சீத்தக் காட்டுத் தாத்தா செத்துவிட்டார் எனச் சேதி வந்தபோது குமராசு தூக்கத்திலிருந்தான். இரவு வேக்காடு தாங்காமல் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தவனுக்குச் சரியாகத் தூக்கமில்லை. மாட்டைக் கடித்து ரத்தச் சுவையில் சலிப்பேற்பட்ட சூலான்கள் புதுச்சுவை தேடி அவன் உடலில் மொய்த்தன. போர்த்திக் கொள்ளவும் முடியவில்லை. வாரிக்கொண்டு போவதுபோல வேகமாக வருவதும் சட்டென்று ஆழ்ந்த மௌனம் கொண்டு விடுவதுமாய்க் காற்று சீராக இல்லாமல் விளையாடிற்று. பின்னிரவில் லேசாகக் குளிர் வந்து தாக்கியபோது எழுந்து வீட்டுக்குள் போய்ப் பாயில் படுத்துக் கொண்டான். பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அம்மா எழுப்ப மாட்டார்.
பதற்றம்கொண்ட குரல்கள் கனவில் என்றானதால் தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான். ‘டேய்… டேய்’ என்று அம்மா கத்தியதோடு ‘பொச்சடச்சுக்கிட்டுத் தூங்கறாம் பாரு’ என்று திட்டிக்கொண்டே வந்து தொடையில் ஓர் உதைவிட்டார். கவிழ்ந்து படுத்திருந்தவன் மெல்லத் திரும்பினான். ‘ஊடே தீப்புடிச்சு எரிஞ்சாலும் உன்னய எழுப்பறதுக்கு ஒராளு வரோணும்’ என்று பேசிக்கொண்டே இன்னொரு அறைக்குள் அம்மா போனதும் எழுந்து தலையணையை மடிமேல் வைத்தபடி சுவரில் சாய்ந்து உட்கார்ந்து எரிச்சலோடு ‘என்னம்மா?’ என்றான். தலையைச் சீவிக் கொண்டிருந்த அம்மா அவனையும் கண்ணாடியையும் மாறிமாறிப் பார்த்துச் சொன்னார்.
‘சீத்தக் காட்டுத் தாத்தா செத்துட்டாருடா. நேத்துச் சாயந்திரந்தான் பாத்துப் பேசிக்கிட்டு இருந்தன். பையன் பன்னண்டாவது படிக்கறானே, மேல படிக்க வெக்கப் போறியா மவளேன்னு உன்னயத்தான் கேட்டுக்கிட்டு இருந்தாரு. மாட்டக் கையில புடிச்சுக்கிட்டு இருந்தனா, அது வேற தண்ணிக்குப் பறந்துக்கிட்டு இழுக்குது. அதத் தடத்தோரமா மேச்சலுக்குப் புடிச்சிக்கிட்டே நின்னு நாலு வார்த்த பேசீட்டுத்தான் வந்தன். மனுசனுக்கு இப்பிடியா சாவு வரும்? நொடி நொடிச்சாப்பல போயிச் சேந்துட்டாரே. பொழுதோடப் பாத்தவரு காத்தால பாக்க இல்லயே.’
‘அதுக்கு நானென்னம்மா பண்ணட்டும்? நீங்க போயிட்டு வாங்க.’
‘அது செரி. உனக்கு இன்னம் தூக்கம் தெளியல. தாத்தாடா… சீத்தக் காட்டுத் தாத்தாடா. ஒடனே போவோணும். சட்டுனு பொறப்படு.’
அப்போதும் அவன் அப்படியே தானிருந்தான்.
‘செரிம்மா, தெரீது. நீங்க முன்னால போங்க. நா ரெடியாயிட்டுப் பொறுத்து வர்றன்.’
‘என்னடா பொறுத்து வர்றன்? நம்மூட்டாளு ஒருத்தரு போயிட்டாருன்னு சொல்றன். என்னமோ ரெடியாவறானாமா ரெடி. மூஞ்சியக் கழுவிச் சொக்காயப் போட்டுக்கிட்டு வாடா, போலாம்.’
அவனுக்குக் கோபம் வந்தது. தொடைகளை இறுக்கிக்கொண்டு மடியிலிருந்த தலையணையைத் தூக்கிச் சுவரில் அடித்தான். பொசுபொசுவென்று மூச்சு வாங்கக் கத்தினான்.
‘நான் வந்தா செத்த மனுசன் அப்படியே எந்திரிச்சு உக்காந்துருவாரா? ஒன்னுக்கு ரண்டுக்குக்கூடப் போவாத அடச்சு வெச்சுக்கிட்டு அங்க வந்து கெடக்கச் சொல்றியா? நீ முன்னால போயித் தூக்கி நிறுத்து, போ.’
அம்மா அதற்கு மேல் வற்புறுத்தாமல் கிளம்பிவிட்டார்.
‘சனம் சேராத நாயி, இதெல்லாம் எப்பிடித்தான் பொழைக்கப் போவுதோ, எப்பப் பாரு கவுந்தடிச்சுக்கிட்டுத் தூங்கறதுதான், செரிக்குச் செரிப் பேசறதுக்கு மட்டும் உட்ரு, நம்ம சோத்தத் தின்னுக்கிட்டுக் கெடக்கும்போதே இப்பிடி, நாளைக்கு இவனா நம்மளுக்குச் சோறு போடப் போறான்…’
அம்மாவின் குரல் குறைந்துகொண்டே போயிற்று. அற்றுப் போனதும் மீண்டும் பாயில் கவிழ்ந்து கொண்டான். புரளத்தான் முடிந்ததே தவிரத் தூக்கம் வரவில்லை. இனிமேல் வராது என்று முடிவானதும் எழுந்து வெளியே வந்தான். கட்டுத்தறி சுத்தமாக இருந்தது. மாடுகளையும் காணவில்லை. எல்லாம் அப்பன் வேலை. வாசலில் வெயில் சுளீர் என்று விழுந்திருந்தது. ஏழு மணிதான் இருக்கும். மழை இல்லாமல் வாடிக் கிடந்த கடலைக்கொடிகள் இந்தக் காலை நேரத்தில் லேசாகப் பொலிவு காட்டின. கொஞ்ச நேரம் அதையே பார்த்து மனதை நிறைத்துக்கொண்டு திரும்பினான். தடத்துப் பக்கம் அம்மாவின் தலை தெரியவில்லை.
வீட்டு வாசலைத் தாண்டித் தள்ளியிருந்த கழிப்பறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டான். அப்போதுதான் தாத்தாவைப் பற்றி யோசனை வந்தது. தாத்தா என்று முறைக்குக் கூப்பிட்டாலும் அப்படி ஒன்றும் வயதானவர் அல்ல. அப்பாவுக்குச் சொந்தத் தாய்மாமன். அவன் பாட்டிக்குத் தம்பி. அறுபதை எட்டியிருக்கலாம். சிறுவயதில் அப்படி இப்படித் திரிந்து கொண்டிருந்தார் என்று பேச்சுப் பரவியதால் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட முப்பது வயதாகும் போதுதான் திருமணம் நடந்தது என்று சொல்வார்கள்.
அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை. வளவுக்குள் இருந்த வீட்டில் மூத்தமகன் குடியிருந்தான். இளைய மகனுக்குத் திருமணமாகி ஆறு மாதம்தான் இருக்கும். தோட்டத்து வீட்டில் குடித்தனம். மகன்கள் இருவரும் குமராசுவிடம் நல்ல அணுக்கம் காட்டுவார்கள். சின்ன மாமன் வாய் நிறைய ‘மாப்ள’ என்று கூப்பிடுவார். அவனைவிட ஏழெட்டு வயதுதான் கூடுதலாக இருக்கும். என்றாலும் அவர் அழைப்பைக் கேட்டதும் வெட்கம் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.
