நெட்டுயிர்ப்பு-ஹேமி கிருஷ்


செம்பழுப்பு நிற ரோமத்தில் பஞ்சு போலிருந்த அந்த சின்னஞ்சிறு பூனைக்கு அந்த இடம் பழகிக்கொள்ளக் கடினமாக இருந்தது. ஜன்னலினருகே உடுக்கை வடிவ கூடை நாற்காலியில் சிறு மெத்தை இருக்கை போடப்பட்டு அதில் அமர்த்தப்பட்டிருந்தது.  இது என்னமோ போலிருந்தது சௌகரியப்படவில்லை. முன்பிருந்த வீட்டில் அதற்கு சர்வ சுதந்திரமிருந்தது. வீடு முழுக்க சிறுவர்கள் ஓடிக் கொண்டேயிருப்பார்கள். திரும்புமிடமெல்லாம் ஆட்கள் இருந்தனர்..  தூக்கிக் கொள்ள பிள்ளைகள் தங்களின் வாய்ப்பிற்காகக் காத்திருந்தனர். போதாததற்கு அக்கம்பக்க பிள்ளைகள் வேறு கூடி தங்களுடைய நேரம் பகிர்ந்தார்கள். நறுமணம் கமழும் பான்ஸ் பவுடரை உடலெல்லாம் பூசிவிட்டுக் காலில் ஒரு சலங்கை பதிந்த கயிற்றினை கட்டி விட்டார்கள்.

 

“சக்கரைக் கட்டி,  மொசக் குட்டி, மொச்சைக்கொட்டை” என விதவிதமாக அதனை அழைக்கத் தொடங்கினார்கள். இருந்தாலும் நிரந்தரமாக மீனு என அழைத்தார்கள். யாராவது மீனு என அழைத்தால்., மியாவ் என தன் பதிலைத் தருவது  வழக்கமாக வைத்திருந்தது. இரவில் அந்த பிள்ளைகளருகேயே சிறு துண்டை மெத்தை போலாக்கி படுக்க வைத்தார்கள். யார் அதனருகே படுப்பது என சண்டையிட்டு, பின் ஒவ்வொரு கிழமைக்கும் ஒருவரென அட்டவணை தயாரித்து படுத்தார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு வாசனை இருந்தது. ஒருவனுக்கு அன்றிரவு சாப்பிடும் தயிர் வாசனை, இன்னொருவனிடம் மீன்வாசனை, ஒரு சின்னஞ்சிறு பாப்பாவிடம் பால் வாசனை. அந்த பால் வாசம் வரும் பாப்பாவினருகே தூங்க மிகவும் விருப்பமாக இருந்தது மீனுவிற்கு.  எப்போதும் யாருடைய ஸ்பரிசத்திலேயே, அரவணைப்பிலேயே இருந்தது. ஒரு நாள் திடீரென ஒரு ஆட்டோவில் பயணப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்த பிள்ளைகள் ஆட்டோவைப் போக விடாமல் தடுத்து அழுதார்கள். மீனுவிற்குமே போக விருப்பமில்லாமல் கத்திக்கொண்டே வந்தது.

 

மீனுவை அழைத்துக் கொண்டு வந்த வயதான பருத்த பெண்மணி இடதுகையில் அதனை அணைத்தவாறு இந்த வீட்டிற்குள் இறங்கினாள்  இந்த வீடு பெரிய வீடு. . தரை வழவழப்பாகவும் சில்லிட்டும் இருந்தது. விரோச்சென்றிருந்தது. எவருமில்லை. ஒரு சப்தமில்லை. காற்று கப்பென மீனுவின் காதை அடைத்தது. கொட்டாவி விட்டுச் சரி செய்து கொண்டது

 

வீட்டுக் கூடத்தின் ஓரத்தில் மீனு அமர்ந்துகொண்டது. அந்த இடத்தை விட்டு நகரவில்லை.

