திருடன் மணியன்பிள்ளை – வாசிப்பனுபவம்

உலகம் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அவரவர் பார்வையில் ஒவ்வொன்றாய் இருக்கிறது . உலகம் நல்லதா? கெட்டதா? இது காலங்காலமாய் இருந்து வருகிற கேள்வி. இதற்கான பதிலும் அப்படியே.  இந்த உலகத்தை, இங்கு வாழும் மனிதர்களை நம்மில் பெரும்பான்மையானோர் கருப்பு வெள்ளையில் தான் வரையறை செய்து கொள்கிறோம். சமூகம் மிக எளிதாக மனிதர்களின் மீது முத்திரைகளை குத்தி விடுகின்றது. முத்திரையிட்ட பின் சமூகத்திற்கு அடையாளப்படுத்திக்கொள்ள மனிதர்கள் தேவையில்லை. அவர்கள் மீது குத்தப்பட்ட முத்திரையே போதுமானதாக இருக்கிறது. ஒரு மாற்று வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், சமூகம் அம்மனிதனின் மீது குத்தப்பட்ட முத்திரையை சாமானியமாய் அழிப்பதில்லை. 

முதலில் சொன்னது போல இந்த உலகம் நல்லதா கெட்டதா என்ற கேள்வியை, சமூகம் திருடன் என்று முத்திரை குத்திய ஒருவனிடத்தில் கேட்டால் அவனுடைய பதில் என்னவாக இருக்கும்? ஒரு  திருடனின் கண்கொண்டு இந்த உலகத்தைப் பார்க்கும் போது, அது எப்படிப்பட்டதாக இருக்கும்? 

திருடன் என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவன் தன் தொழில் நிமித்தமாய் இரவுகளை சிநேகிதம் கொள்கிறான். பிற மனிதர்களின் இரவுகளுக்குள் அழையா விருந்தாளியாய் அவன் நுழைவது தவிர்க்க முடியாததாகிறது. பகலில் இருக்கின்ற உலகமும் மனிதர்களும் தங்கள் ஒப்பனைகளை கலைத்துவிட்டு இரவுக்குள் நுழைகிறார்கள்.  அங்கு பலரும் வேறு ஒருவராக உருமாறி இருக்கிறார்கள். தாங்கள் இந்த சமூகத்திற்கு காட்ட விரும்பிடாத நிஜ முகங்களுடன் அவர்கள் உலவத் துவங்குகிறார்கள். அந்த மனிதர்களுக்கும், அவர்களது இரவுகளுக்கும் அத்திருடன் மௌன சாட்சியாகிறான். என் வாசிப்பனுபவத்தில் தன் வரலாற்று நூல்களில் மிக குறைவாகவே வாசித்திருக்கிறேன். எனினும் ஒரு திருடனின் தன் வரலாறு  நூல் என்றதுமே ஒரு இனம்புரியாத சுவாரசியம் தொற்றிக் கொண்டது; மாற்று பார்வைகள் எப்பொழுதும் புதிய சாளரங்களைத் திறந்து வைக்கும் என்பதால் வந்த ஆர்வம். 

திருடன் மணியன்பிள்ளை. அருகிலுள்ள கேரளத்தில் அரை நூற்றாண்டுகளாக திருடனாய் இருந்தவர். தனது வாழ்க்கையை, தான் கடந்து வந்த பாதையை, முன் கதை போல விரிகின்றது  பாசாங்கற்ற தொனியில். இந்த உலகத்தை போல தனது இயலாமைகளுக்கும், கீழ்மைகளுக்கும் விதியையோ, காலத்தையோ பழிக்காமல் நேர்மையாக என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பாளி என்பதாக தனது கதையை நம்மோடு பகிர்கிறார். ஒரு திருடனின் வாழ்க்கை கேளிக்கைகள் நிறைந்தது; ஏனெனில் அவன் போகிக்கும் பணம் அவனுடையதல்ல. அது அடுத்தவருக்கு சொந்தமானது. யாரோ ஒருவருடைய வியர்வையின் பலனை இவன் அனுபவிக்கிறான். திருடனின் வாழ்க்கை சாகசங்கள் நிரம்பியது; ஏனெனில் திருடுவதே ஒருவகையில் சாகசம்தான். இதுவே ஒரு திருடனின் வாழ்க்கையை குறித்த பொதுவான சமூக புரிதல். ஆனால் இது ஒரு திருடனின் வாழ்க்கையில் இழையோடும் வெகு கொஞ்சமான உண்மை என்பதை பக்கங்களை புரட்டப் புரட்ட நாம் புரிந்து கொள்ள முடியும். 

மிக அண்மையில் காண்கையில் தான் ஒரு திருடனின் வாழ்க்கை ஏனைய வாழ்க்கைகளிலிருந்து மிகவும் முரண்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தன் மீது இந்த சமூகம் குத்துகின்ற முத்திரையை  வாழ்நாளெல்லாம் சுமந்தலைய சபிக்கப்பட்டவனாய் அவன் இருக்கிறான். ஒரு கட்டத்தில் வாழ்க்கை பாதையை மாற்றிக்கொள்ள திருடன் நினைத்தாலும் அவனுக்கு அது சாத்தியமாவதே இல்லை. மாற விரும்புகிற அவனுக்கான எல்லா வழிகளையும், சமூகம் இறுக அடைத்து பல காலம் கடந்திருக்கும். மாற்றத்திற்கான சாவிகளை ஏறத்தாழ எல்லா திருடர்களுமே திருட்டுக் கொடுத்தே நிற்கிறார்கள். நமது வசதிக்கென அவர்களிடம் சாவியைத் திருடிய திருடனுக்கு விதி என்று பெயரிட்டுக் கொள்ளலாம். சராசரி மனிதர்களின் நிம்மதி அவனுக்கு எட்டாக்கனி. ஒரு சராசரியான எளிய வாழ்க்கை அவனுக்கு கை கொள்ளவே முடியாத கனவு. இயல்பான நிம்மதியான உறக்கம் கூட அவனுக்கு எப்போதோ கிடைக்கும் வரமாக மட்டுமே இருக்க முடிகிறது. ரத்தமும் சதையுமாக ஒரு திருடனின் வாழ்க்கைக்குள் தினமும் நடந்து, அவனோடு பயணித்து, அவனையும் அவன் வழியே நாம் காணும் அன்றாட உலகத்தின் இன்னொரு இருட்டு பக்கத்தையும் தரிசிக்கும் வாய்ப்பை திருடன் மணியன்பிள்ளையின் வாசிப்பு நமக்கு வழங்குகிறது. 

பெருவாரியான மனிதர்கள் தங்களுடைய கீழ்மைகளை, தங்களது சின்னத்தனங்களையும் ஒருபோதும் நேர்மையாக ஏற்றுக் கொண்டதே இல்லை. தங்களுடைய நிலைக்கு தங்களைத் தவிர உலகிலுள்ள சகல விஷயங்களையும் காரணம் காட்டி தப்பித்துக் கொள்வது மிக சாதாரணமான மனித இயல்பு. மிகச் சில விதிவிலக்குகளே இதற்கு உண்டு. மனிதக் கூட்டத்தின் தொகுதிதான் சமூகம். அப்படிப்பட்ட சமூகம் தன்னுடைய இருண்ட பக்கங்களை, தான் அணியும் முகமூடிகளை ஒளித்து வைக்க ஒரு இடம் தேடுகிறது. அப்படி அதற்கு கிடைக்கின்ற இருட்டு அறைகளுள் ஒன்றென ஒரு திருடன் இருந்து விடுகிறான். இதை சமூகத்தின் அதிர்ஷ்டமாகவும், திருடனின் துரதிஷ்டமாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். சமூகம் தனது எல்லாக் குப்பைகளையும், அழுக்குகளையும் அந்த இருண்ட அறையில் போட்டு பூட்டி விடுகிறது. இப்படியாகவே காலங்காலமாய் தனது புனிதத்தை, நாணயமான பிம்பத்தை தற்காத்து கொள்கிறது சமூகம். 

மணியன்பிள்ளை நமக்கு அருகமர்ந்து தன் வாழ்க்கை கதையை சொல்லச் சொல்ல நாம் காண விரும்பாத உலகின் பக்கங்கள் நம் முன்னே விரிகின்றன. மனித வாழ்க்கையின் கதையை அதன் ஏற்ற இறக்கங்களோடு, கலப்படமின்றி உள்ளது உள்ளபடி சொல்ல ஒரு வாழ்ந்து கெட்டவனை காட்டிலும் வேறு எவரால் முடியும்? மணியன் பிள்ளை ஏக காலத்தில் ஒரு திருடனாகவும் தத்துவஞானியாகவும் இருந்திருக்கிறாரோ என தோன்ற வைக்கின்ற எழுத்தும், அது முன்வைக்கிற கருத்தும் புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. பட்டங்கள் பல பெற்று மேதைகள் என பீற்றிக் கொண்டு வாழும் பலரையும் விட, வாழ்க்கையின் அர்த்தத்தை, அதன் அர்த்தமின்மையை, ஏக காலத்தில் அது வரமாகவும் சாபமாகவும் இருக்கின்ற நுட்பத்தை, எளிய சொற்களில் தனது வாழ்வனுபவ பகிர்வின் வழியாக அனாயசமாக கடந்து செல்கிறார் திருடன் மணியன். 

அவரது கதையில் யார் மீதும் புகார்கள் அதிகமாய் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. போகிற போக்கில் இடையிடையே பல வருத்தங்களை பதிவு செய்து செல்கிறார். அவ்வளவே. அது கூட இல்லாத மனிதரும் இருக்க முடியாதில்லையா! தான் ஒரு திருடனானது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை சமூகத்தால் தான் ஒரு திருடனாக்கப்பட்டது என்பதும். வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தின் வாரிசாக, தங்கள் மீது இறுகப் பின்னிய நெருக்கிய உறவுகளின் துரோக வலைக்குள் தொலைந்த தனது இளமைக் காலத்தை சொல்லும் அவரது கதையை வாசிக்கையில் அப்படித்தான் தோன்றுகிறது. 

திருடனின் அனுபவங்களில் சிறைச்சாலையின் நாட்கள் இல்லாமல் இருக்குமா? அவரது அனுபவப் பகிர்வில் சிறையனுபவங்கள் மிக முக்கியமான பகுதியாக விரிகின்றது. சிறை ஒரு இரக்கமற்ற வனம். அது ஒருவனை மேலும் கெட்டவனாக்கி, சமூகத்தின் இருள் வெளிகளின் நிரந்தரவாசியாக அவனை உருமாற்றம் செய்யும் களமென அவர் வாழ்வனுபவம் நமக்கு சொல்கிறது. ஒரு திருடனின் வாழ்க்கையில் இறுகப் பிணைக்கப்பட்ட, அவனது இன்னொரு நிழலென தொடரும் சக பயணி காவலர். காவலர்களின் சிறுமையும் மேன்மைகளும், கொடூரங்களும் இளகிய மனிதம் நிறைந்த தருணங்களும் அவ்வப்போது வெவ்வேறு காவலர்களைப் பற்றிய அவரது குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலவே, சிறைச்சாலையின் சக கூட்டுப் பறவைகளான பிற கைதிகளின் கதையும். ஒவ்வொரு கைதியின் கதையும் ஓரோர் தினுசில். விசித்திரமான குணாம்சங்களால், தமக்கென தனி முத்திரைப் பாங்குடைய திருடர்களும் அவர்தம் திருட்டுகளும் சில இடங்களில் சிரிக்கவும், சில இடங்களின் பரிதாபப்படவும் வைக்கின்றன. மணியன் பகிர்ந்துள்ள அத்தனை திருடர்களின் கதையிலும் உள்ள பொது அம்சங்களாக நாம் காண முடிவது – சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படுகிற உழைக்க மனமற்றிருப்பது; வேறு சிலரோ சாமானிய வாழ்க்கை ஏதோ ஒரு இடுக்கில் சிக்கித் தவிக்கையில் அதிலிருந்து விடுபடுவதன் நிமித்தமாக ஒரு திருட்டை நிகழ்த்துவது விடுபடலென கால் வைத்த திருட்டு ஒரு புதைகுழியென அவர்கள் மெல்லவே உணர்கின்றனர். காலம் கடந்து புரிந்து பலனென்ன! 

போகத்தின் ஒரு எல்லை கேளிக்கையும் ஆடம்பரமுமெனில், மறு எல்லை பெண். மணியன் தன் வாழ்வில் தான் கடந்து வந்த பெண்கள் குறித்து ஆங்காங்கே பகிர்ந்துள்ளவை முக்கியமானவையாக பார்க்கிறேன். பல இடங்களில் இவரது விவரிப்புகளும், பகிர்வுகளும் மிகையோ எனும் உணர்வை தவிர்க்க இயலாத போதும், வெகு சமூகத்தில் பூட்டப்பட்ட அறைகளுக்குப் பின்னால் பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளையும், ஆணாதிக்க அடக்குமுறைகளையும் அவை எடுத்துக் காட்டுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாகிறது. மேலும் வயதில், இளமைக் கொழுப்பில் கணக்கற்று பெண்களை ஏமாற்றியதை, அனுபவம் பழுத்த வயதில் சாகசமாய் அல்லாமல் வருத்தம் தோய அவர்கள் அத்தனை பேரிடமும் இறைஞ்சுவது போன்ற வார்த்தைகளால் பகிர்வது முதிர்ச்சியைக் காட்டுகிறது. இவ்விடத்தில் ‘நான் இங்கே பகிர்ந்துள்ள எனது வாழ்வின் சம்பவங்கள் வாசிக்கிறவனை கெடுப்பதற்காகவோ, திருடனாக்குவதற்காவோ அல்ல. மாறாக என் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவே இவற்றை பகிர்கிறேன்’, என்று அவர் நூலின் துவக்கத்திலேயே சொல்லியிருப்பதும் நினைவிற்கு வருகிறது.

இளமையின் மமதையில் நன்மை தீமைகளை குறித்த எந்த யோசனைகளும், அறவுணர்வுமற்று தனது அகங்காரத்திற்கு தீனியிடுவதும், சுயநலத்திற்காக – யாரைக் காவு கொடுத்தேனும்- எவ்வெல்லை வரையிலும் செல்லத் தயங்காத ஒரு அசாதாரண மனிதனை கண் முன் நிறுத்துகிறது அவரது பகிர்வு. இருப்பினும் இத்தனை கீழ்மைகளையும் கடந்து, அவரது வாழ்க்கைக்குள்ளும் விரவிக் கிடக்கிற மனிதம் தளும்புகிற தருணங்களும் (குறிப்பாக மைசூர் வாழ்க்கை குறித்த பகிர்வுகள்), யார் மீதும் பெரிய புகார்களின்றி அம்மனிதர்களை அவர்களது சூழல் யதார்த்தங்களோடு சேர்த்தே புரிந்து கொள்ளும் அவரது பார்வையும் சேர்ந்தே எழுத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது, மேலும் சற்று முன் சொன்னது போல் இவை அத்தனையும் தனது வீழ்ச்சியின் வழியே சக மனிதர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவரது எண்ணமே அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது. 

சாதனையாளர்களின் வரலாறுகளை அவர்தம் வெற்றியின் சிகரங்களில் இருந்து (அதனை அடைவதற்கு அவர்கள் கடந்த கடினமான வாழ்க்கைப் பாடுகளோடு சேர்த்தே) வாழ்க்கையின் சாரத்தை உணர்ந்து கொள்வதைக் காட்டிலும், மணியன் போல இயல்பாக வாழ்க்கையொன்றை வாழ்வதையே ஒரு சாதனையென கருதத்தக்க விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்க்கைப் பதிவுகளின் மூலமாக அதிகமாகவே வாழ்க்கையை உணர முடிகிறது என்றே தோன்றுகிறது. 

குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டிய இன்னுமொரு விசயம், நூலின் மொழிபெயர்ப்பு குறித்தானது. குளச்சல் யூசுஃப் அவர்களது பெரு உழைப்பு, மொழிபெயர்ப்பு என்றே ஒரு வாசகன் உணராத வண்ணம், ஏதோ நேரிடையாக ஒரு தமிழ் பிரதியை வாசிக்கிற வாசிப்பனுபவத்திற்கு நிகரான ஒன்றை நிச்சயம் வழங்கி இருக்கிறது. மூல மொழியில், வார்த்தைகளுக்கு ஊடே இழையோடிய அத்தனை உணர்வுகளும் மொழிப் பெயர்ப்பிலும் அப்படியே, ஒரு வேளை அதனை விட இன்னும் அதிகமாக, பாதுக்காக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றே ஒரு வாசகனாய் தீர்க்கமாக நம்ப விரும்புகிறேன்.

-வருணன்


நூல் : திருடன் மணியன்பிள்ளை (மொழிபெயர்ப்பு நாவல்)

ஆசிரியர் : ஜி. ஆர். இந்துகோபன்

தமிழில் : குளச்சல் மு. யூசுப்

பதிப்பகம் : காலச்சுவடு

விலை:  ரூ 560

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.