மஞ்சள் சுவர்த்தாள்

ன்னையும் ஜானையும் போன்ற மிகச்சாதாரணர்களுக்கு இப்படியொரு மாளிகையே வீடாக அமைவதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத அதிசயம். பரம்பரை பரம்பரையாக வருமே, அப்படியொரு பெரிய இராஜமாளிகை. ஆவிகள் உலாவும் பேய் பங்களா போல் இருக்கிறதென்று எண்ணி என் உள்ளம் குதூகலிக்கும்போதே அதற்கெல்லாம் எனக்குக் கொடுப்பினை இல்லை என்றும் உறுத்தியது.

என்றாலும் இந்த வீட்டில் ஏதோ வினோதம் இருக்கிறதென்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்தது எனக்கு. இல்லையென்றால் இத்தனைக்காலம் குடித்தனம் எதுவும் இல்லாமலிருந்து இப்போது இத்தனை சல்லிசான வாடகைக்கு எப்படிக் கிடைக்கும்?

சொன்னால் ஜான் சிரிக்கிறார். இல்லறம் என்றால் இப்படித்தானே?

ஆனாலும் அவருடைய யதார்த்தம் கொஞ்சம் மிகை தான். நம்பிக்கைகள் மீது பெரிதாகப் பொறுமையெல்லாம் கிடையாது, அதிலும் மூட நம்பிக்கைகளைக் கேட்டாலே முகம் கோணும். புலன்கள் உணராத, உணர்த்தி விட முடியாத எதைப்பற்றிய பேச்சுக்கும் கேலி தான் அவரது பதில்.

சொல்லவில்லையே, என் கணவர் ஜான் ஒரு மருத்துவர் அதனால் தானோ என்னவோ (இதே வேறொருத்தர் என்றால் சொல்லியிருப்பேனோ என்னவோ தெரியாது, இது வெறும் ஜடக்காகிதம் என்பதால் நிம்மதியாகச் சொல்கிறேன்) எனக்கு இன்னும் உடல்நிலை சீராகவில்லை. ஏனென்றால் நான் நலமாயில்லை என்பதையே அவர் நம்புவதாக இல்லை. பிறகு யாரால் என்ன செய்ய முடியும்?

சிறந்த மருத்துவர் என்று பெயர் பெற்ற ஒருவர், கணவர், அவரே எதுவும் நடக்காதது போலவும் வெறும் தற்காலிக மன அழுத்தமன்றி வேறு பிரச்சனை எதுவும் இல்லை என்றும் உற்றார் உறவினரிடமெல்லாம் சொல்லும்போது என்னால் என்ன செய்து விட முடியும்? என் சகோதரனும் புகழ்பெற்ற மருத்துவன் தான். அவனும் இதையேத் தான் சொல்கிறான். அதனால் நானும் மருந்தோ மாத்திரையோ கொடுப்பதை விழுங்கி விட்டு பயணமோ காற்றோ உடற்பயிற்சியோ அவர்கள் சொல்கிற எதையும் செய்து விடுவது. நலமாகும் வரை வேலை மட்டும் எதுவும் செய்துவிடக் கூடாதென்று கட்டுப்பாடு.

தனிப்பட்ட வகையில் எனக்கு அவர்கள் சொல்வதில் ஒப்புதலே இல்லை தான். மனதுக்குப் பிடித்த வேலைகளை விருப்பத்தோடும் சிற்சில மாற்றங்களோடும் செய்தால் எனக்குக் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றே தோன்றியது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்?

அப்படியும் சில காலம் எழுதிக்கொண்டு தான் இருந்தேன், ஆனால் அது என்னை மிகவும் சோர்வடையச் செய்தது. மறைத்துக் கொள்ளத்தான் வேண்டும். இல்லையென்றால் இதுவும் கிடைக்காது. எதிர்ப்பு தான் மிஞ்சும்.

நான் இருக்கும் நிலைக்கு இன்னும் கொஞ்சம் அனுசரணையும் கொஞ்சம் மக்களோடு உறவாடவும் முடிந்தால் நன்றாக இருக்குமே என்று சில சமயம் நினைப்பதுண்டு. ஆனால் என் நிலையைப்பற்றி நினைப்பதே மிகவும் மோசமான விளைவை உருவாக்கலாம் என்று ஜான் சொல்கிறார்.

ஒருவகையில் அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. என்னைப் பற்றி நினைப்பது எனக்கு அப்படியொன்றும் இன்பம் தருவதாயில்லை தான். அதனால் என்னை விடுத்து இந்த வீட்டைப் பற்றிச் சொல்கிறேன்.

ரொம்பவே அழகான வீடு இது. ஊருக்கு ஒதுக்குப்புறமாய் சாலையில் இருந்து உள்ளடங்கி யாரும் அறியாமல் தனியாக நிற்கிறது. கதைகளில் படிப்போமே! அரச மாளிகையும் அதைச் சுற்றிலும் இருக்கும் தோட்டக்காரர்கள், வேலையாட்கள் வசிக்கும் சிறு வீடுகளுமென, அப்படியானதொரு தோற்றம் தான் எனக்குச் சட்டென நினைவில் உதிக்கிறது.

இங்கேயும் ஒரு தோட்டம் இருக்கிறது. மரங்களடர்ந்து, நிழல் கவ்விக் கிடக்கும் ரசனையானதொரு தோட்டம். பூக்களால் ஓரங்கட்டிய பாதையும், திரண்ட திராட்சைகள் படர்ந்தோடும் கொடிவீடுகளும், அவற்றினடியே இருக்கைக்களுமாய் அப்படியொரு அழகிய தோட்டத்தை இதுவரை நான் கண்டதேயில்லை.

சில கண்ணாடி வீடுகள் கூட இருந்திருக்கின்றன, ஆனால் இப்போது அவை சிதிலமடைந்து கிடக்கின்றன. ஏதோ சொத்துத் தகராறாயிருக்கும் போல. இத்தனைக்காலம் இப்படியொரு இடத்தை வெற்றாகப் போட்டிருக்க வேண்டிய வேறு அவசியம் இல்லையே!

ம்ம்! இது கொஞ்சம் கதைச்சுவையைக் கெடுக்கிறது எனக்கு. ஆனால் பரவாயில்லை பேயென்று இல்லாவிட்டாலும் கூட இங்கே வேறு ஏதோ மர்மம் இருக்கத்தான் இருக்கிறது. அதை என்னால் நன்றாக உணர முடிகிறது.

ஒரு நிலவொளிர்ந்த மாலையில் ஜானிடம் இதைச்சொன்னேன். அவர் நான் வெறுமனே அலைப்புற்றிருப்பதாகச் சொல்லி ஜன்னலை அடைத்து விட்டார்.

சில சமயம் அவர் மீது காரணமற்றுக் கோபம் வருகிறது, பொதுவாக இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படுபவளில்லை நான். எல்லாம் இந்த பாழாய்ப்போன மனஅழுத்தமாய்த் தான் இருக்கும்.

இப்படி நினைப்பதால் கூட என் சுயக்கட்டுப்பாட்டை நான் இழந்து விடக்கூடும் என்று ஜான் சொல்கிறார். அதனால் நான் என்னை மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறேன், அவர் முன்னிலையில் மட்டுமாவது. அது என்னை மிகவும் சோர்வடையச் செய்கிறது.

எனக்கு எங்கள் அறையைக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. தாழ்வாரத் திறப்போடு ஜன்னலெல்லாம் ரோஜாக்கள் பூத்த அறை ஒன்று கீழே இருக்கிறது. அழகான பழைய காலத்துத் திரைச்சீலைகள் கொண்ட பெரிய ஜன்னல். ஜான் காது கொடுத்தும் கேட்கவில்லை.

அந்த ஒரு ஜன்னல் தான் இருக்கிறது. இரண்டு கட்டில் அங்கே போட இடமில்லை. அருகே அவருக்கு வசதியாக அறை இல்லை. அது இது என்று காரணம் சொல்லி மறுத்து விட்டார்.

என் மீது அதிக அன்பும் அக்கறையும் கவனமுமாய்த்தான் இருக்கிறார். தேவையற்ற திசையில் என்னைத் திரும்பக்கூட விடுவதில்லை. எனக்கென்று ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மருந்துப்பட்டியல் இருக்கிறது. எல்லாம் அவர் தான் பார்த்துக் கொள்கிறார். நான்தான் அதை மதிக்காத நன்றிகெட்டவளாயிருக்கிறேன்.

எனக்காகவே தான் இங்கே வந்திருப்பதாகச் சொல்கிறார். எனக்குச் சரியான அமைதியும் ஓய்வும் தேவை, நல்ல காற்று தேவை என்று அதற்காகவே வந்ததாகச் சொல்கிறார்.

      “உன் சக்தியைப் பொருத்தே உன் உடற்பயிற்சி கண்ணம்மா. பசியைப் பொறுத்தே உணவும். ஆனால் காற்றை மட்டும் வேண்டுமட்டும் உறிஞ்சிக் கொள்” என்று சொல்கிறார். அப்படித்தான் வீட்டின் மாடியில் முன்பு குழந்தைகள் அறையாகப் பயன்பட்டிருக்கக் கூடிய இந்த அறை எங்களுடைய அறையானது.

