கனலியின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ நம் உரையாடலில் அதிகம் இடம்பெறாத அறிவியல், சூழலியல், காலநிலை மாற்றம் சார்ந்த விரிவான, ஆழமான கட்டுரைகள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைத் தாங்கி வருகிறது. இவற்றை எந்தச் சிரமமும் இன்றி அணுகும் வகையில் சிறப்பிதழில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களில் அதிகம் இடம்பெறும் 25 சொற்களைத் தெரிவு செய்து அதன் விளக்கங்களை இங்கு அளித்துள்ளோம். வாசக நண்பர்கள் இச்சொற்களைப் பரிச்சயப்படுத்திக் கொள்வதன் மூலம், இதழின் கட்டுரைகளை இலகுவாக அணுகமுடியும் என்று நம்புகிறோம்.
பூவுலகு அழிவின் விளிம்பை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இப்படிச் சொல்வதால் புவி ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும் என்று அர்த்தமல்ல. அதேநேரம் உலக சராசரி வெப்பநிலை உயர்ந்துகொண்டே போகிறது; மழை, புயல், வெள்ளம் போன்றவை தாறுமாறாக அதிகரித்திருக்கின்றன. முன்பு இயற்கைப் பேரிடராகக் கருதப்பட்டவை இன்றைக்கு கணிக்க முடியாத தன்மையையும் ஆபத்தையும் உருவாக்கத் தொடங்கிவிட்டன. இப்படி ஒட்டுமொத்த உலகுக்கே ஆபத்தை உருவாக்கும் ஒன்றாகக் காலநிலை மாற்றம் உள்ளது. புவியின் இயல்பு இப்படிக் குலைந்துபோனதற்குக் காரணம், இயற்கைக்கு எதிரான நவீன வளர்ச்சிகளும் நுகர்வுமய மனிதச் செயல்பாடுகளும்தான். சிக்கலான அறிவியல், சுற்றுச்சூழல் பிர ச்சினையாகக் கருதப்படும் காலநிலை மாற்றம், புவிவெப்பமாதல் பற்றி 25 சொற்களில் புரிந்துகொள்ள ஒரு வழிகாட்டி.
- சூழலியல் (Ecology): ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் இடையிலான தொடர்பும், அந்தத் தொடர்பு வாழும் சூழலில் ஏற்படுத்தும் தாக்கமும் சூழலியல் எனப்படுகிறது. சூழலியல் ஆரோக்கியமாக இருந்தால்தான், மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
- சூழலியல் தொகுதி அல்லது சூழலியல் அமைப்பு (Ecosystem): இணக்கமாக வாழும் பல்வேறு உயிரினங்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட பகுதி. உயிரினங்கள் உயிரற்ற பொருள்களுடனும், உயிரினங்கள் தங்களுக்குள்ளும், சூழலுடனும் எப்படி உறவாடுகின்றன என்பதைப் பொறுத்து சூழலியல் தொகுதி உருவாகிறது. புவியின் சூழலியல் தொகுதி தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்கள் போன்ற உயிர் வாழும் சமுதாயத்தைக் கொண்டுள்ளது.
- உயிர்ப் பன்மை (Bio Diversity/Biological Diversity): குறிப்பிட்ட ஓர் வாழிடம்-சூழலியலில் பல உயிரினங்கள், தாவரங்கள் இணக்கமாகவும் ஓரிடத்தைப் பகிர்ந்துகொண்டும் வாழ்வது. பல்லுயிரியம்/உயிர்ப் பன்மயம்/பல்லுயிர் பெருக்கம் என்ற வேறு பெயர்களிலும் இது சுட்டப்படுகிறது.
- தட்பவெப்பநிலை (Weather): ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலம் இருக்கக்கூடிய நிலை. காற்று, வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், மேகங்கள், மழைப்பொழிவு ஆகிய அம்சங்களின் மூலம் இது அளவிடப்படுகிறது. இது குறுகிய காலத்துக்கானது (நேரத்துக்கு நேரம், நாளுக்கு நாள், பருவத்துக்குப் பருவம் தட்பவெப்பநிலை மாறக்கூடியது).
- காலநிலை (Climate): குறிப்பிட்ட ஒரு பகுதியில் நீண்ட காலத்துக்கு வானிலையில் காணப்படும் பொதுவான தன்மை. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானிலை பொதுவாக எப்படியிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ, அதுதான் காலநிலை. எ.கா. ஊட்டியும் கொடைக்கானலும் குளிராக இருக்கும், சென்னையும் வேலூரும் வெப்பமாக இருக்கும் என்பதைப் போல.
- வளிமண்டலம் (Atmosphere): வாயுக்கள், தூசு தும்புகளின் கலவை; புவியின் மேல் பகுதியில் பல அடுக்குகளாக சூழ்ந்துள்ள காற்றுப் பகுதி. ஆபத்தான விண்வெளிக் கதிர்கள், கதிரவனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் வாய்ந்த புறஊதா கதிர்கள் போன்றவை உயிரினங்களைத் தாக்காமலும், விண்கற்கள் புவியின் மீது மோதாமலும் இது பாதுகாக்கிறது. புவியில் இருந்து 25 முதல் 30 கி.மீ. தொலைவுக்குள்தான் 99 விழுக்காடு வளிமண்டலம் இருக்கிறது. அதில் அடங்கியுள்ள வாயுக்களில் 50 விழுக்காடு தரையில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள்தான் இருக்கின்றன. அதாவது எவரெஸ்ட் சிகரத்தைவிடவும் குறைவான உயரத்தில்தான் இருக்கின்றன.
- வாழிடம் (Habitat): குறிப்பிட்ட ஓர் தாவரம் அல்லது ஓர் உயிரினம் தனக்கு உகந்த உணவு, காலநிலை, தங்குமிடம் போன்றவற்றைப் பெற்று வாழ்வதற்கு ஏற்ற இயற்கையான வாழ்க்கைச்சூழல்.
- காடழிப்பு (Deforestation): இயற்கையாகச் செழித்த மரங்களை வெட்டி, காடுகளை தரிசு நிலங்களாக மாற்றுவதே காடழிப்பு. நிலப் பயன்பாட்டில் மனிதர்கள் ஏற்படுத்தும் மாற்றத்தின் ஒரு பகுதி இது. ஒளிச்சேர்க்கையின்போது, கரியமில வாயுவை மரங்கள் இயற்கையாக கிரகித்துக்கொள்கின்றன. இதன் காரணமாக புவி வெப்பமாவதை அவை கட்டுப்படுத்துகின்றன. அதற்கு நேர்மாறாகக் காடழிப்பால் நிலத்தின் மேல்மண் தொந்தரவுக்கு உள்ளாதல், மரங்களை எரிப்பது, ஒரு சூழல் அமைப்பில் நிலத்தின் மேற்பகுதியில் உள்ள உயிர்த்தொகையை அகற்றுவது போன்ற காரணங்களால் பெருமளவு கரியமில வாயு வெளியிடப்படுகிறது. இது வளிமண்டலத்தின் மேலடுக்கில் சென்று சேர்ந்து காலநிலை மாற்றம், ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- ஆற்றல் (அ) எரிசக்தி (Energy/Power): ஆற்றல் என்பது வெப்பம், கதிரவன் ஒளி, இயந்திரம், மின்சாரம், வேதிப்பொருள் (எரிபொருள்), கதிரியக்கம் என பல்வேறு வகைகளில் இருந்து கிடைக்கலாம். சேமிக்கப்பட்ட ஆற்றல், இயக்க ஆற்றல் என இது இரண்டு வகைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல், நாம் அதைப் பயன்படுத்தும்வரை உடலில் வேதி ஆற்றலாக இருக்கிறது. பிறகு அது இயக்க ஆற்றலுக்குப் பயன்படுகிறது. மின், மின்னணுக் கருவிகளை இயக்க நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆற்றல், புதுப்பிக்க முடியாத புதைபடிவ எரிபொருள்களில் (நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு) இருந்து கிடைப்பவையே. கதிரவன் ஆற்றல், காற்று ஆற்றல், நீர் மின்னாற்றல் போன்றவை புதுப்பிக்கத்தக்கவை.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் / மாற்று ஆற்றல் ஆதாரங்கள் (Renewable energy): நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற மரபு சார்ந்த, தீர்ந்துகொண்டிருக்கும் எரிபொருள்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த புனல் (நீர்மின்) ஆற்றல், தாவர எரிபொருள், காற்று ஆற்றல், கதிரவன் ஆற்றல் ஆகியவற்றின் மூலம் மாற்றுவழியில் பெறப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள். இதன் மற்றொரு பெயர் மரபுசாரா எரிசக்தி.
- எண்ணெய் (அ) பெட்ரோலியம் (Petroleum): பெட்ரோலியம் அல்லது கச்சா எண்ணெய் உயிரினங்கள், தாவரங்கள் மக்குவதால் கிடைக்கிறது. கடுமையான அழுத்தம், அதிக வெப்பத்தால் மக்கிய பொருள்கள், முதலில் திரவப் பொருளாகவும் பின்னர் வாயுவாகவும் மாறுகின்றன. இப்படி நிலத்தின் அடியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெட்ரோலியமும் இயற்கை எரிவாயுவும் சேகரமாகின்றன. எண்ணெய்க் குழாய்கள் வழியாகத் துரப்பணம்செய்து கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. அது சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக அளவில் ஹைட்ரோகார்பனைக் கொண்ட எரிபொருள் பெட்ரோலியம். புதைபடிவ எரிபொருட்களில் ஒன்றான இது, காலநிலை மாற்றம், ஓசோன் படல மெலிவு போன்றவற்றுக்குக் காரணமாக இருக்கிறது.
- புதைபடிவ எரிபொருள்கள் (Fossil Fuels): நிலத்தில் இருந்த தாவரங்கள், கடலில் இருந்த உயிரினங்கள் நிலத்துக்கு அடியில் புதைந்து, கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மக்கும்போது, கார்பனை மூலப்பொருளாகக் கொண்ட நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை உருவாகின்றன. இந்தப் புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படும்போது கரியமில வாயுவை பெருமளவில் வெளியிடுகின்றன. இந்தக் கரியமில வாயு புவியின் வளிமண்டல மேலடுக்கில் ஒரு போர்வைபோல் படர்ந்து, புவியின் வளிமண்டலத்துக்குள் கதிரவன் வெப்பத்தை பிடித்துவைத்துக்கொள்கிறது. இது காலநிலை மாற்றம் நிகழக் காரணமாகிறது.
- கரியமில வாயு (Carbon dioxide – CO2): நிறமற்ற, கனமான வாயு. உயிரினங்களின் சுவாசித்தல், உயிருள்ள பொருள்கள் மக்குதல், உயிரின அல்லது தாவரப் பொருளை எரிக்கும்போது இது வெளிப்படுகிறது. ஒளிச்சேர்க்கையின்போது காற்றிலிருந்து தாவரங்கள் இதை கிரகிக்கித்துக்கொள்கின்றன. புவியின் வளிமண்டலத்தில் இயற்கையாகவே இருக்கும் ஒரு வாயு. குறிப்பிட்ட அளவு இயற்கையாகவும் சமீபத்திய நூற்றாண்டுகளாக புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் புவியின் வளிமண்டல மேலடுக்கில் அதிக அளவிலும் சேர்ந்திருக்கிறது. பசுங்குடில் வாயுக்களில் முதன்மையான இது, காலநிலை மாற்றத்துக்கான முக்கியக் காரணி.
- கார்பன் தடம் (Carbon Footprint): தனிநபரோ நிறுவனமோ குறிப்பிட்ட காலத்தில் வெளியிடும் கார்பனின் அளவு; அல்லது ஒரு பொருளை உற்பத்தி செய்யும்போது வெளியாகும் ஒட்டுமொத்தக் கார்பனின் அளவு, அந்தப் பொருளின் கார்பன் தடத்தைத் தீர்மானிக்கிறது.
- பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases): புவியின் வளிமண்டல மேலடுக்கில் ஒரு போர்வைபோல் சேகரமாகி இருக்கும் நீராவி, கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்டவை கதிரவன் ஆற்றலை புவிக்குள் அனுமதிக்கின்றன. ஆனால் புவியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு தப்பிச்செல்ல விடாமல் தடுத்து, புவிக்கே திரும்ப அனுப்புகின்றன. வெப்பத்தைப் பிடித்து வைக்கும் இந்தச் செயல்பாட்டை மேற்கொள்ளும் இந்த வாயுக்கள், குளிர் பகுதிகளில் வெப்பத்தைப் பராமரிக்கப் பயன்படுத்தும் கண்ணாடியால் அமைக்கப்படும் கிரீன்ஹவுஸ் – பசுங்குடில்களை ஒத்திருப்பதால் பசுங்குடில் வாயுக்கள் எனப்படுகின்றன.
- பசுங்குடில் வாயுக்கள் வெளியீடு (Greenhouse Gases Emission/Emission): நமது செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்கள் சேகரமாகும் நடைமுறை. பசுங்குடில் வாயுக்களில் மிக அதிகமாக வெளியிடப்படுவது கரியமில வாயுதான். மற்ற இரு பசுங்குடில் வாயுக்களான மீதேனும் நைட்ரஸ் ஆக்சைடும் கரியமில வாயுவைவிட அதிகமான வெப்பத்தை பிடித்து வைத்துக்கொள்ளக்கூடியவை. வளிமண்டலத்தில் இவற்றின் அளவு குறைவாக இருந்தாலும், செலுத்தும் தாக்கம் அதிகம்.
- பசுங்குடில் விளைவு (Greenhouse Effect): புவியின் வளிமண்டலத்தில் கதிரவன் வெப்பம் சிறைபிடிக்கப்படுவதால், இந்த விளைவு ஏற்படுகிறது. புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த தட்பவெப்ப நிலையை இது உருவாக்குகிறது. வளிமண்டலத்தில் போர்வைபோல் சூழ்ந்திருக்கும் பசுங்குடில் வாயுக்கள் (கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு) புவிக்குள் புகும் கதிரவன் வெப்பத்தை உள்ளே வர அனுமதிக்கின்றன. ஆனால், புவி நிலப்பரப்பின் மீது பட்டு எதிரொளிக்கும் கதிரவன் வெப்பத்தை மீண்டும் விண்வெளிக்குச் செல்ல விடாமல் வளிமண்டல மேலடுக்கில் இந்தப் போர்வை பிடித்து வைத்துக்கொள்வதால், இந்த விளைவு ஏற்படுகிறது. வளிமண்டலத்தில் இந்த வாயுக்கள் இல்லையென்றால் புவியின் வெப்பநிலை இயல்பைவிட 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும். அதனால் புவியிலுள்ள தண்ணீர் உறைந்துபோய் உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே, புவியில் உயிரினங்கள் வாழ இந்த விளைவு அவசியம்தான். ஆனால், தொழிற்புரட்சிக்குப்பின் பசுங்குடில் வாயுக்களின் வெளியீடு எல்லை கடந்து அதிகரித்துவிட்டதால், பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து, மிக அதிக வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன. தற்போது நிகழ்வது தீவிர பசுங்குடில் விளைவு எனப்படுகிறது.
- புவி வெப்பமாதல் (Global Warming): வளிமண்டலத்தில் கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் அதிகரிப்பதால், இயல்புக்கு மாறாக புவி வெப்பமடைவதே புவி வெப்பமாதல். மனிதச் செயல்பாடுகளால் உருவாகும் பசுங்குடில் வாயுக்கள் புவியின் வெப்பநிலையை ஆபத்தான வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. கடந்த 140 ஆண்டுகளில் மட்டும் புவியின் சராசரி வெப்பநிலை இயல்பைவிட8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களை கட்டுமீறி பயன்படுத்தியது, காடழிப்பு, பசுங்குடில் வாயுக்களின் அளவை அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணம்.
- காலநிலை மாற்றம் (அ) பருவநிலை மாற்றம் (Climate Change): புவி வெப்பம் அடைவதால் புவியின் காலநிலை, தட்பவெப்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் தலைகீழ் மாற்றங்களே காலநிலை மாற்றம். ஒரு பகுதியின் இயல்பான வானிலை என்று கணிக்கப்பட்டவற்றில் ஏற்படும் மாற்றம்தான் காலநிலை மாற்றம் என்றும் சொல்லலாம். புவியின் சராசரி வெப்பநிலை, மழைப்பொழிவு உள்ளிட்டவற்றை அளப்பதன் மூலம் இது நிர்ணயிக்கப்படுகிறது. வெப்பநிலை அதிகரிப்பு, அதீத மழைப்பொழிவு, புயல்-வெள்ள நிகழ்வுகள், பனிப்பாறை உருகுதல், கடல்மட்ட அதிகரிப்பு போன்றவை இதன் சில விளைவுகள். இயற்கை நிகழ்வுகளால் முன்பு உருவாகிக்கொண்டிருந்த இந்தச் செயல்பாடு, சமீபத்திய நூற்றாண்டுகளாக மனிதச் செயல்பாடுகளால் தீவிரமடைந்துவருகிறது.
- காலநிலை அகதிகள்/ சுற்றுச்சூழல் அகதிகள் (Climate change Refugee/ Environmental Migrant): உள்ளூர் சூழலியலில் ஏற்படும் திடீர் அல்லது நீண்ட கால மாற்றங்களால் தங்கள் வாழிடத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள். அவர்களுடைய பாதுகாப்பான நல்வாழ்க்கையை இது கேள்விக்குரியதாக மாற்றுகிறது.
- காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (Intergovernmental Panel for Climate Change – IPCC): காலநிலை மாற்றம் பற்றிய அறிவியல் தகவல்களை மதிப்பிடுவதற்காக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டமும் உலக வானிலை அமைப்பும் இணைந்து 1988ஆம் ஆண்டு உருவாக்கிய அமைப்பு. 2,000-த்துக்கும் மேற்பட்ட உலகளாவிய காலநிலை மாற்ற நிபுணர்கள் இந்தக் குழுவில் பங்காற்றுகிறார்கள். காலநிலை மாற்றம் பற்றிய பெரும்பாலான தகவல்கள், எதிர்காலக் கணிப்புகள் ஐ.பி.சி.சியால் மதிப்பிடப்பட்டவை.
- தகவமைத்தல் (Adaptation): மாற்றம் அடைந்துவிட்ட, மாற்றம் அடையப் போகிற ஒரு சுற்றுச்சூழலில் தொடர்ந்து வாழ்வதற்காக உயிரினங்கள் ஏற்படுத்திக்கொள்ளும் மாற்றங்கள். அளவு, வடிவம் அல்லது உடல் வெப்பநிலை அல்லது கனிமங்களின் தேவையைப் போன்று உயிரினங்களின் அடிப்படைக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றமாகக்கூட இது இருக்கலாம். அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப எதிர்வினை ஆற்றும் வகையில், பழக்கவழக்கத்தில் ஏற்படும் மாறுதலாகவும் இருக்கலாம். இன்றைய பின்னணியில் புவி வெப்பமாதல், அதன் விளைவாகக் காலநிலையில் ஏற்படும் மாற்றம், அழிவுகளில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளே தகவமைத்தல் என்று அழைக்கப்படுகின்றன.
- மறுசுழற்சி, மறுபயன்பாடு, குறைந்த பயன்பாடு (Recycle, Reuse, Reduce): நுகர்வுப் பண்பாட்டுக்கு அடிமையாகி பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கு பதிலாக, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வாங்கி, மறுபடி பயன்படுத்தி, மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு இணக்கமாக வாழ்வது. இதன்மூலம் புவி வெப்பமாவதையும் காலநிலை மாற்றத்தையும் மட்டுப்படுத்த முடியும்.
- பூஜ்யக் கழிவு (Zero Waste): மனிதர்கள் உருவாக்கும் கழிவை நிலங்களில் புதைக்கக்கூடாது என்பதே பூஜ்யக் கழிவின் அடிப்படை. அனைத்து வளங்களையும் மறுபயன்பாட்டுக்கு உட்படுத்த வேண்டுமென்று இந்தக் கொள்கை பரிந்துரைக்கிறது. மறுசுழற்சி, கழிவின் அளவைக் குறைத்தல், நுகர்வை மட்டுப்படுத்துதல் போன்றவற்றுடன் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மறுபயன்பாடு, திருத்தி அமைக்க பூஜ்யக் கழிவுக் கொள்கை பரிந்துரைக்கிறது.
- வளங்குன்றா வளர்ச்சி (Sustainable Development): இயற்கையைப் பெருமளவு சீர்குலைக்காத, இயற்கைக்கு இணக்கமான வளர்ச்சி நடைமுறைகள். நிலைத்த வளர்ச்சி-நீடித்த வளர்ச்சி என வேறு சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது.
ஆதி வள்ளியப்பன் — இதழாளர், காலநிலை மாற்றம் பற்றிய நூலான கொதிக்குதே… கொதிக்குதே…, இளையோருக்கு மார்க்ஸ் கதை, பூவுலகைக் காக்க புறப்பட்ட சிறுமி: கிரெட்டா துன்பர்க், எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
இங்கு வழங்கப்பட்டுள்ள சொற்கள் காலநிலை மாற்றம்: புரிந்துகொள்ள 60 சொற்கள் என்ற இவரது நூலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. நூலினைப் பெற: காலநிலை மாற்றம்: 60 சொற்கள்