ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

றக்கம் அடர்நீலமாகச் சுருண்டு நீர்ச்சுழி போல் உள்வாங்கிக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. விழித்திருக்கும் வேளைகளில் மனதுக்கு வெறுப்பில்லாத மணியோசை, இரவில் திடுக்கிட இருந்தது. கோவைக்கு மாற்றலாகி வந்து, பிரயத்தனப்பட்டு தொலைப்பேசித் தொடர்பு வாங்கிய பிறகு, நள்ளிரவு அழைப்புகள் எதுவும் நல்ல செய்தி கொணர்ந்து தரவில்லை. காலம் கனவேகமாகக் கொண்டுவந்து சேர்த்தது அலைபேசி எனும் இறைத்தூதன். அஃதே பல நேரத்தில் சாத்தானுமாம்.

இரவு பத்தரைக்கு மேல் காரண காரியமின்றி நண்பர் எவரும் வழக்கமாக அழைப்பதில்லை. தீவிர முயக்கத்தில் இருக்கும்போதே அலைபேசியிலும் உரையாடுபவர் இருக்கக்கூடும். அட்டாவதானம், தசாவதானம், சோடச அவதானம், சதாவதானம் போல சிலருக்கு சில அவதானங்கள் வாய்த்து விடும்போல! எனக்கோ, எப்போதாவது அக்கோலாவில் இருந்தோ, நவ்சாரியில் இருந்தோ இரவு பத்தரை மணிவாக்கில் அழைப்பார்கள் நண்பர்கள். அவர்கள் இரவு பன்னிரண்டு முதல் காலை எட்டு மணிவரை உறங்குபவர்கள். எடுக்காமல் விட்டாலும் பொருட்படுத்த மாட்டார்கள்.

இரவு ஒன்றேகால், மூன்றே முக்கால் என வரும் அழைப்புகள் திகிலூட்டுவன. பெரும்பாலும் அது சாவின் தகவல் மணி. அலைபேசித் தொடர்பு கிடைத்த சில தினங்களில், நள்ளிரவில் வந்த அழைப்பு மணி என்னை வளர்த்து ஆளாக்கிவிட்ட சித்தி இறந்துபோன செய்தியுடன் கனத்திருந்தது. வெளியூர்களில் ஒற்றைக் குடும்பமாக வாழ்பவர் எவராயினும் அந்த அழைப்புகள் அச்சமும் பரிதவிப்பும் பரத்துவன. முதலில் சோகம், அடுத்து பயணத்துக்கான பணம் திரட்டுவது. 1976-ல் பம்பாயில் தனியனாக வாழ்ந்திருந்தபோது, 55 வயதான அப்பாவின் சாவுச் செய்தி அவசரத் தந்தியாக வந்தது.

எதுவானாலும் சாவின் மணியோசை எவ்விதம் இனிமையாக இருக்க இயலும்? எனில் இனிமை என்பதும் கால, தேச, வர்த்தமானம் சம்மந்தப்பட்ட ரசமா?

முன்பெல்லாம் உறங்கத் தலைப்படுபவர் தலைமாட்டில் வெற்றிலைச் செல்லம், மூக்குப்பொடி டப்பி, சிகரெட் – பீடி – சுருட்டும் தீப்பெட்டியும், மறக்காமல் தண்ணீர்ச் செம்பு இருந்தன. பகவத் கீதையோ, பைபிளோ, திருக்குரானோ, தேவாரம் திருவாசகம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமோ கூட இருந்திருக்கலாம். சிலருக்கு அலாரம் டைம்பீஸ் இருந்தது. சிலர் விக்ஸ், அமிர்தாஞ்சன், டப்பிகள் வைத்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான கோடிகள் ஆட்டையைப் போட்டவர், கணக்கற்ற வன்புணர்வு செய்தவர், தங்கம் – நவரத்தினங்கள், போதை மருந்துகள் கடத்தியவர், அராசங்கக் கரன்சியைத் தாமே அச்சிட்டவர், ஒழுக்கறைப் பெட்டிகளில் இரண்டாயிரம் – மூவாயிரம் முத்திரைப் பொன் நாணயங்கள் வைத்திருப்பவர்கள், அறை முழுக்க இரண்டாயிரம் – ஐந்நூறு – இருநூறு – நூறு பணத்தாள்களை அட்டி போட்டு அடுக்கிவைத்திருப்பவர், புறம்போக்கு நிலங்களை, ஆலய நிலங்களை அபகரித்து மாற்றியவர் என்பவர் தலைமாட்டில், தலையணைக்கு அடியில் உரிமம் பெற்ற, தோட்டாக்கள் நிரம்பிய கைத்துப்பாக்கி வைத்திருக்கலாம். ஒருவேளை சுதேசித் துப்பாக்கி வெடிக்காமல் போய்விட்டாலோ என்ற ஐயத்தில், இந்தியா தந்தையர் நாடென்றாலும் பாகிஸ்தானிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட கள்ளத் துப்பாக்கியும் இருக்கலாம். ராம்பூர் சூரியோ, திருச்சேத்தி அரிவாளோ கூட இருக்கலாம்.

