பிஜாய்ஸ் பிராந்தி

குலனின் சுருதி கவிதைத் தொகுதியைத்தான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கினேன். சுருதி முகப்பு அட்டையில் உள்ள முகத்தின்மீது அமரத் துடிக்கும் அல்லது விடுபட விரும்பும் ஒரு கண்ணாடியின் தத்தளிப்புதான் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. ஒரு வீட்டின் கதவைத் திறந்து உள்ளே ஒவ்வொரு அறையாகப் பயணிப்பதுபோல் இருந்தது “சுருதி“. அதிலும் குடிப்பது பற்றிய கவிதைகள் கனவுகளும் கற்பனைகளும் கடந்து,  ஒரு உள்போதம் கொண்ட அறைகளாகச் சில கவிதைகள். 90களின் கவிஞர்கள் பெரும்பாலும் தங்களைக் குடிப்பதுடன் அடையாளப்படுத்திக்கொள்வதை ஒரு கௌரவமாகவே நினைத்துக்கொண்டார்கள். எங்களிடையில் நகுலன் இந்த விஷயங்களில் அதிலும் லாகிரி விஷயங்களில் ஒரு குருவாக இருந்து வந்திருக்கிறார். இப்போதும் இது இல்லாமல் இல்லை.

நகுலன் வீட்டிற்குப்போகும் முன், அவர் வீட்டிற்குச் சமீபத்தில் உள்ள அம்பலமுக்குவில் ஒரு கடையில் பீஜாய்ஸ் பிராந்தியை வாங்கிக்கொண்டு அவர் வீட்டை ஒரு சாயுங்கால வேளையில் அடைந்தேன்.  வழக்கான விசாரிப்பு முடிந்தபின், அவரை ரகசியமாக உள்ளே அழைத்துச்சென்று பிராந்தியைக் காட்டினேன். அதை அவர் தொட்டுத் தடவிப் பார்த்துச் சிரித்தார். “புரிகிறதா?“ என்றார்.  புரிகிறது என்றேன் நான்.  பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று உள்ளே செல்வார்.  திரும்பி வரும்போது ஒருசில துளிப் பிராந்தித் திவலைகள் அவர் உதட்டில் மின்னும்.  சிரிப்பார். ஒரு குழந்தையின் கள்ளத்தனம் கொண்ட சிரிப்பு அது.  பிறகு என்னை உள்ளே அழைப்பார்.  திரும்பவும் நாங்கள் நடைக்குக் குழந்தையின் கள்ளத்தனத்துடன் வந்துவிடுவோம். பேசிக்கொண்டிருந்தோம். எங்களிடமிருந்து வெளிவரும் வார்த்தைகள் எங்களுடையதா?  பிராந்தியினுடையாதா? என்ற மயக்கம் இப்பொழுதும் தோன்றுகிறது.

அவர் வீட்டில் உள்ள வாழைமரம், அதைச்சுற்றி விளையாடும் ஒரு மரங்கொத்தி, காக்கைகள், சின்னஞ்சிறு வண்டுகள், பூனை யாவுமே நாங்கள் குடித்தபின்பே பிறந்தவையாகத் தோற்றம் கொண்டுவிடும்.  அவையும் ஒரு பாத்திரங்களாக, நாங்களும் ஒரு பாத்திரங்களாக நிகழும்  மாய விளையாட்டு பீஜாய்ஸ் பிராந்தியின் திவலைகளில் இருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்.   பிராந்தியின் சில மிடறுகள், எங்களை ரூப நிலையில் இருந்து அரூப நிலைக்கு அழைத்துச் சென்றன.  நகுலன் பாஷையில் சொல்வதாக இருந்தால், நீல வெள்ளை வெள்ளை நீல  ஜுவாலைகள் எங்களுக்குள் எரிந்துகொண்டிருந்தன.  நகுலன் மட்டும் மஞ்சள் ஜுவாலையாக ஒளிர்ந்து கொண்டிருந்தார். இடையிடையே அவர் சில கேள்விகளை கேட்டு பதிலும் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார்.  நகுலனின் மஞ்சள்நிற சிரிப்பு என்பது வெகு அழகும் நேர்த்தியும் கொண்ட ருத்ர- நடனம்.

