அடையாளங்கள்

வனுடைய வீடு, பிரதமர் துவக்கி வைத்த தங்க நாற்கரச் சாலையாக அகலப்படுத்திக்கொண்டிருக்கும் கிராமத்துச் சாலை ஓரத்தில். சாலை ஓரத்தில் ஏதோ நூற்றாண்டில் நாட்டை ஆண்டிருந்த மன்னர், கால்நடைப் பயணிகளுக்குக் காலாற நின்று ஓய்வெடுப்பதற்காகவும் படுத்துறங்குவதற்காகவும் பாதை ஓரங்களில் மன்னரின் தயாள உள்ளத்திலிருந்து கிளர்ந்து வளர்ந்த நிழல் மரங்களில் ஒன்றுதான் அவன் வீட்டிற்கருகாமையில் நிற்கும் மூதாட்டி மரம்.

மூதாட்டி மரம் நிற்குமிடத்திலிருந்து சற்று விலகியுள்ள மொட்டையன் குளத்தில் மலர்ந்து நிற்கும் ஆம்பல் பூக்கள். அவற்றின் நீண்ட தண்டுகள், பரந்த இலைகள். தண்டை ஒடித்து நீண்ட மாலை போட்டுப் புதுமாப்பிள்ளைகள் விளையாடும் குளத்து நீரை மூடிக்கிடக்கும் முட்டைத் தாளிக்கடியில் முட்டை போட்டுக் குஞ்சு பொரிச்சு நீந்தித் திரியும் வரால்கள். முட்டைத் தாளியின் உரோம வேர்களைச் சுற்றி நடமாடும் குஞ்சுகளை வட்டமிட்டுக்கொண்டிருக்கும் தள்ளை வரால்களைச் சூண்டை (தூண்டில்) போட்டுப் பிடிக்கக் குளத்தங்கரையோரமாக நடக்கும் ஒண்ணரைக்கண்ணன் அனீபா. செக்கச்செவேலென்றிருக்கும் வரால் குஞ்சுகள், முட்டைத் தாளியும், ஆம்பல் இலைகளும் இல்லாத பகுதிகளில் சூரிய வெளிச்சம் பார்க்க மேலே வரும்போது உடன் தள்ளை வரால்களும் வரும். இந்தச் சந்தர்ப்பம் பார்த்து ஒண்ணரைக் கண்ணன் அனீபா இரையைக் கொருத்த சூண்டையைப் போட்டு மெல்ல அசைப்பான். இரை திங்க ஓடிவந்து கவ்வியதும் வெட்டி மேலே இழுப்பான். அடிப்பகுதி வெளுப்பான கறுப்பு வரால் மீன் தரையில் கிடந்து துடிக்கும். வழுவழுப்பான வராலைத் துடிக்கத் துடிக்க எடுத்துக் கொண்டு ஓடுவான் வீட்டுக்கு.

ஒண்ணரைக்கண்ணன் அனீபாவை அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்காது. கண் திறக்காத சின்னம்சிறு பாலகக் குஞ்சுகளை எத்தீமாவிட்டு (அனாதை) தாயைப் பிடித்துச் சுடச்சுடப் பொரிச்சுத் திங்கிற இந்த அநியாயப் பாவியை அல்லா விடுவானா? மொட்டையன் குளத்தில் பண்டு காலத்தில் ஒரு தங்ஙள் விட்டு வளர்த்த மீனின் பின்வாரிசுகள். பிடிச்சு சாப்பிடுவோனுக்கு நரகம் கிட்டும். ஒண்ணரைக் கண்ணன் நரகத்துக்குத்தான் போவான்.

அக்கம் பக்கத்திலுள்ள பெண்கள் குளிப்பது மொட்டையன் குளத்தில். உதயத்திற்கு முன், நிலாவெட்டமுள்ள இரவிலும் வந்து குளிப்பார்கள். நிலாவெட்டம் பார்க்க வரும் மீன்களின் கண்கள் மினுமினுங்கும். கண்ணெரியும் சூடு உடம்பைப் பாதித்தாலும் மொட்டையன் குளத்தில் வந்து நண்டு முங்குப் போட்டால் குளிர்ச்சித் தலைக்கு ஏறிக் கண்கள் சிவந்துவிடும். வயல் ஏலாக்களில் சுட்டெரிக்கும் சித்திரை வெயிலில் வேலை செய்வோர்கள் கூலி வாங்கி வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு முங்கு போட்டுவிட்டுப் போனால்தான் சுக நித்திரை என்பார்கள்.

