சிவனடி சேர்ந்த சேக்கிழார் அடிப்பொடி

தில்லைஸ்தானம் நடராஜ ஐயர் ராமச்சந்திரன் எல்லோருக்கும் ‘டி.என்.ஆர்’தான். இந்த மூன்றெழுத்து ஒரு மந்திரம் போல் சக்தியுடன் விளங்கியது; என்றும் விளங்கும்.

ஏப்ரல் 6, 2021 அன்று டி.என்.ஆர் அவர்கள் சிவனடி தொட்ட செய்தியைக் கேட்டவுடன் என் அதிர்ஷ்டக் குறைவைத்தான் எண்ணிக் கொண்டேன். என் பேராசைகள் அத்தனைக்கும் அவரது பரிபூரண ஆசி இருந்தது. பொழிந்த அருளை ஏந்திக் கொள்ளும் பாத்திரத்தைத் தொலைத்துவிட்டேன். விரித்துச் சொல்ல வேண்டிய விஷயங்கள் இவை.

பாரதி பக்தராக, திருலோக தாசனாக, சேக்கிழார் அடிப்பொடியாக, மகத்தான சைவ சித்தாந்த அறிஞராக, இணையில்லா மொழிபெயர்ப்பாளராக, அறிவு நாடி வருவோரை அணைத்து ஞானம் ஊட்டும் ஆசானாக, என்றும் கற்கும் மாணவனாக, நல்ல குடும்பத்தில் பிறந்து, மிக நல்ல குடும்பத்தைப் பேணி வளர்த்த தலைவனாக – இப்படி ஏற்றுக் கொண்ட எல்லா பாத்திரங்களையும் சரிவர நடிக்கும் வல்லமை வாய்ந்தவராக 86 ஆண்டுகள் வாழ்ந்த டி.என்.ஆர் அவர்களின் மறைவு நமக்கு நஷ்டம் என்றாலும் துக்கிக்கத் தகுந்தது அல்ல. இன்னும் நம்முள் முழுமையாக அவர் கலந்து விட்டார் என்பதுதான் அதன் பொருள். இனி  நம் சுவாசம், எண்ணங்களின் பிரிக்க இயலாத ஒரு பகுதியாக அவர் கலந்து, கரந்திருக்கிறார் என்றுதான் உணர வேண்டும்.

வழிகாட்டி திருலோக சீதாராம்

தன் ஞான குருவாக அவர் வரித்த கவிஞர் திருலோக சீதாராம் அவர்களின் மகன் என்ற இணைப்பில் நான் இருக்கிறேன். எப்போதும். எகிறிப் பறக்கும் நினைவுக் குதிரையைக் கட்டுக்குள் கொண்டுவந்து சில விஷயங்களை மட்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

கல்லூரி நாட்களிலேயே பாரதியில் மனதைப் பறிகொடுத்த அவரை, அவருடைய அத்தை மகன் எழுத்தாளர் தி.சா.ராஜு அவர்கள்தான் திருலோக சீதாராமைப் பார்க்கச் சொல்லி அனுப்பியவர். டி.என்.ஆர் எழுதுகிறார்:

“11.11.1961 அன்று கவிஞரை முதலில் சந்தித்தேன். என் அழைப்பின் பேரில், தஞ்சையில் நாங்கள் நடத்திய பாரதி விழாவில் – கவியரங்கம், பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம் – எல்லாவற்றிலும் பங்கேற்றார். பொற்காசுப் புலவரான அவருக்கு அரை பவுன் தங்கக் காசை பரிசளிக்கும் வாய்ப்பும் பெற்றேன். மதிய உணவிற்கு என் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அடுத்த வாரமே திருச்சியில் அவரைச் சந்திக்க அவருடைய அலுவலகம் சென்றேன். ‘உதயம்’ என்ற தன் கவிதைத் தொகுப்பை எனக்கு வழங்கினார். தஞ்சை திரும்பிய நான், மிகுந்த ஆர்வத்துடன் அந்தக் கவிதைகளைப் படித்து, பலவற்றை மனப்பாடமும் செய்துவிட்டேன்.