‘அட நானென்ன பொண்ணா வெச்சிருக்கறன்? இன்னமே பெத்தாலும் உனக்குக் குடுக்க முடியாது. அப்பறம் எதுக்கு இப்பிடி வெக்கப்படற?’ என்று அவர் சிரிப்பார். அதென்னவோ அவர் ஒருவர் மட்டும் அப்படிக் கூப்பிடுவதால் தானாக வெட்கம் வந்துவிடும். அவர் திருமணத்திற்குப் போய்ப் பந்தி பரிமாறும் அளவுக்கு வேலை செய்தான். அம்மாகூட ஆச்சரியப்பட்டு ‘பாருடா, எலி தெகிரியமா வெளிய வந்து ஒலாத்துது’ என்று சாடை பேசினார்.
அப்பனுக்குத் தாய்மாமன் என்னும் முறையில் வாரம் ஒருமுறையேனும் வீடு தேடித் தாத்தா வந்துவிடுவார். அம்மா நேரடி உறவு இல்லை என்றாலும் ‘அப்பா’ என்று முறை வைத்துக் கூப்பிடுவார். அவரும் ‘மவளே’ என்பார். திண்ணையில் உட்கார்ந்தால் சீக்கிரம் எழுந்து போக மாட்டார். அப்பனிடமும் அம்மாவிடமும் ஊர்க்கதை எல்லாம் பேசிவிட்டுக் கிளம்ப வெகுநேரம் ஆகிவிடும். பல நாள் இங்கேயே சாப்பிடுவார்.
‘எம்மவனுங்க சோறு போடலீனாலும் எங்கக்கா மவன் கடைசி காலத்துல என்னயக் கை உட மாட்டான்’ என்பார்.
‘ஆமா, இந்த ஒருவாய்ச் சோத்துக்குத்தான் நமக்குப் பஞ்சம் வந்திருதா?’ என்று அப்பன் சொல்வார்.
‘வாசல்ல கட்டலப் போடறனப்பா. தூங்கீட்டுக் காத்தாலக்கிப் போங்க’ என்று அம்மா சொன்னதும் குளிர்ந்து போவார்.
‘இப்பிடிப் பிரியமாச் சொல்றதுக்கு எனக்கு ஒரு பொண்ணு இல்லாத கொற உன்னால தீந்து போச்சு மவளே’ என்று சொல்லிக்கொண்டே கிளம்பிவிடுவார்.
‘இந்த ஒடல நம்ம கட்டல்ல கொண்டோயி நீட்டுனாத் தான் தூக்கப் பெசாசு வந்து அழுத்தும். மத்த எடம் மாளிகயா இருந்தாலும் எலவம் பஞ்சு மெத்த போட்டு வெச்சாலும் பெசாசு பயந்துக்கிட்டு ஓடிரும் மவளே’ என்பது அவர் சொல்லும் வாசகம்.
அவர் வரும் போதெல்லாம் முறை தவறாமல் நடக்கும் பேச்சு இதுதான். ஒரே பேச்சை எப்படித்தான் சலிக்காமல் பேசுகிறார்களோ? பழகிய சொற்களை உச்சரிக்கிற மாதிரியே தோன்றாது. ரொம்பவும் உணர்ச்சிவசமாகவும் மாறாத பிரியத்தோடும் உரையாடல் நடைபெறும். கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகிவிட்ட அவனுக்குத்தான் சலிப்பாக இருக்கும். ஒருவர் பேசும் போதே அடுத்தவர் பேசப் போகும் சொற்கள் அவன் மனதில் ஏற்ற இறக்கத்தோடு ஒலிக்க ஆரம்பித்துவிடும்.
நேற்றுச் சாயங்காலம் வழியில் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவருக்கு ஓர் இரவுக்குள் என்னவாகியிருக்கும்? மாரடைப்பு வந்திருக்கலாம். யாராவது பார்த்தார்களோ என்னவோ. தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். சின்ன சின்ன சண்டைகளுக்கெல்லாம் கயிற்றைத் தூக்கி விட்டத்தில் போட்டுப் போய்ச் சேர்ந்துவிட்ட சொந்தக்காரர்கள் பலர். இவருக்கும் அப்படி ஏதும் வைராக்கியம் ஏற்பட்டிருக்கலாம். குடும்பத்தில் சண்டைக்குப் பஞ்சமில்லை. என்னவாகியிருக்கும்? நல்ல சாவா, கெட்ட சாவா?
கழிப்பறைக் கதவைத் திறந்து வெளியேறி அதையொட்டி இருந்த குளியலறைக்குள் போய்ப் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு வந்ததும் எல்லாம் தெளிவாகி விட்ட மாதிரி பளிச்சென்றிருந்தது. பொழுது நெற்றிக்கட்டுக்கு ஏறிக் கதிர்கள் கண்ணிலடித்தன. கையை நெற்றியில் வைத்துக்கொண்டு கிழக்கே பார்த்தான். உள்ளே போய்விட்டு வெளியே வருவதற்குள் வெயிலின் வேகம் கூடிவிட்டது. காக்கை குருவிகளின் சிறுசிறு கத்தல் தவிரச் சத்தம் ஏதுமில்லை.
கைச்சாளைக்குள் போனான். அடுப்பிலிருந்த குண்டானில் தேநீர் ஆறிப் போயிருந்தது. பூத்திருந்த சாம்பலை ஊதினான். அடியில் நெருப்புக் கங்கு கண் விழித்துப் பார்த்தது. அருகில் கிடந்த பனம்பன்னாடை ஒன்றை எடுத்து அதன் நுனி கங்கில் படும்படி வைத்து ஊதுகுழல் கொண்டு ஊதினான். லேசாகப் புகைந்து தீப்பற்றிக் கொண்டது. பன்னாடை எரிந்து முடிந்ததிலேயே தேநீர் நல்ல சூடாகியிருந்தது. பெரிய தம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு வெளியே வந்து திண்ணையில் உட்கார்ந்தான்.
இடப்பக்கத் திண்ணையின் நடுப்பகுதியில் லேசாகத் தாவி உட்கார்ந்து கால்களைத் தொங்கப் போட்டுக் கொள்வது தாத்தாவின் வழக்கம். எதிர்த் திண்ணையிலிருந்து அவ்விடத்தைப் பார்த்தபோது அவரே உட்கார்ந்திருப்பது போலத் தெரிந்தது. பீடிப் புகையை ஊதிக்கொண்டு ‘மாப்ள’ என்று கூப்பிடுவது போலத் தோன்றியது. தலையை உதறித் தேநீரில் கவனத்தைச் செலுத்தினான். வழியில் பார்க்கும் போதும் வீட்டுக்கு வரும்போதும் தாத்தா அவனைச் சீண்டுவதுண்டு. அவன் பதில் ஏதும் சொல்லாமல் லேசாகச் சிரித்தபடி தூரப் போய்விடுவான். ‘மாப்ளக்கி வெக்கம்’ என்று தானாகவே சொல்லிக் கொள்வார். மற்றவர்களிடமும் அவன் அதிகம் பேசுவதில்லை என்பதால் அவரிடம் பேசுவதை அவன் திட்டமிட்டே தவிர்க்கிறான் என்று தோன்றவில்லை.