பங்களா வாதிலில் இருந்து நான்கு மணி நேரமும் சேவையில், அரசு ஊதியத்தில், மக்கள் வரிப்பணத்தில், ஒமேகா+++ பாதுகாப்பு அடுக்கில், ஆறேழு பச்சைப் பூனை காவல் படையினர் இருக்கமாட்டார்களா? குறைந்த பட்சம் சொந்தச் செலவின் இரவுக் காவலாளி இருக்க மாட்டார்களா? பிழையின்றி இருப்பார்கள்! எனினும் தொழுத கையுளும் படை ஒடுங்குமே! பகைவன் என்பவன், கம்பன் சொற்களைக் கடன் வாங்கினால்,

‘சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறிட்ட கோணிலும் உளன்’தானே!

எது எப்படியோ, வாழ்ந்து மடியட்டும்! ஐந்து வயது கடந்த இருபாலர் சிறுவர் முதல் மின் மயான வாசலில் கால் நீட்டிப் படுத்திருக்கும் முதியோர் வரைக்கும் தலைமாட்டில் செல்ஃபோன் இருக்கிறது இன்று. நான் பேசும் காலத்து, கொரோனாவின் முதல் அலை போல் பயன்பாடு பரவத் தலைப்பட்டிருந்தது. ஓய்வு பெற்றதும் எங்கள் நிறுவனம் வாங்கித் தந்திருந்த எண்ணூறு ரூபாய் நோக்கியா கருவி எனக்கே அருளப்பட்டது. மாதாமாதம் பணம் கட்டினால் போதும். எண்ணும் மாற்றப்படவில்லை.

தலைமாட்டில் கிடந்த செல்ஃபோன் தொடர்ந்து ஓசை எழுப்பியது. கண்களை அரைகுறையாகத் திறந்து, விரல்களால் தைவரல் செய்து காதில் வைத்தபோது, திருவனந்தபுரத்திலிருந்து மூத்த முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவரான ஆ.மாதவன் குரல். நானவரை மாதவ அண்ணாச்சி என்பேன். அவரிடம் என்றுமே செல்ஃபோன் இருந்ததில்லை. சாலைக் கம்போளத்தில் இருந்த வாடகைக் கடை ‘செல்வி ஸ்டோர்ஸ்’. அங்கும் வீட்டிலும் தொலைப்பேசி இருந்தது.

“என்ன அண்ணாச்சி? இந்த சமயத்திலே?” என்றேன். இங்கு சமயம் என்றால் நேரம் என்று பொருள். ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் எனும் மதங்கள் அல்ல.

“நகுலன் போயிட்டாரு!”

என்றார். ஒரு சினிமாவில் நடித்தவரை அவரை விட முப்பது வயது மூத்த நடிகரும் “சார்” என விளிக்கும் தமிழ்ப் பண்பாடு அன்றைய இலக்கியவாதிகளிடையே இல்லை.

“எப்பம் அண்ணாச்சி?” என்றேன் பதற்றமின்றி.

“இப்பந்தான். அவுருக்குத் தம்பி கூப்பிட்டுச் சொன்னாரு… ராத்திரி பதினோரு மணி இருக்குமாம்…”

“தகனம் எப்பம் இருக்கும் அண்ணாச்சி?”

“காலம்பற போனாத் தெரியும்… நீங்க அடிச்சுப் பெடைச்சு பொறப்பிட்டு வரணும்னு இல்லே… தகவலுக்காகச் சொன்னேன்…”

பெற்ற தகப்பன் இறந்துபோன போது, பம்பாயில் இருந்த நான் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தபோது மயானத்தில் எரியூட்டி மறுநாள் சாம்பலும் கரைத்துவிட்டிருந்தனர். மூத்த மகன் என்றாலு மென்? அப்பனைப் பெற்ற ஆத்தா இறந்த தகவல் அஞ்சலட்டையில் வந்து சேர்ந்தது. அலுவலகத்தில் இருந்து அறைக்குத் திரும்பி உடை நனைத்துக் குளித்ததுடன் சரி!

குரல் கேட்டு எழுந்து வந்த மனைவியிடம் சொல்லி கட்டன்சாயா போடச் சொல்லிவிட்டு, பல் துலக்கி வந்தேன். மடக்கு நாற்காலியைத தூக்கி முதல் மாடி வீட்டின் வராந்தாவில் போட்டு உட்கார்ந்தேன். அப்போது கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியில் உள்வாங்கிய கிராமமாக இருந்த நீலிக்கோனான் பாளையத்தில், அந்த வீட்டில் பதினாறு ஆண்டுகாலமாகக் குடியிருந்தேன். வரவேற்பறை, அடுக்களை, ஒற்றைப் படுக்கையறை, கக்கூஸ், குளிமுறி எல்லாமுமாக முன்னூற்றைம்பது சதுர அடி வீடு. முன் வராந்தா கொசுறு. மகள் மருத்துவக் கல்லூரியிலும் மகன் பொறியியல் கல்லூரியிலும் பயின்று கொண்டிருந்தனர். எனக்கு இதய அறுவை சிகிட்சை முடிந்து ஆறு ஆண்டுகள் கடந்திருந்தன. அந்த வீட்டுக்கு அம்பை, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன், புவியரசு, ஓவியர் ஜீவா, கோவை ஞானி என என்னை மதித்து வந்திருக்கிறார்கள்.

முன்னறையில் நாற்காலிகளை மடக்கிச் சாய்த்துவிட்டு, தரையில் பாய் விரித்து, அதன் மேல் சமுக்காளம் விரித்துப் படுத்துக் கொள்வேன். எத்திசைத் திரும்பினும் அத்திசை நூலே! கையில் கட்டன் சாயாவுடன் தெருவிளக்கில் வெளிறிக் கிடந்த தெருவை வெறித்துக்கொண்டு கிடந்தேன்.