     நல்ல பெரிய அறை. எல்லா திசையையும் பார்த்தபடி ஜன்னல்களும் காற்றும் சூரிய வெளிச்சமும் நன்றாகவே கிடைக்கும் காற்றோட்டமான அறை. முதலில் குழந்தை அறையாக இருந்து, பிறகு சிறுவர் விளையாட்டு அறையாகி இருக்கும் என்று பார்த்தாலே தெரிகிறது. விழுந்து விடாதபடி ஜன்னல்களுக்கு கம்பிக்கிராதி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். சுவர்களும் கூட வளையங்களும் வேறு பொருட்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

வண்ணப்பூச்சும் சுவர்த்தாளும் ஒரு சிறுவனுடைய அறையாக இருந்திருக்கும் என்று எண்ண வைக்கிறது. என் தலைமாட்டில் கையெட்டும் தூரம் வரையும், அறையின் மறுகோடியில் தாழ்வான ஒரு இடத்திலும் கூட சுவர்த்தாள் கண்டபடி கிழிந்து கிடக்கிறது. இப்படியொரு கேவலமான சுவர்த்தாளை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை.

பரந்து விரிந்து செல்லும் பகட்டான வகையில் – கலையை எல்லா வகையிலும் கொலை செய்யும் ஒருவகைச் சுவர்த்தாள் அது. கண்களைக் குழப்புமளவுக்கு மந்தமாய், ஆனால் எரிச்சலூட்டும் அளவுக்கு அழுத்தமாய். பாழாய்ப்போன அந்த வடிவக்கோடுகளைப் பார்வையால் கொஞ்சம் தொடர்ந்து போனோமேயானால் சட்டென்று எங்கோ மூர்க்கமான கோணங்களில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அவை.

அருவருப்பும் வெறுப்பும் தூண்டும் கனற்றும் மஞ்சள் நிறம், மெல்ல நகரும் சூரிய ஒளியில் மங்கிப்போன ஒருவிதமான அழுக்கு மஞ்சள் நிறம். சில இடங்களில் பளீரென்ற ஆரஞ்சு மற்ற இடங்களில் அமிழ்ந்த மஞ்சள். இது பிள்ளைகளுக்கு எப்படிப் பிடித்திருக்கும்? இந்த அறையில் நெடுநாள் இருப்பதென்றால் என்னாலே முடியாது, வெறுப்பாய்த்தான் இருக்கும்.

அதோ ஜான் வருகிறார். இதை வேறு ஒதுக்கி வைக்க வேண்டும், ஒரு வார்த்தை எழுதினாலும் பிடிக்காது அவருக்கு.

 

 

இங்கே வந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. எனக்கு முன்பு போல எழுதத் தோன்றவில்லை, அந்த முதல் நாளில் இருந்து. இந்தக் கொடுமையான அறையில் ஜன்னலருகே அமர்ந்திருக்கிறேன் நான். என் சக்தியின்மையைத் தவிர வேறு எதுவும் நான் எழுதுவதை தடுத்து விட முடியாது.

இப்போதெல்லாம் ஜான் பகல் முழுவதும் சில இரவுகளிலும் கூட வீட்டில் இருப்பதில்லை. நல்லவேளை எனக்கு நோய் அப்படியொன்றும் தீவிரமாய் இல்லை. ஆனாலும் இந்த நரம்புச்சிக்கல்கள் மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என்று ஜானுக்குத் தெரிவதில்லை. கஷ்டப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அவர் அறிந்திருப்பதால் அத்தோடு அவர் சமாதானமாகி விடுகிறார். வெறும் பதற்றம் தான். மன அழுத்தம் தான். தெரிகிறது. ஆனால் அது என் பணிகளைச் செய்ய விடாமல் படுத்தி எடுக்கிறது.

ஜானுக்கு எல்லா வகையிலும் ஓய்வும் வசதியும் செய்து தந்து, உதவி செய்ய நினைக்கிறேன். ஆனால் இதோ நானே பாரமாகி நிற்கிறேன். ஆடை அலங்காரம் கேளிக்கை என்று சின்னச்சின்ன வேலைகளுக்குக் கூட நான் எத்தனை சிரமப்படுகிறேன் என்று சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். நல்லவேளையாக மேரி குழந்தையிடம் மிகவும் நல்லபடியாக இருக்கிறாள். செல்லக்குழந்தை. ஆனால் அவனோடும் என்னால் அதிக நேரம் செலவிட முடியாமல், அதுவே எனக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.

ஜான் இத்தகைய அழுத்தங்களை தன் வாழ்க்கையில் இதுவரை உணர்ந்திருக்கவே மாட்டார் என்றே நினைக்கிறேன். சுவர்த்தாள் பற்றி நான் சொன்னால் சிரிக்கத் தான் செய்கிறார்.

முதலில் சுவர்த்தாளை மாற்றிவிடலாம் என்று தான் சொன்னார். பிறகு அது என்னை வென்று கொண்டிருப்பதாகவும், நான் அதனிடம் தோற்றுக் கொண்டிருப்பதாகவும், இப்படியான கற்பனைகளை விட மோசமான எதுவும் என் போன்றோருக்கும் ஏற்படாது என்றும், சுவர்த்தாளை மாற்றினால், அடுத்து கட்டில், அதன் பிறகு ஜன்னல்கம்பிகள், கம்பிக்கதவு, படிக்கட்டு என்று வரிசையாகச் சொல்வாய் என்றும் கூறினார்.

“இந்த இடம் உனக்கு ஏற்றதாய் இருக்கிறது என்று உனக்கேத் தெரிகிறது. இன்னும் மூன்று மாதம் இருக்கப் போவதற்குப் போய் எதற்குச் செலவு செய்வது டியர்?” என்று சமாதானம் சொல்லிவிட்டார்.

“அப்படியென்றால் கீழேயாவது போவோம். அங்கே அழகான அறைகள் எத்தனை இருக்கின்றன?” என்று கேட்டேன்.

 என்னைக் கையில் அள்ளிக் கொஞ்சியபடி “நீ சொன்னால் பாதாளத்துக்கு வெள்ளையடித்துக் குடிபோகவும் நான் தயார்” என்று அவர் சொல்லவும் எனக்குமே கட்டில் ஜன்னல் மற்றவை பற்றியெல்லாம் அவர் சொல்வதில் ஓரளவு நியாயம் இருப்பதாகவேப்பட்டது. இந்த அறைக்கு என்ன? காற்றோட்டமான வசதியான அறை தான். நானும் அவரை நினைத்த மாதிரி ஆட்டி வைத்து வேடிக்கை பார்ப்பது சரியில்லை தானே?

இந்த அறையும் மெல்ல மெல்ல பிடித்துப் போய்விட்டது. அந்த சுவர்த்தாளைத் தவிர…

என் இந்த அறையின் ஒரு ஜன்னலில் இருந்து தோட்டத்தைப் பார்க்க முடியும். அந்த மறைவான கொடிவீடுகளும் கட்டுக்கடங்காமல் வளர்ந்து கிடந்த மலர்ச்செடிகளும் புதர்களும் முறுகி நின்ற மரங்களும் அதன்வழி தெரியக் கிடைக்கும்.

இன்னொரு ஜன்னல் வழியாக கடல்வெளியும் இந்த இடத்துக்குச் சொந்தமான தனித்த படகுத்துறையும் தெரியும். அங்கிருந்து ரம்மியமானதொரு நிழல் படர்ந்த பாதை வீடு வரை வந்து போகும். இங்கிருக்கும் எண்ணற்ற பாதைகளிலும் கொடிவீடுகளிலும் மக்கள் நடந்து செல்வது போல எப்போதும் கற்பனை செய்தபடி கிடப்பேன். ஆனால் அப்படிக் கற்பனைகளில் மனதைத் தொலைப்பதன் பாதகங்களைச் சொல்லி ஜான் எச்சரித்துக்கொண்டே இருப்பார். எனக்கிருக்கும் கற்பனை வளத்துக்கும், கதை சொல்லும் திறனுக்கும், எனக்கிருப்பது போன்ற நரம்பு பலவீனமும், என்னைப் பல்வேறு கிளர்ச்சிகளுக்கு ஆட்படுத்தும், ஆகையால் என் உள உறுதியைப் பயன்படுத்தி என்னைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்வார்.

அதனால் நானும் முயற்சி செய்வேன்.

கொஞ்சமே கொஞ்சம் எழுத முடிந்தாலும் கூட, அது என் எண்ண வெடிப்புகளில் இருந்து என்னைத் தளர்த்தி ஓய்வு தரும் என்று சில சமயங்களில் நான் நினைப்பதுண்டு.

ஆனால் அப்படி முயற்சி செய்யும் போதெல்லாம் நான் முழுமையாக சோர்வடைகிறேன் என்பதை விரைவில் கண்டுகொண்டேன். என் பணி குறித்து எந்த அறிவுரைகளைப் பெறவும் முடியாமல் உடனொத்த சிந்தனையிலும் யாரும் இல்லாமலிருப்பது என் ஊக்கம் கெடுப்பதாகவே இருக்கிறது. நான் முழுமையாக குணமடைந்ததும் ஹென்ரியையும் ஜூலியாவையும் வீட்டில் தங்கிப் போகச் சொல்லலாம் என்று ஜான் சொல்கிறார். ஆனால் இப்போதைக்கு அது முடியாது என்றும் சொல்லி விட்டார். சீக்கிரம் குணமடைந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனால் அதைப்பற்றி நான் சிந்திக்கக்கூடாது. என் மீது அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான தாக்கத்தை நன்றாக உணர்ந்தது போல இதோ! இந்தக் காகிதம் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறது.

