அந்த மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை

குலன் எழுதியுள்ள மற்ற நாவல்களை விடவும் ரோகிகள் மீது எனக்குத் தீராத மோகம். அதற்குச் சரியான காரணம் என்னவென்று பலநாட்கள் யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அதற்குச் சரியான காரணம் மனதிற்குப் பிடிபடவில்லை. ஒருவேளை அடிப்படையில் இருத்தலியம் மீதான ஆர்வம் என்று கூட முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த முன் முடிவுகள் அனைத்தும் ஒரு இரவில் நடந்த சின்ன அனுபவத்தில் காணாமல் போயிற்று. எனது வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத இரவு ஒன்றில் எனது அறையில் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று போன மின்சாரம் மனதில் அச்சத்தைத் தந்துவிட்டுப் போயிற்று. உடனே எழுந்து அலைபேசியை எடுக்கக் கூட அச்சமாக இருந்தது. சுற்றி நிற்கும் இருட்டில் புதிய புதிய மனித உருவங்கள் தெரிவது மாதிரியான பயம் வந்து கவ்வியது. இன்னொரு பக்கம் அந்த இருட்டில் காண இயலாத சில புதிய புதிய வடிவங்களைப் பார்ப்பது மாதிரியான இன்னொரு விதமான தோற்ற மயக்கம். சற்று நேரம் இந்த இரண்டு காட்சி பிம்பங்களும் மாறி மாறி என்னுள் உழன்று கொண்டிருந்தது. நேரம் போகப் போக அச்சம் என்னுள்ளே இருந்து நழுவி வெளியேறிக் கொண்டிருந்தது. அதுவரை கருமை நிறத்தில் கண்ணுக்கு தெரிந்த இருட்டு சற்று விலகி அறையில் இருக்கும் பொருட்களின் வடிவம் ஓரளவுக்கு கண்ணுக்கு புலப்பட ஆரம்பித்தது. தற்போது அச்சம் எதுவும் மனதில் எழவில்லை. அதற்குப் பதிலாக ஒருவித பரவச நிலை என்னுள் வரத் தொடங்கியது. இருட்டும் அச்சமும் தற்போது இருக்கும் பரவச நிலையும் என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியது. ஆமாம்! உண்மையில் நான் யார். எனக்கும் இந்த வீட்டிலிருக்கும் இந்த அறைக்கும் இந்த புத்தங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. இந்த அகால இருட்டில் நான் இங்கு என்ன தான் செய்து கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட என்னிலிருந்தே நான் பிரிந்து நிற்கும் ஒருவித அதிர்ச்சியான பரவச நிலையா இது. எப்போதாவது எனக்கு சில சமயங்களில் இப்படி நடக்கும் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது சில விநாடிகளுக்கு மேல் நிலைத்தது கிடையாது. இந்த இருட்டில் அது இன்னும் சில விநாடிகளுக்கு மேல் என்னுள் நின்று போனது ஆச்சரியமாக இருந்தது. அச்ச உணர்வின் பதட்டத்தில் கூட இத்தகைய உணர்வு வந்திருக்கலாம் என்று தோன்றியது. இவை அனைத்தையும் விட இந்த அச்சம் வரும் சமயங்களில் உடலே எனக்கு பெரிய வேதனையாக முன்னே நிற்கிறது என்கிற உண்மை சற்று புலப்படத் தொடங்கியது. மீண்டும் மின்சாரம் வந்து நின்றது. தற்போது இந்த திடீர் வெளிச்சம் சற்று எரிச்சல் உணர்வைத் தந்தது. மீண்டும் மனம் இருட்டுக்கும் அந்த பரவச நிலைக்கும் ஏங்கியது. அதற்கு வாய்ப்புகள் இல்லை என்றும் இது நிதர்சனம் என்றும் மனம் புரிந்து கொள்ள ஆரம்பித்து. எழுந்து நின்று பிரகாசமான விளக்கு வெளிச்சத்தில் நான் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த உலகிற்கு எனக்கும் உள்ள அத்தனை தொடர்பும் இந்த உடல் மட்டும் தானா? உடலை மீறி மனிதனுக்கு உண்மையில் என்னதான் இருக்கிறது? உடல் ஒரு திடமான பொருள் அதன் பன்மை வடிவங்கள் தான் வாழ்க்கையின் நீட்சி. உடல் எங்கு தனது ஆற்றலை இழக்கிறதோ அங்கே நமக்கும் உலகிற்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. சரி இதில் மனதை உடல் சுமந்து அலைகிறது அல்லது உடல் மனதை சுமந்து அலைகிறது இல்லை இரண்டு ஒன்றை நேர்கோட்டு விகிதாச்சாரம் முறையில் சமன் செய்து கொள்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. எது எப்படியாக இருந்தாலும் மனித வாழ்வில் உடல் மட்டும் நமக்கு இங்கு அடிப்படை அலகு. அதன் மீது நாம் நிகழ்த்தும் வன்முறை அல்லது அதற்காக அதுவாக நிகழ்த்திக் கொள்ளும் வன்முறை இவை இரண்டும் தான் நமது வாழ்வின் உண்மையான துயரங்கள். எனக்குத் தெரிந்து உடல் அடையும் துயரத்தைத் தவிர வேறெந்த துயரங்களுக்கும் மனிதனுக்கு அதிகமான வலிகளைத் தருவதில்லை. இதைத்தான் நகுலன் தனது ரோகிகள் நாவலில் முன்வைக்கும் முக்கியமான கேள்வி. அவர் அதை ஒரு சித்தனின் மனநிலையில் தான் முன் வைக்கிறார்.

//மனிதன்? மகத்தானவன்? சிந்திப்பவன்.?
உணர்ச்சிவயப்படுவன்? காரியவாதி

ஆனால் இப்போது அவனுக்கு ஒன்று தெரிந்தது
அவன் கேவலம்

மலஜல விஸர்ஜனம் செய்யும் ஜந்து.

இது தடைப்பட்டுவிட்டால் அவன் மற்ற எதுவாக இருந்தாலும் என்ன பிரயோஜனம்.//

இது ரோகிகளில் நாவலில் வரும் 45 வயது பிரம்மச்சாரி மருத்துவமனையில் தனது உடல்படும் வேதனையில் புலம்பும் வார்த்தைகளாக நகுலன் எழுதியுள்ளார் (இது நகுலனின் உண்மை அனுபவம்)

இன்னொரு கேள்வியும் நகுலன் நாவலில் முன் வைக்கிறார் அது
//”சரீர வேதனைக்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?” //

ஆமாம் உண்மையில் உங்கள் சரீரம் வலி கண்டால் காலம் பூஜ்யம் மட்டும். காலம் என்பதை மனது மட்டும்தான் சுமந்து அலைகிறது உடல் ஒருபோதும் காலத்தைச் சுமப்பது கிடையாது.

ரோகிகள் நாவல் வயிற்றில் தாளாத வலி கண்ட ஒரு 45 பிரம்மச்சாரியின் மருத்துவமனை அனுபவம் என்றோ அவன் தன் வலியுடன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றிய கதைகள் என்றும் ஒரு வாசகன் முடிவு செய்து கொண்டால் அவனுக்கு இந்த நீள்கதை அல்லது குறுநாவல் நிச்சயம் எந்தவிதமான உள்ளார்ந்த சஞ்சலமும் (அனுபவங்கள் அல்ல) தராது என்று உறுதியாக கூறுவேன்.

இந்த குறுநாவல் வழியாக (மன்னிக்கவும் நீள் கதை என்றும் கூட அவர் அவர் வசதிக்கு அழைத்துக் கொள்ளலாம்) சொல்ல முற்படுவது உடல் ஏன் மனிதனுக்கு மாபெரும் சிக்கலாக என்றென்றும் இருக்கிறது என்கிற தத்துவார்த்த உரையாடல் வடிவத்தை. கொஞ்சம் வார்த்தைகள் மாற்றிப் போட்டு விளையாடிய ஒரு சிக்கலான சுவாரஸ்யம் இல்லாத விளையாட்டு இந்த குறு நாவல்.

நகுலன் நாவலின் முதலிலேயே 45 பிரம்மச்சாரி எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க போகிறான் என்றும் அவன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் யார் யாரென்று எல்லாம் குறிப்பு தந்து விடுகிறார். ஒவ்வொரு நாட்களும் வலியுடன் பிரம்மச்சாரிக்கு கழிகிறது. உடல் தரும் வலி அவனுக்கு மாபெரும் அகக் கொந்தளிப்புகளை தருகிறது. இந்த அகக் கொந்தளிப்பு வழியாக அவன் புற உலகின் மீதான தனது பார்வை பதிவுகளை இந்த நாட்களில் பதிவு செய்கிறான். மருத்துவமனை அதில் இருக்கும் நர்ஸ்கள் அவனை அப்பென்டிஸைட்டி என்று அழைக்கும் மருத்துவர். அவனது அம்மா, அப்பா உறவுப்பெண் லட்சுமி, நண்பர் கேசவ மாதவன் என்றெல்லாம் மனிதர்கள் வந்து போகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் வந்து தான் போகிறார்கள். மற்றபடி 45 பிரம்மச்சாரி தான் இந்த குறுநாவலில் ஓயாமல் அகத்தின் வழியாகப் பேசிக் கொண்டிக்கிறான். அதற்குக் காரணம் அவனுக்கே தன் உடல் வலி துயரம் தருகிறது. மற்றவர்களுக்கு அல்ல. நகுலன் இங்கு குறிப்பிட்டு சொல்வது நீங்கள் உங்களுக்காக மட்டும் இருக்க முடியும். நீங்கள் என்றால் உங்கள் உடல் தான் அது தான் நீங்கள் அதன் வழியாக நீங்கள் புறவுலகின் அத்தனை காட்சிகளையும் பார்க்கலாம், ரசிக்கலாம் ஆனால் எப்போதும் நீங்கள் மட்டும் உங்கள் உடல் வடிவத்தில் உங்களுடன் இருப்பீர்கள்.

