உறங்கும் சூஃபியின் இல்லம்

“அப்ப ராவைல 10 மணிக்கு இங்க இருந்து மாட்டு வண்டிலக் கட்டுவம்.  அஞ்சாறு வண்டிகள். ஒரு வண்டி நெறய சாமான். ரெண்டு வண்டில ஆம்புளயல். மத்த வண்டிகள்ல பொம்பிளயளும், புள்ளைகளும். செரியா செருசாமம் ரெண்டு மூணு மணிக்கெல்லாம் அங்க போயிருவம். அங்கயே பக்கத்துல மாடு வாங்கி அறுத்துச் சமப்போம். உச்சோடைக்கல் அவுலியாட கபுரடியதான் சமைக்கிற. அப்ப பக்கத்தில இருக்கிற வேடச் சனமெல்லாம் புள்ளயலும் குட்டிகளுமா வருவாக. முதல்ல அவங்களுக்குத்தான் சாப்பாடு வெப்பம். ச்சா..சாப்பாடுண்ணா அப்புடிச் சாப்பாடு.. மணம் கமழும்.. தொங்கல் ஊட்ல இருக்கிறவங்களையும் அது தம்பாட்டுக்குக் கூட்டிட்டு வரும். ருசியும் அப்புடி மணமும் அப்புடி.” அந்த இடத்தில் மூத்தம்மாவின் கடைவாயில் எச்சில் ஊறியது. பக்கத்திலிருந்த படிக்கத்துக்குள் வெற்றிலைச் சாயம் ஊறிய உமிழ்நீரைத் துப்பிக்கொண்டு மூத்தம்மா தொடர்ந்தா. நான் அவரையே ஒரு பசித்த பூனையைப் போல் பார்த்துக்கொண்டிருந்தேன். அவ பேசப் பேச அவவின் மூச்சிரைப்பு தணிந்து கொண்டு அப்படியே இல்லாமல் போனது.

“அப்புடியே அந்த சனங்கள்லாம் வரிசையிலே இருப்பாக” என்று சொல்லிக்கொண்டே மூத்தம்மா எழுந்து இரண்டு கால்களையும் சேர்த்து நிலத்தில் நாட்டி வைத்தபடி புட்டத்தை மண்ணில் பதித்து குந்தி இருந்து காட்டினா. அவ உடல் பழையதை நினைக்கும் போது மறுபிறவி எடுத்ததைப் போல் இளமைக்குத் திரும்பி விடுகிறது. காலத்தின் நேர்கோட்டில் திரும்பிச் சென்று பழங்காலத்தின் நிகழ் வடிவமாய் அவர் உருமாறிவிடுகிறார். நிகழ் உலகை விடவும் கடந்தவை மட்டுமே அவரின் நிஜ உலகம் என்பதை நான் அந்தக் கணத்தில் தீர்க்கமாக உணர்ந்தேன்.

“விசுக்கோத்து, தேத்தண்ணி, பால், காசி எல்லாங் குடுப்பம். சில ஆக்கள் இறச்சி சாப்பிடமாட்டாக. மத்த சாப்பாடெல்லாம் திண்ணுவாங்க. எங்கட வாப்படம்மாட வாப்படம்மாட காலத்துக்கு முந்துன காலத்திலருந்தும் இப்புடித்தான் இருந்து வந்திரிக்கி. எவ்வளவு பேருக்கு குடுத்தாலும் குறையாது. ஊரு முழுக்க குடுத்தாலும் குறயாது. இரணம் கொழிக்கும் உச்சோடைக்கல் அவுலியாட குதறத்தாக்கும்..”  என்று சொல்லும் போதே மூத்தம்மாவுக்கு கண்கள் கலங்கின. கண்களிலிருந்து பொலபொலவென்று துளிகள் இறங்கின. சுருங்கித் தொங்கிய கன்னங்களில் அவை கோடு வரைந்தன. ஏக்கத்தை மறைக்க முயல்வது அவர் முகத்தில் தெரிந்தது. அந்த வாழ்க்கை வெறும் நினைவாக மட்டும் அவரிடம் சேகரமாகி இருக்கவில்லை. ஆத்மசுத்தியாய் அதுவாகவே அவர் வாழ்ந்திருப்பது அவர் அடைந்த உக்கிரத்திலிருந்து புரிந்தது. இப்போது மீண்டும் மூச்சிரைப்பு தொடங்கி இருந்தது. சூஃபியின் அற்புதங்களை ஒவ்வொன்றாக அடுக்கும் போது அவர் இறும்பூது எய்தியது அவர் கண்களில் எனக்குத் தெரிந்தது. மூத்தம்மா அந்த பொற்காலத்தின் நினைவுகளிலிருந்தும், அதன் ஈரத்திலிருந்தும், அந்த வாழ்க்கையிலிருந்தும், அந்த மனிதர்களிடமிருந்தும், நம்பிக்கையிலிருந்தும் இன்னும் மீளவில்லை.

அந்த உணர்ச்சித் தருணத்தில் சூஃபியின் தொன்மத்தை ஓரளவு மனக்கணக்குப் போட்டுப் பார்க்க முயன்றேன். எப்படியும் 500 ஆண்டுகளாவது வரும் போலிருந்தது. உச்சோடைக்கல் அவுலியா என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டதால் அவருடைய உண்மைப் பெயர் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரின் பொருட்டு அற்புதங்கள் மட்டுமே வாய்க்கு வாய் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்தது. மூத்தம்மா போன்றவர்கள் அந்த அற்புதங்களைக் கேட்டுக் கேட்டே இறும்பூது எய்தினார்கள்.

மூப்படைந்து சுருக்கக் கோடுகளால் நிரம்பி இருந்த அவரது பரந்த நெற்றிக்குள் புதைந்திருந்த புளியங்கொட்டைக் கண்களில் அவ்வப்போது ஆச்சரியம் தோன்றி கண்களை பளபளப்பூட்டியது. சூஃபி மீதான நம்பிக்கையும், ஈடுபாடும் அவரைப் பொறுத்தவரை இதயத்தின் ஒரு மூலைக்குள் மட்டும் சுருங்கியதல்ல. மொத்த உடலாகவும் அதுவே ஆகி இருந்தது. சூஃபியின் வரலாறு பற்றி பெரிதாக எதுவும் அவருடைய ஞாபகத்தில் இல்லை. அவரது கடந்த கால ஞாபகங்களின் பெரும் பகுதி காலத்தின் மாயச்சுழிக்குள் மறைந்து விட்டிருந்தன. அவர் சொன்னவை அனைத்தும் நான் முன்னமே கேள்விப்பட்டவைதான். அரைகுறைக் குறிப்புகள். திருப்தியில்லாத விசயங்கள். யாருக்கும் “குறைந்தபட்ச முறையான” வரலாறும் தெரிந்திருக்கவில்லை. சூஃபியின் அற்புதங்கள் பற்றி எல்லோரும் சில சம்பவங்களை வெவ்வேறு விதமாக நீட்டி முழக்கியதைத் தவிர உருப்படியாக எந்த வரலாறும் தேறவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது.

மூத்தம்மா சொன்ன அனைத்தும் நிழலுருப் போல் என்னையே சுற்றிக் கொண்டிருந்தது. மறுநாள் சூஃபியின் கபுரடியைத் தரிசிக்க விரும்பினேன். திடீரென்று ஏற்பட்ட ஓர் உந்துதல். உச்சோடைக்கல் அவுலியா என்பதைத்தவிர அவரது உண்மைப் பெயரோ, அவரது கருத்துகளோ எதுவும் ஏன் யாருக்கும் தெரியாமல் போயிற்று. உண்மையிலேயே அவர் ஒரு சூஃபிதானா? கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளாக ஒரு வெறும் மனிதனை மக்கள் இப்படிக் கொண்டாடி இருப்பார்களா? சூஃபியின் மீதான என் இயல்பான ஈடுபாடும் நேசமும் அவரை நோக்கி என்னை இழுத்துக் கொண்டு சென்றது.

ஊரிலிருந்து எப்படியும் 20 கி.மீ. வரும். தனியே பயணிப்பதற்கு அசூசையாக இருந்தது. கூட ஒருவன் எப்படியும் தேவை. வழித்துணைக்கு மட்டுமல்ல. புகைப்படம் எடுப்பதற்கும். நண்பன் ராஃபியை அழைத்துப் பார்க்க வேண்டும். ராஃபியிடம் புதிய அப்பிள் ஃபோன் இருந்தது. அதன் விலை ஒரு இலட்சம் ரூபாய் என்று அவன் சொன்ன ஞாபகம். சும்மா பொய் சொல்ல மாட்டான். புகைப்படம் மிகத் துல்லியமாக எடுக்கலாம் என்றும் சொன்ன ஞாபகம்.

அவுலியாக்கள், சூஃபிகள், மரபுகள் சொல்லப் போனால் மதத்தின் மீதே நம்பிக்கை இல்லாதவன் ராஃபி. விஞ்ஞானமும், தத்துவமும் படித்ததில் அறிவாளியாகி விட்டவன். அதனால் விஞ்ஞானி ராஃபி என்றும் ஒரு பெயர் அவனுக்கு நிலைத்துவிட்டது. நானோ எல்லாவாற்றின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவன். இறைநேசர்கள், மகான்கள், மீதெல்லாம் அதீத பற்றுக்கொண்டிருந்தேன். என் எதிர் வடிவமான அவனை அங்கே அழைத்துச் செல்வதற்கு என்னை ஓர் உள்ளுணர்வுதான் தூண்டியது.

ராஃபியைப் பெரியளவுக்குத் தெண்டிக்க வேண்டி நேரவில்லை. என் அவசர அழைப்பையே ஏற்றுக்கொண்டான். தனது புதிய அப்பிள் ஃபோனுடன் என் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டான். முதலில் சூஃபியின் அடக்கஸ்தலத்தை தரிசிக்கச் செல்வது பற்றி ராஃபியிடம் பெரிய ஆர்வமோ அல்லது அலட்சியமோ வெளிப்படவில்லை. ஆர்வத்துக்கும், புறக்கணிப்புக்குமிடைப்பட்ட ஓர் உணர்ச்சியை அவன் முகத்தில் காட்டினான். அது நம்பிக்கையற்றவனின் நம்பிக்கை. இன்னொருவனின் நம்பிக்கையின் மீது தன் கேலியைப் பூசிவிடாத நாகரிகத்தின் வெளிப்பாடு அந்த உணர்ச்சி. அறிவியலும், தத்துவமும் படித்து தன் அறிவை விரித்துக் கொண்ட ஒருவனிடம் குறுகலான பார்வை இருக்கப் போவதில்லை என்பதை நான் அறிவேன்.

