உபநிஷதக் கதைகள் – எம்.ஆர். ஜம்புநாதன்

காணாத குதிரை

ஆதி காலத்தில் மகரிஷி ஒருவர் நான்கு வேதங்களையும் நன்கறிந்திருந்தார். வேதத்தில் உள்ள சதபத பிராமணத்தைச் செம்மையாய் அறிவிப்பதில் அவருக்கு யாரும் நிகரில்லை. ஆகவே மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் தெளிய அவரை அணுகுவது வழக்கம். ஒருதினம் மாணவன் ஒருவன் அவரை அணுகினான். “ஆசிரியரே! அஸ்வமேத யாகத்தில் யக்ஞம் செய்யப்படும் குதிரையைப் பற்றி அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டான். அதற்கு அம்மகரிஷி “நான் சொல்லும் குதிரையைக் கண்களால் காண முடியாது. ஆனால் நான் சொல்வதைக் கவனித்தால் ஒருவேளை உன் மனதிற்குப் புலனாகலாம்” என்று கூறினார்.

“உஷாகாலமே அந்தக் குதிரையின் தலையாகும். சூரியன் அதன் கண். காற்று அதன் சுவாசம். அனல் அதன் திருவாய். வருஷம் அதன் தேகம். சொர்க்கம், வானம், நிலம், திசை ஆகியவை முறையே முதுகு, வயிறு, மார்பு, பாகங்களாகும். பருவங்கள் அங்கங்களாகி, பட்சங்களும் மாதங்களும் அதன் முட்டுக்களாகும். இரவும் பகலும் அதன் கால்களாகி, நட்சத்திரங்கள் அதன் எலும்புகளாகும். மேகங்கள் மாமிசமாகி, மணல் அரைகுறையாகச் செரித்து அதன் வயிற்றிலிருக்கும் ஆகாரமாகும். மலை இதயமாகி, செடிகளும் கொடிகளும் ரோமங்களாகும். சூரிய உதயம் குதிரையின் முன்பக்கமாகும், அஸ்தமனமோ அதன் பின்பக்கமாகும். மின்னல் அதன் அசைவானால், இடிமுழக்கம் அதன் கால் உதையாகும். அதன் சலமே நீராகும், ஆனால் மொழியோ அதன் மொழியேயாகும். இக்குதிரைக்கு இரவு பகல் என இரண்டு பக்கங்கள் உண்டு. அதுவே தேவர்களையும் கந்தர்வர்களையும், அசுரர்களையும் மனிதர்களையும் இழுத்துச் செல்லும். சமுத்திரமே அதன் பந்துவும் பிறவிநிலையுமாகும்” எனப் பதிலளித்தார்.

மாணவன் அறிந்து வணங்கினான். உண்மையான அஸ்வத்தை அறிந்து ஆனந்த இளைஞனானான்.

(பிரகதாரண்யம் 1.1)

சிருஷ்டி கதை

ஆதியிலே ஆத்மா என்னும் ஒருவனே இருந்தான். தான் தனிமையாய் இருப்பதைக்கண்டு சற்றுப் பயந்தான். பயமென்பது அந்நியர்களால் ஏற்படுவதால் பயம் நமக்கு அவசியமில்லை எனப் பிறகு அச்சம் நீங்கினான். ஆனால் அந்நியனில்லையேல் நமக்கு ஆனந்தமில்லை என்பதை எண்ணித்தான் சிமிழின் இரு முடிகளைப்போல் பிரிந்து ஆணும் பெண்ணுமானான். பிறகு பெண்ணுடன் சேர எண்ணினான். “என்னைச் சிருஷ்டித்து என்னையே அணுக விரும்புகிறானே” என எண்ணிப் பெண் காணாமலாக விரும்பி பசுவானாள். அவன் காளையானான். உடனே பசுக்கள் சிருஷ்டியாயிற்று. இங்ஙனமே உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டி செய்தான். பிறகு கைகளைத் தேய்த்து அனலை ஆக்கி, வாயினால் ஊதி அக்னி முதலியவைகளைத் தோற்றுவித்தான். அங்ஙனமே ஆகாரங்களையும் செம்மையாக்கினான்.