தேநீரைக் குடித்துவிட்டு வாசல் பானையிலிருந்த நீரில் தம்ளரைக் கழுவி அருகில் போட்டிருந்த பலகைக்கல்லில் கவிழ்த்து வைத்திருந்த பாத்திரங்களோடு வைத்தான். அம்மா வேலைகளை எல்லாம் முடித்த பிறகுதான் சேதி வந்திருக்கும் போல. இரவே செத்துப் போய்க் காலையில் தாமதமாகப் பார்த்திருப்பார்கள். இழவு வீட்டுக்குப் போய் அவர் முகத்தைப் பார்க்கும் ஆவல் வரவில்லை. இழவு வீட்டுக் காட்சிகள் எப்போதுமே அவனுக்கு அந்நியம். சேதி தெரிந்ததும் அப்பனும் போயிருப்பார். வீட்டிலிருந்தே வேலைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தான். எப்படியும் அவர் நினைவுகள் இன்னும் ஒரு வாரத்திற்கேனும் விடப் போவதில்லை.
வெள்ளாமைக் காட்டுக்குப் பின்னாலிருந்த ஏரிப் பள்ளத்தில் மாடுகளைக் கொண்டு போய் அப்பன் கட்டியிருப்பார். மழை இழுத்துக் கொண்டதால் மேய்ச்சலுக்குப் புல் இல்லை என்றாலும் இடம் மாற்றிக் கட்டினால் தரையைக் கறண்டு கொண்டிருந்துவிட்டு வந்து வயிறு நிறையத் தண்ணீர் குடிக்கும். ஓரிடம் மாற்றிக் கட்டலாம். இல்லாவிட்டால் கொஞ்ச நேரம் மேய்க்கலாம் என்று நினைத்து வீட்டைச் சாத்திச் சங்கிலியைப் போட்டுவிட்டுக் கிளம்பினான். வேலைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. வெகுதூரம் வரைக்கும் கடலைக்கொடிகள் தவழ்ந்து தெரிந்தன. அவற்றைப் பிடுங்கும் முயற்சியில் காற்று அசைத்துக் கொண்டேயிருந்தது.
இட்டேரித் தடத்தில் ஏறி நடந்ததும் ஒருபக்கப் புதருக்குள்ளிருந்து பெருக்கானைப் போல முட்டிக்கொண்டு ‘மொச்சை’ ஓடி வந்தான். உடலையே வாலாக்கி ஆட்டிக்கொண்டு வந்து கால்களில் உரசினான். கீழே தள்ளிவிடுவான் போலிருந்தது. ‘மொச்சையா… எங்கடா போய்ட்டு வர்ற?’ என்று கேட்டபடி உட்கார்ந்து தடவிக் கொடுத்தான். அவன் கொனைப்பு அதிகமாயிற்று. நாக்கை நீட்டி முகத்தை எச்சில் படுத்தத் தொடங்கினான். ‘போதும் போதும். உன்னோட வெளையாட்டு வெனயமெல்லாம் எனக்குத் தெரியும். பேசாத என்னோட வா’ என்று சொல்லிக் குச்சி ஒன்றை எடுத்தான். ஊளையிடுவது போல முகத்தை மேல் தூக்கி வாயைத் திறக்காமலே ஒரு சத்தம் கொடுத்துக் கொண்டு முன்னோடினான்.
தாத்தாவைப் பார்த்து அவன் பயந்ததும் பேச்சை நிறுத்திக் கொண்டதும் இந்த மொச்சையால்தான். இரண்டு வருசத்துக்கு முன் அவன் அக்கா வீட்டிலிருந்து எடுத்து வந்த நாய்க்குட்டி. அதன் தாய் போட்டிருந்த மூன்று குட்டிகளில் இவன் ஒருவன் தான் கடுவன். ஏற்கனவே பல வருசமாய் இருந்த நாய் செத்துப் போன பிறகு குட்டி கிடைக்காமல் தேடிக் கொண்டிருந்தார்கள். அக்கா வீட்டு நாய் சினையானதும் அது போடும் குட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம் எனக் காத்திருந்து கண் விழித்ததும் கொண்டு வந்த குட்டி இது. வெண் திட்டுகள் படிந்த செம்மி நிறம். ராட்சசப் புழுப் போல் நெளிந்து ஊர்ந்து சென்ற அதை ஒற்றைக் கையில் தூக்கியெடுத்து முகத்துக்கு நேரே நிறுத்தி வீச்வீச்சென்று அது கத்துவதற்குப் பதில் பேசிக் கொஞ்சிய போது அதன் மீதிருந்து அடித்த வாசம் மூக்கைத் துளைத்தது. தாய்ப்பாலின் மொச்சை வாசம் என்று அம்மா சொன்னார்.
‘மொச்சை வாசம் வீசுதா உம்மேல’, ‘ஏண்டா நாயே, மொச்சயடிக்கற நாயே’ என்றெல்லாம் பேச ஆரம்பித்து ‘மொச்சக் குட்டி’, ‘மொச்சையா’ என மாறி அதுவே பெயராக நிலைத்துவிட்டது. அவன் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம் அதுவும் அவனுடனே இருக்கும். எங்கே போனாலும் பின்னாலேயே வரும். கழிப்பறைக்குள் போனால் வாசலில் வந்து உட்கார்ந்து கொள்ளும். பள்ளிக்கூடத்திற்கு அதை ஏமாற்றிவிட்டுக் கிளம்புவது கஷ்டம். கட்டிப் போட்டு வைப்பது அப்படித்தான் பழக்கத்திற்கு வந்தது. சீத்தக்காட்டுத் தாத்தாவிடமும் வாலாட்டி வைப்பான். அவரும் அவன் தலை தடவி ‘எங்கையால தான் உனக்கு வெதுரெடுத்து உடோணும். அப்பறம் என்னயப் பாத்தாலே ஓடுவ’ என்று சொல்லிச் சிரிப்பார். அதைக் கேட்டுக் குமராசும் சிரிப்பான். ஆனால் அது அத்தனை கொடியது என்று அப்போது தெரியவில்லை.
தாத்தா ஆட்டு வியாபாரம் செய்தார். ஊர்ப்புறங்களில் வாங்கிய குட்டிகளைச் சேர்த்து ஓட்டிப் போய்ப் பக்கத்துச் சந்தையில் விற்று வருவார். உள்ளூரிலேயே கை மாற்றி விடுவதும் உண்டு. ஆட்டுக்குட்டிகளைத் தேடிக் காடுமேடு என்று அலைந்த காலத்தில் நாய்க்கும் பூனைக்கும் ‘வெதரெடுப்பதைக்’ கற்றுக் கொண்டார். யாரோ செய்ததைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தன் வீட்டு நாய்க்குத் தானே செய்துவிட்டார். அதைப் பற்றிப் பெருமையாகக் ‘கண்ணுப் பாத்தா கை செய்யாதா?’ என்பார்.
அதன் பிறகு ஊர் முழுதும் நாய்களுக்கும் பூனைகளுக்கும் அவர் கைங்கரியம்தான். அந்த வேலைக்கு யாரிடமும் காசு வாங்குவதில்லை. அதற்கு ஒரே ஒரு பிளேடு மட்டும்தான் வேண்டும். அதையும் அவரே கொண்டு வந்துவிடுவார். அதற்கு மட்டும் ஐம்பது காசு வாங்கிக் கொள்வார். அந்த வேலைக்கு உகந்த நாட்கள் புதன், ஞாயிறு ஆகியவை. காலை உணவு போட்டால் சாப்பிடுவார். இல்லையென்றால் கேட்க மாட்டார். ‘இதுவும் ஒரு வைத்தியந்தான் மாப்ள’ என்று அப்பனிடம் சொல்வார். அவர் முகம் பார்த்தாலே அஞ்சி ஓடும் நாய்களைக் கண்டு ‘ஒருதடவதான். முடிஞ்சிருச்சே, இன்னம் எதுக்குப் பயப்படற’ என்று பேசுவார்.
