இறுகிப்போன பாறையைச் செதுக்கும் உளிகள்


விச்சி அடித்துக் கிடக்கிறது சமூகம்.  வத்தி கொளுத்திக் கையில் பிடித்தபடி ‘வாக்கிங்‘ போகிறோம்.  அநியாயத்தை அனுசரித்துப் போவதற்குக் கல்வி கற்றுத் தருகிறது.  பெரியவர்கள் அறிவுரை தருகிறார்கள்.  சகித்துக் கொள்வதற்காகவே சம்பளம்.  பாவத்தின் சம்பளமென்றாலும் பரவாயில்லை.

ஆனால் கவிதையின் குதிரைக்குக் கடிவாளம் இல்லை.  கட்டுக்கடங்காது.  சராசரிகளின் சவாரிக்கு உதவாது.  மான் என்று உருவகிக்கப்பட்ட பெண் இனத்தில் பிறந்திருந்தாலும் நாச்சியாள் சுகந்தி துணிச்சலால் ஓர் ஆண்.  “அது என்ன ஆண்?  பெண்ணுக்குத் துணிச்சல் கிடையாதா?” என்று பொடணியில் தட்டிப் பொறிகலங்கக் கேட்கிற பெண்.

நாச்சியாளின் இந்த மனம்தான் ‘நச்’ சென்று இப்படிக் கேட்கச் சொல்கிறது….

அப்பனூட்டு குலசாமி கருப்பசாமி

அவனூட்டு குலசாமி அய்யனாரு

அப்பனூட்ல வாழ்ந்தப்ப

கருப்பசாமியக் கும்பிடச் சொன்னாங்க

,,,,,,,

அவநூட்டுக்குத் தாலிகட்டிப் போனதும்

அய்யனாரைக் கும்பிடு

 

எல்லாம் சரி சாமி

எப்பத்தான் வரும் எனக்குன்னு ஒரு சாமி?

 

இது சாதாரண கேள்வி அல்ல.  இது காலத்தை மீறி கனவு காணும் கேள்வி.

 “இத்தனை ஆண் நபிகள் இருக்கையில்

ஏன் வாப்பா இல்லை

ஒரு பெண் நபி ?

அந்தக் கேள்வியைக் கேட்டவன் அமரர் ஹெச்.ஜி.ரசூல். அப்படிக் கேள்விகள் கேட்ட கவிஞனை ஊர் ஒதுக்கி வைத்தது.  அவனது குடும்ப வாழ்க்கையின் நிம்மதியைக் குலைத்தது.  ஆனால் அக் கேள்விகள் நின்றுவிடுவதில்லை.  ஒரு புல்லாங்குழலை முறித்துப் போட்டால் இன்னொரு புல்லாங்குழல் இசைக்க ஆரம்பித்துவிடுகிறது.  மூங்கில் காட்டுக்கா பஞ்சம்? ரசூலின் கவிதையை நாச்சியாள் எழுதி முடிக்கிறார்.  கவிதையுலகம் ஒரு தொடர் ஓட்டம்தானே?  ஒருவர் பிடித்துவந்த ஜோதியை இன்னொருவர் கைமாற்றிக் கொள்கிறார்.  எந்தக் கை பிடித்தாலும் ஜோதி ஜோதிதானே?

தாலாட்டுக்கென்று தமிழ் வளர்த்த தமிழகம், ஒப்பாரியிலும் உயிர் வளர்த்திருக்கிறது.  நாட்டுப்புற இலக்கியமாய் மறத் தமிழச்சிகளின் வாய்கள் தோறும் வளரும் இலக்கியம். எழுதி வைத்தால் இன்னொரு இராமாயணம்.  கறுப்புத் தமிழச்சிகளின் தமிழில் கவிச்சியோ?  தமிழர்களின் பண்பாட்டில் ஒப்பாரிக்கென்றே ஓர் உலகம் இயங்குகிறது.  எங்கள் தாத்தா இறந்து போனதற்கு சித்தாமூர் ஒப்பாரிக்காரர் வந்து பாடிய பாடல்கள் இன்னும் செவிப்பறையில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன.  அந்தத் தீட்டுப்பட்ட தமிழை எத்தனைபேர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்?

நாச்சியாள் பதிவு செய்கிறார்

சேலையின் மாராப்பு கிழிந்திருக்கிறது

தைத்துக் கொள்ளவாவது

கொஞ்சம் நேரம் கொடுங்கள்

இப்பத்தான் தண்டவாளத்தில்

வெட்டிப் போட்டவனின் வீட்டில்

ஒப்பாரி வைத்துவிட்டு வந்தேன்

உடனே அடுத்த ஊருக்கு….

அங்கு போய்ச் சேருவதற்குள்

இன்னொரு ஊரில்

என் பிள்ளையை வெட்டிப் போடுகிறீர்கள்

இன்னும் எத்தனை நாளுக்கு ஊர் ஊராய் சேரி சேரியாய் ஓட வைப்பீர்கள்? இனி ஒப்பாரிகளுக்கு வார்த்தைகளில்லை என்கிறாள் ஒப்பாரிக்காரி.  கேட்பவள் ஔவை எனில் பதில் சொல்ல முருகன் வந்துவிடுவார்.  ஒப்பாரி பாடும் ஒருத்திக்கு யார் வந்து பதில் சொல்வது?  கையறுநிலையிலிருக்கும் அவளது சொற்களுக்குள் எத்துணை சோகம் மறைந்திருக்கிறது. மட்டுமல்ல,  கொலைகளால் நிறைந்த ஊர்களின் தல வரலாற்றை நாசூக்காகச் சுட்டுகிறார் நாச்சியாள்.  ‘வார்த்தைகள் தீர்ந்து போய்விட்டன’ கவிதையில்  சோகங்கள் தீர்ந்து போவதாயில்லை.

கெரோனா காலத்தில் ஊரடங்கு நம் நாட்டின் வீடற்றவர்களின் நெரிசலைக் காட்டிவிட்டது.  வீடற்றவர்களின் விவரங்கள் வெறும் புள்ளி விவரங்கள் அல்ல.  அது வறுமையின் புதைசேறு.  வாழ்க்கையின் கையறுநிலை.

வீட்டுப்பாடம் எழுதிட்டுவான்னு

தெனமும் செல்லிட்டே இருக்குற

டீச்சர்கிட்ட எப்படி சொல்லி

புரிய வைக்கிறது

எங்களுக்கு வீடே இல்லன்னு?

கொஞ்ச காலத்திற்கு முன்பு மிகவும் பிரபலமான ஒரு கவிதை என் நினைவுக்கு வருகிறது.

 “வீட்டுக்கொரு மரம்

நிச்சயம் வைக்கிறோம்

வீடு தா

காதலை வெறும் வாலிபத்தின் அவஸ்தையாகப் பார்க்கிறபோது கவிதையில் அதன் “அலைகள் ஓய்வதில்லை”.  வயதான பிறகு முதிர்ந்த காதல் சித்தித்து விடுவதால் சமூகம் தருவது “காதலுக்கு மரியாதை”.

வயதான காதலர்கள் இருவருமே முதுமையின் சுமையைச் சுகிக்கத் தொடங்குகிறார்கள்.  முடிவுறாத நினைவுகளைச் சுவைக்கத் தொடங்குகிறார்கள். கண்களில் கசியும் கருணையால் மீண்டும் குழந்தைகளாகி விடுகிறார்கள்.

ஒரு மாலையில் ஒற்றையடிப் பாதையில்

நீ கொடுத்து நான் பிரித்துப் பார்க்காத

வெள்ளைக் காகிதத்தில் இருந்த உன் இதயமும்

எதிர்பார்க்காமல் மலர்த்தப்பட்ட

இருவர் முத்தமும்

இன்னும் உன் நரைமயிரின் வேர்க்கால்களிலும் இருக்கலாம்

அதே வெதுவெதுப்போடு.

முதிய காதலின் வெதுவெதுப்பைப் புரட்சிக்கவி பாரதிதாசன் இப்படிப் பாடுவார்…

 

மதியல்ல முகம் அவட்கு

வறள்நிலம்குழிகள் கண்கள்

ஏது எனக்கு இன்பம் நல்கும்?

“இருக்கின்றாள்” என்பதொன்றே!

ஒரு வகையில் பல கவிஞர்கள் தொடாத இதயப் பிரதேசத்தை நாச்சியாள் தொடுகிறார்.