குறுக்கும் நெடுக்குமான குன்றும் குழியுமான கிறவல் வீதியில் மோட்டார் சைக்கிள் மெல்ல ஊர்ந்தது. செல்லும் வழிநெடுகிலும் நண்பன் ராஃபியிடம் சூஃபியின் அற்புதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்றேன். மூத்தம்மா சொன்ன அற்புதங்களில் எனக்கே சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரு குழந்தையைப் போல் நான் அவை முழுவதையும் அவனிடம் இரசித்துச் சொல்லிக்கொண்டு வந்தேன். மனச்சாய்வு அடிப்படையில்தான் ஒன்றின் மீதான நமது விருப்பும் வெறுப்பும் உருவாகிறது. ராஃபிக்கு இதன் மீதெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை என்ற போதிலும் நான் பேசினேன். எந்த நம்பிக்கையையும், எந்த ஆளுமையையும் ராஃபி புறக்கணித்து நான் கண்டதில்லை. “ம்..படிச்சுப் பார்க்கனும்.” என்று மட்டும் சொல்லிக் கொள்வான். பின்னர் தேடிப் படிக்கவும் செய்வான்.

உச்சோடைக்கல் மலைக்குன்றை நெருங்கிய போது அதன் உச்சியில் ஒரு சிறிய கோயில் தெரிந்தது. அந்த மலை உச்சி தியான நிலையிலிருக்கும் ஒரு வெண்ணிற புத்தர் சிலைக்கு மிகப் பொருத்தமான லோகேஷனாகத் தென்பட்டது. புத்தர்தான் சூஃபிகளுக்கெல்லாம் பெரிய சூஃபி. ராஃபியும் அதில் உடன்படுவான் என்பது எனக்குத் தெரியும். அவனுக்கு புத்தரும் ஒன்றுதான் சூஃபியும் ஒன்றுதான். அவன் நம்பிக்கையின் பாழ்வெளியை எப்போதோ கடந்துவிட்டவன். விஞ்ஞானமும் தத்துவமும் படித்து அறிவாளியாகிவிட்டவன்.

மலையடிவாரத்தையடைந்ததும் குளிர்காற்று அளைந்துகொண்டிருந்தது. கோடை வெயில் எரித்த போதும் மலை குளிர்ச்சியாக இருந்தது. வாகநேரிக் குளத்தின் சிறு அலைகள் இனம்புரியாத சங்கீத ஓசையை எழுப்பியபடி கல்பாறைகளை நனைத்துத் திரும்பின. கபுரடியை நெருங்கியதும் முதலில் போட்டோவுக்கான லோகேஷனைத் தேடி கண்கள் அனிச்சையாக அலைந்தன. பொருத்தமான இடம் ஒன்று தென்பட்டது. குளத்துக்குள்ளிருந்து வெளியே நீண்டு கரையை நோக்கி வளைந்திருந்த ஒரு பட்டமரத்தின் காய்ந்த கம்பு மேல் நின்று கொண்டு ராஃபியிடம் ஃபோட்டோ எடுக்கும்படி உடல்மொழியில் சொன்னேன். அவனை எதற்குக் கூட்டி வந்திருக்கிறேன் என்பதை ஓரளவு புரிந்துவிட்டதைப் போல் அவன் என்னைப் பார்த்தான்.

சூஃபியின் அடக்கஸ்தலம் மிகப் பழமையானதாக கவனிப்பாரற்றதாகக் கிடந்தது. கபுரடியைச் சுற்றிலும் சூரங்கொடிகளும், நாயுண்ணிப் பத்தைகளும் ஒன்றை ஒன்று பிணைத்துக் கொண்டு நின்றன. தூய்மையற்ற அசுத்தமான இடமொன்றில் ஒரு தூய ஞானி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பது போல் காட்சிகள் தெரிந்தன. பிறையும் நட்சத்திரமும் போடப்பட்டிருந்த பச்சை நிறக்கொடிகள் சோபை இழந்து தொங்கின. வெய்யில் தீய்த்து முழிப்பில்லாத மண்டிப்போன நிறத்துக்கு அவை மாறி இருந்தன. ஓடுகள் வேயப்பட்ட சிறிய கூரை அடக்கஸ்தலத்துக்கான ஒரே பாதுகாப்பாக இருந்தது.

சூஃபியின் அடக்கஸ்தலத்தைச் சுற்றி முழங்காலளவு உயரமான கட்டு கட்டப்பட்டிருந்தது. ஆறு-ஏழு அடி நீளமான கபுருக்குள் அவர் அடங்கி இருந்தார். அவரது உயரம் அந்தளவுதான் இருந்திருக்க வேண்டும். பெரியளவு உயரமில்லை. நான் இதை விட நீளமான கபுரடிகளைப் பார்த்திருக்கிறேன். சராசரி மனித உயரத்தையும் விஞ்சியவை அவை. அநேகமாக அவை ஒரு கற்பனையான அளவாக இருக்கக்கூடும் என நினைத்துக் கொள்வேன். ஆனால் உச்சோடைக்கல் சூஃபி ஏற்றுக் கொள்ளத்தக்க உயரத்தில்தான் இருந்திருக்கிறார். புனிதர்கள் என்று நாம் நம்புபவர்கள் மீதான நேசம் எப்போதும் நம் பகுத்தறிவைத் தாண்டியே செல்கிறது. அவர்கள் குறித்த கட்டுக்கதைகள், அற்புதங்கள் ஓதி ஓதியே மெய்ப்பிக்கப்படுவது போல் அவர்களின் பௌதீகத் தோற்றமும் பகுத்தறிவைக் கடந்ததாகத்தானிருக்கிறது.