அதே பழைய வீடென்றால், சமையலறை, கூடம், அறைகள், கூடத்தில் போட்டிருக்கும் தறி மெஷின், முன்வாசலருகே தெருவில் போடப்பட்டிருக்கும் சாயமேற்றிய பாவு நூல் பக்கம், ஓரமாய் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள் என எல்லா இடங்களிலும் போய் அமர்ந்து கொள்ளும். தறி மெஷினின் சப்தம் மீனுவுக்கு மிகவும் பிடிக்கும்.  ஒருவர் காலையும் கையையும் ஆட்ட, “தடக் தடக்”கென இயந்திரம் ஓடும் போது மீனு அவரின் கையையும் காலையும் மாறி மாறி பார்ப்பதும், அவரின் காலை பிடிப்பதற்கு ஓடுவதுமாய் விளையாடும்.  இங்கே எப்படி இருக்கப் போகிறோம் என மீனுவின் மனதில் கவலை அப்பிக் கொண்டது. சோகமாய் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டது.

 

“புது இடமில்ல. அதான் இதுக்குக் கொஞ்சம் பயம். போகப் போக சரியாகிடும்” என அந்தப் பெண்மணி சொன்னாள்.

 

யாரிடம் சொன்னாள் என மீனு சுற்றும் முற்றும் பார்த்தது. அந்த வீட்டில் தன்னையும், இந்த பெண்மணி தவிர யாருமில்லை.வேறு யாரிடம் பேசுகிறாளென மீனு குழம்பியது.  அருகில் வந்து மீனுவிற்கு ஒரு கிண்ணத்தில் பாலை வைத்தாள். வைத்து விட்டு கையை இடுப்பில் வைத்தபடி நின்றுகொண்டு பார்த்தாள்.

 

மீனு அவரை நேராகப் பார்த்தது. பருத்த சரீரத்தின் பாரத்தைத் தாங்க முடியாத கால்களுக்கு முட்டுக் கொடுப்பது போல் இடுப்பைச் சாய்த்து வைத்துக் கொண்டிருந்தாள். முகத்தில் வலி தெரிந்தது. குடிப்பியா மாட்டியா? என்பது போல் அவள் பார்த்தாள்.

மீனு வேறு பக்கம் முகத்தைத் திருப்பியதும், முனகியபடியே இடுப்பைச் சாய்த்து சாய்த்து நடந்து கூடத்திலிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள். டீபாயில் இருக்கும் ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியில் ஏதோ ஒரு தொடரைப் பார்த்தாள். சில நிமிடங்களில் ஒரு காட்சியில் ஒரு பெண் வீரவசனம் பேச, இன்னொரு பெண் அழுது கொண்டிருந்தாள். மீனுவும் அந்த பெண் எதற்கு அழுகிறாள் எனக் கவனித்தது. விஷயம் விளங்கவில்லை.

 

பழைய வீட்டுப் பிள்ளைகள் ஞாபகம் வந்தது. அந்தப் பிள்ளைகள் ஓயாமல் கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பார்கள். காலையிலிருந்து இரவு அவர்கள் தூங்கும் வரை அதுவே ஓடும். மீனுவை மடியில் அமர்த்தி ” நீ வர்ற பாரு, நீ வர்ற பாரு” என ஒரு பூனை கார்ட்டூன் வரும் போதெல்லாம் குதூகலிப்பார்கள். அந்தப் பெரிய பூனை ஒரு எலியைத் துரத்திக் கொண்டு ஓடுவதும், அந்த எலிக்குட்டி போக்கு காண்பித்து அங்குமிங்கும் தப்பிப்பதாகவும் காட்சிகள் நீளும். மீனுவும் அதனை இமைக்காமல் பார்க்கும்.

 

திடீரென அந்த பருத்த பெண்மணி அழ ஆரம்பித்தாள். ” நாசமா போன நாய்ங்க.. ஒருத்தனாவது மாமியார மருமக எத்தனை கொடுமைப் படுத்தறான்னு எடுக்கறானுங்களா.. இப்படிக் காமிச்சு காமிச்சே மாமியார ஆகாதவளாக்குறானுங்க.. கொள்ளையில போக ” எனச் சொல்லி மறுபடியும் கண்ணீர் வழிய அழுதாள்.

