கடிதத்தில் நாவல்

ரு முற்றுப்பெறாத கடித வடிவத்தில் எழுதிய “கடிதங்கள் நவீனன் சுசீலாவுக்கு எழுதியவை” என்ற நாவலில் முற்றுப் பெறாத முதல் அதிகாரம்.

  • நகுலன்

அன்புடைய சுசீலாவுக்கு,

எப்பொழுதும் உன் ஞாபகம்தான். ஆனால் உனக்குத் தெரிந்ததுதானே! நான் எப்பொழுதுமே எல்லைகளை மீறியதில்லை – நீயும்தான். இது ஏன்? நானும் நீயும் வெவ்வேறு தளத்தில் இருக்கின்றோம். நீ நான் எழுதிய புத்தகங்களைப் படித்திருக்க மாட்டாய். மாத்திரமென்று, நீ Joyce-ன் The Dead என்ற சிறுகதையையும் படித்திருக்க மாட்டாய். அது அவனுடைய பிரசித்தமான ஒரு சிறுகதை என்றாலும், இதற்குள்ள விடை எனக்கு ஸ்பஷ்டமாகவே தெரிகிறது! பிரதிபலிப்பின் வசீகரம் உன்னிடம் உள்ளது. என்னைக் கவர்ந்தது, உன் உருவம், உன் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மை. நீ எவ்வளவு அழகாக இருந்தாலும், உன்னைப் பற்றியவரை உனக்கு ஒரு நிச்சயமுண்டு. சௌகரியமாக இருந்து வயிறு வாடாமல், இரு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பிரச்சனைகள் குறுக்கிடாமல் இருந்தால் உன் வாழ்க்கை ஒரு நேர்கோடாகப் போயிருந்திருக்கும். ஆனால் இதையும் நான் அழுத்தமாகச் சொல்ல முடியவில்லையே! ஒன்றைப் பெற வேண்டுமென்றால் வேறு பலவற்றை இழக்க வேண்டிவரும்! நீ சிரிப்பாய்! அது எனக்கும் தெரியும்! ஆனால் சுசீலா, யாருடைய வாழ்க்கையில் தான் பிரச்சனை இல்லை! ஆனால் நீ சொல்வாயாக! இருக்கலாம். என்னுடைய அதிருப்தியைத் தேர்ந்துகொள்ள எனக்குச் சுதந்திரம் இல்லையா என்று? யார் இல்லை என்று சொன்னது?

ஆனால் சுசீலா, உன்னில் எது என்னைக் கவர்ந்தது? முதலில் நின் உருவம், உருவு கண்டு எள்ளாமை வேண்டுமென்பது வள்ளுவன் வாக்கு. இதை ஏன் சொல்கிறேன் என்றால் உன்னை உனக்கு அறியாமையே பலருக்கு “இதுதான் சுசீலா” என்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன். பலரும் “இவளா?” என்று ஒருவித ஏமாற்ற உணர்ச்சியுடன் என்னைக் கேட்டார்கள். ஆனால் என்னைப் பற்றிய வரை வேறு எதையோ அடைய நீ ஒரு உபாதியாகவே இருந்திருக்கிறாய்! இருக்கிறாய்! இருந்துகொண்டே இருப்பாய். உன்னிடம் ஒன்று என்னை விஷேசமாய்க் கவர்ந்தது. நீ ஒரு பொழுதும் அசட்டு உணர்ச்சிகளுக்கு இடங்கொடுத்ததில்லை போலவே, எல்லைகளைப் பற்றி எச்சரிக்கையாகவே இருந்துகொண்டிருக்கிறாய். கம்பன் தான் என்று நினைக்கிறேன் – நான்தான் முறையாகத் தமிழ் படிக்கவில்லையே – ஒரு இடத்தில் ஜானகியைப் பற்றிப் பேசுகையில் “சனகன் என்ற அன்னத்தை, என் ஆவியை” என்று கூறுகிறான். உனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, உண்மை என்னவென்றால் நீ என்னுடைய ஆவியுடன் ஆவியாகக் கலந்துவிட்டாய். இதைப் படிக்கும்பொழுது உனக்கு இதெல்லாம் வேடிக்கையாகவே இருக்கும். சுசீலா, உண்மையாகவே சொல்கிறேன். தமிழ் பெருங்கணக்கில் கூட முதல் எழுத்தான அகரம் என்பது என் சொந்த அகராதியில் “அருவம்” என்றுதான் கணக்கிடப்படுகிறது. உன் உருவத்திலும் உன் அருவத்தைத் தான் காண விழைகிறேன். என் உற்ற சிநேகிதர் சிலருக்கு நான் ஒரு சித்தபிரமை பிடித்தவனோ என்று தோன்றாமல் இருந்ததில்லை. ஒரு வேளை அது அப்படித்தானோ என்னவோ என்று என்னையே நான் கேட்டுக் கொள்கிறேன்.