மூன்று நாட்களுக்குப் பின்னர், ஒரு வழக்கு நடத்த திருச்சி சென்ற நான், மாலையில் அவரைக் காணச் சென்றேன். நாவலாசிரியர் ஏ.எஸ். ராகவனும் அ.வெ.ர. கிருஷ்ணசாமி ரெட்டியாரும் அவருடன் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் நான் படித்த அவருடைய கவிதைகளைப் பாடினேன். இயல்பாக, உள்ளார்வத்துடன் நான் கவிதை சொன்னதைக் கண்ட கவிஞர் என்னை நோக்கி, “என் இளைய நண்பனே, இனி நாம் அடிக்கடி சந்திப்போம்” என்றார். அன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு முறையாவது நாங்கள் சந்தித்துக் கொண்டோம். என் நண்பர்கள் அவருக்கும் அவர்  நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் ஆயினர். வேற்றுமையின்றி நாங்கள் ஒருவராகி விட்டோம். என் வாழ்வின் வழிகாட்டியாகி என்னை வழிநடத்துபவர் ஆனார். தெளிவாகச் சிந்திக்க அவரிடம் கற்றேன். பாரதியை இன்னும் இன்னும் நெருக்கமாக அறியவும் பாரதியின் குடும்பத்தினருடன் அணுக்கமாகப் பழகவும் அந்த நட்பு வழி செய்தது. 11.11.1961 இல் இருந்து 23.08.1973 வரை அவருடன் பழகிய நாட்கள் என் வாழ்வின் மிகச் சிறந்த காலம். கிப்ரான் சொன்னது போல் ‘நட்பு என்பது ஓர் இனிய பொறுப்பு; எந்நாளும் ஒரு வாய்ப்பல்ல’ என்று நாங்கள் வாழ்ந்தோம்”

பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான ஆனால் அத்துவிதக் கலப்பில் என் தந்தையாருடன் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுருக்கம்தான் மேலே அவர் சொன்னது.  23.08 1973

அன்று கவிஞர் மறைந்த போது அவர் சென்னையில் இருந்தார். அவர் இருக்கும் இடம் தேடிச் சென்று அவருடனே இருந்து ஆறுதல் சொன்னவர் ஜெயகாந்தன்.

1973ல், அப்பாவின் மறைவிற்குப் பின்னர் ‘சிவாஜி’ இதழின் ஆசிரியர் பொறுப்பை டி.என்.ஆர் ஏற்றுக் கொண்டார். அச்சகத்தின் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். நினைத்தால் பஸ் ஏறி தஞ்சாவூர் சென்று அவரைப் பார்த்து வருவேன். இந்தக் காலம் போல், முன்னமே அறிவித்து, அனுமதி பெற்று ஒருவரைச் சந்திக்கும் நிலை அன்றிருக்கவில்லை.

பின்னாளில், அப்பாவின் கவிதைகளை அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தேன். அவருடைய 80ம் பிறந்தநாள் அன்று அதை வெளியிட்டார்.

என் சகோதர சகோதரிகள் எழுவரும் மும்பையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும் அதில் கலந்து கொண்டோம். மிகச் சிறந்த நூலாக வெளியிட்டார்.

இந்த நூல் வெளியீடு தொடர்பாக அவரைச் சந்தித்த பொழுது, தன்னைப் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப் படத்தின் பிரதி (சைவத் தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி) ஒன்றை எனக்கு வழங்கினார். அதைக் கையில் வாங்கிய கணத்தில், திருலோகம் அவர்களைப் பற்றியும் ஆவணப் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆசி அளித்து பட இயக்குனர் கவிஞர் ரவி சுப்ரமணியனின் தொடர்பு எண்ணைக் கொடுத்தார். நாங்களும் ஓர் அரிய ஆவணப்படத்தை (திருலோகம் என்றொரு கவி ஆளுமை) தயாரித்தோம். இந்த ஆவணப் படத்தில் டி.என்.ஆர் அவர்களின் பங்களிப்பு மிகப் பெரியது. அவரில்லாமல் அந்தப் படம் இல்லை என்னும் அளவில் ஈடுபட்டு அதனை வெற்றியாக்கிக் கொடுத்தார்.

ஆவணப்படம் எடுத்தோம். 2016 பிப்ரவரியில் சென்னை நாரதகான சபாவில் அதை வெளியிட்டோம்.01.04.2017 அன்று திருலோகத்தின் நூறாண்டு நிறைவு தினத்தன்றே சென்னையில் அதைக் கொண்டாடினோம். 15.04.2017 அன்று திருவையாறில் திருலோகத்தின் நூற்றாண்டு விழா நடந்தது.19.11.2017 அன்று திருச்சியில் சாகித்ய அகாதமியும் செயிண்ட் ஜோசப் கல்லூரியும் இணைந்து திருலோகத்தின் நூற்றாண்டு கருத்தரங்கத்தைக் கொண்டாடினார்கள். இவை அனைத்திலும் சற்றும் சிரமம் பாராமல் கலந்து கொண்டு சிறப்பு செய்தார் டி.என்.ஆர். உடல்நலம் எப்படி இருந்தாலும் இந்த நாட்களில் தான் மிக மகிழ்ச்சியாகவும் தெம்பாகவும் இருந்ததாகச் சொல்வார். அவர் இல்லை என்றால் இவை எதுவுமே சிறப்பாக நடந்திருக்க முடியாது.