நகுலன் இறந்தது 2007-ஆம் ஆண்டு, மே மாதம், 17-ம் தேதி இரவு பதினோரு மணிக்கு. நானவரை சிந்தித்துக் கொண்டிருந்தது 18-ம் நாள் அதிகாலை மூன்று மணிக்கு. காலையில் ஆ.மாதவன் எப்படியும் போவார், நகுலனின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்த நீல.பத்மநாபன், காசியபன், சண்முக சுப்பையா, ஹெப்சிபா ஜேசுதாசன், ஐயப்ப பணிக்கர் போவார்.

மனம் அலைக்கழிந்து கிடந்தது. காலையில் டெல்லியிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சேரும் ரயில் பிடித்தாலும், அவர் வீட்டுக்குப் போய்ச் சேர மாலை ஆகிவிடும்.

நகுலனுக்கு வயது எண்பத்தாறு ஆகிவிட்டிருந்தது. என்று வேண்டுமானாலும் போய் விடுவார் என்பது தெரிந்ததுதான். திருநாவுக்கரசர் பாடினார், “பிறப்பதற்கே காரணமாய் இறக்கின்றாரே!” என்று. மாற்றியும் சொல்லலாம், “இறப்பதற்கே காரணமாய்ப் பிறக்கின்றாரே” என்று. திகைத்துப் போவதற்கு ஒன்றுமில்லை. இறுதியாக நானவரைப் பார்த்தது 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் நாள். அன்று சொல்லிக்கொண்டு திரும்பும்போது தோன்றியது, ஒருவேளை இனிமேல் நானவரைக் காணாமல் கூடப் போகலாம் என்று. அதற்கு முன்பு ஒரு நாள் அவரை சந்தித்தபோது சொன்னார், “All of us are under the sentence of Death” என்று. ஆமாம், பிறந்த யாவருமே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்தாம்.

நகுலன் இறந்து ஏழிரண்டு ஆண்டுகள் கடந்த பின்பு இந்தக் கட்டுரையை அவரது நூற்றாண்டு நினைவாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நகுலன் 1968-ல் எழுதிய ‘ரோகிகள்’ என்ற குறுநாவலில் ஒரு உரையாடலில் எழுதுவார். நவீனனைக் காணவரும் அருளப்பர் கூறுவார் – “கர்த்தர் உங்கள் உடல்நிலை சீக்கிரம் குணமடைய அருள்புரிவாராக” என்று. அதற்கு நவீனன் மறுமொழி சொல்வார் – “இந்த வியாதி வந்ததே கர்த்தரின் அருள்தான்” என்று. பிறப்பு அவனால் என்றால், இறப்பும் அவனால்தானே! “அவனருளாலே அவன் தாள் பணிந்து” என்றுதானே பாடினார்கள்!

அவரது இயற்பெயர் டி.கே.துரைசாமி. நகுலனின் புனைவான நவீனனின் இயற்பெயரும் அதுவேதானே! கும்பகோணத்தில் பிறந்தவர். இறுதிவரை வாழ்ந்தது திருவனந்தபுரம், கௌடியார் பகுதி. அண்ணாமலைப் பல்கலைக் கழக எம்.ஏ.(தமிழ்). போதாதென்று மறுபடியும் எம்.ஏ.(ஆங்கிலம்). நானறிய அவர் ஷேக்ஸ்பியரில் பி.எச்.டி. முனைந்து, தனது ஆய்வேட்டை எவன் மதிப்பீடு செய்வது என்ற உதாசீனத்தால், பல்கலைக் கழகத்துக்கு ஆய்வேட்டை சமர்ப்பிக்கவில்லை. ஹேம்லட் சொல்வது போல, “To be, or not to be, that’s the question”. இன்று ஆய்வேடுகள் சில லட்சங்களுக்கு எழுதி வாங்கிப்படுகின்றன என்பதும், அதற்கான முகவர்கள் உண்டு என்பதுவும் உபரித் தகவல். அப்படி எழுதி வாங்கி முனைவர் பட்டம் பெறுகிறவர்களே அரை கோடி அன்பளிப்பு வழங்கிப் பேராசிரியர் பணியும் வாங்கி விடுவார்கள். நாட்பட துணைவேந்தர் பதவியும் வாங்கலாம்! ‘கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு!’

திருவனந்தபுரம் மாநகரின் வடக்குத் திக்கில், கேசவதாசபுரம் என்றொரு சந்திப்பு வரும். இடது கைப்பக்க சாலையில் மேற்கே திரும்பினால் அது ஆற்றிங்கல் வழி கொல்லம் போகும். வடக்கு நோக்கி, வலது புறம் போகும் சாலை கொட்டாரக்கரை போவது. கொட்டாரக்கரை சாலையில் மூன்று கிலோமீட்டரில் பருத்திப்பாறை. அங்கிருந்து மேற்கு நோக்கிக் குன்றில் ஏறினால் மார் இவானியஸ் கல்லூரி. அங்குதான் நகுலன் ஆங்கிலத் துறையில் ட்யூட்டராக நாற்பதாண்டு காலம் வேலை பார்த்து ஓய்வு பெற்றார். கோல்ஃப் லிங்க் சாலையில் இருந்த வீட்டில் இருந்து கல்லூரி வரை சைக்கிள் பயணம். வெள்ளை வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டை. அவர் காற்சட்டை அணிந்து நான் கண்டதில்லை.