அவனுடைய வீட்டிலிருந்து மூதாட்டி மரத்தடிக்குச் செல்லும் பாதை வக்கிலிருக்கும் சாலி மாமாவுடைய பெட்டிக் கடையின் முன்பக்கம் கயிற்றில் மாலை போல் பெப்சியும் கொக்கோ கோலாவும் குப்பித் தண்ணீரும் தொங்கிக்கொண்டிருக்கும். பெப்சி குடிச்சுப் பாக்க அவனுக்கு நெடுநாள் ஆசை. விலையைக் கேட்டபோது அவனுக்குத் தலை சுற்றியது.

இம்புடு ருவாக்கு எவனைப் போய் வாப்பான்னு உளிக்க? வின்சன்ட் கலர் பாட்டிலின் விலையாகத்தானிருக்குமென்று எண்ணினான். இருந்தாலும் பள்ளிக்கூடம் போகாததால் சாலி மாமாவின் கடைப்பக்கம் நித்தம் போய் நிப்பது பெப்சியையும் தண்ணிக் குப்பியையும் பார்த்துக் கொண்டிருக்கத்தான். அகலப்படுத்திக் கொண்டிருக்கும் தங்க நாற்கரச் சாலைக்கு ஜல்லியும் மணலும் சுமந்து தட்டும் சில தொழிலாளர்கள் தாகம் அடக்க முடியாமல் ஓடிவருவது சாலி மாமாவுடைய பெட்டிக் கடைக்கு.

சாலி மாமா, சோடா திறப்பானைக்கொண்டு பெப்சியையோ, கோலாவையோ எடுத்து டபாரெனு உடைத்துக் கொடுக்கும் அந்த ஓசைக்கு என்னா இனிமை! அவர்கள் அதைத் தொண்டையில் மளமளவென விடும்போது அதிலிருந்து வரும் வாசம் மூக்குக் குழாய் வழியாக அன்ன நாளத்திற்குள் இறங்கி, ஒரு கடலளவு கிடைத்தாலும் ஒரே இழுப்பில் இழுத்துவிடுவதற்கு ஆசையைக் கிளறிவிடும்.

மூதாட்டி மரத்திலிருந்து வீசும் மருந்துக் காற்றை வாங்குவதற்காக அங்கு வரும் ராஜபடம் சமது காக்காவுக்கு சாலிமாமா ஒரு ஸ்டூல் போட்டுக் கொடுப்பார் பேச்சுத் துணைக்கு. ரைஸ்மில்லில் வேலை பார்த்து, காசநோய் தொல்லையால் ஏலாமல் வேலையை விட்டுவிட்டு வந்தவர் இருமி இருமித் துப்பிக்கொண்டு பேச்சுத் துணைக்காக உடகார்ந்து கொண்டிருப்பார். சாலிமாமா கொடுக்கும் ஓசி பீடியைக் குடித்துக்கொண்டு கண்ட இடமெல்லாம் துப்பி ஈக்களை வரவழைப்பார்.

சிறிது உண்மையுடன் பெரும் பொய்களையும் சேர்த்துக் கேட்பாருக்கு உண்மையெனப்படும்படி இரசனையாகக் கதையடிப்பார்.

அவன் அதைக் கேட்டு விழுந்தடிக்கச் சிரிப்பான்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுக்குப் பிள்ளைகள் இங்கிருந்து போகத் துவங்கிய பிறகுதான் கோலாவும் பெப்சியும் சாலிமாமாவுடைய கடையில் தொங்கியது. சிறுவர்களுக்காகச் சின்னக் குப்பியும் தொங்கியது.

ஆகாசத்துக்கு நேராக ஆயிரம் கைகளை நீட்டி நிற்கும் மூதாட்டி மரத்தின் நிழல் சாலி மாமாவின் கடைக்கு முன்னால் குப்புற விழுந்து கிடப்பதாலும் சிலுசிலுவெனக் காற்று அதிலிருந்து வருவதாலும் ஈ அடிச்சான் கடையானாலும் கடைக்கு முன்னால் கூட்டம் குறைந்தபாடில்லை. வெளிநாடுகளிலிருந்து வரும் பறவைகள் மூதாட்டி மரத்தின் உச்சாணிக் கொம்பில் கூடுகட்டி சில மாதங்கள் தங்கிவிட்டு எல்லாமே பறந்து போய்விடும். மர உச்சியிலிருந்து பறவைகள் ஆகாய வெளியில் கூட்டமாகப் பறந்து போவது பார்க்க ஒரு அழகுதான்.