என் நிலை அது. உன்னைப் போல் சமன நிலையை என்னால் அடைய முடிவதில்லை. அதனால்தான் என்னவோ உன்னைச் சுற்றியே என் பிரக்ஞை எப்பொழுதும் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. சற்றே இதைக் கவனமாகப் படி. என் நாவல் ஒன்றைப் படித்த ஒரு நண்பர் – அவரும் ஒரு எழுத்தாளர் – உன் ஃபோட்டோ ஒன்று இருந்தால் எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டிருந்தார். இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மாத்திரமல்ல – என் வாழ்க்கையில் அருகில் இருப்பவர்கள் வெகு தொலைவில் இருப்பவர்களாகவும், வெகு அருகில் இருப்பவர்களாகவும், மேல் மட்டத்தில் இருப்பவர்கள், கீழ்மட்டத்தில் இருப்பவர்களாகவும், கீழ்மட்டத்தில் இருப்பவர்கள், மேல்மட்டத்தில் இருப்பவர்களாகவும் என்னை பாதித்திருக்கிறார்கள். இன்னும் மேலே சென்று ஒன்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். செத்தவர்கள்தான் உயிருடன் இருக்கிறவர்கள் என்ற பிரமையிலிருந்து என்னை என்னால் விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

அதனால்தான் நானும் குட்டி கிருஷ்ணனைப் போல் எப்பொழுதும் புஸ்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதனால் பல பிரதிகூலங்கள் ஏற்படுகின்றன என்றாலும் அனுகூலங்களும் இல்லாமல் இல்லை. சமீபத்தில் குட்டி கிருஷ்ணன் சொன்னதின் பேரில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்குப் போயிருந்தேன். குட்டி கிருஷ்ணன் சொன்னான். வேறு எதற்கும் இல்லை. அங்குள்ள சிற்பங்களைப் பின் அருவமாக வேறொன்று வேலை செய்தது என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி பின்னர் சுசீலா, உனக்குத் தூக்கம் வருகிறதா? இப்படியெல்லாம் நான் எழுதுவது உனக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால் சுசீலா, அருவமே உருவமாகும் தருணங்கள் உண்டு என்று வைத்துக்கொள். அத்தகைய தருணங்கள் மகத்தானவை. கோவிலுக்குள் வந்த குட்டி கிருஷ்ணன் ஒரு பிரகாரத்தில் பெரிய கண்ணாடியைக் காட்டி, இந்த கண்ணாடி முன் நின்ற நாராயணகுரு இந்த கண்ணாடியில்தான் நான் கடவுளைக் காண்கிறேன் என்றாராம். அவர் எந்த அர்த்தத்தில் இதைச் சொல்லியிருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் குட்டி கிருஷ்ணன் அதை எப்படிப் பார்த்திருப்பான் என்பதிலும் எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. (நான் கோவிலுக்குப் போகும் பழக்கம் இல்லாவிட்டாலும்) மனச் சாந்திக்கு வேண்டிக் கோவிலுக்குச் செல்கிறேன் என்று சொல்ல நாம் ஏன் வெட்கப்பட வேண்டும். எவ்வளவோ வெட்கப்பட வேண்டிய விஷயங்களுக்கெல்லாம் நாம் வெட்கப்படுவதில்லை என்ற நிலையில்! ஆனால் குட்டி கிருஷ்ணனைப் பற்றி ஒன்றும் முடிவாகச் சொல்வதற்கில்லை.

