கிம் ஸ்டான்லி ராபின்சன்: “எதிர்காலத்துக்கான அமைச்சகம்”

ஆமி பிராடியின் “எரியும் உலகங்கள்” யேல் காலநிலை இணைப்புகளுடன் (Yale Climate Connections) இணைந்து எழுதப்பட்ட மாதாந்திர கட்டுரை. இது  காலநிலை மாற்றத்தின் சிக்கல்களை சமகால இலக்கியம் எவ்வாறு வினாவுகிறது என்பதை ஆராய அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கர் பத்திரிகையின் நிகழ்கால எழுத்தாளர்களில், மிகப்பெரும் அரசியல் நாவலாசிரியர் “கிம் ஸ்டான்லி ராபின்சன்”. அவர் தனது அறிவியல் புனைவுகளில்  சமகால அரசியல், சமூகவியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அக்கறையுடன் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து  எழுதி வருகிறார். தனது எழுத்துக்காக சிரத்தையெடுத்து ஆராய்ச்சி செய்து எழுதக்கூடியவர். சமூக, தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி அவர் விரித்தெழுதுவதால், அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் “கடின” அறிவியல் வகைப் புனைவுகளாகக் கருதப்படுகிறது. ஆனால், நேர்மறை எண்ணம் கொண்டவர். அவரது 2017 வருட நாவலான “நியூயார்க் 2140” நாவல், உயர்ந்து வரும் கடல்மட்டதால் நியூயார்க் நகரம் எவ்வாறு பாதி நீரில் மூழ்கடிக்கப்படுவதைச் சித்தரிக்கிறது. ஆனால் கதையின் முடிவில், நகரத்தின் கூட்டு நடவடிக்கையால் நம்பிக்கையான, நிலையான எதிர்காலம் இன்னுமிருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

ராபின்சன் காலநிலை மாற்றம், நம்பிக்கையின் கருப்பொருளுடன் தனது சமீபத்திய, ‘எதிர்காலத்தில் அமைச்சகம்’ நாவலை வெளியுட்டுள்ளார். இது எதிர்காலத்தில் வெப்ப அலைகளின் போது இந்தியாவில் நிகழவிருக்கும் கடும்பாதிப்புகளுடன்  ஆரம்பமாகிறது. அங்கிருந்து, 2025 ல் காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க உலகின் அரசியல் தலைவர்களும், கொள்கை வகுப்பாளர்களும் இணைந்து பணியாற்றினார்களா இல்லையா என்பதற்கான பல நேரடியான விஷயங்களை பின்பற்றிச் செல்கிறது. இந்த புத்தகத்தில் சிக்கலான கதாபாத்திரங்கள், இரகசிய அரசாங்க தூதர்களென நிறைய இருக்கின்றன. ஆனால், அது நிஜ வாழ்க்கை கொள்கைகள், பொருளாதார கோட்பாடுகளின் மேல் ஒரு கோட்டுச்சித்திரத்தை வரைகிறது. அதன் மூலம் சாத்தியமான எதிர்கால காட்சிகளை உருவாக்குகின்றன.

ராபின்சனுடன் இந்தப் புத்தகத்தை எழுத எது உந்துசக்தியாக இருந்தது, பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை பற்றிய அவரது எண்ணங்கள் என்ன என்பது பற்றி கலந்துரையாடினேன். நாகரிகத்தை நாம் அறிந்தபடி சிதைக்காமல் முதலாளித்துவத்தின் முடிவை கற்பனை செய்வது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றியும் பேசினேன்.

ஆமி பிராடி

உங்கள் புனைகதைகளில் காலநிலை மாற்றம் பற்றி நீங்கள் முன்பு எழுதியுள்ளீர்கள். எது உங்களை இந்த விஷயத்தில் தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது?