‘மாமன் திருட்டு வேல செஞ்சீங்கன்னா ஒன்னும் பிரச்சினையே இல்ல. ஒருநாயும் உங்களப் பாத்து கொலச்சுக் காட்டிக் குடுக்காது. ஆளப் பாத்தாலே தல காட்டாத ஓடி ஒளிஞ்சுக்கும்’ என்று அவரைக் குமராசுவின் அப்பன் கேலி செய்வார்.
‘இந்த ஆட்டு மசுரப் புடுங்கிக்கிட்டுக் கெடக்கறதுக்குத் திருட்டு வேலக்குப் போயரலாந்தான். தொணையாளா நீ வந்திரு’ என்று சிரித்து அப்பனுக்கு அழைப்பு விடுப்பார்.
‘ஆமாமா, மாமனும் மருமவனும் கூட்டுச் சேந்துக்கிட்டு போங்க போங்க. அப்பறம் ஊரெல்லாம் திருட்டு நாய்ங்கன்னு திட்டட்டும்’ என்று அம்மாவின் வார்த்தை வரும்.
இப்படியெல்லாம் பேச்சு நடப்பதைக் கேட்டுக் குமராசும் சிரித்துக் கொண்டுதான் இருந்தான். மொச்சைக்கும் அப்படி ஒருநாள் வரும் என்று எண்ணவில்லை. ஒரு வயது முடிந்ததும் தாத்தாவே நினைவுபடுத்தினார்.
‘புடுக்குப் பெருத்துக் குரமத்தங் காயாட்டம் தொங்குது. இன்னமே ஊடடங்க மாட்டான். முகூர்த்தம் குறிச்சிரலாமா?’ என்று கேட்டார்.
‘ஒரு பொண்ணு எப்ப வயசுக்கு வரும்னு பாத்துக்கிட்டே இருந்து குறிப்பக் கேட்டு வர்ற தானாவதி தோத்தான் போங்கப்பா. ஒவ்வொரு நாயையும் பாத்து வெச்சுக்கிட்டே இருப்பீங்களா?’ என்று அம்மா கேட்டதற்கு அப்பன் பதில் சொன்னார்.
‘எந்த நாய்க்கும் புடுக்குத் தொங்குனா அவருக்கு திங்கற சோறு செரிக்காது. அறுத்தெடுத்துட்டு அப்பறம் திம்பாரு பாரு, அன்னைக்காட்டம் அன்னாடும் தின்னாருன்னா ஒடம்பு பலாப்பழமாட்டம் பெருத்து வெடிச்சுப் போவ வேண்டீதுதான்.’
தாத்தா வாயும் சும்மா இருக்கவில்லை.
‘ஒரு ஞாயித்துக்கெழம வெச்சிருவம். நல்லா கன்னிச்சாவலாப் பாத்து அடிச்சுக் கொழம்பு காச்சீரு மவளே’ என்றார்.
‘இதுக்கு முகூர்த்தம் பொதனும் ஞாயிறும் எதுக்கு வெச்சிருக்கறாரு? அன்னைக்குத்தான் நெல்லஞ்சோறும் கறிச்சாறும் கெடைக்கும். அப்படியே மூக்கப் புடிச்சிக்கிட்டு ஒருகெளாசையும் அடிக்கலாம்.’
அப்பன் இப்படிச் சொல்லவும் தாத்தாவுக்குச் சுருக்கென்றாகி விட்டது. முகத்தோடு குரலும் சிவந்தது.
‘ஆசுவங் கேட்டு அலையறன்னு சொல்ற. உடு, இன்னமே உன்னூட்டுச் சோறு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்.
‘என்னங்கப்பா, வெளையாட்டுக்கு உங்க மருமவன் பேசுனா அதுக்குக் கோவிச்சுக்கறீங்க. உங்க மவ நானில்லையா? இன்னம் கூவாத சேவக்குஞ்சு இருக்குது. அடிச்சுக் காச்சீர்றன். எந்த வாரம்னு சொல்லுங்க போதும்.’
அம்மாவின் சமாதானம் எடுபட்டது. அப்பனும் இணைந்து கொண்டார்.
‘நல்லா பழம் போட்டுக் காச்சுன சரக்காப் பாத்து வாங்கீர்றன். ஒன்னு ரண்டு கெளாசு போட்டுட்டு அன்னைக்கு இங்கயே பகல் தூக்கம் போட்ருங்க.’
அப்படித்தான் மொச்சைக்கும் ஒருநாள் குறித்தார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருந்தான் குமராசு. மொச்சைக்கு என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. ‘அப்படி எதுவும் வேண்டாம்’ என்றுதான் தோன்றியது. அம்மாவிடம் மெல்லச் சொன்னான்.
‘ஆமா, காட்டுக்குள்ள ஒண்டிக்குடியாக் கெடக்கறம். நாய்ச்சத்தம் இல்லாத எப்படீடா? வெதரெடுத்து உடலீன்னா எந்த நாயும் ஊடடங்காது. பொட்ட நாயி எங்க இருக்குதோ அங்க ஓடிப் போயிரும். சோத்துக்குக்கூட வராது. அப்பறம் நாயின்னு வெச்சிருந்து என்ன பிரயோசனம்? வெதுரு எடுத்துட்டம்னாதான் ஊட்ட காத்துக்கிட்டுக் கெடக்கும்.’
அம்மாவிடம் மேற்கொண்டு பேச முடியவில்லை. சொன்னது போலவே அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு வேப்பங்குச்சியை வாயில் கடித்துத் துப்பிக் கொண்டே தாத்தா வந்துவிட்டார். கறி வேகும் மணத்தை மூக்கால் உறிஞ்சி ‘ம்ம்… அடேங்கப்பா, இட்டேரி வரைக்கும் மணக்குது. சாந்துல என்ன பூவக்கீது போட்டு அரச்சுப்புட்டயா?’ என்று அம்மாவிடம் கேட்டார்.
‘மவகிட்டயும் உங்களுக்குக் கேலிதானா? வாராவாரம் காச்சறதுதான். இன்னக்கி மட்டும் என்ன புதுசாவா செய்யறம். நீங்க வர்றீங்கன்னு நேரத்துலயே செஞ்சுட்டன். இனி கறி வறுக்க வேண்டியது ஒன்னுதான்’ என்றார் அம்மா.
பேசிக்கொண்டே வேலையைத் தொடங்கினார். மொச்சையனை அவிழ்த்து விடாமல் வைத்திருந்ததால் இட்டேரி வரைக்கும் கொண்டு போய்விட்டு வரச் சொன்னார். சங்கிலியோடு பிடித்துக்கொண்டு போனான் குமராசு. இட்டேரி ஓரத்திற்குப் போய் மொச்சை கடன்களைக் கழித்தான். காலைத் தூக்கி அவன் மல்லும் போது விதை இரண்டும் கருநிறத்தில் பளபளத்தன. அதைப் பார்க்கக் கூசிக் கண்ணைத் திருப்பிக் கொண்டான் குமராசு.
‘நல்லாப் போயிட்டானா?’ என்று வந்ததும் விசாரித்தார் தாத்தா.
‘செரியாப் போவுலீன்னா, வெதுரெடுக்கறப்ப உம்மேல அடிப்பான் பாத்துக்க. பொறத்தாண்டக் கால நீதான் புடிச்சுக்கோணும்’ என்றார். அவனுக்குப் பயமாக இருந்தது. மொச்சையைப் பார்த்தான். அவனுக்கு நடக்கப் போவது தெரியாமல் அவிழ்த்துவிடச் சொல்லி உடலை முறுக்கி அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான்.
