நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்

“தமிழ் இலக்கியச் சூழலில்

வாசிக்கப்படாமலேயே

அதிகம் பேசப்பட்ட கவிஞராக

நகுலன் இருக்கிறார்”

நகுலன் கவிதைகள் குறித்த உரையாடல்

சுகுமாரன், யுவன் சந்திரசேகர்

1

சுகுமாரன்: தமிழ்ப் புதுக்கவிதை ஏறத்தாழ எண்பது வருட வரலாறு கொண்டதென்றால் அதில் அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை இயங்கிய நகுலனின் இடம் என்ன?

யுவன்: தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் நகுலனின் இடம் தனித்துவமானது. நகுலனுக்கு முன்பும் அவருக்குப் பின்பும் கூட நகுலன் போல் யாரும் பார்க்கக் கிடைக்கவில்லை. அவருடைய தொனியை இரவல் வாங்கிச் சிலர் செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைத்தது நகுலனின் தனித்துவமான உலகமல்ல.

உதாரணமாக விக்ரமாதித்யனின் கவிதைகள் பலவற்றில் நகுலனின் தொனி தெரிகிறது. ‘எனக்கு யாருமில்லை – நான் கூட’ என்பது போன்ற ஒரு தொனி விக்ரமாதித்யனின் கவிதைகளில் தொடக்கத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் விக்ரமாதித்யன் கவிதைகளில் செயல்படும் narrative என்பது பெரும்பாலும் குடும்பஸ்தனின் துயரக்குரலாகத்தான் இருக்கிறது. நகுலனின் narrative அதுவல்ல. அது எவ்விதத்திலும் கூட்டு வாழ்க்கையுடன் பொருந்தாத தனிக்குரல். அவருக்குப் புகார் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னின்னதைச் சரிசெய்து விட்டால் வாழ்க்கை ‘சிறப்பான’தாகிவிடும் என்ற நம்பிக்கை எல்லாம் நகுலனிடம் இல்லை. இவற்றுக்கு அப்பாற்பட்டும் நகுலனை யாருடனாவது பொருத்திப் பார்க்கவேண்டுமென்றால் அவரைச் சித்தர் மரபுடன் ஒப்பிடலாம். சித்தர்கள் உடம்பையும் மனதையும் நிராகரிக்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் ‘உடம்பை உரித்து நிலையில் மாட்டிவைத்துவிட்டு’ அதை வேடிக்கை பார்க்கும் ஒரு வியக்தியாகத்தான் நகுலன் இருக்கிறார். நகுலனை யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமிக்க ஒருவர் என்றுதான் சொல்லவேண்டும்.

இன்றைய நவீனக் கவிஞர்கள் பெரும்பாலும் தன்னால் நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். அதாவது தங்களுடைய ஆற்றாமையை, வேட்கையைச் சொல்லிப் புலம்புபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நகுலனின் கவிதைகளில் தொழில் படும் narrative என்பது தானற்ற நிலை.

சுகுமாரன்: தமிழ்க் கவிதை வாசகனுக்கு மிகவும் சிக்கலான கவிஞராகத் தெரிபவர் நகுலன். அதற்குச் சில காரணங்களைச் சொல்லலாம் – ஒன்று, நகுலனின் கவிதைகள் சிக்கலானவை. இரண்டு, நகுலன் என்னும் இலக்கிய ஆளுமையே சிக்கலானது அல்லது நகுலன் என்னும் ஆளுமையே சிக்கலானது; மூன்று, நகுலன் கவிதைகளைப் புரிந்துகொள்வது என்பது வாசகனுக்குச் சிக்கலான ஒரு விஷயம். இவற்றை எப்படி விளக்கலாம்?

 

யுவன்: தமிழ் நவீனக் கவிதையின் தொடக்கம் என்பது புதுக்கவிதையின் தொடக்க காலத்திலிருந்துதான். பாரதியின் வசனகவிதைகளைச் சொல்லலாம். பாரதியின் கவிதைகளில் புரியாத்தன்மை என்று எதுவுமில்லை. அனைத்தும் நேரடியான கவிதைகள்தாம். ‘தீ இனிது, காற்று இனிது’ என்பது போன்ற வரிகளில் புரியாமல் போவதற்கு எதுவுமில்லை. எளிய, நேரடியான கவிதைகள் அவை. இந்த நுட்பத்தை வாங்கிக்கொண்டு ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், புதுமைப்பித்தன், க.நா.சு. ஆகியோர் முன்னேறியிருக்கிறார்கள். இவர்களின் கவிதைகளிலும் புரியாமை என்ற ஒன்றே இல்லை எனலாம். ஆனால் பிச்சமூர்த்தி கவிதைகளின் சட்டகத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவனால் அதற்குப் பின்னால் உள்ள வேதாந்தப் பின்புலத்தை உள்வாங்கிக் கொள்ள முடியுமா எனச் சொல்ல முடியாது.

கவிதை சொல்வதை உள்வாங்கிக் கொண்டதாக வாசகன் நம்புகிறான். பிறகு அதைத் தன்வயமாகப் புரிந்துகொள்கிறான். தமிழ் நவீனக் கவிதையின் தொடக்க கட்டத்தில் மொழியளவில் புரியாத்தன்மை என்பது இல்லை. பின்னால் எழுத வந்த சி.மணியிலிருந்து புரியாத்தன்மை தமிழ் நவீனக் கவிதைகளில் வெளிப்படத் தொடங்கியது எனலாம். இதன் பிறகுதான் தமிழ் நவீனக் கவிதையின் மொழி இறுக்கமடைந்து, அதற்கு ஒரு சூத்திரத் தன்மை வருகிறது. இக்கால கட்டத்தில் மேற்குலகக் கவிதைகளின் தாக்கம் நேரடியாகத் தமிழ்க் கவிதைகளில் விளைவுகளை உண்டாக்கியது. இதை நாம் ஆத்மாநாமுக்குப் பிறகு உணரலாம். சி.மணி, ஆத்மாநாம் போன்றோர் கவிதைகளில் உள்ள மொழிச்சிக்கல் காரணமாக ஓர் எளிய வாசகனால் நேரடியாக இவர்களை அணுக முடிவதில்லை.

மேற்சொன்ன மாதிரியான மொழிச் சிக்கல் நகுலனிடம் எப்போதும் இருந்ததில்லை. நகுலன் கவிதைகளில் உள்ள இருண்மை என்பது நம்மால் அவருடைய கவிதையை உள்வாங்கிக் கொள்ள முடியும் – ஆனால் அது எதனால் கவிதையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது. இதுதான் நகுலனின் கவியுலகம் செயல்படும் நிலை என்று நினைக்கிறேன். நகுலன் முன்னிறுத்தும் உலகம் பரிச்சயமில்லாததாக இருக்கிறது; அல்லது அவருடைய உணர்வு நிலை நமக்கு அனுபவமில்லாத தாக இருக்கிறது.

ஆக, மொழியளவில் நகுலனிடம் புரியாத அம்சம் என்ற ஒன்றே இல்லை. ஆனால் பொருளடக்க அளவில் அவருடைய கவிதைகள் புரியாமல் போவதற்குக் காரணம், அவருடைய உலகம் உங்களுக்குப் புரியாமல் போவதுதான்.

சுகுமாரன்: நகுலன் என்னும் இலக்கிய ஆளுமையே சிக்கலானது, அது சார்ந்துதான் அவருடைய கவிதைகள் பொருளாகின்றன என்பது குறித்து…

யுவன்: பொதுவாக ஆளுமை சார்ந்துதானே ஒரு கவிஞன் தன் கவிதைகளைப் பிறப்பிக்க முடியும். ஆனால் கவிதைக்குப் பின்னால் போகாமல் நகுலன் பின்னால் சென்றால் பழுத்த வயோதிக நிலை அடையும் வரைக்கும் திருமணமாகாமல் தனிமை வாழ்க்கை வாழ்ந்த ஒருவரை, தன் பிராந்திக் குப்பிகளோடும் புத்தகங்களோடும் சூரல் நாற்காலியோடும் மட்டுமே வாழ்க்கையைக் கழித்த ஒருவரைக் காண்கிறோம். இதனடிப்படையில் அவர்மீது நமக்கு ஒரு பிரமிப்பு உருவாகிறது. அப்படித்தான் நகுலன் ஒரு திருவுருவாக ஆக்கப்பட்டிருக்கிறார். நகுலனைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் அவர் எழுத்துக்களைப் பற்றிப் பேசுகிறார்கள் எனச் சொல்ல முடியாது. ஆனால் நகுலனைப் பற்றிப் பேசுகிறார்கள். பக்கத்து வீட்டில் ஒரு பெரியவர் இருக்கிறார். அவர் இப்படிதான் கல்யாணம் செய்துகொள்ளாமல் தனியாக அமர்ந்து சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பார். இவர் குறித்தும் நகுலன் குறித்தும் பேசப்படும் வார்த்தைகளை எளிதாகச் சொல்லிவிட முடியும்.