 

மீனுவுக்குப் பயம் வந்து பாலைக் குடிக்க ஆரம்பித்தது. லபக் லபக் என குடிப்பதைப் பார்த்த அந்த பெண்மணி அழுவதை நிறுத்தி டிவி பார்த்தாள். ஏலக்காய் கலந்த அந்தப் பாலின் சுவை மீனுவின் நாக்கிலேயே தங்கியிருந்தது. அவ்வப்போது நாக்கை சுழற்றியபடி படுத்துறங்கிப் போனது.

 

 

மறுநாள் காலை இந்த சாலையைப் பார்த்த அறையின் சன்னலருகே ஒரு உடுக்கை போன்ற கூடை நாற்காலியில் சிறு மெத்தையை வைத்து அதில் அமர வைத்தாள். கொஞ்சம் உயரமாக இருந்ததால் குதிக்க வரவில்லை.  சற்று அருகிலேயே அந்தப் பெண்மணியின் கட்டிலும் இருந்தது . மீனுவிற்கு இந்த உயரமான இருக்கையில் சுதந்திரமாக உலவ முடியவில்லை. காலையிலேயே காலைக்கடனைக் கழிக்க சிறிது நேரம் கொல்லை தோட்டத்தில் உலவ விட்டு , கொஞ்சம் பாலும் கொடுத்து இதில் அமர வைத்துவிட்டுப் போய்விட்டாள். ஒரே இடத்தில் இறங்கவும் முடியாமல், அமரவும் முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது மீனு.

 

வெறிச்சோடியிருக்கும் இந்த வீட்டில் தனிமை, ஏக்கத்தினை மீனு மியாவ் மியாவென வெளிப்படுத்திக்கொண்டே இருந்தது.

” என்ன வேணும் ஆங்க்” என்றபடி அந்த பெண்மணி அவ்வப்போது வந்து தலையைத் தடவிக் கொடுத்தாள். அவளின் குரல் தடிமனாக இருந்தது.

வாய்க்குள்ளாகவே ஏதோ முணுமுணுத்தபடியே இருந்தாள். என்னவென்று மீனு உற்றுக் கேட்க முயன்றது. ஆனால் காதில் விழவில்லை.

 

 

மீண்டும் அவள் சமையலறைக்குத் திரும்பும்போது “கேக்க நாதியத்து படுக்கைல விழுந்து புழுபுண்ணு வராம, படுத்தா எந்திரிக்காத மாதிரி சாவு கொடு ஆண்டவா? என்று அவள் சொல்லியபடி சென்றது காதில் விழுந்தது .

 

மீனு சன்னலின் வழியே வேடிக்கை பார்த்தது. இந்த வீடு போலவே தெருவிலும் ஆட்கள் நடமாட்டமில்லை.

பழைய தெரு அப்படியிருந்ததில்லையே என மீனுவிற்கு மீண்டும் ஏக்கம் சூழ்ந்தது. அங்கு எல்லார் வீட்டிலும் தடக் தடக் என்ற தறி மெஷின் சப்தமொரு இசை போல் கேட்டுக்கொண்டேயிருக்கும். எல்லார் வீட்டு வாசலிலும் பல நிற வண்ணங்களில் பாவு நூல் காய்ந்து கொண்டிருக்கும். மீனு அந்த சிறிய வீதியில் உலவிவிட்டு தன் வீட்டிற்குச் சமர்த்தாய் வரும்.

மீனுவிற்கு அப்போது நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது. ஒருமுறை அப்படித்தான் இரு வீடு தள்ளியிருக்கும் தினேஷ் மீனுவை தன் வீட்டிற்கு அழைத்து வந்து பொட்டு வைத்துவிட்டான். மீனு தினேஷ் வீட்டில் இருப்பதைப் பார்த்த பாபுவிற்கு கோபம் வந்து” ஏண்டா எங்க மீனுக்கு பொட்டு வச்சுவிட்ற. எங்களுக்குத் தெரியாதா? “ என சொல்லி அடித்தான். உடனே இவனும் அடித்தான். இருவரும் அடித்துக் கொள்ள,  மீனு சண்டை வேண்டாமென என கத்தியது. சத்தம் கேட்டு தினேஷ் அம்மா வந்து பாபுவை அடிக்க, பாபுவின் அம்மா வந்து தினேஷின் அம்மாவிடம் சண்டை போட்டு, வீதிவரை சண்டை தொடர்ந்தது. உடனே பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்திரம் போல மீனு வீட்டுப் பிள்ளைகள் அதனை மறைத்து பொத்தி பொத்தி வைத்துக் கொண்டனர். நமக்காக எல்லாரும் இப்படிச் சண்டை போடுகிறார்களே என மீனுவிற்கோ பெருமை பிடிபடவில்லை.

மீனு பழையதை நினைத்து ஒரு நீண்ட பெருமூச்செறிந்தது. வீதியில் ஒரு பெண் கூடையைச் சுமந்தபடி “கீராய் கீராய்” எனக் கூவிக் கொண்டு சென்றாள்.

 

சில வீட்டின் ஜன்னல் கதவுகள் திறந்து பார்த்தன. சில வீட்டுக் கதவுகள் திறந்து கீரையை வாங்கின. மீனு அவர்களைப் பெரிய மனுஷி போல் எட்டிப் பார்த்தது. ஜன்னலை முன்னங்கால்களால் தேய்த்தது. சமையலறையில் மிக்ஸி ஓடும் சப்தமும் பாத்திரங்களின் சப்தமும் கேட்டது. அவ்வப்போது எழும் இந்த திடீர் சப்தங்கள் மீனுவிற்கு அதிர்வையும் நடுக்கத்தையும் தந்தன.

 

பிற்பகலில் எதிர் வீட்டிலிருந்து ஒரு குட்டிப் பெண் தன் வீட்டுத் திண்ணையில் விளையாடிக் கொண்டிருந்தது. மீனுவிற்கு பழைய வீட்டில் பார்த்த பால் வாசனை வரும் பாப்பாவைப் போலவே தெரிய, வாலை ஆட்டியபடி “மியாவ்” என உரக்க அழைத்தது. சப்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்த அந்த சிறுமி

” ஹை பூனைக் குட்டி” என சிறு பற்கள் தெரிய சிரித்தபடி பூனையை நோக்கி வந்தது. மீனு வேகமாய் தனது அன்பை வெளிப்படுத்தியது. ஜன்னலை பிறாண்டியது. மியாவ் மியாவென கத்தியது.

 

அந்த சிறுமியின் அம்மா, குழந்தை எதிர் வீட்டில் இருப்பதைப் பார்த்து வேகமாய் ஓடி வந்து

” புட்டு  இங்க எதுக்கு வர்ற. இந்த பொம்பளையே முசுடுகாரி. இது வளக்கற பூனையை தொடாத. அதுகிட்ட பேச்சு வாங்கவா உன்னை பெத்தேன்” என சொல்லி தூக்கிக் கொண்டாள்.

“ம்மா பூனைட்ட வெளாடிட்டு வர்றேன்..” என குழந்தை சிணுங்கியது. அடம் பிடித்த குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு அந்த அம்மா வீட்டிற்குச் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.

மீனு பாவமாகியது. மீண்டும் அந்த படுக்கையில் படுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது.

வேலைகளை முடித்த பருத்த பெண்மணி மீனுவின் அருகிலிருந்த கட்டிலில் அமர்ந்தாள். மீனுவோடு சேர்ந்து ஜன்னலின் வழியே வெளியே வேடிக்கை பார்த்தாள்.