கிம் ஸ்டான்லி ராபின்சன்

நான் பூமியிலும், அடுத்த ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டில் பூமியிலும் சூரிய மண்டலத்திலும் நிகழுவிருக்கும் மாற்றங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதும் அறிவியல் புனைகதை எழுத்தாளர். நான் அண்டார்டிகாவை விரும்புகிற மாதிரிதான் சூரிய மண்டலத்தையும் விரும்புகிறேன். இது எனக்கு அழகாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. நமக்கு உயிர்வாழ வேறுகிரகங்கள் இல்லை, இல்லையா? பூமி நமது நீட்டிக்கப்பட்ட உடல் மாதிரி. நாவலாசிரியர்கள் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் நமது எல்லா நாவல்களிலும் பூமி ஒரு முக்கிய கதாபாத்திரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் ஏற்கனவே காலநிலையை மாற்றியமைத்துள்ளோம், வெகுஜன அழிவு நிகழ்வின் முதல் கட்டங்களில் இருக்கிறோம். இது மறுக்கமுடியாத உண்மை. அறிவியல் புனைகதை (எப்படியிருந்தாலும்) அதன் ஊகங்களுக்கு தொடக்க புள்ளியாக நிகழ்காலத்தையே எப்போதும் எடுத்துள்ளது. உண்மையில் நான் இதில் சிக்கிக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். எந்த எதிர்காலத்தை நான் கற்பனை செய்தாலும், காலநிலை மாற்றம் என்பது அதில் வரும் முக்கிய பகுதியாகும் எனக்கு. இங்கு ஏதேனும் தவிர்க்க முடியாத தன்மை இருப்பதாக நான் கூறவில்லை. வரவிருக்கும் காலநிலை மாற்றத்தின் அளவு இன்னும் நம்மிடம் உள்ளது. இப்போது நாம் ஒரு உலகளாவிய நாகரிகமாக எவ்வாறு செயல்பட போகிறோம் என்பதைப் பொறுத்து இது வேறுபாடும். இது நம் காலகட்டத்தின் மிக முக்கியமான கதையாக எனக்குத் தோன்றுகிறது. நாவல்கள் பெரும்பாலும் மிக முக்கியமான கதைகளையேச் சொல்ல முயற்சிக்கின்றன.

ஆமி பிராடி

நிஜ உலகில் ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் பதைபதைக்கும் காட்சியுடன் நாவல் ஆரம்பமாகிறது. உங்கள் புத்தகத்தை அங்கிருந்து தொடங்கும் முடிவுக்கு எப்படி வந்தீர்கள்? நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது அங்குள்ள மக்களால் நீங்கள் ஏதும் ஈர்க்கப்பட்டீர்களா?

கிம் ஸ்டான்லி ராபின்சன்

வெப்பம், ஈரப்பதத்தின் விளைவு பற்றிய சமீபத்திய ஆய்வுகள் “ஈர விளக்கு 35” (wet-bulb 35). இதன் வெப்பநிலைக் குறியீடு (இது 100% ஈரப்பதத்துடன் சுமார் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பமிருக்கும்) குளிரூட்டப்பட்ட இடங்களில் தஞ்சம் புகயியலாத மனிதர்களுக்கான ஆபத்தைக் குறிக்கிறது. ஆனால் இது போன்ற வெப்ப அவசரநிலைகளில், மின்சக்தி அமைப்புகளின் செயல்பாடு அதிகமாகி கீழே போக வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் ஆடை அணியாதவர்கள், நிழலில் தங்களுக்குத் தாங்களே விசிறிக் கொள்பவர்கள் கூட இறக்க நேரிடும். ஒருவித மெதுவான புழுக்கத்தை மனித உடலால் சமாளிக்க முடியாது.

இது பல இடங்களில் நிகழலாம். இந்த உயர் வெப்பநிலை,  ஈரப்பத சேர்க்கைகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அடிக்கடி நிகழ்கின்றன என்று வானிலை தரவுகளின் ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஈர விளக்கு வெப்பநிலையில் மிக உயர்ந்தது, 1995 ல் சிகாகோ பகுதியில் நிகழ்ந்தது. இருப்பினும், இந்த விஷயத்தில் முக்கிய ஆபத்து வெப்ப, துணை வெப்பமண்டல பகுதிகளில் அடர்த்தியான மக்கள் தொகை,  பலவீனமான மின் கட்டங்களைக் கொண்டுள்ள இடங்களில் நிகழக்கூடும் . இப்படி நிறைய அடையாளம் நாம் காண முடியும். ஆனால் எனது நாவல் வேறு பல காரணங்களுக்காக இந்தியாவுடன் தொடர்புபடுத்தி இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். கங்கை சமவெளி மிகவும் ஆபத்தில் இருப்பதால், எனது கற்பனை சம்பவத்தை அங்கு வைக்க முடிவு செய்தேன்.

மிகவும் சங்கடமான முடிவு. எனக்கு ஏற்கனவே அறிமுகமான இந்தியர்களின் உதவியை நாடினேன், கதையில் இந்தியாவுடன் ஒட்டிக்கொண்டேன். அமெரிக்கா வளைகுடா பிராந்தியத்தில் நிகழும் இதேபோன்ற பேரழிவுகளையும் நான் விவரித்தேன். வரவிருக்கும் காலங்களில் இந்த தொடக்கக் காட்சி போன்றதொன்று நிகழ்வு நடக்கக்கூடுமென்று நான் பயப்படுகிறேன். அந்தவிதத்தில் எனது நாவல் ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

ஆமி பிராடி

உங்கள் நாவலின் கவர்ச்சிகரமான அம்சங்களிலொன்று ஐக்கிய நாடுகள் சபை பற்றிய சிக்கலான சித்தரிப்பு. ஒருபுறம், ஐ.நா உண்மையான உலகளாவிய மாற்றத்திற்கான ஊக்கியாக சித்தரிக்கப்படுகிறது. ஆனால் மறுபுறம், அதன் தலைவர்கள் ரகசிய  நடவடிக்கைகளில் பங்கேற்கத் தயாராக இருக்கும்போது மட்டுமே அந்த மாற்றம் சாத்தியமாகுமென்ற நிலையிருக்கிறது. இது வெளிப்படையானதொரு முடிவெடுப்பதைத் தடுக்கிறது. எது இந்தவித புனைவமைப்பை எழுத உங்களைத் தூண்டியது?

கிம் ஸ்டான்லி ராபின்சன்

பாரிஸ் ஒப்பந்தம் உலக வரலாற்றில் முக்கியதொரு நிகழ்வாகும். விரைவாக கரியத்தை அகற்றும்  (decarbonizing) செயல்களுக்கு  உலகின் பல தேசிய-மாநிலங்களுக்கு கட்டமைப்பாக இந்த ஒப்பந்தம் செயல்படும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அவ்வாறு செய்தால் பல வகையான காலநிலை மாற்ற சேதங்கள், மரணங்களிலிருந்து மனித நாகரிகத்தை காப்பாற்ற இது நிச்சயம் உதவும். பாரிஸ் ஒப்பந்தம் ஐ.நா. செயல்முறையின் தலையீட்டால்  அமைக்கப்பட்டது. சர்வதேச ஒத்துழைப்பு, சமத்துவத்திற்கான தீவிரத் தேவையின் இந்தத் தருணத்தில், ஐ.நா.வின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இது கருதப்படலாம். ஆனால் காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாக சமாளிக்க முடிந்தால், பாரிஸ் ஒப்பந்தம் நமது சமூக பாதுகாப்பின் முக்கியதொரு பகுதியென உறுதியாக நம்பிக்கை இருக்கிறது எனக்கு.