 

“நுனி நாக்கில் உறைக்கும் தோழியின் துவையல்” இதயத்தில் இனிக்கிறது.  தலை கோதிவிடும் அக்காவின் விரல்கள் ஆயாவை ஞாபகப்படுத்தி விடுகின்றன.  நண்பனின் குரலில் அப்பா பேசிக் கொண்டிருக்கிறார். இப்படி அத்தனை எளிதில் மரித்துவிடாத மனிதர்களை அடையாளம் காட்டுகிறார்.  கொரோனா ஊரடங்கு முடிந்த கையோடு தங்க நகைக் கடையில் நெரிசல்.  தங்கத்தின் தாசர்கள் வசிக்கும் சென்னை இது.  “தங்கமே பூமிக்கடியிலிருந்து வந்த குப்பைதான்” என்கிறபோது அதிர்ச்சியாகத்தானே இருக்கும்?  இவருக்கு ‘ஈசல் வறுவல் வாழ்வின் தீஞ்சுவை’யாகிறது.

 

//சிறகிலிருந்து பிரிந்த// இறகு ஒன்று// காற்றின்// தீராத பக்கங்களில்// ஒரு பறவையின் வாழ்வை// எழுதிச் செல்கிறது// என்கிற பிரமிள் “பறவையின் உடலிலிருந்து சிறகொன்று உதிர்ந்து வானத்திலிருந்து மெது மெதுவாய்க் கீழிறங்கி பூமியை வந்தடையும் கணங்களைச் சிலாகிக்க நேரமில்லை” என்கிற போது நாச்சியாள் ஆகிவிடுகிறார்.

அழுக்குத் துணிகள் தூக்கிலிடப்பட்டதைப் போல்

தொங்கிக் கொண்டிருக்கின்றன.

காய்களை நறுக்க வேண்டும்

இட்லிக்கு அரைக்க வேண்டும்

இன்னுமின்னும் காத்திருக்கின்றன

இடுப்பொடிக்கும் வேலைகள்

எனக்காக இன்னுமொருமுறை

உதிருமா அந்த இறக்கை?

பிரமிளே சேலை கட்டிக்கொண்டு சமையலறைக்கு வந்துவிட்டால் பறவையின் சிறகு உதிர்வதைப் பார்க்க வாய்ப்பதில்லை.  இதுதான் சமூகத்தின் எழுதப்படாத ஆனால் மீற முடியாத சட்டம். “புத்தனைப் போல யசோதா இரவோடு இரவாகப் புறப்பட்டு விட முடியுமா?  அவள் திரிந்து கொண்டிருக்கிறாள் குழந்தைகளின் அழுகையினூடே படுக்கை அறைக்கும் சமையல் கட்டுக்கும் இடையில்” என்பதைக் கண்டுபிடிக்கிறார்.  இப்படி இறுகிப்போன பாறைகளைச் செதுக்குகிற உளிகள்தாம் நாச்சியாளின் வார்த்தைகள்.  கடவுளுக்கே இந்தக் கவிதைச் சிற்பியைக் கண்டால் பயம்.  அதனால்தான் அவர் விருந்துக்கு அழைத்ததும் கடவுள் ஒரே சோபாவில் உட்கார்ந்து பிங் ஓட்காவும் மாட்டுக் கறியும் தின்றுவிட்டுப் போகிறார்.

 

கொலசாமிகளுக்குத்தான்

பசி புரியும்; பசி தெரியும்

என்கிற தீர்மானக் குரலும் இருக்கிறது.  ‘காய கல்பம் சாப்பிடுமோ?’ என்கிற கவிதையில் சங்ககால தொனியும் சாத்தியப்பட்டு இருக்கிறது.  அதனால்தான் வாழ்தல் வேறு இருத்தல் வேறு என்று இவரால் வரையறுக்க முடிகிறது.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்தான் இன்னமும் வாழ்க்கை.

மலத்தையள்ள இன்னமும் எங்களைத்தான் பணிக்கிறீர்கள்

எங்கள் பெண்களின் முலைகள் காரணமின்றியே இன்னும் அறுக்கப் படுகின்றன

ஆனால் வீடு திரும்பச் சொல்கிறீர்கள் என்கிற கவிதையில் கணக்கற்றக் கொடுமைகள் நிகழ்த்துகிறீர்கள்.  ஒரு காரணத்தையாவது சொல்லுங்கள் என்று இவர் கேட்கிறபோது நமக்கு நா புரள மறுக்கிறது.  நாச்சியாளின் எழுதுகோலில் கேள்விக்குறிகள் கவிதைகளாகிவிடுகின்றன.  அவை பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு வைக்கின்றன.

முப்பது நாட்கள் ஒழுகிக் கொண்டிருக்கும் தீட்டு

தொடையிரண்டிலும்

வரி வரியாக ரணமாகியிருக்கிறது.

சிவந்திருக்கும் ரணத்தின் மேல்

மஞ்சளிட்டுத் தடவுகிறாள்

தீயெனப் பரவுகிறது

எரிச்சல் உடலெங்கும்

வார்த்தைகளில் வழிகிறது குருதியின் பிசுபிசுப்பு.  நம் மனம் என்னும் தீட்டுத் துணியின் மீது சாரைப்பாம்பு நாவால் தடவியபடி ஊர்ந்து செல்கிறது.

//எல்லையற்ற// கருணையற்ற// இவ்வுலகில்தான்// ஒரு தற்கொலையை மேற்கொண்டு// சிறு முத்தத்தை// சமப்படுத்த வேண்டியிருக்கிறது// என்கிற கால பைரவனின் கவிதையில் முத்தத்தைத் தற்கொலையால் ஈடு கட்டுகிறார்.  மீட்கும் முத்தங்கள் என்கிற கவிதையில் இருவரின் முத்தத்தால் தற்கொலையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.  ஆலமரத்தின் சிறுவிதையென வாழ்க்கை சட்டெனத் துளிர்க்கத் தொடங்குகிறது என்கிறார். இந்தக் கவிதையிலும் ‘மனதோடு பேசு’ கவிதையிலும் கூர்மை குறைகிறது. அதனால் கைகூட வேண்டிய கவித்துவம் சிதறுகிறது.

படைப்புக் கடவுள் பிரம்மன் என்பது ஒரு நம்பிக்கை.  எனக்கு என்ன ஒரு ஆச்சரியம் என்றால் பிள்ளைகள் பெறுபவர்கள் பெண்கள்.  ஆனால் படைப்புக் கடவுள் என்று ஓர் ஆணைக் குறிப்பிடுகிறார்கள். நாச்சியாளுக்கும் இந்தக் கேள்வி வந்திருக்கிறது.  அதனால்தான், “எப்பத்தான் வரும் எனக்குன்னு ஒரு சாமி” என்று கேள்வி தொடுத்தவர் தானே சிருஷ்டிக்கும் கடவுளாகிவிடுகிறார்.

என் மாதாந்திர உதிரத்திலிருந்து

உருவாகிறது பேரண்டத்திலேயே

உன்னதக் குழந்தை

இனி என்னிடமும் இருக்கிறது

சிருஷ்டியின் கதை

என்னவொரு நம்பிக்கை!   இதுதான் எழுத்தின் மேன்மை.

‘ஆகுதி’யின் ரூபாய் முப்பத்தைந்தில் எளிமையான தயாரிப்பு. கலைவிமர்சகர் இந்திரனின் வலிமையான முன்னுரை.  தொகுப்பில் சில கவிதைகள் கப்பலைப் போல கம்பீரமாகவும், சில கவிதைகள் ஓடங்கள் போல ஒய்யாரமாகவும், சில கவிதைகள் கட்டுமரங்கள் போல மிதந்தும் வருகின்றன. மொத்தத்தில் வாய்ப்பதோ கவிதைகளின் பரவசமான பயணம்.


-நா.வே. அருள்

நூல் : ஒரு காரணமாவது சொல்லுங்கள்

ஆசிரியர்:நாச்சியாள் சுகந்தி

பதிப்பகம் : ஆகுதி

விலை : ₹35

 

2 COMMENTS

  1. மிகச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் அர்ப்பணிப்பு மிக்க தங்கள் இணைய இதழ் கனலிக்கு நன்றிகள்.

  2. நல்லதொரு மதிப்புரை. எழுத்தாளரின் வேட்கையோடு ஒன்றி போய் எழுதப்பட்ட மதிப்புரை. நூலை வாங்க தூண்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.