அந்த சுவர்த்தாளில்…

அதில் திரும்பத் திரும்பத் தோன்றும் புள்ளி ஒன்று இருக்கிறது. அங்கே அதன் வடிவம், உடைந்த கழுத்து போல இழுத்துக்கொண்டு, இரண்டு முட்டைக்கண்கள் தலைகீழாய்க் கிடந்து நம்மை பார்ப்பது போல இருக்கும். அது அப்படி தொடர்ச்சியாக உறுத்திக்கொண்டே இருப்பது எனக்கு உள்ளபடி மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தும். மேலும் கீழும் இப்படியும் அப்படியும் அது தவழ்ந்து தவழ்ந்து செல்லும். பொருளற்ற முட்டைக்கண்கள் எப்போதும் எங்கெங்கும் நிரம்பி வழியும். அந்த சுவர்த்தாளில் இரு பரப்புகள் இணையாத ஓரிடம் இருக்கிறது. அந்த வரிசை முழுவதும் அந்த முட்டைக்கண்கள் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் மேலும் கீழும் கோணலாய் ஓடிக்கொண்டிருக்கும்.

அப்படி ஒரு அசைவற்ற பொருளிடமிருந்த அத்தனை உணர்ச்சி வெளிப்பாட்டை  இது வரை நான் பார்த்ததேயில்லை.

சிறு வயதில் பிற குழந்தைகள், விளையாட்டுப்பொருட்கள் கடையில் பெறும் வேடிக்கையை விடவும் அதிகமான பயத்தையும் வேடிக்கை விளையாட்டையும், வெற்றுச் சுவர்களும் வெற்று இருக்கைகளும் எனக்கு தருமென்பதால் அவற்றை உறங்காமல் வெறித்தபடி கிடந்ததுண்டு. அன்பாய்க் கண்ணடிக்கும் என் பழைய துணி அலமாரியின் குமிழ்ப்பிடியும், எப்போதும் தளராத அரவணைப்பைத் தருவதாய்க் கிடக்கும் ஒரு நாற்காலியும், இப்போதும் நினைவில் வருகின்றன. வேறு எந்த பொருட்களாவது என்னை மருட்டினால் அந்த நாற்காலியில் ஏறி உட்கார்ந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வதுண்டு.

இந்த அறையின் மரச்சாமான்களெல்லாம் ஒன்றோடொன்று பொருந்தாமல் கிடக்கின்றன. ஏனென்றால் இவை இவ்வறையினுடையவை அல்ல. கீழ்அறைகளில் இருந்து எடுத்து வந்து போடப்பட்டிருந்தன. இது குழந்தைகள் அறையாக இருந்து விளையாட்டு அறையாக மாறியபோது சாமான்களை எல்லாம் அப்புறப்படுத்தி இருப்பார்கள் போலிருக்கிறது. அதனால் தான் அப்படி. ஆனால் இத்தனை மோசமாக பிள்ளைகள் சீரழித்த அறையொன்றை நான் பார்த்ததில்லை.

முன்பே சொன்னேன் அல்லவா? சுவர்த்தாளெல்லாம் கண்ட இடத்தில் கிழிந்து ஒன்றோடு ஒன்று உடன்பிறந்தது போல ஒட்டிக்கொண்டு கிடந்தன என்று?

தரையெல்லாம் ஒரேக்கீறல்கள்.

சில இடங்களில் பெயர்ந்து வெடித்து செதில்களாய் உடைந்து குழி தட்டிக்கிடந்தன. அப்புறம் இந்தக் கட்டில். நாங்கள் இந்த அறையைப் பார்த்த போது இது மட்டும் தான் இங்கே கிடந்தது. பல போர்களைக் கண்டது போல தனித்து அடிபட்டுக்கிடந்தது. ஆனால் அதெல்லாம் எனக்கு பிரச்சனையில்லை. என்னுடைய பிரச்சனை அந்த சுவர்த்தாள் தான். அது மட்டும் தான்.

இதோ ஜானுடைய சகோதரி வருகிறாள். மிகவும் நல்ல பெண். என்னை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்கிறாள். ஆனால் நான் எழுதிக் கொண்டிருப்பதை மட்டும் அவள் பார்த்து விடக்கூடாது.

பிழையற்றவள். இதை விட வேறு எந்த வேலையும் அவளுக்குப் பிடித்தமில்லை என்பது போல மிகச்சிறப்பான முறையில் இந்த வீட்டை நிர்வகிக்கிறாள். என்னை நோயாளியாக்கியது என்னுடைய எழுத்து தான் என்று அவள் எண்ணுவது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனால் அவள் இங்கில்லாத பொழுதுகளில் நான் எழுதலாம். அவள் நெடுந்தூரம் நடந்து செல்வதை என் ஜன்னல் வழியாகப்பார்த்தபடி எழுதலாம்.

ஒரு ஜன்னல் இருக்கிறது.

சாலையை – நெடுநிலத்தைப்பார்த்தபடி அழகாக மடிந்து செல்லும் நிழல் பரந்த ஒரு சாலையை – பார்த்தபடியான ஒரு ஜன்னல் இருக்கிறது. இது மிக அழகான பிரதேசம். பெருமரங்களும் பட்டுப்புல் தரையுமாய் அழகான நிலம்.

இந்த சுவர்த்தாள் இருக்கிறதே. இதில் வேறொரு நிறத்தில் கிளைத் தோரணி ஒன்றுண்டு. அது ரொம்பவும் எரிச்சலூட்டும். வெளிச்சம் படும் சில இடங்களில் மட்டுமே அவை புலப்படும் மற்ற இடங்களில் கண்ணுக்குச் சிக்காது.

ஆனால் அவை மங்காத இடங்களில் சூரிய ஒளி படும் நேரத்தில் அந்த வெளிப்படையான முன்னலங்கார வடிவங்களுக்குப்பின்னே, ஒரு வினோதமான, ஆர்வத்தை தூண்டுகின்ற வடிவற்ற உருவம் ஒன்று சதா அலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றும் எனக்கு.

இதற்கு அக்காள் ஒருத்தி இருக்கிறாள் படிக்கட்டிலே.

ஒருவழியாக ஜுலை நான்கு விழா நாள் முடிந்தது. வந்தவரெல்லாம் கிளம்பிவிட்டனர். நானும் அயர்ந்து விட்டேன். ஆளும் பேருமாய் இருந்தால் எனக்குக் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று ஜான் நினைத்ததால் அத்தையும் நெல்லியும் பிள்ளைகளும் மட்டும் ஒருவாரம் வந்து இருந்து விட்டுப் போயினர். நான் சுட்டு விரல் கூட அசைக்கவில்லை. எல்லாம் ஜென்னி பார்த்துக் கொண்டாள். ஆனாலும் நான் அயர்ந்து விட்டேன்.

நான் சீக்கிரம் குணமடையாவிட்டால், என்னை மருத்துவர் வெயர் மிட்செலிடம் அனுப்பி விடப் போவதாக ஜான் சொன்னார். எனக்கு அங்கு போக வேண்டாம். என்னுடைய தோழி ஒருத்தி அவரிடம் மருத்துவம் பார்த்திருந்தாள். ஜானையும் என் சகோதரனையும் போலத்தான் அவரும் அவரது கருத்துகளும், சொல்லப்போனால் இன்னும் அதிகம் என்று தெரியும். தவிரவும் இதற்காக அவ்வளவு தூரம் போவதும் அதிகப்படி. அப்படியெல்லாம் திடுமென்று மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாயும் எனக்குத் தோன்றவில்லை.

எனக்கு வேறு அதிருப்தியும் சிடுசிடுப்பும் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒன்றுமில்லாதவற்றுக்கெல்லாம் அழுகிறேன். பெரும்பான்மை நேரம் அழுது கொண்டிருக்கிறேன். ஜான் அல்லது வேறு யாரும் இருக்கும் சமயத்தில் அல்ல, நான் தனியாக இருக்கும் போது மட்டும் தான். இப்போதெல்லாம் அதிக நேரம் தனியாக இருக்கவும் செய்கிறேன். ஜான் பெரிய பெரிய கேஸ்களுக்காக பெரும்பான்மை நேரம் ஊருக்குள்ளேயே இருக்கிறார். ஜென்னி என்னை நன்றாகத்தான் கவனித்துக் கொள்கிறாள். என் தேவைக்குத் தனிமையையும் தருகிறாள்.

கொஞ்சமாய் தோட்டத்தில் உலாவுவேன். சில சமயம் அந்த அழகிய பாதையில் நடை பயில்வேன். ரோஜாக்கள் மத்தியில் அமர்ந்திருப்பேன். அல்லது இங்கே இப்படிக் கிடப்பேன்.

இந்த சுவர்த்தாளையும் மீறி இந்த அறை எனக்குப் பிடிக்கத்துவங்கி இருந்தது. ஒரு வேளை அந்த சுவர்த்தாளாலேயே கூட எனக்கு இந்த அறை விருப்பமானதாய் மாறியிருக்கலாம்.

அது எப்போதும் என் சிந்தையில் கிடக்கிறது.

