கத்திரிக்காய் சித்தன்


 

“சாதி மீறி காதலித்தது, நிலவுரிமைகள் சார்ந்து ஆதிக்க சக்திகளுடன் முரண்பட்டது, பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று வீரமாக போராடியது, புதையல் தோண்டுவது மாதிரியான பல மூட நம்பிக்கைகளுக்கு உயிர்பலி கொடுத்தது, ராஜாக்கள், ஜமீன்தார்கள், நிலவுடமையாளர்களின் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானது போன்ற காரணங்களால் கொலையுண்டோர்களையே நாட்டார் தெய்வங்களாக நாம் வழிபட்டு வருகிறோம். பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் சாதிகளுடன் தொடர்புடையவைகளே.”

– பேராசிரியர், ஆய்வாளர் – ஆ.சிவசுப்பிரமணியன்

தென்கரை கத்திரிக்காய் சித்தன் (எ) மாவடியான்

துரை மாவட்டம் சோழவந்தானுக்குப் பக்கத்திலுள்ள தென்கரை கிராமம் வைகைக்கரையில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தென்கரையைப் பற்றிய கல்வெட்டுச் சான்றுகள், புத்தகச் சான்றுகள் நிறைய கிடைக்கின்றன. இங்கிருக்கும் கத்திரிக்காய் சித்தன் (எ) மாவடியான் என்கிற நாட்டார் தெய்வக் கோயில் நூற்றாண்டுகள் கடந்த பழமையானது. சதுர வடிவிலான சிறிய அறையில் இடுப்பளவிருக்கும் வளைந்த தோரணத்துக்குள் உத்திராட்ச மாலை சுற்றப்பட்ட மொட்டைத்தலையுடனும், சாந்த முகத்துடனும் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார் மாவடியான். மாவடியானுக்கு முகம் மட்டுமே புடைப்புச் சிற்பமாக இருக்கிறது. உடம்பு இல்லை. அவருக்கு நேரெதிரில் சிறியக் கருங்கல்லாக கருப்புச்சாமி இருக்கிறார்.

கத்திரிக்காய் சித்தன் (எ) மாவடியான்

 

கருப்புச்சாமி

[ads_hr hr_style=”hr-dots”]

வழிபாடுகள் மற்றும் திருவிழா

வீட்டு வரிகள் வசூலித்து பிராமண, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக மக்களே மாவடியானை ஆதியிலிருந்து அதிகளவில் கும்பிட்டு வருகின்றனர். இச்சமூகத்தவர்களே தென்கரையில் வசிக்கின்றனர். வருடாவருடம் ஆனி மாத வளர்பிறையில் மாவிலை, வேப்பிலைத் தோரணங்கள் ஊரின் நாற்திசைகளில் கட்டப்படுகின்றன. இதுவே கொடியேற்றமாகக் கருதப்பட்டு எட்டுநாள் திருவிழா தொடங்குகிறது.

எவ்வித உயிர்பலி இல்லாமல் சைவ அன்னதானம், புளியோதரை, பொங்கல் படையல்களுடன் நடக்கும் இந்தத் திருவிழா மண்டகப்படிகளின் பிரதானமே ‘சந்தனக்காப்பு அலங்காரம்’தான். எட்டு நாள் முன்னிரவில் மண்டகப்படி நடத்தப்படுகிறது. உடலற்ற மாவடியானுக்கு சந்தனத்தால் உடல் வடித்து கழுத்துடன் இணைத்து நின்றகோலத்தில் அலங்கரிக்கின்றனர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் இந்த சந்தனக்காப்பை மட்டும் செய்கிறார். பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொன்றுதொட்டு மாவடியானுக்கும், கருப்புச்சாமிக்கும் தீபாராதனைக் காட்டி எவ்வித மந்திரங்களுமின்றி பூசை செய்து பூசாரிகளாக மக்களுக்கு விபூதி வழங்கி வருகின்றனர். இதில் பெண்கள் பங்குகொள்வதில்லை.