 

” என்ன சொன்னா.. எதுத்த வீட்டுக்காரி.? எனக்கு கேக்காதுன்னு நினைச்சாளா?  என்ன பண்னேனாம் அவளை ? இவ குடிய கெடுத்தேனா? சொத்த அபகரிச்சேனா? இல்ல அவ வீட்ல நடக்கிறத பத்தி என்ன ஏதுன்னு வம்பு கேட்டிருக்கேனா? ஒரே ஒருதடவை ரோஜாப்பூவை குழந்த பிக்க போகுதேன்னு லேசா அதட்டுனேன். அப்பருந்தே என்ன கொடுமைக்காரினு ஊர் பூரா சொல்லிட்டு திரியறா”

 

மீனு அந்த வீட்டைப் பார்த்தது. பூட்டிய கதவு திறக்கவில்லை. மறுபடியும் அந்த குழந்தை வெளிவருமா என அந்த வீட்டைப் பார்த்துக் கத்தியது. அதன் தொடர் கத்தலில் திட்டுவதை நிறுத்தினாள்.

 

“எப்படில்லாம் அவனை வளத்தேன். ஒரு சுடுசொல் சொல்லிருப்பேனா? படிப்பு வரலைன்னு கூலி வேலைக்கா அனுப்புனேன்? வியாபாரம் அமைச்சு தரல? வந்தவளுக்கு ஒரு குறை வச்சேன்? என்னோட ஆரம், வைரத்தோடு எல்லாத்தையும் வந்தன்னைக்கே அவளுக்குத் தாரை வாத்து கொடுத்தேனே என்னைய பிஞ்ச செருப்பால அடுச்சுக்கனும்..” அவள் குரல் உடைந்தது மெல்ல விசும்பினாள். அப்படியே படுக்கையில் தலைசாய்த்து படுத்துறங்கிப் போனாள். மீனுவும்தான்.

 

மீனுவிற்கு இங்கு வந்து நாட்களானது. சோகமாகத்தான் இருந்தது. தனிமை அதற்கு ஒவ்வாததாக இருந்தது. அவள்  தினமும் கடைக்கு அழைத்துச் செல்வாள். கோவிலுக்குக் கூட்டிச் சென்றாள். ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றாள். கையில் இருக்கும் கைப்பை போல மீனுவை பொத்தி வைத்துக் கொண்டாள்.

 

 

இவளின் புலம்பல்கள் நீண்டது. அவள் தன் கதையைச் சொல்லும்போதெல்லாம் மியாவ் மியாவென ஒத்திசைக்க ஆரம்பித்தது.

 

“உன் பெயரென்ன?” என ஒருமுறை மீனு அவளிடம் கேட்டது. அவள் பதிலே சொல்லவில்லை. அவளிடம் அவளுக்குப் புரிவது போல் எப்படிக் கேட்பது என மீனுவுக்குத் தெரியவில்லை.

 

” வீட்ல பெரியவங்கன்னு மரியாதை வேணாம்? போன்ல, எதுத்தாப்புல எல்லாம் கெழவின்னுதான் சொல்லுவா. ஒரு தடவ இடுப்பொடிஞ்சு படுத்து கெடந்தேன். போதுண்டா சாமி அவகிட்ட பேச்சு வாங்கினது. சப்பாத்திய, தட்டுல நாய்க்கு போடறாப்ல தூக்கி போடுவா, எதுக்காவது அவளை கூப்புட்டாக்கா “இப்பதான கொட்டிகிச்சு, அதுக்குள்ள என்ன வேணுமாம்”னு எரிஞ்சு வுழுவா ஒன்னுக்கு ரெண்டுக்கெல்லாம் போறதுக்கு கூட அவளை கூப்பிட முடியாம நாம்பட்ட அவஸ்தை இருக்கே” என அழுதாள். மீனு அவள் சொல்வதையே கவனித்தது.

 

” அப்ப முடிவெடுத்தேன். கஷ்டப்பட்டாலும் நாம யாரையும் நம்பியிருக்கக் கூடாதுன்னு. இடுப்பு வலி வந்தாலும் பரவாயில்ல. நம்மள பாரமா நினைக்கறவங்க கூட இருக்கவே கூடாது…அவங்கவங்க பொழப்ப அவங்கவங்க பாத்துக்கலாம்னு வெளில போகச் சொல்லிட்டேன். ” இன்னும் பேசிக்கொண்டேயிருந்தாள்.

