அமைதி திரும்பும்

முன்பொரு காலத்தில் பெருங்கடல்கள், ஏராளமான காடுகள், அற்புதமான கண்டங்கள், துருவப் பகுதிகள், ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வானளாவிய கட்டிடங்களும் டிஜிட்டல் புரட்சிகளும் உருவாக்கிய நாகரிகங்கள் இருந்த அவ்வுலகம் இனி இல்லை. அந்த உலகம் ஒருபோதும் இனி இல்லை. இந்தக் கோளில் வாழ்ந்தவர்களுக்குத் தாங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை வாழ்க்கை தொடரும் என்ற சிந்தனை இருந்ததாகத் தோன்றுகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அவர்களது சமூகங்களைக் கடினமான நிலைகளில் இருந்து மிகவும் பண்பட்ட வாழ்க்கை முறைக்கு எல்லாவற்றையும் மாற்றியதானது நேரடியாகவோ மறைமுகமாகவோ அவர்களது கோளின் மரணத்திற்கும் மனித இனத்தின் அழிவிற்கும் வழிவகுத்தது. அவர்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அவர்களது சொந்த வாழ்வின் மீதும் அனுதினமும் அழிவை ஏற்படுத்தித் தண்டிக்கும் ஏராளமான சான்றுகள் இருந்தும்கூட அதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. இவை எல்லாம் கட்புலனாகாத விளைவுகள் என்ற வாதத்திற்குள் கிடந்தனர். நமது செயல்கள் ஒரு பேரழிவிற்குப் பலம் சேர்த்தாலும் நாம் செய்வதின் விளைவுகளை கணத்திற்கு கணம் பார்க்க இயலாதவர்களாய் இருக்கிறோம் என்பதையே இது காட்டுகிறது. கணத்திற்கு கணம் நாம் விளைவுகளைக் காணாததால், எந்தவொரு விளைவுகளுமே இல்லை என்றும் நினைக்கிறோம். இந்த வாதம்தான் புவிப் பேரழிவின் இறுதி நேரம் வரைக்கும் அதனுடன் தற்கொலை செய்வது போன்ற உறவினை மக்களை  பேண வைத்தது. மற்ற எல்லா உண்மைகளை விடவும் இதுதான் மிகவும் திடுக்கிட வைக்கிறது.

பூமி முழுவதற்குமான எங்களது பயணத்தில், இப்போது அமைதியாக உள்ள அதில், எங்களது கணக்கீட்டின்படி, இருபதாயிரம் ஆண்டுகளாகக் காடுகள் மீள வளர்வதும் கடல்கள் உருவாவதுமான அறிகுறிகளையும் தங்களது அந்திமக் காலத்தில் கடைசி மனித இனம் விட்டுச்சென்ற சிதறிய குறிப்புகள், முடிவுறாக் கதைகளில் கண்டெடுத்தோம். அவர்களது குறிப்புகளிலிருந்து அவர்களது கடவுளர்கள் வெகு காலத்திற்கு முன்பே இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இறுதிக் காலத்தில் கடவுளின் மரணத்தை அறிவித்துவிட்டு அவர்கள் அரியணை ஏறினர். முடிவுகளோ அருவெறுக்கத்தக்கவை ஆக இருந்தன. ஒருவேளை கடவுளாக இருப்பதைவிட கடவுளைக் கொல்வதோ அல்லது அரியணையிலிருந்து கீழிறக்குவதோ எளிதான செயலாக இருக்கலாம். பூமியின் கடவுளராக மனித இனத்தின் இறுதிப் பேரழிவை அவர்கள் நடத்தினர். இதில் புதிரானது என்னவென்றால், அழிவின் இறுதி நாள் வரைகூட பல்லாண்டுகளாக அவர்கள் எதைச் செய்து கொண்டிருந்தார்களோ அதையே தொடர்ந்து செய்தனர் என்பதுதான். நாள்தோறும் கண் எதிரே வரும் அழிவைத் தடுக்கவோ தவிர்க்கவோ தங்களது சிந்தனைகளையோ நடத்தைகளையோ மாற்றுவதற்கு அவர்கள் கிஞ்சித்தும் முயற்சிக்கவில்லை. உண்மையில் மனித இனத்தின் இறுதித் தற்கொலை என்பது, கடைசி நாட்களில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளான நகரங்கள் நீரில் மூழ்குதல், காற்று விஷமடைதல், அணுகுண்டுகள் வெடிக்கச் செய்தல் போன்றவற்றால் அல்லாமல் தன்னால் மாற்ற இயலாது என நூற்றாண்டுகளாய் ஏற்றுக் கொண்ட ஓரினத்தின் அபாயகரமான நிலையாலேயே உருவானது. இதிலாவது அவர்கள் முரண்பாடுகளற்று இருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் சிறிது சிறிதாக அழிந்தனர். தங்களைத் தாங்களே கொன்றழித்தனர் என்பதையும் அது அவர்களை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை என்பதும் புலனாகிறது. இந்தப் பேரண்டம் முழுவதும் நாம் சந்தித்த உயிரின அழிவுகளில் இதுவே சாகசங்கள் எதுவுமற்ற துயரமானதாக இருக்கும்.

கடைசி தனிமை

ஒரு காலத்தில் கூரான முனைகள் மட்டுமே நீருக்கு மேல் தெரியுமளவிற்கு மூழ்கியிருந்த ஒரு நகரத்தில் பாதியளவு மூழ்கியிருந்த ஒரு வீட்டில் முதல் கதை கிடைத்தது. இன்னும் மூன்றாயிரம் ஆண்டுகளில் நீர் வடியும் போது, புவியானது அதன் தவறாத உள்ளுணர்வின் காரணமாக, மனிதர்கள் இல்லாத வசதியான உலகில் தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் என நினைக்கிறோம்.

உண்மையில் அந்த ஆவணங்களில் சில பக்கங்களைக் காணவில்லை. மூழ்கியிருந்ததால் பாதிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் அதில் இல்லை. நீரில் அழியாத வகையில் ஒரு வகையான தாளில் எழுதும் கலையில் அந்த இனத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் தேர்ச்சி பெற்றிருந்திருக்கலாம். பேரழிவிற்குப் பின்பும் சில விஷயங்கள் நிலைத்திருக்க வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கலாம்.

ன்று நான் தாமதமாக எழுந்ததும் வெளிச்சம் மங்கலாகி இருளுக்குள் செல்வதைக் கவனித்தேன். என் நாட்களை வாசிப்பதில் செலவிடுகிறேன். பூமியின் எசமானர்கள் உலகம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் என்பதைத் தொலைக்காட்சியில் காட்டினர். எங்கும் அவர்களே சர்வ வல்லமை பொருந்தியவர்களாக ஆயினர். அவர்கள் இப்போது மேற்குலகின் முக்கியமான மையங்களில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவியிருந்தனர். செய்திச் சேனல்கள், பெரும்பான்மையான நாளிதழ்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்ததுமின்றி, எமது டிஜிட்டல் வாழ்விலும் ஊடுருவி எங்களது ஒவ்வொரு நகர்வையும், உரையாடலையும் உளவு பார்த்தனர். கடந்த தேர்தலில் எவ்வாறு வாக்களித்தேன்? அவர்களது வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தேனா? நவீன வாழ்வை வெளிப்படையாக்குவதற்கும் சுற்றுச்சூழலைக் காப்பதற்கும் நல்ல திட்டங்களை அறிவித்த எதிர் வேட்பாளருக்கு வாக்களித்தேனா? இல்லை. ஆனால் ஏன் கூடாது? நல்லது, அனைத்து நாளிதழ்களும் உலகின் முடிவை அறிவிப்பது போல நிறைய மாற்றுகளை உருவாக்கின. அவை என்னை பயமுறுத்தின. எனவே பயந்தபடியே வாக்களித்தேன். அதன் பிறகு அதற்காக வருந்தினேன். ஆனால் அவை எல்லாம் மீண்டும் நிகழ்ந்தால் அவர்கள் என்னைப் பிடித்து விடுவார்கள். ஆனால் நான் ஏதோவொன்றின் சிறைவாசியாக இருக்கிறேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அது எது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.

நான் எழுந்ததும் பச்சைத் தேநீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி கூடம் செல்கிறேன். எனது உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திடவும் உடல் எடையைச் சரியாக வைக்கவும் கடுமையாகப் பயிற்சி செய்கிறேன். நாள் முழுவதும் பட்டினி கிடப்பதும் உட்கொள்ளும் கலோரிகளை அளவீடு செய்வதும் சிறிது யோகா பயிற்சிகள் செய்வதுடன் ஜன்னலருகே நின்று ஆழ்ந்த மூச்சும் இழுப்பேன்.

எவ்வளவு முயன்ற போதும் என்னால் இந்த மரண உலகத்தில் சுவாசிக்காமல் இருக்க முடியவில்லை. செய்திகளைத் தவிர்க்க முயன்றேன். ஒவ்வொரு செய்தியும் ஒருவரை மரணத்திற்கு அருகில் கொண்டு செல்வதாக எனக்குப் புலப்படுகிறது. அவை அவ்வாறு செயல்படுவதாக நான் நினைக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு செய்தியும் சிறிது சிறிதாக இறப்பதற்கு உதவுவதாகவே தெரிகிறது. சில நேரங்களில் அது நம்பிக்கையின்மையால் ஏற்படும் மரணம். சில வேளைகளில் விரக்தி அல்லது அலட்சியம் அல்லது அவதியால் ஏற்படும் மரணம். நூறாண்டுகளாக இந்தக் கோளில் ஏராளமான மக்கள் உள்ளனர் என அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் என்னால் உறங்க முடிவதில்லை. குறைவான இடம் கொண்ட இந்தப் பூமியில் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் இந்த மக்கள் அனைவரையும் எப்படி இருக்க வைப்பது என நான் வியந்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் பெருங்கூட்டம் என் மீது ஏறிச் செல்வதாகவும் நகர வழியின்றி என் அருகே நிற்பது போலவும் சுவாசிக்க காற்றில்லாதது போலவும் நான் கனவு காண்கிறேன். போதுமான உணவு இருக்காதோ என்ற அச்சத்தில் தினமும் குறைவாகவே உண்கிறேன். இந்தச் சூழலுக்கு இதன் மூலம் ஒரு பயனும் இல்லை என்பதை நான் அறிவேன் என்றாலும் என்னால் இதற்கு உதவ முடியாது.