சந்தனக்காப்பு அலங்காரத்துடன் கத்திரிக்காய் சித்தன் (எ) மாவடியான் | பட உதவி :  சித்தன்

[ads_hr hr_style=”hr-fade”]

பூச்சொரிதல் விழா, திருவிளக்குப் பூஜை, பெட்டி தூக்குதல் வைபவங்கள் இந்தத் திருவிழாவுக்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் சேர்ந்துகொண்ட கொண்டாட்டங்கள்.

சம்பங்கி, கதம்பம், மரிக்கொழுந்து, பிச்சிப்பூ, அரளிப்பூ, கனகாம்பரம், மல்லி பூக்களைத் தட்டிலிட்டு, பெண்கள் வீதிகளைச் சுற்றிவந்து மாவடியான், கருப்பு காலடிகளில் கொட்டுகின்றனர். திருவிளக்குப் பூஜைப் பற்றி ஓரளவு யாவரும் அறிந்ததே. கமண்டலம், தண்டுக்கோல், உத்திராட்ச மாலை, மணிகள், வேட்டி போன்ற பொருட்கள் வைக்கப்பட்ட மரத்தாலான பெட்டியொன்று மாவடியான் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. திருவிழாவில் பெட்டிதூக்கும் நாளின் இரவில் மட்டும் பூசாரியால் அந்தப்பெட்டித் திறக்கப்படுகிறது. மக்கள் சூழ பூசாரி தலையில் வைத்து அப்பெட்டி வைகைக்குள் கொண்டு செல்லப்படுகிறது. பெட்டியும், உள்ளிருக்கும் பொருட்களும் சந்தனம், குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு கோடித்துணிகள் சாட்டப்படுகின்றன. 

பம்பை, நையாண்டி மேளம், நாதஸ்வரங்கள், வான வேடிக்கைகள் அதிர பூசாரி உருவேற்றப்படுகிறார். பூசாரி உக்கிரமாகி சாமியாடியவுடன் பெட்டி அவரது தலையில் தூக்கி வைக்கப்பட்டு வீதிகளைச் சுற்றிவந்து மாவடியான் அருகில் இறக்கி வைக்கப்படுகிறது. அப்போதே புது நார்ப்பொட்டிகளில் தேங்காய், வாழைப்பழங்கள், வெற்றிலைப் பாக்குகள் வைத்து ஊர் கண்மாய்க்கரையிலிருக்கும் அய்யனாருக்கும், கன்னிமார்களுக்கும் ஊருக்குள்ளிருக்கும் சாம்பக்காச்சி முனியாண்டிக்கும், சப்பாணிக்கும், பக்கத்து கிராமமான ஊத்துக்குளி ஐந்துவாசல் அய்யனார் கோயிலுக்கும் இளவட்டங்களால் நார்ப்பொட்டிகள் அனுப்பப்படுகின்றன.

கத்திரிக்காய் சித்தன் (எ) மாவடியானின் பெட்டி

ஊரார் மேலுள்ள சினத்தால் மாவடியான் கோபித்துக்கொண்டு கண்மாய்க்கரை அய்யனாரிடம் குடியேறிவிட்டார் என்று கடந்த சில வருடங்களாக தென்கரை ஊர் மக்களால் நம்பப்பட்டு வருகிறது. இதை பெண் ஒருவர் மீது மாவடியான் சாமியிறங்கி சொல்லியுள்ளது. இதனால் பெட்டிதூக்கும் அன்றைக்கு காலையில் ஊர்கூடி அய்யனாருக்கு பொங்கல் வைத்து மாவடியானை குளிர்வித்து ஊருக்குள் அழைத்துவரும் நம்பிக்கையொன்றும் ஊராரால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவிழா முடிந்தவுடன் கிராமத்தின் சார்பாக வள்ளித்திருமண நாடகம் நடத்தப்படுகிறது. சிறுகச்சிறுக பாட்டுக்கச்சேரிகளும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் சேர்ந்துகொண்டன.

