மரபுடைத்த தலைவிகள்.

ரந்த இந்நிலப்பரப்பில் பெண்களின் உலகம், குடும்பம், அலுவலகம் எனச் சுருங்கிக் கிடக்கிறது. பெண்ணாய்ப் பிறந்தாலே குடும்பமே பிராதனம். அந்தக் குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளும் பெண்களுக்கு இல்லற இன்பம் முழுமையாகக் கிடைக்கப் பெறாமல் பல்வேறு மனப் போராட்டங்களுக்குள் வாழ்கின்ற நிலை தான் உள்ளது. தன் விருப்பத்தைத் தன் கணவனிடம் சொல்ல எத்தனிக்கும் போதும் சமூகம் எதாவது குற்றம் சாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் வாழும் பெண்களின் எண்ண ஓட்டத்தை எழுதியோர் எவருமிலர்.

தொல்காப்பியர் காலம் தொட்டுப் பெண்கள் பேசக்கூடாத அல்லது அவள் விருப்பப்பட்டாலும் தலைவன் முன் கூறக்கூடாத விசயங்களுள் மிக முக்கியமான ஒன்று காமம் அல்லது விருப்பம். இதைத் தான் தொல்காப்பியர்

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்

எண்ணுங்காலை கிழத்திக்கு இல்லை” (தொல்காப்பியம்.களவியல்.9) என்கிறார். இந்நூற்பாவைப் படிக்கிற போது ஏன் கூடாது என்ற வினா பலமுறை வந்துள்ளது. காலமாற்றம் ஏற்பட்டாலும் தலைவன் மட்டும் தான் விருப்பத்தைச் சொல்ல வேண்டும், தலைவி சொல்லக்கூடாதென்கிற மரபு இப்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் காலம் காலமாகப் பெண்கள் தங்கள் காமத்தைச் சொல்லியதும் இல்லை. அது அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது  நிதர்சனம்.

வேத காலம் தொடங்கி இன்று வரையுள்ள எந்த இலக்கியமும் பெண்களின் அக உணர்வுகளை முழுமையாகப் பேசியதில்லை. அவ்வுணர்வுகளை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார் அ.வெண்ணிலா. இதுகாறும் பேசப்படாத பெண்ணின் காமம் பற்றிய உணர்வுகளைப் பேசுவதே இந்திர நீலத்தின் எட்டு கதைகள்.

 

முதல் கதை – இந்திர நீலம்

தற்காலத்தில் அலுவலகப் பணிக்குச் செல்லும் பெண் தனக்கு ஏற்படுகின்ற உடலுணர்களை எப்படிக் கையாளுகின்றாள் என்பதை முன் வைக்கிறது இக்கதை. பாமா, இளம் வயது முதல் திருமணம் முடிந்து பல ஆண்டுகள் வரை தன்னுடலை பார்த்ததில்லை. அதுமட்டுமன்றி அதன் மீது கவனமும் கொண்டதில்லை. அனுதினமும் தன் கணவனோடு பெற்ற இன்பத்தை ஆண்டுகள் செல்லச் செல்ல அதை மறந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கும் கதைத்தலைவிக்கு மெனோபாஸ் என்ற உடலியல் மாற்றம் ஏற்படுகிறது. அப்போது உடலில் ஏற்படும் அதீத உணர்வுகளைக் கட்டுக்குள் வைப்பதா அல்லது தன் கணவனிடம் சொல்லவதா என்று தனக்குள்ளே வினாக்கள் கேட்டுக் கொண்டும் தன் உடல் தனக்குள்ளே வேறுவிதமாகக் செயலாற்றுவதை எண்ணிக் கொண்டும் இருக்கிறாள்.

திருமணத்திற்கு முன் பாமா, கண்ணா இருவருக்குமான உரையாடல்கள் மற்றும் அவர்களது அணுக்கங்கள் திருமணத்திற்குப் பின் அவளுக்கு கிடைக்கவில்லை. அவள் ஒரு முத்தத்திற்கே ஏங்குவதாகவுமிருக்கிறது. இப்போது இரவைக் கடப்பது அவளுக்குப் புதியதாகயிருக்கிறது.