நான் வீட்டிலிருந்தவாறே பணியாற்றுகிறேன். எந்தவொரு மனிதரிடமும் நான் பேசாத நாட்களும் இருக்கின்றன. மனிதர்கள் அச்சமூட்டுகின்றனர் என்பதை நான் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்த முழு உலகத்திலும் அவர்களே மிகுந்த அச்சத்திற்குரியவர்கள் என நான் நினைக்கிறேன். புற்றுநோய், கொள்ளை நோய்கள், காட்டு விலங்குகள், பேய்கள், பூதங்களைவிட அவர்கள் பயங்கரமானவர்கள். நாம் வருவதற்கு பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவ்வுலகம் இருக்கிறது. பிறகு நாம் பரிணமித்து நாகரிகங்களை உருவாக்கியிருந்தாலும் கடந்த நூறாண்டுகளில் நமது மோசமான எதிரிகள் நமக்குச் செய்ய முடிந்திருப்பதைவிட மோசமான அழிவுச் செயல்களை நமது வாழ்விடத்திற்கு நாம் ஏற்படுத்தியுள்ளோம். நீங்கள் ஒரு மனிதனைச் சந்தித்தால் அவர் இயல்பாகவும் நலமாகவும் தீங்கற்றவராகவும் தெரிவார். ஆனால் இந்த உலகில் அனைத்துத் தீமையும் மனிதர்களால் வந்ததுதான். அது வேறு எங்கிருந்தும் வரவில்லை. நம்மையே நாம் வெறுப்பதுடன் அவர்கள் நம்மை அச்சுறுத்தினால் அவர்களை இறந்துபோகவும் விட்டுவிடுவோம். நம்மிலிருந்து மாறுபட்டவர்களை நாம் வெறுப்பதுடன் நம்மை ஏதாவது ஒரு விதத்தில் அச்சுறுத்தினால் அவர்களைத் தலைமுழுகவும் தயாராவோம். அழிந்துபோகும் அளவிற்கு இந்தக் கிரகத்தை நாங்கள் தின்றுவிட்டோம். இந்தக் கோளைக் காக்க உதவிடும் ஒரு அமைப்பில் நான் சேர்ந்தேன். ஆனால் அதில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் அருவெறுப்பானவர்களாகவும் பிரச்சினையின் ஒரு பகுதியாகவும் இருப்பதை அறிந்து கொண்டேன்.

இப்போதெல்லாம் மனிதர்களைச் சந்திக்கையில், ஏதோவொன்று நடுங்குகிறது. யாரைச் சந்திக்கிறேன் என எனக்குத் தெரியாது. அவர்களின் மனது எனக்குத் தெரியாது. அக்கறைப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி கவலைப்பட முடியாத, கண்டுகொள்ளாமல் இருக்கிற, நிகழ்வுகளை அதன்போக்கில் நடந்திட அனுமதிக்கும் மக்கள் என்னை பயமுறுத்துகின்றனர். நாம் பூமியின் ஆசிர்வாதமாகவும், அதன் அழகுக்கு அழகு சேர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் நாம் செய்வதெல்லாம் மாசு ஏற்படுத்துதல், குப்பைகள், கெடுதல்கள், அழிவுகள்தான். நமது லட்சியங்களால் எங்கெங்கும் அசுத்தம் செய்துள்ளோம். பரிசுத்தமாக இருந்த எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிக்கான நம் இலட்சியம் காரணமாக, உலகின் குப்பைக் கூடையாக மாற்றிவிட்டோம். நமது பிளாஸ்டிக் குப்பைகள் டால்பின்களின் வாயில் திணிக்கப்படுகின்றன. கடல் ஆமைகள் அவற்றால் மூச்சுத் திணறுகின்றன. இந்தப் பூமியை விட்டு நாம் சென்ற பின்பும் நாம் சேர்த்து வைத்துள்ள கதிரியக்கக் கழிவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு இருக்கும். நாளுக்கு நாள் நம்பிக்கை குறைந்துவருகிறது.

முன்னேற்றமும் சொந்த நலன் மீதான அக்கறையும் தவிர வாழ்க்கையைப் பற்றி எனக்குக் கற்பிக்க என் தந்தையிடம் எதுவுமில்லை. நான் வாழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்ற நாள் வரும்வரை நான் அந்தத் தத்துவ வறட்சியிலேயே வாழ்ந்தேன். என்னைக் கவனித்துக் கொள்ள நான் எந்த அக்கறையையும் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் மிக அயற்சி தருவதாகவும் அழுத்தம் மிகுந்த வாழ்வாகவும் மட்டுமே இருந்தது. என்னை நானே முதன்மையானவன் என்று எப்படி கூறிக் கொள்ள முடியும் என உறுதியாகத் தெரியவில்லை. என்னை ஏன் மற்றவர்களைவிட முதன்மையானவனாக நான் வைக்க வேண்டும்? அது இந்த உலகத்தைத் தொடர் போர்க்களமாக்கி, தனிநபர்களிடையேயும் நாடுகளிடையேயும் இனங்கள், குழுக்கள், வர்க்கங்கள் இடையேயான மோதலாக எல்லோரும் செய்வதைப் போன்றதுதானே? நமது இதயங்களில், நமது கனவுகளின் அடியாழத்தில் போர் வெறியுடன் வளர்ந்ததோடு ஒவ்வொரு நாளும் போரையே அறுவடை செய்கிறோம்.

தனது வறண்ட தத்துவத்தில் திளைத்தே வயதாகிக் கொண்டிருந்த தந்தையை கவனித்தேன். அவரிடம் எதுவும் மலரவில்லை. அவரது உள்முகப் பார்வை வளம் பெறவில்லை. தனது முப்பத்தைந்து வயதில் என்ன கூறினாரோ அதையே தனது எண்பது வயதிலும் கூறினார். இந்தக் கிரகத்தில் தனது நீண்ட பயணத்தில் அவர் குறைவாகவே கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

வாழ்வில் நாம் கொண்டுள்ள தத்துவம் நம்மை வாழ்க்கையிலிருந்து உறிஞ்சி எடுப்பதாகவே நான் நினைக்கிறேன். நாம் இப்போது வெறும் உயிருடன் வாழ்கிறோம். அதனால்தான் நமது அரசியலிலும் நமது வெளியுறவுக் கொள்கைகளிலும் மரணத்தைப் பரப்புவது நமக்கு எளிதாக இருக்கிறது.

தனது பால்ய பருவத்தில் இந்த இனம் கொண்டிருந்த அற்புதக் கனவுகளுக்கு என்னவாயிற்று என்று ஒவ்வொரு நாளும் இந்த உலகத்தைப் பார்க்கும் போது வியக்கிறேன். நாம் நம்மை மிகுந்த சிக்கலுக்கு உள்ளாக்கி வைத்துள்ளோம். நான் குழந்தையாக இருந்தபோது இருந்ததைவிட இப்போது நிறைய ஒவ்வாமையைப் பெற்றுள்ளேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது நம்மைச் சுற்றி ஏராளமான நோய்கள் உள்ளன. அவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன? நாம் நோய்களையும் உடல் நலமின்மையையும் பரப்புகிறோம். இயற்கை அன்னையின் குரல்வளையை நசுக்கி, அவளைச் சேதப்படுத்தி, அவளிடமிருந்து பிரிந்து வந்ததற்காகப் பழி வாங்குகிறாள் என நினைக்கிறேன். நாம் தனிமைப்பட்டும் எந்த நம்பிக்கையின் மீதும் பிடிப்பின்றியும் இருப்பதால், நமது உலகம் பாலியல் வன்முறையாளர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் குழந்தைகளை பள்ளியிலும் மக்களை மசூதியிலும் தேவாலயங்களிலும் கொத்துக் கொத்தாக கொலை செய்பவர்களுக்குமே கனிந்திருக்கிறது. நமது கலாச்சாரத்தின் இதயத்தில் கொலை என்பது நமது தத்துவத்திற்கு தெரியாமலே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாம் நமது உணவு மற்றும் சுவையை செம்மைப்படுத்தி, ஒரு சதவீதமே உள்ள பணக்காரர்களுடன் இணைவதற்காக நம்மை நாமே கொன்று, ஏழைகளை வெறுத்து, நாமே ஏழையாக இருந்தால், போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதிகமான குழந்தைகளின் ஆதரவிற்கு அடிபணிந்து அரசுக் குடியிருப்புகளில் நம்பிக்கையற்று வாழ்கிறோம்.

அதனால் தான் நான் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்தேன். ஒரு குழந்தையைப் பார்க்கும் போதெல்லாம் என்னால் என் அழுகையை நிறுத்த முடிவதில்லை. நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். ஒரு குழந்தையைத் தவிர நான் வேறு எதையும் விரும்பவில்லை. மனிதர்களாகிய நாம் மனிதர்களாக இருக்க வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டோம். குதிரைகளைப் போல விவேகத்துடனோ அல்லது மலர்களைப் போல புத்திசாலித்தனமாகவோ இல்லாத நாம் கடவுளாக மாற விரும்புகிறோம். நமது வீங்கிப் போன தலைக்கனம் நம்மை உண்ணியைப் போல முட்டாளாக்குகிறது. இத்தகைய இனத்திற்கு ஒருவர் எப்படி ஒரு குழந்தையை நம்பிக்கையுடன் ஒப்படைக்க முடியும்? அந்த விலை மதிப்பற்ற உயிரினத்தை நான் எவ்வாறு கொண்டுவர முடியும்…

 குழந்தைகளின் விளையாட்டுகள்

இது ஒரு பெருநகர வீடொன்றில் கிடந்த சிதிலமடைந்த நூலின் பக்கங்களில் காணக் கிடைத்தது.

ழலையர் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த என் மகள் காலையில் அங்கு கற்றுக் கொண்ட பாடலைப் பாடிக் காட்ட விரும்பினாள். மாலை நேரம் என்பதால் நானும் என் கணவரும் வரவேற்பறையில் இருந்தோம். அவர் ஏதோ வாசிக்க முயன்று கொண்டிருக்கையில் வெளியே எங்கோ துளையிடும் ஓசை தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்ததால் மேலே நோக்கினார். பிறகு எங்கள் மகள் அறைக்குள் குதித்துக்கொண்டு வந்து கேட்டாள்:

“இன்றைக்கு என்ன கத்துக்கிட்டேன்னு சொல்லவா?”

அவள் உறங்கச் செல்லும் நேரம் ஆகிவிட்டது என நினைத்த நான் “சரி” என்றேன். இரவு ஒன்பது மணி ஆகியும் சோர்வுக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தாள்.

“ஓகே” மணியைப் போல கணீரெனக் கூறினாள். அவளுக்கு மூன்று வயதுதான் என்றாலும் ஆறு வயதுக்குரிய மொழி வளமும் நினைத்துப் பார்க்க முடியாத கற்பனைத் திறனும் கொண்டிருந்தாள். சில சமயங்களில் அவளை பீதியுடன் பார்த்து, அவள் எங்களுக்குப் பிறந்த மேதையா, குறும்புக்காரியா, ஆசிர்வாதமும் தீர்மானமும் நிரம்பிய புதிய தலைமுறையைச் சேர்ந்தவளை உலக வரலாற்றின் மிக ஆபத்தான இக் காலகட்டத்தில் நாங்கள் கொண்டு வந்துள்ளோமா என்று வியப்பேன்.

“நான் தான் மிஸ், நீங்கதான் ஸ்டூடண்ட்” என்று அவள் சொன்னதைக் கேட்டு நானும் என் கணவரும் பார்வையைப் பரிமாறிக் கொண்டோம். ஒவ்வொரு நாளும் இப்படித்தான். தினந்தோறும் அவள் வினோதமான ஒன்றைச் செய்வது அவளது வயதுக்கு மீறிய புத்திசாலித்தனமாகவும் சில வேளைகளில் அவள் கூறும் விஷயம் அவள் மூலமாக பேசுவது கடவுள்தானோ என எங்களை வியக்கவும் வைக்கும்.

நானும் என் கணவரும் “சரி” என்றோம்.

பிறகு அவள் ஒரு கிலுகிலுப்பையைக் கையில் வைத்துக் கொண்டாள். அது நீல நிறமாயிருந்தது. சிரித்துக் கொண்டிருந்தாள். கிலுகிலுப்பையை ஆட்டிய அவள் பாடத் தொடங்கினாள். அவள் செய்வது என்னவென்று அவளுக்குத் தெரியும் என்பதைப் போலவும் அதில் ஒரு எதிர்பாராத் திருப்பம் உள்ளது என்பதைப் அவள் அறிந்து வைத்திருப்பது போலவும் இந்தப் பயணம் அவளை கொண்டு செல்லும் இடத்திற்குப் பின்தொடர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்பது போலவும் அவள் முகத்தில் விசித்திரமான புன்னகையுடன் பாடினாள்.

“உங்க பேர் என்ன?” என்று கேட்டாள்.

“அப்பா” என்றார் அவர்.

“அப்பா இன்று பள்ளிக்கு வந்தார்

அப்பா இன்று பள்ளிக்கு வந்தார்

அப்பா இன்று பள்ளிக்கு வந்தார்.”

அம்மா என மாற்றி எனக்காகவும் அவள் அதே பாடலைப் பாடினாள். பிறகு எனக்கு அருகே அவள் உற்று நோக்கினாள். அங்கே மேசையைத் தவிர வேறொன்றுமில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவள் அவளுக்குப் பிடித்தமான டாபி என்ற பெயர் கொண்ட பொம்மையைப் பார்த்து டாபி இன்று பள்ளிக்கு வந்தது என்றாள். திடீரென விளையாட்டை விரிவாக்கிய அவள், மோஸார்ட் இன்று பள்ளிக்கு வந்தார், பிறகு டாவின்சி இன்று பள்ளிக்கு வந்தார், பிறகு சே குவேரா இன்று பள்ளிக்கு வந்தார் என்றாள். இந்த உருவங்கள் “இன்று பள்ளிக்கு வந்தன” ஏனெனில் அவளைச் சுற்றியிருந்த அவர்களது படங்கள் அல்லது அவர்களது முகத்தை அட்டையாகக் கொண்ட புத்தகங்களில் ஒன்றை எடுத்து அதை என் முகத்தின் முன் வைத்து அவளது இடத்திற்குத் திரும்பிச் சென்ற பின் கிலுகிலுப்பையை ஆட்டி இந்த முகங்களை அவளது பாடலில் ஏற்றிப் பாடினாள். இப்படியாக ஷேக்ஸ்பியர் இன்று பள்ளிக்கு வந்தார், பிறகு வான்கா, பிறகு அற்புதத் தீவில் ஆலீஸ், வின்னி தி ஃபூ, பேடிங்டன் கரடி, பிறகு பிக்காஸோவும் வெர்மியரும். அவள் கண்களில் வினோதமான பார்வையுடன் நின்றபடி கிலுகிலுப்பையை ஆட்டியவாறு இன்று பள்ளிக்கு வந்த புதியவர்களைப் பற்றிப் பாடினாள்…

“இதைப் போன்ற வியத்தகு மனிதர்கள் வரும் பள்ளியை நான் விரும்புகிறேன்” என்றேன்.

ஆனால் அவள் என்னைக் கருத்தில் கொள்ளாமல் விசித்திரமான பிடிவாதத்துடன் கிலுகிலுப்பையை குலுக்கியபடி இன்று காலையில் பள்ளிக்கு வந்தவர்களை வீட்டில் உள்ள புதிய ஓவியத்திலும் புதிய புத்தகத்திலும் தங்குதடையின்றி கண்டுபிடிக்கத் தொடங்கினாள். பிறகு, “பாலே நடனம் பள்ளிக்கு வந்தது” “ஃப்ரைடா கலோ பள்ளிக்கு வந்தாள்” – அவளுடன் தினமும் எண்ணிக்கையில் அதிகரித்தபடி இருந்த அவளது 12 கற்பனை நண்பர்களும் பள்ளிக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முன்கூட்டி அறிவிக்கும் எங்கள் மகளின் திறமையைக் கண்டு மகிழ்ந்து அவள் ஏதோ ஒரு வகையில் மேதமை கொண்டவள் என்பதை உறுதிப்படுத்தினாலும் அவள் மறுபிறவி எடுத்து வந்த மேதையா அல்லது இந்த அந்திமக் காலத்தில் புதிதாய் பிறந்த மேதையா என்று சொல்வது கடினம் என்றபோதும், அவள் வரையறுக்க முடியாத ஒரு அதிசய நிகழ்வு என்பது உறுதி.

நிறைய மனிதர்கள் பள்ளிக்கு வந்ததைக் கண்ட அவள் இன்னமும் வரவேற்பறையின் நடுவில் நின்றவாறு இருக்க, கையிலிருந்த கிலுகிலுப்பை குலுங்குவது குறைந்து கொண்டே சென்றது. அவளது தந்தை நடுக்கத்துடன் அவளைக் கவனித்தார். தனது மகள் மாயஜாலப் பிடியில் இருப்பதாக உணர்ந்தார். நிலஅதிர்வு இயந்திரம் ஒன்று இதற்கு முன் நிகழ்ந்திராத ஒன்றை பதிவு செய்வதை நீங்கள் நடுக்கத்துடன் கவனிப்பது போல அவரது மகளை அவர் கவனித்த நாட்களும் இருக்கின்றன. எதிர்பாராத் தூண்டுதல்களை உணர்ந்து கொள்ளும் அவளது திறன் அவளது ஆளுமையின் வழக்கமான பகுதியாக இருப்பதோடு அவள் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களையும் வாசிக்கும் நூல்களில் உள்ள கதை மாந்தர்களையும் அவளது புராணத்தில் உள்வாங்கிக் கொண்டாள். அவள் அவர்களாகவே மாறி, அவர்களுடைய பெயர்களை ஏற்றுக் கொண்டு அந்த ஆளுமைகளின் நாட்குறிப்பாகவே மாறினாள்.

வியப்பும் கலக்கமும் என்ன ஆகுமோ என்ற கவலையுடன் அவளைக் கவனித்த அவளது தந்தை, ஒவ்வொரு கணமும் பெயரற்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துவர, சோர்வளிக்கும் மனநிலையில் அந்த நாளின் இறுதியில் கிட்டத்தட்ட உணர்ச்சியற்று இருப்பார்; எனினும் அவரது அதிசயக் குழந்தையின் மீது அவருக்கு ஒரு பற்று இருக்கத்தான் செய்தது.

என்றைக்கும் இல்லாதது போல இன்று அவள் தனது கிலுகிலுப்பையுடன் நின்று கொண்டு எல்லாம் தெரிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பள்ளியில் புதிய பாத்திரங்களை உலவவிட்டுப் பாடுகிறாள்.

பிறகு பள்ளிக்கு இன்று வந்தவர்கள் பெயர்கள் அவளிடம் தீர்ந்துவிட்டது போன்று தெரிந்தது. பின்னர் அவளின் புன்னகை மேலும் மர்மமாக மாறியபடியே கூறினாள்:

“அப்புறம் இன்று வேறு யாரெல்லாம் பள்ளிக்கு வந்தார்கள் என ஊகித்துச் சொல்லுங்கள். இன்று வேறு யாரெல்லாம் பள்ளிக்கு வந்தார்கள் என ஊகித்துச் சொல்லுங்கள்.?”

எங்களது இருக்கையின் நுனியில் அமர்ந்தவாறு “இன்று வேறு யாரெல்லாம் பள்ளிக்கு வந்தார்கள்?” என நானும் என் கணவரும் ஒருமித்த குரலில் கேட்டோம்.

“மரணம் இன்று பள்ளிக்கு வந்தது
மரணம் இன்று பள்ளிக்கு வந்தது”

கலக்கத்துடனும் பீதியுடனும் நானும் என் கணவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். ஆனால் அவள் தனது வித்தியாசமான பார்வையுடனும் புன்னகையுடனும் கிலுகிலுப்பையைக் குலுக்கிக் கொண்டிருந்தாள். இப்போது அவளது கைகளை அவள் உயர்த்திப் பிடித்ததால் கிலுகிலுப்பையின் ஒலி மேலிருந்து கேட்பதாகத் தோன்றியது. நாங்கள் கூரையை நோக்கினோம்.

“உலகின் மரணம் இன்று பள்ளிக்கு வந்தது
உலகின் முடிவு இன்று பள்ளிக்கு வந்தது”

“இதை யார் உனக்குக் கற்றுக் கொடுத்து அன்பு மகளே” என்று குரல்வளை நெரிக்கப்பட்டது போன்ற குரலில் அவளிடம் கேட்டேன்.

“ஆமாம் மகளே, யார் உனக்கு இதைக் கற்றுக் கொடுத்தது?” என எழுந்து நின்று கேட்டார் என் கணவர்.

ஆனால் அவள் தன் கைகளை விரித்து எங்களை நோக்கி நிறுத்துங்கள் என கட்டளையிடுவது போலக் காட்டினாள். நாங்கள் உறைந்து நின்றோம். உண்மையில் அவள் ஆசிரியையாகவும் நாங்கள் மாணவர்கள் என்பது போன்றும் இருந்தது.

“யாரும் இனி பள்ளிக்குப் போக மாட்டார்கள்
யாரும் இனி பள்ளிக்குப் போக…”

நாங்கள் அவளை நிறுத்தச் செய்து படுக்கைக்குத் தூக்கிச் சென்றோம். அவள் ஒரு தீர்க்கதரிசனம் பற்றிப் பேசுகிறாள் என்பதையே நாங்கள் உணர்ந்தோம். உங்களுக்குத் தெரியும் குழந்தைகளின் வாயிலிருந்து…

இரண்டு நாட்களுக்குப் பிறகு நகரத்தில் வெள்ளம் வரத் துவங்கியது. திடீரென முதல் மாடி வரை வெள்ளம் உயர்ந்தது. தொலைக்காட்சியில் பேசிய அரசியல்வாதிகள், இதற்கும் காலநிலை மாற்றத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் பயங்கரவாதிகள் மற்றும் சோஷலிஸ்டுகளே காரணம் என்றும் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள்.

வெனிசில் அண்டங்காக்கைகளின் திடீர் சங்கீதம்

 ஒரு காலத்தில் வெனிஸ் என அழைக்கப்பட்ட நகரத்தில் இது கண்டெடுக்கப்பட்டது. (சில பக்கங்களைக் காணவில்லை…)

             ….தடுப்புகள் கீழே விழ, எங்களைச் சுற்றி உலகின் வெள்ளம் அனைத்தும் சூழ, மேலே அண்டங்காக்கைகள் சுற்றி வந்தன. நகரமானது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. நீல நிறத்திற்குப் பெயர் போன கடற்கரை காயல் இப்போது மேடுதட்டி வெளிறிக் கிடந்தது. அது இப்போது பிணங்கள் மற்றும் இறந்த விலங்குகளின் மிதக்கும் சடலங்களின் வண்ணத்தில் இருந்தது. காயலின் நீர் தெருக்களில் ஊடுருவி எங்கள் வீடுகளை ஆக்கிரமிப்பதையும் நாங்கள் கவனித்தோம். கண்டறியப்படும் சடலங்களுக்காக மணிகள் ஒலித்தன. இங்கு எங்கள் மரணம் தனித்திருந்தது. மின்சாரமும் தண்ணீருமின்றி நாங்கள் வீடுகளுக்குள் அடைந்திருந்தோம். உண்ண உணவின்றி இருந்தோம். வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உயர்வதை நான் கண்டேன்.