வாய்மொழிக் கதைகள்

பல தலைமுறைகளுக்கு முன்பு அக்ரஹாரத்தில் ஒருவரது வீட்டில் பதினைந்துநாள் விசேஷ விழாவாக நடந்தத் திருமணத்தில், சமையல் வேலைகளின்போது கத்திரிக்காய் மூட்டையொன்றை அவிழ்த்துக் கொட்டியுள்ளனர். ஒவ்வொரு கத்திரிக்காயாக அறுத்துப்போடுகையில் ஒரேயொரு கத்திரிக்காயில் மட்டும் அறுத்தவுடனே ரத்தம் கசிந்துள்ளது. இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் கல்யாணத்திற்கு அபசகுணம் ஆகிவிடுமென்று பயந்த அந்தத் திருமண வீட்டினர் ரத்தக் கத்திரிக்காயினை ஒரு நார்ப்பொட்டிக்குள் வைத்து மறைத்துள்ளனர். திருமணம் முடிந்தவுடன் இந்தக் கத்திரிக்காய் குறித்து ஆராய்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விளைந்தக் கத்திரிக்காய் மதுரைக்கு வந்துள்ளது. அதைத்தான் தென்கரையில் வாங்கி அறுத்துள்ளனர்.

[tds_info]திருப்புவனத்தில் இருக்கும் ஐநூறு வருடத்திற்கு மேலான பழமையான கத்திரிக்காய் சித்தன் கோயில்தான் தென்கரையில் உள்ள கோயிலுக்குத் தாய் கோயில்.[/tds_info]

திருப்புவனம் பூசாரியிடம் போய் தென்கரை பிராமணர் பேசுகையில், ‘சித்தனாகிய நாந்தான் கத்தரிக்காய்க்குள்ள இருந்தேன். நான் மேசீமைக்கு வந்து மக்களக் காக்கணும்னு உங்க ஊருக்கு வந்தேன். இங்கப் பிடிமண்ண எடுத்துப் போயி என்னய நீங்கக் கும்பிடனும்’ என்று திருப்புவன பூசாரி வாயிலாக தென்கரை பிராமணரிடம் பேசியுள்ளார் கத்திரிக்காய் சித்தன்.

திருப்புவனம் கத்திரிக்காய் சித்தன் கோயில் பிடிமண்ணுடன் தென்கரைக்கு வந்திருக்கிறார் பிராமணர். வானத்திற்கும் பூமிக்கும் தொடும் இலுப்பை மரங்கள் நிறைந்த அவரது தோப்புயிடத்தில் ஒரு பூவரசம் மரத்தின் கீழ், ரத்தத்துடன் வதங்கிய கத்திரிக்காயுள்ள அந்த நார்ப்பொட்டியை வைத்து ‘கத்திரிக்காய் சித்தன்’ என்ற தெய்வமாக்கி நல்ல நாட்களில் விளக்கேற்றி வணங்கி வந்துள்ளார். சிறிதுகாலம் கழித்து பிராமணரல்லாதோர் சிலர் சேர்ந்து கத்திரிக்காய் சித்தனுக்கு எதிரே குத்துக்காலை ஊன்றி கருப்புச்சாமியாக வணங்கி, கச்சங்கட்டி, அரிவாள் தூக்கியாடி சக்திக்கெடா வெட்டி பலியிட்டுள்ளனர். ‘இது அய்யருக கொண்டுவந்த சாமி இங்க ரத்தபலி கொடுக்கக்கூடாது’ என்று பிராமணரல்லாதோர் சிலர் சொல்ல அத்தோடு பலியிடல் நின்றுவிட்டது. பிறகு, பச்சைத்தென்னை மட்டைகள் கட்டி பொங்கல் மட்டுமே வைத்து சாமிக் கும்பிட்டு வந்துள்ளனர். பிராமணர் அந்த அந்தத் தோப்புயிடத்தை கத்திரிக்காய் சித்தன் கோயிலுக்காகக் கொடுத்துள்ளார். அதன்பிறகு பிராமணரல்லாதோர் அனைவரும் சித்தனை முழுதாக கும்பிடத் தொடங்கியுள்ளனர். அதற்கு பிராமணர் தரப்பிலிருந்து எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

