இந்தியாவில் காலநிலை மாற்றம்: நவ்ரோஸ் துபாஷ் நேர்காணல்

வ்ரோஸ் துபாஷ் நீண்ட காலமாக காலநிலை மாறுபாட்டுச் சவால்களுக்கு, இந்தியாவின் எதிர்வினையை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆவார். 1990-ஆம் ஆண்டு, ஏற்படுத்தப்பட்ட காலநிலைச் செயல்பாட்டு நெட்வொர்க் சிவில் சொசைட்டியின், முதல் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் இவரே. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான இவர், உள்நாட்டு வளர்ச்சிக்குக் குறைந்தளவு கார்பனைப் பயன்படுத்தும் செயல்திட்டங்களை வகுக்கக் கூடிய குழுவிலும் அங்கம் வகிக்கும் வல்லுநர் ஆவார். பிஸினஸ் லிங்க் இதழுக்காக ரிஹான் நஜீப் துபாஷை நேரில் சந்தித்து, எடுத்த பேட்டியின் சாராம்சம்:

காலநிலை மாற்றமும், இந்தியாவும்’ என்ற உங்கள் நூல் 2012-இல் வெளியான பிறகு, காலநிலை மாற்றம் பற்றிய இந்தியாவின் அணுகுமுறையில், என்னென்ன மாற்றங்களை அவதானித்துள்ளீர்கள்?

காலநிலை மாற்றம் குறித்து, நாடு தழுவிய உரையாடலைத் துவங்க வேண்டி, பல வேறுபட்ட குரல்களை ஒன்றிணைப்பது தான் என் நூலின் நோக்கம். அந்தச் சமயத்தில் காலநிலை மாற்றம் சார்ந்த செயல்பாட்டில் இந்தியா ஈடுபட வேண்டுமா என்ற கேள்வி இருந்தது. அதிலிருந்து கொள்கையின் பரப்பு வியப்பூட்டும் வகையில் மாறிவிட்டது.

முதலாவது, நாடுகள் அவரவர் நாட்டுச் சூழ்நிலையைப் பொறுத்து, என்ன பங்காற்ற முடியும் என்பதை முடிவு செய்யலாம் என்பதைச் சர்வதேச செயல்முறைவிதிகள் ஒப்புக்கொள்கின்றன. வளரும் நாடுகளுக்குத் தங்கள் மீது அநியாய சுமையைச் சுமத்துகிறார்கள் என்ற பயம், கொஞ்சம் குறைய இது உதவி செய்யும்.

இரண்டாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை, இப்போது மிக மலிவு. எனவே சூழலுக்குக் கேடு விளைவிக்காமல், நம்முடைய எரிசக்தி தேவையைக் குறைந்த செலவில், நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

மூன்றாவது அறிவியலும், காலநிலை மாற்றத்தின் விளைவு பற்றிய விழிப்புணர்வும், இப்போது அதிகளவில் மேம்பட்டிருக்கின்றது.

அளவுக்கு மீறிய உச்சக்கட்ட தட்பவெப்பநிலை நிகழ்வுகள், காலநிலை மாறுபாட்டால் தான் நடக்கின்றன என்று முன்பு, நம்மால் அறுதியிட்டுக் கூறுவது கடினம். ஆனால் காலநிலை ஆய்வியல் (attribution science) வந்தபிறகு, இது போன்று நடக்கும் நிகழ்வுக்குப் காலநிலை மாற்றம் காரணமா, இல்லையா என்பதை நம்மால் முடிவுசெய்ய இயலும்.

காலநிலை மாறுபாட்டை நிர்வகிப்பதில், நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. எட்டுச் சிறப்புப் பணிகளுடன் கூடிய தேசிய செயல்திட்டமொன்றை நாம் பெற்றிருக்கிறோம். இவற்றோடு மாநிலங்களின் 28 செயல் திட்டங்களும் உள்ளன. இவை அதிகளவில் ஒன்றும் செய்யவில்லையென்றாலும், அடிப்படை விதிகளின் ஆதார கட்டமைப்பை உருவாக்க, அதிலுள்ளவர்கள் சிந்தித்து, வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். நகரங்களில் இளைஞர் குழுக்களும், குடிமக்கள் குழுக்களும் புதிதாக இப்பணியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நாம் செயல்பட ஆரம்பித்திருக்கிறோம்.. இது செயல்படுவதற்கான அத்தாட்சி என்றில்லாவிட்டாலும், ஆரம்பித்துவிட்டோம் என்பது தான் முக்கியம்.

இந்த ஆண்டில் (2019) மட்டுமே, நீர்த்தேக்கங்கள் நீரின்றி வறண்டதிலிருந்து, பல மாநிலங்கள் வெள்ளம் அல்லது புயலால் பாதிக்கப்பட்டதுவரை, இந்தியா வரிசையாக தட்பவெப்ப நிலையின் மிக மோசமான நிகழ்வுகளைச் சந்தித்தது… இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 

காலநிலை மாற்றத்துக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றோ, எல்லாவற்றுக்குமே காலநிலை மாற்றம் தான் காரணம் என்றோ சொல்லக்கூடாது. இதைப் பற்றி நாம் எப்படிப் பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். பருவ ஆய்வியல் ஏன் முக்கியமென்றால், காலநிலை மாற்றத்தால், இந்த மாதிரியான நிகழ்வுகள் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகும் என்று அதன் குறிப்பு சொல்கிறது.

எடுத்துக்காட்டாக கேரளா வெள்ளத்தின்போது, நாம் பார்த்த மோசமான அழிவு போலத் தான் எதிர்காலத்தில் நம் போராட்டம் இருக்கும் என்று அந்த ஆய்வியல் சான்று சொல்கிறது. ஆனால் காலநிலை மாறுபாட்டைக் காரணம் காட்டி, உள்ளூர் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் போட்டிகளைப் புறக்கணிக்கக் கூடாது. ஒவ்வொரு நிகழ்வுக்கும், அழுத்தம் கொடுக்க பல காரணிகள் உள்ளன என்பது தான், இதைப் பற்றிச் சிந்திக்கும் சரியான வழி. .

உத்தரகாண்ட் விஷயத்தை எடுத்துக் கொண்டால், காடழிப்பு, நகரமயமாக்கல் போன்ற நிலப்பயன்பாடு மாற்றங்கள் முழுவதும், உள்ளூரில் செல்வாக்கும், அதிகாரமும் கொண்டவர்களால், நடத்தப்படுவதால், அது பாதுகாப்பற்ற மாநிலமாக இருக்கின்றது. அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் தீவிரத்துக்குப் காலநிலை மாற்றம் காரணமாயிருக்கலாம். இவை எல்லாம் சேர்ந்தே நடக்கின்றன.

இதைப் பற்றி மேலும் உங்கள் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வு முடிவு தகவல்களைக் கொண்டு, விளக்க முடியுமா?

தண்ணீரை எடுத்துக் கொள்வோம். வேளாண்மை மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்காகவும், சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் அதிகாரமின்மை காரணமாகவும், இந்தியாவின் ஆறுகளையும், நிலத்தடி நீரையும் பெருமளவு மாசுபடுத்தி விட்டோம் என்று நமக்குத் தெரியும். இமயமலையில் பனிப்பாறைகள் உருக ஆரம்பித்திருப்பதால், இந்தோ கங்கைச் சமவெளியிலுள்ள ஆறுகளில், அதிகப்படியான நீர்வரத்து ஏற்பட்டு, அவற்றின் நீரோட்டத்தில் எதிர்பார்க்க முடியாத அளவில், பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இது நீர் விநியோகத்தையும், வேளாண்மைக்கான நீர்ப்பாசனத்தையும் பாதிக்கிறது.

காலநிலை மாற்றத்துக்கேற்றவாறு, வேளாண்மையில் மாற்றம் செய்வது பற்றி, கே.எஸ்.கவிக்குமாரும், பிருந்தா விஸ்வநாதனும் எழுதியுள்ள ஒரு அத்தியாயத்தில், ஒவ்வொரு சதவீத வெப்ப அதிகரிப்புக்கும் வறண்ட, பாதி வறண்ட பிரதேசங்களுக்கு, நமக்கு 10 சதவீதம், அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் எனக் கணித்துள்ளனர்.

ஏற்கெனவே தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவும் சமயத்தில், நீர்ப்பாசனத்துக்கு 10 சதவீதம் அதிகம் வேண்டும் என்பது உண்மையில் மிகவும் கவலைக்குரிய விஷயம். எனவே காலநிலை மாறுபாடு என்பது, இப்போது நிலவும் சுற்றுச்சூழல் காரணிகள், பெருகும் தொழில்வளம் மற்றும் அவை செயல்படும் முறை ஆகியவற்றுடன் எந்தெந்த வழிகளில் வினைபுரிகிறது என்பதை நாம் ஆராய வேண்டும்.

இந்தியாவில் காலநிலை நிர்வாகம் என்பதற்கு என்ன அர்த்தம்?

நம் சுற்றுச்சூழல் நிர்வாக அமைப்பு, சூழல் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய அணுகுமுறையை, ஊக்குவிப்பதில்லை. காலநிலை மாறுபாடு என்பது தனிப்பிரச்சினையல்ல என்பதால், அதை நிர்வாகம் பண்ணுவது சிக்கலானது. இதற்கு நிலப்பயன்பாட்டு வகைகள், அதற்கான திட்டங்கள், மண்டலங்களாகப் பிரித்தல், போக்குவரத்துத் தொடர்பு, நீர் விநியோகம் முதலான எல்லாவற்றையும் பற்றிய உரையாடல் தேவைப்படுகின்றது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க, நம்மை அனுமதிக்கவும், அதே நேரத்தில் அரசின் பல்வேறு அலுவலகத் துறைகளிலும், இது பற்றிய உரையாடலை ஊக்குவிக்கவும், நமக்கு வழிமுறைகள் தேவைப்படுகின்றன.

மாநில அரசுகளின் செயல்திட்டங்கள், இவற்றைச் செய்வதற்காக உருவாக்கப்பட்டவை தாம். ஆனால் இத்திட்டங்கள் குறித்து, ஆய்வு செய்தபோது, அரசின் பல்வேறு அலுவலகங்களும், ஒருங்கிணைந்து செயல்படாமல், தனித்தனியாக செயல்படுகின்றன என்று தெரிந்துகொண்டோம். இத்திட்டங்கள் வெறும் கருத்துருவாக்கங்களோ, திட்டப்புனைவுகளோ அல்ல; இவை நடைமுறையில் அமல்படுத்த வேண்டியதற்காக வடிவமைக்கப்பட்டவை. காலநிலை மாற்றம் என்பது, பல்வேறு வகையான அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய, அதுவும் ஒரே சமயத்தில் செயல்படக்கூடிய பிரச்சினை என்று நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். அதே சமயத்தில் அப்பிரச்சினையைத் தீர்க்க முனைவோர்க்கும், பல்வேறு வகையான இலக்குகளும், பலன்களும் உள்ளன.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், அரசு இயந்திரங்கள் மக்கள் எவற்றையெல்லாம் பிரச்சினைகளாகக் கருதுகிறார்களோ, அவற்றைத் தீர்க்கச் செயலில் இறங்க வேண்டும், சாதாரணமாக அந்த பிரச்சினைகள் பட்டியலில், காலநிலை மாறுபாடு முதல் இடத்தில் இல்லை; இருக்கவும் இருக்காது. ஏனென்றால் நமக்கு உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல இருப்பதாலும், அவை அதிகபட்ச நெருக்கடி கொடுப்பதாலும், காலநிலை மாறுபாட்டின் விளைவுகளுக்கு, நம்மால் மிகக் குறைந்த அளவே முன்னுரிமை கொடுக்க வேண்டியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்மை போன்ற விஷயங்களில், காலநிலை மாற்றம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்போது, காலநிலை மாறுபாட்டை இந்த மாதிரியான பிரச்சினைகளோடு, இணைக்க நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

காலநிலை மாறுபாட்டுக்கான ஆதாரச் சான்றுகள் கண்ணெதிரே தெரியத் துவங்கினாலும், அவற்றை நம்பாமல் மறுப்பதற்கான போக்கு அதிகரிப்பதைப் பார்க்கின்றோம். 2017 பாரீஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துவிட்டது [2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன் அமெரிக்கா மீண்டும் உடன்படிக்கையில் இணைவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்]. இந்த மாதிரியான எண்ணப் போக்கை, இந்தியக் கொள்கை வட்டாரத்தில் நீங்கள் எதிர்கொள்கிறீர்களா?

காலநிலை மாறுபாட்டை தீவிரமாக எடுத்துக்கொண்டால், இந்தியாவுக்கு அதிக பலன் கிடைக்கும், இழப்பு குறைவாக இருக்கும் என்ற கருத்து அதிகமாக இருக்கின்றது. மேலை நாடுகள் செயல்படுவதற்காக நாம் காத்திருந்தால், அது நம் நாட்டின் நலனுக்கு ஏற்றதல்ல. மிகக் குறைந்த காலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்குச் செலவிடக் கூடிய தொகை காரணமாக அரசுக்குத் தயக்கம் ஏற்படுகிறது. ஆனால் நாம் செய்ய விரும்பும் வளர்ச்சிக்கான திட்டங்கள் யாவும், குறைந்த கார்பன் உள்ளவையே.

அதே சமயம், உடன்படிக்கை செய்து கொள்வதில், நமக்கு இருபது ஆண்டு கால வரலாறு இருந்தாலும், அதனால் இயற்கைக்குக் கிடைத்த பலன் என்னவோ பூஜ்யம் தான். நாம் கரியமிலவாயு வெளியிடுவதை, எந்த அளவு குறைக்கிறோமோ, அந்த அளவையும் சேர்த்து, மேலை நாடுகள் அதை வெளியேற்றுகின்றன. அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் மிக முக்கியமான வேறுபாடாக நான் நினைப்பது, அவர்கள் ஏற்கெனவே தொழிற்நுட்ப கட்டுமானங்களைக் கட்டி முடித்து விட்டார்கள். அவர்களுடைய பொருளாதாரம், அதிகளவு கார்பன் பாதையில் அடைபட்டுவிட்டது. நாம் கட்டிமுடிக்க வேண்டியது, இன்னும் எவ்வளவோ. நம் நகரங்களும், எரிசக்தி அமைப்பும் இப்போது தான் வளர்ந்துவருகின்றன என்பதால், நமக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலை நாடுகள் சூற்றுச்சூழலைப் பாதிக்காவண்ணம், தங்கள் ஒருங்கிணைந்த இயக்க அமைப்பை மாற்றுவதற்கு, அதிகச் செலவாகும்.

குறிப்பாக ஐரோப்பாவில், குடிமக்களில் சிலர், நாம் இதைச் செய்தாக வேண்டும் என்பதால் அதற்காகும் செலவில், கொஞ்சம் தர விரும்புகிறோம் என்று சொல்வதை, நாம் பார்க்க முடிகின்றது. அமெரிக்காவில் இது மிகவும் குறைவாயிருக்கிறது. ஏனென்றால் இதற்கு ஆகக்கூடிய செலவைக் காட்டிலும், வேண்டுமென்றே அதிகமாகக் கூட்டிச் சொல்லிப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

சில தொழில் நிறுவனங்கள், எப்படி தவறான தகவல்களைச் சொல்லித் குறைந்த கார்பன் பொருளாதாரத்துக்கு மாறும் முயற்சிகளைத் தடுத்துத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள் என்பதைப் பற்றி ஆவணப் படங்கள் வந்துள்ளன, அது மாதிரி இந்தியாவில் இல்லை. உண்மையில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், இந்த நடவடிக்கையைத் தங்கள் அஜெண்டாவில் வைத்திருப்பது, அதிகமாயிருக்கின்றது. அந்த மாதிரி எதிர்மறையான நிலைமை, இந்தியாவில் இல்லை.

இயற்கை ஆற்றலைப் பயன்படுத்திச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம், அதைப் பேணிக் காத்திடவேண்டும் என்ற எண்ணம், இப்போது அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாம் என்ன செய்கிறோமோ, அதிலிருந்து மாற முடியாது என்ற எண்ணம் இருப்பதுடன், அதை எப்படி அணுகுவது என்ற குழப்பமும் உள்ளது. நடுத்தர, சிறு தொழிற்கூடங்களுக்குத் தான், இது பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அடிக்கடி வணிகத்தில் குறுகிய காலச் சரிவைச் சந்திக்க கூடிய வாய்ப்பு அதிகமென்பதால், ஆபத்தை எதிர்கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.

காலநிலைக் கொள்கையின் ஆய்வாளராக, உங்களை அதிகம் எரிச்சல் அடையச் செய்வது எது?

என்னை அதிகமாக எரிச்சல் அடையச் செய்வது எது என்றால், காலநிலை மாற்றம் என்பது உடனடியாகக் கவனிக்க வேண்டிய அவசர பிரச்சினை மேலும் அதைப் பற்றி, அதிக விழிப்புணர்வு நமக்குத் தேவைப்படுகின்றது. அதே சமயம் அதை ஒரு தனிப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது. நம் வாழ்வு, நம் எதிர்காலம், நாம் நடந்து கொள்ளும் முறை ஆகியவை குறித்து, நாம் எடுக்கும் தொடர்ச்சியான முடிவுகளோடு, சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டும்.

எப்படிப்பட்ட நகரங்களில், வாழ விரும்புகிறோம்? என்ன மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்புகிறோம்? என்ன வகை உணவை உட்கொள்கிறோம்? என்ன உடை உடுத்துகிறோம்? நம்முடைய நுகர்வு வழிமுறைகள் என்னென்ன? இவை போன்று, நகர வாழ்க்கையில் ஏற்படுகிற பிரச்சினைகளோடு, காலநிலை மாறுபாட்டையும் சேர்த்துப் பார்த்தால்தான், அதில் நம்மால் நல்ல முன்னேற்றம் காண முடியுமென்று நினைக்கிறேன்.

குடிமக்களாகவும், நுகர்வோர்களாகவும் நாம் எடுக்கும் முடிவுகளிலிருந்து, காலநிலை மாற்றத்தைத் தனியாக ஒதுக்கிவைத்து விட்டு, உங்களால் அதன் சவால்களைத் தீர்க்க முடியாது எனவே காலநிலை அவசரத்தைப் பற்றியும், அதற்கு உடனே செயலில் இறங்க வேண்டிய தேவையைப் பற்றியும், நாம் பேசும்போது, நம் நாடு, நம் சமுதாயத்தின் அமைப்பு ஆகியவை குறித்த சிந்தனையோடு, தினந்தினம் நாம் எடுக்கும் இந்த முடிவுகளையும், அதில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டியது, நம் கடமை ஆகும்..

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு உண்டாகாத வகையிலும், பல காலம் நீடித்திருக்கிற கூடிய வழியிலும், உள்நாட்டிலேயே காலநிலை மாறுபாட்டைச் சமாளிக்க வேண்டும். வெளியிலிருந்து ஐ.நா. சபை வந்து செய்யும் என்று காத்திருக்கக் கூடாது. அது இப்போதைய உடனடி பிரச்சினை; மேலும் நம் வாழ்க்கையை எப்படி வாழ்கிறோம் என்பதைப் பற்றிய முக்கியமான பிரச்சினை அது.


06 டிசம்பர் 2019 அன்று Navroz Dubash: Climate change is really a here and now problem என்ற தலைப்பில் பிஸினஸ் லிங்க் இதழில் வெளியானது.

தமிழில் ஞா. கலையரசி – சிறார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

1 COMMENT

  1. காலநிலை ஆய்வாளர் நவ்ரோஸ் துபாஷ் அவர்களின் நேர்காணல் மிக நன்று. இந்திய அரசும் மக்களும் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் அனைத்தும் கருத்திற் கொள்ளவேண்டியவை. மொழியாக்கம் சிறப்பாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.