கோவில் குளத்தில் அருகில் அந்நேரம் அப்பொழுது நான் சொல்லி வைத்தேன். சிவன் கோவிலுக்கு வந்தால் அதை விட்டுப் போவதற்கு முன் சற்று நேரம் உட்கார்ந்துவிட்டுப் போகவேண்டும். இல்லாவிடில் பூத கணங்கள் நம்மைத் தொடரும் என்று ஒரு ஐதீகம் என்றேன். குட்டி கிருஷ்ணன் ஒருபிடி பொரி வாங்கி மீனுக்குப் போடுங்கள் என்றான். குட்டி கிருஷ்ணன் ஒருபிடி பொரி வாங்கினான். பிறகு என்னைப் பார்த்து, “நீங்கள் சொன்னது சரிதான். இங்கு சற்று நேரம் உட்காரலாம்” உட்கார்ந்தான். பொரியைச் சிறிது சிறிதாகக் குளத்தில் தூவினான். அவன் போடப்போட குளத்தின் அடியிலிருந்து மீன்கள் டக்டக்கென்று மேலெழும்பி பொரியை லபக்கென்று விழுங்கிவிட்டு அடுத்த வினாடி நீருக்குள் மறைந்தன. குட்டி கிருஷ்ணனுக்கு ஒரே உற்சாகம். எனக்கு கூட ஒரு விடுபட்ட நிலை – கடவுள் மீனாகவும் வந்து நம்மை உற்சாகப் படுத்துகிறார் என்றுதான் எனக்குத் தோன்றியது. மறுபடியும் நாங்கள் நடந்தோம். போகும் வழியில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிலைகள் உள்ள இடம் என்று ஒரு நினைவு. ஒருவர் அவர் சுற்றிலும் இருந்த சிலரிடம் “இதுதான் மையம்” என்றார். எனக்கு என்னவோ அந்த வார்த்தை என் உள்ளத்தில் ஆழமாய் பதிந்தது.

 

அவர் சொன்ன விளக்கம் அந்த இடத்தில் இருந்தால் கோயிலின் நான்கு கோபுரங்களையும் பார்க்கலாம் என்றார். என்னவோ அர்த்தமில்லாமல் ஒரு நினைவு, சிதம்பரம்தான் பிரபஞ்சத்தின் மையம் என்றும் அங்குதான் சிவ தாண்டவம் நடைபெறுகிறது என்றும். எது எப்படியானாலும் வாழ்க்கைக்கே ஒரு மையம் வேண்டும். நடுவில் ஒன்று. என் சுசீலா உன்னை எப்பொழுதுமே பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற இந்த உள் நாட்டம் என் எதிரில் இல்லாவிட்டாலும் என் உள் நீ இருக்கிறாய். எழுத்துதான் என் மையம் என்பது உனக்குத் தெரியும்தானே! பல வழிகளில் நான் ஒரு செல்லாத நாணயமாகிவிட்டேன் என்றாலும், இதே எழுத்து இருக்கிறவரை… நான் வாழ்க்கையைக் கடந்துவிடுவேன். மையம் என்றால் அகமா, புறமா, உள்ளா, வெளியா அல்லது ஒரு எல்லையற்ற உள்வெளியா? உண்மையாகவே சொல்கிறேன் இங்கு நான் தடுமாறுகிறேன். பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், எப்பொழுதும் சுசீலா, சுசீலா என்று எழுதுகிறீர்களே, யார் இந்தச் சுசீலா? எனக்கு என்ன பதில் கூறுவது என்ன தெரியவில்லை. இரவு இரண்டு மணிக்கு நான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன் வயதாகிவிட்டால், தூக்கம் வரவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

முதனமுதலில் இந்தப் பெயர் என்னைக் கவர்ந்தது, என் நினைவு சரி என்றால் “மௌனி”யின் ஒரு கதை மூலம் என்று நினைக்கிறேன், ஏன் ஒரு கதை என்று சொல்லவேண்டும் நினைவுச் சுவடு? பிரக்ஞை, வெளி, என்ற கதைகளில் அவள் வருகின்றாள். குடை நிழலில் மிஸ்ஜோன் ஆகவும், “சாவில் பிறந்த சிருஷ்டி”யில் கௌரியாகவும் அவள் தோற்றம் கொள்கிறாள். ஒரு கதையில் சுசீலா மனைவி, இன்னொன்றில் அவள் ஒரு விலைமாது. வருஷங்களுக்குப் பிறகு தன் மூலம் உருக்கொண்ட சுசீலாவின் வழியாகத் தன் பெண் காந்தாவைத் திரும்பிப் பார்க்காமலேயே சேகர் செல்கின்றான். ஆண் – பெண் உறவு மூலம் “மௌனி” எதைச் சொல்கிறார் அல்லது சொல்ல முயற்சிக்கிறார்? நண்பர் சீனிவாசனைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் தானே ராமநாதன் என்று கேட்கிறேன். தடுமாறுகிறேன் என்று தெரிந்தும் எவ்வளவு தூரம் என் உள் உலகில் மாட்டிக்கொண்டுவிட்டேன்.

இதைத்தான் “மௌனி”யின் பாத்திரங்கள் சொல்கின்றனவா? அம்மாதான் சொல்வாள் – எல்லாவித உறவுகளுமே சிக்கல்களைத் தான் சிருஷ்டிக்கின்றன. “மௌனி”யின் ஒரு துறையில் விஷ்ணு வெளியில் செல்ல பிரம்மா தன் தொழிலை வேகமாகச் செய்கின்றான். சிவன் அவன் சிருஷ்டி செய்யச் செய்ய விழித்துக்கொண்டே இருக்கிறான், பிறகு அவன் சிருஷ்டி செய்வதற்கு முன்னேயே அழிக்கத் தொடங்குகிறான். தன்னுடன் தானே இருக்க முடியாத அவஸ்தையில் மனிதன் ஒரு துணையை நாடுகிறான். அதனால்தான் “வாழ்க்கைத் துணை” என்ற வார்த்தைக்கே ஒரு அர்த்தம் வந்துவிடுகிறது. பாத்திரம் எப்படி இருந்தாலும் அது போகட்டும். என்னுடைய பல கதைகளில், நாவல்களில் சுசீலா வந்து கொண்டும் போய்க்கொண்டு இருப்பாள். அப்பொழுதெல்லாம் நான் இருக்கமாட்டேன். அப்படியென்றால்? எப்பொழுதும் எப்பொழுதும் என்னை எழுத்துக்கள் வசீகரிக்கின்றன.

என்னுள் எனக்கென்றே ஒரு அகராதி இருக்கிறது. “ச” என்ற எழுத்தை நான் உச்சரிக்கையில் எனக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது “சா” என்ற ஓரெழுத்து ஒரு சொல். அதை அடுத்து வரும் “சீ” என்பது இப்பொழுது. நான் கடந்துசென்று கொண்டிருக்கும் அனுபவ யாத்திரையில் “சாவே, நீ சீக்கிரமே வா” என்ற சொல் தொடர்பாக உருக்கொள்கிறது. ஏன் என்றால் சாவில் தான் சாசுவதம் நிலை கொள்கிறது. செத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அப்படியென்றால் “வா”? விலை. இவ்வுலகு கம்பன் கூறிய மாதிரி ஒரு அலகிலா விளையாட்டு. சுசீலா இதெல்லாம் உனக்குத் தெரியுமா? ஆனால் உனக்கு வேண்டியவை வைரத்தோடுகளும் பட்டுப்புடவையும்தானா?

நீ சிரிப்பாய். அது எனக்குத் தெரியும்.

 

 

  • சாளரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.