நகுலனைப்  பொறுத்தவரை குடிப்பது, போதையில் இருப்பது என்பது கலகமோ, எதிர் குரலோ அல்ல.  அது ஒரு மூச்சு; அது ஓர் ஆன்மீகம். இன்னும் சொல்லப்போனால் அடிமட்டத்தில் ஆழ்வது; யாருமற்ற பிரதேசத்தில் ஒரு நிழலாகத் திரிவது. இதைத்தான் நான் நகுலனிடம் கற்றுக்கொண்டேன். நாங்கள் குடித்துக் கொண்டிருக்கும்போது,  கண்ணாடிக் குடுவையில் மது இருந்தது.   குடித்து முடித்த பின் மது இல்லை. ஆனால் கண்ணாடிக் குடுவை இருந்தது.   இருப்பும் இன்மையுமாக, ஒரு நிழலாக, ஒரு சாட்சியாகக் கண்ணாடிக் குடுவை நின்றுகொண்டிருந்தது.   அதுவே நகுலன்.    போதைக்கும் அ-போதைக்கும் இடையே வந்து போய்க்கொண்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறு சிட்டு தான் நகுலன்.  அந்தக்  கணத்தில், நகுலனையும் என்னையும் கண்ணாடி குடுவையும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் அந்த மஞ்சள் நிறப் பூனை,  எங்களைப் பற்றி என்ன சொல்லக்கூடும்? உனக்கு யாரை வாசிக்கப் பிடிக்கும் என்று கேட்டார். ‘போர்ஹே’ என்றேன். அவருடைய கதைகளை விட அவருடைய கவிதைகள்தான் எனக்கு மிகவும் பிடித்தமானது என்றேன். உடனே உள்ளே சென்று,  போர்ஹே கவிதைகள்  எடுத்து வந்தார். அதில் சில கவிதைகளை வாசித்தார். போர்ஹேவைப் புரிந்து கொள்ள,  அவருடைய கதைகளை விட அவர் கவிதைகள்தான் பெரிதும் உதவுவதாகக்  கூறினார்.  நான் விடை பெற்று திரும்பும் வேளையில், எனக்கு போர்ஹே  கவிதைகள் தொகுதி தந்தார். (ஒட்டுமொத்த போர்ஹே கவிதைகளை வாசிக்க எடுத்துச்சென்று, கேட்கும் போது காணாமல் போய்விட்டது என்று சொன்ன அந்தத் திருடனின்  ஞாபகம் இப்போது வருகிறது). எதையும் வீழ்த்த  விடுகிற அணங்கின் சிரிப்பை போன்ற நகுலனின் சிரிப்பு,  எப்போதும் ஆறுதல் தருகிறது.

பிஜாய்ஸ்  பிராந்தி, நகுலனின் அடையாளம். அல்லது நகுலன். பிராந்தியின் துளிகள் ஒவ்வொன்றும் நகுலனின்  சிரிப்பு.  நகுலனுடன் பிராந்தியை அருந்துவது, போதையில் மிதப்பது, போதையிலிருந்து தெளிவது, பின்பு போதைக்குத் திரும்பவும் செல்வது என்பது ரூப-அரூப வாழ்வின் நடனம்.

நகுலனுடன்  ஒரு நாள் இருந்திருக்கிறேன். என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும்  பிஜாய்ஸ் பிராந்தியை நகுலனுடன் அருந்தி இருக்கிறேன். இப்போது நகுலன் இல்லை: பிராந்தியும்  இல்லை;  கண்ணாடிக் குடுவையும் இல்லை. நகுலன் கற்றுக்கொடுத்த ‘அடிமட்டத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தனி அனுபவம்’ என்ற வித்தையை இன்னும் நான் மறக்கவில்லை. இப்பொழுதும் இந்த வித்தையை,  ஒர் ஆத்மீக அனுபவமாகவே நான் உள்ளுக்குள் பயின்று கொண்டிருக்கிறேன்.

எப்போதெல்லாம் நான் நகுலனை வாசிக்கிறேனா, அப்பொழுதெல்லாம் பிராந்தியின் போதை, ஒரு நிழலாக எனக்குள் திரிவதை நான் உணர்ந்திருக்கிறேன். எப்பொழுதெல்லாம் நகுலனை வாசித்து முடிக்கிறேனோ அப்பொழுதெல்லாம், அடிமட்டத்தில் ஆழ்ந்து விடுவேன். நகுலன் எழுத்துக்களை வாசிக்கும்போது, அவை பிராந்தியின் திவலைகளாக,  போதையாக மாறுவதை என்னால் உணராமல் இருக்க முடியவில்லை.

 

அனுபந்தம்

 

 நகுலனின்

 பிராந்தி கவிதைகள்

கனல்

தரையில்

தாராளமாகவே

சிதறிச் சென்ற

பிராந்திச் சுழிப்பில்

ஒரு தீக்குச்சியைக்

கிழித்துக் காட்ட

அதன் மீது

அதன் ஒளி பரவ

ஓடிச் சலிக்கும்

வெள்ளை நீல

நீல வெள்ளை

ஜ்வாலைகள்

எவ்வளவு

அழகாக இருக்கின்றன

இங்கு தான்

ருத்ரம்

வெகு நேர்த்தி

கொள்ளும்  போலும்.

 

பிராந்தி

ஒரு

மங்கலான சூழ்நிலை

புகை மண்டிய ஒரு பிரக்ஞை

அசேதனங்கள் மாத்திரம்

ஒரு அந்நியோந்நிய பாவம்

காட்டும் ஒரு நிலை

யாருமில்லாத பிரதேசத்தில்

நான் ஒரு நிழலாகத் திரிகிறேன்

இதிலிருந்து வெளிவராமல் இருக்க

இன்னும் ஆழ வேண்டும்

ஆழ்ந்து கொண்டேஎஎ

போனால்

ஆளே காணாமல்

போய்விடலாம்

என்றுதான் பேச்சு

பரவாயில்லை

என்றுமே

அதிகமாகப் பேசியதில்லை

வெளிமட்டத்தில்

மிதப்பதைவிட

அடிமட்டத்தில்

ஆழ்ந்து கிடப்பது

அது

ஒரு தனி அனுபவம்.

 

எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை

வந்தது ZACK

எப்பொழுதும் போல்

துயிலிலிருந்து  எழுந்தது போன்ற

ஒரு சோர்வு

அவன் முகத்தில்

எப்பொழுதும் அப்படித்தான்

தோல் பையைத் திறந்து

குப்பியை எடுத்ததும்

நான் உள் சென்று

ஐஸ் கொண்டு

வந்ததும்

சரியாகவே இருந்தது

அவன்

ஓவியங்களை நான்

பார்த்திருக்கிறேன்

அவைகளும்

ஒரு குழம்பும் மயக்க நிலையைத்

தான் தெரிவித்தன

வண்ணக் கீறல்கள்

இருட் பிழம்புகள்

தாராளமாகவே

இருவரும் குடித்துவிட்டு

அடிமட்டத்தை

அணுகிக்கொண்டிருந்தோம்

அப்பொழுது

அவன் சொன்னதும் அதை

நான் கேட்டதும்

இன்றும் என் பிரக்ஞையில்

சுழன்றுகொண்டிருக்கிறது

“எல்லாமே

வெகு எளிமையாகத்தான்

இருக்கிறது

ஆனால்

“எல்லாம்” என்பது தான்

என்ன என்று தெரியவில்லை”

இதைச் சொல்லிவிட்டு

அவன் சென்று விட்டான்.

 

இடையில்

 

“ஏன்

இப்படிக் குடிக்கிறீர்கள்?”

என்று கேட்டான்

“ஏன்

இப்படி வாழ்கிறீர்கள்?”

என்று நான் கேட்கவில்லை

உங்கள் வாழ்வுக்கும்

என் சாவுக்கும் இடையில்

வேறொன்று

நிகழ்ந்து

கொண்டிருக்கிறது

 

சுருதி

ஒரு கட்டு

வெற்றிலை

பாக்கு சுண்ணாம்பு

புகையிலை

வாய் கழுவ நீர்

ஃப்ளாஸ்க்

நிறைய ஐஸ்

ஒரு புட்டிப்

பிராந்தி

வத்திப்பெட்டி / ஸிகரெட்

சாம்பல் தட்டு

பேசுவதற்கு நீ

நண்பா

இந்த சாவிலும்

ஒரு சுகம் உண்டு

 

 

Previous articleநகுலன் கவிதைகள்
Next articleநகுலனின் வாக்குமூலம்
Avatar
தமிழ் நவீன கவிதை உலகில் எப்போதும் தனித்த இடம் கொண்ட கவிஞர் ராணிதிலக் 1997 முதல் தமிழ் சிறுபத்திரிகை சூழலில் மிகத் தீவிரமாக இயங்கி வருபவர். 'ஸங்கரகாந்த்', 'தனுஷ்' ஆகிய புனைப் பெயர்களில் சில சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளது. "சப்தரேகை" என்னும் தலைப்பில் கவிதை பற்றிய கட்டுரைகள் தனி நூலாக வெளிவந்துள்ளது. இவரது படைப்புகளுள் சில சிறுகதைகளும் பல கவிதை விமர்சனங்களும் அடங்கும். மணிக்கொடி கால எழுத்தாளர்களான "கரிச்சான்குஞ்சு" மற்றும் "கொனஷ்டை" ஆகியோரின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். தற்போது மேலும் சில மணிக்கொடிகால எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுக்கும் பணியில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.