பிறழ்வின் பாதை

(நகுலனின் நினைவுப்பாதை நாவலை முன்வைத்து)

லக்கியத்தில் நவீனத்துவ போக்கின் தொடக்ககால படைப்புகளில் ஒன்றாக தஸ்தாவெய்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ நாவலை குறிப்பிடுவார்கள். ஒரு தனிமனிதனின் தன்னுரையாடலால் கட்டமைக்கப்பட்ட நாவல் அது. ஒரு வகையில் நவீனத்துவ படைப்புகள் அனைத்தும் இந்த தனிமனிதனை விட்டு வெளிவரவில்லை என்று சொல்லிவிடலாம். தனிமனிதனின் அனுபவ எல்லையுடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாத கற்பனாவாத அம்சங்கள் நிறைந்த, அதற்கு முந்தைய கால படைப்புகளை நவீனத்துவர்கள் நிராகரித்தார்கள். உலகில் நடக்கக்கூடிய அத்தனை நிகழ்வுகளும் தனிமனிதனால் புரிந்துகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும் என்று நம்பப்பட்டது. அல்லது அப்படி புரிந்துகொள்ள முடியாமல் போவதால் ஏற்படும் சோர்வும் பிறழ்வும் நவீனத்துவகாலத்தை ஆண்டது. காஃப்காவின் படைப்புகளில் வெளிப்படும் அகாரணம், திட்டவட்டமில்லாத தன்மை போன்றவை நவீனத்துவத்தின் முக்கியமான பண்புக்கூறுகள்.        நவீனத்துவதன்மை கொண்ட ஆரம்ப கால படைப்புகளில் கடவுளால் கைவிடப்பட்ட ஒரு தனிமனிதன் தன் உலகை புரிந்து கொள்ள முயன்றபடியே இருக்கிறான். அவன் அவதானிக்கும் உலகம் அவனுடைய நம்பிக்கைகளுடன் உரசுகிறது. இந்த உரசலை நாம் புதுமைப்பித்தன் தொடங்கி பல படைப்பாளிகளிடம் அவதானிக்கலாம். புதுமைப்பித்தனின் சாபவிமோசனம், கயிற்றரவு போன்ற கதைகள் ஒரு தன்னிலை மரபினை தீண்டிப்பார்ப்பதன் வெளிப்பாடுதான். புதுமைப்பித்தனுக்கு மரபின் மீது இருந்த ஈடுபாடும் விமர்சனமும் அவரை இன்று வரை மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் படைப்பாளியாக நிலைநிறுத்துகிறது. ஆனால் மற்றொரு எல்லையில் மௌனி நிற்கிறார். அவரிடம் மரபின் கூறுகள் செயல்படுவதில்லை. ஆகவே அவருடைய கதைகள் மண்ணில் கால் ஊன்றாத, அலையும் தன்மையைக் கொண்டுள்ளன. மௌனியிடம் வெளிப்படுவதை முழுமையான கற்பனாவாதம் என்று சொல்லிவிட முடியாது. மௌனியின் புனைவுகளில் நாம் காண்பதும் ஒருவகையில் தனிமனித விசாரம்தான். ஆனால் அவ்விசாரத்தை முழுமையாக கட்டமைக்காமல் அதன் உச்சப்புள்ளியை மட்டுமே எழுதிச் செல்கிறார். மௌனியின் புனைவுகள் பல இடங்கள் புகைமூட்டமாக தெரிவதற்கு அவை உணர்வின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே பயணிப்பது ஒரு காரணம்.

உணர்வுச்சம் என்ற சொற்றொடர் உடனடியாக கண்ணீர், கோபம், ஆனந்தம் போன்ற உச்ச உணர்வுகளை நமக்கு நினைவூட்டலாம். ஆனால் நவீனத்துவ படைப்புகளில் அந்த உச்சம் பெரும்பாலும் பிறழ்வாக மட்டுமே படைப்புகளில் நிகழ்கிறது. பிறழ்வும் உச்சம்தானே!

நகுலனின் நினைவுப்பாதை நாவலின் ஒரு முக்கியமான பண்புக்கூறு இந்த பிறழ்வு நடையிலான கூறுமுறை. மற்றொரு முக்கியமான அம்சம் எழுத்தையும் எழுத்துலகத்தையும் பகுப்பாய்வு செய்து பார்க்கும் தன்மை. எழுத்தாளன் தன்னை ஒரு எழுத்தாளனாகவே புனைவில் முன்வைப்பது. எல்லா வகைமையையும் போல இதற்கும் புதுமைப்பித்தனே தமிழில் முன்னோடி என்றாலும் நகுலன் இந்த ‘எழுத்தாளன்’ என்ற பாவனையை நினைவுப்பாதை நாவலில் மிக விரிவாக எழுதி இருக்கிறார். நகுலனைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி, கோபிகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் என பலர் இவ்வுத்தியை பயன்படுத்தி இருக்கின்றனர். அவ்வகையில் நகுலன் ஒரு முன்னோடித்தன்மையை பெறுகிறார். நினைவுப்பாதை நாவலை இவ்விரு கூறுகளை அடிப்படையாகக் கொண்டே பேசவேண்டும்.

