பிடிமானம்


  லேசான மழைதூறி இந்த மாலைப்பொழுதை ஈரப்படுத்தியிருந்தது. வானில் இருள் மேகங்கள் கலைந்து வெளிச்சம் படரத் தொடங்கிய நேரம். தவிட்டு குருவிகள் தாவித்தாவி ஈரம்படர்ந்த  சிறகுகளை பொன்னொளியில் உலர்த்திக்கொண்டிருந்தன. சில்லென்ற காற்றில் மகிழம் பூவின் மணம் பரவி மைதானத்திலிருப்பவர்களை பரவசப்படுத்தியது.

  பரபரத்து ஓடும் சாலைக்கும், தனக்கும் சம்பந்தமில்லையென நீண்ட மவுனத்தில் உறைந்திருந்தது குபேர லிங்க குளத்தங்கரை நந்தவனம். புங்க மரத்தடியில் இருக்கும் சாய்வுத் தூணில் உட்கார்ந்து பட்டுப்போன வெப்பால மரத்தை நிலைக்குத்தாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் சாரதா. அவள் மடியில் அவளின் நிழலாக உட்கார்ந்து குளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு  வயதான சாரதாவின் மகள். 

  மைதானத்தில் மூன்று நான்கு குடும்பங்கள் தன்  குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருந்தனர். எல்லாம் தெரிந்த முகங்கள் அவர்களை கடந்து தோட்டத்துக்குள் நுழைந்தான் ராம். தூரத்தில் வரும்போதே பார்த்துவிட்டாள் சாரதா. எதிர்காலம் குறித்த அச்சமும் குழப்பமும் அவள் முகத்தில் இருளென படிந்து இறுகிப்போயிருந்தது. ராமை பார்த்ததும் ஒளிக்கீற்றாய் மலர்ந்து நொடியில் மறைந்துபோனது. இருக்கட்டுமே என ஒரு சிரிப்பொன்றை மட்டும் உதிர்த்து வைத்தாள்.

  கடந்த ஒன்றரை வருடமாக முகத்தில் எந்த சுரத்தையும் இல்லாமல் இப்படித்தான் எல்லோரையும் எதிர்கொள்கிறாள். ஆனால் இன்று அவள் முகத்துக்கு சம்பந்தம் இல்லாமல் நேர்த்தியான இளமஞ்ச நிறத்தில் காட்டன் புடவை கட்டியிருந்தாள். அந்த நேர்த்தி அவளுக்குள்ளிருந்த  இயல்பு திரும்புவதாய் பட்டது. குளத்தங்கரையில் ஒரு காதல் ஜோடி பரவசமூட்டும் சினுங்கல் மொழியில் பேசிக்கொண்டிருந்தனர். அது அந்த மைதானத்தில் இருப்பவர்கள் வரை சபலப்படுத்தியிருக்க கூடும். மனிதர்கள் சபலப்படாமல் இருப்பதற்கு அவர்கள் என்ன ஜடமா?

    அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்தது அந்த சூழலுக்கு அன்னியமாகப்பட்டது. சூழலை இலகுவாக்க அவள் குழந்தையிடம் பேச்சுக்கொடுத்தான். மைதானத்தில் பார்த்த முகம் ஒன்று அவர்களை வேவு பார்த்தபடி கடந்து போய்க்கொண்டிருந்தது. மனிதர்கள் சபலம் மட்டுமா படுவார்கள் கூடவே சந்தேக புத்தியும் ஒட்டிக்கொண்டிருக்கிறதே . புழுக்கள் உடம்பில் எப்பொழுதும் வழவழப்பு இருப்பதுபோல. மனிதனிடத்தில் இதெல்லாம் இருக்கும் அப்படி இல்லாமல் இருந்தால்தான் அதிசயம். சாரதாவின் குழந்தை சட்டென அவனிடம் ஒட்டிக்கொண்டது. குழந்தையிடம் பேசிக்கொண்டே நடந்து மைதானத்துப் பக்கம் வந்தார்கள். குழந்தை ராமின் கையை உதறிவிட்டு தரையிருந்த ஒரு கொன்றைப் பூவை எடுத்து காட்டி சிரித்தது. அப்பொழுது குழந்தையின் முகம் பச்சையம் தளும்பும் வெட்கத்தில் நாணிக் குழைந்திருந்தது. அந்த பிஞ்சு கண்களில் சுடரென பூரிப்பு ஜொலித்து மின்னியது. அவன் வாழ்வில் முதல்முறையாக பார்க்கும் பால்ய தரிசனம் அது. அவன் கண்கள் சிலிர்ப்பின் உச்சமேறியிருந்தன. ஓடிபோய் கட்டிபிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அந்த வெட்கத்தோடவே கன்னத்தை துடைத்துக்கொண்டு இன்னொரு பூவை எடுக்க ஓடினாள் அந்த பிஞ்சு தேவதை.