திருமணமான பிறகு இரவு முழுக்கக் கூடுவதும் பேசுவதுமாகக் கழித்தவளுக்கு இரவினுடைய தனிமைச் சத்தங்கள் கேட்கின்றன. இந்த உணர்வு நல்லதா அல்லது கெட்டதா என்று புரியாமல் தனக்குள்ளே பல கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறாள். உடல் இன்பத்திற்காகக் காத்திருப்பதை யாரிடமும் சொன்னால் இந்த உலகம் காரித்துப்பாதா? என்று கேட்டுக் கொள்கிறாள். இதைப் பற்றி தன் அம்மாவிடம் சொன்னால் அவ்வளவு தான், உன்னைப் பெத்து வளத்ததுக்கு நீ வாங்கிக் கொடுக்கற பேரா? இரண்டு பிள்ளைகளைப் பெற்றதற்குப் பிறகு உடலுக்கு சுகம் கேக்குதா? பிள்ளைகளைப் படிக்க வைச்சமா அதுங்கள ஆளாக்குனமான்னு இல்லாம புருசன் கூட எப்புவும் படுக்கணும்ன்னு கேட்கிற? என் வயித்துல தான் பொறந்தியா? அக்கம்பக்கத்துல தெரிஞ்சது தூத்திடுவாளுக என்ற அம்மாவின் குரல் அவளுக்குள் சத்தமாகக் கேட்கிறது. காசு பணம் சேத்தமா, செட்டா குடும்பம் பண்ணோமான்னு இருக்கனும். இவ என்ன அதியசமா கிளம்பிட்டான்னு அம்மா நாறடிச்சுடுவா என்று எண்ணிக் கொண்டு தன் உடலுணர்வு இம்சிப்பதைக் கண்டு வருந்துகிறாள். இவ்வாறாகத் தனக்குக் கிடைக்கப் பெறாத உடலின்பத்தை அவள் இளமையில் அனுபவித்ததையும் சிறிய நிகழ்வுகளின் வாயிலாக நினைவு கூர்கிறாள்.

அதே நேரத்தில் அடுத்தவர் பரிகாசம் செய்தாலும் தன்னை அழகாக்கிக் கொள்கிறாள். எப்படியாவது தன்னழகை தன் கணவனுக்கு முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைக்கிற வேளையில் அவள் கணவன் தன் உணர்வை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு விட்டுச் வெளியே போகும் போது ஒழுங்கா படு என்று சொல்லிச் சென்று விடுகிறான். அம்மனுக்கு அபிசேகம் செய்யாமல் கற்பூர ஆரத்தி காட்டிய வெறுமை அவளது உடலுக்குள் கலக்கிறது. அவளது எதிர்பார்ப்புகள் கற்பூரத்தை போல எரிந்து சாம்பலாகியது. பெண்களின் உணர்வுகளையும், அவ்வுணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் அவளின் உணர்வுகள் நிராகரிக்கப்படுதலையும் எழுபது பக்கங்களில் ஏங்க வைக்கிறது.