திடீரென்று வீசிய சில்லிட்ட காற்றில் யோசனை அறுந்தது. அப்போதுதான் நானும் ராஃபியைப் போல் சிந்திப்பது உறைத்தது. என் பிடதியை அழுத்தமாகத் தடவிக்கொண்டேன். ராஃபி சூஃபியின் கல்லறையை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த இடத்தில் நான் ராஃபியாகவும் ராஃபி நானாகவும் மாறிவிட்டதைப் போல் இருந்தது.

சூஃபியின் தலைப்பக்கமாக யாஸீன் குர்ஆன்கள் சில அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பக்க கட்டுகளிலும் ஊதுபத்திகள் பற்றியெரிந்த சாம்பல்கள் சிந்திக் கிடந்தன. நானும் வாங்கி வந்திருந்த ஊதுபத்திகளைக் கொளுத்தினேன். இப்போது சிறு நறுமணம் அந்த இடத்தை நிறைத்தது. அது ஒரு புனித இடம் என்பதை உறுதிசெய்வது போல் அந்த வாசம் கணத்துக்கு கணம் பெருகிக்கொண்டு வந்தது. அங்கு ஆசீர்வதிக்கப்பட்ட சொற்கள் அரூபமாகச் சுற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. எனினும்  யாருடைய காதுகளுக்கும்  கேட்காத “ஸாதிப்னு ஸாத் ழாதிப்னு ழாத்” என்ற சூஃபிகளின் மந்திரப் பிரார்த்தனையை அரூபக் குரல்கள் எங்கும் ஒலிக்கவிடுவதைச் செவிகள் நுகர்ந்தன. அந்தக் குரல்கள் உள்ளே இறங்கி இதயத்தைக் குளிர்ச்சியூட்டின. எனக்கும் கூடாரத்துக்குமான ஓர் இறுகிய இடைவெளியில் சீரற்ற ஒரு ஓசையுடன் அந்தப் பிரார்த்தனை நிரம்பி இருப்பது போல் தோன்றியது. அந்தக் குரலில் இனிமை இருந்ததா அல்லது கடுமை இருந்ததா என்பதை என்னால் ஊகித்துணர முடியாதளவு சூழல் எழுப்பும் ஓசை இடையூறாக இருந்தது. ஆழ்ந்த இருளின் தனிமையில் இதைவிட நெருக்கமாக அந்தப் பாடலைக் கேட்கும் ஒருவனுக்கே அதைத் துல்லியமாக அறிய முடியும்.

சூஃபியின் அடக்கஸ்தலத்திலிருந்து நீண்டு உயர்ந்து சென்றது அந்த மலைக்குன்று. உலகெங்கிலும் சூஃபிகள் ஆறுகளையும், மலைக்குன்றுகளையும் நாடிச் சென்றிருக்கிறார்கள் என்பது ஒரு புதிராகத் தோன்றியது. அவர்கள் சாமான்யர்களை விடவும் அதிகம் இறைவனை நேசிப்பவர்கள். சதாவும் தொழுபவர்கள். அதற்காகத் தன் உடலை எப்போதும் தயார்நிலையில் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள். அதற்காகவே அவர்கள் ஆறுகளை, நதிகளை நாடி இருக்கிறார்கள் என்று எனக்குள் ஒரு மனிதன் சொல்லிக் கொள்வதைப் போல் தோன்றியது.

புகழ்பெற்ற சூஃபியான அப்துல் காதர் ஜெய்லானி பற்றிய குறிப்பொன்று அந்தக் கணத்தில் நினைவில் ஆடியது. ‘அப்துல் காதர் சொர்க்கத்துக்கான பாதையைத் தேடிக்கொண்டிருந்தார். ஒருநாள் அவர் மலையின் மீது தனது கைகளை வைத்தார். அது திறந்து கொண்டது. அந்தத் துளை வழியாக அவர் உள்ளே சென்றார். மலை மூடிக்கொண்டது. அதன் பிற்பாடு அவர் காணப்படவே இல்லை’. அப்படியான சுவர்க்கத்தின் பாதையைத் தேடியா இந்த சூஃபியும் வந்திருப்பார். இந்த மலைக்குன்று அவர் தொட்டபோது திறந்துகொண்டு சொர்க்கத்தின் பாதையில் அவரை இட்டுச் சென்றுவிட்டதா சிந்தனைகள் ஒரு வேகத்தில் சீராக எழுந்து வந்தன. அப்போது ஒருவித அகக் கொந்தளிப்புக்குள் முழுமையாக அமிழ்ந்து கொண்டிருந்தேன்.

ராஃபி மலைக்குன்றை நோக்கி நடந்து கொண்டிருந்தான். அந்த மலைக்குன்று உறங்கும் சூஃபியின் அற்புதத்தின் சாட்சியாக இறுகிக் கிடந்தது. அது ஆயிரம் சீடர்களைக் கண்டிருக்கலாம். ஆயிரம் பக்தர்களின் பிரார்த்தனைகளைக் கேட்டிருக்கலாம். ஆயிரம் முறை சூஃபி அதன் மேல் ஏறி இறங்கி இருக்கலாம். ஆயிரம் முறை அந்த மலைக் குன்று சூஃபியின் ஆசிர்வதிக்கப்பட்ட சொற்களைக் கேட்டிருக்கலாம். அது நூற்றுக்கணக்கான அற்புதங்களின் சாட்சியாகத் தன்னை திடப்படுத்திக் கொண்டிருக்கலாம். இறுகிய அதன் மேற்பரப்பில் பதியும் சூஃபியின் காலடித் தடங்களின் அரூப ஓசையை ஒரு பக்தனைப் போல் இன்னும் அது கேட்டுக்கொண்டிருக்கலாம்.

