நான் உன்னைக் காதலித்த போதும்…

 

அதோ அவர் இருக்கிறார். எனது இதயத்தை வெளிக்காட்ட உகந்த நாள் இதுவாகும், என அஞ்சலி தனக்குத் தானே சொல்லி மகிழ்ந்தாள். வான் முகில்கள் மீது தான் மிதப்பது போல அவள் உணர்ந்தாள்.

அடர்ந்த கருமையான அழகாக வெட்டப்பட்ட முடியுடன் உயர்ந்த கரிய உடல்வாகைக் கொண்ட அவன் தான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் மூழ்கி இருந்தான். அவன் பிடித்திருந்த சிகரெட்டில் இருந்து எழுந்த புகை அச்சூழலை மங்க வைத்து, அங்குள்ள அமைவு முழுவதையும் கனவு மயமாக்கியது. அவனையும் மணங்கமழ வைத்தது.

நான் இங்கு அமரலாமா?” அவள் துணிச்சலாகக்  கேட்டாள்.  இன்று இந்த நேரத்தில் உங்களைப்  பார்ப்பது மிகவும் இனிமையாய் இருக்கின்றது”. கம்மிய குரலில் கடுகிய பதில் அவள் காதுகளில் விழுந்தது. கம்மிய குரல் அவளின் இதயத்தின்  ஆழத்தை ஊடுருவியது. அழகொன்று அவன் முன் வீற்றிருக்க எப்படி அவனால் வாசிப்பில் ஆழ்ந்து  இருக்க முடிகிறது. முதன்முதலில் அவள் எண்ணியது இதனையே ஆகும். தன்னையறியாமலே முதன்முதலாக அவர்களின் சந்திப்பை மீண்டெழ வைத்த நினைவுகளில் ஆழ்ந்து போனாள்

செருக்குடன் தோன்றிய அவன் யாரென்று அறிய அவள் விழைந்தாள். கேட்டபொழுது அவன் பதிலளிக்கவில்லை. பதிலுக்கு அவன் கேள்விக்கணை தொடுத்தான்.  என்ன  மனிதனாக  இனங்காண, எனது சமூகப்பாங்கினை அறிய விரும்புகிறாயா?” அவனின் துணிச்சலைக் கண்டு அவள் திடுக்குற்றாள். அவன் கூறியதை  விளங்கிக் கொள்ளத் தனக்கு மகிழ்வுடன் பதில் அளிப்பான் என எதிர்பார்த்தாள். பெண்ணழகு என்பது ஆண் ஒருவனால் எளிதாக எதிர்த்து நிற்காத் தன்மையதன்றோ எனத் தோன்றியது. முரட்டுத்தனமான பிரதிபலிப்பும், அழகை உதாசீனம் செய்தமையும் அவளை ஆச்சரியப்பட வைத்தது.

எத்தகைய மாறுபாடானவன்? காதலன் ஒருவனாக எவ்விதம் நடந்துகொள்வான்? காதலனாக எவ்விதம் மாறுபாடாய் இருப்பான்?”, அவனுடன் முதலில் உரையாடிய பொழுதிலிருந்து இத்தகைய நினைவுகள் அவளுள் மேலோங்கின. அன்றய தினமே பெண்ணழகு பற்றிக் கேட்ட கேள்விக்கு அவன் அளித்த பதில் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது அவன் உதிர்த்த வார்த்தைகளை அதீத விருப்புடன் அடிக்கடி மீட்டுவாள்.

எந்த அழகியலாளனும் கூறுவது போல, அது உலகில் உள்ள அதிசயமான அழகான பொருளாகும். ஆயினும் பெண்ணழகு பற்றிய எனது நோக்குகள் பெரும்பாலானோர் கருத்துக்களிலிருந்து நிச்சயமாக வேறுபட்டவை. நிர்வாணப் பெண்மை காமம் ஊட்டுவது எனச் சிலர் கருதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை முழுமையாக ஆடை அணிந்த பெண், முழு நிர்வாணப் பெண்ணிலும் பார்க்கக் காமமூட்ட வல்லவள். முழுமையாக வெளிக்காட்டும் நிர்வாணம் என்னைத் தூண்ட மாட்டாதுஆட்பட்டவனைக் கற்பனை செய்ய விடுவது கவருந்தன்மையது. அவளின் அழகு பற்றி ஒருவிதக் கற்பனையுடன் திருப்தியுறாது  வியாக்கியானங்களைத் தொடர்ந்து கொண்டே போகலாம். அங்கு காண்பது ஒரு எல்லை மீறிய அழகாகும். முழு நிர்வாண கிரேக்கச் சிலைகளிலும் பார்க்க, அரை நிர்வாணச் சிலைகள், மெல்லிய ஆடைகளின் ஊடாக அழகை முழுமையாக வெளிக்காட்டுவதால் அதிக தாக்கம் தர வல்லவை என்னும் உண்மையை வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன். என்னை உணர்ச்சியூட்டும் நோக்கில் நீ இங்கு வந்திருந்தால், நீ அணிந்திருக்கும் இந்த நுண் மினிச்சட்டை எவ்விதப் பயனுமற்றது”.