அசைக்க முடியாத பெருங்கட்டிலில் – இது தரையோடு சேர்த்து அறையப் பட்டிருக்கிறதென்று நினைக்கிறேன் – கிடக்கிறேன். இதில் கிடந்தபடி அந்த சுவர்த்தாளில் உள்ள வடிவத்தை காலநேரமின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறேன். இதுவும் நல்ல உடற்பயிற்சி தான், நம்புங்கள்!

கீழேயிருந்து, அதோ அந்த மூலையில் யாரும் தொடாத அந்தப் புள்ளியில் இருந்து துவங்குகிறேன் என்று வையுங்கள், நிறுத்தாமல் அந்த எல்லையற்ற புள்ளியைத் தொடர்ந்தபடி ஆயிரம் முறையாவது இதில் ஏதாவது முடிவு கிட்டுகிறதா என்று பார்த்திருப்பேன்!

எனக்கு வடிவமைப்பின் நியமங்களெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். இந்த வடிவம் இது வரை நான் கண்டு கேட்ட எந்த ஒழுங்கின் கீழும் வராமல் முரண்டு பிடித்தது. அகலச்சாலாய் திரும்பத் திரும்ப அப்படியே…

ஒருபக்கமாய்ப் பார்த்தால் அகலவெட்டாய் தனித்துக்கிடக்கும். ஜன்னியில் நடுங்குவது போல, பெருத்த வளைவுகளும் நெளிவுகளுமான வடிவங்கள் தனித்துத் தடித்த வரிசையாக மேலும் கீழும் அசைந்தோடிக் கொண்டே இருக்கும். ஆனால் ஒருபுறம் குறுக்குச்சாய்வில் அவை இணையும். புரண்டு நெளியும் கடற்பாசிகளைப் போல காணத் திகிலான சாய்வலைகளாய் நாலாபுறமும் பரபரவென ஓடும் புறக்கோடுகள். இவை மொத்தமும் மேலும் கீழுமாக மட்டுமல்லாமல் இட வலமாகவும் போவது போலத்தான் எனக்குத் தெரிகிறது. அது எந்த ஒழுங்கில் அப்படிப் போகிறது என்று கண்டறிய முயன்று களைத்துப் போகிறேன். இதில் குழப்பத்தை விரிவாக்கவென்றே குறுக்காக ஓடும் அலங்காரப்பட்டை வேறு இருக்கிறது.

இது கொஞ்சமும் சிதையாமல் முழுமையாக அறையில் ஒரு முனையில் இருக்கிறது. அங்கே ஒளிக்கோடுகள் மங்கி அடிச்சூரியன் ஒளியை மிகச்சரியாக அதன் மீது பாய்ச்சும் போது – என்னால் கிட்டத்தட்ட கதிர்களை இங்கேக் கற்பனை செய்ய முடிகிறது– முடிவற்ற கோரங்கள் நடுமையத்தில் தோன்றி நகர்ந்து தலைக்குப்புற விழுந்து மூழ்கி கவனம் சிதைக்கின்றன.

இதைத் தொடரத் தொடரச் சோர்ந்து போகிறேன். போய் நான் ஒரு சிறு தூக்கம் போட்டு விட்டு வருகிறேன்.

இதை ஏன் எழுதவேண்டுமென எனக்குத் தெரியவில்லை.

எனக்கு எழுத விருப்பமில்லை.

என்னால் முடியவில்லை.

ஜான் கூட இது முட்டாற்தனமென்றே கருதுவார், எனக்குத் தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் நான் நினைப்பதையும், உணர்வதையும் எவ்வகையிலாவது சொல்லி விட முடிவது என் சுமையைத் தணிக்கும். ஆனால் முயற்சி அதை விட அதிகமாகத் தேவைப்படும்.

இப்போதெல்லாம் பாதி நேரம் நான் சோம்பலாய் ஏதும் செய்யாமல் வெறுமனே படுத்துக் கிடக்கிறேன்.

நான் சக்தியற்றுப் போய் விடக்கூடாதென ஜான் எனக்கு மீனெண்ணை, சத்து மருந்து என்று எதையாவது கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இவை தவிர மதுவும் மாமிசமும் வேறு.

அன்பான ஜான்! என்னை மிகவும் விரும்புகிறார், நான் நோயுறுவதை மிகவும் வெறுக்கிறார். ஜானுடன் ஊக்கமும் உண்மையும் நிறைந்த உரையாடல் ஒன்றை மேற்கொள்ள முயற்சித்தேன் ஒரு நாள். என் அக்கா மகன் ஹென்றியையும் ஜூலியாவையும் பார்த்து விட்டு வரவேண்டுமென்ற என் விருப்பத்தைச் சொல்லி என்னை விடுவிக்குமாறு வேண்டினேன்.

ஆனால் நான் போகும் திடத்தில் இல்லையென்றும், போனாலும் என்னால் அங்கே பொறுத்திருக்க முடியாதென்றும் கூறிவிட்டார். நானே எனக்குச் சாதகமாக வாதிக்க முடியாதபடி முடிக்குமுன்னரே அழத் துவங்கிவிட்டிருந்தேன்.

நேராகச் சிந்திக்கக்கூட அதிக முயற்சி தேவைப்படுகிறது எனக்கு. எல்லாம் இந்த நரம்புத்தளர்ச்சியால் வந்த வினை. என் ஆருயிர் ஜான் என்னைக் கைகளில் ஏந்தியபடி மாடிக்குத் தூக்கிச்சென்று படுக்கையில் விட்டு, அருகே அமர்ந்து என் தலை சோரும் வரை கதை வாசித்துக் கிடந்தார்.

நான் அவரது ஆசைக்குரியவள் என்றும் அவரது சுகமே நானென்றும் அவருக்கு எல்லாமும் நானே என்றும் அதனால் அவருக்காகவாவது நான் என்னை மிகவும் அக்கறையோடு பார்த்து பேணிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

என்னைத்தவிர வேறு யாராலும் என்னை இதிலிருந்து காப்பாற்ற முடியாதென்றும், என் மன உறுதியும் உளக்கட்டுப்பாடும் கொண்டு இந்த புத்தி கெட்ட கற்பனைகளில் இருந்து நானே தான் என்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார்.

பிள்ளை ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருப்பதும் அவன் இந்த கோரமான அறையில் இருக்க வேண்டியதில்லை என்பது மட்டும் தான் இதில் எனக்கான ஒரே ஆறுதல். இந்த அறையை நாங்கள் பயன்படுத்தாமல் போயிருந்தால் இது அவனது அறையாக அல்லவா இருந்திருக்கும்? நல்லவேளை!

என் மகவை, எளிதில் பாதிப்படையக்கூடிய அந்தச் செல்லக்குட்டியை இப்படி ஒரு அறையில் மட்டும் நான் எக்காரணம் கொண்டும் விடவே மாட்டேன். ஒரு வகையில் என்னை ஜான் இங்கே வைத்திருப்பது நல்லது தான் என்று இப்போது தோன்றுகிறது. பிள்ளைக்கு நான் தேவலாம் தான் பாருங்கள்!

அந்த சுவர்த்தாளில் இருக்கும் சிலவற்றை என்னைத்தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை. இனியும் அறிய மாட்டார்கள்.

அதன் புறவடிவங்களுக்குப் பின்னால் மங்கலாய்த் திரிந்தலையும் உருவங்கள் நாளுக்கு நாள் தெளிவு பெற்று வருகின்றன.

எப்போதும் ஒரே உருவம் தான் ஆனால் எண்ணற்றவை.

சுவர்த்தாளின் புறவடிவத்துக்குப் பின்னே கூனித் தொய்ந்து ஊரும் ஒரு பெண்ணின் உருவம், அதை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஜான் என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிட மாட்டாரா என்று இருக்கிறது.

ஜானுக்கு இருக்கும் அளவு கடந்த அறிவும் என் மீதான அபரிதமான அன்பும் அவரிடம் பேசுவதையே கடினமாக்கி விட்டன. இருந்தாலும் நேற்று இரவு முயற்சித்தேன்.

கதிரவனைப் போலவே கட்டற்ற ஒளியை அனைத்தின் மீதும் அள்ளித் தெளிக்கும் நிலவு. நிலவொளி இரவு. சில சமயங்களில் அது கூட மெல்ல ஊர்ந்து மேலேறி என் ஜன்னல்களில் ஒன்றின் மீதேறி வருவதைப் பார்ப்பது வெறுப்பை ஏற்படுத்தும்.

ஜான் உறங்கிவிட்டிருந்தார். எழுப்பவே விருப்பமில்லை. பேசாமல் அமர்ந்திருந்தேன். நிலவொளி சுவர்த்தாளின் மீதேறி ஊர்வதை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்த மங்கிய உருவம் அங்கிருந்து வெளியேற விரும்பி சுவர்த்தாளின் புறவடிவங்களை அசைத்துப் பார்த்தது. நான் மெல்ல எழுந்து சென்று சுவர்த்தாளைத் தடவிப்பார்த்தேன். அது உண்மையில் அசைந்ததா என்று எனக்குத் தெரிய வேண்டியிருந்தது. நான் திரும்பிப் பார்க்கையில் ஜான் விழித்திருந்தார்.

