நகுலனின் விலகல் கண்ணோட்டம்

குலன் எப்பொழுதும் தன்னிலை சார்ந்த மொழியிலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் தன்னிலிருந்து விலகிய ஒரு அழகியல் தூரத்தை தன்னுடைய எழுத்தில் எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதே நகுலனுடைய கலையின் வசீகரம் என்று தோன்றுகிறது. ரோகிகள் நாவல் இதற்குச் சரியான உதாரணம். வலி, வேதனை, வாழ்க்கை பற்றிய பயம், மனிதர்கள் மீது வெறுப்பு, தூக்கமின்மை ஆகியவற்றால் சூழப்பட்ட நோயாளிகளின் நடுவே தன்னையும் ஒருவனாக இருத்திக்கொண்டு உணர்ச்சிகளில் ஆழ்ந்துவிடாமல் சலனமின்றி எல்லாவற்றையும் இயல்பாகப் பார்க்கக்கூடிய ஒரு பார்வை வாழ்க்கை மனித உடலைச் சார்ந்திருக்கிறது என்ற நிதர்சனம் – காலத்துக்கும் வேதனைக்கும் இடையில் உள்ள உறவு பற்றிய குழப்பம் இவைதான் நவீனன். உள்ளத்தின் வேதனை உடனடியாக வேளை வரும்போதெல்லாம் நின்று அதிரும். அது சாசுவதம். ஆனால் அந்த உள்ளத்தின் உருக்கூட உடல் வேதனையின் ஆக்கிரமிப்பில் சுவடு தெரியாமல் ஏன் போய்விடுகிறது? ஆஸ்பத்திரியில் நிகழும் தினசரி மரணம், தினசரி ஜனனம், ஊழல், காமம் எல்லாம் என்றென்றும் ஒன்றுதானா? மேற்கே மனிதன் அடிப்படைக் கேள்விகளுக்கு இன்னும் விடை தேடிக்கொண்டிருக்கிறான். ஏகப்பிரம்மத்தில் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லிக்கொண்டு தன் வழி சென்றுகொண்டிருக்கிறான் இந்த மண்ணில் வாழும் பிரஜை. இவை நாவலின் எண்ண ஓட்டங்கள்.

இன்னும் நவீனன் சொல்கிறான் வாழ்க்கையில் இல்லாதது ஒன்றுமில்லை. அதைப்போல கற்பனை என்ற பெயரில் உள்ளீடு இல்லாத ஒன்றையும் நான் கூடிய அளவில் என் எழுத்தில் புகாதபடி காத்துவந்தேன் என்று நினைக்கிறேன். வாழ்வில் உச்சகட்டங்கள் நாம் நினைப்பது மாதிரி இல்லை. அநேகமாக எந்த மனிதன் வாழ்விலும் உச்சகட்டங்கள் அவன் பிறப்பதும் இறப்பதும்தான். ஆனால் இடையில் தான் வாழ்வு சலிக்கிறது. இந்தச் சலனத்தைத்தான் ஒரு எழுத்தாளன் சிந்திக்கிறான். தத்துவ ஞானி தன் அடிப்படை ஸ்தானத்திலிருந்து நகராமல் எல்லாவற்றையும் பாகுபாடு செய்கிறான். கலைஞன் ஸ்தானத்தை மாற்றி விதவிதமாகப் பாகுபாடு செய்கிறான். ஒன்றில் ஒன்று இணைந்திருப்பதைக் காட்டுகிறான்.

நகுலனுடைய கவிதைகளில் இந்த தன்மை இன்னும் சிறப்பாக வெளிப்படுகிறது. அவர் குறிப்பிடும் தனிமை என்பது கூட அவருடைய தனிமையாக இல்லாமல் அவர் தேர்ந்தெடுத்த தனிமையாக இருக்கிறது.

தனியாக இருக்கத்

தெரியாத இயலாத

ஒருவனும் ஒரு எழுத்தாளனாக

இருக்க முடியாது.

என்ற அவரது வரிகள் அவருக்கான மனிதர்கள் உடனிருக்கும்போதும், அவரது வீடு முற்றம் எங்கும் நிரம்பி வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இங்கு நாம் வரும்போதும்

போகும்போதும்

தனியாகத்தான்

வருகிறோம் போகிறோம்

அப்படியென்றால்

ரகு

யாருக்கு யார் துணை?

நாம்

என்னதான்

செய்துவிட்டோம்?

 

என்று யாரும் துணையற்ற நிலையைப் பாடும் நகுலன்,

இடம்

காலம்

ருசி – அருசி

கனவுகள், மயக்கங்கள், லக்ஷியங்கள்

எல்லாம்தான் நம்மை

பிரிக்கின்றன

என்றாலும்

என்ன?

என்று எங்கும் நிறைந்துள்ள இடைவெளிகளை ஏற்கிறார்.

ஆனால் எவ்வளவு யதார்த்த நிதர்சனங்களின் இடையிலும் அவரை ஏந்திக்கொள்ள ஒரு பெண் வடிவம் உண்டு.