இரண்டாவது கதை தர்மத்தின் ஆகுதி

வேதகாலத்தில் நிகழ்ந்த மகாபாரதக் கதைத் தலைவி துரௌபதையின் உளக்குமுறலே இக்கதை. அர்ச்சுனனின் மனைவியாக வேண்டிய துரௌபதையை, குந்தி அறியாமல் ஐவரும் பகிர்ந்து கொள்க என்று கூறியதன் விளைவால் பஞ்சபாண்டவர்களைத் திருமணம் செய்து கொண்டாள். வேள்வித் தீயிலிருந்து உதித்த அவள் அவர்களைத் திருமணம் செய்து கொண்டதால் உலகமே ஏசுகிறது. இருப்பினும் தர்மர் தன்னை தர்மத்தின் தேவதையாகவும் தனக்கு அறிவுரை சொல்லும் ரட்சகியாகவும் பீமன் தன்னைச் சேவகியாகவும் அமுது படைத்துத் தருபவளாகவும் பாவிக்கிறார்கள். சகாதேவனும் நகுலனும் அண்ணன் தர்மருக்குக் கட்டுப்பட்டவர்கள் அவர்களைக் குறை கூறப் பெரிதாக ஒன்றும் இல்லை. அவர்கள் துரௌபதையின் பேச்சை மீற மாட்டார்கள். இருப்பினும் சகாதேவனுக்கு வானவியல் நூல்களாகப் பிறந்திருந்தால் அவன் ஸ்பரிசித்திருப்பான். நகுலனுக்குக் குதிரையாகப் பிறந்திருந்தால் அவனுடைய அன்பான தொடுகை கிடைத்திருக்கும் என்ற தொடர்கள் அவர்களின் நிராகரிப்புகள் எவ்வளவு மன வேதனையை துரௌபதைக்கு உண்டாக்கியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தனக்காக விற்போட்டியில் வென்ற அர்ச்சுனனின் முறை வருகிறபோது துரௌபதையைப் பார்த்து அர்ச்சுனன் பேசியது கூட இல்லை. மேலும் எப்போதும் சுபத்திரையுடனே காலத்தைக் கழிக்கும் சூழல், அர்ச்சுனன் மீது கடும் கோபத்தை உண்டாக்குகிறது. தன் தாய் சொன்ன சொல்லிற்காகத் தனக்கான மனைவியைப் பகிர்ந்து கொண்ட அர்ச்சுனன் மீது அளவு கடந்த காதலைக் கொண்ட துரௌபதைக்கு அவனுடைய அணுக்கம் கிடைக்கவில்லை எனும் போது மனம் பதைக்கிறது.

ஐந்து கணவர்களிலிருந்தாலும் தனது உணர்வுகளை எவரும் புரிந்து கொள்ளாமல் நிராகரிக்கின்றனர் என்பது துரௌபதையின் பெரும் புலம்பலாக இருக்கிறது. இறுதியில் அவள் படைக்கப்பட்டது தர்ம வேள்விக்கு ஆகுதியாக மட்டுமே என்கின்ற போது அர்ச்சுனன் மீதான கோபம் தணியவேயில்லை. இதுவரை மகாபாரதத்தைப் பார்த்த கண்ணோட்டம் மாறிவிட்டது. உண்மையில் பஞ்சபாண்டவர்கள் இப்படித் தான் நடந்திருப்பார்களோ என்ற எண்ணத்தையும் முன் வைத்து நெஞ்சத்தில் கனன்று கொண்டிருக்கிறது இக்கதை.

மூன்றாவது கதை சிலம்பின் ரகசியம்

கற்புக்கரசி என்று போற்றப்படும் கண்ணகியின் கதை. கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியுடன் செல்கிறான். கோவலன் பிரிந்த அந்த நாளிலிருந்து அவன் திரும்பி வரும் வரை மாலை வேளையில் கண்ணகி அவனுக்காக மல்லிகை மலர்மாலை தொடுத்துத் தொடுத்து அவை மலை போல வீணாய்க் குவிந்து கிடக்கின்றன. கண்ணகியின் எல்லா அந்தி மாலைப் பொழுதுகளும் இப்படியே வீணாகக் கழிந்தன. அவளுடைய அழகு இளமை யாவும் போயின. பல்லாண்டு காலம் மாதவியுடன் வாழ்ந்து, பின் பிணக்கின் காரணமாகப் பிரிந்து கண்ணகியுடன் வாழ வந்தவன், ஒரு நிமிடம் கூட கண்ணகியின் உடலுணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மதுரையை நோக்கிப் புறப்படச் சொன்னான். அவள் அப்போது தொடுத்த மாலையும் வீண்தான். வீட்டிற்கு வந்தவுடனும் மாதவியின் நினைப்பு தான் கோவலனுக்கு. மதுரைக்குச் செல்லும் வழியின் அருமையும் புகார் நகர விவரணையும் கண்ணகி பற்றிய வருணனையும் கூடுதல் அழகு சேர்க்கிறது. கடைசி வரை கண்ணகியின் சிலம்பு சொல்லும் ரகசியம் கோவலன் காதிற்கு மட்டும் கேட்கவேயில்லை.

