நகுலனின் பலமுகங்கள்

குலனை விட அவருடைய ராமசந்திரனும், நவீனனும், சுசிலாவும் தமிழ் இலக்கிய உலகில் அதிகம் பேசப்பட்டு விட்டார்கள். சும்மா பம்மாத்து பண்ணுகிறார் என்பதில் இருந்து, உன்மத்த நிலையின் உச்சம் இவர் எழுத்து என்பது வரை இவர் மீது பல விமர்சனங்கள். தமிழிலும், ஆங்கிலத்திலும் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.  Virginia Woolf-ன் படைப்புகள் குறித்த ஆய்வு பட்டயத்தைச் சமர்ப்பித்து M.Phil பட்டம் பெற்றவர்.  நகுலனின் எல்லாப் படைப்பு வடிவங்களுமே அகஉலகில் ஆழ்ந்து தத்தளிப்பவை. புறஉலகு குறித்த பிரக்ஞை அதிகம் இல்லாதவை. இந்தக் கட்டுரை, நகுலனின் பல்வேறு முகங்களை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு முயற்சி. (இவருடைய ஆங்கில எழுத்துகள் இந்தக் கட்டுரைக்காக எடுத்துக் கொள்ளப்படவில்லை)

நகுலன் கவிஞராக:

நகுலன் கவிதைகளில் சுசிலா அடிக்கடி நகுலனைப் பார்க்க வருவது, மஞ்சள் பூனை, நவீனன் சொல்வது இது போல் சில விசயங்கள் அடிக்கடி நிகழும். மீண்டும் மீண்டும் மனதில் எழும் அதிர்வுகளே கவிதையாகி இருக்கின்றன.

“நீ

என் வாழ்வைக்

கனவாக்கி விட்டாய்

கனவு

நினைவின் நிழல்

மனதை வசீகரிக்கும்

இதன்

விருட்டென்ற நடை கண்டு

என் மனம் மிரள்கிறது

வாழ்வு கனவானது என்றால் கைகூடாமல் போன விசயம். ஆனால் கனவு என்பது நினைவின் நிழல், அதன் சாயல், அதன் நீட்சி. சுசிலாவே இல்லையென்றால் எப்படி அவள் கனவில் வரமுடியும்! கனவை கையில் வைத்து அழகு பார்க்கமுடியாது விருட்டென்று நகர்ந்து விடுகிறதே!

நினைவு ஊர்ந்து செல்கிறது

பார்க்கப் பயமாக இருக்கிறது

பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை

இது தான் நகுலனின் பிரச்சனை. காஃப்காவின் பிரச்சனை. இன்னும் பலருடைய பிரச்சனை. தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம் என்ற பத்திரகிரியாரின் புலம்பல் கூட இந்த மையப்புள்ளியில் அல்லவா வந்து சேர்கிறது!

வழக்கம்போல்

என் அறையில்

நான் என்னுடன்

இருந்தேன்.

கதவு தட்டுகிற மாதிரி

கேட்டது.

‘யார்”

என்று கேட்டேன்

”நான் தான்

சுசீலா

கதவைத் திற” என்றாள்.

எந்த சமயத்தில்

எந்தக் கதவு

திறக்கும் என்று

யார்தான்

சொல்ல முடியும்?

தனிமை கலைந்து போனதில் வருத்தமா? இல்லை சுசிலா வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சியா? வழக்கம் போல் வாசகர் தான் முடிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் முதலில் வரும் கதவும் இரண்டாம் முறை வரும் கதவும் ஒன்றல்ல என்றளவில் புரிதல் இருந்தால் போதுமானது.

Antipoetry-யையே நகுலன் கவிதைகளாக அதிகம் எழுதியிருக்கிறார். “உங்கள் வாழ்வுக்கும் என் சாவுக்கும் இடையே வேறொன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்பது antipoetry என்பது மட்டுமல்ல, Absurdism மற்றும் இந்திய தத்துவார்த்தம் இரண்டுக்கும் இடையில் பயணம் செய்யும் ஒன்று. பின்வரும் கொல்லிப்பாவை கவிதைகள் போல சங்கப்பாடல்கள் சாயலில் நகுலன் எழுதியவை அவரது எதிர்கவிதைகள் போல் நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

வில்லெடுத்து நாண் வளைத்துக்

குறிவீழ்த்தும் முன் கருத்துந்த

கண்ணூடு கண் வளைந்து

உள்ளம் புணர்ந்து உடல் தழுவத்துடித்து

அன்று நின்ற அச்சீதையும்

நின்செயல் கண்டு நெடிது நிற்பாள்.