 

மீனு கவனிக்கத் தொடங்கியதை அறிந்தவுடன் தினமும் அவள் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள். மீனுவும் அவள் பேசுவதை அங்கீகரிப்பது போல் அவளருகே பெரிய மனுஷி போல் அமர்ந்து கொள்கிறது.

அவளுடைய ஓயாத பேச்சொன்று மட்டுமே மீனுவின் தனிமையைப் போக்கியது. அவள் பேசவில்லையென்றால் பழைய வீட்டின் ஏக்கமோ, துக்கமோ பற்றிக் கொள்கிறது.

 

மீனுவுக்கு அந்த பருத்த பெண்மணியின் பெயரைத் தெரிந்துகொள்ள விருப்பமிருந்தது. முன்பிருந்த வீட்டில் பாபு, ராஜா, பப்பு என சிலரின் பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தது போல், பேச்சினூடே அவளுடைய பெயரை ஏதாவது ஒரு தருணத்தில் சொல்வாள் என எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தது.

 

பெரும்பாலான நேரங்களில் ஜன்னலருகேயே மீனு அமர்ந்திருக்கும். எதிர்த்த வீட்டு பாப்பா வெளியே வரும் போது வாலை நிமிர்த்திக் கொண்டு அது தன்னிடம் வருமா என ஆவலுடன் அமர்ந்திருக்கும்.

 

அது தவிர சாலையில் அன்றாடம் செல்லும் கீரைக்காரி, “கிண்கிணி” யென்று சைக்கிள் மணியை அடித்தபடி செல்லும் பால்காரர், குழாய்புட்டு விற்பவர்களைக் கண்டால், அவர்களின் வருகையைப் பதிவு செய்வது போல் மியாவ் என உரக்க அழைப்பது மீனுவிற்கு வாடிக்கையாகிப் போனது.

 

ஒருமுறை  கீரைக்காரி வந்து” ம்ம்மோவ்வ்வ்வ் கீரே” என வாசலில் நின்று கூப்பிட்டாள். பின்பக்கமிருந்த அந்த பருத்த பெண்மணியிடம் மீனு சென்று மியாவ் மியாவ் என்று கத்தியது. அவள் திரும்பிப் பார்த்தவுடன் நேராக வாசல் கதவருகே வந்து நின்று மீண்டும் கத்தியது . எப்போதுமில்லாமல் என்னமோ வந்து சொல்லுதே என சந்தேகத்தில் வாசற்கதவைத் திறந்தவள் ஆச்சரியமாகிப் போனாள்.

” நீ வந்திருக்கேன்னு உள்ள வந்து என்னைக் கூப்பிட்டு சொல்லுது தெரியுமா? என பெருமிதமாய் கீரைக்காரியிடம் சொன்னாள். மீனுவை உச்சிமுகர்ந்து வாரி அணைத்தபடியே அன்று முழுவதுமிருந்தாள். முக்கியமாய் அவள் அழ மறந்திருந்தாள்.

 

அவள் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து, கோலம் போட்டு, காபி டிகாஷன் போடும்போது மீனு சோம்பல் முறிக்கும். மீனுக்கு ஒரு மிடுக்கு வந்துவிட்டிருந்தது. மகாராணி போல் படுக்கையிலிருந்து இறங்கி நேராகச் சமையலறை சென்று ஒரு சப்தம் தரும்.

“வந்துட்டியா? என வீங்கிய கண்களில் கொஞ்சல் ததும்பக் கேட்டபடி, தன் ஒரு கையில் ஆவி பறக்க காபி கோப்பையை வைத்துக்கொண்டு , மறு கையிலிருக்கும் வெதுவெதுப்பான பாலை மீனுவிற்கு கிண்ணத்தில் ஊற்றுவாள் அவள்..

 

மீனு விளையாடுவதற்காக ஒரு சிறிய கூண்டும் அதில் உள்ளே பூனைக்கென விளையாடும் பிரத்யோக பொருட்களும் வாங்கி வைத்தாள். அதனுள் அவள் டிவி பார்க்கும் சமயத்தில் விட்டு விடுகிறாள். அதுவும் மெத்தென இருக்கும் அந்த கூண்டில் உருண்டு புரண்டு விளையாடி உற்சாகமாகிவிடுகிறது.