சோழவந்தானைப் பூர்வீமாகக் கொண்ட பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒருவர்தான் தென்கரை கண்மாய்கரையில் இருக்கும் கன்னிமார்களுக்கும், அய்யனாருக்கும் அந்தக்காலத்தில் பூசை செய்து வந்துள்ளார். மக்கள் கோடாங்கியடித்துப் பார்க்கையில் அவரும், அவரது தலைமுறை மட்டுமே கத்திரிக்காய் சித்தனுக்கும், கருப்புக்கும் பூசாரியாக இருந்து பூசை செய்து விபூதி தர வேண்டுமென்ற குறி கிடைத்துள்ளது.

மாவடியான் பெயர்க்காரணம்

சுதந்திர காலகட்டத்தில் ஊருக்குள் நிற்காத அடைமழை பொழிந்து தள்ளியுள்ளது. அந்த சமயத்தில் ஊரில் பரவிய தீராத நோய்க்கு  நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். ‘என்ன நெனச்சு தெள்ளு மாவு இடிச்சு மக்களுக்குக் கொடு. நா எல்லாரயும் கொனமாக்கித் தாறேன்’ என்று சித்தன் பூசாரி ரூவத்தில் சொல்ல, அரசி மாவு இடித்து மக்களுக்குத் தரப்பட்டுள்ளது. உடனே நோயும் நிவர்த்தியாகியிருக்கிறது. அன்றிலிருந்து கத்திரிக்காய் சித்தனை ‘மாவடியான்’ என்ற நிலைத்தப் பெயரிலேயே அழைத்து வருகின்றனர்.

இடப்பெயர்வால் பெருவாரியான தென்கரை பிராமணர்கள் இன்று வெளியூர்களில் வசிக்கின்றனர். மாவடியான் கோவில் திருவிழா அன்றைக்கு மட்டும் மிகச்சிலரே வந்து வணங்குகின்றனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திடமே கோயிலின் பாத்தியம் இன்றுள்ளது. ஆரம்பத்தில் பூசை செய்த அந்தப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவரின் ஆண் வாரிசுகள்தான் இன்றும் மாவடியானுக்கு தலைமுறைப் பூசாரியாக இருந்துவருகின்றனர். தென்கரையில் நெல் அறுவடைக் காலங்களில் இவர்களிடம்தான் கோயில் நெல்லும் வழங்கப்படுகிறது. கன்னிமார் கோயிலின் பெயரில் கொஞ்சம் நிலமும் இவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து இருக்கிறது. வேண்டியவை நிறைவேறினால் சந்தனக்காப்பு அலங்கார மண்டகப்படியே மாவடியானுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டு வருகிறது.

திருப்புவனம் கத்திரிக்காய் சித்தன் 

தேவாரப் பாடல்களில் இடம்பெற்ற சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வைகைக்கரையில் அமைந்திருக்கும் ‘கத்திரிக்காய் சித்தன்’ கோயில் காமாட்சியம்மனை மூலஸ்தானமாக கொண்டுள்ளது. தவிர, இங்கு கத்திரிக்காய் சித்தனாக வணங்கப்படுவது கிழக்குப் பார்த்து நின்ற கோலத்திலிருக்கும் ‘இருளப்பசாமி‘. மேலும், உப தெய்வங்களாக பேச்சியம்மன், இருளாயியம்மன், இருளப்பசாமி, காளியம்மன், அக்னி வீரபத்திரன், முத்துக்கருப்பு, சப்பாணி, மாமுண்டி கருப்பு, பாதாள அம்மன், தூதக்கரை சங்கையா, மலையாளம் சங்கையா, ராக்காயி அம்மன், லாடசாமி பீடங்கள், ஆகாச வீரபத்திர சாமி, தீர்த்தக்கரை ராக்கு, மாடக்குளம் சோணை, பைரவர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். கொடிமரமும் நடப்பட்டிருகிறது.

கத்திரிக்காய் சித்தனாக கும்பிடப்படும் இருளப்பசாமி நடுவில் இருப்பவர்

வழிபாடுகள் மற்றும் திருவிழா 

கிடாவெட்டுகளுடன் சிவன்ராத்திரிக்கு மட்டுமே இங்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது. காதுகுத்துகள், நேர்த்திக்கடன்களுக்கு உயிர்பலி கொடுக்கப்படுகிறது. இதுபோக, விளைச்சல் கத்திரிக்காய் மாலைகளும், கத்திரிக்காய் மூட்டைகளும் நேர்த்திக்கடன்களாக இருளப்பசாமிக்கு படையிலிடப்படுகிறது.

அனைத்து சமூக மக்களும் வசிக்கும் திருப்புவனத்தில் எல்லோரும் இந்தக் கோயிலுக்கு வந்து வணங்குகின்றனர். அதற்குச் சான்றுகளாக அவர்கள் கோயிலுக்கு அளித்த நன்கொடைகளுக்கு சாதிப் பெயர்களில் கல்வெட்டு பதித்துள்ளனர். இந்தக் கோயிலில் தலைமுறைத் தலைமுறையாக முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பூசாரிகளாக இருந்து தீபாராதனைக் காட்டி எவ்வித மந்திரங்களுமின்றி பூசை செய்து மக்களுக்கு விபூதிக் கொடுத்து வருகின்றனர். இங்கும் பூசைகளில் பெண்கள் பங்குகொள்வதில்லை.

வாய்மொழிக் கதைகள்

ராசா காலத்தில் இந்தக் கோயிலின் பூசாரி வைகைக்குத் தண்ணீர் எடுக்கப்போகையில் ஒரு நார்ப்பொட்டி மிதந்து வந்துள்ளது. நீரோட்டத்திலிருந்து விலகி பூசாரியை நோக்கி பொட்டி நகர்ந்துள்ளது. தண்ணீர் எடுத்துவிட்டு அவர் கிளம்பிவிட்டார். மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஆள் இதைத் தூரத்திலிருந்துப் பார்த்துள்ளார். வலையைப் போட்டு அந்தப் பொட்டியை இழுத்துள்ளார். பொட்டியை அவரால் திறக்க முடியவில்லை. ராசாவிடம் போய் நடந்ததைச் சொல்லியுள்ளார். ராசா அந்தப் பூசாரியை வரச்சொல்லியிருக்கிறார். பூசாரியின் கைகளுக்குத் திறந்த அப்பொட்டிக்குள் லிங்கமும் கத்திரி விதைகளும் இருந்துள்ளன. காமாட்சியுடன் சேர்த்து இந்த லிங்கத்தையும் வைத்து கும்பிடச் சொல்லியிருக்கிறார் ராசா. பூசாரியும் ராசாவின் ஆணைப்படியே செய்துள்ளார்.

கத்திரிக்காய் விதைகளை கோயிலில் நட்டுவிட்டு, சோற்றுக்கு உலை வைத்துக் கொண்டிருக்கையில் குழம்புக்கு கத்திரிக்காய் இல்லாமல் போயிருக்கிறது. பூசாரி திரும்பிப் பார்த்துள்ளார். விதைப் போட்டவுடனேயே செடியாகி கத்திரிக்காய்கள் காய்த்து தொங்கியுள்ளன. அன்றிலிருந்து காமாட்சியம்மன் இருந்த அந்தயிடம் கத்திரிக்காய் சித்தன் கோயிலாக மாறியுள்ளது. கேரளாவில் வணங்க வாரிசுகள் இல்லாததால் பொட்டியில் வைத்து லிங்கத்தை நீரில் விட்டுள்ளனர் என்றக் கதையும் அப்பகுதியில் புழங்குகின்றன.

இந்தக் கோயிலின் சாமிப்பெட்டி, பக்கத்திலிருக்கும் புஷ்பவனேஸ்வரர் – சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியில் தென்கரை மாவடியானின் பெட்டியிலுள்ள முனிவர்கள் சார்ந்த பொருட்கள் போலில்லாமல் சாமி அலங்காரம் சார்ந்த பொருட்கள் மட்டுமே இருக்கின்றன. சிவன்ராத்திரிக்கு மட்டும் பெட்டி அங்கிருந்து எடுக்கப்பட்டு திருவிழா முடிந்தவுடன் மறுபடியும் அங்கேயே வைக்கப்படுகிறது. இந்த வழக்கம் காலம் காலமான வழமையாக இருந்து வருகிறது.

சித்தன்

தென்கரை கத்திரிக்காய் சித்தன் (எ) மாவடியான் மற்றும் திருப்புவனம் கத்திரிக்காய் சித்தன் கோயில் வெட்டவெளியிலோ அல்லது காட்டுக் கோயில்களாகவோ தற்சமயம் இல்லை. ஆரம்ப காலத்தில் அப்படித்தான் இருந்திருக்கின்றன. இப்போது இரண்டு கோயில்களுமே கான்க்ரீட் சுற்றுச்சுவர்களுக்குள்தான் இருக்கின்றன. இரண்டு கோயில் தெய்வங்களையும் வழிபடக்கூடிய மக்களிடையே நிலவும் வாய்மொழிக் கதைகள் மற்றும் நடப்புகால வழிபாட்டு முறைகளை வைத்துப் பார்க்கையில், ‘சித்தன்‘ என்ற பொதுவான அடிப்படையில் பெயர்கள் ஒன்றாக இருந்தாலும் உருவமைப்புகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், நேர்த்திக்கடன்கள் எல்லாமே மாறுபட்டுதான் இருக்கின்றன. எல்லா திசைகளிலும் குலதெய்வங்களாக இருக்கும் இந்த இரண்டு கோயில்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் போய் வழிபட்டாலும் இரண்டிலும் அம்மக்களுக்கு உரித்தான பாத்தியம் இல்லாமல்தான் இருக்கிறது.

இரண்டு ஊரிலும் பூசாரிகளாக இருப்பவர்களிடமும் அவர்களது குடும்பத்தாரிடமும் பேசுகையில் ‘தலைமுறையா தலைமுறையா நாங்கதான் பூசைப் பண்ணனும்னு ஒரு வாக்கு எங்களுக்கு இருக்கு. அதுப்படி நடந்துகிட்டு வாறோம். இனியும் அப்படித்தான்’ என்கின்றனர்.

இந்த சமாச்சாரங்கள் அனைத்தையும் குறிப்பாக ‘சித்தர்’ என்று இரு ஊர் மக்களாலும் சொல்லப்படக்கூடிய செய்திகளை, பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘கோபுரத் தற்கொலைகள்’ (பரிசல் வெளியீடு) என்றப் புத்தகத்தில் வரக்கூடிய ‘சித்தர்கள்: மரபே மீறலாய்’ என்கிறக் கட்டுரையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் கதைகள் ஒன்றுக்கொன்று நேரெதிராக முட்டி நிற்கின்றன.