ஆனால் அது ஆண்டுக் கணக்காக உயர்ந்து வருவதை நாங்கள் கவனிக்கவில்லை. ஒரு கதையில், வெந்நீர் பானையில் விழுந்து மெல்ல இறந்து கொண்டிருக்கும் தவளையானது அதை உணராமலிருப்பதைப் போல நாங்கள் இருந்தோம்.

ஒவ்வொரு நாளும் நகரம் வெப்பமடைந்து, நீர்மட்டம் மைக்ரோ அங்குலம் அளவில் உயர்ந்து வருவதை உணராமல், கவலைப்படும் அளவிற்கு எதுவும் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனச் சொல்லிக் கொண்டோம். யார் தங்களது ஆய்வுகளுக்கு ஆதரவளிக்கிறார்களோ அவர்களுக்கேற்ப தங்களது முடிவுகளைக் கூறியவாறு விஞ்ஞானிகள் தங்களுக்குள் பிரிந்து கிடந்தனர். எனக்கு இதில் எல்லாம் ஈடுபாடு இல்லை. விற்பனைக்கு மட்டுமே உதவக்கூடிய எதிர்மறை விஷயங்களைக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நாளிதழ்களைக் காண்பதால் ஏற்படும் மன அழுத்தத்தை விரும்பாத நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தினேன். காலநிலை மாற்றம் பற்றிய விஷயங்கள் என் அறிவுக்கு அப்பாற்பட்டது என நினைத்த நான் அதை நிபுணர்களிடம் விட்டுவிட்டேன்.

ஆனால் வெப்பநிலை சரியாக இல்லை என்பதை என்னால்கூட உணர முடிந்தது. பியாஸா சான் மார்கோ சதுக்கத்தில் எனது தோழனைச் சந்திக்க நடந்து செல்லும்போது பறந்து கொண்டிருக்கும் புறாக்கள் கீழே விழுவதை நான் கவனித்தேன். சான் மார்கோ தேவாலயத்தின் கதவருகே சிலர் நிலைகுலைந்து விழுவதைப் பார்த்தேன். சில நேரங்களில் வெப்பநிலை தாங்க முடியாத அளவிற்கு இருக்கும்போது சஹாரா பாலைவனத்திற்கே நான் கொண்டு செல்லப்பட்டதைப் போன்று உணர்ந்தேன். இந்த முரண்பாடான விஷயங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை: மங்கிய கரும்பச்சையாக நிறம் மாறி உயரும் நீர்மட்டம், பழக்கமாகிப்போன வெப்பநிலை உயர்வு என இருந்தாலும் தங்கள் பிரசங்கங்களின் நடுவே இறந்துபோன மதகுருக்கள் அவர்களது முன்னறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

கடந்த ஜூனில் ஒருநாள் முழுவதும் பனி பெய்தது. கால்வாயில் தோணிக்காரர்கள் உறைந்து கிடந்தனர். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு ஒரே நேரத்தில் வந்தனர். இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொதித்தது. வயதான ஏராளமான பெண்கள் அழிந்தனர். நகரம் முழுவதும் வயதான ஆண்கள் தங்கள் கைத்தடி மீது நொறுங்கி விழுந்ததைக் காண முடிந்தது. ஒருநாள் கடற்கரை காயலிலும் கால்வாயிலும் வயிறு மேல்நோக்கியவாறு மீன்கள் இறந்துகிடந்தன. செத்துக் கிடந்த மீன்களின் மீது மீனவர்களின் வலைகள் மோதி நொறுங்கின. காயலின் துர்நாற்றம் தாங்க இயலாததாக இருந்தது. இவை எல்லாம் பைபிள் காட்டும் தீமை வருகையின் அறிகுறி என்பதை யாரும் நம்பவில்லை.

மறுப்பதற்கான எங்களது திறனானது நம்புவதற்கான எங்களது திறனைவிட வலிமையானது.  உண்மைக்கு முகங்கொடாமல் இருப்பது எளிதானது என நாங்கள் கண்டறிந்தோம். எங்களது வாழ்வு சுய அழிவு கொண்டது என்பதற்கான பேரளவிலான ஆதாரங்களை நம்ப மறுத்து இயல்பு வாழ்க்கையை வாழ்ந்தோம். கடந்த காலத்தின் கைதிகளான நாங்கள் எங்களை அழிக்கும் என்று தெரிந்தே அனைத்து செயல்களையும் செய்தோம். இன்னும் மோசமாக, எங்கள் விருப்பங்களின் தவிர்க்க இயலாத முடிவுகள் நிறைவேறாது என நினைத்தோம். எப்படியோ, கடைசி நிமிடத்தில் அற்புதம் நிகழ்ந்து மாயாஜால தீர்வு கிடைக்கும் என நினைத்தோம். இயற்கையில் நாங்கள் கண்டுகொள்ளாத காரணிகள் எப்படியாவது எங்களது சமூக மற்றும் சூழலியல் குற்றங்களை துடைத்தழித்து விடும் என நம்பிக்கை கொண்டிருந்தோம்.

இந்த அசாதாரணமான நிலைகளில்கூட இயல்பான நாட்களும் இருந்தன என்பதுதான் பிரச்சினை. இயல்புக்கு மாறானதைவிட இயல்பான நாட்கள் அதிகமிருந்தன. எனவே இயல்புநிலையே விதி எனவும் இயல்புக்கு மாறானது எதுவும் சிறிய தோற்றப்பிழை எனவும் நம்பத் தொடங்கினோம். இயல்புநிலை என்பது புலப்படாத சமநிலை என்பதும் அது மாறிவிட்டது என்பதையும் நாங்கள் உணரவில்லை. ஆனால் அந்த மாற்றத்தின் மோசமான முடிவுகள் இன்னும் எங்களுக்குப் புலப்படவில்லை.

இயல்பான நாட்களில் சதுக்கத்தில் திருமண விழாக்கள் நடைபெறுவதை நாங்கள் கண்டோம். வெள்ளைத் திருமண ஆடையைத் தூக்கிப் பிடித்தபடி உயர்ந்துவரும் நீரோடையைத் தாண்டிக் குதிக்கும் மணப்பெண்களையும் பார்த்தோம்.

மாதங்கள் செல்லச் செல்ல குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே நகரத்திற்கு வந்தனர். தனிமை எங்களைச் சூழ்ந்தது. நாளுக்கு நாள் கடல்மட்டம் உயர்ந்தது. முதலில் எங்கள் அரசியல்வாதிகள் அதை மறுத்தனர். பிறகு இவை எல்லாம் நாசகாரர்களின் வேலை எனக் குறிப்பிட்டனர். எலிகள் மிகப் பெரிதாகவும் மிக தைரியமானவையாகவும் வளர்ந்தன. பகலில் அவை சிதறி ஓடினாலும் மக்களைக் கண்டு அஞ்சி ஓடவில்லை. இறுதியில் நகரத்தை அவை கைப்பற்றிவிட்டதாக சொல்வது போலத் தோன்றியது. ஆனால் அவை உண்மையான அச்சுறுத்தல் இல்லை. உண்மையான பிரச்சினை நாற்றம்தான், அதனை அரசியல்வாதிகள், பயப்பட ஒன்றும் இல்லை என மென்மையாக மறுத்தனர். நாங்கள்தான் எல்லாவற்றையும்விட மிக மோசமான அச்சுறுத்தல். நாங்கள் இயல்பான வாழ்க்கை வாழ முயற்சி செய்த விதம்தான்.

இயல்பு வாழ்க்கை மீதான எங்களது போதையே எங்களுடைய மிகத் தீங்கு விளைவிக்கும் குணாம்சமாகும். காலை வேளைகளில் எழும்போது எனது தாய் எனக்கு கற்றுக் கொடுத்த பாடலை சில வரிகள் முணுமுணுப்பேன். குளித்து, காபி அருந்திவிட்டு அலுவலகம் செல்வேன். இந்த உலகில் வேலை செய்வது ஒன்றே வேலை என்பதைப் போல பணியாற்றுவேன். மாலையில் வீட்டிற்கு நடந்து செல்வேன். வேலைக்குச் செல்லும்போது சதுக்கத்தில் உள்ள காபி அருந்தகங்களைக் கடந்து செல்வேன். பணியாட்கள் மேசையை எடுத்து வைப்பதைக் காண்பேன். ஒருவரும் வராவிட்டாலும், இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளின் படையே வரவிருப்பது போல மேசைகளை அலங்கரித்து வைத்திருப்பர். எந்தவொரு காலநிலை மாற்றம் சார்ந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் காலநிலை மாற்றம் என்பது ஒரு கட்டுக்கதை என்றும் அமெரிக்க அரசு மீண்டும் அறிவித்துவிட்டதை செய்தித்தாளில் படித்தேன். மேலும் அமெரிக்கா முழுவதும் நகரங்கள் கடல்மட்ட உயர்வால் நீருக்கடியில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் வாசித்தேன். பெரும்பாலான நகரங்களில் மக்கள் தங்கள் உடைமைகளை உயரமான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டியிருந்தது; அவர்கள் கூடாரங்களிலும் அவசரமாகக் கட்டப்பட்ட உறைவிடங்களிலும் வசிக்கின்றனர். நாடு பேரதிர்ச்சியில் உள்ளது என்பது தெளிவு. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகத் தீவிரமாக மாற்றப்படும் என்பதை அவர்கள் நம்புவதாகத் தெரியவில்லை. கிளர்ச்சி இல்லை, போராட்டம் இல்லை என செய்தித்தாள்கள் கூறின – வெறும் கடுப்பான மனநிலையே எங்குமுள்ளது, உறுதியான கனவுகளில் இருந்து எழுப்பப்படுவதை மக்கள் விரும்பாததை போலிருந்தது. மற்ற நாடுகளில் இருந்தும் செய்திகள் வந்தன. அந்த விவரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. சில சமயங்களில் செய்தியாளர்கள் தாங்கள் வழங்கும் விவரங்களில் ஒருவரையயொருவர் விஞ்ச முயற்சிப்பதாகத் தெரிந்தது. விபரீதம் என்பது உலகளாவிய எதார்த்தம் ஆகிப்போனது. ஆனால் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும்போது, காபிக் கடையை கடக்கையில் அங்கு நிற்கும் பணியாளரைக் காண விரும்புவேன். ஒரு சராசரிப் பெண் மையல் கொள்ள விரும்பும் ஆணைப் போல உயரமானவன் அல்ல; ஒல்லியானவனும் அல்ல, அவன் கண்கள் நீலமாகவும் இல்லை. அவன் அளவான உடற்கட்டுடன் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒருமுறை சுற்றித் திரிந்து கொண்டிருந்த பூனையுடன் அவன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பிறகு மற்றொரு நாள் அந்தப் பூனைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். இதைப் போன்ற கருணை இந்தக் காலத்தில் மிக அரிதானது, அதுவும் நாம் எல்லோரும் நம் வாழ்வில் ஈடுபாடு காட்டாத இக்காலத்தில்…

அரசுத் துறை மறுக்கிறது

வானுயர்ந்த கட்டடங்களின் நுனி மட்டுமே இப்போது புலப்பட்ட தலைநகரில் சிதறிய ஆவணங்கள் மிதந்து கொண்டிருந்தன.

