பூமிக்கான போராட்டம்: காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் 15 பெண்களைச் சந்தியுங்கள்!

மூழ்கும் தீவுகள் முதல் வறட்சி மிகுந்த புல்தரைகள் வரை, புவி வெப்பமாதலின் நெருக்கடிக்களை பெண்களே முதன்மையாக எதிர்கொள்கிறார்கள்; இதற்கு முக்கியக் காரணம் பாலின சமத்துவமின்மை. உலகின் பல பகுதிகளிலும் குடும்பத்தையும், சமுதாயத்தையும் பராமரிக்கும் பாரம்பரியப் பணியை பெண்கள் தான் செய்துவருகின்றனர். உணவும் எரிபொருளும் வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதால், இவர்கள் வெள்ளம், வறட்சி போன்ற 0சூழ்நிலைகளில் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள். காலநிலை மாற்றத்தால் இடம்பெயர்ந்தவர்களில் 80% பெண்கள் என ஐ.நா.வின் மதிப்பிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் முன்களத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதால் புவி வெப்பமாதலின் காரணங்களைக் கண்டறிந்து மட்டுப்படுத்தவும், அதன் தாக்கத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ளவும் பெண்கள் மாற்றத்தின் முகவர்களாக இருக்கின்றனர். இந்த உண்மையை உணர்ந்த பாரிஸ் உடன்படிக்கை (Paris Agreement), குறிப்பாக காலநிலை சார்ந்த முடிவுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் உலகளாவியத் தேவையை உள்ளடக்கியிருந்தது. இன்று, உலகமெங்கும், நிர்வாகக்குழு அறைகள் தொடங்கி உள்ளூர்ச் சமூகச் செயல்திட்டங்கள் வரை, அறிவியல் முதல் செயல்பாடுவரை, பெண்கள் தங்கள் குரலால் காலநிலை மாற்றத்தைத் தடுக்க, தலைமை தாங்கியும் செயல்பாடுகளை அறிவித்தும் வருகின்றனர்.

டைம் (TIME) இதழின் காலநிலைச் சிறப்பிதழில் அத்தகைய 15 பெண்களை முன்னிலைப்படுத்த முடிவுசெய்துள்ளோம்.

 • கிறிஸ்டியானாஃபிகரஸ்
  இராஜதந்திரம் (Diplomacy)

காலநிலை மாற்றத்திற்கான இலாப நோக்கமற்ற குழுவுக்கு எட்டு ஆண்டுகள் தலைமை வகித்த கிறிஸ்டியானோ ஃபிகரஸ் (Christiana Figueres), காலநிலை சார்ந்த சர்வதேச பேச்சுவார்த்தைகளுக்கான ஐ.நா.வின் காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவைக்கு (UNFCCC), அதன் மோசமான காலகட்டத்தில் தலைவரானார். 2009 கோபன்ஹேகன் உச்சிமாநாட்டின் ஒப்பந்தத்தை ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த உலகம் எட்டத் தவறியது. ‘அரசியல் குப்பைத்தொட்டி’ என்று இவர் அழைக்கும் பேச்சுக்களை அகற்றி, தனித்துவமான நம்பிக்கையை ஊட்டினார். இது வெற்றி தந்தது.

ஃபிகரஸ் உலகத் தலைவர்களை 2015 பாரிஸ் ஒப்பந்தத்திற்கு வெற்றிகரமாக திசை மாற்றினார். இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த அநேகப் பெண்களுடன் இணைந்து காலநிலை மாற்றத்தின் பாலின பரிணாமம் பற்றி உரைப்பதில் ஃபிகரஸ் வெற்றி கண்டுள்ளார். அடுத்து 10 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தை கையாள உலகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த புத்தகம் ஒன்றைத் தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

 

 • ரியானா கன் ரைட்
  கொள்கை (Policy)