அவன் சொல்லியவற்றைச் சீரணிக்க அஞ்சலிக்குச்  சிறிது நேரம் பிடித்தது. அதே வேளை கவர்ச்சியான தோற்றம் பற்றிய அத்தகைய குறிப்பு அவளை இக்கட்டான நிலைமைக்கு உள்ளாக்கியது. மேலும் இந்தக் குறிப்பே அவனை ஒரு சாதாரண மனிதனை விடப்  பெரியவனாகப் பார்க்க வைத்தது. அவன் தன்னைப் போன்றவன் எனும் எண்ணத்திற்கு ஆளானாள். அவனைப் பற்றிய அவளது உணர்வுகள் விளங்க வைக்கவோவிளங்கிக் கொள்ளவோ முடியாதவை. அது பயம், பக்தி, ஆச்சரியம் ஆகியவற்றின் ஒரு கலவை ஆகும்

அஞ்சலியை இணங்கிப் போகாதவளாகவே  ஒவ்வொருவரும்  கருதினர். அவளின் பெற்றோர் கூட அவள் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், அல்லாவிடில் ஒரு நாள் பிரச்னைக்கு உள்ளாக நேரும் என எச்சரித்திருந்தனர். ஆனால் அவளோ யாருக்காகவேனும் தான் தன்னை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனக் கூறியவளாய்  இருந்தாள். விவாகம் பற்றிய அவளது எண்ணமே பாரிய அளவில்  வேறுபடானது. அழகிய இளவரசன் ஒருவன் ரோசாவுடன் வந்து தன்னை மணம் புரியக் கேட்க வேண்டும் என எப்போதும் அவள் விரும்பியதில்லை. விரும்பும் ஆடவனை மணம் புரியக் கேட்பதில், தான் முன்னின்றால் என்ன என அவள் அடிக்கடி நினைப்பதுண்டு. உண்மையில் காதல்வசம் ஆனால், அதனைத் தன்னுள்ளே ஏன் வைத்திருக்க வேண்டும்?  காதலைத்  தெரிவிப்பதில் ஆண்கள் மட்டும் ஏன் முன் நிற்க வேண்டும்

அவன் இன்னமும் வாசித்தவாறே உள்ளான். ஆனால் அஞ்சலியால் அதை மேலும் பொறுக்க முடியவில்லை. “உங்களிடம் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும் எனத் தயங்கியவாறு கூறினாள்.

நான் உங்களை மணக்க விரும்புகிறேன். இது ஆச்சரியம் தருவதாய் இருக்கலாம். ஆயினும் உண்மையில் நான் உணர்வது அதனையே.  பெரும் ஆத்ம நிறைவுடன் அவனைப் பார்த்தாள். மேசைமீது புத்தகத்தை விட்டு அமைதியாக அவன் எழுந்து நின்றான்.

அவ்வளவு விரைவாக இத்தகைய துணிச்சலை எதிர்பார்க்கவில்லை. இருந்தும் நான் அதைப்  பெரியளவில் மெச்சுகிறேன். நீயும் என் போன்ற வகையினள் என நினைக்கிறேன். ஆயினும் நான் ஒவ்வொரு உணர்விலும் வேறுபட்டவன் என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும். திருமணம் பற்றிய எனது எண்ணங்கள் மிகவும் வேறுபட்டவை. மணம் புரிந்து விட்டால் மட்டும் நாம் ஓருயிர் ஆகி விடமாட்டோம்”.