காலநிலை மாற்றம் என்ற கட்டுக்கதை குறித்த அதிகாரப்பூர்வமான அறிக்கையை இன்று நாங்கள் வெளியிட்டோம். காலநிலை மாற்றம் என்ற கருத்துக்கு அடிப்படையிலும் மனதளவிலும் எதிராக உள்ள அதிபரே சில மாறுபாடுகளுடன் இந்த அறிக்கையை தனது ஓவல் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டார். செய்தி ஊடகங்களால் அது மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. குறிப்பாக, மக்களை விரக்தியில் தள்ளும் கட்டுப்பாடற்ற ஊகங்களை இந்த அறிக்கை அழித்தொழிக்க வேண்டும் என அவர் விரும்பினார். இயற்கையின் கட்டுப்பாடற்ற மாறுபாடுகள், தொடர்ந்த வெள்ளம், நமது கடற்கரையைத் தாக்கும் எண்ணற்ற டைஃபூன் சூறாவளிகள், பாதி கலிபோர்னியாவை கபளீகரம் செய்த காட்டுத் தீ ஆகியவை எல்லாம் இயற்கையின் சாதாரண நிகழ்வுகளே அன்றி வேறு எதுவும் இல்லை. அவை பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. விசித்திரமான இந்நிகழ்வுகள் அர்மெகடான் போன்று ஊழிக்காலம் எதையும் அறிவிக்கவில்லை.

பல ஆண்டுகளாக நடந்த வினோதமான நிகழ்வுகளைப் பற்றி ஆய்வு செய்ய திட்டம் ஒன்று அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தன் பங்கிற்கு விசித்திரமான நிகழ்வுகளை கூட்டிக் கொண்டே சென்றதால் இந்த ஆய்வு நூறாண்டுகளுக்குப் பின்னால் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். நம் காலத்தில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை நாம் மிகைப்படுத்துவதாகவே தெரிகிறது. அவை தனித்துவமானவை என நாம் நினைக்கிறோம். பேரழிவைப் பற்றிக் கூறுவது நாகரிகமாகிப் போன இக்காலத்தில் அதைத் திருத்துவதற்கு இந்த அறிக்கை மிகத் தேவையானதாகும். கடந்த காலத்தில் நடந்த ஏராளமான பயங்கர நிகழ்வுகளை ஒப்பிடும்போது நமது காலத்தின் பேரழிவுகள் குறைந்த பாதிப்புகள் கொண்டவை எனும் அளவிற்கு இயல்பானவையே. புவி வெப்பமாதலின் துவக்கத்தில் காட்டுத் தீயால் மரங்கள் வாரக்கணக்கில் பற்றி எரியக் காரணமான போம்ப்பியின் வெசுவியஸ் எரிமலை வெடிப்பு உலகின் அரங்கில் ஹோமோ சேப்பியன்கள் தோன்றுவதற்கான நிலைமைகளை ஏற்படுத்தியது என்பதை நினைத்துப் பாருங்கள்; துருவப் பகுதியின் கம்பளி யானைகளை துடைத்தழித்துவிட்ட காலநிலையைப் பற்றி நினைத்துப் பாருங்கள். பருவநிலை ஏற்றத்தாழ்வுகள், காட்டுத் தீ, புயல்கள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாக புவி வரலாற்றின் ஒரு பகுதியாகத்தான் இருந்துள்ளது என்பதைத் தங்களுக்குள் அறிக்கையாகப் பகிர்ந்து கொள்ளும் விஞ்ஞானிகள் இதை இக்காலத்தில் சொல்வது நாகரிகமானதல்ல என்பதுடன் அவர்கள் மக்களால் சிலுவையில் அறையப்படவும் கூடும். மதங்கள் கோலோச்சியபோது இயற்கைப் பேரழிவுகள் கடவுளின் கோபத்தால் ஏற்பட்டவை என்று நிந்தனை செய்தனர். இப்போது அரசாங்கங்களையும் பெருநிறுவனங்களையும் குறை கூறுகின்றனர். நாம் தான் புதிய கடவுள்கள். புவி வெப்பமாதல் என்ற ஒன்று இல்லை என நாம் தீர்ப்பளித்துவிட்டோம். அப்படியே இருந்தால்தான் என்ன? நாம் தான் நமது குடியிருப்பை செவ்வாய் கிரகத்திற்கு மாற்றத் திட்டமிடுகிறோமே. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருடன் நாம் அங்கே புதிதாகத் துவங்குவோம். பூமி நிலையானது என மக்கள் ஏன் நினைக்கிறார்கள்? பிரபஞ்சத்தில் உள்ள லட்சக்கணக்கான கோள்களில் இந்தக் கோள்தான் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற நிலைத்தன்மை கொண்டது என்பது வெறும் தற்செயலானது தான். அந்த நிலைத்தன்மை எப்போதும் நொறுங்கும் தன்மை கொண்டது. மனித இனம் எப்போது வேண்டுமானாலும் பரிணமிக்கக் கூடியது. பரிணாமம் என்றால் அழிவு என்று பொருள். அது தான் பரிணாம விதி. நமக்குக் கீழே உள்ள ஏணியை எப்போதும் நாம் எட்டி உதைப்பவர்கள் தான். அதுதான் நாம் முன்னேறுவதற்கான வழி. சூழல் மாசு என்பது பரிணாமத்தின் உப பொருள், நாகரிக வளர்ச்சிக்கு நாம் தந்த விலை. நாம் வேறு மாதிரி பரிணாமம் அடைந்திருக்கலாம் என விரும்புவோர் வரலாற்றை மட்டுமன்றி தாங்கள் அனுபவித்த ஏராளமான நற்பலன்களையும் சேர்த்தே புறக்கணிக்கிறவர்கள் ஆவர். மேற்குலகின் ஆடம்பரத்தில் வாழும் பேரழிவு தீர்க்கதரிசிகளையும் பிற கலாச்சாரங்களின் அழிவையும் மேற்குலக நாகரிகங்களின் பதிவு செய்யப்படாத ஏராளமான குற்றங்களையும் நிறுத்த முடியவில்லையா? கடைசி நேரத்தில் எப்படியாவது அனைத்து வரலாற்றிலிருந்தும் விடுவித்துக் கொண்டு காலத்தை பின்னோக்கிச் செலுத்திவிடலாம் என நீங்கள் விரும்புகிறீர்களா?

னால் தீர்க்கதரிசிகள் சொன்னவை உண்மையாக இருந்தால்? நமது அதிபர் நம்மை இறுதிக் காலத்திற்குள் தள்ளிக் கொண்டிருந்தால்? உலகமே பற்றி எரியும் போது நாம் பிடில் வாசித்துக் கொண்டிருந்தால்? உலகம் எரிகிறது, எரிகிறது, எரிகிறது. அமேசானில் எரிகிறது, ஆஸ்திரேலியாவில் எரிகிறது, அமெரிக்கா எங்கும் பற்றி எரிகிறது. பேராலயங்கள் பற்றி எரிகின்றன. துறவிகள் தீக் குளிக்கிறார்கள். பனிக் கட்டிகள் ஆவியாகின்றன. நகரங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. பனி இருக்க வேண்டிய இடங்களில் வெப்ப அலைகள் வீசுகின்றன.

அனைத்தும் மரணித்துப் போகவிருக்கும் நிலைமைக்கு நம்மைக் கொண்டு செல்லும் ஒரு அதிபருக்கு நாம் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறோமா? நம்மை எல்லாம் அழிக்கக் கூடிய ஒன்றுக்கு கீழ்படியுமாறு என்னைக் கட்டாயப்படுத்தும் இது, என்ன மாதிரியான வேலை? வேலைக்கும் ஒரு வரம்பு இல்லையா? என் ஆழ் மனதிற்குள் மறுதலிக்கும் திட்டத்தை நான் நம்பவில்லை என்றாலும் நல்ல சம்பளமும் நான் செய்யும் வேலையில் சிறந்தவன் என்பதாலும் என் திறன்களைப் பயன்படுத்தி நான் பொய் என்று நினைப்பதை மட்டும் அல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலான பொய்யுடன் கலந்து, இறுதியான பொய், தீர்ப்பு நாளின் பொய், எல்லாப் பொய்களையும் முடிவிற்குக் கொண்டு வரும் பொய் சொல்ல வேண்டும்.

இந்த உலகில் எதுவும் சரியாக இல்லை என்பதை என் கண்களால் காண முடிகிறது. நேற்று எனது மகளை நர்சரி பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது வானிலிருந்து ஒரு உடும்பு என் காலடியில் விழுந்தது. எல்லாவற்றையும் ஆச்சரியத்துடன் பார்க்கும் எனது ஐந்து வயது மகள் கூறினாள்:

“அப்பா, உடும்புகள் ஏன் வானிலிருந்து விழுகின்றன?”

நான் என்ன சொல்ல முடியும்? வழக்கத்திற்கு மாறானது எதுவுமில்லை, எல்லாக் காலங்களிலும் நிகழ்வதுதான் என்று அதிபரின் பொய்யை அவளுக்குக் கூறுவதா? அவளது மனம் வேறொன்றின் மீது ஆர்வம் கொள்ளும் என நினைத்து நான் அமைதியாக இருந்தேன். ஆனால் ஒரு ஐந்து வயதுக் குழந்தையின் இயல்பற்ற விடாமுயற்சியை நான் மறந்துவிட்டேன்.

“ஏன் அப்பா, உடும்புகள் ஏன் வானிலிருந்து விழுகின்றன? ஒன்று இப்போதுதான் விழுந்தது. அதைப் பாருங்கள். ஆனால் ஏன்…”

“அது அவ்வப்போது நடப்பதுதான் கண்ணே”, என்றேன்.

“கடவுள் அவற்றை கீழே வீசுகிறாரா? கடவுள் உடும்புகளிடம் கோபமாக இருக்கிறாரா, அப்பா?”

“இல்லை, கடவுள் உடும்புகள் மீது கோபமாக இல்லை”, என்றேன் நான்.

“கடவுள் நம் மீது கோபமாக இருக்கிறாரா?”

இது வழியில் என்னை நிறுத்தியது. ஹூடினி குத்து போல அடிவயிற்றில் ஒரு குத்துவிட்டது போல நிலை குலைந்தேன். அதைப் போன்ற குத்து இரண்டு நாட்களுக்குப் பிறகே உங்களைக் கொல்லும்.

“என்ன சொன்னாய் கண்ணே?”

“கடவுள் ஏன் நம் மீது கோபமாக இருக்கிறார்?”

“கடவுள் என்று நான் நினைக்கவில்லை.”

“கடவுள் கோபமாகும் அளவிற்கு நாம் என்ன செய்தோம்?”

“நீ ஏன் அப்படிச் சொல்கிறாய், கண்ணே?”

என்னிடமிருந்து அவளது குட்டிக் கைகளை விடுவித்த அவள் வானை நோக்கியபடி நின்றாள். தனது முகத்தில் புதிர் நிறைந்த முகச்சுளிப்பைக் காட்டினாள்.

“ஏனென்றால் உடும்புகளை கடவுள் கீழே எறியும் விதத்தைப் பார்த்துச் சொல்கிறேன்.”

அனைத்தையும் இழந்து நான் நின்றேன். யாரை வளர்ப்பதற்காக பொய்களைப் பின்னி வந்தேனோ அந்தக் குழந்தையின் களங்கமற்ற கேள்வியால் அதே பொய்யில் சிக்கிக் கொண்டதாக முதன்முறையாக உணர்ந்தேன்.

“அதை எறிவது கடவுள் இல்லை?”

“அப்புறம் வேறு யார்?”

மீண்டும் நான் அமைதியாக இருந்தேன்.