மார் இவானியஸ் கல்லூரிக்குக் குன்றேறுவதற்கு ஒரு கிலோமீட்டர் முன்பாக, கிழக்குப் பக்கம் குன்று ஏறினால் மகாத்மா காந்தி மெமோரியல் கல்லூரி. நாயர் சர்வீஸ் சொசைட்டி ஆளுமை. நானங்கு 1968-1970 காலகட்டத்தில் எம்.எஸ்சி படித்தேன். அப்போது காந்தியவாதி, சர்வோதய இயக்கத் தலைவர், மன்னத்து பத்மநாபன் Nair Service Society தலைவராக இருந்தார். மாணவர் விடுதி முற்றத்தில் நாங்கள் புல்தரையில் அமர்ந்து அவருடன் உரையாடி இருக்கிறோம். நானங்கு வாசித்த காலத்தில் நகுலனின் இருப்பையே அறிந்திருக்கவில்லை. 1979-ல் திருவனந்தபுரத்தில் எனக்குத் திருமணமான காரணத்தால், கல்லூரிக்கே சென்று அவரை சந்தித்தேன். அன்று எனது முதலிரண்டு நாவல்களும் – தலைகீழ் விகிதங்கள் & என்பிலதனை வெயில் காயும் – வெளியாகி இருந்தன. நகுலனே சொன்னது போல,

“திரும்பிப் பார்க்கையில்

காலம் ஒரு இடமாகக் காட்சி அளிக்கிறது”.

பின்பு எனக்கு அவரது சகோதர சகோதரிகள் யாவரையும் அறிமுகம் ஆயிற்று. “பனியால் பட்ட பத்து மரங்கள்” என்ற கவிதைத் தொகுப்பு தந்த கவிஞர் திரிசடை, அவரது சகோதரி. மற்றொருவரை பம்பாய் வடாலா பகுதியில் வீட்டுக்குச் சென்று சிலமுறை சந்தித்திருக்கிறேன். அண்மையில், அமெரிக்காவில் இருக்கும் அவரது தம்பி மகன் zoom செயலி மூலமாக நகுலன் நூற்றாண்டு விழா கொண்டாடியபோது நானும் கலந்துகொண்டேன். அதில் கோணங்கி, எஸ். வைத்தியநாதன் முதலானோரும் பங்கேற்றனர்.

1972-ம் ஆண்டின் இறுதியில் பம்பாய்க்கு சென்ற பிறகே நவீன தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமானேன். ஆற்றுப்படுத்தியவர் ‘வேனா’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதிய வே.நாகராஜன். தி.ஜானகிராமனின் நண்பர், தெருவாசி. அவரே எனக்கு சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கிருத்திகா, அம்பை, நகுலன் என புத்தகங்களின் பெயர் சொல்லி வழிநடத்தியவர். அப்படித்தான் நகுலன் தொகுத்த “குருக்ஷேத்திரம்” வாசித்தேன். அதன் மூலம் அறிமுகம் ஆனவர்களே ஆ.மாதவன், சார்வாகன், நீல.பத்மநாபன் என. இன்றதற்கு மறுபதிப்பு உண்டா?

நகுலனே ஒரு கவிதையில் சொல்வார் –

“இருப்பதற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமற் போகிறோம்”

என்று. நல்ல புத்தகங்கள் சிலவற்றுக்கு அதுவே நிலை. க.சுப்பிரமணியம் முன்பு எழுதிய, வாசகர் வட்டம் வெளியிட்ட ‘வேரும் விழுதும்’ என்ற நாவல், நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, ‘சிறுவாணி வாசகர் மையம்’ மூலம் இப்போது மறுபதிப்பாகியுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் நூல் என்றால் ஓராண்டில் 19 பதிப்புகள் வரும்.

சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன், அம்பை, வண்ண நிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, ஜெயமோகன் என சாகித்ய அகாதமியால் அவமரியாதை செய்யப்பட்ட பட்டியலில் நகுலனுக்கும் இடமுண்டு. என்றாலும் அவருக்கு ‘ஆசான் விருது’, ‘விளக்கு விருது’ என்பன வழங்கப் பெற்றன. பதினான்கு ஆண்டுகள் முன்பு காலமான அவரது நூல்களோ, அல்லது ஆறு மாதங்கள் முன்பு மறைந்த ஆ.மாதவன் நூல்களோ அரசுடைமை ஆக்கப் பெற வேண்டுமானால் அதற்கென அரசியல் செல்வாக்கு வேண்டும் அல்லது சங்கங்களின், மன்றங்களின் முத்திரை வேண்டும். காற்றின் கூற்றாக நானிதைப் பதிவு செய்யவில்லை.

நகுலன் மறைவுக்கு, அல்லது ஆ.மாதவன் மறைவுக்கு எத்தனை கலை – இலக்கியப் – பண்பாட்டு இதழ்கள் அட்டைப்படம் போட்டார்கள். தபால்தலை அளவில் படம் போட்டார்கள், இரங்கல் செய்திகள் வந்தன என்றெவரும் நேர்மையாக நின்று பார்க்கலாம்.

