகாலயனுக்கு இடையில் போர் நடக்கிறது. தென்னிந்தியாவிலிருந்து படை திரட்டி வந்து காசியப்பனுடன் போருக்கு வருகிறான் .சிறைக்கைதியாக பிடிபட விரும்பாத காசியப்பன்  தன் கழுத்தை வெட்டித் தற்கொலை செய்துகொண்டான். காசியப்பனின் உடல் சீகிரியாவுக்கு அருகே பிதுரங்கல மலையில் புதைக்கப்பட்டது. இப்படி ஏகப்பட்ட வரலாற்றுச் சர்ச்சைகளும் , கலையின் உன்னதமும் ஒரு உன்னத கலைஞனின் ஆத்மாவும் நிரம்பிய இயற்கையாக அமைந்த அழகிய கோட்டை நிச்சயம் உங்கள் பயணக்குறிப்பில் எழுதப்படட்டும்.


நர்மி

Previous articleகத்திரிக்காய் சித்தன்
Next articleகரும்பூனையும் வெறிநாய்களும்
Subscribe
Notify of
guest
10 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
ரதி சண்முகநாதன்
ரதி சண்முகநாதன்
2 years ago

அருமையான பதிவு.. மீண்டும் சீகிரியா sellum ஆசை தலை தூக்குகிறது.. வாழ்த்துக்கள் கண்மணி.. நிறைய எழுதுங்கள்.. உங்கள் கண்களால் போகாத இடங்களையும் நான் காணலாம்

Raja Narmi
Raja Narmi
2 years ago

நன்றி தங்கம்

Saravanakumar
Saravanakumar
2 years ago

வாழ்த்துகள்…

அருமையான எழுத்துநடை.

Raja Narmi
Raja Narmi
2 years ago
Reply to  Saravanakumar

நன்றி saravanakumar

Rusha
Rusha
2 years ago

அருமையான பதிவு.. பள்ளிக்காலத்தில் மனனம் செய்து கற்க முயன்ற வரலாற்றை, இயல்பாக நினைவூட்டியமைக்கு நன்றி!

Raja Narmi
Raja Narmi
2 years ago
Reply to  Rusha

Rusha 😍💚

R.Dadly Kamalnath
R.Dadly Kamalnath
2 years ago

சிறந்த பதிவு உண்மையில் பல தேடலின் உருவாக்கத்தின் பிரசவிப்பு இந்த இராவணா தீவு..
சிறந்த மொழி நடையில் பல ஆய்வு ஆதாரங்களுடன் அமைந்துள்ளது, இலங்கையில் இவ்வாறான ஒரு தொடர் உண்மையான ஆதாரங்களுடன் வெளிவருவது அரிதிலும் அரிது…உங்களின் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்..

Raja Narmi
Raja Narmi
2 years ago

நன்றி சகோ💚

GOVINDARAJ JAYSHELVAM
GOVINDARAJ JAYSHELVAM
2 years ago

ஒருமுறை இணையத்தில் இலங்கையில் காண வேண்டிய முக்கிய இடங்கள் எதுவென்று தேடிக் கொண்டிருந்தேன்..அப்பொழுது சீகிரியா குன்று என்ற ஒரு பகுதி இருப்பதை அறிந்துகொண்டேன் ..

இன்று இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது தான், அந்த இடம் குறித்தான நிறைய வரலாற்றுத் தகவல்களை தெரிந்து கொண்டேன்..

இந்த கட்டுரையில் தான் எத்தனை நுணுக்கமான தகவல்கள், வரலாற்றுக் குறிப்புகள், இலங்கைக்கும் இந்தியாவுக்குமான பயண தொடர்பு விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன..

கட்டுரையை வாசிக்கும் பொழுது அங்கு அங்கு நேரில் சென்று வந்த உணர்வு மேலிடுகிறது..

இந்தக் கட்டுரைக்காக நீங்கள் நெறைய மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது.. வாழ்த்துக்கள்..

Raja Narmi
Raja Narmi
2 years ago

நன்றி கோவிந் சார். இந்த தொடரை தொடர்ந்து வாசியுங்கள். அடுத்தமுறை இலங்கை வரும்போது திருப்தியுடன் பயணம் செய்ய நிறைய இடங்கள் இருக்கும் உங்களுக்கு 😍