Saturday, May 28, 2022
Homeபடைப்புகள்கவிதைகள்நகுலன் கவிதைகள்

நகுலன் கவிதைகள்

காத்த பானை

காத்த பானை கொதிக்காது

கரும்பு கசக்காது

வேம்பு இனிக்காது

என்றாலும் என்ன செய்தாலும்

என் மனமே

வந்தபின் போக முடியாது

போனபின் வர முடியாது

என்றாலும் என்ன செய்தாலும்

என்றென்றே சொல்லிச் சலிக்கும்

என் மனமே

ஊமையே உன்மத்த கூத்தனே

வாழ ஒரு வழி

சாக ஒரு மார்க்கம்

சொல்லவல்ல சித்தரைக் காட்டாயோ.

வெட்ட வெளியாகி

பட்ட மரம் போல்

நிற்கும் என் பித்தனே.

 

கடன்பட்டார்

நள்ளிரவிலே

நிர்வாணமாக

நிலைகுலைந்து நிறைசரியாமல்

நிற்கும் ஒரு நங்கை நல்லாளைக்

கண்டு

மனம் மருண்டு மதிவிண்டு

நிற்பவருண்டோ

கூத்தனே.

உன் சாம்பல் மேனி பூச்சும்

சவச்சிரிப்பும் சுடலை நாற்றமும்

சுழித்துப் பொங்கும் நச்சரவும்

என்ன குறித்தன?

என்ன குறித்தன?

 

வேடனடிக்க மாயன் இறந்தான்

இராமனும் செத்தான்

நானிலத்தே

காலக் கனத்தே

நல்லவரும் மாய்ந்து சாய

மண்ணிற் மக்கட் பயிர்சூல் முதிரும்.

 

அது

காதலுக்குப் பின்

தொழிலின் இறுதியில்

உலகைவிட்டுப் பிரிகையில்

சாவுக்கு அப்பால்

முதலுக்கும் முடிவுக்கும்

முன்னும் பின்னும்

முழுவதுமாகப்

பின்னிப் பிணைந்து

நில்லாமல் நிற்பது

இல்லாமல் இருப்பது

தெரியாமல் தெரிவது

சொல்லாமல் சொல்லிக் கொள்வது

எல்லோரும் நினைப்பது

யாவரையும் கடந்தது

புலனுக்குப் புரியாதது

பொருளுக்குச் சிக்காதது

என்றுமே கேள்வியாக

எஞ்சி நிற்பது

அது அதுவே.

 

ஒரு தனிக் கலைஞன்

கவிதை எழுதினேன்; படிக்கத்தான் யாருமில்லை;

நாவல் எழுதி நானே பிரசுரித்தேன்;

வாங்கத்தான் யாருமில்லை;

எனக்கே ஐயம் அரும்ப

பேனாவைத் தலைகீழாகக் கவிழ்த்து

உள்ள மசியைக் களைந்து

வேறு மையூற்றி

புதுக் கவிதைக்குச் சீர் காட்டித் தளை வகுத்து

பாவகை காட்டிப் பழைய ஆதர்சத்தை

நன்றாகப் பாடையில் கட்டி

நால்வர் தோள் கொடுக்க

வீதிதோறும் வீதிதோறும்

“கவிதை! கவிதை வாங்கலையோ கவிதை!”

என்று தொண்டை வறளக் கத்தினேன்.

நேற்றுவரை இலக்கியத்தின் எதிரி

என்று

அற்ப மூளையும் அகன்ற மார்பும்

திரண்ட சிகையும் தாள் வரை

நீண்ட கையும் கொண்டவரை

“ஆ! இவரன்றோ இலக்கிய மேதை”

என ஒரு முறையன்று ஓராயிரம் முறை

நின்று முழங்கினேன்;

தம்பட்டம் அடித்தேன்.

சண்டமாருதம் எனக்கொட்டி முழங்கினேன்.

அவரும் “சபாஷ்! தம்பி” என்று

தோள் கொட்டினார்.

என்றாலும் அவர் அவர்தான்;

நான் நான்தான்.

இப்படித்தான் இன்னும் இருக்கிறது

எங்கேயோ ஒரு பிசகு;

உள்ளதையும் இழந்த பிறகு?

ஏனோ இந்த ஐயம்?

அவரும் விட்டுவிட்டால்?

அதுதான் புரியவில்லை.

 

இவ்வளவு பெரிய

இவ்வளவு பெரிய

வீட்டில்

எனக்கு இடமில்லை.

இவ்வளவு

பெரிய நகரத்தில்

அறிந்த முகம் ஏதுமில்லை.

அறிந்த முகம் கூட

மேற்பூச்சுக் கலைய

அந்நியமாக

உருக்காட்டி

மறைகிறது

என்னுருவம்

கலைய

எவ்வளவு

காலம்

கடந்து செல்ல வேண்டும்

என்று நினைவு வர

“சற்றே நகர்”

என்று ஒரு குரல் கூறும்.

 

வேறு

உலகச் சந்தையில்

ஒரு மனிதன் போனால்

இன்னொருவன்

உனக்கென்று

ஒரு லாபநஷ்டக்

கணக்கிருந்தால்

விஷயம் வேறு.

 

சிலை

கல்லை அடித்துச்

சிலையாக்கி

சில / சிவ ரூபமாக

ருத்ர நடனந் தொடர

கல்லை அடித்து

சிலையாக்கி

சிலை

சிவ ரூபமாக.

 

பார்த்தேன்

என் நாற்காலியில்

இருந்துகொண்டு

ஒரு பிடிபடாத வேளையில்

இதை எழுதிக்கொண்டே

இருந்தவன்

மனம் அசைபோட

அகஸ்மாத்தாகக்

கீழே

நாற்காலி அருகில்

அந்த மஞ்சள் நிறப் பூனை

என்னையே

பார்த்துக்கொண்டிருப்பதைப்

பார்த்தேன்.

 

கலை

மைக் கறை

படியத்துடிக்கும்

வெள்ளைக் காகிதம்

வேண்ட

வரும்.

 

வண்ணாத்திப் பூச்சிகள்

உண்ணூனிப் பிள்ளைக்குக் கண்வலி.

கேசவ மாதவன் ஊரில் இல்லை. சிவனைப்

பற்றித் தகவல் கிடைக்கவில்லை. நவீனன்

விருப்பப்படி அவன் இறந்த பிறகு அவன்

பிரேதத்தை அவன் உற்ற நண்பர்கள்

நீளமாக ஒரு குழி வெட்டி அவனை

அதில் தலைகீழாக நிறுத்தி வைத்து

அடக்கம் செய்துவிட்டார்கள். எங்கும்

அமைதி சூழ்ந்திருக்கிறது. வெயிலில்

வண்ணாத்திப் பூச்சிகள் பறந்து

கொண்டிருக்கின்றன.


நன்றி

எழுத்து

முன்றில்.

பகிர்:
No comments

leave a comment

error: Content is protected !!