நகுலன் படைப்பு குறித்துப் பேசிய சந்தர்ப்பங்களிலும் தர்க்கப் புறம்பான காரியங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, காவ்யா வெளியிட்டுள்ள புத்தகத்தில் ‘அஞ்சலி’ என்னும் நீண்ட கவிதை குறித்து சித்தார்த்தன் சொல்கிறார்:

‘வார்த்தைகள் ஊர்வலம் போகின்றன

எதையெதையோ சொல்லிச்செல்கின்றன

மனிதர்களுக்கு இருபுறமும் மனிதர்கள்

நடனமாடுகிறார்கள்

ஊர்வலத்தை நகுலன் மேலே நின்று

பார்த்துக்கொண்டிருக்கிறார்

வார்த்தைகள் சில நேரங்களில் அபூர்வ

நினைவுகளை நிகழ்த்திச் செல்கின்றன

மனிதர்கள் திகைத்து நிற்க 193 கணங்களை

அவை விட்டுச்செல்கின்றன’

இந்த வரிகளை நேற்று முதல் புத்தகம் வெளியிட்ட ஒரு பையனுக்கும் சொல்ல முடியும். மு.மேத்தாவுக்கும் சொல்ல முடியும். இன்குலாபுக்கும் சொல்ல முடியும். இது போன்ற பொத்தாம்பொதுவான வார்த்தைகளில் நகுலனைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். நகுலனின் உலகத்துக்குள் நுழைந்து பார்த்தவர்கள் வெகு சிலரே.

சுகுமாரன்; நீங்கள் சொன்னது போல நகுலனிடம் மொழிச் சிக்கல் இல்லை. இருந்தபோதும் அவருடைய கவிதைகளிலுள்ள அனுபவம் நமக்கு வசப்படுவதில் ஒரு சிக்கல் இருந்துகொண்டே இருக்கிறது. இது எதனால்?

யுவன்: கவிஞன் பற்றிச் சொல்லப்படும் கருத்து வாசகனைப் பெருமளவில் கட்டுப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இது தமிழ்ச் சூழலில் நிறையவே நடந்துகொண்டிருக்கிறது. நகுலன் குறித்துச் சொல்லும்போது அவர் ‘பித்துநிலையில் இயங்கிய கவிஞர்’ எனச் சொல்கிறார்கள். அதாவது அவர் பிரக்ஞைபூர்வமாக எழுதியவர் அல்ல. ‘அபோத நிலையிலிருந்து தன் கவிதைகளை உருவாக்கியவர்’ என்பது போன்ற கட்டுக்கதைகள் தமிழில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நம்பக்கூடிய ஒரு வாசகன், நகுலனைப் புரிந்துகொண்ட பிறகும் கூட, நகுலன் தனக்குச் சரியாக விளங்கவில்லை என்னும் மனக்குறையுடன் இருக்க வாய்ப்பிருக்கிறது. நகுலனின் உள் உலகம் சிடுக்கானது – நேரடியாகத் திறந்துபார்க்க இடமளிக்காது என்ற அளவில் மட்டுமே சிடுக்கானது. மற்றபடி அது குழப்பமானது அல்ல. உதாரணமாகப் பித்து நிலையின் சான்று போலத் தென்படும் சில வரிகளைச் சொல்கிறேன்;

‘பெண்ணின் ரூப சௌந்தர்யம்

கலை எழுப்பும் ஏகாந்த நிலை

சுவரில் ஒரு சிலந்தி’

மொத்தக் கவிதையும் அவ்வளவுதான். இது புரியவில்லை என்றால் ஜென் கவிதைகள் புரியக்கூடாது. இதுபோல ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உடனடித் தொடர்பில்லாமல் பூடகமாக எழுதப்பட்ட எந்தக் கவிதையும் புரியக்கூடாது. ஆனால் இந்த வரிகள் அபோத நிலையில் எழுதப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இவை மிக நுட்பமாகச் செம்மையாக்கப்பட்டு இந்த அளவில் மட்டுமே சொல்லவேண்டும் என வடிவமைக்கப்பட்ட வரிகள் என்றுதான் நினைக்கிறேன். இன்னும் குறிப்பாகச் சொன்னால் பித்து நிலையில் சூல் கொண்டு, போதபூர்வமாக அடுக்கப்பட்ட வரிகள்…

‘நெற்றித் திலகம்

அள்ளியெடுத்துச் செருகிக்

கட்டிய கொண்டை

நின் அளகபாரம்

எட்டி நின்று செயலாற்றும்

எல்லை கடந்து நின்று

நின் நிலை காக்கும் ஒரு பேராற்றல்

கனவு நினைவாக

கனவில் நினைவகல

நின்னுருவம் என்னுருவமாக

எல்லாம் இல்லாமல் ஆக’

‘நின்னுருவம் என்னுருவமாக’ இந்த வரி வரைக்கும் ஒரு வாசகனால் சரளமாகப் பயணிக்க முடியும். ‘எல்லாம் இல்லாமல் ஆக’ இந்த வரியில் ஒரு புதிர்த்தன்மை உருவாகிறது. இப்புதிர்த்தன்மை முன்பு வாசித்த எல்லா வரிகளும் புரியாதது போன்ற தோற்றத்தை உண்டுபண்ணுகிறது. ‘எல்லாம் இல்லாமல் ஆக’ இந்த வரிகளுக்குப் பிறகு எஞ்சி இருப்பவன்தான் நகுலன் கவிதைகளின் narrator. எல்லா இடங்களிலும் இன்மையின் பதிவைப் பார்த்துக் கொண்டிருப்பவன்… நீங்கள் ஓர் இருப்பைத் தேடிச் செல்கிறீர்கள். ஆனால் அங்கே இன்மைதான் அமர்ந்திருக்கிறது. உங்களுக்குப் பார்க்கக் கிடைப்பது வெறுமைதான். நகுலன் ஒரு குணாம்சமற்ற வெறுமையை நோக்கித் தள்ளுகிறார். துக்கத்தின் காரணமாகவோ உச்சபட்சப் பரவசத்தின் காரணமாகவோ ஒரு மனிதனுக்குள் வெறுமை உண்டாக முடியும். அந்த மாதிரியான ஒரு qualified emptiness-ஸை நோக்கி நகுலன் நகர்த்தவில்லை.

ஜென் கவிதைகள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு மகத்தான அழகுணர்ச்சி இருப்பதைப் பார்க்கிறேன். அது ஒரு பெயரற்ற, நிறமற்ற, அழகுணர்ச்சி. அதுபோல நகுலன் நிறமற்ற வெறுமையை முன்னிறுத்துகிறார் எனத் தோன்றுகிறது. இதை வாங்கிக்கொள்ள முடியாதபோது நகுலனின் மொத்த உலகமுமே புரியாமல் போய்விடும்; அவருடைய கவிதைகள் மட்டுமல்ல.

 

சுகுமாரன்: தமிழில் மிகவும் சிலாகிக்கப்பட்ட கவிஞர் நகுலன்தான். அவருடைய கவிதைகள் குறித்து எதிர்மறையாகச் சொல்பவர்கள் மிகக் குறைவு. புதிதாக எழுதவருபவர்களும் தமக்குப் பிடித்த கவிஞர் நகுலன் என்பதைத் தவிர்க்க முடியாதபடியும் அல்லது விருப்பத்தோடும் சொல்கிறார்கள். ஆனால் உணர்ந்துதான் இதைச் சொல்கிறார்களா என்று தெரியவில்லை. ஆசாரமான பின்னணியில் பிறந்தவராக இருந்தாலும் அதற்கு நேர் எதிரான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறார் நகுலன். இலக்கியம் சார்ந்த, புனிதங்கள் சாராத ஒருவராகத் தம்மை முன்னிறுத்திக்கொண்டார். இவையெல்லாம் புதிய தலைமுறையிடம் ஒருவிதமான பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன. இதைச் சார்ந்து நகுலன் ஒரு பெரிய பிம்பமாகக் கட்டமைக்கப்படுகிறார். இதிலிருந்துதான் நகுலனைப் புரிந்துகொள்ள எல்லோரும் விரும்புகிறார்கள். தமிழ் இலக்கியச் சூழலில் வாசிக்கப்படாமலேயே அதிகம் பேசப்பட்ட கவிஞராக நகுலன் இருக்கிறார் என நினைக்கிறேன்.

யுவன்: இந்தப் பட்டியல் தொடர்பாக எனக்கு இருக்கக்கூடிய நிரந்தரப் புகார் ஒன்றையும் இங்கு சேர்த்துக்கொள்ளலாம். ‘நகுலனைப் பிடிக்கும்’ எனச் சொல்லக்கூடிய எல்லோருமே பிரமிளையும் பிடிக்கும் எனச் சொல்கிறார்கள்.