அந்தக் கட்டுரையிலிருந்து சில பின்வருமாறு,

“…தமிழ் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் இறைநம்பிக்கை உடையவர்கள். என்றாலும் அந்த எல்லைக்குள் நின்றுகொண்டே சமூக வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்த பல மரபுகளுக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். சித்தர்களைப் பொறுத்தளவில் செல்லரித்துப்போன மரபுகளை மீறுவதை அல்லது எதிர்ப்பதை  ஒரு மரபாகக் கொண்டிருந்தனர். இச்செயல்தான் ஏனைய சமயவாதிகளிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டுகின்றது. அவர்களது மரபு மீறிய செயல்களாக அ)சாதிய எதிர்ப்பு . ஆ)சமயச் சடங்குகள் எதிர்ப்பு.  இ)வடமொழி எதிர்ப்பு ஆகியன அமைகின்றன. சித்தர்கள் அனைவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களல்லர் என்றாலும் பெரும்பாலான சித்தர்களிடம் மேற்கூறிய மரபுமீறல்கள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்…”

மேற்கண்ட இந்தக் கூற்றினையும், ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களால் சொல்லப்பட்ட கட்டுரையின் ஆரம்பக் கூற்றினையும் வைத்து அவரிடமே உரையாடுகையில்,

“நமது நாட்டார் தெய்வங்கள் பெரும்பாலும் கொலைகளில் உதித்த தெய்வங்கள்தான். கொலையான சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்லது கொலை செய்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்தத் தெய்வங்களை வணங்குவார்கள். கொலைக்கு உடந்தையானவர்கள், தூண்டி விட்டவர்களும் வணங்குவார்கள், பூசை செய்வார்கள். அன்பின் அடிப்படையிலோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ ஆதியிலிருந்து அவர்கள் வணங்கிக் கொண்டே வருவர். கொலைக் காரணங்களை இழிவானதாகக் கருதி தொடக்கத்திலிருந்தே சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அந்தத் தெய்வங்களை வணங்காமலும் விலகியிருக்கலாம்.

மூலக்கோயிலான திருப்புவனம் கத்திரிக்காய் சித்தனை நாம் இம்மாதிரியான கோணத்தில் அணுகலாம். தென்கரை மாவடியான் கோயிலை ஆராய்ந்துப் பார்க்கையில், அந்தக் கோயிலை உருவாக்கியது பிரமாணர்கள் என்று சொல்கிறார்கள். அவர்களது சமூகத்தில் சற்றே விதிவிலக்கான, பெருந்தன்மையான, முற்போக்கான ஒரு பிராமணர் இருந்திருக்கலாம். சில ரகசியங்களை வெளி சொல்லியிருக்கலாம். அதனால், பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்து அவர்களே கொலையும் செய்திருக்கலாம்.

இதிலிருந்து அந்தக் கோயிலும் அதன் வழிபாடுகளும் தளிர்விட்டிருக்கலாம். இப்படியான பிராமண சமூகத்துக்குள் நடக்கும் முரண்பாடுகளைச் சொல்லும் சான்றுகள் மணிமேகலைக் காப்பியத்தின் ஆபுத்திரன் கதைகள் வழி நமக்கு கிடைக்கின்றன. காலசுழற்சியில் கொலையில் உதித்த தெய்வங்களுக்குப் புனிதத்தன்மை ஏற்றி அக்கொலைக் காரணங்களை மறைத்து பொதுத்தன்மை ஆக்கிவிடுவார்கள்” என்றார்.

கத்திரிக்காய் சித்தனுடைய பல சொல்லா கதைகளை சுமந்தவர்கள் மாண்டு மடிந்திருக்கலாம் இல்லை எங்கேயாவது ஒரு நிலத்தில் இப்போது அவர்களது அன்றாடத்தில் உயிரோடிருக்கலாம். அவர்களால் இந்தக் கட்டுரை அடுத்தடுத்து தழையவும் வாய்ப்பிருக்கிறது.


கட்டுரை மற்றும் படங்கள்:  முத்துராசா குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.