டெட்ராய்ட் நகரின் சுகாதாரத் துறையில் 2010-ஐ ஒட்டிய ஆண்டுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் ரியானா கன்-ரைட் (Rhiana Gunn-Wright) பல்வேறு வகையான சமூக-நீதிப் பிரச்சனைகளை சுற்றுச்சூழல் எப்படி வடிவமைக்கிறது என்பதை உணர்ந்தார். அரசு உடனடியாகக் காலநிலை மாற்றம் குறித்துப் பேச வேண்டும் என்று நினைத்த அவர் “வெறும் சூரியத் தகடுகளை மட்டும் கொண்டு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது” என்கிறார். “மக்கள் விஷமேற்றப்படுகின்றனர்.” முற்போக்கான சட்டமியற்றுபவர்களுடன் தொடர்புகளுடைய நியூ கன்சென்ஸஸ் என்னும் அறிவாராய்ச்சி நிறுவனத்தின் பின்னணிப் பணிகளாக தேசிய அளவில் ஓர் ஒட்டுமொத்த அணுமுறையைக் கொண்டுவர கன்-ரைட் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்தக் குழுமத்தின் புதிய பசுமை ஒப்பந்த கொள்கையின் தலைவராக, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தக் கொள்கையின் திட்டத்தையும் அதன் அம்சங்களையும் ஆராய்வது குறித்து பொறுப்பேற்றுள்ளார். வாஷிங்டனில் ஜனநாயகவாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமெனில் கன்-ரைட்டின் திட்டங்கள் சட்டமாக மாறலாம்.

 

 • ஹில்டா ஹெய்ன்
  ஆட்சிமுறை (Governance)

மார்ஷல் தீவுகளில் காலநிலை மாற்றம் நிஜமாகவே அதிபர் ஹில்டா ஹெய்னின் (Hilda Heine) வாயிற்படியில் உள்ளது. “கடற்கரையிலிருந்து தண்ணீர் வரும் என்பதால் என் வீட்டைச் சுற்றி நான் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டியிருந்தது” என்கிறார். அதிபர் ஹெய்னின் தாழ்வான பசிபிக் தீவைக் கடல் வேகமாக ஆக்கிரமித்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தகவமைப்பு நடவடிக்கைகளாக கடலோர பாதுகாப்பு அமைப்புகளும் கடல் சுவர்களும் எழுப்பப்பட்டுள்ளன எனக் கூறுகிறார். ஹெய்ன் தனது நாட்டின் நிலைமையையும் தனது தோழர்கள் சந்திக்கும் இக்கட்டான சூழ்நிலைகளையும், இயன்றால் இடமாற்றம் செய்வது குறித்தும் சர்வதேச அளவில் பகிர்ந்து வருகிறார். வளிமண்டல பசுங்குடில் வாயுக்களை மிகக் குறைந்த அளவே வெளியிட்டபோதிலும், காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் சுமார் 50 நாடுகள் கொண்ட காலநிலை பாதிப்பு மன்றத்தின் (Climate Vulnerable Forum) தலைவராக ஹெய்ன் உள்ளார். அனைவரும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதில் ஹெய்ன் பிடிவாதமாக உள்ளார். மார்ஷல் தீவுகளை 2050-இல் கரியமில-சமநிலை நாடாக மாற்றுவதில் அவர் உறுதிகொண்டுள்ளார்; பாரிஸ் உடன்படிக்கையின் கீழ கரியமில வெளியேற்ற உறுதிமொழியைத் தாக்கல் முதல் நாடும் இதுவே.

 • ஹிந்தொ ஓமராவு இப்ராஹிம்
  பூர்வகுடி செயல்பாடு (Indigenous Activism)

ஆப்பிரிகாவின் சாட் நாட்டின் ம்பொரோரா எனும் ஆயர் இனத்தைச் சேர்ந்த ஹிந்தொ ஓமராவு இப்ராஹிம் (Hindou Oumarou Ibrahim) கடந்த பத்து ஆண்டுகளாகக் “[காலநிலை மாற்றம் குறித்த] சர்வதேசத் தீர்மானங்களுக்கும் உண்மையான களநிலவரங்களுக்குமிடையே நிலவும் இடைவெளியைக் குறைக்க” உழைத்து வருகிறார். “என் நாட்டில் எப்படி இருக்கிறதென்பது குறித்து மக்களிடம் சொல்ல வேண்டும்.”

பூர்வகுடி குழுக்கைளைச் சந்திக்க நாடு முழுவதும் பயணித்த இவர், சுற்றுச்சூழல் எவ்வாறு மாறிக் கொண்டிருந்தது என்பதைத் தொடர்ந்து கேட்டுவந்தார். “ஒவ்வோர் ஆண்டும் வளங்கள் குறைவதையும் எங்கள் மக்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடுவதையும் பார்க்கிறேன்” என்று கூறுகிறார் இப்ராஹிம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாரிசில் நடைபெற்ற 2015 காலநிலை மாற்ற கூட்டங்களில் பங்கெடுத்து தங்கள் உரிமைகளின் அங்கீகாரத்திற்காக போராடிய பூர்வகுடிக் குழுக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான இப்ராஹிம், உடன்படிக்கைகள் கையெழுத்தான மேடையில் பேச தேர்வு செய்யப்பட்டார். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறவர்கள் பூர்வகுடியினர், என்றபோதிலும் அவர்களால் இதற்குத் தீர்வுகளை வழங்க முடியும் என்கிறார். “பூர்வகுடி மக்களின் மரபார்ந்த அறிவு, அது நூற்றாண்டுகள் பழமையானது, உலகம் தகவமைத்துக் கொள்ள உதவும்.”