சுகுமாரன்: இருவருக்குமே ஒரு பெரிய பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது…

யுவன்: ஆனால் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பிரமிளின் கவிதைகள் அடர்த்தியான வார்த்தைகளால் ஆனவை; நகுலன் அடர்த்தியான வார்த்தைகள் உதிர்ந்தபின் எழுதுபவராக இருக்கிறார். படிமங்களும் உருவகங்களும் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் கவிப்புலம் பிரமிளுடையது. ஆனால் இவை எதுவும் நகுலனிடம் நேரடியாக இல்லை. பிரமிளின் கவிதைகளில் அவருடைய தெளிவான சார்புநிலை வெளிப்படும். ஆனால் எதையும் சார்ந்தவராக, தன்னை எதனுடனாவது அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடியவராக நகுலன் எங்குமே தென்படவில்லை. இவ்வளவு வேறுபாடுகள் கொண்ட இவர்கள் இருவரும் ஒரே பட்டியலில் அடுத்தடுத்து இருப்பது தமிழ் வினோதங்களில் ஒன்று.

சுகுமாரன்: இந்த விவாதம் தமிழ்க் கவிதைக்கு ஒரு குந்தகமான விஷயத்தைச் செய்திருக்கிறது என்றும் தோன்றுகிறது. ஜென் கவிதைக்குப் பின்னால் ஓர் அழகியல் கோட்பாடு இருக்கிறது. ஒரு metaphysical பார்வை இருக்கிறது. அதுபோல நகுலன் கவிதைகளிலும் ஓர் அழகியல் கோட்பாடு இருக்கிறது. அதற்கான ஒரு தளம் இருக்கிறது. அதை ‘ஆன்மீகம்’ என்று குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் நகுலனை சிலாகிப்பவர்களிடம், நகுலன்தான் தமிழ்க் கவிதையில் பிரதானமானவர் எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பவர்களிடம் ஒருவிதமான நகலெடுப்பு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நகுலன் பற்றி உருவாக்கப்பட்ட பிம்பம் சார்ந்து அவருடைய கவிதைகள் புரிந்துகொள்ளப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டு எனக்கு உண்டு. ‘எனக்கு யாருமில்லை / நான் / கூட’ என்ற கவிதையை நகுலன் எழுதும்போது நகுலன் என்னும் ஆளுமை சார்ந்துதான் அது புரிந்துகொள்ளப்படுகிறது. அவருடைய கவிதைகளுக்குள் யாரும் நேரடியாகப் பிரவேசிக்கவில்லை என்ற சந்தேகமும் எனக்கு இருக்கிறது. இதே கவிதையை எழுதி, கீழே யாரோ ஒரு ‘முருகேசன்’ என்று பெயரிடும்போது அது கவிதையாகக் கொள்ளப்படாது எனத்தோன்றுகிறது. அப்படியென்றால் தமிழ்க் கவிதைப் பரப்பிற்குள் நகுலனை எவ்வாறு அடையாளப்படுத்துவது?

யுவன்: அப்படியென்றால் என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. இது போன்ற ஒரு கேள்விக்குத் தமிழின் பெயர் பெற்ற கவிஞர்கள் அனைவரையும் உட்படுத்தலாம். உதாரணத்திற்கு ‘காவியம்’ என்னும் பிரமிளின் கவிதையை எடுத்து கீழே நீங்கள் சொன்ன ‘முருகேசன்’ எனப் பெயரை இட்டால் அவரை மகா கவிஞர் எனக் கொண்டாடுவீர்களா?

சுகுமாரன்: இல்லை, கொண்டாட முடியாது. அது தனியான இருப்பு தொனிக்கும் கவிதை.

யுவன்: நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஒரு நீண்ட காலகட்டத்துக்கு இயங்கிய கவிஞனை சர்ச்சைக்குரிய அந்த நான்கு வரிகளுக்கு முன்னும் பின்னுமான அவனது கவிதார்த்தச் செயல்பாடுகளை வைத்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையை முன்னிட்டு எழும் ஆளுமை எந்த விதத்திலும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல.

சுகுமாரன்: இல்லை தனிப்பட்ட வாழ்க்கையை அல்ல. நான் சொல்ல வந்தது, இலக்கியம் சார்ந்த அவனுடைய வாழ்க்கையைத்தான்…

யுவன்: அவனுடைய கவிதை உலகம் முழுமையானதாக இருக்கிறதா, அந்த முழுமையான உலகத்திற்குள் இந்த வரிகளுக்கு இடமிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக அப்பாஸின் ஒரு கவிதையைக் குறிப்பிடலாம். அன்பு கெழுமிய வரிகளும் சக மனிதனின் அங்கீகாரத்துக்கு ஏங்கும் வரிகளும் கொண்ட கவிதைகள் நிறைய எழுதியவர். ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார்.

‘பின் ஒருபோதும்

உன் வானத்தில்

பறக்காதிருக்குமானால்

அந்தப் பறவையைச்

சுட்டு வீழ்த்து’

கிட்டத்தட்ட இருநூறு பக்கங்களில் பொங்கிய அன்பு, மூன்று வரியில் இல்லாமல் போய்விடுகிறது. இதில் எதை அவர் எனக் கொள்வது, அந்த இருநூறு பக்கத்தையா, இந்த மூன்று வரிகளையா?

ஒருவேளை இருநூறு பக்கம் அவராக இருந்து ஒரு பிறழ்வுநிலை இந்தக் கவிதையைக் கொடுத்திருக்குமானால் இதை ஏன் அவருடைய கவிமனம் தனதாக அடையாளம் காண்கிறது? ஏன் பிரசுரிக்கிறது? இதை எழுதக் கூடாது எனச் சொல்ல முடியாது; ஆனால் பிரசுரிப்பது ஒரு பிரக்ஞைபூர்வமான செயல்பாடு. ஒருவேளை பிறழ்வுநிலையில் எழுதப்பட்டது என்றால் அதைப் பிரசுரிக்கும் போதாவது இது என்னுடைய வரி இல்லையே என விழித்துக் கொண்டிருக்கலாம். அப்படியானதொரு விழிப்பின் வழியாக வேறோர் உலகத்திற்குள்கூடப் பிரவேசித்திருக்க முடியும். ஆனால் அது தமிழ்ச் சூழலில் நடக்கவில்லை.

நகுலனின் ‘ராமச்சந்திரன்’ பற்றி நிறைய சர்ச்சை இருக்கிறது. அது தனியான நான்கு வரிகள் அல்ல. தனியான நான்கு வரித் துணுக்காகப் படிக்கும்போது எந்தப் பதிவையும் தராது. ஆனால் அவற்றுக்கு முன்னும் பின்னும் இருக்கும் வரிகள் எல்லாம் சேர்ந்து செறிவான அக உலகத்தை நிர்மாணிக்கிறது இல்லையா? அந்த உலகம் கவனிக்கப்படத்தக்கது.

சுகுமாரன்: சரி, இந்தக் கவிதையையே எடுத்துக்கொள்வோம். ‘ராமச்சந்திரனா என்று கேட்டேன்’ இது ஒரு கவிதை. கிட்டத்தட்ட இதே போன்ற இன்னொரு கவிதை ஆத்மாநாமிடமிருந்து வருகிறது. ‘கடவுளைக் கண்டேன் எதையும் கேட்கவே தோன்றவில்லை, அவரும் புன்னகைத்துப் போய்விட்டார், ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி’, ஆத்மாநாமின் இந்தக் கவிதைக்கு ‘ஆத்மாநாம்’ என்ற பெயரொட்டு இல்லாமலேயே ஒரு கவிதைக்கு நம்மால் இடம் தர முடியும். ஆனால் ‘ராமச்சந்திரன்’ கவிதையை ‘நகுலன்’ என்னும் பெயர் இல்லாமல் இடம் தர முடியுமா?

யுவன்: இந்த இரண்டு கவிதைகளுக்குமிடையில் ரொம்ப முக்கியமான வேற்றுமை உள்ளது. கடவுள் குறித்து ஏற்கெனவே ஒரு தீர்மானம் இருக்கிறது. அந்தத் தீர்மானத்தின்மீது அமர்ந்துதான் இந்தக் கவிதையைக் கட்டியெழுப்புகிறார் ஆத்மாநாம். ஆக, ‘கடவுளை நான் பார்த்தால் என்ன செய்வேன்’ என்னும் உங்களது கேள்வியும் அருகிலேயே இருக்கிறது. கடவுளிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்று ஒரு பட்டியலே என்னிடம் உண்டு. இவை எல்லாம் சேர்ந்து ஆத்மாநாமின் கவிதைக்கு அர்த்தத்தை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. ‘ராமச்சந்திரனை’ப் பொறுத்த மட்டில் எந்த ‘ராமச்சந்திரன்’ என்னும் குறிப்பே இல்லை. அதனால்தான் அது நகுலனின் கவிதையாக இருக்கிறது. அதனால்தான் ‘சொல்லவுமில்லை, கேட்கவுமில்லை’ என்னும் கூற்று அதிமுக்கியம் கொண்டதாகிறது. அதுதான் அக்கவிதைக்கான பெறுமானத்தை ஏற்றிக் கொடுக்கிறது.