நான்காவது கதை கண்ணனிடமிருந்து வெளியேறாத கோபியர்கள்

            பிருந்தாவனத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருப்பவன் கண்ணன். அவன் சேட்டைக்காரன் என்பதைத் தாண்டி பிருந்தாவனத்திலிருக்கும் எல்லாப் பெண்களும் அவனை அடைய வேண்டும் என்றும் அவனுடைய அணுக்கம் கிடைக்குமா என ஏங்கித் தவிப்பதாய் அமைகிறது இக்கதை. மணமான பெண்களாக இருந்தாலும் அவர்கள் கண்ணனை அடைய வேண்டும் என்பதும் அவர்கள் தங்கள் கணவனைக் கண்ணனாக நினைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் பிருந்தாவனத்தில் உள்ள எந்த ஆடவர் தீண்டினாலும் அது கண்ணனுடைய தீண்டலாகவேயிருக்கிறதாம். அவர்களுக்கு எவ்வளவு தாபம் அவன் மீது. பிருந்தாவனத்துப் பெண்கள் மட்டுமல்ல யமுனையாறும் அவன் மீது தாபம் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

இந்தப் பதினாறாயிரம் கோபியர்களின் மீது ஒரு சிறு தீண்டலைக் கூட நிகழ்த்தாமல் தன் விளையாட்டை நிகழ்த்தும் கண்ணனின் வம்சம் அழிந்த பின்னும் அவனிடமிருந்து விலகாமல் விரகதாபத்தோடு தவித்துக் கொண்டு கலியுகத்தில் புதிதாகப் பிறக்கிறார்கள் பிருந்தாவனப் பெண்கள்.

ஐந்தாவது கதை அட்சய பாத்திரத்தின் பசி

கோவலன் கொலையுண்ட செய்தி கேட்கும் மாதவி துறவு பூணுவதோடு தன் மகள் மணிமேகலையையும் துறவு பூணச் செய்வது தான் கேள்வி. துறவு பூண்ட பிறகும் உதயகுமாரன் மீது காதல் வருகிறது மணிமேகலைக்கு. தன் காதல் எண்ணத்தை மாற்றி இந்த உலகிற்கு தவச்செல்வியாக ஏன் திகழ வேண்டும் என்ற வினா கதையைப் படிக்கிற போது தோன்றுகிறது. கணிகையர் குலத்தில் பிறந்த மணிமேகலை மக்களின் உடற்பசி போக்குவதா அல்லது யானைத்தீ நோய் பிடித்த காயசண்டிகையின் உணவுப்பசி போக்குவதா என்ற எண்ண ஓட்டங்கள் மணிமேகலைக்குள் ஓங்குகிறது. அட்சயபாத்திரத்தின் பசி உடல் உணர்வுகளின் பசியா அல்லது உணவுப் பசியா என்னும் வினாக்களைக் கடந்து துறவியாக மாறி காய சண்டிகையின் பசியைப் போக்கினாலும் உதயகுமாரனின் அன்புப் பசியை அவள் போக்கவில்லை. இல்லறத்திற்குப் பிறகே துறவறம். ஆனால் துறவறத்தை ஏற்றதால் அவ்வில்லற வாழ்வும் மணிமேகலைக்கு கிடைக்கவில்லை என்பதும் வருத்தத்தையளிக்கிறது. அவள் கையிலிருந்த அட்சய பாத்திரம் எல்லோருடைய பசியைப் போக்கினாலும் மணிமேகலையின் பசியைப் போக்கவில்லை என்கிற போது அட்சய பாத்திரம் வெற்றுப் பாத்திரமாக இருக்கிறது.