 • டெஸ்ஸா கான்
  சட்டம் (Law)

2015-இல் வட தாய்லாந்தில் ஒரு ஆதாய நோக்கமற்ற பெண்கள் மனித உரிமை அமைப்பின் சார்பாக டெஸ்ஸா கான் (Tessa Khan) பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சுமார் 5,000 மைல்கள் தொலைவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கொன்று அவர் கவனத்தை ஈர்த்தது. ஹேகில் உள்ள நீதிமன்றம் ஒன்று சுமார் 900 டச் குடிமக்களுக்கும் அர்ஜென்டா என்ற அமைப்பிற்கும் சாதகமாக தீர்ப்பளித்திருந்தது. அந்த வழக்கானது பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கக் கோரி நெதர்லாந்து நாட்டின் அரசுக்கு எதிராக தொடரப்பட்டது. காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட, நீதிமன்றம் வலிமைமிக்க கருவி என்பதை உணர்ந்த டெஸ்ஸா, மனித உரிமைகளுக்கு எதிரான “அமைப்புரீதியான மிகப்பெரிய அச்சுறுத்தல்கள்” என்று அவர் அழைக்கும் இப்பிரச்சினையை மட்டுப்படுத்தும் வழிமுறை என்றும் உணர்ந்தார். லண்டனுக்கு மாறிய டெஸ்ஸா, அர்ஜென்டா அமைப்பில் இணைந்தார். காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கைகளுக்குப் போதுமான காலநிலைக் கொள்கைகளைக் கொண்டிராத அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பவர்களுக்கு சட்டரீதியான உதவிகளை டெஸ்ஸா தற்போது வழங்கிவருகிறார்.

புதைப்படிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கும், சாதாரண மக்களின் மேல் காலநிலை மாற்றத்தின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் காண்பிக்கவும் இந்த வழக்குகள் கவனம் ஏற்படுத்தும் என்று தான் நம்புவதாக டெஸ்ஸா கூறுகிறார்.

 • ரேச்சல் கைட்
  வளங்குன்றா வளர்ச்சி (Sustainability)

சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் ஒரு பெரும் பிரச்சனையாக வெடித்துள்ள நிலையில், புதைபடிவ எரிபொருட்களில் இருந்து மாற்றுப் பாதை எடுப்பது குறித்த வழிமுறைகளுக்கு நாட்டின் தலைவர்களும் பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகளும் அணுகும் ஒரே ஆளாக ரேச்சல் கைட் (Rachel Kyte) உருவெடுத்துள்ளார். செப்டம்பர் 2019-இல் நடந்த ஐ.நா. காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் ஆற்றல் மாற்று நிலையை துரிதப்படுத்த நாடுகள் மற்றும் நிறுவனங்களை புது பொறுப்புகள் ஏற்கச் சொல்லி ஐ.நா. பொதுச் செயலாளரின் உந்துதலை வலியுறுத்துவதில் இவர் பெரும் பங்கு வகித்தவர். உலக வங்கியின் காலநிலைத் திட்டத்தின் தலைவரான கைட் பேச்சுவார்த்தைகளின் விளைவான பாரிஸ் உடன்படிக்கைக்கு முன்னதாக, காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட ஆர்வமிருந்தும் போதுமான வளங்கள் இல்லாத வளர்ந்துவரும் நாடுகளுக்குப் பல நூறு கோடி டாலர்கள் ஈட்டுவதற்கு தேவையான உத்திகளை வகுத்துள்ளார். டஃப்ட்ஸ் பல்கலைகழகத்தின் பிளெட்சர் புலமையின் புல முதன்மையரான இவர், வளங்குன்றா வளர்ச்சி அனைவருக்கும் என்ற ஆதாய நோக்கமற்ற அமைப்பை நடத்தி அதன் மூலம் வளர்ச்சி குன்றிய இடங்களில் ஆற்றல் பெறவும் புதைப்படிவ எரிபொருட்களிலிருந்து விலகவும் உதவிவருகிறார். “நாம் அனைவரையும் கவனித்துக் கொள்கிறோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.” என்கிறார் கைட்.