எனது வாசிப்பு அனுபவத்தில், இருபதாம் நூற்றாண்டில் எந்தத் தமிழ்ப் புனைகதை, கவிதை எழுத்தாளனும் நகுலன் அளவுக்கு வள்ளுவனை, கம்பனை தனது எழுத்தின் மூலம் சிறப்புச் செய்ததில்லை. நகுலனே ஒரு கவிதையில் சொல்வார் –

“மூலஸ்தானத்தின் அருகில் சந்தித்தவரை

மூலவராக நினைத்து

எவ்வளவு ஏமாற்றங்கள்”

என்று. ஆமாம்! அரசியல், அதிகாரம், சமூகத் தலைமை, பன்னாட்டு மொழி உயராய்வு மையங்கள், ஆன்மீக ஞான பீடங்கள் யாவுமே மூலத்தானத்துக்கு அருகில் நின்றவர்களையே மூலவரின் மாற்றுருக்கள் என நினைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. மூலவர்களின் இருப்போ, இறப்போ அறிந்துகொள்ளப்படுவதில்லை.

என்றாலும் படைப்புத் தளத்தில் செயலாற்றும் செருக்கு இருந்தது நகுலனிடம். அவரது ஒரு கவிதை அதைப் பேசும்.

“மாமுனி பரமஹம்ஸன்

அவன் மாபெரும் சீடன்

சொன்னான்

‘மாயை என்பது

மன்பதை அனுபவம்’

மாயை யென்னெழுத்து

மாமாயை

என் வாழ்வு

என்றாலுமென்ன

இதுவென்னூல்

இதுவென் பெயர்

இதுவென்னெழுத்து”

இந்தத் திடம்தான் என்னை அவர்பால் ஈர்த்ததோ என்னவோ? ஆமாம்! மாயை என் எழுத்து! மாயை என் வாழ்வு! என்றாலும் என்ன? இது என் நூல். இது என் பெயர். இது என் எழுத்து.

இது நகுலனின் நூற்றாண்டு என்பதால் இந்தக் கட்டுரை. நண்பர் சி.ஆர்.இரவீந்திரன் நடத்திய ‘ஆல்’ காலாண்டிதழில் “நகுலன் என்றொரு மானுடன்” எனும் தலைப்பில் கட்டுரை எழுதினேன். கட்டுரை எழுதும் உத்தேசமும் பயிற்சியும் இல்லாத காலம் அது. கட்டுரையை அச்சுக்கு அனுப்புமுன் கையெழுத்துப் பிரதியின் நகல் ஒன்றினை நகுலனுக்கே அனுப்பினேன். எனது நோக்கம், அவரது கருத்தினை அறியவும், தகவற்பிழைகளைத் தவிர்ப்பதுவும். அவர் வாசித்துத் திருப்பி அனுப்பிய படியில் மூன்றில் ஒரு பங்கு வெட்டப்பட்டிருந்தது. அவர் வழிகாட்டிய வடிவத்தில் தான் 1993-ல் அந்தக் கட்டுரை வெளியானது. பின்பு என் முதல் கட்டுரைத் தொகுப்பாக 2003-ல் ‘தமிழினி’ வெளியிட்ட ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ தொகுப்பிலும் வெளியானது.

பல ஆண்டுகள் கடந்தபின், நகுலனின் வாழ்நாள் காலத்தில் கேரளப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை, திருவனந்தபுரம் காரியவட்டம் வளாகத்தில் ‘தற்கால தமிழ் இலக்கியம்’ என்றொரு கருத்தரங்கு நடத்தியது. 2005-ம் ஆண்டு, மார்ச் மாதம் 30-ம் நாள். நான் நகுலனுடைய புனைகளம் பற்றி உரையாற்றினேன். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வினா எழுகிறது. இதனைக் கும்பமுனிக் குசும்பு என்றால் எனக்கும் ‘புல்லே போச்சு’. இந்தியத் திருநாட்டில் தமிழ் பயிற்றும் பல பல்கலைக் கழகங்கள் ஏதேனும் நகுலனுடைய படைப்புலகம் குறித்து ஏதாவது கருத்தரங்கம் நடத்தியிருக்குமா? ஆட்சி மாறிய உடனேயே தமிழ் உயராராய்ச்சி மன்றங்கள் எல்லாம், அரசுச் செலவில் முன்னாள் முதலமைச்சர் படைப்புலகம் குறித்து ஐந்து நாள் கருத்தரங்கள் மாய்ந்து மாய்ந்து நடத்துவார்கள்.

A Tamil Writers Journal எனும் தலைப்பில் நகுலனின் ஆங்கிலக் கவிதைகள் இரண்டு பாகங்கள் உண்டு. முதல் பாகம் 1984, இரண்டாம் பாகம் 1989-ல் வெளியாயின. இரண்டாம் பாகத்தில் அவர் சொன்னார் – “To the question of how one becomes a writer, the only response that comes to my mind is that, here the consequence precedes the cause” என்று.

கேரளப் பல்கலைக் கழகம் என் உரையைக் கட்டுரையாக எழுதிக் கேட்டார்கள். எனக்கது கூடவில்லை. எழுதி இருந்தால் இருபது பல்கலைக் கழகங்களிலாவது பஞ்சப்படி, பயணப்படி, சன்மானம் பெற்றுக்கொண்டு அதே கட்டுரையை வாசித்திருக்கலாம். அதற்கு நமக்குப் பேராசிரியத் தகுதி வேண்டும்.

நகுலனின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டினால் –

“யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்துகொண்டிருக்கிறது

எல்லாம்”

ஆமாம். கேட்க ஆளில்லாத வளாகங்களில் எல்லாமே நடக்கும்!