   பூவென்றால் அவளுக்கு கொள்ளை பிரியம் என்று சாரதா சொன்னது சன்னமாகத்தான் அவனுக்கு கேட்டது. சிலிர்ப்பின் உச்சத்திலிருந்து அவன் இன்னும் கீழிறங்கவில்லை. போதும் வா என்று போய் அதட்டி தூக்கி மடியில் வைத்துக்கொண்டு மகிழ மரத்தடியில் போட்டிருக்கும் சிமென்ட் திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டாள் சாரதா. ராமும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தான். இந்நிகழ்வு அவர்களை சகஜ நிலைக்கு திரும்பியதாக  இருந்தது. கோயிலிருந்து சாயங்கால பூஜை மணி அலறியது. அதற்காகவே காத்திருந்ததுபோல எல்லோரும் கோயிலுக்குள் போனார்கள். மைதானம் காலியாகியிருந்தது. பாப்பா அவள் மடியிலிருந்து தாவி ராம் மடியில் உட்கார்ந்து கொண்டது.

  ‘’அப்புறம் என்ன முடிவு பண்ணியிருக்கிங்க?’’

  ‘’எதப்பத்தி” என்று சுரத்தையில்லாத குரலில் கேட்டாள் சாரதா.

   ‘’ஒரு மாசமா போனில் பேசிட்டுருக்கோமே அதப்பத்தித்தான்’’

‘”எனக்கு உங்கள மாதிரி பூடகமா பேசத்தெரியாது. எதுவா இருந்தாலும் நேரிடையா கேளுங்க நான் பளிச்சென்னு என் பதிலை சொல்லிடுறேன் ”என்றாள் சாரதா.

  அவள் பேச்சில் பிடிமானம் தெரிந்தது. ஆனால் அதை வெளியே தெரியாமல் வெடுக்கென்று சொன்னதுதான் அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.

 சாரதா இப்படித்தான் மனதில் பட்டதை பட்டென்று பேசுபவள். அவளை முதல்முறையாக வேங்கிக்காலில் இருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டில் மளிகை பொருட்கள் வாங்க மனைவியோடு போனபோது சந்தித்தோம். அவள் அங்கு பில் போடும் வேலை செய்துக்கொண்டிருந்தாள் வெளியில் மழை ஓவென்று மூர்க்கமான சத்தத்தோடு கொட்டிக்கொண்டிருந்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே இருந்தோம். நாங்கள் குடை எடுத்து வந்திருக்கவில்லை.  சாரதா கிராமத்து மணம் வீசும் வாஞ்சையோடு குடைகொடுத்து உதவினாள். அந்த நட்பு அடுத்ததடுத்த சந்திப்புகளில் உறவாகி எங்கள் வீடுவரை அவள் வந்துபோக நீண்டிருந்தது.

 அது சாரதாவுக்கு கல்யாணமாகி கருவுற்றிருந்த வசந்தகாலம். ஆனால் நாங்கள்  எட்டு வருடமாக வம்ச விருத்திக்காக மருத்துவமனை படிகளும், கோயில் கருவறைக்கும் அலைந்துக்கொண்டிருந்தோம். காலம் தான் எல்லாவற்றையும் உறிஞ்சிவிட்டு ஒன்றுமில்லையென காட்டிவிடுமே. ஆனால் புத்திர சோகம் யாரைவிட்டது. நவீன கருவறைகள் தமிழ்நாடெங்கும் கடைவிரித்து எங்களை ஆசைகாட்டி இழுத்தது.

நாங்கள் பாண்டிச்சேரியில் குழந்தைகளை சிருஷ்டிக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்தோம். அது நான்கு லட்சத்தையும், ஒன்றரை வருடம்  கடைசி உழைப்பையும் உறிஞ்சிவிட்டு எச்சகூளங்களென நடுத்தெருவில் நெட்டித்தள்ளியது. நானும் என் மனைவியும் அவமானத்தாலும், நிராகரிப்பாலும் துவண்டு போயிருந்தோம். என் மனைவி நடைபிணமாய் வீட்டுக்குள் அடைந்து கிடந்தாள். நான் வாழ்வின் பிடிமானத்தின் வேர்களுக்காய் ஏங்கி கதை புத்தகத்தில் புதைந்திருந்தேன். வலி இல்லாது உயிர் போகும் தற்கொலை பாதையை தேடிக்கொண்டிருந்த காலம் அது.

  அந்நேரத்தில் தான் ஒரு நாள்  தலைவலி மருந்து வாங்க அந்த கடைக்கு  போயிருந்தேன். வாங்கிவிட்டு வெளியே வரும்போது ஞாபகம் வந்து, கடைக்குள் சாரதாவை தேடிப்பார்த்தேன். ஆனால் சாரதா அங்கு இல்லை. அவள் வாழ்வின் துயரத்தைத்தான் கனத்து வீட்டுக்கு கொண்டுவர முடிந்தது. ஒரு விபத்தில் அவள் கணவன் இறந்துபோனதாகவும், ஒரு வருடமாக கடைக்கு வரவில்லை என்றும் சாரதாவின் கடைத்தோழி நாகம்மாள் சொன்னாள். அதை என்  மனைவியிடம் சொன்னபோது வீட்டில் இருந்த கடைசி விளக்கையும் வெளியே தூக்கி எறிந்துவிட்டு பின்னிரவுவரை அழுதுக்கொண்டிருந்தாள் 

  ஆசுவாசமான ஒரு நாளில் மனைவி கீதாவோடு சாரதா வீட்டுக்கு போயிருந்தேன். அவள் உச்சி வெயிலில் ஈரமில்லாமல் வதங்கிய முருங்கைக்கீரையாய் துவண்டு போயிருந்தாள். அவளை சமாதானப்படுத்திவிட்டு வெகு நேரம் வீட்டிலிருந்துவிட்டு கிளம்பினோம். அவள் குழந்தை திண்ணையில் போட்டிருந்த தூளியில் தூங்கிக்கொண்டிருந்தது. வழியில் சாரதாவின் தாய் எங்களை பார்த்துவிட்டாள். 

நடுத்தெரு என்று கூட பார்க்காமல் தன் பெண்ணின் துயரத்தை நினைத்து ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். நாங்கள் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு சாலை ஓரமிருந்த ஆலமரத்தடி நிழலில் ஒதுங்கினோம். அவள் ஒப்பாரி வைத்து அழுதாள். அது  அவள் மகளுக்கு மட்டுமில்லாமல், எல்லா உயிரின்  துயரத்துக்கான குரலாய்  இருந்தது. இம்மாதிரி மனுஷிகளால்தான் இன்னும் நிலத்தில் ஈரம் காயாமல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான். அவள் கண்ணில் மடை ஒழுகி நின்றது. ராம் சாரதாவின் எதிர்காலம் குறித்து பேச்சை மாற்றினான்.