‘அதனால் என்ன எல்லாம் ஒரே ராமச்சந்திரன்தான்’ என்பது போன்ற ஒரு தட்டையான வரியையிட்டு முடித்திருக்க முடியும். அப்படிச் செய்திருந்தால் அந்தக் கவிதை அவிழ்ந்திருக்கும். ஆனால் நகுலன் அதைச் செய்யவில்லை. அதனால்தான் அவரைப் பிரக்ஞைபூர்வமான கவிஞர் எனச் சொல்கிறேன்.

இந்தக் கவிதை வேடிக்கைக்குரிய ஒரு துணுக்காகத்தான் என் மனத்தில் இருந்தது. மதுரையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது சுந்தர ராமசாமி இந்தக் கவிதையைக் குறிப்பிட்டுப் பேசினார். அந்தப் பேச்சுதான் இந்தக் கவிதையைத் திறப்பதற்கான திறவுகோலைத் தந்தது. அந்தத் திறவுகோலை உபயோகித்து நான் பல கவிதைகளைத் திறந்திருக்கிறேன். அதனால் சுந்தர ராமசாமியின் அந்தக் கூற்றை இங்கே பதிவு செய்யலாமென நினைக்கிறேன். ‘ஒரு கவிதை நிகழும் காலம், அது நிகழும் இடம் இவை இரண்டையும் வைத்தே பல கவிதைகளைத் திறந்துவிடலாம்’ என்றார் சுந்தர ராமசாமி. இத்திறவுகோலை உபயோகித்து நான் என்னவிதமாகத் திறந்துபார்த்தேன் என்பது முக்கியமல்ல. சுந்தர ராமசாமி என்ன விதமாகத் திறந்து விளக்கினார் என்பதும் முக்கியமல்ல. ஆனால் ஒரு திறவுகோல் கிடைக்கும்பட்சத்தில் தன்னளவில் ஒருவர் பல கவிதைகளைத் திறந்துபார்த்துவிட முடியும்.

சுகுமாரன்: ஐம்பதுகளின் இறுதியிலிருந்து அதாவது எழுத்து தொடங்கிய காலத்திலிருந்து, தொண்ணூறுகளின் தொடக்கம் வரை சுமார் நாற்பது வருடங்கள் தொடர்ந்து எழுதியிருக்கும் நகுலனின் கவிதைகளை எந்த விதத்திலாவது வகைப்படுத்த முடியுமா?

யுவன்: தமிழ்ச் சூழலுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. பல கவிஞர்கள் முப்பது நாற்பது வருடங்கள் தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். இதில் கவிதை மட்டுமே எழுதியவர்களும் இருக்கிறார்கள். வாசகன் இவர்களைக் காலவரிசைப்படி வாசிப்பான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால் விமர்சகர்கள் பேசத் தொடங்கும்போது, உதாரணமாக, ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ எனப் பேச ஆரம்பிக்கும்போது, அவருடைய கவிதைகளில் இருக்கும் பொதுப் பண்பை எடுத்து ஒரு ஞானக்கூத்தனை உருவாக்குகிறார்கள். ஒரு சுந்தர ராமசாமியை உருவாக்குகிறார்கள். தமிழில் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இப்படி ஒற்றைத்தன்மையாகப் பார்க்கக்கூடாது. நாற்பது வருடங்கள் இயங்கிய ஒருவரின் இயக்கத்திற்கான நோக்கத்தை, உத்தேசத்தை, போக்கின் கதியைப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும்போது வேறுபாடுகள் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இது இலக்கியவாதிகள் அனைவருக்கும் பொருந்தும். உதாரணமாக ஜி.நாகராஜனின் முதல் கதைக்கும் இறுதி நாட்களில் எழுதிய ‘டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ கதைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டுக்குமிடையில் உள்ள இடைவெளியை வைத்து நாகராஜன் எவ்வளவு நீண்ட தொலைவைக் கடந்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.

நகுலனின் கவிதைகளை மூன்று காலகட்டமாகப் பிரிக்க முடியும் என்று நினைக்கிறேன். முதலாவது, எழுத்து வெளிவந்த காலகட்டம். அந்த நாளைய கவிப்பாங்கைச் சார்ந்தும் அதை விட்டு விலகியும் எழுதிய காலகட்டம். இரண்டாவது காலகட்டம், கோட்- ஸ்டாண்ட் கவிதைகள், சுருதி, மூன்று, ஐந்து, மூன்றாவது, இந்தத் தொகுப்புகளுக்குப் பிறகு எழுதிய கவிதைகள். இரண்டாவது காலகட்டத்தில்தான் அவர் தன் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என நான் கருதுகிறேன். இந்தக் காலகட்ட எழுத்தில்தான் அவரின் சாராம்சம் வெளிப்படுகிறது என நம்புகிறேன். அல்லது இப்படிச் சொல்லலாம் – தனக்கே ஆன கவியுலகைக் கட்டமைக்க அதைத் தேடிப் புறப்பட்ட யாத்திரையை முதற்காலகட்டம் என்றால் வந்தடைந்த இடம் என இரண்டாவது காலகட்டத்தைச் சொல்லலாம். வந்துசேர்ந்த இடத்தை விட்டுத் தானே விலகிச் செல்லும் யத்தனம் மூன்றாவது காலகட்டம் எனலாம்.

கோட் – ஸ்டாண்ட் கவிதைகள், சுருதி இவ்விரு தொகுப்புகளும் தரும் முழுமையான அனுபவத்தை மற்ற தொகுப்புகள் தரவில்லை.

சுகுமாரன்: கோட்-ஸ்டாண்ட் கவிதைகள், சுருதி இவ்விரு தொகுப்புகளும் நவீனக் கவிதைகள் சார்ந்த ஒரு மனம் மரபான இலக்கியத்துடன் கொள்ளும் உறவு. அப்படிதான் நகுலன் எழுதியிருக்க வேண்டும் என்பது என் ஊகம். மரபான இலக்கியங்களுக்குள்ளாக ஒரு நவீன மனத்தின் பயணம் எப்படியானதாக இருந்திருக்கும்? ஆனால் இந்த நவீன மனத்திற்கு அதற்குள் இருக்கக்கூடிய மரபான விஷயங்கள்தாம் திரும்பத்திரும்பப் பிடிபட்டிருக்கிறது. புதிய விஷயங்கள் எதையும் இந்த நவீன மனத்தால் கண்டுபிடிக்க இயலவில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் அவருடைய ‘மழை; மரம்; காற்று’ என்னும் நீண்ட கவிதை முழுக்கவும் நவீனச் சூழல் சார்ந்த ஒரு விஷயம். இக்கவிதைக்குள் இந்த மனம் சுதந்திரமான ஒரு வெளியை உருவாக்கிவைத்திருக்கிறது. இப்படிச் சொல்வது சரியாக இருக்குமா?

யுவன்: அப்படிச் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் திரும்பிச் சென்று பார்க்கும்போது விபீஷணனும் கும்பகர்ணனும் ராமாயணத்தில் இருக்கும் விபீஷணனாகவும் கும்பகர்ணனாகவுமே தெரியவருகிறார்கள். அவர்கள் மீது ஒரு முக்கியக் கேள்வி எழுப்பப்படவேண்டும். நகுலன் அவர்களைத் திரும்பவும் தம்முடைய பாணியில் பதிவு செய்கிறார் என்றுதான் தோன்றுகிறது. புதுமைப் பித்தனின் அகலிகையைத்தான் நான் எப்போதும் உதாரணம் சொல்வேன். காவிய காலத்துப் பாத்திரங்களை மீட்டெடுக்கும்போது ஒரு நவீன கால எழுத்தாளனுக்கு எழுப்ப ஓர் அசலான கேள்வி இருக்கிறது. அதுநாள் வரை எழுப்பப்படாத கேள்வி. கடவுள் அவர் சரியாகத்தான் நடந்திருப்பார் என்னும் வைதீக மனம்தான் எல்லோருக்குள்ளும் செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் எழுத்தாளன் இந்தக் கேள்வியை எழுப்புகிறான். பெண் விடுதலை பெரிதாகப் பேசப்படாத காலத்தில் இது எழுப்பப்பட்டிருக்கிறது என்பது முக்கியம். இதைத்தான் கடவுளுக்கு எதிரான குரலாக நான் நினைக்கிறேன்.