ஒரு கோணத்தில் நோக்கும்போது, சொந்த வாழ்க்கை என்று கரந்தும், இலக்கிய வாழ்க்கை என்று மகோன்னதமாகவும் செயல்படுதல் இலக்கிய வாதிக்கு மறுக்கப்பட்டதாகும். அதில் சிலர் வெகு சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பார்கள். பக்காப்படிக்கு முக்கால்படியை சொந்த வணிகத்தில் அளக்கிறவர்கள் எல்லாம் இங்கே இலக்கியங்களில் நமக்கு வேறேதோ பாடம் நடத்துகிறார்கள். இதைத்தான் வெங்கட் சாமிநாதன் வாழ்நாள் முழுக்கப் பேசினார். நகரப் பேருந்தில் பயணம் செய்த அவர் அமெரிக்க முகவர் எனத் தூற்றப்பட்டார். முற்போக்கு முழங்கியவர்கள் சொந்த சொகுசுக்காரில் பயணம் போனார்கள்.

நவீன இலக்கியத்தின் பொய் முகங்கள் பற்பல.

நகுலன் சொல்வார் ஒரு கவிதையில் –

“வெளியில் கண்ட மரங்கள் எல்லாம்

வீட்டுச் சாமான்களாகப்

பரிமாணமுற்று மௌனமான

நித்யத்தில் மூழ்கி இருக்கின்றன.”

என்று. வித்தாரமாக விரித்துப் பொருளுரைக்க அச்சமாக இருக்கிறது.

புறங்கூறுதல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், தன்னலத் துருப்புச் சீட்டுகளை நெஞ்சோடு சேர்த்தணைத்து வைத்துக்கொளல், புறத்தே இன்முகம் காட்டி அகத்தே வஞ்சம் தேக்கிய வேடம் புனைதல், அதிகாரத்தின் மலரடி தாங்குதல், செல்வத்தின் குற்றேவலாகுதல் என உலகம் இயங்கிக் கொண்டிருந்தாலும், நகுலன் போன்றோரும் வாழ்ந்து முடிந்தனர்.

நகுலன் கர மைதுனம் செய்தாரா, ஓரினப் புணர்ச்சியாளரா என்றெல்லாம் குழுக்களில் விவாதித்தவர்கள் உண்டு. தனிப்பட்ட சிலர் பற்றி அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில செய்திகளை எக்காலத்திலும் நான் பேச, பதிவு செய்ய, பகிர முனைய  மாட்டேன்.

நகுலன் எழுதினார், “சரீர வேதனைக்கும் காலத்துக்கும் உள்ள உறவு என்ன? இந்த உடல் அழுக்கின் கொள்கலன்” என்று.

சிவ வாக்கியர் கேட்டார் –

“அழுக்கறத் தினம் குளித்து அழுக்கறாத மாந்தரே!

அழுக்கிருந்தது அவ்விடம், அழுக்கிலாதது எவ்விடம்?”

என்று. இதை உணர்ந்து சொல்வதற்கும் ஒரு திறல் வேண்டும்தானே!

வேறு சந்தர்ப்பத்தில், ‘A Tamil Writers Journal (Volume – I)-ல் அவர் எழுதியதை நானிங்கு பொருத்திப் பார்க்கிறேன்.

’Cannot curl itself

To rest:

Cannot

Rear and spread its hood:

Its spinal strength

Crushed down

Cannot manage

Even an arc

Leave alone half-a-circle

A final convulsive twitch;

It lies inert

So

Such eternal stillness

Gleams

Like

The flick of a serpent’s tail

A thwart

The flux and re-flux

Of your essential

Goings-on.’’

எப்படி வேண்டுமானாலும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் இந்தக் கவிதையை.

இலக்கிய விமர்சனம் என்ற பெயரில், நகுலன் பிறந்தது பார்ப்பன இனம். அவர் அமெரிக்க உளவுத்துறை ஊதியம் பெறுகிறவர், அவர் எழுதுவது ஃபாசிஸ்ட் இலக்கியம், அவரது ஆணுறுப்பு மூன்றங்குல நீளமே கொண்டது என்றெல்லாம் முற்போக்குப் புரவலர்கள் கொள்கை முழக்கங்களை முன்னெடுத்தனர்.

ஓரிடத்தில் நகுலன் எழுதினார், “இந்த மண் சாமியார்கள் நிறைந்த மண். அவர்கள் ஆதிக்கம் அரசியலிலும், சமூக சேவையிலும், ஏன் இலக்கியத்திலும் கூட ஆட்சி செலுத்துகிறது. அதனால்தான் நமது வாழ்வே சரியாக அமையவில்லை” என்று. இந்தச் சொற்றொடரில், சாமியார்கள் எனும் சொல்லை மாற்றி நீங்கள் வேறேதும் பெய்து கொள்ளலாம்.

அவரால்தான் கேட்க முடிந்தது –

“இந்தியா கிழக்கின் புராதனமா?

அல்லது மேற்கின் முற்போக்கா?

யார் சொல்ல முடியும்?”

என்று.