ஆறாவது கதை என்பு தோல் உயிர்

சைவ சமயத்தில் மூன்று பெண் நாயன்மார்கள் உள்ளனர். அவர்களுள் சிவபெருமானே அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையாரின் கதை. புனிதவதி பரமதத்தனின் மனைவி. பரமதத்தன் கொடுத்த மாங்கனிகளும் இறைவன் அளித்த மற்றொரு மாங்கனியும் புனிதவதிக்கு ஏற்பட்ட பெருந்துன்பத்திற்குக் காரணம். தன் கணவன் தன்னைத் தெய்வமென்றும் அன்னையே என்றும் சொல்லி நிராகரித்த போது தனக்கு இளமை வேண்டாம் என்று முதுமை கொண்டும் தெய்வவுருவம் வேண்டாம் என்று பேயுருவம் கொண்டும் தன்வாழ்வை சிதைத்துத் கொண்டாள். கணவனின் நிராகரிப்பிற்குப் பின்பு தனியே வாழும் பெண்ணின் நிலை, அவனின் அணுக்கம் இனி எப்போதும் கிடைக்காது என்று நினைத்துப் பேயுரு கொள்ளும் எத்தனையோ பெண்களின் நிலையைக் காரைக்கால் அம்மையார் வழியாக விவரிக்கிறார் ஆசிரியர். பரமதத்தன் மட்டும் மற்றொரு திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்க்கை வாசகர்களைக் கண்கலங்க வைக்கிறது. காரைக்கால் அம்மையாரின் உடல் மட்டும் எலும்பு தோல் போர்த்திய உடம்பல்ல. அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் முதுமையும் பேயுருவும் கொளச்செய்த கோர மனம் படைத்த பரமதத்தனின் உடலும் உணர்வுகளற்ற என்பு தோல் போர்த்திய உடம்பு. மனிதமற்ற பரமத்தன்கள் இல்லா உலகு வேண்டும்.

ஏழாவது கதை நித்திய சுமங்கலி

இறைவனுக்கு இளம் பெண்களைத் திருமணம் செய்து வைத்து அவர்களைக் கோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் நேர்ந்து விடுவார்கள். சிறு வயதிலேயே இவர்களைப்  இறைவனுக்குப் பொட்டுக் கட்டி விடுவார்கள். தேவனுக்கு தாசி அதாவது இறைவனுக்கு அடிமையாகயாக இருப்பவள். இறைவனுக்கு மனைவியாக இருந்தாலும் இறைவன் இறைவியோடு பள்ளியறையில் ஊஞ்சலாடுவதைப் பார்த்துப் பார்த்துத் தவிக்கும் நக்கனின் மனம் வாடிக்களைக்கிறது. அனுதினமும். இறைவனுக்குத் திருமணம் செய்து வைத்தாலும் இறைவனின் முகத்தை, கண்களை, அவன் பேச்சைக் கேட்டதேயில்லை நக்கன். அரூபமாக லிங்கமாகயிருக்கும் இறைவனின் தீண்டலில்லாமல் அவள் துன்பப்படுவதை மிக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். இப்படியொரு சூழலில் அடுத்த ஆடவர் மீது எண்ணம் கொள்ள முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறாள். இறைவனும் மனமிரங்கவில்லை. இறைவனைத் திருமணம் செய்ததால் அடுத்த பிறவியில் சொர்க்கத்தில் பிறப்பாள் என்ற நம்பிக்கையோடு தீண்டப்படாத அவள் நித்திய சுமங்கலியாய் வாழ்கிறாள் நித்தியமும் கன்னியாக.

எட்டாவது கதை விலக்கப்பட்ட கனி

ஏசுவின் பெருங்கருணையினால் பாவத்திலிருந்து விமோசனம் பெற்ற தாசியின் கதை. ஏசுவிற்கும் தாசிக்குமான உரையாடலில் தாசி ஏசுவின் மீது குற்றம் சுமத்துவதாக அமைகிறது. ஏசுவும் தாசியும் உடலையே பிரதானமாக்கி அன்பைப் பொழிந்தவர்கள். பாவப்பட்டவர்களுக்கு இருவரும் ரொட்டித் துண்டுகளாகின்றனர். விலக்கப்பட்ட கனி கதையில் வரும் இயற்கை வருணனை பிரமிக்க வைக்கிறது.

வேதகால துரௌபதை மற்றும் கோபிகைகள், களப்பிரர் கால கண்ணகி, மணிமேகலை, பல்லவர் கால காரைக்கால் அம்மையார் மற்றும் நக்கன், சோழர் கால தேவதாசிகள், கிறித்துவ கால தாசிகள், இக்காலப் பெண்கள் என எல்லாக் காலப் பெண்களும் தங்களுக்குக் கிட்டாத காமத்தை வெளிப்படுத்துகின்றனர். இதில் கண்ணகி, கோபிகைகள், காரைக்கால் அம்மையார் முதலியோர் தாங்கள் விரும்புகின்றவர்களால் கைவிடப்படுகின்றனர். நித்திய சுமங்கலி கதை முற்றிலும் வித்தியாசமானது. அரூபமாய் இருக்கும் இறைவனைத் திருமணம் செய்து வைத்ததால் அவளின் மனம் எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லுகிறது. இறுதிவரை காமம் என்பது வார்த்தையாகவே கடந்து போவதைக் காணமுடிகிறது.

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் மகாராணி துரௌபதை, சாதாரண குடும்பத் தலைவி கண்ணகி, புனிதவதி, பாமா, பௌத்தத் துறவி மணிமேகலை, இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்த நக்கன் என்கிற தேவதாசி, சமூகத்தில் உடலை விற்று வாழும்  பெண் எனப் பலதரப்பட்ட  பெண்களின் மௌனம் கலைத்த உணர்ச்சிக் குரல்களின் குவியல்களைக் காணலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக, சாதாரணக் குடும்பப் பெண்ணாக இருந்தாலும் மகாராணியாக இருந்தாலும் காமம் கிடைத்தற்கரிய பொருளாக இருப்பதை வெளிப்படுத்துகிறது இக்கதைகள்.

ஒவ்வொரு கதையின் தலைப்பும் மிக மிக அருமை. எல்லாத் தலைப்புகளுக்குள் ஒளிந்திருக்கும் ஒரே சூட்சுமம் காமம். தலைப்பே கதையைப் படிக்கத் தூண்டுகிறது. இந்தக் கதைகளை வாசிக்கும் போது இலக்கியத்தின் மீது புதிய பார்வை மட்டுமன்றி இலக்கியத்தையும் புரட்டிப்போட வைக்கிறது. இந்திரநீலம், விலக்கப்பட்ட கனி, நித்திய சுமங்கலி தவிர மீதமுள்ள ஐந்து கதைகளும் இதிகாச, புராண, காப்பியக் கதைகள். ஒவ்வொரு கதையின் கதைத் தலைவிகள் பேசாப் பொருளை பேசியது தான் இந்திர நீலத்தின் வெற்றி.

கண்ணணிடமிருந்து எப்படி கோபிகைகள் வெளியேற முடியவில்லையோ அது போல இந்திரநீலத்தினின்று வெளியேற முடியவில்லை. கதைகள் மனதில் உழன்று கொண்டேயிருக்கின்றன.

தன்னுடைய வேட்கையைத் தலைவி தலைவனிடம் சொன்னால் எப்படியிருக்கும் என்பதை எடுத்துரைக்கும் கதைகளே இந்திரநீலக் கதைகள். யார் என்ன நினைத்தால் என்ன? காமம் செப்புதல் நன்று. இப்படியொரு மாற்றுச் சிந்தனையை விதைத்த ஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

 

நூல்  – இந்திர நீலம்

ஆசிரியர் – அ. வெண்ணிலா

வெளியீடு – அகநி

விலை- ரூபாய் 150/-

ஆண்டு – செப்டம்பர் 2020


மழயிசை என்னும் முனைவர் சி.சங்கீதா,
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.