நம்பிக்கையின் நூலிழையில் திடீரென்று எல்லோரும் அங்கு கட்டப்பட்டு விட்டதைப் போன்று உணர்ந்தேன். ராஃபி மலைக்குன்றின் உச்சிக்கே ஏறிவிட்டிருந்தான். சூழலை அங்கிருந்து அவதானித்துக் கொண்டு தன் அப்பிள் ஃபோனில் புகைப்படங்கள் சரமாரியாக எடுத்துக் கொண்டிருந்தான்.

எங்களைக் கண்டதும் அங்கு வசிக்கும் ஆதிவாசிகளான வேடுவச் சிறுவர்கள் சூஃபியின் கபுரடியை நோக்கி விரைந்தனர். அவர்கள் பெரும்பாலும் பிஸ்கட்டுகளையும், காசும் எதிர்பார்த்தவர்களாக வந்திருந்தனர். இது கிட்டத்தட்ட 500 ஆண்டுக் கால மரபு. இந்த மரபின் எத்தனையாம் தலைமுறைக் குழந்தைகள் இவர்கள் எனத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. எனினும் மனம் அதை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தது. மூத்தம்மா சொன்ன வரலாற்றுச் சம்பவங்கள் காட்சிகளாக உருமாறித் தெரிந்தன.

எதிர்பார்த்ததைப் போல் வாங்கி வந்திருந்த பிஸ்கட்டுகளை அவர்களுக்கு நீட்டினேன். ஒரு ஞாபகத்திற்காக அவர்களைப் புகைப்படம் எடுக்குமாறு மீண்டும் ராஃபியிடம் சைகையில் பேசினேன். நான் பிஸ்கட்டுகளை வழங்கும் போது அவன் சில புகைப்படங்களை எடுக்கத் தொடங்கிவிட்டான். ஆனால் சிறுவர்கள் அதை விரும்பவில்லை. ஒருவருக்குப் பின்னால் ஒருவர் மறையும் தோரணையில் நழுவினர்.

“டேய் போட்டோ எடுக்கார்ரா..”

”இல்ல நான் எடுக்கல்ல..” ராஃபி ஃபோனை அப்பால் அசைத்து ஒரு பறவையைப் படம் எடுப்பது போல் பாவனை செய்தான். அதை சிறுவர்கள் நம்பவில்லை என்பது அவர்களின் கண்களில் தெரிந்தது.

”டேய் இது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” சூஃபியின் அடக்கஸ்தலத்தைக் காட்டி சிறுவர்களிடம் கேட்டேன்.

”அது அப்பா” சிறுவர்கள் அழுத்தமாகச் சொன்னார்கள்.

“அப்பாக்கு சக்தி இருக்கெண்டு எங்க அப்புச்சி சொல்லும்..”

“அவரு இந்த குளத்தில விழுந்து தாண்டுதாஞ் செத்தயாம்..” என்றான் இன்னொருவன்.

அவனை இடைமறித்து இன்னொரு சிறுவன் சற்றுச் சினமாக

”டேய் செத்தெண்டு சொல்லப் போடாதாண்டா. மவுத்தாவுனெண்டுதாஞ் சொல்லனுமாங்..எங்க அப்புச்சி சொல்லிச்சி…” என்றான். ஏனைய சிறுவர்களும் அவனை ஆமோதிப்பது போல் தலையசைத்தனர். செத்ததாகச் சொன்னவன் மட்டும் தலையைக் கவிழ்த்து மௌனமாக நின்று கொண்டிருந்தான்.

சிறுவர்கள் மேலும் மேலும் அங்கு கூடிக்கொண்டிருந்தனர். கொண்டு வந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளிலிருந்து பிஸ்கட்டுகளை உருவி உருவி நானும் கொடுத்துக் கொண்டே இருந்தேன். உச்சோடைக்கல் அவுலியாவின் குதறத்தால இரணம் கொழித்துக் கொண்டே இருக்கும் என்று மூத்தம்மா சொன்னது இப்போதும் காதில் நெருக்கமாகக் கேட்டது.

ராஃபி சூரங்கொடிகளில் சூரைப் பழங்கள் பறித்து வாய்க்குள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவன். காண்பதை மட்டுமே நம்புபவன். அதனால் அவனுக்குள் அமானுஷ்யங்கள் குறித்து எந்தப் பதட்டங்களுமில்லை. பயங்களுமில்லை. கேள்விகளும் கூட இல்லாமல் இருக்கலாம்.

அந்த ஆன்மீக வெளியில் அவன் எனக்கு ஒரு காட்டுப் பிராணியைப் போல் சலனமற்றுத் தெரிந்தான். அவன் எதை நம்புகிறான்? யாரை விசுவாசிக்கிறான் என்பதெல்லாம் எப்போதும் புதிராகவே இருந்தது. நம்பிக்கை எனும் மாயக்கயிற்றால் எனது கைகளும் கால்களும் மூளையும் கட்டப்பட்டிருப்பதை ராஃபி எப்படி எடுத்துக்கொள்கிறான்? என் நம்பிக்கை குறித்த கேலிப்பார்வையை அவன் கண்களில் ஒருபோதும் நான் கண்டதே இல்லை. இலேசான புன்முறுவலோடு, ஒரு கேள்வி நிரம்பிய பார்வையோடு அவன் என் நம்பிக்கைகளைக் கடந்து சென்றிருக்கிறான். அது என் நம்பிக்கைகளைத் தகர்ப்பதற்கான அவனது முயற்சியாகக் கூட இருக்கலாம். நான் ஒதுங்கி இருக்கும் இடம் தவறானது என்பதை அவன் மௌனமாக எனக்குச் சொல்வதாக நான் அதை எடுத்துக் கொள்ளலாம். அல்லது என் நம்பிக்கை மீதான அவனது மரியாதையாகக்கூட இருக்கலாம். பரந்து படிக்கும் ஒருவன் என்ற பிம்பம் அவனைக் குறித்து எனக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

ஒருவேளை நம்பிக்கை என்ற ஒளியிலிருந்து நம்பிக்கையின்மை எனும் இருட்டில் தடுமாறிக்கொண்டிருப்பது நான்தானோ? நம்பிக்கையின்மை எனும் இருளில் ஒருபோதும் அவன் தடுமாறுவதே இல்லையா? எந்த வாழ்க்கை சிறந்தது? நம்பிக்கையின் ஒளியா? அவநம்பிக்கையின் இருளா? உண்மையில் எது ஒளி எது இருள், இதில் யாரது பயணம் சலனங்களற்றது? சிலவேளை ராஃபியின் அமானுஷ்யங்கள் மீதான நம்பிக்கையின்மைதான் ஒளியா? உண்மையில் எது விடுதலையின் பாதை?

கற்பாறையில் வந்து மோதும் அலைகளைப் போல் கேள்விகள் என்னை அறைந்து அறைந்து திரும்பிக் கொண்டிருந்தன. ஒரு நீர்க்குமிழி போல் அந்தக் கணத்தில் நான் உடைந்து கொண்டிருந்தேன்.

திடீரென்று சூஃபியின் கூடாரத்திலிருந்து நறுமணம் பெருக்கெடுத்து வரத் தொடங்கியது. மீண்டும் அரூபக் குரல்கள் சூஃபிக்களின் உச்சாடனையை உரத்துப் பாடுவது போல் ஒரு பிரமை எனக்குத் தட்டியது. நான் அந்தக் கணத்தில் சூஃபியை அவரது சொந்தப் பெயர் கொண்டு கூவியழைக்க விரும்பினேன். அவர் பெயர் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்ற ஏமாற்றமான ஒரு உண்மை என்னைச் சொற்களற்றவனாக்கியது. மலைப்பக்கமாகத் திரும்பி சூஃபி மலைக்குன்றில் ஏறுவது போன்று கற்பனை செய்தபடி சில நிமிடங்கள் இருந்தேன். இப்போதும் என் காதுக்குள் அதே மந்திர உச்சாடனம் போன்ற வார்த்தைகள் விட்டுவிட்டுக் கேட்பது போல் இருந்தது. சூஃபியைப் பற்றிய எல்லா உண்மைகளும், இரகசியங்களும் அவர் உறங்கிக் கொண்டிருக்கும் இல்லத்துள் தானும் உறங்கிக் கொண்டிருக்கின்றன அல்லது இறுகிய மலைப்பாறைகளாக அவை அவரைச் சூழ்ந்து உறைந்திருக்கின்றன என எண்ணிக் கொண்டேன்.

மேற்குப் பக்கமாகச் சூரியன் வேகமாகச் சரிந்து இறங்கியது. சூஃபியின் கபுரடியில் மணக்குச்சிகளைக் கொளுத்தி வாசத்தின் கதவுகளை இன்னும் திறந்து வைத்தேன். அதன் நறுமணம் சூஃபியின் பிரார்த்தனைக் குரலில் கலந்து காட்டுப்பட்சிகள் கிரங்கிப் போகுமளவுக்கு அன்றைய இரவை மாற்றிவிட்ட திருப்தி பிறந்தது. இருள் மெல்ல மெல்ல செறிவாகிக் கொண்டு வந்தது. அதற்கு மேல் அங்கிருப்பது அவ்வளவு பாதுகாப்பானதல்ல. காட்டு யானைகளும், விலங்குகளும் ஒரு அச்சுறுத்தலாக எண்ணங்களில் எழுந்தன. அநேகமாக இந்தப் பகுதிக்கு யாரும் இரவுவேளைகளில் வருவதில்லை.

சூஃபியின் கபுரடியைப் பல கோணங்களிலும் ராஃபி புகைப்படம் எடுத்தான். மாலை இருளில் சில காட்சிகளுக்கு கபுரடியைச் சுற்றிச் சுற்றி பல்வேறு கோணங்களில் நானும் போஸ் கொடுத்தேன். மெல்லிய இருளில் சூஃபியின் இல்லம் ஆழ்ந்த மௌனத்துக்குத் திரும்பியது. சூழலின் இரைச்சல்கள் எதுவுமற்று ஒரு தியான வெளியாக அது திடீரென்று உருமாற்றம் பெற்றது போல் இருந்தது. ஃபோனைக் கபுரடிக் கட்டில் வைத்து விட்டு சற்று மேலே எம்பி குறுக்கே வளைந்து நின்ற சூரங்கடியை வளைத்து மேலும் சில சூரம் பழங்களைக் கடைசியாகப் பறித்துக் கொண்டான். உறங்கும் சூஃபியின் இல்லத்திலிருந்து மணக்குச்சிகளின் வாசனை காற்றில் கலந்து நிறையத் தொடங்கியது. வண்டியை அங்கிருந்து கிளப்பினோம். மணக்குச்சியின் வாசனை இன்னும் அந்தக் காற்றில் நிறைந்து எங்களைப் பின்தொடர்ந்து வந்தது.

உச்சோடைக்கல் சூஃபியைப் பற்றி ராஃபியிடம் என்ன கருத்து இருக்கிறது என இன்னும் எனக்குத் தெரியவில்லை. வண்டி உருளும் போதே நான் அவனை அந்தத் திசை நோக்கி உருட்டினேன்.

“மச்சான், உச்சோடக்கல் அவுலியாவுக்கு மெய்யாவே அற்புதமெல்லாம் இருந்திருக்குமாடா?” பெரிய ஆர்வம் எதுவுமின்றி சும்மா கேட்பது போன்ற பாவனையில் கேட்டேன். ஆனால் உள்ளே ஆர்வச் சுனை பெருக்கெடுத்திருந்தது.

“மனிசனுக்கிட்ட இருக்கிற ஒரே அற்புதம் அவன்ட அறிவுதான்டா..அதவிட வேற அற்புதம் இல்ல” தத்துவார்த்தமாகப் பதில் சொன்னான். அது ஆழமாக இருந்தது.

“அது செரிடா..தனக்கிட்ட அற்புதம் இருக்கெண்டு அவரு சொன்னதாக தெரியலடா..சனங்கள்தான் நம்புறாங்க..ஒன்றை நம்புறதுக்குக்கூட அவங்களுக்குச் சுதந்திரம் இல்லியா..?”

“உலகத்தில எல்லா நம்பிக்கைக்கும் இருக்கிற சுதந்திரத்தப் போல இதுக்கும் இருக்கு. மலக்குங்கிறம் நபி என்கிறம், வலீ என்கிறம் யாரையும் நாம கண்டதில்ல. அவங்கட அற்புதத்தையும் நாம கண்ணால காணல்ல. ஆனா வாய் வழி எழுத்து வழி வந்த கதைகள வெச்சி நாம நம்புறம். அவ்வளவுதான். அதுக்கு மேல இதெல்லாம் ஒண்டுமே இல்ல. சூஃபிகள ஞானியா பார்த்தாப் போதும். அவங்கட தத்துவம் கருத்துகள் என்ன என்று பார்த்து அவங்களயும் ஆளுமையாக மதிக்கலாம். ஆனா அதுக்கு மேல போக ஏலா மச்சான்”   ராஃபி சொல்லிக் கொண்டிருந்தான். மேலும் மேலும் அவன் சொன்னான். அவன் பேச்சு ஒரு பிரசங்கம் போல, ஒரு புத்தகம் போல என்னுடன் உக்கிரமாக மோதியது. மீண்டும் எனக்குள் அகக்கொந்தளிப்பு எழுச்சியுறுவதை உணர்ந்தேன். நம்பிக்கையின் ஒளியும் அவநம்பிக்கையின் இருளும் பேருருக் கொண்டு என்னை எங்கோ இழுத்துச் செல்வது போன்ற பிரமை. சைக்கிளை நிதானமாக ஓட்ட முடியாமல் சற்று மூச்சுத் திணறுவது போலிருந்தது. அறிவு வெளிச்சம் கண் திறக்கத் தொடங்கினால் முதலில் மூடப்படும் பாதை வெற்று நம்பிக்கையாக இருக்கக்கூடும் என்றொரு யோசனை அந்தக் கணத்தில் சட்டெனத் தோன்றி மறைந்தது. ஒரு மின் வெட்டு போல. முன்பென்றால் நான் அவனை ஏற்றுக்கொள்வதே இல்லை. அதனால் அவன் எப்போதும் என்னை நிதானமாகவே அணுகுவான். ஆனாலும் சூஃபியின் அற்புதம் குறித்து என்னிடம் இன்னும் ஒரு சாய்வு மனப்பான்மைதான் இருந்து கொண்டிருந்தது. அதிலிருந்து விடுபடும் மனநிலையில் நான் இல்லை. சூஃபிகள், மகான்களெல்லாம் மறைந்தும் மறையாத நிழலுருவாக நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு.

அவனை வீட்டில் இறக்கிவிட்டு வந்து ஒரு பத்து நிமிடமும் ஆகி இருக்காது. ராஃபி பதறியடித்துக் கொண்டு வந்து நின்றான்.

“டேய் என்ட ஃபோனக் காணலடா..”

“என்னடா சொல்றாய்? நானும் எடுக்கலடா. எங்கடா வெச்ச?” என்னிடமும் ஒரு பரபரப்புத் தொற்றியது.

”நீ விளையாட்டுக்கு எடுத்து வெக்கலயாடா..?

“இல்லடா..நாம போட்டோ புடிச்சது அவுலியாக்கு புடிக்கலயோ தெரியலடா..அவருதான் எடுத்திட்டாரோ..?”

“போடா விளையாடாம..நீதான் வெச்சிருக்காய் தாடா..”

“சத்தியமா இல்லடா” என் தொனி சற்று உயர்ந்தது. கொஞ்சம் தடித்தது. அவனுக்கு நான் விளையாடவில்லை என்பது புரிந்தது. என் ஃபோனிலிருந்து அழைப்புக் கொடுத்தேன். ரிங் போனது. ஆனால் யாரும் தூக்கவில்லை.

“இப்ப என்னடா செய்ற?” அவன் கண்களும் வாயும் சுருங்கின. தலையை விரல்களால் மேலும் கீழும் வேகமாக இழுத்துத் தடவினான்.

“இப்ப போகயும் ஏலாடா நல்லா இருட்டுப்பட்டுட்டு காலையில போய் பார்ப்பம்”

“உச்சோடக்கல் அவுலியாட குதறத்தால உன்ட போன் நாளைக்குக் கிடைக்கும் நீ பேசமா ஊட்ட போய்ப்படு.. காலையில வா..” அவனுக்கு நம்பிக்கை ஊட்டினேன். அவன் என்னை ஒருமாதிரியாகச் சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றான். நான் உண்மை என்பதைப் போலத் தலையை அசைத்துக் கண்களைச் சிமிட்டினேன். அப்போது அவன் உதடுகள் அசைவதைப் பார்த்தேன். வலீமார்களின் மந்திர உச்சாடனையை அவனும் முணுமுணுப்பது போல்தான் எனக்குத் தோன்றியது. அவன் அங்கிருந்து அகன்றான். எனினும் என் மீது இன்னும் அவனுக்குச் சந்தேகம் முழுமையாக அகலவில்லை.

காலையில் மிக நேரத்தோடயே வந்து விட்டான். ஏமாற்றமான முகம். வழமையான அறிவொளி அவன் முகத்தில் தெரியவில்லை. இருண்டு போய் இருந்தான். நான் மேலும் சமாதானம் செய்து கொண்டேன். உச்சோடைக்கல்லை நோக்கி மீண்டும் சைக்கிள் சீறிப் பறந்தது. சென்ற வழி மீது அவன் உன்னிப்பாகப் பார்வையைச் செலுத்திக் கொண்டே வந்தான். வழியில் எங்கும் சிக்கவில்லை.

கபுரடியைச் சுற்றிப் பாரத்தோம். எங்கும் இல்லை. அவனது பதட்டம் அதிகரித்தது. விலை உயர்ந்த ஃபோன் என்பதற்கப்பால் அவனது நிறைய ஆவணங்கள் அதற்குள்தான் இருந்தன. அவன் அலுத்துக்கொள்ளும் போதுதான் அது எனக்குப் புரிய வந்தது.

“கோல் அடிரா” என்றான். நான் அழைப்பை ஏற்படுத்தினேன். திடீரென்று மணி ஒலித்தது. கபுருக்குள் இருந்து ஒலிப்பதைப் போல். அவன் முகத்தின் இருள் உதிர்ந்து அகன்றது. சூஃபியின் தலைமாட்டில் அவரைப் போர்த்தியிருந்த பச்சை நிறப் போர்வைக்குள் போன் ஒரு மனிதனால் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டதைப் போல் இருந்தது நேற்றுத் தவறிய ஃபோன்.

“டேய் ராவு முழுதும் சூஃபி உன்ட போன பத்திரப்படுத்தி வெச்சிருக்கார்ரா..” என்றேன். முகம் விரியச் சிரித்தான். அவனிடம் நான் முன்னெப்போதும் கண்டிராத சிரிப்பு. அந்த சிரிப்பில் வெளிப்பட்ட உணர்ச்சியைத் துல்லியமாக என்னால் உணர முடியவில்லை. குளிர்ச்சியான காற்று உறங்கும் சூஃபியின் இல்லத்தை மேவி எழுந்து வந்தது. ஈரமான மலைக்குன்றில், கற்பாறைகளில் மீண்டும் சூஃபியின் ஆசிர்வதிக்கப்பட்ட பிரார்த்தனைகள் எதிரொலிப்பது போன்று உணர்ந்தேன். அப்போது ராஃபியின் முகத்திலும் பரவசமான ஒளி தெரிந்தது. சூரியனின் இளங்கீற்று போன்ற வெளிச்சம் அந்த வெளியெங்கும் நிறையத் தொடங்கியது. நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமிடையில் இறுகி உறைந்த பொழுதாக எனக்கு அந்தக் காலை தெரிந்தது. வீடு சென்று சேரும் வரைக்கும் அவன் என்னுடன் எதுவும் பேசவில்லை. என்னை வீட்டில் இறக்கிவிட்டு என்னை நேர்கொண்டு பார்த்தான். அந்தப் பரவச ஒளி இன்னும் அவன் முகத்திலிருந்தும் மறையாமலே இருந்தது. ஃபோன் கிடைத்த மகிழ்ச்சிதான் இப்படி முகத்திலும் ஒளியாக வழிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டேன்.

“செரியாக் கஷ்டப்படுத்திப் போட்டன்டா உன்ன” பச்சாதாபமாகச் சொல்லி அவன் முதுகைத் தடவிக் கொண்டேன். அவன் எதுவும் பேசாமலே அகன்றான்.

அடுத்த நாள் காலையில் நான் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் பெரியதொரு பொட்டலத்துடன் வந்திருந்தான். பொட்டலத்தினுள்ளே வித விதமான பிஸ்கட் பக்கெட்டுகளும், மணக்குச்சிப் பெட்டிகளும் இருந்தன.

“வாடா, போவோம்” என்றான்.

“எங்கடா?”

“உறங்கும் சூஃபியின் இல்லத்துக்கு…அது நம்மட ஐநூறு ஆண்டு கால மரபுடா“ என்றான் சிரித்துக் கொண்டே. நான் அதிர்ச்சியடைந்து சில கணங்கள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். உச்சோடைக்கல் சூஃபியே எழுந்து வந்ததைப் போல் ஒரு பரவசம் என்னைத் தொற்றிக் கொண்டது. சைக்கிளில் ஏறிக் கொண்டேன். நம்பவே முடியாத ஒரு விசித்திர உலகை நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன்.

 

 

1 COMMENT

  1. தமிழ் முஸ்லிம் பண்பாட்டுச் சூழலைப் பிரதிபலிக்கும் அற்புதமான கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.