‘இரு இரு. இந்தக் கொனப்பெல்லாம் இன்னங் கொஞ்சம் நேரத்துல அடங்கிப் போயிரும். இன்னம் ஒரு வாரத்திக்கு இங்கதான் கெடக்கோணும்’ என்று மொச்சையை நோக்கிப் பேசினார். வேட்டி மடியிலிருந்து சிறுபொட்டலத்தைப் பிரித்துப் புதுபிளேடை எடுத்துத் திண்ணையில் வைத்தார். அம்மாவிடம் சாம்பல் கொண்டு வரச் சொன்னார். ஒரு முறத்தில் அள்ளிக்கொண்டு வந்த சாம்பலைப் பார்த்துச் சிரித்தார்.
‘என்ன, எம்மேனி முழுக்கப் பூசிக்கிட்டுச் சுடுகாட்டுல ஆடுட்டுமா? நல்லாக் கொழிச்செடுத்துத் திருநீறாட்டாம் கொஞ்சூண்டு கொண்டா போதும்’ என்றார்.
திண்ணையில் உட்கார்ந்து சாம்பலிலிருந்து திருநீறு எடுக்க அம்மா முயன்றார். கன்றுக்குட்டிக்குப் போடும் வாய்க்கூட்டையைக் கொண்டு வந்து மொச்சையின் வாய்க்குக் கட்டினார் அப்பன். கூரிய அவன் வாய்ப்பகுதிக்கு வாய்க்கூடு பெரிதாக இருந்தது. குமராசுவையும் பிடிக்கச் சொல்லி இறுகக் கட்டப் பார்த்தார். கட்டி முடித்த மாதிரி தெரிந்த சில நொடியில் மொச்சை தன் தலையை உதறிக் கூட்டைத் தள்ளினான். அவன் வாயிலிருந்து கழன்று கழுத்தில் தொங்கியது.
‘நம்ம வளத்த நாயின்னாலும் அதுக்கு ஒரு தும்பம்னா சட்டுனு பல்லக் கொண்டாந்து பதிய வெச்சிரும். கொஞ்சம் எளக்கமா இருந்தாலும் பரவால்ல, வாய் கொஞ்சம் தொறந்தாப்பல இருக்கட்டும். கழுத்தச் சுத்திக் கட்டு’ என்று தாத்தா வழிகாட்டினார்.
அதே மாதிரி கூடுதலாக ஒருகயிற்றைக் கழுத்தில் போட்டு முடிந்த வரைக்கும் இறுக்கிக் கட்டினார்கள். மொச்சை தலையை ஆட்டி ஆட்டி அதைக் கழற்ற முயன்றான். எப்போதும் வாயைத் திறந்தபடியே இருக்கும் அவனால் மூடிக்கொண்டிருக்க முடியவில்லை. கட்டியிருந்த இடத்திலேயே அவனைப் படுக்கப் போட்டார் அப்பன். பின்னங்கால்களைக் குமராசு பிடித்திருந்தான். நகத்தை நீட்டி அவன் கைகளைக் கிழித்துத் தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். லேசாகக் கீறியதும் எச்சரிக்கையாகி நகம் படாதபடி மேல்பகுதியை அழுந்தப் பிடித்தான். தாத்தா அருகில் வந்ததும் மொச்சையின் ஆட்டம் இன்னும் அதிகமாயிற்று. தன்னை ஏதோ செய்யப் போகிறார்கள் என்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. தலையும் கால்களும் சிறைப்பட்டதும் உடலில் வலுவற்று எம்பித் துள்ளினான். அதை எதிர்பார்க்காத அப்பனும் குமராசும் தங்கள் பிடியை விட்டார்கள். சங்கிலி கட்டியிருந்த முளைக்குச்சியைச் சுற்றி இழுத்துக் கொண்டும் வாய்க்கூட்டைக் கழற்ற முயன்றும் வேகம் கொண்டான். ‘மொச்ச நாயி… கம்முனு இருக்க மாட்டயா’ என்று அப்பன் கத்தினார். அவன் வலிமைக்கு ஈடு கொடுக்க முடியாத கோபம் அவர் குரலில் இருந்தது. பதிலுக்குத் தாத்தாவும் ஏற்றிவிட்டார்.
‘அப்பனுக்கும் மவனுக்கும் வலுவு அவ்வளவுதானா? ஒரு குட்டி நாய அழுத்திப் புடிக்க முடியில. பெரிய மாப்ளக்கித்தான் வயசாயிருச்சு. சின்ன மாப்ளக்கி என்ன, இப்பத்தான் முறுக்கமேறுது. இப்பிடி இருந்தீன்னா நாளைக்குக் கலியாணம் காச்சி பண்ண வேண்டாமா?’
தனக்கு வயதாகிவிட்டது என்று சொன்னதைத் தாங்க முடியாத அப்பன் ‘புடிடா’ என்று மொச்சையைப் பிடித்து அழுத்த முயன்றார். தாத்தா தன்னை ஏதோ கேலி செய்கிறார் என்று மட்டும் தெரிந்தது. முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்குள் அப்பன் இழுத்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து மொச்சையைப் பிடித்து முன்போலவே அழுத்தினார்கள். உடலை உந்தி எழ முடியாதவாறு எச்சரிக்கையாகப் பிடித்தார்கள். ‘அப்படித்தான் அப்படித்தான்’ என்று தாத்தா சொல்லிக் கொண்டேயிருந்தார்.
மொச்சையைத் துள்ள இயலாதவாறு பிடித்துக் கொண்டோம் என்று அவர்கள் நம்பிய சமயத்தில் தலையிலிருந்து வால் வரைக்கும் ஒரே சக்தியைக் கொடுத்து அந்தரத்தில் எழும்பினான். பிடியை விட்டு அப்பன் ஒருபக்கமும் குமராசு ஒருபக்கமும் விழுந்தார்கள். உட்கார்ந்த வாக்கில் விழுந்ததால் அடி படவில்லை. குமராசுக்குப் பொச்சுக்குட்டில் லேசாக வலித்தது. பெருவீரனைப் போல மொச்சை நின்றான். அவர்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் வாய்க்கூட்டைக் கழற்றுவதில் மும்முரமானான். மொச்சை மேல் குமராசுக்கும் கோபம் வந்தது. தடியை எடுத்துச் சாத்திக் கிடத்திவிட வேண்டும் போல வெறி ஏறியது. தாத்தாவின் பார்வையைச் சந்திக்க முடியவில்லை.
‘அட, வலுவத்த பசவளா’ என்று கேட்கும்படியே முனகினார். சாம்பலைத் திருநீறாக்கிக் கொண்டு வந்த அம்மா முறத்தை ஒருபுறம் வைத்துவிட்டு ‘இந்த நாய்க்குச் சோத்தக் கொறச்சிருக்கோணும். நாளுக்கு ஒருக்காச் சோறு போட்டாப் பத்தாதுன்னு மூனு வேளையும் போட்டா இப்பிடித்தான். மனசனுக்கு அடங்கி இருக்காத நாயி என்ன நாயி’ என்றார்.
‘அது மிருக வம்சம் மவளே. ஒருவருசத்துக் குட்டிக்கு எளவட்டப் பசவளாட்டம் நல்லா வலுவு இருக்கும். அப்பறம் அதுக்குப் பல்லும் நகமுந்தான் ஆயுதம். நம்மகிட்ட இருக்கற பல்லு மென்னு திங்கத்தான் ஆவுது. அதுகிட்ட இருக்கற பல்லு எரையப் புடிச்சுக் கொல்றதுக்கு ஆவுது. நம்மகிட்ட இருக்கற நகம் வெங்காயம் தொலிக்கறதுக்குத்தான் ஆவுது. அதுகிட்ட இருக்கற நகம் ஒரு ஒடலையே பிச்சு எடுக்கறதுக்கு ஆவுது. நாயின்னா சும்மா இல்ல. ஒருதடவ வாய வெச்சு எடுத்துதுன்னா காக்கிலோ நம்மளோட சத போயிரும். அப்பறம் அது வெசம் வேற. அதுக்கு வைத்தியம் பாக்கோணும்’ என்று தாத்தா விளக்கத் தொடங்கிவிட்டார்.