“ஏன் ஏராளமான மக்கள் வீடில்லாமல் இருக்கிறார்கள், அப்பா? ஏன் அவர்கள் எல்லாம் வீதியில் உறங்குகிறார்கள்?”

“ஏனென்றால் அவர்களது வீடுகள் கடலுக்கு அடியில் சென்றுவிட்டன”, என்று எனது வலுவின்மையால் உற்சாகமின்றி சிந்திக்காமல் கூறினேன்.

“ஆனால் கடல் ஏன் உயர்ந்தது?”

“அதை விளக்குவது கடினம்”

“நாமெல்லாம் கடலுக்கு அடியில் போகிறோமா, அப்பா?”

முதன்முறையாக எனது மகளின் அச்சுறுத்தும் விதமான விசித்திர நுண்ணறிவை அறிந்து கொண்டேன். அவள் மறைஞானம் கொண்டவள் போலக் காணப்பட்டதுடன், எனக்குத் தெரிந்தவற்றைக் கூற மறுப்பதை அவள் அறிந்தவள் போல என்னை நோக்கினாள். அது குழந்தைகளின் இயல்பான சந்தேக குணமாக இருக்கலாம்.

“உண்மையில், நாம் எல்லாம் கடலுக்கு அடியில் செல்லவில்லை” ஒருவித வெடிப்புடன் கூறினேன்.

அவள் மூச்சை இழுத்துவிட்டு என்னை விசித்திரமாக நோக்கினாள்.

“இந்த மாதிரியான சிரிப்பான விஷயங்களை எங்கே பெற்றாய்?” ஒருவாறு சமாளித்துக் கொண்டு கூறினேன்.

“பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளிடம்”

“அவர்கள் சொல்வதைக் கேட்காதே, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது”

“உங்களுக்குத் தெரியுமா, அப்பா?”

மற்றொரு உடும்பு எங்கள் காலடியில் விழுந்ததால் நான் வியர்த்துப் போனேன். என்னை அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அது நடந்தபோது தான்.

அப்போது தான் நான் திடீரென வெடித்து அழுதேன், ஏன் என்று தெரியவில்லை, நிறுத்த முடியும் என்றும் தோன்றவில்லை.

நான் குனிந்து நடந்து அவள் உயரத்திற்கு நின்று, கண்களைத் துடைத்துக் கொண்டேன். மக்கள் எங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அது மேலும் மோசமாக மாற்றியது.

“இப்போதே, இப்போதே” என் முதுகைத் தட்டியவாறு முகத்தைத் தொட்டு என் மகள் சொன்னாள். “கவலைப்படாதீங்க அப்பா. நாம் எல்லோரும் கடலுக்கு அடியில் செல்லப் போகிறோம். நாம் மீனைப் போல வாழப் பழகிக் கொள்ள வேண்டியதுதான்.”

அந்த ஆழமான சுரங்கங்கள்

ஆப்பிரிக்காவாக இருந்த இடத்தில் இந்தத் துகள்கள் கிடைத்தன. நாளிதழ் ஒன்றின் கசங்கிய பக்கத்தில் இருந்து கிடைத்த குப்பை இது.

சுரங்கங்களிலிருந்து வெளியே வரும்போது மட்டும்தான் நான் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன் என்று எனக்கு நினைவிருக்கிறது. பாக்ஸைட் தாதுக்களால் மூடப்பட்டு, என் கண்களைச் சுற்றி வளையம் போல் அது படிந்திருக்கும். நாங்கள் எங்களது சாதாரண உடைகளையும் கேன்வாஸ் காலணிகளையும் அணிந்து சுரங்கத்தினுள் செல்வோம். அவர்கள் துளையிடும் போது பறக்கும் துகள்கள் மூச்சுக் காற்றின் மூலம் உள் செல்லும். மேலே வந்ததும் மூக்கை சிந்தும்போது அதிலிருந்து ரத்தம் வெளியேறும். இது எல்லாம் இயல்பானது என்று நினைக்கும் என்னை, என் குடும்பத்தைக் காப்பாற்ற பணம் சம்பாதிக்கும் என்னிடம், இதற்கு வேறு வழி இருக்கிறது என்று யாரும் ஒருபோதும் கூறியதில்லை. நான் பள்ளிக்குச் செல்லவே விரும்பினேன், ஆனால் என் தாய் நான் சிறு வயதாக இருந்தபோதே இறந்துவிட்டதுடன், அவர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த என் தந்தையும் பின்னர் நீண்ட நாள் வாழவில்லை. எங்களைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லாததால் விரைவில் நாங்கள் ஏழு பேரும் நடுத் தெருவில் நின்றோம். எங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள எங்கள் உறவினர்கள் விரும்பவில்லை. சில உறவினர்கள் எங்களைக் கவனித்துக் கொள்ள முயற்சித்தாலும்கூட அவர்களுக்கே பல பிரச்சினைகள் இருந்தன. பிறகு எனது சகோதரர்கள் பிரிந்து செல்ல, வேலை செய்த இடத்தில் முதலாளியால் கர்ப்பமடைந்த என் சகோதரியையும் அதற்குப் பின் நான் பார்க்கவே இல்லை. ஒருநாள் என்னைச் சந்தித்த ஒருவன் எனக்கு எளிதாகப் பணம் கிடைக்க வேண்டுமா என்று கேட்க நான் ஆமாம் என்றேன். நகரத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு மற்றவர்களுடன் என்னையும் ஒரு வண்டியில் அழைத்து வந்த அவன், பூமியின் அடியில் நாங்கள் செல்லப் போகிறோம் என்பதை அறியும் முன்பே இந்த சுரங்கவாயிற் குழியில் எங்களைத் தள்ளிவிட்டு விட்டான். நான் இறந்துவிடுவேன் என்று முதல் நாளிலேயே நினைத்தேன். நரகத்தின் கீழே நான் சென்று கொண்டிருப்பதாக நினைத்தேன். என்னோடு வந்தவர்களும் முதன்முறையாகச் சுரங்கத்தின் கீழே சென்று கொண்டிருந்தனர். அவர்களை எல்லாம் எங்கே கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் வெளிறிப் போய் இருந்தார்கள். வீடுகளும் குடும்பங்களும் இல்லாத தெரு நாய் மனிதர்கள். அவர்கள் இறந்தால் யாரும் கவனிக்கமாட்டார்கள், யாரும் கவலைப்பட மாட்டார்கள். நாங்கள் தான் சுரங்கத் தீவனம். எனக்கு நன்றாக நினைவுள்ளது, நாங்கள் ஆரம்பித்த பின் ஒருநாள், உள்ளே இருக்கையில் சுரங்கம் சரிந்து விழுந்தது. எங்களைக் காப்பாற்ற அவர்கள் வரவில்லை. பாறைகளும் பூமியும் எங்கள் மீது சரிந்து விழ, செந்நிற துகளடர்ந்த அபாயகரமான காற்று மட்டுமே எங்களுக்கு சுவாசிக்க இருந்தது. உயிருடன் இருந்த எங்களில் சிலர் வழியைத் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அதற்கே கிட்டத்தட்ட ஒருநாள் ஆகிப்போனது. வெளிச்சத்திற்குள் நாங்கள் வந்து சேர்ந்ததும், சுரங்கத்தை இடித்ததாக எங்களுக்கு தண்டத் தொகை விதித்து சிறையில் அடைத்தனர். மேலும் நான்கு சுரங்கங்கள் சரிந்து விழுந்து மூடியதாக அறிந்தபோது நாங்கள் சிறையில் இருந்தோம்.  பிறகு வடக்கு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்தோம். பூமி இரண்டாகப் பிளந்து கிராமங்கள் எல்லாம் அதில் விழுந்த கதைகளைக் கேள்விப்பட்டோம். நிலங்களும் காடுகளும் காணாமல் போவதையும் அலைகள் நகரத்திற்குள் சீறிப் பாய்ந்து டிராக்டர்களையும் அலுவலகங்களையும் மலர்களையும் புதைத்துச் சென்றதாக கேள்விப்பட்டோம். புயல்காற்று வீடுகளை எல்லாம் ஊதிப் பறக்கவிட்டதைக் கேள்விப்பட்டோம். நகரங்கள் எல்லாம் சூறாவளியில் சிக்கிச் சுழன்று வானோக்கி மேலெழுந்து பறந்து மீண்டும் பூமியில் விழும் முன் சிதறியதாகக் கேள்விப்பட்டோம். மரங்கள் காற்றில் தலைகீழாகப் பெயர்ந்து விழுந்து மக்கள் பீதியடைய, தேவாலயங்கள் சூறாவளியின் கைப்பிடியில் சிக்கிச் சிதைந்து போனதாக நாங்கள் கேள்விப்பட்டோம். பின்னர் எங்களுக்குத் தெரிந்திருந்த உலகம் காணாமல் போனதாகக் கேள்விப்பட்டோம். புயலின் வெண்மையான கண்ணில் அனைத்தும் மறைந்து போனதுடன் அது எங்கே சென்றது என்பதும் யாருக்கும் தெரியாது. எங்களில் சுரங்கங்களில் சிக்கியவர்களும், சிறையில் அழுகியவர்களும் மட்டுமே காப்பாற்றப்பட்டதாகத் தெரிகிறது. புயல் எங்கள் சிறையின் கூரையைத் தூக்கி வீசியதும், வானம் ஒரு கணம் எங்களுக்கு எமது எல்லையற்ற சுதந்திரத்தைக் காட்டியது. பின்னர் கற்கள் மட்டுமே கிடந்த உலகத்திற்குள் நாங்கள் சென்றோம்…

தெய்வங்கள் கிளம்பின

பெரும் பாறை ஒன்றின் அடியில் சிக்கியிருந்த பெயரில்லாப் புத்தகம் ஒன்றின் பக்கத்திலிருந்த இத் துண்டுக் காகிதம் கிடைத்தது.

 நாங்கள் பாட்டு பாடியபடி செல்லும் பெருக்க மரக் (Baobab) காடுகளில் இருந்த கோயிலுக்குச் செல்லும் வழியில், அந்த மரங்களைவிட உயரமான ஆவிகளும் இரவுகளில் இரோகோ மரங்களின் இலைகளில் நீல நிற மூடுபனியும் அலைவுறும். ஆவிகளின் முணுமுணுப்பு பேச்சுகளையும் கேட்க முடியும். அவர்கள் பூமிக்குள் இருந்து பேசுவதைப் போல கீழிருந்து ஒலி எழுப்புவது, இலையசைவுகளைப் போலவும் பல்லிகளைப் போலவும் குரல் கொடுப்பது எல்லாம் இந்தக் காட்டுக்குள் வரக் கூடாதாவர்களை குழப்புவதற்காக அவர்கள் செய்யும் ஒருவிதத் தந்திரம் ஆகும்.  காட்டுக்குள் சென்றதும் நாங்கள் பாடுவதை நிறுத்தினோம். நாங்கள் எங்கள் துயரங்களைப் பாடிக் கொண்டிருந்தோம். இந்த உலகம் தலைகீழாக மாறியிருந்தது. எதுவும் அர்த்தமுடையதாக இல்லை. இந்த உலகில் என்ன நடக்கிறது என்பதை குறிசொல்வோர் மற்றும் ஆவிகளிடமிருந்து அறிந்து வருமாறு எங்களது குலப் பெரியவர்களாலும் துக்கமடைந்த மக்களாலும் நாங்கள் துரத்தப்பட்டோம்.