 

நடக்கும் போது, வீட்டு வேலை செய்யும் போது, மூச்சு வாங்க அவளுடைய கதையை மீனுவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ” வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னதுக்கு சொத்தை பிரிச்சு இப்பவே எழுதிக் கொடுங்கறான். இவனையா அவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு பெத்து ஆளாக்கினேன்?  நான் ஏன் எழுதித் தரனும்? இது என் புருஷனும் நானும் சம்பாரிச்ச வீடு. போடான்னுட்டேன். அந்த அண்ட வந்த நாயி சொல்லுது… இரு கிழவி உனக்கு சோத்துல வெஷம் வச்சு சாவடிக்கறேனா இல்லையானு பாருன்னு…. அப்பவாவது அவனுக்கு ஈவு இரக்கமிருந்ததா ” என் அம்மாவையாடி இப்படி சொல்றன்னு ஒரு வார்த்தை ..ஒரு வார்த்தை சொல்ல தோணுச்சா ?”… ஓஓ வென பாதி வேலையை விட்டு சோபாவில் அமர்ந்து அழுதாள். விளையாடிக் கொண்டிருந்த மீனுவிற்கு பாவமாய் போனது. அவளுக்குக் கேட்கும்படி உரக்கக் கத்தியது. அவள் இன்னும் சத்தங்கொண்டு அழுதாள்.

 

மீனு அந்த கூண்டிலிருந்து வெளிவந்து அவளின் பாதத்தினருகே அமர்ந்து கொண்டது. அழுது அழுது, அமைதியான தருணத்தில் உடைந்த குரலில் ” மாட்டேனே.. சாகற நேரத்துல கூட ஒரு வாய் தண்ணீ கூட கேக்கமாட்டேனே” என்றபடி சமாதானமானாள்.-

 

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த மீனுவிற்கு அந்த வீட்டில் பல நாட்கள் கழித்து ஒலித்த வேறு சில குரல்களைக் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தது.  இறங்கி வெளிவந்து யாரெனப் பார்த்தது. இரு பெண்கள் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

 

“ஓஓ அக்கா! வீட்ல பொழுது போகலைன்னு பூனைய வளர்த்தறீங்க போல” என ஒடிசலாய் உயரமாய் இருந்த ஒரு பெண் கேட்டாள்.

 

” என் கொழுந்தனார் மகனோட வீட்டுப் பக்கத்துல ஒருத்தங்க வீட்ல இருந்துச்சு. வீட்ல எலி புடிக்க வளத்துனாங்களாம். ஆன அவங்கவீட்டு புள்ளைங்க சாப்பிடாம கொள்ளாம இதையே வச்சு சுத்தறாங்கன்னு என்னை எடுத்துட்டு போகச் சொன்னாங்க நானும் இங்க தனியாத்தான இருக்கேன். நமக்கு துணைக்கு இருந்துட்டு போகட்டுமேன்னுதான் எடுத்துட்டு வந்துட்டேன். இருங்கப்பா காபி கொண்டு வர்றேன்” என்றபடி சமையலறைக்குச் சென்றாள்.

 

மீனு அவர்களெதிரே குத்த வைத்து அமர்ந்துகொண்டு அவர்களையே கவனித்தது. இந்த வீட்டிற்கு வந்து பல நாட்கள் கழித்துப் பார்க்கும் வேற்று முகங்கள். அந்த இரு பெண்கள் ஒருவரையொருவர் நமட்டு சிரிப்போடு பார்த்துக் கொண்டனர்.

“வீட்ல பையன் மருமகள தொரத்திட்டு பூனைய துணையா வச்சிருக்கு பாரேன்” என குட்டையான ஒருத்தி ஒடிசலானவளிடம் சன்ன குரலில் சொன்னாள்.