சுகுமாரன்: நகுலனின் சம காலத்தவர்களை ஒரு மாதிரியாக வரையறைக்குள் கொண்டுவந்துவிடலாம்; பிச்சமூர்த்தி நேரடித்தன்மையுடன் எழுதிய, ஆன்மிகச் சார்பு உள்ள கவிஞர்; சுந்தர ராமசாமி நவீன வாழ்க்கையின் சிக்கல்களை நவீனமான தொனியில் வெளிப்படுத்த முயன்றவர்; நவீன வாழ்க்கையின் சிக்கல்களைக் காவியத்தன்மையுள்ள மொழியில் படிமங்களுடன் சொல்ல முயன்றவர் பிரமிள்; நவீன வாழ்க்கையின் சிக்கல்களை அதன் சிடுக்குகளுடன் அப்படியே கவிதைகளில் வெளிப்படுத்தியவர் க.நா.சு.; ‘நவீன வாழ்க்கை ஓர் அபத்த நாடகம். அந்த அபத்த நாடகத்தின் பாத்திரங்களாக நாம் இருப்பதால் நாமும் அபத்தமாக நடந்துகொள்கிறோம். நம்முடைய செயல்பாடுகள் அனைத்துமே அபத்தமானவை’ – இந்தத் தொனியை சி.மணி தொடங்கிவைக்கிறார். அதை ஞானக்கூத்தன் விரிவாக்கிக் கொள்கிறார். இப்படி எல்லாம் சொல்லும்போது நகுலனை நாம் எந்த வரையறைக்குள் கொண்டுவர முடியும்?

யுவன்: தமிழில் திரும்பத் திரும்ப ஒரு வாதம் நடக்கிறது. கவிதை தழுதழுப்பாகவும் மிகையுணர்வுடனும் இருந்தாகவேண்டும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. அப்படி இருக்கும் கவிதை பொருட்படுத்தத் தக்கதல்ல என்கிறது எதிர்த்தரப்பு. கவிதைக்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சார்பு / சார்பின்மை இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை.

தீவிரமான கவிதை எனச் சொல்லப்பட்ட கவிதைகளை எழுதியவர்கள் கவிதைகளைத் தத்துவமயமாக்கிக்கொண்டிருந்தனர். நகுலன் கவிதைகளில் தத்துவமாக ஒரு விஷயமும் இல்லை, ரொமாண்ட்டிக்கான அணுகுமுறையும் இல்லை. சுசீலா அவர் கவிதைகளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருப்பாள். எனினும் கனிவும் காதலுமான வார்த்தைகளை அவர் எழுதவே இல்லை. அதே சமயத்தில் சித்தர்களைப் போல் பெண் என்றாலே வெறுக்கத்தக்கவள், ஊத்தைக்குழி, உதிரப்புனல் என்றெல்லாமும் பார்க்கவில்லை.

கவிதையின் மொழியை அழகாக்க வேண்டுமென்றோ, வெளிப்பாட்டை அழகாக்க வேண்டுமென்றோ அவர் நினைக்கவில்லை. அவரிடம் ஒரு கச்சாவான தன்மை இருக்கிறது. எண்ணம் பிறக்கும்போதே சொல்ல முயல்வது போன்ற தோற்றம் அவரிடம் உண்டு. இந்தத் தோற்றத்தைச் செயல்படுத்த அவர் நிறையப் பிரயாசைப்பட்டிருப்பார் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அவ்வளவு பிரக்ஞைபூர்வமான செயல்பாடு இல்லாமல் ஒருவர் அறுபட்ட நிலைக்குத் தன்னுடைய வரிகளைக் கொண்டு செல்ல முடியாது.

பிறகு ஒரு கவிஞனை எப்படி வகைப்படுத்த வேண்டும் என்பது விமர்சகனுக்கு மட்டுமே இருக்கும் கேள்வி. வாசகனுக்கு அது தேவையில்லை. அவனுக்குத் தேவை இரு விஷயங்கள்தாம். அவனுக்குக் கிடைக்கக்கூடிய பரவசம் அல்லது நிம்மதியின்மை. இதைத்தான் கவிதானுபவம் என்கிறோம். இரண்டாவது, வாசித்தபின் அவனுக்குள் எஞ்சக் கூடிய கேள்விகள். அவ்வளவுதான். இவை இரண்டையும் ஒரு கவிஞன் கொடுத்தால் போதாதா? அவன் எந்த வகையைச் சேர்ந்தவனாக இருந்தால் என்ன?

  சுகுமாரன்: வாசகனைப் பொறுத்தமட்டில் அது சரிதான். ஆனால் தமிழில் நாற்பதாண்டுகள் இயங்கிய ஒருவரைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் எங்கு வைப்பீர்கள்? அதற்கு ஓர் உபகரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதைத் தொடர்ந்துதான் அவரை வகைப்படுத்தும் கேள்வி எழுந்தது. படிமங்கள் பேசப்பட்ட காலத்தில் நகுலன் படிமங்கள் சார்ந்த கவிதைகள் எழுதியிருக்கிறார். உதாரணமாக, ‘கொல்லிப்பாவை’ கவிதையைச் சொல்லலாம். உரையாடல்கள் சார்ந்த, ஞானக்கூத்தன் போன்றோரின் கவிதைகள் பேசப்பட்டபோது அவர் உரையாடல்கள் சார்ந்து எழுதியிருக்கிறார். பின்னால், ‘கவிதைக்குள் எதுவும் வேண்டாம்; அது இயல்பாக இருக்கட்டும்’ என்ற கருத்து நிலவிய காலகட்டத்தில் நகுலன் அந்த மாதிரியான கவிதைகளும் எழுதியிருக்கிறார். இதை எல்லாம் தாண்டி, தமிழ்க் கவிதைக்கான நகுலனின் தனித்துவம் மிக்க ஒரு பங்களிப்பு என்பது எதிர் கவிதைகள்தாம். இதைத் தமிழில் நகுலன்தான் முன்வைக்கிறார். இதை எல்லாம் கொண்டுதான் நாம் நகுலனைப் பார்க்க வேண்டும். இவற்றின் வழியாக ஒரு புதிய வாசகனுக்கு நகுலன் குறித்தான ஒரு திறப்பை ஏற்படுத்துகிறோம்.

யுவன்: பௌதிக உலகை முழுக்கக் கொண்டாடுபவராகவும் அல்லாமல், அதைக் கேவலம் என நிராகரிப்பவராகவும் அல்லாமல் இவை இரண்டுக்கும் வெளியில் இயங்கியவர் நகுலன். இந்த அடிப்படையில் அவரை metaphysical கவிஞர் எனச் சொல்லலாம் என நினைக்கிறேன். அதாவது பௌதிக உலகிற்கு அப்பால் செல்லக்கூடிய கவிமனமாக நகுலன் தெரிகிறார். அப்புறம் ஒரு விஷயம், எந்த வரையறைக்குள்ளும் அடங்காமல் தனித்துவமாக ஒரு கவிஞன் இருக்க வாய்ப்பில்லையா?

சுகுமாரன்: கவிஞர்கள் எல்லோரும் முயல்வதே அதற்காகத்தானே. நகுலனுக்குப் பின்னால் வருபவர்களில் நகுலன் போல ஆக வேண்டும் என நினைப்பவர்கள்தாம் அதிகம். ஆனால் நகுலன் தொட்ட இடம், அவர்களுக்குக் கைவசமாகாத ஓர் இடம்.

யுவன்; ஒரு முக்கியமான விஷயம், தமிழில் காலம் என்னும் ஒரு சொல். இச்சொல் கவிதையிலும் சரி, உரைநடையிலும் சரி பெரும்பாலும் முறையாகப் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. பிரமிளிடம்தான் ‘மனோவேளை’ என்னும் ஒரு சொல்லைப் பார்க்கிறேன். நகுலன் கவிதை ஒன்றில்,

‘திரும்பிப் பார்க்கையில்

காலம் ஓர் இடமாகக்

காட்சியளிக்கிறது’

இதில் ‘காலம்’, காலம் என்னும் வியக்தியாக மட்டுமே பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. அவர் எங்குமே ‘காலம்’ என்று கடிகாரக் காலத்தையோ உளவியல் காலத்தையோ சொல்லவே இல்லை. இவை எல்லாம் சேர்ந்துதான் நகுலனின் உலகைத் தரப்படுத்துகிறது.

2

யுவன்; தமிழில் இன்று எழுத வந்திருக்கும் இளம் படைப்பாளிகள் வரைக்கும் நீங்கள் எல்லோரையும் வாசித்திருக்கிறீர்கள். நகுலனுக்கு முன்னும் பின்னும் அவர் சாயல் உள்ளவர் என யாரையாவது அடையாளம் காண்கிறீர்களா?

சுகுமாரன்: நகுலன் நகுலனாக இருக்கிறார் என்பதற்கான ஒரே காரணம் நகுலன் கவிதைகளை நகுலன் மட்டுமே எழுதமுடியும் என்பதுதான். அப்படியான உலகத்தை வேறொருவர் உருவாக்க முடியுமெனத் தோன்றவில்லை. அதுமட்டுமல்ல, எல்லோரும் தனக்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும்போது நகுலன் தொடர்ந்து தனக்குள் உள்நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். கவிதையில் மட்டுமல்ல அவருடைய நாவல்களிலும் இதைத் தொடர்ந்தார். அந்த வகையில் தமிழின் தனித்துவம் மிக்க எழுத்தாளர் அவர். நகுலனின் நிழலை வேண்டுமானால் தீண்ட முடியுமே தவிர நகுலனின் சுடரை யாராலும் தொட முடியாது. ஆனால் நகுலனின் உந்துதலால் தங்கள் வரிகளை உருவாக்கியவர்கள் இருக்கக்கூடும். அது பெரும்பாலும் பாசாங்கான ஒன்றாகத்தான் இருக்கிறது. ஏற்கெனவே சொன்னது போல நகுலன் எழுதிய நான்கு வரிகள் ஏன் கவிதையாகின்றன, இன்னொருவரின் நான்கு வரிகளால் ஏன் கவிதை ஆக முடியவில்லை? இந்தக் கேள்விகளுக்கான விடைதான் இதற்கும்.

அதுபோல இன்னொரு விஷயத்தையும் சொல்லலாம். ஜென் கவிதைகளில் உள்ள ஜென் மனநிலையைத் தமிழ்க் கவிதைக்குள் கொண்டுவந்துவிட முடியும் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் வெறும் நகலெடுப்பாக மட்டுமே நின்றுவிடுகிறது இதுதான் நகுலன் விஷயத்திலும் நடந்திருக்கிறது. நகுலன் போலச் சிலவரிகளை எழுத முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதனளவுக்கான ‘கவித்துவம்’ அவ்வாறு எழுதப்பட்ட கவிதைகளில் நிகழவில்லை என்பதுதான் உண்மை. விக்ரமாதித்யனின் பல வரிகளில் நகுலன் சாயல் இருக்கிறது. யூமா வாசுகியின் தொகுப்பிலும் சில வரிகளில் நகுலன் தென்படுகிறார். இன்னும் சிலரையும் சொல்லலாம். நகுலனின் வரிகளும் அவருடைய அனுபவமும் பிரிக்க முடியாத உறவுடையவை. அனுபவம் சார்ந்துதான் அந்த வரி வந்திருக்கிறது அல்லது அந்த வரியைச் சார்ந்துதான் அந்த அனுபவம் தர்க்கமாகிறது. இப்படியான ஓர் ஆளுமை தமிழில் இல்லை. அதனால் நகுலனுக்கு முன்னும் பின்னும் நகுலன் மட்டுமே.

யுவன்: தமிழுக்கு வெளியில்…

சுகுமாரன்: அவ்வளவு நுட்பமான வாசிப்பு இல்லை என்றாலும் இரு கவிஞர்களை நகுலனின் சாயல் உள்ளவர்களாகச் சொல்லலாம். ஒருவர் எமிலி டிக்கின்ஸன். லௌகீகமான எல்லாவற்றையும் கவிதைக்குள் கொண்டுவந்தாலும் அவை லௌகீகம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் கவிதை சார்ந்த ஒன்றாக மாறுவது. அதுவே ஆக இருப்பது ஆகிய தன்மைகளில் நகுலனின் சாயலை உணர முடியும். எமிலி டிக்கின்ஸன் நகுலனைப் பாதித்திருக்கலாம். இதற்கான சான்றுகளை நகுலனின் சில கட்டுரைகளில் பார்க்க முடிகிறது. குறிப்பாக ‘மழை; மரம்; காற்றி’ல் எமிலியின் வரிகளையே அவர் மொழிபெயர்த்துச் சேர்த்திருக்கிறார். இன்னொருவர் ரஷ்யக் கவிஞர் ஜோசப் ப்ராட்ஸ்கி. ஓர் அரூபமான மனநிலையை உருவாக்குவதில் ப்ராட்ஸ்கியை நகுலனுடன் ஒப்பிடலாம்.

யுவன்: நகுலனிடம் பொக்கான வரிகள் எனக் கருதக்கூடிய வரிகளும் இருக்கின்றன. உதாரணமாகத் திரும்பத்திரும்பப் பேசப்படும், திரும்பத்திரும்பச் சர்ச்சைக்குள்ளாகும் அந்த வரி. நில் போ வா. இந்த வரிகளை நாம் எந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பது? இதுவும் நகுலன் கட்டி எழுப்பிய அக உலகம்தானே. இதற்கும் ஒரு மறைபொருள் இருக்கத்தானே செய்யும்? ஒரு வாசகனாக என்னால்தான் அதை எட்டிப்பிடிக்க முடியவில்லையோ?

சுகுமாரன்: இதே சந்தேகம் எனக்கும் இருக்கிறது. ‘’இருப்பதற்கென்றே வருகிறோம் இல்லாமல் போகிறோம்’ இந்த வரிகள் தரும் அனுபவத்தை ‘நில் வா போ’ தரவில்லை. முதல் கவிதையைப் புரிந்துகொள்ளக் கவிதைகள் சார்ந்த என் புரிந்துகொள்ளலே போதுமானது. அது நகுலன் தந்ததாக இருக்கலாம் அல்லது நகுலனைப் புரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக அடைந்ததாக இருக்கலாம். ஆனால் ‘நில் வா போ’ எந்த விதமான தூண்டுதலையும் தரவில்லை. நகுலன் தந்ததும் அல்லது நகுலன் தந்ததாக நான் எடுத்துச் செல்லும் விஷயங்களுக்குள் இந்த மூன்று சொற்கள் இல்லை. எனக்குத் தெரிந்து நகுலன் மிகும் பிரக்ஞைபூர்வமான எழுத்தாளர். அதுபோல மிகவும் வேடிக்கையான மனிதரும்கூட. தந்திரமாக வாசகர்களை ஏமாற்றக்கூடிய வேலைகளை வேடிக்கையாக அவர் செய்திருக்கக்கூடும். அப்படியானவையாக இக்கவிதைகள் இருக்கலாம். பிற்காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் உண்மையான கவிதை நோக்கின்றி வேறுவேறு தேவைகளுக்காக – ஓர் எதிர்வினையாகவே கூட – எழுதப்பட்டவைதாம். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. அதுபோல்தான் இவை எல்லாம் நகுலனின் கவிதைகள் எனச் சொல்லப்பட்டபோதும் நகுலனின் சாரத்தைக் கொண்டவையாகத் தோன்றவில்லை.

யுவன்: எனக்கு வேறு ஒன்று தோன்றுகிறது. தன் கவிதைகளில் எதையுமே மர்மப்படுத்தாதவராக, எல்லாவற்றையும் திறந்துவைக்கக்கூடிய கவிஞராக நகுலன் இருந்திருக்கிறார். அவர் திறந்து வைத்திருக்கும் அந்த விஷயம் தன்னளவில் மர்மமானதாக இருக்கும். ஆனால் அவர் மெனக்கெட்டு எதையும் மர்மமாக்கவில்லை. இந்த ‘நில், போ, வா’ கவிதையிலும் அவர் எதையும் மர்மப் படுத்தியிருக்கமாட்டார் என்றுதான் தோன்றுகிறது. அவருடைய அபிமானிகள் எதையெதைப் பற்றியோ சொல்லும்போது இதையும் சொல்கிறார்கள்.

இன்னொரு கேள்வி, பிரக்ஞைபூர்வமாகக் கவிதைகள் எழுதிய, தீர்க்கமான கவிதைப் பரப்பைக் கட்டியமைத்த ஒரு கவிஞரின் கவியுலகிற்குள் இம்மாதிரியான வரிகள் எப்படி நுழைகின்றன?

சுகுமாரன்: இது கொஞ்சம் குழப்பமான கேள்வி. ஆன்மிகப் பெரியவர்கள் பேசும்போது அவர்களது சொற்களுக்கு அவர்களே உத்தேசிக்காத பல பொருள்கள் சொல்லப்படும் இல்லையா? அதுபோலத்தான் இதுவும் எனச் சந்தேகிக்கிறேன். மற்றபடி இதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை.

யுவன்: பிரமிள், ஞானக்கூத்தன், பசுவய்யா போலக் கவிதையை முழுநேரச் செயல்பாடாகப் பார்த்த பலர் இருக்கும்போது நகுலன் மட்டும் ஏன் திருவுருவாகப் பார்க்கப்படுகிறார்? அவருடைய குடிப்பழக்கத்திற்கும் இதற்கும் ஏதாவது நேரடித் தொடர்பு உண்டா?

சுகுமாரன்: எனக்கு அப்படிதான் தோன்றுகிறது. நகுலனைப் பற்றிய பார்வைகளை நான் இரண்டாகப் பிரிக்கிறேன். ஒன்று, நகுலனின் இலக்கியம் சார்ந்து அவர் மதிப்பிடப்படுவது; மற்றொன்று, கட்டமைக்கப்பட்ட பிம்பம் சார்ந்து அவரை அணுகுவது. நகுலன் வாழ்ந்தது ஒரு maverick ஆன, eccentric ஆன வாழ்க்கையை. இது அவரே அனுமதித்துக்கொண்ட வாழ்க்கை. எல்லாருக்கும் இந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்னும் ஆசையிருக்கும். ஆனால் எல்லாருடைய சூழ்நிலையும் அதை அனுமதிப்பதில்லை. ஆகவே நகுலன் குறித்தான இந்தப் பிம்பத்தைக் கட்டமைத்துக்கொண்டே இருக்கிறோம். இந்தப் பிம்பம் சார்ந்துதான் அவருடைய படைப்புகளை அணுகுகிறோம். இதற்கு மாறாக, நகுலனுக்கு இலக்கியம் சார்ந்த ஓர் உலகம் இருக்கிறது. அதற்குள் பிரவேசிக்க மிகக் குறைச்சலான முயற்சிகள்தாம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கு உதாரணம், நகுலன் இலக்கியத் தடம் என்னும் தொகுப்பு. இதிலுள்ள பெரும்பாலான கட்டுரைகளில் நகுலன் என்னும் இலக்கிய ஆளுமையையோ, அவருடைய இலக்கியப் பங்களிப்பையோ பற்றிப் பேசுவதை விட நகுலன் என்னும் நபரைப் பற்றியும், அவருடைய அன்றாட நடவடிக்கைகள் பற்றியும், குறிப்பாகக் குடி பற்றியும் அவருடைய தனிமை பற்றியும்தான் அதிகம் சொல்லப்பட்டுள்ளது.

யுவன்: இவ்வளவு குடி அபிமானியாக இருக்கக்கூடிய  நகுலன், குடித்த பின் உடலுக்குள்ளும் மனத்திற்குள்ளும் ஏற்படும் மாற்றங்களைக் கவிதைகளில் எங்கேயாவது பதிவு செய்திருக்கிறாரா? பிராந்திக் குப்பி என்னும் புறப்பொருள் தவிர வேறு ஏதாவது அகச் சலனம் பற்றி கவிதையில் பேசியிருக்கிறாரா?

சுகுமாரன்: இல்லை. பேசியதே இல்லை.

யுவன்: அப்படியானால் நகுலன் குடியைப் பற்றி கொண்டிருந்த அபிப்பிராயத்தை விடவும், அவருடைய குடிப்பழக்கம் பற்றிப் பிறர் கொண்டிருக்கிற அபிப்பிராயம் உயர்வானதாக இருந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. இல்லையா?

சுகுமாரன்: குடித்த மனத்திலிருந்து ஒரு வரி கூட எழுதப்படவே இல்லை அல்லது குடித்த அவஸ்தையைக்கூட அவர் எழுதியதில்லை. குடி கொடுக்கும் பரவசத்தையும் எழுதியதில்லை. அவரைப் பொறுத்தவரை குடிப்பது என்பது தண்ணீர் குடிப்பதைப் போன்றது. அதைத் தாண்டி அதற்கு எந்த முக்கியத்துவமும் இருந்ததாகத் தெரியவில்லை.

யுவன்: இப்படிப் புரிந்துகொள்ளலாமா, ஒரு கவிதையில் ‘ஒரு கட்டு வெற்றிலையும் சீவலும்’ எனக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இதற்கும் பிராந்திக் குப்பிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை எனக் கொள்ளலாமா?

சுகுமாரன்: ஆமாம், அப்படித்தான்.

யுவன்: அப்புறம் அவருடைய கவிதைகளில் மஞ்சள் நிறப் பூனை வரும் அதே அளவுக்குத்தான் பிராந்திக் குப்பியும் வருகிறது. இவை எல்லாமும் புற உலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய சில ஸ்தூலப் பொருட்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

சுகுமாரன்: அசையும் / நிலைத்திருக்கும் பொருட்களைத் தாண்டிய, இவற்றை உட்படுத்திய  இன்னொரு விஷயத்திற்குத்தான் நகுலன் செல்கிறார் என நினைக்கிறேன். ஆக இவை எல்லாம் அந்தப் பொருட்கள் மட்டுமல்ல, அது பூனையாக இருந்தாலும் சரி, பிராந்திக் குப்பியாக இருந்தாலும் சரி. அவருடைய ‘மழை: மரம்: காற்று’ என்னும் நெடுங்கவிதையில் இயற்கை பற்றி நிறையப் பேசுகிறார். ஆனால் அவை எல்லாம் வெறும் மழையாக, வெறும் மரமாகத்தான் இருக்கின்றன. இதே நிலைதான் அவரது மதுவுக்கும் இருக்கிறது.

ஒரு விஷயம் சொல்கிறேன். நகுலன் ரொம்பவும் பிரக்ஞைபூர்வமான கவிஞர் எனச் சொல்வதற்கு என்னிடம் ஓர் ஆதாரம் உண்டு. என் கவிதைத் தொகுப்பு வந்த சமயத்தில் நகுலனைச் சென்று சந்தித்தேன். அந்தக் கவிதைகளை வாசித்தார். வாசித்து விட்டு அவற்றின் வரிகளை நிரல்படுத்தினார். அந்தச் செயலை அவர் ‘structuring the poem’ என்றார். அதாவது இந்தக் கவிதையை உச்சரிக்கும்போது,

எனக்கு யாருமில்லை

நான்

கூட’

என்றார். ‘கூட’ என்பது தனி அலகாக மட்டுமே ஒலித்தது. ‘நான்கூட’ என்று கவிதையில் வருகிறது. ஆனால் நகுலன் உச்சரித்த விதத்தில் அந்த வரிகளுக்குக் கூடுதலான வேறொரு பொருள் வந்தது. இதைத்தான் அவர் ‘structuring the poem’ என்கிறார். இதோடுதான் நாம் நகுலனைப் பார்க்கவேண்டும். ஆனால் இது புரியாமல் நகுலனுக்குப் பின்னால் வந்தவர்கள் சொற்களை வெறுமனே உடைத்துப்போட்டனர்.

யுவன்: நகுலனின் தனிமை குறித்தும் பேச்சு வந்துகொண்டே இருக்கிறது. அவருடைய தனிமை, மணமாகாததால் வந்த தனிமை அல்ல என்றே நினைக்கிறேன். தவிர, கடைசி காலம் வரை அவருடைய அம்மா அவர் கூடவே இருந்திருக்கிறார். அம்மா பற்றி கோட் – ஸ்டாண்ட் கவிதைகளில் குறிப்பிட்டிருக்கிறார். நகுலன் குடும்பத்திற்குள்தான் இருந்திருக்கிறார். ஆனால் தனக்கென்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இந்தத் தனிமையை ஒரு சமூகத் தனிமையாக எடுத்துக் கொள்பவர்கள் ஒருவிதமாகப் பேசுகிறார்கள். அவர் கவிதைகளில் வெளிப்படும் தன்மையைச் சமூகத் தனிமை மட்டுமே என நினைக்கிறீர்களா?

சுகுமாரன்: என் அனுபவங்களின்படி, சமூக ரீதியாக நகுலன் தனிமையை உணர்ந்தார் என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், அவர் வாழ்ந்த ஊரில் நான் வாழ்கிறேன். அவரோடு தொடர்பிலிருந்த பலரையும் நான் பார்க்கிறேன். அவர் இறந்தபோது வீட்டிற்கு வந்திருந்த கேரளத்தின் முக்கியமான பேராசிரியர்கள் உட்பட பலருக்கும் ‘நகுல’னைத் தெரிந்ததை விடவும், ‘டி.கே.துரைசாமி’ என்னும் ஆங்கிலப் பேராசிரியரைத் தெரிந்திருக்கிறது. நகுலனின் வீட்டில் நண்பர்களோ, மாணவர்களோ இல்லாத நாட்கள் குறைவு. சமூகரீதியான தனிமையை அவர் அனுபவித்தார் என்று தோன்றவில்லை. அவர் அனுபவித்த தனிமை ஒரு கவிஞன் தனக்காகத் தேர்ந்தெடுத்த தனிமை. இதைத் தமாஷாக, அறிவுரையாகக்கூட அவர் சொல்லியிருக்கிறார். “நீங்க கவிதையெல்லாம் எழுதணும்னா கல்யாணமெல்லாம் பண்ணிக்காதீங்க.” என்று.

யுவன்: மற்றவர்களைப் போல ஓய்வுபெறும் வயது வரை பணியாற்றிய ஓர் ஆங்கிலப் பேராசிரியர். தாயாரோடு ஒரே வீட்டில் வசித்த மகன். சகோதரிகளில் ஒருத்தி உள்ளூரில் இருக்கிறாள், ஒருத்தி வெளிநாட்டில் இருக்கிறாள். எனக் கவிதைகளில் கூட அவர்களைப் பற்றிய குறிப்புகளை எழுதிய ஒரு குடும்பஸ்தன். இப்படி இருக்க எங்கிருந்து இந்தத் தனிமை பிம்பம் நகுலன்மீது சுமத்தப்பட்டது. அது எப்போது தொடங்கியது? எனக்கு முன்பே தமிழ் இலக்கியத்திற்குள் வந்துவிட்டதால் உங்களுக்குச் சரித்திர பூர்வமாகத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்.