அப்பால் தேவர்களும் மனிதர்களும் அவசியம் என்பதைக் கண்டுகொண்டான். நான் ஒருவனிருந்து பயனென்ன என ஷத்ரியனை உருவாக்கி வசு ருத்திரர்களையும் படைத்தான். பிறகு தர்மம் அவசியமெனச் சகல பொருள்களையும் சட்ட திட்டமுடன் செம்மையாக்கத் தர்மத்தைத் தோற்றுவித்தான். இதுதான் சிருஷ்டி கதை என உபநிஷத ரிஷியொருவர் சொல்வது வழக்கம்.

(பிரகதாரண்யம் 1.4.14)

உணவு இரகசியம்

வினா: உணவில் எத்தனை வகையுண்டு?

விடை: ஏழு வகையுண்டு.

வினா: எப்படி?

விடை: ஒரு உணவு யாவற்றிற்கும் பொதுவானது. அதுவே சாதாரணமாக நாமும் அனைத்து ஜீவராசிகளும் உண்ணும் உணவு.

இரண்டு உணவுகள் தேவர்களுக்குச் சொந்தமானது. அவை யக்ஞத்திலே தேவர்களுக்கு அளிக்கும் பற்றற்ற தியாகமும் தட்சணையும்.

ஒரு உணவு எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது. மிருகங்களும் மனிதர்களும் பிறந்த சிலகாலம் வரை தாய்ப்பால் பருகியே ஜீவிக்கும். இது நான்காவது உணவு.

வினா: மற்ற மூன்று உணவுகள் எவை?

விடை: அம்மூன்று உணவையும் ஆன்மா தனக்கே பயன் செய்துகொண்டது. அவற்றுக்கு மனம், மொழி, சுவாசம் எனப் பெயர்.

வினா: ஆன்மாவிற்கு மனம், மொழி, சுவாசம் எப்படி உணவாகும்?

விடை: ’என் மனம் இங்கு இல்லை. அதனால் நான் பார்க்கவில்லை, செவியுறவில்லை’ என மக்கள் சொல்வதை நீ அறிந்திருப்பாய். ஏனெனில் மனம் சென்றுவிட்டால் புலன்கள் ஆதாரமற்று அழிந்துவிடும். அப்புலன்களை மனதின் அகத்துணவு (அகத்திற்கான உணவு) என்பார்கள். வானம், யஜூர்வேதம், பித்ருக்கள், தாய்மார்கள், அறியப்படும் பொருள்களை மனத்தின் புறத்துணவு (புறத்திற்கான உணவு) என்பார்கள்.

மொழி என்பதும் ஒரு உணவே. இதுவும் அகத்துணவு புறத்துணவு என இருவகைப்படும். மொழி என்பது தனிப்பொருள் ஒன்றுமில்லை. விருப்பம் பொருள்களின் முடிவையே மொழி எனலாம். இதுதான் அகத்துணவு. நிலம், ரிக்வேதம், தேவர், தந்தை, தாய், அறிவு முதலியவை மொழியின் புறத்துணவு.

சுவாசமான மூன்றாவது உணவைக் கவனிக்கவும். சுவாசத்திலும் அகஉணவு புறஉணவு உண்டு. அதை அகச்சுவாசம் புறச்சுவாசம் என்பார்கள். பிராணன், அபானன், வியானன், உதானன், சமானம் ஆகியவை அகச்சுவாசம். சொர்க்கம், சாமவேதம், மனிதர் குழந்தைகளே புறச்சுவாசம்.

வினா: இந்த உணவுகளின் வடிவத்தையும் பிற பண்புகளைப் பற்றிச் சுருக்கமாய் கூறவும்?

விடை: மொழிக்கு நிலம் தேகமாகும். அது ஜோதி வடிவமாகும். மொழி செல்லும்வரை நிலம் விரிந்து அனல் புலனாவான்.