ஒரு வார்த்தை கூட மிஞ்சவில்லை

இருந்த இடத்திலிருந்து நம்மைத் திரும்பி

அழைத்துச் செல்ல

ஏதொரு உருவமும் சாவின் வேகத்திலிருந்து

நம்மை விடுவிக்க இயலாது

ஏதொரு உருவமும் நடந்ததை நாம்

விரும்பும் வண்ணம் திரும்பவும்

உருவாக்க முடியாது

என்றாலும் இந்தக் கவிதையின்

சாவதானமான நினைவில்

உனது தோள்

திரும்பி என்னைப் பிடித்து இழுத்து இந்த

உலகிற்குத் திரும்ப வரச் செய்கிறது

உனது மென்மையான உருக்கொண்ட கைகள்

என்னை அள்ளி எடுத்து.

 

அதே போல்

 

ஆண்டாண்டு தோறும்

தோண்டி எடுத்தாலும்

இதே கதை

தான்

சித்தன் கண்டதும்

பித்தன் சென்றதும்

இதே வழிதான்

பாதை மாறிப் பிரிந்த போதும்.

 

என்று சித்தர் மனநிலையை நகுலன் பிரதிபலித்தாலும்

 

கண்முன்

இளங்காரிகை

ஒருத்தி முதல்பேற்றை

மாரணைத்து வழிசெல்லக்

கண்ட மனம் குதூகலிக்கும்

 

என்று மலர்ச்சியின் புதிய தோற்றங்களில் மகிழ்கிறார்

அத்துடன் அவை எண்ணற்ற சந்திப்புகளுக்கும், வடிவச் சிதறல்களுக்கும் இடமளிப்பதையும் எதிர்கொள்கிறார்.

 

நேற்றுப்

பிற்பகல்

4.30

சுசீலா

வந்திருந்தாள்

கறுப்புப்

புள்ளிகள்

தாங்கிய

சிவப்புப் புடவை

வெள்ளை ரவிக்கை

அதே

விந்தை புன்முறுவல்

உன் கண் காண

வந்திருக்கிறேன்

போதுமா

என்று சொல்லி

விட்டுச் சென்றாள்

என் கண்முன்

நீல வெள்ளை

வளையங்கள்

மிதந்தன

என்று அவர் கண் காணவென்று வண்ண பிம்பங்களும், பிம்பச் சிதறல்களும் என்றும் உண்டு.

சுசீலா அவருடைய கவிதைகளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தாலும், நகுலன் அவள் குறித்து ஒரு காதலற்ற மொழியையே பயன்படுத்துகிறார். யதார்த்த உலகை முழுக்க கொண்டாடுபவராகவும் இல்லாமல், அதை நிராகரிப்பவராகவும் இல்லாமல் ஒரு பௌதிகம் தாண்டிய அன்பு நீரோட்டத்தைப் பிரதிபலிப்பவராக நகுலன் இருக்கிறார்.

நாம் இருப்பதற்கென்றே வருகிறோம்

இல்லாமல் போகிறோம்

என்ற வரிகளில் இருப்பைத் தேடும்போது இன்மை அகப்படுவதை, ஒரு வித நிறமற்ற வெறுமையை தனக்கே உரிய சொல் கட்டுமானத்துடன் முன் நிறுத்துகிறார் (யுவன் சந்திரசேகர் தொகுப்பு)

யாருமில்லாத பிரதேசத்தில்

என்ன நடந்து கொண்டிருக்கிறது

எல்லாம்

என்ற வரிகள் மூலம் எல்லாம் நிறைந்திருக்கும் யாருமற்ற இடத்தில் தன்னை இருத்திக்கொள்ளும் நகுலன் தமிழின் தனித்துவம் மிக்க சொல் கட்டுமானமும், அன்புப் பிரவாகமும் நிறைந்த ஒரு கவிஞராக அடையாளம் காணப்படுகிறார்.

 

 

Previous articleநகுலனின் பலமுகங்கள்
Next articleதாயுமானவர் இலக்கியத்திறனும் தத்துவ தரிசனமும்
Avatar
வெளி ரங்கராஜன் என தமிழ் இலக்கிய வட்டாரங்களில் அறியப்படும் இவரது இயற்பெயர் ரங்கராஜன். இலக்கியம், நாடகம், நிகழ்கலைகள் குறித்த ஆழ்ந்த ஈடுபாடுகளுடன் அவைகளுக்கு இடையிலான ஊடாட்டம் குறித்த உரையாடல்களை தமிழில் முன்னெடுத்து வருபவர். தமிழில் நாடக இலக்கியங்களை உருவாக்கவும், நாடகச் சிந்தனைகளை முன்னெடுக்கவும் "வெளி" என்ற நாடக இதழை 1990இல் தொடங்கி 10 ஆண்டுகள் நடத்தியவர். புதிய நாடகப் பிரதிகள், நாடகக் கோட்பாடுகள் குறித்த விவாதங்கள், உலக நாடக இயக்கம் என தமிழில் செறிவான நாடகச் செயல்பாட்டிற்கான களமாகவும் ஆவணமாகவும் வெளி இதழ் பயன்பட்டது.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments