உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை

னக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது வெளிப்படை. விளக்கை அணைத்து ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கும், காகிதங்களை மறுசுழற்சி செய்து வளங்களை சேமிக்கவும் நான் அறிவுறுத்தப்பட்டேன்.

பூமியின் காலநிலையை, விலங்கினங்களுள் ஒன்றான மனிதர்கள் மாற்றிவிட முடியும் என்பது விசித்திரம் மிகுந்த ஒன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், அது உண்மையிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தால், அதற்குக் காரணம் நாம் தான் என்றால் வேறு எதைப் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்க மாட்டோம். நீங்கள் தொலைக்காட்சியை இயக்கியவுடன் அதில் அனைத்தும் இதைப் பற்றியதாகத் தான் இருக்க வேண்டும். தலைப்புச் செய்திகள், வானொலி, செய்தித்தாள்கள் இவை எல்லாவற்றிலும் வேறு எதைப் பற்றியும் நீங்கள் வாசிக்கவோ கேட்வோ கூடாத அளவுக்கு இருக்க வேண்டும். ஒரு போர் நடந்துகொண்டிருப்பதைப் போன்று இருக்க வேண்டும்.

ஆனால், ஒருவர்கூட அதைப் பற்றி பேசவில்லை. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது மிகுந்த தீமையுடயைது, அது நம் இருப்பையே அச்சுறுத்துவது என்றால், அதை எப்படி தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்க முடியும்? ஏன் எந்த வரைமுறையும் இல்லை? ஏன் அது சட்டவிரோதமாக்கப்படவில்லை?

ஆக, என்னுடைய 11 வயதில் நான் நோயில் விழுந்தேன். நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானேன். பேசுவதை நிறுத்தினேன். சாப்பிடுவதை நிறுத்தினேன். இரண்டு மாதங்களில் 10 கிலோ வரை உடல் எடை இழந்தேன். பிறகு ஆஸ்பெர்கர் குறைபாட்டால், குறிப்பிட்ட சமயங்களில் பேச இயலாமை என்கிற கோளாறால் பாதிக்கப்பட்டேன். எப்போது அவசியமோ அப்போது மட்டுமே நான் பேசுவேன் என்று இதற்கு அர்த்தம். இது அப்படியான பொழுதுகளில் ஒன்று. இந்த நிலையில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு, அநேகமாக அனைத்து கறுப்பு அல்லது வெள்ளை மட்டும்தான். நாங்கள் பொய் சொல்வதில் தேர்ந்தவர்கள் அல்லர்; போலவே, உங்களில் பெரும்பாலானோருக்கு விருப்பமான சமூக விளையாட்டுகளில் ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்வதில்லை. கலை சார்ந்தவர்கள் இயல்பானவர்கள் என்றும், மற்றவர்கள் விசித்திரமானவர்கள் என்றும் பல வழிகளில் நான் நினைக்கிறேன். குறிப்பாக நீடித்த வளர்ச்சியின் நெருக்கடியை, வாழ்வாதாரத்துக்கான அச்சுறுத்தல், எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்சினை என்று எல்லோரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும், முன்னைப் போலவே கடந்துசெல்கின்றனர்.

அதுதான் எனக்குப் புரியவில்லை. ஏனென்றால், கரியமில வாயு வெளியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றால், நாம் அதை நிறுத்தியாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை அது கறுப்பு அல்லது வெள்ளை. பிழைத்திருத்தல் என்று வரும்போது, துலக்கமில்லாத பகுதிகள் என்று எதுவும் இல்லை. நாம் மாற்றத்துக்கு உட்பட வேண்டும்.

ஸ்வீடன் போன்ற பணக்கார நாடுகள், தங்களுடைய கரியமில வாயு வெளியேற்றத்தில், ஆண்டுக்குக் குறைந்தது 15 சதவீத அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் இரண்டு டிகிரி செல்சியஸ் என்ற எச்சரிக்கை இலக்குக்குக் கீழ் நாம் நிலைக்க முடியும்; என்றாலும், 1.5 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருப்பது காலநிலை பாதிப்புகளை வெகுவாக குறைக்கும் என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது.

நம்முடைய ஊடகங்களும், நம் தலைவர்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அதைப் பற்றி அவர்கள் மூச்சுவிடக் கூட இல்லை. போலவே, ஏற்கெனவே நிலைகொண்டுள்ள பசுங்குடில் வாயுக்களைப் பற்றியும் யாரும் பேசவில்லை.

காற்று மாசுபாடு ஒரு வெப்பமாதலை மறைக்கவில்லை, எனவே புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்தும்போது, ஏற்கனவே கூடுதல் வெப்பமாதல் உள்ளது, ஒருவேளை 0.5 முதல் 1.1 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறாவது தொகுப்புப் பேரழிவுக்கு மத்தியில் நாம் இருக்கிறோம் என்ற உண்மை குறித்து யாரும் மூச்சுவிடக் கூட இல்லை. ஒரு நாளில் 200 உயிரின வகைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. இயல்பான அளவு என்று கருத்தப்படும் நிலையில் இருந்து 1000இல் இருந்து 10,000 வரையிலான அளவுகளுக்கு இடையில் இந்த அழிவின் வேகம் நடந்துகொண்டிருக்கிறது.

போலவே, உலகளாவிய முன்னெடுப்பாக பாரிஸ் உடன்படிக்கை முழுக்க குறிப்பிடப்பட்டிருக்கும், காலநிலை நீதியின் அம்சங்கள் குறித்தும் ஒருவரும் பேசவில்லை. அப்படி என்றால், பணக்கார-வசதியான-வளர்ந்த நாடுகள் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தை, அதன் இன்றைய வேகத்தில், 6 முதல் 12 ஆண்டுகளுக்குள் பூஜ்யத்துக்குக் கொண்டுவர வேண்டும். இந்த நிலையில் ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்கள், நாம் ஏற்கெனவே நிறுவியிருக்கும் சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தூய குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை போன்ற வசதிகளைப் பெற்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும்.

எல்லாமே கிடைக்கப்பெற்ற நம்மைப் போன்றவர்கள் காலநிலை நெருக்கடி குறித்து ஒரு நொடிகூட அக்கறை கொள்ளாமல், பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் நமக்கிருக்கும் கடமைகளை மறந்துவிட்டு, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகள் இந்த நெருக்கடி குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? அவை ஏன் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன? அறிந்தே ஒரு தொகுப்புப் பேரழிவை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? நாம் தீயவர்களா?

நிச்சயமாக இல்லை. மக்கள் என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதையே தொடர்கிறார்கள். ஏனென்றால், பெரும்பான்மையானவர்களுக்கு தங்கள் செயல்களின் விளைவுகள் அவர்களுடைய அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த எந்தப் புரிதலும் இன்றி இருக்கிறார்கள். நமக்குத் தெரிந்திருக்கிறது என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம்; எல்லோரும் இதை அறிந்திருக்கிறார்கள் என்றும் எல்லோரும் நினைக்கிறோம். ஆனால், நாம் அறிந்திருக்கவில்லை. எப்படி அறிந்திருக்க முடியும்?

உண்மையில் நெருக்கடி என்பது இருந்தால், அந்த நெருக்கடி கரியமில வாயு வெளியேற்றத்தால் ஏற்பட்டிருந்தால், அதன் சமிக்கைகளை-விளைவுகளையேனும் நீங்கள் பார்க்கலாம். நகரங்கள் வெள்ளக்காடானது மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களும், ஒட்டுமொத்த தேசமும்கூட நிலைகுலைந்து நின்றன. சில வரைமுறைகளை நீங்கள் பார்க்கலாம். ஆனால், அப்படியொன்றும் இல்லை. இதைப் பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.

அவசரக் கூட்டங்கள், தலைப்புச் செய்திகள், பிரேக்கிங் செய்திகள் என்று எதுவுமே இல்லை. ஒரு நெருக்கடியில் இருப்பதைப் போன்று ஒருவரும் உணரவில்லை. அனைத்தும் அறிந்த காலநிலை விஞ்ஞானிகளும், சூழலியல் அரசியல்வாதிகளும்கூட உலகம் முழுக்கப் பறந்துகொண்டும் இறைச்சியையும் பால் பொருட்களை நுகர்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.

நான் 100 ஆண்டுகள் வாழ முடியும் என்றால், 2103ஆம் ஆண்டில் நான் உயிருடன் இருப்பேன். ஆனால், எதிர்காலத்தைப் பற்றி இன்றைக்குச் சிந்திக்கும்போது, 2050ஆம் ஆண்டுக்குப் பிறகு யோசிக்கவே முடியவில்லை. அப்போது, என்னுடைய வாழ்நாளில் பாதியைக் கூட நான் கடந்திருக்க மாட்டேன். அடுத்து என்ன நிகழும்?

2078ஆம் ஆண்டு நான் என்னுடைய 75ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவேன். அந்த நாளை என்னுடைய குழந்தைகளோ பேரக்குழந்தைகளோ என்னுடன் செலவழிக்கக்கூடும். ஒருவேளை அவர்கள் உங்களைப் பற்றி கேட்கக் கூடும், 2018இல் இருந்த மக்களைப் பற்றி கேட்கக் கூடும். செயலாற்றுவதற்கான நேரம் இருந்தும் ஏன் எதுவுமே செய்யாமல் இருந்தீர்கள் என்று ஒருவேளை அவர்கள் கேட்கக் கூடும்.

நாம் இப்போது செயலாற்றுவதும் செயலாற்றாமல் இருப்பதும் என்னுடைய மொத்த வாழ்க்கை, என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். நாம் இப்போது செயலாற்றுவதும் செயலாற்றாமல் இருப்பதும் எதிர்காலத்தில் நானோ என்னுடைய தலைமுறையோ சீரமைக்க முடியாது.

ஆக, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி தொடங்கியபோது இது போதும் என்று நினைத்தேன். ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் வாசலுக்கு வெளியே தரையில் அமர்ந்தேன். பள்ளி வேலைநிறுத்தத்தைத் தொடங்கினேன்.

நான் பள்ளியில் இருக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். அவர்களுள் சிலர் நான் காலநிலை விஞ்ஞானியாகி இந்தப் பிரச்சினையைத் “தீர்க்க” வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், காலநிலை நெருக்கடி ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்டது. நம்மிடம் உண்மையும்-தரவுகளும் ஏற்கெனவே தீர்வுகளாக இருக்கின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம் விழித்துக்கொண்டு செயலாற்றுவதே.

எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும்போது நான் எதற்காகப் படிக்க வேண்டும்? எதிர்காலத்தைக் காப்பதற்காக எவருமே எதுவுமே செய்யாதபோது? தலைசிறந்த அறிவியல் தரவுகள் நம்முடைய அரசியல்வாதிகளையும் சமூகத்தையும் உலுக்காதபோது, பள்ளிக்குச் சென்று அதே தரவுகளை மீண்டும் படிப்பதில் என்ன பயன்?

ஸ்வீடன் ஒரு சிறிய நாடு, அதன் செயல்பாடுகள் எந்தவித பாதிப்பையும் பெரியளவில் ஏற்படுத்திவிடாது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், சில குழந்தைகள் சில வாரங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதன் மூலம் உலகம் முழுக்க தலைப்புச் செய்தியாக மாறும்போது, செயலில் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நாம் அனைவரும் இணைந்து ஆற்றக்கூடிய செயலை கற்பனை செய்து பாருங்கள்.

என்னுடைய உரையின் இறுதியில் இருக்கிறோம். இந்த இடத்தில் தான் நம்பிக்கை, சோலார் தகடுகள், காற்றாலை, சுழற்சிப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களை மக்கள் பேசத் தொடங்குவார்கள்.

ஆனால், அதை நான் செய்யப் போவதில்லை. 30 ஆண்டுகளாக நேர்மறையான சிந்தனைகளை, யோசனைகளை பேசிக் கொண்டும் முன்னிருத்திக் கொண்டும் இருந்தோம்; ஆனால், அவை எதுவும் பலனளிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால், கரியமில வாயு வெளியேற்றம் இன்றைக்கு வீழ்ந்திருக்கும். ஆனால், அப்படி நிகழவில்லை. நிச்சயம் நமக்கு நம்பிக்கை தேவை; அது நம்மிடம் நிறையவே இருக்கிறது. ஆனால், நம்பிக்கையைவிட நமக்குத் தேவையான ஒன்று இருக்கிறது. அது செயல். எப்போது நாம் செயல்படத் தொடங்குகிறோமோ, அப்போது நம்பிக்கை எங்கும் பரவும்.

நம்பிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, செயலில் இறங்குங்கள். அப்போது நம்பிக்கை தானே வரும்.

இன்றைய காலகட்டத்தில், நாள் ஒன்றுக்கு 10 கோடி எண்ணெய் பீப்பாய்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதை மாற்றுவதற்கான அரசியல் இல்லை. எண்ணெயை நிலத்திலேயே வைத்திருப்பதற்கு எந்த விதிகளும் இல்லை. இல்லாத இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக நாம் உலகைக் காப்பாற்றிவிட முடியாது. எனவே, விதிகள் மாற்றப்படவேண்டும்.

அனைத்தும் மாற்றப்பட வேண்டும்; அந்த மாற்றம் இன்றிலிருந்து தொடங்க வேண்டும். நன்றி!


மூலம்: The disarming case to act right now on climate change, TEDxStockholm, November 2018

தமிழில் சு. அருண் பிரசாத்

‘நம் வீடு பற்றி எரிகிறது’ என்ற கிரெட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் இடம்பெற்றிருக்கும் உரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.