“என்ன டியர்? இப்படியெல்லாம் எழுந்து நடந்து கொண்டிருக்காதே – சளி பிடித்துக் கொள்ளப்போகிறது” என்றார் வாஞ்சையோடு. இப்போது பேசுவது சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு இங்கே சரியாவது போலத் தோன்றவில்லை இங்கிருந்து அழைத்துச்சென்று விடுங்களென்று கூறிப் பார்த்தேன்.

“ஏன் டியர்? இன்னும் மூன்று வாரங்களில் லீஸ் முடிகிறது. அதற்குள் எப்படிப்போவது? நமது வீட்டில் வேறு இன்னும் மராமத்து வேலைகள் முடியவில்லை. அதுவுமில்லாமல் இப்போதைக்கு என்னால் ஊரை விட்டு வரவும் முடியாது. உனக்கு ஆபத்து என்றால் கண்டிப்பாக இதை யோசிக்கலாம் ஆனால் உனக்குத் தெரிகிறதோ இல்லையோ இங்கே இருப்பதால் உனக்கு உண்மையிலேயே நன்றாகி வருகிறது. நான் ஒரு மருத்துவன், எனக்குத் தெரியும். உன் பசி அதிகரித்திருக்கிறது முகத்து வெளுப்பு குறைந்து நிறமேறித் தெரிகிறாய். உடலும் தேறி இருக்கிறது. எனக்கும் மனது நிம்மதியாக இருக்கிறது.”

 “நான் கொஞ்சம் கூட எடை கூடவில்லை. அப்படியொன்றும் அதிகமில்லை. மாலை வேளைகளில் வேண்டுமானால் கொஞ்சம் பசி இருக்கிறது அதுவும் நீங்கள் உடன் இருப்பதால் தான், காலையில் நீங்கள் இல்லாதபோது பசியே இல்லை.”

“உடம்பு சரியாவது சரியில்லாமல் போவதெல்லாமும் கூட அம்மையாரின் இஷ்டப்படி தானே!” சிரித்தபடி கட்டிக்கொண்டார் என்னை. “இப்போதெதற்கு அதெல்லாம்? நிம்மதியாகத் தூங்கு காலையில் இது பற்றிப் பேசிக் கொள்ளலாம்”

“நீங்கள் போய் விட மாட்டீர்களே?” சோர்ந்து போய்க் கேட்டேன்.

“எப்படிக் கண்ணம்மா போவேன்? இதோ பார், இன்னும் மூன்றே வாரங்கள் தான். அதன்பிறகு ஜென்னி வீட்டைத் தயார் செய்யும் வரை சில நாட்கள் நாம் இருவரும் ஜாலியாக ஏதாவது பயணம் சென்று விட்டு அதன்பிற்கு வீட்டுக்குப் போகலாம். அது வரை பொறு. உனக்குச் சரியாகி வருகிறது நம்பு.”

“உடம்பு வேண்டுமானால் சரியாகி வருகிறது” நான் தொடங்கி விட்டுப் பார்க்கையில் அவர் நிமிர்ந்து அமர்ந்து என்னை உற்று நோக்கத் தொடங்கவும் அப்படியே நிறுத்திக்கொண்டேன்.

“இதோ பார் கண்ணம்மா! தயவுசெய்து எனக்காக, நமது செல்லக்குட்டிக்காக, உனக்காகவும் தான்- இப்படிப்பட்ட எண்ணங்களை யெல்லாம் சிந்தனையில் வரவே விடாதே. உன் இப்போதைய நிலைக்கு அதை விட ஆபத்து வேறொன்றுமில்லை. அது உண்மையல்ல வெறும் கற்பனை. உன் மருத்துவனான நான் சொல்வதை நீ நம்பமாட்டாயா?”

அதன் பிறகு நான் ஏதும் பேசவில்லை உறங்கச்சென்றோம். நான் உறங்கிவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டார் ஆனால் நான் உறங்கவில்லை. அந்தப் புறவடிவும் உள்ளிருந்த உருவமும் சேர்ந்து அசைந்தனவா அல்லது தனித்தனியாக அசைந்தனவா என்று தீர்மானிக்க முயன்றபடி நெடுநேரம் விழித்துக்கிடந்தேன்.

காலை வெளிச்சத்தில் அந்த வடிவத்தில் தோன்றும் வரிசைமீறல்கள் எரிச்சலைத் தரும். நிறம் ஒருபுறம் விகாரமாக வெறியூமூட்டுமென்றால் வடிவங்கள் வேறு மாதிரியான இம்சை. அவற்றை நன்றாக உள்வாங்கிக் கொண்டதாக எண்ணிக்கொண்டு தொடர முயன்றால் திடீரென்று குட்டிக்கரணமடித்து எதிரே வந்து நின்று முகத்திலறைந்து கீழே தள்ளி மிதித்து விட்டு ஓடும். ஒரு கெட்ட கனவைப்போல.

வெளிப்புற தோரணி ஒரு மாதிரியான பூஞ்சையையொத்த சிவப்பு. ஒன்றையொன்று ஒட்டிக்கொண்ட நச்சுக்காளான்களின் அணிவகுப்புப் போல முடிவின்றி முளைத்தும் மொட்டவிழ்த்தும் போய்க் கொண்டேயிருக்கும் வடிவம். வேறு யாரும் காணாத – நான் மட்டுமே அறிந்த – விசித்திரமொன்றும் இந்த சுவர்த்தாளில் உண்டு. என்னவென்றால் இந்த சுவர்த்தாள் வெளிச்சம் மாறும் போதெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது.

கிழக்கிலிருந்து சூரிய வெளிச்சம் படும் நேரத்தில் – அந்த முதல் நீளக்கதிர் படும் நேரத்துக்காக நான் காத்திருந்து பார்ப்பதுண்டு– என்னால் நம்பமுடியாத வேகத்தில் அது மாறியிருக்கும். அதனால் தான் அதைத் தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். நிலவொளியிலோ அந்த சுவர்த்தாள் தானா இது என்று அடையாளந்தெரியாத அளவுக்கு மாறியிருக்கும்.

இரவின் ஒளிகளில் – மாலைவெளிச்சம், விளக்கொளி, மெழுகுவர்த்தி ஒளி, நிலவொளி இவற்றில் அது கம்பிச்சட்டங்களாகி இருக்கும். அதாவது வெளிப்புற தோரணியைச்சொல்கிறேன். பின்னிருக்கும் பெண்ணுருவம் அப்படியே தான் இருக்கும், மிகத்தெளிவாக.

நெடுநாள் வரை அந்தப் பின்னுருவம் என்ன என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. இப்போது அது ஒரு பெண்ணுருவம் தான் என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது.

அவள், அந்தப்பெண் காலையில் அமைதியாக அடங்கிக்கிடக்கிறாள். இந்தப் புறத்தோரணிகள் அவளை அடக்கி வைத்திருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.

குழப்பமாயிருக்கிறது. நாளெல்லாம் அமைதியாக இருக்கிறேன். வெறுமனே படுத்துக்கிடக்கிறேன். அது தான் எனக்கு நல்லதென்று முடிந்த அளவு உறங்கச்சொல்கிறார் ஜான். ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் தானே வந்து என்னைப் படுக்கையில் விட்டு உறங்கச்செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

கெட்டபழக்கம் அது, ஏனென்றால் எனக்குத்தான் உறக்கமே வருவதில்லையே!

பிறகு அது வேறு குற்றவுணர்ச்சி எனக்கு.

ச்ச்… உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு வரவர ஜானைப் பார்த்தால் சற்றுப் பயமாக இருக்கிறது. சில சமயம் விந்தையாக நடந்து கொள்கிறார். ஜென்னி கூட விவரிக்கமுடியாத பாவனையில் என்னைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறாள்.

இதற்கெல்லாம் காரணம் அந்தத்தாள் தான் என்று எனக்கு தோன்றுகிறது. நான் பார்ப்பது தெரியாத பல ரகசிய பொழுதுகளில் ஜானையும் ஜென்னியையும் கூட நான் அந்த சுவர்த்தாளின் அருகே பார்த்திருக்கிறேன். ஒரு முறை ஜென்னி சுவர்த்தாளைத் தடவியபடி நிற்பதைக் கூட பார்த்திருக்கிறேன்.

நான் அறையில் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று மெல்லிய, மிக மெல்லிய, கட்டுப்படுத்திய குரலில் நான் கேட்டதும் என்னவோ திருடிவிட்டுக் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவள் போல தூக்கி வாரிப்போட்டு நிமிர்ந்தாள். பிறகு நிரம்பக் கோபமாக என்னை எதிர்கொண்டாள். ஏனப்படி அவளை பயமுறுத்தினேன் என்று கேட்டுக் கடிந்து கொண்டாள். பிறகு அந்தத்தாளைத் தொட்டதெல்லாம் சாயமேறி விடுகிறது என்றாள். என்னுடைய ஆடைகளில் ஜானின் சட்டைகளில் கூட மஞ்சள் திட்டுகள் இருந்தனவாம். அதனால் என்னை கவனமாக இருக்கச் சொன்னாள்.

என்னவோ நம்பும்படிக் கோர்வையாகத் தான் அவள் சொன்னாள். ஆனால் அவள் அந்த சுவர்த்தாளின் வடிவத்தைத் தான் படித்துக் கொண்டிருந்தாள் என்று எனக்குத்தான் தெரியுமே! 

அதன் சூட்சமத்தை யாருக்கும் இல்லாமல் நானே நான் மட்டுமே கண்டுபிடிக்க வேண்டுமென முடிவு கட்டிக்கொண்டேன்.

 

முன்பை விட இப்போது வாழ்க்கை சுவாரஸ்யமாகத்தான் போகிறது. ஏனென்றால் நான் எதிர்பார்க்கவும் காத்திருக்கவும் கண்டுபிடிக்கவும் விஷயங்கள் இருக்கின்றன பாருங்கள்!

நான் நன்றாக சாப்பிடத் துவங்கியிருந்தேன். முன்னிலும் அமைதியாகியிருந்தேன். ஜான் நான் மாறி வருவதாக ரொம்பவும் மகிழ்ந்து கொள்கிறார். அன்று அப்படித்தான், அந்த சுவர்த்தாளையும் மீறி என் உடல்நிலை சீராகத் துவங்கியிருக்கிறது என்று சொல்லி சின்னதாய் சிரித்துக் கொண்டார். நானும் சிரித்து வைத்தேன். அந்த சுவர்த்தாளினால் தான் நான் மீண்டு வருகிறேன் என்று சொல்லவில்லை, சொன்னால் கேலி செய்வார்.

இங்கிருந்து அழைத்துச்செல்ல முயன்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் இதைக் கண்டுபிடிக்கும் முன்பு இங்கிருந்து நான் கிளம்புவதாய் இல்லை.

இன்னும் ஒரு வாரம் இருக்கிறது, அது போதும் என்று நினைக்கிறேன்.

இப்போது எவ்வளவோ தேவலாம். நடப்பவற்றைப் பார்ப்பதில் நேரம் போவது தெரியாமல் இருப்பதால் இரவெல்லாம் அவ்வளவாக உறங்குவதில்லை. அதனால் பகல்வேளைகளில் நன்றாக உறங்குகிறேன்.

பகலெலாம் அயற்சியும் குழப்பமுமாக இருக்கும்.

புதிது புதிதாய் பூஞ்சைப் படர்வுகளும் புதிய மஞ்சள் நிறங்களும் அதன் மீதெங்கும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. எண்ண முடியவில்லை. எவ்வளவு மனசறிய முயன்றாலும் முடிவதில்லை.

அது ஒரு வினோதத்திலும் வினோதமான மஞ்சள் நிற சுவர்த்தாள். இது வரை நான் கண்டறிந்த மஞ்சள் பொருட்களையெல்லாம் அது எனக்கு நினைவூட்டுகிறது – அழகான பட்டர்கப் ரக மஞ்சள் அல்ல, பழைய அழுக்குப்பிடித்த மோசமான மஞ்சள் நிறத்தவைகளை நினைவூட்டுகிறது. இதில் வேறொன்றும் இருக்கிறது – நாற்றம். முதன் முதலாக இந்த அறைக்குள் நுழைந்த நொடியிலேயே எனக்குத் தோன்றியது அது தான். நல்ல வெயிலும் வெளிச்சமுமாய் இருக்கையில் அது அத்தனைக் காட்டமாகத் தெரியவில்லை. இப்போது ஒரு வாரமாக மழையும் பனியுமாய் இருப்பதால் ஜன்னல்கள் திறந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட அந்த நாற்றம் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. வீடு முழுக்க திரிந்து கொண்டிருக்கிறது.

உணவறையில் வட்டமிட்டபடியும், வரவேற்பறையில் சிணுங்கியபடியும், உள்ளறையில் பதுங்கியபடியும், மாடிப்படிகளில் எனக்காகக் காத்துக் கிடந்தபடியும் இங்கேயே தான் இருக்கிறது.

என் மயிர்கற்றைகளுக்குள் புகுந்து கொள்கிறது. விடுவதே இல்லை. அப்படியே போய்க்கொண்டிருந்து சட்டென்று திரும்பினால் முன்னாலே தான் நிற்கிறது அது. ஒரு வித விசித்திர வாடை அது. அது வேறு எது மாதிரியான வாடை என்று கூர்ந்து சிந்தித்தபடி பல மணிநேர நேரங்களைச் செலவு செய்திருக்கிறேன். முதலில் அத்தனை மோசமாக இல்லை தான். மிக மெல்லிய நுட்பமான சகித்துப்போகும் வாடை தான் அது. ஆனால் இந்த ஈரமான பருவத்தில் மோசமாக இருக்கிறது. இரவில் விழித்தெழுந்தால் அது எனக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கக் காண்கிறேன். முதலில் தொல்லையாகத்தான் இருந்தது. வீட்டையே எரித்து விடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் இப்போது பழகி விட்டது. அந்த வாடையைப்பற்றி நினைக்கும் போது எனக்குத் தோன்றுவதெல்லாம் அதன் மஞ்சள் நிறம் தான்.

அது மஞ்சள் நிற வாடை.

இந்தச் சுவற்றில் தளப்பலகையையொட்டி கீழே வித்தியாசமான குறி ஒன்று இருக்கிறது. அறையெங்கும் சுற்றியோடும் தீற்றல். கட்டிலைத் தவிர்த்து அறையில் இருந்த ஒவ்வொரு மரச்சாமான்களின் பின்னும் மீண்டும் மீண்டும் இழுக்கப்பட்ட நீளத்தீற்றலாக அது ஓடியது. அது எப்படி வந்தது யாரால் நேர்ந்தது எதற்கு அப்படிச் செய்தார்கள் என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி சுற்றிச்சுற்றி – எனக்குத் தலையே சுற்றுகிறது!

ஒருவழியாக நான் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறேன்!

இரவெல்லாம் விழித்துக்கிடந்து பார்த்துக் கொண்டிருந்ததால் தான் அதைக் கண்டுபிடித்திருந்தேன். அந்த சுவர்த்தாளின் முன்புற தோரணவடிவம் அசையத்தான் செய்கிறது. ஐயமே இல்லை. பின்னே இருக்கும் பெண் தான் அசைக்கிறாள்!

சில சமயம் மிகப்பல பெண்கள் அந்த தோரணியின் பின்னால் கூடியிருப்பதாகத் தோன்றும். சில சமயம் ஒரு பெண் மட்டுமே வேகமாக ஊர்ந்து கொண்டிருப்பதாகவும் அவளே அத்தனையையும் அசைப்பதாகவும் தோன்றும். வெளிச்சம் அதிகமான இடங்களில் அவள் அமைதியாக இருப்பாள். இருண்ட இடங்களில் தோரணிக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு பலங்கொண்ட மட்டும் அசைப்பாள்.

எந்நேரமும் மேலே ஏற முயன்று கொண்டே இருப்பாள். அந்தத் தோரணியின் மேல் யாராலும் ஏறிவிட முடியாது. அது அப்படி நெரித்துக் கொண்டு ஓடும். அதனால் தான் அதில் அத்தனை தலைகள் இருக்கின்றன போலும். ஏற ஏற அந்தத் தோரணி வடிவம், கண்கள் வெள்ளையாய் வெளித் தள்ளும் வரைக்கும் கழுத்தை நெரித்துப்பின் தலைகீழாய்த் தொங்க விடுகிறது. அந்தத் தலைகளையெல்லாம் நீக்கி விட்டால் கூடக் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்.

அந்தப் பெண் பகல் வேளைகளில் வெளியே வந்து விடுகிறாள் என்று நினைக்கிறேன்.

ஏனென்று உனக்கு மட்டும் சொல்கிறேன்! அவளை நான் பார்த்திருக்கிறேன். என் ஒவ்வொரு ஜன்னலின் வழியாகவும் அவளை நான் வெளியே பார்த்திருக்கிறேன்.

அவளே தான்! எனக்குத் தெரியும். அவள் தான் ஊர்ந்து ஊர்ந்து செல்கிறாள். பெரும்பான்மைப் பெண்கள் பகல் நேரத்தில் இப்படியெல்லாம் ஊர்ந்து கொண்டிருக்க மாட்டார்களில்லையா? அது அவள் தான்.

     நிழல் கவிந்த அந்தப்பாதையில் மேலும் கீழுமாய் அவள் ஊர்ந்து கொண்டே இருப்பதைக் காண்கிறேன். திராட்சைக் கொடி வீடுகளின் இருளில், தோட்டமெங்கும் அவள் ஊர்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். மரங்களடர்ந்த சாலையில் அவள் ஊர்ந்து கொண்டிருக்கையில் வண்டி ஏதும் வருமெனில் அந்த நாவற்கொடிகளின் அடியே ஒளிந்து கொள்கிறாள்.

அவளைக் குறை சொல்ல முடியாது. இப்படி பகல்வேளையில் ஊர்ந்து கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் அவமானமாகத்தானே இருக்கும்.

நான் பகலில் ஊர்கையில் எப்போதும் கதவைத் தாளிட்டுக்கொண்டு விடுவேன். இரவில் அது முடியாது, ஜான் கண்டு கொள்ள வாய்ப்புண்டு. அதுவும் ஜான் இப்போதெல்லாம் விசித்திரமாகத் தெரிவதால் அவருக்கு எரிச்சல் தரும் எதையும் நான் செய்ய விரும்பவில்லை. அவர் வேறு அறைக்குச் சென்றால் நன்றாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் இரவில் வரும் அவள், என்னைத்தவிர வேறு யாரிடமும் அகப்பட்டு விடக்கூடாதென்றும் நினைக்கிறேன். என் எல்லா ஜன்னல்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் அவளைப் பார்த்து விட முடியுமா என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. ஆனால் எத்தனை வேகமாகத் திரும்பினாலும் ஒரு நேரத்தில் ஒரு சாளரம் வழி மட்டும் தான் பார்க்க முடிகிறது. நான் அவளை எப்போதும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறேன் என்றாலும் அவள் நான் முகம் திருப்புவதை விட வேகமாக ஊர்ந்து விடக் கூடியவள் என்றே நினைக்கிறேன். சில சமயம் வேகக்காற்றில் மேகம் பறப்பது போன்ற வேகத்தில் அவள் திறந்தவெளியில் ஊர்ந்து திரிவதைப் பார்த்திருக்கிறேன்.

அந்த மேல் தோரணியை மட்டும் அடியிலிருக்கும் வடிவிலிருந்து பிரித்து எடுத்து விட முடிந்தால்! கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக. நான் மற்றொரு வேடிக்கையான விஷயத்தையும் கண்டு பிடித்திருக்கிறேன். ஆனால் அதை இப்போது சொல்ல மாட்டேன்! யாரையும் அத்தனை நம்பிவிடக்கூடாது பாருங்கள்!

இந்தச் சுவர்த்தாளை அகற்றிவிட இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கின்றன, ஜான் கவனிக்கத்தொடங்கி விட்டார் என்று நினைக்கிறேன். அவரது கண்களை நேருக்குநேர் சந்திப்பதைத் தவிர்க்கிறேன்.

என்னைப் பற்றி பல கேள்விகளை ஜென்னியிடம் அவர் கேட்பதை அன்று கேட்டேன். அவளுக்கும் என்னைப் பற்றிச்சொல்ல நிறையவே இருந்தன. நான் பகல் வேளையில் நெடுநேரம் தூங்குவதாகச் சொன்னாள்.

அமைதியாக இருந்தாலும் இரவுகளில் நான் உறங்குவதில்லை என்பது ஜானுக்குத் தெரியும். அன்பும் கருணையும் பொங்குமாறு முகத்தை வைத்துக் கொண்டு என்னிடமும் ஓராயிரம் கேள்விகள் கேட்டார்.

எனக்கா அவரைப் படிக்கத்தெரியாது?

ஜானையும் ஒன்றும் சொல்வதற்கில்லை, இந்த சுவர்த்தாளுக்கடியில் உறங்கிக் கொண்டு இப்படிக்கூட இருக்கவில்லையென்றால் தான் வியப்பு. எனக்கு மட்டும் தான் இதில் ஈடுபாடு என்று இல்லை ஜானும் ஜென்னியும் கூட இரகசியமாக இந்த சுவர்த்தாளினால் பாதிக்கப் பட்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

 

அப்பாடா! இன்று தான் கடைசி நாள், எனக்கு இது போதும்.

ஜான் இன்று முழுவதும் டவுனுக்குள் இருப்பார் இரவிலும் வரப்போவதில்லை. ஜென்னி என்னோடு படுத்துக் கொள்வதாகச் சொன்னாள். கள்ளி!

நான் முடியாது எனக்கு நல்ல ஓய்வு வேண்டியிருக்கிறது அதனால் தனியாகப் படுக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

நான்? தனியாக?

இரவு வானில் நிலவு ஏறி விட்டது. அந்த பாவப்பட்டவள் ஊரத் தொடங்கியிருந்தாள். முன் வடிவத் தோரணியை அசைத்து நகர்த்த முயன்று கொண்டிருந்தாள். நான் அவளுக்கு உதவலாமென்று எழுந்தோடிப் போனேன்.

நான் இழுத்தேன். அவள் அசைத்தாள்.

நான் அசைத்தேன். அவள் இழுத்தாள்.

விடிவதற்குள் இருவருமாக சுவர்த்தாளின் பெரும்பகுதியைப் பிய்த்து எறிந்திருந்தோம்.

என் தலையெட்டும் உயரத்தில் அறையைச்சுற்றி ஒரு பட்டை.

காலைச்சூரியன் எழுந்து அந்தக்கேவலமான வடிவம் என்னை நோக்கிச் சிரிக்கத் தொடங்கியபோது, ’இன்றோடு நீ தொலைந்தாய்!’ என்று நான் மனதில் கருவிக்கொண்டேன்.

நாங்கள் நாளை இங்கிருந்து கிளம்புவதால் இன்று மரச் சாமான்களையெல்லாம் பழையபடி கீழே இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஜென்னி சுவர்த்தாளை ஆச்சர்யமாகப் பார்த்தாள். தூய வெறுப்பின் பிரதிபலிப்பு எப்படி இருக்கிறது பார்த்தாயா என்று அவளிடம் மகிழ்ச்சியாகச் சொன்னேன். அவளும் சிரித்துக்கொண்டாள்.

தானுமே செய்யத் தயங்கியிருக்கமாட்டேன் என்றாளவள். ஆனால் அது கூடாது! கூடாது!

நான் இருக்கிறேன், என்னைத்தவிர வேறு ஒருத்தர், உயிருள்ள வேறு யாரும் இந்தச் சுவர்த்தாளைத் தொடவே கூடாது. எப்படியாவது என்னை இந்த அறையில் இருந்து வெளியே அழைத்துச்செல்ல அவள் ரொம்பவும் வெளிப்படையாகவே முயன்றாள்.

 “இப்போது தான் அறை மிகவும் வெற்றாக அமைதியாக இருக்கிறது. ஆகையில் சற்று படுத்துக்கிடக்கிறேன், இரவு உணவுக்குக் கூட என்னை அழையாதே, நானாக விழித்து எழுந்ததும் உன்னை அழைக்கிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

அவள் போய்விட்டாள். வேலையாட்கள் அனைவரும் கூடப் போய் விட்டார்கள். பொருட்கள் அத்தனையும் போய்விட்டன. இங்கே எதுவும் இல்லை. ஆணியறையப்பட்ட அந்தப்பெரும் கட்டிலும் மெத்தையும் தவிர வேறு எதுவும் இல்லை.

இன்று இரவு கீழே உறங்குவதாகத்தான் ஏற்பாடு. காலையில் வீடு நோக்கிய படகுப்பயணம்.

இப்போது அறை காலியாக இருப்பதால் இன்னும் பிடித்திருக்கிறது.

பிள்ளைகள் எப்படிக்கிழித்து ஆடியிருப்பார்கள்!

படுக்கை வெகுவாகக் கடிபட்டிருக்கிறது!

அடடா, எனக்கு வேலை இருக்கிறதே! கதவைத்தாளிட்டு சாவியை முன்வாசல் பாதையில் எறிந்தேன். எனக்கு வெளியே போக விருப்பமில்லை, ஜான் வரும் வரை யாரும் உள்ளே வருவதிலும் விருப்பமில்லை.

அவரை அசத்தப்போகிறேன்.

ஜென்னியும் கூட அறியாமல் இங்கே ஒரு கயிறு கொண்டு வந்து வைத்திருக்கிறேன். ஒருவேளை அந்தப்பெண் வெளியேற முயற்சித்தால் அவளைக் கட்டிவைத்து விடுவேன்.

ஒ! உயரத்தில் எனக்கு எட்டாது என்பதையே நான் மறந்துவிட்டேனே. எதன் மீதாவது ஏறினால்… இந்தக்கட்டில் நகரவே நகராது.

பலங்கொண்ட மட்டும் நகர்த்தியும் இழுத்தும் பார்த்து முடியாமல் போகவே கோபம் வந்துவிட்டது. கோபத்தில் ஒரு ஓரத்தில் கடித்து வைக்கப் பார்க்கிறேன். பற்கள் தான் வலிக்கின்றன. பிறகு நின்று கொண்டே எவ்வளவு எட்டுகிறதோ அவ்வளவு உயரத்துக்கும் சுவர்த்தாளைக் கிழிக்கத் துவங்கினேன்.

அது கேவலமாக ஒட்டிக் கொண்டு கிடப்பதை அந்த வரிவடிவங்கள் அனுபவித்து மகிழ்கின்றன. நெரிபட்டத்தலைகளும் முட்டைக்கண்களும் அசைந்தலையும் பூஞ்சைப் படர்வுகளும் என்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கின்றன!

எனக்குக் கோபம் கோபமாக வருகிறது. வெறித்தனமாக எதையாவது செய்தே ஆகவேண்டும் இப்போது!

ஜன்னல் வழியாக குதித்து விடலாம் ஆனால் கம்பிக்கிராதிகள் பலமானவை ஒன்றும் செய்ய முடியாது. நான் அப்படிச் செய்யப் போவதுமில்லை. கண்டிப்பாகச் செய்யமாட்டேன் தான். அப்படிச்செய்வது தவறு, முறையற்றது என்று எனக்குத்தெரியாதா?

ஜன்னல் வழியாக வெளியே பார்க்கவும் எனக்குப் பிடிக்கவில்லை. வெளியே நிறைய நிறைய பெண்கள் வேகவேகமாக ஊர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களும் என்னைப் போல இந்த சுவர்த்தாளின் உள்ளிருந்து தான் வந்திருப்பார்களோ?