சரி, திருலோகம் மறைந்து 43 ஆண்டுகள் கழித்து எங்கள் குடும்பம் மேற்கொண்ட இந்த முயற்சிகளுக்கு ஆசியும் ஆதரவும் பங்களிப்பும் தந்தார். அதற்கு முன்னர்? இடைப்பட்ட 43 ஆண்டுகளில் ஒற்றையாக தன் முயற்சியில் எப்போதும் திருலோகத்தின் பெருமையைப் பேசியவாறே இருந்தார். எங்கு உரை நிகழ்த்தினாலும் திருலோகத்தின்

கோலம் மிகுந்து ஒளி கூட்டி மயக்கமும் காட்டி எழும்

        காலமென்றே பெரும் கற்பனைக்கே மயலாகி ….

என்று தொடங்கும் பாடல் வரிகளை முழுதும் பாடி பின்னர் உரையைத் தொடங்கும் பழக்கம் அவருக்கிருந்தது. எண்ணற்ற கூட்டங்களைத் தஞ்சையிலும் மற்ற ஊர்களிலும் திருலோகத்தின் நினைவாக நடத்தியிருக்கிறார். அவரைப் பற்றிய ஆவணப் படத்திலும் அவர் அளித்த பேட்டிகள் அனைத்திலும், அவர் விருது பெற்ற சபைகளிலும் எப்போதும் திருலோகத்தை நினைவு கூர்ந்தவாறே இருந்தார்.

1993 பிப்ரவரியில், திருவையாற்றில் பாரதி சங்கம் நடத்திய ‘பாரதி 111ம் ஆண்டு மற்றும் திருலோகத்தின் 76ம் ஆண்டு விழாவில், முழுநாள் பங்களிப்பு ஆற்றினார். அந்த விழாவில் பண்டித கோபலய்யர், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவ்வை நடராஜன், பேராசிரியர் கே. ஜி. சேஷாத்ரி, டாக்டர். பிரேமா நந்தகுமார் ஆகியோரை அழைத்திருந்தார். ஜெயகாந்தனும் வருவதாக இருந்தது. யாதோ காரணத்தால் அவரால் வர முடியாமல் போயிற்று.

பின்னர் ஜெயகாந்தன் எனக்காக ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யுங்கள், நான் திருலோகம் பற்றிப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருக்காக ஒரு கூட்டம் தஞ்சையில் நடத்தப்பட்டது. அதில் தலைமையேற்ற டி.என்.ஆர் அவர்கள் அருமையான சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். அன்று ஜெயகாந்தன் ஆற்றிய உரை மிகச் சிறந்த பேருரை. அதிர்ஷ்டவசமாக அந்த ஒலியிழை இன்றும் இருக்கிறது.

இப்படி அவர் விரும்பி தேர்ந்த திருலோகம் மறைந்த பின்னர், சைவ சித்தாந்த சாகரத்தில் மூழ்கி முத்தெடுக்கத் தலைப்பட்டார். முத்துக்குவியலாக அள்ளிச் சேர்த்துவிட்டார். தமிழகத்தின் தலைசிறந்த சைவ சித்தாந்த அறிஞராக தன் இறுதி மூச்சுவரை வாழ்ந்தார். எத்தனையோ பட்டங்களும் கௌரவங்களும் அவரைத் தேடி வந்து தம்மைப் பெருமைப் படுத்திக் கொண்டன.

மாமனிதர்

தஞ்சையில் அவர் இல்லத்தின் முன்கட்டிலேயே ஒரு கல்விக்கூடத்தின் தோற்றம் உண்டு. நூற்கள் அடுக்கிய அலமாரிகளும், மேசையும் வகுப்பறையை நினைவூட்டும். வலதுபுறம் ஊஞ்சலில் உட்கார்ந்து வெற்றிலைச் செல்லம் சகிதமாக ஆடிக்கொண்டே வெங்கலக் குரலில் அவர் உரையாடும் அழகே அழகு. மாடியில் வியக்க வைக்கும் மாபெரும் நூலகம். 50,000 நூல்களுக்கும் மேல் இருக்கும். முறையாகப் பகுத்து, குறிப்பட்டைகளுடன் அலமாரிகளில் வைக்கப்பட்ட நூல்கள். உண்மையான ‘நூல் காதலர்’.

எனக்கிருக்கும் உரிமையில் நான் எப்போது வேண்டுமானாலும் செல்வேன். சந்திக்கும் போதெல்லாம் ஒரு புதிய செய்தி கிடைக்கும். மூச்சில் புதிதாய்ப் பிறந்த சக்தியுடன்தான் திரும்புவேன். மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தாலும் ‘போதும்’ என்று தோன்றாது. தாயுள்ளம் கொண்ட துணைவியார் (கல்யாணி மாமி) உண்பதற்கு ஏதேனும் கொடுத்துக் கொண்டே, எங்கள் பேச்சின் இடையே எங்கள் குடும்பத்தில் எல்லோரைப் பற்றியும் விசாரிப்பார்.

நான் சென்ற பொழுதிலெல்லாம் எத்தனையோ அறிஞர்கள் புடை சூழ அவர் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். அனைவரும் ஒரு கோவிலில் இருப்பதைப் போல்  அவரைச்  சுற்றி அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்பதைக் கண்டிருக்கிறேன். இலக்கியமும் ஆன்மீகமும் நிறைந்த சபை அது.

‘The Poetical Works of Tiruloka Sitaram With Translation and Notes’ என்று 2014ல் திருலோகத்தின் பெரும்பாலான கவிதைகளை அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புடன் தன் சதாபிஷேகத்தன்று வெளியிட்டார் என்று முன்னமே சொன்னேன். SRM பல்கலைக்கழகம் அதற்காக அவருக்கு 2017ல் ஜி.யு.போப் விருது வழங்கி பெருமை கொண்டது.

இந்த நூல் வெளியீடும் ஆவணப்படமும் எங்கள் குடும்பத்திற்கென்று அவர் அளித்த கொடைகள். அதை அவரிடம் அப்படிச் சொல்ல முடியாது. “இதெல்லாம் நானே பண்ணிருக்கணும் கொழந்தே! எதோ வேலைல தள்ளிப் போட்டுட்டேன். நீ என்ன விடாம தொரத்தி இதப் பண்ண வெச்சே. சிவனருள் உனக்கு பரிபூர்ணமா உண்டு” என்று என்னை ஆசீர்வதித்தார்.

இத்தனை சொன்னால் போதாதா எனக்கு? ஒருநாள் அவரை காமிரா முன் திருலோகம் பற்றிய அத்தனை நினைவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டினேன். “நிச்சயமா செய்யலாம். செய்ய வேண்டிய காரியம்தான். எனக்குக் கொஞ்சம் ஓய்வா இருக்கும்போது வா” என்று சொன்னவர்தான். பல காரணங்களால் அதை நிறைவேற்றிக் கொள்ளுமுன் சிவனடி சேர்ந்து விட்டார். அதிர்ஷ்டம் எத்தனை முறைதான் வாய்க்கும்?

கடந்த ஜனவரி 31 அன்று அவருடைய மூத்த மகன் Dr. சுரேஷ், அவருடன் பேச தொலைபேசியில் வாய்ப்பு செய்து கொடுத்தார். பல முயற்சிகளுக்குப் பின் வெற்றி பெற்ற தருணம் அது. முன்னர் நான் தொடர்பு கொள்ள முயன்ற போதெல்லாம் அவருக்கு இருந்த உடல்நலக் குறைவால் பேசும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. வழக்கம் போல் அன்புடன் பேசி ஆசீர்வதித்தவரிடம் சில மணித்துளிகள் பேசினேன். “சென்னை வந்து உங்களைப் பார்க்க வேண்டுமே” என்றேன். “வாயேன். எப்ப வேண்ணா வா” என்றார்.

எப்போது வரட்டும் மாமா?

புகைப்படம் உதவி சுருதி டிவி.


சுப்ரமணியன் சீதாராம் திருலோக சீதாராம் அவர்களின் மகன்

 

 

 

1 COMMENT

  1. I have met both Trilokam and TNR back in the early 70’s.
    Though I didn’t have the sense then to be curious about them, there was this notion I had that TNR played Boswell to Trilokam’s Dr Johnson.
    This tribute by Subramanian Sitaram makes it clear to me that TNR was a great soul and a rare literary talent in his own right.
    Subramanian’s tribute is interesting as well as moving.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.