ஏற்கனவே ஞான் ஏழுதீற்றுண்டு, நகுலன் சாரினை ஆத்தியம் கண்டது 1978-ல் ஆணு. திருவனந்தபுரத்து யூனிவர்சிட்டி கோலேஜ் தமிழ் டிப்பார்ட்மென்ட் முற்றத்து வெச்சு. 1970- ஆகஸ்ட் 29-ல் எனக்கு திருவனந்தபுரத்தில் பெண் பார்த்துக் கல்யாணம். அதுவே பெரிய கொடுப்பினை. பம்பாய்க்குப் பெண்ணைக் கட்டிக் கொடுத்து அனுப்புவதற்கு ஆற்றில் குளத்தில் பிடித்துத் தள்ளலாம் என்பது நாஞ்சில் நாட்டுக்காரர்களின் மனோபாவமாக இருந்தது.

நாற்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. எங்கள் திருமணத்துக்கு நகுலன் நேரில் வந்து வாழ்த்தினார். வந்து வாழ்த்திய தகைசால் தமிழர்கள் பேராசிரியர் ஜேசுதாசன், ஆ.மாதவன், நீல.பத்மநாபன், பேராசிரியர் வ.விநாயகப்பெருமாள், கவிஞர் சண்முக சுப்பையா, காசியபன், ஞான.இராஜசேகரன்…

மடக்கிய காகித உறையில் அன்று ஐம்பது ரூபாய் தந்து எங்களுக்குத் திருநீறு பூசினார் நகுலன். கவிஞர் சண்முக சுப்பையா நகுலனால் கொண்டாடப்பட்ட கவிஞர். நவீனனைப் போல நகுலனின் புனைவு மாந்தரில் ஒருவர். இன்று சண்முக சுப்பையா பெயரையாவது நவீன கவிஞர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை. எனது புத்தக அடுக்குகளில், கவிதைப் பிரிவில் தேடினால், அவரது தொகுப்பினைக் கண்டெடுக்க இயலும். மறுபதிப்பு வந்ததாகவும் அறிவில்லை. இனிமேல் எங்கே? இலக்கியத்துள்ளும் அகழாய்வுகள் செய்தால் அரசியல் தொழில் முனைந்தோர் மண்ணினுள் புதைத்த காலப் பெட்டகங்களே கிடைக்கும்.

பம்பாயில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை விடுப்பில் ஊருக்கு வரும்போது பத்து நாட்களாவது திருவனந்தபுரத்தில் இருப்போம். எனது பகற் பொழுதுகள் ஆ.மாதவன், நீல.பத்மநாபன், காசியபன், ஹெப்சிபா ஜேசுதாசன், நகுலன் என்று நிறையும்.

நகுலனின் வீட்டை பர்ணசாலை என்பேன். அவருக்கு அச்சொல்லில் சம்மதம் இல்லை. எப்போதாவது அபூர்வமாக வீட்டு வாசலில் எட்டணாப் பூட்டு ஒன்று தொங்கும். பூமுகத்துக் கைப்பிடிச் சுவரில் சற்று நேரம் அமர்ந்திருந்து திரும்புவேன். அண்டையில், அடுத்த காம்பவுண்ட் அவர் தம்பி வீடு. அவரிடம் சென்று கேட்டாலும் தெரிந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

நகுலன் 1963-ல் எழுதிய யாத்திரை எனும் குறுநாவலில் ஒரு பதிவு உண்டு. “நாலணாவுக்குக் கிடைக்கும் பகவத் கீதையைப் போல இந்த நாய் விவகாரம்தான் அவனைத் தொடர்ந்து வந்தது” என்று. ஒரு வேளை நானுமோர் பின்தொடரும் நாயாக இருந்திருக்கக்கூடும்.

படைப்பிலக்கியம் குறித்து விவாதித்துத் தெரிந்து கொண்ட சில கருத்துகளுக்கு ஆதாரமாக இருந்தவர் சிலர். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், க.நா.சு, ஆ.மாதவன், நகுலன் என நான் பயின்ற பள்ளிகள்.

ஓரிடத்தில் நகுலன் எழுதினார், “படைப்பிலக்கியத்தைப் பற்றி என் அடிப்படைக் கொள்கை, உருவத்தில் உள்ளடக்கம் கரைந்துவிடவேண்டும் என்பதே!” என்று. இன்னும் பல சமயம் அது குறித்து நான் சிந்திப்பதுண்டு.

முப்பது நாற்பதாண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில், நண்பர்கள் என நான் கருதிய சிலருக்கு நகுலனைப் பிடிக்கவில்லை. அது அவரவர் சுதந்திரம். என்றாலும் இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்து தர மதிப்பீடு செய்வதற்கு எனக்கு உதவியது.

இறுதிக்காலம் வரை நகுலனின் தாயார் அவருடன் இருந்தார். உதவிக்கு கண்ணியமான மலையாளத்துப் பெண் ஒருத்தியும். என்றென்றுமாய் மனதில் நிலைத்து நிற்கும் நகுலனது கவிதை வரிகள் உண்டு. அவரது அம்மாவைக் குறித்து.

“Once she said:

Look here

I wont be here

Always:

One day

I have to go.

Now I know

Wisdom is

Oral – aural

The umbilical cord

Has to be severed

Twice

First

You cut it

Next

You burn it

To ashes

Swaha

மேற்சொன்ன கவிதை குறித்த ஒரு நாள் அவரிடம் நெடுநேரம் உரையாடினேன். தொப்பூள்கொடி முதன் முறை தாயிடம் இருந்து துண்டிக்கப்படுகிறது. மறுமுறை தொப்பூள்கொடியின் மறுபாதி தாயுடன் எரிக்கப்படுகிறது. தொப்பூள்கொடி உறவென்று கூவிக் கூவி விற்று துரோகம் பயிர் செய்தவர்தானே நாம்!