புதைபடிவ எரிபொருள் (fossil fuel) ஆதரிக்கும் மக்களைத் தோற்கடிப்பதன் மூலம் மட்டுமே இந்த முயற்சி வெற்றிபெறும். அவர்கள் வளிமண்டலத்தில் கரியத்தை (carbon) எரிக்க தொடர்ந்து விரும்புவார்கள். இதில் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த புதைபடிவ எரிபொருள் ஆதரிப்பாளர்களாக மிகவும் சக்திவாய்ந்த நாடுகள், மக்கள் உள்ளனர். நானோ இல்லை விஞ்ஞான சமூகமோ அதைப் பார்ப்பது போல, அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு அரசியல் அமைப்பில் மகத்தான சக்தி உள்ளது. பணம் நமது அமைப்பில் மாபெரும் சக்தி என்பது நம் அனைவருக்கும் தெரியும். பணக்குவிதல்கள் நிறைய அரசியல் நடைமுறை ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இதுதான் நாம் இருக்கும் சூழ்நிலையின் யதார்த்தம். வெகுஜனம் அழிந்துபோகும் அவசரநிலை. அது நடந்தால் மனிதகுலத்தை மிகவும் பாதிக்கும். அந்த மோசமான எதிர்காலத்தை நிறைவேற்றத் துடிக்கும் சக்திவாய்ந்த மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். சோகமான உண்மையிது.

இந்த சூழ்நிலையைப் பொறுத்தவரை, இது போராக மாற வாய்ப்பிருக்கிறது. சட்டப் போருக்கான வாய்ப்பும் இருக்கிறது. “பூமிக்கான யுத்தம்” மாதிரியான போர்கள் வரக்கூடும். எனவே இராஜதந்திர விஷயங்களில் மட்டும் இந்த நாவல் கவனம் செலுத்தும். என் பார்வையில் அது முக்கியமானதும் கூட, நிலைமையைத் துல்லியமாக விவரிக்க மாட்டேன்.

உழைக்கும் அரசியல் பெரும்பான்மையை நம்ப வைப்பதற்கான நல்ல யோசனைகளை நான் விரும்புகிறேன், உலகெங்கிலும் உள்ள சட்டங்கள் அதைப் பின்னர் பிரதிபலிக்கும் வகையில். ஒரு புதிய முதலாளித்துவத்திற்கு பிந்தைய அரசியல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதன்  மூலம் அனைத்து மக்களுக்கும், முழு உயிர்க்கோளத்திற்கும் வேலை செய்யும் வகையில் நாம் விஷயங்களை முயற்சிக்கும்போது இது தொடர்ந்து மேம்படும். ஒருவேளை நடக்கலாம்.

ஆமி பிராடி

காலநிலை மாற்றம் பற்றிய பல நாவல்கள் பூமியின் வெப்பமயமாதலைத் தடுக்க விஞ்ஞான புரட்சிகளில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், எதிர்காலத்திற்கான அமைச்சகம் நாவலில், நீங்கள் நிகழ வேண்டிய பொருளாதார மாற்றங்களில் அதிக கவனம் செலுத்தவில்லை. இது ஏன்?

கிம் ஸ்டான்லி ராபின்சன்

தேவையான விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன, இன்னும் நடைபெறத்  தயாராக உள்ளன. மேலும், முன்னேற்றத்திற்கு எப்போதும் இடமுண்டு. ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்பங்களை வேகமாக பயன்படுத்தி இருந்தால், நமது உயிர்க்கோள செயல்முறைகளுடன் சமநிலையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல்களைத் தீர்த்திருக்க முடியும்.