“ம்க்க்ம்ம்.. இதுகிட்ட அந்த பொண்ணு மாட்டிட்டு முழிக்கிறதுக்கு தனியா இருக்கறதுதான் நல்லது” என்றாள் அவள்.

 

அதன் பின் இருவரும் சைகையிலும், சில சங்கேத மொழிகளிலும் பேசிக்கொண்டது மீனுவுக்கு புரியவில்லை. என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமிருந்தது. அதற்குள் அவள் காபியை கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்துவிட்டு மீனுவுக்கு வழக்கமான இடத்தில் பால் வைத்தாள். மீனுவும் போய் குடித்தபடியே அவர்கள் பேசுவதைக் கேட்டது.

 

அவள் உள்ளறையிலிருக்கும் மரபீரோவைத் திறந்து பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். ” இந்தா வச்சுக்கோங்க”

 

“எதுக்குங்கா ?”

 

” பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்க. ஆயிரம் செலவு இருக்கும்.. வச்சுக்கோ வச்சுக்கோ!! என்று சொல்லிவிட்டு அருகே அமர்ந்தாள்

 

”  இந்த வயசுல தனியா இருக்கீங்களே.. மனசுக்கு வருத்தமா இருக்கு. இப்படி தனியா வுட்டுட்டு குமார் போயிட்டானே. அதுவும் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுட்டு…படிக்க வச்சு ஆளாக்குன உங்கள நினைச்சு பாக்கவேணாமா? நீங்க பாவம்கா” என அந்த குட்டையான பெண் வருத்தமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“நல்லா இருந்தா சரிதான் யாரையும் சொல்லி பிரயோசனமில்ல. இப்போதைக்கு எனக்குத் துணை இந்த பூனைதான்” என்று சொன்னாள்.

 

அவர்கள் இருவரும் கிளம்பியதும், அவளின் முகம் மிகவும் வாட்டமாக இருந்ததை மீனு கவனித்தது. அவளுக்கும் தன்னைப் போலவே தனிமை நோய் பீடித்திருப்பதை மீனு உணரத் தொடங்கியது. அவளின் காலருகேயே சுற்றி சுற்றி வருவதைப் பார்த்து, அவள் மீனுவை தனது மடிமீது வைத்துக் கொண்டாள். அவள் சிந்திய இளஞ்சூடான கண்ணீர் மீனுவின் உடலில் பட்டதும் நக்கி துடைத்தது. அவளின் கைகளைப் பிரியமாய் நக்கியபடியே இருந்தது. அவள் பேசவேயில்லை. அழுது கொண்டேயிருந்தாள்.

 

மறுநாள் காலை மீனு எழும்போது வெளிச்சமேறிவிட்டிருந்தது. காபி வாசனையோ வாசல் தெளிக்கும் சப்தமோ தனக்குக் கேட்கவில்லையே என சோம்பலாய் கொட்டாவி விட்டது. அப்போதுதான் கவனித்தது. அவள் இன்னும் படுக்கையிலிருந்து எழவேயில்லை. “மியாவ்” என அழைத்துப் பார்த்தது. கை, கால்கள் விரித்தபடி படுத்திருந்தாள்.

 

தன்னுடைய இருக்கையிலிருந்து அவளின் படுக்கைக்குத் தாவியது. அவளின் கையை நக்கியது. சில்லிட்டு இருந்தது. மியாவென அழைத்தது. அவளிடமிருந்து எந்தச் சலனமுமில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தது. அவள் வயிற்றின் மீதேறியது அவளைச் சுற்றி வந்தது. எந்தவொரு அசைவுமில்லை. சில நிமிடங்கள் கழிந்த தருணத்தில் சின்னஞ்சிறு மீனுவுக்குப் பயம் பற்றிக் கொண்டது. கட்டிலிருந்து இறங்கி கூடம், நடைபாதை என வீட்டிற்குள் சுற்றி வந்து,  வெகு சப்தமாய் கத்திக் கொண்டிருந்தது. மீனுவின் குரல் அந்த வீட்டின் சுவரில் மாறி மாறி எதிரொலித்துக் கொண்டேயிருந்தது


ஹேமி கிருஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.