Saturday, Oct 23, 2021
Homeபடைப்புகள்கட்டுரைகள்கோவிட் குப்பைகளும் சூழலியல் பாதிப்பும்

கோவிட் குப்பைகளும் சூழலியல் பாதிப்பும்

சீனாவின் வுஹானில் முதன்முதல் 2019 டிசம்பரில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸை உலக சுகாதார நிறுவனம் ஒரு தொற்றுநோயாக 11 மார்ச் 2020 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில், ஒரு புறம் கொரோனாவிற்கு வாக்சின் கண்டுபிடித்து மனித உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளை மறுபுறம் COVID-19 குப்பைகள் நாம் சூழலியலை அழிக்க ஆரம்பித்து உள்ளன.

ஆரம்பத்தில் சர்வதேச பரவலாக (Pandemic) இருந்த இந்த வைரஸ், தற்போது பெருவாரியாகப் பரவும் சமூகத் தொற்று நோயாக (Epidemic) பரிணமித்துக்கொண்டு இருக்கிறது. இதற்காகக் கண்டுபிடித்த வாக்சின்கள் உலகின் ஒவ்வொரு கடைக்கோடியில் இருக்கும் மனிதனுக்கும் சரியான முறையில் வழங்கப்பட்டு முடித்தாலும், முகக்கவசம் இன்றி வீதியில் நடக்கும் நாட்கள் இப்போதைக்குக் கைகூடி வராது.

கொரோனாவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மனிதன் கண்டுபிடித்த அத்தனை விடயங்களும் தற்போது அவன் வாழும் சூழலியலுக்கே பெரும் எமனாக உருமாறி நிற்கின்றது. ஒற்றை-பயன்பாட்டு முகமூடிகள், மருத்துவ கையுறைகள், மற்றும் PPE எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகளின் (Personal Protective Equipment) உற்பத்தி போன்றவை கொரோனாவிலிருந்து தற்காலிக பாதுகாப்பை வழங்கினாலும், வழமை போலவே எந்தவித சமூகப் பொறுப்பும் இல்லாத மனிதனின் அலட்சியப் போக்கால் அவை சூழலில் வாழும் மற்றைய உயிர்களைக் காவு வாங்கத் தொடங்கியுள்ளன.

பல தசாப்த காலமாக அலட்சியமாக கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் சிறிது சிறிதாக வெளிப்படத் தொடங்கியதை அடுத்து, NO2 உமிழ்வுகள், CO2 உமிழ்வுகள் போன்றன கட்டுப்படுத்தப்பட்டு ஒரு பக்கம் பூமியின் ரணங்கள் ஆறி வந்த நிலையில் மறு பக்கத்தை பிளாஸ்டிக் அரக்கன் அரிக்கத் தொடங்கினான்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தான் இந்த COVID-19 குப்பைகளும் வந்து சேர்ந்து கொண்டுள்ளன. நாம் அன்றாடம் தெருவில் செல்லும் போது நம்மைச் சுற்றிலும்  பயன்படுத்தப்பட்ட ஃபேஸ் மாஸ்க் அல்லது கையுறை தெருவில் கிடப்பதையும், புதரில் சிக்கித் தொங்குவதையும், நீர்வழியில் மிதப்பதையும் காண்கிறோம். உலகின் புதிய சூழலியல் மாசாக உருவாகி வரும் கோவிட் குப்பைகள் அடுத்த பல தசாப்தங்களுக்கு நம் சூழலைச் சிதைக்கப்போகும் ஒரு மிகப்பெரிய சவால்.

COVID குப்பையில் முக்கியமாக அடங்கும் ஒற்றை-பயன்பாட்டுக் கையுறைகள், Elastic string கொண்ட ஒற்றை-பயன்பாட்டு முகக்கவசங்கள் (Medical Mask) போன்றவற்றில் பாலிப்ரொப்பிலீன் துணி (polypropylene fabric), பாலியஸ்டர் போன்ற பிளாஸ்டிக் வகைகள் உள்ளன.