வெளிவந்த காலத்தை கணக்கில் கொண்டால் நினைவுப்பாதை வடிவரீதியாக தமிழ் நாவல்களின் எல்லையை சற்று முன்னகர்த்தி இருக்கிறது என்பதை உணர முடியும். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பிரபலமாக இருந்த நாவல்கள் பெரும்பாலும் ‘கதைத்தன்மை’ கொண்டவை. ஒரு கதைச்சூழலை மையப்படுத்தாமல் ஒரு வாழ்க்கைச் சூழலை அல்லது வாழ்வியல் தருணத்தை மையப்படுத்தி வெளியான நாவல்கள் வெகுசில மட்டுமே. க.நா.சுவின் ‘பொய்த்தேவு’, ‘ஒரு நாள்’, சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ போன்ற நாவல்கள் கதைக்கு பதிலாக களத்தை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டிருந்தன. இந்நாவல்கள் பரிசோதனை முயற்சி என்ற எல்லையைக் கடந்து சரளமாக வாசித்துச் செல்லும் கதைத்தன்மையையும் கொண்டிருந்தன. நகுலனின் நினைவுப்பாதை கதைத்தன்மையை முழுமையாக உதறிவிட்டு எழுதப்பட்டிருக்கும் நாவல். நகுலனுக்கு பல வகையில் மௌனியை முன்னோடியாகக் கொள்ளலாம். நகுலனின் கதையுலகமும் மௌனியுடையதைப் போன்றே கால்பாவாத தன்மையை கொண்டிருக்கிறது.

நினைவுப்பாதை எண்ணங்களால் ஆன நாவல். நவீனன் என்ற புனைக்கதை எழுத்தாளன் தன் நண்பர்களைப் பற்றியும் காதலியைப் பற்றியும் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐந்து நீளமான அத்தியாங்களைக் கொண்ட இந்த நாவலில் முதல் அத்தியாயத்தில் நவீனன் தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்கிறான். சக எழுத்தாளர்களும் நண்பர்களுமான சிவன், நடராஜன் குறித்தும் தன்னுடைய காதலி சுசீலா குறித்தும் தன்னைக் குறித்தும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் சொல்கிறான். அவர்களைப் பற்றிச் சொல்வதற்கு நவீனன் அல்லது நாவலாசிரியர் தேர்ந்தெடுக்கும் உத்தி நினைவுமீட்டுதல் என்பதாக இருக்கிறது.

முதல் அத்தியாயத்தில் நவீனன் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிச் சொல்லும்போது அதில் ஒரு மெல்லிய நேர்க்கோட்டுத்தன்மை இருக்கிறது. ஏனெனில் நவீனன் நம்மிடம் சொல்கிறவற்றில் பாதியை அவனே கதையாகத்தான் கேட்கிறான். ஆனால் அவனுடைய அனுபவங்களைப் பற்றிப் பேசும்போது இயல்பாக கூறல் அநேர்கோட்டுத்தன்மையை அடைந்துவிடுகிறது. நம்முடைய பேச்சுமொழிக்கு நேர்கோட்டுத்தன்மை இருப்பதில்லை. ஏனெனில் நினைவுக்கிடங்கும் நேர்கோடற்றதாகவே இருக்கிறது. நகுலனின் இந்த முயற்சி மனதின் நினைவுமீட்டலை பின்பற்றி எழுதப்பட்டிருப்பதால் முக்கியமான ஒரு நாவலாகிறது.

/’வார்த்தைகளே நீங்கள் என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?’/

/’இந்த விஷயம் எனக்கு ஏன் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது என்று எனக்கு தெரியவில்லை.’/

/’ஞாபகத்திலிருந்து குறிப்பெடுக்கிறேன்’/

இதுபோன்ற சொற்றொடர்கள் நாவல் முழுக்கவே விரவியிருக்கின்றன. மொத்த நாவலுமே ஒருவித நினைவுமீட்டலாக இருப்பதால் வழக்கமாக ஒரு நாவலில் நாம் எதிர்பார்க்கும் பாத்திர உருவாக்கம், பாத்திரங்களுக்கு இடையேயான உணர்வு மோதல்கள் போன்ற எதுவும் இந்நாவலில் இருப்பதில்லை. மொத்த நாவலிலும் நாவலில் இடம்பெறும் மாந்தர்கள் குறித்த நவீனனின் அபிப்ராயங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. நவீனனிடமே ஏற்படும் அபிப்ராய பேதங்கள் மட்டுமே நாவலின் ஒரு சில உணர்வுப்பூர்வமான தருணங்களை கட்டமைக்கின்றன. ஆனால் அத்தகைய தருணங்கள் மின்னி மறைகிறவையாகவே இருக்கின்றன.

 

இருபத்தைந்து சவரன் நகையை வைத்துக்கொண்டு தனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்துத் தரும்படி சிவனிடம் கேட்கும் நாற்பது வயதுப்பெண், பதினொன்றாவது பிள்ளையாக செல்வவளம் நிறைந்த வீட்டில் பிறந்தாலும் சந்தையில் கூலிவேலை செய்து பிழைக்கும் நடராஜனின் தம்பி என ஆங்காங்கே மின்னிமறையும் பாத்திரங்கள் நாவலின் முதன்மைப் பாத்திரங்களைவிட சொல்லப்படுவதற்கான ஆழங்கொண்டவர்களாகத் தெரிகின்றனர். ஆனால் எழுத்தின் விட்டேத்தியான போக்கு எந்தவொரு பாத்திரத்தையும் மனதில் தங்கவிடாமல் செய்கிறது. காலச்சுவடு பதிப்பகம் மறுபதிப்பாக வெளியிட்டுள்ள நாவலின் முன்னுரையில் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் நினைவுப்பாதையை ஒரு எதிர்நாவல் என்று குறிப்பிடுகிறார். அக்கூற்று சரியானது தான் என்றாலும் நினைவுப்பாதை ஒரு வலுவான எதிர்நாவலாக தன்னை கட்டமைத்துக் கொள்ளவில்லை.

நினைவின் சலனங்களை நாவல் பின்தொடர்ந்து செல்கிறது. சந்தேகமில்லாமல் இது அன்றைய தமிழ்ச்சூழலில் ஒரு முன்னோடி முயற்சிதான். இந்நாவலின் தொடர்ச்சியை ‘ஜெ ஜெ சில குறிப்புகள்’, ‘பின்தொடரும் நிழலின் குரல்’, ‘பயணக்கதை’ என்று பல நாவல்களில் காண முடிகிறது. ஆனால் நினைவுப்பாதை தன்னளவில் சில தெறிப்புகளை மட்டுமே கொண்டிருக்கும் முழுமையான நாவல் அனுபவத்தை அளிக்காத ஒரு படைப்பு என்றே தோன்றுகிறது. நாவலில் நவீனன் தன்னைப் பற்றிச் சொல்லக்கூடிய இறுதி அத்தியாயம் நினைவின் உச்சகட்ட பிறழ்வுத்தன்மையை சித்தரிக்கிறது. சுசீலாவைப்பற்றிய நான்காவது அத்தியாயத்தின் இறுதியில் ஒரு கவிதை இடம்பெறுகிறது. நவீனன் தான் ஒருதலையாக உக்கிரமாக காதலித்த இன்னொருவனுக்கு மனைவியாகி தாயுமாகிவிட்ட சுசீலாவைப்பற்றி அவளை சந்திக்கச் செல்வதற்கு முதல்நாள் இக்கவிதையை எழுதுகிறான்.

 

/’சுசீலா

செத்துக் கிடந்தாள்.

கழுகொன்று

அவள் முலையை கொத்திற்று.

அவள் துவாரம்

நோக்கி எறும்புக் கூட்டம்

பிண வாடை

வயிற்றைக் குமட்ட

கவிஞன்

கறுப்புத் தின்கிறான்.

நாலடிக்கப்பால்

அவர்

மாபெருங் கவிஞர்

தாடி வருடித்

தியானத்திலாழ்ந்தார்.’/

நினைவு எல்லை கடக்கும்போது தோன்றும் இதுபோன்ற உக்கிரமான தருணங்கள் நாவலில் உள்ளன. இதுபோன்ற மற்றொரு தருணம், மனநலக் காப்பகத்தில் நவீனனுக்கும் எஸ்.நாயருக்கும் நடைபெறும் உரையாடல்.

நாவலின் தொடக்கத்தில், நகுலன் நாவலுக்கு சில எல்லைகளை வகுத்துவிடுகிறார். நவீனனின் வயது, குடும்பச்சூழல் என்று அவ்வெல்லைக்குள் நின்றே நாவல் சொல்லப்படும்போது பல இடங்களில் தொய்வடைந்துவிடுகிறது. இலக்கிய உலகில் புழங்கும் எந்தவொரு வாசகனும் அறிந்திருக்கக்கூடிய அன்றாட இலக்கிய அரசியல், இலக்கிய பாவனைகள் என்றே சுற்றி வருகிறது. இந்த அன்றாடத்தன்மைகளை விடுத்து நவீனன் தன்னைப்பற்றி உக்கிரமாக பேசத்தொடங்கும் இடங்களே முக்கியமானவையாக மனதின் வினோதங்களை நம்மிடம் சொல்பவையாக கவித்துவமானவையாக இருக்கின்றன.

முன்பே சொன்னதுபோல பிறழ்வும் ஒரு வகையான உணர்வுச்சமே. நவீனன் இந்த மொத்த நாவலையும் மனநல காப்பகத்தில் இருந்தபடியே எழுதுகிறான் என்று எடுத்துக்கொள்ள நாவலில் இடமிருக்கிறது. நவீனன் ஒவ்வொரு எழுத்தாளனும் கொஞ்ச நாட்கள் மனநல காப்பகத்தில் இருப்பதை பரிந்துரைக்கவும் செய்கிறான். அவ்வகையில் அப்படியானதொரு பிறழ்வு நிலையில் இருந்து எழுதப்பட்டது என்ற வகையில் நினைவுப்பாதை நினைவுகூரத்தக்க ஆக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.