ஆனால் நான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன். இதோ ஒளித்து வைத்திருந்த கயிற்றின் துணையால் நான் கட்டப்பட்டுப் பாதுகாப்பாக இருக்கிறேன். என்னை யாரும் வெளியே அழைத்துச் சென்றுவிட முடியாது!

பேசாமல் இரவானதும் மீண்டும் சுவர்த்தாளில், அந்த வடிவத் தோரணிகளின் பின்னே போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்று பார்க்கிறேன். ஆனால் அது கடினம்!

இப்படி இந்த பெரிய அறையில் விசாலமாக விருப்பம் போல ஊர்ந்து திரிவது எத்தனை வசதியாக இருக்கிறது!

எனக்கு வெளியேற விருப்பமில்லை, ஜென்னி வந்து கேட்டாலும் போக மாட்டேன். வெளியே தரையெல்லாம் பச்சை. எனக்கு மஞ்சள் வேண்டும்.

இதோ! இங்கே தரை மிருதுவாக ஊர்வதற்கு வசதியாக இருக்கிறது, எனது தோள்களும் அந்த சுவர்த்தாளில் உள்ள தீற்றல் குறிக்குச் சரியான உயரத்தில் இருக்கிறது அதனால் நான் தொலைந்து விடவும் மாட்டேன்.

அட! ஜான் வந்திருக்கிறார் போலிருக்கிறதே. கதவுக்குப்பின்னே இருக்கிறார்.

வாய்ப்பில்லை ராஜா, உன்னால் கதவைத் திறக்கவே முடியாது!

பாவம் முடிந்தமட்டும் கதவை தட்டி உடைத்துக் கொண்டிருக்கிறார். யாரிடமோ கோடரி கொண்டு வரச்சொல்கிறார். எத்தனை அழகான கதவு! கோடரியால் சிதையப்போகிறது.

 “ஜான் டியர்!” மெல்லிய குரலில் அழைத்தேன்.

 “அறைச்சாவி முன்வாசல் பாதையில் வாழைமரத்துக்கடியில் கிடக்கிறது” என்றேன். சற்று நேரம் மௌனம் நிலவியது. பிறகு மெதுவாக “கதவைத்திற கண்ணம்மா” என்றார்.

“என்னால் முடியாதே” என்றேன்.

“சாவி தான் வெளியே முன்வாசல் பாதையில் வாழைமரத்துக்கு அடியில் கிடக்கிறதே”. திரும்பத் திரும்ப மெதுவாய் மெதுவாய் பலமுறை அவருக்கு விளங்கும் வரை சொல்லிக்கொண்டே இருந்தேன். ஒருவழியாக சாவியைக் கண்டுபிடித்து கதவைத் திறந்து வந்துவிட்டார் ஜான்.

வந்தவர் சிலையாய் நின்றுவிட்டார்.

“என்ன நடக்கிறது? கடவுளே! என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?”

என் போக்கில் ஊர்ந்து கொண்டிருந்தவள் திரும்பி அவரைப் பார்த்தேன்.

“ஒருவழியாக வெளியே வந்துவிட்டேன் ஜான். உன்னையும் ஜென்னியையும் தாண்டி, அதோ பாருங்கள்! பெரும்பாலும் தாளைக் கிழித்தெறிந்து விட்டேன். இனி ஒருபோதும் என்னை உள்ளே வைத்துப்பூட்ட முடியாது.”

இப்படிச் சொன்னதற்கா ஜான் மயங்கிச் சரிவார்?

மயங்கித்தான் விழுந்து கிடந்தார், அதுவும் நான் ஊர்ந்து செல்லும் என் பாதையிலேயே.

எனக்கு வேறு வழியில்லை!

அவர் மீதேறி ஊர்ந்து போகத் துவங்கினேன், மீண்டும் மீண்டும், ஒவ்வொரு முறையும்!


 

சார்லட் பெர்கின்ஸ் ஸ்டெட்சன் / சார்லட் பெர்கின்ஸ் கில்மன்(1860-1935) 

-விரிவுரையாளர், பொருளாதார நிபுணர், பேச்சாளர் என்று பன்முகத்தன்மை 

கொண்டவராக விளங்கிய ஒரு குறிப்பிடத்தகுந்த அமெரிக்க 

எழுத்தாளராவார். 1900 களின் முற்பகுதியில் பெண்களின் உள்நாட்டு 

உரிமைகள் மற்றும் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர். 

பெரும்பாலும் அவரது அரசியல் சமூகச் செயல்பாடுகளுக்காகவே அப்போது 

அறியப்பட்டார்.  

அவரது பேச்சுகளும் உரைகளும் போன்றே அவரது பெரும்பான்மைச் 

சிறுகதைகளும் பெண்களின் பொருளாதார விடுதலை நோக்கியே 

எழுதப்பட்டிருக்கின்றன. குடும்பமெனும் சூழல் பெண்ணைச்சுற்றி எழுப்பும் 

சுவர் எப்படி அவளது கனவுகளையும் இலட்சியங்களையும் விழுங்கிச் 

செரிக்கிறது என்பதைத் தன் கதைகளின் வழியாக தொடர்ந்து 

சொல்லியிருக்கிறார்.  

சார்லட் புகழ்பெற்ற பீச்சர் குடும்பத்தில் பிறந்து, தந்தையால் கைவிடப்பட்டு, 

தன் இளமையின் முதல் பகுதியை வறுமைக்கு ஈந்தவர். வால்டர் 

ஸ்டெட்சனைத் திருமணம் செய்து முதல் குழந்தை பெற்றபிறகு (post-partum 

depression) உளப்பிணி சிக்கலுக்கு ஆளானார். அக்காலகட்டத்தில் 

பெண்களின் உளப்பிணிக்கு ’Rest cure’ என்று சொல்லப்பட்ட கட்டாய ஓய்வு 

சிகிச்சை முறை மிகவும் பிரபலமாக இருந்தது. அதில் கைதேர்ந்தவராக 

இருந்த சிலாஸ் வெயர் மிட்செல் எனும் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார் 

சார்லட். அந்த அனுபவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது தான் மஞ்சள் 

சுவர்த்தாள் சிறுகதை. 

ஒரு கடிதம் போல விரியும் இக்கதை முழுவதும் ஒரு வித அவசரமும் அச்சமும் 

அச்சம் கலந்த சினமும் இழையோடுவதைக் காணலாம். எவரையும் 

கதைக்குள் இழுக்கும் உறுதியான தொனியில், அங்கதமும் திகிலும் 

கலந்தோடும் தேர்ந்த நடையில், உளப்பிணிக்கு ஆளானவர்களின் 

மனவெழுச்சிகளையும் பிறழ்வுகளையும் துவக்கத்திலிருந்து நிறைவு வரை 

மிக நேர்த்தியாகச் சொல்லிச்செல்கிறார் சார்லட்.  

இந்தக்கதை எழுதப்பட்ட காலத்தில் பெரிதும் பேசப்படாமலே போனது 

என்றாலும் இவரது படைப்புகளிலே அதிகமாகப் பிற்காலத்தில் 

பேசப்பட்டதும் பேசப்படுவதும் இது தான். அதன் அடிச்சுவை மாறாமல் 

மொழிபெயர்க்க முயற்சித்திருக்கிறேன்.  

 

 

மாயா என்ற பெயரில் எழுதி வரும் மலர்விழி பாஸ்கரன் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். பல்லூடக வடிவமைப்புக் கலைஞர். கதைகளின் காதலி. அறிபுனைகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் கூடுதல் நாட்டம் உண்டு. யூனிட் 109’, ’அன்று வந்ததும் இதே நிலா’ என்ற இரண்டு அறிபுனை புதினங்கள், ’கடாரம்’ என்ற வரலாற்றுப் புதினம் உட்பட ஆறு புனைவுகளும் வரலாற்றுப் பயணக்குறிப்பு கட்டுரை நூலொன்றும் எழுதியிருக்கிறார்.

இவருடைய அறிபுனை சிறுகதைகள் அரூ இதழில் வெளிவந்திருக்கின்றன. இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர் கதைகள் எழுதி இருக்கிறார். எழுத்தின் வரம்புகளுக்கு உள்ளும் வெளியும் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் தொட்டுப்பார்த்து விடவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புகிறவர்.

Previous articleநீங்கள் ஏன் நடனமாடக்கூடாது
Next articleவென் தீவில்..
Avatar
மாயா என்ற பெயரில் எழுதி வரும் மலர்விழி பாஸ்கரன் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். பல்லூடக வடிவமைப்புக் கலைஞர். கதைகளின் காதலி. அறிபுனைகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் கூடுதல் நாட்டம் உண்டு. யூனிட் 109’, ’அன்று வந்ததும் இதே நிலா’ என்ற இரண்டு அறிபுனை புதினங்கள், ’கடாரம்’ என்ற வரலாற்றுப் புதினம் உட்பட ஆறு புனைவுகளும் வரலாற்றுப் பயணக்குறிப்பு கட்டுரை நூலொன்றும் எழுதியிருக்கிறார்.
இவருடைய அறிபுனை சிறுகதைகள் அரூ இதழில் வெளிவந்திருக்கின்றன. இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர் கதைகள் எழுதி இருக்கிறார். எழுத்தின் வரம்புகளுக்கு உள்ளும் வெளியும் உள்ள பல்வேறு பரிமாணங்களையும் தொட்டுப்பார்த்து விடவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவும் விரும்புகிறவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.