அவர் பேச்சைக் கேட்டும் கேட்காமலும் அப்பனும் மகனும் மொச்சையைப் பிடித்து அழுத்த மூன்றாம் முறையாக முயன்றார்கள். தாத்தா சுற்றும் முற்றும் பார்த்தார். திண்ணை ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை எடுத்து வந்தார்.
‘அப்பா, அது தொங்கக் கட்டலு. நல்ல கட்டலு உள்ள கெடக்குது. எடுத்தாரட்டுமா?’ என்று அம்மா கேட்டார்.
‘அட தொங்கிப் போனா ஆவாதுன்னு நெனச்சிட்டயா? இதுக்குத் தொங்கக் கட்டலுத்தான் வேணும்’ என்று சிரித்தார் தாத்தா.
இருவரும் பிடித்திருந்த மொச்சையின் மேலாகக் கட்டிலைக் கவிழ்த்துப் போட்டார். நான்கு கால்களையும் தூக்கிக்கொண்டு கட்டிலே ஒரு மிருகம் போலக் கிடந்தது. கடைக்கட்டில் கயிறுகளுக்கு இடையே மொச்சையின் முகத்தை வைத்து அந்தப் பக்கத்து விட்டத்தைக் கால்களால் அழுத்திக் கொண்டார். இப்போது வலையில் சிக்கிய மிருகமாய் மொச்சை துள்ளினான். தாத்தா சொற்படி மூவரும் செய்தார்கள். மொச்சையின் முகத்தைப் போலவே முன்னங்கால்களையும் கயிறுகளுக்கு இடையே எடுத்துவிட்டு மேலே நீட்டினார். பின்னங்கால்களை நன்றாக அகண்டிருக்கும்படி எடுத்து விட்டார். மொச்சையின் தலையிருந்த பக்கத்துக் குறுக்குச் சட்டத்தை அப்பன் அழுத்திப் பிடித்துக்கொண்டார். எதிர்ப்பக்கத்துக் குறுக்குச் சட்டத்தை அம்மா அழுத்திப் பிடித்தார். கட்டிலுக்கு நடுவில் அப்பனுக்குப் பின்பக்கத்தைக் காட்டிக் கொண்டு நின்று மொச்சையின் பின்னங்கால்களை அசையாமல் இருக்குமாறு குமராசு பிடித்துக் கொண்டான். அவன் பார்வையில் அம்மா தெரிந்தார்.
‘நாய்க்கு வலுவு இருக்குது. மனசனுக்கு மூள இருக்குது. வலுவ மூள ஜெயிச்சிரும். இன்னமே என்ன பண்ணுவ நாயே’ என்று சொல்லிச் சிரித்தபடி தாத்தா நுழைந்தார்.
‘அவன் பேரு மொச்ச தாத்தா’ என்றான் குமராசு.
‘ஆமா, இப்பப் பேருதான் முக்கியமா? மொச்சையோ பொச்சையோ இப்பப் புடுக்கறுக்கப் போறம். இன்னமே பொட்ட நாயி வாசமே அத்துப் போயிரும்’ என்று ஒருமாதிரி சிரித்தபடி குமராசுவின் மயிர்கள் அடர்ந்த கால்களைப் பார்த்தார். அப்படியே அண்ணாந்து அவன் முகத்தைக் கண்டு ‘மாப்ளக்கும் புடுக்குப் பெருத்திருக்குமே. ஒரு பிளேடப் போட்ரலாமா?’ என்று சிரித்தார்.
குமராசுக்கு அவமானமாக இருந்தது. என்ன சொல்வதென்று தெரியாமல் அம்மாவைப் பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டான்.
‘வலுசப்பையங்கிட்ட இப்பிடியா பேசுவீங்க? வேலையப் பாருங்கப்பா’ என்று அவனைக் காப்பாற்றப் பேச்சில் அம்மா நுழைந்தார். அப்படியும் தாத்தா விடவில்லை.
‘சின்ன மாப்ளக்கி ஒன்னுந் தெரியாதா? இப்பக் கலியாணம் பண்ணி வெய்யி. அடுத்த வெருசம் பெத்து எடுத்தர்லாம்’ என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்து ‘என்ன மாப்ள, நானெதும் தப்பாச் சொல்றனா? பிள்ளப் பெத்திருவதான?’ என்றார். மொச்சையின் கால்களை விட்டுவிட்டு ஓடிவிடலாம் போலிருந்தது. அவன் பிடி தளர்வதைப் பார்த்து ‘அட, பிடிய உட்றாத. தாத்தா சும்மா வெளையாட்டுக்குப் பேசறன்’ என்றார். அழுத்திப் பிடித்துக் கொண்டான்.
மொச்சையின் கால்களுக்கு இடையே கயிறழுந்தி நசுங்கிக் கிடந்த விதைப்பையை விடுவித்தார். கயிற்றுப் பிணிகளை நன்றாகத் தளர்த்திவிட்டு விதைப்பையை மேலே எடுத்தார். நான்கு பேர்களுக்கு நடுவில் வலையில் மாட்டிக்கொண்ட எலியைப் போல விடுபட முடியாமல் மொச்சை தவித்தான். வாய்க்கூட்டின் இறுக்கம், கயிற்றுக்குக் கீழ் அகப்பட்டுக் கொண்ட கழுத்து. அவனுடைய வழக்கமான குரைப்பொலியின் எந்தச் சுவடும் இல்லை. இருசக்கர வாகனம் தொடக்கத்தில் உறுமுவதைப் போல ஒருவிதச் சத்தம் மட்டும் வந்தது.
‘சாம்பல் எங்க மவளே?’ என்றார் தாத்தா. வாசல் நடுவில் முறம் இருந்தது. பிடியை விட்டுவிட்டு அம்மாவால் எழுந்து செல்ல முடியாது. தாத்தாவைப் பார்த்து விழித்தார் அம்மா.
‘யாரும் புடிய உட்றாதீங்க. இப்ப இருக்கற மாதிரியே இருக்கோணும்’ என்று ஆணையிட்டுவிட்டு எழுந்து வாசலுக்குப் போய் சாம்பல் முறத்தை எடுத்து வந்து கட்டிலோரம் வைத்துக்கொண்டார்.
‘ஒரு நிமிசந்தான். நாயி அசையப் பாக்கும். நீங்க புடிய உட்றக் கூடாது’ என்று சொல்லிவிட்டுப் பிளேடைக் கையில் எடுத்தார். வாய்க்கூட்டுக்குள்ளிருந்து முழுவதுமாகத் திறக்க முடியாமல் ஊளை போலச் சத்தம் எழுப்பிக் கொண்டேயிருந்தான் மொச்சை. அவன் உடல் நடுங்குவதைக் குமராசு உணர்ந்தான். கைகளில் வேர்வை பிசுபிசுத்தாலும் விடாமல் மொச்சையின் இருகால்களையும் இறுக்கிக் கொண்டு குமராசு கீழே பார்த்தான். இரு திராட்சைப் பழங்கள் போலத் தெரிந்த மொச்சையின் கொட்டைகளை லேசாகப் பிதுக்கிப் பார்த்தார் தாத்தா. அடிப்பகுதியில் அழுத்திக் கொட்டைகளை நுனிக்குக் கொண்டு வந்ததும் நரம்புகளோடி லேசான செந்நிறமாகத் தோல் தெரிந்தது. பிளேடை வைத்து ஒரு நேர்கோடு இழுத்தார். ரத்தம் பீரிட்டுக் குமராசுவின் முகத்தில் தெறித்தது.