இந்த பாலிப்ரொப்பிலீன் (Polypropylene) என்பது புரோபிலீன் மோனோமர்களின்  (propylene monomers) கலவையிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு தெர்மோபிளாஸ்டிக் பாலிமர் சேர்க்கை ஆகும். நுகர்வோர் தயாரிப்புகளுக்கான பேக்கேஜிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கான பிளாஸ்டிக் பாகங்கள், மற்றும் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த பாலிப்ரொப்பிலீன் பயன்பாட்டில் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் நச்சு கழிவுகள், நச்சு உமிழ்வுகள், ஃப்ளோரோகார்பன்கள், போன்றவை குறைவு.  அத்தோடு மக்குவதற்கு 500 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக்கொள்ளும் ஏனைய பிளாஸ்டிக்குகளோடு ஒப்பிடுகையில் இவை 20-30 ஆண்டுகளிலேயே மக்கிவிடும் என்பது போன்ற சில ஆறுதலான விடயங்கள் இருந்தாலும் இவற்றின் அளவுக்கதிகமான பயன்பாடு தற்போது சூழலில் பிளாஸ்டிக் மாசு விகிதத்தை அதிகரித்து வருகின்றன.

சமீபத்திய ஒரு மதிப்பீட்டின்படி, COVID-19 தொற்றுநோய்களின் போது ஒவ்வொரு நிமிடமும் கிட்டத்தட்ட 3 மில்லியன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்திய பின் அப்புறப்படுத்துவதில் காட்டப்படும் மெத்தனம் காரணமாக, சிரத்தை இல்லாமல் தூக்கி எறியப்படும் கையுறைகள், முகக்கவசம் போன்றவற்றைப் பறவைகள், விலங்குகள் உட்கொள்ளும் அபாயகரமான சூழல் உருவாகி அவற்றின் இறப்பு வீதம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

கையுறைகள் மற்றும் எலாஸ்டிக் நாடாக்களுக்குள் சிக்கிக்கொள்வது, அவற்றை உணவு என எண்ணி ஏமாந்து உட்கொள்வது போன்ற பரிதாபகரமான செயற்பாட்டினால் பல பறவைகளும் விலங்குகளும் உயிரிழந்து வருகின்றன. சென்ற ஒரு வருடத்தில் மாத்திரம் 1.5 பில்லியனுக்கும் அதிகமான முகக்கவசங்கள் கடலுக்குள் கழுவப்பட்டுச் சென்றிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் கடல் வாழ் மீன்கள் இறப்பு விகிதமும் கூடிக்கொண்டு வருகின்றது.

கடந்த ஆகஸ்ட் 2020இல், நெதர்லாந்தின் லைடனில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு துப்புரவுத் திட்டத்தின் போது, ​​விஞ்ஞானிகள் லேடெக்ஸ் கையுறையில் சிக்கிய ஒரு மீனைக் கண்டுபிடித்தனர், இந்த கண்டுபிடிப்பு, இந்த பிரச்சினை இன்னும் பரவலாக இருக்கிறதா என்று மேலும் அறிந்துகொள்ள அவர்களைத் தூண்டியது. ஒரு சில மாதங்களில், ஆராய்ச்சியாளர்கள் நூற்றுக்கணக்கான முகமூடிகளை நகரின் கால்வாய்களிலும் நீர்நிலைகளிலும் கண்டுபிடித்தனர். PPE குப்பைகள் வனவிலங்குகளுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து Animal Biology இதழில் வெளியிடப்பட்ட மார்ச் மாத அறிக்கையில், முகக்கவசம் மற்றும் லேடெக்ஸ் கையுறைகள் அனைத்துமே பறவைகள், மீன் மற்றும் பிற வனவிலங்குகளை உலகம் முழுவதும் கொல்கின்றன என்ற கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன.

விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் எடுத்துக்காட்டியுள்ள சில உதாரணங்களில், ஒரு லடெக்ஸ் கையுறையில் சிக்கி வால் மட்டுமே வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் நிலையில் இறந்து கிடந்த ஒரு பெர்ச் பறவை, முகக்கவசத்தில் கூடு கட்டியிருக்கும் கூட் (coot) பறவைகள், பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு முகமூடியில் சிக்கி உயிரிழந்துள்ள அமெரிக்க ராபின் இன பறவை, இங்கிலாந்தின் யார்க்ஷயரில் ஃபேஸ் மாஸ்க்கில் சிக்கி இறந்து கிடந்த ஒரு இளம் பெண் பெரெக்ரைன் பால்கன் கொக்கு, இத்தாலியின் ரோம் அருகே உள்ள பிராசியானோ ஏரியில் முகக்கவசத்தின் எலாஸ்டிக் பட்டி வாயைச் சுற்றி சிக்கியதால் ஒலி எழுப்ப முடியாது ஊமையான அன்னப்பறவை, பிரேசில் நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த மாகெல்லானிக் பென்குயின்களின் (Magellanic penguin) வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட முகக்கவசங்கள், ஐக்கிய இராச்சியத்தில் ஃபேஸ் மாஸ்க்கில் சிக்கிய ஒரு சிவப்பு நரி மற்றும் ஒரு ஐரோப்பிய முள்ளம்பன்றி, என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இப்படியே போனால் இறுதியில் மனிதர்களின் COVID-19 குப்பைகளால் முழு விலங்கு இராச்சியமுமே பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்னர், வாஷிங்டன், டி.சி.யில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் குழுவான ஓஷன் கன்சர்வேன்சி (Ocean Conservancy), சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் (International Coastal Cleanup) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களால் இந்த நிகழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. COVID-19 தொற்றுநோயின் பின், இந்த நிகழ்வின் பணிகளை ஓஷன் கன்சர்வேன்சி மேலும் விரிவுபடுத்தியது. 2020 ஜூலை மாதம் தொடக்கம் ஒரு புதிய வகை குப்பைகளை கிளீன் ஸ்வெல்லுடன் சேர்த்தது. அது தான் PPE trash என அழைக்கப்படும் கொரோனா குப்பைகள். 2020ஆம் ஆண்டில் மட்டும் 70 நாடுகளில் உள்ள கடற்கரைகளில் 100,000க்கும் மேற்பட்ட முகமூடிகள் மற்றும் கையுறைகள் இவர்களால் அகற்றப்பட்டன.

கோவிட் தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. தற்போது இரண்டாம் அலை இந்தியா உட்பட பல நாடுகளை உலுக்கிக்கொண்டு உள்ளது. நாளுக்கு நாள் மரண வீதம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. உடனடியாக இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் அனைத்துமே உள்ளன.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படும் PPE-யின் அளவும் அதிகரித்துக்கொண்டே போகும். சீனா ஒரே மாதத்தில் ஃபேஸ் மாஸ்க் உற்பத்தியை 450% அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் உலகளவில் 129 பில்லியன் ஃபேஸ் மாஸ்க்களும் 65 பில்லியன் கையுறைகளும் பயன்படுத்தப் படுகின்றன. எனவே பிற ஒற்றை-பயன்பாட்டு (Single usage) பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைப் போலவே, PPE-க்களும் நாம் சூழலில் வந்து குவியத் தொடங்கி உள்ளன. N95 முகமூடியைக் கண்டுபிடித்த டாக்டர் பீட்டர் சாய், நாடுகள் PPE-யை ஒரு போர்க்காலத்தில் இருக்கும் ஆயுதங்களைப் போல வைத்திருக்க வேண்டும் என்கிறார். ஆயுதங்களால் எவ்வித லாபமும் இல்லை இருந்தாலும் அவற்றைப் போதியளவு வைத்திருக்க வேண்டும். PPE-யையும் இராணுவ ஆயுதங்களாகப் பார்க்க வேண்டும்.” என்று குறிப்பிடுகிறார். அப்படியாயின் இனி வரும் காலங்களில் PPE-க்கள் இல்லாத ஒரு அன்றாட வாழக்கையை நினைத்தும் பார்க்க இயலாத கட்டத்திற்குள் தள்ளப்படுவோம். இதன் விளைவாக, PPE-க்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிப்பும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போகும். கொரோனா வைரஸ்சுக்கு எதிராக மனிதனின் உயிர் காக்கும் இந்த ஆயுதங்கள், விலங்குகளின் உயிரைக் காவு வாங்கிச்செல்வது தான் கவலைக்கிடமான ஒன்றாகி உள்ளது.   