  வீட்டுக்குள்ளேயே  முடங்கி கிடக்கறா தம்பி எங்கேயும் கடைத்தெருவுக்கு கூட போறதில்ல. வாழ்க்கைனா எல்லாந்தாம் இருக்கும் அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா? நீதான் தம்பி அவகிட்ட நாசூக்கா பேசணும் கல்யாண பேச்சை எடுத்தாலே எரிஞ்சி எரிஞ்சி விழுறா செத்துபுடுவேன்னு வேற மிரட்டறா. நீதான் அவகிட்ட பேசி புரிய வைக்கணும். இயலாமையும், சோகமும் கலந்த குரலில் உடல் தொங்கிப்போன தாய் சொல்லி முடித்தாள்.

   அதற்கு பிறகான நாட்களில் சாரதாவிடம் போனில் பேசினோம். எங்கள் உரையாடல் வாரத்தொருக்கொருமுறை என ஆரம்பித்து தினமும் என நீண்டது. அவள் பேச்சில் நட்பை தாண்டிய நெருக்கமும், ஒரு குழைவும் தெரிந்தது. அந்நாட்களில் அவளின் ஆசை, கனவு,அடுத்த வாழ்வுக்கான துளிர்ப்பு  என அவள் குரலில் காண முடிந்தது. 

சில வேளைகளில் சட்டென பேச்சை நிறுத்தி மவுனமாய் இருந்துவிட்டு ஒரு ஜாக்கிரதை உணர்வோடு பேச ஆரம்பிப்பாள். அவள் அதிகம் குழம்பிபோயிருக்கிறாள் என்று நினைப்பான். ஒரு நாள் யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியம் போல் சொன்னாள். “ஒரு மாசத்துக்கு முன்னாடி  எங்கண்ணன் ஒருத்தர கூட்டி வந்து என்னை காட்டினார். அவருக்கு ஐம்பது வயதிருக்கும். அதுகூட பரவாயில்லை. அந்தாள் சொன்னதுதான் நெஞ்சை அரிச்சிகிட்டே இருக்கு அந்தாளுக்கு காலேஜ் படிக்கிற புள்ள இருக்காம். அதனால குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டு வந்தா கல்யாணம் செய்துக்குகிறேன் என்று என்னை வைத்துக்கொண்டே சொல்லிவிட்டு போனான். அப்படியே செத்துபோயிடுடலாம்னு இருந்தது.”  தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தாள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன். நேற்று கூட  அம்மா ஒருத்தர கூட்டி வந்தாங்க ஏதோ துபாயில வேலை செய்யிறாராம். இது அதவிட கொடுமை. போனை வைக்கும்போது எதையோ சொல்ல வந்து பாதியிலேயே போனை அணைத்தாள் சாரதா. 

    சாரதாவின் அந்த பேச்சற்ற இடைவெளிக்கான  மவுனத்தின் உணர்வு எனக்கு புரியும். எங்களிடம் பேசுகிற  தூரத்து உறவு, நண்பர்கள் கூட என் மீது பச்சாதாபத்தையும், என் மனைவி மீது லேசான காம இச்சையும் ஒருசேர  அவர்கள் கண்களில் துளிர்ப்பதை உள்ளூர கவனித்திருக்கிறேன். அதை விட அந்நாடகத்தின் கடைசி காட்சி எல்லோரிடத்திலும் ஒரே மாதிரி ஏதோ ஒரு கோயிலை, டாக்டரை பரிந்துரைப்பதாய் முடியும்.

    அதன் பிறகான எங்கள்  உரையாடலில்  சாரதாவின் பேச்சில் ஒரு உறுதி தெரிந்தது. அது எனக்கு  பயமாகவும், அதே நேரத்தில் ஆசையாகவும் இருந்தது.

   நேற்று சாரதாவின் அம்மா  வீட்டுக்கு வந்திருந்தாள். 

 கோயிலில்  பூஜை முடிந்து மங்கள மணியை அடித்து நடை சாத்தினார் பூசாரி. கூட்டம் கலைந்து மைதானத்துற்குள் நிறைய பேர் வர ஆரம்பித்தனர். ஆட்டோவிலிருந்து இறங்கி மைதானத்திற்குள் நுழைந்தாள் கீதா. அவளை பார்த்ததும் சாரதாவின் முகத்தில் அதிகமாக குழப்பமும்,கோபமும் அப்பட்டமாக தெரிந்தது. என் மடியில் இருந்த குழந்தை கொன்றை பூக்களின் இதழை ஒவ்வொன்றாக கிள்ளி தரையில் போட்டுக்கொண்டிருந்தது. 

   கீதா சாரதாவிடம் சம்பிரதாயமான சம்பாஷைனைகளை பேசிவிட்டு என் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். என் மடியிலிருந்த குழந்தை கீதாவிடம் தாவி அவள் கழுத்தை இறுக்கிக்கட்டிக்கொண்டது.அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் கீதா. இனி அவர்கள் இந்த உலகத்தில் சஞ்சரிக்கமாட்டார்கள், அவள் உலகத்தில் ஆயிரம் மின்மினிப்பூச்சிகள் மின்னிக்கொண்டிருக்கும். அவள் உடலெங்கும் பூ சொரிந்து மலர்ந்து விரியும்அது என் அகம் அறியும்.

  கீதா வந்ததும் குற்ற உணர்ச்சியில்லாத ஒரு தைரியம் வந்ததுபோல் இருந்தது. 

 சாரதா உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசத்தான் வந்திருக்கிறோம். 

”ஓ எங்கம்மா உங்களையும் புரோக்கரா ஆக்கிட்டாங்களா?’ ’வெடுக்கென்றுகடுமையான குரலில் சாரதா சொன்னது என்  மனதில் முள் தைத்ததுபோல் இருந்தது. மறுபடியும் எங்களுக்கான மவுனம் அவ்விடத்தில் சூன்யமாய் பரவியிருந்தது. கோயிலுக்குள் போன யாரோ ஒருவரின் நாய்க்குட்டி மைதானத்தில் தனித்திருந்தது . அது சாரதாவின் காலருகே வந்து குழைந்து அவள் பாதத்தை சப்பியது. கொஞ்சம் நேரம் கழித்து மவுனத்தை சாரதாவே கலைத்தாள். 

  “கோச்சிக்கிட்டிங்களா சும்மா தமாசுக்குத்தான் சொன்னேன்.” 

 நான் எதுவும் பதில் சொல்லவில்லை. அடுத்து பேச போகும் வார்த்தையை தேடிக்கொண்டிருந்தேன்.அச்சொல் தொண்டைக்குள்ளேயே குமிழியிட்டு அடைத்திருந்தது.நான் திரும்பி கீதாவை பார்த்தேன். அவள்தான் இந்த உலகத்தில் இல்லையே? வானில் சூரியன் முழுதும் மறைந்திருந்தாலும் வெளிச்சம் மட்டும் இன்னும் திட்டுத்திட்டாக பரவித்தான் இருந்தது. எதிர் திண்ணையில் ஒரு சாமியார் கண்ணை மூடி தியானம் செய்வதுபோல சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார். காற்றில் அந்த மகிழம்பூவின் மனம் இன்னும் அடர்த்தியாய் வீசியது.

  “வாங்களேன் ஒரு சின்ன நடை போவோம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்தேன். “நீங்க போயிட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் குழந்தையோடு விளையாண்டிட்டிருக்கேன்” என்று லாவகமாக தன்  பிடியை தளர்த்தினாள் கீதா. அதை ஆமோதிப்பதுபோல் நடந்து கோயில் பிரகார பாதையில் ஏறினோம். சாரதாவின் பரபரப்பும், தனிமையின் தேடுகையும் என்னை பயமுறுத்தியது. என் கால்தடம் ஒவ்வொரு அடிக்கும் கனத்து முன்னேறவிடாமல் பின்னுக்கிழுத்தது. நான் திரும்பி கீதாவை பார்த்தேன். அவள் பார்க்கும் தூரத்தில் குழந்தையோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அதை பார்த்ததும் என் பயம் நொடியில் கலைந்தது.

 சட்டென திரும்பி சாரதா படபடவென பேச ஆரம்பித்தாள்.  “இனியும் என்னால பொறுமையா இருக்க முடியாது. நீங்க சொல்ல வந்ததை நேரிடையா சொல்லுங்க, நானும் ஒரு முடிவோடுதான் வந்திருக்கேன் . யாரைப்பற்றியும் எனக்கு எந்த கவலையுமில்லை.  உங்களிடம் கண்டிப்பா அதை சொல்லணும்.” சன்னதம் புகுந்தவள் போல் சொல்லி முடித்தாள்.

அந்த பரபரப்பு எனக்குள்ளும் ஒரு நோயென தொற்றிப்போய் பேச ஆரம்பித்தேன். 

  ”நாங்களும் ஒரு முடிவோடுதான் வந்திருக்கோம். ஆனா முழுசா பேசற  வரைக்கும் இடையில எதுவும் பேசக்கூடாது. நான் சொல்லறத கேட்டு கோபப்படக்கூடாது. எல்லாம் உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். 

  உனக்கும் சந்தோசமான எதிர்காலம் வேணும். நீயும் அத உள்ளூர விரும்பறது எனக்கு தெரியும். ஆனா கண்டதை மனசில போட்டு அனாவசியமா குழம்பிட்டு இருக்கிறே. உனக்கு கல்யாணமாகி உன் கணவனோடு சகஜமாகி ஒரு குழந்தை பிறக்கற வரைக்கும் உன் குழந்தை உங்கண்ணன்  வீட்டிலேயே வளரட்டும்.சத்தியமா சொல்றோம் உங்கிட்டிருந்து குழந்தையை பிரிக்கணும் என்ற எண்ணமெல்லாம் துளியும் இல்லை. உன்னை கல்யாண பண்றவருக்கும் அப்பத்தான் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம உன்னிடம் அணுக முடியும். சில யதார்த்தங்கள் கனவுகளுக்கு அன்னியப்பட்டதாத்தான் இருக்கும்.அத நாம ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும். முரண்டு பிடிச்சா இழப்பு நமக்குத்தான். உன் குழந்தையை எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க மனசும் கேக்கலாம்னு தோணுது. ஆனால் சில கனவுகளும் யதார்த்தத்தை மிஞ்சியிருக்குதே? என்ன பண்ணறது அதான் வாழ்க்கை: என்று ஒரே மூச்சில் சொல்லி அதற்கு மேல் பேச்சு எழாமல் சட்டென நிறுத்திக்கொண்டேன். 

 சாரதா ஒரு நிமிடம் பேச்சற்று மவுனமாக என் கண்களை ஊடுருவி பார்த்துவிட்டு திரும்பி எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஈரம் கசிந்து நிலத்தில் சொட்டு சொட்டாய்  விழுந்துக்கொண்டிருந்தன.  

  அப்பொழுது நான் கேட்டதின் சரி, தவறுக்குள் என் மனம் நூறு குதிரையின் பாய்ச்சலில் அவளின் ஒரு கண பார்வை துளைத்தெடுத்தது. என் கால்கள்  நிலத்தில் பிடியற்று தடுமாறிக்கொண்டிருந்தன.

    சாராதாவின் பார்வை எங்கெல்லாமோ மோதி நடைபாதையோரம் நட்டு வைத்திருந்த புங்க செடியில் நிலைத்தது. அது  மழை ஈரத்தில் புதிய தளிர்களை  துளிர்த்திருந்தது.

   “இனி அந்த வீட்டுக்கு நான் போவப்போறதில்லை” என்று சாராதா அழுத்தமான குரலில் சொன்னது தூரத்திலிருந்து கேட்பதுபோல் இருந்தது.

  நான் திரும்பி கீதாவை பார்த்தேன். அவள் குழந்தையை தூக்கிக்கொண்டு எங்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள். 


  • மாரி.கிருஷ்ணமூர்த்தி

நன்றி – ஓவியம்: KMBerggrun

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.