நகுலன் தொகுப்பாசிரியராக:

நகுலன் தொகுத்தவற்றில் இன்றும் முக்கியமாகக் கருதப்படுவது அவரது குருஷேத்திரம் தொகுப்பு. தமிழ் புத்தகாலயம் 1968-ல் 8 ரூபாய்க்கு வெளியிட்டது.  திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் கைக்காசு செலவழித்துக் கொண்டு வந்த நூல். அதன் பிறகு நீண்ட காலம் கழித்து 2016-ல் விருட்சம் வெளியிட்டது. கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், கவிதைகள், நாடகம் என்று கலவையான தொகுப்பு.

சிறுகதை வடிவத்தைக் குறித்து ஹெப்சிபா ஜேசுதாசன், நல்ல நாவலும், மகத்தான நாவலும் என்று பி.கெ.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய கட்டுரையை நீலபத்மநாபன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அதே போல் பிரமிள் எழுதிய மௌனி கதைகள், படைப்பாளி இலக்கியம் என்ற இரு கட்டுரைகளும் கூட இத்தொகுப்பில் முக்கியமானவை. தஷிணாமூர்த்தி அய்யப்ப பணிக்கர் கவிதைகள் குறித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார்.

சிறுகதைகளில் மௌனியின் இரண்டு சிறுகதைகளும், சார்வாகனின் இரண்டு சிறுகதைகளும், அசோகமித்ரன், நீல பத்மனாபன் தலா ஒரு கதையும், மொழிபெயர்ப்புக் கதை ஒன்றும், திருமலை என்பவர் எழுதிய வித்தியாசமான கதை ஒன்றும் இடம்பெற்றுள்ளன. சிறுகதைகளில் highlight ‘தனிமை கொண்டு’ என்ற கதையை எழுதிய எஸ்.ரங்கராஜன். ஆமாம் சுஜாதா தான்.

தனிமை கொண்டு கதையைக் குறித்து நாலுவரி எழுதவில்லை என்றால் மாலா சொல்லியது போல் 25,000 வருஷம் நரகத்தில் தலைகீழாகத் தொங்க நேரிடும். தலையில் ஆணி அடித்தது போல் ‘க்’ க்குப் புள்ளி வைத்திருக்கிறாள் என்கிறார் சுஜாதா. அண்ணனைத் தவிர வேறு யாருமில்லாத பதினேழு வயதுப்பெண் எழுதிய டைரியின் பக்கங்கள் தான் கதை. Harold Robins-ம் Rebecca-வும் கலந்து படிக்கும் பெண். அண்ணனின் மேல் வரும் incest romance மாறி, பின் அவன் நண்பனுடன் பழகி கர்ப்பமாகும் பெண். கதையை விட சொல்லிய முறை…….

அதுவும் 1968-க்கு முன் எழுதிய கதையில் அப்படியே சுஜாதா வாசம். சுஜாதா ஜனரஞ்சக நாவல்களை எழுதாமல் சிறுகதைகளாகவே எழுதிக் கொண்டிருந்திருக்கலாம்!

பிரசுரத்திற்கு ஏற்கப்படாத நகுலனின் குறுநாவல் ‘ரோகிகள்’ இந்தத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. கவிதைகளில் வல்லிக்கண்ணன் மற்றும் ஷண்முக சுப்பையாவின் கவிதைகள் மற்ற கவிதைகளோடு, கடைசியாக திருமலை எழுதிய ஓரங்கநாடகம்.

பின்னால் வந்த பல இலக்கியத் தொகுப்புகளுக்கு முன்னோடி இந்தத் தொகுப்பு. மலையாள இலக்கியத்தையும் தமிழ் இலக்கியத்தையும் ஒன்றாகக் கலக்க வைக்கும் முயற்சி என்றும் இந்தத் தொகுப்பை சொல்லலாம். வாசிக்கும் ஒவ்வொருவரும் விநியோகத்திற்கு உதவி செய்து பொருளாதார நஷ்டத்தைக் குறைக்க உதவிசெய்ய வேண்டும் என்று முன்னுரையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நகுலன்.

நல்ல நூல்களுக்கு வழக்கமாக ஆசிரியர் இறந்து இருபது வருடங்கள் கழித்து பெருவாரியான வரவேற்பைத் தரும் தமிழ்வாசகர்கள் இந்த வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காமல் நகுலனுக்கு நல்ல நட்டத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

நகுலன் விமர்சகராக:

நகுலனின் விமர்சனம் சங்க இலக்கியத்தில் ஆரம்பித்து, சமீபத்தில் வெளிவந்த கோணங்கியின் பாழி வரை போகிறது. எண்பது வயதில் இவர் பாழிக்கு செய்த விமர்சனம் “ஒரு அத்தியாயம் படித்து விட்டேன். யாராவது இந்த நூலை எப்படிப் படிப்பது என்று சொல்ல முடியுமா?”