சுகுமாரன்: இல்லை. எனக்குப் பொதுவாக வரலாற்று ஞானம் குறைவு!

யுவன்: ஏன் கேட்கிறேனென்றால் சமூக அளவில் அவரை வேறுபடுத்திக் காட்டுவது ‘திருமணம் முடித்துக்கொள்ளவில்லை’ என்னும் ஒரு குறிப்புதான்…

சுகுமாரன்: நகுலன் சுவாரசியமாகவும் சரளமாகவும் பேசக் கூடியவர். அவருடைய பிற்காலத்தில் நினைவுகள் எல்லாம் தப்பிப் போவதற்கு முன்புவரை தமிழ் இலக்கியவாதிகளுடனும் மலையாள எழுத்தாளர்களுடனும் ஆங்கிலத் துறை சார்ந்தவர்களுடனும் தொடர்ந்து உரையாடல்களை நிகழ்த்தி வந்திருக்கிறார். இதில் அவருடைய தனிமை என்பது நாம் சொல்லிச் சொல்லியே உருவாக்கியதுதான். தனது தனிமையைச் சமாளிக்க அவரிடமே சில விஷயங்கள் உண்டு, ஸ்தூலமாகச் சொல்வதானால் அவருடைய மதுப் பழக்கம், சூட்சுமமாகச் சொல்வதானால் அவருடைய  இலக்கியச் செயல்பாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி எல்லோருக்குமான தனிமையைத்தான் அவர் அனுபவித்தார். அடிப்படையில் பார்த்தால் யார்தான் தனிமையில் இல்லை?

யுவன்: இந்தக் கேள்வியை வேறுவிதமாகக் கேட்கவேண்டும். தனிமையை உணராத ஒருவன் கவிதை என்னும் ஊடகத்திடம் சென்றுவிட முடியுமா?

சுகுமாரன்: ‘யாருமற்ற இடத்தில் எல்லாம் நடக்கிறது’ என்கிறார் நகுலன். எல்லாம் நடக்கும் இடத்தின் தனிமையில்தான் நகுலன் இருக்கிறார்.

யுவன்: அவருடைய  ஒரு கவிதை பற்றி விரிவாகப் பேசலாம்.

நேற்றுப்

பிற்பகல்

4.30

சுசீலா

வந்திருந்தாள்

கறுப்புப்

புள்ளிகள்

தாங்கிய

சிவப்புப் புடவை

வெள்ளை ரவிக்கை

அதே

விந்தை புன்முறுவல்

உன் கண்காண

வந்திருக்கிறேன்

போதுமா

என்றுசொல்லி

விட்டுச்சென்றாள்

என் கண்முன்

நீல வெள்ளை

வளையங்கள்

மிதந்தன

‘… வெள்ளை ரவிக்கை’ – இதுவரைக்கும் இருக்கும் எல்லாம் மாறக்கூடியவை. வேறொரு நேரமாக இருக்கலாம். வேறொரு நிறப் புடவையாக இருக்கலாம். ‘அதே விந்தைப் புன்முறுவல்’ இந்த வரியில் ஸ்தூலமான இடத்திலிருந்து கவிதை மெல்ல உள்ளுக்குள் நகர்கிறது. ‘உன் கண் காண வந்திருக்கிறேன்’ இந்த வரியில் மீண்டும் நகுலன் வருகிறார். உன்னைக் கண்ணாரக் காண்பதற்காக வந்திருக்கிறேன். உன்னுடைய கண்ணைக் காண்பதற்காக வந்திருக்கிறேன் – இதில் எதைச் சொல்கிறது இந்த வரி, அல்லது உன் கண் என்னைக் காண வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன் எனச் சொல்கிறதா? அதாவது நான் உன்னைக் காண வந்திருக்கிறேன் எனச் சொல்கிறதா, அல்லது உனக்குத் தரிசனம் தர வந்திருக்கிறேன் என்கிறதா? இந்த வரியில் ஒரு குழப்பம் வருகிறது.

போதுமா

என்றுசொல்லி

விட்டுச்சென்றாள்…

திரும்பவும் கேள்விகள். என்னைப் பார்த்துவிட்டாயே இது மட்டும் போதுமா, அல்லது தனக்கு இது போதுமா என சுசீலா தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறாளோ? விட்டுச் சென்றாள் என்ற சொற்றொடர் தனித்த வரியாக இலங்குவது தற்செயலாகத்தானா?

‘என் கண்முன்

நீலவெள்ளை

வளையங்கள்

மிதந்தன’

இந்த வரிகளில் கவிதை வேறெங்கோ சிடுக்கில் சென்று மாட்டிக் கொண்டுவிடுகிறது. ஆனால் அந்த வளையங்கள் மிதப்பது ஒரு பித்துநிலையின் அம்சம். அவள் வந்துவிட்டுப் போனது வெறும் குறிப்புகளாகவும், இந்த வளையங்கள் மிதப்பது எஞ்சி நிற்கும் தன்னனுபவமாகவும் நீந்துகின்றன. இவை எல்லாம் எவற்றை நோக்கியும் சுட்டப்படாமல் நேரடியாக, ஒரு செய்தி போல் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு மனம் உள்ளுக்குள் எவ்வாறு வழுக்கிச் செல்கிறது என்பதற்கு உதாரணமாக இந்தக் கவிதையைச் சொல்லலாம். நீங்கள் ‘மழை: மரம்: காற்று’ பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்…

சுகுமாரன்: தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதைகளில் நகுலனின் ‘மழை: மரம்: காற்று’ம் ஒன்று. ஒருவர் நாற்காலியில் அமர்ந்து, அதுவும் ஏழு நாட்கள் அமர்ந்து, பார்க்கும் விஷயங்களின் தொகுப்புதான் இந்தக் கவிதை. கவிதைக்கான அலங்காரங்கள் எதுவும் இல்லை. எல்லாமே நேரடியான வரிகள். பார்க்கும் விஷயங்களை நாட்குறிப்பில் பதிவு செய்வது போன்ற தோற்றம். இந்தச் சூழ்நிலை சார்ந்து மனத்திற்குள் வந்து சேரக்கூடிய வேறு சில வரிகளும் – அவை மொழிபெயர்ப்பாகவோ அல்லது அந்த உந்துதலில் எழுதிய சொந்த வரிகளாகவோ இருக்கும். இதில் எதையுமே நாம் இதுவரை தெரிந்துவைத்திருக்கும் கவிதைக்கான நடைமுறையாகச் சொல்ல முடியாது. ‘ஒரு நூற்றெட்டு அரிவாள் நிழல்கள் பறக்கும் அறுவடை வயல்வெளியில்…’ என்பது போன்றோ ‘வண்ணத்துப்பூச்சி தன் கால்களில் ஒரு காட்டைச் சுமந்துகொண்டு…’ என்பது போன்றோ கவித்துவ கனம் உள்ள ஒரு வரிகூட இந்த நீள்கவிதையில் இல்லை. தகவலைக் கட்டமைப்பது போலத்தான் இந்தக் கவிதையை நகுலன் நகர்த்திச் செல்கிறார். ஏழுநாள் முழுசாகக் காற்றோடும் மழையோடும் இருந்த மனநிலையை இறுதியில் சொல்லிவிட்டுப் போகிறார். சுத்தமாகத் துடைத்து எடுக்கப்பட்ட ஒரு மனத்தைக் கடைசியில் சொல்ல நினைக்கிறார்:

‘என் எதிரே திறந்த வெளி; சாந்தமான வெயில் ஒளி’

இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகும் அந்த மனது பார்ப்பது ஒரு சூன்யத்தின் பிரகாசத்தைத்தான். அதாவது, அவ்வளவும் இட்டு நிரப்பிய பிறகும் ஒரு வெற்றுப் பாத்திரம். சொல்வதை மீறி, சொல்லப்படாத ஒன்றை வாசகனிடம் தொற்றவைக்கும் முயற்சியைத் தொடர்ந்து நகுலன் செய்திருக்கிறார். இந்தத் தொகுப்பு அதற்கு சாட்சி. தமிழ்க் கவிதையில் நகுலனின் சாதனை இது என்று நினைக்கிறேன்.

(நாகர்கோயிலில் 11.08.2012 அன்று பதிவு செய்யப்பட்ட உரையாடலின் சுருக்கப்பட்ட எழுத்து வடிவம்.)

தொகுப்பு: மண்குதிரை


நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்.

யுவன் சந்திரசேகர்.

பதிப்பகம் – காலச்சுவடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.