ஆனால், நீங்கள் செய்வதில்லை? ஏனெனில், நீங்கள் அதிலிருந்து லாபம் ஈட்டமாட்டீர்கள். நமது தற்போதைய உலகளாவிய அரசியல் பொருளாதாரத்தில் (புதிய தாராளமய முதலாளித்துவம்), இலாபகரமானதாக வரையறுக்கப்பட்டதை மட்டுமே நீங்கள் செய்கிறீர்கள். எனவே, மூலதனமானது எப்போதும் தேவையான வேலைகளில் முதலீடு செய்யப்பட மாட்டாது. கரியத்தை அகற்ற (decarbonizing), உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான வேலையைச் செய்ய நாமே பணம் செலுத்தி, ஒரு புதிய அரசியல் பொருளாதாரத்தை விரைவாக கண்டுபிடித்து நிறுவுவது மிக முக்கியம். இல்லையென்றால், நாம் மேலும் அழிவை நோக்கி போவோம். லாபமில்லையென்றாலும் தேவையான பல பணிகள் நமக்குள்ளன.

இதைச் சொல்வது எளிது, வெளிப்படையானதும் கூட. ஆனால் பின்னர், நல்ல விஷயங்கள் நடக்கும் எதிர்காலத்தை விவரிப்பதைப் பற்றி சிந்திக்கும்போது, தவிர்க்க முடியாமல் என்னை மீண்டும் நிதி பற்றி எழுதுவதற்கு இட்டுச் சென்றது. இந்த விஷயத்தில் முக்கியமாக தேசிய மற்றும் சர்வதேச மத்திய வங்கிகள் பற்றி எழுதவேண்டி இருந்தது. மிகப்பெரிய மத்திய வங்கிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் பெரும் நிதிதிரட்டப்படலாம். புதிதாக உருவாக்கப்பட்ட பணத்தின் முதல் செலவினம் கரியத்தை அகற்றும் வேலைக்கு ஒதுக்கப்பட வேண்டும். அது நாம் தற்போது சிக்கித் தவிக்கும் அமைப்பினிலிருந்து காப்பாற்றப்பட, நல்லதொரு தொடக்கமாக இருக்கும். குறைந்தபட்சம் இப்போதைக்கு வேலை செய்ய. இதுதான் என் கதையமைப்பு.

ஆமி பிராடி

உங்கள் புத்தகத்தில் உள்ள ஒரு பாத்திரம் முதலாளித்துவத்தின் முடிவை மக்கள் கற்பனை செய்வது எவ்வளவு கடினம் என்கிறது. நிச்சயமாக உண்மைதான். முதலாளித்துவத்தின் முடிவை விட, தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றங்களை மனிதர்களால் எளிதில் கற்பனை செய்ய  முடியும் என்று நீங்கள்  நினைக்கிறீர்களாக?

கிம் ஸ்டான்லி ராபின்சன்

இதைப் பற்றி எனக்கு அவ்வளவு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் அப்படிச் சொல்வது நாகரீகமானதும் கூட. பேரழிவுகள், வெகுஜன குழப்பங்கள், நாகரிகத்தின் சரிவு, அனைவருக்கும் எதிரான ஒரு போரின் ஆரம்பம் இவற்றின் மூலம் முதலாளித்துவம் முடிவடைவதை கற்பனை செய்வது மிகவும் எளிது என்று நான் நினைக்கிறேன். டிஸ்டோபியன் இலக்கியம், பிந்தைய அபோகாலிப்டிக் இலக்கியம் இவையனைத்தும் முதலாளித்துவத்தின் முடிவை கற்பனை செய்வதற்கான பல்வேறு வழிகள்தான்.

முதலாளித்துவத்திற்கான மாற்றுகளை கற்பனை செய்வது கடினமொன்றுமல்ல. நீங்கள் ஒரு நியாயமான, நிலையான உலக அரசியலமைப்பைப் பற்றி அரை நாளில் எழுதிவிடலாம். ஒரு கெட்ட கனவில் நாகரிகம் வீழ்ச்சியடைவதை கற்பனை செய்யலாம். இப்போது, ​​தற்போதைய தொற்றுநோய்க்கும், மிக தீவிரமான தேர்தலுக்கும், நிர்வாக மாற்றத்திற்கும் நடுவில் சரிவை கற்பனை செய்வதென்பது முன்னெப்போதையும் விட எளிது . தற்போதைய மோசமான சூழ்நிலையிலிருந்து ஒரு சிறந்த சூழ்நிலைக்கு எவ்வாறு செல்வது என்று கற்பனை செய்வதுதான்  கடினம். முதலாளித்துவம் உலக அமைப்பாக இந்த மாற்றங்களைத் தடுக்கிறது. அடுத்த சில தசாப்தங்களில் மோசமான இடத்திலிருந்து ஒரு சிறந்த இடத்திற்கு செல்ல எந்த வழியுமில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த சூழ்நிலையில், புதைபடிவ எரிபொருள்களை ஆதரிப்பவர்களும் பெரும்பாலான அதிகார உயரடுக்கினரும் – ஒரு சதவிகிதம், ஏன் பணக்கார பத்து சதவிகிதம் கூட – இந்த அமைப்பு வேரூன்றி இருக்க வேண்டும், மாற்ற இயலாது என்று விரும்புகிறார்கள். இதை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். இது வாழ்நாள் முழுவதும் அவர்களின் அதிகாரத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அதன்பிறகு, உண்மையான அக்கறை அவர்களுக்கு இருக்காது. இது எனது யூகம். எனவே அந்த எண்ணத்தை எதிர்ப்பது முக்கியம். ஒருவித மாற்றம் நிச்சயம் வரும். விஷயங்கள் மோசமடையக்கூடும் நிச்சயமாக. ஆனால் சிறப்பான விஷயங்களும் நிகழக்கூடும் என்பதும் உண்மை. அதையே எழுத்தாளர்கள் நாங்கள் செய்தாக வேண்டி இருக்கிறது.

ஆமி பிராடி

இந்த புத்தகத்தின் கட்டமைப்பை நான் மிக விரும்புகிறேன். பல கண்ணோட்டங்களில் இருந்து ஏன் எழுத முடிவு செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா?

கிம் ஸ்டான்லி ராபின்சன்

நன்றி. இந்த புத்தகம் பேசும் விஷயத்தைப் பொறுத்து புத்தகத்தின் கட்டமைப்பும் சிறப்பாக அமைந்தது என்பது எனக்கு மகிழ்ச்சி. அதைப் படிப்பது  வேடிக்கையாகவும் இருக்கும். கலை வேடிக்கைக்கானது, வேடிக்கையைக் கற்பிக்கக் கூடியது. இதைப் பற்றி அரிஸ்டாட்டில் அல்லது ப்ரெச்ச்ட் கூறியத்தைப் பார்க்கவும்.

பத்திருபது வருடங்களாக  ஒரு உலகளாவிய கதையை நான் சொல்ல விரும்பினேன். நாவலின் வழக்கமான அமைப்பு உண்மையில் அந்த விருப்பத்திற்குப் பொருந்தவில்லை. ஆனால் எனது பதிப்பாசிரியர் டிம் ஹோல்மன் தலைப்புக்கு வித்தியாசமான, பொருத்தமான ஒன்றை முயற்சிக்க என்னைத் தொடர்ந்து ஊக்குவித்தார். நான் எவ்வாறு தொடரலாம் என்பதற்க்கு சில சிறந்த பரிந்துரைகளை எனக்குச் சொன்னார். மேலும் நாவல் மீது உண்மையிலேயே பரந்த வடிவமாக எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. நான் ஒரு வாசகனாக நாவல் கட்டமைப்பில் முறையான சோதனைகளை விரும்புகிறேன். அவற்றில் சிலவற்றை இந்த நாவலில் ஒரு எழுத்தாளராக முயற்சித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

இந்த நாவலில் சூரிச்சில் முதன்மை பாத்திரங்களான மேரி, பிராங்கின் வாழ்க்கையைச் சுற்றி அமைத்தேன். அவர்களைச் சுற்றி இரண்டாம் நிலை கதாபாத்திரங்களாக முக்கியமாக பாடிம், டாடியானாவை  ஒரு சிறு வட்டத்தில் அமைக்க முடிவு செய்தேன். மீதமுள்ள நாவலில் நேரில் கண்ட சாட்சிகளுக்குக் கொடுக்கிறேன். நான் உண்மையில் கண்டுபிடித்தது அதன் சொந்த விதிமுறைகளுடன் இருக்குமொரு தனி வகை. இது இந்த வேலைக்கு நான் நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக மாறியது. 18 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப விவரிப்புகள், பழைய ஆங்கில புதிர்கள், சந்திப்புக் குறிப்புகள், வானொலி நிகழ்ச்சி எழுத்துக் குறிப்புகள் பலவற்றை உள்ளடக்கிய வேறு சில முறைகளும் இதிலடங்கும். இது சிக்கலானதும், விசித்திரமானதென்றும் தெரியும். மேலும் வடிவம் செயல்பாட்டைப் பின்தொடர்கிறது. இந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டிற்கான வடிவத்தை நான் கண்டறிந்தபோது, எனக்கு எல்லாம் ஒருங்கிணைந்து வந்தது.

ஆமி பிராடி

பேரழிவு நிகழ்வுகளை சித்தரித்த போதிலும், எதிர்காலத்திற்கான அமைச்சகம் – உங்கள் காலநிலை நாவல்கள் பலவற்றைப் போலவே – நம்பிக்கையில்லாமல் இல்லை. உங்களுக்கு எதிகாலத்தின் மேல் நம்பிக்கை இருக்கிறதா?

கிம் ஸ்டான்லி ராபின்சன்

நம்பிக்கையாக இருப்பது நம் ஒவ்வொருவரின் தார்மீகக் கடமை என்று நான் நினைக்கிறேன். எனவே நம்பிக்கையுடன் இருக்க முயற்சிக்கிறேன். நாம்  இருக்கும் நிலைமை மிகவும் ஆபத்தானது. நாம் பல தசாப்தங்களாக கடுமையான மோதல்களில் இருக்கிறோம். இது போன்ற ஒரு சூழ்நிலையில், “ஆஹா, நாகரிகம் இன்னும் உயிர்வாழும் என்று நம்புகிறேன்” என்று இன்னும் சொல்ல முடிகிறது. இல்லையா? அதையும் மீறி நீதியையும்,  நீண்டகால நிலைத்தன்மையையும் மையமாகக் கொண்ட ஒரு உலகளாவிய முதலாளித்துவ ஒழுங்கை நாம் கண்டுபிடித்து நிறுவவேண்டும். இதில் நாம் வெற்றி பெற்றால், முடிவுகள் மிகவும் நல்லதாக, உற்சாகமானதாக இருக்கும். அது இன்னும் சாத்தியமென்று நான் நம்புகிறேன். எனவே நாம் இப்போது முரண்பட்ட வருடங்களில் இருந்தபோதிலும், அந்த எண்ணம் எனக்கு நம்பிக்கையைத் தருகிறது. நாம் பல அடிப்படை வழிகளில் ஒரு கூட்டு இனம். “நம்பிக்கையுடன் இருங்கள். பரிசில் உங்கள் கண்கள் இருந்தாலும், சுமை உங்கள் தோள்களில் இருக்கட்டும்” என்றுதான் நான் எப்போதும் சொல்வேன்.


ஆமி பிராடி Chicago Review of Books இதழின் ஆசிரியர்; காலநிலை மாற்றத்தின் சிக்கல்களைச் சமகால இலக்கியம் எவ்வாறு வினவுகிறது என்பதை ஆராயும் பிராடியின் Burning Worlds கட்டுரைத் தொடரில் இந்த நேர்காணல் வெளியானது.

தமிழில் முத்து காளிமுத்து – மொழிபெயர்ப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.