பூமிக்கு டூர் போகலாம்.

ன்பு மாணவ மாணவியர்களே.! ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா கூட்டிட்டு போறாங்க.அதற்கான விவரம் வந்திருக்கு எல்லாரும் நோட்டீஸ் போர்டுல போய் பாருங்க அப்படின்னு” மைக்ல பள்ளி தலைமையாசிரியர் அறிவிச்சாங்க.வகுப்பறையிலிருந்து வேகமா ஓடி போய் ஜோ,ராக்கி,அவங்க வகுப்பு மாணவர்களும் ஆர்வமா பார்த்தாங்க. “எங்க டூர் போட்டு இருக்காங்கன்னு” ஜோவுக்கு ரொம்ப ஆர்வமா இருந்தது.போய் அறிவிப்பு பலகையை பார்த்தவுடனே அவளுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. முதலில் இங்கிருந்து செவ்வாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையம்  போயிட்டு இரண்டு நாள் பயிற்சி எடுத்துட்டு அப்புறம் அங்கிருந்து பூமிக்கு போய் அங்க ஐந்து நாள் இருந்து சுத்தி பாத்துட்டு அப்பறம் திரும்ப செவ்வாய் கிரகத்துக்கு வர மாதிரி சுற்றுலா திட்டம். எப்புடியும் ஒரு வாரம் அப்புறம்தான் செவ்வாய் கிரகத்திற்கு அதாவது வீட்டுக்கு திரும்பி வர மாதிரி சுற்றுலா அட்டவணை போட்டிருந்தாங்க. ஆனால் ராக்கிக்கு அது சுத்தமா பிடிக்கலை.  ஏன்னா ! ‘பூமி மிகுந்த வெப்பமான பகுதி.ஓசோன் மண்டல ஓட்டையால் பூமி சூடாகி,அங்கு உள்ள பனிமலைகள் எல்லாம் உருகி,2100 ம் ஆண்டு பூமியில் உள்ள மனிதர்கள்,உயிரினங்கள், நிலப்பரப்பு என எல்லாமே அழிந்து போனது. சிலர் மட்டும் தப்பித்து செவ்வாய் கிரகத்தில் குடியேறி வாழ்ந்து,1000 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பெரும் மக்கள் தொகை கொண்ட உலகமாகிடுச்சுன்னு’ செவ்வாய் உலகத்தில் உலாவும் இந்த செய்தி.ஆனால் பூமியை பற்றி நிறைய குறிப்புகள் இன்னும் இருக்கு.வதந்திகளும் பல உலா வருது.

அதனாலும் அவனுக்கு பூமிக்கு போறது சற்று பயமாகவும் இருந்தது.

மறுபடியும் வகுப்பு தொடங்குச்சு. “ஸ்டுடென்ட்ஸ் டூர் அட்டவணை எல்லாம் பார்த்திங்களா ? உங்க எல்லாருக்கும் ஓகே வா ன்னு” மேரி டீச்சர் கேட்டாங்க. எல்லா மாணவர்களும் ஒரே குரலில் “எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு டீச்சர்ன்னு”  சொன்னாங்க.

“சரி,உங்க வீட்டுல சொல்லிருங்க.  அப்பறம் ஆபீஸ்ல போய் பேர் கொடுத்துடுங்கன்னு” டீச்சர் சொன்னாங்க.

“டீச்சர் நான் பூமிக்கு இதுதான் முதல் தடவைய போறேன்.அதனால பூமி பத்தி சொல்லுங்கன்னு” ஆர்வமா கேட்டாள் ஜோ.

“அருமையான கேள்வி. மனிதர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள்  வாழும் இடமாக இருந்தது இந்தப் பூமி.பல ஆயிரக்கணக்கான வருஷத்துக்கு முன்னாடி இந்த அண்டத்தில் தான் மனிதர்கள், உயிரினங்கள்,கடல்வாழ் உயிர்கள் எல்லாம் முதன்முதலாக தோன்றியதுன்னு விஞ்ஞானிகள் சொல்லுவாங்கன்னு” சுருக்கமா சொன்னாங்க  டீச்சர்.

இதை கேட்டவுடனே அதுவரை அமைதியா இருந்த ராக்கிக்கு பூமிய பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் அதிகமாச்சு.உடனே

“டீச்சர் பூமி தோன்றி எவ்வளவு நாள் இருக்கும்னு” கேட்டான்.

“பூமி சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது” என்றார் டீச்சர்.

வகுப்பில் துருதுரு மாணவனான பென்னி,வேகமாக எழுந்து,” டீச்சர் நமக்கு ரெண்டு நிலா இருக்கு.அதுமாதிரி பூமிக்கு நிலா இருக்கான்னு” கேட்டான்.

சிரித்தப்படியே “ஏன் இல்ல பென்னி,இருக்கு ஆனா ஒரு நிலா தான்” என்றார் டீச்சர்.

அமைதியா எழுந்த சுஜி,”டீச்சர் நாமெல்லாம் பூமியிலிருந்து வந்தவங்களா ? அதை பத்தி சொல்லுங்க” என்றாள்.

“உண்மை தான் நாம எல்லாருமே ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பூமியிலிருந்து தான் செவ்வாய் கிரகத்துக்கு வந்தோம்.அப்போ,பல அறிவியல் விஞ்ஞானிகள் நாம இருக்குற செவ்வாய் கிரகத்துல மனிதர்கள் வாழ முடியுமான்னு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து,வந்து சில காலம் வாழ்ந்து, இங்க உள்ள நில அமைப்புகளை சரி செய்து,இங்க வாழ்கின்ற வசதியெல்லாம் செய்து அப்பறம் சில சில மனிதர்களா,இங்க வந்து குடியேற ஆரம்பிச்சு.அரசாங்கத்தையே நிறுவினாங்க. இப்ப நாம எல்லாம் சுதந்திரமா வாழ்ந்துட்டு  இருக்கோம்ன்னு” டீச்சர் சொல்லி முடிச்சாங்க.

சோகமான குரலில் “பூமி எப்படி அழிஞ்சதுன்னு” கேட்டாள் ஜோ.

“நாம இங்க ஒற்றுமையா இருக்கோம்.ஆனா பூமியில முந்தைய காலங்களில் பல நாடுகள்,பல மொழிகள் பேசுறவங்க.ஒரு நாட்டுக்கும், பக்கத்து நாட்டுக்கும் பிரச்சனை. நாட்டுக்குள்ளேயே ஜாதி,மத பிரச்சினை. ஒரே குழுவில் இருப்பவர்களுக்கு மத்தியிலயும் ஏழை,பணக்காரர் பிரச்சினை. அவர்களுக்குள்ள மேல் கீழ் ஆதிக்கம். தனித்தனி பிரிவினை. ஒற்றுமையில்லாத தனம். இதோட இல்லாமல் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் பூமியை  வளர்ச்சிக்கு கொண்டு போனாலும், ஒரு பக்கம் வேகமாக சூடாகி,ஓசோன் படல ஓட்டை அதிகமாகி,வெப்பம் அதிகரிச்சு,  பனிமலைகள் உருகி கடல் மட்டம்  அதிகமாக்கிட்டே வந்தது. ஒருபக்கம் மனிதர்களுக்குள்ள சண்டை  வந்து அழிய,  இன்னொரு பக்கம் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு பூமி அழிவுக்கு போயிருச்சுன்னு” சொல்லி முடிச்சாங்க டீச்சர்.

வகுப்பு முழுக்க ஒரு நிமிடம் அமைதியா இருந்தது.

“டீச்சர் இப்ப அங்க நம்மள மாதிரி மனிதர்கள் வாழுறாங்களேன்னு” ஆச்சரிமா கேட்டான் ராக்கி.

“ஆமா, பூமியில  நிறைய இடங்கள் அழிஞ்சு போயிடுச்சு. இப்ப ஒரு சில இடங்கள் மட்டும் தான் இருக்கு.அதுல இன்னமும் பல மனிதர்கள் வாழ்ந்துகிட்டு தான் இருக்காங்க.ஆனா ஒற்றுமையா இல்ல” என்றார் டீச்சர்.

வகுப்பு முடிந்து மணி அடித்தது.

“ஆனா, ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.பூமிக்கு போறதுக்கு அவ்வளவு சீக்கிரம் பர்மிஷன் கிடைக்காது. ஆனால் இந்த முறை கிடைச்சிருக்கு. அதனால நாம எல்லாரும் போறோம். நாம அங்க இருந்து தான் இங்க குடி வந்தாலும், நம்ம மறுபடியும் பார்க்க போறோம். டூர் வர்றதுக்கு முன்னாடி நீங்க எல்லாரும் பூமியில இருக்குற பகுதிகள் பத்தின அத்தனை தகவல்களையும் சேகரிங்க.அதை எல்லாம் நாளைக்கு வகுப்புல  நம்ம விவாதிக்கலாம் அப்படின்னு” டீச்சர் சொல்லிட்டு போனாங்க.

வகுப்பு முடிந்து எல்லா மாணவர்களும் கிளம்பிப் போனாங்க. ஆனா ஜோ மட்டும் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.

மறுநாள் வகுப்பு தொடங்கியது.

டீச்சர் வந்தாங்க, “குட்மார்னிங் ஸ்டுடென்ட்ஸ். எல்லாரும் டூர் பூமி பத்தின தகவல்களை சேகரிச்சீங்களா!  இன்னைக்கு விவாதிக்கலாமா ? அப்படின்னு” கேட்டாங்க டீச்சர்.

ராக்கி வேகமா எழுந்து, “நேத்து வர எனக்கு பூமிக்கு போகவே விருப்பம் இல்ல.ஆனா,இப்ப போய் பார்க்க தோனுது.எப்ப போறோம்னு சொல்லுங்கன்னு” ஆர்வமா கேட்டான்.

“ஆமாம் டீச்சர் எங்களுக்கும் தான்னு” ஆர்வமா எல்லா மாணவர்களும் சொன்னாங்க.

ஜோ மட்டும் அமைதியா இருப்பதை பார்த்துட்டு “ஏன் ஜோ பேசாம இருக்கன்னு” கேட்டாங்க டீச்சர்.

சோகமான முகத்தோட எழுந்த ஜோ,”நா டூர்க்கு வரலன்னு” சொன்னாள்.

அதிர்ச்சியான ராக்கி,ஜோவிடம் பலமுறை வற்புறுத்தி கேட்டும் காரணம் சொல்லாமல் இருந்தா ஜோ.

டீச்சர் ஜோகிட்ட “ஏன் டூர் வரலன்னு” காரணம் கேட்டார்.

“ஆமா,டீச்சர் அங்க தான் ஒற்றுமையா இல்லாம சண்டை வருதாம்.அத போய் நம்ம ஏன் பார்க்கனும்.அதான் நான் வரலன்னு” சொன்னாள் ஜோ.

கொஞ்ச நேரம் யோசித்த டீச்சர், “ஜோ,நாம எல்லாரும் அங்க போகலாம்.அங்க போய் அவங்க நம்மள பாக்கட்டும்” என்றார்.

“அவங்க நம்மள பாத்து,என்ன ஆக போகுது” என்று குழப்பமா கேட்டாள் ஜோ.

டீச்சர் சிரித்தப்படியே “ஆமா,நாங்க இங்க இருந்து,அங்க போய் ஒற்றுமையா இருக்கோம்ன்னு காட்டதான்” என்றார்.

ஜோ மட்டுமல்லாமல் எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியாக “சரி டீச்சர்” என்றார்கள்.

—————————————————————————————————————————–

கார்த்திக் கிருபாகரன் (எ) சீனிவாசன், 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.