திருமணத்தின் பின்பும் இரு வேறான விசேடித்த எமது சொந்த வழிமுறைகளைக்  கொண்டவர்களாகவே இருப்போம். அதனை நீங்கள் விரும்புவீர்களா அம்மணி? இவை யாவற்றையும் உங்களால் சகிக்க முடியுமா?”, எனக் கேட்டு, அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

துல்லியமான என் தேவை அதுவே என் அன்பே. ஒருவர் மீது இன்னொருவர்  காட்டும் பாரிய ஈடுபாடே காதல் என்பதாகும். நான் காதலிக்கும் ஒருவருக்காக எனது உயிரைத் தியாகம் செய்யவுந்  தயாராக இருப்பதுடன், எப்பொருளுக்காகவும் உலகில் காதலை நான் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன், என்று மகிழ்வுடன் அஞ்சலி கூறினாள்மிதந்து செல்வது போல அவள் உணர்ந்தாள். மாறுபாடான மனிதனுடன் வாழ்க்கையின் எஞ்சிய பகுதி எப்படியாக முழு நிறைவு பெறும் என அவள் அதிசயித்தாள். மிகவும் பாரிய இடர்ப்பாடு ஒன்றை முன்னெடுத்துள்ளதாக அவள் உணர்ந்தாள். ஆயினும் அவள் பின்னடிக்கவில்லை

காலம் ஓடியது எதிர்பார்த்தவற்றிலும்  வேறுபட்டதாக நிகழ்வுகள் எதிர்வந்தன. எவரும் அதனை அறிந்திலர். ரோசாக்களோ வண்ணத் துகள்களோ  அவர்களைப் பாராட்ட அங்கில்லை. இதயத்திற்கு நெருக்கமான பொருட்களைப் பகிரங்கப்  படுத்துவதால் உண்மையான இனிமையைப் பெற முடியாது என நினைத்து இருவரும் மகிழ்ந்தனர்.

கவரத்தக்க ஒன்றை நான் உனக்குக்  காட்ட வேண்டும்”, முதலிரவில் அவன் சொன்னான். அஞ்சலி அதிர்ச்சி அடைந்தவளாகப் படுத்திருந்த கட்டிலுக்கு, சிறிய படம் ஒன்றைக் கொண்டு வந்தான்

அழகிய பொருள் ஒன்று எப்பொழுதும் மகிழ்ச்சி தரவல்லதுஎன்று படத்தின் மேல் பொறிக்கப்பட்டிருந்தது. கீழே அரைவாசி ஆடையுடன் அழகிய பெண்ணின் படம் வரையப்பட்டிருந்தது. பெண் அச்சொட்டாக அஞ்சலியை ஒத்திருந்தாள். மெல்லிய ஆடையின் ஊடே அழகிய உடலின் வளைவுகள் தென்பட்டன. அவள் படுத்திருந்தது உணர்ச்சியூட்டும் விதமாக இருந்தது. “அஞ்சலி! ஒருமுறை பெண்ணழகு பற்றி நான் கூறியது ஞாபகமிருக்கிறதா? உன்னை நினைவில் நிறுத்தி இந்தப் படத்தை நான் வரைந்தேன். நான் அன்று சொன்ன கருத்துத் தொடர்பில் என்னுடன் இணங்குகிறாயா? நீ அணிந்த எந்த உடையிலும் இவ்வாறு உணர்வு ஊட்டும் விதமாக நீ எனக்குத் தோன்றியது இல்லை. நீ எனக்கு அழகிய மயக்கவஸ்து ஆவாய். தீண்டி அதன் மேன்மையைக் குறைக்க ஒருபோதும் நான் விரும்பமாட்டேன். எப்பொழுதும் அழகிய மயக்கவஸ்துவாக எனக்கு நீ விளங்க வேண்டும் என்பதே என் விருப்புஎனக் கூறி அன்புடன் அவள் முகத்தில் அவள் மறுதலிப்பை உற்று நோக்கினான்.

அஞ்சலி அவனைக் கிறங்கிப் பார்த்தாள். முதலிரவன்றே அத்தகைய சொற்களைக் கேட்டதில் அவள் மிகவும் செவிகுன்றிப்போனாள். காதல் மிக்கவனாகவும், உணர்வு ஊட்டுபவனாகவும் அவன் இருப்பான் என அவள் நினைத்தது எல்லாம் அக்கணத்தில் தலைகீழானதாகத் தோன்றியது. அவள் கன்னங்களில் கட்டுக்கடங்காது கண்ணீர் வழிந்தோடியது

அதியுச்ச விருப்புடன் அவள் கட்டி நிர்மாணித்த காதல் உலகம் துண்டும் துகளுமாக உடைந்து போனது. சாவது போல் அவள் உணர்ந்தாள். மிகச் சிரமத்துடன் துணிவை வரவழைத்து அவள் கூறினாள்

இரசிப்பதற்கான அழகிய பொருளாக மட்டுமே என்னை நினைக்கிறீர்களா? முழு வாழ்வையும் பெண்களை அழகிய மயக்கவஸ்துவாகப் பார்ப்பதில் மட்டுமே செலவழிக்கப் போகிறீர்களா? நான் ஊனாலும், உதிரத்தாலும் ஆனவள் அல்லவா? நானும் உணர்வுகளும் உந்துதலும் உள்ள ஒரு மனிதப் பிறவி தான் என்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ”

 

எல்லாவிடத்தும் கோட்பாடுகள், செயற்பாடுகளில் நீங்கள் வேறுபட்டவர் எனக்  கூறியபொழுது, அது எல்லா உணர்வுகள் சார்பிலும் என எனக்குப்  படவில்லை. எத்தகைய நல்ல காதலராக இருப்பீர்கள் என நான் நினைத்தேன்”.

எவ்வளவு உணர்வூட்ட வல்லவராக, காதல் மன்னராக, கவித்துவம் மிக்கவராக உங்களைக்  கற்பனை செய்தேன். ஏன் எனக்கு இவ்விதம் செய்தீர்? ஒவ்வொரு இயல்பிலும் உலகில் ஏனைய யாவற்றிலும் வேறுபட்டவளாக என்னை நான் நினைத்தேன். மனிதத் தேவைகள் என்று வரும் பொழுது நானும் ஒருவகை மனிதப் பிறவியே என்பதை இப்பொழுது அறிகிறேன். உலகிலுள்ள எதற்காகவும் உடலியல் உணர்வுகளை எவரும் விட்டுக்கொடுக்க முடியாது. எத்தகைய மேலான காதலும், திருமணத்தால் நிறைவு பெறாவிடில் எவரையும் திருப்திப்படுத்த மாட்டாதுஎனக் கூறியவாறு மறுபுறம் திரும்பியவள் மிகக் கசந்து அழத்தொடங்கினாள்.

சில வினாடிகள் கழிந்த பின், அவன் மென்மையான முத்தம் ஒன்றை ரோசா இதழாயொத்த அவளது கன்னங்களில் பதித்தான். அதன் பின்பே அவளின் மென்மையான சருமம் தந்த, முன்னெப்பொழுதும் அனுபவித்திராத சுகத்தை அவன் உணர்ந்தான்.


இந்து கமகே 

தமிழில் :சி.பாலசுப்பிரமணியம்


ஆசிரியர் குறிப்புகள்:

இந்து கமகே :

இந்து கமகே, ருஹுணு பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி கற்பித்தல் துறையில் பணியாற்றும் சிரேட்ட விரிவுரையாளர் ஆவார். அவர் இலங்கையின் களனிப் பல்கலைக்கழகத்தில் பி.., எம்.., மற்றும் எம்.பில் பட்டங்களைப் பெற்றுள்ளார். பல புகழ்பெற்ற கவிதைகள் மற்றும் சிறுகதைகளுக்குச் சொந்தக்காரரான இவர்எனது கனவுகளின் நிறங்கள்எனும் கவிதைத்தொகுப்பினை 2007இல் வெளியிட்டுள்ளார்

 

சி.பாலசுப்பிரமணியம் :

முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி ஆணையரும், இலங்கை இந்து கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளருமான அமரர் சி. பாலசுப்பிரமணியம்,  ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும், அரச அங்கீகாரம் பெற்ற மும்மொழி (தமிழ், சிங்களம், ஆங்கிலம்) மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பல கட்டுரைகள், அகராதி உள்ளீடுகள், ஆவணங்கள், கடிதங்கள், அறிக்கைகள், சான்றிதழ்களை  மொழிபெயர்த்துள்ளார். மரபுக்கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர். இவரால் மொழிபெயர்க்கப்பட்ட இந்து கமகேயின்நான் உன்னைக் காதலித்த போதும்சிறுகதை, 2006இல் நடைபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான இலக்கிய நிர்மாணப் போட்டியில், சிறுகதை மொழிபெயர்ப்புக்கான முதற்பரிசையும், விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.