மனதிற்கு வானமே தேகமாகும். சூரியனே அதன் வடிவமாகும். மனம் செல்லும்வரை வானம் விரிந்து சூரியன் மலர்வான்.

சுவாசத்திற்கு நீர் தேகமாகும். அவன் வடிவமோ சந்திரனாகும். சுவாசம் செல்லும்வரை நீரைக் காண்பான். சந்திரனும் அப்படியே விரிந்து புலனாவான்.

வினா: இந்த உணவுகளை நன்றாய் அறிவதால் பயனென்ன?

விடை: இவற்றை நன்றாய் அறிந்தால் ஒருவன் தேகம் நீங்கும்பொழுது தன் மொழி, மனம், சுவாசவன்மையை மகனுக்களிப்பான். அதனால் தந்தை தன்னுடைய மிகுதியான செயல்களை மகன் பூர்த்தி செய்வதற்குச் சந்தர்ப்பமளிப்பான். இதனால் தந்தையும் நிலையுடனாவன்.

வினா: இம்மூன்று உணவுகளிலே முதன்மையானவன் எவன்?

விடை: இம்மூன்றில் முதன்மையானவன் சுவாசமே. சுவாசமில்லையேல், மொழி, மனம், புலன்கள் ஆகியவை இல்லை. இதை நான் தெளிவாக இவ்வாறு சொல்கிறேன் “உலகத்தில் எது அழிந்தாலும் காற்றிற்கு அழிவில்லை. அஸ்தமாகாத உணவெனப்படும் காற்று தேவனே அழியாதவன். அந்த நிலையத்திலேயே சூரியன் தோன்றி மறைகிறான். அவன் ஒருவனையே தேவர்கள் இன்றும் நாளையும் இருப்பவனாக எண்ணுகிறார்கள்.”

வினா: இந்த உணவை நான் எங்ஙனம் புசிப்பது?

விடை: நீ பிராணன் அபானன் வியானனான சுவாசங்களைப் பயிற்சி செய்யவும்.

வினா: பிராணனுக்கு வேறு பெயரென்ன?

விடை: அதற்கு அமுதன் எனப் பெயருமுண்டு. அதுதான் பெரிய உணவாகும்.

(பிரகதாரண்யம் 1.5)

எங்கும் உணவு

”உணவைப்பற்றி நான் ஒருவாறு அறிந்துள்ளேன். ஆனால் உலகத்தில் எங்கும் அனைத்தும் ஒன்று மற்றொன்றுக்கு உணவாகும் எனச் சொல்கிறார்கள். அதை நீங்கள் உபதேசிக்க வேண்டும்” என ஒருவன் தைத்திரிய மகரிஷியைக் கேட்தற்கு அவர் ‘எதுவும் உணவு’ என்னும் கதையைக் கூறினார். இதுவே அக்கதையாகும்.

”இவ்வுடல் உணவுமயமென்பதை நீ அறிவாய். பிராணனையும் உணவு எனப் பெரியவர்கள் கூறுவார்கள். பிராணன் என்னும் உணவு சரீரம் என்னும் உணவில் நிலைத்துள்ளது. நீரும் உணவு என்பதை நீ அறிவாய். ஜோதியும் உணவாகும் எனச் சிறந்தோர் சொல்வார்கள். உற்று நோக்கினால் ஜோதியான உணவு நீர் என்னும் உணவை உண்டி ஜோதி நீரிலும், நீர் ஜோதியிலும் நிலைத்துள்ளதாக அறிவாய். புவியும் ஆகாசமும் இப்படியே ஒன்று மற்றொன்றுக்கு உணவாகும். புவி ஆகாசத்திலும், ஆகாசம் புவியிலும் நிலைத்துள்ளது. இவ்வாறு எதை நோக்கிய போதிலும் உணவின் உயர்வையே அறிவோம். ஆதலால் நீ உணவைப் பெருக்க வேண்டும். அதற்கேற்ற முயற்சிகளையெல்லாம் செய்யவும். நீ சற்று தியானம் செய்தால் நான் உணவு, உணவே நானாகும், நான் உணவு, நான் உணவைப் புசிப்பவன், உணவைப் புசிப்பவன் நானே, நான் உணவு, உணவை உண்பவன் என்பதை அறிவாய்.”