 • கேட் மார்வெல்
  அறிவியல் (Science)

வலைப்பதிவுகள், ட்வீட்டுகள், ஒலிக்கோவைகள் ஆகியவற்றின் வழியாக காலநிலை மாற்றம் குறித்த திரிந்த தகவல்களைக் கதைசொல்லல் மூலம் முறியடித்துவருகிறார் மார்வெல் (Kate Marvel). “அறிவியலில் ஈடுபடுவது அறிவியல் பற்றிப் பேசுவதும் பரஸ்பரம் தனிப்பட்ட விஷயங்களாக நான் பார்க்கவில்லை” என்கிறார். 2013-ஆம் ஆண்டு லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வுக் கூடத்தில் முது முனைவர்பட்ட ஆராய்ச்சி அறிஞராக இருந்தபோது, மனிதச் செயல்பாடுகள் நிச்சயமாக உலகளாவிய மழைப்பொழிவின் வடிவங்களை மாற்றியிருக்கின்றன என்பதைக் கண்டறிய மார்வெல் உதவினார். தற்சமயம் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வுகளுக்கான நாசா கோதார்டு நிறுவனத்தில் இணை ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ள மார்வெல், சக விஞ்ஞானிகளுடன் இணைந்து காலநிலை மாதிரிகள் மற்றும் மரவளையங்கள் ஆகியவற்றை ஆராய்கிறார்; 1900 ஆண்டு தொடங்கி வறட்சியை காலநிலை மாற்றம் பாதித்துவருகிறது என்பதையும் கண்டறிந்திருக்கிறார். காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான இவருடைய அணுகுமுறை, 2017-இல் இவர் நிகழ்த்திய டெட் (TED) உரையில் மிகச் சிறந்த முறையில் சுருக்கமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அறியப்படாத எதிர்கால உலகளாவிய வானிலையில் மேகங்களின் தாக்கம் குறித்து அது அமைந்திருந்தது. “எதிர்காலம் எப்படி இருக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனாலும் நம் குழந்தைகளை அங்கு அனுப்புகிறோம்; அவர்கள் திரும்பி வரப் போவதில்லை. எதிர்கொள்ளும் எதையும் சந்திக்க அவர்களை நாம் தயார்படுத்த வேண்டும்” என்கிறார் மார்வெல்.

 • சுனிதா நராய்ன்
  (Advocacy)

1982-இல் இருந்து சுற்றுச்சூழல் கொள்கை ஆய்வாளராக உள்ள சுனிதா நராய்ன் (Sunita Narain), மழைநீர் சேகரிப்பு, புலிகள் பாதுகாப்பு, காற்று மாசுபாடு மட்டுப்படுத்துதல் போன்ற பிரச்சினைகளின் தீர்வுக்கான பங்களிப்பிற்காகப் பல விருதுகளை வென்றுள்ளார். “நாம் எப்போதும் தீர்வுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளது குறித்து நான் மிகவும் நன்றாக உணர்கிறேன்” என்கிறார் சுனிதா. காலநிலை உரையாடலில் இன்றைக்குத் தெற்குலகின் (Global South) சிறுபான்மைக் குரல்கள் அமிழ்ந்து போவது குறித்து சுனிதா கவலை கொண்டுள்ளார். “[காலநிலை உரையாடல்] என்பது இன்னும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்” என்று சுனிதா கூறுகிறார். “எல்லோருக்கும் வளர்ச்சிக்கான உரிமை உண்டு; அதன்படி எல்லோரும் தூய்மையான ஆற்றலுக்கான உரிமையும் உண்டு.”

வெள்ளம், பேரழிவு போன்றவை நடைமுறை எதார்த்தமாக மாறியிருப்பதால் இந்திய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் காலநிலை மாற்றத்தை இன்னும் தீவிரமாக அணுகத் தொடங்கியுள்ளனர் என்று சுனிதா நம்புகிறார். இவர்களும், மற்ற வளர்ந்துவரும் நாட்டின் தலைவர்களும் உடனடியாக [பசுங்குடில் வாயு] வெளியேற்றத்தைக் குறைக்க உலகளாவிய அளவில் இப்போது பேச வேண்டும். “மனித இனத்தின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கையுள்ளது. ஏழைகளின் மீதான தாக்கத்தின் அநீதியை எடுத்துரைத்தால், அவர்கள் புரிந்துகொள்வார்கள். நம்முடைய போர் முற்றிலுமாகத் தோல்வியடையாது.”

 • எலன் பேஜ்
  தகவல்தொடர்பு (Communication)

நடிகையும் செயற்பாட்டாளருமான எலன் பேஜ் (Ellen Page), 2019-ஆம் ஆண்டின் இறுதியில் இரு புத்தகங்களை வாசித்தார் – ஜோன் பாக்ஸ்டர் எழுதிய ‘த மில்: பிப்டி இயர்ஸ் ஆவ் பல்ப் அண்ட் பிரொடஸ்ட்’ (The Mill: Fifty Years of Pulp and Protest), இங்கிரிட் வால்ட்ரோன் எழுதிய ‘சம்திங் இன் த வாட்டர்’ (Something in the Water). இந்தப் புத்தகங்கள் பேஜின் சொந்த ஊரான கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் பூர்வகுடிகள் மற்றும் கறுப்பின சமூகங்களைத் தலைமுறைகளாக பாதித்துக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் இனவாதத்தை அவருக்கு அறிமுகப்படுத்தின. தன்னுடைய கோபத்தை வால்ட்ரோனின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு (அதன் தலைப்பைப் பகிர்ந்துகொண்ட) ஆவணப்படம் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தினார். சுற்றுச்சூழல் இனவாதத்தினால் உடல்நல பாதிப்புக்கு உள்ளான சமூகங்களையும் அவர்களின் எதிர்ப்பையும் ஆவணப்படம் ஆராய்ந்திருந்தது. ஆவணப்படத்தில், நோவா ஸ்காட்டியாவுக்குத் திரும்பும் பேஜ், தங்கள் சமூகத்தை மீட்டெடுப்பதற்கான பணியை முன்னெடுத்திருக்கும் பெண்களிடம் பேசுகிறார். ஷுபனாகடி நதிக்குத் தீங்கு விளைக்கும் இயற்கை எரிவாயு சேமிப்புக் கிடங்கு ஒன்றை நிறுவ இருந்த நிறுவனத்தைத் தடுத்து நிறுத்தியது, போட் ஹார்பர் என்ற பிக்டோ லேண்டிங் ஃபர்ஸ்ட் நேஷன் என்னும் அரசு அமைப்பின் முந்தைய நீர்வாழ் மையத்துக்கு அருகில் அமைந்திருந்த கூழ் ஆலையினால் ஏற்பட்ட கழிவைச் சுத்தம் செய்ய போராடியது போன்றவற்றைக் குழுக்கள் அமைத்து மேற்கொண்டனர். “நான் பார்த்ததில் இந்த மனிதர்கள் சந்தித்துவந்த வன்முறை மிகக் கொடூரமானதாகும்” என்கிறார் பேஜ். “இவை உண்மையாகவே வாழ்வா சாவா என்கிற பிரச்சினைகள்.”

 • ஆனி சிம்ப்ஸன்
  நிதி (Finance)

உலகத்தை புதைபடிவ எரிபொருட்களில் இருந்து மாற்றுநிலைக்குத் திசை திருப்பும்போது “பணம் பேசும்” என்கிறார் கலிபோர்னியாவின் பொது ஓய்வூதிய நிதி அமைப்பான கால்பெர்ஸ்-இன் (CalPERS) உலகளாவிய நிர்வாக இயக்குநர் ஆனி சிம்ப்ஸன் (Anne Simpson). சிம்ப்ஸனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவரது நிறுவனம் உலகின் மிகப்பெரிய பொது நிதியின் தரப் பட்டியலில் இருக்கிறது, சிம்ப்ஸன் கால்பெர்ஸின் அதிகாரத்தை பயன்படுத்தி 350 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளின் மூலம் மாற்றம் ஏற்படுத்த வற்புறுத்தி பயன்படுத்தியுள்ளார். காலநிலை மாற்றம் தங்களுக்கு வணிகத்திற்கு ஏற்படுத்தவிருக்கும் அபாயங்கள் குறித்து உலகின் மிகப் பெரிய நிறுவனங்கள் சிலவற்றின் நிலையைப் பொதுவில் வெளியிட வைத்தது போன்றவை சிம்ப்ஸனின் முந்தைய வெற்றிகளில் சில. தன்னுடைய இலக்கை விரிவுபடுத்த ‘கிளைமெட் ஆக்‌ஷன் 100+’ (Climate Action 100+) என்கிற முதலீட்டு சார் அமைப்பின் மூலம் பசுங்குடில் வாயு வெளியேற்றத்திற்குக் காரணமான 100 பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களின் உத்திகளை மாற்ற நடத்திய பேச்சுவார்த்தைகளைப் பின்னால் இருந்து இயக்கினார். அது கிளென்கோர் போன்ற பெரும் சுரங்க நிறுவனங்களை நிலக்கரி உற்பத்தியைக் குறைக்கவும், ஷெல் எண்ணெய் மற்றும் எரிபொருள் நிறுவனங்களின் மாசு வெளியேற்றத்தைக் குறைக்க பொறுப்புகள் ஏற்கவும் வலியுறுத்தியது. சிம்ப்ஸனுக்கு முதலீட்டாளர் செயல்பாடு ஒரு சிறந்த வணிக உணர்வே. “ஒரு ஆரோக்கியமான சூழல் அமைப்பின்றி எந்த வணிகமும் செயல்படாது” என்கிறார் இவர்.                  

 • கிரெட்டா துன்பெர்க்
  இளையோர் செயல்பாடு (Youth Activism)

2018-இல், 15 வயது கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) ஸ்வீடனில் காலநிலை நெருக்கடியை கவனப்படுத்தும் விதமாக பள்ளி வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார். அன்று முதல் அவரது ‘செய்தி’ பரவியது – அதிக கரிம வெளியேற்றம் காரணமாக விமான பயணத்தை கிரெட்டா தவிர்த்தார். இது ஒரு மெய்யான அவசரநிலை என்ற தெளிவை பெரியவர்களும் கொள்கை-வகுப்பாளர்களும் உணரச் செய்யும்விதமாக உலகம் முழுவதும் உள்ள இளையோர் கிரெட்டாவின் பாதையைத் தொடர்ந்தனர், போராடினர், பேரணி நடத்தினர். “நாங்கள் குழந்தைகள் சொல்கிறோம், ‘நமது எதிர்காலம் பற்றி யாருக்கும் அக்கறையில்லாத போது நமக்கென்ன அக்கறை? இந்த சமுதாயத்தில் உண்மைகள் ஒரு பொருட்டாக இல்லாதபோது நாம் ஏன் உண்மைகள் பற்றி கவலைப்பட வேண்டும்?’ குழந்தைகள் இதுபோன்று ஏதேனும் சொன்னால் பெரியவர்கள் மோசமாக உணர்வார்கள்” என்று டைம் இதழிடம் ஏப்ரலில் (2019) கிரெட்டா கூறியிருந்தார். 15 நாள் படகுசவாரி மூலம் அட்லாண்டிக்-ஐக் கடந்துவந்த கிரெட்டா (2019) ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்காவில் வந்திறங்கினார். (வடக்கு-தெற்கு) அமெரிக்க கண்டம் முழுவதும் கார்பன்-தடமற்ற, மாதங்கள் நீளும் பயணங்களுக்குத் திட்டமிட்டுள்ளார். “நம் ஒட்டுமொத்த நாகரிகத்தையும் பாதிக்கவிருக்கும் ஓர் இருத்தலியல் நெருக்கடி இதுவாகும், மனிதகுலம் எதிர்கொண்ட மிகப் பெரிய நெருக்கடியும் இதுவே” என்கிறார் கிரெட்டா. “இந்த இயக்கத்தை நிறுத்தம் திட்டம் எதுவும் எனக்கில்லை, வேறு யாருக்கும் அப்படியான திட்டங்கள் உண்டு எனவும் தோன்றவில்லை.”                 

 • கொட்சாகோன் வெராகோம்
  கட்டிடக்கலை (Architecture)

ஒரு குழந்தையாக, பாங்காக்-இன் நடைபாதைகளில் வளரும் இளந்துளிர்கள் வெடித்து வளர்வதற்கு கொட்சாகோன் வெராகோம் (Kotchakorn Voraakhom) அவற்றை எடுத்துவிடுவார். இப்போது, நிலஅமைப்புக் கட்டிடக் கலைஞராக தென்கிழக்கு ஆசியாவின் மாபெருநகரங்கள் (megacities) காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் வகையிலான பூங்கா போன்ற அமைப்புகளை வடிவமைத்து வருகிறார். சுலாலோங்கோன் பல்கலைக்கழகத்தில் இவர் வடிவமைத்திருக்கும் 11 ஏக்கர் பரப்பளவிலான பூங்கா, கடந்த 30 ஆண்டுகளில் பாங்காங்கில் முதல் புதிய பொதுப் பூங்காவாகும்; இதன் புத்தாக்க வடிவமைப்புக்காக பல விருதுகளை இது வென்றது. மக்கள்நெருக்கம் மிகுந்த பெருநகர் ஒன்றுக்குத் தேவையான பசுமையை உள்ளடக்கி, அதிகப்படியான நீரை உறிஞ்சிக் கொண்டு மறுபயன்பாட்டுக்கு அனுப்பும் ஓர் அமைப்பாக – மோசமடைந்துகொண்டிருக்கும் புயல்கள், வெள்ளங்கள், கடல்மட்ட உயர்வு போன்றவற்றின் அச்சுறுத்தல்கள் உள்ள தாய்லாந்தின் தலைநகரில் இது அமைந்துள்ளது. அடுத்ததாக 36 ஏக்கர் பரப்பில் சுமார் 9 மில்லியனுக்கும் அதிகமான லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்க அமைப்பை வொராகோம் உருவாக்க உள்ளார். போரஸ் சிட்டி நெட்வொர்க் (Porous City Network) என்கிற இவருடைய சமூக நிறுவனம் தென்கிழக்கு ஆசியாவில் பாதிப்புக்குள்ளாகும் சாத்தியமுள்ள சமூகங்களுக்கு எதிர்வரும் பேரழிவுக்குத் தகவமைத்துக் கொள்ள தண்ணீர் “தாகம் தணிக்கும்” பூங்காக்கள், நகர்ப்புற வேளாண்மை, பசுமைக் கூரைகள், கால்வாய் மறுசீரமைப்பு போன்ற பசுமை இடையீடுகளைப் பரிந்துரைக்கிறது.

 • மிராண்டா வாங்
  கண்டுபிடிப்பு (Invention)

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கழிவு மேலாண்மை அமைப்பொன்றிற்குப் பள்ளியில் இருந்து களப்பயணம் சென்றிருந்த மிராண்டா வாங் (Miranda Wang), நிலத்தில் இட்டு நிரப்புவதற்காக இருந்த பேரளவான ஞெகிழியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தற்சமயம் 25 வயதாகும் வாங், பயோசெலெக்‌ஷன் (BioCellection) என்னும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஸ்டார்ட்-அப் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் துணை-நிறுவனராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுவான பயன்பாட்டில் உள்ள ஞெகிழி, மறுசுழற்சி செய்யவியலா ஞெகிழி ஆகியவற்றை முன்னோடி வேதியியல் தொழில்நுட்பம் மூலம் புதிய பொருட்களாக மாற்றும் பணியில் பயோசெலெக்‌ஷன் ஈடுபட்டுள்ளது. “ஞெகிழி என்பவை சாதாரண இயற்கைச் சேர்மங்களே, இயற்கையான கார்பன்கள், இயற்கைக்கு மாறான வகையில் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன, இந்த அமைப்பை ஒருமுறை இடையூறு செய்துவிட்டால், பிறகு அந்த் இயற்கைக் கட்டுமானத் தொகுதிகளைக் கொண்டு எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம்” என்கிறார் வாங். “ஞெகிழிக் குப்பையில் இருந்து புதிய ஒன்றை நாம் உற்பத்தி செய்யமுடியும், அது உபயோககரமான புதிய பொருட்களாக மட்டுமல்லாமல், எளிதில் உடைந்து மட்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.” கலிஃபோர்னியாவின் கழிவு-மேலாண்மை அமைப்பான சான் ஜோஸ் உடன் இணைந்து பயோசெலக்‌ஷன் மேற்கொண்ட முதல் திட்டம், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் போன்ற குழுக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது; வாங் தற்சமயம் உலகமெங்கும் மற்ற நகரங்களில் தன் பார்வையைத் திருப்பியுள்ளார்.