இமைகளை மூடித் திறந்து பார்த்தபோது கொட்டைகளைக் காணவில்லை. விதைப்பை மேல் சாம்பலை வைத்துத் தாத்தா அழுத்திக் கொண்டிருந்தார். மொச்சையின் துள்ளல் அடங்கிப் போயிற்று. கட்டிலில் இருந்து வெளியே வந்த தாத்தா ‘உட்டுட்டு மெல்லக் கட்டிலத் தூக்கி எடுங்க’ என்றார். மொச்சையின் கண்கள் பாதி திறந்திருந்தன. மூச்சு புஸ்புஸ்ஸென்று வந்தது. ஆனால் அசைவில்லை. விதைப்பையில் இப்போது ரத்தம் வரவில்லை. சாம்பல் அடைத்துக் கொண்டது. கட்டிலை மேலே தூக்கி எடுக்கவும் மொச்சையின் கால், தலை எல்லாவற்றையும் கயிற்றுக்குள்ளிருந்து விடுவித்து விட்டார். மொச்சை அப்படியே கிடந்தான்.
அதிர்ச்சியிலிருந்து விடுபடாத குமராசு வேகமாகக் குளியலறைக்குப் போய் முகத்தைக் கழுவினான். தண்ணீரை அள்ளியள்ளி அடித்தும் பிசுபிசுப்புப் போன மாதிரி தெரியவில்லை. வெளியே வந்தபோது மொச்சையின் கொட்டைகளை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு ‘பொரியல் பண்ணீருவமா?’ என்று அப்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் தாத்தா. அவரது இளிப்பும் சொற்களும் அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. மொச்சையிடம் ஓடி அவன் தலையைத் தூக்கிப் பார்த்தான். மூச்சு வந்து கொண்டிருந்தது; விழிக்கவில்லை.
‘பயப்படாத மாப்ள. மொச்ச மொச்சைன்னு சொன்னயே, இதா மொச்சக் கொட்டயாட்டந்தான் இருக்குது, பாக்கறியா?’ என்றார் தாத்தா. அவன் எதுவும் பேசாமல் எழுந்து இட்டேரிப் பக்கம் ஓடிப் போனான். நெடுநேரம் கழித்துத் திரும்பிய போது தாத்தா இல்லை. மொச்சை எழுந்து நின்றிருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த தண்ணீரையோ கறிச்சோற்றையோ அவன் கவனித்ததாகவே தெரியவில்லை. கண்ணில் நீர் வடியும் தாரை தெரிந்தது. வாயைத் திறந்து கொண்டு பரிதாபமாக நின்றான். அருகில் போய்த் தலையைத் தடவினான் குமராசு. எந்தச் சலனமும் இன்றி அப்படியே இருந்தான் மொச்சை. அவன் கண்களை நேராகப் பார்க்க முடியாமல் தாழ்த்திக்கொண்டு குமராசு வீட்டுக்குள் போய்ப் படுத்துக் கொண்டான். அவனுக்கும் அழுகை வந்தது.
அடுத்த சில நாட்களில் மொச்சை தேறிப் பழையபடி மாறிவிட்டான். காயம் ஆறும் வரை அவனை அவிழ்த்து விடவில்லை. காலையும் மாலையும் சங்கிலியோடு இட்டேரிக்குக் கூட்டிப் போய் வந்தான் குமராசு. துள்ளியோடும் மொச்சை இப்போது சொங்கிப் போய் நடந்து வருவதைப் பார்க்கவே முடியவில்லை. அவனோடு என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. ‘எல்லாம் செரியாப் போயிரும்டா மொச்ச’ என்று மட்டும் அடிக்கடி சொன்னான்.
மொச்சை அன்றாடத்திற்கு வந்துவிட்ட போதும் அதன் தாக்கம் குமராசுவிடம் இருந்து போகவில்லை. குளியலறைக்குள் போனால் வெளியே வர வெகுநேரமானது. தன் விதைப்பையைக் கையால் நீவியபடி அதையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். மொச்சைக்குத் தாத்தா பிதுக்கியதைப் போலத் தன்னுடையதையும் பிதுக்கிப் பார்த்தான். அதை நோக்கிப் பிளேடு நீள்வது போலத் தெரிந்து அஞ்சினான்.
‘பள்ளிக்கூடத்துக்கு நேரமாவுலியாடா? பாத்ரூமுக்குள்ள போனா வெளிய வரவே மாட்டீங்கறான்’ என்று அம்மா திட்டும் குரல் கேட்டுத்தான் வெளியே வந்தான். ‘பிளேடப் போட்ரலாமா?’ என்னும் தாத்தாவின் குரல் அவ்வப்போது அசரீரியாய் ஒலித்தது. இரவுத் தூக்கத்தில் இளித்த முகத்தோடு பிளேடை ஒருகையில் வைத்துக்கொண்டு தாத்தா தெரிந்தார். அவருடைய இன்னொரு கையில் பிதுக்கிக் கொண்டிருந்த கொட்டைகள் தன்னுடையது போலவே தெரிந்தன. மொச்சையின் விதைப்பை இருந்த இடம் தெரியாமல் சுருங்கிப் போய்விட்டது. அவனுடைய ஆட்டமும் துள்ளலும் திரும்பின. குமராசுதான் தேறவில்லை.
அதிலிருந்து தாத்தாவை அவனுக்குப் பிடிக்காமல் போயிற்று. தடத்தில் அவரைப் பார்த்தால் தவிர்த்து வேறு வழியில் போனான். எதிர்பாராத விதமாக நேர்ந்துவிட்டால் அவர் சொல்வதைக் காதில் வாங்காமல் வேகமாக ஓடிப் போனான். ‘மாப்ளக்கி வெக்கம்’ என்று அவரே அர்த்தப்படுத்திக் கொண்டார். வீட்டுக்கு அவர் வந்தால் ஆட்டுப்பட்டியில் வேலை இருப்பது போலக் காட்டிக் கொண்டு அவர் கிளம்பிய பிறகே வந்து சேர்ந்தான். இலவசமாகச் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வெதுரெடுப்பது ஒரு பிழைப்பா என்று தோன்றியது.
அவர் வாயில் வரும் வார்த்தைகள் நாறுகின்றன. கையில் ஒரு பிளேடு கிடைத்துவிட்டால் யார் புடுக்கில் வேண்டுமானாலும் கை வைப்பாரா? அது நாய்ப் புடுக்கு என்றாலும் இவருக்கென்ன அருகதை? மனதுக்குள் கேவலமான வார்த்தைகளால் அவரைத் திட்டிக் கொண்டேயிருந்தான். மொச்சைக்கு எந்த உணர்வும் இல்லை. அவன் பாட்டுக்குக் குதியாட்டம் போட்டான். முன்பை விடவும் உற்சாகமாக இருந்தான். உடல் நெகுநெகுப்பு கூடியிருந்தது. என்றாலும் ஏதோ ஒரு சோகம் அவன் முகத்தில் நிரந்தரமாகப் படிந்திருப்பது போலத் தெரிந்தது.