இங்கிலாந்தில் ஃபேஸ் மாஸ்க்குகள் கட்டாயமாக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்காணிக்கப்பட்ட ஒரு சில கடற்கரைகளில் மாத்திரமே 30% PPE கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஹாங்காங்கில் மனிதன் குடியேறாத சோகோ தீவுகளில் கூட, கடற்கரையின் 100 மீட்டர் நீளத்திற்கு உள்ளேயே 70 பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்பட்ட ஃபேஸ் மாஸ்க்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு அருகிலேயே ஆரம்பத்தில் அதிகம் காணப்பட்ட கோவிட் குப்பைகள், பொது போக்குவரத்தில் ஃபேஸ் மாஸ்க்கள் கட்டாயமாக்கப்பட்ட பின்னர், ​​பஸ், டிராம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகிலும் அதிகமாகக் காணத் தொடங்கின.

சரி இதற்கு என்னதான் தீர்வு? மறு பயன்பாட்டுக்குரிய reusable முகக்கவசங்களை  பயன்படுத்தலாம். ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக, single use PPEக்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக மறுசுழற்சி செய்ய முடியாது, எனவே அவை ஒரு தடவை பயன்படுத்திய பின் நேரடியாகக்  குப்பைக்குள் செல்ல வேண்டும். முகக்கவசங்களை பயன்படுத்திய பின் அவற்றை கோவிட் குப்பைக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு மூடப்பட்ட கழிவு தொட்டியில் மாத்திரமே அப்புறப்படுத்தப்படுவதையும், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத இடத்தில் அவை இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பயன்படுத்திய PPEயை தெருவில் அல்லது நீர்வழிப்பாதையில் தூக்கி எறிய வேண்டாம். அத்தோடு பறவைகள் மற்றும் விலங்குகள் அதில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பைக் குறைப்பதற்காக, உங்கள் முகக்கவசத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள இரண்டு காதுப் பட்டைகளை (Elastic Ear band) வெட்டி அகற்றி விட்டே அவற்றைக் குப்பையில் போடுங்கள்.

கோவிட் குப்பைகளால் சூழலுக்கும் அதை சார்ந்த உயிரினங்களுக்கும் ஏற்படும் மோசமான பாதிப்புகள் பற்றிய தரவைச் சேகரிப்பதற்கும், மக்கள் மத்தியில் அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஆராய்ச்சியாளர்கள் குழு COVID-19 எனப்படும் ஒரு வலைத்தளத்தை அமைத்துள்ளனர். அதில் மக்கள் இந்த மோசமான நிகழ்வைப் பற்றி தங்கள் சொந்த அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்ளலாம். நீங்களும் கூட உங்கள் பிரதேசங்களில், உங்கள் கண்முன் நிகழும் இது சார்ந்த விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் சூழலுக்கு உங்களால் ஆன ஒரு சிறு பங்களிப்பை வழங்கலாம்.

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படும் அதே வேளை இயற்கை கோவிட் குப்பைகளால் நோய்வாய்ப்பட்டு வருகிறது!

COVID-19 குப்பைகளால் சுற்றுச்சூழலுக்கு உண்டாகும் பாதகமான விளைவு நம்மோடு மட்டும் நின்று விடாது, பல தலைமுறைகளுக்கும் நீடிக்கப் போகும் ஒரு பேரழிவு..


றின்னோஸா

[email protected]

பகிர்:
No comments

leave a comment