//நான் எப்பொழுதும் என்னுடன் நடந்து கொண்டிருந்திருக்கிறேன் – நடந்து கொண்டிருக்கிறேன்//

நகுலன் போகிற போக்கில் சில இடங்களில் சொல்லி இருக்கும் வார்த்தைகள் சில சமயங்களில் தீர்க்கதரிசனமாகத் தெரிகிறது.
//”இந்தத் தலைமுறைக்குப் பொறுப்பாக ஒரு காரியத்தை செய்யவோ, கனமான அனுபவங்களைத் தாங்கவோ, தீவிரமான ஆசைகளையோ அபிலாஷைகளையோ தாங்க வலு இல்லை. காற்றடிக்கிற பக்கத்தில் போவது தான் வாழ்க்கை என்று ஒரு இரண்டுங்கெட்டான் வர்க்கம்.”//

உண்மைதானே காற்றடிக்கிற பக்கமாக வாழ்வும் அதன் துயரமான இவ்வுடலும் என்றென்றும் நகர்ந்துப் போகிறது.

நகுலன் தனது வழக்கமான எழுத்து முறைகளில் இதிலும் மாற்றி மாற்றி ரமணர், கம்யூனிஸ்ட்கள், மதம், பிரார்த்தனை என்றெல்லாம் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் நமக்கு ஒரு வேடிக்கையான கலை விளையாட்டு ஒன்றைத் தனது சொற்களின் வழியாக நிகழ்த்துகிறார்.

கடைசியாக 45 வயது பிரம்மச்சாரியின் உடல்வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. காலத்திற்கும் உடலுக்கும் இடையேயான தொடர்பு புள்ளி மீண்டும் அங்கு தொடங்கிவிடுகிறது. இங்கு உடல்நலம் பெற்ற நவீனன் என்கிற எழுத்தாளன் ஒருவன் மீண்டும் சிருஷ்டி கொள்கிறான்.

நவீனன் டயரி பகுதியில் கூட நகுலன் தனது சமகால இலக்கிய சஞ்சலங்கள், சுசீலா என்கிற கற்பனை பிம்பம், தனது வாழ்வின் துயரங்களை நமக்கு சொல்லிவிடுகிறார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நவீனன் டயரியிலிருந்து வரும் குறிப்புகள் வழியாக இந்த குறுநாவல் ஏன் எழுதப்படுகிறது என்பதை நாம் சரியாக யூகித்துக் கொள்ளலாம். நகுலனுக்கு தனக்கு ஏற்படும் அனுபவங்களில் மீது மிகப்பெரிய ஒரு மிரட்சி இருந்திருக்க வேண்டும் அதே நேரத்தில் அத்தகைய அனுபவங்களை வெறும் புற அனுபவங்களாக அவர் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. அவர் அதைத் தனது அகத்தின் வழியாக சொற்களை சீட்டுக் கட்டுகளாக மாற்றிப் போட்டு நிகழ்த்தும் ஒரு விளையாட்டாகத் தான் நமக்கு நிகழ்த்திக் காட்டுகிறார்.

//”எந்த மனிதன் வாழ்விலும் உச்சகட்டங்கள் அவன் பிறப்பதும் அவன் இறப்பதும் தான். ஆனால் இடையில் தான் வாழ்வு சலிக்கிறது. இந்தச் சலனத்தைத்தான் ஒரு எழுத்தாளன் சித்திரிக்கிறான்.” //

இதைத்தான் நகுலன் இந்த குறுநாவல் வடிவில் சொல்ல முயல்கிறார். வாழ்வின் கணங்களில் சலிப்பு எப்போதும் உடன் இருக்கிறது. இந்தச் சலிப்புடன் உடல் ஒரு சுமையாக மனிதனுக்கு சில சமயங்களில் மாறுகிறது. அத்தகைய கணங்களை எதிர்கொள்ளும் மனிதன் கால ஓட்டத்திலிருந்து புறஉலகால் தள்ளியே வைக்கப்படுகிறான். அவன் தன் உடலின் சுமை குறைந்தால் மட்டும் வாழ்வின் சலிப்புக்கு மீண்டும் திரும்பிட முடியும் இல்லையென்றால் உடல் என்கிற திடப்பொருள் காலத்திற்கான தனது தொடர்பை நிறுத்திவிடும். ஆனால் எப்படிப் பார்த்தாலும் உடலும் வாழ்வும் சலிப்பு தான் அதை எதையேனும் கொண்டு நிரப்பிக் கொள்ளுங்கள் என்று டி.கே.துரைசாமி என்கிற நகுலன் நமக்கு அவரது எழுத்தின் வழியாக நேரிடையாக சொல்லித் தருகிறார். அந்த சொல்லித் தருவதை நகுலன் ஒருபோதும் நேரிடையான அர்த்தம் தரும் சொற்களில் செய்யவில்லை. அவருடன் நீங்கள் ஒரு விளையாட்டை விளையாட வேண்டும். அவருடன் மீண்டும் மீண்டும் நடத்திப் பார்க்கும் இந்த விளையாட்டு உங்களுக்கு தரும் திறப்புகள் ரகசியமானவை அவற்றை விளையாடிப் பாருங்கள் அப்போது அது உங்களுக்குப் புரியும்.

//இறகு உதிர்ந்து விட்டது
இல்லை
காடு கலைந்து விட்டது
காலம் கயிற்றரவு
உடல் நீ?//

இந்தக் கட்டுரைக்கு ஏன் மஞ்சள் நிறப் பூனையைக் காணவில்லை என்று தலைப்பு வைத்தேன் என்று நீங்கள் கேட்கலாம்.

//மஞ்சள் நிறப் பூனை
கடவுளைக் கண்டவர்கள்
நிலை பயின்றவர்கள்
சிந்திக்கத் தெரிந்தவர்கள்
இது ஒரு வரையறை
மனம் சூன்யமாதல்
அனைத்து அறன்
சங்கற்பங்கள்
எதிர்வழிப்பயணம்
உன்னில் ஒரு நெடும்பயணம் அருகில் இருக்கிறவர்கள்
வெகு தொலைவில் இருக்கிறார்கள் கால வீதியில் பதிந்த சுவடுகள் மறைந்த உருவங்கள்
நவீனன் சொன்னது//

எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு ஒரு புது அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளும் நகுலனின் இந்த விளையாட்டு எனக்கும் பிடித்திருக்கிறது. ரோகிகள் குறுநாவலில் மஞ்சள் நிறப் பூனைக்குட்டி வரவில்லை அது என் வீட்டிற்கும் வரவில்லை. அது நகுலனால் மட்டும் பார்க்கப்பட்ட பூனை. அதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இன்னும் இன்னும் நீங்கள் உங்களுக்குள் ஆழ்ந்து போக வேண்டும். ஒருவேளை அன்று உங்களுக்கு தெரியலாம் அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி. அதுவரை அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி காணவில்லை என்பதே நிதர்சனம்.

//அந்த மஞ்சள் நிறப் பூனை உன்னை விட்டுப் போனாலும் எங்கேயோ ஒரு இடத்தில் இருக்கத்தான் இருக்கிறது. இந்த நிச்சயம் இருந்தால் போதும் ஓம் என்று சொல்லவும் கற்றுக் கொள்ள வேண்டும். (ஆம் என்பதை அந்த நண்பன் ஓம் என்று உச்சரித்ததும் ஞாபகம் வருகிறது).//

நன்றி என்னுள் என்னை தேட வைத்து நகுலன் என்கிற கவிசித்தனுக்கு.

வாசிப்புக்கு உதவிய குறுநாவல்கள்:
ரோகிகள்,
அந்த மஞ்சள் நிறப் பூனை.

Previous articleநகுலனின் கேள்விகள் (வாக்குமூலம் நாவல்)
Next articleமனதின் ஒரு துளியிலிருந்து பிரபஞ்சத்தைச் சமப்படுத்துதல் :
க.விக்னேஸ்வரன்
தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ், நகுலன் நூற்றாண்டுச் சிறப்பிதழ், ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி 200 ஆவது ஆண்டுச் சிறப்பிதழ், கனலி நேர்காணல்கள் போன்ற நூல்களைத் தொகுத்துள்ளார்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments