சோப்பியின் தெரிவு

மேடிசன் சதுக்கத்தில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த சோப்பி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். சருகொன்று அவன் கையில் வந்து விழுந்தது. குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறது. அதற்கானத் திட்டங்களை அவன் வகுத்தாகவேண்டும் என்பதை அவன் அறிவான். அவன் சங்கடத்தோடு இருக்கையில் நெளிந்துகொண்டிருந்தான்.

குளிர்காலத்தின் மூன்று மாதங்களையும் உணவும் நல்ல நண்பர்களும் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல கதகதப்பான சிறை அறைக்குள் கழிக்க விரும்பினான். இப்படித்தான் அவன் ஒவ்வொரு குளிர்காலத்தையும் சமாளித்துக் கொண்டிருந்தான். இப்போது இதுதான் நேரம். ஏனெனில் இரவு நேரங்களில் அவன் படுத்துறங்கும் மேடிசன் சதுக்க இருக்கையில் மூன்று செய்தித்தாள்களை விரித்தாலும் குளிரில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சோப்பி சிறைக்குச் செல்ல முடிவெடுத்த கணமே முதல் திட்டத்தில் இறங்கினான். அது எப்போதுமே மிகவும் சுலபமானது. ஆடம்பர உணவகம் ஒன்றில் இரவுணவைச் சாப்பிடுவான். பிறகு தன்னிடம் பணமில்லை என்று சொல்வான். அவர்கள் உடனே போலீஸை அழைப்பார்கள். எந்தச் சிக்கலும் இல்லாத நல்ல, இலகுவான வழி அது.

எனவே சோப்பி இருக்கையை விட்டு எழுந்து தெருக்களில் மெல்ல நடக்க ஆரம்பித்தான். விரைவிலேயே ப்ராட்வேயில் ஒரு ஆடம்பர உணவகத்தைக் கண்டான். ஆம்… இது சரியாக இருக்கும். உணவகத்துக்குள் நுழைந்து உடனடியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்துவிட்டால் போதும். ஏனெனில் அவன் உட்கார்ந்திருந்தால் அவனுடைய சட்டையும் மேல் கோட்டும்தான் மக்களின் பார்வைக்குத் தெரியும். அவை ஒன்றும் அவ்வளவு பழசு கிடையாது. யாராலும் அவனுடைய காற்சட்டையைப் பார்க்க முடியாது. அவன் உணவைப் பற்றி யோசித்தான். ரொம்பவும் விலை கூடுதலாக இருக்கக்கூடாது, ஆனால் நன்றாக இருக்கவேண்டும்.

ஆனால் சோப்பி உணவகத்துக்குள் நுழையும்போதே பணியாள் அவனுடைய பழைய அழுக்கு காற்சட்டையையும் படுமோசமான காலணிகளையும் பார்த்துவிட்டான். வலிமையான கரங்கள் அவனைச் சுற்றிவளைத்து மறுபடியும் தெருவுக்குத் தள்ளின.

எனவே அவன் வித்தியாசமாக வேறு ஏதாவதொன்றை யோசிக்க வேண்டியிருந்தது. சோப்பி ப்ராட்வேயை விட்டு வெளியேறி நடந்து ஆறாம் அவென்யூவை அடைந்தான். ஒரு கடையின் கண்ணாடி ஜன்னல் முன்பாக நின்று அதைப் பார்த்தான். நல்ல வெளிச்சமாக இருந்த காரணத்தால் தெருவிலிருந்த அத்தனைப் பேராலும் அவனைப் பார்க்க முடியும். மெதுவாகவும் கவனமாகவும் ஒரு கல்லை எடுத்து ஜன்னல் கண்ணாடியின் மேல் எறிந்தான். பெரும் சத்தத்தோடு கண்ணாடி உடைந்து விழுந்து நொறுங்கியது. மக்கள் குழுமினர். சோப்பிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் கூட்டத்தில் முதல் ஆளாக நின்றிருந்தவர் ஒரு போலீஸ்காரர். சோப்பி அசையவில்லை. காற்சட்டைப் பாக்கெட்டில் கைகளை விட்டுக்கொண்டு நின்றிருந்த அவன், புன்னகைத்தான். “விரைவிலேயே நான் சிறைக்குப் போகப் போகிறேன்” என்று நினைத்துக்கொண்டான்.

போலீஸ்காரர் சோப்பியிடம் “யார் இதைச் செய்தது?” என்று கேட்டார்.

“நான்தான் செய்திருப்பேன்” என்றான் சோப்பி.

ஆனால் போலீஸ்காரருக்குத் தெரியும், கண்ணாடிகளை உடைப்பவர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள். போலீஸ்காரரிடம் நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். அப்போது அங்கொருவன் பேருந்தைப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தான். அவன் ஓடுவதைப் பார்த்த போலீஸ்காரர் தானும் அவனை விரட்டிக்கொண்டு பின்னால் ஓடினார். சோப்பி ஒரு நிமிடம் நின்று பார்த்தான். பிறகு அங்கிருந்து சென்றுவிட்டான். இந்த தடவையும் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை. அவனுக்கு எரிச்சலாக இருந்தது.

ஆனால் சாலைக்கு மறுபுறம் இருந்த ஒரு சிறிய உணவகத்தைப் பார்த்தான். ஆம்.. இது சரியாக இருக்கும் என்று நினைத்தபடி உள்ளே சென்றான். இந்த முறை யாரும் அவனுடைய காற்சட்டையையும் காலணிகளையும் கவனிக்கவில்லை. உணவை ரசித்து சாப்பிட்டான். பிறகு பணியாளைப் பார்த்துப் புன்னகைத்தபடி சொன்னான், “என்னிடம் கொஞ்சமும் பணம் இல்லை. உடனே போலீஸைக் கூப்பிடுங்கள், சீக்கிரம். எனக்குக் களைப்பாக இருக்கிறது.”

“உனக்கெல்லாம் போலீஸ் கிடையாது” என்ற பணியாள், “ஜோ.. இங்கே வா” என்று ஒருவனை அழைத்தான்.

இன்னொரு பணியாள் வந்தான். இருவருமாகச் சேர்ந்து சோப்பியைத் தூக்கி குளிர் நிறைந்த தெருவில் வீசினர். சோப்பி ஆத்திரத்துடன், விழுந்த இடத்திலேயே கிடந்தான். பிறகு மிகவும் சிரமப்பட்டு எழுந்து நின்றான். அவனுடைய அருமையான, கதகதப்பான சிறை அறை இன்னும் எட்டாத் தொலைவிலேயே இருந்தது. சோப்பிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அங்கு நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், சிரித்துக்கொண்டே போனது அவன் வேதனையை இன்னும் அதிகப்படுத்தியது,

சோப்பி அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றான். வெகு தொலைவு நடந்துவந்தபின் அடுத்த முயற்சியில் இறங்கினான். இந்த முறை கொஞ்சம் சுலபமாக இருக்கும்போலத் தோன்றியது. அழகிய யுவதி ஒருத்தி ஒரு கடையின் கண்ணாடி ஜன்னலுக்கு முன்னால் நின்று உள்ளே பார்த்துக்கொண்டிருந்தாள். கொஞ்ச தூரத்திலேயே ஒரு போலீஸ்காரரும் நின்றிருந்தார். சோப்பி அப்பெண்ணின் அருகில் சென்றான். போலீஸ்காரர் அவனைக் கண்காணித்துக் கொண்டிருப்பதை அவன் கவனித்தான்.