ஆறுகள் வற்றின, வானம் வானத்தை போலவே இல்லை. ஆறுகள் கொதித்துக் கொண்டிருக்க, வானமோ வெண் பொடியைக் கீழே அனுப்பிக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் என்ன பொருள்? சில நேரங்களில் மிகக் குளிராகவும், நிலத்தில் பனிக் கட்டிகளும் தோன்றின. பிறகு அடுத்த நாள் எல்லாம் பற்றி எரிவது போல மிகுந்த வெப்பமாக இருக்கும், மனிதர்கள் நிலத்தில் சுருண்டு விழுத் தொடங்க, தங்களால் காண முடியாதது போன்று அல்லது காற்றில் ஏற்பட்ட விசித்திர மாற்றங்களால் பறவைகள் தலைசுற்றி சுவற்றில் மோதி வீழும். உலகம் இயல்பாக இல்லை. எங்கெங்கும் தேவாலயங்களில் பாடல்களும் பிரார்த்தனைகளும் ஒலிக்க நிலைமை மோசமாகிக் கொண்டிருந்தது.

நாம் அநேகமாக நமது புராதன கடவுளர்களிடமும் ஆலயத்திற்கும் சென்று நமது மூதாதையர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும் என எங்களது பெரியவர்கள் கூறினர். எனவே அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தனர். வாழ்வின் பயங்கரமான விஷயங்களால் பாதிக்கப்பட்டவன் நான். கஷ்டத்தாலும் வலியாலும் என் கண்கள் பூத்துவிட்டன. கொடூரமான வாழ்வின் காலடியில் நான் தவம் செய்கிறேன். அவர்கள் என்னைத் தேர்வு செய்தபோது நான் வியப்படைந்தேன். இரவில் அடர்வனத்தில் நடந்து செல்கையில் குறுக்கிடும் ஆவிகளை விரட்டுவதற்காகக் கையில் ஒரு மணியை அடித்தவாறே நான் அந்த யாத்திரையை வழிநடத்திச் சென்றேன். மடாலயங்களின் காலத்திற்குப் பின்பு யாரும் சென்றிராத, அலையாத்தி மரங்களின் வேர்கள் பின்னி மறைந்து உட்பொதிந்து போய் கிடக்கும் அடர்வனத்தினுள் புராதனக் கடவுள்கள் இன்னமும் வீற்றிருக்கும் புனிதமான காட்டின் நடுவே நாங்கள் சென்றோம்.

இத்தனை ஆண்டுகளாக அவர்களைக் கைவிட்டதற்காக எங்கள் மீது அந்த மூதாதைக் கடவுளர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள் என்று அச்சப்பட்டவாறே நாங்கள் சென்றோம். இந்த ஆலயத்திற்குக் கடைசியாக எப்போது வந்தோம் என்று யாருக்கும் நினைவில்லை. ஆலயம் எங்குள்ளது என்றும் யாருக்கும் நினைவில்லை. பாதி மறந்துபோன கதைகளிலும் குழந்தைகளின் பாடலிலும் மிச்சமிருந்த குறிப்புகளைக் கொண்டும் எங்களது வெவ்வேறு துண்டு துண்டான நினைவுகளில் இருந்ததைக் கொண்டும் அதை நாங்கள் மீண்டும் கண்டறிந்தோம். புதர்கள் வளர்ந்து பாதை மூடிக் கிடந்ததால் புதிய பாதையை உருவாக்க வேண்டியிருந்தது. பெரிய ஆமைகள் இருந்த அந்த இடத்தில், வேர்களில் செம்மலர்கள் பூத்த அலையாத்தி சதுப்பு நிலம் கொழித்துக் கிடந்தது. எங்கும் குருதி சிதறிக் கிடந்தது போலிருந்தது.

மண்டிக் கிடந்த முள்ளையும் புதர்களையும் கடும் சிரத்தைக்குப் பின் ஊடுருவி, பழைய தடத்தைக் கண்டறிந்த பின், விசித்திரமான மலர்களையும், பழைய மடாலயங்களின் வம்சாவளியான புள்ளிகள் கொண்ட மலைப் பாம்புகளையும் பார்த்துப் பின்வாங்கி, எங்கள் வழியை அமைத்த பின்னர், புராதனக் கடவுளரின் சீடர்கள் எல்லாவற்றையும் புதிதாக வைத்திருக்க ரகசியமாக வரவிருப்பதைப் போல பழைய ஆலயத்தின் இடமானது மாசற்றும் பாதுகாத்தும் வைக்கப்பட்டிருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். ஆனால் அது அவ்வாறு இல்லை. நாங்கள் அந்த ஆலயத்தை பீதியும் வியப்பும் கலந்த உணர்வோடு பார்த்தோம்.

எங்களுடன் இருந்த மூலிகை வைத்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஓடிச் சென்று, வனத்தால் பாதுகாக்கப்பட்ட சிறு கோயிலில் இருந்த தந்தைக் கடவுள் மற்றும் தந்திரக்காரனான ஓகன் மற்றும் இஷூ கடவுளர் சிலைகள் முன் ஆற்றலிழந்து வீழ்ந்தனர். துறவிகளும் வைத்தியர்களும் ஒருசேர பிதற்றத் தொடங்கினர். நாங்கள் தள்ளி நின்று இந்த வினோத மாற்றத்தைக் கவனித்தோம். வைத்தியர்களின் குரல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களைப் போல உள்ளடங்கி, முகத்தில் சித்தம் கலங்கிய சிரிப்புடன், வேறு மனிதர்கள் போலத் தோன்றினர். பிறகு, அந்தக் கோயிலைக் கண்டுபிடித்த அதிர்ச்சியிலிருந்து மீளாத எங்களை நோக்கி அது பேசத் தொடங்கியது. மூலிகை வைத்தியர்கள் மூலம் கோயில் பேசியது. திடீரென தாங்க இயலாத வேதனையில் திருகப்படுவதைப் போல, முறுக்கப்படுவதைப் போல, அவர்கள் அலறத் தொடங்கியதை நாங்கள் கவனித்தோம். முதலில் அவர்கள் பாம்புகளால் தீண்டப்பட்டதாகவோ காட்டில் உள்ள விஷப் பூச்சிகள் அல்லது தேள்களால் கடிபட்டனர் என்றே பயந்தோம்: அவர்கள் முகம் திருகி நிலத்தில் புதையும்படி வீழ்ந்தனர். ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் இதற்கு முன் யாரும் கேட்டிராத அர்த்தமற்ற சொற்களால் கத்தத் தொடங்கினர். நாங்கள் உறைந்து போயிருந்தோம். பிறகு என் உடல் தகவல்தொடர்பைப் பெற்றது. எப்படி என்று எனக்குத் தெரியாது. நான் அதைப் பெற்றேன். இந்த மூலிகை வைத்தியர்கள் மூலம் பூமி ஊளையிட்டது. அதன் ஊளை என்னைப் பிடித்துக் கொண்டதால் ஒரு மரத்திற்கு எதிரே விழுந்த நான், என் அந்தரங்க உறுப்புகளில் மின்சார ஒயர்களால் அதிர்ச்சி கொடுக்கப்பட்டதைப் போல அலறினேன். பின்னர் திடீரென அந்த வலி நின்று, ஒரு பெரும் அமைதியான தருணம் என்னை ஆட்கொண்டது. அது மரண அமைதி போன்றிருந்தது.  பூமியிலிருந்து விலகிய யாத்திரையில் அவர்கள் செல்வதை நான் பார்த்தேன். தெய்வங்கள் கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் கிளம்பினர், யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. மிக நீண்ட பவனியாக இருந்த அதில், நிலத்தின் இரகசியங்கள், முன்னோர்களின் சின்னங்கள், ஆவிகளின் உலகுடன் இணைக்கும் மணியிழைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு திடமாக நமது உலகை விட்டு அவர்கள் செல்வதைக் கண்டேன். முடிவு வந்துவிட்டது என்பதைப் பின்னர் அறிந்தேன். ஒரு முடிவின் தொடக்கம். அந்த பவனியில் நானும் சேர்ந்து கொள்ள வேண்டும் என விரும்பினேன். அந்த விண்ணொளியை அடைய இயலாத அளவிற்கு ஒரு உலகியல் விஷயமாக நான் இருந்தேன். மரணமடைந்துவிட வேண்டும் என்று எப்போதாவது நான் நினைத்திருப்பேன் என்றால் அது அந்தத் கணத்தில்தான்; இப்போது அவர்கள் செல்கிறார்கள். கடைசி மூச்சுள்ள வரை, மரிக்கப் போகும் உலகின் உபயோகமற்ற சாட்சியங்களாக நாங்கள் இங்கே தனித்து விடப்படுவோம். எங்களால் செய்ய முடிந்தது எல்லாம் அவர்கள் கிளம்பிச் செல்வதைப் பார்ப்பதுதான். மனிதப் பிறவிகளான எமது பெரும் பரிசுகளில் ஒன்று எதிர்காலத்தை அழிப்பதற்கான எமது புத்திசாலித்தனம் தான் என்பதை அவர்கள் நீண்ட காலமாக அறிந்திருந்ததைப் போல பிரியாவிடைக்கான எவ்வித உடல் அசைவுகளும் இன்றி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்…

ஒரு முறை நான் கண்ட தரிசனம்

பெருவின் காடுகளில் கண்ணாடிப் புட்டி ஒன்றில் பாதி அடைக்கப்பட்டு இது காணப்பட்டது.

 ன்றாடச் செய்திகளின் கொடிய எதிர்மறைத் தன்மையை மிஞ்சும் ஒரு தரிசனம் தேவைப்பட்டதால் நாங்கள் இங்கு வந்தோம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திகில் ஏற்பட்டது. அதனால் ஒரு நண்பர் கூறியதைக் கேட்டு சில மாந்திரிகர்களைச் சந்தித்து, மனதை தெய்வீக உச்சத்திற்குக் கொண்டு செல்லும் அயகுவஸ்கா சடங்கில் பங்கேற்பதற்காக பெருவிற்கு வந்தோம். புரியாத புதிராக மாறியிருந்த அன்றாட வாழ்விலிருந்தும், தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் இருந்து கொட்டும் வினோதமான செய்திகளிலிருந்தும் வெளியேற விரும்பினோம். நாங்கள் ஒரு புதிய தரிசனத்தை விரும்பினோம். எல்லோரும் விரக்தியிலும் குடியிலும் போதை வஸ்துக்களிலும் மூழ்குவதாகத் தோன்றியது. என் நண்பர்களில் நிறையப் பேர் தற்கொலை செய்து கொண்டனர். உலகம் அவர்களை வெளியேற்றும் முன்னரே அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். மரணத்திற்கு எதிரான ஒருவித முன்கூட்டிய தாக்குதல் இது. எங்கெங்கும் அதீத மரணம். பெரிதும் சிறிதுமான மரணங்கள். நாங்கள் வாழ்க்கைக்கு ஒருவித சுருதியேற்ற விரும்பினோம்.

அந்த மந்திரவாதி குள்ளமாகவும் பசும் மஞ்சள் கண்கள் உடையவராகவும் இருந்தார். சொற்களில் நம்பிக்கை இல்லாதவர் போன்று குறைவாகவே அவர் பேசினார். என்னால் அதை மௌனமாக எழுத முடியும். எங்களை வட்டமாக அமர வைத்து, நாங்கள் கடந்து செல்ல முடியாதவாறு அந்தச் சடங்கில் பங்கேற்க வைத்தார். பிறகு நாங்கள் அந்தத் தீர்த்தத்தை அருந்தினோம். பெரிய மென் படுக்கையில் நான் விழுந்து கிடந்தாலும் முதலில் எதுவும் நிகழவில்லை. பிறகு காலமும் வெளியும் வளைய மெய்நிலை மாற நான் ஒரு பெருங்கடலில் படகு ஒன்றில் இருப்பதை அறிந்தேன்.

அதுதான் உலகின் கடைசிப் படகு. அது பொன்னிறமான, செம்பொன்னிறமான, ஆரஞ்சு பொன்னிறமான பாய்மரங்களைக் கொண்டிருந்தது. மொத்தம் மூன்று இருந்தது. கடல் விரிந்தும் இளஞ்சிவப்பு மற்றும் பச்சையாகவும் வானம் சிவந்த தூசிப் படலமாகவும் இருந்தது. உலகின் தொடுவானத்தில் வானம் வளைந்திருப்பதாகத் தோன்றியது. மூன்றடுக்குகளைக் கொண்ட அந்தப் படகை முதன்முறையாக நான் ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதன் ஓரடுக்கில் உலகிலிருந்த கடைசி ஒன்பது பையன்களும் ஒன்பது பெண் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காதவாறும் உறவு கொள்ள முடியாதபடியும் தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பரிசுத்தமாகப் பாதுக்காக்க வேண்டியிருந்தது. அவர்கள், தவறாகப் போய்விட்ட இந்த உலகில் மிச்சமிருந்த கடைசிக் குழந்தைகள் ஆவர்.

படகின் அடியில் உலகில் மிச்சமிருந்த அனைத்து விலங்கினங்களும் சோடி சோடியாக இருந்தன. அந்த இடத்தில் அனைத்து பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இடமிருப்பதாகத் தோன்றவில்லை. படகின் மிக அடிப்பாகத்தில் எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று இருந்தது. ஒலி அல்லது ஒளி அல்லது சக்தி போன்ற எல்லையில்லாத சிறிதான ஒன்று இருந்தது; அது தான் உலகின் ரகசிய சக்தி. ஆனால் அது என்ன என்பதோ யார் அங்கு வைத்தார்கள் என்பதோ எனக்குத் தெரியாது. அன்னப் பறவைகளால் படகு இழுத்துச் செல்லப்பட்டது. பெரும்புயல்களின் நடுவே அன்னங்கள் அமைதியாக இழுத்துச் சென்றது இயற்கையை மீறிய செயலாக இருந்தது. படகின் பக்கவாட்டில் எட்டு ஆக்டோபஸ்கள் அன்னங்களின் வேலையில் உதவிகரமாக இருந்தன.

நாங்கள் எல்லாம் காப்பாற்றப்படவிருக்கும் இடத்தை நோக்கிய பயணத்தின் மூன்றாவது நாளில், குழந்தைகள் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்கியிருந்தனர். அவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்பதால் அதைப் பார்க்க திகிலாக இருந்தது. அவர்கள் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கப்படும் இடத்திற்கு பரிசுத்தமாகவும் வெகுளித்தனத்தோடும் வர வேண்டும். கடல் கருஞ்சிவப்பு வண்ணத்திலும் வானம் இதுவரை கண்டிராத வடிவத்திலும் இருக்க நாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்றோ எதனிடமிருந்து நாங்கள் புறமுதுகிட்டு ஓடுகிறோம் என்றோ தெரியவில்லை. அப்போது எனக்குத் தெரிந்தது எல்லாம் காலம் மாற்றிவிட்டது, அநேகமாக காலம் என்ற ஒன்றே இல்லை என்பதுதான்.

நோயும் தீயும் உயரும் கடலும் வளிமண்டல நச்சும் புவியெங்கும் பெருக்கெடுப்பதை உணர்ந்தேன். வரலாறு முடிந்தது. விவரிப்பதற்கான காலம் கடந்துவிட்டது. கடலின் மீது தனிமையில் அலைந்து கொண்டிருந்த பலவீனமான கனவுகள் மட்டுமே மிச்சமிருந்தன.

படகில் ஒரு குழந்தை பேசுவதைக் கேட்க முடிந்தது.

அந்தப் பெண் குழந்தை ஒரு புதிய கதையை உருவாக்கியது போல, “உலகின் கடைசியில்… அமைதி திரும்பும்” என்று கூறினாள்.

பிறகு அந்தக் குரல் காற்றில் கலந்து விலகிச் சென்றது.

*

வைதான் நாங்கள் கண்டறிந்த சில விஷயங்கள். ஒருவகையில், அந்தப் பெண் கூறியது சரிதான். இந்த கிரகத்திற்கு அமைதி திரும்பி வந்தது. எங்கள் ஆய்வுப் பயணத்தில் நாங்கள் கடந்து வந்த விண்மீன் கூட்டங்களில் இது தான் மிக அழகான, மிக அமைதியான கோள். அண்மையில் உயிரினங்கள் வாழ்ந்தன என்பதற்கான சான்றுகளை அளித்த ஒரே கோள் நிச்சயமாக இது தான். நாங்கள் ஏராளமான கலைப் படைப்புகளையும் இயந்திரங்களின் உடைந்த பாகங்களையும் சேகரித்தோம். அவர்களது அன்றாட வாழ்வில் பெரும்பாலும் பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி போன்றவற்றை உபயோகித்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. நாங்கள் சேகரித்த சான்றுகளிலிருந்து, அவர்கள் பொருட்களையே வழிபட்டனர் என்று அறிய முடிகிறது. அவர்கள் சிறந்த சிந்தனைகளோ அல்லது கருத்துக்களோ கொண்ட இனம் என்று கூறும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்களாகத் தெரியவில்லை. அவர்களது தத்துவத்தால் அவர்களே மட்டுப்படுத்தப்பட்டவர்கள் போலத் தெரிகிறது. அவர்களது படிமங்கள் அவர்களுடையவையே என்பதோடு எல்லாவற்றையும் தங்கள் மூலமே அவர்கள் பார்த்தனர். இந்த பிரபஞ்சத்தில் நாங்கள் சந்தித்த, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன நாகரிகங்கள் போலன்றி, இந்த நாகரிகம், அதன் இருப்பிற்கான மாய இடைவெளியில், எல்லையற்ற சாத்தியங்கள் நிரம்பிய பிரபஞ்சம் சார்ந்து வியக்க வைக்கும் கருத்து எதுவும் கொண்டிருக்கவில்லை. மொத்தத்தில் அவர்கள் சிறிய மற்றும் பழங்குடி இனமாகவும், இனம் மற்றும் பாலின கருத்துக்களால் தூண்டப்பட்டவர்களாகவும் தோன்றினர். ஒப்பீட்டளவில் அவர்களது குறுகிய வரலாற்றில் ஒரு சிறு கணம்கூட தாங்கள் பிரபஞ்ச ஒழுங்கின் ஒரு பகுதிதான் எனப் புரிந்துகொள்ளவில்லை. பேரண்டத்தின் பிரபுக்கள் போன்ற உணர்வே அவர்களை ஒரு இனம் என்ற அளவில் முற்றிலும் தவிர்க்கச் செய்தது.

ஒருவேளை குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி எழ இயலாமைக்கான காரணமாக அவர்கள் தங்களை எப்படிப் பார்த்தார்கள் என்பதும், சிறந்ததைக் காட்டிலும் சிறியதான இந்த உணர்ச்சிப்பூர்வ அடையாளமானது, பேரழிவிற்கு ஒவ்வொரு நாளும் பங்களித்து, அதை மாற்ற இயலாத அவர்கள், பேரழிவு தங்களை நோக்கி வருவதைக் கூட உணராமல் இருந்தனர் என்பதையே இது விளக்குகிறது.

மாற்றத்திற்கான இந்த மக்களின் திறனானது, அவர்களது ஆன்மிக ஆதிக்கத்தின் உண்மையான கருத்துருவாக்கத்தைப் போலப் பெரியதாக இருக்கலாம். தங்களை ஒரு தூசி என்று நினைத்த அவர்கள் தூசிக்கே சென்றுவிட்டனர்.

இந்தக் கோள் ஒரு காலத்தில் அவர்களது வாழ்வின் மகிமை பொருந்திய இருப்பிடமாக இருந்தது என்பதை நினைக்கையில் விவரிக்க இயலாத சோகத்தையே அது அளிக்கிறது.

இந்த 5xxxxx யுகம் தாண்டிய பிரபஞ்சத்தில், வியக்க வைக்கும் பூமியை விட்டுவிட்டு, தங்கள் இருப்பின் மகத்துவத்திற்கும் அமைதிக்கும் சாட்சியமாகத் திகழ்ந்த, பிரபஞ்சத்தின் மற்ற கோள்களின் ஆய்வு வரைபட பணியை நாங்கள் தொடர்கிறோம்…


பென் ஒக்ரி (1959- ): நைஜீரியாவைச் சேர்ந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர். பின் நவீனத்துவ, பின் காலனியச் சூழலில் வந்த முக்கியமான ஆப்பிரிக்க எழுத்தாளராகவும், சல்மான் ருஷ்டி மற்றும் கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்க்கு இணையாகவும் போற்றப்படுகிறார். தனது முதல் நாவலான Flowers and Shadows (1980) வெளியானது முதல் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். The Famished Road என்ற நாவலுக்காக 1991-இல் புக்கர் பரிசு பெற்றார். அவரது படைப்பில் ஆவியுலகம், ஆன்மிக உலகம் ஆகியவை இடம் பெறுவதால் பின் நவீனத்துவத்தில் அடங்காது எனக் குறிப்பிடுகின்றனர். அதே வேளை அவரது படைப்புகளில் வரும் பாத்திரங்கள் புதுயுக இயக்கவாதம், ஆன்மிக எதார்த்தவாதம், மாய எதார்த்தவாதம், தரிசன பொருள்முதல்வாதம், இருத்தலியம் ஆகியவற்றின் கூறுகளைக் கொண்டுள்ளதால் இவரது படைப்புகளை ஏதாவது ஒன்றில் வகைப்படுத்த முடியாததாக உள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால் அவர் இதை மறுக்கிறார். அவரது படைப்புகள் கனவுத் தர்க்கம் கொண்டவை என்றும் தத்துவப் புதிர்தன்மை கொண்டவை என்றும் கூறுகிறார். ஏராளமான நாவல்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

Emergence Magazine என்ற சூழியல் இணையதளத்தில் வெளியான And Peace Shall Return என்ற சிறுகதையின் தமிழாக்கம்.

தமிழில் க.ரகுநாதன் – திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இலக்கிய ஆர்வலர். மொழிபெயர்ப்புகள் மற்றும் கவிதைகள் எழுதிவரும் இவர் அரசுப் பணியாளராக கோவையில் பணியாற்றுகிறார்.

4 COMMENTS

  1. சுற்றுச்சூழலை வலியுறுத்தி தொடர்ந்து பயணிக்கும் கதை சிறந்த மொழி பெயர்ப்பு / சிறப்பு

  2. வித்தியாசமான நீண்ட சிறுகதை, அருமையாக மொழிபெயர்ப்பு. குழப்பமின்றி தெளிவாக வாசிக்க முடிந்தது. வாழ்த்துக்கள் நண்பரே!👍

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.