மொட்டையன் குளத்தங்கரையில் உட்கார்ந்து கண்ணாடியில் முகம் பார்க்கும் பறவைகள் ஒண்ணரைக் கண்ணன் அனீபாவைக் கண்டதும் வாச்சான் பிழைச்சானு பறந்தே போய் அவன் கண்ணிலிருந்து மறைந்துவிடும். அவை உட்கார்ந்திருப்பதும் சிறகடிச்சு வானவெளியில் பறப்பதும் ரம்மியமான காட்சி. மூதாட்டி மரத்தின் உச்சிக் கொம்பிலிருந்து பறவைகள் எச்சம் போடுவது சுண்ணாம்புக் கலக்கி ஊத்துவது போலிருக்கும். மர மூட்டில் எங்கும் வெள்ளையாகவே காணப்படும். பறவைகளைக் கேட்டாபிள் கொண்டு அடிச்சிட தக்கம் பார்த்து நடக்கும் நரிக்குறவன் வெள்ளச்சாமி. பறவைகளைக் கேட்டாபிள் கொண்டு அடிச்சுப்போட சாலி மாமா உடமாட்டார். ஒரு பெப்சி வாங்கி, வெள்ளச்சாமிக் கூட்டி வருகிற பயக்களுக்கும் கொடுத்துத் தானும் குடிச்சால் ஒண்ணே ஒண்ணு மட்டும் அடிச்சுப் போட்டு எடுத்துட்டுப் போங்கலே என்பார்.

இரவு ஊரும் காலும் அடங்கிய பிறகு மூதாட்டி மர முகட்டிலிருந்து பறவைகள் எழுப்பும் சத்தம் இசையாக அவனுடைய காதில் ஒலிக்கும். ஒரு பறவையைப் பிடித்துப் பச்சைக் குழந்தையை அணைப்பது போல் அணைத்து அதன் பட்டு மேனியை நீவிக்கொடுக்க மூக்களவு ஆசை. மொட்டையன் குளத்தில் மலர்ந்து நிற்கும் ஆம்பல் பூப்பறிக்கச் செல்லும் போது, பம்மிப்பம்மிப் பின்னால் சென்று எட்டிப்பிடிக்க முனைகையில் தாவிப் பறந்து அக்கரைக்குச் சென்றுவிடும். பறவைகளுக்குப் பின்பக்கமும் வெளியத் தெரியாத கண்கள் உள்ளனவென்று தெரிந்து கொண்டான்.

கூடுகட்டிப் பறவைகள் முட்டை போட்டு அடையிருந்து குஞ்சு பொரிக்கத்தான் மூதாட்டி மரத்தைத் தேடிப் பறந்து வருகிறதென்று ராஜபடம் சமது காக்கா சொல்லித் தெரிந்ததிலிருந்து பறவைக் கூட்டைப் பார்க்க மோகம் கொண்டான். மரத்தின் நுனிக்கொம்புக்கு ஏறிப்போய் கூடுகளைப் பார்க்கவும் முட்டைகளைப் பார்க்கவும் சிறகு கிளிர்க்காத பூப் போன்ற குஞ்சுகளைத் தொட்டுப் பார்க்கவும் அடக்க முடியாத ஆவல்.

வேடந்தாங்கல் விட்டால் இங்குதான் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவு வாறது. அதற்குக் காரணம் மூதாட்டி மரமும் மொட்டையன குளமும். பயமில்லாமல் பாதுகாப்பாகக் கூடுகட்டித் தங்குவதற்கு ஏற்றவாறு உசரமான மரம். வெள்ளச்சாமியுடைய கேட்டாபிள்ளிலிருந்து பாயும் கற்கள் போய் எட்டாதளவு உசரம். கொத்தித் திங்க ஏராளம் சிறு மீன்கள் உள்ள மொட்டையன் குளம் அருகில். குளத்துக்கு அந்தப் பக்கம் கதிர் மணிகள் சூடி நிற்கும் வயல் ஏலா. வாழைத் தோட்டங்கள்… புட்டான்கள் துள்ளி நடக்கும் புல்வெளிகள்… எங்கும் பசுமை, குளிர்ச்சி.

வாப்பா ஊரில் இல்லாத ஒரு நாள் மதியம் வரூது வரட்டு என்ற துணிச்சலில் அணில் போல் மூதாட்டி மரத்தில் பற்றிப் பிடிச்சு ஏறிச் சிகரத்திற்குப் போய்விட்டான். எங்குத் திரும்பினாலும் கூடுகள். அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மரத்தின் வானளவு உசரம். உலகமே மூதாட்டி மரத்தின் கீழேதான். எல்லோரும் மிக உயரமான கோபுரம் என்று பீத்திக் கொண்டு நடந்த சவேரியார் கோயில் மணிக் கோபுரம் மூதாட்டி மரத்தின் இடுப்பளவுக்குக்கூட இல்லை. வட்டவிளை அண்டி ஆப்பீஸ் புகைக் குழாயிலிருந்து குபுகுபுவென்று மேல் நோக்கி வெளியேறும் கரும்புகைகூட மரத்தின் கீழ்மட்டம்தான். ஓட்டாப்பீஸ் புகைக் குழாயும் முட்டளவுக்குத்தான் வரும். மகேந்திரகிரி மலை உச்சியும் விண்வெளி ஆய்வு மையக் கட்டிடங்களும் தீப்பெட்டிப் போல் தெரிகிறது.

இப்போது நிற்பது, உலகத்தில் மிக உயரமான, பள்ளிக்கூடத்தில் சொல்லித் தந்த இமயமலையைவிடவும் உயரமான இடத்தில் நிற்பதாக அவனுக்குத் தோன்றியது. தாழே இறங்கிவர மனமில்லை. ஆகாசத்திற்கும் மர உச்சிக்கும் இடையே நகரும் மேகப் பஞ்சுகளைத் தொட்டுப் பிடித்து நசுக்க ஆசை. முடியுமானால், வானத்தைத் தடவிப் பார்க்க வேண்டும். சூரியன் நின்று பற்றி எரியும் வானத்தைத் தொட்டால் கை பொள்ளிப் போகுமா?

கைக்கு எட்டாமல் விலகிப் போகும் வெண்மேகங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கையில் மேகத்திலிருந்து பறந்து வந்த ஒரு பாம்பு ஒரு கொம்பிலிருந்து வேறு ஒரு கொம்புக்குப் பறந்து போனதைக் கண்டுவிட்டான். பறக்கும் பாம்புகள் கொத்துவது கண்களில். வானத்தில் இருக்கும் அல்லாஹுவின் வீட்டைப் பார்த்து விடுவானென்று அல்லாஹு ஏவிவிட்ட பறக்கும் பாம்புகள். தைரியம் சோர்ந்துவிட்டது. பாம்பின் கண்ணில் படாமல் வேகமாக இறங்கினான்.

பறக்கும் பாம்பைக் கண்டதாக சாலி மாமா கடைக்கு முன் கூடி நின்றவர்களிடம் பதற்றத்தோடு சொன்னான். ராஜபடம் சமது காக்கா சொன்னார் – நீ பாத்தது பாம்பல்லப்பா. பண்டு காலங்களில் நாட்டைப் பிடிக்க மன்னர்களுக்கிடையில் நடந்த சண்டையில் பிடிப்பட்ட எதிரிகளை இந்த மரத்தில்தான் தூக்கிக் கொன்றார்கள். துடிதுடிச்சு மாண்ட அந்தப் போர் வீரர்களுடைய ஆத்மாக்கள் குடியிருக்கக் கூடு கிட்டாமல் அந்தரத்தில் அலையுது.

கேட்டபோது திகிலடைந்து நின்றான். அஜ்மீர் குவாஜா முஹித்தீன் ஜிஸ்தி அவர்களுடைய தர்காவிலுள்ள பட்டு நூல் கையில் கட்டியிருந்ததினால் தப்பினேன் என்று ஆறுதலைடந்தான். நாட்டு விடுதலைக்காகப் போராடிய வீரர்களை வெள்ளையன் தூக்கிலிட்டுக் கொன்றது பற்றி பாடநூலில் படித்த நினைவு. கட்டபொம்மனையும் கயத்தாறில் வைத்து ஒரு மரத்திலல்லவா தூக்கிலிட்டுக் கொன்றார்கள் மாபாவிகள்.

பெத்தாம்மா(பாட்டி)விடம் பய்யக் கேட்டான் – மூதாட்டி மரத்துல ரொம்பப் பேரைத் தூக்கில் போட்டுக் கொண்ணுப்போட்டாங்களோ…?

ஓமப்பா… அந்த மரத்தடியில் வச்சுதான் பாண்டி நாட்டுப் படைகளுக்கும் மலையாளத்துப் படைகளுக்கும் பெரும் சண்டை நடந்தது. பாண்டிப் படையிலுள்ள பெரிய தைரிசாலியான மொட்டையன் செத்தது இந்தச் சண்டையிலேதான். ஒரு சிற்றறுதலி தாய்க்கு அவன் ஒரே புள்ளை. மலையாளத்துப் படை அவனைச் சதியில் வெட்டிக் கொண்ணுப் போட்டது. கண்டமானம் சனங்கோ செத்து விழுந்த சண்டைக்களத்தில் தேடி மகனுக்க உருக்குலைந்த உடலை எடுத்து வந்து குளத்தங்கரையில் அடக்கம் செய்துவிட்டு மரமூட்டுல மகனுக்குக் காவலிருந்தாள். தினமும் கருக்கலில், தலைமாட்டில் விளக்கு வச்சு மகன் உறங்கும் அறைக்கு வெளிச்சம் காட்டினாள். தூணும் துணையுமில்லாமல் எங்க போவ? ஒற்றைத்தடி மரத்து மூட்டிலே சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். நாலா பக்கமும் போய் இரந்து பொறுக்கி மரத்தடியில் அடுப்புக் கல் வைத்துக் காச்சிக் கலக்கிக் குடிச்சிட்டு அங்கேயே மகன் உறங்கும் குழி அறையைப் பார்த்துக்கொண்டே அழுதழுது கிடந்தாள். பறந்து போன காலத்தின் காற்றேற்று மூதாட்டியாய் அங்குக் கிடந்து மாண்டு போனாள். மூதாட்டியை அந்த மரத்துக்கு உரமாக அதன் மூட்டுலேயே குழியெடுத்துப் புதைச்சாங்க.

சில நேரம் மொட்டையன் குளந்தங்கரையில் விளக்கு வெட்டம் தெரியும். நிலாவுள்ள ராக்காலங்களில் வெள்ளைச் சேலை உடுத்திய ஒரு பெண்ணின் நடமாட்டம் மூதாட்டி மரத்தடியில் கண்டவர்கள் பயந்து போய் வெளியேவிடல்ல. பாண்டி மாடுகளை ராக்காலங்களில் ஆறாலு முட்டுச் சந்தைக்கு நடத்திக்கொண்டு போவோர் மூதாட்டி மரத்தைப் பார்க்காமலே நடந்துவிடுவார்கள். பார்த்தால் சுண்ணாம்புக் கேட்பாள். இருட்டுவதற்குமுன் சாலி மாமா கடையை அடைத்துவிடுவது அவள் சுண்ணாம்புக் கேட்பாள் என்றல்ல. அவருக்கு மாலைக்கண்ணு. ராஜபடம் சமது காக்கா அவருடைய கையைப் பிடித்து வீட்டுப்படி ஏற்றிவிடுவார்.

மொட்டையன் குளத்துப் பாசனத்தில் விளையும் வயலுகளில் நடவு நடக்கும் போதும் களை பறிக்கும் போதும் அறுவடை செய்யும் போதும் மூதாட்டி மரத்தின் கிளைகளில் தொட்டில்கள் தொங்கும். அழுகைச் சத்தம் கேட்டதும் பெற்றவளுடைய முலையில் பால் சுரந்து வலி எடுக்கும். ஓடி வந்து பிள்ளையை எடுத்து மரத்தில் சாய்ந்து கொண்டு பாலூட்டுவாள். அந்த மரத்தடியிலிருந்து தாய்ப்பால் குடித்தவர்கள், குட்டியும் கம்பும் விளையாடியவர்கள், கக்கு விளையாடியவர்கள், வறுவேல் புலவரிடமிருந்து கதை கேட்டவர்கள்… எல்லாம் நகரங்களில் அதிகாரிகளாக, தொழில் அதிபர்களாக அடுக்குமாடி வீடுகளில் சொகுசாக… அவர்களுக்கு, குட்டியும் கம்பும் கக்கும் விளையாடத் தெரியாதத் தொலைக்காட்சி முன் சீரியல்கள் பார்க்க உட்கார்ந்து கொண்டிருக்கும் பிள்ளைகள்.

ஊரில் அய்ந்தாவது வகுப்புப் படித்துக்கொண்டிருந்த அரசுப் பள்ளியில், ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் தனியார் மெட்ரிக்குலேசன் ஸ்கூல் வந்த பிறகு, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்தது. மேற்கூரை வேயாமல் பள்ளிச்சுவர் மழையில் நனைந்து பொதுமிப் போயிருந்தது. ஆங்காங்கே விள்ளல்கள். வெயில் காலங்களில் மூதாட்டி மரநிழலில் வகுப்புகள் நடக்கும். பொசுக்கும் வெயிலிலும் மரத்தடி நச்செனு இருக்கும். ஆம்பல் பூவைப் பார்த்துக்கொண்டே மனப்பாடம் செய்வார்கள். அங்கு வீசும் காற்றுக்குத் தனிச் சுகம். சித்திரை மாதக் கத்திரி வெயில் அடிக்கையில் அங்குள்ள மக்கள் துண்டு விரித்தும் கயிற்றுக் கட்டில் போட்டும் உறங்குவார்கள்.

திடீரென அரசுப் பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் பனை மட்டையில் கிரிக்கெட் பாட் செய்து தன்னந்தனியாக மூதாட்டி மரத்தடியில் நின்று பந்தை அடிக்கும் பாவனையில் மட்டையை ஓங்கிக்கொண்டிருந்தான். சீருடை அணிந்து கொண்டு ஸ்கூலுக்குப் போய்வந்த பிள்ளைகள் உம்மாவை மம்மி என்று கூப்பிடுவதைக் கேட்டுத் தாய் மனங்கள் குளிர்ந்தது.

‘அந்த எழவு பள்ளிக்கூடத்தில் மக்களுக்கு என்னதான் சொல்லிக் கொடுத்தானுவோ…?’ அரசுப் பள்ளிக்குத் திட்டுக்கு மேல் திட்டு.

தனிமை வேதனையை மறப்பதற்காக மூதாட்டி மர முகட்டில் ஏறி நின்று உலகத்தைப் பார்ப்பான். பறவைகள் காலி செய்துவிட்ட மரக்கிளைகள். காலியான கூடுகள். மரமுகட்டில் ஏறி நின்று பார்த்தால், தனியார் ஆங்கில ஸ்கூல் தெரியும். பச்சையும் வெள்ளையும் சீருடை அணிந்த மாணவர்கள். அண்டி ஆப்பீஸில் வேலைநிறுத்தமானதால் கழாயிலிருந்து கரும்புகை வரவில்லை. மகேந்திரகிரி மலை முகடும் அங்குள்ள விண்வெளி ஆய்வு மையக் கட்டிடங்களும் தீப்பெட்டிகள்.

மர உச்சியில் நின்றுக்கொண்டிருக்கையில் தொலைவில் தெரிந்த காங்கிரஸ் கொடி, ஒரு சுதந்திர தினத்தை நினைவுபடுத்தியது. மூவண்ணத் தேசியக் கொடியைப் பிடித்துக்கொண்டு மாணவர்கள் ஊர்வலம் போய்விட்டு ஒன்றுகூடுவது மரச்சுவட்டில். அங்கு இனிப்பு வழங்கப்படும். நாங்கா முட்டாய்! மர நிழலில் மாணவர்களை அமைதியாக உட்காரச் சொல்லிவிட்டுத் தலைமை ஆசிரியர் சொற்பொழிவாற்றினார்-

‘இந்த மாத்தில் ஏறி மறைந்து கொண்டுதான் இது வழியாகக் குதிரை வண்டியில் போன வெள்ளைக்கார உயர் அதிகாரியை ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் சுட்டுக் கொன்றான். சில தேச விடுதலை வீரர்களுக்கு இந்த மரம் புகலிடமாகவே இருந்தது. நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கின்ற பல வீர வரலாறுகளைத் தனக்குள் ஒதுக்கிக்கொண்டிருக்கும் இந்த மரத்தின் அணைப்பில் நாம் நாட்டு விடுதலை தினத்தைக் கொண்டாடுகிறோம்…’

கை தட்டி அனைவரும் ஜெய்ஹிந்த் என்றோம்.