சோப்பி அவளிடம், “அன்பே, நீ என்னோடு வந்தாலென்ன? என்னால் உன்னை மகிழ்விக்க முடியும்”

அந்த இளம்பெண் சற்றே விலகிச் சென்று மறுபடியும் ஜன்னல் கண்ணாடி வழியாக இன்னும் சற்றுக் கூர்ந்து பார்க்கலானாள். சோப்பி போலீஸ்காரரைப் பார்த்தான். ஆம், அவர் இன்னும் இவனைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். சோப்பி மறுபடியும் இளம்பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தான். ஒரு நிமிடத்தில் அவள் போலீஸ்காரரை அழைக்கப்போகிறாள். சிறையின் கதவுகளைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டான். ஆனால் திடீரென்று அந்தப்பெண் அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு “சரி” என்றாள் சந்தோஷத்துடன். “எனக்கு குடிப்பதற்கு ஏதாவது வாங்கித் தருவதாக இருந்தால் சரி. அந்தப் போலீஸ்காரர் நம்மைப் பார்த்துவிடுவதற்குள் இங்கிருந்து போய்விடுவோம், வா” என்றாள்.

சோப்பி வருத்தத்தோடு ஏதும் செய்ய இயலாதவனாய், தன் கைகளைப் பற்றியிருந்த அந்தப் பெண்ணுடன் அங்கிருந்து சென்றான். அடுத்தத் தெருமுனைக்கு வந்தவுடன் அவன், அப்பெண்ணிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓடினான். “என்னால் சிறைக்குப் போகவே முடியாதோ?” சட்டென்று அவனுக்கு பயம் வந்துவிட்டது.

அவன் மெதுவாக நடந்து ஏராளமான அரங்குகள் இருந்த தெருவுக்கு வந்தான். அங்கே பிரமாதமாக உடையணிந்த பணம் படைத்தவர்கள் பலர் இருந்தனர். சோப்பி சிறைக்குச் செல்வதற்கு ஏதாவது செய்தாகவேண்டும். மேடிசன் சதுக்கத்தில் இருக்கும் அவனுடைய இருக்கையில் மற்றுமோர் இரவைக் கழிக்க அவனுக்கு விருப்பமில்லை. என்ன செய்யலாம்? அப்போதுதான் அருகில் ஒரு போலீஸ்காரர் இருப்பதைப் பார்த்தான். எனவே அவன் உரத்தக் குரலில் பாடவும் சத்தம் போடவும் ஆரம்பித்தான்.   இந்த முறை அவர்கள் நிச்சயமாக அவனை சிறைக்கு அனுப்பிவிடுவார்கள். ஆனால் அந்த போலீஸ்காரரோ அவனுக்கு முதுகைக் காட்டி நின்றபடி, பக்கத்தில் நின்றிருந்த இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “அவனுக்குக் குடிப்பதற்கு காசு எக்கச்சக்கமாக கிடைத்துவிட்டது போலும். ஆனால் அவனொன்றும் ஆபத்தானவன் இல்லை. இன்றிரவு அவனை தனியாக விட்டுவிடுவோம்.”

இந்த போலீஸ்காரர்களுக்கு என்னதான் ஆச்சு? சோப்பிக்கு உண்மையிலேயே மிகவும் வருத்தமாக இருந்தது. அவன் சத்தம் எழுப்புவதை நிறுத்திக்கொண்டான். எப்படிதான் அவன் சிறைக்குப் போவது? குளிர்காற்று வீசியது. அவன் தனது மெல்லிய மேல்கோட்டை இழுத்துச் சுற்றிக்கொண்டான்.

அப்போது ஒரு கடைக்குள் விலையுயர்ந்த குடையோடு ஒருவர் நுழைவதைப் பார்த்தான். அவர் கதவுக்கு அருகில் குடையை சாய்த்து வைத்துவிட்டு சிகரெட்டை எடுத்தார். சோப்பி கடைக்குள் சென்று குடையை எடுத்தான். மெதுவாக நடந்து வெளியில் வந்தான். அந்த மனிதர் அவன் பின்னாலேயே வந்தார்.

“அது என்னுடைய குடை” என்றார் அவர்.

“அப்படியா?” என்ற சோப்பி, “அப்படியென்றால் நீங்கள் ஏன் போலீஸைக் கூப்பிடக்கூடாது? நான் இதை எடுத்தேன். நீங்கள் இதை உங்களுடையது என்கிறீர்கள். அப்படி என்றால் போய் ஒரு போலீஸை அழைத்துவாருங்கள். அதோ பாருங்கள், தெருமுனையிலேயே ஒருவர் இருக்கிறார்.” என்றான்.

குடைக்காரர் வருத்தம் மேலிடப் பார்த்தார். “சரி, ஒருவேளை தவறு என்மீது இருக்கலாம். இன்று காலையில் ஒரு உணவகத்திலிருந்துதான் இந்தக் குடையை எடுத்துவந்தேன். இது உங்களுடையது எனில்.. மன்னிக்கவும்.”

“நிச்சயமாக, இது என்னுடைய குடைதான்” என்றான் சோப்பி.

போலீஸ்காரர் அவர்களைப் பார்த்தார். குடைக்காரர் அங்கிருந்து போய்விட்டார். போலீஸ்காரரும் ஒரு அழகான இளம்பெண்ணுக்கு சாலையைக் கடப்பதில் உதவப் போய்விட்டார்.

சோப்பி இப்போது உண்மையிலேயே கடுப்பானான். அவன் குடையைத் தூக்கியெறிந்துவிட்டு போலீஸ்காரரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தான். அவன் சிறைக்குப் போக விரும்புவதாலேயே அவர்கள் அவனை அனுப்ப விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். அவனால் எதையும் தவறாகச் செய்ய இயலவில்லை.

அவன் பழையபடி மேடிசன் சதுக்கத்திலிருக்கும் அவனுடைய இருப்பிடத்துக்குத் திரும்ப எண்ணி நடக்க ஆரம்பித்தான்.

ஆனால் அமைதியான தெருமுனை ஒன்றில் சோப்பி சட்டென்று நின்றான். அங்கே, நகரத்தின் மையத்தில் அழகான பழமையான தேவாலயம் இருந்தது. ஊதா நிற ஜன்னல் ஒன்றின் வழியாக மிதமான வெளிச்சம் தெரிந்தது. தேவாலயத்தின் உள்ளே இருந்து இனிமையான இசை கேட்டது. நிலவு வானத்தின் உச்சியில் இருந்தது. எங்கும் அமைதி நிலவியது. ஒருசில கணங்களுக்கு அது ஒரு கிராமப்புற தேவாலயம் போன்று தோன்றியது. சோப்பி தன் வாழ்நாளின் மகிழ்ச்சியான தருணங்களை நினைவுகூர்ந்தான். அவனுக்குத் தாயும் நண்பர்களும் இருந்த நாட்களையும் வாழ்வின் பிற அழகான நிகழ்வுகளையும் நினைத்துப் பார்த்தான்.

பிறகு இப்போது இருக்கும் அவன் வாழ்க்கையை நினைத்துப்பார்த்தான். வெறுமையான நாட்கள், உயிர்ப்பில்லாத திட்டங்கள். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. சோப்பி தன் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டு புதிய மனிதனாக வாழ முடிவு செய்தான்.

“நாளையே நான் நகரத்துக்குச் சென்று ஏதாவது வேலை தேடிக் கொள்வேன். என் வாழ்க்கை மறுபடியும் பழையபடி நல்ல நிலைமைக்கு வரும். நானும் முக்கியத்துவம் பெறுவேன். எல்லாமே மாறும். நான்..”

யாரோ சோப்பியின் கையைப் பிடிப்பது போல் உணர்ந்தான். அவன் துள்ளிக்குதித்துத் திரும்பிப் பார்த்தான். எதிரே ஒரு போலீஸ்காரர் நின்றிருந்தார்.

“இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” போலீஸ்காரர் கேட்டார்

“எதுவும் செய்யவில்லை” என்றான் சோப்பி.

“அப்படியென்றால் என்னோடு வா” என்று சோப்பியைப் பார்த்து சொன்ன அந்த போலீஸ்காரர், தொடர்ந்து சொன்னார், “உனக்கு மூன்று மாத காலம் சிறை!”

 

ஓ.ஹென்றி

தமிழில் : கீதா மதிவாணன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.