ச. துரை கவிதைகள்


 

நூற்றாண்டுகளாக சுழலும் இசைத்தட்டு

 

.

இந்த இசைத்தட்டு முடிந்ததும்

யாருடைய வீட்டு கதவை

தட்டப்போகிறேன் என நினைத்ததும்

அச்சம் அவன் தலையை கோதியது

அமர்ந்திருக்கும் இடத்தில்

கடலும் எரிமலையும் முளைத்தது

ஏன் இலைகள் என் மீது மட்டுமே

உதிர்கின்றன என்று கத்தினான்

அந்த சப்தம் எங்கேயோ நீண்டு செல்கிறது ஒரு கயிறு போல

அது அவன் சப்தம்தான் என்பதை

காண்பிப்பதற்காகவே அதை பற்றியபடி

ஏறுகிறான் நூற்றாண்டுக்கு மேலாக.

 

●●●

 

பலூன்கள் பறக்கத் தொடங்கின

எல்லோரும் அண்ணார்ந்தார்கள்

திடும்மென ஒரு கனத்தில்

பறந்துக்கொண்டிருந்த பலூன்கள்

பார்ப்பவர்களின் தலையாகின

பார்த்துக்கொண்டிருந்தவர்களின்

தலைகள் பலூன்களாகின

அவனும் அதை பார்த்துக்கொண்டிருக்க

அவன் தலையும் பலூனாகியது

தனது தலையிருந்த இடத்தை

தடவினான் காற்றாடியது

அவனுக்கு வியப்பெல்லாம் தனது தலை

பிற தலைகளோடு நெருங்கியிருப்பதுதான்

சற்றே காற்று இறுக்கமடைய

அவர்கள் எல்லோர் தலைகளும் ஒன்றோடு

ஒன்று மோதிக்கொண்டன

அவன் தனது பலூன் வாயால்

சப்தமாக சிரித்தபடி உச்சரித்தான்

ஹேய் இது நல்ல விளையாட்டு

விட்டு விலகிவிடக்கூடாதென்று.

 

●●●

 

அவனை வயலின் தொடர்ந்தது

படிகளில் ஏறியது

அழைப்பு மணியை அழுத்தியது

அவன் விழிப்பதாய் தெரியவில்லை

பக்கத்திலே வேறொரு அறை எடுத்தது

ஆடைகளை அவிழ்த்து வீசி

தன்னை தன் உடலை நோட்டமிட்டபடியே

குளிர்காலத்தில் காலணிகளுக்கு

இடையே உறங்கும் சின்ன பூனையை

போன்ற அசைதலோடு

மெல்ல அதுவே அதனை இசைத்தது

மாபெரும் அந்த நகரின் நிசப்தம்

இன்னும் நிசப்தமாய்தான் இருந்தது

ஆனால் அவனுக்கு மட்டும் அந்த இசை

கேட்டிருக்க வேண்டும்

துடிதுடித்து எழுந்தான்

வயலின் என மெல்லச் சொன்னான்

அந்த சின்ன உச்சரிப்பும் தன்னை

அவன் அடையாளம் கண்டுகொண்டதும்

வயலினுக்கு புரிந்திருக்க வேண்டும்

அதை கேட்டதும் இப்போது

முன்பைவிட படுவேகமாக

தன்னைத்தானே இசைத்தது

அவன் வெலவெலத்துப் போன

தனது முகத்தால் வயலினே

என்னை கலவரப்படுத்தாதே

கலவரப்படுத்தாதே

என கத்திக்கொண்டே அறைக்குள்

அங்கும் இங்கும் ஓடினான்

அவன் ஓட‌ ஓட அறை நீண்டது

அங்கு இல்லாத தனியறைகள் நிறைய

இருப்பதை பார்த்தான்.

 

●●●

 

எல்லோருக்கும் முன் அவன்

நடக்கும் போது

பின்னே ஒரு கூட்டம் சரசரக்கிறது

எல்லோருக்கும் முன் அவன்

உறங்க செல்லும் போது

பின்னே ஒரு கூட்டம்

விளக்குகளை எரிய வைக்கிறது

எல்லோருக்கும் முன் அவன்

கோப்பையை கவிழ்த்தும் போது

அவன் பின்னே ஒரு கூட்டம் நகைத்தது

எல்லோருக்கும் பின்

ஒரே ஒருநாள் மட்டும் விழித்தான்

அவனுக்கு மட்டும்

இரண்டாவது சூரியன் உதித்தது.

 

– ரெய்னர் மரியா ரில்கேவுக்கு

 


-ச. துரை

1 COMMENT

  1. சிறப்பு யதார்த்த நிழலோடு பயணிக்கிறது நினைவுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.