மொச்சைக்கு வெதுரெடுத்து ஓராண்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. இப்போது அவன் பின்பகுதியில் சுருங்கிய சிறுபை கூட இல்லை. தோலோடு தோலாக விதைப்பை கரைந்துவிட்டது. கொட்டைகளைப் பிதுக்கி அறுத்தெடுத்த தாத்தாவும் இப்போது கரைந்து போனார். எப்படிச் செத்துப் போனார் என்று தெரியவில்லை. இயற்கையான சாவு அவருக்கு வந்திருக்காது என நினைத்தான். சாகிற வயதில்லை. நாள் முழுக்க ஊர் ஊராக நடந்து அலைந்து கொண்டிருக்கும் உடலுக்கு அத்தனை சீக்கிரம் எப்படிச் சாவு வரும்? சாப்பாட்டிலும் குறை இல்லை. வெதுரெடுக்கும் வீடுகளில் தின்னும் கறிச்சோறு போதாதா?
வேலைகளைச் செய்துகொண்டிருந்த அவனுக்குள் தாத்தாவே நிறைந்திருந்தார். மதியம் சாப்பிட்டுவிட்டு மொச்சைக்கும் கொஞ்சம் போட்டான். உண்ட மயக்கம் தீரத் திண்ணையில் நீட்டிப் படுத்தான். தூரத்தில் அம்மாவின் பேச்சுக் குரலும் இன்னொரு துணைக்குரலும் கேட்டன. உடன் வருவது யாரெனத் தெரியவில்லை. குரல் அருகே வரவர அடையாளம் தெரிந்தது. இரண்டு ஊர் தள்ளியிருக்கும் பெரியம்மா. இழவு கண்டு விட்டு ஊருக்குப் போகாமல் இங்கே ஏன் வருகிறார் என்று தெரியவில்லை.
அம்மாவுக்குப் பெரியப்பா மகள். இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். ஊர், உறவுப் பழமை பேச நாக்கு துடிக்க ஆரம்பித்து விட்டால் யாரையாவது இங்கே வரச் சொல்வார் அம்மா. இரண்டு நாட்கள் தங்க வைத்து எல்லாப் பழமைகளும் பேசி முடித்த பின்னரே அனுப்பி வைப்பார். யாரும் வரவில்லை என்றால் இரண்டு நாளுக்கு எல்லாவற்றையும் எப்படியோ பார்த்துக் கொள்ளுங்கள் என்று போட்டது போட்டபடியிருக்க ஏதாவது ஓரூருக்குக் கிளம்பிவிடுவார். இப்போது வலியக் கிடைத்த வாய்ப்பு. இரண்டு இரவுகளாவது பெரியம்மா தங்குவார் என்பதை நினைக்க அவனுக்கு நிம்மதியாக இருந்தது. வந்தவர்கள் அவனைக் கவனித்த மாதிரியே தெரியவில்லை.
‘தாத்தாவப் பாக்க நீ வர்லியா கன்னு? கடசியா ஒருக்கா வந்து பாத்திருக்கலாமே. இன்னமே எப்பப் பாக்கப் போறம்?’ என்று பெரியம்மா கேட்டார்.
‘நாலு சனத்தக் கண்டா நடுங்கற எருவுகாலி அவன். எந்த எடத்துக்கும் வர மாட்டான்’ என்று அம்மா பதில் சொல்லிவிட்டு அவர்கள் பேச்சைத் தொடர்ந்தனர். அவன் இருப்பதால் குசுகுசுவென்று பேச்சு தொடர்ந்தது. இருவரும் வாசலில் உட்கார்ந்தனர். அவன் தண்ணீர் மொண்டு வந்து கொடுத்தான். குளித்து மாற்றுவதற்குச் சேலைகளை எடுத்துக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்த வேலைகளைச் செய்துகொண்டே அவர்கள் பேசுவதிலும் கவனம் குவிந்தது. ஒட்டுக் கேட்கும் போது காதுகள் கூர்மையாகி விடைத்து நிற்பதைத் தவிர்க்க முடியவில்லை.
‘எங்கூட்டுக்கு எட்டு நாளைக்கு ஒருக்கானாச்சும் வந்திருவாரு. மவளே மவளேன்னு ஆசையாத்தான் கூப்பிடுவாரு. இருந்தாலும் நான் கொஞ்சம் தள்ளி நின்னே பேசிக்குவன். இந்த ஆளு புத்திதான் ஊருக்குத் தெரிஞ்சதாச்சே’ என்று அம்மா சொன்னார்.
‘அது செரி. பொம்பளப் பித்துப் புடிச்சவனுக்கு மவன்னு தெரீமா, மருமவன்னு தெரீமா?’ இது பெரியம்மா.
‘இந்தக் கெழவன் புத்தி தெரிஞ்சுதான் பெரியவன் தனியாக் குடி போயிட்டான். இல்லீனா ஒன்னுமின்னா காட்டுக்குள்ளயே இருந்திருக்கலாமே.’ அம்மா குரல் தாழ்ந்து வந்தாலும் அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
‘சின்ன மருமவ தெளிவாச் சொல்லீட்டாளாமா, அதுஇதுன்னு எம்மேல கீது கெழவன் கைப் பட்டுதுன்னா கெளம்பிப் போயிருவன், அப்புறம் கெழவனென்ன, நீ செத்தாலும் இந்தப் பக்கங்கூட வரமாட்டன்னு ஒடச்சுச் சொல்லீட்டாளாமா.’
‘அப்பறம் அவனும் எத்தன நாளைக்கித்தான் பாப்பான். பொண்ணுத் தேடித்தேடி இப்பத்தான் அமஞ்சுது. வெச்சுப் பொழைக்க நெனப்பானா, அப்பனுக்கு உட்டுக் குடுக்க நெனப்பானா? ஒருதடவ சொல்லலாம், ரண்டு தடவ சொல்லலாம். குடிச்சுப்புட்டுக் குடிச்சுப்புட்டு மருமவ கையப் புடிச்சு இழுத்தா ஆரு சும்மா இருப்பா?’
‘பெரீவனும் சின்னவனுஞ் சேந்துதான் செஞ்சாங்களாமா. அதுக்கு உயிர்நெலயிலா கைய வெப்பாங்க? குளிப்பாட்டறப்பக் கூடப் பாத்தயா, இடுப்புத் துணிய அவுக்கவே இல்ல. ரத்தம் திட்டுத்திட்டாப் படிஞ்சிருந்துது. எங்கண்ணாலயே கண்டன்.’
‘ஊரு நாயிவளுக்கு எல்லாம் அறுத்துப் போடறயே, உன்னோடத அறுக்கறமுன்னு திட்டம் போட்டே செஞ்சிட்டாங்க பசவ.’
கேட்கக் கேட்கக் குமராசுக்குக் காது குளிர்ந்தது.
‘இன்னமே நாய்க்கு வெதுரெடுக்கத் தான் ஆளில்ல.’
அம்மா சொன்னது காதில் விழவில்லை. நெடுநாள் பகை முடித்த உற்சாகத்தோடு இட்டேரித் தடத்துக்குப் போனான் குமராசு.
கிராமத்துத் தெருவில் நடந்து, அதன் வாழ்வியல் கதை கேட்ட மனநிறைவு!
அருமையான இயல்பான கதையோட்டம்.. மொச்சைக்காக வருந்துவதா.. தாத்தாவுக்காக வருந்துவதா.. இருக்கும்போது அப்பா..மகளே..என்று உறவு முறை கொண்டாடிவிட்டு இறந்தவுடன் வாய்கூசாமல் வம்புபேசும் உலகை நினைத்து வருந்துவதா… திகைத்து நிற்கிறேன்..
விதையறுத்தவன் வினையறுப்பான் ! இயல்பான எழுத்து நடை ! கண்முன்னே காட்சிகளைக் காட்டுகிறது.