ஒரு அரசாங்க ஜீப் மர நிழலில் வந்து நின்றதைப் பார்த்துப் பயந்து போய் கீழே இறங்கி வந்தான். ஜீப்பிலிருந்து இறங்கியவர்களில் ஒருவருடைய கையில் நில அளவு டேப் இருந்தது. ஜீப்பையும் ஜீப்பிலிருந்து இறங்கியவர்களையும் புரியாமையோடு பார்த்துக்கொண்டிருக்கையில் வாப்பா அவனுடைய பெயரைச் சொல்லி உரக்கக் கூப்பிட்டார். ஒரே ஓட்டம் வாப்பா கூப்பிட்டது எதெற்கென்று கேட்க.

‘குளிச்சியாடா?’ வாப்பா கேட்டார்.

இல்லையென்றபோது மொட்டையன் குளத்தில் ஒரு முங்குப் போட்டு வரச் சொன்னார். உம்மா காலையில் குளத்துக் கல்லில் அடித்துக் துவைத்த அவனுடைய கல்சானும் கோடு போட்ட சட்டையும் அசை கயிற்றில் காய்ந்துகொண்டிருந்தன. வாப்பாவோடு மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தவரை முன்பு பார்த்ததில்லை.

அழுக்கு கல்சானை உருவிக் கரையில் போட்டுவிட்டுக் குளத்துக்குள் ஒரே குதிகுதித்துக் குளத்தை ஒரு கலக்குக் கலக்கிவிட்ட அலையில் ஆம்பல் இலைகளும் பூக்களும் நடனமாடியது இரசனையாக இருந்தது. முங்குப் போட்டுக் குளம் கலக்கிவிட்டு வந்த அவனுடைய அழுக்குக் கல்சானை உரிஞ்சுப் போட்டுவிட்டு அசை கயிற்றில் கிடக்கும் கல்சானையும் சட்டையும் போட்டுக்கொள்ள வாப்பா சொன்னபடி செய்தான்.

‘இந்த மாமா’கூட போ… ஒனக்குப் புதுக் கல்சானும் சட்டையும் வாண்டித் தருவாரு. மூணு வேளை சாப்பாடு. மாச சம்பளம்.

வாப்பா சொன்னதை மீற முடியவில்லை.

மூதாட்டி மரத்தையும் மொட்டையன் குளத்தையும் விட்டுப் பிரிய மனமில்லை. வெளிநாட்டுப் பறவைகளையும் அதன் கீச்கீச் இசையையும். நினைத்துப் பார்த்தான்.

ஹோட்டல் பாரடைசில் வேலைப் பளுவிற்கிடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஒரு தபால் அட்டை எடுத்து உம்மா, வாப்பா, தங்கை, தம்பிகளின் நலம் கேட்டான். பெருநாளுக்கு ஊருக்கு வருவதாக எழுதிய வரிக்குக் கீழே எழுதினான். மூதாட்டி மரக்கிளைகளில் கூடு கட்ட வரும் பறவைகளைக் கேட்டாபிள் வச்சு அடிச்சிட வெள்ளச்சாமி வந்தால் விரட்டுங்கள். ஒண்ணரைக் கண்ணன் வந்தால் தள்ளை வரால் களைச் சூண்டைப் போட்டுப் பிடிக்க உடாதீங்க. இப்படிக்கு மகன்.

மூதாட்டி மரத்தின் உசரத்தைப் பற்றியும் ஆம்பல் பூக்கள் மலர்ந்து நிற்கும் மொட்டையன் குளத்தில் வரால்கள் ஓடுவதையும் குளக் கோழிகள் நீந்தும் அழகைப் பற்றியும் நாராயணனிடம் சொன்னபோது, பெருநாளுக்கு ஊருக்குப் போகும்போது நானும் உன்கூட வாறண்டேய் என்றான் நாராயணன்.

பெருநாள் நெருங்கியதும் இரவு ஹோட்டலில் மேல் மாடிக்குச் செல்லும் ஏணிப்படிக்குக் கீழ் உள்ள இடுக்கில் படுக்கச் செல்லும்போது ஒரு தபால் அட்டை எடுத்து, வாப்பாவுக்கு நலம் கேட்டு எழுதிவிட்டு, பெருநாளைக்கு என்னுடன் டேபிள் க்ளீன் செய்யும் நாராயணன் நம்ம ஊரைப் பார்க்க வருவான். பிரியாணி சாப்பிட வந்த ஒரு சார் குடிச்சிட்டு மீதி வச்ச பெப்சியில் நாராயணன் எனக்கு ஒரு சொட்டு தந்தான். ருசியாயிருந்தது வாப்பா… எழுதினான்.

பெருநாள் பிறை கண்ட செய்தி கிடைக்கும் போது இரவு 9 மணியாகிவிட்டதால் ஊர் வழியாகச் செல்லும் பஸ் இல்லை. முதலாளி கொடுத்த சம்பளக் காசில் தம்பிக்கு ஒரு பிளாஸ்டிக் வாச்சும் துப்பாக்கியும், தங்கச்சிக்குக் கைக்கு மும்மூணு குப்பி வளையல்கள், சாலி மாமாவுடைய கடையிலிருந்து ஒரு சின்னக் குப்பி பெப்சி வாங்கித் தங்கச்சிக்கும் தம்பிக்கும் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் தானும் குடிப்பதற்காக 5 ரூபாய் தனியாக எடுத்து வைத்திருந்தான்.

பெருநாள் தொழுகை காலை 9 மணிக்கு நடக்குமென்பதால் அதிகாலை முதல் பஸ் ஏறி நாராயணனோடு வந்திறங்கியபோது சூரிய வெளிச்சமிருந்தும் ஊர் மாறிப் போச்சோ என்று அவனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஒரு மேட்டில் நிற்பதாக அவனுக்குத் தோன்றியது. பரக்கப் பரக்க முழிப்பதைக் கண்டு நாராயணன் கேட்டான்-

‘எடம் மாறிப் போச்சோடேய்…?’

அவன் பதில் பேசாமல் தவறவிட்ட எதையோ தேடுவதைப் போல் காணப்பட்டதால், நாராயணன் மீண்டும் கேட்டான்.

‘என்ன டேய்?’

பதில் சொல்லவில்லை. மண்போட்டுச் சற்று உயரமாகவும் அகலமாகவும் போடப்பட்டிருந்த தார் போடாத தங்க நாற்கரச் சாலையோரத்தில் ஒரு யானை செத்து முறண்டு கிடப்பது பார்வையில் பட்டது. அதன் வெட்டப்பட்ட தும்பிக்கையிலும் கைகால்களிலும் வேனல் காலங்களில் உம்மா தொட்டில் கட்டி இளசுகளைத் தாலாட்டி உறக்காட்டியிருந்தாள்.

‘காட்டித்தரேனு சொன்ன மூதாட்டி மரம் எங்கே?’ அதற்கும் அவன் பதிலளிக்கவில்லை.

‘ஏன்டேய் ஒண்ணும் பேசாம நிக்கிறா? குளம் எங்கடேய் காட்டு?’

இப்போது அவன் நாராயணனைப் பார்த்தான். அவன் கண்கள் கொட்டுவதற்காகச் சிவந்திருந்தது. தங்கச்சிக்காக வாங்கிய வளையல்களும் தம்பிக்காக வாங்கிய பிளாஸ்டிக் வாச்சும் துப்பாக்கியும் வைத்திருந்த பொட்டலம் அவன் கையிலிருந்து நழுவி விழுந்தது.

‘நான் ஒங்கிட்ட பொய் சொன்னேன் டேய். இங்கே மூதாட்டி மரமும் இல்லை; ஆம்பல் குளமும் இல்லை. நீ உன் ஊருக்கு இங்கிருந்து பஸ் ஏறிப் போய்டு’.


தோப்பில் முஹம்மது மீரான் (1944 – 2019) – ஒரு கடலோரக் கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள் முழுத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இக்கதையைச் சிறப்பிதழில் வெளியிட அனுமதியளித்த காலச்சுவடு பதிப்பகத்துக்கு நன்றி.

3 COMMENTS

  1. விரைவை நோக்கிய மனித சமூகத்தின் ஒவ்வொரு நகர்வும் வாழ்வின் ஆசுவாசத்தை பின்னுக்கிழுத்து, நினைவுகளுக்கும் நிறைவுக்குமான வாசல்களை அடைத்து விட்டன. ஜீவனின் பிரதான அம்சமான பயணங்களும் விதிவிலக்கின்றி, காணாமல் போன புளியமர நிழல் தேனீர் கடைகளுடன் மறைந்து விட்டன. ஒரு கடலோர கிராமத்தின் கதையுடன் மறந்து விட்டிருந்த மீரானை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

  2. தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் சிறுகதை ‘அடையாளங்கள்’ வெட்டப்பட்ட மூதாட்டி மரம், தூர்க்கப்பட்ட ஆம்பல் குளம் இன்றைய சூழலில் அன்றாடம் மாறும் யதார்த்தமான வாழ்வியல்.. அருமையான கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.