(தைத்திரியம்)

பிருகுவின் கதை

ஆதியிலே வருணன் என ஒரு பெரியாரிருந்தார். அவருக்குப் பிருகு என ஒரு மகன் உண்டு. மகன் தந்தையை அணுகி எனக்கு பிரம்மத்தை உபதேசியுங்கள் என வணங்கினார். அதற்கவர் ”உணவு, பிராணன், கண், காது, மனம் மொழியே பிரம்மமாகும் என்றார். பிறகு மகனை நோக்கி எவனிலிருந்து உயிர்கள் தோன்றி, பிறந்து வளர்ந்து அப்பால் எவனிடம் செல்கிறதோ, அவனையே பிரம்மம் என அறிந்துகொள்ளவும்” எனப் பதிலளித்தார்.

மகன் தவஞ்செய்தான். தவத்தால் அவன் தெளிந்தது என்னவென்றால்: உணவே பிரம்மன். ஏனெனில் உணவிலிருந்தே எல்லா உயிர்களும் பிறக்கின்றன. அதனால் பிறந்து அவ்வுணவினாலேயே உயிர்கள் வாழும். இறந்த பிறகும் உணவிலேயே அவை செல்லும்.

இவ்வறிவுடன் தந்தையிடம் சென்று இப்பொழுது சொல்லுங்கள் என வணங்கினார்.

தவம் என்னும் சிந்தனையின் வாயிலாகவும். உனக்கு நன்றாய்ப் புலனாகும் எனக் கூறினார். மகன் திரும்பி மறுபடியும் தியானத்திலாகி பிராணனை பிரம்மம் என அறிந்தார். ஏனெனில் உயிர்கள் பிராணனிலேயே பிறந்து பிராணனிலே வளர்ந்து பிராணனிலே மறையும். இதை அவர் தந்தையிடம் சென்று கூறி இதுதான் பிரம்மம் என்றார்.

மகனே! நீ இன்னும் தவஞ்செய்யவும். பிறகு புலனாகும் என்றார்.

மகன் தவஞ்செய்து முதலில் மனத்தை பிரம்மம் எனவும், அடுத்து விக்ஞானத்தை பிரம்மம் எனவும், பிறகு ஆனந்தத்தை பிரம்மம் என்றும் அறிந்து தந்தையிடம் சென்றார்.

தந்தையே, ஆனந்தமே பிரம்மமாகும். ஆனந்தத்திலே உயிர்கள் தோன்றும். ஆனந்தத்தினாலேயே அவர்கள் வளர்வது. மறைவது ஆனந்தத்திலேயாகும். ஆதலால் ஆனந்தமே பிரம்மமாக இருக்க வேண்டும் என்றான்.

தந்தையும் தலையை அசைத்தார்.

(தைத்திரியம் 3)

குறிப்பு: இக்கதைகள் எம்.ஆர்.ஜம்புநாதன் உபநிசதங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதிய சிறிய கதைகளின் தொகுப்பு Short Stories from the Great Upanishads-ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் 1932-ல் வெளியாகியது. இக்கதைகளைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாசகர்களுக்காக எழுதினார். சிறார்கள் வாசிக்கத்தக்க ஐந்து கதைகள் மட்டும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. சிறார்கள் எளிதாக வாசிக்க வேண்டும் என்பதால் மூலத்தில் நீண்டதாக உள்ள சில வாக்கியங்கள் மட்டும் இரு வாக்கியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சில சொற்களுக்கு இன்றைய வழக்குச் சொற்கள் அவசியமான இடங்களில் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

எம். ஆர். ஜம்புநாதன் – Tamil Wiki

Tamil – Short Stories from the Great Upanishads.pdf – Google Drive

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.