கும்பகோணத்தில் பார்ப்பன குலத்தில் பிறந்து, வேலைக்காகக் கேரளத் தலைநகரில் வாழ்ந்து, மணம் செய்து கொள்ளாமல் நடந்து, இறுதிக்காலம் வரை தாயாரைக் காப்பாற்றிக் கரை சேர்த்து, தாமும் போயினார்.

பூணூல் அணியாத, மது அருந்துகிற, புகை பிடிக்கிற பார்ப்பனர் அவர். புறத்தே முற்போக்கும் அகத்தே வழிச்சுத்தமும் பார்த்தவர் பலரும் அவரைப் பல்வித இலத்தீனியச் சொற்களால் தூற்றினார்கள்.

எங்குமே நான், பதிவிட விரும்பாத பல செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். சக படைப்பாளர் சிலர், நஞ்சிலும் கொடிதென வெறுத்ததும் அறிவார். அவர் வீட்டுப் பூமுகத்துப் படிப்புரையில், பல்வேறுபட்ட தினங்களில், அவருடன் க.நா.சு., நீல.பத்மநாபன், ஆ.மாதவன், பேராசிரியர் ஜேசுதாசன், காசியபன் அமர்ந்திருந்து உரையாடியபோது நான் உடனிருந்திருக்கிறேன். அனைவரும் அவரைத் துரைசாமி என்றே விளிப்பார்கள். கோணங்கி உட்பட. என்னை விடத் துல்லியமாகக் கோணங்கி நகுலன் குறித்துப் பேசுவார்.

தன்மீதான அவதூறான விமர்சனங்கள் பற்றித்தான் கீழ்க்கண்ட கவிதை வரிகளை அவர் எழுதி இருப்பார் போலும்!

“No

You are wrong there

They burnt her because

She remained chaste

That they could not stand”

இன்றளவும் மெய்ப்படும் உண்மையைத்தானே சொன்னார் அவர். எந்த நூலையும் வாசித்து உணர முடியாமல், காற்றடித்ததோ தாழை பூத்ததோ எனும் பாங்கில் தூசணை செய்வோர் வெற்றி பெற்றுவிடுவார்கள் போலும்!

வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதினார் –

“அவன் பிறந்த சரியான சமயத்தில் யாருக்கும் அக்கறையில்லாமல் போகவே, அவன் வாழ்க்கை முழுவதும் இரு நட்சத்திரங்களிடையே, ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் தத்தளித்துக்கொண்டிருந்தான்.”

என்று. இந்தத் தத்தளிப்பு யாங்கணும் இருந்தது அவருக்கு.

நான் இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய முதல் கட்டுரையின் தலைப்பே மறுபடியும் நினைவுக்கு வருகிறது. “நகுலன் என்றொரு மானுடன்”. ஆனால் ஆயில்யமானாலும் பூசமானாலும் கடக ராசிதான். கர்க்கடகம் என்றும் சொல்வார்கள். கர்க்கடகம் என்பது ஆடிமாதம் என்கிறது பிங்கல நிகண்டு. கர்க்கடகம், கடகம், ஞெண்டு என எப்பெயரில் சொன்னாலும் அது நண்டுதான்.

‘கும்பமுனி’ எனும் எழுத்தாளரைப் புனைவாகப் படைத்து நானிதுவரை 32 சிறுகதைகள் எழுதியுள்ளேன். நிச்சயம் அவர் வந்தியத்தேவன் அல்ல. எழுதப்படுகிறபோதே அவதூறுகளை அள்ளிப் பூசிக்கொள்கிறவர். கும்பமுனி நானறிந்த சில மானுடரின் கலவையும் நீட்சியும். அவர்களில் ஒருவர் நகுலனும் ஆகலாம் என்பதை ஈண்டு பதிவு செய்கிறேன்.

கம்பனின் பாடல் வரியினைக் கையாண்டால் – “மற்றுள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அம்மா!”

———-x———

என்னுடன் இருந்த, இன்றும் இருக்கும் சில நகுலன் புத்தகங்களை அட்டவணைப் படுத்துகிறேன். சில விடுபடல்கள் இருக்கக்கூடும். பொறுக்கப் பிரார்த்தனை.

கவிதைகள்

 1. எழுத்துக் கவிதைகள்
 2. மூன்று (1979)
 3. ஐந்து (1981)
 4. கோட் ஸ்டான்ட் கவிதைகள் (1981)
 5. சுருதி (1987)
 6. இரு நீண்ட கவிதைகள் (1991)
 7. பத்தாண்டு கவிதைகள்
 8. நகுலன் கவிதைகள் (2001)
 9. A Tamil Writers Journal I (1984)
 10. A Tamil Writers Journal II (1989)
 11. Non-Being (1986)

சிறுகதைகள்

நகுலன் கதைகள் (2007)

குறு நாவல்

 1. யாத்திரை (1963)
 2. ரோகிகள் (1968)

நாவல்கள்

 1. நிழல்கள் (1965)
 2. நினைவுப்பாதை (1972)
 3. நாய்கள் (1974)
 4. நவீனன் டயரி (1978)
 5. சில அத்தியாயங்கள் (1983)
 6. இவர்கள் (1983)
 7. வாக்குமூலம் (1992)
 8. அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி

 

———-x———

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.