நகுலனின் கட்டுரைகள் என்ற பெயரில் காவ்யா பதிப்பகம் கொண்டு வந்த தொகுப்பு, நகுலனை ஒரு விமர்சகராக அடையாளம் காட்டும். ஐங்குறு நூறிலிருந்து அழகியசிங்கர் வரை தமிழின் முக்கிய கவிஞர்கள் பலரைக் குறித்த முப்பது கட்டுரைகள். ஒரே பெண் கவிஞராக சுகந்தி சுப்பிரமணியன்.  இரா.மீனாட்சி, இவரது தங்கை திரிசடை போன்றவர்களின் நூல்களே அறுபத்தெட்டில் வரவில்லை, ஆனால் ஆண்களில் இவருடன் எழுத்துவில் எழுதிய சி.மணியே இதில் இல்லை. தமிழில் விமர்சனம் என்று வரும்பொழுது Halo effect இல்லாது ஒருவருமில்லை.

நாவல்கள் குறித்து ஒன்பது கட்டுரைகள். யாருக்குமே தெரியாத வெங்கட்ரமணியின் நாவல்களை இழுத்து வந்து விமர்சனம் செய்கிறார். அறுபத்தெட்டுக்குள் தி.ஜாவின் ஏழு நாவல்கள் வெளியாகிவிட்டன. கண்ணில் ஈரப்பஞ்சை ஒற்றி, அகலவிரித்து நூல் முழுதும் பார்த்தாலும் தி.ஜாவின் நாவல்கள் குறித்து எதுவும் இல்லை. பின்னால் ஒரு கட்டுரையில் தி.ஜாவின் உதயசூரியன் நூல் குறித்த கட்டுரையில் ஆசிரியர் அறிமுகத்தில் மலர்மஞ்சம் குறுநாவல்  என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது குறுநாவல் இல்லை என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். சிறுகதைகள் விமர்சனப்பகுதியில் போகிற போக்கில், புதுமைப்பித்தனை முதல் ஸ்தானத்திற்கு உரியவர் என்கிறார்கள், ஆனால் வ.வே.சு ஐயரும் நன்றாக எழுதியிருக்கிறார் என்பது போல் ஏதோ சொல்கிறார். வீர.வேலுச்சாமி, சுப்ரபாரதி மணியன் குறித்தெல்லாம் கட்டுரை எழுதியிருப்பவர் புதுமைப்பித்தனையோ, கு.ப.ராவையோ பற்றித் தனியாக எழுதிய கட்டுரை இந்தத் தொகுப்பில் இல்லை, எழுதியதாகவும் என்னளவில் தெரியவில்லை. பொதுக் கட்டுரைகளாக அடூர் கோபாலகிருஷ்ணன், க.நா.சு உட்பட பதினோரு கட்டுரைகள் இந்தத் தொகுப்பில். நகுலன் இந்நூலில் ஓரிடத்தில் ரசனையும் அலசலும் சேர்ந்ததே விமர்சனம் என்கிறார்.

ஆனால் இதில் உள்ள எல்லா விமர்சனங்களுமே மேலோட்டமாக இருக்கின்றன. புத்தம் வீடு நல்ல நாவல் என்று தெரிபவருக்கு அதை விட பலமடங்கு சிறந்த, மோகமுள், அம்மா வந்தாள் குறித்துத் தெரியாமலா இருக்கும்! நீலபத்மநாபனின் மாஸ்டர்பீஸ்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் இரண்டும் இந்த நூலுக்குப் பிறகே வெளிவந்தன. எனவே எங்கிருந்து தூசிதட்டிக் கொண்டு வந்தார் தெரியவில்லை, பாவம் செய்யாதவர்கள், கூண்டுக்குள் பட்சிகள் என்ற இரண்டு நாவல்களுக்குத் தனித்தனி கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விமர்சகராக நகுலன் பாஸ்மார்க் வாங்கவில்லை, கண்டிப்பான வாத்தியார் இவருக்கு ஒற்றைப்படையில் ஏதாவது மதிப்பெண் தரக்கூடும்.

நகுலன் மொழிபெயர்ப்பாளராக:

நகுலன் ஆங்கிலத்தில் இருந்தும் மலையாளத்தில் இருந்தும் சிலபடைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். அவை எல்லாம் தனி நூலாக வந்ததாக எனக்குத் தெரியவில்லை. இப்போது எல்லோருக்கும் கிடைப்பது அவர் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த இரண்டு சிறுகதைகள்.  இரண்டு கதைகளையுமே 1964-ல் இலக்கிய வட்டத்திற்காக மொழிபெயர்த்திருக்கிறார். மாலில்லின் முதல் கதை மௌனி கதையைப் போன்ற சாயல். எட்வர்ட் ஆண்டர்சனின் கதை, குடியில் உளறுவதையும், குழந்தை அதை அப்படியே Literal value-வில் எடுத்துக் கொள்வதைப் பற்றியுமான கதை. இரண்டு கதைகளுமே நேர்க்கோட்டில் பயணம் செய்யும் கதைகள் அல்ல. கதையம்சமே இல்லாத கதைகள். நகுலனின் மொழிபெயர்ப்பு திருத்தமாக தமிழில் படிக்க ஏதுவாக இருக்கின்றது.

நகுலன் சிறுகதையாளராக:

காவ்யா வெளியீடான நகுலன் கதைகள் தொகுப்பில், ஐந்து குறுநாவல்களும், முப்பத்தொரு சிறுகதைகளும், இரண்டு மொழிபெயர்ப்புக் கதைகளும் அடங்கியுள்ளது. குறுநாவல்களுக்கும், நாவல்களுக்கும் பக்க அளவில் மட்டுமே வித்தியாசம். “சுசிலா மனதின் பைத்திய நிழல்”.  “மனதை தூர எறிந்துவிட்டு ஒரு நாற்காலி போல, ஒரு மேசை போல, ஒரு புஸ்தகம் போல ஏகாக்ர நிலையில் இருக்க முடியுமா?’  நகுலனின் தத்துவார்த்தம் பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியது. இவர் எழுத்தை யாரும் படிக்கவில்லை என்ற ஆதங்கம் இவர் உள்மனதில் இருந்திருக்கக்கூடும். ஆனால் அது சுயபச்சாதாபமாக மாறி எழுத்திற்கு எந்த இடையூறும் செய்யவில்லை. யாத்திரை அம்மாவின் கதை. ரோகிகள் நோயாளியின் கதை. நிழல்கள் நவீனனின் நண்பன் சாரதியின் கதை. மரணவிசாரம், சில அத்தியாயங்கள். மஞ்சள் நிறப்பூனை நனவோடை யுத்தியில் சிதறிய சிந்தனைக்கோர்வை.

நகுலனின் கவிதைகள், நாவல்கள் பேசப்பட்ட அளவிற்கு அவரது சிறுகதைகள் பேசப்படவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதுமே உண்டு. நினைவிலிருக்கும் எல்லாக் கதைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. நவீனன் சுசிலாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டும் விடுபட்டுள்ளது. முதல் கதை சாதனை முதன்முறை படித்த போது பிரமிக்க வைத்த கதை. 1959-ல் எழுத்துவில் வந்தது. தான் பார்த்த சம்பவத்தின் பெண்ணை சிறுவயதுப் பையனாக மாற்றி எழுதப்பட்ட கதை. இது உட்பட தமிழின் சிறந்த சிறுகதைகள் வரிசையில் இவர் கதைகள் சிலவும் இடம்பெறும். ஒரு ராத்தல் இறைச்சி சிறுகதை நாயைப் பற்றி பேசுவதைப் போல தோற்றமளித்தாலும் அது சொல்லவருவது காரியத்திற்குக் கால் பிடிக்கும் மனிதர்கள் குறித்து. கத்தரி கதை 1970-ல் வந்தது.  வறுமையின் நிறம் சிவப்பு, சிகப்பு ரோஜாக்கள் இரண்டு படங்களும் இந்தக்கதையை நினைவுறுத்தும். இதில் இருக்கும் முப்பத்தொரு சிறுகதைகளுமே வித்தியாசமானவை. காலத்திற்கு முந்தியவை. மூன்று குறுங்கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. 1972-ல் எழுதப்பட்ட இந்த குறுங்கதை இன்றைய உலகக் குறுங்கதைகளின் இலக்கணத்திற்கு கச்சிதமாய்ப் பொருந்துவதைப் பாருங்கள்.

“ஆஸ்பத்திரி

அறையில் அவன்

ரணசிகிச்சை செய்து கிடத்தியிருந்தார்கள்.

நான்கு மணிநேரம் கழித்து அவன் தன்னருகில் யாரோ நிற்பதாக ஒரு போதம் தட்டி விழித்துப் பார்த்தான்.

யாரும் இல்லை. மறுபடியும் தூங்கி விட்டான்

அவ்விருவரும் வெளியில் வந்தனர்.

முதல்வன்: ஏன்?

மற்றவன்: இன்னும் சமயம் ஆகவில்லை.”

நகுலன் நாவலாசிரியராக:

என் வரையில் நகுலனின் உரைநடை அவர் கவிதைகளை விட நெருக்கம். பல்வேறு இடங்களில் அவர் எழுதியவற்றை நினைவு கூர்ந்தால், அவர் வேண்டுமென்றே புரியாமல் எழுதுவதில்லை. அவருக்கு இயக்கங்களில், இஸங்களில் நம்பிக்கையில்லை. அனுபவத்தை எழுத்தாக மொழிபெயர்ப்பதே அவரது உரைநடை. நினைவுப் பாதை நாவலில் அவர் எழுதியது.

“நாவலில் கதை முக்கியமில்லை. பாத்திரம் முக்கியமில்லை. சமூகச்சித்திரம் முக்கியமில்லை. பின் என்ன தான் முக்கியம்? ஒருவேளை வார்த்தைகள்? ஒருவேளை மனதில் அழியாமல் நிற்கும்; அணுக அணுக அகன்று செல்லும் அனுபவத்தின் அதீத இயல்புகள்”.

வார்த்தைகளால் வசீகரிக்கப்பட்டதை எழுத்தில் கொண்டு வரத்தீராத முயற்சியே நகுலனின் நாவல்கள். பிரக்ஞைக்கும் அபிரக்ஞைக்கும் இடையே ஒரு வெளியை உருவாக்கிக் கொண்டு அதில் நித்திரையின்றி உலவும் ஒரு மனிதனின் எழுத்துக்கள் இந்த நாவல்கள் என்றும் சொல்லலாம். Virginia Woolf-ன் பாதிப்பு நகுலனுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஒருவேளை காஃப்காவின் பாதிப்பில் வாக்குமூலம் நாவலை எழுதியிருக்கக்கூடும்.

நகுலன் தன்னுடைய மற்றும் கேள்விப்பட்ட அனுபவங்கள், படித்த தத்துவங்கள், மேலைநாட்டு இலக்கியத்தின் போக்குகள், கதையம்சம் இல்லாக் கதைகள் எல்லாவற்றையும் கலவையாகக் கலந்து எழுதும் பொழுது எல்லா நாவல்களுமே ஒரே நாவலின் வேறுவேறு பக்கங்கள் போல் பிரமையை ஏற்படுத்தக்கூடும். ஆனால் நினைவுப்பாதை, தீராத உரையாடல் மூலம் தன்னை அறியும் முயற்சி. வாக்குமூலம் ஒரு Weird Law-வை ஒட்டிய ஆத்மவிசாரம், நாய்கள் நாவலில் நாய் தத்துவக்குறியீடு, தர்மனுடன் கடைசியில் பயணித்தது நாய் மட்டுமே. இந்த நாவலில் மட்டுமல்ல, எல்லா நாவல்களிலுமே நகுலன் நாயைப் பற்றி எழுதாமல் இருந்ததில்லை. நவீனனின் டைரி, நினைவுப்பாதையின் தொடர்ச்சி.

நகுலன் எழுத்து மேலை நாடோ அல்லது கீழைநாடோ எந்த எழுத்தாளரின் சாயலும் இல்லாதது. நினைவுப்பாதையில் ஒரு வரி வரும்.  “எழுத ஒன்றுமில்லை; எழுத முடியவில்லை; அதனால் எழுதிக் கொண்டிருக்கிறேன்”. நம்பாதீர்கள் நகுலனை. அவ்வளவு எளிதானவர் அல்ல அவர். முழுமையாக நகுலனை வாசிக்க விரும்புபவர்களுக்கு கீழ்கண்ட நூல்களை பரிந்துரை செய்கிறேன். அநேகமாக காவ்யா பதிப்பகத்தின் வெளியீடுகள். ஒவ்வொரு நூலாக அலைந்து திரிந்து சேர்த்தது எல்லாம் இப்போது மொத்தமாக, ஒரே நூலாக………

இன்றைய தலைமுறை எல்லாவிதத்திலும் அதிர்ஷ்டக்காரர்கள்.

  1. நகுலன் நாவல்கள்- (எட்டு நாவல்கள்) – காவ்யா
  2. நகுலன் கதைகள் – காவ்யா
  3. நகுலன் கவிதைகள் – காவ்யா
  4. நகுலன் இலக்கியத்தடம் – காவ்யா
  5. நகுலன் கட்டுரைகள் – காவ்யா
  6. 6.குருஷேத்திரம் (விருட்சம் பதிப்பகம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.