 • கேத்தரின் வில்கின்சன்
  கல்வி (Education)

கேதரின் வில்கின்ஸன் (Katharine Wilkinson) ஒரு எழுத்தாளர், பேச்சாளர், மற்றும் ஆசிரியர். வடக்கு கரோலைனாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு வெளிப்புற உலாவலுக்குச் சென்றார், அப்போது தொடங்கி இந்தப் புவியைப் பாதுகாக்கும் வேட்கையைக் கொண்டிருக்கிறார். “வெளியுலகை நேசிக்கும் நிலையில் இருந்து … இன்னும் எவ்வளவு வேலை செய்யவதற்கு இருந்திருக்கிறது என்னும் குற்றவுணர்ச்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்” என்கிறார் வில்கின்ஸன். Drawdown: The Most Comprehensive Plan Ever Proposed to Reverse Global Warming என்ற இவரது புத்தகம் விற்பனையில் சிறப்பிடம் பிடித்தது. வில்கின்ஸன் தான் அந்நூலின் முதன்மை ஆசிரியர். இவரது வழிகாட்டுதல் கொள்கைகளில் ஒன்று காலநிலை மாற்றத்தின் சொல்லாடலை இன்னும் “சற்று தைரியமாகவும் உணர்வுசார் நுண்ணறிவாகவும் மாற்றவேண்டும்” என்பது. இந்த நூல் “கடினமானவற்றைத் தாண்டிச் செல்வது, சவால்களைச் சமாளித்து எழுவது” குறித்தது என்கிறார் வில்கின்சன். பெண்ணிய காலநிலை மறுமலர்ச்சி என்ற வெளிப்புற உலாவைச் சமீபத்தில் இணைந்து வழிநடத்திய வில்கின்ஸன், பல்வேறு துறைகளில் இருந்து பெண்களைத் திரட்டினார். “காலநிலை நெருக்கடி ஒரு தலைமை நெருக்கடியும்கூட; நிறைய சிறுமிகளும் பெண்களும் இந்த வெற்றிடத்தை நிரப்பி, நம்மை முன்னோக்கி அழைத்துசெல்ல இறங்கியிருக்கிறனர் … ஒருவிதத்தில் காலநிலை மாற்ற இயக்கத்தில் முன்பிருந்த நிலை அல்ல” என்கிறார் வில்கின்ஸன்.

 • வு சங்குவா
  வணிகம் (Business)

1990-இல், பீஜிங்கில் இளம் புகைப்படஇதழாளராக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஆவணப்படுத்தத் தொடங்கியிருந்த வு சங்குவா (Wu Changhua), இப்பிரச்சினைகள் மரங்கள் நடுவதும் தெருக்களைச் சுத்தமாக வைத்திருப்பதும் என்றே நினைத்தார். சீனாவின் கொள்கைவகுப்பாளர்கள் சிலர் என்ன விலைகொடுத்தும் கட்டுப்பாடற்ற வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததால் எந்த வேறுபாட்டையும் அறிந்திருக்கவில்லை. வணிகம் மற்றும் சட்டத்தில் நுழைந்த வு, வேகமாகக் கற்றுக் கொண்டார், அவருடைய பொறுமை உலகின் இரண்டாவதான பொருளாதாரத்தை சுற்றுச்சூழலின் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து உலக மேடையில் பசுமை சவால்களில் வெற்றி கண்டு அதன் மறுவாழ்வை காக்க உதவியது. இது சாமர்த்தியத்தை உள்ளடக்கியது.

புகை கக்கும் தொழிற்சாலைகள், நச்சுப்படும் நீர்த்தடங்கள் ஆகியவற்றுக்காக சர்வதேச நிறுவனங்கள் சீனாவை வெளிப்படையாகத் திட்டியபோது, அதிகாரிகளுடன் வு பின்னணியில் இருந்து தொழிற்சாலையிலும் நகர்புற திட்டமிடலிலும் சர்வதேச அளவுகோல்களை உட்புகுத்தினார். “நீண்ட காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்தோம். ஆனால் இப்போது நாங்கள் முன்னணியில் உள்ளோம்” என்கிறார் வு. எதிர்கால புத்தாக்க மையம் (Future Innovation Centre) என்ற அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரியான வு அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் வளங்குன்றாமைக்கான உத்திகளை குறித்தும் குறைந்த கரிம பொருளாதாரம் பற்றியும் வழிகாட்டுதல்களை வழங்கிவருகிறார்.


Meet 15 Women Leading the Fight Against Climate Change என்ற தலைப்பில் டைம் காலநிலைச் சிறப்பிதழில் வெளியான தொகுப்பு; ஓவியங்கள் ஜாக்கி ஓக்லே

தமிழில் ரமா தேவி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.